கதையும் மொழிதலும் – 5 சி.சு. செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran78.blogspot.com
9360623276

வாடிவாசல் நாவல் மூலமாக நன்கு அறியப்பட்டவர் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா. என்றாலும் தொடக்கக் காலங்களில் ‘எழுத்து’ பத்திரிகையின் மூலமாகவே இவர் அறியப்பட்டு வந்தார். எழுத்தாளர்கள், விமர்சகர்கள் சி.சு.செல்லப்பா எழுத்து இதழை நடத்தியவர் என்று அழுத்தமாகக் கூறி வந்ததே இதற்குக் காரணம். இன்றைய சூழ்நிலையில் எழுத்து பத்திரிகையை நடத்தியவர் என்பதற்கு  இணையாக இன்று நாவல்கள் மூலமாகவும் சிறுகதைகள் மூலமாகவும் அறியப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவரின்  ‘குற்றப் பரம்பரை’ என்ற சிறுகதை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இலக்கிய வரலாற்றில் சி.சு.செல்லப்பா காந்தியச் சிந்தனை, மரபான தமிழ் வாழ்வியல் சிந்தனை சார்ந்த இயக்கப் போக்கும் க.நா.சுப்ரமணியம் நவீன சிந்தனையும் புதுமைகளை அடையாளம் காணும் தன்மையும் கொண்ட இயக்கப் போக்குமாக இரண்டு வகையான செயல்பாடுகள் இருந்து வந்தன. க.நா.சுப்பிரமணியம் தனது இலக்கியச் சிந்தனையில் சி.சு.செல்லப்பாவின் செயல்பாடுகளையோ இக்குழுவில் இருப்பவர்களின் செயல்பாடுகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. என்றாலும் எந்த அங்கீகாரத்திற்கும் கவலைப்படாமல் தங்களின் இலக்கியச் செயல்பாட்டைத் தொடர்ந்து செய்து வந்தவர்களில் சி.சு.செல்லப்பாவும் ஒருவர்.

தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் இத்தகைய இரண்டு போக்குகள் தொடக்கக் காலங்களில் இருந்து வந்தன. மணிக்கொடி, எழுத்து என்கிற இலக்கியப் பத்திரிகைகளுக்கு இணையாக அல்லது மாற்றாக வேறு சில பத்திரிகைகள் செயல்படத் தொடங்கின. இவற்றின் ஊடாகத் தமிழ் இலக்கியத்தை, வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும். கடந்த 20 ஆண்டுகளாகச் சி.சு.செல்லப்பாவின் இலக்கியப் படைப்புகள் மீதான பார்வையும் முக்கியத்துவமும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. சி.சு.செல்லப்பா தொண்ணூற்று ஏழு சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைக் காவ்யா பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இவரின் சில முக்கியமான சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இன்றைக்குப் பரவலாகப் படிக்கப்படும் நாவலாக வாடிவாசல் விளங்குகிறது. இத்தகைய இலக்கியச் சூழ்நிலையில் சி.சு.செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’ மிக முக்கியமான சிறுகதையாக விளங்குகிறது.

சி.சு.செல்லப்பாவின் அனைத்துக் கதைகளுமே மதுரை ஜில்லாவை மையமாக வைத்து எழுதப்பட்டவை. இவர் சார்ந்த பிராமணக் குடும்ப வாழ்க்கை, உசிலம்பட்டி வட்டாரக் கள்ளர் வாழ்க்கை, சின்னமனூர் வத்தலக்குண்டு சார்ந்த விவசாயிகளின் வாழ்க்கை என்று இவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை இது. சி.சு.செல்லப்பாவின் கதை மொழி சற்று இலகுவானது. வாசகனை மன ரீதியில் தயார்ப்படுத்துவதற்குச் சி.சு.செல்லப்பாவும் ஒரு  கதாபாத்திரமாகக் கதையைத் தொடங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.  இக்கதையும் சி.சு.செல்லப்பா அவருடைய நண்பரோடு ரயிலில் பயணப்படும்போது ஏற்படுகின்ற அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தால் சமூகத்தில் ஏற்படும் சிக்கலை, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையின் மூலமாக எடுத்துக் கூறுவதாகக் கதை பின்னப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இரண்டு அரசியல் கருத்துப் போக்குகள் முக்கியமானவையாக விளங்கின. காந்தியச் சிந்தனை மரபும் இடதுசாரி சிந்தனை மரபும் மக்களிடையே செல்வாக்குச் செலுத்திய சிந்தனை மரபாக இருந்து வந்தன. சி.சு.செல்லப்பா, காந்தியச் சிந்தனை மரபு கொண்டவராக விளங்கினார். விடுதலைப் போராட்டத்தின் உச்ச காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகத் தீவிரமாகச் செயல்பட்ட ஒன்றாக விளங்கியது. இதுபோன்ற பல சமூகச் சிக்கல்களுக்குக் காங்கிரஸ் கட்சி முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தித் தரும் என்று மக்கள் பரவலாக நம்பிய காலக்கட்டம் அது.

உசிலம்பட்டி வட்டாரத்தைச் சார்ந்து வாழுகின்ற மக்கள், கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் களவுத் தொழிலை இயல்பாகக் கொண்டவர்களாக விளங்கினர். இதனை மாற்றும் விதமாக அன்றைய ஆங்கிலேய அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மக்கள் நிலம் சார்ந்தும் தொழில் சார்ந்தும் வாழப் பழகிவிட்ட பின்புகூட இச்சட்டம் நடைமுறையில் இருந்தது. பலர் பாதிக்கப்பட்டனர். அத்தகைய பாதிப்பிற்கு உள்ளான ஒருவரின் வாழ்க்கையே இக்கதை. உசிலம்பட்டி வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்ற, களவுத் தொழிலைச் செய்து பழக்கப்பட்ட (வீரண்ணத்தேவர்) ஒருவரிடமிருந்து கதை தொடங்குகிறது. பிறகு திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில் அவர் களவுத் தொழிலை விட்டுவிட்டுச் சிறிதளவு நிலம் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார். விவசாயத்தில் கிடைத்த வருமானத்தை வைத்துச் சொந்தமாக வீடு கட்டி ஒரு சம்சாரியாக  வாழ்ந்து வருகிறார். அவனது (செல்லி)மகளின் மேல் அவருக்கு அளவுகடந்த அன்பு. அவரது மனைவி, மகளைப் பெற்றுவிட்டு பிரசவத்தில் இறந்து விடுகிறாள்.  இதனால் தனது மகளின் மேல் உயிரையே வைத்திருக்கிறார்.

அவர் அவளுக்காகவே வாழவும் தொடங்கிவிட்டார். தனது முழு வாழ்க்கையையும் தனது மகளை வளர்ப்பதற்கே என்று பாசத்தோடு வாழ்ந்து வருகிறார். அவர் மகளைப் பிரிய மனமில்லாது தனது அக்காள் மகனையே அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக அமர்த்திக்கொண்டார். மருமகனுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதனால் மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்லத் தயாராகிறான். இதனைக் கேள்விப்பட்ட வீரண்ணனுக்கு மிக வேதனையாக இருக்கிறது. எப்படி அன்பு மகளை விட்டுப் பிரிந்து செல்ல முடியும் என்று அவர் வருத்தப்படுகிறார். என்றாலும் கணவன் எங்கு செல்கிறானோ அங்குச் செல்ல வேண்டிய கடமை மனைவிக்கு இருக்கிறது என்பதால் அப்பாவை விட்டுக் கணவனோடு செல்லத் துணிகிறாள்.  செல்லி எவ்வளவு சமாதானம் சொல்லியும் கணவர் தனது முடிவில் மாறவே இல்லை.

பிறகு மருமகனின் சிந்தனைக்கு உடன்பட்டு மகளை வெளிநாடு செல்ல அனுப்பி வைக்கிறார்.  தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தைச் சி.சு.செல்லப்பா மிக அற்புதமாக இக்கதையில் எடுத்துக் கூறியுள்ளார். எத்தகைய சூழலிலும் கண்கலங்கக் கூடாது என்று தெரிந்தாலும் மகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்கலங்கி நிற்கிறார். திடீர் யோசனையில் நாகப்பட்டினம் வரைக்கும் கொண்டு விட்டுவர, அங்கிருந்து ரயிலில் ஏறுகிறார். ஆனால் குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தில் கைதானவர்கள், ஊரைவிட்டு வெளியே செல்வதற்குப் போலீசிடம் தெரியப்படுத்த  வேண்டும். அவசரத்தில் கிளம்பிவிட்ட அவருக்கு இது மிகப் பெரிய சிக்கலாக மாறியது. அருகில் குடியிருப்பவர்களால்  காவல் நிலையத்திற்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

நாகப்பட்டினத்தில் கைது செய்யப்படுகிறார் வீரண்ணன். இதனை மகள் அறிந்துகொள்ளக் கூடாது என்று விரும்புகிறார். காவல் துறையால் கைது செய்யப்படும் அவர், நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கு இவரே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் முடிந்து திரும்பி வருகிற அதே ரயிலில் எழுத்தாளரும் அவரின் நண்பரும் பயணிக்கிறார்கள். இவ்வாறு செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்துத் திரும்புகின்ற அவரது சொந்த வாழ்க்கையே கதையாகப் பின்னப்பட்டுள்ளது. இவரின் கதையைக் கேட்ட அனைவரும் கண்கலங்கி நிற்கிறார்கள். அந்த அளவிற்கு ஒரு கொடூர சட்டமாகக் குற்றப் பரம்பரைச் சட்டம் விளங்குகிறது. அருகில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்காரர் சொல்லுகிறார். ‘ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய காரியம், இந்தச் சட்டத்தை நீக்குவது தான்’ என்று. இவ்வாறு கள்ளர் சமுதாயத்தின் சமுதாயச் சிக்கலைப் பின்புலமாகக் கொண்டு மகள் – தந்தையின் பாசப் போராட்டத்தின் அடிப்படையில் கதைப் பின்னப்பட்டுள்ளது. கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், இயல்பான மனிதர்கள் ஆசாபாசங்களுக்கு உட்படக் கூடியவர்கள், அவர்கள் வாழுகின்ற பகுதியில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாத காரணத்தினால் அவர்கள் களவுத் தொழிலுக்கு மாறினார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படும் பொழுது அவர்கள் மற்ற பகுதியைச் சார்ந்த மக்களைப் போலவே வாழக்கூடியவர்கள் என்பதை இங்குக் காணமுடிகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தங்களை மாற்றிக்கொண்ட பிறகும் கூட இந்த இழி (களவு – கள்ளர்) சொற்களில் இருந்து அவர்களால் மீள முடியாத சமூகக் கொடுமையை இக்கதையின் மூலம் எடுத்துக் காட்டுகிறார். சி.சு.செல்லப்பா தனக்கு ஏற்பட்ட வாழ்வியல் அனுபவத்திலிருந்து அக்கதையை இயல்பாக எடுத்துக் கூறுகிறார்.

சிறுகதையின் மொழிநடையும் கதை கூறலும் அவருக்கான தனித்த செயல்பாட்டில் இருக்கின்றன. உலக இலக்கியங்களில் நாட்டமும் உலக விமர்சன, தமிழ் விமர்சன மரபில் நாட்டமும் கொண்ட சி.சு.செல்லப்பா, தனது படைப்புகளை உருவாக்கும் போது அத்தகைய நவீன போக்குகளுக்கு, கதைகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல் கதையின் இயல்புப் போக்கில் அதை எடுத்துக் கூறுகிறார். கதையின் தொடக்கமும் செல்நெறியும் சற்றுத் தொய்வு ஏற்படுவதாகத் தோன்றுகிறது. கட்டமைப்பான மொழிநடையில் செய்யப்பட்டதாக  இல்லாமல் இயல்பு போக்கில் கதை இயங்கி செல்வது இவரின் சிறுகதைப் பாணியாக இருக்கிறது. தனது கதையின் போக்கு குறித்து இவரே ‘எனது சிறுகதைப் பாணி’ என்ற கட்டுரை நூல் எழுதியுள்ளார். இவரின் கதைகளை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவர் கூறுகிறார். அந்த வகையில் தான் எழுதுகின்ற கதைக்கு அதற்கான ஒரு பாணியை வைத்துக்கொண்டு செயல்பட்டு உள்ளதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

க.நா. சுப்பிரமணியம் போன்றவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியலை வெளியிடும் போது, கவனமாகச் சி.சு.செல்லப்பாவின் குழுவில் இயங்கும் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர்களின் இலக்கியப் பார்வை. இதனை உற்றுநோக்கும் பொழுது, இரண்டு முக்கியமான இலக்கிய வெளிப்பாட்டுச் செயல்பாடுகள் இருந்து வருவதை உணர முடிகிறது. ஒவ்வொன்றும் தனக்கான செயல்பாடுகளோடு தனக்கான உத்தி முறைகளோடு தனக்கான வாழ்வியல் பின்புலத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட விமர்சனக் குழுவினரின் புறக்கணிப்பால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய எழுத்தாளர்களின் மரபு அறியப்படாமலேயே போய்விட்டது. அத்தகைய மரபின் முக்கியமான எழுத்தாளராக சி.சு.செல்லப்பா விளங்கி வருகிறார்.

இன்றைய பரந்த விமர்சன உலகில் குறிப்பிட்ட குழுவினரால் விடுபட்ட மறைக்கப்பட்ட எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் வாசிப்பிற்குள் வருகின்றன. வாசிப்பின் ஊடாக இன்றைக்கு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாகச் சி.சு.செல்லப்பாவின் படைப்புகளும் வாசகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் க.நா.சு.வின் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியலைத் தாண்டி, அனுமானத்தைத் தாண்டி, இன்றைக்குப் பரவலாகப் படிக்கப்பட்டு வருகின்ற, சிந்திக்கப்பட்டு வருகின்ற எழுத்தாளராகச் சி.சு.செல்லப்பா விளங்குகிறார். சிறந்த கட்டமைப்பு கொண்டவை என்ற நிலையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சமூகப் பின்புலத்தை அறிந்துகொள்வதற்குத் தவிர்க்க முடியாத படைப்புகளாகச் சி.சு.செல்லப்பாவின் இலக்கிய ஆளுமை விளங்கி வருவதை இன்றைய இலக்கிய உலகம் அறிந்துகொண்டிருக்கிறது.

இவரின் பல படைப்புகள், இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கிய வரலாற்று எழுத்தாளர்களின் முக்கியமான படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகச் சி.சு.செல்லப்பா விளங்கி வருகிறார். ‘எழுத்து’ பத்திரிகையின்  பங்களிப்பை எடுத்துக் கூறி பலரால் இருட்டடிப்பு (இலக்கியங்களுக்காக) செய்யப்பட்ட சி.சு.செல்லப்பா, இன்று இலக்கியங்களால் பேசப்படும் எழுத்தாளராக மாறி வருகிறார். இவரின் தனித்துவமான பல சிறுகதைகளில் முக்கியமான ஒன்றாகக் குற்றப் பரம்பரை விளங்குகிறது. இன்றைய தலைமுறைக்குச் சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் அனுபவித்த பல இன்னல்களைப் பற்றித் தெரியாது. இன்றைய தலைமுறை அக்காலக்கட்டத்தின் சூழலை அறிந்துகொள்ள விருப்பத்தோடு இருப்பதும் தொடர்ந்து வாசிப்பதும் சி.சு.செல்லப்பாவிற்கான ஒரு முக்கியமான இடம் இப்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது. சி.சு.செல்லப்பா தனது படைப்பினூடாக இன்று அறியப்படும் எழுத்தாளராக விளங்கி வருகிறார்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க