படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 6

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

முனைவர் பிச்சை தமிழகனின் ‘‘மரபுத்தொடர் அகரவரிசை’”   

முன்னுரை

கவிதை, இலக்கணம், இவைபற்றிய ஆய்வு, மெல்லிசை, என்னும் நாற்பொருளையும் இதயத்தின நான்கு அறைகளிலும் நிரப்பிக் கொள்வதையே நாட்கடமையாகக் கொண்டிருக்கும் எனக்குச் சில நேரங்களில் ‘மறுமாத்தம்’ தேவைப்படுவதை உணர்கிறேன். அப்போது என் கண்ணில் பட்ட நூற்களில் ஒன்றுதான் ‘மரபுத் தொடர் அகரவரிசை’ என்னும் இந்நூலாகும். ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ என்னும் தொடர் தமிழுக்கு வழக்கின் இன்றியமையாமையை உணரத்தும். வழக்கின் உயிர்நாடி மரபுத் தொடர்களே!. ‘பனையட்டு’ என விதிப்படி உடம்படுமெய் புணர்த்தெழுதிப் பின்னர் ‘பனாட்டு’ எனச் சுயதிருத்தம் செய்து கொணடவர் தொல்காப்பியர். புளிச்சோறு, புளிங்கூழ், புளியமரம், புளியம்பழம் என்னும் ஒரே பகுதிக்குப் பல்வகைப் புணர்ச்சி விதிகளைத் தொல்காப்பியம் கூறுவதற்கும் இந்த வழக்கே காரணம். ‘மயில் குயில் ஆச்சுதடி’ என்பார் வள்ளலார். ‘மண்வெட்டிக் கூலிதின்னல் ஆச்சே’ என்பார் மகாகவி!. ‘குந்தி இருந்தவள் வீடு சென்றாள்’ என்பார பாவேந்தர். ‘வீடு முச்சூடும் அழும்’ என்பார் ஜீவா!. இப்பெருமக்கள் தமிழை ஆண்டிருக்கலாம். ஆனால் தமிழ் வழக்கு இவர்களை ஆண்டது  அத்தகைய வழக்கின் உயிர் நாடியான மரபுத் தொடர்களை இயன்ற அளவு தொகுத்தும் வகுத்தும் விளக்கமளித்தும் உண்மையான தமிழ்த் தொண்டு செய்திருக்கிறார் கல்வெட்டறிஞர் இலக்கணக்கடல், வழக்கியல் வல்லாளர் முனைவர் பிச்சை தமிழகன் அவர்கள். நான் விரும்பிய நேரத்திலும் வேண்டிய நேரத்திலும் படித்துச் சுவைத்த ‘மரபுத்தொடர் அகரவரிசை’ என்னும் நூலைப் பற்றிய ஒரு சுருக்க மதிப்பீட்டினை இங்கே பதிவு செய்கிறேன்.

மரபத தொடர்களின் சிறப்பும் இன்றியமையாமையும்

மரபுத் தொடர் என்பதில் மரபு என்பது மக்கட்குழுவையும தொடர் என்பது அவர்களால் பேசப்படும் மொழியையும் குறிப்பது. மக்களால் உருவாக்கப்படுதலின் மொழி மக்களுக்கானது. தன்னை உருவாக்கிய மக்கட் சுமதாயத்தின் வழக்கையே தன் வழக்காகக் கொள்வது மொழியின் இயல்பு. இந்த மரபு என்பது பெரும்பாலும் உலகியல் வழக்கையும் மிகச் சிறுபான்மை செய்யுள் வழக்கையும் உள்ளடக்கியது.  ஒரு மொழியின் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ ஒரு அசை கூட தானாக அமைந்துவிடாது. உலக வழக்கிலிருந்துதான் வரவேண்டும். இது அடிப்படை. ‘உலகத்தார் உண்டென்பது’ என்பார் திருவள்ளுவர். ‘உலகியல் கூறி பொருள் விளக்குவார் தமிழ்ச்சான்றோர். ‘வட்டார வழக்கு’ என்ற பெயரில் இலக்கியங்கள் வெற்றி பெறுவதற்கும் நாடடுப்புறப் பாடல்கள் தனிக்கவனம் பெறுவதற்கும், திரையிசைப்பாடல்களில் நாட்டுப்புற இசையமைப்புடன் கூடிய பாடலகள் பெருஞ்சிறப்பு பெறுவதற்கும் மண்ணின் மணமாகிய மரபே காரணம். ‘சரிகமபதநி’ என்னும் ஸ்வரங்களை அறியாதவன் ‘தந்தானே தானே தன்ன தன்னானா’ என்னும் தத்தகாரத்தில் தன்னை இழப்பதற்கும் இந்த மரபிசைதான் காரணம். அறிவியல் வளர்ச்சியாலும் மொழிக்கலப்பினாலும் நடப்பியல் வாழ்வில் போலித்தனத்தாலும் மரபுத் தொடர்கள் மறக்கப்படினும் அது தலைகாட்டுகிற இடங்களில் எலலாம் தனிச்சிறப்பு பெறுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு நூறு பேர் முழுக்கால் சட்டை அணிந்த ஒரு விழாவில் வேட்டி கட்டிய ஒருவனுக்கான பெருமை அது. முன்னோர்கள் விட்டுச்சென்ற ‘ வீட்டு உலக்கை’ அது. கண்ணில் மறைந்திருக்கும் காமாட்சி விளக்கு!

உண்மையான தமிழ்த்தொண்டு

அறிஞர் உ.வே.சா. பெரிய படைப்பாளர் அல்லர். கவிஞர் அல்லர். நாவலாசிரியர் அல்லர். வரலாற்றாசிரியர் அல்லர். ஆனால் இவர்களுக்கெல்லாம் மூலமாகத் திகழ்ந்தார். திகழ்கிறார். அதற்குக் காரணம் அவர் ஏற்றுக் கொண்ட பதிப்புப் பணி. குறிஞ்சிப்பாட்டின் இரண்டு வரிகளுக்காகக் குக்கிராமத்திற்கும் குதிரைவண்டிப் பயணம் மேற்கொண்ட குணாளர் அவர். எப்படி புலமைக்கடல் நச்சினார்க்கினியர் தாமே தனித்து ஒரு நூலை எழுதவில்லையோ அவரைப் போலவே தனியொரு நூல் செய்யாமல், இருந்து மறைந்த நு{ல்களைத் தேடுவதிலும் செப்பம் செய்வதிலும் உண்மை கண்டு பதிப்பிப்பதிலும் ஐயரின் உழைப்பு ஆண்டவனும் அறியாதது. அறிஞர்களாலும் பேராசிரியர்களாலும் கைகக்கொள்ள முடியாத கடும்பணி ஐயர் மேற்கொண்ட அந்தப் பணி. அந்தப் பணியை அல்லது அதுபோன்றதொரு பணியைத்தான் அறிஞர்  தமிழகன் செய்திருக்கும் இநத மரபுத்தொடர் அகரவரிசை. இருந்த இடத்திலிருந்து இருப்பதைப் படிக்கவே சுணங்கும் இந்த உலகில்  கால நேரம் பார்க்காது கால்கடுக்கச் சென்று கேட்டும் குறிப்பறிந்தும் தொகுத்திருக்கும் இந்த ‘மரபுத் தொடர் அகர வரிசை’ முனைவர் அவர்களுக்குப் பெருமை தரும். தமிழுக்கு உரமாகும். இதுதான் உண்மையான தமிழ்த்தொண்டு. பிறர் செய்யாத தொண்டு. அவ்வளவு எளிதாகப் பிறர் செய்ய முடியாத தொண்டு!.

மக்கள் பயனபாட்டில் மரபுத் தொடர்கள்

இலக்கணத்தை அல்லது அது சார்ந்த பொருண்மைகளை  இலக்கணமாகக் கற்பித்தலின் அதன் பயன்பாட்டை மக்கள் வழக்கிலிருந்து அல்லது தொடரில் அமைத்து எடுத்துக் காட்டினால் இன்னும் தெளிவாகும்.

  1. மண்ணையே ஆளலாம் என்று அவன் ‘மனக்கோட்டை’ கட்டுகிறான்.
  1. ‘கணணும் கருத்துமாக’ இருந்தால் காரியம் கைகூடும்
  2. ஆடம்பரத்திற்காகப் பணத்தை ‘அள்ளியிறைக்கிறான்’
  3. விஷயததை ‘ஆறப்போடுவதற்கு’ விசாரணை ஆணையம்
  4. சில்லறை இலஞசம் பெற்றான் அதனால் ‘சீட்டு கிழிந்தது’
  5. ‘அவசரக் குடுக்கையாய்’ இறங்கினான், அல்லற்படுகிறான்
  6. கையேந்தி கடன் பெற்றவன் ‘கம்பி நீட்டினான்’
  7. கூட்டுக் குடும்பம் என்பது இனி ‘கானலே!’
  8. ‘கயிறு திரிப்பதில்’ இவனுக்கு நோபல் தரலாம்.
  9. குடி வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்கிவிடும்
  10. மேலாளருக்குத் தாளம் போட்டே இவன் மேலே வந்தவன்

மேலே காட்டப்ட்டிருக்கும் தொடர்கள் எல்லாம் நாளும் மக்கள் வாழ்வில் புழங்குவன. மனத்திலே கோட்டை கட்ட முடியாது. தகுதிக்கு மீறிய ஆசை. கண்ணும் கருத்தும் பொறுப்புணர்வை உணர்த்தியது. அளவின்றி வீணான செலவுதான் ‘அள்ளியிறைத்தல்’.  ஆறப்போடுதல் என்றால் சூடு குறைவதற்காக அன்று  மக்கள் மறக்கட்டும் என்று. . ‘சீட்டு கிழிந்தது’ என்றால் பதவி பறிபோனது.. ‘அவசரக் குடுக்கை’ என்பது பொறுமையின்மை. ‘கம்பி நீட்டினான்’ என்றால் காணாமல் போனான் ‘கானல் என்றால் காணமுடியாது .கயிறு திரித்தல் என்றால் பொய் சித்திரிப்பு. ‘குட்டிச் சுவர்’ என்பது இடிந்த சுவரைக் குறிக்காது வாழ்க்கையின் சிதைந்த நிலையைக் குறிப்பது. ‘தாளம் போடுதல்’ என்றால் அநியாயத்துக்குத் துணைபோதல். இதனை ஒததூதல் என்றும் சொல்வர். ‘ஜால்ரா’ என்பதும் அது. சொற்களுக்கான நேரடிப் பொருளைத் தராது மக்கள் கருதும் பொருளை அவர்தம் பண்பாடு சார்ந்து அமைகின்ற தொடர்களே மரபுத் தொடர்கள் என்பது இவற்றால் ஓரளவு விளங்கக் கூடும்.

உலை வைத்தலும் ஊசலாடுதலும்

உலையும் கஞ்சியும் ஒரு திறத்தன. அவை ஏழைவீட்டுச் சமையல் அறை அணிவகுப்பு  ‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்பார் அழுகணி சிததர். அது கொல்லன் உலை. “உலைஅமிழ்தை  வறியவள் ஒருத்தி தூக்கல் போல்  என்று குழந்தையைத் தூக்குதற்கு உவமம் காடடுவார் பாவேநதர். இந்த இடங்களில் எல்லாம் ஏழை வீட்டுச் சிந்தனையே உலை என்ற சொல்லால் வெளிப்படுததப்படடது.  இந்த ஏழையின் பிழைப்பில் மண்ணைப் போடுவதற்கென்று சில ஏகாதிபத்திய சக்திகள் எந்த நாளும் இருந்து வருவது இயல்பு. . முயன்று  படித்து முன்னேறும் நோக்குடன பணிபுரியும் ஏழை ஒருவனைப் பற்றிய மொட்டைக் கடுதாசி அந்த எழையின் பிழைப்புக்கு உலை வைக்கும்.  ‘வைத்தல்’ என்ற வினைக்குத் தரையில் வைத்தல் என்று பொருள. ஆனால் ‘பற்ற வைத்தல்’ என்ற சொல்லில் அது அப்பொருள் தராது. அதுபோல ‘உலை வைத்தல்’ என்ற இந்தச் சொல்லில் ‘வைத்தல்’ என்ற சொல் உலை எனபதோடு இணைந்து ‘கேடு செய்தல்’ என்ற பொருளில் வந்தது. அதுவும் பிழைப்புக்கே கேடு சூழ்வதைததான் ‘உலை வைததல்’ என்னும் மரபுத் தொடர் குறிக்கிறது என்பதை ஆசிரியர் நுட்பமாக விளக்கியிருக்கிறார். காற்று தீயாகி ஸ்டவ் அடுப்புச் சமையலுக்கு உலையும் தெரியாது. அதனால் கஞ்சியும வடியாது!

‘ஊசல் என்பது இலக்கியத்தில் கலம்பகத்திலும் பெண்பாற் பிள்ளைத் தமிழிலும் ஓர் உறுப்பு.  திருவாசத்தில் திருப்பொன்னூசல் என்பதைக் காணலாம். ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்? உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்? என்பது நந்திக்கலம்பகம் .‘ஆகாயப் பந்தலிலிலே பொனனூஞ்சல் ஆடுதம்மா’ என்பது திரையிசைப் பாடல். தூய்மையான தமிழ்ச்சொல். அது ஆட்டம் என்னும் தொழிற்பெயரோடு சேர்ந்து ‘ஊசலாட்டம்’ என வருவதுண்டு.

“எண்ணிலா  அருந்தவத்தோன்  இயம்பிய சொல்  மருமத்தின்
எறிவேல்  பாய்ந்த
புண்ணிலாம்  பெரும் புழையில்  கனல் நுழைந்தால்  எனச் செவியில்
புகுத லோடும
உண்ணிலா  வியதுயரம்   பிடித்து உந்த  ஆருயிர் நின்று
ஊசல் ஆடக்
கண்ணிலான் பெற்றிழந்தான்  என உழந்தான் கடும் துயரம்
கால வேலான்”.

என்னும் கம்பன் பாடல். துன்பத்திற்கும் கடமைக்கும் இடையே தசரதன் மனத்து ஊசலாட்டத்தைக் காட்டும். இந்த அரிய சொல் மக்கள் வழக்கிலிருந்து வந்தது. மனம் ஒரு நிலையில் நிலலாமைக்கு ‘ஊசலாட்டம்’ என்று பெயர். இதற்கும் கடியாரத்தின் ஊசலுக்கும் தொடர்பில்லை. ஆனால் கடியாரத்தின்  ஊசலுக்குத் (PENDULUM) தமிழில் அப்பெயர் வந்ததற்குக் காரணம் ஒரு முனையிலும் நில்லா அதன் ஆட்டமே. ஊஞ்சலில் ஆடுவதற்கும் ஊசல் ஆடுவதற்கும் தொடர்பில்லை. மக்கள் பார்வையில் அதன்  இருமுனையாட்டம் ஒரு முடிவுக்கு வராத நிலையை நினைவுபடுத்தியதால் தோன்றிய தொடர்.!.

உடம்புக்கும் பாடைக்கும் ஒரே பெயர் 

‘கட்டுமானம்’ என்ற சொல்லிற்கும் ‘கட்டு’ என்ற சொல்லிற்கும்  தொடர்பு உண்டு. ‘மானம்’ என்னும் விகுதி வருமானம், வெகுமானம், அடமானம், உவமானம் என்பன போல் வரும். உறுதியான பொருட்தொகுதிக்கு அப்பெயர் வழங்கப்படுகிறது. தேகக்கட்டு, உடற்கட்டு, வீட்டுக்கட்டுமானம், கீரைக்கட்டு என்பன போன்ற சொற்களில் அப்பொருள் இழைவது காண்க. இனி ‘நாட்டுக்கட்டை’ என்ற சொல்லில் இருக்கும் நுண்ணியமும் அதுவே. உடலுறுப்புக்களின் உறுதியும் அழகும் தளர்ச்சியின்மையும் சுட்டுவதாக அது அமைந்திருப்பதை உணரமுடியும்.

மொழியின் முழுமையான ஆழத்தையும் ஆளுமையையும அவல வெளிப்பாட்டில் காணலாம்.. இலக்கியச் சுவைகளில் பெரிதும் மனங்கவர்ந்து நிற்பது அவலமே. கம்பனின் ஆறு காண்டங்களில் யுத்த காணடத்தை ‘மரண காண்டம்’ அலலது ‘அவல காண்டம்’ என்றே கூறலாம். புலம்பலின் உச்சம். அழுகைகளின அணிவகுப்பு.  வழக்கிலும் இந்த அவலததைக் காணலாம். ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பார் திருமூலர். ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றதும் அவரே. அத்தகைய உடம்பை வழக்கில் ‘கட்டை’ என்று வழங்குகின்றனர் மக்கள்.

‘உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்த பிறகுதான் இந்தக் கட்டை போகும், வேகும்’ என்பது வழக்கு. இந்தத் தொடரில் ‘கட்டை’ என்பது உடம்பு. கட்டை என்பது யாக்கையின ;மறுபெயர். யாக்கை தொழிற்பெயர். யாத்தல் எனினும் ஒக்கும். உயிரன்றி யாக்கை செயல்படாது. இயலாது. இனி ஈரம் இல்லாதது கட்டை. விறகுக் கட்டை, மரக்கட்டை என்னும் வழக்கு நோக்குக. உயிரற்ற உடம்பிற்கு யாக்கை என்பது பெயர்.

‘கட்டையிலே போறவனே’ என்பதும் வழக்கு. இங்கே கடடையென்பது உடம்பைக் குறிக்காது கட்டையாகிய உடம்பு வேகின்ற மயான மேடையைக் குறிக்கிறது. உடம்புக்குப் பெருமை உயிர். மரத்திற்குப் பெருமை ஈரம். உயிரிலலாத உடம்பும் ஈரம் இல்லாத மரமும் பயனற்றவை. வேரில் விழுகின்ற மழைத்துளிக்கும் விறகில் விழுகின்ற மழைத்துளிக்கும விளைவு வேறுபடும். எனவேதான்  எரிகின்ற உடம்பையும் ‘கட்டை’ யென்றார்கள் எரிக்கப்படும் உடம்பையும் ‘கட்டை’ யென்கிறார்கள்.

‘என் கட்டை போகிறவரைக்கும்’ என்பதும் ‘நான் கட்டையில் போகிறவரைக்கும்’ என்பதும் முறையே உடம்பையும் பாடையையும் ‘கட்டை’ என்னும் ஒரு சொல்லே வழக்கில் இருக்கிறது என்தைத் தமிழகன் மிக அருமையாக உணர்த்தியிருக்கிறார்.  இந்த வழக்குச் சொலலை கவிஞர் வைரமுத்து தாம் எழுதிய பெய்யெனப் பெய்யும் மழை என்னும் கவிதை நூலில்

“கட்டையிலே போகையிலும்
கட்டாயம் சோதி! என்
கண்ணுக்குள் தெரியுமடி
கவிதையென்னும ஜோதி!”

என்று பாடி அதன் இலக்கியத் தகுதியை உறுதிசெய்திருக்கிறார். எதுகையைப் புறந்தள்ளி மோனைக்கும் இயைபுக்கும் முதன்மை தரப்பட்டிருக்கும் இந்தக் கவிதை வரிகளில் ‘கட்டையிலே’ என்ற சொல்லைப் ‘பாடை’ என்னும் பொருளில் அவன் பயன்படுத்தியிருப்பது காண்க.

கடைவிரித்தலும்

செங்குத்தான  (VERTICAL) திறப்புக்குத் திறப்பு என்றும் கிடக்கை நிலைத் (HORIZONTAL) திறப்புக்கு விரித்தல் என்றும் பெயர். கோயில் நடைத் திறப்பு,, மதில் வாயில் திறப்பும் என்பவற்றையும்  படுக்கை விரித்தல், பூவிரித்தல், இலை விரித்தல் முதலிய வழக்கு நோக்குக. இது முரணாகிறபோது பொருள் மாறுபடும். ‘தலைவிரிக்கோலம்’ என்னும் ;முரண் அவலக் குறிப்பு. கடைவிரித்தல் என்பது சாதாரண மொழியில் தரைக்கடையை விரிப்பதாகக் கொளளலாம். ஆனால் அது மரபுத் தொடராக அமைகிறபோது ‘மந்தணத்தை வெளிப்படுத்துதல்’ என்னும் பொருளில் வரும். ‘எல்லாவற்றையும் கடைவிரிக்கத்தான் நீ வந்தாயா? என்பது உலகியல்.  நூலாசிரியர் கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்னும் தொடரை வள்ளலார் வாக்கு அதாவது வாயச்சொல் என்கிறார். உண்மையில் அது திருவருட்பாவில் எங்கும் காணப்படாத வரி. மிகவும் சாதுரியமாக ‘வாய்ச்சொல்’ என் ஆசிரியர் சொல்வதும் ஒரு வகை உத்தியே! அது வள்ளலார் சொன்னதாக வழிபோக்கர் சொன்னது. இத்தகைய வழிப்போக்கர் விட்ட கதை தமிழில் எராளம்! ஏராளம்!

கண் – மூடுதல் – விழித்தல் — காட்டுதல்

‘கணணயர்தல்’ என்பது உறங்குதல் என்னும் பொருளில் வரும். இந்தச் சொல்லில் ‘கண்’ என்பது பெயர்ச்சொல். அயர்தல் என்பது வினைச்சொல். இவையிரண்டும் அவற்றுக்கான உண்மைப் பொருளையே உணர்த்தியது. ‘கண்மூடுதல்’ என்பது சாதாரண நிலையில் ஒரு பொருளும்  மரபத்தொடராக மற்றொரு பொருளும் உணர்த்தி நிற்கிறது. ‘கண்மூடுதல் என்றால் கண்ணயர்தல் என்பது போலவே உறங்குதல் என்பதை உணர்த்தும். ‘கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே’ என்பது அன்றைய திரையிசைப்பாடல். கூடவே ஒரே சொல்லாக நின்று ‘இறந்து போதல்’ என்னும் பொருளையும்  உணர்த்தி நிற்கும். அவன் கண்ணை மூடுவதற்குள் இதனைச் செய்துவிட வேண்டும் என்பதில் ‘அவன் இறந்து விடுவதற்குள் இதனை முடித்துவிட வேண்டும் எனனும் பொருள் அமைந்திருப்பதை அறிக. ‘கண்ணை மூடுதல்’ என்னும் சினைவினை மரபுத் தொடராக நின்று நுண்பொருளை உணர்த்துகிறது.

‘கண்விழித்தல்’ என்பதும் அதுபோன்றதொரு சொல்லே. உறங்கி எழுதல் என்பது இயல்பான வழக்கு. ஆனால் ‘என்னைக் கொஞ்சம் கண் திறந்து பார்க்கக் கூடாதா?’ என்று திறந்த விழி உடையவனையே நோக்கி இறைஞ்சுகிறபோது அது மரபுத் தொடராகிவிடுகிறது, என்பால் இரக்கம் காட்டமாட்டாயா என்னும் பொருளைத் தருகிறது,  ‘இன்னமும் பாரா முகம் ஏனம்மா?’ என்பது அக்காலத்திய புகழ் பெற்ற திரையிசைப் பாடல் வரி. ‘கண்ண தெறக்கணும சாமி’ என்பது இக்காலத்திய திரையிசைப் பாடல் வரி. ‘மீன் நோக்கும் நீள்வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா என்பால் நோக்காயாகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்’ என்பது பெருமாள் திருமொழி.

‘கண்விழித்தல்’ என்பதுபோன்ற மற்றொரு மரபுத்தொடர் கண்காட்டுதல். கண்காட்டுதல் என்றால் ‘அருள்பாலித்தல்’ ‘நன்னெறி காட்டுதல்’, ‘பிழைக்கும் வழி காட்டுதல்’ என்பது பொருள். கொஞ்சம் உன் கண்ணைக் காட்டினால் பிழைத்துக் கொள்வேன் என்பதும்  ‘அவனுக்கொரு கண்ணைக் காட்டிட்டா பிழைத்துக் கொள்வான்’ என்பதும். ‘சாமி கண்ணத் தொறக்கணும்’ என்பதும் மரபியல் சார்ந்த உலகியல் வழக்கு.

கரைத்துக் குடித்தலும் கரைகாணுதலும்

முற்றோதல் என்பதும் முழுதறிதல் என்பதும் தமிழ்ப்பனுவல்களில் காணப்படும் சொற்கள். மனனம் செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாகச் சொல்லிச் சுவைப்பது  முன்னது. ஒரு பொருள் பற்றி முழுமையாக அறிவது பின்னது. உணவுப்பொருட்களை நன்கு மென்று உள்ளே அனுப்பினால் உள்ளே இருக்கும் செரிமான உறுப்புக்களின் வேலைப் பளு குறையும் என்பது மருத்துவக் குறிப்பு. பற்களின் உடலியல் பயன் அது. அவசர வாழ்க்கையில் பலர் பற்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக விழுங்குவதற்குத் தொண்டையைப் பயன்படுத்துகிறார்கள். ‘கஞ்சி’ என்பதும் குழைத்தும் கரைத்தும் உண்பது. அது இன்னும் நல்லது. எதிலும் நுனிப்புல் மேய்வார் பரவி நிற்கும் உலகத்தில் எந்தப் பொருள் பற்றியும் முழுமையும் தெரிந்து கொள்வார் குறுகிப்போயினர். ஒருவனுடைய அடையாளப்படுத்தப்பட்ட அறிவின் அளவை அறிந்த மக்கள் அவன் அளவு தெரியாது பேசினால் ‘கரைத்துக் குடிச்சவன் மாதிரி பேசாதே’ எனக் கடிந்துரைப்பர். எதிர்மறையில் இப்படி வரும் இந்தத் தொடர் ‘வாரியார் அவர்கள் திருப்புகழைக் கரைத்துக் குடிததவர்’ என உடன்பாட்டில் வழங்கப்படும்.

‘கங்குல் எல்லை காண்பளவும இமைப்பிலன்’ (இலக்குவன்) என்பது குகன் வாக்கு. கரைத்துக் குடித்தல் என்பது ஒரு பொருளைப் பற்றிய பன்முகப் பரிமாணத்தைப் பற்றியதெனின் ‘கரைகாணுதல்’ என்பது பரப்பைப் பற்றியது. அகலக்கற்றல் ஆழக்கற்றல் என்னும் இருவகையுள் இது அகலக் கற்றலைக் குறிக்கும். இதுவும் எதிர்மறையிலும் வரும் உடன்பாட்டிலும் வரும். ‘கரைகாணாத் துன்பம்’ என்பது எதிர்மறை. ‘சிலப்பதிகாரத்தில் சிலம்புச் செல்வர் ம.மொ.சி. கரை கண்டவர் என்பதும் ‘வேர்ச்சொல் ஆய்வில் கரைகண்டவர் பாவாணர்’ என்பதும்  உடன்பாடு. கரைத்தல், கரைகாணுதல் என்னும் பருப்பொருள் வினைகள் நுண்பொருள் உணர்த்தி வந்தமை வழக்கு நுண்ணியம். பண்பாட்டு நுண்ணியம். மொழியியல் நுண்ணியம்.

முழுகாமல் இருத்தலும் முழுகிப் போதலும்

‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் பேரறிஞர் அண்ணா எழுதியது. அதில் ஒரு காட்சி வரும். விலைமகளை நாடும் தலைவனிடம் கதைத்தலைவி தான் கர்ப்பமாயிருப்பதை நாணத்துடன் இப்படி வெளிப்படுத்தவாள்.  “நான் மூனு மாசம் முழுகாமல் இருககிறேன்” என்று. அதற்கு உடனடியாக கதைத்தலைவன் சொல்வான்’ நான் (உன்னை) ‘தலைமுழுகிவிட்டேன்” என்று. ‘தலை’ என்ற சொல் ‘தனி. முழுகுதல்’ என்ற சொல் தனி. இவ்விரண்டு சொற்களும் இணைந்து முற்றிலும் மாறுபட்டதொரு பொருளைப் தமிழ்ர் பண்பாட்டுத் தளத்தில் வைத்துப் பெறமுடிவதைக் காணலாம். பெண்கள் கருவுற்றிருப்பதை வெளிப்படுத்துவதற்குப் பல சொற்கள் இருக்கின்றன. அவை பண்பாடு காக்கும் சொற்கள். ‘மாசப்பொழுதாய் இருக்கிறாள்’. ‘முழுகாமல் இருக்கிறாள்.’ ‘மசக்கையாய் இருக்கிறாள்’ ‘இப்ப அவ ஐந்து மாசம்’ என்றுதான் சொல்வார்கள். அப்போதெல்லாம் பெண்களுக்குச் சுண்டு வலி வரும் அதனால் சுகப்பேறு நிகழும். அது ஒரு கனாக்காலம்!. போலி நாகரிகத்தில் எதனைப் பேசுகிறோம் யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் ஜிகினா வாழ்க்கையில் சிக்கித தவிக்கிற தற்காலத்தில் ‘என் மவ உண்டாயிருக்கிறா’ என்று உவந்து போகிறார்கள். அப்படிச் சொல்வது அவர்கள் உரிமை. அதே நேரம் ஒரு நெடிய மரபு புதைக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது, பெரியவர் தமிழகன் பண்பாடு காக்கும் இத்தகைய மரபுத்தொடர்களைத் தொகுத்துக் காட்டியிருக்கிறார் வகுத்துச் சொல்லியிருக்கிறார். இதில் என்ன பண்பாடு இருக்கிறது என்று சிலர் வினவலாம். ‘முழுகுதல்’ என்றால் தலைக்குக் குளித்தல் மாதாந்திர விலக்குக்கு உள்ளான மகளிர் மூன்றாம் நாள் குளித்து வீடடுக்குள் வருவது தமிழர் பண்பாடு. இன்றைக்கும் பெருவாரியான தமிழகச் சிற்றூர்களில் பின்பற்றப்படும் வாழ்வியல் நியதி. திங்கள்தோறும் தலைமுழுகும் மகளிர் கருவுற்றால் தலைகுளித்தலாகிய அந்தக் குறிப்பிட்ட சடங்கு நிகழாது. ‘தலைக்கு ஊற்றுதல்’ என்பது தலையைத் தாண்டியதொரு பண்பாட்டைக் குறித்தது காண்க. எனவே ‘முழுகாமல் இருக்கிறாள்’ என்ற சொல் ஏற்கனவே அவள் திஙகள் தோறும் முழுகியதைக் காட்டுகிறது. ஆனால் ‘உண்டாயிருக்கிறாள்’ என்ற சொல் அந்தப் பண்பாட்டு விழுமியத்தை எள்ளின் முனையளவும் வெளிப்படுத்தவில்லை என்பதை அறிதல் வேண்டும்.

‘என் குடி முழுகிடுச்சே?’ இந்த அவலம் அங்கிங்கு எனாதபடி எங்கும் கேட்கும் காலம் இது. முழுகுதல் என்பது நீரின்கண் நிகழ்கிற நிகழ்வு. வீடு வெள்ளத்தில் மூழ்குவது வேறு. காதல் கண்ணீரில் மூழ்குவது வேறு. குடி வறுமையில் மூழ்குவது அவற்றினும் வேறு. இது மூன்றாவது. தமிழின் மரபின் நுண்ணியம் வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. ஒருத்தி முழுகாமல் இருந்தால் அந்தக் குடும்பம் மகிழ்கிறது. அந்தக் குடும்பம் வறுமையில் மூழ்கினால் புலம்புகிறது. .  இதனை வேறுவாய்பாட்டிலும் சொல்லலாம். முழுகாமல் இருந்தால் களிப்பு. மூழ்கினால் சலிப்பு! இந்தச் சலிப்பு பத்து பவுன் சங்கலியை அடகுவைத்து வட்டிக் கட்ட இயலாது மூழ்கிப் போனவனுக்குத்தான் தெரியும்!

சந்திக்கு இழுத்தல்

ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பாரத்துக் கொள்வதற்குச் சந்தித்தல் என்று பெயர். சாலைகளுக்கும் இரு பொருந்தும் இரண்டு மூன்றாகி முச்சந்தி, நாற்சந்தி எனவும் வருவதுண்டு. ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்துக்கு ‘ஐஞ்சந்தி’ என்று வந்திருக்க வேண்டிய பெயர் ‘விரல்நிலை’ என்று வந்தது. ‘FINGER POST’  என்பது நீலமலை மாவட்டத்தில் ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்திற்குப் பெயர். இ;நதப் பெயர் இங்கிலாந்து நாட்டில் உள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியில் தங்கள் நாட்டிலிருந்த பெயர்களையெல்லாம் நீலமலையில் முதன்முதலாகக் குடியேறிய காலத்து அங்கே வைத்தார்கள். கட்டுரைக்குத் தொடர்பிலலாதவிடத்தும் இது ஒரு கூடுதல் தகவலாகக் கொள்ளப்படலாம். இந்தச் சந்திகளில் தமிழர்களின் வாழ்வில் முச்சந்தி பெற்ற இடத்தை வேறு எதுவும பெற்றதாகத் தெரியவில்லை. ‘அங்காடி நாய்’ என்றே பட்டினத்தார் பாடுகிறார். சாவும் நெருங்காது சந்தியிலே நிற்கின்றேன் என்பார் வைரமுத்து. ‘சந்திப் பிழை போன்ற சந்ததிப் பிழைகள்’ என்பார் காமராசன்.   “சந்திக்கு இழுத்தல்” என்பதன் பொருள் தெருக்கள் கூடும் சந்தியை நோக்கி ஒருவரை இழுத்துச் செல்வது என்பதன்று. ‘அவமதித்தல்’ அல்லது ‘மானக்கேடான சம்பவங்களைப் பிறரறிய வெளிப்படுத்தல்’ என்பதே மரபுப் பொருளாகும். ஒருவன் மற்றொருவனைச் சந்திக்கு இழுத்தால் அங்கே அவர்கள் சிரிக்கமாட்டார்கள். சந்தி சிரிக்கும்! சந்தியென்றால் வேடிக்கை மனிதர்கள்!

குளிர்ந்தது நெஞ்சா? வயிறா?

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்பார் மகாகவி. புவியனைததையும் ஒரு சேர நோக்கி அனைத்தையும் தன் கவிக்குடைக்குள் கொண்டு வர எத்தனித்த அவன், ஒரு தனிமனிதனின் உணவுப் பசியைப் போக்குவதையே தலையாய தொண்டாகக் கருதினான்.  பாரதிக்கு முன்னால் அறச்செல்வி மணிமேகலை இதனை முன்னெடுத்திருந்தாலும் அவள் ‘கவிதாயினி’ அல்லள். பாரதி வையகத்து மாகவிஞன். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று தத்துவ முரணை முன்னெடுக்கிறான். சமுதாயத்திற்காகத் தனிமனிதன் என்பதுதான் நெறி. பாரதி பசியின் கொடுமையைச் சித்திரிக்க வேண்டி தனிமனிதனுக்காகவே சமுதாயம் என்று முன்னெடுக்கும் நுட்பம் உணரத்தக்கது. வயிற்றை அடிப்படையாகக் கொண்ட இச்சமுதாய வழக்கினை அறிஞர் முனைவர் தமிழகன் ஐயா அவர்கள மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

வயிற்றில் பால் வாரத்தல்

‘பால்வார்த்தல் என்பது பாம்புக்குரிய பழமொழியின் பகுதி. ‘பாலாபிஷேகம்’ என்பது இறைவழிபாட்டில் இடம்பெறுவது. ‘பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்க வா’ என்பது வைரமுத்தின் வரி. ஆனால் வயிற்றில் ‘பால் வார்த்தல் என்பது வழக்கு. வாழ்க்கைச் சிக்கல்களில் விடும் பெருமூச்சுக்களில் சிக்கித் திணறும் சூழலில் ஆறுதல் தரும் பொருளோ சேதியோ கிட்டும்போது வரும் வெளிப்பாடு இது. ‘சுகப் பிரசவம்’ எனக்கேட்டுத் தாய் பூரிக்கிறாள். ‘விபத்தில் பிள்ளை தப்பினான்’ என்னும் சேதி குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி. இவையெல்லாம் தொடர்புடையவர்களுக்கு ‘வயிற்றில் பால் வார்த்தது போல’ என்பதாம். வயிற்றுக்குச் சோறே கிட்டாதாரும் ‘வயிற்றுக்குப் பால் வாரத்தல்’ என்னும் இந்த வழக்கைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சேதி நெஞ்சைக் குளிரவைக்கும். நல்ல சோறு வயிற்றின் பசிபோக்கும். நெஞ்சின் வினை வயிற்றுக்கு இடம் மாறும் உலகியலில் வழக்கில் பயன்படுத்தப்படும் மரபியல் தொடர் இது. பதற்றம் நெஞ்சுக்கானது என்பதைப் புரிந்து கொண்டால் மரபுத் தொடரின் ஆழமும் அழகும் புரியக்கூடும்.

கொள்ளையடிததலும் வயிற்றிலடித்தலும்

“ஊரை அடித்துப் போடும் அரசியல்வாதி’களோடு தற்போது அரசு அதிகாரிகளும் இணைந்திருக்கிறார்கள் என்பது தினச்செய்தி. ‘படியளப்பேன் என்று பாராள வந்தவர் தடியெடுப்பதும், கடமை செய்ய வந்தவர்கள கையூட்டல் வளம் பெறுவதும் கண்கூடு’. தகராறு வருகிறபோதோ சண்டைவருகிறபோதோ யாரும் வயிற்றில் அடித்துக் கொள்வதில்லை, உடலின் கீழ்ப்பகுதியாக அது இருப்பதால். ஆனால்  ஒருவனுடைய கை செயல்படாடமலேயே அடிப்பதுதான வயிற்றில் அடிப்பது.  வயிற்றுப் பிழைப்புக்கான வழியைத் தூர்ப்பதே வயிற்றில் அடிப்பது என்பதன் பொருள். சமுதாயத்தின்  எதிர் நிலைச் செயல்பாடுகளை இத்தகைய ஆழமான, அடர்த்தி நிறைய குறிக்கும் புலனெறி வழக்கு இன்மையையும் உணர்தல் வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ என்னும் இலக்கிய வழக்கினையும் ‘என் வயிற்றில் அடிச்சுட்டானே’ என்னும் சமுதாயப் புலம்பலையும் இணைத்து மதிப்பிடின் உண்மை துலங்கும்! உருக்கம் தெரியும்!

எரிந்து சொல்வதும் எரிச்சல் படுவதும்

சில நேர்வுகளில் புலனெறி வழக்கின் ஆழத்தைவிட, நுட்பத்தைவிட வழக்கின் நுண்ணியம் சிறந்து நிற்கும். ‘வயிறெரிந்து சொல்கிறேன்’ என்னும் வழக்கு அல்லற்பட்டு ஆற்றாது அழுதவனின் சொல்!. தெள்ளிய நீர்போல் கள்ளமில்லா உளததிலிருந்து சொல்கிறேன் என்பது கருத்து. ‘பலித்துவிடும்’ என்பது ‘அனுமானம்’ அன்று ‘திண்ணம்’. ‘நான் வயிறெரிந்து சொல்கிறேன், நீ உருப்பட மாட்டாய்! என்பது போல்வது இது. இதே வயிறு எரிதலை விட்டு எரிச்சல் படுவதும் உண்டு. அது வயிற்றெரிச்சல். இலக்கியவாதிகள் இதனை ‘அழுக்காறு’ என்று சொல்லி அதனைக் ‘கொள்ளாமை’ என்னும் பொருளில் ‘அழுக்காறாமை’ என எதிர்மறை இலக்கணம் எல்லாம் புணர்த்து எழுதுவார்கள். ஆசிரியர் பரிமேலழகர்,

“அழுக்காறு என்பது ஒருசொல். பிறரர் ஆக்கம் கண்ட வழி பொறாமை. அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள் எதிர்மறை ஆகாரமும் மகர ஐகாரவிகுதியும் பெற்று ‘அழுக்காறாமை என நின்றது”

எனத் தம் மலையளவு புலமையை நிலவளவு காட்டுவார். ஆனால் இலக்கணம் அறியாது எதிர்வீட்டை மட்டுமே அறிந்த ஒரு தமிழச்சி பெண் “அடுத்த விட்டுக்காரி ஆம்பள புள்ள பெத்தா எதுத்த வூட்டுக்காரி இடிச்சுககிட்டுச் செத்தாளாம்’ என்று  ஓரங்க நாடகத்தையே நடததிவிட்டுப் போய்விடுவாள். உலகியலுக்குப் புலனெறி வழக்கு தலைவணங்கி நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

பூசி மெழுகலும் பூண்டற்றுப் போதலும்

‘தெளிவுபெற்ற மதியினாய்’ என்பார் பாரதியார். அறிவு தெளிவின் மேற்று. அதனால் பேச்சும் தெளிவின் மேற்று. மறைத்துப் பேசுதல் மாசுபடும். ‘நிரந்தினிது சொல்லுதல்’ சான்றோர் திறமை. உள்ளவாறே உரைத்தலும் நடந்தவாறே நவில்வதும் நல்லவர் கொள்கை. இவ்வாறின்றி ஒன்றைப் பிறிதொன்றாகக் கூறுவதும் மறைத்துக் கூறுவதும் மயங்கக் கூறுவதும் எதிர்மறை விளைவுகளேயே தரும். சிக்கலைத் தீர்க்க உதவாது. ‘வெட்டொன்று துண்டிரண்டாய் பேசு. ‘இந்தப் பூசி மெழுகிற வேலை இங்கு ஆகாது’ என்பது உலகியல். ‘உடைத்துப் பேசு’ என்பதும் அது. பூசி மெழுகுவதால் புரை ஆறாது என்பது தமிழர்தம் பண்பாட்டு விழுமியம்

எள் அமங்கலப் பொருள். எருக்கும் அமங்கலப் பொருள். ‘வாழையடி வாழையென. என்பது மங்கலம். ஒரு குடும்பம், ஒரு அரசு இவையெல்லாம் தழைத்திருக்க வேண்டியன. அற்றுப்போகக் கூடாதன. குடும்பத்திற்குக் குழந்தையும் அரசிற்கு வாரிசும் இல்லாவிடின் வாரிசு அற்று வழிதோன்றல் இல்லாது போய்விடும். இதனைப் பூண்டற்றுப் போதல் என்பது உலகியல். ‘பூண்டும்’ என்பதில் உம்மை தொக்கது. உண்மையில் பூண்டு என்பது புல்லிற்கு அடுத்த நிலைத் தாவரம். தரை நனைய மழைபெய்தால் புல் துளிர்க்கலாம். ஆனால் வேர் நனைய பெய்தாலே பூண்டு தழைக்கும். அல்லலுக்கு ஆளாகித் துன்புறுத்தப்படும் ஏழைகளின் சாபத்தில் இந்த வழக்கு தென்படும். ஏழை அழுத கண்ணீருக்குப் பூண்டற்றுப் போகச் செய்யும் வலிமை உண்டு. அன்னப் பறவையும் அசுணப் பறவையும் இன்றைக்குப் பூணடற்றுப் போய்விட்டன.

வெளுத்து வாங்குதலும் வெளிச்சம் போடுதலும்

‘முதல் மரியாதை’ திரைப்படப்பாடல்களின் ஒன்றில் ‘உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்’ நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ‘வெளுப்பது’ ஒரு வினை. ‘வாங்குதல்’ மற்றொரு வினை. வெளுத்து வாங்குதல் என்றால் ‘வெளுத்த துணியை வாங்குதல்’ என்னும் இருவினைத் தொகுப்பன்று. நடிப்பதன் உச்சி என்று பொருள். நேர்முகமாக இந்தத் தொடரை ‘கச்சேரியில் வெளுதது வாங்கினான்’ என்பர்.  எதிரியை ஏசுகிற போதும் ‘நல்லா வெளுத்து வாங்கிட்டியே!’ என்பர். நேர்முகமாகவும் எதிர்மறையாவும் இந்தத் தொடர் பயன்படுகிறது. தொடர்மழையால் துன்புறும் மக்கள் ‘வானம் வெளுத்து வாங்குது’ என்பர். இந்தத் தொடரில் உள்ள வெளுத்தல் என்னும வினைக்கும் சலவைத் தொழிலாளிக்கும் தொடர்பே இல்லை.

“வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
அவர் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே” என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே வந்த திரையிசைப்பாடல்.  இந்தப் பாடலில் முதலில் வநதிருக்கும் ‘வெளிச்சம்’ என்ற சொல் ஒளியையும் இரண்டாவது வந்திருக்கும் சொல்  ‘பகட்டு’ மற்றும ‘படோடாப உணர்ச்சிகளையும்’ குறிப்பதாக அமைந்திருக்கிறது. பாடுபட்டு உழைத்து எளிய வாழ்க்கையை வாழ்பவர்கள் இடையே வெற்று ஆடம்பரத்திற்காகவும் வீண் ஆரவாரத்திற்காகவும் போலிவாழ்க்கை வாழ்கிறவர்களை இந்தச் சொல் குறிக்கிறது. மரபுத் தொடர்கள் வாழ்வியல் குறியீடுகள் என்பதை நினைவிற் கொண்டால் இதன் பொருள் இன்னும் தெளிவாகும். ‘ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்னும் பழமொழியின் கருத்தும் இதுவே!

நிறைவுரை

மரபுத் தொடர்களின் துணையின்றி உரைநடை சிறக்காது அதற்காக உரைநடையைச் சிறக்கவைப்பதே மரபுத் தொடர் என்பதல்ல. மரபுத் தொடர் காட்டும் வரலாறும் பண்பாட்டு விழுமியமும் நோக்கத்தக்கவை. மரபுத் தொடர்கள் என்பன சொல்லியல் அல்ல. பொருளியல். ஆம். அது தலைமுறைத் தேட்டம். முந்தைய தலைமுறை பத்திரப்பதிவு இல்லாமலேயே நமக்கு விட்டுச் சென்றிருக்கிற பல்லாயிரம் கோடி சொத்துக்கள், பண்பாட்டு உடைமைகள். மரபுத் தொடர்களை அறிவதும் அறிந்து பயன்படுத்துவதும் இன்றைய தமிழ்நாட்டார் கடமை. தமிழ் எழுத்தாளர்களின் கடமை. தமிழ்ப் பேராசிரியர்களின் கடமை. ‘வட்டார வழக்கு’ என ‘மொழிச்சேரி’ காண்பதை விட்டு மொழியில் ‘சமத்துவபுரம்’ காண்பதே இன்றைய உண்மையான தமிழ்த் தொண்டு. அந்தத் தொண்டினை அறிஞர் பிச்சை தமிழகன் செய்திருக்கிறார். கொட்டிக் கிடக்கின்ற மணிகளில் எதனைக் கொத்துவது எதனைக் கோப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி நின்ற நான் கட்டுரையின் அளவு கருதி ஒரு சிலவற்றை மட்டுமே காட்டியிருக்கிறேன். காட்டு மூலிகை ஒன்றினைக் திருச்சிராப்பள்ளி காசாமலை பிச்சையம்மாள் நகரில் கண்டெடுத்த மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!

நூலாசிரியர் பற்றி

கவிதைக்கு ஈரோடு தமிழன்பனையும் நாவலுக்குப் புதுவை பிரபஞ்சனையும் தந்த தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி கண்டெடுத்த கல்வெட்டு மாமணி பிச்சை தமிழகன்!. நூறாண்டு தமிழ் வாழ்வுக்குச் சொந்தக்காரரான நிறைதமிழ்ச் சான்றோர் அடிகளாசிரியரின் அணுக்கத் தொண்டர். அன்புக்கிசைந்த மாணவர். இவர் கால்படாத ஊர், கண்படாத திருக்கோயில் தமிழக வரைபடத்தில் இல்லை. திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டம் குமுலூரில் தோன்றிக் கல்வெட்டைத் தத்தெடுத்துக் கொண்ட இவரைச், சொல்லியல் களவு மணம் புரிந்து கொண்ட கதை, சாண்டில்யன் சொல்லாத கதை! சிக்கனத்தைப் பேச்சிலும் உதவுவதில் தாராளத்தையும் கடைப்பிடிக்கும் இவர்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சங்க இலக்கிய மரபுச் சொற்களை ஆய்ந்து ‘முனைவர்’ பட்டம் பெற்றவர்!. கருத்த தோற்றமும் வெளுத்த உள்ளமும் உடைய அறிஞர் பிச்சை தமிழகன், சொல்லாராய்ச்சிக் களம் காணும்  இறுதித் தலைமுறையின் இளைக்காத தளபதி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *