தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 23

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  [email protected]

‘ஒன்றுக்குப் ‘பத்தான’ உவமங்கள்

முன்னுரை

ஒரு பொருளுக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்தியதுதான் தமிழ்க்கவிதைகளின் தொடக்கக் கால உவமக் கோட்பாடு. ‘யானை போலப் பிளிறினான்,  வேங்கைபோலப் பாய்ந்தான், அரிமா போல முழங்கினான் என ஒரு வினைக்கு மற்றொரு வினையை உவமமாக்குவதும் மங்கையின் மருட்சிக்கு மானின் பார்வையையும், தோளுக்கு மூங்கிலையும், கழுத்துக்குச் சங்கையும், கண்ணுக்குக் குவளையையும், முகத்துக்குத் தாமரையையும், கூந்தலுக்கு மேகத்தையும், பல்லுக்கு முல்லையையும், பாதத்துக்கு நாய் நாக்கையும் உவமையாக்குவதை மரபாகக் கொண்டு விளங்குவது தமிழ்க்கவிதை உலகம். ஆனால் இதே கவிதையுலகத்தில் இன்னொருவகை உவமக்கோட்பாடும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஒன்றுக்கு மற்றொன்றை உவமையாக்குவது மட்டுமன்று ஒன்றுக்கு ஒரே நேரத்தில் பலவற்றை உவமையாக்கும் போக்கையும் தமிழ்க்கவிதை உலகம் அறிந்திருந்தது. பொருளாயினும் உணர்ச்சி வெளிப்பாடாயினும் பொருள் முற்றவும் புலப்படவும் உணர்ச்சி முற்றவும் வெளிப்படவும் கவிஞர்கள் ஒரு பொருளுக்குப் பல உவமைகளைப் பயன்படுத்தியும், ஒருநேர உணர்ச்சிக்குப் பலவகையான உவமைகளைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். மரபுவழியாக வளர்ந்துள்ள இவ்வுவமக் கோட்பாட்டைச் சில எடுத்துக்காட்டுக்களால் இக்கட்டுரை விளக்குகிறது.

தலைவனுக்கு உவமங்களான தலைவி

தலைவியின் நலம்பாராட்டும் தலைவன் கூற்றாக அமைந்திருக்கும் குறட்பா ஒன்று தலைவியின் பேரழகைப் படம்பிடித்துக் காட்டும்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.”

என்னும் குறட்பாவில் தலைவியை முழுமையாகக் கட்புலனுக்குக் கொண்டுவரும் தலைவன் ஐந்து உவமங்களைத் தொகுத்துச் சுட்டுவதை அறியலாம். தலைவியை வேய்த்தோளவள் என்றே நோக்குகிறான். ‘வேய்த்தோளவட்கு’ என்னும் தொடருக்குப் ‘பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது’ என்னும் ஆசிரியர் பரிமேலழகரின் உரைநுட்பம், தலைவியை எக்காலத்தும் உவமித்து ஒப்புநோக்கும் தலைவனின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதை உணரமுடியும்.

மகளுக்கும் தாய்க்குமுள்ள உறவு

தனக்கு இனிப்பான தலைவியை உவமங்களால் காணும் தலைவனைப் போலவே, தனக்குப் பயன்படாத மகளை எண்ணி மருகும் தாயையும் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் சுரம் நாடிச் சென்ற செவிலியை நோக்கியுரைக்கும் அறிவில் முதிர்ந்த அந்தணர் உரையில்,

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்?
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என் செய்யும்?
ஏழ்புணர் இன்னிசை முரல்பவரக்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என் செய்யும்?”

எனப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமங்கள் தலைவி தலைவனோடு கூடிய இல்லறக் கடமைக்கு உரியவளேயன்றிப் பெற்ற காரணத்தாலேயே பெற்றவளுக்குப் பயன்பட வேண்டும் கடப்பாடில்லை என்னும் நடைமுறை உண்மையை உணர்த்தி நிற்கின்றன. பாலை நிலத்;தில் கலங்கிக் கையற்று நிற்கும் தாய்க்கு உணர்த்த வேண்டிய உண்மை ஒன்றாயினும், உவமங்கள் பலவாய் நின்று உணர்ச்சியின் கன அளவை மிகுவித்துக் காட்டுவதைக் காணலாம். இல்லறக் கடமை தொடங்கும் போது பிறந்த இடத்துப் பாசம் பின்னுக்குச் சென்றுவிடுகிறது என்னும் வாழ்வுண்மையை உணர்த்துதற்கும் இவ்வுவமைகளின் பங்களிப்புச் செம்பாகம் அன்று., பெரிது.

கண்ணகிக்கு இளங்கோ காட்டும் உவமைகள்

‘செந்தமிழ்ச் செல்வியும் சிலப்பதிகாரத் தலைவியுமான’ கண்ணகியை அறிமுகம் செய்யும் கவி இளங்கோ, அவளுடைய தோற்றப்பொலிவுக்கும் கற்பு மாண்புக்கும் தனித்தனியான உவமங்களைக் கூறியிருக்கிறார்.

போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த

புறஅழகு நிரம்பியவள் கண்ணகி என்பதைக் கருதித் திருமகள் அழகையும் கற்பு மாண்பிற்கு அருந்ததியின் கற்பையும் உவமமாக்கியிருக்கிறார். ‘பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என மாதவியைப் பின்னாலே அறிமுகம் செய்ய இருப்பதால்  கண்ணகி பிறப்பினாலும் பண்பினாலும் குறைபாடுடையவள் அல்லள் என்பதைப் புலப்படுத்துதற்காக அவளுடைய கற்பு மாண்புக்கு அருந்ததியை உவமமாக்கியிருக்கிறார்.

பாஞ்சாலிக்கு வளர்ந்த சேலை

பஞ்ச நதிகள் ஓடுகிற நாட்டில் பிறந்தவள் பாஞ்சாலி. பாரதத்தில் பஞ்சபாண்டவருக்கு யாகபத்தினியாகத் திகழ்ந்தவள். துரியோதனன் அவையில் அவள் மானபங்கப்படுத்தப்பட்ட பொழுது கோவிந்தன் அருளால் அவளுக்குப் புடவை வளர்ந்த நிலையை விவரித்துக் காட்டும் நிலையை மகாகவி  ஐந்து உவமங்களால் காட்சிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

பொய்யர்தம் துயரினைப் போல்நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல் –  கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்
பெண்ணொளி வாழ்த்திடுவார் அந்த
பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்
கண்ணபிரான் அருளால்தம்பி
கழற்றிடத் கழற்றிடத் துணி புதிதாய்
வண்ணப் பொற்சேலைகளாம்அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே

இவ்வுவமைகள் வழிப் பாஞ்சாலியைத் தவம் பெற்ற தையலாகவே பாரதி நோக்கியிருக்கிறான் என்பதும், அவளைச் சாதாரண கவிதைப் பொருளாகவோ காப்பியப் பாத்திரமாகவோ எண்ணவில்லை என்பதும், ‘பொருளுக்கு உவமை’ என்னும் இயல்பான கவிதை அளவுகோலால் அவளை அளக்கவில்லை என்பதும் ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களால் அவள் சார்ந்த நிகழ்வுகளைச் சித்திரிப்பதே அவருடைய உட்கிடக்கை என்பதும் அனுமானத்தால் உணரத் தக்கதாகும். மேற்கண்ட உவமத் தொடர்களில் ‘பொய்யர்தம் துயரினைப்போல்’ என்பது குறிப்பிடத்தக்கது. பாஞ்சாலிக்குச் சேலை வளர்ந்தது அழகியல். பொய்யர்களுக்குத் துன்பம் வளர்வது அறவியல். அழகியல் சார்ந்த கவிதைப் பொருளை விளக்குதற்கு அறவியல் சார்ந்த வாழ்வுண்மை ஒன்றை உவமமாக்குவதும் தமிழ்க்கவிதைகளில் காணப்படும் உவமக் கோட்பாடுகளில் ஒன்று.

தமிழுக்கும் தனக்குமுள்ள உறவு

பாரதியைக் குருவாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசன் தமிழையும் தன்னையும் பிரித்தறிய இயலாமல் பின்னிக் கிடந்தவர். அவருக்கு முன்னாலும் பின்னாலும் அவர் போலத் தமிழ் பாடியவர் எவருமிலர் என்று துணிந்து சொல்லலாம். மொழியை உயிருக்கு நிகராக அவர் கருதியிருக்கிறார் என்பதைச் ‘செந்தமிழே உயிரே’ என்பது போன்ற வரிகளால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அதனை இயற்கையின் அழகுக் கூறுகளில் ஒன்றாகவும் அவர் கருதினார் என்பது, அவருடைய ‘அழகின் சிரிப்பு’ என்னும் நூலின் இறுதியாகத் தமிழைப் பாடியிருப்பதால் உணர முடியும். அத்தகைய தமிழுக்கும் தனக்கும் உள்ள உறவை,

“வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
வண்ணப்பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?”

என்னும் வரிகளால் புலப்படுத்திக் காட்டுகிறார்.  ஒன்றையொன்று பிரிக்க இயலாது என்பதற்கும் பிரிந்திருக்க இயலாது என்பதற்கும் பிரித்தால் பயனில்லை என்பதற்கும் ஒன்றின்றி மற்றொன்றில்லை என்பனவுமான கவிஞனின் உள்ளக் கிடக்கை முழுமையும் இவ்வுவமைகளால் வெளிப்பட்டு நிற்கின்றன என்பதைக் காணமுடியும்.

உவமங்களால் அமைந்த தின்பண்டங்கள்

குழந்தைகளுக்குப் பிடித்தமானவை இரண்டு. ஒன்று விளையாட்டு. மற்றொன்று தின்பண்டம். ‘தின்பண்டம்’ என்னும் சொல்லே அதன் தொடர். வினையைக் குறிப்பதைக் காணலாம். தாயொருத்தித், தூங்காத தன் பெண் குழந்தையைத் தூங்க வைக்கச், செய்து தருவதாகச் சொல்லும் தின்பண்டங்களின் நிரலைப் பாவேந்தர் அடுக்கிக் காட்டுகிறார்.

ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?
கொட்டித் தும்பைப்பூ குவித்ததுபோல் உன்னெதிரே
பிட்டு நறுநெய்யில் பிசைந்து வைக்க மாட்டேனா?
குப்பை மணக்கக் குடித்தெருவெல்லாம் மணக்க
அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?
மீன் வலை சேந்தும் கயிற்றை வேய்ந்த வளையம்போல்
தேன்குழல் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத்ததைப் போல்
உழுந்து வடை நெய்யொழுக உண்ணென்று தாரேனா?
தாழையின் முள்போல் தகுசீரகச் சம்பா
ஆழ உரலில் இடித்த அவலைப்
கொதிக்கும் நெய்தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
பதக்குக்கு ஒருபதக்காய் பாகும் பருப்புமிட்டே
ஏலத்தைத் தூவி எதிர்வைக்க மாட்டேனா?”

பாவேந்தர் பட்டியலிடும் தின்பண்டங்களுக்கான உவமைகள் இயற்கையைச் சார்ந்தும் குழந்தைகளின் உள்ளங் கவர்வனவாகவும் இருப்பதோடு தின்பண்டங்களின் பக்குவத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன என்பதை அறியலாம்.

ஒரே செயலுக்குப் பல உவமைகள்

ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சொல்லும் மரபைப் பின்பற்றி ஒரே வினைக்குப் பல உவமங்களை அடுக்கிக் காட்டி உள்ளத்தில் பதிய வைக்கின்ற முயற்சியும் தமிழ்க்கவிதைகளில் காணக்கிடக்கிறது.

சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
சிலைதன்னைத் துகில் கொண்டு மறைத்தல் போலும்
இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
இடைச்செல்ல முயல்கின்ற காட்சி போலும்
மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
வைரத்துட் புதைந்துள்ள தன்மை போலும்
ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
ஒருவர்க்கும் தெரியாமல்  மறைத்தல் போலும்

ஒருமேனி மற்றொன்றில் ஒடுங்கிப் போக,
ஒருவர்தான் மற்றொருவர் எங்கே என்று
புரியாமல் பார்ப்போர்கள் அதிச யிக்கப்
புனலோடு புனலாக அவனைக் கன்னி
தெரியாமல் மறைத்துத்தன் தேனு தட்டைத்
தேய்க்கின்றாள் தேய்க்கின்றாள் மாறி மாறி
இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே

என அமைந்திருக்கும் கண்ணதாசன் பாடல் வரிகள் அகத்திணை நிகழ்வை ஏழு உவமங்களால் காட்சிப்படுத்தியிருக்கிறது. இது அகவிலக்கண மரபுக்கு மாறுபட்டிருக்கிறது என்பதைக் காட்டிலும் மரபுக்கு ‘ஊட்டச்சத்து’ வழங்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

எப்படியெல்லாம் மழை பெய்கிறது?

மொழி தெரிந்த யாருக்கும் எந்த நிலையிலும் மரபின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அது தாய்வழிப் பண்பு போன்றது. ஒரு சாதாரண திரையிசைப் பாடலில் கூட அந்த உவம மரபு அமைந்து விடுவதைக் காணலாம். காதலர்கள் மழையில் நனைகிறார்கள். அவர்கள் மழையைப் பற்றிப் பாடியிருக்கலாம் அல்லது தங்கள் காதலின் தண்மையைப் பறறிப் பாடியிருக்கலாம். இங்கே குறிப்பிடப்படுவது மழையில் நனைந்து காதலர்கள் பாடுவது மரபன்று. உவமத் தோரண மரபே சுட்டப்படுகிறது.

கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெற்றி வேர்வை போலே
அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும்
கண்ணீர்த்துளியைப் போலே
முட்டாப் பயலே மூளையிருக்கா
என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற  வார்த்தை போலே

வழிகிற வேர்வை, வழிகின்ற கண்ணீர் கொட்டுகிற சொற்கள் இவற்றின் வேகம் உண்மையில் மழையின் கொட்டுகிற வேகத்தைவிடக் குறைவுதான்!, கவிதையல்லவா?, படைப்பாளன் என்ன செய்கிறான்? உவமத்திற்குத் தரவேண்டிய உயர்ச்சியை உவமத்தைக் கொண்டு பொருண்மையின் அடர்த்தியை மிகுவிக்கின்றான். சரியா? ‘மழை போல அழுதான், மழைபோலப் பேசினான், மழைபோல வேர்வை’ என்றால் உவமம் இயல்பான நிலையில் பயன்படுத்தப்பட்டு உவமங்களின் கோவையாக நின்றுவிடும். மாறாக, வேர்வைப்போல் பெய்தது, கண்ணீரைப்போல் பொழிந்ததுக் கடுஞ்சொற்களைப் போல் கொட்டியது என்கிறபோது உவமங்கள் சமுதாயத்தைப் படம்பிடிக்கப், பொருண்மையாகிய மழை அழகியலை அரங்கேற்றக் கவிதை களிநடம் புரிகிறது. கவிஞனின் படைப்பாற்றல் கடவுளின் படைப்பாற்றல்!

நிறைவுரை

‘ஒன்று’ என்பது ‘ஒன்றோடொன்று’ என்றும் ‘ஒன்றைப்போல் ஒன்று’ என்றும் விரியும். முன்னது கணிதம். பின்னது இலக்கியம். இவை தம்முள் மாறுபடாது. ஒன்றைப்போல் ஒன்று என்பது காலப்போக்கில் ஒன்றைப்போல பல அல்லது ஒன்றுக்குப் பல என்னும் நிலை வந்தது. அந்த நிலையில் ஒரு பொருளுக்கு ஓர் உவமம் என்ற நிலை மாறியது. உவமங்களின் எண்ணிக்கை கூடியது. உவமங்களே தம்முள் தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் உயர்நிலை வந்தது. இந்த உயர்நிலை உவமத்தின் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தி நிற்பதோடு பொருண்மையை வெகு துல்லியமாக விளக்கிக் காட்டவும் பயன்பட்டது. ஒன்றுக்குப் பல என்னும் உவம மரபு சங்க இலக்கியத்திலேயே தொடங்கி இன்று வரை நீடிக்கிறது என்பதும் சிந்தனைக்குரியதே!

(தொடரும்…)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க