கனகவேல் காக்க!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா.
“கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே”, “கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப் போற்றுகின்றார்கள். எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். “வைதா ரையும் வாழவைப்பான் முருகன்” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.
கந்தக்கடவுள் எங்களின் சொந்தக்கடவுள் என்று என்ணியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேலை வணங்குவதே வேலை என்றும் மனத்தில் இருத்தியும் வைத்திருக்கிறோம்.வேலும் மயிலும் வேதனை போக்கிடும், சோதனை தீர்த்திடும் என்னும் நம்பிக்கை – கந்தக்கடவுளைச் சொந்தக் கடவுளாய் நினைப்பவர்களிடம் நிறைந்தே இருக்கிறது. தெய்வங்கள் பல உண் டேனும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் காட்சி தருவது கந்தக் கடவு ளேதான் என்பதை யாவரும் அகத்தில் அமர்த்தியே இருக்கிறார்கள். கரு ணைகூர் முகங்கள் ஆறு , கரங்கள் பனிரெண்டு கொண்டு , உலகுய்ய திரு மேனி கொண்ட அருள் தெய்வமாய் கந்தக்கடவுள் விளங்குகிறார்.அந்தக் கருணைக் கடல் ஏந்துவது அயில்.அவரைத் ஏந்துவதோ மயில். வேல் என்றால் “வெல்” என்பதுதான் பொருள். வெற்றியை அளிப்பதுதான் வேல். வே லைக் கரத்தில் தாங்கியதால் கந்தக்கடவுள் வேலவனாகி நிற்கின்றார். வென்று வேற்றியை உலகிலே தரக்கூடியது எது என்றால் – அது “ ஞானந் தான் “ .ஞானத்தை அறிவு என்றும் சொல்லலாம்.அறிவு என்பது செந்தமிழ்ச் சொல்லாகும்.செந்தமிழ் முருகனின் கையிலுள்ள வேல் – அறிவினது பூரணமான உருவம் என்றே சொல்லலாம்.ஆழமாய், அகலமாய் கூர்மையாய் அறிவென்பது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமை யான அறிவாக அமை யமுடியும்.முருகன் கையின் வேலும் ஆழமாயும், அகலமாயும், கூர்மையாகவுமே இருக்கிறது அல்லவா ! வேலவன் என்றால் பூரணமான அறிவின் இருப்பிடம் என்றுதான் என்ணிடத் தோன்றுகிறதல்லவா !
வேல் என்றாலே அஃது – அஞ்ஞானத்தை அகற்றி. வினையினை வேரறுக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாய் உருப்பெற்று நின்றவர்கள்தான் சூரபது பதுமனும் அவனின் தம்பியருமான – சிங்கமுகனும் ,தாரகனுமாம். இவர்களைச் சாய்த்தது ஞானமாகிய வேல்தான். நான் என்னும் அகங்காரம் தலையெடுத்தால் அழிவு நிச்சயம் என்பதை சூரசம்ஹாரம் வெளிப்படுத்தி நிற்கிறது. வரம் பெறலாம். அதனால் உரமும் பெறலாம். வரமும் உரமும் கிடைத்த பின்னர் அதனை அறவழியில் பயன்படுத்தாமல் – அறத்துக்குப் புறம்பான வழியிலே பயன் படுத்தினால் என்ன நேரும் என்பதையே சூரசம்ஹாரம் உணர்த்தி நிற்கிறது. கடுந்தவத்தால் பெற்ற வாழ்வும் வளமும் – தர்மத்தைத்தைத் துணையாக் காமல் இருந்த காரணத்தால் ஒழிந்தே போய்விட்டது.தர்மத்தை மதி யாது நடந்து – தலைகால் தெரியாது நடக்கும் பொழுது – அதனை தடுக்க நிச்ச யம் ஒரு சக்தி வந்தே நிற்கும். அந்தச் சக்திதான் கடவுள். அந்தக் கடவு ளாய் வேலவன் வந்தார். வேலால் வென்றார். வினைகளை ஓட் டினார்.
வேலேந்தும் வேலவனை விளக்கும் வகையில் அமைந்ததுதான் கந்தபுராணம்.கந்தபுராணம் என்றதும் எங்கள் நினைவில் வந்து நிற்பார் நல்லை நக ர் ஆறுமுகநாவலர் பெருமான். கந்தபுராணத்தைச் சொந்தப் புராணம் என் று மனமிருத்தியவர் அவர். கோவில்கள் தோறும் கந்தபுராணத்தை பிரசங்கம் செய்து – யாவரும் அறிய வேண்டும் என்று அரும்பணியாற்றினார். கந்தனது புராணத்தை மையப்படுத்தி ” கந்தபுராண கலாசாரம் ” என்னும் சைவத் தமிழ் கலாசாரம் தோற்றம் பெற்றது மிகவும் முக்கிய விடயம் எனலாம். ஒரு கலாசாரமாக உருவாகி வருமளவுக்கு கந்தப் பெருமானின் மீதான பக்தி ஆழப்பதிந்து இருந்திருக்கிறது என்பது மனங் கொள்ளத் தக்கதேயாகும்.
கந்தப்பெருமையை மனமெண்ணி நிற்கின்ற அடியவர்கள் “கந்தசஷ்டி விரதத்தை” வாழ்விலே பெரும் விரத மாகவே கொண்டிருக்கிறார்கள். கந்தசஷ்டி வருவதை உன்னிப்பாய் கவனித்தபடியும் இருப்பார்கள். இந்தியா, இலங்கை எங்கணும் இருக்கின்ற கந்தனது அடியார்கள் கந்தசஷ்டியைக் கண்ணுங் கருத்துமாய் கடைப்பிடித்தே வருகிறார்கள். கந்தசஷ்டி என்றதும் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நல்லைக் கந்தனே வந்து நிற்பார். நல்லைக்கந்தன் சன்னிதானத்தில் பல அடியார்கள் கந்தசஷ்டி காலங்களில் கந்தனின் பூசையினைக் கண்டு அங்கு கொடுக்கும் தீர்த்தத்தை மட்டுமே பருகி – ஆறு தினங்களுமே எதுவுமே சாப்பிடாமல் விரதம் அனுட்டிப்பார்கள் என்பது முக்கியமாகும். நல்லூர் வரமுடியாத அடியார்கள் தங்கள் வீட்டிலேயே கடும் விரதமாய் இருப்பார்கள் – இன்றும் பலர் விரதத்தை விடாமல் அனுட்டிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாண த்தில் பலர் பல வருடங்களாகவே இடை விடாது தொடர்ந்து கந்தசஷ்டி யைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். நீரை மட்டும் அருந்துவார் சிலர்.மாலையில் பாலை மட்டும் பருகு வார் சிலர்.பாலையும், ஒரு பழத்தையும் மாலையில் எடுப்பாரும் இருக்கி றார்கள். முதியவர்கள் மட்டுமன்றி – இளைஞர்களும் கூட கந்தசஷ்டியை பக்தி பூர்வமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதேயா கும்.
கந்தசஷ்டி நோற்கும் காலங்களில் யாவருமே கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வார்கள். கோவில்களில்களில் விரதமிருக்க அடியார்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடுவதற்கு வசதியாக – கந்தசஷ்டி கவசத்தை ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பும் வழக்கம் இடம்பெற்றும் வருகிரது. கந்தசஷ்டி கவசத்தை மனனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் பொருத்தமாய் அமைகிறது. ஆனால் பெரும்பாலனவர்கள் கந்தசஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்தே வைத்திருப்பார்கள். கந்தப் பெருமானை மனமெண்ணிப்பாடும்பொழுது அப்பாடல் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறந்த பாதுகாப்புக் கவசமாய் அமைகிறது என்பதால்தான் அப்பக்தி துதிக்கு “கந்தசஷ்டி கவசம்” என்று பெயர் அமைந்ததோ என எண்ணிடத் தோன்றுகிறது.
கந்தசஷ்டி கவசம் இலகுவான மொழிநடையில் அமைந்திருக்கிறது. இசையுடன் பாடவும் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.கந்தசஷ்டி கவசத்தை பலரும் மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதில் பொதிந்திருக்கும் தத்துவத்தை பெருதும் கண்டு கொள்ளுவதே இல்லை. கந்தசஷ்டி கவசத்தை உன்னிப்பாய் கவனித்தால் அதில் பொதிந்திருக்கும் பொக்கிஷ ங்களைக் கண்டு கொள்ளலாம். அவற்றை மனமிருத்துதல் வாழ்க்கைக்கு அவசியமாகும். பக்திப்பாடல்கள் பாடப்படுவதால் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சாதாரண பாடல்களும் தருகின்ற இன்பம் வேறு. அப்பாடல்களினால் ஏற்படும் உளநலம் வேறு. சாதாரண பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. பக்திப்பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. அந்த வகையில் கந்தசஷ்டி கவசம் தருகின்ற கருக்கள் உடலையும், உள்ளத்தையும் தூய் மையாக்கவும், உறுதிப்படுத்தவும், நல்லுணர்வுகளை ஏற்படுத்தவும் உறு துணையாகி நிற்கின்றன என்பதை யாவரும் மனமிருத்துதல் அவசியமாகும்.
நீறிடுநெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடையழகும் இணை முழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
என்று. கந்தப்பெருமானைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டுத்தான் கந்தசஷ்டிகவசம் தன்னுடைய தத்துவங்களைத் தந்து நிற்கிறது. போர்புரிபவர்கள் எதிரியிடமிருந்து வருகின்ற படைக்கலங்களின் பாதிப்பி லிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அணிவதுதான் “கவசம்”. அது சாதாரண கவசம். இதுவோ “கந்தசஷ்டி கவசம்”. அகப்பகை, புறப்பகை எதுவுமே எம்மைத் தாக்கிடா வண்ணம் காத்திடவல்லதாகும். கந்தனது வேல் ஞானத்தின் பேருவம். அந்த ஞானத்தின் துணைமட்டும் வாய்த்து விட்டால் வந்தவினையும், வருகின்ற வல்வினையும் – வந்தவழியே ஓடி ஒழிந்தே விடும்.
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல், வயிற்றை விளங்குவேல் காக்க
சிற்றிடைய அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின் கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
எத்தனை வேல்கள்! அத்தனை வேல்களும் பெறும் பெயர்களல்ல. எத்தகைய கொடிய பகைகளைகளையும் எம்மிடத்து வாராமல் காத்து நிற்கும் கருணைநிறை வேல்கள்! நம்மை என்றுமே வாழ்வில் காத்துமே நிற்கும் என்னும் நம்பிக்கையை நம்மனத்தில் ஊன்றும் வகையில் கந்த சஷ்டி கவசம் அமைந்திருக்கிறதல்லவா! எங்களது உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளும் எந்தவிதமான பாதிப்பும் இன்றிக் காக்கப்பட வேண்டும் என்று – அந்த வேலவனிடம் வேண்டுகோள் விடுக்கும் முறையும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பாக அமைகிறது அல்லவா! உடம்பின் ஒவ்வொரு பாகமும் காக்கப்பட வேண்டும் என்னும் சிந்தனையும், அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் பாடல்களின் வரிகளும், பாடல் வரிகளின் நிறைவில் “காக்க” என்று அமைவதும் – உள்ளத்தை நலப்படுத்துகிறது, உடலை நலப்படுத்துகிறது. “காக்க” என்பதும் சிறந்த மந்திரமாய் அமைகிறதல்லவா! இந்த வரிகளைப் பாடும்பொழுது – தியானத்தில் இருப்பதுபோன்ற ஒரு உணர்வு நம்முள் ஏற்படுகிறது அல்லவா! திரும்பத் திரும்ப இந்த வரிகளை வாய் உச்சரிக்க – எம்மை அறியாமலேயே எம்முள் ஒரு சக்தி உட்புகுவதை நாம் அனுபவித்தால் அறி வோம். பில்லி, சூனியம், பெரும்பகை, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனி, பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனி, கொள்ளிவாய்ப் பேய்கள், குறளைப் பேய்கள் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர், அத்தனையும் கந்தசஷ்டி கவசத்தின் ஒலி கேட்டவுடன் உருக் குலைந்தே போய்விடும் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். பில்லி , சூனியம் என்பது இன்றும் கிராமப்புற மக்களின் மனதில் குடியிருக்கும் பயமாகும். நவநாகரிகத்தில் இவை மூட நம்பிக்கையாய் இருக்கலாம். ஆனால் – பில்லி சூனியம் என்பதை “எம்மை விடாது பிணித்தி ருக்கும் கொடியவினை” என்று கருதிவிட்டால் கருத்து மனம் அமரும் அல்லவா!
புலியும் ,நரியும் ,புன்னரி நாயும், எலியும் கரடியும்,கிட்டவராது ஓடிவிடும். தேளும், பாம்பும், செய்யான், பூரான், கடிப்பதால் வரும் விஷங்களும், அதனால் ஏற்படும் கடித்துயரங்களும் இறங்கிவிடும். அதுமட்டுமட்டமல்ல ஒளிப்பும், சுளுக்கும், ஒரு தலை நோயும், வாதம் சயித்தியம், வலிப்பு, பித்தம், சூலை, சயம், குன்மம், சொக்குச் சிரங்கு குடைச்சல், சிலந்தி, குடல்விப் பிரிதி, பக்கப் பிளவை, படர் தொடை வாழை, கடுவன் படுவன், கைத்தாள் சிலந்தி, பற்குத்து அரணை, பருஅரை யாப்பும், ஆகிய பிணிகள் எல்லாம் எம்மை விட்டு அகன்றே விடும் என்று கந்தச்சஷ்டி கவசம் – வாழ்வியலுக்குப் பெருந்துணையினை வழங்கி நிற் கிறது.எங்களுக்கு வருகின்ற நோய்கள் அத்தனையும் வரிசைப் படுத்திக் காட்டியிருக்கும் பாங்கினை வியக்காமல் இருந்திடவே முடியாது. அதும ட்டுமல்ல விஷங்களைக் கொட்டி உயிராபத்தை தருகின்ற அத்தனை ஜந் துக்களின் பெயர்களையும் வரிசைப்படுத்தி பாங்கு – ஒரு சிறந்த விஷக்கடி வல்லுனரையே மனத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது எனலாம்.
எங்களுக்கு மனத்துயரங்கள், ஆபத்துகள், ஏற்படுகின்ற தருணத்தில், எங்கள் உறவுகள் நோயினால் அல்லது வேறு துன்பத்தால் அல்லல்படுகின்ற வேளையில் எல்லாம் நாங்கள் “கந்தசஷ்டி கவசத்தை” சொல்லியபடி இருப்போம். அப்படி நாங்கள் இருப்பதற்கு அடிப்படையே – ஆபத்திலிருந்து அல்லலிருந்து நிச்சயம் காப்பாற்றப்பட்டுவிடலாம் என்னும் அசையாத நம்பிக்கையே எனலாம். இன்றும் இதனைப் பலரும் செய்கிறார்கள், செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். இதனை வலியுறுத்தி, மனத்தில் நல்ல நம்பிக்கை தரும் வகையில் கந்தசஷ்டி கவசத்தின் முதல் துதியே உறுதி பயந்து நிற்பது ஐயத்தைப்போக்கி அணைப்பதாய் அமைகிறதல்லவா!
“துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை”
கந்தசஷ்டி கவசத்தை ஓதுங்கள் ! ஓதியபடி இருங்கள் என்பதற்குச் சான்றாக வருகின்ற இக்கருவினை மனமிருத்தல் அவசியமேயாகும்.
காசினியிற் றுன்பகலக் கந்தனருள் பெற்றுயர
மாசில்லாச் சீரெய்த மாமனையும் – பேசுதிரு
காதலரும் பெற்றுவக்க கந்தர் கவசத்தை
ஓத வெவரும் உவந்து
நிறைவில் எல்லாவற்றையும் அளிக்கின்ற வேலினை வணங்குவோம். அந்த வேலினைக் கையேந்தும் வேலவ்னையும் வணங்குவோம்.கந்தசஷ்டி கந்தனை மனமிருத்தும்.கந்தனை அருகழைக்கும் !
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் – வாரி
குளித்தவேலி கொற்றவேல் சூர்மார்புங் குன்றக்
துளைத்தவே லுண்டே துணை