5

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(478)

துறந்தார்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் துணை.

       – திருக்குறள் –42 (இல்வாழ்க்கை)

புதுக் கவிதையில்…

துறவு வாழ்க்கை மேற்கொண்டோர்க்குத்
துணையாய் இருந்தே
வேண்டுவன செய்வதாலும்,
வறுமையில் வாடுவோர்க்கு
உணவு போன்றவை வழங்கி
உதவுவதாலும்,
இறந்தோர்க்கு
இவ்வுலகில் நீர்க்கடன்
போன்றவை செய்வதாலும்,
இவர்களுக்கு
இல்லறத்தில் வாழ்பவன்
என்பவன்
ஏற்ற துணையாவான்…!

குறும்பாவில்…

துறவு வாழ்வில் உள்ளோர்க்கும்
வறுமையில் வாழ்வோர்க்கும், இறந்து பேர்னோர்க்கும்
இல்லறத்தான் என்பவனே துணை…!

மரபுக் கவிதையில்…

துறவில் வாழ்வைக் கழிப்போர்க்குத்
     துணையாய் இருந்தே உதவலாலும்,
உறவு போல வறியவர்க்கே
     உற்ற உதவி செய்வதாலும்,
இறந்து போன மாந்தர்க்கே
     எள்நீர்க் கடன்கள் ஆற்றலாலும்,
அறமாம் இல்வாழ் வதிலுள்ளோன்
     ஆவான் இவர்க்குத் துணையெனவே…!

லிமரைக்கூ…

வாழும் பெரியோர் துறவில்,              
வறுமையில் நலிந்தோர், இறந்தோர் இவர்களுக்கு
இல்லறத்தான் துணையாமே உறவில்…!

கிராமிய பாணியில்…

பெரும மிக்கது
இல்லறம்தான்,
பெறருக்கு ஒதவுற
பெரும மிக்கது
புருசன் பொஞ்சாதியா
சேந்து வாழுற இல்லறம்தான்..

ஓலகத்தில
தொறவு வாழ்க்க வாழுறவுங்களுக்குத்
தொணயாயிருந்து ஒதவுறதாலயும்,
இல்லாதவனுக்கு வறும தீரக்
குடுத்துக் காப்பாத்துறதாலயும்,
எறந்து போனவனுக்கு
நீர்க்கடமயெல்லாம் செய்யிறதாலயும்,
இவுங்களுக்கெல்லாம்
சரியான தொண
இல்லறத்தில இருக்கவன்தான்..

அதால
பெரும மிக்கது
இல்லறம்தான்,
பெறருக்கு ஒதவுற
பெரும மிக்கது
புருசன் பொஞ்சாதியா
சேந்து வாழுற இல்லறம்தான்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.