பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல்
சந்திப்பு – அண்ணாகண்ணன்
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனந்த ராவ், இந்த 79 வயதிலும், தமிழில் பாடல்கள் இயற்றி இனிமையாகப் பாடுகிறார். பழைய திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் இவர் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். இவற்றை டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், ஜேசுதாஸ், எம்.எஸ்.வி., டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா… உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் முன்னிலையில் பாடிப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
சுவாகத் ஓட்டலிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றிய இவர், அங்கு உணவருந்த வந்த அண்ணா, கலைஞர், சி.என்.ஏ.பரிமளம், ம.பொ.சி. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார். ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ், ஹரிதாஸ் கிரி ஆகியோருடன் இணைந்து கோரஸ் பாடியுள்ளார்.
சமையல் கலைஞர்கள் நலவாரியம், கட்டடத் தொழிலாளர் நலவாரியம், கோவில் பணியாளர் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பலவற்றில், அவர்களின் விழாக்களில் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய பாடல்களைப் பாடி, உழைக்கும் வர்க்கப் பாடகர் எனப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
மேலும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், செவிலியர்கள் எனப் பலர் மீதும் பாடல்கள் இயற்றி அவர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் மருத்துவத்திற்குக் கட்டணம் இல்லாமல், அவர்கள் இவருக்கு பரிசுத் தொகையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் இவர், மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிய சங்க காலப் புலவர் மரபில் வருகிறார்.
தொலைபேசி வழியிலான இந்த நேர்காணலில் இவரது இனிய பாடல்களையும் அனுபவங்களையும் கேட்டு மகிழுங்கள்.
இவரை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் குமரி எஸ்.நீலகண்டனுக்கு நன்றி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)