Author: admin

  • தமிழர்களின் கடல்சார் வணிகம்

    தமிழர்களின் கடல்சார் வணிகம்

    ஆய்வாளர்

    .பாஸ்கர்
    முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,
    மொழிகள் துறை,
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சாவூர்.

    ஆய்வு நெறியாளர்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை,
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.

    முன்னுரை   

    சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். “திரைகடலோடியும் திரவியம் தேடு  என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிகச் சமூகம் பல சமயங்களில் நியாயமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டிச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கைப் பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் “வர்க்கப் போராட்டத்தில்” ஈடுபட்டு வணிகரை எதிர்த்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக “உழவர் சமூகத்தைச் சேர்ந்த  அப்பர்  தலைமையில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குக்கெதிராகத் திரண்டெழுந்ததைக்” குறிப்பிடலாம்.

    பல்வேறு துறைமுகங்கள்

    அரபு நாட்டினர், யவனர், சாவக நாட்டினர் ஆகிய பிறநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகை புரிந்தனர். இதனால் தமிழகக் கடற்கரையில் பல்வேறு துறைமுகங்கள் உருவாகும் சூழல் உருவானது. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டினத் துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டினத் துறைமுகம், முசிறி துறைமுகம், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததை அறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், வளர்ச்சி பெற்ற நாகரிகம் மிக்க சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

    பட்டினப்பாலையில் வணிகம்

    இன்றைய தமிழகம் வணிகத் துறையில் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் எந்த மாநிலத்தைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தின் துறைமுகங்களோ உலக அளவில் மற்ற முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் விதத்தில் சிறந்து விளங்குகிறது.  இன்று மட்டுமல்ல ஏறத்தாழ சங்கக் காலம் தொட்டே தமிழகத் துறைமுகங்கள் இரவு பகல் பாராமல் இயங்கின என்று அறியமுடிகிறது. சங்கக் காலச் சோழ மாமன்னன் கரிகாற்பெருவளவனின் வணிகத் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகமும் அதைச் சார்ந்த அங்காடிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரவும் பகலும் இயங்கியுள்ளது. பகலில் இயங்கிய கடைகளுக்கு ‘நாளங்காடி’ எனவும் இரவில் இயங்கிய கடைகளுக்கு ‘அல்லங்காடி’ எனவும் பெயரிடப்பட்டது. இன்றைய சுங்க நடைமுறையும் அப்போதே தொடங்கிவிட்டது போலும்.

    “புலிபொறித்துப் புறம்போக்கி”1

    என்னும் பட்டினப்பாலை வரி மூலம் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சோழரின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்பது புலனாகிறது. மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கையாளப்பட்ட பொருட்களின் வகைகளைப் பின்வரும் செய்தியால் அறியலாம்.

    மரக்கலன்களில் கொண்டுவரப்பட்ட குதிரைகளும், மிளகு மூட்டைகளும், மேருமலையில் தோன்றிய மாணிக்கமும், பொன்னும், மேற்கு மலையில் கிடைத்த சந்தனமும், அகிலும், கொற்கை முத்துக்களும், கிழக்குக் கடற்கரையில் கொணர்ந்த பவளமும், கங்கை, காவிரியில் கிடைத்த பொருட்களும், ஈழம், காடரம் (இன்றைய மலேசியா) பொருட்களும்  இரு துறைமுகமும் எத்துணை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் இத்துணை பொருட்கள் கையாளப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்கலாம். பண்டைய தமிழகத்தின் கடல்சார் வணிகம் எத்துணை சிறப்பாக நடந்தது என்பதனைச் சங்கக் கால நூலான பட்டினப்பாலை கூறுகின்றது.

    கடல் வாணிகம்

    பழந்தமிழர் செல்வம் ஈட்டும் பொருட்டு உலகின் பலநாடுகளுக்குக் கடற்பயணம் மூலம் வாணிகம் செய்துள்ளனர். கங்கைக்கரையில் இருந்த பாடாலிபுரம், இலங்கை, பர்மா, கடாரம் (மலேசியா), சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்), அரபுநாடுகள், எகிப்து, யவனம் (ரோம், கிரேக்கம்) போன்ற பல நாடுகளுடன் வாணிகம் செய்ததுடன் பல துறைமுகங்கள் தமிழரின் கட்டுப்பாட்டிலே இருந்துள்ளன. “கலிங்க நாட்டில் பித்தும்டா வணிக நகரம் பலகாலமாகத் தமிழர் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது என்பதும், அதை மீட்ட கலிங்க மன்னர் அந்நகரத்தை உழுது அழித்தார்” என்பதும் அத்திக்கும்பா கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    யூத அரசர் சாலமன் அரண்மனையில் தமிழகத் தேக்கு மரப்பொருள்கள் இருந்த குறிப்புகள் யூதர்களின் புனிதநூலான தோராவில் உள்ளது. யவனர்களுடனான வணிகத் தொடர்பைப் “பெரிப்ளூசின் செங்கடல் செலவு” (The periplus of the Erith-rean Sea) என்னும் நூலில் அறியலாம். இந்நூல் கொற்கை நகரில் கிடைக்கும் முத்துக்கள் வேறு பொருட்களை விட மதிப்பு வாய்ந்தவை என்று குறிப்பிடுகிறது. பிளைனி, தாலமி போன்றோரின் குறிப்புக்களும் தமிழரின் பிறநாட்டு வணிகத் தொடர்பையும் பண்டைய தமிழகத் துறைமுகங்களின் பெருமையையும் குறிப்பிடுகின்றன. கீழடியில் கிடைத்த உரோமானிய நாணயங்களும், ரௌலட் அரிட்டைன் வகை மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. மண்டபம் அருகில் உள்ள அழகன்குளம், புதுச்சேரியின் அரிக்கமேடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த எகிப்து நாட்டின் பானையோடுகளும், பெண்ணின் சித்திரம் பதித்த பானையோடுகளும், மணிகளும், நந்த அரசர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.

    தமிழ்நாட்டு வணிகம்

    தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பயணம் செய்வதிலும் கடல் வாணிகம் செய்வதிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால் கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது. கடலில் நெடுந்தூரம் கப்பலில் போகவும் வரவும் பழங்காலத்திலேயே பழகினார்கள். கரிகால் சோழனுடைய முன்னோனான ஒரு சோழன் கடற்காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான்.

    “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!2

    என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுகிறது. பழம் காலத்துப் பாண்டியன் ஒருவன் தன் அடி, அலம்பக் கடலில் நின்றான் என்றும், கடலில் தன் வேலை எறிந்து அதை அடக்கினான் என்றும் கூறப்படுகிறான். இதன் கருத்து என்னவென்றால், அவன் கடலை அடக்கிக் கடலில் நாவாய் செலுத்திக் கடற்பயணத்தை எளிதாக்கினான் என்பது. இவற்றிலிருந்து கடலில் பயணம் செய்வதைத் தமிழர் ஆதி காலத்திலிருந்து நடத்தினார்கள் என்பது தெரிகின்றது. கடலில் கப்பலோட்டுவது அக்காலத் தமிழருக்குக் கைவந்த கலையாயிற்று. அவர்கள் கடல் கடந்து போய் வாணிகம் செய்தார்கள். கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாகவும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல் நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு ‘வணிகச்சாத்து’ என்னும் பெயர்வழக்கு நிலவியது.

    கரையோர வணிகம்

    கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் முதலான தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப் பட்டினம், தம்ரலிப்தி (வங்காள தேசத் துறைமுகப் பட்டினம்) முதலான பட்டினங்களுக்குச் சென்றனர். பிறகு கங்கையாறு கடலில் – கலக்கிற புகர் முகத்தின் ஊடே கரையில் இருந்த பாடலிபுரம், காசி (வாரணாசி) முதலான ஊர்களில் வாணிகஞ் செய்து திரும்பினார்கள். ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ, என்று நற்றினை (189:5) கூறுகிறது. கங்கைக் கரையில் பாடலிபுரத்தில் தமிழர் வாணிகஞ் செய்த போது, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகதநாட்டை அரசாண்ட நந்த அரசர், தங்களுடைய தலைநகரமான பாடலிபுரத்தில் கங்கையாற்றின் கீழே பெருஞ்செல்வத்தைப் புதைத்து வைத்திருந்ததைப் பற்றி அறிந்தனர். தமிழக வாணிகரின் மூலமாக நந்த அரசரின் செல்வப் புதையலைத் தமிழ்நாட்டவர் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள். மாமூலனார் என்னும் சங்கப் புலவர் தம்முடைய செய்யுளில் நந்தருடைய நிதியைக் கூறுகிறார்.

    “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
    சீர்மிகு பாடலிக குழீஇக் கங்கை
    நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ “   3

    நந்த அரசரின் செல்வப் புதையலைப் பற்றிய இந்தச் செய்தியை மேற்கண்ட செய்யுள் வரிகள் உறுதி செய்கின்றன. வடநாட்டுப் பழைய நூல்களில் இச்செய்தி கூறப்படவில்லை.

    தமிழ் வாணிகர் கலிங்கம் வரை சென்று வாணிகஞ் செய்தார்கள். அந்த வாணிகச் சாத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 150 வரையில் நூற்றைம்பது ஆண்டுகள் அங்குத் தங்கி வாணிகம் செய்தது. அவர்களுடைய வாணிகம் நாளுக்கு நாள் பெருகிச் செல்வாக்கும் பலமும் அடைந்தது. அக்காலத்தில் கலிங்க தேசத்தை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் தமிழக வாணிகரால் தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும் என்று அஞ்சி அந்த வாணிகச் சாத்தை அழித்து விட்டான். அந்தச் செய்தியை அவ்வரசன் எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக் கல்வெட்டெழுத்துச் சாசனத்திலிருந்து அறிகிறோம். கலிங்க தேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் பொருள்களைக் கலிங்க நாட்டுக்கும் கொண்டு போய் விற்றார்கள். கலிங்க நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருள்: பருத்தித் துணி, பெருவாரியாகக் கலிங்கத் துணி தமிழ்நாட்டில் இறக்குமதியாயிற்று. கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத்துணி என்று சிறப்பாகப் பெயர் பெற்றது. பிறகு காலப்போக்கில் கலிங்கம் என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப்பெயராக வழங்கப்பட்டது. சங்க நூல்களில் துணிக்குப் பெயராகக் கலிங்கம் என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் சந்தனக்கல், இதனை இலக்கியங்கள் ‘வடவர் தந்த வான் கேழ் வட்டம்’ என்று குறிப்பிட்டன.

    நடுக்கடல் வாணிகம்

    தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து சென்று அங்கு உண்டான வாசப் பொருள்களையும் பவளத்தையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத்துகிலையும் கொண்டு வந்து பழந்தமிழ்நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அவர்கள் சாவகத்தோடு நின்று விட்டார்கள். அவர்கள் சாவகத்துக்குக் கொண்டுவந்த பட்டுக்கள், அங்குச் சென்ற தமிழக வாணிகர் வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்றார்கள். தமிழர் பட்டுத் துணியை ‘நூலாக்கலிங்கம்’ என்று சுட்டியது சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது.

    சாவக நாட்டிலிருந்து கிடைத்த வாசனைப் பொருள்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாசனைப் பொருள்களை விற்றவர்  வாசவர் என்று பெயர் கூறப்பட்டனர். வாசனைப் பொருள்கள் ஐந்து என்றும் அவை பஞ்ச வாசம் என்றும் கூறப்பட்டன. பஞ்ச வாசம், தமிழ்நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த (இப்போதைய யாழ்ப்பாணம்) மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துக்குச் சென்று தங்கின. இது கப்பல்கள் தங்குவதற்கு நல்ல துறைமுகமாக இருந்தது. ஆனால், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறவில்லை. மணிபல்லவம் (சம்புகொல பட்டினம்) அக்காலத்தில் மனிதர் வாழாத இடமாக இருந்தது. அங்குச் சென்று தங்கின கப்பல்கள் அங்கிருந்து கடற்பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே நெடுந்தொலைவிலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளான சாவக நாட்டுக்குச் சென்றன. இடைவழியில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. நாகர்மலைத் தீவுகள் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில்) மாநக்கவரம் என்று பெயர் பெற்றிருந்தன. இக்காலத்தில் இத்தீவுகள் நக்கவாரி (நிக்கோபர்) தீவுகள் என்று கூறப்படுகின்றன. அக்காலத்தில் அத்தீவுகளில் நாகர் இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வசித்திருந்தார்கள். அவர்கள் ஆடையில்லாமல் மிருகங்களைப் போல வாழ்ந்தபடியால் ‘நக்கசாரணர்’ என்று கூறப்பட்டனர். நாகர்மலைத் தீவுகளில் கப்பற் பிரயாணிகள் சென்றால், அவர்களை நக்கசாரணர் கொன்று விடுவர். அவர்கள் மனிதரைக் கொன்று தின்றதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால் அந்தப் பக்கமாகச் செல்லுகிற கப்பல்கள் அத்தீவுக்குப் போவதில்லை.

    சாவகத் தீவு வாணிகம்

    சாதுவன் என்னும் வாணிகன் நாகர் மலைத் தீவில் சென்று உயிரிழக்காமல் திரும்பி வந்ததை மணிமேகலை காவியம் கூறுகிறது. சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சாவக நாட்டுக்குப் போய் வாணிகஞ் செய்வதற்காகக் கப்பலில் புறப்பட்டுச் சென்றான். கப்பல் நாகர் மலைத் தீவுக்கருகில் சென்றபோது புயற்காற்றடித்துக் கடலில் மூழ்கிவிட்டது. மாலுமிகள் கடலில் முழுகிப் போனார்கள், சாதுவன் மரக்கட்டையொன்றைப் பற்றிக்கொண்டு அருகிலிருந்த நாகர்மலைத் தீவுக்கு நீந்தி நல்ல காலமாகக் கரையை யடைந்தான். ஆனால், இளைப்புங் களைப்பும் அடைந்து சோர்த்திருந்த அவன் கடற்கரை மணலிலேயே உறங்கி விட்டான். அயலான் ஒருவன் உறங்குவதைக் கண்ட நக்கசாரணர் சிலர் வந்து அவனைக் கொல்லத் தொடங்கினார்கள். விழித்துக் கொண்ட சாதுவன், அவர்களுடைய மொழியை அறிந்தவனாகையால், தன்னைக் கொல்ல வேண்டாமென்றும் கப்பல் முழுகிப் போனதனால்தான் அவ்விடம் வந்ததாகவும் கூறினான். தங்களுடைய மொழியில் பேசினபடியால் அவர்கள் அவனைக் கொல்லாமல் தங்களுடைய தலைவனிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். சாதுவன் சில காலம் நக்கசாரணரோடு தங்கியிருந்தான். பிறகு சந்திரத்தன் என்னும் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகன், சாவக நாட்டுக்குப்போய் வாணிகஞ் செய்துவிட்டுத் தன்னுடைய கப்பலில் திரும்பி வருகிறவன் நாகர் மலைத் தீவின் பக்கமாக வந்தபோது, நக்கசாரணர் அவனுடைய கப்பலைத் தங்கள் தீவுக்கு அழைத்து அவனுடைய கப்பலில் சாதுவனை ஏற்றிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அனுப்பினார்கள். இந்தச் செய்தியை மணிமேகலை காவியம் (ஆதிரை பிச்சையிட்ட காதை) கூறுகிறது.

    பாண்டிய நாட்டு வாணிகரும் சாவகத் தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வாணிகஞ் செய்தனர். பாண்டி நாட்டிலிருத்த தமிழர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்து திரும்பியதையும் மணிமேகலை காவியம் கூறுகிறது.               தமிழகத்திலிருந்து சாவக நாடு நெடுந்தொலைவிலிருந்தும் தமிழக வாணிகர் அந்நாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர், காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாவக நாட்டில்தான் கிடைத்தன. கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள்.

    மதுரைக்காஞ்சி கூறும் வணிகச் செய்தி:

    கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறுகளையும் அறுத்து மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் மோதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயைப்,

    “பன்மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
    விலங்குபிணி நோன் கயிறு அறீஇதை புடையூக்
    கூம்பு முதல் முருங்க எற்றிச் சாய்ந்துடன்
    கடுங்காற்று எடுப்பக் கல் பொருது இரைஇ
    நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்” 4

    என்னும் வரிகளில் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

    முடிவுரை              

    “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்5 பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது வணிகம். அது ஆதாய (இலாப) நோக்கு உள்ளதாகவும் இருக்கலாம்; இல்லதாகவும் இருக்கலாம். இவ்வகைப் பொருளாதார நடவடிக்கையே வணிகம் [TRADE, COMMERCE, BUSINESS]  எனப்படும்.

    சான்றெண் விளக்கம்

    1. உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை, அடிகள் 135
    2. வெண்ணிக் குயத்தியார் புறநானூறு, பாடல் எண். 66
    3. மாமூலனார் அகநானூறு, பாடல் எண்.  265
    4. மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி, அடிகள் 4-6
    5. திருவள்ளுவர், திருக்குறள்,  குறட்பா எண் – 120


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    ‘தமிழர்களின் கடல்சார் வணிகம்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

    • இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுப் பதிவுகளை வெளிக்கொணர வேண்டும் என்னும் துடிபபுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
    • பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றுப் பெருமைகளையும் நியாயமான அளவுகோலால் வெளிப்படுத்திக் காட்டும் ஆர்வம் பெரும்பாலும் அருகிப் போனதொரு காலக்கட்டத்தில் இத்தகைய கட்டுரைகள் வரவேற்புக்கும் வழிகாட்டுதலுக்கும் உரியன.
    • முதுகலை மாணவர்களுள் ஒருவராகப் பயிலும் கட்டுரையாளருக்கு இந்தப் பருவத்தில் இத்தகைய நோக்கு இருப்பது பாராட்டுக்குரியது.
    • கல்வெட்டுகள், பயணக் குறிப்புக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் முதலியவற்றைக் கூடுதல் சான்றாவணங்களாகச் சேர்த்திருக்கலாம். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.  

     

    Share
  • பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை

    பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    கைபேசி: 6381629365
    மின்னஞ்சல் : kumaritathithan@gmail.com

    ஆவணங்கள் கடந்தகால வரலாறுகளை எடுத்தியம்புவன. அவ்வாவணம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதன்மையான பதிவுகள் தொடங்கி சிறு நிகழ்வுகள் வரை ஆதாரத்தோடு பதிவு செய்யப்படுமானால் அவை ஆவணம் எனப்படும். அவை படிவம், பத்திரம், இலக்கியம் என எந்த வடிவத்திலும் அமைந்திருக்கலாம். அதேபோல அவை செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களிலோ ஓலைகள், திரைச் சீலைகள், காகிதங்கள், கற்கள், போன்றவற்றிலோ, வரி வடிவமாகவோ, ஓவியங்களாகவோ, குறியீடுகளாகவோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம். இந்த ஆவணங்களைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் இடமே ஆவணக் காப்பகம் எனப்படும்.

    நமது நாட்டில் தொன்மையான காலம் தொட்டு இவ்வகை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சோழர்கால கல்வெட்டுகள் மூலம் ஆவணங்களைப் பாதுகாக்கும் இடங்கள் ஆவணக்களரி என அழைக்கப்பட்டதனை அறியமுடிகிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணத்திலும் ஆவணம் குறித்தும், ஆவண மேலாண்மை குறித்தும் தரவுகள் இடம்பெற்றுள்ளன.

    பெரியபுராணத்தில் நம்பியாரூராருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றபோது அங்கு அந்தணர் உருவில் சிவபெருமான் வந்தார். அவர் நம்பியாரூராரிடம், “எனக்கும் உனக்கும் முன்பே ஓர் ஒப்பந்தம் இருக்கிறது. அதனை மீறி திருமணம் செய்கிறாய். அவ்வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்” என்கிறார். நம்பியாரூராரும் வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அந்தணர் அவரிடம் அந்தக் காலத்தில் உன் தந்தையயின் தந்தை எனக்கு எழுதித்தந்துள்ள ஆவணம் – அடிமை ஓலை என்னிடம் உள்ளது என்கிறார். அந்தணரிடம் இருக்கின்ற அடிமை ஓலையைக் காட்ட சொல்கிறார் நம்பியாரூரார். அதைக் கேட்ட அந்தணர், “நீ ஓலையைப் பார்த்துப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள தக்கவனாக இல்லை. அவையில் உள்ளவர்களிடம் காட்டினால் அவர்கள் நீ எனது அடிமை என்று சொல்வார்கள்” என்கிறார்.

    ஓலையைக் காட்ட மறுத்ததும் அதனைப் பறித்திட நம்பியாரூரார் செல்ல, அந்தணர் ஓட இறுதியாக அந்தணரை எட்டிப் பிடித்து அவரிடம் இருந்த ஓலையைப் பெற்று படித்தார். அதில் அடிமை என்று அவரது முன்னோர் எழுதி வழங்கியிருப்பதைக் கண்டார். உடனே அவ்வோலையைக் கிழித்து எறிந்துவிட்டார். அந்தணர் அங்கிருந்த அவையோர்களிடம் முறையிடலானார். அந்தணரிடம் அங்கிருந்த மக்கள் உலக நடைமுறையில்லாத ஒன்றை நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க, அருகில் உள்ள திருவெண்ணெய் நல்லூர்தான் எமது ஊர் என்கிறார். அதோடு அறநிலை உணராமல் கையிலிருந்த ஓலையைப் பறித்து கிழித்ததன் மூலம் நம்பியாரூரார் எனது அடிமை என்பது உறுதியாகிவிட்டது என்றார்.

    வாதிடுவதில் வல்லவராக இவ்வந்தணர் இருக்கிறார். ஓர் ஆவணத்தைக் காட்டி இங்கே வழக்காட வந்திருக்கும் இவரை வெற்றிகொள்ள திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்திற்குச் செல்வதே உகந்ததாக இருக்கும் என்றெண்ணி  அந்தணரை அங்கு அழைக்கிறார் நம்பியாரூரார்.

    திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்தை அனைவரும் அடைந்தனர். அந்தணர் தனிநபராக நின்று நம்பியாரூரார் தமது அடிமை என வாதிட்டார். வாதத்தின் போது நம்பியாரூராரின் தந்தையின் தந்தை எழுதிக்கொடுத்த ஓலை ஆவணத்தைச் சாட்சியாக வைத்தே தாம் முறையீடு செய்ய வந்ததாகவும் அந்தணர் கூறுகிறார். அதனைக் கேட்ட அம்மன்றத்தார் அவரின் ஓலையை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டால் வெற்றியாகிவிடுமா? என்ன சொல்கிறீர் என நம்பியாரூராரைக் கேட்டனர். அதற்கு உலகியலுக்கு மாறாக இந்த  அந்தணர் பேசுகிறார். இது எனக்கு தெளிவளிக்காத ஒன்றாக உள்ளது என்றார்.

    அறமன்றத்தார் அந்தணரிடம் அனைவர் முன்னிலையில் நம்பியாரூராரை உங்கள் அடிமை என்று உரைத்ததனை மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு மூன்று வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

    “ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற் றயலார் தங்கள்
    சாட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
    மூட்சியிற் கிழித்த ஓலை படியோலை மூல ஓலை
    மாட்சியிற் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்”

    (பெரியபுராணம்-202)

    இவ்வாறு நம்பியாரூரார் அடிமை என்பதற்கான நிகழ் சான்றான ஆட்சி, அடிமை என்பதற்கான ஆவணச் சான்று, அயலவர் சாட்சி என்ற மூன்றில் ஒன்றை காட்ட முடியுமா? என அற மன்றத்தார் கேட்க ஆவணச் சான்றை முன்வைக்கிறார். முன்னர் நம்பியாரூரான் கிழித்தது படிஓலை. மூல ஓலையை அறமன்றத்தில் காட்டுவதற்காக வைத்துள்ளேன் என்கிறார் அந்தணர்.

    அறமன்றத்தார் மூல ஓலையைக் காட்டச் சொன்னதும் நம்பியாரூரான் இந்த மூல ஓலையையும் பறித்துக் கிழிக்காமல் பார்த்துக்கொள்வதானால் மூல ஓலையைக் காட்டுகிறேன் என்கிறார். அவையோர் ஒத்துக்கொள்ள எடுத்துக் கொடுக்கிறார். அங்கிருந்த கரணத்தான் என்னும் எழுத்தர் அவ்வோலையைப் பெற்று சோதிக்கிறார். ஓலையின் பழைமையைச் சோதித்த பின்பு ஓலையில் இருந்த செய்தியினைப் படித்தார். அதில் ஆதிசைவ மரபிலே ஆரூரன் என்ற நான் இதன் மூலம் எல்லாரும் அறிய எழுதிவைக்கும் செய்தியானது, பெருமுனிவரான வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு நானும் என் வழியில் வருபவரும் வழிவழியாய்த் தொண்டு செய்து வருவோம் என்பதற்காக உடன்பட்டு இந்த ஓலையை மனமும் செயலும் சம்மதித்து, எழுதித்தந்தேன். இதற்கு என் கையெழுத்து என்று இருந்தது.

    ஓலையில் உள்ள செய்தியை அறிந்ததும் அதில் உள்ள ஒப்பம் நம்பியாரூராரின் பாட்டனாரின் ஒப்பம்  என்கிற உண்மையை ஆராய்கின்றனர்.

    “அந்தணர் கூற இன்னும் ஆள்ஓலை இவனே காண்பான்
    தந்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண் டாகில்
    இந்த ஆவணத்தி னோடும் எழுத்துநீர் ஒப்பு நோக்கி
    வந்தது மொழியின் என்றான் வலியஆட் கொள்ளும் வள்ளல்”

    (பெரியபுராணம் – 207)

    இவ்வாறு அந்தணர் கூறியதால் அங்குள்ள பழைய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஓலைகளில் காணப்படும் நம்பியாரூராரின் தந்தையின் ஒப்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அவை ஒன்றுபோல் அமைகின்றன. எனவே அந்தணருக்கு நம்பியாரூரார் அடிமை என்பதாகத் தீர்ப்பளிக்கப்படுகிறது. அந்நிலையில் நம்பியாரூரார் அந்தணரிடம் இங்கே நீங்கள் வழிவழியாக வாழ்ந்து வரும் வீட்டைக் காட்டுங்கள் என வினவுகிறார். அவர் காட்டுவதற்காக அழைத்துச் செல்கிறார். திருவருள் துறைக் கோயிலினுள் சென்றதும் அந்தணர் மறைந்துவிடுகிறார். இவ்வாறு நம்பியாரூராரைத் தடுத்து ஆட்கொண்ட கதை நமக்குத் தெரியும்.

    இக்கதையினை நுணுகி பார்க்கும் இடத்து நமது நாட்டில் தொன்மையான காலத்திலேயே ஆவண மேலாண்மையில் கொண்டிருந்த அறிவு வெளிப்படும். அக்காலத்திலேயே அறமன்றம் என்கிற நீதி வழங்கும் அவை இருந்ததையும் அறியமுடிகிறது.

    அதேபோன்று ஓலை ஆவணங்கள் படி எடுக்கப்படுவது, அவற்றின் நகல் ஆவணங்களின் பயன்பாடு ஆகியவை குறித்த பதிவுகளும் இக்கதையில் இடம் பெறுகின்றன. மேலும் ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பும் அக்காலகட்டத்தில் அமைந்திருந்ததையும் அங்கு ஓலை ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப் பட்டுருப்பதனையும் அறியமுடிகிறது. இவ்விலக்கிய ஆதாரம் ஆவண மேலாண்மையில் நமது முன்னோர்கள் சிறந்திருந்ததனை எடுத்துரைக்கிறது எனலாம்.

    Share
  • (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    டாக்டர். வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர்641014.
    vignesh@psgcas.ac.in

    தோற்றுவாய்:

    தமிழ்த்திருநாட்டிற்கு வற்றாத வளனாய்க் குன்றாத மணி விளக்காய் வாய்ந்தொளிர்வது தொல்காப்பியம் என்னும் முழுமுதல் இலக்கணப் பெருநூலாம். இந்நூல்  பல்லாயிரம் யாண்டுகட்கு முன்னர் தமிழகத்தில் தோன்றி, யாண்டு பலகடந்தும் வேரூன்றி நிற்பதற்குக் காரணம் உரையாசிரியப்பெருமக்களின் உரைகள் என்னும் கவசத்தால் வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கபட்டமையேயாம். இங்ஙனம் அமைந்த தொல்காப்பிய உரைகளுள் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரின்  உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

    தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

    இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

    இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

    நச்சினார்க்கினியர்:

    தமிழிலக்கிய, இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களுள் மேலோங்கி நிற்பவர் நச்சினார்க்கினியராவர்.

    பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
    ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் – சாரத்
    திருத்தகு மாமுனிசெய் சீந்தா மணியும்
    விருத்திநச்சி னார்க்கினிய மே.

    எனவரும் பழம்பாடலானது இவர் உரைகண்ட நூல்களைக் குறிப்பிடுகின்றது. இவற்றுள், குறுந்தொகையுரை கிடைத்திலது.

    தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்ற இயல்களுக்கு இவர் வரைந்த உரை கிடைத்திலது. தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என்பவற்றிற்கு இவர் வரைந்த உரைகள் சிறப்பிற்குரியன.

    இவரின் புலமையை வியந்து “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று இலக்கணக்கொத்து ஆசிரியரும், அமிழ்தினும் இனிய தமிழ்மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்து அருளியவர்” என்று உ.வே. சாமிநாதையரும், பன்னூலறிந்த செந்நெறிப்புலவர்” என்று அரசஞ்சண்முகனாரும் “செந்தமிழ் மாமுகில் வள்ளல்” என்று மறைமலையடிகளாரும் புகழ்ந்துரைக்கின்றனர். அன்றியும், தமிழில் நல்ல புலமை அடைய விரும்புவர்கள் நச்சினார்க்கினியருடைய உரைகளில் தோய்ந்தாலன்றிப் புலமை நிரம்பாது என்று கூறுகின்ற அளவிற்கு உரையாசிரியர்களுள் தலைநின்ற சிறப்புக்குரியவர் நச்சினார்க்கினியர்” (தொல். சொல். உரைக்கொத்து- ப.109) என்று பண்டித வித்துவான். தி.வே.கோபாலையரவர்கள் உவந்து போற்றுதலும் ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    பாற்கடற் போல பரந்த நன்னெறி…” எனத்தொடங்கும் உரைச் சிறப்புப்பாயிர அகவற்பா, நச்சினார்க்கினியரின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இப்பாயிரத்தால் இவர்தம் வரலாற்றையும் ஒருவாற்றான் அறியவியலுகிறது.

    காலமும் சமயமும் :

    பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர், மதுரையில் அந்தணர் குலத்தில் பாரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவர் என்றும், போதகாசிரியராக வாழ்ந்தவர் என்றும், தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் என்றும் பாயிரம் இவரைப் போற்றுகிறது.

    இவரின் பெயர் சிவபெருமானின் திருப்பெயர்களுள் ஒன்றாம். இவர் சிவபெருமானையே பரம்பொருளாக வழிபட்ட சைவசமயத்தினரென்பது இவரின் பெயராலும் இவர் தம் உரையில் திருவாசகம், திருக்கோவையார் இன்னோரன்ன நூல்களிலிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி இருத்தலானும் அறியவியலுகின்றது. அங்ஙனமே, திருமுருகாற்றுப்படையின் அடிகளைப் பலவிடங்களில் இவர் எடுத்துக்காட்டுவதிலிருந்து அந்நூலில் இவர்க்குள்ள ஈடுபாடு பெரிதெனத் தெரிகிறது.

    இவர் சிவநேயச் செல்வராயினும் பிற சமயங்களையும் போற்றும் சமயப்பொறை யுடையராகவே இவர் விளங்கியமை தொல். சிறப்புப்பாயிரவுரை, மொழிமரபு – 13, அகத்திணையியல்- 32, புறத்திணையியல் – 21 என்றின்னவற்றிற்குரிய இவருரையான் புலனாகின்றது.

    பல்துறைப் புலமை :

    தமிழ் மொழியில் உள்ள பல்வகை நூல்களிலும் மிகுந்த பாண்டித்தியம் உடையவர் இவர். வடமொழியில் காவிய நாடக அலங்காரங்களுக்கு உரைகண்ட திரு. மல்லிநாதசூரி என்னும் புலவரைப் போல் தமிழ்மொழிக்கு வாய்த்தவர் இவர் என்று ஆன்றோர்கள் போற்றுவர்.

    தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும் அவற்றின் உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்கு விளக்கிப் போகின்றமையாலும் பிறவாற்றாலும் இவரை வடமொழியிற் பலவகையான கலைகளிலும் மிக்க பயிற்சியுள்ளவரென்று சொல்லுதற்கிடமுண்டு” (சீவகசிந்தாமணி- ப. 33) என்று புகழ்வர் உ.வே. சாமிநாதையரவர்கள்.

    பன்னூற் பயிற்சியோடு பல்வேறு கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர் இவர். இசை, நாடகம், தத்துவம், வானியல், சோதிடம், மருத்துவம், கட்டடக்கலை முதலான கலைகளில் மிகுதிறம் கொண்டவர் என்பதை இவரின் உரைக் குறிப்புக்களிலிருந்து அறியவியலுகிறது.

    தமிழ்மொழிப் பற்று :

    இவரின் தமிழ்மொழிப் பற்றினை வெளிப்படுத்தும் இடங்களாக,

    அகரம் முதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார்” “இவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார்” (நூ.1)

    தமிழ்ச் சொல்லெல்லாம் ஒருதலையாகப் பொருளுணர்த்தும்” (பெய.1)

    காலம் உலகம் என்பன வடசொல் அன்று” (கிளவி. 58)

    என்றின்னவற்றைக் காட்டலாம்.

    உரைப்போக்கு :

    நச்சினார்க்கினியருரை தெளிவும், விளக்கமும், புலமைநலனும் உடையதாம். சொற்செறிவும் பொருட்செறிவும் மிக்கதும், இலக்கிய இலக்கணத் தோய்வுடையதுமாம்.

    இவர்தம் தொல்காப்பிய உரையைப் பொதுவகையில் நோக்குழி, இவருரையமைப்பு, பாயிரவுரை, அதிகாரவுரை, இயல் உரை, நூற்பா உரை என்னும் நான்கு பகுதிகளை உடையதாக அமைந்துள்ளது.

    மேற்கோளாக எடுத்துக்காட்டும் நூலின் பெயரையும், நூலாசிரியர் பெயரையும் இவர் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

    இவர் சிலவிடங்களில் செய்யுட்களை உரைநடையாக எழுதிச்செல்வதுண்டு. உரை வகுக்குங்கால், இவர் முன்னோர்தம் உரைநெறிகளைப் பின்பற்றிடினும்,   நூற்பா கிடந்தாங்கே ஆற்றொழுக்காகப் பொருள் விரித்தலின்றிக் கொண்டுகூட்டிப் பல்வேறிடங்களில் பொருள் கூறியுள்ளார். இதுபற்றி, மறைமலையடிகளார், வ.சுப. மாணிக்கனார், க. வெள்ளைவாரணனார் போன்ற பேராசிரியர்கள் தம் நூல்களில் இவரைக் கடிந்துரைத்துள்ளனர்.

    எழுத்ததிகார உரையமைப்பு :

    நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரவுரை பாயிர உரை, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என நான்கு பகுதிகளை உடையது.

    பாயிர உரையைப் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இரு வகையாகப் பிரித்துக்கொண்டு உரை செய்திருக்கின்றார் நச்சினார்க்கினியர். பாயிர உரை இளம்பூரணருரையை ஏற்றதாகும். அதில் இளம்பூரணரின் பெயரை மனமுவந்து குறிப்பிடுகின்றார். பொதுவகையில் இப்பாயிர உரை இவரின் உவமை நலத்தைச் சாற்றுவதாக அமைகின்றது.

    பாயிர உரையினையடுத்து அதிகார உரை அமைகிறது. அதிகார உரையும் தனித்துக் கூறப்படவில்லை. முதல் நூற்பாவினை யடுத்தே கூறப்பட்டுள்ளது. இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின்” என வினாவெழுப்பி அதிகாரத்தில் கூறப்படும் கருத்துக்களைத் தொகுத்து முன்னுரையாகக் கூறுகின்றார்.

    எழுத்ததிகார  நூற்பாவுரை கருத்து, பொருள், காட்டு, விளக்கம் என அமைகின்றது, ஆயின், இந்த அமைப்பும் அனைத்து நூற்பாக்களிலும் பின்பற்றப்படவில்லை.

    சில நூற்பாக்களில் கருத்துரையையடுத்து, விளக்கவுரையும் அதனையடுத்து எடுத்துக்காட்டும் என முன்னும் பின்னுமாக மாறி அமைந்திருக்கின்றன.

    மொழிமரபு 31-ஆம் நூற்பாவுரையில் பொருளுரை முதலிலும், அடுத்துக் கருத்துரையும், அதனையடுத்து எடுத்துக்காட்டும், இறுதியாக விளக்கவுரையும் என்ற  நிலையில் உரையமைப்பு உள்ளது. பொதுவாகக் கருத்துரை தொடக்கமாக அமைவதுண்டு. ஆயின், இந்நூற்பாவில் அம்முறை மாறியுள்ளது.

    பெரும்பான்மையாக “இது” அல்லது “இஃது” எனத் தொடங்கி உணர்த்துதல் “நுதலிற்று”  என ஈற்றில் முடித்துக் கருத்துரை கூறுவார். ஆயினும் சில இடங்களில், ‘உணர்த்துகின்றது’, ‘கூறுகின்றது’. ‘கொள்கின்றது’, ‘என்கின்றது’, ‘விளக்குகின்றது’, ‘அகற்றியது’ என்றும் ஈற்றில் முடித்தலும் உண்டு. நூற்பாவில் “இதன் பொருள்” எனக் குறியிட்டுப் பதவுரையாக எழுதுகின்றார்.

    பொதுவகையில் நோக்கின். இவரின் எழுத்ததிகார உரையமைப்பானது இளம்பூரணரின் எழுத்ததிகார வுரையமைப்பினை ஒட்டியே செல்கின்றது என்ற அளவில் நிறுத்தி, இனி இவரின் சொல்லதிகார உரையமைப்பினை ஆய்வோம்.

    சொல்லதிகார உரையமைப்பு :

    சொல்லதிகார நச்சினார்க்கினியருரை அதிகாரவிளக்கம், இயல்விளக்கம், கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினைக் கொண்டது.

    இளம்பூரணர், சேனாவரையர் இவ்விருவரும் சொல்லதிகார உரையில் அதிகார விளக்கத்தைக் கிளவியாக்கத்தின் முதல் நூற்பாவினை அடுத்துக்கூறியதனைப் போன்றே இவரும் கூறியுள்ளார். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என வினவி அதிகார விளக்கம் தருகின்றார். அதிகார விளக்கத்தில் ஒன்பது இயல்களின் கருத்துக்களையும் தொகுப்புரையாகத் தந்துள்ளார். இயல் பற்றிய விளக்கத்தினை இயலின் முதல் நூற்பாவினை அடுத்து வழங்கியுள்ளார். முதல் இயலுக்குரிய இயல் விளக்கத்தினை மட்டும் அதிகார உரையுனை அடுத்து அமைத்துள்ளார்.

    கருத்துரை வழங்குங்கால், எழுத்ததிகாரத்தில் கூறியாங்கே, ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கிக் கருத்துரை கூறுகின்றார். ஆயினும், நுதலிற்று”  என ஈற்றில் எங்கும் முடித்தாரில்லை. ‘பகுக்கின்றது’, ‘அமைக்கின்றது’, ‘ஆராய்கின்றது’, ‘கூறுகின்றது’, ‘முடிக்கின்றது’ முதலிய சொற்களைக் கொண்டே முடிக்கின்றார்.

    சில இடங்களில் தொடர்புடைய நூற்பாவாக இருப்பின்,  ‘இதுவும் அது’ என்று மட்டுமே குறியிட்டு, அந்நூற்பாவிற்குக் கருத்துரை வழங்காது விடுதலுமுண்டு.

    நூற்பா உரையினையடுத்து எடுத்துக்காட்டும் அதனையடுத்து மேற்கோள் விளக்கமும் காணப்படுகின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே சொல்லதிகார அனைத்து இயல்களிலும் உள்ளதா எனில், ஒரோவிடங்களில் இவ்வமைப்பு முறை முறையாகப் பின்பற்றப்படவில்லை.

    இனி, பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையமைப்பு பற்றிய ஆய்வினைத் தொடர்வாம்.

    பொருளதிகார உரையமைப்பு :

    பொருளதிகார நச்சினார்க்கினியருரை அதிகார முன்னுரை, இயல் விளக்கம்,  நூற்பா உரை என்ற மூன்று பகுதிகளை உடையதாக அமைகின்றது.

    எழுத்து, சொல் அதிகாரங்களைப் போன்றே பொருளதிகாரத்திற்கும் அதிகார முன்னுரையினைத் தனித்துக் கூறவில்லை. முதல் நூற்பாவினை அடுத்துக் கூறுகின்றார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்கு அதிகார முன்னுரை கூறுங்கால், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என்று வினா எழுப்பிக் கூறிய இவர், இவ்வதிகாரத்தில் அங்ஙனம் கூறவில்லை.

    நூற்பாவிற்குரிய உரையானது கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை, மேற்கோள்களைப் பொருத்திக் காட்டுதல் என்னும் முறையில் அமைந்து செல்கின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே அதிகாரம் முழுவதும் பின்பற்றப்படவில்லை சில இடங்களில் மாறுவதுமுண்டு. களவியலுக்கு இவர் வரைந்துள்ள இயல் விளக்கம் குறிப்பிடத்தக்கது.

    கருத்துரையானது ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கி ‘உணர்த்துதல் நுதலிற்று’ என ஈற்றில் முடித்து அமைகிறது.

    இவ்வகையில் பொருளதிகார உரையமைப்பானது ஏனைய உரையமைப்பினின்றும் வேறுபட்டு நிற்கிறது.

    சிறப்பு உரைநெறி :

    அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு ஆகியன கூறல். வினாவிடை நெறி,  நூற்பாவை நிலைப்படுத்தல், மிகையினாலும் இலேசினாலும் சொல், சொற்றொடர்களை நிலைப்படுத்தல், நூற்பாவின் இன்றியமையாமையை உறுதிப்படுத்தல், இலக்கணக்குறிப்பு, இலக்கணமுடிபு கூறுதல் இன்னோரன்னவை இவரின் சிறப்பான உரை நெறிகளாகச் சுட்டத்தக்கனவாம்.

    மாணாக்கருக்கு உய்த்துணர வைத்தல் :

    மாணாக்கருக்கு ஆராய்ச்சியறிவு மிகுதலுக்காக அவர்கள் தம் அறிவைச் செலுத்த வாய்ப்பளித்தல் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் இயல்பாம். இதனை, மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பு” (சொல்.சேனா.நூ.1) எனச் சேனாவரையர் கூறுமாற்றானும், அவ்விருவர் உரைகளானும் அறியவியலுகிறது. ஆயின், நச்சினார்க்கினியரோ, ‘மாணாக்கருக்கு உய்த்துணர்வு இன்று’ என்னும் கருத்தினர். இதனை, மாணாக்கர்க்கு உய்த்துணரும் உணர்வு இன்று” (சொல்.நச்சி.நூ.203) என இவர் கூறியவதனால் அறியவியலும். இதுபற்றியே இவர் எதனையும் விளக்கியே கூறுவார் என்பது ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    சிறப்பாக உரை வரையும் நூற்பாக்கள் :

    பல்லாற்றானும் சிறப்புடையது இவருரை என்பதை எடுத்துக்காட்டுதற்குப் பல இடங்களைச் சான்றாகக் கூற இயலும். ஆயினும், சுருக்கங்கருதி இவர் சிறப்பாக உரை வரையும் நூற்பா எண்களை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுவாம்.

    அவை : எழுத்ததிகாரம் – மொழி.13, 18, புணர்.38,17 சொல்லதிகாரம் – நூ. 37, 50, 51, 71, 83, 95, 113, 171, 222, 360, 399, 400, 410, 441 பொருளதிகாரம் – அகத்.5,6,8 புறத்.17, களவு.1 முதலியனவாம்.

    சொற்பொருள் விளக்கம் :

    இவர் நல்கும் சொற்பொருள் விளக்கங்கள் பன்முறையும் படித்தின்புறத்தக்கன. சான்றுக்காகச் சிலவற்றை எடுத்துக்காட்டுதும்.

    குடிமை ஆண்மை இளமை…” எனவரும் சொல்லதிகார நூற்பாவிற்கு உரைகூறும் இவர் “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்”, “ஆண்மையாவது ஆளுந்தன்மை”, “இளமையாவது காமச் செவ்வி நிகழ்வதோர் காலம்”, “வன்மையாவது ஒரு தொழிலை வல்லுதல்”, “பெண்ணையாவது கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை” என்றெல்லாம் வனப்புற விளக்குகின்றார்.

    ‘அகம்’ என்பதற்கு இவர் கூறும் விளக்கம் அறிந்து போற்றத்தக்கது. அவ்விளக்கம் வருமாறு:

    ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது எனக் கூறப்பட முடியாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”

    என்பது இவரின் நயமான விளக்கம்.

    மறுப்பு நலன் :

    தமக்கு முன்னுள்ள உரையாசிரியர்களின் கருத்துக்கள் ஏற்புடையதாயின், மனமுவந்து குறிப்பிடும் நச்சினார்க்கினியர், தன் கருத்துக்கு ஒவ்வாத கருத்துக்களாயின் மறுத்துச் செல்கின்றார்.

    அவ்வாறு மறுக்கின்ற பொழுது “பொருள் கூறினாரால் உரையாசிரியர் எனின் கூறியது கூறல் ஆம். ஆகலின் அது பொருந்தாது”, “என்றாரால் உரையாசிரியர் எனின் பொருந்தாமை யுணர்க”, “ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்கு விடையின்மை உணர்க” என்பது போன்று இளம்பூரணர், சேனாவரையர் இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு மறுத்தலும், மாறுகொளக் கூறல் என்னும் குற்றம் தங்கும்”, “வடசொல்லென மறுக்க”, “ஆசிரியர்க்குக் கருத்தன்மை உணர்க”, “ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் கருத்தன்மை அறிக”, “அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க” என்றெல்லாம் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமலேயே மறுத்தலும் உண்டு.

    இன்னும் சிலவிடங்களில் இளம்பூரணருரையைச் சேனாவரையர் மறுக்கினும், இவர் இளம்பூரணருரையையே தழுவி, சேனாவரையரின்  மறுப்பிற்கு மறுப்பு வழங்காமலும், தாம் ஏற்றுக்கொண்ட இளம்பூரணர் கருத்துக்கள் ஏற்புடையன என்பதற்குக் காரணம் காட்டாமல் போதலும் உண்டு. இன்னும் பல இடங்களில் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் கூறாத உரைகளை வகுத்தலும் உண்டு.

    பேராசிரியர் உரையைப் பெரும்பாலும் ஏற்று உரையெழுதும் இவர், செய்யுளியலில் சில இடங்களில் அவருரையை மறுத்துச் செல்கின்றார்.

    இவ்வகையில், நன்மை கண்டவிடத்து ஏற்றுப் போற்றலும், பிழை கண்டவிடத்துக் கடிந்து ஒதுக்கலும் இவரின் மறுப்புநலனாம்.

    முடிபுகள் :

    இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.
    • அவ்வுரையாசிரியப் பெருமக்களுள் நச்சினார்க்கினியரின் உரைப்போக்கும் அவர் கொண்ட உரைமரபுகளும் தனிச்சிறப்புடையனவாய் இலங்குகின்றன.
    • ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கைப் பலவிடங்களில் இவருரைப்பகுதிகளான் இனிது விளங்குகின்றமையே இவருரைத் திறனின் சால்பினைக் காட்டவல்லதாம்
    • அன்றியும், தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்னும் இயல்களுக்கு இவருரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

    என்பன இக்கட்டுரையின் முடிபுகளாம்.

    துணை நின்ற நூல்கள் :

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (ஞா. தேவநேயப்பாவாணர்  விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1955.

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (அடிகளாசிரியர் பதிப்பு)      காவேரி கலர் அச்சகம், கும்பகோணம், 1969

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1973.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1970.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம  – 1981.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, 1978.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,(கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை, இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு,  சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1997.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையாருரை,  கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  தெய்வச்சிலையாருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1963.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும் பழையவுரையும், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1964.

    தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார்,                                  38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி.  முதற்பதிப்பு – 1930

    தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1969.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை,                   (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – 1985.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  முன்னைந்தியல்கள் – நச்சினார்க்கினியருரை,சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை, சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம்- உரைவளம், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

    தொல்காப்பியம் – கிளவியாக்கம் – உரைக்கொத்து, தி.வே.கோபாலையர், சரசுவதிமகால் நூலகம் (2007) தொல்காப்பியம் – எழுத்து, சொல், பொருள்

    தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, பாவலரேறு. ச. பாலசுந்தரனார்- தாமரை வெளியீட்டகம், தஞ்சை,

    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நுன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, வ.சுப. மாணிக்கனார்,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (1989).

    மாணிக்கனார், வ,சுப. – தொல்காப்பியக்கடல், தொல்காப்பியத்திறன் மணிவாசகர் பதிப்பகம், சென்னை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்” என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

    v தமிழ்த்துறையினராலும் தமிழ் அறிஞர்களாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அல்லது காண மறுக்குந்துறை உரையாசிரியர் கண்ட ‘உரைத்துறை’யாகும். அவ்வுலகத்தின் முடிசூடா மன்னராகிய நச்சினார்க்கினியரைத் தற்கால பேராசிரிய இளைஞர் ஒருவர் அறிமுகம் செய்திருப்பதே பெரிதும் போற்றுதற்கு உரியதாகும்.

    v  நச்சினார்க்கினியரின் உரைப்போக்குகள் பற்றிய சில எடுத்துக்காட்டுகளைக் கட்டுரையாசிரியர் தந்திருக்கிறார். அவை நச்சினார்க்கினியரின் உரைப் பேருருவைக் காட்டப் போதுமானதாக அமைந்திருக்கின்றனவா என்பது சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

    v “சேனாவரையரோடு மாறுபட்டு இளம்பூரணரை வழிமொழியும் நச்சர், அதற்கான காரணத்தைச் சொல்லாமல் போய்விடுகிறார்” என்பது கட்டுரையில் ஒரு நுண்ணியம்.

    v நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் எனப் பொதுவான தலைப்பிட்டுத் தொல்காப்பிய உரைகளை மட்டும் கட்டுரைப் பொருளாகக் கொண்டிருப்பது கட்டுரையின் அளவு கருதித் தவிர்க்க இயலாது எனினும் “நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் (தொல்காப்பியம்)” எனத் தலைப்பிட்டிருக்கலாம்.

    v  கட்டுரையின் முதல் நான்கு துணைத்தலைப்புக்கள் நச்சினார்ககினியரை அறிமுகம் செய்திருக்கின்றன. இதனைத் தவிர்த்து அவருடைய உரையாழத்துக்கான சான்றுகளைக் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்.

    v  கட்டுரைகளில் காட்டப்படுபவை நச்சினார்க்கினியத்தில் கண்ட முத்துகள் எனச் சொலல முடியாவிட்டாலும் அவை சிப்பிகள் அல்ல என்று துணிந்து கூறலாம்.

    “‘உரையாசிரியர் காலம்’ என்னும் தமிழின் வல்லாண்மைப் பகுதியின்  தனிப்பெரும் தலைவனாக வலம் வந்த மாபெரும் புலமைத் தேக்கம் நச்சினார்க்கினியரை அறிமுகம் செய்துள்ள வகையில் இந்தக் கட்டுரை ஆய்வுக் கூறுகளைக் கொண்டிலது எனினும் ஒரு பொதுக் கட்டுரையாகக் கருதி, வல்லமையில் வெளியிடுகிறோம்”

    Share
  • செவ்வாய் தோஷம் (சிறுகதை)

    செவ்வாய் தோஷம் (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத்தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு  “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர்.

    அவர்கள் மாயவரம் என்கிற மயிலாடுதுறை சென்று அங்கிருந்து அருகிலுள்ள திருக்கடையூர் சென்று அடுத்த  மாதம் நடைபெறவிருக்கும் தங்கள் “சஷ்டி அப்த பூர்த்தி” என்கிற அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை முன்னேற்பாடாக செய்ய  ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை சோழன் எக்ஸ்பிரஸில் சென்று அதே இரவில் உழவன் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர்.

    எழும்பூரில், அருகில் உள்ள பிளாட்பாரத்தில், தஞ்சாவூரிலிருந்து இரவெல்லாம் கண் விழித்து அர்த்த ராத்திரியில் ஊர் ஊராக சுற்றிவிட்டு அலுத்து களைத்து நின்றிருந்தது “உழவன் எக்ஸ்பிரஸ்”..

    “நாளை காலை நாம் இந்த ரயிலில்தான் சென்னை திரும்புவோம்” என்று மனைவி ரமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் முரளி. அந்த ரயிலிலிருந்து முரளியும் ரமாவும் இறங்கி சென்று விட்டனர் என்பதை அறியாது!

    சோழன் சோழ நாட்டிற்கு செல்ல சைரன் ஊதியவண்ணம் கிளம்பினான். வழியில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர் என்றெல்லாம் நின்று நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

    வழியெங்கும் வித விதமான மனிதர்கள் வித விதமான சிறுவர் சிறுமியருடன் வித விதமான பைகளை எடுத்துக்கொண்டு ஆரவாரத்துடன் தட்டுத்தடுமாறி அவரவர் இருக்கைகளில் அவசரம் அவசரமாக அமர்ந்துகொண்டு “அப்பாடா” என்று ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்தார். முன்பெல்லாம் அவர் ஒரு பெரிய கிளிப் வைத்த கனரக அட்டையில் பயணிகள் சார்ட்களை வைத்துக்கொண்டு, கறுப்புக்கோட் அணிந்து கொண்டு தொந்தி, புட்டிக்கண்ணாடி யுடன் அனைவரது டிக்கட்களையும் “செக்” செய்து “டிக்” அடித்துவிட்டு ஒரு முறை அனைவரையும் அவரவர் அவரவர் வயதுப்பிரகாரம் இருக்கிறார்களா என்று அனுமானித்துக்கொண்டு அங்கிருந்து அடுத்த கம்பார்ட்மெண்ட் செல்வார்.

    நாமும் ரயில் ஏறுவதற்கு முன்பு கோச்சில் வெளியே ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில் நம் பெயரும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, இருந்தால்,” ஐ. ஏ. எஸ்.” பாஸ் செய்த நிம்மதி உணர்வுடன் உள்ளே  ஏறி அமர்வோம்.

    இப்போதெல்லாம் காலம் மாறிப்போச்சு. பல வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டதால் இது ஒரு இன்ப அதிர்ச்சி முரளி தம்பதிக்கு.

    சற்று இளைஞராக வெள்ளை பாண்ட், வெள்ளை ஷர்ட்டில் ட்ரிம்மாக கையில் ஏதோ” ஐ. பேட் “போல வைத்துக்கொண்டு, ரமா முரளி  என்று பெயர் சொன்னவுடன் சம்மதத்துடன் நகர்ந்து விட்டார் அங்கிருந்து, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என்ற எந்த தரவுகளையும்  கேட்காமலேயே!

    பள்ளிக்கூடத்தில் மாவட்டக்கல்வி அதிகாரி வகுப்பு வாரியாக இன்ஸ்பெக்ஷன் முடித்து விட்டு, அடுத்த வகுப்புக்கு செல்லும்போது “அப்பாடா! போய்ட்டார்”! என்று மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதுபோல, டிக்கட் பரிசோதகர் அந்தப்பக்கம் சென்றவுடன் அவரவர் தம் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏதோ கொடுத்துவிட்டு தத்தம் மொபைல் குழந்தைகளுடன் “ஆளுக்கு பதினைந்து லட்சம் போடப்பட்டுவிட்டதா” போன்ற விஷயங்களை எதிர்பார்த்து போன்களை தடவத்தொடங்கினர்.

    இதுவே முப்பது, நாற்பது வருடங்கள் முன்பு என்றால், வெளியே பார்க்கவேண்டிய ஊர்கள், மரம், செடி, கொடிகள், ஏரிகளையெல்லாம் பார்த்துக்கொண்டே, பக்கத்து சீட்டில் உள்ள மனிதர்களோடு பேச்சுக்கொடுத்து, உறவாடி, அவர்களின் பத்திரிக்கைகள், வாரஇதழ்களை கேட்டு வாங்கி  படித்துக் கொண்டு , கொண்டு வந்த உணவு வகைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, இறங்கும் இடங்கள் வரும்போது ரயில் சினேகிதர்களாக இறங்கி மறைவர். சில நேரங்களில் நல்ல வரன், நல்ல வேலை வாய்ப்புகள் அமைவதுமுண்டு.

    இப்போதெல்லாம் அருகிலுள்ளவர் ஏதோ ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தாலே “மயக்க பிஸ்கட்” டாக இருக்குமோ என்று பயந்து அனைவரும் அந்தப்பக்கம் திருப்பியமர்ந்து கொண்டு விடுகின்றனர்.

    ரமாவிற்கு செவ்வாய்க்கிழமை என்றால் ஆகாது. செவ்வாய் “வெறும் வாய்” என்பாள். முரளி சேல்ஸ் & மார்கெட்டிங் துறையில் பணி  புரிந்ததால் தன் அனுபவத்தில் செவ்வாய் “வருவாய்” என்ற புரிதல்.

    ரமாவிற்கு செவ்வாயன்று ஏதேனும் துளி அசம்பாவிதம் நடந்தாலே “எனக்கு அப்பவே தெரியும்” “ஏன்னா! இன்னிக்கு செவ்வாய்” என்று குறைப்பட்டுக்கொள்வாள்.

    “ஒரு மனிதன் எண்பது வயது வரை வாழ்கிறான் என்றால் ஏறத்தாழ நாலாயிரம் செவ்வாய்க்கிழமைகளை அவன் வாழ வேண்டியிருக்கும்; அத்தனை செவ்வாயும் அபசகுனம் என்று சொல்ல முடியாது” என்று மனைவியை ஆற்றுப்படுத்துவார்.

    இருந்தாலும் ரமா மனதில் ஏதோ உறுத்திக்கொண்டேயிருந்தது.

    அப்பர் பெர்த்தில் அமர்ந்துகொண்டு விடாமல் வீடியோ கேம்ஸ் விளையாடும் மாணவன், அதைப்பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் பெற்றோர், “மசாலாவடை, பஜ்ஜி, கொய்யாப்பழம்,” என்று எதையெல்லாமோ விற்றுக்கொண்டு ஏ. சி. கம்பார்ட்மெண்ட் என்ற முக்கியத்துவமே இல்லாமல் அங்கும் இங்கும் அலைமோதி தலையில், இடுப்பில் சுமந்த கூடையுடன் விற்பனை செய்யும் ஏழை விற்பனை மகளிர் ;

    வடை, பஜ்ஜி எல்லாம் எந்த எண்ணெயில் பண்ணினார்களோ, கொய்யாப்பழத்தை அலம்பாமலேயே எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட்டாள் ரமா, சிறு வயதில் அவளே இதையெல்லாம் அப்போது இப்படித்தான்  சாப்பிட்டிருக்கிறாள் என்பதை மறந்து!

    “இவர்கள் எல்லாம் எப்படி வீட்டை விட்டு ரயிலில் வெகுதூரம் டிக்கட் இல்லாமல் சென்று விற்பனை முடிந்து எந்த ரயிலில் திரும்பவும் ஊர் திரும்புவர்” என்று ரமா யோசனை செய்து கொண்டிருக்கும்போதே அவர்கள் கிராஸிங்கில் நின்று கொண்டிருந்த எதிர் ரயிலில் ஏறி மீண்டும் அங்கும் விற்பனை செய்து கொண்டே சொந்த ஊர் அடைந்து காணாமலானார்கள். “இன்க்ரீடிப்பிள் இந்தியா”  என்று ரமா மனதுக்குள்  உச்சரித்துக்கொண்டாள்.

    மயிலாடுதுறை சென்று ஒரு காரில் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்திற்கு வரக்கூடிய விருந்தினருக்கு தேவையான ஹோட்டல் ரூம்கள், அவர்கள் சாப்பாடு, போன்றவற்றை பேசி  முடித்துக்கொண்டு புரோகிதர் ஆபிஸ் சென்றனர்.

    வழக்கம்போல எங்கும் ரமாதான் அனைத்தையும் முன்னெடுத்து உரையாடினாள். ரமா ஒரு ஆல்பா பெண்மணி என்பதால் முரளிக்கு அவ்வளவாக வேலையில்லை. போதாக்குறைக்கு அவருக்கு காது கேட்கும் திறன் மிகவும் குறைவு.

    ரமா புரோகிதரிடம் அனைத்தும் பேசிகொண்டிருக்கும் போது அந்த ஆபீஸ் சுவரில் கடவுள் மறுப்பு திராவிட தலைவரின் பீமரத சாந்திக்கு (எழுபதாவது பிறந்த நாள்) அவரது துணைவியார் வந்து கலந்து கொண்ட வைபவத்தை அங்கிருந்த போட்டோ மூலமாக அவதானித்துக்கொண்டிருந்தார் முரளி.

    அனைத்தையும் நல்லபடியாக செய்துவிட்டு  ஒரு காரில்  மீண்டும் மயிலாடுதுறை திரும்பியபோது இரவு மணி பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் வரும்;

    ஏறிப்படுத்தால் ஏ. சி. சுகத்தில் ஜாம் ஜாமென்று தூங்கி காலை ஏழு மணி அளவில் எழும்பூரில் இறங்கலாம் என்று இருவரும் நிம்மதியுடன் “வெய்ட்டிங் ஹாலில்” அமர்ந்து மொபைல் போனில் யதேச்சையாக ரிட்டன் டிக்கட் ரிஸர்வேஷன் தரவுகளைப்பார்த்தபோது இடி தாக்கியது போல அப்படியே உறைந்து அமர்ந்தாள் ரமா.

    மனைவியின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புருவத்தை உயர்த்தி முரளி வினவ, ரமா தன் செல்பேசியை முரளியிடம் கொடுத்து சென்னை செல்லும் டிக்கட் விபரங்களை பார்க்கும்படி சைகை செய்தாள்.

    முரளியும் டிக்கட் விபரங்களை பார்த்துவிட்டு சரியாகத்தான் இருக்கிறதே என்பதுபோல் மனைவியைப்பார்த்தார்.  திக்பிரமையிலிருந்து மீண்ட ரமா, ரயில் பயணத்தேதியை பார்க்கும்படி தழுதழுத்த குரலில் முரளியிடம் உளறினாள். முரளியும் மீண்டும் ரயில் நம்பர், கோச் நம்பர், பெர்த் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்று சந்தேகமாக பதிலளித்தார்.

    “தேதியைப்பாருங்க” என்று தடுமாறினாள் மனைவி. தேதியைப்பார்த்து விட்டு “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி, கரெக்ட்தானே? என்று வினவினார்.

    ரமா குழறிய குரலில் “அதுதான் தப்பு!” “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி காலை சோழனின் கிளம்பி எல்லா வேலையையும் முடித்துவிட்டு இப்ப ஊர் திரும்ப இருக்கிறோம்! ஆனால் ராத்திரி பன்னிரெண்டு மணிக்குப்பின்னால் இருபத்தி ஆறாம் தேதி  பிறந்து விடுமே?

    “இருபத்தி  ஆறாம் தேதி என்றுதானே நாம் ரிசர்வ் செய்திருக்கவேண்டும்! நம் டிக்கட் 25 என்று இருக்கிறது! நம் டிரெயின் நேற்று இரவே இங்கு வந்து இன்று காலை சென்னை போய்ச்சேர்ந்து விட்டது”!

    “இன்று காலை நாம் சோழனில் கிளம்பும்போது பக்கத்து பிளாட்பாரத்தில் உழவன் நின்றுகொண்டிருந்ததை பார்த்தோமல்லவா? அப்போதிருந்தே என் மனசு சரியில்லை! எங்கோ ஏதோ தப்புன்னு மனசு தத்தளித்தது  “என்று விரக்தியுடன் முடித்தாள்  ரமா.

    இப்பொழுது முரளிக்கு ஷாக்! வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம் இரவு 12 மணிக்குமேல் அடுத்த நாள் பிறந்து விடும் என்பதை ஒன்றுக்கு இரண்டு  முறை உறுதிப்படுத்திக்கொண்டு பிளைட்  ரிஸர்வேஷன் செய்யும் நாம் உள்ளூர்  ரயில் பதிவு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சியடைந்தார் முரளி.

    இத்தனைக்கும்  ரமாதான் “சோழன்”, “உழவன்” என்று பல ரயில்களைப் பார்த்துப் பார்த்து டிக்கட் பதிவு பண்ணினாள். முரளியும் அனைத்தையும் மேம்போக்காக பார்த்து விட்டு “சரியாக இருக்கிறது” என்று சொன்னவுடன் அவள் வங்கிக்கார்டில் பணம் செலுத்தி டிக்கட் பதிவை உறுதிப்படுத்தி க்கொண்டாள்.

    தவறு என்பது இருவர் மீதுமே!

    ரமா டென்ஷன் குரலில் “இதற்குத்தான் நான் செவ்வாய்க்கிழமையன்று இது போன்ற முக்கியமான விஷயங்களை செய்வதில்லை” என்று விரக்தியுடன் அலுத்துக்கொண்டாள். முரளிக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.

    வீட்டு காரியங்களாகட்டும், இந்தியாவில் ஆபீஸ் செக்ரேட்டரி பணியாகட்டும், முரளி வெளிநாட்டில் பணி புரிந்துகொண்டிருந்தபோது, ஒற்றை மனுஷியாக மகன் இன்ஜினியரிங் அட்மிஷன், அவன் ஆஸ்திரேலியா மேல்படிப்பு, அவனுக்கு வரன் தேடும் படலம், பின்னர் திருமண ஏற்பாடுகள், பின்னர் மெல்பெர்னில் பேரன் பிரசவம் என்று சிங்கக்குட்டியாக அனைத்தையும் தனி ஒருத்தியாக சாதித்திருக்கிறாள். ரமா ஒன் உமன் ஆர்மி!

    முரளி வெளிநாட்டிலிருந்து மாதாமாதம் பணம் அனுப்பி, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் தேனிலவு போன்ற விடுமுறையில் இந்தியா வந்து திரும்புவதோடு சரி!

    இருந்தாலும் “மென் ஆர் ப்ரம் மார்ஸ், விமன் ஆர் ப்ரம் வீனஸ் ” (Men are from  Mars, Women are from Venus) என்பதுபோல, செவ்வாய்க்கிழமை என்றாலே சற்று டென்ஷன்தான் அவளுக்கு!

    அன்று பயணப்பதிவு செய்யும்போது, “இன்று செவ்வாக்கிழமை, வேண்டாம், நாளை புக் பண்ணலாம் ” என்று அவள் சொன்னதை மீறி அவளை வற்புறுத்தி ரிசர்வ் செய்ததை நினைத்து இப்போது வருத்தப்பட்டார் முரளி.

    வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், பயணம் செய்யும்போது இது போன்ற தடாலடி அனுபவங்கள் நிறையப்பெற்றிருந்ததால், முரளி உடனடியாக ரெகவரி ஆகி செல்பேசி மூலம் இன்னும் சிலமணிநேரங்களில் வரவிருக்கின்ற , திங்கள்கிழமை மட்டும் ஓடும் அயோத்தியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸில் நல்ல வேளையாக அதே  மூன்றடுக்கு  ஏ. சி.  யில் இடம் கிடைத்து வங்கி கார்டில் பணம் அனுப்பி டிக்கட் பெற்றபிறகுதான் ஏதோ அவள் மனசு கொஞ்சம்  ஆறுதல் அடைந்தது.

    இருந்தாலும், வழியெல்லாம், அனாவசியமாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீணாகிவிட்டதே என்ற கவலை அவள் முகத்தில்.

    சில நேரங்களில் சில தவறுகள்! அந்தகாயம்  ஆற சென்னை வாழ்க்கையில் இன்னும்சில மாதங்களாகும்.

    ஓலா, ஊபர்  போன்ற   டாக்ஸிகளில்  செல்லாமல்   ஆட்டோவில்  சென்றும் இன்னும் சில  விஷயங்களில்  சிக்கனமாக  இருந்தும் அந்த உழவன் எக்ஸ்பிரஸ் ஆயிரத்து ஐநூறு ரூபாயை மீட்க முடிவு செய்தாள் ரமா.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    முனைவர். ச. சுப்பிரமணியன்

    அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள்

    முன்னுரை

    ஏதாவது ஒரு கவிதையையோ கட்டுரையையோ நாம் படிக்கிறபோது அவற்றை முன்பு எஙகோ படித்த நினைவு நமக்கு வருவது இயல்பு. யாரோ சொல்லியிருந்த நினைவு! இத்தகைய நினைவு எல்லாப் படைப்புக்களுக்கும் வருவதில்லையென்றாலும் ஒரு சில படைப்புக்களைப் படிக்கிறபோது வருவதை நாம அனைவரும உணர்ந்திருக்கிறோம். பதிணென் கீழ்க்கணக்கு நூல்களைப் படிக்கிற எவருக்கும் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகாது. சான்றோர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இலக்கிய அளவில் எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உண்டு. முகநூல் கவிதைகளைப் படிக்கிற சில பொழுதுகளில் அத்தகைய அனுபவத்தை நான பெற்றிருக்கிறேன்.! தம்பி தாரமங்கலம் முத்துசாமியின் கவிதையொன்றினைப் படிக்கிறபோது எழுந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதையே இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    விவேக சிந்தாமணியும் திருக்குறளும்

    விவேக சிநதாமணியில் ஒரு பாட்டு. ஒரு பெண்ணின் வால் எயிறு ஊறிய நீர் அதாவது எச்சில் எத்தகையது என்பதை விளக்குகிற பாட்டு அது. அந்தப் பாட்டு இப்படி அமைந்திருக்கிறது

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி வாயின் ஊறல்
    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?
    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    யாருடைய எச்சில் ஊறியதோ அவளைப் பற்றிய தோற்ற வண்ணனையைப் பாட்டின் முதல் இரண்டடிகளில் மிக அழகாகச் சித்திரித்திருக்கிறார் புலவர். அவள் கூந்தல் வண்டுகள் கூடுகட்டினால் எப்படியிருக்குமோ அப்படிருக்குமாம்.

    “வண்டுமொய்த்தனைய கூந்தல்”

    மதன் மன்மதன்! பணடாரம் பொக்கிஷம். அதாவது கருவூலம்.  வல்லி கொடி! காமக்கருவூலமாய்க் கொடி போன்றவள்

    மதன பண்டார வல்லி!

    அவள் கண் கெண்டை மீனை ஒத்திருந்ததாம். பெண்களின் கண்களுக்குக் கெண்டை மீனை உவமிப்பது ஓர் இலக்கிய மரபு. இது பற்றிய இன்னொரு பாடலை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கலாம்!.

    “தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
    மொண்டு நீரை முகத்தருகேந்தினள்!
    கெண்டைகெண்டை எனக் கரை ஏறினள்
    கெண்டை காணாமல் நின்று தயங்கினள்!”

    பெண்ணொருத்தி நீரிலே குனிந்து பார்த்திருக்கிறாள். இவள் கண்ணிழல் நீரிலே படிந்திருக்கிறது. அவற்றைக் கெண்டை மீன் என மயங்கிய  அந்தப் பெண் தன் உள்ளங்கையால் ஒரு கை நீரை மொண்டு அந்தக் கெண்டைமீனைப் பார்க்க முனைந்திருக்கிறாள். குளத்தில் தோன்றிய கண்ணிழல் உள்ளங்கையில் தோன்றுமா என்ன? உடனே கெண்டையைக் காணோம் என்று அரற்றி மயங்கினாளாம்!, புலவர் என்ன சொல்ல வருகிறார்? அவள் கண் கெண்டை மீனைப் போல இருந்தது என்ற செய்தியைத்தான்! இப்படிச் சொல்வதும் ஒரு இலக்கியச் சுவைக்காகவே!

    “கெண்டையை ஒத்த கண்ணள்”

    காதல் மயக்கத்தில் பெண்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்! பறவைகளில் பேசுகிற பறவை கிளி!. கிளி பேசுமா என்றால் பேசாது! அது வளர்ப்பவர் சொல்வதையே திருப்பிச் சொல்லும்! இந்தப் பெண் காதல் மயக்கத்தில் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லுவாள் ஆதலின் கிளியைப் போல் பேசுகிறளாம்!

    கிளிமொழி!

    இப்போது அந்தப் பெண்ணின் உருவத்தை வண்ணனைச் செய்யும் சொற்களை இணைத்துப் பார்த்தால் அவளின் புற அழகு புலப்படும்.

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி!

    இத்தகைய பேரழகையுடைய அவள் வாய் எச்சில் எத்தகைய இனிமை பயக்குமாம் என்று ஒரு பட்டியல் போடுகிறார் புலவர்! “கற்கண்டாக இருக்குமோ? சர்க்கரையாக இருக்கலாமா? மலைத்தேனாக இருக்கலாமா?  முக்கனிச் சாற்றோடும் கலந்த பாலாக இருக்கலாமா?  என்றெல்லாம் ஐயப்படுகிறார்!. எச்சிலுக்கு இது மாதிரியான வேதியல் பண்புகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காதல் மயக்கமல்லவா?  எனவேதான் தலைவள் உளறுகிறான்.

    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?

    அமுதத்தை உண்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தார்களாம் தேவர்களும் முனிவர்களும். அவ்வளவு சிரமம் ஏன்? தேவையில்லை. இவள் வாயில்  ஊறும் இந்த எச்சில் அமுதமாகாதா? அதனைக் கொடுத்தால் போதாதா? என்று வினவுகிறார் புலவர்!

    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    தேவர்கள் அமுதம் உண்டார்கள் என்பது கற்பனை! யாரும் அனுபவிக்க முடியாதது. தலைவியின் எச்சிலாகிய அமுதத்தை உண்பது யாருக்கும் கைகூடுவது. உண்மை!. அதன் சுவைதான் காதலர்களுக்கேற்ப மாறுபடுமே தவிர உண்டலாகிய வினை உண்மை! இந்தப் பாடலைப் படிக்கின்ற போது எனக்குத் திருவள்ளுவர் பாட்டு நினைவுக்கு வந்தது. திருக்குறள் காமத்துப்பால் நாடகப் பாங்கில் அமைக்கப்பட்ட இலக்கியம். அந்தப் பாலின் இருபத்தைந்து அதிகார்களும் தலைவன், தலைவி தோழி கூற்றாகவே அமையும். திருவள்ளுவர் ஒதுங்கிக் கொள்வார்.

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர் (1121)

    என்று தலைவியின் எச்சிலை உண்ட தலைவன் கூறுவதாகத் திருக்குறள் கூறுகிறது!  எயிறு ஊறாது. எயிறு என்னும் இடத்தில்  எச்சில்தான் ஊறும். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது. நீர்தான் நிறையும். குளம் இடம். நீர் அவ்விடத்து ஊறுகின்ற நீர்.  பாலோடு தேன்கலந்தற்றே என்னும் இருசொற்களின் விரிவுரையை விவேக சிந்தாமணி விரித்துக் காட்டியிருக்கிறது.  திருக்குறளில் தலைவியின் எச்சிலை உண்ட தலைவனின் இந்த அனுபவத்தைப் படித்த ஒருவன் விவேகசிந்தாமணியைப் படித்தான் என்றால் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகுமா என்ன? இன்னொரு அனுபவததையும் நான் பகிர விரும்புகிறேன்.

    ‘மரகதம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ‘கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு! அது காவியம் ஆயிரம் கூறும்” எனத் தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலின் சரணத்தில்

    ‘இன்பத்தின் எல்லையில் கூடுகட்டி இன்னிசை பாடும் பறவைகள் நாம்’

    என்று ஒரு வரி சரணத்தில் வரும். இந்த வரியைக் கேட்போர் அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஒரு வரி அப்படியே அசை பிசகாமல் தமிழ்த் திரைப்படப்பாடலில விழுந்திருக்கிறது என்பதுதான் அந்த அதிர்சசிக்குக் காரணம்.  “WE ARE THE NEST OF THE SINGING BIRDS” என்பதுதான் அந்த ஆங்கில வரி. பாடல் எழுதிய பாலு என்பவர் ஆங்கில இலக்கியம் படித்தவரா என்பது நமக்குத் தெரியாது. படம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆசிரியர் குறிப்பு கிட்டவில்லை. என்ன ஒரு வியப்பு? இங்கிலாந்தில் இருந்த ஒரு கவிஞனின் சிந்தனை எப்படி இங்கே இருக்கிற ஒருவனுக்கு வந்திருக்கிறது? சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரிதான சிந்திக்கிறார்கள். இது சவலைக் கவிஞர்களுக்குப் புரியாது!.

    சத்தியக் கவிஞர் முத்துசாமி

    மகாகவி பாரதிபோல், கண்ணதாசனைப் போல் கள்ளங் கபடில்லாத உள்ளந்தான் கவிஞர்களுக்கு அடிப்படைத் தகுதியாகும் என்பது என் கருத்து. இது இயற்கையிலேயே அமைய வேண்டும். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்னும் இனிய பண்புகளின் தொகுப்பாக இருப்பவனே கவிஞன். தம்பி முத்துசாமி அத்தகைய இயல்புடைவராகவே இருக்க வேண்டும். இது அவருடைய படைப்புக்களிருந்து அறிந்து கொள்ள முடிகிற உண்மையாகும்.

    பாவலர் முத்துசாமியும்  பாவேந்தரும்

    முததுசாமி எழுதி முகநூல் பதிவில் நான் கண்ட ஒரு கவிதைதான் இந்தக் கட்டுரைக்கு மூலம். முன்பே சொன்ன படி சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள். மானுடம் தாண்டிய நேச மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். “காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி பாடியதற்கும் “ஓடையும் தாமரைப்பூக்களும்” பாவேந்தரிடம் பாசம் காட்டியதற்கும் மனித நேயத்தைத்தாண்டிய இந்த அருட் பண்பே காரணம். அததகைய பண்பாளராக இந்தக் கவிதையில் முத்துசாமி எனக்கு விளங்குகிறார்.

    சூரியனைச் சொந்தம் கொணடாடும் முத்துசாமி

    இயற்கையை ரசிப்பதும் அதனோடு உறவாடுவதும் அதனை உற்று நோக்குவதும் உண்மைகளை அறிவதுமே கவிஞர்களைப் பிற மக்களிடமிருந்து பிரித்துக் காட்டும் கோடுகளாகும். இயற்கையை ரசிக்கத் தெரியாதவன் கவிஞன் என்றால் விழியே இல்லாதவன் நிலவைப் பாடினான் என்பது போலாகும்.

    “காலைக் கதிரவன் கவினுற நின்று
    கவிதை பாடுக என்றான் – மலர்ச்
    சோலை வண்டு சொந்தம் கொண்டு
    சொல்லுக கவிதை என்றது !”

    நிலவுக்குச் செல்வதற்கு இஸ்ரோ முயன்று கொண்டிருக்கும்போது முத்துசாமியின் இருப்பிடம் தேடிக் கதிரவன் வந்ததாம். அருமை! வெப்பக் கோளமான கதிரவன் கவிஞரைத் தன்னைப் பாடுக என்று வேண்டுகோள் விடுத்ததாம். வெப்பத்தோடு கதிரவன் பேசிக் கொண்டிருக்கும் போதே கவிஞருக்குக் குளிர்ச்சியைத தர எண்ணிய வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டே அவரிடம் வந்ததாம். இந்த வண்டைப் பாட வந்த கவிஞர் மலர்ச்சோலை வண்டு என்று அடைகொடுத்து எழுதுகிறார். வண்டு என்று எழுதாமல் சோலை வண்டு என்று எழுதுகிறார். சோலை என வாளா கூறாமல் மலர்ச்சோலை என்றும் எழுதுகிறார். இது மரச்சோலை அல்லவாம். மலர்ச்சோலையாம். மலர் குளிர்சசி! சோலை குளிர்ச்சி! வண்டு குளிர்ச்சி! அதனால் அதன் குரலும் குளிர்சசி. ஒரு சிறிய கண்ணியல் பொருள் முரணால் கவிதை மிடைந்திருக்கிறார் முத்துசாமி.

    குரலெடுத்துக் கேட்ட குயிலும் மயிலும்

    கவிஞர் எழுதத் தொடஙகுகிறார். முதலில் கதிரவன் வந்தது. வண்டு இடைமறித்தது. இப்போது வானத்து முறை. வானத்து நிலவு பூமிக்கு வருவதைக் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் தம்பி முத்துசாமி வானமே பூமிக்கு வந்து தன்னைப் பாடுக என்றதாம். அடடா! என்னவொரு கற்பனை? எல்லாரும் நிலவையும் கதிரவனையும் மண்ணுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். நான வானத்தையே வரச்சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை. இயல்பாக அமைந்த கவிதை. இந்தக் கற்பனை வந்த கற்பனையேயன்றி வரவழைக்கப்படட கற்பனை அன்று.

    “நீல வானம் நிலத்தில் வந்து
    நீண்ட கவிதை கேட்டது – புதுக்
    கோல மயிலும் கொஞ்சும் குரலில்
    கூறிடு கவிதை என்றது !”

    என்னும் இந்தக் கண்ணிகளில் மயிலும் வந்து தன்னைப் பாடுக என்றதாம். அது சாதாரணம்தான். ஆனால் கொஞ்சும் குரலில் கெஞ்சியதாம் என்பதுதான் அழகிய கற்பனை. மயிலுக்குச் சாயல் பேசப்படுகிற அளவுக்கு அதன அகவல் ஒலி பேசப்படுவதில்லை. கவிஞரின் கவிதையில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்னும் ஆவல் அதற்கும் வந்ததாம்.

    விண்மீன் கூட்டமும் விரிந்த மலைத்தொடரும்

    வானம் நிலத்துக்கு வந்து கவிதை கேட்டது பகலில். இப்போது அந்தி வந்துவிட்டது. “வானம் கேட்டு எழுதுகிற கவிஞர் நமக்குத் தானம் அளிக்க மாட்டாரா? என்று தவித்துப் போனதாம் விண்மீன் கூட்டம்.

    “விண்மீன் கூட்டம் விருந்து வைத்து
    வேண்டும் கவிமழை என்றது – உயர்
    பொன்னிற மலையும் பொங்கி வழிந்து
    பூந்தமிழ்க் கவிமலர் கேட்டது !”

    இல்லாத  வானத்தில் இருக்கின்ற உடுக்களும் கவிஞரை நோக்கிப் பயணப்பட்டபோது மலை அமைதியாக இருக்குமா என்ன? அதுவும் இருந்த இடத்தில் இருந்தே ஒரு விண்ணப்பத்தைப் போடுகிறதாம். ‘பொங்கி வழிந்து’ என்று ஒரு தொடர் வருகிறது. மலை எப்படிப் பொங்கும்? அது என்ன எரிமலையா? இல்லையே!. பொங்கி வழிந்து என்னும் தொடர் மலையின் அருவியைக் குறித்தது. அருவியொலி மலை பேசுவதாகக் கற்பனை செய்கிறார். அருவிமொழியால் மலையும் கவிஞரின் கவிதைப்பொருளாக வேண்டும் என்று விரும்பியதாம்.

    அன்னமும் மின்னலும்

    தொடர்ந்து கற்பனை செய்கிறார் கவிஞர். பறவைகளில் மயில் கேட்டதை அறிந்த அன்னப்பறவை அருகில் வந்ததாம். வானமும் விண்மீனும் தன்னைவிடடுச சென்றுவிட்டதை அறிந்த மின்னலும் கவிஞரிடம் போனதாம். இரண்டும் ஒரு கூட்டு விண்ணப்பத்தைக் கொடுத்ததாம்

    “அன்னப் பறவை அசைந்து வந்து
    அழகினைப் பாடுக என்றது – விண்
    மின்னற் கீற்று மிரட்டியே என்னை
    முழங்கிடு கவிதை என்றது !”

    மின்னல் இடிக்கு வாழ்க்கைப்பட்டது. மின்னல் முன்னால் வரும் இடி பின்னால் வரும் ஒளியின் வேகம் முன்னால் ஒலியின் வேகம் பின்னால். அதற்கு இடியோசைதான் இன்னோசை. மின்னலுக்கு இடியோசைதான் பின்னணி இசை. அதனாலே அது கவிஞரிடம் அமைதியாகப் பேசாமல் இடிபோல் பேசியதாம்.  அப்படிப் பேசுவது தன்னை மிரட்டியது போல இருந்ததாகக் கவிஞர் கற்பனை செய்கிறார்.

    கவிஞரைக் கெஞ்சும் மாலையும் சாலையும்

    இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த அந்தி வானம் தன்னையும் பாட வேண்டுமென்று கேட்டதாம்.  ‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?  என்று பாரதி பாடியும் அதற்கு அடங்கவி`ல்லையாம்.

    தேன்செய்யும் மலரும் தீயும்!
    செந்தீயும் நீறாய்ப் போகும்!
    கான், செய், ஊர், மலை, கா, ஆறு
    கடலெலாம் எரிவ தோடு
    தான்செய்த தணலில் தானும்
    எரிகின்றான் பகலோன்! அங்கு
    வான்செய்த வெப்பத் தால்இவ்
    வையத்தின் அடியும் வேகும்!
    உச்சியில் இருந்த வெய்யோன்,
    ஓரடி மேற்கில் வைத்தான்,
    நொச்சியின் நிழல்கி ழக்கில்
    சாய்ந்தது! நுரையும், நீரும்,
    பச்சையும், பழுப்பு மான
    பலவண்ண முகில்கள் கூடிப்
    பொய்ச்சான்று போல, யானை
    புகழும் பின் மலையைக் காட்டும்!.

    என்று பாவேந்தர் பாடியும் போதவில்லையாம். “ மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து வெற்று நீறாகாமல் இருப்பதொரு வியப்பே” என்று அவர் பாடியது பசிக்குப் போதவிலலையாம்! “வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்” என்று வைரமுத்து பாடியும் அதற்கு மகிழ்ச்சி இல்லையாம்;

    “பைங்கிளி ஒன்று பறந்து வந்து
    பழந்தமிழ்க் கவிதைக் கேட்டது – குளிர்
    தங்கிடும் நிலத்தில் தவழ்ந்து நடந்து
    தந்திடு கவிதை என்றது !”

    “மாலைப் பொழுதும் மயக்கும் மொழியில்
    மணித்தமிழ் கவிதைக் கேட்டது – நீள்
    சாலை மரங்கள் சரமாய்க் கவிதை”
    சமைத்துத் தருக என்றன !

    முத்துசாமி பாடலை மாலை கேட்டதாம். அதனால் சாலையும் கேட்டதாம்.  ஆனால் அவர் மயங்கவில்லையாம்!.

    மானும் முயலும்

    மானைப் பாடாத புலவரில்லை என்பது மானுக்குத் தெரியாதா என்ன? ஆனால் முத்துசாமி இதுவரை தன்னைப் பாடவில்லை என்னும் மனக்குறை அதற்கு இருந்ததாம். அதனால் அவரை வந்து தன்னைப் பாடும்படி வேண்டியதாம்.  “தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்” என்று சங்கப்புலவ்ன் பாடியிருக்கிறான் என்பது முயலுக்குத் தெரியும். வீரத்திற்கு அழகில்லை என்பதற்குத் திருவள்ளுவர் தன்னை உவமமாகப் பயன்படுத்திக் கொணடார் என்பதும் முயல் அறிந்ததே!. வேகமாக ஓடி ஓய்வெடுத்துத் தோல்வி கண்ட கதையில் தான் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது முயலுக்கும் தெரியும். அதனைவிட ஆமைக்குத் தோற்ற அவமானத்தை அது இன்னும் மறக்கவே இல்லை.

    “மான்க ளிரண்டு மகிழ்ச்சியில் திளைத்து
    மாத்தமிழ்க் கவிதைக் கேட்டன – அடர்
    கானக முயல்கள் காதினை நீட்டி
    கவிதை என்றெனைக் கேட்டன !

    ‘மான்கள் இரண்டும் மகிழ்ச்சியில் திளைத்தபின்” என்பதால் ஆண்மானும் பெண்மானும் என்பதைக் குறிப்பாகக் காடடுகிறார் கவிஞர். மான் இணையாக வந்தது போலவே முயல்களும் கூட்டமாகவே வந்தனவாம்.

    குழந்தையின் புன்னகை கோடி பெறும்

    சூழ்நிலை கவிஞனை உருவாக்குகிறது. கவிதை பிறக்கிறது. தன் பிள்ளையின மழலையில் மனம் பறிகொடுத்தவர் முத்துசாமி. கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்த அவரை வானம் கேட்டது!  இடி இறைஞ்சியது. மின்னல் வேண்டியது! அன்னம் அழுதது! மானும் மண்டியிட்டது! முயலும் முயன்று பாரத்தது! கிளி பேசியும் பார்த்தது! மாலையும் கேட்டது! சாலையும் கேட்டது! அப்பொழுதெல்லாம் இளகாத கவிஞர் மனம் தன் மழலைக்கு இளகியதாம்! இரங்கியதாம். எவ்வளவு மென்மையான கற்பனை! “குழலையும் யாழையும் புறந்தள்ளும் மழலை” என்பார திருவள்ளுவர். “கொஞ்சும் மழலை கேட்கையிலே குழலும் யாழும் பொய்யன்றோ?” என்பார் மருதகாசி!. பொருள் புரியாத மழலைக்கு மயங்கினாராம் முத்துசாமி கவிஞர்.

    “அத்துணைப் பேரும் அனுதினம் கேட்டும்
    அகத்தின் கதவு திறக்கல – என்
    புத்தெழில் மழலைப் புன்னகை சிந்திட
    புலர்ந்தது ஆயிரம் கவிதை !”

    மேலே சொலலப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள் வந்து கேட்டும் பயனில்லை என்பதை இறுதி வரியிலே சொல்கிறார் கவிஞர். பலநாளும் விடடு விட்டு இலலையாம். “அனுதினம்” கேட்டும் என்கிறார். இடையீடு இல்லாமல் கவிஞரின் கவிதையில் பாடுபோருளாகிவிட வேண்டும் என்னுந் துடிப்பால் வந்து அலைந்தனவாம்! அஃறிணை உயிர்களோடு கவிஞரின் உறவு நிலையைப் புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவுகின்றன. கவிஞனின் மனம் இயல்பாகவே இப்படித்தான் இருக்க வேண்டும். கவிதை பிறக்க வேண்டும். பலபேர் புனைந்து கொண்டிருக்கிறார்கள்.

    மருதகாசியும் முத்துசாமியும்

    திரைக்கதையில் அறக்கருத்துக்களையும் சமுதாய நீதிகளையும் கலை நயம்பட எடுத்துக் கூறுவதில் மருதகாசி தனித்து விளங்குபவர். “மனமுள்ள மறுதாரம்” என்று ஒரு திரைப்படம் ஐம்பதுகளில் வெளிவந்தது. அந்தப் படத்தில் மருதகாசி எழுதிய பாடல் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்ககிறது.

    “மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!
    வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்!
    மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
    மார்மீது உதைப்பதிலே கிடைபபதுதான் இன்பம்”

    மழலைகளைப் பாரத்தவுடன் முத்துசாமிக்கு ஆயிரம் கவிதைகள் மலர்ந்ததாம். மருதகாசியின் உள்ளம் இடமாறியிருக்குமோ?

    தமிழினக் கனவும் பாவேந்தரும்

    இனத்துக்காகவும் மொழிக்காகவும் பாடியவர் பாவேந்தர். பாரதி ஒளியில் பாவேந்தர் பாடிய உலகப் பார்வை ஒளியிழக்கச் செய்யப்பட்டது.

    எனையீன்ற தந்தைக்கும் தாயக்கும் மக்கள்
    இனமீனும் தமிழ்நாடு தனக்கும் என்னால்
    தினையளவு நலமேனும் பயக்கு மென்றால்
    செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”

    என்று பாடியவர் அவர். ஒரு நாள் கவிதை எழுத உட்கார்ந்தாராம். தாளை எடுத்ததுதான் தெரியுமாம்.  ஒரு எழுத்துக் கூட வரவிலலையாம்! எழுத இயலவில்லையாம்!

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட”

    என்ன ஆனது? எதுபற்றி எழுத ஏட்டினை எடுத்தார்? ஏன் எழுத இயலவில்லை?  என்பதையெலலாம் பாட்டின் இறுதி வரியில் பதிவு செய்கிறார். வந்த தடைகளை வரிசைப்படுத்துகிறார்.

    1. வானம் தன்னை எழுதென்று சொன்னதாம்.
    2. ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களைப் பற்றி எழுதுக என்றனவாம்.
    3. அடர்ந்த காடும் பசிய வயலும் கருத்த மேகமும் தங்களை எழுதக் கூடாதா என்று கெஞ்சினவாம்.
    4. சாயலில் மயிலையொத்த மங்கையர் அருகில் வந்து தங்களைப் பாடுக என்றனராம்.
    5. சோலை தந்த குளிர்ச்சியோடு தென்றல் வந்ததாம்.
    6. தோகையுடைய மயிலும் மருண்ட மானும் வந்தனவாம்
    7. மாலைக் கதிரவன் தன் மாணிக்க ஒளியினைக் காட்டியதாம்.
    8. களங்கண்ட தமிழ் வீரன்; மலையினை யொத்த தன்தோளை வரைக என்றானாம்.
    9. இத்தனை அழகும் தங்கள் பாடுக என எத்தனித்தனவாம்! வற்புறுத்தினவாம்!

    ஆனால், ஆண்ட தமிழினம் அடிமைப்படட்டுக் கிடக்கின்ற காட்சியினைக் கண்டவருக்குக் கவிதை வரவில்லையாம். கவலை வந்ததாம். அந்தக் கவலைக்கு மூல காரணம் தாய்மொழிவழிக் கல்வி இல்லாததுதானாம். உண்மைதானே! உலகிலேயே தாய்மொழி வழி கலலாத ஒரு கீழினமாக இருப்பது தமிழினமே. “மொழி வளர்ந்தால் இனம் வளரும். இனம் வளர்ந்தால் நாடு வளரும். இது ஒரு பரிணாமம். எனவே தாய்மொழிவழிக் கல்வி பெற்றுவிட்டால் துன்பங்கள நீங்கும் சுகம் வரும் நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். விரம் வரும்”. இனத்தைப் பற்றித்தான எழுத நினைத்தாராம்! இனந்தான் எழுந்திருக்க முடியாமல் இப்படி இடுப்பொடிந்து கிடக்கிறதாம்! அதற்குக் காரணம் தாய்மொழிப் பற்றின்மைதான் காரணமாம். பாவேந்தர் எழுதுகிறார்.

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட — என்னை
    எழுதென்று சொன்னது வான்
    ஓடையும் தாமரைப் பூக்களும் — தங்களை
    ஓவியம தீட்டுக என்றுரைக்கும்
    காடுகழனியும் முன்னே வந்து
    கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
    ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்
    தங்கள் அன்பினைச் சித்திரம் செய்கவென்றார்

    சோலைக் குளிர் தரு தென்றல் வரும் — பசுந்
    தோகை மயில் வரும்! அன்னம் வரும்.!
    மாலைப பொழுதினில் மேற்றிசையில் — வரும்
    மாணிக்கப் பரிதி காட்சி தரும்!
    வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் – “உயர்
    வெறபென்று” சொல்லி வரைக என்னும்
    கோலங்கள் யாவும் மலைமலையாய்
    கூவின என்னை! இவற்றிடையே

    இன்னலிலே தமிழ்நாட்டிலே — யுள்ள
    என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
    அன்னதோர் காட்சி இரக்கமுணடாக்கி — என்
    ஆவியில் வந்து கலந்ததுவே!
    இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
    துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
    தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்

    இவ்வளவு சிக்கல்களில் தன் இனம் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஏடுதான் என்ன செய்யும்? எழுதுகோல்தான் என்ன செய்யும் என்பது பாவேந்தர் சிந்தனை. உலகத்து இன்பங்களையெல்லாம் தன் கள்ளங் கபடமற்ற சிரிப்பால் கொள்ளை கொள்ளும் மழலையின் சிரிப்புக்கு முன்னே உலகத்து உயிர்களைக்கவனிக்கவே நேரமில்லை முத்துசாமிக்கு! தாய்மொழிவழிக்கல்வி பாவேந்தர் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டதைப்போல மழலையின் சிரிப்பு முத்துசாமியின் இதயத்தை ஆட்கொண்டது. கவிஞர்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள்.

    நிறைவுரை

    நகல் எடுப்பது என்பது வேறு. தாக்கம் என்பது வேறு. முன்னது போலித்தனம். பின்னது மரபுவழிப் பயணம். முன்னது அறிந்து செய்வது. பின்னது தானே படிவது!. சமுதாய நிகழ்வுகளிலும் இயற்கை அசைவுகளிலும் மனம் பறி கொடுக்காத எவரும் கவிதையாக்கத்தில் வெற்றி பெற இயலாது. பாவேந்தரும் முத்துசாமியும் இயற்கையில் மனம் பறிகொடுத்தவர்கள்.  அவருள் ஒருவருக்கு இனப்பற்று மிகுந்திருந்த காரணத்தால் இயற்கையின் வேண்டுகோளை நிறைவேற்ற இயலவில்லை. மற்றவருடைய மனம் மழலையில் இலயித்துப் போனதால் இயற்கையைக் கவனிக்க நேரமில்லை. இரண்டு கவிஞர்களும் இயற்கையை முன்னிறுத்தித் தாம் சொல்ல வந்த கருத்துக்களைக் கவிதையாக்கியருப்பதுதான் சிந்திக்க வேண்டியது. இயற்கை சங்க இலக்கியங்களைப் பாதித்தது. பின்னாலே பாவேந்தரைப் பாதித்தது. அதற்கும் பின்னாலே முத்துசாமியைப் பாதித்திருக்கிறது!. இந்தப் பாதிப்புக்களைப் பாவேந்தர் சமுதாயச் சிக்கலோடும் முத்துசாமி மழலையோடும சார்த்திப் பாடியிருக்கிறார்கள். முத்துசாமியின் முகநூல் பதிவு  என்னைப் பாவேந்தர் பக்கம் அழைத்துச் சென்றது. இயற்கை அவர்களை அழைத்தும் அவர்கள் கவனிக்கவில்லை. இயற்கையைப் போற்றிப் பாடினாலும் இனிக்கிறது! அதனை மறுதலித்துப் பாடினாலும் இனிக்கிறது!  கனத்த இதயத்திற்குக் கருணை காட்ட இவற்றைவிட வேறு என்ன வேண்டும்!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! –  27

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 27

    மாதவரத்தார் நனைத்த மழை!

    முனைவர் ச.சுப்பிரமணியன்

     

    முன்னுரை

    வாழ்வியலின் மொழிபெயர்ப்பாக இருந்த கவிதை, கைதட்டலுக்காகவும் வெற்றுப் பாராட்டுகளுக்காகவும் வீரியமில்லா விருதுகளுக்காகவும் ஏங்கிச் சாகின்ற இரங்கத்தக்க நிலைக்கு ஆளாகிப் போனது கவலைப்பட வேண்டிய ஒன்றே. தமிழர்களின் வாழ்வியல்  பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமைந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் பாலை என்னும் திணைப்பகுப்பும் முதற்பொருளும் இயற்கையைச் சார்ந்தே வகுக்கப்பட்டன. இயற்கையின் மந்தணத்தைப் புரிந்துணராத ஒரு சமுதாயம் இத்தகைய பகுப்புக்குள் தனது வாழ்வியலை அடைகாத்திருக்க முடியாது. இயற்கையின் மூலம் மழை. தெய்வப்புலவன் இறைவனுக்கு அடுத்தபடியாக மழையைப் பாடியிருப்பதன் மந்தணம் இதுதான். இத்தகைய தரவுகளால் மழையின் அருமைப்பாட்டை உணர்ந்துகொண்ட தமிழர்கள் அதன் அழகியலையும் அனுபவித்துச் சுவைத்திருக்கிறார்கள்.  அத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்து தற்போது மாதவரத்தில் குடிகொண்டிருக்கும் தம்பி பண்ணைக் கவிக்கோ துரை வசந்தராசன் அனுபவித்து எழுதியுள்ள மழை பற்றிய கவிதை எனக்குள் செய்த சில மாயவித்தைகளையும் மலரும் நினைவுகளையும் மற்றவரும் அறிய வல்லமையில் பந்திவைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தமிழிலக்கணத்தில் மழை

    நானறிந்தவரையில் பழந்தமிழிலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில் மழை என்பது எழுத்ததிகார உயிர் மயங்கியலில் ‘மழை என் கிளவி வளியியல் நிலையும் (287) என்ற இடத்தில் ஆளப்பட்டுள்ளது.  கற்பித்தல் முறையில் காப்பியரின் முறை தனித்துவம் மிக்கது. அவர் உயிர் மயங்கியலில் மூன்று சொற்களுக்கு ஒரே மாதிரியான புணர்ச்சியிலக்கணத்தைக் கூறுகிறார். அவை பனி, வளி, மழை என்பனவாம். இவற்றுள் முந்தைய இரண்டிற்கான புணர்ச்சியிலக்கணத்தை அடுத்தடுத்தும் மழை என்பதற்கான புணர்ச்சியிலக்கணத்தை நாற்பத்தைந்து நூற்பாக்கள் கடந்தும் எடுத்துரைக்கிறார்.

    1. ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வரும். “பனியென வரூஉம் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும்” (241). “பனியத்துச் சென்றான், பனியிற் கொண்டான்”

     

    1. ‘வளி’ என்னும் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றினைக் குறிக்கும் சொல் மேலே பனி என்னும் காலத்தைக் குறிக்கும் சொல்லுக்கு ஓதப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தைப் பெற்றுவரும். “வளி என வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்விது என்ப” (242)

    இவ்விரண்டு நூற்பாக்களோடு ஒத்து முடியும் ‘மழை’ என்னும் சொல்லின் வேற்றுமைப் புணர்ச்சியை மாட்டேற்றாக 287ஆவது நூற்பாவில் எடுத்துரைக்கிறார். ஒரு இலக்கியம் சார்ந்த திறனாய்வுக் கட்டுரையில் இத்தகைய இலக்கண விளக்கம் தேவையா என நேயர்கள் உள்ளத்தில் ஐயம் தோன்றுவதை அறிவேன். வாயப்புக் கிட்டும்பொழுதெல்லாம் மரபின் மாண்புணர்வதும் உணர்த்துவதும் நம் கடமையல்லவா? ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல், ‘வளி’ என்பது பூதத்தைக் குறிக்கும் சொல், என்பது தெளிவு தமிழனுக்கு இருந்திருக்கிறது. அன்றியும் தொல்காப்பியம் இலக்கணத்திற்கு இலக்கணம் இலக்கியத்திற்கு இலக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் என்க.

    பத்துப்பாட்டில் மழை

    அறிவியல் சிந்தனையும் கலையிலக்கிய உணர்வும் இணைந்து கைகோத்த காலம் சங்கக்காலம்.  சங்கச் சான்றோர்கள் நீரியியல் சுழற்சி
    குறித்துத்  தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். பத்துப்பாட்டு என்னும் தொகைக்கண் ஒன்பதாவது பாடலாகிய பட்டினப்பாலை  கி.பி. இரணடாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இரண்டாம்  கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடியது.

    “வான்முகந்த நீர் மழை பொழியவும்
    மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
    மாரி பெய்யும் பருவம் போல்
    நீரின்றும் நிலத்து ஏற்றவும்
    நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
    அளந்து அறியாப் பல பண்டம்.” என்கிறார். (ப.பாலை, 126-131)

    கவிதைச் சுவைஞர்களுக்குத் தெரியும் உவமம் பொருளினும் உயர்ந்தது. புகார்த்துறையில் அன்றைக்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதி நிகழ்வைக் கண்ணனார் பாடுகிறார். மழையாகிய நீர்ச் சுழற்சியை உவமமாக்கிப் பாடுகிறார்.

    அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
    மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடிக் கடலில் கலக்கிறது. அதுபோன்று
    புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக
    நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள்
    வரிசையாகக் கப்பலுக்கு ஏற்றப்படுகின்றனவாம். இப்பாடலில்
    கண்ணனார் நீரியல் சுழற்சியைப் புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு
    ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம்
    இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இந்த உவமம்; திருக்குறள் வான்சிறப்பு (17) அதிகாரத்தின் தாக்கம் என்பது உண்மையேயாயினும். மழையின் தோற்றத்தைக் கவிதையில் உவமமாக்கி வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    எட்டுத் தொகையில் மழை

    எட்டுத்தொகையின் இரண்டாவது தொகுப்பு குறுந்தொகை.  நல்ல குறுந்தொகை என்பதற்கேற்ப நல்ல நல்ல பாக்களைக் கொண்ட நூல் அது. அதில் தோழி. தலைவியை ஆற்றுவிப்பதாக ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

     

    முந்நான்கு திங்கள் நிறைபொறுத்து அசைஇ

    ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

    “கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
    விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
    செழும்பல் குன்றம் நோக்கிப்
    பெருங்கலி வான மேர்தரும் பொழுதே” (குறுந் 287)
    “பன்னிரண்டு திங்கள் நிறைந்து பசிய புளிச்சுவையில் கொண்ட ஒதுக்கப்படாத வேட்கையினைக் கொண்ட கர்ப்பிணி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கிச் செல்கின்ற பொழுது” என்பது பொருள். மழையைப் பற்றி வண்ணனை செய்யும் இந்தப் பாட்டில் மகளிரின் நிறைகரு பன்னிரண்டு திங்கள் தங்கும் என்னும் குறிப்பு நோக்கத்தக்கது.

    பன்னிரண்டு திங்கள் வயிற்றிற் சுமந்த அப்பாங்கினால்

    என்னிளங் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்

    பொன்னடி போலப் புலரியே கானிற் கன்றின் பின்

    என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

    என்னும் பெரியாழ்வார் பாசுரத்திலும் தலைசிறந்த கரு பன்னிரு திங்கள் தங்கும் என்பது குறிப்பிடப்படுவது காண்க. கட்டுரைத் தலைப்பிற்குப் பொருந்தாதெனினும் தகவலுக்காக இசசெய்தி இங்குப் பதிவு செய்யப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை தலைவனைப் பிரிந்த தலைவியைப் பருவம் காட்டி ஆற்றாமை குறைக்கும் பணியைச் செய்யும் தோழிக்குத் துணையாகத்தான் மழை தன் கடமையைச் செய்திருக்கின்றது.  கடற்கரையிலிருந்தே கடலைப் பாடிய நெய்தலைப் போலவே வாசற்படியிலிருந்தே மழையைப் பாடிய பாடல்களே அதிகமாக இருக்கிறது. கடலுக்குள் சென்றோ மழையில் நனைந்தோ பாடிய பாடல்கள் அருகிலேயே காணப்படுகின்றன. ஐந்திணைகளில் ஏனைய திணைகளின் முதற்பொருள் சிறப்பதைப் போல நெய்தல் அவ்வளவு சிறக்கவில்லை என்பதும் இக்கட்டுரையாசிரியர் கருத்தாகும்.

     

    சிலப்பதிகாரத்தில் மழை

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து இடம் பெறாததும் திங்கள் ஞாயிறு மழை, மற்றும் பூம்புகார் ஆகியவை தொடக்கநிலை வாழ்த்துக்குரியனவாக  அமைநதிருப்பதும் நோக்கத்தக்கது.

    “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

    மேல் நின்று தான் சுரத்தலான்!”

     

    என்னும் மங்கல வாழ்த்துப் பாடற்பகுதியில் மழை, மாமழை என அடைபுணர்த்துப் பாடப்படுகிறது. திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரக் கருத்துகளைச் செறித்துக்கொண்டு சிலப்பதிகாரத்தில் ‘உலகிற்குச் சுரத்தல்’ என்னும் இரண்டு சொற்கள் திகழ்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மழை பற்றிய குறிப்புக்கள் உண்டு. ஆனால் அவை கவிதை நயம் கொண்டு விளங்குகின்றனவா என்பது ஆராயத்தக்கது.

    பாவை இலக்கியங்களில் மழை

    மணிவாசகர் பாடிய திருவெம்பாவையில் மழை பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் மழை பற்றிய குறிப்பு வேண்டுதலாக வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.

    “ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்!
    ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
    பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய்”

    எனப் பெருமாளிடம் வைத்த திருப்பாவையின் வேண்டுதல் “ஆழி மழைக்கண்ணா!” என்றே தொடங்குகிறது. கார்மேகத்திற்குக் கண்ணனின் கார்மேனியும், மின்னலுக்கு அவன் சக்கரமும் இடியொலிக்கு அவன் சங்கொலியும் மழைத்துளிகளுக்கு அம்புகளும் உவமங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளை உவம வழியாகக் காட்சிப்படுத்த முனைவது மரபுசார்ந்த பழந்தமிழ் இலக்கியங்களின் படைப்புக் கொள்கையாகும். இந்தப் பாடல் கூட மழையைப் பற்றிப் பாடப்பட்டதாக இருக்கிறதே தவிர மழையில் நனைந்த அனுவத்தைப் பாடியதாக அமையவில்லை.

    மகாகவியும் மழையும்

    தேசியக் கவியான பாரதி தெய்வீகத்தையும் பாடியிருக்கிறார். இயற்கையையும் பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை மழையைச் சரியான கோணத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கும் கவியாகவே பாரதியை நான் பார்க்கிறேன். பாரதியின் செவிப்புலனின் கூர்மையும் இயற்கையோடு அந்தக் கவிஞன் வாழ்ந்த வாழ்க்கையும் மழைபற்றிய இந்தப் பாடலில் முற்றுமாக வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்

    “திக்குகள் எட்டும் சிதறி தக்கத்

    தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட

    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

    பாயுது பாயுது பாயுது –தாம் திரிகிட

    தத்தத் தகிங்கிடத் தத்தோம் –அண்டம்

    சாயுது சாயுது சாயுது பேய் கொண்டு

    தக்கையடிக்குது காற்று – தாம் திரிகிட

    தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட

    வெட்டியடிக்குது மின்னல் – கடல்

    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

    கொட்டியிடுக்குது மேகம் – கூ

    கூவென்று விண்ணைக் குடையுது காற்று

    சட்டச்சட சட்டச்சட டட்டா என்று

    தாளங்கொட்டிக் கனைத்தது வானம்

    எட்டுத் திசையும் இடிய மழை

    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா?”

     

    அடுக்குத் தொடர்களைப் போர்முழக்கப் பாடல் வரிகளாக மாற்றிக் காட்டும் கவியாளுமை பாரதியிடம் உண்டு என்பதற்கு இந்த வரிகள் சான்றாகின்றன. கட்டடம் இடிந்தது, மரங்கள் சாய்ந்தன, கப்பல்கள் கவிழ்ந்தன என்றெல்லாம் பாடுவோர் இடையே பாரதிதான் ‘எட்டுத் திசையும் இடிய’ என்று பாடினான்.  ‘திசைகள் இடிய’ என்னும் கற்பனை அதீதமானது! எவருக்கும் அவ்வளவு எளிதில் பிடிபடாதது. பாரதிக்கு எளிமையாகப் பிடிபடக்கூடியது. காரணம் அவன் கவிஞன்.  சிலர் கையொப்பம் இடுகிறபோது கூட ‘கவிஞன் கந்தசாமி’ என்று போட்டுப் பூரித்துப் போய்விடுகிறார்கள். கவிஞன் என்பதைக் கையெழுத்துக்குள் சுருக்காமல் பெருமிதத்தின் அடையாளமாகக் கொண்டவன் அவன். அவன் எழுதிய சீட்டுக்கவியில் இதனைக் காணலாம்.

    புதுக்கவிதைகளில் மழை

    மேலே காட்டப்பட்ட சில எடுத்துக்காட்டுகள் மழை பற்றிய மரபுக்கவிதைக் கூறுகள் என்றால் புதுக்கவிதைக்காரர்கள் பாடிய மழைப்பாடல்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    நீ இல்லாத இடத்தில்
    கருகி போயின விவசாயம்..
    நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
    விவசாயம்!
    நீ என்ன மழையா? அல்ல்து பிழையா? .”

    என்று வினவுகிறது ஒரு கவிதை. அந்த வினாவில் ஒரு ‘கவிதை நியாயம்’ இருப்பதை உணர முடிகிறது. அறுவடைக் காலத்தில் பெய்யும் மழை விவசாயிக்கு மட்டுமன்று பயிர்களுக்கே வேதனையாம் ! எடுப்பதற்கும் கெடுப்பதற்குமான புதுக்கவிதை வடிவம் இது. இப்படியொரு கற்பனையைப் புதுக்கவிதைக்காரன் செய்திருக்கிறான்! இந்தக் கவிதையின் ஒரு பகுதியை இன்னும் மெருகேற்றியிருக்கிறான் இன்னொரு கவிஞன்.

    “அடைமழையைக் கண்டு

    ஆனந்தம் கொள்ளாமல்

    தவிக்கிறது

    அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்கள்!”

     

    கவிதை சொல்லப்படும் பொருளில் அல்ல சொல்லப்படும் வகையில் அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தச் சில வரிகள் எடுத்துக்காட்டு. பாவலர்கள் மழைக்குப் பரவசமாகிறார்கள். பயிர்களோ மனம் வாடுகின்றன. இந்த முரண் இந்தச் சீர்களைக் கவிதையாக்குகிறது!

    “கண்ணாடிப் பூக்களாய்

    மண்மீது உடைகின்றாய்!

    கண்மூடித் திறக்குமுன்னே

    காணாமல் மறைகின்றாய்!”

     

    என்ற புதுக்கவிதை மழைத்துளியைக் கண்ணாடிப் பூக்கள் என்னும் தொடரால் அழகு பெறுகிறது. மழையை அனுபவித்துப் பாடிய கவிதை இது. ஒரு விவசாயக் கவிஞனின் பார்வை வேறு வகையாக அமைந்திருக்கிறது.

    “இப்போதெலலாம்

    எப்போதாவது பெய்யும் மழையால்

    காளான்கள் கூட முளைப்பதில்லை

     

    விளைச்சலுக்குப் பயன்படாமல்

    வீணே கொட்டித் தீர்க்கும்

    மழையில்

    ஏராளமாய் விளைந்து கிடக்கின்றன

    கவிதைகள்!

     

    அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கும்

    பொருள் போல

    மழை எங்களுக்கு ஏனோ வெறும் பாடுபொருளானது

     

    பாடுபட்டு உழைத்தும் பயனில்லாது போனது

    மழையின் பயணத்திட்டத்தில்

    அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்!”

     

    திருக்குறள் வான்சிறப்பு என்னும் அதிகார்த்தில் வரும் கெடுப்பதும் எடுப்பதும் என்னும் சொற்களுக்கான பொருளை “மழையின் பயணத்திட்டக் குளறுபடி” என்று புரிந்து  கொள்ளலாம். அருமை!

    மருதகாசி நனைந்த மழை

    மூன்றே நிமிடங்கள் வரக்கூடிய ஒரு திரையிசைப்பாடலில் மூன்று உவமங்களைக் கூறிப் பெய்யும் மழையைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றவர் மருதகாசி.

    1. “முட்டாப் பயலே மூளையிருக்கா என்று ஏழை மேலே

    துட்டுப்படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற் வார்த்தைபோலே”

    1. “கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே”
    2. “அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே”

    மழை பெய்கிறதாம். பரபரப்பில்லாத தமிழில் அழகியல் மற்றும் வாழ்வியல் கருத்துகளைத் திரையிசையில் தந்து சென்ற கவிஞருள் ஒருவர் மருதகாசி. ஒரு திரையிசைப் பாடலிலும் சமுதாய அவலங்களை உவமங்களாகப் படம்பிடிக்க மழையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

    அப்துல் ரகுமான் கண்ட புகையும் மேகமும்

    அடக்கமுடைமையைப் பத்து உடைமைகளில் ஒன்றாக்குவார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தில் ஆமையைக் காட்டி அடக்கத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர் அடக்கத்தையும் பணிவையும் ஒன்றாக்குவார். . கவிக்கோ அப்துல் ரகுமான்  பணிவின்மையைப் புகையாலும் பணிவைக் கார்மேகத்தாலும் விளக்குகிறார்.

    “காற்றுக்குக் கண்ணில்லை! அது

    புகையையும் மேலே கொண்டு போய் வந்துவிட்டது!

     

    மேலே வந்தவுடன்

    புகைக்குத் தலைகால் புரியவில்லை!

    அது சூரியனையும் சந்திரனையும்

    கர்வத்தோடு பார்த்தது!

     

    நானும் உங்களைப் போன்றவன்!

    இனிமேல் உங்கள் ராஜவீதியில்

    நானும் பவனி வருவேன் என்றது

     

    அது  மேகத்தைப் பாரத்துச் சொன்னது!

     

    “உன்னைப் போலவே உயரம்!

    உன்னைப் போலவே நிறம்!

    உன்னைப் போலவே உருவம்!”

    இனிமேல் நானும் மேகந்தான் என்றது

     

    புகையை மேகம் என்று நம்பிய

    சில முட்டாள் மயில்கள்

    தோகை விரித்தாடின!

     

    மேகம் கடகடவெனச் சிரித்துவிட்டு

    மழையாய் இறங்கியது!

     

    நனைந்து சிலிர்த்த பூமி  சொன்னது!

    பெருமை மேலே ஏறுவுதிலே இல்லை!

    கீழே இறங்குவதிலே இருக்கிறது!

     

    மழையை ரசித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வான்வீதியையும் ரசித்துக் கவிதையெழுதிய ரகுமான் ஒரு ஆழமான வாழ்வியல் ;சிந்தனையைப் பதிவிடுவதற்கு மழையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.  இயற்கையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு கவிமரபாக இருப்பினும் இயற்கையொடு இயைந்து அனுபவித்த இன்பத்தைத் தம்பி வசந்தராசன் அழகியல் மீதூரப் பதிவிட்டிருக்கிறார் என்பதையே இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

     

     

     

    வசந்தராசன் கவிதைகளில் இயற்கை

    கவிஞர் வசந்தராசனின் கவிதை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையில் கண்டெடுக்க முடியாத (படாத) காட்டுமூலிகை’ என்று குறிப்பிட்டிருந்தேன்.! நீரும் காற்றும் வெப்பமும் இல்லாத விதை சாம்பிவிடுவதைப் போல அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இருக்கின்றன என்பது என் கருத்து. முகநூலில் அவர் பதிவிடும் கவிதைகளில் எழுபத்தைந்து விழுக்காட்டுக் கவிதைகள் உலகத்தரம் வாய்ந்தன. கற்பனைத் திருமணங்களைச் சீர்களின் மந்திரத்தால் சிறக்கச் செய்கிறார்.  எனக்குத் தெரிந்தவரை இவரளவுக்குக் கற்பனை செய்யும் கவிஞர் இருக்கிறார்களா? அல்லது இவர் கவிதைகளில் காணப்படும் கற்பனை வளத்தோடு ஒப்பிடும் பிற கவிதைகளைக் காணமுடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எண்சீர் விருத்தங்களில் முருகுசுந்தரம், பொன்னிவளவன் முதலியோரோடு எண்ணத்தகுந்த இவர் கற்பனையில் ஈரோடு சிற்பி, தமிழன்பன், அப்துல் ரகுமான், வைரமுத்து ஆகியோரோடு ஒப்பு வைத்து எண்ணத்தக்கவராக எனக்குப் படுகிறார். அவருள்ளும் இயற்கையைத் தனித்துவத்தோடு இவர் துய்ப்பதை இவருடைய கவிதைகள் காட்டுகின்றன.

    வானத்தைச் சுருட்டி

    முற்றத்தில் விரித்தேன்

    வாயிலில் ஆயிரம் மீன் குளங்கள்!

     

    என்றெழுதுகிறார். பூமியைப் பாயாய்ச் சுருட்டிய கற்பனை மிகுந்த தமிழ்க்கவிதை உலகில், வானைச் சுருட்டி முற்றத்தில் வைத்த புதுமைக்குச் சொந்தக்காரர். வானத்தோடு கூடிய விண்மீன்கள் இவர் வீட்டு முற்றத்தில்! என்ன அழகிய கற்பனை!

    வான்தோட்ட முதற்காய்ப்பா கதிரோன் பிஞ்சு?

    வளரிருளைப் பறித்திடவா நிலவுக் கொக்கி?

    மீன்தொட்டி வயல்தானா இரவு வானம்?

    மின்னலென்ன இடிசொடுக்குச் சாட்டைதானா?

    வான்பிடிக்கும் வலைவிரிப்பா மேக தாகம்?

    பால்வீதி தான்விண்மீன் குடியி ருப்பா? “

     

    என்று இன்னோர் இடத்தில் எழுதுகிறார். கதிரவன் நிலவுக்கு ஒளிக்கடன் தருகிறது என்பதும் ஒரு கற்பனைதான். ஆனால் வசந்தராசன் கதிரோனின் பிஞ்சாக நிலவைக் காண்கிறார். பிறைநிலவைக் கொக்கியாகப் பார்க்கும் பார்வை அற்புதமானதல்லவா? வானத்து மீன்கள் இயற்கை. அந்த இயற்கையை இவர் செயற்கையாக்குகிறார். மீன்தொட்டி என்கிறார்.

    மூக்கொழுகிக் கொண்டிருக்கும்!மோதும் காற்றால்

    முசுக்கென்று தும்மலிடும்! தாளின் ஈரத்

    தாக்குதலால் நடுக்கமுறும்! நீர்ச்சீப் பாலே

    தலைவாரித் தழைமுடியைத் தானு திர்க்கும்!

    சீக்குவந்த கோழியைப்போல் சுருங்கிக் கொள்ளும்!

    சூரியனின் வரவென்றால் தோகை அள்ளும்!

    நாக்குழற மழலைமொழி சிரிப்பில் ஆடும்

    நனைந்துவிட்ட மழைமரங்கள்! இன்று கண்டேன்!”

     

    என்று மற்றொரு பதிவில் மழையில் நனைந்த மரங்களைப் பாடுகிறார் வசந்தராசன். இலைசிந்தும் துளியழகு என்றார் வைரமுத்து.  இவரோ மரத்துக்கு மூக்கொழுகுகிறது என்கிறார். மழைத்தூறலாகிய சீப்பால் தலைவாரிக்கொள்ளும் மரம், அதன் வேகத்தால் பழுத்த இலைகளாகிய முடியை உதிர்க்கும் என்னும் கற்பனை அழகியலின் உச்சந் தொடும் முயற்சி!. இத்தகைய சில எடுத்துக்காட்டுகள் இயற்கையைப் பாடுகிற கவிஞராக வசந்தராசன் இல்லாமல் எப்போதும் அவர் மனம் இயற்கையோடு தோய்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் முகநூல் பதிவான  ‘மழை நனைத்தேன்’ என்னும் கவிதை இங்கே திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    காம்பணிந்த வெளவால்கள்

    ஒன்றைப் பிறர் நோக்காத கோணத்தில் நோக்குவதுதான் கவித்துவப் பார்வை. நமக்கெல்லாம் குடை தெரியும்கறுப்புத் துணி அல்லது வண்ணத்துணிகள் தெரியும்நடுக்கம்பியைச் சுற்றியுள்ள கம்பிகள் தெரியும்  மழையில் நனையும் குடைக்கு இருட்டில் வாழும் வெளவாலிடம் என்ன வேலைவசந்தராசனுக்கு கைப்பிடி கொண்ட கறுப்புக் குடை காம்பணிந்த வௌவலாகத் தெரிகிறது

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்க

     

    மழைபற்றி மற்றவர்கள் நனையாமல் பாட வசந்தராசன் மழையில் நனைந்து கொண்டே (நனைத்துக் கொண்டே) பாடுகிறார். இது அவர் குடைபிடித்துக் கொண்டு வீதியில் நடந்து போனது கொண்டு பெறப்படுகிறது. உவமம் பொருளைப் பிரித்துக் காட்டும். படிமம் பொருளை மற்றொன்றாகக் காட்டும். வௌவால்கள் கண்டிருப்போம்.  கருங்குடைகளைக் கையில் பிடித்து மழையில் நனைந்திருபோம்! ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்தக் கருங்குடையை வௌவால்களாகக் கற்பனை செய்திருப்போம்? அது மட்டுமன்று. குடையின் கைப்பிடியை வௌவால்களின் காம்பாகக் காண்கிற கவித்துவம் நம்மில் எததனைப் பேருக்கு வரும்? நம்மில் என்பது இருக்கட்டும்? எததனைக் கவிஞர்களுக்கு வரும்? அதனால்தான் வசந்தராசன் கவிதைகளால் கவிஞரானவர என்கிறேன் நான்.

     

    ‘காம்பணிந்த வௌவால்கள் வானெதிர்க்க’

     

    குடை மழையை எதிர்க்கிறது என்றால் என்ன பொருள்? காற்றுச் சுழனறடிக்க மழையும் சுழன்றடிக்கும். அந்தச் சுழலுக்குத் தக்கவாறு மழையை எதிர்த்து குடையாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குடைக்கு உண்டு. அதனால்தான் மழைபெய்யும் திசையெல்லாம் குடையெதிர்ப்பதாகக் கற்பனை செய்கிறார். கொட்டுகின்ற மழையைக் குடை வென்றதாக வரலாறு இல்லை. குடை என்பது ஒரு தற்காலிகத் தற்காப்பு. அவ்வளவுதான் சரமழையின் வேகததிற்குக் கள்ளிக்கோட்டை மான் மார்க் குடை ஈடுகொடுக்க இயலாது,

     

    “கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்”

     

    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை” என்றாரே ஆண்டாள் அந்த மரபின் தாக்கம் இந்த வரிகளில்!.

    முகம் திருத்தும் செடிகொடிகள்

     

    புதுமையைப் பற்றிச் சொல்ல வந்த பாரதி, அப்புதுமை கவிதையின் அனைத்துக் கூறுகளிலும் படிந்திருக்க வேண்டுமென்பான், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது “ என்பான்.  ஒரு கவிதை எந்நாளும் அழியாத மா கவிதையாக இருக்க வேண்டுமென்றால் இந்த நான்கு கூறுகளிலும் புதுமை மிளிர வேண்டும் என்பது பாரதியின் கவிதைக் கொள்கையாகக் கருத முடியும்.  செல்போன் புதியதாக வாங்கிவிட்டால் கவிதையும் புதியது என்று பலரும் எண்ணிவிடுவதுதான் கவிதையின் இன்றைய அலங்கோலத்திற்குக் காரணம்.   

     

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

     

     

    என்னும் வரிகளில் கற்பனை புதியதாக அமைந்திருப்பதைக் காணலாம். மழை பெய்கிறது, தாவரங்களில் விழுகிறது, செடிகொடிகளில் விழுகின்ற மழைநீர் அவை தேம்பி அழுவதுபோல் தோற்றம் தருகிறது. அவ்வாறு அழுது வழிகின்ற நீர் அடிரம் நிற்கும் மண்ணில் தேங்கி நிற்க அந்த நீர்க்கண்ணாடியில் முகம் திருத்துகிறதாம் செடிகொடிகள்!  எவ்வளவு அழகிய கற்பனை? கண்ணீர் சிந்தியவுடன் முகம் திருத்த முடியுமா என்றால் இரண்டும் தனிததனி வினைகள். முன்னது மழை பெய்கிறபோது. பின்னது மழையடித்து ஓய்ந்துவிட்ட பின்பு.

     

    தசைப்பிடிப்பும் மின்னலும்

     

     

    இடி, மழை, மின்னல் பற்றிக் கவிக்கோ அப்துல் பாடியுள்ள ஒரு கவிதையில் மின்னலை இப்படிப் பாடியிருப்பார். “வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு. நீலச் சகதியில் நெளியும் வெண்புழு”. தம்பி வசந்தராசன்

     

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

     

    மின்னல் நேர்க்கோட்டில் மின்னாது. இதுதான் காட்சி. இந்தக் காட்சியை கவிஞர் பரும் அவரவர் ரசனைக்கும் பார்வைக்கும் ஏற்பக் கற்பனை செய்து பாடுகிறார்கள். சமுதாய அவலங்களைப் பாடும் இயல்பு கொண்ட வசந்தராசன், நெளிந்த மின்னலை பசியால் உண்டான ஏழையின் தசைப்பிடிப்ப்பாய்க் காணுகிறார். மின்னுவதற்குப் பாம்பின் படததையும் அதன் சுருளுக்குத் தசைப்பிடிப்பையும் உவமமாகக் காட்டிய கற்பனைத் திறன் சிறப்புக்குரியதல்லவா?.

     

    மண் செய்த மாதவம்

     

    விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பரிதுஎன்பார் திருவள்ளுவர். மழைத்துளி விழாதா என்னும் உழவனின் எதிர்பார்ப்பு வாழ்வியல். என் வறண்ட மேனியில் மழைத்துளி விழாதா பூமி எதிர்பார்ப்பது கவிதையியல்.

     

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!”

     

    மழையை மண் எதிர்பார்ப்பது நமக்குத் தெரியும். ஆனால் அது வானத்தை நோக்கித் தவம் செய்வது நமக்குத் தெரியுமா? தெரியாது, காரணம் நாம் கவிஞர்கள் அல்லர். மழைக்காகத் தவம் இருந்த பூமி, அந்த மழையை உள்வாங்கித் தாவரங்களுக்கு ஊட்டி விடுகிறதாம். வறுமை நோயைத் தீர்க்கும் விருந்தாக விழுகிறதாம் மழை!.

     

    மழை நனைந்த மண்மகள் கோலம்

     

    மகளிர் நாணத்தால் தரையைக் கீறுவது ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. மண்ணைப் பெண்ணாக உருவகம் செய்வது தமிழ்க்கவிதை நெடுமரபு.  மழை பெய்கிறது. அந்த வேக மழைக்கோடு தரையைக் கீறுகிறதாம். காய்ந்து கிடக்கும் தன் மகளான மண்ணுக்குத் தாயான வானம் கருணை காட்டுகிறதாம். வறட்சியில் புழுங்கிச் செத்த பூமி மழை நீர் பட்டுப் பெருகி உள்ளிருந்த வேர்வை கொப்புளம்போல் வெளிநடக்கிறதாம். காய்நது விட்ட மரத் தளிர்கள் மழைநீரில் மிதந்து செல்வது மண்ணின் தாகங்கள் படகுகளாய்ச் செல்வதுபோல் காட்சி தருகிறதாம்.

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்! “

     

    என்றெழுதிக் கவிதை காட்சிப்படுத்தும். இறுதி வரிகளில்

     

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    என்றெழுதி மழையின் மாண்பை உச்சாணிக் கொம்புக்கேற்றுகிறது.  மேலே கண்ட காட்சிகளெல்லாம் மழை பெய்கிற அந்தப் பொழுதில் மட்டுமே!. மழை நின்றவுடன் வானம் வெளுத்துவிடுகிறது. அப்போது உலகம் வெளிர் வாங்குகிறது. இதனைச் “சாயம் போகும்” என்னும் வழக்குச்சொல்லால் உயிர்பிக்கிறார் கவிஞர்.  “சாயம் வெளுத்துப் போச்சு” என்பது வழக்கு. ஒருவனுடைய உள்ளீடு போலியானால் அதாவது அந்த உள்ளீடு அவனுக்கு உரியது இல்லையென்றால் அது வெளிவந்தவுடன் அவன் போலியாகிறான். கற்றவன்போல வேடமிடுகிறவன் கல்லாதவர் அவையில். வெளுத்துவிடுவதிலலையா அது போல! பைந்தமிழ்க் கவிதைகளில் பழகுதமிழைக் கையாள்வதும் பாமர வழக்கைக் கையாள்வதும் அக்கவிதையின் உயிர்ப்புத்தன்மையை உயர்த்தும். “மண்வெட்டி கூலி தின்னலாச்சே!” என்பார் பாரதியார். “காப்பார் கடவுள் உமை கட்டையில் நீர் போகுமட்டும்” என்பார் பாவேநதர்!, “கட்டையில் போவது என்றால் மரணம். ‘வீடு முச்சூடும்’ அழும் என்பார் ஜீவா! முச்சூடும் என்றால் முழுமையும் என்பது பொருள். சாயம் போகும் என்னும் வழக்குச் சொலலுக்கு இலக்கிய மகுடம் சூட்டியிருக்கும் வசந்தராசன் ஒரு மரபுக்கவிஞராக மலர்வது இங்கேதான்!

     

    கற்பனைக் களஞ்சியம்

    பாட்டு முழுமையும் கற்பனையைக் கலவையாக்குவது இடைக்காலத் தமிழ்க்கவிதை மரபு. இடைக்காலத்திற்குப் பிறகு வந்த  நூற்றாண்டுகளில் கற்பனைக் களஞ்சியம் என்னும் பெருமைக்கு உரியவர் சிவப்பிரகாச சுவாமிகள். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்தப் பெருமைக்கு உகந்தவனே! தம்பி வசந்தராசன் மழை பற்றி எழுதியிருக்கும் இந்த உருவக விருத்தத்தின் இறுதிப்பாடல் கற்பனைக் களஞ்சியமாகவே மிளீர்கிறது. முதல் வரியில் சொல்கிறார்.

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

     

    மொக்குளாக விழுகின்ற நீர்த்துளிகளுக்குத் திவலை என்று பெயர். நீர்நிலைகளில் நீராடிவிட்டு வருவோர் வெற்றுடம்பில் இதனைக் காணலாம். வானின்று விழும் நீர்த்திவலைகள் துளித்துளிகளாக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவது சிறு தவளை தாவிக்குதிப்பதுபோல இருக்கிறதாம்!

     

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

     

    மழைத்துளி இலைகளில் விழுகிறபோது அவற்றுக்கு வேர்ப்பதுபோல் இருக்கிறது.  காற்றின் அசைவில் இலைகள் ஆட, அவற்றின் மீது விழுந்த நீர் வேர்வைத்துளிகளாகச் சிதறுகிறது. “வேரின் மீது விழுந்த மழை” என்றும் ‘விறகின் மீது விழுந்த மழை’ என்றும் கருத்தியல் விளக்கத்துக்கு மழையைப் பாடும் வைரமுத்தின் பார்வையிலிருந்து “இலைகளில் விழுந்த மழை” என்னும் வசந்தராசனின் அழகியல் பார்வை இப்படி அமைந்திருக்கிறது.

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

     

    தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு உரியது. அவர்கள் பள்ளிவாசலில் தரையில் தலைவணங்கித் தொழுவது சமயச்சடங்கு. மழையினால் மரங்கள் சோர்ந்து அப்படியே சாய்ந்து எழுவது மழைக்காட்சி. இந்த மழைக்காட்சியைக் காணுகிற கவிஞர் மனத்துள் பள்ளிவாசல் காட்சி நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மரங்கள் தலைசாய்வதை நூற்றுக்கணக்கானவர்கள் தொழுவதாகக் காண்கிறார். தொழுகையாய் என்பதை தொடு கையாய் என்ப்பிரிததுச் சில மரக்கிளைகள் தொழுகின்ற கையைப் போலக் காட்சியளித்ததாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

     

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

     

    அடிக்கிளைகளில் இலைகளற்று நுனிக்கிளைகளில் மட்டும் இலைநிறைந்து குடையைப் போல நிற்கின்ற மரங்கள் உண்டு, பெரிய வீடுகளிலும் சாலைகளிலும் பார்த்திருக்கலாம். அந்த மரங்களின் தாய் பூமியாம். பூமி தவமிருக்கிறது என்று கற்பனை செய்த கவிஞன், இந்த வரியில் அந்த பூமித்தாய் நனைந்துவிடக்கூடாதே என்பதற்காக மரங்கள் அதாவது தொப்பையான மரங்கள் கிளைக்குடையாகிய இலைக்குடை பிடித்ததாகக் கற்பனை செய்கிறார். முன்வரியில் காட்டியது இயல்பான மரம். இங்கே காட்டுவது தொப்பை மரம். உண்மைக் கவிஞர்களுக்குக் கற்பனைக்குப் பஞ்சமா என்ன?

     

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

     

    மழை பற்றிய கற்பனையில் இறுதியாக ஆனால் முத்தாய்ப்பாகப் பதிவு செய்கிறார். “வானம் அழுகிறது” என்பது பொதுவான கற்பனை மரபு. “வானம் அழுவது மழையெனும் போது” என்பார் கண்ணதாசன். மழைப்பொழுதில் வானவில் வண்ணவில்லாகத் தோன்றுவதும் இயல்பு. ஆனால் அந்த வானவில்லை அழுகின்ற வானின் கண்ணீரைத் துடைக்கும் முந்தானையாகக் கற்பனை செய்தது புதுமையிலும் புதுமை. “செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால்  சிங்காரச் சிலையை இங்கிருந்தே தொடுவேன்” என்பார் சுரதா!. பொதுவாகச் சேலையின் தலைப்புத்தான் முந்தானையாக அமையும். இங்கே எழுவண்ண வானவில் முந்தானையாதலின் “அழகொளிர் முந்தானை” என்கிறார்.

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.! “

     

    ‘நனைந்தேன்’ என்னும் தன்வினையை ‘நனைத்தேன்’ எனப் பிறவினையாக்கிச் சொல்வதன் மூலம் தன் மனத்தின் விசுவரூப தரிசனததை வசந்தராசன் காட்சிப்படுத்துகிறார். மழை பெரியது! விரிந்தது! அகண்டது! உயரத்திலிருந்து கொட்டுவது! மனம் சிறியது! சுருங்கியது! குறுகியது! நம் உயரம் கூட இல்லாதது! எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாதது!. பெரியது சிறியதை நனைக்கலாம். சிறியது பெரியதை எப்படி நனைக்க முடியும்? “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!” என்றானே புரட்சிக்கவிஞன் அதன் மற்றொரு படிமக் காட்சி இது. ‘நனைத்தேன்’ என்பது நுண்ணிய சொல்லாட்சி. இப்போது அந்தப் பாடல்களைப் படித்துப் பாருங்கள்!

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்!

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.!

     

    நிறைவுரை

     

    மழை நனைந்தேன் என்றுதான் பிறரெல்லாம் பாடினார்கள். இவர்தான் மழை நனைத்தேன் என்று பாடியிருக்கிறார். ‘மழையை இவர் நனைத்தாரா’ என்பது நமக்குத் தெரியாது. நாம் காணவில்லை. ஆனால் இவருடைய கவிதை மழை முழுமையையும் ஈரமாக்கியிருக்கிறது. கவிஞர்களின் முகவரிகளையே தங்கள் முகவரிகளாகக் கொண்டு   கவிதை பெருகும் ஒரு பேரிடர் காலத்தில்  தமது கவிதைகளால் தன்னை அறிமுகம செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் வசந்தராசன் வளிமண்டலம், என்பது போல் கவிதா மண்டலமும் ஒன்றுண்டு. பாரதி தனது தாசனை அறிமுகம் செய்கிறபோது சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலததைச் சேர்ந்த சுப்புரத்தினம்” என்றுதான் குறிப்பிடுகிறார். கவிதா மண்டலம் என்பது இயற்கை அழகியல் மற்றும் சமுதாய அழுகியல் ஆகிய இரண்டினை உள்ளடக்கியது. அவ்விரண்டிலும் தன் உள்ளத்தை இறக்கிவைத்துக் கொண்டிருக்கிறார் வசந்தராசன். காட்டு மூலிகைபோல் கண்டெடுக்காது மாதவரக் காட்டுக்குள் மறைநது கிடக்கும் இந்த மழை நனைத்த மரபுக்கவிஞனுக்கு விண்வெளி தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை!

    (தொடரும்)

    Share
  • மு. ஆனந்தகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

    மு. ஆனந்தகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

    தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியவர் கல்வியாளர் மு. ஆனந்தகிருஷ்ணன். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அறங்காவலர்களில் ஒருவாக இருந்த இவர், நூலகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். உயர் கல்வி, மொழி, இலக்கியம், பொறியியல் முதலியவற்றை ஊக்குவிக்கும் எண்ணற்ற முயற்சிகளுக்கு இவர் உந்துவிசையாக இருந்துள்ளார். இவர் பெயரில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.

    வரும் ஆகஸ்ட 01, செவ்வாய்க்கிழமை அன்று மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவின் ஒரு பகுதியாக பொறியாளர் மு. இராமனாதன் அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு, அதன் பொறியியல் சிறப்பு, தற்போதைய சவால்கள், சட்டச் சிக்கல்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் முதலியவை குறித்து, ‘பெரியாறு அணை – பொறியியலும் அரசியலும்’ என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.

    மு. இராமனாதன் லண்டனில் பட்டயப் பொறியாளராகவும் ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட பொறியாளராகவும் இருப்பவர். பல்வேறு நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டபோது அதில் பணியாற்றியவர்.

    இந்தச் சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

    நாள்: 01 ஆகஸ்ட் 2023 (செவ்வாய் கிழமை)
    நேரம்: மாலை 5.30 மணி
    இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

    அன்புடன்,
    க. சுந்தர், இயக்குநர்,
    ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.

    Share
  • புதிய பதினான்கு நூல்கள் – எம். ரிஷான் ஷெரீப்

    புதிய பதினான்கு நூல்கள் – எம். ரிஷான் ஷெரீப்

    வணக்கம்.

    2023 ஜுலை 21 அன்று இந்தியா, கோயமுத்தூர், கொடீஷியாவில் ஆரம்பமாகியுள்ள புத்தகக் கண்காட்சியில் எனது புதிய பதினான்கு நூல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    கூகி வா தியாங்கோ, சினுவா ஆச்சிபி, பென் ஒக்ரி உள்ளிட்ட  சர்வதேச இலக்கிய விருதுகளை வென்றுள்ள உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முக்கியமான சிறுகதைகள் அடங்கியுள்ள தொகுப்புகளோடு, பாலியல் அடிமையாகவிருந்து மீண்ட மரியா ரோஸா ஹென்சன் எழுதிய அவரது சுயசரிதையும், உலகின் தலைசிறந்த தத்துவவாதியும், அறிஞருமான ஆந்த்ரே கோர்ஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவிக்கு எழுதிய நீண்ட கடிதமும், இலங்கையின் புகழ்பெற்ற சிங்களப் பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயக்கவின் சிறந்த நாவலும் எனது மொழிபெயர்ப்பில் தமிழில் தற்போது வெளிவந்துள்ளன.

    இந்த நூல்களை திராவிடன் ஸ்டாக், எதிர் வெளியீடு, காலச்சுவடு ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. புத்தகங்களின் அட்டைப்படங்களை இணைத்திருக்கிறேன். இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் தற்போது பெற்றுக் கொள்ளலாம்.

    என்றும் அன்புடன்,
    எம். ரிஷான் ஷெரீப்

    Share
  • வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    எம். எஸ். லட்சுமணன், காரைக்குடி

    வங்கி வாடிக்கையாளர் விழிப்புணர்வு பதிவு 

    நண்பர்களே சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரி சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏடிஎம் பிரிவிற்கு சென்றிருந்தேன்.

    ஏடிஎம் வழியாக பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை.

    PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. . மேலும் எனது இணையத்தின் வழியாக (NET BANKING)  வங்கி கணக்கை ஆப்ரேட் செய்ய முயற்சி செய்தபோது, FREEZE ACCOUNT FREEZE என்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து வங்கியின் மேலாளர் அவர்களை சென்று சந்தித்தேன். தங்களுடைய ஆவணங்கள் எதுவுமே எங்களுடைய வங்கியில் இல்லை. எனவே உங்களது அக்கவுண்ட்டை நாங்கள் FREEZE செய்துள்ளோம். அதுவும் CENTRALIZE ஆக  இதுபோன்று  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நான் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனக்கு எந்தவிதமான கடனும் அந்த வங்கியில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனது வங்கிக் கணக்கை பிரீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

    பலமுறை நான் அவர்களுக்கு ஆவணங்களை நேரில் சென்று கொடுத்துள்ளேன். ஆனால் அவர்களோ சர்வசாதாரணமாக இதுபோன்று ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தெரிவித்தார்கள்.

    நான் முக்கியமான ஒரு மருத்துவ செலவுக்காக மருத்துவமனையில் இருந்து தான் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து கொடுப்பதற்காக சென்று இருந்தேன். ஆனால் இணையத்தின் வழியாகவும் எனது வங்கிக் கணக்கை இயக்க முடியவில்லை. ஏடிஎம்மில் இருந்தும் பணம்  எடுக்க முடியும் முடியவில்லை.

    முக்கியமான மருத்துவ செலவுக்கு கூட எனது அக்கவுண்டில் இருந்து எனது பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை நேரில் சந்தித்து கேட்டேன். மேலாளர் அவர்களோ  மிக அலட்சியமாக ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளை நாங்கள் இது போல் ஃப்ரீஸ் செய்து உள்ளோம்.என்று கூறினார்.

    தங்களது ஆவணங்கள் எதுவுமே எங்களது வங்கியில் இல்லை. எனவே ஆவணத்தை கொடுங்கள். freeze செய்ததை  எடுத்து விடுகிறோம் என்று தெரிவித்தார் ஆவணம் பலமுறை அந்த வங்கிக்கு நான் நேரில் சென்று கொடுத்துள்ளேன்.

    அந்த ஆவணங்களை என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை.ஆவணங்கள் இல்லாமல்  இருக்க வாய்ப்பில்லை. ஆவணங்கள் இல்லை என்றால் மெயில் வழியாக, மொபைல் வழியாக  எனக்கு ஒரு தகவல் தெரிவித்து , குறிப்பிட்ட நாட்கள் கொடுக்க  கேட்டிருக்கவேண்டும்.

    ஏனென்றால் எனக்கு இணையத்தின் வழியாக அங்கே கணக்கு ஆப்பரேட் செய்யப்படுகிறது. எனவே எனது மெயில் அவர்களிடம் உள்ளது. மேலும் எனது மொபைல் நம்பரும் அவர்களிடம் உள்ளது.

    மொபைல் நம்பரில் ஒரு மெசேஜ் கொடுத்து அல்லது மெயிலில் ஒரு மெசேஜ் கொடுத்து எத்தனை நாளுக்குள் நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்திருக்கலாம்.

    ஆனால் அவர்களோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் அக்கவுண்ட் FREEZE  செய்து விட்டார்கள்.  இதை நான் ஒரு முக்கியமான வெளியூர் பயணத்தில் இருக்கும்போது ,   குறிப்பாக மும்பை, டெல்லி என்று வேறு மாநிலங்களில் பயணிக்கும் பொழுது , எனது வங்கி கணக்கில் போதிய அளவு பணம் இருந்தும் ,நானே  பணம் எடுக்க முடியவில்லை என்றால் எனது நிலைமை என்னவென்று  யோசியுங்கள்.

    முக்கியமான மருத்துவ செலவிற்கு அன்று என்னால் பணம் எடுத்து செலவுக்கு கொடுக்க இயலவில்லை.  நான் மேலாளரை சந்தித்து மேலாளரிடம் உங்களுக்கு என்ன ஆவணம் வேண்டுமோ அதனை ஈமெயில் வழியாகவும், மெசேஜ் வழியாகவும் எனக்கு தெரிவியுங்கள். நான் அவற்றை எடுத்து வந்து தந்து விடுகின்றேன்.என்று கூறினேன்.

    ஆனால் இப்பொழுது எனது கணக்கை எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் ஃப்ரீஸ் செய்ததை வன்மையாக ஆட்சேபித்து  பதிவு செய்கின்றேன் என்று அவரிடம் கூறினேன்.

    எனவே  எனது கணக்கை தற்பொழுது freeze இல்  இருந்து எடுத்து விடுமாறு  அன்போடு கேட்டுக் கொண்டேன். சில மணி நேரங்கள் அவரிடம் பேசிய பிறகு அவர் எனது கணக்கை ஆக்டிவேட் செய்தார்கள்.

    பலமுறை நான் ஆவணங்கள் கொடுத்தும் அதனை வங்கியின் இணையத்தில் ஏற்றாதது அவர்களுடைய தவறு தானே தவிர  அது எனது தவறு கிடையாது.

    ஆனால் முக்கியமான கட்டத்தில் வங்கியில் முன்பு கொடுத்த ஆவணங்கள்  இல்லை என்பதற்காக கணக்கை freeeze  செய்தது மிகவும் தவறானது  என்பதை பதிவு செய்துவிட்டு வந்தேன்.

    பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு உங்களுடைய கணக்குகள் ஃப்ரீஸ் ஆகி இருந்தால் அதனை சரி செய்து கொள்ளுமாறு இந்த தகவலின் மூலமாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி

    Share
  • சூளாமணியில் திருநர் சித்திரிப்பு

    முனைவர் கி. அய்யப்பன்
    கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை,
    உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204
    பேசி: 9962660279
    மின்னஞ்சல்: agniiyyappan@gmail.com

    முன்னுரை

    தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி சமண சமயக் காப்பிய நூலாகும். இக்காப்பிய நூலைச் சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என அறியலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே சூளாமணி எனும் இக்காப்பியநூல். இக்காப்பிய நூலில் 12 சருக்கங்கள் 2131 பாடல்கள் உள்ளன. இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது. இக்காப்பிய நூலில் சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரான திருநரைப் (திருநங்கை, திருநம்பி) பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

    ஆய்வு முன்னோடிகள்

    தமிழில் திருநர் தொடர்பான ஆய்வில் முனைவர் வெ. முனிஷ், திருநங்கை பிரியாபாபு,  முனைவர் மு. அருணாசலம், முனைவர் கி. அய்யப்பன் முதலிய பலர் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர்.

    பால் மருள் சொற்கள்

    உலக மனித உயிர்கள் ஆண், பெண் எனும் இரு பால் பகுப்பில் அமைவது இயல்பாகும். இவ்வாறின்றி, அருகி, மாறுபட்டமையும் மானுடப் பிறவியும் உண்டு. இதனைப் பால் மருள் அல்லது உறுப்பு மருள் எனக் கூறலாம். மன ஊனமாக அறிவு மருள் அமைய உடல் ஊனமாகப் பால் மருள் என்று கூறும் பேராசிரியர் அன்னிதாமசு, மேலும் “அண்ணகன், அண்ணாளன், அல்லி, அலி, அழிதூஉ, ஆண்பெண்ணல்லாதவன், ஆணலி, இடபி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டம், சண்டன், சிகண்டி, தூவரன், நபுங்கிஷம், நபுஞ்சகம், நபுஞ்சகன், நபுஞ்சம், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகர், பெண்டகன், பெண்டர், பெண்டு, பெண்ணலி, பெண்ணைவாயன், பேடர், பேடர்கள்,  பேடன், பேடி, பேடியர், பேடு, பேடுகள், பேதை, மகண்மா, மருள், வசங்கெட்டவன், வண்டரன், வருடவரன், வறடன்”(அன்னிதாமசு, 2004: 117) முதலிய பால் மருள் சொற்களையும் அடையாளம் காட்டுகிறார். இத்தகையவர்கள் சமகாலத்தில் திருநர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர்.

    பேடி+பேடன்= பேடு

    பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின் குறிப்புரை கூறுகின்றது.

    ஆணலி+பெண்ணலி= அலி

    ஆண்மை திரிந்த பெயராவது பேடி. அச்சத்தி ஆண்மையிற் திரிந்தாரைப் பேடி யென்ப வாகலான். “தெய்வசிலையார் அலி மூவகைப்படும் என்கிறார். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி யென்று கொள்க. அலி மூவகைப்படும்: ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றி பெண்டன்மைஇழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). “பெண் தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மையை அதிகம் பெற்றவர்களை அலி என்ற சொல் குறிக்கிறது’ (முனிஷ், 2013: 60)) என்று கூறும் முனிஷின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏன் எனில் அலி என்பவன், பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை உடையவன். இது ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும். ஆணுருவம் இருந்தால் ஆணலி எனவும், பெண்ணுருவம் இருந்தால் பெண்ணலி என்றும் சொல்வதுண்டு(sambasivampillai, 1931: 125). மேற்கண்டவற்றின் அடிப்படையில், பெண்தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மை அதிகம் பெற்றவர்களையே அலி என்று கூறும் முனிஷின் கருத்து சரியானவையாகத் தோன்றவில்லை.அவர்களை ஆணலி என்று கூறுவதே சரியானதாகும்.

    அலி= பேடு

    முன் சொல்லப்பட்ட அலி, பேடுக்கான விளக்கங்கள் அடிப்படையில் அலி, பேடு சொற்கள் ஒரே பொருண்மையைக் குறிப்பதாகவே உள்ளதைக் காணமுடிகிறது. ஆணலி+பெண்ணலி= பேடி+பேடன்= அலி,பேடு என்று கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    அரவாணி- திருநங்கை

    அரவாணி என்னும் பெயர் 12-05-1997 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயரை வைத்தவர் ஆர். இரவி அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். திருநங்கை எனும் பெயர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களால் 2006ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசியல் சார்ந்த நிலையில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் திருநங்கையர் என்னும் சொல்லை  சமூகத்தில் அடையாளப்படுத்தினார்.

    திருநர்

    இப்பெயர்களும் மாறித் தற்போது ஆணாய்ப் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரைத் திருநங்கை என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரை திருநம்பி என்றும் அழைக்கின்றனர். திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    திருநர்/Transgenderஎன்பவர்கள் தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். திருநங்கை/Male To Female Transgender (MTF) என்பவர்கள் பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் ஒரு பிரிவு. திருநம்பி/Female To Male Transgender (FTM) என்பவர் பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் இன்னொரு பிரிவு’’ என்று ஓரினம் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள இயலுகிறது. மேலும், விக்கிபீடியா, சிருஷ்டி மதுரை ஆகிய இணைய பக்கங்களும் திருநரைப் பற்றி பேசுகின்றன.

    சூளாமணி காப்பியத்தில் திருநர்

    திருநரை சூளாமணி காப்பியத்தில் 775, 1985- ஆவது பாடல்களில் அலி என்றும், 2118- ஆவது பாடலில் பேடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காப்பியத்தில் இந்த மூன்று பாடல்களில் மட்டுமே திருநரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக அறியலாகிறது.

    பிற உயிரின் துன்பத்தைப் போக்காதவனின் ஆண்மை அலியின் அழகுக்கு ஒப்பானது     

    சூளாமணி காபியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை அலி பெற்ற அழகுபோன்றது என்கிறது.

    மன்னுயிர் வருத்தக் கண்டும்
    வாழ்வதே வலிக்கு மாயின்
    அன்னவ ணாண்மை யாவ
    தலிபெற்ற வழகு போலாம் (சூளாமணி, 775)

    இப்பாடல் ஒருவன், பிறவுயிர்கள் இன்னல் எய்துவதைக் கண்கூடாகக் கண்டும், அவ்வருத்தம் போக்க நினைக்காமல் தன் வாழ்க்கையைப் பேணுவதையே உறுதியாக இருப்பான் எனில், அப்படிப்பட்டவன் பெற்றுள்ள ஆண்மைத்தன்மை என்பது பேடி பெற்றுள்ள அழகுக்கு  ஒப்பானது என்கிறது. அதாவது பிறவுயிர் துன்புறுங்கால் எமக்கென்னென் றிருப்போர் ஆண்மை பேடியின் அழகை ஒக்கும். (சூளாமணி, ப. 520) என்கிறது. ஆணிலிருந்து பெண்தன்மை பெற்ற அழகு என்று இப்பாடல் குறிப்பதால் இது திருநங்கையரைக் குறிப்பத்தாக அமைகிறது.

    அலிப்பிறப்பு இயற்கையானது

    சூளாமணி காப்பியத்தில் திருநர் பிறப்பு பற்றிச் சொல்லப்படுகிறது. இயற்கையில் உருவாகும் மருள், குருடு போன்ற ஊனப்பிறப்புகளில் அலிப்பிறப்பும்  ஒன்று.

    அண்ணை யலிகுரு டாதி யவர்களை
    மண்ணுயர் ஞாலத்து மானிட ராகவைத்
    தெண்ணுநர் யாருள ரெல்லா ….(சூளாமணி, 1985)

    என்ற பாடலில் மருள் பேடு குருடு முதலிய பிறப்பினர் ஆகியவர்களை மண் திணிந்துயர்ந்த உலகத்தே மனிதர் என்று கருதுவார்  யாரே இருக்கின்றனர்.(சூளாமணி, ப.1228) என்று கூறுகிறது.

    மேற்காணும் சூளாமணி பாடல் இயற்கையில் உருவாகும் ஊனப் பிறப்புகள் என்று மருள், அலி, குருடுகளை அடையாளப்படுத்துவதைக் காணமுடிகிறது. இப்பாடலில் வரும் அலி என்னும் சொல்லுக்குப் பேடு என்று  கழகப் பதிப்பின் உரைவிளக்கத்தில் கூறப்படுவதைக் காணமுடிகிறது. இதன் மூலமும் அலி, பேடு என்ற சொற்களை ஒரே பொருளை உணர்த்துவதற்குப் பயன்படுத்தலாம் என்பது தெளிவு. தற்காலத்தில்  அலி, பேடு இரண்டு சொற்களையும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடமுடிகிறது.

    திருநர் என்றால் கோழையா?

    திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது. அந்த வகையில்  சூளாமணி காப்பியம் திருநரை வீரமில்லாத கோழையானவர்கள் என்ற பொருளில் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.

    ஈடிலர் வெகுளி யுள்ளிட்
    டெண்மரை யெறியத் தீயுட்
    பேடுவந் தொன்று பாய்ந்து
    முடிந்தது ……(சூளாமணி, 2118)

    இந்த பாடலில் “தமக்கு ஒப்பில்லாதவராகிய அச்சினம் முதலிய எண்மரைக் கொன்றவுடனே, ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போராற்றி இறந்தொழிந்து”(சூளாமணி, ப.1305 ). தமக்கு ஒப்பில்லாதவராக  அதாவது தனக்கு ஒத்த வீரம் இல்லாத கோழையாக திருநரை பதிவு செய்வதால் இப்பாடலிலும் திருநங்கையரைப் பற்றிய பதிவாகவே காணமுடிகிறது.

    இவ்வாறு சூளாமணி காப்பியத்தில் திருநர் குறித்த பதிவுகளைக் காணமுடிகிறது.

    முடிவுரை

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சூளாமணி என்னும் இக்இக்காப்பிய நூல் சமணசமயக் கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும்,  இக்காப்பியம் தோன்றிய காலப் பின்புலத்தின் காரணமாகத் திருநர்கள் சமூகத்தில் மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

    சூளாமணி காப்பியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை திருநர் பெற்றுள்ள அழகுக்கு ஒப்பானது என்றும், மருள், குருடு போன்று திருநர் பிறப்பும் ஒரு இயற்கைப் பிறப்புதான் என்றும்  சொல்கிறது. மேலும், திருநர் வீரமற்ற கோழைகள் என்றும் கூறுகிறது.

    பாடல் எண் 775-இல் அலி என்று வரும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் அலியென்றே பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இதன்மூலம் அலி, பேடு இரண்டும் ஒரே பொருளை உணர்த்தும் என்பதை  அறிந்துகொள்ள முடிகிறது.

    பாடல் எண் 1985- இல் வரும் அலி எனும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் பேடியென்று பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இங்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலையப் பதிப்பில் பயன் படுத்தப்படும் பேடி எனும் சொல் சரியானதாகத் தோன்றவில்லை. ஏனெனில், அலிப் பிறப்பு என்பது ஆண் பிறப்பிலும் பெண் பிறப்பிலும் நிகழும், இப்பதிப்பில் பேடி என்று கூறுவது ஆணிலிருந்து பெண்தன்மையைப் பெறுபவரை மட்டும் குறிக்கும். பாடல் எண் 2118- இல் வரும் பேடு எனும் சொல்லுக்கு  கழகப்பதிப்பின் உரை பேடி என்று பொருள் கொள்கிறது.  ஏனெனில் ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போர் செய்து இறந்தார் என்று கூறுவதின் மூலம் இங்கு ஆண்தன்மையிலிருந்து பெண்தன்மை உடைய ஒருவரைக் குறிக்கும் விதமாக வரும் இச்சொல்லைப் பேடியென்று சொல்வதே  சரி என்று இக்கட்டுரையின் மூலமாக தெரிந்துகொள்ளமுடிகிறது.

    துணைநூற் பட்டியல்

    சூளாமணி மூலமும் உரையும், பாகம்,1, 2,  கழக வெளியீடு. சென்னை,
    சேனவரையம், தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1956, கழக வெளியீடு, சென்னை.
    சோமசுந்தரனார். பொ.வே, இராமசாமிப் புலவர். சு.அ.,(உரையாசிரியர்), 1970,
    தெய்வசிலையார் (உரை), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1929, கரந்தை தமிழ்ச்சங்க பதிப்பு, கரந்தை.
    முனிஷ்.வெ., 2013, காலந்தோறும் தமிழ் இலக்கணங்களில் மூன்றாம் பாலினம், சொல்லங்காடி, சென்னை.
    ருக்மிணி தேவி(பதிப்பாசிரியர்), 1954, சூளாமணி, பாகம், 1, 2. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம். சென்னை.
    http://orinam.net/ta/
    http://ta.wikipedia.org/s/1due
    Sambasivampillai, T.v., 1931, Tamil- English Dictionary, The Research Institute of Siddhar’s Institute of Science, Chennai.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    Ø  ‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையில் கட்டுரையின் மையக்கருத்து பற்றிய செய்திகள் இறுதி ஒரு பக்க அளவிலும் அது பற்றிய முன்னுரை ஏனைய பக்கங்களிலும் அமைந்திருப்பது சரியான அமைப்பாகத் தோன்றவில்லை. நெற்றிப் பரப்பில் திலகமாக இருக்க வேண்டிய முன்னுரை நெற்றியையே மறைத்துவிடுகிறது.  

    Ø  திருநங்கை, திருநம்பி என்பவற்றுக்கான பலர்பாலாகத் ‘திருநர்’ என்று கட்டுரையாசிரியர்  பெயர் சூட்டியிருப்பது செயற்கையானதொரு சொல்லாக்கமாகவே தோன்றுகிறது. 

    Ø  ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவை எடுத்துக்காட்டும் ஆசிரியர், ‘பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்,  ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால் இருமையும்  அஃறிணை அன்னவுமாகும்” என்னும் நன்னூல் நூற்பாவையும் சிந்தித்திருக்க வேண்டும்.

    Ø  ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருதுகிறேன்’ என்பது போன்ற தற்சார்பான முடிவு கூறுதல் ஏற்புடைத்தன்று. கருதலாம், கருதுவதற்கு இடமுண்டு என்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்த தற்காலிக ஊகத்தையே வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும்.

    Ø  அலி, பேடு, பேடன், அரவாணி, திருநங்கை முதலியன பற்றிய சொற்களைப் பற்றிய சில செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெறுவதோடு சூளாமணியில் காணப்படும் மூன்று பாடல்கள் பற்றிய கருத்துரையும் இடம்பெற்றுள்ளதன்றிக் கட்டுரைப் பொருள் பற்றிய எந்தச் சிக்கலும் முன்வைக்கப்பட்டதாகவோ, அந்தச் சிக்கலுக்கு விடைகாண முயன்றதாகவோ கருதுமாறு கட்டுரை அமையவில்லை. 

    Ø  ‘குறைவின்றி பெண்டன்மை’, ‘கோழையாக திருநரை பதிவு’, ‘இந்த பாடலில்’, ‘திருநரை சூளாமணி’, ‘பேடரை திருநம்பி’, ‘ ‘ஆண்மையை திருநர்’, ‘சொல்லை சமூகத்தில்’, ‘ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது’ ‘சொல்லுக்கு கழகப்பதிப்பின்’. மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது, தெய்வசிலையார், கரந்தை தமிழ்ச் சங்க பதிப்பு, முதலிய தொடர்களில் அமைந்துள்ள சந்திப்பிழைகள் தவிர்ப்பதற்குரியன.

    Ø  ‘குறிப்பத்தாக’, ‘காபியமனது’, ‘கூறுவதின்’, ‘இக்இக்காப்பிய’ முதலியன திருத்தத்திற்கும் செப்பத்திற்கும் உரியன.

    Ø  “இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன”. “திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது” என்னுமாறு அமைந்துள்ள பால்வழுக்கள் களைதற்குரியன.

    Ø  “(அன்னிதாமசு, 2004 117) (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). என்றெல்லாம் சான்றெண் விளக்கம் குறிப்பிடுவது ஆய்வு நெறிக்கு ஏற்றதன்று.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சூளாமணி உட்பட சில இலக்கிய இலக்கணங்களில் காணப்படும் திருநங்கையர் பற்றிய சில செய்திகளை இக்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம். 

    Share
  • தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    -பேரா. சேசா சீனிவாசன்

    வரலாற்றில் மிகச் செல்வாக்குப் பெற்ற அறிவியலாளராகவும் (most influential scientist), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டெஸ்லா போன்ற உலகத்தரம் வாய்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும், அவர்களுக்கு உந்துசக்தியாகவும் (Inspriation) திகழ்ந்தவர் மைக்கேல் பாரடே என்றால் அது மிகையில்லை.

    பாரடேயின் அறிவியல் சாதனைக் கண்டுபிடிப்புகள், அறிவியலின் ஓர் அங்கமாக விளங்கும், இயற்பியல் துறை (Physics) வளர்ச்சிபெறுவதற்குப் பெரிதும் துணைநின்றுள்ளன. இவரின் அரிய கண்டுபிடிப்புகளான மின்காந்தத் தூண்டல் (Electromagnetic Induction), மின்சார விசைப்பொறி (Electric Motor), மின்வேதியியல் (Electrochemistry) ஆகியவை இவரை உலகம் அறிந்துகொள்ள வழிவகைசெய்தன.

    பாரடேயின் மின்சாரக் கருவிகளின் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, இவரது பெயரை, மின்தேக்கியின் (Electrical Capacitance) அளவீட்டு அலகிற்கு “பாரட்” (Farad) எனச்சூட்டி, உலகம் இவரைக் கொண்டாடிய ஆண்டு 1873. இங்கிலாந்து வங்கி (Bank of England), இவரது நினைவாக £20 பணத்தாளில் இவரின் உருவப்படத்தை 1991ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனால், பாரடேயும் வில்லியம் சேக்ஸ்பியர் (William Shakespeare), புளோரன்ஸ் நைட்டீங்கேல் (Florence Nightingale), மற்றும் ஐஸக் நியூட்டன் (Sir Isaac Newton) போன்ற மாபெரும் மனிதர்களின் தர வரிசையில் இணைந்தார்.

    மேக்ஸ்வெல் என்ற மிகப்பெரிய விஞ்ஞானியும் பாரடேவைப் பற்றிக் குறிப்பிடும்போது, எத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தபோதிலும், எப்பொழுதுமே மைக்கேல் பாரடே ஒருவர்தாம் மின்காந்தவியலின் (Electromagnetism) தந்தை என்று புகழாரம் சூட்டியுள்ளார். மின்காந்த விதிகளைப் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கவில்லையெனில், இத்துறைசார்ந்த பல புதிய அறிவியல் சாதனைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

    மைக்கேல் பாரடேயின் ஆரம்பக் கல்வி:

    மைக்கேல் பாரடே 1791ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 22ஆம் தேதி, மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் பாரடே தம்பதியருக்கு நான்கு குழந்தைகளில், மூன்றாவதாகப் பிறந்தார். மைக்கேலின் குடும்பம் வறுமையில் வாடியதால், அனைவரும் வேலைவாய்ப்பைத் தேடி, இங்கிலாந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். இலண்டனின் தெருக்களில் வேலைசெய்து வந்த சிறுவன் மைக்கேல் பாரடே, அடிப்படைக் கல்வி சிறிது கற்றபின், வறுமையின் காரணமாய்ப் படிப்பைத் தொடர இயலாததால், உயர்கல்வியைத் தாமே முயன்று கற்றுக்கொண்டுள்ளார்.

    தனது பதினான்காம் வயதில், புத்தக ஏடுகள் கட்டும் (Book Binding) மற்றும் புத்தக விற்பனை (Book Selling) செய்யும்  நிறுவனத்தில் தொழில்பழகுநராக (Apprentice) வேலைக்குச் சேர்ந்தார் பாரடே. அங்கு அவர்செய்த ஏழுவருடப் பணியில், கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிப்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பாராடேயின் புத்தக நிறுவனத்தின் முதலாளி ஜார்ஜ் ரைபோவும் (George Riebau), பாரடே புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவித்தார்.

    மைக்கேல் பாரடே படித்த புத்தகங்களில், அவருடைய கவனத்தினை மிகவும் ஈர்த்தது, ஜேன் மார்செட் எழுதிய ’வேதியியல் பாதுகாப்பு விதிகள்’ (Conservations on Chemistry by Jane Marcet) என்ற புத்தகமாகும். பாரடே தன் இருபதாம் வயதில் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்தின் வேதியியலாளர், சர். ஹம்ப்ரி டேவியின் (Sir. Humphry Davy) தொடர் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அத்துணைச் சொற்பொழிவுகளையும் தொகுத்துச் சுமார் 300 பக்க அளவில் தம்முடைய கையினால் எழுதிய கோப்புகளை சர். டேவி அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதைப்பெற்ற சர். ஹம்ப்ரி டேவி உள்ளம் குளிர்ந்து பாரடேவிற்குச் சாதகமான பதில் கடிதத்தை அனுப்பினார்.

    பாரடேயின் முதற் கண்டுபிடிப்பு:

    சர். டேவி அவர்கள் 1813ஆம் ஆண்டில், தம்முடைய ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் III குளோரைடு (Nitrogen trichloride) என்ற வேதிப்பொருளைச் சோதனை செய்து கொண்டிருக்கையில், தம் கண்களை இழந்தார். ஆதலால் மைக்கேல் பாரடேவைத் தம்முடைய ஆராய்ச்சிக்கு உதவியாளராக நிரந்தரப் பணியில் நியமித்தார். இவர்களிருவரும் தங்களுடைய ஆராய்ச்சிக் குழுமத்தின் மாநாட்டு நிகழ்விற்காக, ஐரோப்பாவிற்குப் பயணப்பட்டனர். சர். டேவி அவர்கள் நகைச்சுவையாக பாரடேவைப் பற்றிச் சொல்லும்பொழுது, ”மைக்கேல் பாரடேதான் என்னுடைய பெரிய கண்டுபிடிப்பு” என்று கூறியுள்ளார். அது எவ்வளவு பொருத்தம் என்று நாம் பாராடேயின் இந்தச் சுயசரிதையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.

    1820ஆம் ஆண்டில் டேனிஷ் நாட்டின் இயற்பியலாளர் ஹான்ஸ் ஓர்ஸ்டெடு (Danish Physicist Hans Orsted) தற்செயலாக ஒரு செப்புக் கம்பியில் செல்லும் மின்சாரத்தின் வழியாகக் காந்த ஊசியைத் திசைதிருப்ப முடியும் என்பதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பை மிகவும் போற்றிய பாரடே, அதற்கடுத்த ஆண்டு, அதாவது 1821ஆம் ஆண்டு, மின்சாரத்தினால் இயங்கும் விசைப்பொறியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புதான் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அன்றாடச் சாதனங்களான, மின்விசிறி, குழாய்கள் (pumps), அமுக்கிகள் (compressors), மின்உயர்த்திகள் (elevators), மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் (refregirators) பயன்படுத்தப்படுகின்றது.

    மைக்கேல் பாரடேயின் இவ்வளர்ச்சியை அவருடைய வழிகாட்டியான சர். டேவியினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால், பாரடேவை மின்காந்தத் தூண்டல் சார்ந்த ஆராய்ச்சிகள் செய்வதிலிருந்து தடுத்துவந்தார். 1829ஆம் ஆண்டு டேவி இறந்தபின்னர்தான் பாரடேயால் தம் ஆராய்ச்சியைத் தொடரமுடிந்தது. சர். ஹம்ப்ரி டேவி, தமக்குத் துன்பம் விளைவித்துத் தம் ஆராய்ச்சிகளைத் தடுத்தபோதிலும், தம்முடைய அறிவியல் தந்தையாகவே டேவியை மற்றவர்களிடம் கூறிவந்துள்ளார் பாரடே.

    மின்காந்தவியல் (Electromagnetism)

    மைக்கேல் பாரடே பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மின்காந்தத் தூண்டல் விதியை (Law of Electromagnetic Induction) கண்டுபிடித்தார். இந்தச் சோதனையின் வாயிலாக, இரு செப்புச் சுருள்களில் ஒன்றில் மின்சாரத்தினைப் பாய்ச்சினால் மற்றொரு சுருளில் மின்சாரம் தூண்டப்படும் என்பதைக் கண்டறிந்தார் பாரடே. இவ்விதிப்படி, மின்காந்தத் தூண்டலில் இயங்கும் விசைப்பொறியானது ஐம்பது வருடங்களுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் பகர்கின்றன.

     

    பாரடேவின் இந்த எளிய சோதனை பிற்காலத்தில் ஸ்காட்டிஷ் நாட்டுக் கணிதமேதையும், இயற்பியலாளருமான (Scottish Physicist and Mathematician) ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்லால் (James Clark Maxwell) ”மாக்ஸ்வெல்-பாரடே சமன்பாட்டு விதியாக” (Maxwell-Faraday Equation) உருவாக்கப்பட்டு, அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சமன்பாட்டைக் கீழே காணலாம்.

    E – Electric Field, B- Magnetic Field

    மேலே கொடுக்கப்பட்டுள்ள விதி, ஆற்றல் உற்பத்திக்கு (Power Generation) அடித்தளமாக அமைந்த காரணத்தினால், மைக்கேல் பாரடேவை ”மின்சாரத்தின் தந்தை” என்று போற்றுவது சாலச்சிறந்தது.

    1834ஆம் ஆண்டு பாரடேவின் மற்றுமொரு கண்டுபிடிப்பாகிய ”மின்னாற்பகுப்பு” (Electrolysis) முறையினால் தொழிற்சாலைகளில் உலோகங்களைப் பிரிக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், மின்முலாம் பூசவும், நீரைத் தூய்மைப்படுத்தவும் ஈதொத்த வேறுபல் பணிகளைச் செய்யவும் முடிந்தது. இந்தச் சாதனைக்காக, முறையான பட்டப்படிப்பு இல்லாத பாரடேவுக்கு இங்கிலாந்தின் ராயல் அறிவியல் கழகம் (Royal Institution) வேதியியல் பேராசிரியர் பதவியளித்துக் கௌரவித்தது.

    1836ஆம் ஆண்டு மைக்கேல் பாரடே, “பாரடே கூண்டு” (Faraday Cage) என்ற அடைப்பானை உருவாக்கி அதன்மூலம் மின்காந்தப் புலத்தினை முடக்கலாம் எனச் செய்துகாட்டினார். இக்காலத்தில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரடே கூண்டு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நுண்ணலைச் சூளையில் (Microwave Oven) உருவாகும் மின்காந்த அலைகளை வெளியே பாயவிடாமல் தடுக்க உதவுகிறது. மேலும் MRI ஸ்கேன் என்று சொல்லக்கூடிய மருத்துவ உபகரணத்திலும் இந்த பாரடே கூண்டு பயன்படுத்தப்படுகிறது.

    அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர வார இறுதி நாட்களில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலவச அறிவியல் சொற்பொழிவுகள் நடத்தினார் பாரடே. அதன்மூலம் இளைய சமூகத்தினை அறிவியில்வழிச் சிந்திக்கத் தூண்டினார்.

    மைக்கேல் பாரடே தம்முடைய கடைசி நாட்களில், தாம் முதன்முதலில் தொழில்செய்த புத்தக நிலையத்தின் உரிமையாளர், திரு. ஜார்ஜ் ரைபோவிற்கு, தாம் எழுதிய ஒரு புத்தகத்தைக் காணிக்கையாக்கினார். அதில் அவர் குறிப்பிட்டது அப்படியே அதன் தன்மை மாறாமல் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    “…you kindly interested yourself in the progress I made in the knowledge of facts relating to the different theories in existence, readily permitting me to examine those books in your possession that were in any way related to the subjects occupying my attention.”

    முறையான பள்ளிக்கல்வி பெறும் சூழல் வாய்க்கவில்லையெனினும் அறிவியல் துறையில் ஈடுபாடும், அத்துறைசார் அறிவினை நூல்கள் வாயிலாகத் தாமே வளர்த்துக்கொள்ளும் திறனும் இருந்தால் உலகம் போற்றும் உன்னத அறிவியலாளராய் மிளிரமுடியும் என்பதற்கு மைக்கேல் பாரடேவின் வாழ்க்கை சான்றாகின்றது.

     

    Share
  • சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும்  இல்லற விழுமியம்

    சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும் இல்லற விழுமியம்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010,

    வாழ்க்கையை அகவாழ்க்கை என்றும் புறவாழ்க்கை என்றும் தொல்காப்பியம் பிரித்துத் தருகிறது. அக வாழ்க்கையினைக் காதல் வாழ்க்கை என்றும் கற்பு வாழ்க்கை  என்றும் இரண்டாகக் காண்கிறோம். இந்த காதல், கற்பு (திருமணம்) என்னும் இரண்டினையும் உள்ளடக்கியதாக இல்லறத்தினைக் கருதலாம்.

    இல் வாழ்க்கை இனிய  இல்லற தருமத்தைக் கொண்டு சிறப்புடன் திகழ்கின்ற வாழ்க்கை ஆகும். இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் ஒருவன் செய்யத்தக்கன எதுவென்றும் செய்ய தகாதவை எதுவென்றும் கூறப்பட்டு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை மேம்படுத்திட வேண்டும் என்பதை உணர்த்துவது இல்லறம்  (நீரவன், 2009, 26) என்று இல்லறத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டுள்ளது. அதேபோல “குடும்பம் என்னும் அமைப்பு குடும்பத்தின் தலைவன், தலைவி என்னும் இருவரின் அன்புறவையே மூலக் கருவாகக் கொண்டு வளர்வது. சமுதாயமாக விரிவடைகின்ற குடும்பம் சிறக்க வேண்டுமானால் அதற்குத் தனிமனித ஒழுக்கத்தின் மேன்மை மிகவும் இன்றியமையாதது எனலாம்” (மகலாலிங்கம், ப., 2010, 35) என்னும் அடிகள் குடும்ப மேம்பாட்டுக் கருத்தினைத் தெரிவித்துள்ளன.

    சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையில் இல்வாழ்க்கைப் பண்பு மிகுதியாகக் கொண்ட மாந்தர்களுள் முதன்மையான மாந்தராகக் கண்ணகியைச் கொள்ள முடியும். தமிழ்ப் பண்பாட்டுடன் இணைத்து பேசப்படும் பெருமைபெற்ற மாந்தர் கண்ணகி ஆவாள். கண்ணகி கோவலனோடு கொண்ட இல்லறம் சிறப்பதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் கோவலனின் பெற்றோர். அதாவது மாசாத்துவானும் அவனது மனைவியும். அவர்களைக் குறித்து சிலப்பதிகாரம் வழி எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    மசாத்துவானும் அவரது மனைவியும்

    கோவலனின் தந்தையாகச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் மாந்தர் மாசாத்துவான். தரை வணிகத்தில் சிறப்புற்ற மாசாத்துவான் காப்பியத்தின் பல காதைகளில் இடம்பெற்றிருந்தாலும் முதன்மை மாந்தர்களுக்குத் துணைநிற்கும் துணைநிலை மாந்தர் என்னும் வகைமைக்குள் அடங்கும் பாத்திரம் ஆகும்.

    சோழ மன்னனின் பெருமைக்கு இணையான பெருமை கொண்டவன் என்றும் தான் ஈட்டிய பொருளால் பிறரைக் காத்து வாழும் நற்பண்பு கொண்டவன் என்றும் மாசாத்துவானைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்.

    “பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
    ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வதான்
    வருநிதி பிறர் காத்து மாசாத்துவான் என்பான்
    இருநிதிக் கிழவன்” (சிலம்பு-மங்கல வாழ்த்து, அடி: 31-34)

    என்னும் அடிகள் மங்கல வாழ்த்துப் பாடலில் மாசாத்துவானை அறிமுகம் செய்கின்றன.

    “மாசாத்துவான் என்னும் பெயர் குடிப்பெயர் என்று அரும்பத உரையாசிரியர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும் மாசாத்துவான் என்பான் என்றே கூறியிருத்தலால் அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமெனத் தோன்றுகிறது” (ஔவை. துரைசாமிபிள்ளை, 1942, 26) எனபதும் ஆராயத்தக்கது.

    தனிவாழ்க்கைக்கு அனுப்புதல்

    கண்ணகியும் கோவலனும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நாளில் மாசாத்துவானின் மனைவியானவள் கோவலனையும் கண்ணகியையும் தனி வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்குத் தேவையானவற்றை வழங்கினாள். கணவன், மனைவி என்னும் இல்வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்களுக்கென்று தனிப்பட்ட விருந்தினர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்று மகிழும் வாழ்க்கைக்கு அவர்கள் பழகிட வேண்டும் என்று அவர்களைத் தனி வாழ்க்கைக்கு அனுப்பினாள் என்று  இல்வாழ்க்கை தொடர்பான இடத்தில் மாசாத்துவானின் மனைவியைப் பற்றித் தெரிவித்துள்ளார் இளங்கோ.

    “தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
    வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழிநாள்
    வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
    மறப்பரும் கேண்மையோடு அறப்பரி சாரமும்
    விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
    வேறுபடு திருவின் வீறுபெறக் காண
    உரிமைச் சுற்றமோடு ஒரு தடின புணர்க”

    (சிலம்பு, மனையறம் படுத்த காதை, அடி: 82-88) எனும் அடிகள் இதனை உணர்த்துகின்றன.

    புறஞ்சேரி இறுத்த காதையில் கோவலனைக் கோசிகமாணி என்பவன் சந்திக்கிறான். அவன் மாதவி கொடுத்த கடிதத்துடன் கோவலனைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறான். கோவலனும் கண்ணகியும் புகாரைவிட்டுச் சென்ற பின்னர் மாசாத்துவானும் அவனது மனைவியும் பட்ட துன்பத்தை விவரிக்கிறான்.

    நாகமணி உமிழ்ந்த நாகப்பாம்பானது அந்த மணியை இழந்துபடும் துன்பத்தினைப் போல மாசாத்துவானும் அவனது மனைவியும் கோவலனைப் பிரிந்து வருந்தினார்கள் என்று தெரிவிக்கிறான். மேலும் உயிரை இழந்த உடல் இயங்குவதுபோல மாசாத்துவானின் உறவினர்கள் துன்பம் அடைந்தார்கள் என்று தெரிவிக்கிறான். ஏவளாளர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி, கோவலனைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு அனுப்பினான் மாசாத்துவான். கோவலனைப் பிரிந்த பூம்புகார் அடைந்த துன்பம் எதைப்போல் இருந்தது என்றால் தசரனது கட்டளையால் காட்டிற்கு இராமன் சென்றதும் அயோத்தி மக்கள் எவ்வாறு துன்பப்பட்டாகளோ அதைப்போன்று இருந்தது என்று கோசிகமாணி தெரிவிக்கிறான்.

    “இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
    அருமணி இழந்த நாகம் போன்றதும்
    இன்னுயிர் இழந்த யாக்கை என்ன
    துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்
    ஏவலாளர் யாங்கணும் சென்று
    கோவலன் தேடிக் கொணர்க எனப் பெயர்ந்ததும்
    பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
    அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த
    அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
    பெரும்பெயர் மூதூர் பெரும்பேறு உற்றதும்”

    (சிலம்பு-புறஞ்சேரி இறுத்த காதை, அடி: 57-66) எனும் அடிகளில் இதனை உணர்த்திய கோசிகமாணி, தான் கொண்டுவந்திருந்த மாதவியின் கடிதத்தை எடுத்து, கோவலனிடம் கொடுக்கிறான். அதனைப் படித்த கோவலன் மாதவியால் எந்தத் தவறும் இல்லை என்று உணர்கிறான். மாதவி கொடுத்திருந்த கடிதம் தனது தாய் தந்தையருக்கு ஆறுதல் அளிக்கும் என்று கருதியதால் அந்தக் கடிதத்தை அவன் தனது பெற்றோரிடம் கொண்டுபோய்க் காட்டுமாறு தெரிவிக்கிறான்.

    “மாசில் குரவர் மலரடி தொழுதேன்
    கோசிகமாணி காட்டெனக் கொடுத்து”

    (சிலம்பு – புறஞ்சேரி இறுத்த காதை, அடி: 98-99) என்று கோவலன் தெரிவிக்கும் இடத்தில் தனது பெற்றோரிடம் சொல்லாமல் பூம்புகாரை விட்டுப் பிரிந்ததை நினைத்து வருந்துகிறான். எனவே தனது பெற்றோரின் மலர்ப் பாதங்களை வணங்கித் தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது.

    மாசாத்துவான் பெருமை

    கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கோவலன் கண்ணகி இருவரும் சமணத் துறவியர் இருக்கும் பகுதிக்குச் செல்ல இயலாது. எனவே அவர்களைப் பிரிந்து செல்ல நினைத்த கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் யாரிடமாவது அடைக்கலப்படுத்த நினைக்கிறாள். அவ்வேளையில் மாதரி என்னும் இடைக்குல மடந்தையிடம் அடைக்கலப்படுத்தும் போது கோவலனின் தந்தையின் பெருமையினைக் கவுந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோவலனின் தந்தையின் பெயரைக் கேட்டால் மதுரை மாநகரத்தில் உள்ள பெருஞ்செல்வர்கள் அனைவரும் கோவலனை இன்முகத்துடன் வரவேற்று விருந்தினனாக அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்வதுவரை உன்னிடம் அடைக்கலப்படுத்துகிறேன் என்று தெரிவிக்குமிடத்தில் மாசாத்துவானின் வாணிகப் பெருமையையும் செல்வச் செழுமையையும் கவுந்தியடிகள் பெருமிதமாகத் தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது.

    “தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
    அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
    கருந்தடங்கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்”

    (சிலம்பு – அடைக்கல காதை, அடி:126-128) என்னும் அடிகள் இதனை உணர்த்துகின்றன.

    சேரன் செங்குட்டுவன் வட ஆரியர்களை வென்று இமயத்தில் கல்லெடுத்து அக்கல்லைக் கன விசயர்களைச் சுமக்கச் செய்து  கொண்டுவந்து கங்கைக்கரையில்  பாடி வீடமைத்துத் தங்கியிருந்தனர். அவ்வேளையில் அங்கே மாடலன் மறையோன் வருகிறான். மாடலன் மறையோன் கோவலனின் தந்தையாகிய மாசாத்துவானுக்கும் அவனது மனைவிக்கும் நிகழ்ந்தவற்றைத் தெரிவிக்கிறான்.

    “கோவலன் கொடுந்துயரெய்தி மாபெரும்
    தானமா வான்பொருள் ஈத்து ஆங்கு
    இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு
    அந்தர சாரிகன் ஆறைம்பதின்மர்
    பிறந்த யாக்கை பிறப்புற முயன்று
    துறந்தோர் தம்முன் துறவி எய்தவும்
    துறந்தோன் மனைவி மகன்துயர் பெறாஅள்
    இறந்து துயரெய்தி இரங்கிமெய்விடவும்”

    (சிலம்பு – நீர்ப்படைக் காதை, அடி:90-97) என்னும் அடிகன் இவற்றை உணர்த்துகின்றன.

    கோவலன் இறந்தான் என்ற செய்தியை அறிந்த மாசாத்துவான் மிகுந்த துன்பத்தினை அடைந்தான். அவன் ஈட்டிய செல்வத்தை எல்லாம் தானமாக வழங்கிவிட்டு அங்குள்ள இந்திர விகாரம் என்னும் தவப்பள்ளிக்குச் சென்று துறவறம் மேற்கொண்டான். அவ்வாறு மாசாத்துவான் துறவு மேற்கொள்ளும் போது அங்கே பிறப்பொழித்த முந்நூறு அந்தரசாரிகள் என்னும் துறவியர் இருந்தனர் என்பதையும் மகன் இறந்த துன்பத்தைத் தாங்க இயலாத மாசாத்துவான் மனைவி உயிர் துறந்தாள் என்பதையும் தெரிவித்தாள். இதன்மூலம் இல்லறத்தில் பெற்றோர் தமது குழந்தைகள் மீது கொள்ளும் பிணைப்பும் அற்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல கோவலனும் கண்ணகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் காலத்தில் அவர்களைத் தனி வாழ்க்கைதனை அமைத்துக்கொள்வதற்கு ஆவன செய்ததையும்  அறியமுடிகிறது. இவற்றையெல்லாம் நுணிகி ஆராயுமிடத்து தமது பிள்ளைகள் மகிழ்வையும் தாண்டி சமூக வாழ்வைச் சிறப்போடு பழகிட வேண்டும் என்கிற இல்லற விழுமியம் புலப்படுகிறது.

    உதவிய நூல்கள்

    1. சாமிநாதையர், உ.வே., (ப-ர்), இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சென்னை-90.
    2. துரைசாமிபிள்ளை, ஔவை.சு., முப்பெருங் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகார ஆராய்ச்சி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
    3. நீரவன், வள்ளுவமும் சமூக மேம்பாட்டுத் தத்துவங்களும், ராக் பப்ளிக்கேஷன்ஸ், சென்னை-94.
    4. மகாலிங்கம், ப., திரு.வி.க.வின் சமுதாய நோக்கு, செல்லம் பதிப்பகம், சென்னை – 83.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும்  இல்லற விழுமியம்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    Ø  கண்ணகியின் கணவன் கோவலனின் தந்தையாகிய மாசாத்துவான் பற்றி ஆசிரியர் இளங்கோவடிகள் தம் நூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூறியிருக்கும் செய்திகளைத்  மேற்கண்ட தலைப்பில் தொகுத்து வழங்கக் கட்டுரையாளர் முயன்றிருக்கிறார்.

    Ø  தலைவன் தலைவியின்றி இல்லறம் கடைபோகாதாதலின் “மாசாத்துவன் என்னும் ஆண்மகன் வெளிப்படுத்தும் இல்லறம்” என்பது தோன்ற தலைப்பிட்டிருப்பது மரபியல் முரணாகக் கருத ஏதுவாகிறது.

    Ø  கண்ணகியையும் கோவலனையும் இல்லறம் முழுமையடைதற் பொருட்டுத் தனிக்குடித்தனம் வைத்ததொரு செயலின்றி நேரடியாக அன்னார் பங்கு பெறும் எந்த இல்லற நிகழ்வும் அடிகளால் குறிக்கப் பெறவில்லை. தனிக்குடித்தனம் வைப்பதும் சங்க இலக்கிய மரபாகிவிடுமாதலான் மாசாத்துவானோ அவன் மனைவியோ தனித்துச் சுட்டுதற்கு உரியராகத் தோன்றவில்லை.

    Ø  காப்பியத் தலைமாந்தர்களின் தந்தை பெயர்களை ‘மாநாய்கன், மாசாத்துவான்’ எனக் குறித்த அடிகள் தாயர் பெயர்களைக் குறிக்கவில்லை

    Ø  “ஏவலாளர் யாங்கணும் சென்று கோவலன் தேடிக் கொணர்க எனப் பெயர்ந்ததும்”  மதுரை நகரத்தார் உணர்ந்த மாசாத்துவான் குடிப்பெருமையை மாதரியிடம் கவுந்தியடிகள் வெளிப்படுத்தியதும் கோவலன் கொலையுண்டது கேட்டு மாசாத்துவான் துறவறம் பூண்ட செயலும்,  மாசாத்துவானின் இல்லற விழுமியம் எனச் சுட்டல் பொருந்துமா என்பது தெரியவில்லை.

    Ø  “மாசாத்துவன் என்பது குடிப்பெயரா? இயற்பெயரா?” என்னும் ஆய்வு, கட்டுரைப் பொருளுக்குத் தொடர்புடையதாக இல்லை.

    Ø  ‘அதனைப் படித்த’ என்றெழுதும் கட்டுரையாளர், ‘எதைப்போல்’ என்றெழுதுவது சாரியை பற்றிய மயக்கத்தைக் காட்டுகிறது.

    Ø  “துன்பப்பட்டாகளோ’, ‘செல்வதான்’ ‘’நுணிகி’ என்பன போன்ற பிழைகளும், “இந்த காதல்’, ‘குறித்து சிலப்பதிகாரம்’, ‘இணைத்து பேசப்படும்’ ஆராயுமிடத்து தமது’ முதலிய இடங்களில் கண்ணுறும் சந்திப்பிழைகளும் தவிர்த்திருக்க வேண்டியன. .

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சிலப்பதிகாரத்தில் பெரும்பாலும் நோக்கப்படாத துணைப் பாத்திரமாகிய மாசாத்துவானைப் பற்றிய சில செய்திகளைத்  தற்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்..


    Share
  • சிலப்பதிகாரப் பாத்திரங்களின்  குற்றவுணர்வு

    சிலப்பதிகாரப் பாத்திரங்களின் குற்றவுணர்வு

    முனைவா் பா. பொன்னி
    உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா்
    முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை
    தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிா் கல்லூாி (தன்னாட்சி)
    சிவகாசி.

    மனிதன் சகமனிதனது மனதில் தோன்றிய எண்ணங்களை ஆராய முற்பட்ட நிலையில் உளவியல் தோற்றம் பெற்றது எனலாம். உளவியல் மனிதனின் செயலுக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக ஆராய்கின்றது. மனிதனின் ஒவ்வொரு செயலின் பின்னரும் அடி மனதின் உணர்வுகள் அவனை செயல் புரியத் தூண்டுகின்றன என்பது உளவியலாா் கருத்து. அவ்வுணர்வுகள் உளவியலில் உள்ளுணர்ச்சிகள் என்று சுட்டப்படுகின்றன. உள்ளுணர்ச்சிகள் வாழ்வுணர்ச்சிகள் சாவுணர்ச்சிகள் என்று இருவகைகளில் அமைகின்றன. சாவுணர்ச்சிகளைத் தூண்டுவதில் மனிதனின் குற்றவுணர்வு குறிப்பிடத் தகுந்த இடம் பெறுகின்றது. சிலப்பதிகாரத்தில் குற்றவுணர்வுடன் விளங்கும் பாத்திரங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    கருதுகோள்

    மனிதனின் நடத்தைக்கான காரணங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்வது உளவியல். மனிதா்கள் எந்நிலையில் இருந்தாலும் உணா்ச்சிகளின் வழிநடத்தும் போது அவா்கள் அனைவரும் ஒரே நிலையிலேயே செயல்படுவா் என்ற உளவியல் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் படைத்துள்ள பாத்திரங்கள் அமைந்துள்ளன என்பது ஆய்வுக் கருதுகோளாக அமைகிறது.

    ஆய்வு அணுகுமுறை

    விளக்கமுறை அணுகுமுறை, பகுப்பாய்வு அணுகுமுறை மற்றும் உளவியல் அணுகுமுறை ஆகிய அணுகுமுறைகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    சான்றாதாரம்

    சிலப்பதிகாரம் முதன்மை நூலாகவும் சிலப்பதிகாரம் தொடா்பான ஆய்வு நூல்கள் மற்றும் உளவியல் தொடா்பான நூல்கள் துணைமை நூல்களாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    உணா்வெழுச்சிகள்

    உணா்வெழுச்சிகள் இல்லாத பண்பாடு எதுவும் இல்லை எனலாம். உணா்வெழுச்சி செயற்பாடுகள் சொற்களைப் போன்றவை அல்ல. மனித இயல்பின் ஓா்அங்கமாகத் திகழ்பவை. உணா்வெழுச்சிகளை ,

    • அடிப்படை உணா்வெழுச்சிகள்
    • உயா்நிலை அறிமுறை உணா்வெழுச்சிகள்

    என்ற இருநிலைகளில் பகுப்பா். அடிப்படை உணா்வெழுச்சிகள் என்பவை அன்பு, சினம், மகிழ்ச்சி போன்றவையாகும்.    உயா்நிலை அறிமுறை உணா்வெழுச்சிகள் பண்பாட்டு வேறுபாட்டை வெளிப்படுத்துவனவாக அமைபவை ஆகும்.

    • காதல்
    • குற்றவுணா்வு
    • அவமானம்
    • திகைப்பு
    • கௌரவம்
    • ஏக்கம்
    • பொறாமை 1

    ஆகியவை உயா்நிலை அறிமுறை உணா்வெழுச்சிகள் ஆகும். இவற்றுள் குற்றவுணா்ச்சி என்பது மனிதனின் சாவுணா்ச்சியை தூண்டி விடக்கூடிய திறன் மிக்கதாக அமைவதனை சிலம்பில் காணலாகின்றது.

    குற்றவுணர்வு (Guilty Conciousness)

    மனிதனின் மேம்பாட்டுள்ளத்தில் தன்மதிப்பிழத்தல், குற்றவுணர்வு, தண்டனை, விழைவு போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. மனித உள்ளத்தில் பலகாலம் அடக்கி வைக்கப்பட்ட இச்சை உணர்ச்சி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு மனிதனை தவறச் செய்து விடுகிறது. பின்னர் அத்தவறு குற்றவுணர்வாக மாறி மனிதனை ஆட்டிப்படைக்கிறது என்பர். மேலும் ஒருவரிடம் தான் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் உருவாவதற்குப் பின்னணியாக குற்றவுணா்வு (sense of guilt) அமைகிறது. அகநிலையின் அக்குற்றவுணர்வே தண்டிப்பதை எதிர்பார்க்கிறது என்று குறிப்பிடுவா்.

    சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவி, பாண்டியன், கவுந்தியடிகள், மாதரி ஆகியோரிடம் இத்தகைய குற்றவுணர்வினைக் காணலாகிறது. இத்தகைய குற்றவுணர்வின் காரணமாக அவர்கள் தம்மைத் தாமே தண்டித்துக் கொள்வதனையும் காண முடிகிறது.

    கோவலன்

    குற்றவுணா்ச்சி என்பதனை “சூப்பா் ஈகோ என்று சொல்லப்படும் அதி தன்முனைப்பு அல்லது மனசாட்சியின் கட்டளையை நிறைவேற்ற முடியாததாலோ அல்லது அதை மீறி நடப்பதாலோ உண்டாகும். தான் தவறு செய்து விட்டோம் என்று நினைக்கும் ஒரு மனோபாவம்”2 என்பா். இந்தக் குற்றவுணா்ச்சி கோவலனிடத்து வெளிப்படுவதனைப் பல இடங்களில் காணமுடிகிறது.

    கோவலன் கலையின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவன், அவ் ஈடுபாட்டின் காரணமாக மாதவியின் மீது விருப்பம் கொள்கிறான். கண்ணகியை மறக்கிறான். இருப்பினும் கானல்வரிப் பாடல் கோவலனுக்கும் மாதவிக்கும் இடையே மனவேறுபாட்டினை உருவாக்குகிறது. கோவலன் மீண்டும் கண்ணகியை நாடி வருகிறான். கண்ணகியை மறந்திருந்த நிலை, செல்வத்தை இழந்த நிலை ஆகியவை கோவலன் மனதில் குற்றவுணர்வை தோற்றுவிக்கிறது.அவன் கண்ணகியைக் கண்டு,

    வாடிய மேனி வருத்தங்கண்டு யாவும்
    சலம்புணா் கொள்கைச் சலதியொ டாடிக்
    குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

                                                    (கனாத்திறம் உரைத்த காதை 68-71)

    என்று குறிப்பிடுவது அவனுடைய குற்றவுணா்ச்சியை வெளிப்படுத்துகிறது எனலாம். அக்குற்றவுணா்ச்சியின் விளைவினாலேயே அவன் பெற்றோாிடமும் நண்பா்களிடமும் யாரிடமும் கூறாமல் நடு இரவில் மனைவியை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு பொருள் தேடும் பொருட்டு மதுரையை நோக்கிச் செல்கின்றான். அதுமட்டுமல்லாது கோவலன் தன்னுடைய குற்றத்தினை முழுமையாக தானே ஏற்றுக்  கொண்டு தன்னுடைய சொற்களாலே வெளிப்படுத்துவதனை  கொலைக்களக் காதை புலப்படுத்துகிறது.

    இருமுது குரவா் ஏவலும் பிழைத்தேன்
    சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
    வழுஎனும் பாரேன் மாநகா் மருங்கீண்டு
    எழுகென எழுந்தாய் என்செய்தனையென

                                                    (கொலைக்களக் காதை 56-70)

    இவ்வடிகள் கோவலனின் குற்றவுணா்வினை வெளிக்காட்டுவதாக அமைகின்றன. மேலும், குற்றவுணர்வு காரணமாகத் தான் மேற்கொண்ட செயலால் ஏற்பட்ட பின் விளைவிற்கு தனக்கு தண்டிப்புத் தேவை எனக் கருதும் மனப்பான்மை தோன்றுவது இயல்பு.  இதற்கு சுயதண்டிப்பு வேட்கை என்று பெயர். இச்சுய தண்டிப்பு வேட்கையினை கோவலனின் கனவு புலப்படுத்துகிறது எனலாம்.

    கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
    காவல் வேந்தன் கடிநகா் தன்னில்
    நாறுஐந் கூந்தல் நடுங்குதுயா் உய்தக்
    கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
    அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
    பிணிப்பறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
    மாமலா் வாளி வறுநிலத்து எறிந்து
    காமக் கடவுள் கையற்றேங்க
    அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
    மணிமேகலையை மாதவி அளிப்பவும்
    நனவு போல நள்ளிருள் யாமத்துக்
    கனவு கண்டேன்

                                        (அடைக்கலக்காதை 95-106)

    என்ற அடிகளில் அமையும் கோவலனின் கனவு அவனது தண்டிப்பு விழைவின் வெளிப்பாடே எனலாம். இத்தண்டிப்பு வேட்கையின் விளைவினாலேயே பொற்கொல்லன் கோவலனை கள்வன் என்று குற்றம் சுமத்தி காவலா்கள் அவனைக் கொலை செய்யத் துணிந்த நிலையிலும் கோவலன் பதில் மொழி மறுத்து எதுவும் கூறாமல் தண்டனையை ஏற்றுக் கொள்கிறான் எனலாம்.

    பாண்டியன் நெடுஞ்செழியன்

    பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னுயிரைத் தன்னுயிர் போல் பாதுகாப்பவன். இருப்பினும் தன் மனைவி கொண்ட ஊடலைத் தவிா்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொற்கொல்லன் சொல் கேட்டு ஆராயாது கோவலனுக்குத் தண்டனை வழங்கி விடுகிறான். கண்ணகி தன் கணவன் குற்றமற்றவன் என்று உணர்த்திய நிலையில் அக்குற்றவுணர்வின் விளைவாக தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். “ஒருவரிடம் தான் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் உருவாவதற்கும் பின்னணியாகக் குற்றவுணா்வு அமைகிறது. அகநிலையில் குற்றவுணா்வே தண்டிப்பதை எதிர்பார்க்கிறது. நனவிலிக்குள் பொதிந்துள்ள உணா்வுகளில் குற்றவுணா்வு ஒன்று என ஃப்ராய்ட் கூறுகிறார்.”3 இக்குற்றவுணர்வின் காரணமாகவே மன்னன்  இறந்து படுகிறான்.

    “பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
    யானோ அரசன்? யானே கள்வன்
    மன்பதை காக்கும் தென்புலம் காவல்
    என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள”

    (வழக்குரை காதை 54-70)

    என்ற பாடலடிகள் இதனை விளக்குகின்றன.

    மாதவி

    மாதவி நடன மங்கை. அவள் தன்னை நாடிவந்த கோவலன் மீது மிகுந்த அன்பு கொள்கிறாள். இருப்பினும் கோவலன் ஊடல் கொண்டு அவளைப் பிரிந்த நிலையில் அவனது செயலுக்காக வருந்துகிறாள். அவன் ஊரை விட்டுச் செல்வதற்குத் தானே காரணம் என்று குற்றவுணர்வு கொள்கிறாள். “மனிதனது வருத்ததிற்குப் பின் புலமாகக் குற்றவுணா்வு (guilt) இருக்கிறது. அந்த உணா்வு இருப்பது நோயாளிக்குத் தெரியாது.அதாவது நோயாளியின் நனவு அறியாத நிலையில் அவனுக்குள்ளேயே குற்றவுணா்வு இருக்கிறது.அந்த குற்றவுணா்வு தான் வருத்தமாக வெளிப்படுகிறது”4  என்று உளவியலாா் குறிப்பிடுவா். மாதவியும் கோவலனுடைய இந்நிலைக்குத் தான் காரணமோ என்று வருத்தம் கொள்கிறாள். கோவலனுக்கு அவள் எழுதிய இரண்டாவது கடிதம் அவளுடைய வருத்தத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன எனலாம்.

    “அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
    வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்
    குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
    இரவிடைக் கழிதற்கு என்பிழைப்ப அறியாது
    கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்”
    புறஞ்சேரி இறுத்த காதை 87-91)

    என்ற பாடலடிகள்  கோவலன் தாய் தந்தையரைப் பிாிந்து, மனைவியோடு இரவு நேரத்தில் பிறந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்வதற்குத் தான் காரணமாக அமைந்தமைக்கு வருத்தத்தைத் தொிவித்து மன்னிப்பு கேட்கும்  தன்மையில் அமைகின்றன.

    கவுந்தியடிகள்

    கவுந்தியடிகள் தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலன், கண்ணகியை வழி நடத்தி மதுரை நகரில் மாதரியிடம் அடைக்கலப்படுத்துகிறார். மதுரை சென்ற கோவலன் பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கள்வன் என்று கூறி கொல்லப்பட்டதை அறிந்த கவுந்தியடிகள் குற்றமனப்பான்மைக்கு ஆளாகிறார்.  மேலும் கோவலன், கண்ணகிக்கு தீவினை பலனளிக்க தானும் ஒருவகையில் காரணமாக அமைந்து விட்டோம் என்ற குற்றஉணர்வால் உண்ணாநோன்பு இருந்து உயிரை நீக்கிக் கொள்கின்றாா்.  கவுந்தியடிகள் குற்றமனப்பான்மை உடையவராகத் திகழ்வதை,

    “தவத்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
    நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன்
    போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
    என்னோ டிவர்வினை யுருத்த தோவென
    உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்

    (சிலம்பு., நீர்ப்படைக்காதை: 79-83)

    என்ற அடிகளால் அறியமுடிகிறது. மனிதன்   சூழல் காரணமாக செய்யக்கூடிய செயலானது பிறருக்குத் துன்பம் தருவதாக அமைந்தால் அச்செயலைச் செய்யத் தூண்டியவரின் மனத்தில் வருத்தம் ஏற்பட்டுவிடும். ”கண்ணகி கோவலன் தீவினை பலனளிக்க தான் ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டோமோ என்று கவுந்தியடிகள் கொண்ட அன்பும் உருக்கமும் அவரை உண்ணாநோன்பிருந்து சாகச் செய்த அவலம் நம்மைத் திடுக்கிட வைக்கிறது. ஒன்றும் பற்றாது தான் துளிக் காரணமும் இல்லாத நிலையில் துணைவந்தோம் என்பதற்காகத் தன்னையே பலியிட்டுக் கொண்ட சால்பு சமணத்துறவில் ஏற்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் தாக்கத்திற்குத் தக்க எடுத்துக்காட்டேயாகும்”5 என்பா்.

    மாதரி

    கவுந்தியடிகள் அடைக்கலத்தின் சிறப்பினைக் கூறிக் கோவலன் கண்ணகி இருவரையும் மாதிரியிடம் அடைக்கலமாக ஒப்படைத்தார். அடைக்கலமாக வந்தவர்களைக் காக்கத் தவறி விட்ட குற்றவுணர்வில் மாதரி உயிர் விடத்துணிகிறாள். தற்கொலை செய்து கொள்பவா்களில் பலர் மனஅழுத்தத்திற்கு ஆட்பட்டவா்களாக இருப்பது இயல்பு. மனஅழுத்தமும் தற்கொலை செய்து கொள்வதற்குரிய காரணங்களுள் ஒன்று எனலாம். தற்கொலை சூழல்களை உளவியலாளா்கள் 5 பிரிவுகளாகப் பிரிக்கின்றனா். அவை,

    1. “சித்தம் சிதைந்து செய்துகொள்பவை (Maniacal Suicide).
    2. சோக மிகுதியால் நிகழ்பவை (Melancholy Suicide).
    3. தற்கொலைச் சிந்தனை ஒன்றிலேயே நிலைத்து விடுதல் (Obsessive Suicide).
    4. திடீர் என ஏற்படும் தற்கொலை (Impulsive or Automatic Suicide).
    5. ஆணவத் தற்கொலை (Egoistic Suicide)”6

    என்பவையாகும். மாதரி தன் வீட்டில் அடைக்கலமாகத் தங்கி இருந்த கோவலன், கண்ணகியின் மீது மிகுந்த அன்பு உடையவளாகத் திகழ்கின்றாள். அவ்விருவரும் இன்புற்று வாழத் தன் வீட்டில் வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து உதவும் எண்ணமுடையவளாக இருக்கின்றாள். தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலன் பாண்டியனின் தவறான தீர்ப்பால் உயிர் இழந்தான் என்ற செய்தியை அறிந்த மாதரி சோகமிகுதியால் மனஅழுத்தம் கொண்டு தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளக் கூடிய மனநிலையை அடைகிறாள்.

    ”தன் மகள் ஐயைக்கு – தந்தையை இழந்த அவளுக்குத் தந்தையும் தாயுமாகித் திருமணம் நிகழ்த்தி வைக்க வேண்டிய மாதரி எவ்வகையிலும் தான் நேரடியாகக் காரணமில்லாத நிலையிலும் தன் நாகரிகத்தால் தனக்கும் பொறுப்பு இருப்பதாய்க் கருதி நடு இரவில் தீப்பாய்ந்து சாகிறாள்.அவள் உள்ளத் துணிச்சல் அவள் அன்புக்கும் கடமைக்கும் தக்க சான்றாகும். கோவலன் இறந்த செய்தி கேட்டதும் தன் உயிரையே தியாகம் செய்த மாதரி சமூகவியலிலே ஒப்பற்ற ஒளிர் மணியாய்த்  திகழ்கிறாள்”7 என்று குறிப்பிடுவா்.

    “அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்
    குடையும் கோலும் பிழைத்த வோவென
    இடையிரு ளியாமத் தெரியகம் புக்கதும்”

    (சிலம்பு., நீா்ப்படைக்காதை: 76-78)

    இவ்வடிகள் வாயிலாக மாதரி தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலனைக் காக்க தவறினோம் என்ற குற்றஉணா்வினை அடைந்து கண்ணகிக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு தன் உயிரையும் மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணமுடையவளாக மாறியமையை அறியலாகின்றது.

    மன்னா்கள் மட்டுமே பாட்டுடைத் தலைவா்களாக இருந்த நிலையை மாற்றி அமைத்து சிலப்பதிகாரத்தினை குடிமக்கள் காப்பியமாகப் படைத்துக் காட்டிய சிறப்பினைப் பெற்றவா் இளங்கோவடிகள். எத்தகைய குலத்தில் பிறந்தவா்களாக இருந்தாலும் உணா்ச்சிகள் என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த அடிப்படையில் மனதில் ஏற்படும் குற்றவுணா்வானது எக்குலத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் அவா்கள் அனைவரையும் ஒரே நோக்கில் உணா்ச்சிகள் வழிப்படுத்துவதனை உளவியல் அடிப்படையில் இளங்கோவடிகள் படைத்துக் காட்டியுள்ளாா் எனலாம். இங்கு மாதவியைத் தவிர கோவலன், பாண்டியன், கவுந்தியடிகள், மாதாி ஆகிய அனைவரையும் குற்றவுணா்வின் காரணமாக தண்டிப்பு வேட்கை உடையவா்களாகவே இளங்கோவடிகள் அமைத்து இருப்பது இளங்கோவடிகளின் உளவியல் திறனுக்கு சான்றாக அமைகிறது எனலாம்.

    சான்றெண் விளக்கம்

    1. தி.கு.இரவிச்சந்திரன் உணா்வெழுச்சிகள் ப.32
    2. சந்திரமோகன், சிந்தனையாளா் பிராய்டு ப.151
    3. தி.கு.இரவிச்சந்திரன் சிக்மணட் பிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல்., ப.364
    4. மேலது., ப.122
    5. க. முத்துச்சாமி, ஆ.முத்தையா, சிலம்பில் அவலம், ப.158
    6. ஜான்லூயி, தற்கொலை மரணங்களைத் தவிர்க்க முடியுமா? ஹெல்த் மாத இதழ் – ப.42.
    7. க. முத்துச்சாமி, ஆ. முத்தையா, மு.நூ., பக் 160-161.

    துணைநூற்பட்டியல்

    முதன்மை ஆதாரங்கள்

    1. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ.,) –   சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை, 2008.

    துணைமை ஆதாரங்கள்

    1. இரவிச்சந்திரன், தி.கு.  – சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு  அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை. 2005.
    1. சந்திரமோகன் –  சிந்தனையாளர் ப்ராய்டு, பிரேமா பிரசுரம், சென்னை. 2005.
    1. முத்துச்சாமி.க ., முத்தையா ஆ. – சிலம்பில் அவலம் அன்றில் பதிப்பகம் குருவித்துறை 1978
    1. ஜான் லூயி –  தற்கொலை மரணங்களைத் தவிர்க்க முடியுமா?, ஹெல்த் மாத இதழ், (செம்டம்பா்) குமுதம் பப்ளிகேஷன், சென்னை. 2017.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘சிலப்பதிகாரப் பாத்திரங்களின்  குற்றவுணர்வு’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    v  குற்ற உணர்வு பற்றிய உளவியல் கருத்துகளைக் கட்டுரையின் பொருள் விளக்கம் கருதி முன்னுரையிலும் இடையிலும் தந்திருப்பது பொருத்தமானதே.

    v  இலக்கியம் பொதுவாயினும் இலக்கியம் பற்றிய கொள்கைகளும் ஆய்வு நெறிமுறைகளும் மொழிக்கு மொழி வேறுபடும் எனபது போலவே கனவு பற்றிய கொள்கைகளும் மாறுபடும்.

    v  கனவு பற்றிய கொள்கைகள் பண்பாட்டு வளையத்திற்குள் வரும். பகல் கனவு பலிக்காது என்பதும் விடியற்காலை கனவு பலிக்கும் என்பதும் தமிழ்ப் பண்பாடு சார்ந்த கனவுக் கொள்கைகளிற் சில.

    v  “குற்றவுணா்ச்சி என்பது மனிதனின் சாவுணா்ச்சியைத் தூண்டி விடக்கூடிய திறன் மிக்கதாக அமைவதனைச் சிலம்பில் காணலாகின்றது.” என்று கட்டுரையாசிரியர் கூறுவதற்கான வலிமையான சான்று (பாண்டியன், மாதரி ஆகியோரைத் தவிர) எதனையும் அவர் காட்டியிருப்பதாகத் தெரியவில்லை.

    v  கவுந்தியடிகளின் திட்டமிட்ட உண்ணா நோன்பினைத் தற்கொலை முயற்சி எனக் கட்டுரையாளர் கருதுவதற்குப் போதிய வலுவான காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. பழந்தமிழகத்தின் ‘வடக்கிருத்தல்’ என்பதும் கவுந்தியடிகளின் உண்ணா நோன்பும் பெரும்பாலும் ஒத்த இயல்பினை உடையன.

    v  பாண்டியனின் குற்றவுணர்வும் மாதவியின் உணர்வும் ஒரே தன்மையானதன்று. முன்னது கடமை பிறழ்ந்த குற்றவுணர்வு. பின்னது அறியாமையால் ஏற்பட்ட பிழையாயிருக்குமோ என்னும் பெண்ணுக்கே இயல்பான பேதைமை.

    v  கண்ணகியை எதிரில் வைத்துக்கொண்டு ‘சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்’ என்று கோவலன் குறித்தது மாதவியை. அவளைப் பிரிந்ததற்கு அவன்தான் வருந்தினான்.

    v  ‘கெடுக என் ஆயுள்’ என்று வெளிப்படையாகத் தண்டனை வேண்டிய பாத்திரம் பாண்டியன் மட்டுமே.  அவன் இறுதிக்கு ஊழ் காரணமாகிவிடுமானால், மாதரி மற்றும் கவுந்தியடிகள் மரணத்திற்கு மட்டுமே குற்றவுணர்வு மறைமுகக் காரணமாகியிருப்பதாகக் கருத முடியும். அடைக்கலப் பொருளைக் காக்க முடியாமற் போனதைக் குற்றம் எனக் கொள்வது அவ்வளவாகப் பொருந்தாது. ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்பது போல மனசாட்சியின் உந்துதலாகக் கொள்ளலாம்.

    v  இத்தகைய நிலை பெரியபுராணத்துள் திருநீலகண்ட நாயனார் கதையில் வருகிறபோது அது அவருக்கு வீடு பேற்றினை நல்கியது என்பது சேக்கிழார் கருத்து. திருநீலகண்டரை உறுத்தியது குற்றமெனின் அவருக்கு அது வீடுபேற்றினை நல்குவதற்குக் காரணமாக அமைந்தது என்பது பொருந்தாது.

    v  குற்றவுணர்ச்சி தற்கொலை உட்பட பல முடிவுகளுக்குக் காரணமாகிறது என்பதுதான் உண்மை. சிலம்பு அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலம்பில் தவறு செய்தவர்களெல்லாம் தற்கொலை செய்யவில்லை.

    v  மகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள் உருபேற்குங்கால் அத்துச் சாரியை பெற வேண்டும் என்பது தொல்காப்பியம். எனவே ‘மனதில்’ என்பதை ஏற்பதற்கில்லை.  இதனை ஏற்றால் ‘பழமை’ பறித்தேன் என்று எழுத வேண்டியதிருக்கும்.

    v  திகழ்வதை தவத்திரு,  காரணமாக செய்யக்கூடிய,  கண்ணகிக்கு தீவினை, விளைவாக தன்னை, கோவலனை கள்வன்,  வேட்கையினை கோவலனின்,  விளைவிற்கு தனக்கு தண்டிப்பு, குற்றவுணர்வை  தோற்றுவிக்கிறது., சாவுணா்ச்சியை தூண்டி விடக்கூடிய   திறனுக்கு சான்றாக , அமைத்து சிலம்பினை குடிமக்கள் என்பன போன்ற எண்ணற்ற இடங்களில் வரும் சந்திப்பிழைகள் கட்டுரையின் புறக்கோலத்தைப் புரைபடச் செய்கின்றன. 

    v  “மன்னா்கள் மட்டுமே பாட்டுடைத் தலைவா்களாக இருந்த நிலையை மாற்றி அமைத்து சிலப்பதிகாரத்தினை குடிமக்கள் காப்பியமாகப் படைத்துக் காட்டிய சிறப்பினைப் பெற்றவா் இளங்கோவடிகள்.” என்பதற்கும் கட்டுரைப் பொருண்மைக்குமிடையே நிலவு உறவுநிலை புரியவில்லை.

    v  ‘தனிமனிதனின் குற்றவுணர்வு சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் பாங்கு’, என்பது கருதுகோளாக்கப்பட்டிருக்குமானால் பாத்திரங்களின் மாறுபட்ட முடிவுகள் கட்டுரையாளரின் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கும். பெறவே ‘குற்றவுணர்ச்சி சாவுணர்ச்சியைத் தூண்டும் என்ற பொதுவான ஒரே முடிவு மறு பரிசீலனைக்கு ஆளாகியிருக்கக்கூடும்.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சிலப்பதிகாரத்தில் குற்றவுணர்வு மற்றும் தன்னிரக்கம் ஆகியவைகளைக் கொண்ட பாத்திரங்களைத் தற்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இதை ஆய்வுக் கட்டுரையாக இல்லாமல், இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்.

    Share
  • உ. அக்சயா கவிதைகள்

    உ. அக்சயா கவிதைகள்

    உ. அக்சயா
    இளங்கலை, தமிழ்ப் படைப்பாக்கத் துறை 
    குமரகுரு பன்முக கலை மற்றும்  அறிவியல் கல்லூரி, கோவை

    ————————————————

    தொட்டு விடத் தொலைவில் இருந்து
    வருகிறாய்………….
    தொட்டு விட்டுத் தொலை தூரம்
    போகிறாய்‌………….
    பிரியவும் இல்லை சேரவும் இல்லை
    இனம் புரியா சந்திப்பில் நம் எல்லை.

    இப்படிக்கு
    அலையும் மணலும்

    ————————————————

    நன்றி———

    வெகுமதி இல்லா வேலைக்காரன்
    கள்வன் வரும் நேரம் கத்துபவன்
    கவளத்தைக் கண்கொட்டாமல் பார்ப்பவன்
    மீந்தவை உண்டு உயிரை மீட்டெடுப்பவன்
    கல் எடுத்தால் காணாமல் போனவன்
    எல்லைக் கோட்டைத் தாண்டாதவன்
    மனிதன் செய்யும் தவறுக்குத் தாராளமாய்த் தன் பெயர் தந்தவன்
    மனிதனைத் திருத்த முடியாத வார்த்தைக்கு வாலைப் பரிசளித்தவன்.
    உண்டு வீதியில் திரிந்துகொண்டிருக்கும் நன்றியுள்ளவன்

    Share