படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

2

முனைவர். ச. சுப்பிரமணியன்

அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள்

முன்னுரை

ஏதாவது ஒரு கவிதையையோ கட்டுரையையோ நாம் படிக்கிறபோது அவற்றை முன்பு எஙகோ படித்த நினைவு நமக்கு வருவது இயல்பு. யாரோ சொல்லியிருந்த நினைவு! இத்தகைய நினைவு எல்லாப் படைப்புக்களுக்கும் வருவதில்லையென்றாலும் ஒரு சில படைப்புக்களைப் படிக்கிறபோது வருவதை நாம அனைவரும உணர்ந்திருக்கிறோம். பதிணென் கீழ்க்கணக்கு நூல்களைப் படிக்கிற எவருக்கும் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகாது. சான்றோர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இலக்கிய அளவில் எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உண்டு. முகநூல் கவிதைகளைப் படிக்கிற சில பொழுதுகளில் அத்தகைய அனுபவத்தை நான பெற்றிருக்கிறேன்.! தம்பி தாரமங்கலம் முத்துசாமியின் கவிதையொன்றினைப் படிக்கிறபோது எழுந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதையே இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

விவேக சிந்தாமணியும் திருக்குறளும்

விவேக சிநதாமணியில் ஒரு பாட்டு. ஒரு பெண்ணின் வால் எயிறு ஊறிய நீர் அதாவது எச்சில் எத்தகையது என்பதை விளக்குகிற பாட்டு அது. அந்தப் பாட்டு இப்படி அமைந்திருக்கிறது

வண்டுமொய்த் தனைய கூந்தல்
மதனபண் டார வல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள்
கிளிமொழி வாயின் ஊறல்
கண்டுசர்க் கரையோ தேனோ?
கனியொடு கலந்த பாலோ?
அண்டமா முனிவர்க் கெல்லாம்
அமுதம்என் றளிக்க லாமே!

யாருடைய எச்சில் ஊறியதோ அவளைப் பற்றிய தோற்ற வண்ணனையைப் பாட்டின் முதல் இரண்டடிகளில் மிக அழகாகச் சித்திரித்திருக்கிறார் புலவர். அவள் கூந்தல் வண்டுகள் கூடுகட்டினால் எப்படியிருக்குமோ அப்படிருக்குமாம்.

“வண்டுமொய்த்தனைய கூந்தல்”

மதன் மன்மதன்! பணடாரம் பொக்கிஷம். அதாவது கருவூலம்.  வல்லி கொடி! காமக்கருவூலமாய்க் கொடி போன்றவள்

மதன பண்டார வல்லி!

அவள் கண் கெண்டை மீனை ஒத்திருந்ததாம். பெண்களின் கண்களுக்குக் கெண்டை மீனை உவமிப்பது ஓர் இலக்கிய மரபு. இது பற்றிய இன்னொரு பாடலை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கலாம்!.

“தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகேந்தினள்!
கெண்டைகெண்டை எனக் கரை ஏறினள்
கெண்டை காணாமல் நின்று தயங்கினள்!”

பெண்ணொருத்தி நீரிலே குனிந்து பார்த்திருக்கிறாள். இவள் கண்ணிழல் நீரிலே படிந்திருக்கிறது. அவற்றைக் கெண்டை மீன் என மயங்கிய  அந்தப் பெண் தன் உள்ளங்கையால் ஒரு கை நீரை மொண்டு அந்தக் கெண்டைமீனைப் பார்க்க முனைந்திருக்கிறாள். குளத்தில் தோன்றிய கண்ணிழல் உள்ளங்கையில் தோன்றுமா என்ன? உடனே கெண்டையைக் காணோம் என்று அரற்றி மயங்கினாளாம்!, புலவர் என்ன சொல்ல வருகிறார்? அவள் கண் கெண்டை மீனைப் போல இருந்தது என்ற செய்தியைத்தான்! இப்படிச் சொல்வதும் ஒரு இலக்கியச் சுவைக்காகவே!

“கெண்டையை ஒத்த கண்ணள்”

காதல் மயக்கத்தில் பெண்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்! பறவைகளில் பேசுகிற பறவை கிளி!. கிளி பேசுமா என்றால் பேசாது! அது வளர்ப்பவர் சொல்வதையே திருப்பிச் சொல்லும்! இந்தப் பெண் காதல் மயக்கத்தில் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லுவாள் ஆதலின் கிளியைப் போல் பேசுகிறளாம்!

கிளிமொழி!

இப்போது அந்தப் பெண்ணின் உருவத்தை வண்ணனைச் செய்யும் சொற்களை இணைத்துப் பார்த்தால் அவளின் புற அழகு புலப்படும்.

வண்டுமொய்த் தனைய கூந்தல்
மதனபண் டார வல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள்
கிளிமொழி!

இத்தகைய பேரழகையுடைய அவள் வாய் எச்சில் எத்தகைய இனிமை பயக்குமாம் என்று ஒரு பட்டியல் போடுகிறார் புலவர்! “கற்கண்டாக இருக்குமோ? சர்க்கரையாக இருக்கலாமா? மலைத்தேனாக இருக்கலாமா?  முக்கனிச் சாற்றோடும் கலந்த பாலாக இருக்கலாமா?  என்றெல்லாம் ஐயப்படுகிறார்!. எச்சிலுக்கு இது மாதிரியான வேதியல் பண்புகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காதல் மயக்கமல்லவா?  எனவேதான் தலைவள் உளறுகிறான்.

கண்டுசர்க் கரையோ தேனோ?
கனியொடு கலந்த பாலோ?

அமுதத்தை உண்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தார்களாம் தேவர்களும் முனிவர்களும். அவ்வளவு சிரமம் ஏன்? தேவையில்லை. இவள் வாயில்  ஊறும் இந்த எச்சில் அமுதமாகாதா? அதனைக் கொடுத்தால் போதாதா? என்று வினவுகிறார் புலவர்!

அண்டமா முனிவர்க் கெல்லாம்
அமுதம்என் றளிக்க லாமே!

தேவர்கள் அமுதம் உண்டார்கள் என்பது கற்பனை! யாரும் அனுபவிக்க முடியாதது. தலைவியின் எச்சிலாகிய அமுதத்தை உண்பது யாருக்கும் கைகூடுவது. உண்மை!. அதன் சுவைதான் காதலர்களுக்கேற்ப மாறுபடுமே தவிர உண்டலாகிய வினை உண்மை! இந்தப் பாடலைப் படிக்கின்ற போது எனக்குத் திருவள்ளுவர் பாட்டு நினைவுக்கு வந்தது. திருக்குறள் காமத்துப்பால் நாடகப் பாங்கில் அமைக்கப்பட்ட இலக்கியம். அந்தப் பாலின் இருபத்தைந்து அதிகார்களும் தலைவன், தலைவி தோழி கூற்றாகவே அமையும். திருவள்ளுவர் ஒதுங்கிக் கொள்வார்.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் (1121)

என்று தலைவியின் எச்சிலை உண்ட தலைவன் கூறுவதாகத் திருக்குறள் கூறுகிறது!  எயிறு ஊறாது. எயிறு என்னும் இடத்தில்  எச்சில்தான் ஊறும். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது. நீர்தான் நிறையும். குளம் இடம். நீர் அவ்விடத்து ஊறுகின்ற நீர்.  பாலோடு தேன்கலந்தற்றே என்னும் இருசொற்களின் விரிவுரையை விவேக சிந்தாமணி விரித்துக் காட்டியிருக்கிறது.  திருக்குறளில் தலைவியின் எச்சிலை உண்ட தலைவனின் இந்த அனுபவத்தைப் படித்த ஒருவன் விவேகசிந்தாமணியைப் படித்தான் என்றால் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகுமா என்ன? இன்னொரு அனுபவததையும் நான் பகிர விரும்புகிறேன்.

‘மரகதம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ‘கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு! அது காவியம் ஆயிரம் கூறும்” எனத் தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலின் சரணத்தில்

‘இன்பத்தின் எல்லையில் கூடுகட்டி இன்னிசை பாடும் பறவைகள் நாம்’

என்று ஒரு வரி சரணத்தில் வரும். இந்த வரியைக் கேட்போர் அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஒரு வரி அப்படியே அசை பிசகாமல் தமிழ்த் திரைப்படப்பாடலில விழுந்திருக்கிறது என்பதுதான் அந்த அதிர்சசிக்குக் காரணம்.  “WE ARE THE NEST OF THE SINGING BIRDS” என்பதுதான் அந்த ஆங்கில வரி. பாடல் எழுதிய பாலு என்பவர் ஆங்கில இலக்கியம் படித்தவரா என்பது நமக்குத் தெரியாது. படம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆசிரியர் குறிப்பு கிட்டவில்லை. என்ன ஒரு வியப்பு? இங்கிலாந்தில் இருந்த ஒரு கவிஞனின் சிந்தனை எப்படி இங்கே இருக்கிற ஒருவனுக்கு வந்திருக்கிறது? சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரிதான சிந்திக்கிறார்கள். இது சவலைக் கவிஞர்களுக்குப் புரியாது!.

சத்தியக் கவிஞர் முத்துசாமி

மகாகவி பாரதிபோல், கண்ணதாசனைப் போல் கள்ளங் கபடில்லாத உள்ளந்தான் கவிஞர்களுக்கு அடிப்படைத் தகுதியாகும் என்பது என் கருத்து. இது இயற்கையிலேயே அமைய வேண்டும். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்னும் இனிய பண்புகளின் தொகுப்பாக இருப்பவனே கவிஞன். தம்பி முத்துசாமி அத்தகைய இயல்புடைவராகவே இருக்க வேண்டும். இது அவருடைய படைப்புக்களிருந்து அறிந்து கொள்ள முடிகிற உண்மையாகும்.

பாவலர் முத்துசாமியும்  பாவேந்தரும்

முததுசாமி எழுதி முகநூல் பதிவில் நான் கண்ட ஒரு கவிதைதான் இந்தக் கட்டுரைக்கு மூலம். முன்பே சொன்ன படி சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள். மானுடம் தாண்டிய நேச மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். “காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி பாடியதற்கும் “ஓடையும் தாமரைப்பூக்களும்” பாவேந்தரிடம் பாசம் காட்டியதற்கும் மனித நேயத்தைத்தாண்டிய இந்த அருட் பண்பே காரணம். அததகைய பண்பாளராக இந்தக் கவிதையில் முத்துசாமி எனக்கு விளங்குகிறார்.

சூரியனைச் சொந்தம் கொணடாடும் முத்துசாமி

இயற்கையை ரசிப்பதும் அதனோடு உறவாடுவதும் அதனை உற்று நோக்குவதும் உண்மைகளை அறிவதுமே கவிஞர்களைப் பிற மக்களிடமிருந்து பிரித்துக் காட்டும் கோடுகளாகும். இயற்கையை ரசிக்கத் தெரியாதவன் கவிஞன் என்றால் விழியே இல்லாதவன் நிலவைப் பாடினான் என்பது போலாகும்.

“காலைக் கதிரவன் கவினுற நின்று
கவிதை பாடுக என்றான் – மலர்ச்
சோலை வண்டு சொந்தம் கொண்டு
சொல்லுக கவிதை என்றது !”

நிலவுக்குச் செல்வதற்கு இஸ்ரோ முயன்று கொண்டிருக்கும்போது முத்துசாமியின் இருப்பிடம் தேடிக் கதிரவன் வந்ததாம். அருமை! வெப்பக் கோளமான கதிரவன் கவிஞரைத் தன்னைப் பாடுக என்று வேண்டுகோள் விடுத்ததாம். வெப்பத்தோடு கதிரவன் பேசிக் கொண்டிருக்கும் போதே கவிஞருக்குக் குளிர்ச்சியைத தர எண்ணிய வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டே அவரிடம் வந்ததாம். இந்த வண்டைப் பாட வந்த கவிஞர் மலர்ச்சோலை வண்டு என்று அடைகொடுத்து எழுதுகிறார். வண்டு என்று எழுதாமல் சோலை வண்டு என்று எழுதுகிறார். சோலை என வாளா கூறாமல் மலர்ச்சோலை என்றும் எழுதுகிறார். இது மரச்சோலை அல்லவாம். மலர்ச்சோலையாம். மலர் குளிர்சசி! சோலை குளிர்ச்சி! வண்டு குளிர்ச்சி! அதனால் அதன் குரலும் குளிர்சசி. ஒரு சிறிய கண்ணியல் பொருள் முரணால் கவிதை மிடைந்திருக்கிறார் முத்துசாமி.

குரலெடுத்துக் கேட்ட குயிலும் மயிலும்

கவிஞர் எழுதத் தொடஙகுகிறார். முதலில் கதிரவன் வந்தது. வண்டு இடைமறித்தது. இப்போது வானத்து முறை. வானத்து நிலவு பூமிக்கு வருவதைக் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் தம்பி முத்துசாமி வானமே பூமிக்கு வந்து தன்னைப் பாடுக என்றதாம். அடடா! என்னவொரு கற்பனை? எல்லாரும் நிலவையும் கதிரவனையும் மண்ணுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். நான வானத்தையே வரச்சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை. இயல்பாக அமைந்த கவிதை. இந்தக் கற்பனை வந்த கற்பனையேயன்றி வரவழைக்கப்படட கற்பனை அன்று.

“நீல வானம் நிலத்தில் வந்து
நீண்ட கவிதை கேட்டது – புதுக்
கோல மயிலும் கொஞ்சும் குரலில்
கூறிடு கவிதை என்றது !”

என்னும் இந்தக் கண்ணிகளில் மயிலும் வந்து தன்னைப் பாடுக என்றதாம். அது சாதாரணம்தான். ஆனால் கொஞ்சும் குரலில் கெஞ்சியதாம் என்பதுதான் அழகிய கற்பனை. மயிலுக்குச் சாயல் பேசப்படுகிற அளவுக்கு அதன அகவல் ஒலி பேசப்படுவதில்லை. கவிஞரின் கவிதையில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்னும் ஆவல் அதற்கும் வந்ததாம்.

விண்மீன் கூட்டமும் விரிந்த மலைத்தொடரும்

வானம் நிலத்துக்கு வந்து கவிதை கேட்டது பகலில். இப்போது அந்தி வந்துவிட்டது. “வானம் கேட்டு எழுதுகிற கவிஞர் நமக்குத் தானம் அளிக்க மாட்டாரா? என்று தவித்துப் போனதாம் விண்மீன் கூட்டம்.

“விண்மீன் கூட்டம் விருந்து வைத்து
வேண்டும் கவிமழை என்றது – உயர்
பொன்னிற மலையும் பொங்கி வழிந்து
பூந்தமிழ்க் கவிமலர் கேட்டது !”

இல்லாத  வானத்தில் இருக்கின்ற உடுக்களும் கவிஞரை நோக்கிப் பயணப்பட்டபோது மலை அமைதியாக இருக்குமா என்ன? அதுவும் இருந்த இடத்தில் இருந்தே ஒரு விண்ணப்பத்தைப் போடுகிறதாம். ‘பொங்கி வழிந்து’ என்று ஒரு தொடர் வருகிறது. மலை எப்படிப் பொங்கும்? அது என்ன எரிமலையா? இல்லையே!. பொங்கி வழிந்து என்னும் தொடர் மலையின் அருவியைக் குறித்தது. அருவியொலி மலை பேசுவதாகக் கற்பனை செய்கிறார். அருவிமொழியால் மலையும் கவிஞரின் கவிதைப்பொருளாக வேண்டும் என்று விரும்பியதாம்.

அன்னமும் மின்னலும்

தொடர்ந்து கற்பனை செய்கிறார் கவிஞர். பறவைகளில் மயில் கேட்டதை அறிந்த அன்னப்பறவை அருகில் வந்ததாம். வானமும் விண்மீனும் தன்னைவிடடுச சென்றுவிட்டதை அறிந்த மின்னலும் கவிஞரிடம் போனதாம். இரண்டும் ஒரு கூட்டு விண்ணப்பத்தைக் கொடுத்ததாம்

“அன்னப் பறவை அசைந்து வந்து
அழகினைப் பாடுக என்றது – விண்
மின்னற் கீற்று மிரட்டியே என்னை
முழங்கிடு கவிதை என்றது !”

மின்னல் இடிக்கு வாழ்க்கைப்பட்டது. மின்னல் முன்னால் வரும் இடி பின்னால் வரும் ஒளியின் வேகம் முன்னால் ஒலியின் வேகம் பின்னால். அதற்கு இடியோசைதான் இன்னோசை. மின்னலுக்கு இடியோசைதான் பின்னணி இசை. அதனாலே அது கவிஞரிடம் அமைதியாகப் பேசாமல் இடிபோல் பேசியதாம்.  அப்படிப் பேசுவது தன்னை மிரட்டியது போல இருந்ததாகக் கவிஞர் கற்பனை செய்கிறார்.

கவிஞரைக் கெஞ்சும் மாலையும் சாலையும்

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த அந்தி வானம் தன்னையும் பாட வேண்டுமென்று கேட்டதாம்.  ‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?  என்று பாரதி பாடியும் அதற்கு அடங்கவி`ல்லையாம்.

தேன்செய்யும் மலரும் தீயும்!
செந்தீயும் நீறாய்ப் போகும்!
கான், செய், ஊர், மலை, கா, ஆறு
கடலெலாம் எரிவ தோடு
தான்செய்த தணலில் தானும்
எரிகின்றான் பகலோன்! அங்கு
வான்செய்த வெப்பத் தால்இவ்
வையத்தின் அடியும் வேகும்!
உச்சியில் இருந்த வெய்யோன்,
ஓரடி மேற்கில் வைத்தான்,
நொச்சியின் நிழல்கி ழக்கில்
சாய்ந்தது! நுரையும், நீரும்,
பச்சையும், பழுப்பு மான
பலவண்ண முகில்கள் கூடிப்
பொய்ச்சான்று போல, யானை
புகழும் பின் மலையைக் காட்டும்!.

என்று பாவேந்தர் பாடியும் போதவில்லையாம். “ மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து வெற்று நீறாகாமல் இருப்பதொரு வியப்பே” என்று அவர் பாடியது பசிக்குப் போதவிலலையாம்! “வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்” என்று வைரமுத்து பாடியும் அதற்கு மகிழ்ச்சி இல்லையாம்;

“பைங்கிளி ஒன்று பறந்து வந்து
பழந்தமிழ்க் கவிதைக் கேட்டது – குளிர்
தங்கிடும் நிலத்தில் தவழ்ந்து நடந்து
தந்திடு கவிதை என்றது !”

“மாலைப் பொழுதும் மயக்கும் மொழியில்
மணித்தமிழ் கவிதைக் கேட்டது – நீள்
சாலை மரங்கள் சரமாய்க் கவிதை”
சமைத்துத் தருக என்றன !

முத்துசாமி பாடலை மாலை கேட்டதாம். அதனால் சாலையும் கேட்டதாம்.  ஆனால் அவர் மயங்கவில்லையாம்!.

மானும் முயலும்

மானைப் பாடாத புலவரில்லை என்பது மானுக்குத் தெரியாதா என்ன? ஆனால் முத்துசாமி இதுவரை தன்னைப் பாடவில்லை என்னும் மனக்குறை அதற்கு இருந்ததாம். அதனால் அவரை வந்து தன்னைப் பாடும்படி வேண்டியதாம்.  “தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்” என்று சங்கப்புலவ்ன் பாடியிருக்கிறான் என்பது முயலுக்குத் தெரியும். வீரத்திற்கு அழகில்லை என்பதற்குத் திருவள்ளுவர் தன்னை உவமமாகப் பயன்படுத்திக் கொணடார் என்பதும் முயல் அறிந்ததே!. வேகமாக ஓடி ஓய்வெடுத்துத் தோல்வி கண்ட கதையில் தான் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது முயலுக்கும் தெரியும். அதனைவிட ஆமைக்குத் தோற்ற அவமானத்தை அது இன்னும் மறக்கவே இல்லை.

“மான்க ளிரண்டு மகிழ்ச்சியில் திளைத்து
மாத்தமிழ்க் கவிதைக் கேட்டன – அடர்
கானக முயல்கள் காதினை நீட்டி
கவிதை என்றெனைக் கேட்டன !

‘மான்கள் இரண்டும் மகிழ்ச்சியில் திளைத்தபின்” என்பதால் ஆண்மானும் பெண்மானும் என்பதைக் குறிப்பாகக் காடடுகிறார் கவிஞர். மான் இணையாக வந்தது போலவே முயல்களும் கூட்டமாகவே வந்தனவாம்.

குழந்தையின் புன்னகை கோடி பெறும்

சூழ்நிலை கவிஞனை உருவாக்குகிறது. கவிதை பிறக்கிறது. தன் பிள்ளையின மழலையில் மனம் பறிகொடுத்தவர் முத்துசாமி. கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்த அவரை வானம் கேட்டது!  இடி இறைஞ்சியது. மின்னல் வேண்டியது! அன்னம் அழுதது! மானும் மண்டியிட்டது! முயலும் முயன்று பாரத்தது! கிளி பேசியும் பார்த்தது! மாலையும் கேட்டது! சாலையும் கேட்டது! அப்பொழுதெல்லாம் இளகாத கவிஞர் மனம் தன் மழலைக்கு இளகியதாம்! இரங்கியதாம். எவ்வளவு மென்மையான கற்பனை! “குழலையும் யாழையும் புறந்தள்ளும் மழலை” என்பார திருவள்ளுவர். “கொஞ்சும் மழலை கேட்கையிலே குழலும் யாழும் பொய்யன்றோ?” என்பார் மருதகாசி!. பொருள் புரியாத மழலைக்கு மயங்கினாராம் முத்துசாமி கவிஞர்.

“அத்துணைப் பேரும் அனுதினம் கேட்டும்
அகத்தின் கதவு திறக்கல – என்
புத்தெழில் மழலைப் புன்னகை சிந்திட
புலர்ந்தது ஆயிரம் கவிதை !”

மேலே சொலலப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள் வந்து கேட்டும் பயனில்லை என்பதை இறுதி வரியிலே சொல்கிறார் கவிஞர். பலநாளும் விடடு விட்டு இலலையாம். “அனுதினம்” கேட்டும் என்கிறார். இடையீடு இல்லாமல் கவிஞரின் கவிதையில் பாடுபோருளாகிவிட வேண்டும் என்னுந் துடிப்பால் வந்து அலைந்தனவாம்! அஃறிணை உயிர்களோடு கவிஞரின் உறவு நிலையைப் புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவுகின்றன. கவிஞனின் மனம் இயல்பாகவே இப்படித்தான் இருக்க வேண்டும். கவிதை பிறக்க வேண்டும். பலபேர் புனைந்து கொண்டிருக்கிறார்கள்.

மருதகாசியும் முத்துசாமியும்

திரைக்கதையில் அறக்கருத்துக்களையும் சமுதாய நீதிகளையும் கலை நயம்பட எடுத்துக் கூறுவதில் மருதகாசி தனித்து விளங்குபவர். “மனமுள்ள மறுதாரம்” என்று ஒரு திரைப்படம் ஐம்பதுகளில் வெளிவந்தது. அந்தப் படத்தில் மருதகாசி எழுதிய பாடல் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்ககிறது.

“மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்!
மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
மார்மீது உதைப்பதிலே கிடைபபதுதான் இன்பம்”

மழலைகளைப் பாரத்தவுடன் முத்துசாமிக்கு ஆயிரம் கவிதைகள் மலர்ந்ததாம். மருதகாசியின் உள்ளம் இடமாறியிருக்குமோ?

தமிழினக் கனவும் பாவேந்தரும்

இனத்துக்காகவும் மொழிக்காகவும் பாடியவர் பாவேந்தர். பாரதி ஒளியில் பாவேந்தர் பாடிய உலகப் பார்வை ஒளியிழக்கச் செய்யப்பட்டது.

எனையீன்ற தந்தைக்கும் தாயக்கும் மக்கள்
இனமீனும் தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் பயக்கு மென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”

என்று பாடியவர் அவர். ஒரு நாள் கவிதை எழுத உட்கார்ந்தாராம். தாளை எடுத்ததுதான் தெரியுமாம்.  ஒரு எழுத்துக் கூட வரவிலலையாம்! எழுத இயலவில்லையாம்!

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட”

என்ன ஆனது? எதுபற்றி எழுத ஏட்டினை எடுத்தார்? ஏன் எழுத இயலவில்லை?  என்பதையெலலாம் பாட்டின் இறுதி வரியில் பதிவு செய்கிறார். வந்த தடைகளை வரிசைப்படுத்துகிறார்.

  1. வானம் தன்னை எழுதென்று சொன்னதாம்.
  2. ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களைப் பற்றி எழுதுக என்றனவாம்.
  3. அடர்ந்த காடும் பசிய வயலும் கருத்த மேகமும் தங்களை எழுதக் கூடாதா என்று கெஞ்சினவாம்.
  4. சாயலில் மயிலையொத்த மங்கையர் அருகில் வந்து தங்களைப் பாடுக என்றனராம்.
  5. சோலை தந்த குளிர்ச்சியோடு தென்றல் வந்ததாம்.
  6. தோகையுடைய மயிலும் மருண்ட மானும் வந்தனவாம்
  7. மாலைக் கதிரவன் தன் மாணிக்க ஒளியினைக் காட்டியதாம்.
  8. களங்கண்ட தமிழ் வீரன்; மலையினை யொத்த தன்தோளை வரைக என்றானாம்.
  9. இத்தனை அழகும் தங்கள் பாடுக என எத்தனித்தனவாம்! வற்புறுத்தினவாம்!

ஆனால், ஆண்ட தமிழினம் அடிமைப்படட்டுக் கிடக்கின்ற காட்சியினைக் கண்டவருக்குக் கவிதை வரவில்லையாம். கவலை வந்ததாம். அந்தக் கவலைக்கு மூல காரணம் தாய்மொழிவழிக் கல்வி இல்லாததுதானாம். உண்மைதானே! உலகிலேயே தாய்மொழி வழி கலலாத ஒரு கீழினமாக இருப்பது தமிழினமே. “மொழி வளர்ந்தால் இனம் வளரும். இனம் வளர்ந்தால் நாடு வளரும். இது ஒரு பரிணாமம். எனவே தாய்மொழிவழிக் கல்வி பெற்றுவிட்டால் துன்பங்கள நீங்கும் சுகம் வரும் நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். விரம் வரும்”. இனத்தைப் பற்றித்தான எழுத நினைத்தாராம்! இனந்தான் எழுந்திருக்க முடியாமல் இப்படி இடுப்பொடிந்து கிடக்கிறதாம்! அதற்குக் காரணம் தாய்மொழிப் பற்றின்மைதான் காரணமாம். பாவேந்தர் எழுதுகிறார்.

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட — என்னை
எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் — தங்களை
ஓவியம தீட்டுக என்றுரைக்கும்
காடுகழனியும் முன்னே வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்
தங்கள் அன்பினைச் சித்திரம் செய்கவென்றார்

சோலைக் குளிர் தரு தென்றல் வரும் — பசுந்
தோகை மயில் வரும்! அன்னம் வரும்.!
மாலைப பொழுதினில் மேற்றிசையில் — வரும்
மாணிக்கப் பரிதி காட்சி தரும்!
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் – “உயர்
வெறபென்று” சொல்லி வரைக என்னும்
கோலங்கள் யாவும் மலைமலையாய்
கூவின என்னை! இவற்றிடையே

இன்னலிலே தமிழ்நாட்டிலே — யுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
அன்னதோர் காட்சி இரக்கமுணடாக்கி — என்
ஆவியில் வந்து கலந்ததுவே!
இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்

இவ்வளவு சிக்கல்களில் தன் இனம் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஏடுதான் என்ன செய்யும்? எழுதுகோல்தான் என்ன செய்யும் என்பது பாவேந்தர் சிந்தனை. உலகத்து இன்பங்களையெல்லாம் தன் கள்ளங் கபடமற்ற சிரிப்பால் கொள்ளை கொள்ளும் மழலையின் சிரிப்புக்கு முன்னே உலகத்து உயிர்களைக்கவனிக்கவே நேரமில்லை முத்துசாமிக்கு! தாய்மொழிவழிக்கல்வி பாவேந்தர் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டதைப்போல மழலையின் சிரிப்பு முத்துசாமியின் இதயத்தை ஆட்கொண்டது. கவிஞர்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள்.

நிறைவுரை

நகல் எடுப்பது என்பது வேறு. தாக்கம் என்பது வேறு. முன்னது போலித்தனம். பின்னது மரபுவழிப் பயணம். முன்னது அறிந்து செய்வது. பின்னது தானே படிவது!. சமுதாய நிகழ்வுகளிலும் இயற்கை அசைவுகளிலும் மனம் பறி கொடுக்காத எவரும் கவிதையாக்கத்தில் வெற்றி பெற இயலாது. பாவேந்தரும் முத்துசாமியும் இயற்கையில் மனம் பறிகொடுத்தவர்கள்.  அவருள் ஒருவருக்கு இனப்பற்று மிகுந்திருந்த காரணத்தால் இயற்கையின் வேண்டுகோளை நிறைவேற்ற இயலவில்லை. மற்றவருடைய மனம் மழலையில் இலயித்துப் போனதால் இயற்கையைக் கவனிக்க நேரமில்லை. இரண்டு கவிஞர்களும் இயற்கையை முன்னிறுத்தித் தாம் சொல்ல வந்த கருத்துக்களைக் கவிதையாக்கியருப்பதுதான் சிந்திக்க வேண்டியது. இயற்கை சங்க இலக்கியங்களைப் பாதித்தது. பின்னாலே பாவேந்தரைப் பாதித்தது. அதற்கும் பின்னாலே முத்துசாமியைப் பாதித்திருக்கிறது!. இந்தப் பாதிப்புக்களைப் பாவேந்தர் சமுதாயச் சிக்கலோடும் முத்துசாமி மழலையோடும சார்த்திப் பாடியிருக்கிறார்கள். முத்துசாமியின் முகநூல் பதிவு  என்னைப் பாவேந்தர் பக்கம் அழைத்துச் சென்றது. இயற்கை அவர்களை அழைத்தும் அவர்கள் கவனிக்கவில்லை. இயற்கையைப் போற்றிப் பாடினாலும் இனிக்கிறது! அதனை மறுதலித்துப் பாடினாலும் இனிக்கிறது!  கனத்த இதயத்திற்குக் கருணை காட்ட இவற்றைவிட வேறு என்ன வேண்டும்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

  1. பெற்றதாய் போலிவரும் பேணப் பிறப்பெடுத்தார்!
    சுற்றமாய்த் தத்தெடுப்பார் தூக்கவா – ளற்றவரை!
    அப்பழுக் கற்றநெஞ்சர்! ஆதரவாய்த் தாங்குதற்குச்
    சுப்பி ரமணியரே தூண்!

    அருமைப் பேறு பெற்றீர் முத்துக் கவியே ❤️🌹

    அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள் கட்டுரை மிக அருமை 👌❤️

    பேராசிரியர் சுப்பிமணியனாரை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏

  2. ஆன்றோர் பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் !

    இன்று ” வல்லமை” மின்னிதழில் “அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள் ‘ எனும் எனது கவிதையைத் திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளார் , மலைக்கோட்டை மாமணியார் , வாழவந்தான் கோட்டை வள்ளல்பெருமான் பேராசியர் பெருந்தகை முனைவர் .ச.சுப்பிரமணியனார் அவர்கள் !

    அதைப்படிக்கின்றபோது உடல்சிலிர்த்தது உள்ளம் நெகிழ்ந்தது , அத்தகைய ஓர் அறிவார்ந்த ஆய்வுக்கட்டுரை ! மழலைப் பேச்சுக்குப் புதுப்பொருள்கண்டு புளகாங்கிதம் அடையும் பெற்றோர்களைப்போல நானும் உணர்கின்றேன் .

    முப்பது ஆண்டுகளுக்குமுன் நான் இடைநிலையாசிரியாகப் பணியாற்றிய தனியார் பள்ளியின் பொன்விழா கொண்டாடப்பட்டது .அவ்விழாவைச் சிறப்பிக்கும் பொருட்டு பொன்விழா மலர் ஒன்று வெளியிட ஏற்பாடு செய்தார்கள் , அதற்கு பல ஆசிரியர்கள் கதை , கட்டுரை , நாடகம், நகைச்சுவைத் துணுக்குகள் என்ற அளவில் எழுதிக்கொடுத்தார்கள் , நான் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று போதுமான இலக்கண இலக்கிய அறிவு இல்லாது இருந்தபோதும் எப்படியும் ஓரு கவிதை எழுதுவது என்று எண்ணி ஒருவாறு “அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள் ” எனும் தலைப்பில் எழுதினேன் .

    ஒருநாள் பேராசிரியர் ஐயா அவர்கள் என் இல்லம் வந்தபோது அக்கவிதையைப் படித்துக்காட்டினேன் ,அவர் அதனைப் படியெடுக்கொண்டார் . அதனைக் கொண்டு சென்றவர் அம்மணமாய் இருந்த குழந்தைக்கு ஆடை அணிவித்து ,,அணிகலன்களைப் பூட்டி , செந்தூரத் திலகமிட்டு, தேன்மல்லிமலர்சூட்டி
    சிறப்புடனே அலங்கரித்து சிம்மாசனத்தில் அமரவைத்ததைப்போல எனது கவிதையை அழகுபடுத்தி ஆய்வுசெய்து அவனிக்கு அறிமுகம் செய்துவிட்டார் .

    விவேகசிந்தாமணியும் திருக்குறளும் ஒத்தக்கருத்துருவில் ஓன்றுபட்டுநிற்பதை எடுத்துக்காட்டியும் , மகாகவி பாரதியார் , பாவேந்தர் பாரதிதாசன் , கவியரசு கண்ணதாசன் , மருதகாசி முதலிய மிகப்பெரிய ஆளுமைகளோடு ஒப்பிட்டுக் கூறுவதை உள்ளபடியே என்னுள்ளம் ஏற்கமறுக்கிறது .

    பேராசிரியரின் பாராட்டு எப்படி இருக்கிறதென்றால் ஒரு குழந்தை தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட சுற்றிநின்று ஏராளமானோர் வேடிக்கைப் பார்த்தனர் , அப்போது திடீரென்று ஒருவர் கிணற்றில் குதித்துக் குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறார் , ஊர்மக்கள் கிணற்றில் துணிச்சலுடன் குதித்துக் குழந்தையைக் காப்பாற்றியதற்கு உங்களுக்கு என்ன பரிசுவேண்டும் என்றனர் , அதற்கு அவனோ என்னைக் கிணற்றுக்குள் தள்ளியவனை பார்க்கவேண்டும் என்றானாம் அதுபோல்தான் என்நிலையும் !

    யாம்பெற்ற பெரும்பேறு
    ஞாலத்தில் யார்பெறுவார் ?
    ஆய்வறிஞர் சங்கிலியார்
    ஆரமுதைத் தந்துவிட்டார் !

    அவர் பாராட்டிற்கு இனிமேல்தான் தகுதியுள்ளவனாக மாறி என்னால் இயன்ற அளவிற்கு முயற்சி செய்வேன் என்று உறுதிகூறுவதோடு ஆதரவு நல்கிய அனைவருக்கும் இதயமார்ந்த நன்றியை இனிதே தெரிவித்துக்கொள்கின்றேன் .

    கவிஞர்.அ.முத்துசாமி , தாரமங்கலம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.