படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 1

முனைவர் ச. சுப்பிரமணியன்.

பண்ணையார் பாடிய பனைமரம்

ஒரு மொழியில் இருக்கின்ற அனைத்து இலக்கியங்களும் சிறந்திருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஓரிலக்கியத்திலும் அனைத்துப் பகுதிகளும் இலக்கியத் தன்மையோடு இருக்க இயலாது. அவ்விலக்கியத்தின் ஒரு பகுதியிலுள்ள சில கவிதைகளுக்கும் இது பொருந்தும். இந்தப் பின்புலத்தில் அண்மையில் முகநூல் பதிவில் நான் சுவைத்து வியந்த ஒரு மரபுக் கவிதையைப் பற்றிச் சில எழுத நினைத்தேன். அதனால் எழுதுகிறேன்.

மரபுக்கவிதை என்றால் யாப்பமைவுப் பாடல்களே என்னும் மயக்கம் தமிழ்க்கவிதை உலகில் நிலவி வருவது ஒரு வேதனையான சேதி. பலமுறை பல பதிவுகளில் நான் இது பற்றி எழுதியிருக்கிறேன். இந்தக் கவிதை, என் விளக்கத்திற்குக் காட்சியாக இருக்கிறது என்பதால் இது பற்றி எழுதியாக வேண்டிய கடமை எனக்கு!

பனம்பூ தமிழர்களின் பாசப்பூ

பனம்பூவை ‘ஏந்து புகழ்ப் போந்தை’ என்பார் தொல்காப்பியர். அது சேரனின் அடையாளப்பூ. சேர, சோழ, பாண்டியர் என்னும் நிரலில் பின்னவை மாறுபட்டாலும் மாறுபாட்டுக்கு ஆளாகாமல் (தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் திருப்பூவணப்பதிகத்தில் ‘தென்னன்’ எனப் பாண்டியனை முன்னிறுத்துகிறார் ஞானசம்பந்தர்.) இந்த ஒரு இடத்தைத் தவிர மற்று எப்போதும் தலைமையிடத்தைப் பெறுபவர் சேரர். அதனால் பனம்பூ தமிழர்களின் தலைப்பூ!

வைரமுத்து கவிதையில் மரம்

மரமிருந்தால் பூ பூக்கும். அதனால் பெரும்பாலும் புலவர்கள் மரத்தையே பாடுகிறார்கள். கவிஞர் வைரமுத்து ‘மரங்களைப் பாடுவேன்’ என்று சொல்லி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நான் முன்பே சொன்னதுபோல அந்த நீண்ட ‘கவிதை’யில் ஒரு வரி மட்டும் கவிதையாகவே அமைந்திருக்கிறது.

“வெட்டி நட்டால் கிளை மரமாகுமே!
வெட்டி நட்டால் கரம் உடலாகுமா?”

என்று மரத்தினை மானுடத்தினும் மேம்படுத்திக் காட்டுவார். மரத்தின் பயன்களை நிரல்படுத்துகிறார் வைரமுத்து,

“உண்ணக் கனி! ஒதுங்க நிழல்!
உடலுக்கு மருந்து! உணர்வுக்கு விருந்து!
அடையக் குடில்! அடைக்கக் கதவு!
அழகு வேலி! ஆடத் தூளி!
தடவத் தைலம்! தாளிக்க எண்ணெய்!
எழுதக் காகிதம்! எரிக்க விறகு!”

என்னும் பகுதியைக் கவிதையாகக் கொள்ள எனக்கு மன உறுதி போதாது. பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனால் ‘மரத்தினால் உண்டாகும் பயன்கள்’ என்னும் தலைப்பில் எழுதப்படும் கட்டுரையாக வேண்டுமானால் கொள்ளலாம். சொற்கள் இருக்கின்றன. செய்திகள் இருக்கின்றன. எதுகை மோனைகள் கூட இருக்கின்றன. ஆனால் கவிதையிருப்பதாகக் கருத முடியவில்லை.  கவிதை இன்னும் நுண்ணியது. இவ்வாறு எழுதியனவற்றைப் ‘புதுக்கவிதை’ என்று அழைக்கச் சொல்லி வற்புறுத்துவது மிசா கால கொடுமையைவிடக் கொடுமையானது. அந்தக் கொடுமை என்னோடு போகட்டும்!

கண்ணதாசன் கண்ட பனை மரம்

ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாலும் மெட்டுக்குப் பாட்டெழுதும் பழக்கத்தாலும் திரைக்கதைகளை நன்கு உள்வாங்கிச் செரித்துக் கொண்டு எழுதும் தனித்திறனாலும் பாரதிதாசன், சுரதா நிரலில் கண்ணதாசன் இணைவதற்குக் கொஞ்சம் தடையாக இருக்கிறது. வேறுவகையாகச் சொன்னால் அவரது ஆற்றல் முழுமையும் திரைப்படப் பாடல்களுக்கே செலவழிக்கப்பட்டது. அதற்கான காரணங்கள் தனி ஆய்வுக்கு உட்பட்டன. அவர் பனை மரத்தின் வளர்ப்புப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். அதனையும் வாழை மற்றும் தென்னை மரத்தோடு இணைத்து எழுதியிருக்கிறார்.

“பனை மரத்துக்குத்
தண்ணீர் ஒருதரம்
பாய்ச்சிவிட்டால் போதும்! அது
தனைவளர்த்துத்தன்
தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்!”

இதுதான் அவர் எழுதிய பாடல்! யார் யாருக்கோ பொருந்தி வந்த டி.எம்.சௌந்தரராஜனின் குரல், இறுதிக்காலத்தில் அவருக்கே பொருந்தாமல் போனது போலக் கண்ணதாசன் எழுதிய இந்த வரிகள், கண்ணதாசனுக்கே பொருந்தவில்லை என்பதைக் கற்பார் உணரலாம். பிறகுக் கவிதைக்கு எப்படிப் பொருந்தும்? இந்தப் பின்புலத்தில்தான் சில நாள்களுக்கு முன்பாக முகநூல் பதிவில் கவிதை ஒன்றினைக் காணும் பேறுபெற்றேன்.

பைந்தமிழ் இலக்கியங்களில் பனை

தமிழ்க்கவிதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உவமங்கள் சிலவற்றில் பனங்கிழங்கு தனியிடம் பெறுகிறது. நாரையின் அலகுக்குப் பனம்படு கிழங்கின் வாய்ப்பிளவை உவமித்தார் சத்திமுத்தப் புலவர். (இதனைச்சில மேதைகள் சத்திமுற்றம் என்பார்கள். வழக்குச் சொற்களை அப்படியே கையாளுவதுதான் படைப்புக்குப் பெருமை. வழக்குச் சொற்கள் மொழியியல் ஆய்வுக்குப் பெருந்தடம்! உணவுக்கு நாம் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்ற பொருள்களுக்குப் பழந்தமிழ்நாட்டின் பெயர் ‘மறுமாத்தம்’. (இதனை இக்காலத்தார் ‘SIDE DISH’ என்று பெருமையுடன் சொல்வார்கள்) தற்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் பட்டீசுவரமே சத்திமுத்தம்! திருப்பனங்காடு, திருப்பனந்தாள், பனையூர், பனையபுரம் என்னும் ஊர்ப்பெயர்களோடு சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பனைமரத்திற்கு அழியாத அடையாளப் பெயராகத் திகழ்கிறது. ‘பனைத்துணையாக் கொள்வர்’ என்பது வள்ளுவர் வாக்கு. பலராமனின் கொடியிலும் வீமன் கொடியிலும் இடம்பிடித்த மரம்! புல், புல்பதி, புற்றாளி என்றெல்லாம் பனைமரத்தை வழங்குவார்கள்.

ஒற்றைப் பனைமரம் உயர்திணையே!

பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை –  பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரை ஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடையது  என்பது  தாவரவியல் பார்வை.

மரபியல் இலக்கணப்படி மரம் அஃறிணை. இந்தக் கவிதையின் தலைப்பு ‘மரங்களில் நீ உயர்திணை!’ தலைப்பு (முந்தானை) பொருத்தமாக இல்லையெனின் புடவை எடுபடாதல்லவா? அதனால்தானே நம் மகளிர் காலத்தைச் செலவழிக்கிறார்கள்!. இந்தக் கவிதை எழுதியவரும் அப்படிச் செலவழித்திருக்கிறார். திருமண நாளை ஒட்டி எழுதப்பட்டதால் ஒவ்வொரு காரணமாகப் பார்க்கலாம்.

தமிழிலக்கிய, இலக்கணங்கள் எல்லாம் பனையோலையில் எழுதப்பட்டன ஆதலின் பனைமரத்து நாக்குகளாகிய ஓலைகள் அவ்விலக்கியத் தேனை உண்டபின்னும் நக்கிச் சுவைப்பதால் அச்சுவை ஓலை நரம்புகளிலும் இனிக்கிறதாம். ஒவ்வொரு இலக்கண, இலக்கியமாக அவ்வோலைகளில் பதியப்படுவதால் அவை ‘நாட்படு தேறலாயினவாம்’. நாக்கு நரம்புகளிலிருந்து வேர்களுக்கு அந்தத் தேன் சென்று நாட்படு தேறலாக மாறியதால் அந்த வேர்களுக்குப் போதை தந்ததாம். அந்தப் போதையைத் தரும் தமிழிலக்கியங்களை வாங்கிக் குவிக்கும் பனையோலைகளை அவை வரமாகக் கொள்கின்றனவாம்!

“நாக்கின் நரம்பெலாம்
நாட்படு தேறல்
போதை வேர்களின் வரம்நீ!”

இந்த வரிகளில் ஒரு நுண்ணியம் அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.  பொதுவாக வேர்களிலிருந்துதான் கிளைகளுக்கு நீர் வரும். இங்கே (இலக்கியங்களைச் சுமந்த ஓலைகளிலிருந்து) வேருக்குப் பாய்கிறதாம் தேன்! எவ்வளவு அரிய கற்பனை?

தொடர்ந்து எழுதுகிறார். ‘திருஏடகம்’ என்பது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் அமைந்துள்ளதோர் ஊர். அங்கே குடிகொண்டிருக்கும் பெருமானுக்கு ஏடக நாதர் என்று பெயர். ‘அனல் வாதம், புனல் வாதம் நடந்த ஊர் அது. திருஞானசம்பந்தரின் எரியாத திருநள்ளாற்றுப் பதிகம் பாடப்பட்டதும் இங்கேதான். பனையோலையின் நடுப்பகுதி அகம்.  அந்தப் பகுதியில்தான் தமிழிலக்கியங்கள் இலக்கணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. தமிழ்த்தாயின் தவத்தாள் பனந்தாளே! இவற்றையெல்லாம் பதிவு செய்வதற்காகவே ஓலைவிரித்துப் பல்லாயிரம் ஆண்டு தவம் கிடந்ததாம் பனைமரம்! அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் வேதங்கள் எல்லாம் தமிழினத்தின் மூச்சு என்கிறார். இன உணர்வோடு ஒன்றுவதுதான் மரபோடு ஒன்றுவது!. இத்தனைச் சிந்தனைகளையும் உள்ளடக்கிய வரிகளை இப்படி எழுதுகிறார் கவிஞர்!

“மூக்காய்த் தமிழரின்
மூச்சினைத் தாங்கிட
முகிழ்த்தவோர் அதிசய முகம்நீ!–தமிழ்ப்
பாக்களை ஏந்தவே
ஆண்டுபல் லாயிரம்
காத்திருந்தவோர் அகம்நீ!”

பனைமரம் நூறாண்டுகளுக்கு மேல் வாழும் என்பது தாவரவியல் உண்மை. இந்த அறிவியல் உண்மைக்குக் கவிதைச் சாயம் பூசுகிறார் கவிஞர். அது என்ன கவிதைச் சாயம்? அணியழகுதான் கவிதைச் சாயம் என்பது. பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்தும் எல்லையரும் பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல் இருப்பது தமிழ் என்பது  சுந்தரனார் வணங்கும் முறை. அழியாத தன்மை கொண்டது, தமிழ். தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் சுவடிகளில் சுமந்து கொண்டிருப்பதால் பனைமரத்தின் வாழ்நாள் கூடியதாம். இது கவிஞர் பார்வை!

“வாக்கினில் உயர்ந்த
வண்டமிழ் சுமந்ததால்
வாழ்நாள் நீண்டதோ சொல்நீ!–அட
பூக்கிற காலத்தில்
புதுநூற் றாண்டையே
பூத்திட வைக்கிறாய் வெல்நீ!”

இந்தப் பாடலில் புதுநூற்றாண்டையே பூத்திட வைக்கிறாய் என்பதும் ஒரு தாவரவியல் உண்மை. அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி பூக்கும் என்பதுபோலப் பனைமரம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் பூக்குமாம். மானுடச் சமுதாயத்தின் நாகரிகமும் பண்பாடும் நூற்றாண்டுகளில் (இரண்டாம் நூற்றாண்டு, மூன்றாம் நூற்றாண்டு என்பதுபோல) வரையறை செய்யப்படுவதால் பனைமரத்தின் நூற்றாண்டு ஒரு நாகரிகத்தையும் பண்பாட்டையும் புதுப்பிக்கிறதாம்.!

“ஆக்கநீர்த் தேக்கமும்
அருந்திறல் ஊக்கமும்
அளித்திடும் அரும்பனை தாய்நீ! –பல
மாக்கவிக் குழுக்களை
மடிசுமந் ததனால்
மரங்களில் உயர்திணை யாய்நீ!”

என்னும் இறுதிப் பகுதியில்தான் பனைமரத்தை அதன் உயரத்தைவிட இன்னோர் உச்சிக்குக் கொண்டு செல்கிறார் கவிஞர். பாலைநிலத் தாவரமாகப் பனையிருப்பினும் அது ஆழமான நீர்ப்பிடிப்புப் பகுதியைத் தன்னைச் சுற்றிலும் கொண்டதாக இருக்கும். நீரை உறிஞ்சும் தன்மை அதற்கு இயல்பு. எனவேதான் அதற்கு நீர் பாய்ச்ச வேண்டிய தேவை அதிகமாக இருக்காது. நீரை உண்டு, கள்ளைத் தருவது பனை. இந்தப்  பாட்டின் முற்பகுதியில் ‘நாட்படு தேறல்’ என்றிருப்பார் கவிஞர். மூன்றையும் கூட்டிப் பார்த்தால் கவிதையின் நயமும் மரபாழமும் புரியக்கூடும். நீரை உண்ட பனை போதை தரும் கள்ளைத் தருகிறது. அதனைவிட மயக்கம் தரும் தமிழைத் தந்த புலவர்களைத் தாங்கி நிற்கிறது ஓலையில். ஒரே பொருளில் பதனீரும் கள்ளும் தேனும் கிடைக்கிறது என்பது நயமல்லவா? தன்னினும் மிக்கார் தமிழ்ச்சான்றோர் என்பதனை ‘மாக்கவிக் குழுக்கள்’ என்னும் தொடரால் உணர்த்தி, அப்பெருமக்களை வணங்கி மகிழும் அவையடக்கம் எண்ணி மகிழத்தக்கது.

‘உயர்திணை’ என்பதும் அஃறிணை என்பதும் ஓர் உயிருக்குள்ள அறிவின் அளவு பொறுத்தது. இது தொல்காப்பியக் கருத்து. அறிவின் எண்ணிக்கைக்கேற்ப உயிர்களின் எண்ணிக்கை அமையாது. உயிர் ஒன்றுதான். அறிவின் எண்ணிக்கைதான் கூடும். புல் ஒன்றுதான் அதற்கு அறிவு ஒன்று. நத்தை ஒன்றுதான் அதற்கு அறிவு இரண்டு. எறும்பு ஒன்றுதான். அதற்கு அறிவு மூன்று. வண்டு ஒன்றுதான். அதற்கு அறிவு நான்கு. மாடு ஒன்றுதான். அதற்கு அறிவு ஐந்து. மனிதன் ஒருவன்தான். அவனுக்கு அறிவு ஆறு. இதிலிருந்து உயிரினம் அப்படியே இருக்க அறிவுதான் மாறுபடுகிறது. கவிஞர் இதனைச் சிந்தித்திருக்கிறார். சிந்தித்துக் கற்பனை கலந்து எழுதுகிறார். என்ன எழுதுகிறார்? பனையோலையில் பத்தாயிரம் சான்றோர்களுடைய  கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றோர் ஒருவருக்கு ஆறு ஆறிவு என்றால் இத்தனையாயிரம் சான்றோர்களுக்கு எத்தனை அறிவு இருந்திருக்க வேண்டும். தமிழின் மேலுள்ள காதல் அவரை இப்படிச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஆறறிவு இருந்தாலே உயர்திணை. அது ஆறு இலட்சம் என எண்ணிக்கையில் மிகுந்திருந்தால்……….? பனையோலையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இலக்கிய, இலக்கணக் கர்த்தாக்களின் பேராற்றலை எண்ணுகிறார். எண்ணி எழுதுகிறார்.

“மாக்கவிக் குழுக்களை
மடிசுமந் ததனால்
மரங்களில் உயர்திணை யாய்நீ!

இந்தப் படைப்பாளரும் ஒரு கவிக்குழுவை நடத்திவருவதால் பனையோலைப் பங்காளிகளைக் குழுக்களாகக் கண்டு எழுதுகிறார். முதல் வரியில் ‘அரும்பனைத்தாய்’ எனச் சொல்லியதற்கு ஏற்ப இந்தவரியில் ‘மடிசுமந்ததனால்’ என எழுதியிருக்கும் நயம் கோடி பெறும்!

மரத்தை மரமாகப் பார்ப்பது வேறு. விறகாகப் பார்ப்பது வேறு. மரக்கட்டையாகப் பார்ப்பது வேறு. சாரமாகப் பார்ப்பது வேறு. சங்கத் தமிழின் ‘அச்சகமாகப்’ பார்ப்பது வேறு. கவிஞர் உயர்திணைத் தாயாக்கியிருக்கிறார். அதற்கான காரணத்தில்தான் மரபுக் கவிதைக்கு இலக்கணம் கூறுகிறார். மரபை அடையாளப்படுத்துகிறார்.

“கிளிவளர்த்தேன் பறந்து போனது
அணில் வளர்த்தேன் ஓடிப் போனது
மரம் வளர்த்தேன் இரண்டும் வந்தன!”

என்பது மரம் பற்றிய கலாமின் பார்வை. அது மாறுபட்ட பார்வை. துரை.வசந்தராசனின் பனைமரப் பார்வை, பழுதுபடாப் பார்வை. மரபுப் பார்வை. பிறரெல்லாம் பனைமரத்தின் பயன்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தபோது அதனைத் தமிழ்த்தாயின் தவச்சாலையாகத் தாய்வீடாகப் பார்த்திருக்கிறார் துரை.வசந்தராசன்!

யார் துரை.வசந்தராசன்?         

   

பண்ணைத் தமிழ்ச்சங்கம், துரை.வசந்தராசன்

பண்ணை வைத்துக் கோழி வளர்த்தவர் உண்டு. மாடு வளர்த்தவர் உண்டு. ஆடு வளர்த்தவர் உண்டு. செடி வளர்த்தவர் உண்டு. கொடி வளர்த்தவர் உண்டு. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அக்காலப் பாண்டியரைப்போல் பண்ணை வைத்துத் தமிழ் வளர்க்கும் தற்காலப் பாண்டியர் இவர்.

துரைசாமியின் மகன் பெருஞ்சித்திரனார். துரைவேலுவின் மகன் வசந்தராசன். அவரைப் போலவே தமிழையும் தாயையும் தாங்குகிறார்கள்.

மரபைப் பிறரெல்லாம் காயிலும் கனியிலும் தேடிக்கொண்டிருந்தபோது இவர்தான் மரத்தில் கண்டெடுத்தவர்.  பிறர் எதுகை மோனைக்கே இறவாணத்தை நோக்கிச் சோர்ந்தபோது நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களின் உறவுக்குக் கைகொடுத்தவர். இளங்கலை வேதியியல் படிப்புச் சோதனையைப் பாடுபொருளிலும் வடிவத்திலும் செய்து காட்டியவர். கவிதையில் கலந்தவர். கருத்துகளால் சிறந்தவர்.

உரத் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இக்கவிஞர், பண்ணையில் தமிழ் வளர்த்து மாதவரத்தில் ‘கவிதைப் பால்’ கறந்து கொண்டிருக்கிறார். கவிதையை இவர் விட்டாலும் கவிதை இவரை விடுவதாக இல்லை. கவிதையின் அனைத்து வடிவங்களையும் கைப்பேசியில் வைத்திருக்கும் இவர் தற்காலத்தில் ‘மரபுக் கவிதை’ என்னும் சொற்பொருள் உணர்ந்த சிலருள் ஒருவர்.

‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்?’, ‘கறுப்பு வெளிச்சம்’, ‘சூரியச் சிறகுகள்’, ‘வானவில் குதிரைகள்’ என்பன போன்ற முரண்களைத் தலைப்பிட்டு இவர் எழுதி வெளியிட்டவையும் பிறர் எழுதி இவர் தொகுத்தவையும் இவருக்கு அகமாகவும் புறமாகவும் அமைந்திருக்கின்றன. வேண்டிய அளவுக்கு விருதுகளைக் குவித்திருக்கும் இவருடைய கவிதைகள், மொழியினத்தின் முன்னேற்றத்தையே கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. இவரது கவிதைகளை ஆய்வு செய்வதற்குப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கலாம். ஆனால் ஆய்வாளர் கிடைப்பதுதான் அருமை!

கவிஞனுடைய ஆற்றலைத் திறனாய்வு செய்வது வேறு. இது இவருடைய கவிதைகளுக்கானது. இதனைத் திறனாய்வு என்பதைவிடக் கவிதையனுபவத்தின் கனிவான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். இந்த அனுபவம் தொடரும்……

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க