Author: admin

  • சிம்ம வாகன சிங்காரி, மாதே நீலாயதாக்ஷி

    சிம்ம வாகன சிங்காரி, மாதே நீலாயதாக்ஷி

    நாகை ராமஸ்வாமி

    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி
    ஏகதந்தன் ஆனைமுகன் வலம் வந்த தாயே
    இருவிழிப் பார்வையுன் காருண்யம் காட்டுதம்மா
    முப்பெரும் தேவியே மூவுலகும் காப்பவளே
    நான்முக வேதமுன் நற்பெயர் ஓதுங்கால்
    ஐந்தெழுத் தலைவனும் நந்தியுடன் மகிழ்கின்றான்
    ஆறுமுகன் மயில்வாகனன் அருள் சுரக்க வைத்தாயே
    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

    ஏழுமலை கருடவாகனன் எழில்மிகு சோதரி
    எட்டா உயரமாம் கயிலை ஹேமவதி
    நவநிதியும் நலம் பலவும் நயமாய் நல்கிடுவாய்
    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

    நீள கரும்பின்னல் மின்னலாய் அசைந்தாட
    லாவண்யரூப கிளிகொஞ்சும் திருமுகம்
    யக்ஞகோஷம் புன்னகை பூக்க வைக்க
    தாமரைத் திருவடியில்  பரிமள மலரிட்டு
    க்ஷீராபிஷேகம் செய்தோம் மஞ்சள் குங்குமமிட்டோம்

    என்றும் அருளிடும் தாயே மாரியம்மா
    சாரியாய் நோயுறு முன் சேய்களை காத்திடுவாய்
    மன மகிழ்ந்திடுவாய் மங்களம் பொங்க வைப்பாய்
    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 27

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 27

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகத்தை ஒளிப்பதிவு செய்தவர்கள்!

    முன்னுரை

    புலவர், கவிஞர் என்னும் சொற்கள் கவிதைப் படைப்பாளருக்குப் பொதுவாகப் புழங்கி வந்தாலும் ‘புலவர்’ என்பதில் உள்ள ‘புலமை’ என்பதன் பொருள் சற்று ஆழமானது, பார்வையில் நுட்பமும் சிந்தனையில் ஆழமும் அறிவில் தெளிவும் வெளிப்பாட்டில் நுட்பமும் எளிமையும் புலவர் தரும் படைப்புக்களை அணிசெய்யும். சங்கச் சான்றோர் அத்தகையவர்கள். அவர்கள் இயற்கையை நேசித்தவர்கள். நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்களின் பரிமாணங்கள் பலவற்றையும் பட்டறிந்தவர்கள். முன்னோர் நூல்களைக் கற்றறிந்தவர்கள். உயர்திணை மற்றும் அஃறிணைகளின் அத்தனை அசைவுகளையும் மனத்திலே படம்பிடித்துக் கொண்ட வியத்தகு ஒளிப்பதிவாளர்கள். பகட்டு வாழ்க்கையை அறியாத அந்தப் பண்பாளர்கள் பருத்தி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பண்பாட்டின் புரவலர்கள். தேடிய திறன்களையெல்லாம் அவர்கள் தாங்கள் படைத்த கவிதைகளில்  உவமங்களாய்க் காட்டி இன்றைக்கும் பேசாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பானைச் சோற்றுக்குப் பதச்சோறுகளாய்ச் சில.

    ‘ஆடிப்பாவை’ ஆன தலைவன்

    உலகியலில் மனைவிதான் தன் கணவனோடு தொடர்புடைய மற்றொருத்தியைப் பகையாக எண்ணி ஏசுவாள். பேசுவாள். ‘கச்சிருக்கும் நாளையில் கரும்பானேன் கைக்குழந்தை வச்சிருக்கும் நாளையில் நான் வேம்பானேன்’ என்று மனைவிதான் புலம்புவாள். சங்க இலக்கியத்தில் இதற்கு வேறுபட்ட காட்சி ஒன்று சித்திரிக்கப்பட்டுள்ளது. பரத்தையை நாடி வந்தான் மருதநிலத் தலைவன் ஒருவன். அவன் மீது மாறா அன்பு கொண்டவள் அந்தப் பரத்தை.  தன்னிடம் வந்து போனவன் மீளவும் வாராமல் காலந்தாழ்த்திய பொழுதில் தலைவனை ஏசுவதாக ஒரு பாடல். ஆலங்குடி வங்கனார் எழுதிய இந்தப் பாடலுக்கு மரபுபற்றி உரையெழுதிய ஆசிரியர்கள் தலைவி பரத்தையை ஏசியதாகச் சொல்லி, அதனை அறிந்த பரத்தை தனக்கெதிரான தலைவியையும் அவள் கணவனையும் ஏசியதாகத் துறை வகுத்திருக்கிறார்கள். அப்படி ஏசுகிறபோது பரத்தை இரண்டு கருத்துக்களைப் பதிவிடுகிறாள். அவ்விரண்டும் தலைவனின் இயல்பு பற்றியனவே. ஒன்று தன்னிடம் இருக்கும் போது ‘பெருமொழி’ (புகழ்ச்சிமொழி – சிறுசொல் இகழ்ச்சியாதலின் பெருமொழி புகழ்ச்சியாயிற்று) கூறித் தன்னை மயக்கினான் என்பது. பிறிதொன்று. தலைவியிடம் சென்றபின்  அவள் காலால் இட்ட பணிகளைத் தலையாலே தாங்குகிறான் என்பது.  இதற்குத்தான் அவள் ஓர் உவமம் கூறுகிறாள்.

    “ஊரன்
    எம்மில் பெருமொழி கூறித், தம் இல்
    கையும் காலும் தூக்கத் தூக்கும்
    ஆடிப்பாவை போல
    மேவன செய்யும் தம் புதல்வன் தாய்க்கே! ” (குறுந் 8)

    திருவள்ளுவர், ‘அடுத்தது காட்டும் பளிங்கு’ என்னும் உவமத்தால் எதிரொளியை மட்டும் உவமமாக்கினார். ஆலங்குடி வங்கனாரோ உறுப்புக்களின் செயல்பாட்டின் விரைவு நோக்கி உவமமாக்கினார். உவமத்தின் நுட்பம் என்னவென்றால் தலைவி ‘இன்னதைச் செய்’ என்று சொல்லிய பிறகு தலைவன் செய்யவில்லையாம். அவள் சொல்லுகிறபோதே செய்துவிடுகிறானாம். எதனைப் போல? ஆடிப்பாவை போல! ஆடியின் முன்னிற்கும் மனிதர்களின் செயல்களுக்கும் ஆடியில் தோன்றுகிற பிம்பத்தின் செயல்களுக்கும் கால இடைவெளி என்பதே இல்லை. தலைவியின்  ஆணையும் தலைவனின் செயலும் ஒரு நேரத்தில்! எப்போது சொல்லுவாள் என்று தலைவன் காத்திருக்கிறானாம்! இந்த நுண்ணியத்தைத்தான் புலவர், தலைவன் செயலுக்கு உவமிக்கிறார். தூக்கிய பிறகு அல்ல தூக்கும் போதே!

    தேய்கின்ற மஞ்சள் நிலா!

    தலைவனால் விரும்பப்படாத தலைவியின் உடல் உணர்வுகளும் இளம் விதவைகளின் உணர்வுகளும் ஒன்றே என்பதை அறிந்தார் அறிவர். இங்கே இளம் விதவை என்பது திருமணமாகிச் சில காலம் வாழ்ந்து இல்லற இன்பத்தை இழந்தவர்களைக் குறிப்பதோடு திருமணம் ஆன அன்றே விதவையான பெண்களையும் குறிப்பதாகும். இது சடங்கு பற்றியதன்று சஞ்சலம் பற்றியது. இத்தகையதொரு பாத்திரத்தைத் ‘தெய்வத்தின் தெய்வம்’ என்னும் திரைப்படத்தில் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்களும் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்னும் திரைப்படத்தில் இயக்குநர் திரு. சுந்தரராசனும் உருவாக்கிக் காட்டியிருந்தார்கள். மணமுடித்த அன்றே தேனிலவு பயணம் புறப்பட்ட தம்பதியின் கார் விபத்தில் சிக்க மணமகன் உயிரிழக்கிறான். மணமகள் விதவையாகிறாள். அந்த விதவை தன் விரகதாபத்தைப் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இது தெய்வத்தின் தெய்வத்தில்!

    “பள்ளியறை  காணலியே
    பாலெடுத்துக் கொடுக்கலியே
    துள்ளி வந்து பார்க்கலையே!
    தொட்டு விளையாடலையே!”

    என்பது கண்ணதாசன் பாடல். மணமுடித்தபின் மறுமனைச் சடங்கிற்குப் பரிசலில் செல்லும்  மணமகன் பரிசல் விபத்தில் உயிரிழக்க அவள் தன் உடல் வேதனையைப் பாடுவதாக வாலி எழுதியிருக்கிறார்.

    “விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை!
    குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை!
    ………………………………………………………………………………………
    ஊதாத புல்லாங்குழல்! எனதழகு சூடாத பூவின்மடல்
    தேய்கின்ற மஞ்சள் நிலா! ஒரு துணையைத்
    தேடாத வெள்ளைப் புறா!”

    என்பன கவிஞர் வாலியின் வரிகள். வாசகர்கள் இந்த உணர்வுகளைப் புதுமையான வெளிப்பாடு என்று மயங்க வேண்டியதில்லை. ஆனால் உண்மையான வெளிப்பாடு. உணரவேண்டிய வெளிப்பாடு. இவ்விரு வெளிப்பாடுகளுக்கும் மூலமாக அமைந்ததுதான் வெள்ளிவீதியாரின் வெளிப்பாடு. அதனாலேயே கவிஞர்கள் இருவரும் வெள்ளிவீதியாரை நகலெடுத்தார்கள் என்று கருதிவிடக்கூடாது. வெள்ளிவீதியாரின் வேதனை வெளிப்பாடு இப்படி அமைகிறது.

    “கன்றும் உண்ணாது கலத்தினும் படாஅது
    நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு”  (குறு 27)

    நுகர்வாரின்றித் தன்னழகு மாய்வதாகவே தவித்துப் புலம்புகிறார் வெள்ளிவீதியார். அதற்கு அவர் கண்டிருக்கும் உவமம் ‘நல்ல ஆன் தீம்பால் நிலத்தில் கொட்டிச் சீரிழிதல்’ என்பது. ஆனுக்கு வந்த அடை வெள்ளியாருக்கும் பாலுக்கு வந்த அடை அவருடைய அழகிற்கும் பொருந்தும். வெள்ளி  வீதியாரை நோக்க கண்ணதாசனுக்கும் வாலிக்கும் இது மரபு. தொல்காப்பியத்தை நோக்க இந்த மூன்று பாடல்களுமே மரபு மாற்றம். ‘தன்னுறு வேட்கை கிழவற் முற்கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை’ யெனவே, பிறர் முன் என்பது சொல்ல வேண்டாவாயிற்று. இங்கே இந்த மூன்று பாடல்களிலும் ஒரு பெண் தன் உணர்ச்சிக்கு வடிகாலைத் தேடிப்புலம்புவதை வெளிப்படுத்துதற்கு அரிய அவரவர் பக்குவதிற்கு ஏற்ற உவமங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.

    ஓர் ஏர் உழவன்

    தமிழ்க்கவிதை உவமக் கோட்பாடுகளில் ஒன்றைக் கவனிக்கலாம். அதாவது புறத்திணைப் பாடுகிறபோது அகத்திணைப் பொருண்மையையோ அது தொடர்பான நிகழ்வுகளையோ உவமமாக்குவதில்லை. ஆனால் அகத்திணைப் பதிவுகளில் புறத்திணைச் சிந்தனைகள் பதிவாகியிருக்கின்றன. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப் பகுதிகளில் புறத்திணைச் சிந்தனைகள் உவமமாக வந்துள்ளன. பாலையை வண்ணனை செய்கிறபோது ‘வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்’ என்னும் சிந்தனை மேலோங்கியிருந்திருக்கிறது.  வினைமீளும் தலைவன் தலைவியை நாடி விரையும் அகத்திணை நிகழ்வில் ஏழை உழவனை உவமமாகப் பாடியிருக்கிறார்கள்.

    ஆடமை புரையும் பனப்பிற் பணைத்தோள்
    பேரமர்க்கண்ணி இருந்த ஊரே
    நெடுஞ்சேண் ஆயிடை அதுவே! நெஞ்சே

    ““ஈரம்பட்ட செவ்வி பைம்புனத்து
    ஓரேர் உழவன் போல
    பெரு விதுப்பு உற்று அற்றால் நோகோ யானே” (குறுந் 131)

    என்கிறான் தலைவன். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதுபோல, ஈரம் இருக்கிறபோதே உழுது விதைக்க வேண்டும். ஆனால் அகன்ற பழனம் மழைபெய்து ஈரமாயிருக்கிறது. கையில் இருப்பதோ ஒரே ஓர் ஏர். அதனைக் கொண்டு அத்தனைப் பெரிய பழனத்தை உழுவதற்குள் ஈரம் போய்விடுமே எனக் கவலை கொள்ளும் உழவனாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். தலைவனுக்கும் தலைவிக்கும் ஊருக்குமாக இடைநின்ற தொலைவிற்கும் ‘ஆடமை புரையும் பனப்பிற் பணைத்தோள் பேரமர்க்கண்ணி”யின் நலத்தை நுகர்வதற்குமான இடைவெளியின் விளைவுகளுக்கு இந்த உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தலைவியின் பேரழகு தான் செல்வதற்குள் மாறிவிடுமோ என்னும் தலைவனின் ஏக்கமாகிய உரிப்பொருளை ஒற்றை ஏர் உழவனின் இரங்கத்தக்க நிலை விளக்குகிறது.

    ‘உகிர் நுனி புரட்டும் ஓசை போல’

    மாந்தர்களின் அசைவுகளை மட்டுமல்ல. அனைத்துயிர்களின் அசைவுகளையும் செயல்களையும் நுட்பமாக நோக்கி அவற்றை உவமமாக்கியிருக்கும் திறன் சங்கச் சான்றோருடையது. தன் பருவ உணர்வுக்கு ஏற்பத் தலைவன் வருகையை எதிர்நோக்கும் தலைவியின் உணர்வறிந்துப் பேசும் தோழியின் திறத்தை இந்தப் பாட்டில் காணலாம்.

    “உள்ளார் கொல்லோ தோழி! கள்வர்தம்
    பொன்புனைப் பகழி செப்பம் கொள்மார்
    உகிர் நுனி புரட்டும் ஓசை போலச்
    செங்காற் பல்லி  தன் துணை பயிரும்
    அம் கால் கள்ளி காடி றந்தோரே!” குறு 16

    என்பது தலைவிக்கான தோழியின் ஆறுதல். தன்னை எண்ணவே மாட்டானா தலைவன்?” என ஏங்கும் தலைவியை நோக்கி “எண்ணாமல் இருப்பாரா? அவன் சென்ற கள்ளி பரந்த பாலையில் சிவந்த கால்களையுடைய ஆண்பல்லி தன் துணையை அழைக்கும் ஒலி அவன் காதில் விழும். அவ்வோசை அவனை நெகிழச் செய்யுமாதலின் அவன் வருவது ஒருதலை” என்கிறாள் தோழி! தோழியின் கூற்றில் வரும் ஆண்பல்லியின் அழைப்பொலிக்குப் புலவர் காட்டும் உவமம்தான் புல்லரிக்க வைக்கிறது. ‘அடுகணை’ என்பது பொன்பகழி. பொன்னால் மகுடம் சூட்டப் பட்ட பகழி.  ‘பொன்’ என்பது இரும்பு. எனவே அம்பின் நுனியில் தாக்குதற்கான இரும்புக்குழாயினைச் செருகி அதனைக் கூராக்குதற் பொருட்டு நெருப்பில் நன்கு காய்ச்சுவார்கள். காய்ச்சிய பிறகு பின்னும் கூர் செய்வதற்கு விரல் வலிமை உடைய வீரர்கள் தங்கள் நகத்தால் தடவிப் (சுரண்டி) பார்த்துச் செப்பம் செய்வார்கள். இன்றைக்கும் அரிவாள் முதலிய கருவிகளை விரலாலும் நகத்தாலும் தடவிப் பார்க்கும் வழக்கம் உண்டு. கூர்மையான நகம் அம்பின் நுனியில் உரசிப் பதம் பார்க்கும் அந்த ஒலியைத்தான் ஆண்பல்லி தன் துணையை அழைக்கும் ஒலிக்கு உவமமாக்கியிருக்கிறார் பெருங்கடுங்கோ! சேவல் கூவுதற்கும் கெக்கரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. கனைகுரற் பல்லியினும் இந்தப் பல்லி வேறானது. பாலை சுடுகிறது., கடுங்கோ பாடிய பாடல் குளிர்கிறது உவமத்தால்!

    “உலைக்கல் அன்ன பாறையேறிக்
    கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்”

    என ஓதலாந்தையார் (குறு12) கூறுவதும் காண்க.

    உவமங்களான  மாற்றுத் திறனாளிகள்

    உடல் ஊனமுற்றவர் மாற்றுத் திறனாளிகள் ஆன காலம் இது. இன்றைய மாற்றுத் திறனாளிகளின் மனத்துன்பத்தைச் சங்கத்துச் சான்றோர்கள் உணர்ந்திருந்தனர். உணர்ந்ததோடு அல்லாமல் தாம் எழுதிய பாடல்களில் உவமங்களாய்ப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். கையும் இல்லாத வாயும் இல்லாத ஒருவன். இத்தகைய ஒருவனைத் தலைமகன் தனது கூற்றில் உவமமாக்கியிருக்கிறான். தலைவியைக் காணாது தவிக்கிற தலைவனைப் பாங்கன் தேற்றுகிறான். தேற்றுகிற பாங்கனை நோக்கி, அவனுடைய தேறுதல் மொழி பயனற்றது’ என்பதாகக் கூறுகிறான் தலைவன்.

    “ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன்று இந்நோய்! நோன்று கொளற் கரிதே!” குறு. 5

    ‘‘உன்னுடைய ஆறுதல் நலிந்து போகும் என் உடல்நிலையைத் தேற்றினால் பயன் உண்டாம். ஆனால் என் தலைவியைக் காணாது என் மேனியெங்கும் பரந்து நிற்கும் இந்தக் காதல்நோய் என்னால் தாங்குதற்கு அரியதாக இருக்கிறது. கொதிக்கும் வெயிலில் பாறையின் ஓரிடத்தில் வைக்கப்பட்ட வெண்ணெய் உணங்கலை உருகாதவாறு, கையில்லாத மூங்கையும் வாயில்லாத ஊமையுமாகிய ஒருவன் தன் கண்ணாலேயே காக்க வேண்டும் என்றால் அது இயலுமா? சென்று எடுப்பதற்குக் கையும் இல்லை. யாரையும் உதவிக்கு அழைத்துச் சொல்வதற்கு வாயுமில்லை. கண்ணால் உருகாதே  என்றால் வெண்ணெய் உருகாமலா இருக்கும்? அவ்வாறு உருகி நிற்கும் என் மேனிக்கு நின் ஆறுதல் பயனற்றது என்கிறான் தலைவன். பாட்டில் உருகும் மேனிக்குப் பாறையில் உருகும் வெண்ணெய் உணங்கலே உவமமாயினும் நோயைக் கட்டுப்படுத்த இயலாத தலைவனுக்குக் ‘கண்ணில்லாத கையில் ஊமன்’ உவமமாக அமைந்திருக்கும் நுட்பம் அறிக.

    அகத்திணைத் தலைவன் தன் காதல் நோயின் ஆற்றாமைக்கு மாற்றுத் திறனாளியின் இயலாமையையும் துன்பத்தையும் உவமமாக்கிக் கூறியிருப்பதைப்போல அகத்திணைத் தலைவியும் தனது துன்பத்து வெளிப்பாட்டுக்காக மற்றொரு மாற்றுத் திறனாளியை உவமமாக்கியிருக்கிறார். அவன் ‘கையில் ஊமன்’. இவன் இருக்கை முடவன். ‘இருக்கை’ தொழிற்பெயர். அதாவது இருத்தலாகிய தொழிலைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதவன்.  உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருப்பவன். அப்படியே அமர்ந்திருக்கும் அவன் பார்வையில் ஒரு காட்சி. கூதளிக் கொடி மண்டிய உயரமான மலைப்பகுதி. அங்கே கட்டப்பட்டிருந்த கூட்டில் தேன் வழிகிறது. இவனால் அதனை அருந்த முடியவில்லை. ஆனால் என்ன செய்கிறான் தெரியுமா? தனது கையைக் குடையைப் போல் குழிசெய்து வைத்துக் கொண்டு அந்தத்தேன் அதில் விழுவதாகக் கற்பனை செய்து அதனை நக்குவதாக எண்ணி மகிழ்கிறான். உண்மையில் அவன் காட்சியில்தான் தேன் விழுகிறது. காட்சியின்பத்தைப் புலன்வழி நுகர்ந்த இன்பமாகக் கற்பனை செய்து கொள்கிறான். இதனைத்தான் தலைவி உவமமாக்குகிறாள்.

    “குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
    பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
    உட்கைச் சிறுகுடை கோலி கீழிருந்து
    சுட்டுபு நக்கியாங்குக்காதலர்
    நல்கார் நயவார் ஆயினும்
    பல்கால் காண்டல் உள்ளத்துக்கு இனிதே!” (குறு 60)

    என்பது தலைவியின் வேதனை வெளிப்பாடு. ‘காட்சி, வேட்கை, ஒருதலை உள்ளுதல்’ என்பார் தொல்காப்பியர். அவன் அமர்ந்திருக்கிறான். நான் இற்செறிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். அவன் எழுந்து நின்று தேனைச் சுவைக்க முடியாது. கண்டுதான் சுவைப்பதாக எண்ணிக் கொள்ளலாம்.  அது போல என் தலைவன் என் கண்ணில் பட்டாலே என் உள்ளத்துக்கு இனிமை தருமே!’ என்று தலைவி ஏங்குகிறாள்.

    கவை மகவு நஞ்சுண்டது போல

    சங்க இலக்கியத்தில் தலைவி தோழியானால், தோழி தலைவியாவாள். தோழி தலைவியானால் தலைவி தோழியாவாள். அதனால்தான் ஒருவர் இயற்பெயர் சுட்டுவதில்லை. தலைவியும் தோழியும் இணையானவர்களே என்பது இதனால் பெறப்படும். கற்பனை மாந்தர்களான அவர்களைப் பண்பாட்டுப் பெருமக்களாகச் சித்தரித்துக் காட்டுவதில் சங்கச் சொன்றோர் தனிச்சிறப்புக்குரியவர் ஆவர்.   தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். எத்தகைய இடர் கடந்து வருகிறான் தெரியுமா? “கொல்லுந் தொழில் வல்லமையுடைய ஆண்முதலையானது வழியெல்லாம் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்குமாறு குறுக்கே கிடக்கும் அழகிய கடல் துறையின்கண் இனமீன்கள் நிறைந்துள்ள உப்பங்கழியை நீந்தி” வருகிறானாம்.

    “கொடுங்கால் கொல்வல் ஏற்றை
    வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
    இனமீன் இருங்கழி நீந்தி”

    என்கிறார் புலவர்.  இவன் படும் இத்துன்பத்தால் தன் தலைவனுக்கு ஏதம் வருமோ என்று தலைவி நடுங்கித் துன்புறுகிறாளாம்.

    ‘இவள் மடன் உடைமையின் உயங்கும்’

    என்கிற தோழி இருவருடைய துன்பத்தையும் நோக்கி வேதனைப்படுகிறாளாம். யாரைப்போல?  தனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளும் நஞ்சருந்திய காலத்து அப்பிள்ளைகளின் தாய் உணரும் அச்சத்தை இந்தத் தோழி உணர்ந்தாளாம்!. “நயன் உடைமையின் நீ  வருகிறாய். மடன் உடைமையின் இவள் உயங்குகிறாள். நானோ நஞ்சருந்திய இரட்டைப் பிள்ளையின் தாயைப் போல அலமறுகிறேன்’ என்கிறாள் தோழி!

    “நீ நின் நயனுடைமையின் வருதி! இவள் தன்
    மடன் உடைமையின் மயங்கும், யான் அது
    கவை மகவு நஞ்சுண்டாங்கு
    அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே!” (குறு 324)

    உலகியலை நோக்கிய உவமங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாகின்றன. இலக்கிய நோக்கில் தலைவிக்குத் தோழியாகப் பார்க்கப்பட்டுவரும் ஒருத்தி தலைமக்களுக்குத் தாயாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதற்கு இவ்வுவமத்தின் பயன்பாடு பெரிதாம்.

    நிறைவுரை

    ஆடியின் அசைவை உவமமாக்கியிருக்கிறார்கள். அம்பு தீட்டும் ஒலியை உவமமாக்கியிருக்கிறார்கள். உழுவதற்கு ஒற்றை ஏர் மட்டும் உடையவனை உவமமாக்கியிருக்கிறார்கள். மாற்றுத் திளனாளிகளை உவமமாக்கியிருக்கிறார்கள். நல் ஆவின் பாலை உவமமாக்கியிருக்கிறார்கள். நஞ்சுண்ட இரட்டைப் பிள்ளைகளை உவமமாக்கியிருக்கிறார்கள். உவமம் ஒரு கவிதையைச் சிறப்பிக்கும் தொழில்நுட்பக் கருவியாகப் பயன்படாமல் புலவர் பெருமக்களின் சமுதாயப் பார்வையைப் படம்பிடிப்பதாக அமைந்திருக்கிறது. இயற்கையோடு இயைந்த அவர்தம் வாழ்வு முறைகளைக் காட்டுகிறது.  அஃறிணை, உயர்திணை என்னும் அனைத்தின் அசைவுகளையும் நிழல்களையும் கூடப் பதிவு செய்யும் அவர்தம் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஒரு கவிதையின் பெருஞ்சிறப்புக்கு உவமம் ஒரு தலையாய காரணம் என்பதை இவை உறுதி செய்கின்றன!.

    (தொடரும்…)

    Share
  • கதையும் மொழிதலும் – 7:  சங்கர ராமின் ‘தனிப்பிறவி’

    கதையும் மொழிதலும் – 7: சங்கர ராமின் ‘தனிப்பிறவி’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “உழைப்பும் வறுமையும் ஒன்றிணையும் பொழுது அன்பும் கருணையும் அழையா விருந்தாளியாக நெஞ்சம் புகுந்து உள்ளம் உணர்த்தி வினை புரிகின்றன”

    தொடக்கக்கால தமிழ்ச் சிறுகதை முயற்சிகளை உற்றுநோக்கும் போது சங்கர ராமின் எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தனது ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர். இவரின் சிறுகதைப் பங்களிப்பும் முயற்சிகளும் எண்ணத்தக்கவையே. இதனைக் க.நா.சு. இவ்வாறு பதிவு செய்கிறார். “நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கர ராம், பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமர்சன ரீதியாக எனக்குத் தோன்றுவது, அவர் சிறுகதையில் சாதித்த அளவுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பதுதான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகுதூரம் போக வேண்டியதில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல்கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவை தான். பத்திரிக்கை தேவையையும் பணத்தேவையையும் காரணமாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே உள்ள உந்துதலால் எழுதப்பட்டவை. அவர் முதல் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத் தான்” என்ற அடிப்படையிலும் சங்கர ராமின் சிறுகதைகளை இங்கே எண்ணிப் பார்க்கத் தேவை எழுந்துள்ளது.

    ஆனந்த விகடன் 1964ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த இவரின் கதை ‘தனிப்பிறவி’. நேரடிக் கதை மொழியில் எழுதப்பட்ட இக்கதை பலவிதங்களில் சிறப்புகளைக் கொண்டது. காந்தியச் சிந்தனையும் சுதந்திரப் போராட்ட உணர்வும் தனிமனித ஒழுக்கமும் மேலோங்கிய காலக்கட்டத்தின் மனப்போக்கைக் கொண்டவர் இவர். கிராம வாழ்க்கையும் நகர வாழ்க்கையும் சந்திக்கும் வாழ்வாதாரப் புள்ளியில் இக்கதை நகர்ந்து செல்கிறது.

    மரம் ஏறும் தொழில் செய்து வந்த ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் போராட்டமே இக்கதை. கிராமங்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை, நகரங்களைச் சார்ந்து மாற்றப்படும் போக்கை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புக்கு உள்ளான ஒரு குடும்பம் வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் ஒருவித சூழலில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது. நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் இருப்பதும் அதனை ஒழுங்குபடுத்த ஏற்படும் தேவையும் இவனுக்கு ஒரு வாழ்வியல் இருப்பைத் தருகிறது. இதைச் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.

    அன்றாடம் கிடைக்கும் கூலியை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனின் வாழ்க்கைநெறி, இங்கே சிந்திக்கத்தக்கது. உழைத்து வாழ வேண்டும், தன்மானத்துடன் இருக்க வேண்டும், உதவியைக் கேட்டுப் பெறக் கூடாது என்ற ஏழ்மையின் இலட்சியவாதச் சிறப்புகள் இவனிடம் காணப்படுகின்றன.

    ஒருநாள் உழைப்பின் கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கிறது. இதனை எடுத்துக்கொண்டு களைப்புடன் மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ‘இன்று ஓரளவு வருமானம் கிடைத்துள்ளது. ரேஷன் கடையில் புழுங்கலரிசி போடுகிறார்கள். வாங்கி வந்துவிடு’ என்று கூறுகிறான். இதனைக் கேட்ட மனைவி உடனே, கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து வேகமாகக்  கிளம்புகிறாள். நடந்து சென்றால் நேரமாகும் என்பதால் பேருந்தில் சென்று ரேஷன்  கடையை அடைகிறார்.

    கடையில் நின்று அரிசி வாங்கும் போது அவள் வைத்திருந்த ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது தெரிகிறது. கண்களில் கண்ணீருடன் அருகில் இருப்பவர்களிடம் இதனைக் கூறுகிறார். இவளின் பரிதாபத்தைக் கண்டு அனைவரும் ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் இவளது மனம் வீட்டில் கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எண்ணுகிறது. ‘கடின உழைப்பில் பெற்ற கூலியை இப்படி கவனமில்லாமல் தொலைத்துவிட்டோமே’ என்று எண்ணும்போது, அவளது மனம் வேதனை அடைகிறது. வருகின்ற காலங்களில் வயிறு நிறைய சாப்பிடலாம் என்று எண்ணிய எண்ணத்தில் இடி விழுந்தது போல ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது. அரிசி இல்லாமல் வீட்டிற்குச் செல்வதை நினைத்துத் தயங்கி நிற்கிறார். இவளின் துன்பத்தைக் கண்ட பெண்கள் அனைவரும் தங்கள் அரிசியில் இருந்து ஒரு பகுதியை இவளுக்குத் தந்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் இதனைக் கணவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதால் அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிடுகிறாள்.

    இதனைக் கேட்டு மற்ற பெண்கள் வியந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ரேஷன் கடையில் பொருள் வாங்கக் காத்திருக்கும் நண்பர்கள் இருவர், இதனைக் கண்டு அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நேரடியாகக் கொடுத்தால் கண்டிப்பாக இவள் வாங்க மாட்டாள் ஆகையால் ஏதேனும் வேறு வகையில் உதவ எண்ணினார்கள். இதன்மூலம் அவளிடம் பேச்சுக் கொடுத்து நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். பின்னர் நண்பர்களில் ஒருவன் அவளிடம் கூறுகிறான், ‘உன்னிடம் ஐந்து ரூபாய் திருடிவிட்டுப் போனவனை எனக்கு நன்றாகத் தெரியும், அவனிடம் நான் அந்த ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். இதோ என்னிடம் உள்ள வாரக் கூலியிலிருந்து ஐந்து ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான்.

    அவளுக்கு மனது சமாதானம் அடைந்தாலும் அவனிடம் அவள் ‘உங்கள் பணத்தைத் தராமல் போய்விட்டால் என்ன ஆகும்’ என்று கேட்கிறாள். அவளின் மன ஓட்டத்தைக் கணித்துவிட்டு, ‘அவன் பாவம் ஏதோ தெரியாமல் செய்துவிட்டான், அவனை மன்னித்து விடவேண்டும் அவன் தராமல் இருக்கமாட்டான், இல்லை என்றால் அவர் ஜெயிலுக்குப் போக வேண்டும் எனவே கண்டிப்பாகத் தந்து விடுவான்’ என்று கூறி, அவளிடம் ஐந்து ரூபாயைத் தந்து அரிசி வாங்க சொல்கிறான். அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டு அரிசியை வாங்கி நன்றியுடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள்.

    நண்பனின் செயலைக் கண்டு வியந்து பாராட்டுகிறான். ‘எப்படி நீ இவ்வாறு சிந்தனை செய்தாய்’ என்று கேட்கிறார். அதற்கு ‘மற்றவர்கள் அரிசி தருவதாகக் கூறியும் மறுத்துவிட்டவள் பணம் தருவதாகச் சொன்னால் கேட்க மாட்டாள். அதனால் இப்படி ஒரு கதையைச் சொல்லி அவளுக்கு உதவி செய்தேன்’ என்றான். உடனே அவனது நண்பன் நீ மற்றவர்களைவிட ‘தனிப்பிறவி’டா என்று பாராட்டுகிறான். இவ்வாறு கதை முடிகிறது.

    வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கதை முழுவதும் வந்து போகிறது. மக்கள் உழைக்கத் தயாராக இருந்த போதிலும் அவர்களின் உழைப்பு இங்கே நிலையற்றதாகப் போய்விடுகிறது. மனிதச் சாரம் மக்கள் மனத்திலிருந்து நீங்கி, பணத்தின் முக்கியத்துவமும் பணமதிப்புமே மனித மதிப்பு என்ற புதிய வாழ்வியல் கொள்கை மக்களை எவ்வாறு திக்குமுக்காட செய்கிறது என்பதை நேரடிக் கதைகூறல் மூலமாகக் கூறிச் செல்கிறார். தொடக்கக் காலத்தில் கதையின் மையப் பாத்திரங்கள் பெயரையோ, குணநலன்களையோ கொண்டு கதையின் தலைப்பு அமையும். ஆனால் இக்கதையில் இடையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளைக் கொண்டு கதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார் இவர்.

    அதேபோல கதைக் கட்டமைப்பிலும் கதை தொடக்கத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களைத் தாண்டி, பிறகு வரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமும் கதையின் மையத் தன்மையும் கொடுக்கப்பட்டுக் கதை நிறைவடைவது புதிய அணுகுமுறையாகும். எளிமையான சொற்கள், நேர்த்தியான கதைப்போக்கு, வாழ்க்கையின் இருபெரும் கூறுகளை முன்வைத்தல், சரிக்கும் தவறுக்குமான மென்மையான பகை, இயலாமையின் உச்ச கழிவிரக்கம், கருணையின் அவசியம், கண்ணியத்தின் இயல்பு என்று கதை நகர்ந்து செல்கிறது.

    நீண்ட நிலவுடைமைச் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் இல்லாமல் போவதும் தனக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு நகரச் சமூகம் தன்னைப் பொருட்படுத்தாமல் நகர்ந்து தன்னை நிர்க்கதியாக நிறுத்துவதும் பணமே வாழ்வியல் தத்துவம் என்ற உள்ளுணர்வும் அதனை நோக்கிய வாழ்க்கைப்போக்கும் இவர் கதைகளில் மையமாக விளங்குகின்றன. தனிப்பிறவியும் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றே. இன்றைக்கும் இவரின் கதைகளைத் தேடினாலும் கிடைக்காத அவலமே தொடர்கிறது. பேராசிரியர் பெருமாள் முருகனை நெறியாளராகக் கொண்டு ராஜசேகர் என்ற ஆய்வாளர் இவரின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளது இவருக்கான முக்கியத்துவத்தை உணர உதவக்கூடும்.

    Share
  • அழைப்பிதழ் – நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு

    அழைப்பிதழ் – நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு

    சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் மாணவரும் ஆய்வாளரும் மற்றும் விருந்துநிலை விரிவுரையாளருமாய்ப் பணியாற்றியவர் முனைவர் சி. நல்லதம்பி. இவர் பின்னர் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றினார். சமீபத்தில் மறைந்த அவரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இணைந்து நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளையை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நிறுவியுள்ளனர். இதன் முதல் உரையை பேரா இ. முத்தையா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

    பேரா. இ. முத்தையா பற்றி

    பேராசிரியர். இ. முத்தையா மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் மேனாள் பேராசிரியரியராக பணியாற்றினார். தமிழ் இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், மானுடவியல், வெகுஜனப் பண்பாடு, நிகழ்த்துக்கலைகள், நவீன திரைப்பட அவதானிப்புகள் முதலான பல்வேறு விதமான கோட்பாட்டுத்துவ பின்புலத்தி்ல் இருந்து பணி செய்து வருபவர்.

    இவர் எழுதிய சில நூல்கள்

    1. தமிழர் பண்பாட்டு வெளியில் நிகழ்த்துகலைகளும் உலக நோக்கும்
    2. அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்
    3. பழந்தமிழ் பண்பாட்டு வெளிகளின் அரசியல்.
    4. இலக்கணமும் மொழியியலும்…
    5. இசையின் அதிகார முகங்கள்.

    உரையை பற்றி

    நிகழ்த்துதல் என்பது மனிதரின் மொழிசார் நடத்தை முறை. நிகழ்த்துநர், பங்கேற்பாளர், வாய்மொழி அல்லது பேச்சு மொழி, உடல்மொழி, மெய்ப்பாடு, இடம், காலம், பண்பாட்டுச் சூழல்  ஆகியவற்றின் சேர்க்கையான நிகழ்த்துதற் சூழல் என அனைத்தின் கலவையே நிகழ்த்துதல். இத்தகைய நிகழ்த்துதலின் மெய்யியலைத் தொல்காப்பியர் கட்டமைத்துள்ள முறையை விவாதிப்பதே உரையின் நோக்கம்.

    மொழியியல் ஆய்வுப் போக்குகள் சமூகப் பண்பாட்டுச் சூழல், அரசியல் நிலைமைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறி வந்திருக்கின்றன. புளூம்பீல்டு (Leonard Bloomfield) என்பாரின்  அமைப்பியல் மொழியியலிலிருந்து தொடங்கி மொழியின் மெய்யியல் ஆய்வு வரை பல்வேறு பரிமாணங்களில் மொழியியல் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மெய்யியல் திருப்பம் (Philosophic Turn) என்பது மானிடவியல் ஆய்வாளர் மாலினோஸ்கியின் சூழல்சார் பொருண்மையியல் (Pragmatics) ஆய்வு முறையால் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மொழியியல் ஆய்வு மெய்யியல் சாலையில் பயணத்தைத் தொடங்கியது. ஜெ.எல்.ஆஸ்டினின் “பேச்சுச்  செயல் கோட்பாடு”( Speech Act Theory / Performative Analysis), ஹைச்.பி.கிரைஸின் “உரையாடல் உள்ளுறைக் கோட்பாடு” (Conversational Implicature Theory), பிரிஜ் (Frege), ரஸ்ஸல் (Russel), கார்னாப் (Carnap) போன்றோரின் “அளவையியல் மொழியியல்”  (Logical Linguistics)  என மொழியியல் ஆய்வு மெய்யியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க மெய்யியல் ஆய்வாளர்கள் பலர் மொழியியலை நோக்கி வந்தனர். இவர்களுள் விட்ஜென்ஸ்டின், ஹேபர்மாஸ் (Communicative Action Theory) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விட்ஜென்ஸ்டின் ஆய்வினை மெய்யியல் ஆய்வாளர்கள் மொழியியல் திருப்பம் (Linguistic Turn) எனக் குறிப்பிடுவர்.

    மேற்குறிப்பிட்ட மொழியியல் மெய்யியலார், மெய்யியல் மொழியியலார் ஆகியோரைத் தொல்காப்பியரோடு ஒப்பிடும்போது அனைவரின் கருத்துக்களிலிருந்து தொல்காப்பியர் வேறுபடுவதை அறியலாம். அவர் நிகழ்த்துதல் மெய்யியலைக் கட்டமைத்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அத்தகைய மெய்யியலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதே உரையின் நோக்கம்.

    Share
  • புத்தக மதிப்புரை : Astrophysics for People in a Hurry

    புத்தக மதிப்புரை : Astrophysics for People in a Hurry

    முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
    ஆற்றல் அறிவியல் துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    natarajangravity@gmail.com

    Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில்  அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல்  என்று சொல்லலாம்) மிகப்பெரும் இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசன் என்பாரால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது. பிரபஞ்சத்தின் முதல் நிமிடங்கள், விண்மீன்கள், விண்மீன் கூட்டங்கள், கோள்கள், வானத்திலுள்ள வேதியியல் மூலக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றி இந்நூல் விரிவாக அலசுகிறது.

    இப்புத்தகத்தில் என்னென்ன விஷயங்கள் அலசப்பட்டுள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

    காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காநத அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதைக் குறித்தும் தெளிவுற விளக்குகிறார். உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல  வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார். நமது கண்கள் எவ்வகையான ஒளிகளைத் தெரிந்துகொள்ளும் மற்றும் நாம் கண்ணால் காணும் ஒளிகளைத் தவிர பிரபஞ்சம் எந்த அளவு மின்காந்த அலைகளால்

    நிரப்பப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய முறையில் விளக்கியுள்ளார்  டைசன்.

    இந்நூலின்  முதல் அத்தியாயம் பிரபஞ்சம் தோன்றிய ஆரம்ப நிமிடங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது. முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில்  ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் அத்தியாயம் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது முதல் அத்தியாயம்.

    இரண்டாவது அத்தியாயம் பூமியைப் பற்றி விளக்குகிறது. பூமியில் உள்ள சிறப்புமிக்கத் தனிமங்கள் மற்றும் பூமியிலிருந்து நாம் செய்த சாதனைகள், விண்வெளிப் பயணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து விவரிக்கிறார் டைசன்.  நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே உள்ள வெளியைப் பற்றி மிக விரிவாகப் பின்வரும் அத்தியாயங்களில் விளக்குகிறார்.  மேலும் நட்சத்திரக் கூட்டங்களின் இயக்கங்கள் பற்றியும் மற்றும் அவற்றின் வடிவங்கள் பற்றியும் தெளிவாக அந்தந்த அத்தியாயத்தில் விளக்குகிறார்.

    பல விந்தையான செய்திகளையும் இந்த புத்தகத்தில் அள்ளித் தெளிக்கிறார். உதாரணமாக பிரபஞ்ச பின்புல வெப்ப நிலையைக் கண்டறிய செய்யப்பட்ட ஆய்வில் ஆரம்பகட்டத்தில் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்கள் அதன் தரவுகளில் கிடைத்தனவாம். இது பெல் ஆய்வுகூடத்தில் நிகழ்ந்தது. இதை ஆரம்பத்தில் கண்டறிந்த பொறியிலாளர்கள் மீண்டும் மீண்டும் இவ்வகையான தரவு மாறுதல்கள் இருப்பதைக் கண்டறிந்தனராம்.  அது  என்னவென்று தேடிப் பார்த்தபோது அந்த அலைவாங்கியில் புறாவின் எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம். அதுவே அந்த தரவுகளில் சில மாறுதல்களை கொடுத்தது என்றும் அவர் விந்தையாக சில வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கிறார்.

    இந்த பிரபஞ்சத்தின் விந்தையான விஷயங்களில் ஒன்று டார்க் மேட்டர் என்று அழைக்கப்படக்கூடிய இருள் பொருள்.  இதன் கண்டுபிடிப்பு  மற்றும் இது எவ்வாறு ஈர்ப்பியல் ரீதியாக விண்மீன் பேரடைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் குறித்தும் அத்தியாயம் ஐந்தில் விவரிக்கிறார் டைசன். இருள் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட விந்தையான வரலாற்றுச் செய்தியையும் விளக்குகிறார்.

    எந்தெந்தத் தனிமங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்து விரிவாக அலசுகிறார் நீல் டிகிரீஸ் டைசன். பூமிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் தனிமம் என்பது ஹீலியம் எனத் தெரிவிக்கிறார். ஐன்ஸ்டைனின் பெயரில் கூட ஒரு தனிமம் இருக்கிறதாம். மேலும் எவ்வாறு இத்தகைய தனிமங்கள் பூமிக்கு வந்திருக்கக் கூடும் என்பதையும் அவர் தெரிவிக்கிறார். பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் நிறைந்திருந்தாலும் எவ்வாறு பூமியில் இத்தகைய அதிகமான உலோகங்கள் செறிந்துள்ளன என்ற கேள்விக்கு பதிலாக இவையெல்லாம் நட்சத்திரங்களின் வெடிப்பிலிருந்து வந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கிறார். கதிரியக்கத் தனிமங்களின் விசித்திரமான பண்புகளையும் டைசன் இப்புத்தகத்தில் பட்டியலிடுகிறார்.

    ஐன்ஸ்டைன் தனது புலக் கொள்கையை வெளியிட்ட பிறகு அவர் தனது தத்துவத்தில் உள்ள மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட பிரபஞ்சவியல் மாறிலி எவ்வாறு தற்போது இருள் ஆற்றலாக ஆய்வாளர்களால் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று அத்தியாயம் ஆறில் விரிவாக எழுதுகிறார். இருள் ஆற்றல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவு ஆகியவற்றை அலசுகிறது இந்த அத்தியாயம்.  எவ்வாறு நெபுலாக்களைக் கொண்டு பிரபஞ்சம் விரிவடைவதையும் மற்றும் இருள் ஆற்றலின் இருப்பு குறித்தும் விளக்கம் தரப்படுகிறது என்பதை இந்த அத்தியாயம் மிக விரிவாகவே விளக்குகிறது.

    ஒன்று தெரியுமா நீல் டிகிரீஸ் டைசனின் பெயரில் எரிகல் ஒன்று உள்ளது. 2000மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு எரிகல்லுக்கு 13123-டைசன் என்று நீல் டிகிரீஸ் டைசனின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    நாம் வேற்றுக்கிரக உயிரினங்களை அறிவியலின் வளர்ச்சியின் நீட்சியாகத் தேடி வருகிறோம். வேற்றுகிரகத்தில் ஏதாவது உயிர் இருக்குமா அல்லது வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்திருப்பார்களா என்பது போன்ற கேள்விகளை முன்னிறுத்தி அறிவியல்  தமது தேடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.  இந்நூலின் பத்தாவது அத்தியாயத்தில் அத்தகைய தேடல் குறித்தும்

    டைசன் விளக்குகிறார். வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியானவை என்பதை எவ்வாறு கண்டறிவது என்றும் மேலும் எத்தகைய அறிவியலை அடிப்படையாகக் கொண்டு வேற்று கிரகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம் என்பது குறித்தும் விரிவாக எழுதுகிறார் டைசன். உதாரணமாக ஒரு  நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கிரகத்தைக் கண்டறிய, அதன் பிரகாசம் குறைவதை வைத்து கணக்கீடுகள் செய்து ஒரு கிரகத்தில் இயங்கியலைக் கணக்கிட முடியும் என்று தெரிவிக்கிறார். மேலும் ஒரு கிரகத்தில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு அக்கிரகத்தின் என்னென்ன வேதியல் மூலக்கூறுகள் இருக்கக்கூடும் என்பதையும் விரிவாக விளக்குகிறார். இவையெல்லாம் வைத்து ஒரு வேளை அறிவார்ந்த வேற்று கிரக உயிரினங்கள் பூமியைத் தேடினால் அவைகள் பூமியை எந்தெந்த வகையில் பூமியின் இருப்பைக் கணக்கிட முடியும் என்பதையும் டைசன் மிக விரிவாக விளக்குகிறார். வேற்றுக்கிரக உயிரினங்களின் பார்வையில் பூமியை ஒரு அறிவார்ந்த உயிரினங்கள் வாழும் கோளாகக் கணக்கிட்டு அதன் இருப்பிடத்தைப் பற்றி விளக்குகிறார்.

    இப்புத்தகத்தின் பதினோராவது அத்தியாயத்தில் உலகில் சமநிலையற்றத் தன்மையை விவரிக்கிறார். நாமெல்லாம் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது பூமியில் பல்வேறு குழப்பமான சூழல்கள் நிகழ்கின்றன என்பதை அவர் மறுக்கவில்லை. சமூக வாழ்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் அவர் கடுமையாகச் சாடுகிறார்.

    இந்த அற்புதமான புத்தகம் அறிவியலை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளவும் மற்றும் பிரபஞ்சவியலின் வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 26

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 26

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமத்திலும் புதுமை தேக்கும் உத்தி

    முன்னுரை

    கவிதையில் கருத்து ஒன்றினைத் தவிர மற்ற எல்லாமே அதனை வெளிப்படுத்தும் உத்திகளே! கவிதையின் வெற்றி அதன் உத்தியில்! பொருளுக்கேற்ற யாப்பு என்பதும் யாப்புக்கேற்ற சந்தம் அல்லது சீர் என்பதும் அவற்றோடு கூடிய கற்பனை என்பதும் உத்திகளே. இவற்றுக்கெல்லாம் மேலாக நிற்பது உவமம். கருத்துப் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் இந்த உவமமே கவிதையின் நிலைத்த வெற்றிக்குத் தலையாய காரணமாக அமைகிறது.  அதனால்தான் சங்கக்காலத்தில் தொடங்கித் தற்காலம் வரை கவிதைகள் உவமங்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சில பொழுதுகளில் படைப்பாளனின் தனித்திறனை எடைபோடுவதற்கும் இந்த உவமங்கள் எடைக்கற்களாக இருக்கின்றன. மரபு சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலத்தில் கூட உவமங்களில் புதுமை தேக்கும் முயற்சி நடந்திருக்கிறது. இது பற்றிய விளக்கத்தைச் சில எடுத்துக்காட்டுக்கள் வழி இக்கட்டுரை ஆராய்கிறது.

    உவமப் பயன்பாட்டில் உற்றுநோக்கலின் பங்கு

    பொருளை ஒப்பிட்டுக் காட்சிப்படுத்துவதும் கருத்துக்கு விளக்கமளிப்பதுமே உவமத்தின் தலையாய பணி என்பது உண்மையே. ஆனால் அத்தகைய ஒப்பீடுகளை மேலேழுந்தவாரியாகச் செய்துவிட இயலாது. செய்தால் உவமம் அழகு பெறாது ஆழங்கால் பட்டு நிற்காது காலங்காலாமாகப் பெண்ணின் முகத்துக்குத் தாமரையை ஒப்பிட்டு வந்ததால் தாமரைக்கும் பெருமையில்லை. பெண்ணின் முகத்துக்கும் பெருமையில்லை. இதனை உணர்ந்த கம்பன் தாமரையை ஆணாகிய இராமனுக்கு ஒப்பிட்டுக் காட்டியதை இங்கு நினைவுகூரலாம். ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என்பது கம்பன் தமிழ். சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை என்பது இல்பொருள். சித்திரத்துத் தாமரை மலர்வது உண்டா? நீர்த்தாமரையை உவமிக்க மனமில்லாத கம்பன் இப்படி எழுதிக்காட்டுகிறான். முல்லை போன்ற பற்கள் என்னும் மரபுவழி உவமக் கோட்பாட்டைத் தற்காலக் கவிஞர் ஒருவர் தமது கவிதையில் ‘நடுகற் பற்கள்’ என்று வண்ணனை செய்திருக்கிறார். நாட்டுப்புறப்பாடல்களில் ‘புளியங்கொட்டை’ பல்லுக்கு உவமமாக்கப்பட்டிருப்பதும் மண்வெட்டியை உவமமாக்கியிருப்பதும் உண்மையே. என்றாலும் நடுகற்களை உவமமாக்கியிருப்பது  படைப்பாளனுடைய வரலாற்றுணர்வையும் புதுமை தேக்கும் உணர்ச்சியையும் ஒருசேரக் காட்டுவதாக உள்ளது. பொன்விலங்கு என்னும் நாவலில் பெண்ணின் கூந்தலுக்குக் ‘குலை குலையாய்த் தொங்கும் திராட்சைக் கொத்துக்களின் தொகுதியை’ நா.பார்த்தசாரதி உவமமாக்கியிருப்பார். இதனால் பரவலான உற்று நோக்கலும் ஆழமான சிந்தனையிலும் ஈடுபட்டாலேயொழிய உவமச் சித்திரிப்பில் நிலையான வெற்றியினைப் பெறமுடியாது என்பது புலனாகும்.

    பழைமைக்குள் புதுமை

    தவளை மேட்டுக்கு இழுக்கிறது. மீன் தண்ணீருக்குள் இழுக்கிறது என்பது அனைவரும் அறிந்ததொரு சொலவடை. ஒரு சிக்கலில் அல்லது சூழலில் ஒரு முடிவுக்கு வராமல் தவிக்கின்ற ஒருவனை அல்லது அவனுடைய மனநிலையை இப்படிச் சித்திரித்திருக்கிறார்கள். மக்கள் வாழ்வியலே இலக்கியத்திற்கும் அவர்களின் மொழிவழக்கே இலக்கணத்திற்கும் அடிப்படையாதலின் இந்தக் கருத்தியல் இலக்கியங்களில் பலவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலா வந்த மன்னனைக் காணத் துடிக்கிறாள் தலைவி. ஆண்மகனைத் தானாகக் காணச் செல்ல அவள் நாணம் தடையாகிறது. பருவத்தின் தூண்டுதலால் மனம் மீளவும் வாசல் நோக்கி அவளைச் செலுத்துகிறது. ஆசை முன்னுக்குத் தள்ள நாணம் பின்னுக்குத் தள்ள அவள் துடிப்பதை,

    “நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
    காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற —- யாமத்[து
    இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்
    திரிதரும் பேரும்என் நெஞ்சு”

    என்னும் பாடல் (முத்தொள்ளாயிரம்) இருதலைக்கொள்ளி எறும்பின் துடிப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறது. இந்த உவமத்தை மணிவாசகப் பெருமான்,

    “இருதலைக் கொள்ளியின் உள்எறும்[பு] ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்”

    என்னும் திருவாசகம் “உன்னை நாடி உய்வதா? உலகியல் தோய்ந்து மாள்வதா எனத் தன் மனம் ஒரு நிலையில் நில்லாததை மணிவாசகப் பெருமான் இந்த உவமத்தால் விளக்குகிறது.

    “இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பேபோல்
    உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழி முதல்வா!”

    என்று திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வாரும் இதே உவமத்தைப் பயன்படுத்தப் பாடியிருப்பதைக் காணலாம். மேலே காட்டியவையெல்லாம் பிற்கால இலக்கியங்கள். ஆனால் சங்க இலக்கியமான அகநானூற்றிலும் இதே உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் வியப்பான செய்தி. மக்கள் வழக்கின் தீவிரத் தாக்குதலுக்கு இலக்கியம் உள்ளான காலக்கட்டம் அது.

    பொருள் தேடும் முயற்சியால் எழுந்த தலைவனின் ஆண்மை “பொருள் தேடப் போவோம் வா” என்று முனைகின்றது. தலைவியின் மீது கொண்டுள்ள காதலோ தடுக்கின்றது. ஆண்மை முந்துற ஆசை பிந்துறும் நிலைமை. அவன் மனமோ இப்போது இடைப்பட்ட நிலையில் போவதும் வருவதுமாக ஊசலாடுகிறது. நரைமுடி நெட்டையார் எனும் புலவர் இதைப் பாடியுள்ளார்.

    “ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
    கவைபடும் நெஞ்சம் கட்க ணகைய
    இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி”

    என்பன அப்பாடல் அடிகளாகும். சங்கக் காலத்திலிருந்து “இருதலைக்கொள்ளி எறும்பென்னும்” உவமை எல்லாப் புலவர்களையும் கவர்ந்து எடுத்தாளச் செய்திருக்கிறது.

    சங்கச் சான்றோர்கள் இந்த உற்று நோக்கலில் தனித்து விளங்குகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் அகப்புறத்தை நன்கு உற்றுநோக்கியே வாழ்ந்தவர்கள் ஆதலின் ஒரு நிகழ்வைக் கவிதையாகக் காட்சிப்படுத்துகிறபோது உவமம் என்பது தானாக அமைந்துவிடுகிறது. பொருளையோ கருத்துக்களையோ கைவசம் வைத்துக் கொண்டு அதற்குப் பொருத்தமான உவமத்தைத் தேடும் பழக்கம் அவர்களிடம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. இந்தப் பின்புலத்தில்  எறும்புக்குப் பதிலாக இற்றுப்போன கயிற்றை உவமமாக்கிய ஒரு தலைவியைக் காணலாம்.

    திண்டாடும் உயிரும் தேய்புரி பழங்கயிறும்

    பொருள்வயிற் பிரிய எண்ணம் கொண்ட தலைமகன் அதாவது குடும்பத்தலைவன் அவனது பிரிவை ஆற்றாது அரற்றிய தலைவியைத் தேற்றிப் பிரிகிறான். பிரிந்து வினைசெய்பவன் மனைவியைப் பற்றிய நினைவு மேலோங்கி அறிவழிந்த நிலையில் அலைக்கழிக்கப்படுகிறான் மற்றொருபக்கம். வினையைக் குறைவுபடச் செய்து தலைமகள் பற்றிய காதல் மீதுறத் திரும்புவானாயின் அது ஆண்மகற்கு அறமாகாததோடு இளிவரல் பயக்கும் என்பதையும் உணர்கிறான்.  நெஞ்சமும் அறிவும் நிகழ்த்தும் இந்தப் போரில் தலைமகனுடைய உயிர் தள்ளாடும் நிலைக்குத்தான் சங்கச் சான்றோர் ஒருவர் புதுமையானதோர் உவமத்தைப் பயன்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்த உவமத்தை அனுபவிக்க வேண்டுமானால் பாட்டின் பல பொருட்பகுப்புக்களையும் தனித்தனியாகக் கற்றுணரவேண்டும்.

    நெஞ்சு சொல்கிறது இப்படி!

    “புறத்தாழ்பு இருண்ட கூந்தல் போதில்
    நிறங்கிளர் ஈரிதழ் பொலிந்த உண்கண்
    உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்
    செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் (தலைவனின்) நெஞ்சம்!”

    அறிவு என்ன சொல்கிறது?

    “செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
    எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
    உறுதி தூக்கத் தூங்கி அறிவே
    சிறு நனி விரையல் என்னும்!”

    ஆயிடை (இவற்றுக்கிடையே)

    “ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
    தேய்புரி பழங்கயிறு போல
    வீவது கொல் என் வருந்திய உயிரே!”

    பாட்டின் பொருள்முறைக் கட்டுமானம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது பாருங்கள்! நெஞ்சு செய்யும் கொடுமை இது!. அறிவு காட்டும் தடம் இது! இரண்டுக்கும் நடுவே வதைபடும் என் உயரின் நிலை இது! முதலில் தலைவியிடம் தலைவனுடைய மனம் செல்வதற்கேதுவான அவளுடைய எழில் வண்ணனை செய்யப்படுகிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அறிவு தலைவி பால் கொண்ட காதல் பற்றிய சிந்தனையை வரையறை செய்து அவனைத் தடுப்பது அடுத்த நான்கு வரிகளில். ‘ஆயிடை’ என்னும் சொல் வழி இரண்டையும் இணைக்கும் புலவர், நைந்து போன தலைவன் உயிரைத் தேய்ந்து போன பழங்கயிற்றுக்கும், அறிவையும் நெஞ்சையும் வலிமையான இரண்டு களிறுகளுக்கும் உவமமாக்கிய திறன் இறுதியில்!

    இருதலைக் கொள்ளி எறும்பு என்னும் மரபு சார் உவமத்திலிருந்து விலகிப் புதுமை தேக்கும் உவமமாகப் பொலிகிறது. கயிற்றைக் கருவி கொண்டு அறுக்காது ஈர்த்த வழி அது புரிபுரியாய் நெக்குற்று அறுபடுவது பற்றித் ‘தேய்புரி பழங்கயிறு’ என்றும், அதன் வலிமையும் உறுதியும் குறைந்த நிலையை உணர்த்துவதற்குப் பழங்கயிறு என்றும் கூறிய நுட்பம் உணர்க. பிரிதலும் இருத்தலும் இரங்கலுமாகிய உரிப்பொருள் பெரும்பாலும் தலைவி பற்றிய புலனெறிவழக்கிற்கே உரியதாயினும் மிக மிக நுட்பமாகத் தலைவனது மனத்து வேதனையை உவம வாயிலாகப் பதிவிட்டிருக்கும் சங்க இலக்கியத்தின் நுட்பம் தற்கால எந்தத் திறனாய்வுக் கொள்கைக்கும் அடங்காதது!

    வினைமுடித்தன்ன இனியோள்

    புறஅழகினால் ஒரு பெண் ஆணைக் கவர்வதற்கும் பண்புகளால் அவன் நெஞ்சில் இடம்பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. இது பெண்ணுக்கும் பொருந்தும். தொல்காப்பியர் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பண்புகளின் தொகுதியாகவே பெண்ணைப் பார்த்திருக்கிறார். ஆணுக்கும் பெருமையையும் உரனையும் இலக்கணமாக வரையறை செய்திருக்கிறார். அத்தகைய ‘பண்புத்தொகையான ஒருத்தியை மணமுடித்து வாழும் தலைவன், பொருள்வயிற் பிரிகிறான். பிரிந்தவன் திரும்புகிறான். திரும்பியவன் மனைவியோடு மகிழ்கிறான். மகிழ்ச்சியினால் வினையை மறக்கிறான். அப்போது அவன் நெஞ்சு அவனுக்கு நினைவூட்டுகிறது.

    “இப்படியே இருந்துவிட்டால் இல்லறம் சிறப்பது எப்படி? என்று. நெஞ்சு கூற, அந்த நெஞ்சிற்குத் தலைவன் இயலாமையை அதாவது முன்னர்ச் சென்றபோது அவன் உள்ளம் எண்ணியதை அந்த உள்ளத்திடமே வெளிப்படுத்துகின்றான்.

    “”நெஞ்சே! நீ எனக்கு நினைவூட்டுவது சரியே! ஆனால் சென்றமுறை சென்ற பொது நான் என்ன எண்ணினேன் என்பதை நீ மறந்துவிட்டாயா? வினைமுடிக்க சென்ற நான் அவ்வினை முடிந்ததால் உண்டான இன்பத்தைப் போன்றவளான என் மனைவி, மாலைநேரமாகிய இந்நேரத்தில் விளக்கேற்றிக் காத்திருப்பாளே” என நான் நினைத்தேனே? இந்த முறையும் சென்றால் அப்படித்தானே நினைப்பேன்?”

    என வருந்துவதாக இளங்கீரனார் என்ற புலவர் தலைவனாக மாறி எழுதிக்காட்டுகிறார்.

    “உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய
    வினை முடித்தன்ன இனியோள்
    மனைமாண் சுடரொடு படர்பொழுதெனவே”

    இந்தப் பாட்டில் தலைவியின் இனிமைக்கு ‘வினை முடித்த இனிமை’யை உவமமாக்கியிருக்கிறார் புலவர். அகம் என்பது காட்டாலாகாப் பொருளாகலானும் உணர்ந்து அனுபவித்தவரே மீளவும் உணரமுடியாதலானும் இவ்வாறு உவமிப்பது பொருத்தமே!.

    இங்கே தலைமகன் தலைமகளை இவ்வாறு எண்ணினான். மற்றொரு பாட்டில் தலைவியின் துன்பத்தை உணர்ந்த தோழி சொல்கிறாள்,

    “கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு”

    தலைவனோடு மகிழலாமாம். இது தோழியின் கூற்று. நல்ல கலன். அதாவது பொற்பாத்திரம். அது தொலைந்து போனது. திடீரென ஒரு நாள் எதிர்பாராச் சூழலில் அது கிட்டியது. கிட்டிய அந்த நேரத்தில் என்ன மகிழ்ச்சி உண்டாகுமோ அதனைப் போல இனியவன் தலைவன் அவனைச் சேர்ந்து மகிழலாம் என்பது கருத்து. இதே கருத்தமைந்த பாடலை உரையாசிரியர் இளம்பூரணர் மெய்ப்பாட்டியல் நூற்பா ஒன்றில் ‘இன்புறல்’ என்னும் சொல்லுக்கான பொருள் விளக்கத்தில் எடுத்துக்காட்டுகிறார்.

    “விட்டகன்று உறைந்த நட்டோர்க் கண்ட
    நாளினும் இனிய நல்லாள்”

    நெருங்கிப் பழகியவர் பிரிந்து “வேறிடத்திற்குச் சென்று திரும்ப மாட்டார் இனி சென்ற இடத்திலேயே கழிப்பார் என நினைக்கப்பட்ட அந்தப் பழைய நண்பரை எதிர்பாராச் சூழலில் கண்ட பொழுது எப்படி இனிக்குமோ அப்படி இனிப்பாளாம் தலைவி! என்ன அருமையான உவமம்? ‘இன்புறல்’ என்பதற்கு நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதொரு மனநிகழ்ச்சி போல்வது என்று இளம்பூரணர் தரும் உரைவிளக்கம் கோடி பெறும்.

    நெருப்புத்தான் சுடும் என்பதில்லை. ஆற்றல் மிக்க கவிஞர்களுக்கு  எல்லாம் சுடும். எல்லாம் குளிரும். காரணம் வழக்கு. உலகியல் வழக்கில் மக்கள் பயன்படுத்தும் மொழிகளும் கற்பனைகளும் படைப்பாளனைப் பாதிக்கின்றன. அப்படிப் பாதித்தால்தான் அவன் படைப்பாளன். ‘நாவினால் சுட்டவடு நெஞ்சில் ஆறாது கிடக்கும்’ என்று திருவள்ளுவர் பாடுகிறார். ‘செயலுக்கும் சொல்லுக்கும் வேறுபட்டார் நட்பை எண்ணிப் பார்த்தால் எண்ணுகிற உள்ளமும் சுடும்’ என்றும் அவர் கூறுகிறார். மனுநீதிச் சோழனின் ‘நெஞ்சு சுட்டதாக’ இளங்கோவடிகள் பாடுகிறார். இத்தகைய உணர்வுகளின் அடர்த்தியான வெளிப்பாடே உவமங்களாக அமைந்திருக்க வேண்டும். இவ்வாறு அருவப் பொருளை வினைமுதலாக்கி உவமிக்கும் உவமக் கோட்பாடு தமிழுக்கே உரியது என்க.

    எய்கணை நீழல்

    ‘இளமை நில்லாது யாக்கை நிலையாது வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது’ என்ற பாடல் வரிகளைச் சீர்காழி குரலில் கெவிமடுக்காதவர் குறைவு. அவற்றின் நிலையாமையைப் பாடிய கவிஞர்கள் பல்வேறு உவமங்களால் தமது கருத்தினை விளக்கியிருக்கிறார்கள்.

    ‘“செல்வம் சகடக்கால் போல வரும்’

    என்று சக்கரத்தை உவமம் சொன்னார்கள். ‘உய்த்து ஈட்டும் தேனீக் கரி’ தான் சேர்த்து வைத்த தேனை இழக்கும் தேனீக்களை உவமமாக்கினார்கள்.

    ‘பனிபடு சோலை பயன்மரமெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற்று இளமை”

    என உதிர்கின்ற கனிகொண்டு விளக்கினார்கள்.

    “‘முற்றியிருந்த கனியொழிய தீ வளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு’’

    என நாளை செய்து கொள்ளலாம் என்னும் சோம்பல் நினைப்புக்கு, அடிக்கின்ற காற்றில் கனி நிலைக்க, காய் உதிர்ந்துவிடும் என உவமத்தால் எச்சரித்திருக்கிறார்கள்.

    ‘சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கும் புள்போல’

    செல்வம் அழியும். என்றார்கள்.

    ‘மலையாடு மஞ்சுபோல்’

    தேடுகிற செல்வம் தேய்ந்து போகும் என இயற்கையோடு இயைந்து விளக்கினார்கள். இப்படி இளமை, யாக்கை, செல்வம் என்பனவற்றின் நிலையாமையை விளக்கியதன் நோக்கம் அவற்றின் படைப்பு நோக்கத்தைக் குறித்த காலத்தில் குறித்தநேரத்தில் அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே. இந்த நிலையாமையை விளக்குதற்காகச் சான்றோர் ஒருவர் பயன்படுத்தியிருக்கும் உவமம்,

    ‘வைகல் தோறும் இன்பமும் இளமையும்
    எய்கணை நீழலின் கழியும்’

    என்பது தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தற்காலை கூறிய உவமம். பொருளின் நோக்கம் இளமைக்காலத்தில் இன்பம் அனுபவிப்பது.  இவ்வின்பத்திற்கு அடிப்படையான இளமை ஒவ்வொரு நாளும் கழிவதற்குத்தான் எய்யப்பட்ட அம்பின் நிழலை உவமமாக்கியிருக்கிறார் புலவர். கணைக்கு நிழல் உண்டென்றாலும் அது செல்லும் விரைவின் காரணமாகக் கட்புலனாகாது என்பது அறிக. இல்வாழ்க்கைக்கண் பெறற்குரியன அதற்குரிய செவ்வியான இளமை. ஆயினும் அவை கணந்தோறும் காலத்தால் குறைக்கப்படுவது உலகியல். பொருள் வேட்கையால் பிணிப்புண்டு நாளும் அதனை ஈட்டலும் காத்தலுமாகிய செயல்வகையே நினைந்து ஒழுகுவாருடைய வாழ்வின்கண் பொருட்பயனாகிய இன்ப நுகர்ச்சி தக்க இடம் பெறாது என்பது கருத்து. செல்வத்திற்கும் இளமைக்கும் உள்ள வேறுபாடு யாதெனின் செல்வம் இருந்து அழியும். இளமை இருக்கும்போதே அழியும். இதற்கு எய்கணை என வினைத்தொகையால் சுட்டியது அதுபற்றி என்க.

    நிறைவுரை

    ஒரு நாட்டுச் சட்டங்கள் இன்னொரு நாட்டுக்குப் பொருந்தாது. அதுபோலவே ஒரு காலத்துச் சட்டங்கள் இன்னொரு காலத்துக்குப் பொருந்தாது. இந்த வரையறை இலக்கியத் திறனாய்வுக்கும் பொருந்தும். ஒரு நாட்டு இலக்கியங்களுக்கான திறனாய்வுக் கொள்கை வேறுபட்ட மரபு சார்ந்த மற்றொரு மொழி இலக்கியங்களைத் திறனாய்வு செய்யப் பயன்படுத்துவது நெறியன்று. தமிழ்நாட்டு இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தை இங்கிலாந்து நாட்டு இருபதாம் நூற்றாண்டு ஏ.சி.பிராட்லேயின் திறனாய்வுக் கொள்கையைக் கொண்டு அளவிடுவது அல்லது மதிப்பிடுவது நேரியதன்று. பயனும் விளையாது. தமிழ் இலக்கியங்களில் உவமப் பயன்பாட்டின் கோட்பாடுகளும் கொள்கைகளும் தனித்துவம் மிக்கவை. வாழ்வியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. நுட்பமான இயற்கை உற்றுநோக்கலைக் களமாகக் கொண்டவை. கவிதை வெற்றிக்குத் தலையாய உத்தியாகக் கருதப்படுபவை. மேற்கண்ட பகுதிகள் இதனை ஓரளவு புலப்படுத்தியிருக்கக் கூடும்.

    (தொடரும்…)

    Share
  • “பெருங்காற்றே” – 75 ஆவது சுதந்திர தினப் பாடல்

    “பெருங்காற்றே” – 75 ஆவது சுதந்திர தினப் பாடல்

    இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் வரும் ஆகஸ்டு 15-இலிருந்து தொடங்குகிறது.

    கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-இலிருந்து தொடங்குகிறது.

    இந்தியச் சுதந்திரப் போருக்கு தமிழ்நாடு எப்படி முன்னோடியாகத் திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

    50-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் பரத்பாலா இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

    வரும் 75ஆவது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளைப் போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.

    தமிழில் தொடங்கி, இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒடியா, மராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கணி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்தப் பாடல் உருவாகிறது.

    இந்தியாவில் உள்ள முன்னணித் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், இப்பாடல் உருவாக்கத்தில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.

    கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

    இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது.

    தமிழகம் தொடங்கி, இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகின்றன, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 முன்னணி ஓவியக் கலைஞர்கள் வரைகிறார்கள். இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -இல் பதிவு செய்யப் போகிறோம்.

    இந்தப் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER), 2021 செப்டம்பர் 5-இல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது ஆண்டு விழாவில் வெளியாக இருக்கிறது.

    இவ்விழாவில்,

    வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி. பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.

    வ.உ.சி-யின் 150ஆவது ஆண்டைக் குறிக்கும் பொருட்டு, உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

    இந்தியாவில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குத் தான் முதன்முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-இல் எழுதப்பட்டது. வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த நூலை மீட்டெடுத்து ( நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் தமிழ்ப்பெருஞ்சொல் வ.உ.சி. என்றும் ஆங்கிலத்தில் தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.என்றும் வெளியிடுகிறோம்.

    இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும்  (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KINDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றுகிறோம்.

    மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.


    The celebrations for 75th Indian Independence will begin on 15 August. Meanwhile, the 150th birthday celebrations of V O Chidambaranar, popularly known as ‘Kappalottiya Tamilan’ will start from 5 September. Just like how Tamilnadu was a pioneer in the war for freedom, it also leads from the front in the Independence day celebrations.

    On the occasion of the 50th Independence Day, the song ‘Thaimanne Vanakkam’ – ‘Vande Mataram’, directed by Bharathbala with lyrics by Vairamuthu and music by AR Rahman, was released and became very popular.

    Similarly now another patriotic song composed by G V Prakash, directed by A Rajasekar is all set to be released for the 75th Independence Day.

    Camerawork for the song will be by R D Rajasekar with Arun Raja Kamaraj penning the lyrics. The song will pay homage to the freedom fighters all over India.

    The song will be released in 12 languages including Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Oriya, Marathi, Bengali, Bhojpuri, Punjabi, Gujarati and Konkani. Leading filmmakers and athletes in India will be involved in the creation of the song.

    The song will be shot in various scenic and historical places from Kanyakumari to Kashmir and will be screened in all theaters and visual media in India.

    As a highlight of filming this song, a world record attempt of canvas painting for 6 km titled under the title ‘Connecting India With Colors’ is being made.

    Historical events of warriors who fought for independence all over India starting from Tamilnadu are drawn by 75 leading painters from different states of India.

    We will get this record into the Guinness book of records, limca book of records and Asian book of records.

    The first look motion poster of the song will be released on 5 September to mark the 150th anniversary of the V O Chidambaranar.

    During this ceremony a vault containing the literature works of VOC will be published.

    To mark the 150th anniversary of the VOC, a book titled ‘VOC 150’ written by 150 Tamil personalities from around the world will be released.

    Chidambaranar was one of the first freedom fighters in India to get a political biography in 1906. The book, which was banned by the British in India and kept in the London Museum, was retrieved (by Librarian and Analyst Mr.Rangaiya Murugan), and will be released in Tamil as ‘Tamil perunchol VOC’. The book will be released in English as ‘The Big Word V.O.C’.

    All of these will be made available as an audio book, video book, Kindle version, and VOC mobile app.

    Chakra Foundation Founder Chakra Rajasekar and Vidhai Book Publications Founder A. Subramanian are co-hosting the event with the help of well-wishers.

    Share
  • செஞ்சி தமிழினியனின் ‘ஊராகாலி’ சிறுகதைகள் காட்டும் மனிதம் மாறா கிராமங்கள்

    செஞ்சி தமிழினியனின் ‘ஊராகாலி’ சிறுகதைகள் காட்டும் மனிதம் மாறா கிராமங்கள்

    முனைவா் அரங்க. மணிமாறன்
    முதுகலைத் தமிழாசிரியா்
    அரசு மேனிலைப்பள்ளி பரமனந்தல்-606710
    செங்கம்-திருவண்ணாமலை மாவட்டம்          
    Mail: maranvmctamil@gmail.com

    முன்னுரை

    “ஒரு ஊர்ல ஒரு ராஜா” என்று ராசாக்களின் கதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டு வந்தன. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரமும் விலையுயா்ந்த முத்துமாலையை மிக அதிக விலை கொடுத்து வாங்குமளவு வசதிப் படைத்த வாணிக குடும்பத்தினரின் வாழ்வையே பேசுகிறது. ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வை பேசினார் மிகக்குறைவே.

    “கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு” என்கிறார் மகாத்மா காந்தியடிகள். கிராமங்களில் வாழ்ந்தோர் படித்து முன்னேறி நகர்ப்புறங்களில் வாழ்ந்தாலும் அவா்களின் மனங்களில் அவா்களது கிராமமும் நினைவுகளும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலும் என்றும் அழியா ஓவியங்களாய் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

    செஞ்சிதமிழினியன்

    விவேகானந்தன் என்ற இயற்பெயரையுடைய செஞ்சிதமிழினியன் வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சிக்கருகிலுள்ள பென்னகர்  என்னும் சிற்றூரில் சாதாரண விவசாய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவா். பொறியியல் கற்று கட்டடப் பொறியாளராக பணியாற்றி வருபவா். ஆரம்பத்தில் கவிதைகள் எழுதி ‘ராக்காச்சி பொம்மை’ ‘சொப்புக் கடை’ ‘மரத்தின் நிழல்’(ஐக்கூ) என மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

    முதன்முதலில் துப்பறியும் சாகசக்கதைகளை எழுதினார். அதனையடுத்து தான் சந்தித்த மனிதா்களின் வாழ்வியலை கதைகளாக சித்தரித்து சிற்றிதழ்கள் பலவற்றில் வெளியிட்டுள்ளார்.  பரவலாக பாராட்டப்பட்ட இக்கதைகளை 2019 ஆம் ஆண்டு  ‘ஊராகாலி’ என்ற சிறுகதை நூலாக வெளியிட்டுள்ளார்.தற்போது ‘மொடாக்குடியன்’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட இருக்கிறார்.

    “எந்த ஒரு உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும்”1 எனும் அகிலனின் கூற்றுக்கிணங்க சிறந்த கதைகளை இவா் படைத்துள்ளார் .

    கதைகளுக்குரிய தொடக்கம், வளர்ச்சி, முடிவு முதலிய முதலிய கட்டமைப்பு இலக்கணங்கள், நெகிழ்ச்சித் தன்மை, கணத்தன்மை முதலிய கூறுகளில் அதிக அக்கறைப்படாமல் தம் கிராமிய உணா்வுகளை தனக்கேயுரிய பாணியில் கதைப்படுத்தி இருக்கிறார் செஞ்சிதமிழினியன் அவா்கள்.

    அழிந்து வரும் வேளாண்மை

    இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகம் வேளாண்மையை முதுகெலும்பாகக் கொண்ட பூமி. இங்கு வாழும் மக்களுக்கு மண்ணும் மானமும் இரு கண்ணாக மதிக்கத்தக்கவைகளாக உள்ளன. வேளாண்மை என்பது ஒரு பொருளீட்டும் வெறும் தொழில்மட்டுமல்ல.உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட வாழ்வு. தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டுமின்றி ஊருக்கே சோறு போடும் தவவாழ்வு வேளாண்மைத்தொழில்.

    நாகரிக மாற்றம், சரியான மழைவளம் இன்றிப் போனதால் ஏற்பட்டுள்ள நீர்வளக் குறைவு, சரியான விளைச்சல் இன்மை, ஆட்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கான சரியான விலையின்மை இடைத்தரகு போன்றவை மூலம் பெருமுதலாளிகளுக்கே இலாபம் கிடைத்தல் வேளாண்மைத்தவிர மற்ற தொழில்களில் குறுகிய காலங்களில்  கிடைக்கும் அதிக வருவாய் போன்றவை வேளாண்மைத்தொழில் குறைந்து வருவதற்கு காரணிகளாக உள்ளன. கிடைக்கின்ற வேளாண்பொருட்களைக் மூலப்பொருட்களாகக் கொண்டு பல்வேறு உபரித் தொழில்கள் செய்வதற்கான வசதிகள் இன்மை ஆகியவையும் வேளாண்மை மீது இளையத் தலைமுறைக்கு அக்கறையும் நாட்டமும் இல்லாமைக்கான காரணங்களாக அமைகின்றன. இதில் உழைப்பு அதிகம் வருவாய்க் குறைவு. ஆனால் நம் மண்ணின் விவசாயிகள் அத்தனைத் தடைகளையும் தயக்கங்களையும் தாண்டி வேளாண்மையை தம் உயிராகக் கருதி செய்து வருகின்றனா். வேளாண்மையை நம்பினோர் கெடுவதில்லை என்பது கண்கூடு.

    “பொன்னேரு” சிறுகதையில் பொன்னேறு கட்டி புதுநெல்லை விதைக்கும் பாரம்பரிய நிகழ்வுகளை அழகாக நம் மனக்கண்ணில் ஓட்டிக்காட்டியுள்ளார்.

    கந்தாயப்பலன் பார்த்தல், விதைநெல் ஊறவைத்தல், நாற்றங்கால் ஓட்டி தெளியவைத்தல், மறுநாளில் முளைக்கட்டிய விதைநெல்லை சுமந்து சென்று விதைத்தல், அவல் இடித்தல் போன்ற நிகழ்வுகளை படம்பிடித்துள்ளார். பொன்னேறு பூட்டி உழுதல் நிகழ்வை

    “சித்திரையில் புதுமழை பொழிஞ்சா பொன்னேரு கட்டுவாங்க. ஈரம் பதமா இருக்கும்போது நல்லநாள் பார்த்து கலப்பைக்கு புது கொழு மாட்டி மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் வச்சி சனி மூலைக் கழனியில புள்ளையார புடிச்சி தயாராய் இருக்கும் தேங்கா உடைச்சி ஏர் பூட்டுவாங்க”2 என்று ஒவ்வொன்றையும் பண்பாட்டு முறைகளோடு செய்து ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி பயிர்விளைவித்து வந்த நிலம் தாத்தாவிற்குப்பின் அப்பாவும் பெரியப்பாவும் பாடுபட்டு நெல்லும் மணிலாவும் தானியங்களும் விளைந்த பூமி.

    காலமாற்றத்தில் விளைச்சல் குறைந்து வேளாண்மையே அருகிப்போன நிலையில் கம்பெனிகள் விளைநிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அழித்து வரும் அவலநிலையைச் சுட்டி  கதையை முடிக்கிறார். கம்பெனிகளின் முள்வேலிக்குள் அகப்படாமல் பிடிவாதமாய் நிற்கும் நிலம் காலத்தின் கையில் புதிராய் நிற்கிறது என்று வேளாண்மையின் இன்றைய அவல நிலையை இக்கதையில் உணர்த்தியிருக்கிறார்.

    கிராமத்து மனிதர்கள்

    செஞ்சிதமிழினியன் தன் கதைகளில் கிராமத்தையும் அதில் வாழும் மனிதர்களையும் அவா்களது வாழ்வியலையும் மிக நுணுகிப் பார்த்து எழுதியுள்ளார்.

    “கதைகளுக்கான கருவைத் எங்கும் தேடி அலையவேண்டியதில்லை. காதுகளையும் கண்களையும் திறந்து வைத்திருந்தாலே போதுமானது.வாழ்வில் நடக்கும் அத்தனையும் கதைக்கு உரியதாகும்”3 என்கிறார் மா.இராமலிங்கம்.

    கிராமத்து மக்கள் மண்ணை நேசிப்பவா்களாகவும் மற்ற மனிதர்களோடு அன்பும் பாசமும் கொண்டவா்களாகவும் சக மனிதர்களுக்கு உதவக்கூடியவா்களாகவும் நேர்மையாளா்களாகவும் இருப்பதை தமதுக் கதைகளில் எடுத்துக் காட்டியுள்ளார்.

    ‘செத்துப்போன பூமி’ சிறுகதையில் வரும் பழமலை தாத்தா, விதைநெல் தாத்தாவாகவே அறியப்படுகிறார். செஞ்சி தமிழினியனின் சிறுகதைத் தொகுப்பில் முடிமணியாக இக்கதை அமைகிறது.

    பழமலை தாத்தாவுக்கு மகன்கள் இருந்தாலும் பணிநிமித்தமாக நகரங்களில் குடும்பத்தோடு தங்கிவிட தாத்தா மட்டும் தன் தம்பி மகள் உதவியோடு தன் ஊரோடே இருந்துவிடுகிறார். தன் ஊரையும் தன் நிலத்தையும் விட்டுப் பிரிய அவருக்கு மனமில்லை.

    தன் மகனின் நகரத்தில் உள்ள அடுக்கக குடியிருப்பின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றாலும் விழா முடிந்தததும் உடனடியாக கிராமத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று பிடிவாதமாக கிளம்பிவிடுகிறார்.

    பிள்ளைகளும் பேத்திகளும் எவ்வளவு வற்புறுத்தியும் பிடிவாதமாக ஊரோடே தங்கி வாழ்கிறார். பாசி படிந்த குளத்தில் குளிப்பது, இரண்டு வேளை உணவே உண்பது, தன் தம்பி மகள் மலரின் மகள் அம்முவைக் கொஞ்சுவது எல்லாவற்கும் மேலாய் விதைநெல் கேட்டுவரும்  அனைவருக்கும் அளந்து கொடுத்து வேளாண்மையை அழியாமல் காப்பது ஆகியவை  வாழ்வியலாகக் கொண்டு வாழ்பவா். நாகரிக மாற்றத்தில் விளைநிலங்கள் எல்லாம் வீட்டு  மனைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரப்பிலும் செல்வதைக்கண்டு மனம்பதைக்கிறார். படுத்த படுக்கையாகிறார். உயிரையே விட்டுவிடுகிறார்.

    “அவரை சுத்தி மூட்டை முடிச்சுகளாய் நிறைய இருந்தது. எல்லாம் நெல்லு கெவுரு வரகு தெனைன்னு வெதைங்க. விதைகளை நடை பாவாடை மேலே கொட்டினாங்க. வெத நெல்லு மேல மேல தாத்தா நடந்து போனாரு”4

    என்று தன் மண்ணையும் விவசாயத்தை உயிராக எண்ணி வாழ்ந்த மனிதர் தன் தலைமுறையிலேயே தன் கண்முன்னாலேயே கலர் கொடிகள் ஆடி வீட்டு மனைகளாகி

    அருகுவதைப் எண்ணி மனம்நொந்து உயிரைவிடும் நிலையினை படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியா்.

    “இரக்கம்” சிறுகதையில் ஈச்சூா் நாமக்கார தாத்தா  சட்டை அணியாதவராகவும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு தூய்மையாக குளித்து முடித்து நாமம் இட்டு பூஜை செய்த பிறகே உண்பவராகவும் பக்கத்து வீட்டாரின் சொந்தக்காரராக இருந்தாலும் நாயகனை பாசத்துடனும் பரிவுடனும் நேசிப்பவராகவும் இருக்கிறார். பஜனைப்பாடுதல், படைத்த

    உணவுப்பொருட்களை  அண்டையிலுள்ள குழந்தைகளுக்கு வழங்குகிறார்.

    பொய்பேசாதவராகவும் மாமிசம் உண்ணாதவராகவும் ஊரில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவராகவும் இருக்கிறார். அத்தகு மனிதர் வாழ்வு முடிந்து இறந்துவிடுகிறார். நாயகன் இறப்புச் செய்தியறிந்து ஊருக்குச் செல்கிறார். அவரின் இறுதிச் சடங்கில் சனிக்கிழமை என்பதால் பாடையில் அறுப்பதற்கு கோழிக்குஞ்சு கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதனை மற்றோர் அறியாதவாறு பறக்கவிட்டுவிடுகிறார் நாயகன்.

    “சாவுறதுக்கு முன்ன வரைக்கும் ஒரு உயிருக்கும் தீங்கு நெனைக்காம வாழ்ந்தவரு அமைதியா பாடையில போய்க்கொண்டு இருந்தாரு”5.

    கிராமத்தில் எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காத ஈகைகுணத்தோடும் வைதீகத்தோடும் வாழக்கூடிய எளிய மனிதர்களை அடையாளங் காட்டுகிறார் ஆசிரியா்.

    “கைமாறும் ஈச்சங் குச்சிகள்” கதையில் பச்சைத்துண்டுக்காரா், மனைவி இறந்துவிட்டபின் பிள்ளைகள் நகரங்களில் சென்று தங்கிவிடுகின்றனா். தனியொரு மனிதராக சோர்ந்து

    உக்கார்ந்துவிடாமல் விஷேசங்களில் நேர்மையான சமையல் மேற்பார்வையாளராகவும் சந்தைக்கு ஆடுகளையும் மாடுகளை ஓட்டிச்சென்று உதவுபவராகவும் இருக்கிறார்.வலிவும் இளமையும் சுறுசுறுப்பும் இருந்தும் வீணாகச் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு மத்தியில்  எந்த வேலை செய்தாலும் சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் பொய் சொல்லாதவராகவும் எளிய உணவுமுறை கடைபிடிப்பராகவும் தனக்குக்கிடைத்த உணவை பிறா் உயிர்களுக்கும் கொடுத்து ஈகைகுணம் மிக்கவராகவும் ராமசாமி தரகா் போன்ற ஏமாற்றுக்காரர்களை மன்னிப்பவராகவும் உள்ளார்.

    “வெள்ளை வேட்டி பலராம நாயுடு” கதையில் வரும் நாயுடு நகரத்து பட்டு ஜவுளிக்கடைகளுக்கு வாடிக்கையாளா்களை அழைத்துச் சென்று உதவும் வேலை செய்கிறார். அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி பெண்பிள்ளைகளை கரை சேர்ப்பவராகவும் தன் உழைப்பில் சேர்த்த பணமென்றாலும் அதை முதலாளிக்குத் தெரியாமல் எடுக்கக்கூடாது என்ற எண்ணம்கொண்டவராகவும் உள்ளார்.காலமாற்றத்தில் கடை ஊழியா்கள் தன்னை அவமானப்படுத்தும்போதும் அதை பொறுத்துக்கொள்பவராகவும் படைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு கிராமத்து மனிதர்கள் நேர்மையும் உழைப்பும் அன்பும் எளிய வாழ்வும் கொண்ட மனிதர்களாக வாழ்ந்து உலகையும் வாழ வைக்கும் பாங்கை தனது கதைகளில் வடித்து கதைகளை அழகுப்படுத்துகிறார் செஞ்சிதமிழினியன்

    பெண்ணியம்

    செஞ்சி தமிழினியன் கதைகளில் வரும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக உழைப்பும் நேர்மையும் வாழ்ந்து காட்டும் துணிவும் கொண்டவா்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

    “மாற்றம்” சிறுகதையில் சரசு தன் வீட்டுக்கு மூன்றாவது தெருவில் இருக்கும் முறைப்பையனான சங்கருக்கு பெண்பேசி நிச்சயதார்த்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது.

    நிகழ்வில் பெண்ணுக்கு எத்தனை சவரன் போடுவீா்கள் எனவும் வண்டி வாங்கித்தரவேண்டும் என்று நிர்பந்திக்க சரசு சங்கரைப் பார்க்கிறாள். அவனும் மௌனமாக இருக்க அணிந்திருந்த மாலையை கழட்டிவிட்டு துணிந்து வந்து சபையில் பேசுகிறாள்.

    ”பெண் உரிமை என்பது என்னவெனில் ஆண்களைப்போலவே பெண்களுக்கு வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்”6 என்கிறார் தந்தை பெரியார்.

    தன் தகப்பனால் நகைநட்டு மட்டுமே போடமுடியும்.அதற்கே கடன்வாங்கிதான் போடமுடிகிறது.

    இதில் வண்டி வேறு வாங்கித்தர முடியாது எனவும் அப்படியே வாங்கினாலும் அக்கா வீட்டுக்காரருக்கும் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள். அப்படியென்றால் என் அண்ணன் மகளையே கட்டிவைப்பேன் என சங்கரின் அம்மா கூற சங்கர் எதுவும் கூறாமல் நிற்கிறான்.

    “இன்னும் மூணு வருஷத்துக்குப் பிறகு கல்யாணத்தை வெச்சிக்கலாம். கே.வி தியேட்டர்ல புதுசா செல்போன் தயாரிக்கிற கம்பெனி வந்திருக்குதாம். மாசம் ஐயாயிரம் ௹பா தர்றாங்கலாம். நானும் நாளைக்கு போய் சேர்ந்துட்றேன் என்றதும் கண்கள் ஈரமானது”7

    சொந்தமாக இருந்தாலும் நகைநட்டும் வண்டியும் கொடுத்தால்தான் திருமணமென்றதும் அதை நிறுத்திவிட துணிகிறாள். ஆனால் சங்கரின் அன்புக்கும் தந்தையின் வண்டி வரதட்சணை கொடுக்க முடியாத நிலைக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் சரசு தான் உழைத்து பொருளீட்டிய பின் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என துணிந்து வேலைக்குப் புறப்படும் புதுமைப் பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

    “கைம்மாறு” சிறுகதையில் குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட கிழவி பெருமாத்தா அடிக்கடி கணவனோடு ஏற்படும் சிறுசிறு சண்டைகளிலும் அவனிடம் அடிபட்டாலும் கணவனை விட்டுக்கொடுக்காது வாழ்கிறாள். மளிகை கடை அண்ணாச்சிக்கு முதன்முதலாக கடைவைக்க இடம்பிடித்துக் கொடுத்துதவினாள். அவள் கைராசி மளமளவென அண்ணாச்சி வளர்ந்துவிடுகிறார். அவா் கடையை கூட்டி வாருவது, கோலம் போடுவது கடைப்பொருட்களை முறத்தில் புடைத்து சுத்தம் செய்து தருவது, அவா் வீட்டு சுபநிகழ்வுகளில் பொறுப்பாக பொருட்களை பாதுகாப்பது என எல்லாவற்றையும் மிக்க நேர்மையுடனும் அர்பணிப்புடனும் செய்கிறாள்.அவள் கணவனால் அடிபட்டு உடல்நலமின்றி வேலைக்கு வராததை அறிந்து அண்ணாச்சி மருத்துவ உதவி பண உதவி செய்து கைம்மாறு செய்கிறார்.

    பெருமாத்தா போன்ற பெண்கள் தனது கணவன்மார்கள் எவ்வளவு துன்புறுத்தினாலும் தன் பொறுமையெனும் பெருமை குணத்தால் குடும்ப வாழ்வில் நிலைத்து வெற்றிபெறுபதை

    “எவ்வளவுதான் இன்னமும் வம்பு பன்னிக்கிட்டு கிழவன் முனியன் திரிஞ்சாலும் மன்னிக்கிற பக்குவந்தா பெருமாத்தா கிழவியோட மனசு”8 என்று அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியா்.

    வைராக்கியத்தோடு சாதித்துக்காட்டியவள்

    “அங்கீகாரம்” சிறுகதையில் மலர் தன் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி தன் மாமனான கணேசனை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள். தன் வாழ்வுக்கு அடையாளமாக பழனியை பெறுகிறாள்.

    மாமன் தன்னோடு சண்டைப்போட்டுக் கொண்டு ஊரைவிட்டும் மலரை கைவிட்டும் சென்றுவிட ஊரார் சொந்தம் பந்தம் என அத்தனையும் கைவிட தன் உழைப்பொன்றே துணையாய் வாழ்கிறாள்.சித்தாள் வேலை, பாத்திரம் கழுவும் வேலை, மண்டபங்களில் இலை எடுக்கும் வேலை, பள்ளி ஆயா வேலை என எத்தனையோ வேலைகளை செய்து தானும் பிழைத்து மகன் பழனியையும் காப்பாற்றி வருகிறாள்.

    தள்ளுவண்டியில் இட்லிக்கடை போட்டவள் தண்டல்காரனிடம் வட்டிக்கு பணம் வாங்கி ரோட்டோரமாக பழனி ஓட்டல் நடத்துகிறாள். அதற்கும் மாநகராட்சி மூலம் சாலை ஆக்கிரமிப்பு என சோதனை வந்து காலி செய்கின்றனர். எனினும் பதிமூன்று ஆண்டுகளாக வைராக்கியமாக அவள் கணவனுக்குச் சொந்தமான பூக்கார தெருவில் இருக்கும் காலி இடத்திற்குச் செல்லாதவள் தன் மகனுக்காக சென்று அங்கு குடிசைப்போட்டு கடை நடத்துகிறாள். மீண்டும் கலெக்டா் மாறிவிட்டதாகவும் ஓட்டல் நடத்திய பழைய இடத்திலேயே ஓட்டல் நடத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது என கதையை முடிக்கிறார் ஆசிரியா்.

    ஏழ்மையிலும் செம்மையாக வாழநினைத்தவள் கணவனால் கைக்குழந்தையோடு நிர்கதியாகவிடப்படுவதும் தன் உழைப்பால் முயற்சியால் பல்வேறு வேலைகளையும் செய்து முன்னேறுவதும் வாழ்வில் ஏற்படும் பல்வேறு தடைகளையும் தாண்டி முன்னேறியதை

    “எனக்கென்ன தலையெழுத்தா? அவன் ஒழுங்கா இருந்திருந்தா இப்படி எல்லாம்

    கேக்க வேண்டியதில்லை.

    அம்மா வீட்டு ஆதரவும் மாமியார் வீட்டு ஆதரவும் இல்லை. தனிக்குடித்தனம்தான் என்பொழப்பு.

    பதிமூணு வருஷமா தனியெ இருந்திருக்கன்னா சும்மாவா? எப்படி எல்லாம தப்பிச்சி வந்திருக்கேன் தெரியுமா?

    கணேசன் நடந்து வர்ற மாதிரியே இருக்கு அப்படியே உன் அப்பன உரிச்சி வச்சிருக்குறடா” என்று சொன்னதும் மலரு கண்கலங்கினாள்.கணேசன் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அங்கீகாரம் கெடச்சது போல இருந்தது.”9. என்று கணவனின் துணையின்றி தனியொருவளாக வாழ்ந்துகாட்டும் வைராக்கியமான பெண்ணைப் படைத்துக்காட்டியுள்ளார்.

    பழங்குடியினா் வாழ்வு

    தொல்குடியினரான பழங்குடியினா் வாழ்வு இருபத்தோராம் நூற்றாண்டிலும் விடியாமல் இருப்பதை தனது கதைகளில் விவரித்துள்ளார் செஞ்சிதமிழினியன். அவா்கள் அன்றாடங் காய்ச்சிகளாய் உணவுக்காய்  மட்டும் அலைய வேண்டியுள்ளது. கல்வி போன்ற உரிமைகளும் சரிவர வழங்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் சலுகைகள் ஆகியவை பெற சாதிசான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் இலஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால் கிடைக்காமல் இருப்பதால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வண்டுவின் மகன் மாரி பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத நிலையை விவரித்துள்ளார்.

    “ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளமைந்த பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூக நாவல் ஆக்குகிறான்”10 என்கிறார் கைலாசபதி.

    ‘சில்லாக்கோல்கள்’ கதையில் ஊர்த்தலைவரின் வீட்டில் பாம்பு புகுந்துவிட மீசைக்காரா் வண்டுவும் அவரது மகன் மாரியும் சென்று பாம்பை பிடித்து அவா்களை பேராபத்திலிருந்து காக்கின்றனா். அப்பேருதவிக்குப் பிறகு அவா்கள் கொடுக்கும் மரியாதையும் பொருளும் அவா்களை திகைக்க வைக்கிறது.அவா் வீட்டை முதன்முதலாக உள்ளேச் சென்று பார்க்கின்றனா். அவா்கள் அடகு வைத்த அண்டா உள்ளே இருப்பதை காண்கின்றனா்.

    “இத்தினி நாளா ஏண்டான்னு கூப்பிட்டாங்க. இன்னிக்கு வாப்பா வண்டுன்னு கூப்பிட்டதுல பழைய காயத்துக்கெல்லாம் மருந்து போட்ட மாதிரி இருந்தது”11

    என்று அவா்களின் வலிகளை பதிவு செய்கிறார்.

    “ஒண்டி தச்ச ஒத்த கதவு கதை” இக்கதையின் தொடர்ச்சியாக அமைந்து அவா்களின் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காத நிலையையும் எலி வளைகளை புகைப்போட்டு வளைகளில் இருக்கும் கழனி நெல்லை எடுத்தும் அதனையும் எங்க நிலத்து நெல்தானே என பறித்துக் கொள்ளும் கயவா்களின் நிலையையும் விளக்கியுள்ளார்.

    “லுங்கி முனையை அவிழ்த்து கொட்ட நெல்லோடு வண்டுவின் கண்ணீர் துளிகளும் சேர்ந்தே கூடைக்குள் விழுந்தன.” 12 என்று பழங்குடியினா்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறார்.

    விலங்குகள்

    கிராமத்தில் எல்லோர் வீடுகளிலும் பசு, எருது, பூனை, நாய்  என விலங்குகள் இருக்கும்.அவை அவா்களது வீடுகளில் ஓர் உறுப்பினராகவே வாழும்.குழந்தைகளில் பெண்களை வெறுப்பவா்கள் விலங்குளில் ஆணினத்தை வெறுப்பார்கள். பசுவும் ஆடும் பெண்ணாக இருப்பதால் குட்டி ஈனும் பால் தரும். இலாபம் தரும்.

    ஊருக்கு ஊர் தமட்டைகள் எனும் ஆண் இனமான எருதுகள் இனவிருத்திக்குப் பயன்படும்.

    இன்று அவை இல்லாத காரணத்தாலே செயற்கை முறையில் ஊசிகள் போட்டு கருவுற செய்ய வேண்டியுள்ளது. இதனால் நாட்டுவகை மாடுகள் கிடைப்பது அரிதாகிறது.

    “ஊராகாலி” சிறுகதையில் தன் இஷ்டப்படி சுற்றித்திரிந்து மேய்ந்து தண்ணீர் குடித்துவாழும் தமட்டை ஊரார்க்கு பயிரை மேய்தல் கொட்டகை மாடுகளை பாய்தல் போன்ற பெருந்தொல்லைகளை கொடுக்கிறது.

    “அது பொலியெருது. அதுக்கு கட்டுதலையே கெடையாது. யார் வீட்டு தொட்டியிலயும் தண்ணிக் குடிக்கும். அது மேய்ஞ்சா வெள்ளாம அதிகமா வெலையுமுன்னு நம்புவாங்க”13

    சில இளைஞா்கள் கூடி அதனை பிடித்து மூங்கணாங்கயிறு குத்தி பட்டியில் அடைப்பதும் இறுதியில் அது பூம்பூம் மாட்டுக்காரனிடம் தலையாட்டிக் கொண்டிருக்கும் சூழலையும் விவரிக்கிறார்.

    “டைகர் இருந்த சில நாட்கள்” கதையில் மகள் ராஜியின் விருப்பத்திற்காக நாய்க் குட்டி வாங்கி வளா்கிறார்கள். அதற்கு  டைகர் என பெயரிட்டு கழுத்துச் சங்கிலி பால் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனா். அது ஒரு நாள் தங்கை மகன் கார்த்தியை அது கடித்துவைக்க அதனை தூரத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகின்றனா். கிராமங்களில் ஒரு உறவாகவே இருக்கும் நாய் நகரங்களில் தேவையற்ற தொல்லையாவதை விளக்கிக்காட்டுகிறார் ஆசிரியா்.

    “வெத்தல பாக்கு பையி” கதையில் தன் பையில் வைத்திருந்த ஒற்றை ஐம்பது ௹பாயை நடத்துநரிடம் கொடுக்கும் காற்றில் பறக்கவிட்டு நிர்தாட்சண்யமாக நடுத்தெருவில் இறக்கிவிடப்படும் மூதாட்டியின் நிலையை விளக்கியுள்ளார்.

    தன் முந்திரிக்கொட்டை அறிவினால் கோபப்பட்டு தன்னை அடித்துவிட்ட ஆசிரியைக்கு முருங்கைக்காயை கொண்டு வந்து கொடுக்கும் சிறுமியின் மூலம் ஆசிரியா் மாணவா் உறவின் பெருமையை “உன்னத உறவுகள்” கதை மூலம் விளக்கியுள்ளார்.

    முடிபுகள்

    1.இன்றைய நாகரிக வளர்ச்சியினால் கிராமமும் விவசாயமும் அழிந்து வருவதையும் தொழிற்சாலைகளும் நகரமயமாதலினால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும் மாறி வருவதன் வேதனையை வெளிப்படுத்துகிறார்.

    2.விதைநெல் தாத்தா, ராமசாமிக்கவுண்டா், ஈச்சூா் நாமக்கார தாத்தா போன்ற பெரியோர்கள் கிராமியமும் விவசாயமும் நெறிப்பட்ட வாழ்வும் அருகி வருவதை எண்ணி வருந்துவதாகப் படைத்து அவா்களின் ஆதங்கத்தின் வழி தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    3. பழங்குடியினா் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை நிலை ஆகியவற்றில் முன்னேற்றம் பெற்று வாழ்வில் உயர வேண்டும் என விழைகிறார்.

    4. பெண்களில் சரசு, பெருமாத்தா, மலர் போன்றோர் ஆண்வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டாலும் தங்களது விடாமுயற்சியாலும் உழைப்பாலும் சாதித்துக் காட்டுவதை படைத்து பெண்கள் எந்த சூழலிலும் நெருக்கடியிலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு உழைத்து முன்னேற வேண்டும் என்று விழைகிறார்.

    5. பச்சைத்துண்டுக்காரா், வெள்ளை வேட்டி பலராம நாயுடு போன்ற பெரியோர்கள் உறவுகளால் கைவிடப்பட்டாலும் ஏமாற்றப்பட்டாலும் உண்மையும் உழைப்பும் கொண்டு வயதான காலத்திலும் தன் சொந்தக்காலில் நின்று வாழ்வதை உணர்த்தி இன்றைய இளைஞர்களில் சிலர் தற்காலிமாக ஏற்படும் தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நெறி தவறி தீய வாழ்வையும் குறுக்கு வழிகளையும் பின்பற்றி வாழக்கூடாது. நெருக்கடியான நேரங்களிலும் உழைத்து வாழவேண்டும் என வலியுறுத்துகிறார்.

    6. தாம் வாழ்ந்த கிராமத்தையும் சந்தித்த மனிதர்களையும் நன்கு அனுபவித்து உள்வாங்கி இருப்பதால் அவா்களது உணர்வுகளையும் வாழ்வியலையும் குணாதிசயங்களையும் முரண்களையும் எளிதாக கதைகளாக்கி தந்து படிக்கும் வாசகர் மனங்களை செம்மையுறுத்தியுள்ளார் செஞ்சிதமிழினியன் என்பது தெளிவாகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. அகிலன்- கதைக்கலை ப.23 பொற்கொடி வெளியீடு சென்னை-1987
    2. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-பொன்னேரு-ப.18- விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    3. இராமலிங்கம் மா.-இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.63 தமிழ் புத்தகாலயம்- சென்னை-1972.
    4. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-செத்துப்போன பூமி ப.32 விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    5. மேற்கூறிய நூல்-இரக்கம் ப.73
    6. பெரியார் ஈ.வெ.ரா பெண் ஏன் அடிமையானாள் ப.24- பெரியார் சுயமரியாதை பிரசுர நிறுவனம்-சென்னை-21 ஆம் பதிப்பு-2001.
    7. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-மாற்றம் ப.103- விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    8. மேற்கூறிய நூல்-கைம்மாறு ப.120.
    9. மேற்கூறிய நூல்-அங்கீகாரம் பக்கங்கள் 37-39-41.
    10. கைலாசபதி.க தமிழ் நாவல் இலக்கியம் ப.224- குமரன் பப்ளிஷர்ஸ்- சென்னை-1999.
    11. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-சில்லாக்கோல்கள் ப.61 விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.

        12 மேற்கூறிய நூல்-ஒண்டி தச்ச ஒத்த கதவு ப.96

    1. மேற்கூறிய நூல்- ஊராகாலி- பக்கங்கள் 45-46.

    ஆய்வறிஞர் கருத்துரை 

    கட்டுரையாளர் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முழுமையாக உள்வாங்கியுள்ளார். நகர வளர்ச்சி காரணமாக விளைநிலங்கள் வீணாக்கப்படும் சூழலையும் விவசாயம் சிறுக சிறுக அழிந்து வரும் சூழலையும் இக் கதைகள் மூலமாக சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். இன்றைய நவீன உலகமும் கிராம வாழ்க்கையும் எண்ணெயும் தண்ணியும் கலந்ததுபோல ஒட்டாமல் இணைந்திருப்பதும் மனிதர்கள் போலிமையான உறவு நிலையே தேவையானது என்ற வாழ்க்கைப் போக்கும் இன்றைய மனிதனைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ளதை இக்கட்டுரை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது. இன்றைய காலத்தின் இருவேறு உலகங்களை இதன்மூலம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடிகிறது. கதைகளை விளக்கமுறையில் எடுத்துக்கூறுவதே பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது. சூழலியல் மாற்றம் (Climate change) சார்ந்த ஆய்வுத் தளத்திற்குப் பல கதைகளைக் கொண்டுசெல்ல முடியும். எனவே, இதை இலக்கியக் கட்டுரையாக வெளியிடலாம்.

     

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 25

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 25

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமக் கோட்பாடுகளில் மரபின் தாக்கம்

    முன்னுரை

    ஒரு பொருளுக்குப் பல பொருட்களையும் ஒரு வினைக்குப் பலவினைகளையும் ஒரு பண்புக்குப் பல பண்புகளையும் ஒரு பயனுக்குப் பல பயன்களையும் உவமிப்பது உவமத்தின் தொடக்க நிலை. ‘நிலை’ என்றால் படைப்பாளனின் சிந்தனைப் பெருக்கும் அழகியல் உணர்ச்சியின் விரிவும் எனக் கருத வேண்டும். ‘தாமரைபோன்ற முகம்’ என்பது வளர்ந்து ‘தாமரையோ? செவ்வந்தியோ? நிலவோ?’ என்றெல்லாம் எழுதினார்கள். இவ்வாறு எழுதுவது ஏனைய உவமங்களுக்கும் பொருந்தும். இது பற்றிச் சென்ற கட்டுரைகளில் ஆராயப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வேறு இரண்டு நிலைகளும் காணப்படுகின்றன. ஒன்று ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து உவமமாக்குவது. இரண்டு கருத்து, கற்பனை, நிகழ்வு இவற்றின் மாறுபடுகளுக்கேற்ப ஒரு பொருளின் நிகழ்வை அதாவது எழுவாயின் வினையை இடம் மாற்றி உவமித்துக் காட்டுவது. இவை பற்றிய சில கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

    அசலும் நகலும்

    சில நேர்வுகளில் ஆர்வக் கோளாறு காரணமாக ஏடு கற்கும் சிலர் தாமே சில பாடல்களை எழுதி அதாவது மூலநூல் ஆசிரியர் நடையிலேயே எழுதி அவற்றையும் சுவடிகளில் இணைத்துவிடுவர். இது காலங்காலமாக நடந்துவரும் தமிழ்த்திருத்தொண்டு. இராவணன் முதல்நாள் போரில் தோல்வியுற்று வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்க’ நிலையைக் கம்பன் மிகச்சிறப்பாகப் பல பாடல்களில் பாடியிருக்கிறான். ஒரு பாடலில் சீதை சிரிப்பாளே என்று ‘நாணத்தால் சாம்புகின்றான்’ என்றும் கம்பர் எழுதுகிறார். இதுபோன்ற சூழல்களில் மனம் பறிகொடுத்த ஒருவர்,

    “விடங்கொண்ட  மீனைப் போலும்
    வெந்தழல் மெழுகு போலும்
    படங்கொண்ட பாந்தள் வாயில்
    பற்றிய தேரை போலும்
    திடங்கொண்ட இராம பாணம்
    செருக்களத் துற்ற போது
    கடன் கொண்டான் நெஞ்சம் போலும்
    கலங்கினான் இலங்கை வேந்தன்”

    என்று இவராகவே ஒரு பாடலை எழுதி அதனையும் கம்பராமாயணத்தில் சேர்க்க, நம்முடைய சான்றோர்களும் அதனைக் கம்பன் பாட்டே என எண்ணியும் சொல்லியும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது இங்கே சொல்ல வருவது படித்தவர் எழுதிய அந்தப் பாட்டில் கூட இராவணனின் துன்பத்திற்கு ஒரே உவமம் சொல்லப்படாமல் ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைப் பந்தி வைப்பதைக் காணலாம். படைப்பாளனுக்கு மட்டுமன்று படைப்பைப் படிப்பவனுக்கும் இத்தகைய உணர்வு வந்திருக்கிறது என்பதை நோக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலையில்தான் ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கண்டறியும் உவமச் சிறப்பைக் காணமுடிகிறது.

    கதிரவன் தோற்றமும் கவிஞன் உள்ளமும்

    பொருளையே உவமமாகச் சொல்லும் கவிதை மரபு தமிழில் இன்றும் தொடர்கிறது.  அத்தகைய உவமைகளில் மனிதநேய உணர்வுகளும் மானிட மதிப்புக்களும் அழகியல் வெளிப்பாடுகளும் கலந்தமைந்திருப்பது சுட்டுதற்குரியது. நிகழ்வு ஒன்று. அதற்கான காரணங்களைப் படைப்பாளன் நிரல்படுத்துகிறபோது கவிஞனின் அழகியல் உணர்வு, பன்முக நோக்கு, சமுதாயச் சிந்தனை, மனித நேயம் முதலிய அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. காலைக்கதிரவன் தோற்றத்தை முடியரசன் பாடுகிறார்.

    “இன்னலுறும் பிணியாளன் துயரம் தீர்க்க
    இனியமொழி வழங்கவரும் நண்பன் போலத்
    பன்னரிய பெருங்காதல் பிணிப்புண் டாங்கண்
    பைதலுறும் மாவேழன் நிலைமை காணத்
    துன்னுமிருள் செகுத்தெழுந்து கீழை வானில்
    சுடர்க்கதிரோன் முகங்காட்டி விரைந்து வந்தான்”.

    காப்பியத்தின் நாயகன் மாவேழன். அவனுக்கு உற்ற தோழர் பலரிருப்பினும் உயிர்த்தோழர் சிலர் களத்தில் தம் நண்பனுக்கு உற்ற துன்பத்தை அறிந்து கொள்ளத் துடித்து வருவார் போலக் கதிரவன் கீழ்த்திசையில் விரைந்து வந்ததாக உவமிக்கிறார். இதே கதிரவன் உதயத்திற்குத்,

    “தினவெடுத்த திண்டோளர்  தருக்கி நின்று
    செயும்போரை எதிர்நின்று காண்பான் போல
    முனமடுத்த இருளென்னும் திரையை நீக்கி
    முகங்காட்டிச் செங்கதிரோன் எழுந்து வந்தான்”

    களக்காட்சியை நேரில் மற்றும் அருகில் காண்பதற்காகச் செங்கதிரோன் எழுந்து வந்தான் என்று பாடுகிறார்.

    “ஆயிழையின் மனத்தகத்தே அடக்கி வைத்த
    ஆர்வமெலாம் திரண்டுருண்டு வடிவு கொண்டு
    மாயிருநீர்க் கடற்பரப்பில் உருவுகாட்டி
    வருவதுபோல் செங்கதிரோன் கீழை வானில்
    ஞாயிறென முகங்காட்டித் தோன்றி வந்தான்”

    என்னும் வரிகளில் மனத்துள் அடக்கிவைத்த ஆர்வத்தையே உருண்டை வடிவத்தில் தேக்கிவைத்த கதிரவன் காலைப்பொழுதில் கீழ்த்திசையில் எழுந்து வந்ததாக எழுதுகிறார்.

    காலைக் கதிரவன் கீழ்க்கடலில் எழுகின்ற ஒரே காட்சியை நண்பன் போல வந்தான் என்றும், போர்க்களத்தை விருப்பத்துடன் காண்பவன் போல வந்தான் என்றும், ஆர்வமே உருக்கொண்டு வந்ததைப் போல் வந்தான் எனவும் பலபட உவமத்தால் விளக்குவதையும் அவ்வுவமங்களெல்லாம் நட்பு, வீரம், உணர்ச்சி  ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருப்பதையும் காணமுடிகிறது.

    மழையும் வைரமுத்தும்

    இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில்  இயற்கையைப் பாடுவதில் பாவேந்தருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் வைரமுத்து என்பது தரவுகளால் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். மழைத்துளியை வைரமுத்து அனுபவித்துப் பாடும் கவிநேர்த்தியை அவருடைய கவிதைகளில் பரக்கக் காணலாம். இங்கே மழையையும், அதன் துணைவினைகளையும் கவிதைகளில் உவமமாக்கும் அவருடைய தனித்திறன் ஆராயப்படுகிறது. போலிக்காதலுக்கு மயங்கிச் சீரழிந்த ஒரு பெண்ணின் புலம்பலில்,

    “மழையூறிய காகிதமானேன்”

    என்னும் உவமத்தை வைத்துக் காட்டுகிறார். மழை விழுந்து காகிதம் ஊறிவிடுமானால் சேதாரம் காகிதத்திற்கேயன்றி மழைக்கன்று. ஆணின் பசப்பலுக்குப் பெண்மை ஏமாறும் பொழுது அழிவு பெண்மைக்கன்றி ஆணுக்கன்று என்னும் உண்மையை விளக்குதற்குக் காகிதத்தை ஊறச் செய்யும் மழையின் துணைவினை ஈண்டு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம். இதனை ‘நீரூரிய காகிதம்’ என்னாது, மழையூறிய  காகிதம் எனக் கூறியது காகிதம் நீருக்குள் விழுந்தால் அது நீரூரிய காகிதம்! கிடந்த காகிதத்தின் மேல் மழைபெய்து நனைந்தழியுமானால் அது மழையூறிய காகிதம். கிடந்த காகிதம் என்பது பெண் என்பதைக் கற்பித்துக் கொண்டால் நுட்பம் புரியும்.

    மழைபெய்த களிமண் நிலமும் மனித மனமும்

    மழையூறிய காகிதத்தைத் தடமாறிய பெண்ணுக்கு உவமமாக்கிய வைரமுத்து அதே மழைபெய்த களிமண் நிலத்தை மனிதனின் மனத்துக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    “மழைக்கு வெளியே நின்று
    மழையை ரசியுங்கள்
    மழை பெய்த களிமண் நிலமாய்
    மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்”

    மழை பெய்து நனைத்த இடங்களாக காகிதத்தையும், களிமண்ணையும் கொண்டு, சீரழிந்த பெண்ணுக்கும் சிந்தையின் நெகிழ்ச்சிக்கும் உவமமாக்கிக் கொள்கிறார். மழைபெய்த ‘செம்புலத்தைச்’ சங்க இலக்கியம் காட்டுகிறது. மழைபெய்த களிமண் நிலத்தைப் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ காட்டுகிறது. முன்னது காதல் கலப்பிற்கு உவமை. பின்னது மாந்தர் மனம் இருக்க வேண்டிய நிலைக்கு உவமை. மழைபெய்து கலக்கும் மணலை விடச், செம்மண்ணை விட, வேறு மண்வகையை விட இளகி நெகிழ்ந்து கிடக்கும் நிலம் களிமண் என்பது உண்மை. இரக்கம், அன்பு, பாசம், நேசம் ஆகிய மாந்த உணர்வுகளின் குறியீடாகவும் இதைக் கொள்ளலாம். சிற்றூர் வாழ்க்கையில் திளைத்தவராதலின் மழைபெய்த களிமண் நிலம் கவிஞர்தம் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது என்பது,

    “மழைபெய்த களிமண் நிலமாய்
    புலவர்  மனம் பொசுக்கென்று நெகிழ்ந்தது”

    என இதே உவமையைத் தமது புதினமொன்றிலும் நெகிழ்ச்சிப் பொருண்மையை விளக்கக் கையாண்டிருப்பதால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும்,

    “கள்ளமனம் நமைவெற்றிக் கொள்வ தில்லை!
    கடல் நீரை மழைபெய்து நனைத்த தில்லை”

    என்னும் கவிதை வரிகளில் மழை பெய்தும் நனையாத இடமாகக் கடலைச் சுட்டிக்காட்டுகிறார்.  மழைநீரால் கடலை நனைக்க முடியாதது போலவே கள்ள மனத்தால் நல்ல மனத்தை வெற்றி கொள்ள இயலாது என்னும் வாழ்வுண்மையையும் விளக்கிக் காட்டுகிறார்.

    இடம் மாறி விழுந்த மழை!

    இதே மழைத்துளி நனவு கனவானதற்கும் உவமமாகப் பயன்பட்டிருப்பதை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது. தன் எழுத்துக்களையெல்லாம் அச்சில் ஏற்றி நூலாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என்னும் மகாகவி பாரதியின் கனவு,

    “கடலில் விழுந்த மழைத்துளியாய்க் காணாமல் போயின”

    என உவமத்தால் விளக்குவார் வைரமுத்து. கடலென்னும் பரந்துபட்ட நீர்நிலையையும், அதில் விழும் ஒரு சொட்டு மழைத்துளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உவமையின் ஆளுமை புரியக்கூடும். பாரதியின் ஆசை உருவம் இழந்து ஒன்றுமில்லாமல் போனதற்குத்தான் இந்த உவமை பயன்படுத்தப்படுகிறது. உருவமில்லாமல் போவதைச் சுட்டுதற்குப் பயன்பட்ட இந்த உவமத்தில் சிறிது மாற்றம் செய்து,

    “சுடுமணலில் கொட்டிய மழைத்துளி போல”

    எனப் பயன்படுத்தியிருப்பதையும் காணமுடிகிறது. சுடுமணலில் கொட்டிய மழைத்துளி, விரைந்து மண்ணுக்குள் வடிந்துவிடும். பாரதியின் வாழ்க்கையில் சுவை குறைந்து போய்விட்டதைக் குறிப்பதற்குச் சுடுமணலில் விழுந்த மழைத்துளியைப் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார் வைரமுத்து. புலப்படுத்தும் பொருண்மைகளுக்கேற்பக் ‘கடல்’, ‘சுடுமணல்’ என மழைத்துளி விழும் இடத்தையும் மாற்றிக் கொள்ளும் படைப்புத் திறன் குறிப்பிடத்தக்கது.

    சிதறும் மழைத்துளியால் சிதறும் சிந்தனைகள்

    தான் கண்ணீர் விட்ட சூழ்நிலைகளை நினைவுக்குக் கொண்டு வரும் வைரமுத்து உறவுகளால் தான் கைவிடப்பட்டதைச் சுட்டுகிறார்.

    “சிகரத்தில் விழுந்த மழையாய்ச்
    சிதறிய உறவுகளின்
    சேராத பாசத்தில்”

    தான் விட்ட கண்ணீரில் வங்கக்கடல் மூழ்கியதாகக் கற்பனை செய்கிறார். கடல், சுடுமணல் ஆகிய இரண்டோடு, சிகரமும் மழைத்துளி விழுந்த இடமாகக் கவிஞரால் கண்டறியப்படுகிறது. அழிதல், இறங்குதல், சிதறுதல் ஆகிய வினைகளோடு வழிதல் ஆகிய வினைக்கேற்பவும் மழைத்துளி உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் அரவிந்தருடைய வரலாறும் வ.வே.சு. அய்யரின் வரலாறும் கொஞ்சம் வேறுபட்டது. அவர்கள் விடுதலை வீரர்களாய்த் தோன்றி ஆன்மீகச் செல்வர்களாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். அப்பெருமக்களைப் பாரதி சந்தித்ததன் விளைவு அவர் உள்ளத்தில் உணர்ச்சித் தீ கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

    “கொதித்துக் கொதித்துக்
    கொப்புளித்த உணர்ச்சி
    வாழைமரத்தில் விழுந்த
    மழைத்துளியாய்
    வழியத் தொடங்கியது”

    கதிரவனின் வெப்பத்தைத் தனது கவிதைகளில் தேக்கிய பாரதியின் பிற்காலச் செயல்பாடுகள் வேகம் குறைந்ததற்கு அரவிந்தர், அய்யர் ஆகியோரைச் சந்தித்ததுதான் காரணம் என்னும் கருத்தை முன்மொழியும் வைரமுத்து, வாழைமரத்தில் விழுந்த மழைத்துளியை உவமமாக்குகிறார். மழைத்துளி மற்ற மரங்களில் விழுவதற்கும் வாழை மரத்தில் விழுவதற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. வாழை மரத்தில் எந்தப் பக்கம் நீர் விழுந்தாலும் தேங்கி நிற்பதற்கான வழியே கிடையாது. வழிந்து விடும். பாரதியின் உணர்ச்சி மளமளவென்று குறைந்து போனதற்கு மழைத்துளி விழுந்த இடமாக வாழை மரத்தைக் கண்டது நுட்பமான சிந்தனையாகும்.

    இயற்கையைப் பாடும்பொழுது சமுதாயச் சிந்தனைகளையும் சமுதாயச் சிந்தனைகளைப் பதிவு செய்கிறபோது இயற்கைக் கூறுகளையும் உவமமாக்குவது கவிஞர்களுக்கு இயல்பு. இயற்கையோடு கவிஞர்கள் கொண்டிருந்த உறவும், சமுதாயத்தோடு அவர்கள் கொண்டிருந்த நேசமும் இத்தகைய ஆற்றலை அவர்களுக்குத் தந்திருக்கக் கூடும். தமிழிலக்கிய வரலாற்றில் முதிர்கன்னிகளைப் பற்றிய சிந்தனை திருவள்ளுவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. கவிதைகள் தொடர்கின்றன. அவர்கள் கண்ணீர்தான் காயவில்லை. வைரமுத்து தமது கவிதையொன்றில் காலம் கடந்த முதிர்கன்னிகளின் திருமணத்தைக் கூறும் பொழுது,

    “கழிந்து போனது காலம்.
    இனி மறந்து மழை பெய்தாலும்
    அது
    வேரில் விழும் மழையா?
    விறகில் விழும் மழையா?”

    என உவமத்தால் வினவுகிறார். ‘வேர்’ என்பது பருவத்தில் மணம் செய்ய வேண்டிய கன்னி. ‘விறகு’ என்பது பருவந்தவறி மணம் செய்து கொள்ளும் கன்னி. மழை திருமணம். மழை வேரிலே விழுந்தால் பயிர் தழைக்கும். அதே மழை விறகிலே விழுந்தால் விறகும் தழைக்காது. மழையாலும் பயனில்லை. பருவம் கழிந்து நடைபெறும் திருமணத்தால் கன்னிக்கும் பயனில்லை., கணவனுக்கும் பயனில்லை. மழை பெய்கிற இடத்தைப் பசுமையான வேராகவும், காய்ந்த மரமாகவும் மாற்றித் தான் சொல்ல வந்த கருத்தைத் தெளிவுபடப் பதிவு செய்யும் திறன் நோக்கத்தக்கது.

    பாலைவனப் புல்லில் விழுந்த மழைத்துளி

    மழைத்துளி ஒன்றானாலும் அது விழுகின்ற இடங்களின் மாற்றங்களுக்கேற்பக் கவிதையின் பொருண்மைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்ந்து ஆராயப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மழைத்துளி பாலைவனத்துப் புல்லில் விழுவது அவரது உரைநடைப்பகுதியிலும் உவமமாக்கப்பட்டுள்ள திறன் ஒப்பீட்டுக்காகச் சுட்டப்படுகிறது.

    “ஒரு பாலைவனப் புல்லின் மீது எப்போதாவது ஒரு மழைத்துளி விழுந்தால் அந்தப் புல் எப்படிப் புளகிக்குமோ அந்தச் சிலிர்ப்பை என் ஜீவன் உணர்கிறது.”

    கவிதை எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி  மெய்யுணர்ச்சி எனவும் திரைப்படப் பாடல் எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி பொய்யுணர்ச்சி என்றும் முன்வைக்கும் கருத்தை நளினமாக மறுத்துரைக்கிறார் வைரமுத்து. திரைப்படப் பாடல்களிலும் கவிதைக் கூறுகள் அரிதாக அமைந்துவிடும். அந்த அருமையையே பாலைவனப் ‘புல்லின் மீது பெய்த மழைத்துளி’ என்று உவமிக்கிறார். இந்த உவமையால் திரைப்படங்கள் இலக்கியச் சோலைகள் அல்ல என்பதும்  திரைப்படப் பாடல்கள் அனைத்துமே இலக்கியத்தரம் வாய்ந்ததல்ல என்னும் உண்மையும், அவற்றுள்ளும் இலக்கியத் தரமுடைய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அரிதாக  அமைவதுண்டு என்பதும் விளக்கமாகின்றன.

    பாலைவனத்தில் விழுந்த மழைத்துளியைப் போலவே பாறையில் விழுந்த மழைத்துளியையும் கருத்து விளக்கத்திற்காகத் தனது வரலாற்றுப் புதினமொன்றில் உவமமாகப் பயன்படுத்தியிருப்பதையும் அறியமுடிகிறது. ‘வில்லோடு வா நிலவே’ என்னும் தமது வரலாற்றுப் புதினத்தில் ‘மாமூலர்’ என்னும் புலவர் பாத்திரம், மாறுவேடத்தில் வந்த சேரலாதனை அடையாளம் கண்டு வணங்கியபோது சேரனுடைய பதற்றத்தைப் பதிவு செய்யும் வைரமுத்து,

    “பாறையில் விழுந்து சிதறும் மழைத்துளியாய்ப்”

    பதறி எழுந்ததாகக் கூறுகிறார். பாலைவனத்து மழைத்துளி மணலின் உள்ளிறங்கப், பாறையில் விழும் மழைத்துளி சிதறும் என்னும் உண்மையை முன்னிறுத்தி, அதனைச் சேரலாதனின் பதற்றத்திற்கு உவமமாக்கியிருப்பது (கட்டுரை கவிதை உவமங்களைப் பற்றியதாக இருப்பினும்) ஒப்பீட்டுக்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    இவ்வாறு சுடுமணல், சிகரம், வாழைமரம், வேர், விறகு, கடல், பாலைவனம், பாறை என மழைத்துளி விழும் இடங்களின் அடிப்படையில் அதன் விளைவுகளையும் பயன்களையும் கருத்திற் கொண்டு கையாளப்படும் உவமைகள் பொருண்மைகளை ஆளும் திறத்தை அளவிடமுடிகிறது.

    நிறைவுரை

    ஒரே நிகழ்வுக்குப் பல உவமங்களை நிரல்படுத்தும் நிலையிலிருந்து ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து அவற்றை உவமமாக்குவதும், மழை முதலிய எழுவாய்களின் வினைபடு களத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சொல்லவரும் கருத்துக்களுக்குக் கூடுதல் தெளிவு தர முயல்வதும் தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகளின் நுண்ணியமாகும். திருவள்ளுவர் பிறர்க்குப் பயன்படும் செல்வம் உள்ளவனைப் ‘பழுமரம்’ என்றும் மக்கட் பண்பில்லாதவனை ‘மரம் போல்வர்’ என்றும் பாடியிருக்கிறார். இதனால் மேலே சுட்டிய உவமத்தின் பிற்காலப் பரிணாமம் மரபு சார்ந்ததே என்பது பெறப்படும்.

    (தொடரும்…)

    Share
  • கதையும் மொழிதலும் – 6 கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’

    கதையும் மொழிதலும் – 6 கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “அணுக்களின் ஆக்ரோஷ செயல்பாட்டில் வினையாற்றும் உடலங்களின் இயக்கமே காமம். ஏற்றுக்கொள்ளுதலுக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலும் நடைமுறைக்கும் ஒவ்வாமைக்கும் இடையிலும் ஏற்படுகின்ற உணர்வு இடைவெளியில் மொழி ஆளுமை செலுத்துகிறது. சொற்களால் கட்டமைக்கப்படும் எண்ணங்கள் ஆண் பெண் உறவு நிலையில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.”

    சி.சு.செல்லப்பா, க.நா.சு ஆகியோரால் பாராட்டப்பட்ட சிறுகதை எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். கு.ப.ரா.வும் ந.பிச்சமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். மணிக்கொடி கால எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தனித்தன்மையில் இயங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். சிறுகதை அமைப்பு அக்காலத்தில் முக்கிய இலக்கிய வடிவமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில் ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாக வைத்துக் கதைகள் எழுதி, வியப்பில் ஆழ்த்தியவர் கு.ப.ராஜகோபாலன்.

    மனித வாழ்க்கையில் அடிநாதமாக ஒலித்துக்கொண்டே இருப்பது காமமும் காதலும். இதன் விசையிலேயே அனைத்துச் சமூகப் பண்பாட்டு அரசியல் பொருளாதாரக் கூறுகள் பின்னப்படுகின்றன. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தருவது பெண் சார்ந்த இல்லற வாழ்க்கை. குடும்பம் என்ற நிறுவனம் மனிதர்களை ஒரு கட்டுக்கோப்பில் இயங்கச் செய்து சமூக வினையாற்றுகிறது. அந்தக் குடும்ப அமைப்பில் ஆண் பெண் சார்ந்த உறவுச் சிக்கல்கள் பேசாப் பொருளாக மனத்தின் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அந்த மறைபொருளை விவாதப் பொருளாகத் தனது கதைகள் மூலம் கொண்டு வந்தவர் கு.ப.ராஜகோபாலன்.

    இவரின் பெரும்பாலான கதைகள், இத்தகைய உள்ளடக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இவரின் கதைக் களமானது, ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்தச் சிக்கல், இரண்டு சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நமது சமூகத்தில் எவ்வாறு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இவரின் கதைகள் மூலமாக உணர முடிகிறது. கிராமம் சார்ந்த பழைய பண்பாட்டுச் சமூக விழுமியங்களுக்கும் இன்றைய அறிவொளி கால முற்போக்கு எண்ணங்களுக்கும் இடையில் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நடைமுறை யதார்த்தங்களை இவரின் பல கதைகள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய கதைகளில் ஒன்றே கனகாம்பரம்.

    புதிதாகத் திருமணமாகி வந்திருக்கக்கூடிய தம்பதிகள் வாழ்ந்து வரும் சூழலில், கணவன் படித்தவனாக இருக்கிறான். இன்றைய நவீன நாகரிகத் தன்மையுடன் தன் மனைவி நடந்துகொள்ள வேண்டும் என்று பல நடைமுறைகளை அவளுக்குக் கற்றுத் தருகிறான். கிராமத்தில் பண்ணையார் மகளாக வளர்ந்து வந்த அவளுக்கு நாகரிகச் சூழலைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குறிப்பாகத் தன் கணவனின் விருப்பத்திற்கு மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்  என்ற உணர்வு இருக்கிறது. எனவே கணவனின் நடத்தை அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க எண்ணுகிறாள். கணவன் படித்தவன் நகர வாழ்க்கையில் இருக்கக் கூடியவன் அவனைத் தேடி நண்பர்களும் வேண்டியவர்களும் வருவார்கள், நாம் நலம் விசாரித்து அவர்களிடம் முறையாகப் பேச வேண்டும், கிராமத்துப் பெண் போல கூச்சப்படக் கூடாது என்பன போன்ற வழிகாட்டல்களை, அறிவுரைகளை அவளின் மனது கணவனின் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் இருக்கவேண்டும் என்று கவனமாகச் செயல்படுகிறது.

    ஒருநாள் கணவரின் நண்பன், அவனைத் தேடி வீட்டிற்கு வந்துவிட்டான். அடுப்படியில் வேலையாக இருந்த இவள், நண்பரை வரவேற்று மிகவும் பழக்கப்பட்ட அறிமுகமான நபரைப் போல பேசுகிறாள். அது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவள் ‘வீட்டிற்குள் வாங்க’, ‘அவர் சற்று நேரத்தில் வந்துவிடுவார்’ என்றும் ‘வந்து உட்காருங்கள்’ என்றும் கூறுகிறாள். இது அவனுக்கு மேலும் வியப்பைத் தருகிறது. ‘எந்தத் தைரியத்தில் கணவன் இல்லாத நேரத்தில் தன்னை உள்ளே வந்து உட்காருங்கள்’ என்று கூறுகிறாள் எனத் தயங்கி பிறகு வருவதாகக் கூறிச் சென்று விடுகிறான். அவளுக்கு மனநிறைவு. கணவனின் நண்பரை நாகரிகமாக வரவேற்றோம், இதனைக் கேட்டால் கணவன் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி அடுப்படியில் விட்டு வந்த வேலையில் மும்முரமானாள்.

    கணவன் வந்ததும் நடந்தவற்றை விரிவாகச் சொன்னாள். அவன் யாராக இருக்கும் என்ற குழப்பம் அவனுக்கு. அதுமட்டுமல்ல, வந்தது யார் என்று தனக்குத் தெரியவில்லை. இந்த நிலையில் அவனை வீட்டிற்குள் அழைத்து உட்காரச் சொல்லி இருக்கிறாள் என்ற மன நெருடல் அவனை நிலைகுலைய செய்துவிட்டது. என்னதான் இருந்தாலும் என் நண்பனாகவே இருந்தாலும் வீட்டில் தான் இல்லாத போது வேறு ஒருவனை உள்ளே அழைப்பது அவனது மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. தனது செயல்பாடுகளைக் கேட்டு தன்னைப் பாராட்டுவார் என்று எண்ணிய அவளுக்குச் சற்று மனக்குறையாக இருந்தது. அவனும் நடந்தவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. கனகாம்பரப்பூ வைத்துக்கொண்டு அதனை நூலில் கட்டுவதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அவளிடம் ‘இதை தலையில் யார் சூட்டுவார்கள்?’ என்று கூறுகிறான்.

    அவளும் மற்றவர்கள் தலையில் கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டு வருகிறார்கள் என்று கூறுகிறாள். சினிமா நடிகைகள் கூட தலை முழுவதும் இதைத்தான் சூடிக்கொள்வதையும் சுட்டிக் காட்டினாள். பேச்சின் போக்கில் அவன் ‘முன்ன பின்ன தெரியாத நபர்களை, யாராவது வீட்டிற்குள் அழைப்பார்களா’ என்று நேற்று நடந்த நிகழ்வின் சிக்கலைக் கூறிவிட்டான். இப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது கணவன் முக மாறுபாட்டுக்கு இது தான் காரணம் என்று. தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இப்படி அவன் கூறியதில் அவளுக்கு மிகவும் மனவருத்தம். அவனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டு சென்றுவிட்டாள்.

    இவனின் நண்பன் பிறகு சந்தித்துக் கொள்ளும்போது, நண்பனின் மன உணர்வின் மூலமாக ஒரு சமூக இயக்கப் போக்கையே உளவியல் ரீதியாகப் பின்னிச் செல்கிறார் கதையாசிரியர். அவனைப் பார்க்கச் சென்று அவனது மனைவி தன்னிடம் கூறியதை எப்படிச் சொல்வது என்று அதனைச் சொன்னால் அவளுக்கு ஏதேனும் குடும்பச் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்றும் நண்பன் சிந்திக்கிறான். ஒருவேளை நடந்ததை அவள் இவனிடம் கூறியிருக்கலாம் என்றும் யோசிக்கிறான். பிறகு வேறு வழியில்லாமல் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அன்று வீட்டிற்கு வந்தது இவன் தான் என்றும் தன் மனைவி அவ்வாறு பேசியதும், மன நெருடலும், எப்படி இதனைப் புரிந்துகொள்வது என்ற சிக்கலும், ஆக இவர்களின் நட்பு தொடர்கிறது. அதேவேளையில் ஆசிரியர் கதையை நிறைவு செய்கிறார்.

    கதையின் பின்புலம் பிராமணக் குடும்பச் சூழ்நிலையில் பின்னப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டிற்குள் வந்தால் வீட்டின் உள்ளறையின் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துப் பேசும் நிலையில், அறிமுகம் இல்லாத ஒருவனை இவள் வீட்டிற்குள் வந்து உட்காரச் சொல்லும் துணிவும் மரபு மீறலும் இங்கே சமூகம் மாறிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக இருக்கிறது. என்றாலும் உபதேசங்கள் கூறினாலும் நடைமுறையில் அதனை மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது, இதனால் ஏற்படும் அவநம்பிக்கை, குடும்பச் சிக்கல், ஆண்-பெண் புரிதல் என்று நுண்மையான கூறுகளைச் சற்று மேலோட்டமாகத் தொட்டுச் செல்கிறார்.

    பெண் என்பவள் ஆண்களால் எப்படிப் பார்க்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே உற்று நோக்க வேண்டிய பண்பு நிலை. பெண் காமத்தின் உருவம், சதைகளின் வடிவம், இச்சையின் தூண்டுதல் என்று சமூகக் கற்பிதங்களும் பெண்வெளி மறுக்கப்பட்ட அல்லது தவிர்க்கப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் குடும்பச் சூழல் இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. இன்றைய காலப்போக்கில் இதனைப் படிக்கும் போது மிகச் சாதாரண ஒரு நிகழ்வாகத் தெரியும் நிலையில், இது நிகழும் தொடக்கக் காலங்களை எண்ணும்போது இக்கதை தனது முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறது.

    இக்கதையில் பெண்ணைப் பயிற்றுவிப்பு நிலையில் உருவாக்கி, இத்தகைய பயிற்றுவிப்பு, ஆண் மனத்தில் எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்ற கண்ணோட்டம் வெளிப்படுகிறது. கதை முழுவதும் அவளின் சொற்களால், பாதிக்கப்படும் ஆண்கள் என்ற போக்கில் மிகுந்து நிலவுகிறது. கணவன் மனைவியின் சிக்கல், மனச்சிக்கல், இதுபோன்று பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது என்று கதையாசிரியர் வலியுறுத்துவதாகப் படுகிறது. பிற்போக்குத்தனத்தின் சார்பாளராகக் கு.ப.ரா இங்கே வெளிப்படுகிறார். காலமாற்றத்தால் சிதைந்து அழிந்து வருகிற குடும்பப் பெண் அடிமைத்தனத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு ஆணின் மனச்சிக்கலை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார். பயிற்றுவிப்புகள் எப்போதும் சுயச் சிந்தனையை, சுதந்திரத் தன்மையை உருவாக்கும் என்பதற்கு இக்கதை சான்றாகும். அதே நேரத்தில் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது தவிக்கும் மனப்போக்கையும் இங்கே சிந்திக்க முடிகிறது. எளிமையான கதை. அதே வேளையில் முக்கியமான கதையும் கூட.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கரடி குளத்தில் ஒரு காளமேகம்!

    ‘சொல்லேர் உழவர்’ என்று ஒரு தொடர் திருக்குறளில் வரும். ‘சீரிய கூரிய தீஞ்சொல்’ என்பது கம்பராமாயணம். நீங்களும் நானும் பேசுகிறபோது இந்தச் சொற்கள் இப்படி அமையா. காரணம் நமக்குச் சீரிய சொல்லும் தெரியாது. கூரிய சொல்லாக்கவும் இயலாது. அதனால் அது தீஞ்சொல்லாகவும் அமையாது. சிந்தனைச் செல்வர்கள் செந்தமிழ் வித்தகர்கள் பயன்படுத்துகிறபோது அவர்கள் ஆற்றல் காரணமாகச் சாதாரண சொற்களும் கூர்மை பெறும். சிந்திக்க வைக்கும். திகைக்க வைக்கும். சில நேர்வுகளில் சிரிக்கவும் வைக்கும். கம்பதாசனும் கண்ணதாசனும் வாணிதாசனும் நாம் பேசுகிற தமிழைத்தான் பேசினார்கள் எழுதினார்கள். அவர்களுக்குத் தீஞ்சொல்லாக அமைகிறது. நமக்குத் தீய்ந்த சொல்லாகிவிடுகிறது. என்ன செய்வது? விதியை மாற்ற முடியுமா என்ன? அவ்வாறு திகைக்கவும் வியக்கவும் சிரிக்கவும் வைக்கின்ற சொல்லாடல்கள் அமைந்ததொரு இலக்கியத்தைச் ‘சிலேடை’ என்று வழங்கினார்கள். தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலம் வரை இவ்வாறான கவிதைக் கூறு இருந்ததற்கான இலக்கிய வரலாற்று ஆவணங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இந்த இலக்கிய வித்தையில் விருதுகள் பெற்ற சிலருள் ஒருவர் காளமேகம்.

    மரபிலக்கிய வடிவங்களில் சிலேடை

    மரபிலக்கிய வடிவங்களில் சிலேடைக்குத் தனியிடம் உண்டு. அந்த வடிவத்தால் பேரிலக்கியமோ காவியமோ அமையாவிடினும் தேநீர் அருந்தி மகிழ்வதுபோல ஒருவகையான தற்காலிக இன்பத்தைத் தருகின்ற வகையில் அதற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சிலேடை பெரும்பாலும் நேரிசை வெண்பாவில் அமைந்துவிடுவதாலும் வெண்பாவை மரபுக்கவிதை எனக் கருதிவிடும் மயக்கத்தாலும் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. ‘சிலேடை’ என்பது பெரும்பாலும் வெண்பா யாப்பினால் அமைந்த மரபுக்கவிதை. சிலேடை என்பது உள்ளடக்கம். வெண்பா என்பது உருவம். உருவமும் உள்ளடக்கமும் அத்வைதம் அடைந்தால்தான்  அது மரபுக்கவிதை. சரியா?

    விருத்தத்திலும் சிலேடை அமையலாம்.

    ஒரே பொருளுக்கான பல சொற்களையும் இருபொருட்களின் அதாவது இரண்டு எழுவாய்களின் வினைகளாக ஒரே வினைச்சொல்லையும் சாதுரியமாகக் கையாளும் கவிதைத் தொழில் நுட்பக்கலைக்குச் சிலேடை என்று பெயர். ‘சிலேடித்தல்’ என்னும் சொல்லுக்கு இருவகையாக நோக்குதல் என்பது தண்டியலங்கார உரைப்பகுதி.

    “இம்பர்வான் எல்லைரா மனையே பாடி
    என்கொணர்ந்தாய் பாணாநீ?’ என்றாள் பாணி!
    ‘வம்பதாம் களபம்’ என்றேன் ‘பூசும்’ என்றாள்!
    ‘மாதங்கம்’ என்றேன்யாம் ‘வாழ்ந்தேம்’ என்றாள்!
    ‘பம்புசீர் வேழமெ’ன்றேன் ‘தின்னும்’ என்றாள்!
    ‘பகடெ’ன்றேன் ‘உழும்’ என்றாள் பழனந்தன்னை!
    ‘கம்பமா’ என்றேன்’நற் களி’யாம் என்றாள்!
    ‘கைம்மா’ என்றேன் சும்மா கலங்கினாளே!”

    என்று ஒரு பாட்டு அந்தகக்கவி வீரராகவ முதலியார் எழுதியது. முற்றிலும் வேடிக்கை மிகுந்து காணப்படினும் தமிழின் மொழிவளம் சிறக்க நின்ற சிலேடைப் பாடல் இது. இது எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பில் அமைந்தது. வெண்பாவில்தான் சிலேடை அமையும் என்பதற்கு எதிரான கருத்தியல் கொண்டது. எந்தப் பாவிலும் இனத்திலும் அமையலாம். பாட்டில் சிலேடை இப்படி அமைகிறது.

    1. இராமன் என்னும் செல்வந்தனைப் பாடி யானையைப் பரிசாகப் பெற்று வந்தான் பாணன். ‘அவனைப் பாடி ‘என்ன கொண்டு வந்தாய்?’ என்று பாணன் மனைவி பாணினி வினவுகிறாள். அதற்குப் பாணன் ‘களபம்’ கொண்டு வந்தேன் என்கிறான். ‘களபம்’ என்பது சந்தனத்திற்கும் யானைக்குமான பொதுச்சொல். பாணினி சந்தனம் எனக் கருதி தனக்குப் பூசிவிடச் சொல்கிறாள்.
    2. பாணினிக்குத் தெளிவாகப் புரிதல் வேண்டி ‘மாதங்கம்’ என்றான் பாணன். ‘மாதங்கம்’ என்பது யானைக்கு மற்றொரு பெயர். பாணினி என்ன நினைத்துவிட்டாள்? மா தங்கம் எனப் பிரித்துத் தங்கக் குவியல் என எண்ணி ‘வாழ்க்கைக்குப் போதும்’ என்கிறாள்.
    1. குழப்பத்தைத் தீர்க்க எண்ணிய பாணன் தொடர்ந்து ‘பம்புசீர் வேழம்’ என்றான். ‘வேழம்’ என்றால் யானைக்கும் கரும்புக்கும் பொதுச்சொல். பாணினி அதனைக் ‘கரும்பு’ எனக் கருதி ‘தின்னலாம்’ என்கிறாள்.
    1. தன் முயற்சியில் சளைக்காத பாணன் மீண்டும் தான் பெற்று வந்தது ‘பகடு’ என்றான். பகடு என்பது யானைக்கும் உழுமாட்டிற்கும் பொதுச்சொல். பாணினி அதனை ‘உழுமாடு’ எனக் கருதிப் ‘பழனத்தை உழலாம்’ என்றாள்.
    1. எப்படியாவது பாணினிக்குப் புரியவைத்துவிட வேண்டும் என எண்ணிய பாணன் ‘கம்பமா’ என்றான். ‘கம்பம்’ என்றால் கட்டுத்தறி. ‘கட்டுத்தறியில் கட்டக்கூடிய விலங்காகிய யானை’ என்று அவன் கூறினான். அப்போதும் இவள் ‘கம்பு மாவு’ எனக் கருதி அதனைக் கொண்டு களிசெய்து உண்ணலாம் என்றாள்.
    1. இறுதியாகப் பாணன் சொன்னான் தான் பெற்றுவந்தது ‘கைம்மா’ என்றான். ‘கைம்மா’ என்பதற்கு ஒரு பொருள்தான் உண்டு. ‘கையை உடைய விலங்கு’ யானை மட்டுமே. அப்போதுதான் தன்னுடைய மொழியறிவின் பற்றாக்குறையை எண்ணி வருந்தினாளாம் பாணினி.

    இது ஒரு கற்பனை. சொற்களால் நெய்து காட்டப்படும் கவிதைப் பட்டு. கிட்டுவது தற்காலிக இன்பமாக இருந்தாலும் தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தைக் கவித்துவம் குறையாமல் வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணரமுடியும். இதில் களபம் என்பதைச் சந்தனத்திற்கும் ஆக்கியது செம்மொழிச் சிலேடை. மாதங்கம் என்பதை மா தங்கம் எனப் பிரித்து நிறைய தங்கம் எனப் பொருள் கொண்டது பிரிமொழிச் சிலேடை. பிரிக்காமலேயே இருபொருள் தருமானால் அது செம்மொழிச் சிலேடை. பிரித்து இருபொருள் தருமானால் அது பிரிமொழிச் சிலேடை. சரியா?

    விடுகதை வேறு! சிலேடை வேறு!

    விடுகதைக்கும் சிலேடைக்கும் வேறுபாடு தெரியாது மயங்குவதும் உண்டு. விடுகதையை ஆங்கிலத்தில் ‘RIDDLE’ என்பர். ஒன்றுக்கான பல பரிமாணங்களை அல்லது அடையாளங்களை நிரல்படச் சொல்லி இறுதியில் விடையை வரவழைப்பது விடுகதை அல்லது புதிர். ஒரே பொருளை அல்லது அப்பொருளுக்கான செயலை இருபொருட்களில் ஒரே வகையாக நோக்கி எழுதுவது சிலேடை.

    விடுகதை அல்லது புதிர்

    அந்தக் கால மன்னன் ஒருவனுக்கு உள்ளங்காலில் அரிப்பு வந்ததாம். மருந்து காணாமல் திரிந்த மன்னனுக்கு மருந்தறிந்த புலவர் மருந்தின் பெயரைச் சொன்னாராம். தற்கால மருத்துவர் எழுதும் குறிப்புச் சீட்டையாவது முயன்றால் புரிந்து கொள்ளலாம். அந்த மருந்துப் பெயரோ மன்னனுக்கும் புரியவில்லை. மற்றவருக்கும் புரியவில்லை. காரணம் அது முன்பே சொல்லியதுபோலச் ‘சொல்லேர் மருத்துவர்’ சொல்லிய மருந்து அது. அவர் என்ன சொன்னார்?

    “பத்துரத மன்னவனின்
    புத்திரனின் மித்திரனின்
    சத்துருவின் பத்தினியின்
    காலை வாங்கித் தேய்!”

    எதுகை இருந்தாலே கவிதை என்பது அந்த மருத்துவருக்கும் தெரிந்திருக்கிறது. தமிழ்க்கவிதைகளின் கேட்டின் தொடக்கக்காலம் அதுவாக இருக்கலாமோ? எல்லாரும் குழம்பினார்கள். மருந்தின் பெயரும் தெரியவில்லை. இறுதியில் பாட்டை எழுதியவனே உரை சொல்வது போல, அந்த மருத்துவரே மருந்தை விளக்கினார்.

    “தசம் என்றால் வடமொழியில் பத்து. பத்து ரதம் இருந்ததால் அயோத்தி மன்னனுக்குத் ‘தசரதன்’ என்று பெயர். ‘புத்திரன்’ என்றால் மகன். தசரதனுக்கு மகன் இராமன். மித்திரன் என்றால் நண்பன்  இராமனுக்குப் நண்பன் சுக்ரீவன். சத்துரு என்றால் பகை. சுக்ரீவனுக்குப் பகையானவன் வாலி. சத்துருவாகிய வாலியின் பத்தினி தாரை. தாரையை என்ன செய்வது? காலை வாங்க வேண்டுமாம்? இன்றைய சட்டம் இடங்கொடுக்குமா? ஆனால் அன்றைக்குக் காலை எடுத்தார்கள். விளைவு? ‘தாரை’ தரையானாள்!  காலை எடு! தேய்! அரிப்பு அடங்கும். தரையில் அடியை நன்கு தேய்த்தால் அரிப்பு அடங்கும்”

    இதுதான் மருத்துவப் புலவர் சொன்னது. இதனை ஆய்வாளர் பலரும் சிலேடைக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அது பொருந்தாது. இது புதிர்!

    பூரி பிடிக்காத ஜெகந்நாதன் உண்டா?

    அனந்தவர்மன் சோதங்கதேவன் என்னும் சோழமன்னனால் கட்டப்பட்டது தற்போதைய ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி செகந்நாதர் ஆலயம். இங்கே பெருமாள் மூலவர் அறிவியலுக்குப் புலப்படாத பல மர்மங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இந்தக் கோயில் கோபுர நிழலும் தஞ்சை பெரியகோயிலைப் போலவே மண்ணில் விழாது. கோயில் கொடி காற்றுக் எதிர்த்திசையில் பறக்கும். அந்தக் கோயிலில் வீற்றிருப்பவர் செகந்நாதர். அது  அமைந்திருக்கும் இடம் பூரி. ஒருமுறை வாகீச கலாநிதி ஒரு சொற்பொழிவுக்காக அங்கே சென்றிருந்தார். காலைச் சிற்றுண்டிக்காகப் பூரி செய்திருந்தார்கள். அவரைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் “ஐயா, தங்களுக்குப் பூரி பிடிக்குமா?” என்று வினவ, அடுத்த நொடியே கி.வா.ஜ. “செகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றாராம்.

    இதுதான் சிலேடை. இந்தச் சொல்லாடலில் ‘பூரி’ என்பது ஊரையும் உணவையும் குறிக்க ஜெகநாதன் என்பது கலைமகள் ஆசிரியரையும் திருக்கோயில் மூலவரையும் குறித்தது காண்க.  இந்தச் சிலேடையின் பயன்கள் வெகு குறைவுதான். அதனாலேயே இதனை எளிமையாகப் பாடிவிடலாம் என்பது அறியாமை. சொற்களஞ்சியப் பெருக்கமும் ஆழ்ந்த புலமையும் பாடல் புனைவதில் பேராற்றலும் வடிவத்தில் தெளிவும் நோக்கில் கூர்மையும் இருந்தாலேயொழிய இந்த இலக்கிய வித்தையில் அகரம் வரும். அடுத்த எழுத்து வராது.

    செருப்பைச் சிறப்பித்த வள்ளிமுத்து

    ‘கண்ணீர்ப்பூக்கள்’ என்னும் தமது கவிதை நூலில் கவிஞர் மேத்தா செருப்பை நேர்காணல் செய்திருப்பார். வள்ளிமுத்து செருப்பை நாயோடும் ஒப்பிடுகிறார். நிலவோடும் ஒப்பிடுகிறார். இரட்டைக்கிளவி என்னும் இலக்கணத்தோடும் ஒப்பிடுகிறார்.

    “சேர்ந்திருக்கும் சீரளவைக் கொள்ளும் அடியொற்றி
    ஊர்ந்து நடப்பின் ஒலிக்குறிப்பும் உண்டாம்
    பிரித்தால் பொருள்தராத பாதணியைப் பேசு
    இரட்டைக் கிளவிதான் என்று”

    செருப்பு இணையானது. இரட்டைக் கிளவி இரட்டையாகவே வரும். அடுக்குத் தொடர்போல மூன்றாக நான்காக அமையாது. குறுகுறு மொறுமொறு என்பனபோல அளவோடு அமையும். இணை செருப்புக்கள் ஒரே அளவாகவே அமையும். இரட்டைக் கிளவி செய்யுளடிக்குரியது. செருப்பு பாதத்திற்குரியது. இரட்டைக்கிளவி குறிப்புப் பொருளைத் தரும். நடக்கிறபோது செருப்பு ‘கீரீச்’ ஒலி எழுப்புவது உண்டு. இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் தராது. ஒற்றைச் செருப்பை வைத்து ஒன்றும் செய்ய இயலாது.

    இந்தப் பாடலில் செருப்பின் இணை, இணையளவு, இருசொல்லாகவே வருதல், ஒலியெழுப்புதல், ஒற்றைச் செருப்பால் பயனின்மை ஆகியவை நோக்கப்பட்டிருக்கின்றன. இரட்டைக் கிளவியோடு ஒப்பிட்ட கவிஞர், அடுத்து செருப்பை முழுமதியோடு ஒப்பிடுகிறார்.

    “கோல உடல்தேயும் கூடவரும் கால்நடக்க
    நீலகண்டன் சென்னியிலும்  நின்றதுண்டாம் — நாளும்
    கறைபடியும் நீர்மிதக்கும் காணவெளி நிற்கும்
    நிறைநிலவும் காலணியும் நேர்”

    செருப்பின் அழகு தேய்வதனால் குறையும் முழுநிலாவிலிருந்து தேய்பிறை தொடங்கும். செருப்போடு நாம் நடப்போம். நாம் நடக்கும்போது நிலவும் கூடவருவதுபோல் தோன்றும். ‘பிறைசூடீ’ என்று சிவனுக்குப் பெயர். கண்ணிடந்தப்ப கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் செருப்பணிந்த காலை வைத்தார். நிலவில் முயலுண்டு. செருப்பில் கறையுண்டு. நீர்நிலைகளில் நிலவு தோன்றும். காதலர்கள் அதனைக் கையில் பிடித்து விளையாடுவார்கள். செருப்பு நீரில் மூழ்காது. மிதக்கும். செருப்பு இல்லத்தின் வெளியே கிடக்கும். நிலவும் வான் வெளியில் திரியும்.

    இந்தப் பாட்டில் செருப்பு தேய்தல், அடியொடு நடத்தல், கண்ணப்பன் செருப்பு, கறையும் அழுக்கும் படிதல், தோலிலே ஆனதால் நீரிலே மிதத்தல், வீட்டுக்கு வெளியில் ஆதரவின்றிக் கிடத்தல் என்பனவற்றைக் கவிஞர் நோக்கியிருக்கிறார். தொடர்ந்து நாயோடு செருப்பினை ஒப்பிட்டு இப்படி எழுதுகிறார்.

    “கட்டிவைத்த வாரணியும் காப்பவர் தாள்பணியும்
    எட்டுமட்டும் ஊர்சுற்றி வீடேகும் – ஒட்டி
    உறவாடார் கால்கடிக்கும், ஒப்பென்றே சொன்னேன்
    சிறப்புடன் நாயும் செருப்பு”

    செருப்பில் வார் உண்டு. நாய் கழுத்தில் வார் அணியும். அணிந்தவர்  தாளில் அடங்கிக் கிடக்கும். புரப்பவர் கண்டால் .வாலைச்சுருட்டிப் படுத்துக் கொள்ளும். செருப்பு, கால் செல்லும் வழியெல்லாம் சென்று வீடு திரும்பும். நாயும் ஊரெல்லாம் சுற்றி வீடு திரும்பும். புதுசெருப்பு கடிக்கும். அறியாதாரை நாய் கடிக்கும்.”

    கூந்தலைப் பாடிய கவிஞர்

    தமிழிலக்கியத்தில் நான் அறிந்தவரை ‘‘மயிர்நீப்பின்’ என்ற குறட்பாவிலும் ‘குஞ்சியழகும்’ எனத் தொடங்கும் நாலடியார் பாடலிலுந்தான் ஆண்களுக்கான தலைமயிர் பாடுபொருளாகியிருக்கிறது. அதனைக் கூடப் பால்பிரித்துப் பார்க்கக் கூடாது என்பர். அதனை ஏற்றால், எல்லா இடங்களிலும் தோகையரின் கூந்தலே பாடுபொருளாகியிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். கூந்தலுக்கு ‘ஐம்பால்’ என்பது  இலக்கிய வழக்கு. முடி, கொண்டை, குழல், பணிச்சை, சுருள் என ஐந்துவகையாக அள்ளி முடிவதால் அதற்கு அத்தனைப் பெயர். இன்னொரு வகையாகவும் கவிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். கருமை, மென்மை, திரட்சி, நீளம், நெளிவு என்னும் ஐந்து பண்புகள் இருந்ததால் ஐம்பால் என்றும் அழைத்தார்கள் என்பாரும் உண்டு. எது எப்படியாயினும் இந்த அனுமானங்கள் எல்லாம் தற்காலத்தில் காட்டலாகாப் பொருள்! கழிந்ததற்கு இரங்கலே!.

    கூந்தலும் சிலந்தியும்

    இந்தக் கூந்தலைச் சிலந்தியோடும் முல்லையோடும் ஒப்பிடுகிறார் கவிஞர்.

    “நேருச்சி மேலெடுக்கும் நீள் பின்னல் கொள்வதுண்டாம்!
    சீரெழிலால் பூச்சிக்கும் நூல் சேர்க்கும்! தேர்ந்திடுவீர்!
    காலெட்டும் கண்வளர்ப்பார் ஒட்டடையும் வன்சிலந்தி
    கோலப்பெண் கூந்தலொப்பாய்க் கொண்டு”

    என்னும் பாட்டில் சிலந்தியோடு ஒப்பிடுவதைக் காணலாம். கூந்தலில் உச்சியில் வகிடு எடுப்பர். சிலந்தி வீட்டின் உச்சியில் வலை பின்னும். பின்னல் ஜடை உண்டு. சிலந்தி வலையில் பின்னல்கள் உண்டு. நூலால் கட்டப்பட்ட பூக்களைக் கூந்தலில் சூடுவர். சிலந்தி வலையில் பூச்சிகள் சிக்கிக் கொள்ளும். கூந்தல் அடிப்பாதம் வரை நீளும். எட்டுக்கால்கள் உண்டு சிலந்திக்கு! கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடையும். சிலந்திவலையால் ஒட்டடை பெருகும். இப்போது அந்தக் கூந்தலை முல்லையோடு ஒப்பிடுகிறார்.

    கூந்தலும் முல்லையும்

    “வெட்ட முளைத்தலால் மொட்டை எடுத்தலால்
    கட்டி முடித்தலால் கொட்டி உதிர்தலால்
    பின்னிப் படர்தலால் பெண்கூந்தல் முல்லையுடன்
    ஒன்றெனவே ஊரோர்க்கு உணர்த்து”

    “கூந்தல் வெட்ட வெட்ட வளரும். முல்லைக்கொடி வெட்ட வெட்ட வளரும். கூந்தலை மொட்டையடிப்பர். மொட்டுக்களைக் கட்டி முடிப்பார்கள். கூந்தலைக் கட்டி முடிப்பார்கள். முல்லைச் சரத்தைக் கட்டி முடிப்பார்கள். கொய்யாத பூக்கள் உதிரும். கூந்தல் கொட்டுவதும் உண்டு. காற்றில் முல்லை படர்ந்தாடும். மகளிர் கூந்தல் காற்றில் ஆடும்.

    வள்ளிமுத்து நோக்கும் காளமேகத்தின் நோக்கும்

    கூந்தலை இருவேறு பொருள்களுடன் ஒப்பிடுகிறபோது கூந்தலைப் பற்றிய ஆழமான பார்வை கவிஞனுக்கு இருந்திருக்கிறது. வகிடு எடுத்தல், பின்னல் ஜடை, பூக்களைக் கூந்தலில் சூடுதல், அடிப்பாதம் வரை நீளும். கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடைதல், வெட்ட வளரும். கட்டி முடித்த கூந்தலை மொட்டையடித்தல், உதிர்தல், காற்றில் ஆடுதல் என்னும் கூந்தலின் அத்தனை அழகியல் பரிமாணங்களையும் கவிஞர் நோக்கியிருக்கிறார்.

    இவற்றுள் முதலில் காட்டிய மூன்று பாடல்களில் பாராட்டுக்குரியது. செருப்பின் அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை மூன்று பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பதுதான். பிந்தைய இரண்டு பாடல்களில் கூந்தலின் தோற்றம், வினை உள்ளிட்ட அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை வேறு இரண்டு பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார். இதுதான் மரபின் தாக்கம் அல்லது வெளிப்பாடு! கிளியை வானவில்லோடும் வெற்றிலையோடும் குதிரையைப் பாசியோடும் மத்தளத்தோடும் கோழியை மண்புழுவோடும் பெண்ணோடும் சிவனைத் தேங்காயோடும் விளக்குமாற்றோடும் ஆற்றோடும் சிலேடித்திருக்கிறார் வள்ளிமுத்து.

    காளமேகம் பாடிய பரத்தையும் பாம்பும்

    இது எப்படி மரபாகும்? காளமேகம் என்ன செய்திருக்கிறார் என்றால் வேசியின் பல்வேறு சாகசங்களை உற்று நோக்கித் தொகுத்து அவற்றைப் பனை, தென்னை மற்றும் வெற்றிலையோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார். அவற்றை விரித்தால் பெருகும். பரத்தையரைப் பல்வகைப் பொருளோடு ஒப்பிட்டுப் பாடியதைப் போலவே காளமேகம் பாம்பையும் பல்வகைப் பொருட்களோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

    “நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
    வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது”

    எனப் பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடை கண்டிருக்கிறார்.

    “ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
    மூடித் திறக்கில் முகம் காட்டும்  —  ஓடி மண்டை
    பற்றிற் பரபரெனும் பாரில் பிண்ணாக்கும் உண்டாம்”

    எனப் பாம்புக்கும் எள்ளிற்கும் பொருத்தம் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

    “பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்
    அரியுண்ணும் உப்புமேலாடும் – எரிகுணமாம்”

    என்னும் வரிகளில் பாம்பின் விடத்திற்கும் வாழைப்பழத்தின் சிறப்புக்கும் ஒப்புமைக் கண்டிருக்கிறார்.

    மேற்கண்ட மூன்று பாடற்பகுதிகளிலிருந்து பாம்பைப் பற்றிய காளமேகத்தின் உற்று நோக்கல் மிகத் தெளிவாகும். படைப்புக்கு அடிப்படையே உற்றுநோக்கலே. சாதாரண பொருளைச் சாதாரணமானவன் பார்ப்பதற்கும் படைப்பாளன் அதிலும் கவிஞன் பார்ப்பதற்குமான வேறுபாடே கவிதைக்கான மூலம். விடமிருக்கும், தோலுரிக்கும், சிவன் முடிமீது இருக்கும், பல்பட்டால் கடிபட்டவன் பிழைப்பதரிது, ஆடும், குடத்துக்குள் சென்றுவிடும், ஆடும் போது இரையும், குடத்தைத் திறந்தால் சீறி எழுந்து முகம் காட்டும்,  கடித்தால் மண்டை எரியும், பிளவுபட்ட நாக்கு, காற்றை உண்ணும், உப்பும், மேல்நோக்கியாடும் எனப் படமெடுக்கும் பாம்பைப் படம்பிடித்துக் காட்டுவது காளமேகத்திற்குக் கைவந்த கலை. அந்தக் கலை கரடி குளத்தாருக்கும் வந்திருக்கிறது என்பதுதான் கட்டுரையின் சாரம்!

    இந்தக் கட்டுரை திறனாய்வுக் கட்டுரையன்று, கவிதை அனுபவத்தின் களிப்பான வெளிப்பாடு. சிலேடை வேடிக்கையானது என்பதாலேயே சிலேடை பாடுவதும் வேடிக்கையானது என்று பொருளன்று. படைப்பாளரின் வித்தகம் அனைத்தும் வெளிப்படும் பாட்டுத்தளம். வித்தகம் இல்லாதார் இதனைப் படைக்க முயலலாம். வெற்றி பெறுவது அவ்வளவு எளிதன்று. இந்தப் படைப்பாற்றல் எல்லாருக்கும் கைவராது. வள்ளிமுத்துக்கு வந்திருக்கிறது. செந்தமிழ்த்தாயின் புன்னகையில் வள்ளிமுத்து சிலேடைக்கும் காப்புரிமை உண்டு! ‘கரடி குளத்தில் ஒரு காளமேகம்’ என்பது மோனைத் தொடரன்று’ என்பது ஓரளவு புரியக் கூடும்!

     

    சிலேடைக்குச் சிக்கெடுத்த பேச்சிமுத்து வள்ளிமுத்து

    ‘நீரால் நிரம்பும் பல குளங்களுக்கு நடுவே தான் பிறந்த கரடி குளத்தைச் சீரால் நிரப்பியவர் இவர்! கழுகுமலை முருகன் மீது காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் இவருக்கு அடுத்த  ஊர்க்காரர்!

    தானாகத் தமிழ் படித்துத் தேனாகக் கவிபாடுபவர். ‘நகுமோமு’ ஆலாபனை பாடி முடித்த களைப்பு நீங்க ‘என்ன கவி பாடினாலும்’ எனத் தொடங்குவாரே மதுரை சோமு, அவர் போலக், ‘காக்கைக்குத் தூது’ விட்ட களைப்பு நீங்கப் பாடிய சிலேடைகள் பல.

    ‘தெள்ளுதமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் கூட்ட’த்தின் தென்திசைத் தளபதி! வகுப்பறைகளில் பாடநூற்பகுதிகளோடு பண்பாட்டுக் கூறுகளையும் பக்குவமாகப் பந்திவைப்பவர்.

    கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘கவிஞர்’ எனத் தம்மைக் காட்டி என்னை நடுங்க வைத்தவர் நடுவே சித்திரக் கவிதைகளால் ஒத்தடம் கொடுத்தவர். இந்தச் சிலேடைகள் இவரது குடியிருப்பு முகவரி அன்று. பாடிவீட்டுத் தற்காலிக முகவரி. தமிழ்க்கவிதை உலகம் தனது நம்பிக்கை வலையை விரித்தபோது சிக்கிய சுறா மீன்கள் சிலவற்றில் இவரும் ஒருவர்! மரபு என்பது யாப்பு மட்டுமன்று என்னும் உண்மையை இவருடைய கவிதைகளும் இவைபோன்ற சிலேடைகளும் புரிய வைக்கக்கூடும். கரடிகுளத்தில் பிறந்து தாரமங்கலத்தில் பணியாற்றும் இவருக்குக் கனவுகளில் நம்பிக்கை உண்டு! ஆம்! கவிதைக் கனவுகள்! கனவு மெய்ப்பட வேண்டும்!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 24

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 24

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    கருத்துக்களே உவமமாகும் கவிதைகள்

    முன்னுரை

    கவிதைகளில் உவமை அமையும் பாங்கு பற்றி ஆராயும் தொல்காப்பியம் ஒரு இன்றியமையாக் குறிப்பினைத் தருகிறது. சில நேர்வுகளில் விளக்கப்பட வேண்டிய கருத்து அல்லது பொருள் உவமையாகிவிடக்கூடும். அவ்வாறு அது உவமையாகச் சொல்லப்படுங்கால் அதனை உவமமாகவே கொள்ள வேண்டுமேயன்றி உபமேயமாக அதாவது பொருளாகக் கருதி மயங்குதல் கூடாது. உவமம் அகத்திணைக்கே உரியது என்பது தொல்காப்பியம் காட்டும் தமிழ்க்கவிதைக் கோட்பாடு. அகம், புறம் என்னும் பொருள் வரையறையின்றி உவமம் பொது ஆளுகைக்கு உட்பட்டது தொல்காப்பிய நெறியின் நெகிழ்ச்சியாகவே கருத வேண்டும். இதன் தொடர்ச்சியாக அல்லது வளர்ச்சி நிலையாக ஒரு கருத்தே  மற்றொரு கருத்து விளக்கத்திற்கு உவமமாக அமைந்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே பொருளுக்கு உவமம், பொருளே உவமம், பொருளுக்கு மற்றொரு பொருளே உவமம்  என்னும் மூன்று நிலைகளைக் காணலாம். இதில் ‘கருத்துக்குக் கருத்து உவமம்’ என்னும் மூன்றாம் நிலையைப் பற்றிய சில கருத்துக்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    உவமங்களின் படிநிலை வளர்ச்சி

    உவம வகைகளையும் அவற்றின் நிலைக்களங்களையும் அதாவது எந்தச் சூழலில்  உவமம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் துல்லியமாக ஆராய்ந்திருக்கும் தொல்காப்பியம், பொருளையே உவமமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது. படைப்பிலக்கியக் கூறுகளைப் பற்றி ஆராயும் ஆய்வறிஞர்களின் வியப்புக்குக் காரணமான அமைப்பு இது. சிங்கம் போலப் பாய்ந்தான் என்றால் சரி. ‘இவனைப் போலச் சிங்கம் பாய்ந்தது’ என்றால் அது புதுமை. சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடு. இதற்குத் தொல்காப்பியம் ஏற்பளித்திருக்கிறது.

    பொருளே உவமம் செய்தனர் ஆயினும்
    மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்

    என்னும் நூற்பா மேற்கண்ட கருத்தை உறுதி செய்யக் கூடும். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தொல்காப்பியர் இந்நூற்பாவை அமைத்திருக்க வேண்டும். ‘இருதிணைப் பொருள்களுள் இவையெல்லாம் உவமமாக வரும்., இவையெல்லாம் பொருளாக வரும்’ என்னும் வரையறை தமிழில் இல்லை. கவிஞனின் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு அமையும் உத்தி அது.

    வருமுலை யன்ன வண்முகை உடைந்து
    திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை” 

    என்னும் சிறுபாணாற்றுப்படை வரிகளில் ‘வருமுலையன்ன வண்முகை’ என உவமம் பொருளானது காணலாம். கவிஞன் நோக்கில் வண்முகை பொருளானதே இதன் காரணம்.

    அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
    மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
    பூக்கொய் மகளிரின் தோன்றும்

    ‘அணங்குகொல்? ஆய்மயில் கொல்? எனத் தலைவிக்கு மயிலை உவமிப்பதும் உண்டு. மேற்கண்ட குறுந்தொகைப் பாடலில் கண்டுள்ளவாறு மயிலுக்குப் பூக்கொய்யும் பெண்ணை உவமமாக்குவதும் உண்டு. திருக்குறள் தலைவிக்கு மயில் உவமமானால், குறுந்தொகை மயிலுக்குப் பெண் உவமமாகிறாள்.  மயில் உவமையாகத்தான் வரவேண்டும்., பெண் பொருளாகத்தான் வரவேண்டும் என்னும் கட்டுப்பாடு தமிழில் இல்லையென்பதற்கு இவை போல்வன போதுமான சான்றுகளாகலாம்.

    ஈரோட்டுப் பெரியாரின்  சட்டைபோல
    இருண்ட கடல், அண்ணாவின் பேச்சைப் போல
    நீரோட்டம்., சாண்டில்யன் கதையைப் போல
     நீண்டமலை

    ஆகியவை எல்லாம் நிலவில் இருப்பதாகக் கற்பனை செய்கிறார் கவிஞர் சுரதா.  நிலவுக்குக் கவிஞர் சென்றதே கற்பனையில்தான். கற்பனை நிலவில் அவர் கண்ட கடலின் கருப்புக்குத் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டைதான் நினைவுக்கு வந்திருக்கிறது. அங்கே இருந்த நீரோட்டத்தைக் கண்டவுடன் பேரறிஞர் அண்ணாவின் ஆற்றொழுக்கான பேச்சு அவருடைய நினைவுக்கு வந்திருக்கிறது. மலைத்தொடர்களைக் கண்டவுடன் சாண்டில்யன் கதை நினைவுக்கு வந்திருக்கிறது. அறிந்தவற்றைக் கொண்டு அறியாதனவற்றிற்கு உவமை சொல்ல வேண்டுதலின் இங்கே பொருள்கள் உவமமாகின்ற நிலைப்பாட்டைக் காணமுடிகிறது. சுரதாவுக்குப் பெரியாரின் சட்டை தெரியும். அண்ணாவின் பேச்சறிவார். சாண்டில்யன் நாவலையும் அறிவார். ஆனால் நிலவும் அதன் அமைப்பும் தெரியாது. கற்பனையில் மட்டுந்தான் தெரியும் என்பதால் உவமங்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    கருத்துக்கு உவமம் கருத்தே

    பொருளுக்கு உவமம் அல்லது கருத்துக்கு உவமம் என்பதைத் தெளிவாக்கிக் கொண்டால்தான் கருத்துக்குக் கருத்து உவமம் எப்படி அமைகிறது என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள இயலும். சான்றாகத்,

    தீயவை  செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடி உறைந்தற்று

    என்பது ஒரு குறட்பா. தீயவற்றைச் செய்பவன் கெடுவான். இது உறுதி. இந்த உறுதிக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். நடந்து செல்கிறவனுடைய நிழல் அவனுடைய அடிக்குள்ளே சென்று அடங்குவது போல. அதாவது அவனுடைய நிழல் அவனுக்குள்ளே அடக்கம்! தீவினை நிழல் போன்றது. வினைப்பயன் செய்தவனையே சென்று சேரும். இந்தக் கருத்தினை விளக்குவதற்கு அடிக்குள் நிழல் மறைவதை உவமமாக்குவதுதான் பொருளுக்கு உவமம்.  இப்போது இந்த உவமத்திற்குப் பதிலாக இன்னொரு கருத்தினையே உவமமாக்குவது. அது எப்படி? இப்படி!

    இன்மையுள் இன்மை விருந்து ஓரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை

    இதுவும் ஒரு குறட்பா. பொதுவாக நாம் பற்றாக்குறையை வறுமை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தை இன்னும் கூடுதலாக்குகிறார். அதாவது ஒரு பண்பாடு முற்றிலும் அழிகிற அளவுக்குப் பொருளாதாரத்தில் ஒருவன் சந்திக்கின்ற நிலையே வறுமை என்கிறார். ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர் பண்பாடு. ஒரு அதிகாரத்தையே இதற்காக ஒதுக்கிப் பேசுகிற அளவுக்கு அது உயர்ந்த பண்பாடு. வீட்டிற்கு வந்த விருந்தினரை அவர் வருவது எந்தப் பொழுதாயினும் விருந்தோம்புவது கடமை. அக்கடமையைச் செய்ய முடியாது தவறுகிற நிலையே உண்மையான வறுமை நிலை. இது ஒரு கருத்து.

    ‘பொறுமை’ என்பது பொறுமையாக இருப்பதல்ல. பிறர் ஏசுவதைப் பொறுத்துக் கொள்வது என்பது சாதாரணம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தைக் கூடுதலாக்குகிறார். பேசுகிறவனை வைத்து அந்தப் பொறுமையை அளவிடுகிறார். பொறுமை எப்போது சிறக்கிறது என்றால் அதாவது எது பொறுமை என்றால் அறிவற்ற பேதையர் சொல் பொறுக்கிற நிலைதான். அறிவற்ற பேதையர் பேசுகிறபோது நமக்குச் சினம் வரும். தாக்கலாமோ என்ற எண்ணம் வரும். துரியோதனன் அவையில் திருதராட்டிரன் செய்த செயலைத் தருமன் பொறுத்துக் கொண்டது போல. எனவே சாதாரண மக்களையோ அறிவாளிகளையோ பொறுத்துக் கொள்வது பொறுமையாகாது. பேதைகளைப் பொறுத்துக் கொள்வதுதான் பொறுமை. இது ஒரு கருத்து.

    இப்போது குறட்பாவை நோக்கினால் இரண்டு கருத்துக்கள் அதாவது இரண்டு வாழ்வுண்மைகள் புலப்படும். இரண்டு கருத்துக்கள் இரண்டு உவமங்கள் என்பதைப் பெற முடியும்.

    1. விருந்தோம்ப இயலாத நிலை வறுமையுள் வறுமை என்பது போலப் பேதையரைப் பொறுத்துக் கொள்ளுதலே பொறுமையாகும்.
    2. பேதையரைப் பொறுத்துக் கொள்ளுவதே பொறுமை என்பது போல விருந்தோம்ப இயலாத நிலையே வறுமையுள் வறுமை எனப்படும்.

    இந்த நுட்பத்தைப் பதிவு செய்ய வேண்டியே இவ்விரண்டு கருத்துக்களையும் ஒன்றற்கொன்று உவமமாக்கிக் கொள்ளுமாறு அமைத்துக் காட்டுகிறார்.  தனித்தனி உவமங்கொண்டு விளக்கினால் இரண்டு கருத்துக்கள் அவற்றுக்கான உவமங்கள் இரண்டு என படைப்பு விரியும். அணுவைத் துளைத்து உலகியல் சொன்ன திருக்குறளுக்கு இது பொருந்தாது அல்லவா? எனவே இதற்கு அது உவமம். அதற்கு இது உவமம் என்றாயிற்று என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாழ்வுண்மைகளைத் தொடர்ச்சியாக  வலியுறுத்திக் கொண்டே வருவதே நீதிநூல்களின் வெளிப்பாட்டு உத்தியாதலின் இத்தகைய கருத்துக்குக் கருத்தே உவமம் என்னும் நெறி பின்பற்றப்பட்டுள்ளது எனவும் அனுமானிக்கலாம்.

    உடலை விரும்பும் உயிரும் சூதினை விரும்பும் சூதனும்

    உடலுக்கு உணர்ச்சியில்லை. உயிருக்குத்தான் உணர்ச்சி. அந்த உயிர்தான் எல்லாவற்றையும் உணர்கிறது. எல்லா உணர்வுகளும் சுவைகளும் உயிருக்கானதே. பிணத்துக்கு இனிப்பு தெரியாது. கசப்பு புரியாது. இத்தகைய சிறப்புடைய இந்த உயிர், சிறப்பே இல்லாத உடலை விரும்புகிறது! உடலுக்கு நோய்வந்த போதும் அது அறுக்கப்படும்போதும் அது அழுகும் போதும் உயிர் அழுகிறது! கண்ணீர் உயிர்த்துடிப்பு! உயிரின் வெளிப்பாடு! எனவே எவ்வளவுதான் துன்பத்தில் உழன்றாலும் உயிர் உடலை விரும்புகிறது என்பது பெறப்படும்.  இந்தக் கருத்து அதாவது உவமேயம் விளக்கப்படல் வேண்டும்!. கருத்தைக் கருத்தாகவே சொன்னால் விளக்கம் பெறுவதைவிட உவம வாயிலாகச் சொன்னால் கூடுதல் விளக்கம் பெறப்படும். அதனால் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினை உவமமாக்குகிறார்.

    சூது விளையாடுபவன் இழப்பான்!. ‘இழப்பு வருகிறது வேண்டாம்’ என்றால் ‘விட்டால்தான் பிடிக்க முடியும்’ என்பான். நாம் கவனித்திருக்கிறோம். இழப்பு என்பது நன்கு தெளிவாகத் தெரிகிறது.  ஆனால் அதன் மேல் வைத்த காதலைச் சூதனால் விட முடியவில்லை. இது உவமம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

    இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற் றுயிர்

    ‘எத்துணைதான் துன்பம் வந்தாலும் உடலையே விரும்பும் உயிரைப்போல், எவ்வளவுதான் இழந்தாலும் சூதன் சூதினையே விரும்புவான்’ என்பது மேற்கண்ட குறட்பாவின் கருத்தாகும். உடல்நலம் வலியுறுத்தும் மருந்துக்குச் சற்றும் தொடர்பில்லாத சூதினை ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் திருவள்ளுவர் வலியுறுத்துவதைக் காணலாம்.

    உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார்.”

    என்பது பரிமேலழகரின் உரை நுட்பம். அழியக் கூடிய உடம்பின் மீது காதல் கொள்ளுவது உயிரின் அறியாமை. இழப்புக்குக் காரணமாகும் சூதின் மேல் காதல் கொள்ளுவது சூதனின் அறியாமை. இதுதான் அழகர் உரையின் சாரம்.

    குறைந்தால் இன்பம் கூடினால் துன்பம்!

    அளவாக உண்ணுதல் நோய்க்குத் தடை. உடல் நலத்திற்கு நன்மை. உடல் நலம் பேணுவார்க்கு இது ஒரு கருத்து. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதால் அளவாக உண்ணுதல் செல்வம் சேர்வதற்குக் காரணி என்பது பெறப்படும். படவே வாழ்வுக்கு அது இன்பம் என்பதும் பெறப்படும். ஆகக், ‘குறைவு நலம்பயக்கும்’ என்பது அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைபெறும். இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் உவமமாக்கியிருக்கிறார். ஆக்கி, அதற்கு எதிர்மறையான கருத்தினையே உவமேயம் ஆக்கியிருக்கிறார். வெகு நுட்பமான அணுகுமுறை இது! குறைவுக்கு எதிர்மறை நிறைவு! இது பெருநிறைவு! அதாவது அளவுக்கு மிக அதிகமாக உண்பது. ‘பேரிரை’ உண்பவனுக்கு நோய் உறுதி என்பது சொல்லாமலே பெறப்படும். எனவே செல்வம் சேராது. இது பொருளாகிய உவமேயம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேரிரையான்கண் நோய்

    இதற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் ,“விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு” என எழுதிக்காட்டும் விளக்கம் உவமமும் பொருளுக்குரிய சிறப்பைப் பெறுகிறது என்பதை விளக்குகிறது. ‘இழிவறிந்து உண்’ என்பது விதி. ‘கழிபேரிரை உண்ணாதே’ என்பது எதிர்மறை. இரண்டின் கருத்தும் ஒன்றாகலின் ‘இரண்டானும் பெறுதற்கு’ என்று கூறினார். அதாவது விதியால் எதிர்மறையைப் பெறவேண்டும். எதிர்மறையால் விதியைப் பெறவேண்டும். இவ்வாறு ஒரு கருத்தை மற்றொரு கருத்துக்கு உவமமாக்கும் போக்கு, இன்றைய புதுக்கவிதை உலகிலும் நிலைபெற்றுள்ளது சுட்டத்தகுந்தது.

    தேசத்தைப் போலவே   
    நம் வாழ்க்கையும்
    இன்று
    தெருவில் நிற்கிறது

    எனக் காதலன் ஒருவன் கூறுவதாக அமைந்த கவிதை வாரிகளில் முச்சந்திக்கு வந்த காதலுக்குத் தெருவுக்கு வந்துவிட்ட தேசத்தின் சிறுமை உவமமாக்கப்படுகிறது.

    தேசமும் காதலும்

    தனிமனிதனின் ஒழுகலாறுகள் சமுதாயத்தின் போக்கையும் சமுதாயத்தின் போக்கு தனிமனிதனையும் பாதிப்பது இயல்பு. ‘காதல்’ என்பது ‘உயிர்த்துடிப்பு’ என்ற நிலையிலிருந்து கீழிறங்கிச் சமுதாயச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது என்ற நிலைப்பாட்டினாலும், பருவக்கிளர்ச்சி எனக் கருதப்பட்டதாலும்,  ‘திருமணத்தின் தொடக்க நிலை’ எனக் கருதாது, ‘தனித்ததொரு வாழ்வியல் கூறு’ என்னும் கருத்தியல் மேலோங்கி நிலைத்துப் போனதாலும் ‘முழுமையடைந்த காதல்’ என்பது எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது. சங்க அகவிலக்கிய மரபிலிருந்து தமிழின் எந்த ஒரு மரபுநிலைத் தொடர்ச்சியும் காதலைத் ‘தனித்ததொரு வாழ்வுநிலை’ எனக் கருதியதற்கான சான்றில்லை.

    ‘வணங்கத்தக்க தேசத்தின் பெருமை முச்சந்திக்கு வந்ததுபோல’ என்னும் உவமையால், ‘உயிரின் பெருமை கூற வேண்டிய காதலும் சமுதாயத்தின் கேலிக்கு ஆளாகித் தெருவுக்கு வந்துவிட்டது’ என்னும் கருத்து விளக்கமுறுவதைக் காணலாம். ‘தேசம் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ‘காதல் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ஓருண்மையே பிறிதொரு உண்மைக்கு உவமமாகியிருப்பது அதாவது ஒரு கருத்தே மற்றொரு கருத்திற்கு உவமமாகியிருப்பது புதுக்கவிதை வரையிலும் தொடர்கிறது என்பது இதனால் புலப்படலாம்.

    நிறைவுரை

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாகச் சிறப்பு, நலன், காதல், வலி, கீழ்மை என்னும் ஐந்து நிலைக்களன்களில் பரிமாறப்படும் கவிதை உவமங்கள் அப்படியே தேங்கிவிடாமல்  விரிவடைந்து கொண்டே வந்திருக்கிறது., முற்சொன்ன நான்கு வகையாக அமைந்த உவமங்கள் என்பது முதல் நிலை. அவை விளக்கும் பொருள்களே உவமமாக அமைந்தது அடுத்த நிலை. இவையிரண்டனையும் கடந்த நிலையில் கருத்துக்கு மற்றொரு கருத்தே உவமம் என்னும் நிலை தமிழ்க்கவிதைகளின் உவமக் கொள்கைகளின் கொடுமுடி எனலாம். மானுடம் சிறக்க வந்த தமிழிலக்கியங்களுக்கான வரையறையைத் தரும் தமிழிலிலக்கணங்கள் வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உடையன என்பதை இதனால் உணர்ந்து கொள்ள இயலும்!

    (தொடரும்…)

    Share
  • கதையும் மொழிதலும் – 5  சி.சு. செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’

    கதையும் மொழிதலும் – 5 சி.சு. செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    வாடிவாசல் நாவல் மூலமாக நன்கு அறியப்பட்டவர் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா. என்றாலும் தொடக்கக் காலங்களில் ‘எழுத்து’ பத்திரிகையின் மூலமாகவே இவர் அறியப்பட்டு வந்தார். எழுத்தாளர்கள், விமர்சகர்கள் சி.சு.செல்லப்பா எழுத்து இதழை நடத்தியவர் என்று அழுத்தமாகக் கூறி வந்ததே இதற்குக் காரணம். இன்றைய சூழ்நிலையில் எழுத்து பத்திரிகையை நடத்தியவர் என்பதற்கு  இணையாக இன்று நாவல்கள் மூலமாகவும் சிறுகதைகள் மூலமாகவும் அறியப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவரின்  ‘குற்றப் பரம்பரை’ என்ற சிறுகதை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இலக்கிய வரலாற்றில் சி.சு.செல்லப்பா காந்தியச் சிந்தனை, மரபான தமிழ் வாழ்வியல் சிந்தனை சார்ந்த இயக்கப் போக்கும் க.நா.சுப்ரமணியம் நவீன சிந்தனையும் புதுமைகளை அடையாளம் காணும் தன்மையும் கொண்ட இயக்கப் போக்குமாக இரண்டு வகையான செயல்பாடுகள் இருந்து வந்தன. க.நா.சுப்பிரமணியம் தனது இலக்கியச் சிந்தனையில் சி.சு.செல்லப்பாவின் செயல்பாடுகளையோ இக்குழுவில் இருப்பவர்களின் செயல்பாடுகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. என்றாலும் எந்த அங்கீகாரத்திற்கும் கவலைப்படாமல் தங்களின் இலக்கியச் செயல்பாட்டைத் தொடர்ந்து செய்து வந்தவர்களில் சி.சு.செல்லப்பாவும் ஒருவர்.

    தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் இத்தகைய இரண்டு போக்குகள் தொடக்கக் காலங்களில் இருந்து வந்தன. மணிக்கொடி, எழுத்து என்கிற இலக்கியப் பத்திரிகைகளுக்கு இணையாக அல்லது மாற்றாக வேறு சில பத்திரிகைகள் செயல்படத் தொடங்கின. இவற்றின் ஊடாகத் தமிழ் இலக்கியத்தை, வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும். கடந்த 20 ஆண்டுகளாகச் சி.சு.செல்லப்பாவின் இலக்கியப் படைப்புகள் மீதான பார்வையும் முக்கியத்துவமும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. சி.சு.செல்லப்பா தொண்ணூற்று ஏழு சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைக் காவ்யா பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இவரின் சில முக்கியமான சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இன்றைக்குப் பரவலாகப் படிக்கப்படும் நாவலாக வாடிவாசல் விளங்குகிறது. இத்தகைய இலக்கியச் சூழ்நிலையில் சி.சு.செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’ மிக முக்கியமான சிறுகதையாக விளங்குகிறது.

    சி.சு.செல்லப்பாவின் அனைத்துக் கதைகளுமே மதுரை ஜில்லாவை மையமாக வைத்து எழுதப்பட்டவை. இவர் சார்ந்த பிராமணக் குடும்ப வாழ்க்கை, உசிலம்பட்டி வட்டாரக் கள்ளர் வாழ்க்கை, சின்னமனூர் வத்தலக்குண்டு சார்ந்த விவசாயிகளின் வாழ்க்கை என்று இவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை இது. சி.சு.செல்லப்பாவின் கதை மொழி சற்று இலகுவானது. வாசகனை மன ரீதியில் தயார்ப்படுத்துவதற்குச் சி.சு.செல்லப்பாவும் ஒரு  கதாபாத்திரமாகக் கதையைத் தொடங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.  இக்கதையும் சி.சு.செல்லப்பா அவருடைய நண்பரோடு ரயிலில் பயணப்படும்போது ஏற்படுகின்ற அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தால் சமூகத்தில் ஏற்படும் சிக்கலை, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையின் மூலமாக எடுத்துக் கூறுவதாகக் கதை பின்னப்பட்டுள்ளது.

    சுதந்திரப் போராட்டக் காலத்தில் இரண்டு அரசியல் கருத்துப் போக்குகள் முக்கியமானவையாக விளங்கின. காந்தியச் சிந்தனை மரபும் இடதுசாரி சிந்தனை மரபும் மக்களிடையே செல்வாக்குச் செலுத்திய சிந்தனை மரபாக இருந்து வந்தன. சி.சு.செல்லப்பா, காந்தியச் சிந்தனை மரபு கொண்டவராக விளங்கினார். விடுதலைப் போராட்டத்தின் உச்ச காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகத் தீவிரமாகச் செயல்பட்ட ஒன்றாக விளங்கியது. இதுபோன்ற பல சமூகச் சிக்கல்களுக்குக் காங்கிரஸ் கட்சி முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தித் தரும் என்று மக்கள் பரவலாக நம்பிய காலக்கட்டம் அது.

    உசிலம்பட்டி வட்டாரத்தைச் சார்ந்து வாழுகின்ற மக்கள், கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் களவுத் தொழிலை இயல்பாகக் கொண்டவர்களாக விளங்கினர். இதனை மாற்றும் விதமாக அன்றைய ஆங்கிலேய அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மக்கள் நிலம் சார்ந்தும் தொழில் சார்ந்தும் வாழப் பழகிவிட்ட பின்புகூட இச்சட்டம் நடைமுறையில் இருந்தது. பலர் பாதிக்கப்பட்டனர். அத்தகைய பாதிப்பிற்கு உள்ளான ஒருவரின் வாழ்க்கையே இக்கதை. உசிலம்பட்டி வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்ற, களவுத் தொழிலைச் செய்து பழக்கப்பட்ட (வீரண்ணத்தேவர்) ஒருவரிடமிருந்து கதை தொடங்குகிறது. பிறகு திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில் அவர் களவுத் தொழிலை விட்டுவிட்டுச் சிறிதளவு நிலம் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார். விவசாயத்தில் கிடைத்த வருமானத்தை வைத்துச் சொந்தமாக வீடு கட்டி ஒரு சம்சாரியாக  வாழ்ந்து வருகிறார். அவனது (செல்லி)மகளின் மேல் அவருக்கு அளவுகடந்த அன்பு. அவரது மனைவி, மகளைப் பெற்றுவிட்டு பிரசவத்தில் இறந்து விடுகிறாள்.  இதனால் தனது மகளின் மேல் உயிரையே வைத்திருக்கிறார்.

    அவர் அவளுக்காகவே வாழவும் தொடங்கிவிட்டார். தனது முழு வாழ்க்கையையும் தனது மகளை வளர்ப்பதற்கே என்று பாசத்தோடு வாழ்ந்து வருகிறார். அவர் மகளைப் பிரிய மனமில்லாது தனது அக்காள் மகனையே அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக அமர்த்திக்கொண்டார். மருமகனுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதனால் மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்லத் தயாராகிறான். இதனைக் கேள்விப்பட்ட வீரண்ணனுக்கு மிக வேதனையாக இருக்கிறது. எப்படி அன்பு மகளை விட்டுப் பிரிந்து செல்ல முடியும் என்று அவர் வருத்தப்படுகிறார். என்றாலும் கணவன் எங்கு செல்கிறானோ அங்குச் செல்ல வேண்டிய கடமை மனைவிக்கு இருக்கிறது என்பதால் அப்பாவை விட்டுக் கணவனோடு செல்லத் துணிகிறாள்.  செல்லி எவ்வளவு சமாதானம் சொல்லியும் கணவர் தனது முடிவில் மாறவே இல்லை.

    பிறகு மருமகனின் சிந்தனைக்கு உடன்பட்டு மகளை வெளிநாடு செல்ல அனுப்பி வைக்கிறார்.  தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தைச் சி.சு.செல்லப்பா மிக அற்புதமாக இக்கதையில் எடுத்துக் கூறியுள்ளார். எத்தகைய சூழலிலும் கண்கலங்கக் கூடாது என்று தெரிந்தாலும் மகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்கலங்கி நிற்கிறார். திடீர் யோசனையில் நாகப்பட்டினம் வரைக்கும் கொண்டு விட்டுவர, அங்கிருந்து ரயிலில் ஏறுகிறார். ஆனால் குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தில் கைதானவர்கள், ஊரைவிட்டு வெளியே செல்வதற்குப் போலீசிடம் தெரியப்படுத்த  வேண்டும். அவசரத்தில் கிளம்பிவிட்ட அவருக்கு இது மிகப் பெரிய சிக்கலாக மாறியது. அருகில் குடியிருப்பவர்களால்  காவல் நிலையத்திற்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினத்தில் கைது செய்யப்படுகிறார் வீரண்ணன். இதனை மகள் அறிந்துகொள்ளக் கூடாது என்று விரும்புகிறார். காவல் துறையால் கைது செய்யப்படும் அவர், நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கு இவரே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் முடிந்து திரும்பி வருகிற அதே ரயிலில் எழுத்தாளரும் அவரின் நண்பரும் பயணிக்கிறார்கள். இவ்வாறு செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்துத் திரும்புகின்ற அவரது சொந்த வாழ்க்கையே கதையாகப் பின்னப்பட்டுள்ளது. இவரின் கதையைக் கேட்ட அனைவரும் கண்கலங்கி நிற்கிறார்கள். அந்த அளவிற்கு ஒரு கொடூர சட்டமாகக் குற்றப் பரம்பரைச் சட்டம் விளங்குகிறது. அருகில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்காரர் சொல்லுகிறார். ‘ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய காரியம், இந்தச் சட்டத்தை நீக்குவது தான்’ என்று. இவ்வாறு கள்ளர் சமுதாயத்தின் சமுதாயச் சிக்கலைப் பின்புலமாகக் கொண்டு மகள் – தந்தையின் பாசப் போராட்டத்தின் அடிப்படையில் கதைப் பின்னப்பட்டுள்ளது. கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், இயல்பான மனிதர்கள் ஆசாபாசங்களுக்கு உட்படக் கூடியவர்கள், அவர்கள் வாழுகின்ற பகுதியில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாத காரணத்தினால் அவர்கள் களவுத் தொழிலுக்கு மாறினார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படும் பொழுது அவர்கள் மற்ற பகுதியைச் சார்ந்த மக்களைப் போலவே வாழக்கூடியவர்கள் என்பதை இங்குக் காணமுடிகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தங்களை மாற்றிக்கொண்ட பிறகும் கூட இந்த இழி (களவு – கள்ளர்) சொற்களில் இருந்து அவர்களால் மீள முடியாத சமூகக் கொடுமையை இக்கதையின் மூலம் எடுத்துக் காட்டுகிறார். சி.சு.செல்லப்பா தனக்கு ஏற்பட்ட வாழ்வியல் அனுபவத்திலிருந்து அக்கதையை இயல்பாக எடுத்துக் கூறுகிறார்.

    சிறுகதையின் மொழிநடையும் கதை கூறலும் அவருக்கான தனித்த செயல்பாட்டில் இருக்கின்றன. உலக இலக்கியங்களில் நாட்டமும் உலக விமர்சன, தமிழ் விமர்சன மரபில் நாட்டமும் கொண்ட சி.சு.செல்லப்பா, தனது படைப்புகளை உருவாக்கும் போது அத்தகைய நவீன போக்குகளுக்கு, கதைகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல் கதையின் இயல்புப் போக்கில் அதை எடுத்துக் கூறுகிறார். கதையின் தொடக்கமும் செல்நெறியும் சற்றுத் தொய்வு ஏற்படுவதாகத் தோன்றுகிறது. கட்டமைப்பான மொழிநடையில் செய்யப்பட்டதாக  இல்லாமல் இயல்பு போக்கில் கதை இயங்கி செல்வது இவரின் சிறுகதைப் பாணியாக இருக்கிறது. தனது கதையின் போக்கு குறித்து இவரே ‘எனது சிறுகதைப் பாணி’ என்ற கட்டுரை நூல் எழுதியுள்ளார். இவரின் கதைகளை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவர் கூறுகிறார். அந்த வகையில் தான் எழுதுகின்ற கதைக்கு அதற்கான ஒரு பாணியை வைத்துக்கொண்டு செயல்பட்டு உள்ளதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

    க.நா. சுப்பிரமணியம் போன்றவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியலை வெளியிடும் போது, கவனமாகச் சி.சு.செல்லப்பாவின் குழுவில் இயங்கும் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர்களின் இலக்கியப் பார்வை. இதனை உற்றுநோக்கும் பொழுது, இரண்டு முக்கியமான இலக்கிய வெளிப்பாட்டுச் செயல்பாடுகள் இருந்து வருவதை உணர முடிகிறது. ஒவ்வொன்றும் தனக்கான செயல்பாடுகளோடு தனக்கான உத்தி முறைகளோடு தனக்கான வாழ்வியல் பின்புலத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட விமர்சனக் குழுவினரின் புறக்கணிப்பால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய எழுத்தாளர்களின் மரபு அறியப்படாமலேயே போய்விட்டது. அத்தகைய மரபின் முக்கியமான எழுத்தாளராக சி.சு.செல்லப்பா விளங்கி வருகிறார்.

    இன்றைய பரந்த விமர்சன உலகில் குறிப்பிட்ட குழுவினரால் விடுபட்ட மறைக்கப்பட்ட எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் வாசிப்பிற்குள் வருகின்றன. வாசிப்பின் ஊடாக இன்றைக்கு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாகச் சி.சு.செல்லப்பாவின் படைப்புகளும் வாசகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் க.நா.சு.வின் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியலைத் தாண்டி, அனுமானத்தைத் தாண்டி, இன்றைக்குப் பரவலாகப் படிக்கப்பட்டு வருகின்ற, சிந்திக்கப்பட்டு வருகின்ற எழுத்தாளராகச் சி.சு.செல்லப்பா விளங்குகிறார். சிறந்த கட்டமைப்பு கொண்டவை என்ற நிலையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சமூகப் பின்புலத்தை அறிந்துகொள்வதற்குத் தவிர்க்க முடியாத படைப்புகளாகச் சி.சு.செல்லப்பாவின் இலக்கிய ஆளுமை விளங்கி வருவதை இன்றைய இலக்கிய உலகம் அறிந்துகொண்டிருக்கிறது.

    இவரின் பல படைப்புகள், இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கிய வரலாற்று எழுத்தாளர்களின் முக்கியமான படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகச் சி.சு.செல்லப்பா விளங்கி வருகிறார். ‘எழுத்து’ பத்திரிகையின்  பங்களிப்பை எடுத்துக் கூறி பலரால் இருட்டடிப்பு (இலக்கியங்களுக்காக) செய்யப்பட்ட சி.சு.செல்லப்பா, இன்று இலக்கியங்களால் பேசப்படும் எழுத்தாளராக மாறி வருகிறார். இவரின் தனித்துவமான பல சிறுகதைகளில் முக்கியமான ஒன்றாகக் குற்றப் பரம்பரை விளங்குகிறது. இன்றைய தலைமுறைக்குச் சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் அனுபவித்த பல இன்னல்களைப் பற்றித் தெரியாது. இன்றைய தலைமுறை அக்காலக்கட்டத்தின் சூழலை அறிந்துகொள்ள விருப்பத்தோடு இருப்பதும் தொடர்ந்து வாசிப்பதும் சி.சு.செல்லப்பாவிற்கான ஒரு முக்கியமான இடம் இப்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது. சி.சு.செல்லப்பா தனது படைப்பினூடாக இன்று அறியப்படும் எழுத்தாளராக விளங்கி வருகிறார்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 1

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 1

    முனைவர் ச. சுப்பிரமணியன்.

    பண்ணையார் பாடிய பனைமரம்

    ஒரு மொழியில் இருக்கின்ற அனைத்து இலக்கியங்களும் சிறந்திருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஓரிலக்கியத்திலும் அனைத்துப் பகுதிகளும் இலக்கியத் தன்மையோடு இருக்க இயலாது. அவ்விலக்கியத்தின் ஒரு பகுதியிலுள்ள சில கவிதைகளுக்கும் இது பொருந்தும். இந்தப் பின்புலத்தில் அண்மையில் முகநூல் பதிவில் நான் சுவைத்து வியந்த ஒரு மரபுக் கவிதையைப் பற்றிச் சில எழுத நினைத்தேன். அதனால் எழுதுகிறேன்.

    மரபுக்கவிதை என்றால் யாப்பமைவுப் பாடல்களே என்னும் மயக்கம் தமிழ்க்கவிதை உலகில் நிலவி வருவது ஒரு வேதனையான சேதி. பலமுறை பல பதிவுகளில் நான் இது பற்றி எழுதியிருக்கிறேன். இந்தக் கவிதை, என் விளக்கத்திற்குக் காட்சியாக இருக்கிறது என்பதால் இது பற்றி எழுதியாக வேண்டிய கடமை எனக்கு!

    பனம்பூ தமிழர்களின் பாசப்பூ

    பனம்பூவை ‘ஏந்து புகழ்ப் போந்தை’ என்பார் தொல்காப்பியர். அது சேரனின் அடையாளப்பூ. சேர, சோழ, பாண்டியர் என்னும் நிரலில் பின்னவை மாறுபட்டாலும் மாறுபாட்டுக்கு ஆளாகாமல் (தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் திருப்பூவணப்பதிகத்தில் ‘தென்னன்’ எனப் பாண்டியனை முன்னிறுத்துகிறார் ஞானசம்பந்தர்.) இந்த ஒரு இடத்தைத் தவிர மற்று எப்போதும் தலைமையிடத்தைப் பெறுபவர் சேரர். அதனால் பனம்பூ தமிழர்களின் தலைப்பூ!

    வைரமுத்து கவிதையில் மரம்

    மரமிருந்தால் பூ பூக்கும். அதனால் பெரும்பாலும் புலவர்கள் மரத்தையே பாடுகிறார்கள். கவிஞர் வைரமுத்து ‘மரங்களைப் பாடுவேன்’ என்று சொல்லி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நான் முன்பே சொன்னதுபோல அந்த நீண்ட ‘கவிதை’யில் ஒரு வரி மட்டும் கவிதையாகவே அமைந்திருக்கிறது.

    “வெட்டி நட்டால் கிளை மரமாகுமே!
    வெட்டி நட்டால் கரம் உடலாகுமா?”

    என்று மரத்தினை மானுடத்தினும் மேம்படுத்திக் காட்டுவார். மரத்தின் பயன்களை நிரல்படுத்துகிறார் வைரமுத்து,

    “உண்ணக் கனி! ஒதுங்க நிழல்!
    உடலுக்கு மருந்து! உணர்வுக்கு விருந்து!
    அடையக் குடில்! அடைக்கக் கதவு!
    அழகு வேலி! ஆடத் தூளி!
    தடவத் தைலம்! தாளிக்க எண்ணெய்!
    எழுதக் காகிதம்! எரிக்க விறகு!”

    என்னும் பகுதியைக் கவிதையாகக் கொள்ள எனக்கு மன உறுதி போதாது. பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனால் ‘மரத்தினால் உண்டாகும் பயன்கள்’ என்னும் தலைப்பில் எழுதப்படும் கட்டுரையாக வேண்டுமானால் கொள்ளலாம். சொற்கள் இருக்கின்றன. செய்திகள் இருக்கின்றன. எதுகை மோனைகள் கூட இருக்கின்றன. ஆனால் கவிதையிருப்பதாகக் கருத முடியவில்லை.  கவிதை இன்னும் நுண்ணியது. இவ்வாறு எழுதியனவற்றைப் ‘புதுக்கவிதை’ என்று அழைக்கச் சொல்லி வற்புறுத்துவது மிசா கால கொடுமையைவிடக் கொடுமையானது. அந்தக் கொடுமை என்னோடு போகட்டும்!

    கண்ணதாசன் கண்ட பனை மரம்

    ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாலும் மெட்டுக்குப் பாட்டெழுதும் பழக்கத்தாலும் திரைக்கதைகளை நன்கு உள்வாங்கிச் செரித்துக் கொண்டு எழுதும் தனித்திறனாலும் பாரதிதாசன், சுரதா நிரலில் கண்ணதாசன் இணைவதற்குக் கொஞ்சம் தடையாக இருக்கிறது. வேறுவகையாகச் சொன்னால் அவரது ஆற்றல் முழுமையும் திரைப்படப் பாடல்களுக்கே செலவழிக்கப்பட்டது. அதற்கான காரணங்கள் தனி ஆய்வுக்கு உட்பட்டன. அவர் பனை மரத்தின் வளர்ப்புப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். அதனையும் வாழை மற்றும் தென்னை மரத்தோடு இணைத்து எழுதியிருக்கிறார்.

    “பனை மரத்துக்குத்
    தண்ணீர் ஒருதரம்
    பாய்ச்சிவிட்டால் போதும்! அது
    தனைவளர்த்துத்தன்
    தலையில் நுங்கினைத்
    தந்து விளையாடும்!”

    இதுதான் அவர் எழுதிய பாடல்! யார் யாருக்கோ பொருந்தி வந்த டி.எம்.சௌந்தரராஜனின் குரல், இறுதிக்காலத்தில் அவருக்கே பொருந்தாமல் போனது போலக் கண்ணதாசன் எழுதிய இந்த வரிகள், கண்ணதாசனுக்கே பொருந்தவில்லை என்பதைக் கற்பார் உணரலாம். பிறகுக் கவிதைக்கு எப்படிப் பொருந்தும்? இந்தப் பின்புலத்தில்தான் சில நாள்களுக்கு முன்பாக முகநூல் பதிவில் கவிதை ஒன்றினைக் காணும் பேறுபெற்றேன்.

    பைந்தமிழ் இலக்கியங்களில் பனை

    தமிழ்க்கவிதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உவமங்கள் சிலவற்றில் பனங்கிழங்கு தனியிடம் பெறுகிறது. நாரையின் அலகுக்குப் பனம்படு கிழங்கின் வாய்ப்பிளவை உவமித்தார் சத்திமுத்தப் புலவர். (இதனைச்சில மேதைகள் சத்திமுற்றம் என்பார்கள். வழக்குச் சொற்களை அப்படியே கையாளுவதுதான் படைப்புக்குப் பெருமை. வழக்குச் சொற்கள் மொழியியல் ஆய்வுக்குப் பெருந்தடம்! உணவுக்கு நாம் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்ற பொருள்களுக்குப் பழந்தமிழ்நாட்டின் பெயர் ‘மறுமாத்தம்’. (இதனை இக்காலத்தார் ‘SIDE DISH’ என்று பெருமையுடன் சொல்வார்கள்) தற்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் பட்டீசுவரமே சத்திமுத்தம்! திருப்பனங்காடு, திருப்பனந்தாள், பனையூர், பனையபுரம் என்னும் ஊர்ப்பெயர்களோடு சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பனைமரத்திற்கு அழியாத அடையாளப் பெயராகத் திகழ்கிறது. ‘பனைத்துணையாக் கொள்வர்’ என்பது வள்ளுவர் வாக்கு. பலராமனின் கொடியிலும் வீமன் கொடியிலும் இடம்பிடித்த மரம்! புல், புல்பதி, புற்றாளி என்றெல்லாம் பனைமரத்தை வழங்குவார்கள்.

    ஒற்றைப் பனைமரம் உயர்திணையே!

    பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை –  பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரை ஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடையது  என்பது  தாவரவியல் பார்வை.

    மரபியல் இலக்கணப்படி மரம் அஃறிணை. இந்தக் கவிதையின் தலைப்பு ‘மரங்களில் நீ உயர்திணை!’ தலைப்பு (முந்தானை) பொருத்தமாக இல்லையெனின் புடவை எடுபடாதல்லவா? அதனால்தானே நம் மகளிர் காலத்தைச் செலவழிக்கிறார்கள்!. இந்தக் கவிதை எழுதியவரும் அப்படிச் செலவழித்திருக்கிறார். திருமண நாளை ஒட்டி எழுதப்பட்டதால் ஒவ்வொரு காரணமாகப் பார்க்கலாம்.

    தமிழிலக்கிய, இலக்கணங்கள் எல்லாம் பனையோலையில் எழுதப்பட்டன ஆதலின் பனைமரத்து நாக்குகளாகிய ஓலைகள் அவ்விலக்கியத் தேனை உண்டபின்னும் நக்கிச் சுவைப்பதால் அச்சுவை ஓலை நரம்புகளிலும் இனிக்கிறதாம். ஒவ்வொரு இலக்கண, இலக்கியமாக அவ்வோலைகளில் பதியப்படுவதால் அவை ‘நாட்படு தேறலாயினவாம்’. நாக்கு நரம்புகளிலிருந்து வேர்களுக்கு அந்தத் தேன் சென்று நாட்படு தேறலாக மாறியதால் அந்த வேர்களுக்குப் போதை தந்ததாம். அந்தப் போதையைத் தரும் தமிழிலக்கியங்களை வாங்கிக் குவிக்கும் பனையோலைகளை அவை வரமாகக் கொள்கின்றனவாம்!

    “நாக்கின் நரம்பெலாம்
    நாட்படு தேறல்
    போதை வேர்களின் வரம்நீ!”

    இந்த வரிகளில் ஒரு நுண்ணியம் அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.  பொதுவாக வேர்களிலிருந்துதான் கிளைகளுக்கு நீர் வரும். இங்கே (இலக்கியங்களைச் சுமந்த ஓலைகளிலிருந்து) வேருக்குப் பாய்கிறதாம் தேன்! எவ்வளவு அரிய கற்பனை?

    தொடர்ந்து எழுதுகிறார். ‘திருஏடகம்’ என்பது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் அமைந்துள்ளதோர் ஊர். அங்கே குடிகொண்டிருக்கும் பெருமானுக்கு ஏடக நாதர் என்று பெயர். ‘அனல் வாதம், புனல் வாதம் நடந்த ஊர் அது. திருஞானசம்பந்தரின் எரியாத திருநள்ளாற்றுப் பதிகம் பாடப்பட்டதும் இங்கேதான். பனையோலையின் நடுப்பகுதி அகம்.  அந்தப் பகுதியில்தான் தமிழிலக்கியங்கள் இலக்கணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. தமிழ்த்தாயின் தவத்தாள் பனந்தாளே! இவற்றையெல்லாம் பதிவு செய்வதற்காகவே ஓலைவிரித்துப் பல்லாயிரம் ஆண்டு தவம் கிடந்ததாம் பனைமரம்! அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் வேதங்கள் எல்லாம் தமிழினத்தின் மூச்சு என்கிறார். இன உணர்வோடு ஒன்றுவதுதான் மரபோடு ஒன்றுவது!. இத்தனைச் சிந்தனைகளையும் உள்ளடக்கிய வரிகளை இப்படி எழுதுகிறார் கவிஞர்!

    “மூக்காய்த் தமிழரின்
    மூச்சினைத் தாங்கிட
    முகிழ்த்தவோர் அதிசய முகம்நீ!–தமிழ்ப்
    பாக்களை ஏந்தவே
    ஆண்டுபல் லாயிரம்
    காத்திருந்தவோர் அகம்நீ!”

    பனைமரம் நூறாண்டுகளுக்கு மேல் வாழும் என்பது தாவரவியல் உண்மை. இந்த அறிவியல் உண்மைக்குக் கவிதைச் சாயம் பூசுகிறார் கவிஞர். அது என்ன கவிதைச் சாயம்? அணியழகுதான் கவிதைச் சாயம் என்பது. பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்தும் எல்லையரும் பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல் இருப்பது தமிழ் என்பது  சுந்தரனார் வணங்கும் முறை. அழியாத தன்மை கொண்டது, தமிழ். தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் சுவடிகளில் சுமந்து கொண்டிருப்பதால் பனைமரத்தின் வாழ்நாள் கூடியதாம். இது கவிஞர் பார்வை!

    “வாக்கினில் உயர்ந்த
    வண்டமிழ் சுமந்ததால்
    வாழ்நாள் நீண்டதோ சொல்நீ!–அட
    பூக்கிற காலத்தில்
    புதுநூற் றாண்டையே
    பூத்திட வைக்கிறாய் வெல்நீ!”

    இந்தப் பாடலில் புதுநூற்றாண்டையே பூத்திட வைக்கிறாய் என்பதும் ஒரு தாவரவியல் உண்மை. அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி பூக்கும் என்பதுபோலப் பனைமரம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் பூக்குமாம். மானுடச் சமுதாயத்தின் நாகரிகமும் பண்பாடும் நூற்றாண்டுகளில் (இரண்டாம் நூற்றாண்டு, மூன்றாம் நூற்றாண்டு என்பதுபோல) வரையறை செய்யப்படுவதால் பனைமரத்தின் நூற்றாண்டு ஒரு நாகரிகத்தையும் பண்பாட்டையும் புதுப்பிக்கிறதாம்.!

    “ஆக்கநீர்த் தேக்கமும்
    அருந்திறல் ஊக்கமும்
    அளித்திடும் அரும்பனை தாய்நீ! –பல
    மாக்கவிக் குழுக்களை
    மடிசுமந் ததனால்
    மரங்களில் உயர்திணை யாய்நீ!”

    என்னும் இறுதிப் பகுதியில்தான் பனைமரத்தை அதன் உயரத்தைவிட இன்னோர் உச்சிக்குக் கொண்டு செல்கிறார் கவிஞர். பாலைநிலத் தாவரமாகப் பனையிருப்பினும் அது ஆழமான நீர்ப்பிடிப்புப் பகுதியைத் தன்னைச் சுற்றிலும் கொண்டதாக இருக்கும். நீரை உறிஞ்சும் தன்மை அதற்கு இயல்பு. எனவேதான் அதற்கு நீர் பாய்ச்ச வேண்டிய தேவை அதிகமாக இருக்காது. நீரை உண்டு, கள்ளைத் தருவது பனை. இந்தப்  பாட்டின் முற்பகுதியில் ‘நாட்படு தேறல்’ என்றிருப்பார் கவிஞர். மூன்றையும் கூட்டிப் பார்த்தால் கவிதையின் நயமும் மரபாழமும் புரியக்கூடும். நீரை உண்ட பனை போதை தரும் கள்ளைத் தருகிறது. அதனைவிட மயக்கம் தரும் தமிழைத் தந்த புலவர்களைத் தாங்கி நிற்கிறது ஓலையில். ஒரே பொருளில் பதனீரும் கள்ளும் தேனும் கிடைக்கிறது என்பது நயமல்லவா? தன்னினும் மிக்கார் தமிழ்ச்சான்றோர் என்பதனை ‘மாக்கவிக் குழுக்கள்’ என்னும் தொடரால் உணர்த்தி, அப்பெருமக்களை வணங்கி மகிழும் அவையடக்கம் எண்ணி மகிழத்தக்கது.

    ‘உயர்திணை’ என்பதும் அஃறிணை என்பதும் ஓர் உயிருக்குள்ள அறிவின் அளவு பொறுத்தது. இது தொல்காப்பியக் கருத்து. அறிவின் எண்ணிக்கைக்கேற்ப உயிர்களின் எண்ணிக்கை அமையாது. உயிர் ஒன்றுதான். அறிவின் எண்ணிக்கைதான் கூடும். புல் ஒன்றுதான் அதற்கு அறிவு ஒன்று. நத்தை ஒன்றுதான் அதற்கு அறிவு இரண்டு. எறும்பு ஒன்றுதான். அதற்கு அறிவு மூன்று. வண்டு ஒன்றுதான். அதற்கு அறிவு நான்கு. மாடு ஒன்றுதான். அதற்கு அறிவு ஐந்து. மனிதன் ஒருவன்தான். அவனுக்கு அறிவு ஆறு. இதிலிருந்து உயிரினம் அப்படியே இருக்க அறிவுதான் மாறுபடுகிறது. கவிஞர் இதனைச் சிந்தித்திருக்கிறார். சிந்தித்துக் கற்பனை கலந்து எழுதுகிறார். என்ன எழுதுகிறார்? பனையோலையில் பத்தாயிரம் சான்றோர்களுடைய  கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றோர் ஒருவருக்கு ஆறு ஆறிவு என்றால் இத்தனையாயிரம் சான்றோர்களுக்கு எத்தனை அறிவு இருந்திருக்க வேண்டும். தமிழின் மேலுள்ள காதல் அவரை இப்படிச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஆறறிவு இருந்தாலே உயர்திணை. அது ஆறு இலட்சம் என எண்ணிக்கையில் மிகுந்திருந்தால்……….? பனையோலையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இலக்கிய, இலக்கணக் கர்த்தாக்களின் பேராற்றலை எண்ணுகிறார். எண்ணி எழுதுகிறார்.

    “மாக்கவிக் குழுக்களை
    மடிசுமந் ததனால்
    மரங்களில் உயர்திணை யாய்நீ!

    இந்தப் படைப்பாளரும் ஒரு கவிக்குழுவை நடத்திவருவதால் பனையோலைப் பங்காளிகளைக் குழுக்களாகக் கண்டு எழுதுகிறார். முதல் வரியில் ‘அரும்பனைத்தாய்’ எனச் சொல்லியதற்கு ஏற்ப இந்தவரியில் ‘மடிசுமந்ததனால்’ என எழுதியிருக்கும் நயம் கோடி பெறும்!

    மரத்தை மரமாகப் பார்ப்பது வேறு. விறகாகப் பார்ப்பது வேறு. மரக்கட்டையாகப் பார்ப்பது வேறு. சாரமாகப் பார்ப்பது வேறு. சங்கத் தமிழின் ‘அச்சகமாகப்’ பார்ப்பது வேறு. கவிஞர் உயர்திணைத் தாயாக்கியிருக்கிறார். அதற்கான காரணத்தில்தான் மரபுக் கவிதைக்கு இலக்கணம் கூறுகிறார். மரபை அடையாளப்படுத்துகிறார்.

    “கிளிவளர்த்தேன் பறந்து போனது
    அணில் வளர்த்தேன் ஓடிப் போனது
    மரம் வளர்த்தேன் இரண்டும் வந்தன!”

    என்பது மரம் பற்றிய கலாமின் பார்வை. அது மாறுபட்ட பார்வை. துரை.வசந்தராசனின் பனைமரப் பார்வை, பழுதுபடாப் பார்வை. மரபுப் பார்வை. பிறரெல்லாம் பனைமரத்தின் பயன்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தபோது அதனைத் தமிழ்த்தாயின் தவச்சாலையாகத் தாய்வீடாகப் பார்த்திருக்கிறார் துரை.வசந்தராசன்!

    யார் துரை.வசந்தராசன்?         

       

    பண்ணைத் தமிழ்ச்சங்கம், துரை.வசந்தராசன்

    பண்ணை வைத்துக் கோழி வளர்த்தவர் உண்டு. மாடு வளர்த்தவர் உண்டு. ஆடு வளர்த்தவர் உண்டு. செடி வளர்த்தவர் உண்டு. கொடி வளர்த்தவர் உண்டு. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அக்காலப் பாண்டியரைப்போல் பண்ணை வைத்துத் தமிழ் வளர்க்கும் தற்காலப் பாண்டியர் இவர்.

    துரைசாமியின் மகன் பெருஞ்சித்திரனார். துரைவேலுவின் மகன் வசந்தராசன். அவரைப் போலவே தமிழையும் தாயையும் தாங்குகிறார்கள்.

    மரபைப் பிறரெல்லாம் காயிலும் கனியிலும் தேடிக்கொண்டிருந்தபோது இவர்தான் மரத்தில் கண்டெடுத்தவர்.  பிறர் எதுகை மோனைக்கே இறவாணத்தை நோக்கிச் சோர்ந்தபோது நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களின் உறவுக்குக் கைகொடுத்தவர். இளங்கலை வேதியியல் படிப்புச் சோதனையைப் பாடுபொருளிலும் வடிவத்திலும் செய்து காட்டியவர். கவிதையில் கலந்தவர். கருத்துகளால் சிறந்தவர்.

    உரத் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இக்கவிஞர், பண்ணையில் தமிழ் வளர்த்து மாதவரத்தில் ‘கவிதைப் பால்’ கறந்து கொண்டிருக்கிறார். கவிதையை இவர் விட்டாலும் கவிதை இவரை விடுவதாக இல்லை. கவிதையின் அனைத்து வடிவங்களையும் கைப்பேசியில் வைத்திருக்கும் இவர் தற்காலத்தில் ‘மரபுக் கவிதை’ என்னும் சொற்பொருள் உணர்ந்த சிலருள் ஒருவர்.

    ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்?’, ‘கறுப்பு வெளிச்சம்’, ‘சூரியச் சிறகுகள்’, ‘வானவில் குதிரைகள்’ என்பன போன்ற முரண்களைத் தலைப்பிட்டு இவர் எழுதி வெளியிட்டவையும் பிறர் எழுதி இவர் தொகுத்தவையும் இவருக்கு அகமாகவும் புறமாகவும் அமைந்திருக்கின்றன. வேண்டிய அளவுக்கு விருதுகளைக் குவித்திருக்கும் இவருடைய கவிதைகள், மொழியினத்தின் முன்னேற்றத்தையே கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. இவரது கவிதைகளை ஆய்வு செய்வதற்குப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கலாம். ஆனால் ஆய்வாளர் கிடைப்பதுதான் அருமை!

    கவிஞனுடைய ஆற்றலைத் திறனாய்வு செய்வது வேறு. இது இவருடைய கவிதைகளுக்கானது. இதனைத் திறனாய்வு என்பதைவிடக் கவிதையனுபவத்தின் கனிவான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். இந்த அனுபவம் தொடரும்……

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 23

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 23

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘ஒன்றுக்குப் ‘பத்தான’ உவமங்கள்

    முன்னுரை

    ஒரு பொருளுக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்தியதுதான் தமிழ்க்கவிதைகளின் தொடக்கக் கால உவமக் கோட்பாடு. ‘யானை போலப் பிளிறினான்,  வேங்கைபோலப் பாய்ந்தான், அரிமா போல முழங்கினான் என ஒரு வினைக்கு மற்றொரு வினையை உவமமாக்குவதும் மங்கையின் மருட்சிக்கு மானின் பார்வையையும், தோளுக்கு மூங்கிலையும், கழுத்துக்குச் சங்கையும், கண்ணுக்குக் குவளையையும், முகத்துக்குத் தாமரையையும், கூந்தலுக்கு மேகத்தையும், பல்லுக்கு முல்லையையும், பாதத்துக்கு நாய் நாக்கையும் உவமையாக்குவதை மரபாகக் கொண்டு விளங்குவது தமிழ்க்கவிதை உலகம். ஆனால் இதே கவிதையுலகத்தில் இன்னொருவகை உவமக்கோட்பாடும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஒன்றுக்கு மற்றொன்றை உவமையாக்குவது மட்டுமன்று ஒன்றுக்கு ஒரே நேரத்தில் பலவற்றை உவமையாக்கும் போக்கையும் தமிழ்க்கவிதை உலகம் அறிந்திருந்தது. பொருளாயினும் உணர்ச்சி வெளிப்பாடாயினும் பொருள் முற்றவும் புலப்படவும் உணர்ச்சி முற்றவும் வெளிப்படவும் கவிஞர்கள் ஒரு பொருளுக்குப் பல உவமைகளைப் பயன்படுத்தியும், ஒருநேர உணர்ச்சிக்குப் பலவகையான உவமைகளைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். மரபுவழியாக வளர்ந்துள்ள இவ்வுவமக் கோட்பாட்டைச் சில எடுத்துக்காட்டுக்களால் இக்கட்டுரை விளக்குகிறது.

    தலைவனுக்கு உவமங்களான தலைவி

    தலைவியின் நலம்பாராட்டும் தலைவன் கூற்றாக அமைந்திருக்கும் குறட்பா ஒன்று தலைவியின் பேரழகைப் படம்பிடித்துக் காட்டும்.

    முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.”

    என்னும் குறட்பாவில் தலைவியை முழுமையாகக் கட்புலனுக்குக் கொண்டுவரும் தலைவன் ஐந்து உவமங்களைத் தொகுத்துச் சுட்டுவதை அறியலாம். தலைவியை வேய்த்தோளவள் என்றே நோக்குகிறான். ‘வேய்த்தோளவட்கு’ என்னும் தொடருக்குப் ‘பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது’ என்னும் ஆசிரியர் பரிமேலழகரின் உரைநுட்பம், தலைவியை எக்காலத்தும் உவமித்து ஒப்புநோக்கும் தலைவனின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதை உணரமுடியும்.

    மகளுக்கும் தாய்க்குமுள்ள உறவு

    தனக்கு இனிப்பான தலைவியை உவமங்களால் காணும் தலைவனைப் போலவே, தனக்குப் பயன்படாத மகளை எண்ணி மருகும் தாயையும் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் சுரம் நாடிச் சென்ற செவிலியை நோக்கியுரைக்கும் அறிவில் முதிர்ந்த அந்தணர் உரையில்,

    பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்?
    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
    நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என் செய்யும்?
    ஏழ்புணர் இன்னிசை முரல்பவரக்கு அல்லதை
    யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என் செய்யும்?”

    எனப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமங்கள் தலைவி தலைவனோடு கூடிய இல்லறக் கடமைக்கு உரியவளேயன்றிப் பெற்ற காரணத்தாலேயே பெற்றவளுக்குப் பயன்பட வேண்டும் கடப்பாடில்லை என்னும் நடைமுறை உண்மையை உணர்த்தி நிற்கின்றன. பாலை நிலத்;தில் கலங்கிக் கையற்று நிற்கும் தாய்க்கு உணர்த்த வேண்டிய உண்மை ஒன்றாயினும், உவமங்கள் பலவாய் நின்று உணர்ச்சியின் கன அளவை மிகுவித்துக் காட்டுவதைக் காணலாம். இல்லறக் கடமை தொடங்கும் போது பிறந்த இடத்துப் பாசம் பின்னுக்குச் சென்றுவிடுகிறது என்னும் வாழ்வுண்மையை உணர்த்துதற்கும் இவ்வுவமைகளின் பங்களிப்புச் செம்பாகம் அன்று., பெரிது.

    கண்ணகிக்கு இளங்கோ காட்டும் உவமைகள்

    ‘செந்தமிழ்ச் செல்வியும் சிலப்பதிகாரத் தலைவியுமான’ கண்ணகியை அறிமுகம் செய்யும் கவி இளங்கோ, அவளுடைய தோற்றப்பொலிவுக்கும் கற்பு மாண்புக்கும் தனித்தனியான உவமங்களைக் கூறியிருக்கிறார்.

    போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
    தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
    மாதரார் தொழுதேத்த

    புறஅழகு நிரம்பியவள் கண்ணகி என்பதைக் கருதித் திருமகள் அழகையும் கற்பு மாண்பிற்கு அருந்ததியின் கற்பையும் உவமமாக்கியிருக்கிறார். ‘பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என மாதவியைப் பின்னாலே அறிமுகம் செய்ய இருப்பதால்  கண்ணகி பிறப்பினாலும் பண்பினாலும் குறைபாடுடையவள் அல்லள் என்பதைப் புலப்படுத்துதற்காக அவளுடைய கற்பு மாண்புக்கு அருந்ததியை உவமமாக்கியிருக்கிறார்.

    பாஞ்சாலிக்கு வளர்ந்த சேலை

    பஞ்ச நதிகள் ஓடுகிற நாட்டில் பிறந்தவள் பாஞ்சாலி. பாரதத்தில் பஞ்சபாண்டவருக்கு யாகபத்தினியாகத் திகழ்ந்தவள். துரியோதனன் அவையில் அவள் மானபங்கப்படுத்தப்பட்ட பொழுது கோவிந்தன் அருளால் அவளுக்குப் புடவை வளர்ந்த நிலையை விவரித்துக் காட்டும் நிலையை மகாகவி  ஐந்து உவமங்களால் காட்சிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

    பொய்யர்தம் துயரினைப் போல்நல்ல
    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்
    தையலர் கருணையைப் போல் –  கடல்
    சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்
    பெண்ணொளி வாழ்த்திடுவார் அந்த
    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்
    கண்ணபிரான் அருளால்தம்பி
    கழற்றிடத் கழற்றிடத் துணி புதிதாய்
    வண்ணப் பொற்சேலைகளாம்அவை
    வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே

    இவ்வுவமைகள் வழிப் பாஞ்சாலியைத் தவம் பெற்ற தையலாகவே பாரதி நோக்கியிருக்கிறான் என்பதும், அவளைச் சாதாரண கவிதைப் பொருளாகவோ காப்பியப் பாத்திரமாகவோ எண்ணவில்லை என்பதும், ‘பொருளுக்கு உவமை’ என்னும் இயல்பான கவிதை அளவுகோலால் அவளை அளக்கவில்லை என்பதும் ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களால் அவள் சார்ந்த நிகழ்வுகளைச் சித்திரிப்பதே அவருடைய உட்கிடக்கை என்பதும் அனுமானத்தால் உணரத் தக்கதாகும். மேற்கண்ட உவமத் தொடர்களில் ‘பொய்யர்தம் துயரினைப்போல்’ என்பது குறிப்பிடத்தக்கது. பாஞ்சாலிக்குச் சேலை வளர்ந்தது அழகியல். பொய்யர்களுக்குத் துன்பம் வளர்வது அறவியல். அழகியல் சார்ந்த கவிதைப் பொருளை விளக்குதற்கு அறவியல் சார்ந்த வாழ்வுண்மை ஒன்றை உவமமாக்குவதும் தமிழ்க்கவிதைகளில் காணப்படும் உவமக் கோட்பாடுகளில் ஒன்று.

    தமிழுக்கும் தனக்குமுள்ள உறவு

    பாரதியைக் குருவாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசன் தமிழையும் தன்னையும் பிரித்தறிய இயலாமல் பின்னிக் கிடந்தவர். அவருக்கு முன்னாலும் பின்னாலும் அவர் போலத் தமிழ் பாடியவர் எவருமிலர் என்று துணிந்து சொல்லலாம். மொழியை உயிருக்கு நிகராக அவர் கருதியிருக்கிறார் என்பதைச் ‘செந்தமிழே உயிரே’ என்பது போன்ற வரிகளால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அதனை இயற்கையின் அழகுக் கூறுகளில் ஒன்றாகவும் அவர் கருதினார் என்பது, அவருடைய ‘அழகின் சிரிப்பு’ என்னும் நூலின் இறுதியாகத் தமிழைப் பாடியிருப்பதால் உணர முடியும். அத்தகைய தமிழுக்கும் தனக்கும் உள்ள உறவை,

    “வெண்ணிலாவும் வானும் போலே
    வீரனும் கூர்வாளும் போலே
    வண்ணப்பூவும் மணமும் போலே
    மகர யாழும் இசையும் போலே
    கன்னல் தமிழும் நானும் அல்லவோ?”

    என்னும் வரிகளால் புலப்படுத்திக் காட்டுகிறார்.  ஒன்றையொன்று பிரிக்க இயலாது என்பதற்கும் பிரிந்திருக்க இயலாது என்பதற்கும் பிரித்தால் பயனில்லை என்பதற்கும் ஒன்றின்றி மற்றொன்றில்லை என்பனவுமான கவிஞனின் உள்ளக் கிடக்கை முழுமையும் இவ்வுவமைகளால் வெளிப்பட்டு நிற்கின்றன என்பதைக் காணமுடியும்.

    உவமங்களால் அமைந்த தின்பண்டங்கள்

    குழந்தைகளுக்குப் பிடித்தமானவை இரண்டு. ஒன்று விளையாட்டு. மற்றொன்று தின்பண்டம். ‘தின்பண்டம்’ என்னும் சொல்லே அதன் தொடர். வினையைக் குறிப்பதைக் காணலாம். தாயொருத்தித், தூங்காத தன் பெண் குழந்தையைத் தூங்க வைக்கச், செய்து தருவதாகச் சொல்லும் தின்பண்டங்களின் நிரலைப் பாவேந்தர் அடுக்கிக் காட்டுகிறார்.

    ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
    தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?
    கொட்டித் தும்பைப்பூ குவித்ததுபோல் உன்னெதிரே
    பிட்டு நறுநெய்யில் பிசைந்து வைக்க மாட்டேனா?
    குப்பை மணக்கக் குடித்தெருவெல்லாம் மணக்க
    அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?
    மீன் வலை சேந்தும் கயிற்றை வேய்ந்த வளையம்போல்
    தேன்குழல் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
    விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத்ததைப் போல்
    உழுந்து வடை நெய்யொழுக உண்ணென்று தாரேனா?
    தாழையின் முள்போல் தகுசீரகச் சம்பா
    ஆழ உரலில் இடித்த அவலைப்
    கொதிக்கும் நெய்தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
    பதக்குக்கு ஒருபதக்காய் பாகும் பருப்புமிட்டே
    ஏலத்தைத் தூவி எதிர்வைக்க மாட்டேனா?”

    பாவேந்தர் பட்டியலிடும் தின்பண்டங்களுக்கான உவமைகள் இயற்கையைச் சார்ந்தும் குழந்தைகளின் உள்ளங் கவர்வனவாகவும் இருப்பதோடு தின்பண்டங்களின் பக்குவத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன என்பதை அறியலாம்.

    ஒரே செயலுக்குப் பல உவமைகள்

    ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சொல்லும் மரபைப் பின்பற்றி ஒரே வினைக்குப் பல உவமங்களை அடுக்கிக் காட்டி உள்ளத்தில் பதிய வைக்கின்ற முயற்சியும் தமிழ்க்கவிதைகளில் காணக்கிடக்கிறது.

    சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
    சிலைதன்னைத் துகில் கொண்டு மறைத்தல் போலும்
    இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
    இடைச்செல்ல முயல்கின்ற காட்சி போலும்
    மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
    வைரத்துட் புதைந்துள்ள தன்மை போலும்
    ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
    ஒருவர்க்கும் தெரியாமல்  மறைத்தல் போலும்

    ஒருமேனி மற்றொன்றில் ஒடுங்கிப் போக,
    ஒருவர்தான் மற்றொருவர் எங்கே என்று
    புரியாமல் பார்ப்போர்கள் அதிச யிக்கப்
    புனலோடு புனலாக அவனைக் கன்னி
    தெரியாமல் மறைத்துத்தன் தேனு தட்டைத்
    தேய்க்கின்றாள் தேய்க்கின்றாள் மாறி மாறி
    இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
    இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே

    என அமைந்திருக்கும் கண்ணதாசன் பாடல் வரிகள் அகத்திணை நிகழ்வை ஏழு உவமங்களால் காட்சிப்படுத்தியிருக்கிறது. இது அகவிலக்கண மரபுக்கு மாறுபட்டிருக்கிறது என்பதைக் காட்டிலும் மரபுக்கு ‘ஊட்டச்சத்து’ வழங்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

    எப்படியெல்லாம் மழை பெய்கிறது?

    மொழி தெரிந்த யாருக்கும் எந்த நிலையிலும் மரபின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அது தாய்வழிப் பண்பு போன்றது. ஒரு சாதாரண திரையிசைப் பாடலில் கூட அந்த உவம மரபு அமைந்து விடுவதைக் காணலாம். காதலர்கள் மழையில் நனைகிறார்கள். அவர்கள் மழையைப் பற்றிப் பாடியிருக்கலாம் அல்லது தங்கள் காதலின் தண்மையைப் பறறிப் பாடியிருக்கலாம். இங்கே குறிப்பிடப்படுவது மழையில் நனைந்து காதலர்கள் பாடுவது மரபன்று. உவமத் தோரண மரபே சுட்டப்படுகிறது.

    கஷ்டப்படும் ஏழை சிந்தும்
    நெற்றி வேர்வை போலே
    அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும்
    கண்ணீர்த்துளியைப் போலே
    முட்டாப் பயலே மூளையிருக்கா
    என்று ஏழை மேலே
    துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற  வார்த்தை போலே

    வழிகிற வேர்வை, வழிகின்ற கண்ணீர் கொட்டுகிற சொற்கள் இவற்றின் வேகம் உண்மையில் மழையின் கொட்டுகிற வேகத்தைவிடக் குறைவுதான்!, கவிதையல்லவா?, படைப்பாளன் என்ன செய்கிறான்? உவமத்திற்குத் தரவேண்டிய உயர்ச்சியை உவமத்தைக் கொண்டு பொருண்மையின் அடர்த்தியை மிகுவிக்கின்றான். சரியா? ‘மழை போல அழுதான், மழைபோலப் பேசினான், மழைபோல வேர்வை’ என்றால் உவமம் இயல்பான நிலையில் பயன்படுத்தப்பட்டு உவமங்களின் கோவையாக நின்றுவிடும். மாறாக, வேர்வைப்போல் பெய்தது, கண்ணீரைப்போல் பொழிந்ததுக் கடுஞ்சொற்களைப் போல் கொட்டியது என்கிறபோது உவமங்கள் சமுதாயத்தைப் படம்பிடிக்கப், பொருண்மையாகிய மழை அழகியலை அரங்கேற்றக் கவிதை களிநடம் புரிகிறது. கவிஞனின் படைப்பாற்றல் கடவுளின் படைப்பாற்றல்!

    நிறைவுரை

    ‘ஒன்று’ என்பது ‘ஒன்றோடொன்று’ என்றும் ‘ஒன்றைப்போல் ஒன்று’ என்றும் விரியும். முன்னது கணிதம். பின்னது இலக்கியம். இவை தம்முள் மாறுபடாது. ஒன்றைப்போல் ஒன்று என்பது காலப்போக்கில் ஒன்றைப்போல பல அல்லது ஒன்றுக்குப் பல என்னும் நிலை வந்தது. அந்த நிலையில் ஒரு பொருளுக்கு ஓர் உவமம் என்ற நிலை மாறியது. உவமங்களின் எண்ணிக்கை கூடியது. உவமங்களே தம்முள் தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் உயர்நிலை வந்தது. இந்த உயர்நிலை உவமத்தின் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தி நிற்பதோடு பொருண்மையை வெகு துல்லியமாக விளக்கிக் காட்டவும் பயன்பட்டது. ஒன்றுக்குப் பல என்னும் உவம மரபு சங்க இலக்கியத்திலேயே தொடங்கி இன்று வரை நீடிக்கிறது என்பதும் சிந்தனைக்குரியதே!

    (தொடரும்…)

    Share