தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 26

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமத்திலும் புதுமை தேக்கும் உத்தி

முன்னுரை

கவிதையில் கருத்து ஒன்றினைத் தவிர மற்ற எல்லாமே அதனை வெளிப்படுத்தும் உத்திகளே! கவிதையின் வெற்றி அதன் உத்தியில்! பொருளுக்கேற்ற யாப்பு என்பதும் யாப்புக்கேற்ற சந்தம் அல்லது சீர் என்பதும் அவற்றோடு கூடிய கற்பனை என்பதும் உத்திகளே. இவற்றுக்கெல்லாம் மேலாக நிற்பது உவமம். கருத்துப் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் இந்த உவமமே கவிதையின் நிலைத்த வெற்றிக்குத் தலையாய காரணமாக அமைகிறது.  அதனால்தான் சங்கக்காலத்தில் தொடங்கித் தற்காலம் வரை கவிதைகள் உவமங்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சில பொழுதுகளில் படைப்பாளனின் தனித்திறனை எடைபோடுவதற்கும் இந்த உவமங்கள் எடைக்கற்களாக இருக்கின்றன. மரபு சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலத்தில் கூட உவமங்களில் புதுமை தேக்கும் முயற்சி நடந்திருக்கிறது. இது பற்றிய விளக்கத்தைச் சில எடுத்துக்காட்டுக்கள் வழி இக்கட்டுரை ஆராய்கிறது.

உவமப் பயன்பாட்டில் உற்றுநோக்கலின் பங்கு

பொருளை ஒப்பிட்டுக் காட்சிப்படுத்துவதும் கருத்துக்கு விளக்கமளிப்பதுமே உவமத்தின் தலையாய பணி என்பது உண்மையே. ஆனால் அத்தகைய ஒப்பீடுகளை மேலேழுந்தவாரியாகச் செய்துவிட இயலாது. செய்தால் உவமம் அழகு பெறாது ஆழங்கால் பட்டு நிற்காது காலங்காலாமாகப் பெண்ணின் முகத்துக்குத் தாமரையை ஒப்பிட்டு வந்ததால் தாமரைக்கும் பெருமையில்லை. பெண்ணின் முகத்துக்கும் பெருமையில்லை. இதனை உணர்ந்த கம்பன் தாமரையை ஆணாகிய இராமனுக்கு ஒப்பிட்டுக் காட்டியதை இங்கு நினைவுகூரலாம். ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என்பது கம்பன் தமிழ். சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை என்பது இல்பொருள். சித்திரத்துத் தாமரை மலர்வது உண்டா? நீர்த்தாமரையை உவமிக்க மனமில்லாத கம்பன் இப்படி எழுதிக்காட்டுகிறான். முல்லை போன்ற பற்கள் என்னும் மரபுவழி உவமக் கோட்பாட்டைத் தற்காலக் கவிஞர் ஒருவர் தமது கவிதையில் ‘நடுகற் பற்கள்’ என்று வண்ணனை செய்திருக்கிறார். நாட்டுப்புறப்பாடல்களில் ‘புளியங்கொட்டை’ பல்லுக்கு உவமமாக்கப்பட்டிருப்பதும் மண்வெட்டியை உவமமாக்கியிருப்பதும் உண்மையே. என்றாலும் நடுகற்களை உவமமாக்கியிருப்பது  படைப்பாளனுடைய வரலாற்றுணர்வையும் புதுமை தேக்கும் உணர்ச்சியையும் ஒருசேரக் காட்டுவதாக உள்ளது. பொன்விலங்கு என்னும் நாவலில் பெண்ணின் கூந்தலுக்குக் ‘குலை குலையாய்த் தொங்கும் திராட்சைக் கொத்துக்களின் தொகுதியை’ நா.பார்த்தசாரதி உவமமாக்கியிருப்பார். இதனால் பரவலான உற்று நோக்கலும் ஆழமான சிந்தனையிலும் ஈடுபட்டாலேயொழிய உவமச் சித்திரிப்பில் நிலையான வெற்றியினைப் பெறமுடியாது என்பது புலனாகும்.

பழைமைக்குள் புதுமை

தவளை மேட்டுக்கு இழுக்கிறது. மீன் தண்ணீருக்குள் இழுக்கிறது என்பது அனைவரும் அறிந்ததொரு சொலவடை. ஒரு சிக்கலில் அல்லது சூழலில் ஒரு முடிவுக்கு வராமல் தவிக்கின்ற ஒருவனை அல்லது அவனுடைய மனநிலையை இப்படிச் சித்திரித்திருக்கிறார்கள். மக்கள் வாழ்வியலே இலக்கியத்திற்கும் அவர்களின் மொழிவழக்கே இலக்கணத்திற்கும் அடிப்படையாதலின் இந்தக் கருத்தியல் இலக்கியங்களில் பலவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலா வந்த மன்னனைக் காணத் துடிக்கிறாள் தலைவி. ஆண்மகனைத் தானாகக் காணச் செல்ல அவள் நாணம் தடையாகிறது. பருவத்தின் தூண்டுதலால் மனம் மீளவும் வாசல் நோக்கி அவளைச் செலுத்துகிறது. ஆசை முன்னுக்குத் தள்ள நாணம் பின்னுக்குத் தள்ள அவள் துடிப்பதை,

“நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற —- யாமத்[து
இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்
திரிதரும் பேரும்என் நெஞ்சு”

என்னும் பாடல் (முத்தொள்ளாயிரம்) இருதலைக்கொள்ளி எறும்பின் துடிப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறது. இந்த உவமத்தை மணிவாசகப் பெருமான்,

“இருதலைக் கொள்ளியின் உள்எறும்[பு] ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்”

என்னும் திருவாசகம் “உன்னை நாடி உய்வதா? உலகியல் தோய்ந்து மாள்வதா எனத் தன் மனம் ஒரு நிலையில் நில்லாததை மணிவாசகப் பெருமான் இந்த உவமத்தால் விளக்குகிறது.

“இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பேபோல்
உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழி முதல்வா!”

என்று திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வாரும் இதே உவமத்தைப் பயன்படுத்தப் பாடியிருப்பதைக் காணலாம். மேலே காட்டியவையெல்லாம் பிற்கால இலக்கியங்கள். ஆனால் சங்க இலக்கியமான அகநானூற்றிலும் இதே உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் வியப்பான செய்தி. மக்கள் வழக்கின் தீவிரத் தாக்குதலுக்கு இலக்கியம் உள்ளான காலக்கட்டம் அது.

பொருள் தேடும் முயற்சியால் எழுந்த தலைவனின் ஆண்மை “பொருள் தேடப் போவோம் வா” என்று முனைகின்றது. தலைவியின் மீது கொண்டுள்ள காதலோ தடுக்கின்றது. ஆண்மை முந்துற ஆசை பிந்துறும் நிலைமை. அவன் மனமோ இப்போது இடைப்பட்ட நிலையில் போவதும் வருவதுமாக ஊசலாடுகிறது. நரைமுடி நெட்டையார் எனும் புலவர் இதைப் பாடியுள்ளார்.

“ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடும் நெஞ்சம் கட்க ணகைய
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி”

என்பன அப்பாடல் அடிகளாகும். சங்கக் காலத்திலிருந்து “இருதலைக்கொள்ளி எறும்பென்னும்” உவமை எல்லாப் புலவர்களையும் கவர்ந்து எடுத்தாளச் செய்திருக்கிறது.

சங்கச் சான்றோர்கள் இந்த உற்று நோக்கலில் தனித்து விளங்குகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் அகப்புறத்தை நன்கு உற்றுநோக்கியே வாழ்ந்தவர்கள் ஆதலின் ஒரு நிகழ்வைக் கவிதையாகக் காட்சிப்படுத்துகிறபோது உவமம் என்பது தானாக அமைந்துவிடுகிறது. பொருளையோ கருத்துக்களையோ கைவசம் வைத்துக் கொண்டு அதற்குப் பொருத்தமான உவமத்தைத் தேடும் பழக்கம் அவர்களிடம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. இந்தப் பின்புலத்தில்  எறும்புக்குப் பதிலாக இற்றுப்போன கயிற்றை உவமமாக்கிய ஒரு தலைவியைக் காணலாம்.

திண்டாடும் உயிரும் தேய்புரி பழங்கயிறும்

பொருள்வயிற் பிரிய எண்ணம் கொண்ட தலைமகன் அதாவது குடும்பத்தலைவன் அவனது பிரிவை ஆற்றாது அரற்றிய தலைவியைத் தேற்றிப் பிரிகிறான். பிரிந்து வினைசெய்பவன் மனைவியைப் பற்றிய நினைவு மேலோங்கி அறிவழிந்த நிலையில் அலைக்கழிக்கப்படுகிறான் மற்றொருபக்கம். வினையைக் குறைவுபடச் செய்து தலைமகள் பற்றிய காதல் மீதுறத் திரும்புவானாயின் அது ஆண்மகற்கு அறமாகாததோடு இளிவரல் பயக்கும் என்பதையும் உணர்கிறான்.  நெஞ்சமும் அறிவும் நிகழ்த்தும் இந்தப் போரில் தலைமகனுடைய உயிர் தள்ளாடும் நிலைக்குத்தான் சங்கச் சான்றோர் ஒருவர் புதுமையானதோர் உவமத்தைப் பயன்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்த உவமத்தை அனுபவிக்க வேண்டுமானால் பாட்டின் பல பொருட்பகுப்புக்களையும் தனித்தனியாகக் கற்றுணரவேண்டும்.

நெஞ்சு சொல்கிறது இப்படி!

“புறத்தாழ்பு இருண்ட கூந்தல் போதில்
நிறங்கிளர் ஈரிதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்
செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் (தலைவனின்) நெஞ்சம்!”

அறிவு என்ன சொல்கிறது?

“செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறு நனி விரையல் என்னும்!”

ஆயிடை (இவற்றுக்கிடையே)

“ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரி பழங்கயிறு போல
வீவது கொல் என் வருந்திய உயிரே!”

பாட்டின் பொருள்முறைக் கட்டுமானம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது பாருங்கள்! நெஞ்சு செய்யும் கொடுமை இது!. அறிவு காட்டும் தடம் இது! இரண்டுக்கும் நடுவே வதைபடும் என் உயரின் நிலை இது! முதலில் தலைவியிடம் தலைவனுடைய மனம் செல்வதற்கேதுவான அவளுடைய எழில் வண்ணனை செய்யப்படுகிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அறிவு தலைவி பால் கொண்ட காதல் பற்றிய சிந்தனையை வரையறை செய்து அவனைத் தடுப்பது அடுத்த நான்கு வரிகளில். ‘ஆயிடை’ என்னும் சொல் வழி இரண்டையும் இணைக்கும் புலவர், நைந்து போன தலைவன் உயிரைத் தேய்ந்து போன பழங்கயிற்றுக்கும், அறிவையும் நெஞ்சையும் வலிமையான இரண்டு களிறுகளுக்கும் உவமமாக்கிய திறன் இறுதியில்!

இருதலைக் கொள்ளி எறும்பு என்னும் மரபு சார் உவமத்திலிருந்து விலகிப் புதுமை தேக்கும் உவமமாகப் பொலிகிறது. கயிற்றைக் கருவி கொண்டு அறுக்காது ஈர்த்த வழி அது புரிபுரியாய் நெக்குற்று அறுபடுவது பற்றித் ‘தேய்புரி பழங்கயிறு’ என்றும், அதன் வலிமையும் உறுதியும் குறைந்த நிலையை உணர்த்துவதற்குப் பழங்கயிறு என்றும் கூறிய நுட்பம் உணர்க. பிரிதலும் இருத்தலும் இரங்கலுமாகிய உரிப்பொருள் பெரும்பாலும் தலைவி பற்றிய புலனெறிவழக்கிற்கே உரியதாயினும் மிக மிக நுட்பமாகத் தலைவனது மனத்து வேதனையை உவம வாயிலாகப் பதிவிட்டிருக்கும் சங்க இலக்கியத்தின் நுட்பம் தற்கால எந்தத் திறனாய்வுக் கொள்கைக்கும் அடங்காதது!

வினைமுடித்தன்ன இனியோள்

புறஅழகினால் ஒரு பெண் ஆணைக் கவர்வதற்கும் பண்புகளால் அவன் நெஞ்சில் இடம்பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. இது பெண்ணுக்கும் பொருந்தும். தொல்காப்பியர் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பண்புகளின் தொகுதியாகவே பெண்ணைப் பார்த்திருக்கிறார். ஆணுக்கும் பெருமையையும் உரனையும் இலக்கணமாக வரையறை செய்திருக்கிறார். அத்தகைய ‘பண்புத்தொகையான ஒருத்தியை மணமுடித்து வாழும் தலைவன், பொருள்வயிற் பிரிகிறான். பிரிந்தவன் திரும்புகிறான். திரும்பியவன் மனைவியோடு மகிழ்கிறான். மகிழ்ச்சியினால் வினையை மறக்கிறான். அப்போது அவன் நெஞ்சு அவனுக்கு நினைவூட்டுகிறது.

“இப்படியே இருந்துவிட்டால் இல்லறம் சிறப்பது எப்படி? என்று. நெஞ்சு கூற, அந்த நெஞ்சிற்குத் தலைவன் இயலாமையை அதாவது முன்னர்ச் சென்றபோது அவன் உள்ளம் எண்ணியதை அந்த உள்ளத்திடமே வெளிப்படுத்துகின்றான்.

“”நெஞ்சே! நீ எனக்கு நினைவூட்டுவது சரியே! ஆனால் சென்றமுறை சென்ற பொது நான் என்ன எண்ணினேன் என்பதை நீ மறந்துவிட்டாயா? வினைமுடிக்க சென்ற நான் அவ்வினை முடிந்ததால் உண்டான இன்பத்தைப் போன்றவளான என் மனைவி, மாலைநேரமாகிய இந்நேரத்தில் விளக்கேற்றிக் காத்திருப்பாளே” என நான் நினைத்தேனே? இந்த முறையும் சென்றால் அப்படித்தானே நினைப்பேன்?”

என வருந்துவதாக இளங்கீரனார் என்ற புலவர் தலைவனாக மாறி எழுதிக்காட்டுகிறார்.

“உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழுதெனவே”

இந்தப் பாட்டில் தலைவியின் இனிமைக்கு ‘வினை முடித்த இனிமை’யை உவமமாக்கியிருக்கிறார் புலவர். அகம் என்பது காட்டாலாகாப் பொருளாகலானும் உணர்ந்து அனுபவித்தவரே மீளவும் உணரமுடியாதலானும் இவ்வாறு உவமிப்பது பொருத்தமே!.

இங்கே தலைமகன் தலைமகளை இவ்வாறு எண்ணினான். மற்றொரு பாட்டில் தலைவியின் துன்பத்தை உணர்ந்த தோழி சொல்கிறாள்,

“கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு”

தலைவனோடு மகிழலாமாம். இது தோழியின் கூற்று. நல்ல கலன். அதாவது பொற்பாத்திரம். அது தொலைந்து போனது. திடீரென ஒரு நாள் எதிர்பாராச் சூழலில் அது கிட்டியது. கிட்டிய அந்த நேரத்தில் என்ன மகிழ்ச்சி உண்டாகுமோ அதனைப் போல இனியவன் தலைவன் அவனைச் சேர்ந்து மகிழலாம் என்பது கருத்து. இதே கருத்தமைந்த பாடலை உரையாசிரியர் இளம்பூரணர் மெய்ப்பாட்டியல் நூற்பா ஒன்றில் ‘இன்புறல்’ என்னும் சொல்லுக்கான பொருள் விளக்கத்தில் எடுத்துக்காட்டுகிறார்.

“விட்டகன்று உறைந்த நட்டோர்க் கண்ட
நாளினும் இனிய நல்லாள்”

நெருங்கிப் பழகியவர் பிரிந்து “வேறிடத்திற்குச் சென்று திரும்ப மாட்டார் இனி சென்ற இடத்திலேயே கழிப்பார் என நினைக்கப்பட்ட அந்தப் பழைய நண்பரை எதிர்பாராச் சூழலில் கண்ட பொழுது எப்படி இனிக்குமோ அப்படி இனிப்பாளாம் தலைவி! என்ன அருமையான உவமம்? ‘இன்புறல்’ என்பதற்கு நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதொரு மனநிகழ்ச்சி போல்வது என்று இளம்பூரணர் தரும் உரைவிளக்கம் கோடி பெறும்.

நெருப்புத்தான் சுடும் என்பதில்லை. ஆற்றல் மிக்க கவிஞர்களுக்கு  எல்லாம் சுடும். எல்லாம் குளிரும். காரணம் வழக்கு. உலகியல் வழக்கில் மக்கள் பயன்படுத்தும் மொழிகளும் கற்பனைகளும் படைப்பாளனைப் பாதிக்கின்றன. அப்படிப் பாதித்தால்தான் அவன் படைப்பாளன். ‘நாவினால் சுட்டவடு நெஞ்சில் ஆறாது கிடக்கும்’ என்று திருவள்ளுவர் பாடுகிறார். ‘செயலுக்கும் சொல்லுக்கும் வேறுபட்டார் நட்பை எண்ணிப் பார்த்தால் எண்ணுகிற உள்ளமும் சுடும்’ என்றும் அவர் கூறுகிறார். மனுநீதிச் சோழனின் ‘நெஞ்சு சுட்டதாக’ இளங்கோவடிகள் பாடுகிறார். இத்தகைய உணர்வுகளின் அடர்த்தியான வெளிப்பாடே உவமங்களாக அமைந்திருக்க வேண்டும். இவ்வாறு அருவப் பொருளை வினைமுதலாக்கி உவமிக்கும் உவமக் கோட்பாடு தமிழுக்கே உரியது என்க.

எய்கணை நீழல்

‘இளமை நில்லாது யாக்கை நிலையாது வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது’ என்ற பாடல் வரிகளைச் சீர்காழி குரலில் கெவிமடுக்காதவர் குறைவு. அவற்றின் நிலையாமையைப் பாடிய கவிஞர்கள் பல்வேறு உவமங்களால் தமது கருத்தினை விளக்கியிருக்கிறார்கள்.

‘“செல்வம் சகடக்கால் போல வரும்’

என்று சக்கரத்தை உவமம் சொன்னார்கள். ‘உய்த்து ஈட்டும் தேனீக் கரி’ தான் சேர்த்து வைத்த தேனை இழக்கும் தேனீக்களை உவமமாக்கினார்கள்.

‘பனிபடு சோலை பயன்மரமெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற்று இளமை”

என உதிர்கின்ற கனிகொண்டு விளக்கினார்கள்.

“‘முற்றியிருந்த கனியொழிய தீ வளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு’’

என நாளை செய்து கொள்ளலாம் என்னும் சோம்பல் நினைப்புக்கு, அடிக்கின்ற காற்றில் கனி நிலைக்க, காய் உதிர்ந்துவிடும் என உவமத்தால் எச்சரித்திருக்கிறார்கள்.

‘சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கும் புள்போல’

செல்வம் அழியும். என்றார்கள்.

‘மலையாடு மஞ்சுபோல்’

தேடுகிற செல்வம் தேய்ந்து போகும் என இயற்கையோடு இயைந்து விளக்கினார்கள். இப்படி இளமை, யாக்கை, செல்வம் என்பனவற்றின் நிலையாமையை விளக்கியதன் நோக்கம் அவற்றின் படைப்பு நோக்கத்தைக் குறித்த காலத்தில் குறித்தநேரத்தில் அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே. இந்த நிலையாமையை விளக்குதற்காகச் சான்றோர் ஒருவர் பயன்படுத்தியிருக்கும் உவமம்,

‘வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நீழலின் கழியும்’

என்பது தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தற்காலை கூறிய உவமம். பொருளின் நோக்கம் இளமைக்காலத்தில் இன்பம் அனுபவிப்பது.  இவ்வின்பத்திற்கு அடிப்படையான இளமை ஒவ்வொரு நாளும் கழிவதற்குத்தான் எய்யப்பட்ட அம்பின் நிழலை உவமமாக்கியிருக்கிறார் புலவர். கணைக்கு நிழல் உண்டென்றாலும் அது செல்லும் விரைவின் காரணமாகக் கட்புலனாகாது என்பது அறிக. இல்வாழ்க்கைக்கண் பெறற்குரியன அதற்குரிய செவ்வியான இளமை. ஆயினும் அவை கணந்தோறும் காலத்தால் குறைக்கப்படுவது உலகியல். பொருள் வேட்கையால் பிணிப்புண்டு நாளும் அதனை ஈட்டலும் காத்தலுமாகிய செயல்வகையே நினைந்து ஒழுகுவாருடைய வாழ்வின்கண் பொருட்பயனாகிய இன்ப நுகர்ச்சி தக்க இடம் பெறாது என்பது கருத்து. செல்வத்திற்கும் இளமைக்கும் உள்ள வேறுபாடு யாதெனின் செல்வம் இருந்து அழியும். இளமை இருக்கும்போதே அழியும். இதற்கு எய்கணை என வினைத்தொகையால் சுட்டியது அதுபற்றி என்க.

நிறைவுரை

ஒரு நாட்டுச் சட்டங்கள் இன்னொரு நாட்டுக்குப் பொருந்தாது. அதுபோலவே ஒரு காலத்துச் சட்டங்கள் இன்னொரு காலத்துக்குப் பொருந்தாது. இந்த வரையறை இலக்கியத் திறனாய்வுக்கும் பொருந்தும். ஒரு நாட்டு இலக்கியங்களுக்கான திறனாய்வுக் கொள்கை வேறுபட்ட மரபு சார்ந்த மற்றொரு மொழி இலக்கியங்களைத் திறனாய்வு செய்யப் பயன்படுத்துவது நெறியன்று. தமிழ்நாட்டு இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தை இங்கிலாந்து நாட்டு இருபதாம் நூற்றாண்டு ஏ.சி.பிராட்லேயின் திறனாய்வுக் கொள்கையைக் கொண்டு அளவிடுவது அல்லது மதிப்பிடுவது நேரியதன்று. பயனும் விளையாது. தமிழ் இலக்கியங்களில் உவமப் பயன்பாட்டின் கோட்பாடுகளும் கொள்கைகளும் தனித்துவம் மிக்கவை. வாழ்வியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. நுட்பமான இயற்கை உற்றுநோக்கலைக் களமாகக் கொண்டவை. கவிதை வெற்றிக்குத் தலையாய உத்தியாகக் கருதப்படுபவை. மேற்கண்ட பகுதிகள் இதனை ஓரளவு புலப்படுத்தியிருக்கக் கூடும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *