சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும் இல்லற விழுமியம்

0

முனைவர் த. ஆதித்தன்
இணைப் பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010,

வாழ்க்கையை அகவாழ்க்கை என்றும் புறவாழ்க்கை என்றும் தொல்காப்பியம் பிரித்துத் தருகிறது. அக வாழ்க்கையினைக் காதல் வாழ்க்கை என்றும் கற்பு வாழ்க்கை  என்றும் இரண்டாகக் காண்கிறோம். இந்த காதல், கற்பு (திருமணம்) என்னும் இரண்டினையும் உள்ளடக்கியதாக இல்லறத்தினைக் கருதலாம்.

இல் வாழ்க்கை இனிய  இல்லற தருமத்தைக் கொண்டு சிறப்புடன் திகழ்கின்ற வாழ்க்கை ஆகும். இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் ஒருவன் செய்யத்தக்கன எதுவென்றும் செய்ய தகாதவை எதுவென்றும் கூறப்பட்டு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை மேம்படுத்திட வேண்டும் என்பதை உணர்த்துவது இல்லறம்  (நீரவன், 2009, 26) என்று இல்லறத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டுள்ளது. அதேபோல “குடும்பம் என்னும் அமைப்பு குடும்பத்தின் தலைவன், தலைவி என்னும் இருவரின் அன்புறவையே மூலக் கருவாகக் கொண்டு வளர்வது. சமுதாயமாக விரிவடைகின்ற குடும்பம் சிறக்க வேண்டுமானால் அதற்குத் தனிமனித ஒழுக்கத்தின் மேன்மை மிகவும் இன்றியமையாதது எனலாம்” (மகலாலிங்கம், ப., 2010, 35) என்னும் அடிகள் குடும்ப மேம்பாட்டுக் கருத்தினைத் தெரிவித்துள்ளன.

சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையில் இல்வாழ்க்கைப் பண்பு மிகுதியாகக் கொண்ட மாந்தர்களுள் முதன்மையான மாந்தராகக் கண்ணகியைச் கொள்ள முடியும். தமிழ்ப் பண்பாட்டுடன் இணைத்து பேசப்படும் பெருமைபெற்ற மாந்தர் கண்ணகி ஆவாள். கண்ணகி கோவலனோடு கொண்ட இல்லறம் சிறப்பதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் கோவலனின் பெற்றோர். அதாவது மாசாத்துவானும் அவனது மனைவியும். அவர்களைக் குறித்து சிலப்பதிகாரம் வழி எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

மசாத்துவானும் அவரது மனைவியும்

கோவலனின் தந்தையாகச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் மாந்தர் மாசாத்துவான். தரை வணிகத்தில் சிறப்புற்ற மாசாத்துவான் காப்பியத்தின் பல காதைகளில் இடம்பெற்றிருந்தாலும் முதன்மை மாந்தர்களுக்குத் துணைநிற்கும் துணைநிலை மாந்தர் என்னும் வகைமைக்குள் அடங்கும் பாத்திரம் ஆகும்.

சோழ மன்னனின் பெருமைக்கு இணையான பெருமை கொண்டவன் என்றும் தான் ஈட்டிய பொருளால் பிறரைக் காத்து வாழும் நற்பண்பு கொண்டவன் என்றும் மாசாத்துவானைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்.

“பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வதான்
வருநிதி பிறர் காத்து மாசாத்துவான் என்பான்
இருநிதிக் கிழவன்” (சிலம்பு-மங்கல வாழ்த்து, அடி: 31-34)

என்னும் அடிகள் மங்கல வாழ்த்துப் பாடலில் மாசாத்துவானை அறிமுகம் செய்கின்றன.

“மாசாத்துவான் என்னும் பெயர் குடிப்பெயர் என்று அரும்பத உரையாசிரியர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும் மாசாத்துவான் என்பான் என்றே கூறியிருத்தலால் அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமெனத் தோன்றுகிறது” (ஔவை. துரைசாமிபிள்ளை, 1942, 26) எனபதும் ஆராயத்தக்கது.

தனிவாழ்க்கைக்கு அனுப்புதல்

கண்ணகியும் கோவலனும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நாளில் மாசாத்துவானின் மனைவியானவள் கோவலனையும் கண்ணகியையும் தனி வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்குத் தேவையானவற்றை வழங்கினாள். கணவன், மனைவி என்னும் இல்வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்களுக்கென்று தனிப்பட்ட விருந்தினர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்று மகிழும் வாழ்க்கைக்கு அவர்கள் பழகிட வேண்டும் என்று அவர்களைத் தனி வாழ்க்கைக்கு அனுப்பினாள் என்று  இல்வாழ்க்கை தொடர்பான இடத்தில் மாசாத்துவானின் மனைவியைப் பற்றித் தெரிவித்துள்ளார் இளங்கோ.

“தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழிநாள்
வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பரும் கேண்மையோடு அறப்பரி சாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒரு தடின புணர்க”

(சிலம்பு, மனையறம் படுத்த காதை, அடி: 82-88) எனும் அடிகள் இதனை உணர்த்துகின்றன.

புறஞ்சேரி இறுத்த காதையில் கோவலனைக் கோசிகமாணி என்பவன் சந்திக்கிறான். அவன் மாதவி கொடுத்த கடிதத்துடன் கோவலனைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறான். கோவலனும் கண்ணகியும் புகாரைவிட்டுச் சென்ற பின்னர் மாசாத்துவானும் அவனது மனைவியும் பட்ட துன்பத்தை விவரிக்கிறான்.

நாகமணி உமிழ்ந்த நாகப்பாம்பானது அந்த மணியை இழந்துபடும் துன்பத்தினைப் போல மாசாத்துவானும் அவனது மனைவியும் கோவலனைப் பிரிந்து வருந்தினார்கள் என்று தெரிவிக்கிறான். மேலும் உயிரை இழந்த உடல் இயங்குவதுபோல மாசாத்துவானின் உறவினர்கள் துன்பம் அடைந்தார்கள் என்று தெரிவிக்கிறான். ஏவளாளர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி, கோவலனைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு அனுப்பினான் மாசாத்துவான். கோவலனைப் பிரிந்த பூம்புகார் அடைந்த துன்பம் எதைப்போல் இருந்தது என்றால் தசரனது கட்டளையால் காட்டிற்கு இராமன் சென்றதும் அயோத்தி மக்கள் எவ்வாறு துன்பப்பட்டாகளோ அதைப்போன்று இருந்தது என்று கோசிகமாணி தெரிவிக்கிறான்.

“இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை என்ன
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்
ஏவலாளர் யாங்கணும் சென்று
கோவலன் தேடிக் கொணர்க எனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேறு உற்றதும்”

(சிலம்பு-புறஞ்சேரி இறுத்த காதை, அடி: 57-66) எனும் அடிகளில் இதனை உணர்த்திய கோசிகமாணி, தான் கொண்டுவந்திருந்த மாதவியின் கடிதத்தை எடுத்து, கோவலனிடம் கொடுக்கிறான். அதனைப் படித்த கோவலன் மாதவியால் எந்தத் தவறும் இல்லை என்று உணர்கிறான். மாதவி கொடுத்திருந்த கடிதம் தனது தாய் தந்தையருக்கு ஆறுதல் அளிக்கும் என்று கருதியதால் அந்தக் கடிதத்தை அவன் தனது பெற்றோரிடம் கொண்டுபோய்க் காட்டுமாறு தெரிவிக்கிறான்.

“மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிகமாணி காட்டெனக் கொடுத்து”

(சிலம்பு – புறஞ்சேரி இறுத்த காதை, அடி: 98-99) என்று கோவலன் தெரிவிக்கும் இடத்தில் தனது பெற்றோரிடம் சொல்லாமல் பூம்புகாரை விட்டுப் பிரிந்ததை நினைத்து வருந்துகிறான். எனவே தனது பெற்றோரின் மலர்ப் பாதங்களை வணங்கித் தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது.

மாசாத்துவான் பெருமை

கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கோவலன் கண்ணகி இருவரும் சமணத் துறவியர் இருக்கும் பகுதிக்குச் செல்ல இயலாது. எனவே அவர்களைப் பிரிந்து செல்ல நினைத்த கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் யாரிடமாவது அடைக்கலப்படுத்த நினைக்கிறாள். அவ்வேளையில் மாதரி என்னும் இடைக்குல மடந்தையிடம் அடைக்கலப்படுத்தும் போது கோவலனின் தந்தையின் பெருமையினைக் கவுந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோவலனின் தந்தையின் பெயரைக் கேட்டால் மதுரை மாநகரத்தில் உள்ள பெருஞ்செல்வர்கள் அனைவரும் கோவலனை இன்முகத்துடன் வரவேற்று விருந்தினனாக அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்வதுவரை உன்னிடம் அடைக்கலப்படுத்துகிறேன் என்று தெரிவிக்குமிடத்தில் மாசாத்துவானின் வாணிகப் பெருமையையும் செல்வச் செழுமையையும் கவுந்தியடிகள் பெருமிதமாகத் தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது.

“தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங்கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்”

(சிலம்பு – அடைக்கல காதை, அடி:126-128) என்னும் அடிகள் இதனை உணர்த்துகின்றன.

சேரன் செங்குட்டுவன் வட ஆரியர்களை வென்று இமயத்தில் கல்லெடுத்து அக்கல்லைக் கன விசயர்களைச் சுமக்கச் செய்து  கொண்டுவந்து கங்கைக்கரையில்  பாடி வீடமைத்துத் தங்கியிருந்தனர். அவ்வேளையில் அங்கே மாடலன் மறையோன் வருகிறான். மாடலன் மறையோன் கோவலனின் தந்தையாகிய மாசாத்துவானுக்கும் அவனது மனைவிக்கும் நிகழ்ந்தவற்றைத் தெரிவிக்கிறான்.

“கோவலன் கொடுந்துயரெய்தி மாபெரும்
தானமா வான்பொருள் ஈத்து ஆங்கு
இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு
அந்தர சாரிகன் ஆறைம்பதின்மர்
பிறந்த யாக்கை பிறப்புற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி எய்தவும்
துறந்தோன் மனைவி மகன்துயர் பெறாஅள்
இறந்து துயரெய்தி இரங்கிமெய்விடவும்”

(சிலம்பு – நீர்ப்படைக் காதை, அடி:90-97) என்னும் அடிகன் இவற்றை உணர்த்துகின்றன.

கோவலன் இறந்தான் என்ற செய்தியை அறிந்த மாசாத்துவான் மிகுந்த துன்பத்தினை அடைந்தான். அவன் ஈட்டிய செல்வத்தை எல்லாம் தானமாக வழங்கிவிட்டு அங்குள்ள இந்திர விகாரம் என்னும் தவப்பள்ளிக்குச் சென்று துறவறம் மேற்கொண்டான். அவ்வாறு மாசாத்துவான் துறவு மேற்கொள்ளும் போது அங்கே பிறப்பொழித்த முந்நூறு அந்தரசாரிகள் என்னும் துறவியர் இருந்தனர் என்பதையும் மகன் இறந்த துன்பத்தைத் தாங்க இயலாத மாசாத்துவான் மனைவி உயிர் துறந்தாள் என்பதையும் தெரிவித்தாள். இதன்மூலம் இல்லறத்தில் பெற்றோர் தமது குழந்தைகள் மீது கொள்ளும் பிணைப்பும் அற்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல கோவலனும் கண்ணகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் காலத்தில் அவர்களைத் தனி வாழ்க்கைதனை அமைத்துக்கொள்வதற்கு ஆவன செய்ததையும்  அறியமுடிகிறது. இவற்றையெல்லாம் நுணிகி ஆராயுமிடத்து தமது பிள்ளைகள் மகிழ்வையும் தாண்டி சமூக வாழ்வைச் சிறப்போடு பழகிட வேண்டும் என்கிற இல்லற விழுமியம் புலப்படுகிறது.

உதவிய நூல்கள்

  1. சாமிநாதையர், உ.வே., (ப-ர்), இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சென்னை-90.
  2. துரைசாமிபிள்ளை, ஔவை.சு., முப்பெருங் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகார ஆராய்ச்சி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
  3. நீரவன், வள்ளுவமும் சமூக மேம்பாட்டுத் தத்துவங்களும், ராக் பப்ளிக்கேஷன்ஸ், சென்னை-94.
  4. மகாலிங்கம், ப., திரு.வி.க.வின் சமுதாய நோக்கு, செல்லம் பதிப்பகம், சென்னை – 83.

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

‘சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும்  இல்லற விழுமியம்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

Ø  கண்ணகியின் கணவன் கோவலனின் தந்தையாகிய மாசாத்துவான் பற்றி ஆசிரியர் இளங்கோவடிகள் தம் நூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூறியிருக்கும் செய்திகளைத்  மேற்கண்ட தலைப்பில் தொகுத்து வழங்கக் கட்டுரையாளர் முயன்றிருக்கிறார்.

Ø  தலைவன் தலைவியின்றி இல்லறம் கடைபோகாதாதலின் “மாசாத்துவன் என்னும் ஆண்மகன் வெளிப்படுத்தும் இல்லறம்” என்பது தோன்ற தலைப்பிட்டிருப்பது மரபியல் முரணாகக் கருத ஏதுவாகிறது.

Ø  கண்ணகியையும் கோவலனையும் இல்லறம் முழுமையடைதற் பொருட்டுத் தனிக்குடித்தனம் வைத்ததொரு செயலின்றி நேரடியாக அன்னார் பங்கு பெறும் எந்த இல்லற நிகழ்வும் அடிகளால் குறிக்கப் பெறவில்லை. தனிக்குடித்தனம் வைப்பதும் சங்க இலக்கிய மரபாகிவிடுமாதலான் மாசாத்துவானோ அவன் மனைவியோ தனித்துச் சுட்டுதற்கு உரியராகத் தோன்றவில்லை.

Ø  காப்பியத் தலைமாந்தர்களின் தந்தை பெயர்களை ‘மாநாய்கன், மாசாத்துவான்’ எனக் குறித்த அடிகள் தாயர் பெயர்களைக் குறிக்கவில்லை

Ø  “ஏவலாளர் யாங்கணும் சென்று கோவலன் தேடிக் கொணர்க எனப் பெயர்ந்ததும்”  மதுரை நகரத்தார் உணர்ந்த மாசாத்துவான் குடிப்பெருமையை மாதரியிடம் கவுந்தியடிகள் வெளிப்படுத்தியதும் கோவலன் கொலையுண்டது கேட்டு மாசாத்துவான் துறவறம் பூண்ட செயலும்,  மாசாத்துவானின் இல்லற விழுமியம் எனச் சுட்டல் பொருந்துமா என்பது தெரியவில்லை.

Ø  “மாசாத்துவன் என்பது குடிப்பெயரா? இயற்பெயரா?” என்னும் ஆய்வு, கட்டுரைப் பொருளுக்குத் தொடர்புடையதாக இல்லை.

Ø  ‘அதனைப் படித்த’ என்றெழுதும் கட்டுரையாளர், ‘எதைப்போல்’ என்றெழுதுவது சாரியை பற்றிய மயக்கத்தைக் காட்டுகிறது.

Ø  “துன்பப்பட்டாகளோ’, ‘செல்வதான்’ ‘’நுணிகி’ என்பன போன்ற பிழைகளும், “இந்த காதல்’, ‘குறித்து சிலப்பதிகாரம்’, ‘இணைத்து பேசப்படும்’ ஆராயுமிடத்து தமது’ முதலிய இடங்களில் கண்ணுறும் சந்திப்பிழைகளும் தவிர்த்திருக்க வேண்டியன. .

இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சிலப்பதிகாரத்தில் பெரும்பாலும் நோக்கப்படாத துணைப் பாத்திரமாகிய மாசாத்துவானைப் பற்றிய சில செய்திகளைத்  தற்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்..


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.