Author: admin

  • பதின்ம வயது !

    -ராதா மரியரத்தினம்

    துள்ளித் திரியும் வயது
    கள்ளம் இல்லாப் பருவம்
    யாருக்கும் பயம் இல்லை
    மொட்டுவிரிந்து இதழ்
    மெல்ல அவிழ்க்கும்
    இள மலர் போல​
    முகை அவிழும் வயதில்
    கள்ளம் குடிகொள்ளக்​
    கதவோரம் நின்று விடும் கால்கள்
    எங்கிருந்து வந்தது இந்த வெட்கம்?

    ஓர​ விழிப் பார்வையும்
    ஒதுங்கியே போவதும்
    தூர​ நின்று பார்ப்பதும்
    பதின்ம​ வயதில் குடியேறும் நாணமும்
    ஏதுமறியாப் பருவம்
    இது பல​ ஓநாய்களுக்கு
    இரையாகும்  பதமான பருவம்!

    கறுப்பு வெள்ளைக் காட்சியது
    வர்ணக் கனவாக மாறும் வயது
    மெல்ல அரும்பும் ஒரு காதல்
    அது புரியாத​ வயதில்
    அரும்பிடும் முதல் பாசம்
    அரைகுறையாய் இருந்த​ நிலவு
    முழுமதியாகும் அழகிய பருவம்
    செதுக்கி முடித்த சிற்பம்
    செம்மைப் படுத்தும்
    ஓர் அழகிய​ வடிவம்!

    குழந்தை முகம் மாறி
    ஒரு குமரியின் முகமது
    அரும்பிடும் நேரமது
    கதவின் ஓரத்தில்
    பூக்கின்ற​ விடிவெள்ளி
    மூடிய​ கைகளுக்குள்
    புதைந்திட்ட​ பொக்கிசம்
    முழங்காலில் முகம் புதைந்திட்ட​
    புத்தம் புது ஓவியம்
    தென்னையின் பின்னால்
    ஒளிர்ந்திட்ட​ தேவதை
    பதின்ம வயது ஒரு பொற்காலம்!

    Share
  • நிலவே முகம் காட்டு!

    -ரூபன், ஈச்சிலம்பற்றை, இலங்கை

    நிலவே ஒருநாள் முகம்காட்டு
    உன் முகவரி எனக்குத் தெரியட்டும்
    தவழ்ந்து தவழ்ந்து நீந்துகிறேன்
    நினைவு உள்ளே வரும்வரைத்
    தவமாய் இருந்து துாங்குகிறேன்
    தாவித்தாவிப் பிடிக்கிறேன்
    தள்ளித்தள்ளிப் போகிறாய்
    தவமும் கலைந்து போகுதடி
    தாவி அணைக்கத் துடிக்கிறேன்!

    இருட்டறை கொண்ட மாளிகையில்
    இருளும் சூழ இருக்கின்றாய்
    ஒற்றைப்பார்வை பார்க்கிறாய்
    ஓரக்கண்ணாய் தெரியுதடி
    ஓடி ஓடி வருகிறேன்
    உள்ளம் அணைத்துப் பிடிப்பதற்குக்
    கையும் ஒன்றை ஊன்றுகிறாய்
    கருணையுள்ளம் தெரியுதடி!

    சிவந்த சேலை உடுத்துக்கிட்டுச்
    சிவத்த சூரியன் வருகையில்
    மேனியும் அக்கினி நிறத்தில் தெரியுதடி
    வருவேன் வருவேன் இருந்திடுவாய்
    காலம் விரைவில் பதில்சொல்லக்
    கணப்பொழுதில் வந்திடுவேன்
    சொந்தம் நட்பும் பலம் கொள்ள
    இணைவோம் வாழ்வில் ஒன்றாக!

     

    Share
  • மணிக்குள் நிமிடமாய் மறைந்தவன்!

    -மெய்யன் நடராஜ்

    இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான் 
    மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான் 
    பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான் 
    அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்! 

    மலைகளின் உயரமாய் மனதினைக் கொண்டவன் 
    பசுமையின் வடிவிலே மனந்தனை ஈர்க்கிறான் 
    முகில்களின் உருவத்தில் கருணையைப் பொழிகிறான் 
    வனங்களின் மரங்களாய் வசீகரம் கொள்கிறான்! 

    பயிர்களின் விளைச்சலால் பசியினைப் போக்குவான் 
    இருளினைக் காட்டியே ஒளியினை ஊட்டுவான் 
    கடல்தனில் அலைகளாய் மிதந்துமே திரிகிறான்
    காற்றினில் ஒலியெனக் கலந்துதான் இருக்கிறான்!

    வானத்தில் சுடரென வளமுடன் வருகிறான் 
    வையகம் செழித்திட வளம்பல தருகிறான் 
    ஞாலத்தை ஒருவனாய் ஆட்சியும் செய்கிறான் 
    நாளைக்கு என்பதை நேற்றிலே காண்கிறான்! 

    இனிமையைக் கொடுப்பதில் தேனென இனிக்கிறான் 
    கொடுமையை விலங்குகள் குணத்திலே விதைக்கிறான் 
    தனிமையில் இருந்திடத் துணையென வருகிறான் 
    கனிகளின் நடுவிலே சுவையெனக் கிடக்கிறான்! 

    இரவிலே நிலவென எழில்மழை பொழிகிறான் 
    உறவிலே உயிர்களின் உயர்குணம் வளர்க்கிறான் 
    பிரிவிலே நரகமாய் உழன்றுமே கொல்கிறான் 
    தீயிலே ஜோதியாய்த் திகழ்ந்தவன் வாழ்கிறான்! 

    தனித்தனி படைப்பதன் தனித்துவம் காட்டுவான் 
    தனக்கொரு இடமின்றித் தாண்டவம் ஆடுவான் 
    மணிக்குள்ளே நிமிடமாய் மறைந்தவன் கிடக்கிறான் 
    மனிதனைத் திருத்திட மறுத்தவன் திரிகிறான்! 

     

    Share
  • எப்போது மலரும்?

    -த.ரூபன், ஈச்சிலம்பற்றைமூதூர், இலங்கை

    வாழ்வில் சுமைகளைச் சுமந்தோம்
    எங்கள் வாழ்க்கையே போராட்டமாக மாறியது
    அவலங்களைத் தாங்கியும்
    குருவிகள் போலக் கூட்டமாகக் கூடுகட்டிச்
    சுகமாக வாழ்ந்து வந்தோம்
    உயிர்களைக் கையில் பிடித்தவண்ணம்
    ஊரூராய் ஓலமிட்டோம்!

    ஒரு நாடு கூட எட்டிப்பார்க்கவில்லை
    சொந்தங்களை இழந்தோம்
    உறவுகளை இழந்தோம்
    இன்று அனாதையாக வீதியில் நிற்கின்றோம்!

    யாரும் செய்யாத துன்பத்தை
    நாம் செய்தோம் இல்லை
    தமிழன் என்ற அடைமொழியால்
    யாவரும் வஞ்சிக்கப்பட்டோம்!
    துஞ்சியவன் புதைகுழியில் படுத்துறங்க
    விஞ்சியவன் எங்களை எள்ளிநகையாடினான்!

    அழுதோம் புரண்டோம் மாண்டோம்
    எங்கள் அவலக்குரல் யாருக்கும்
    கேட்கவில்லை…என்னதான் செய்தோம்?
    கோயிலுக்குப் போனால் கோபுரங்கள்
    சாய்ந்து விழும் வீதிக்கு போனால்
    நடந்த தடம்கூட இல்லை!

    எங்கள் விதியினை யார்இடமும் சொல்லி
    யாரும் கரிசனை காட்டியதில்லை
    கல்லாய் இருக்கும்தெய்வம்கூடக்
    கண்ணை மூடிக்கொண்டு வாழ்கிறார்
    தெய்வமே இப்படி என்றால்
    எங்கள் கதிதான் என்ன நிலை…?

     

    Share
  • அவன் யசோதையின் நந்தனல்லவா….

    சாயா சுந்தரம்

    images

    வீதிவீதியாகத்
    தேடத்தொடங்குகிறாள்
    தன் நந்தனை….
    யாரேனும் தேவகியின்
    பெயர் சொன்னால்
    மேனிசிலிர்க்க
    தவிர்க்கத் தொடங்குகிறாள்…
    கேளாத ஒற்றை
    வார்த்தையென
    அந்தப் பெயரை….
    தாளாதுப் புலம்பும்
    தளிர்க்கொடிகள்
    மிதிபட….
    உற்றுக்கேட்கத்
    தொடங்குகிறாள்
    சிறுதண்டைக்
    கொலுசொலியை….
    மாயம் செய்பவனே
    மதுசூதனா
    விலகிச் செல்வாயோ என
    பிதற்ற ஆரம்பிக்கிறாள்
    பிச்சியென…
    பாதம் பிடித்து
    முழங்கால் பற்றி
    கரம் பிடித்திழுத்து
    மார்பு சாய்ந்து
    கழுத்தணைத்துச்
    செவிகளில்
    இசைக்கத்தொடங்குகிறான்
    சிறு கண்ணன்
    ‘அம்மா’ என…
    மெதுவாக உயிர்பெறத்
    தொடங்குகிறாள்
    அவன் அன்னை
    யசோதா….

     

    Share
  • விவசாயி

    -மீனா கண்ணதாசன்

    அவன் ஏர் பிடிக்க
    அவன் புகழ் படிக்க
    ஏழை விவசாயின்
    பெருமை பாடப்
    பட்டமும், படிப்பும்
    எழுத்துக்களும்
    மண் வாசம் பெற்று
    உழவனின் நேசத்தில்
    பெருமையடைகின்றன!

    விண்ணும், மண்ணும்
    உறவென வாழ்ந்தாயோ…
    மண்ணின் வாசம்
    இவனுக்கு உயிர் சுவாசம்
    மண்ணையும் சுவாசித்துப் பார்
    விவசாயின் வியர்வை வாசம் வரும்
    வட்டிக்குப் பணம் வாங்கி
    விதைநெல் வாங்கி
    முத்துப் போல் விதைத்துக்
    கர்ப்பம் போல் காத்துப்
    பெற்றெடுத்த பிள்ளை
    போல் வளர்த்து…

    நோய், நொடியின்றிக் காத்துப்
    பக்குவமாய் அரும்பாடுபட்டு
    அல்லும் பகலும் உழைத்து
    முத்து மணிகளைப் போல்
    நெல்மணிகளைச் சேர்ப்பான்
    பேரம் பேசும்
    பணக்கார மனிதர்களிடம்!

    அழுக்கு உடையில் இருந்தாலும்
    அழுக்கில்லா உள்ளம் படைத்தவனே…
    உழைப்பால் மற்றவர்களுக்குப் பசி, ருசி
    கொடுத்தவனே விவசாயி…
    விவசாயின் நிலையோ
    பசியால் வாடி,
    வறுமையில் நொந்து
    உனது அன்றாட வாழ்வும்
    துயரப்படும்
    நிலை தானோ இவ்வுலகில்…?

    உழவன் நிலை மாற வேண்டும்
    விவசாயமும், விவசாயியின்
    வாழ்வும் செழிக்க வேண்டும்!

     

    Share
  • கூத்துக்காரன்

    மாதவன்

    கூத்து முடிந்து திரைமெல்லக் கீழிறங்கியதும் சண்முகம் தன் அரிதாரத்தை கலைக்கத்தொடங்கினான். முகம் கழுவுகையில் தனது மீசையில்லாத முகம்பார்த்து அப்பாவை நினைத்துக்கொண்டான். சண்முகம் நாயகத்தன்மைகள் ஏதுமற்ற ஒரு சாமான்யன். பஸ் டிரைவர். அவன் அப்பாபோல மெயின் வேஷமெல்லாம் இல்லை. சைடு வேஷம்தான். சண்முகத்தின் அப்பா சின்னையன் பெரிய ஆள். ஸ்தீரிபார்ட் சின்னையன் என்றால்தான் தெரியும் எல்லோருக்கும். திரவுபதி வேஷமிட்டால் அசல் திரவுபதியே வந்துவிட்டதுபோல இருக்கும் எல்லோருக்கும்.

    அந்தக்காலத்திலேயே சிங்கப்பூர் எல்லாம் சென்றுவந்திருக்கிறார். ஸ்தீரிபார்ட் வேஷம் கட்ட அவர்போல வேறு ஆளில்லை அப்போதெல்லாம். ஆனால் சண்முகத்தின் வகுப்புத்தோழர்கள் எல்லோரும் அவரைப்பற்றி பேசுகையில் மீசையற்ற அவர் முகம்பற்றிக் கேலிசெய்வார்கள்.

    ” ப்பா..”

    “என்ன தம்பு”?

    “நா ஒன்னிய ஒன்னு கேக்கவா”?

    “கேளுய்யா”

    “நீ இனிமேட்டு பொம்பள வேசங்கட்டாதப்பா”

    “ஏன்யா”?

    “பள்ளியூடத்துல எல்லாப்பசங்களும் என்னிய கிண்டல்பண்றாங்கப்பா”

    “என்னன்னு”?

    “நீயொரு பொண்டுகஞ்சட்டியாம். அதனாலதான் அம்மாகூட உன்னியவிட்டு ஓடிப்போயிருச்சாம்”

    அப்பா அவனை இழுத்து அணைத்துக்கொண்டார். அப்படி அணைத்துக்கொண்டால் அவர் குடித்திருக்கிறார் என்று அர்த்தம். அவன்மீது பிரியம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஆனால் என்ன செய்தாலும் அம்மாவைப்பற்றி எதுவும் கூறமாட்டார்.

    மேனேஜர் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கி தன் அன்ட்ராயரில் வைத்துக்கொண்டான் சண்முகம். மரியாதை என்று சொல்வார்கள் அதை முன்பெல்லாம். ஒரு பெரிய தாம்பாளம் நிறைய வெற்றிலை பாக்கு பழங்கள் வேஷ்டிதுண்டு எல்லாம் வைத்துத்தான் கூத்திற்கு அழைப்பார்கள். கூத்து முடிந்தபின்பும் அதேபோல சன்மானம் வைத்து வண்டிகட்டி வழியனுப்பிவைப்பார்கள். அப்படித்தான் ஒரு ஊரில் இரண்டுரூபாய் நோட்டுக்கட்டை திண்ணையில் தூக்கிப்போட, துண்டை உதறியபடி அதை தொடாமல் திரும்பிவந்தாராம் அப்பா.

    பஸ்டான்ட் கூட்டமாக இருந்தது. அவன் தனக்கான பஸ்ஸை தேடி ஏறியமர்ந்துகொண்டான்.

    அப்பாவுடன் கூத்திற்குச் செல்லும்போதெல்லாம் எல்லோரும் கேட்பார்கள்.

    “ஏஞ்சின்னா, ஒம்மவனுக்கு பிரகலாதன் வேசங்கட்டினா நல்லாயிருக்காது”?

    “ச்சீ சவத்த ஒன் வாயக்கழுவு மொதல்ல. அவனுக்கு எதுக்கு இந்த நாறப்பொழப்பு ? அவன் பள்ளியூடத்துல படிக்கிறான். நல்ல வேலைக்கிப்போவான். சாயம்பூசுற பொழப்பெல்லாம் என்னோட போவட்டும்”

    நகரும் பேருந்தின் ஜன்னல்வழி அவசரமாக நகர்ந்தன மரங்கள். முன்னாலிருந்து ஒரு குழந்தை கைநீட்டியது. சண்முகம் ஒற்றைவிரலால் அதன் கைபற்றினான். அது சிரித்தது.

    அப்பா கடைசிவரை கூத்துக்கட்டியவர். அரவான் வேஷங்கட்டிய அன்று தான் பலியாவதற்கு முன்பான உக்கிரமான காட்சியின்போதுதான் அவருக்கு பக்கவாதம் வந்து கைகால் இழுத்துக்கொண்டது. அதன்பிறகு அதிககாலம் சிரமப்படவில்லை. கொஞ்சநாட்களிலேயே இறந்துபோனார். அதற்குப்பிறகுதான் சண்முகம் கல்யாணமே செய்துகொண்டான்.

    சண்முகத்தின் பள்ளி ஆண்டுவிழாவில் மாறுவேடப்போட்டிக்கு அவன் வேஷங்கட்ட முயன்றபோதுதான் முதல்முறை அவனை அடித்தார்.

    “அது ஒரு சாபம் தம்பு. பெரிய போத. ஒருவாட்டி வேசங்கட்டி கைதட்டு வாங்கிட்டீன்னா, பொறவு சாவறவரை அந்த சத்தம் கேட்டுக்குட்டேயிருக்கத்தோனும். அது ஒரு வல சம்முவம். விழுந்தா ஆள அப்புடியே முழுங்கிப்புடும்.

    “நீங்க மட்டு ஏன் வேசங்கட்டுறீங்க”?

    “எங்கய்யா. ஒந்தாத்தன் பெரிய பாகவதர் தம்பு. சின்னப்புள்ளையில இருந்து என்னிய கூத்துக்கு பழக்கிவச்சாரு. என்னால அத விடவே முடியல. என் சாயம் ஒனக்கு ஒட்டிரக்கூடாதுன்னுதான் ஒன்ன படிக்கவைக்கிறேன்.
    அப்பா இவனோடு நிறைய பேசுவார்.

    “ஒருநாளு எங்கய்யாவோட கீரணூருக்கு போனேன். அடுத்தமாசம் கூத்துக்கு பேச்சுநடத்த போறமின்னு சொல்லித்தான் என்னிய கூட்டிப்போனாரு. அங்க போனபொறவுதான் தெரிஞ்சுது போனது பொண்ணுபாக்கயின்னு. ஒங்கம்மா அத்தன அழகு. நம்மூரு மாரியாத்தா செல இருக்குபாரு அதுமாதிரி ஒரு அழகு.

    ஆயிரம்ரூவா பணம். அஞ்சாறுபவுனு நகயோட அவளக்கட்டிக்கிட்டேன். ஆனா அவளுக்கு என்னிய சுத்தமா புடிக்கலன்னு அப்பறமாத்தான் தெரிஞ்சது. எப்பப்பாரு எரிஞ்சு விழுந்தா. எங்கயாச்சும் வெளிய தெருவுக்கு கூப்புட்டா வரமாட்டா.

    நீயொரு பொண்டுகஞ்சட்டி மாதிரி நடக்குற ஒம்மோட எவ வருவா அப்டீன்னா. அதோட நா கூத்து கட்டுறது அவளுக்கு புடிக்கல. சாடைமாடையா சொல்லியும் நா கேக்கல. அப்பறம் ஒருநாள் வெளிச்சமா வெளக்குனா.

    வேசங்கட்டி நீ கொண்டாற காசவச்சு எம்பொறத்தக் கழுவறதா ? கூத்துக்கருமத்தையெல்லாம் உட்ரு. எங்கப்பாருகிட்ட சொல்லி கொஞ்சம் நெலம் வாங்கியாறேன். பாடுபட்டு கெடக்கலாம்னா.

    அன்னிக்கித்தான் அவள மொதவாச்சி அடிச்சேன். அன்னிலயிருந்துதாம் இந்தக்கருமத்தைக் குடிக்க ஆரம்பிச்சேன். அதும்பொறவு நெதம் சண்ட சச்சரவு”

    பஸ் பைப்பாஸில் எங்கோ ஓரிடத்தில் நிற்க சண்முகம் இறங்கி மூத்திரம்பெய்துவிட்டு டீ குடித்தான். மறுபடி பஸ் ஏறியபோது அப்பா வந்து மனதில் உட்கார்ந்துகொண்டார்.

    ஒருமுறை சினிமாவில் வாய்ப்புவந்தது அவருக்கு. அப்பாவுடன் சண்முகமும் சென்றிருந்தான். வியர்த்துப்பூத்த முகத்துடன் ஒரே வசனத்தை திரும்பத்திரும்ப சொல்லவைத்துக்கொண்டிருந்தார்கள். ‘இந்தாளு தேறமாட்டான்’ என்று யாரோ யாரிடமோ அப்பாவைக்காட்டி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    ஒருநாள் திடீரென்று சண்முகத்தை அழைத்து பேசத்தொடங்கினார்.

    “நீ பொறந்தப்ப ஆஸ்வத்திரிக்கி பார்க்க வந்தேன். அவ எங்கூட பேசவேயில்ல. அவ ஆத்தாக்காரி என்னமோ சொல்லிப்பார்த்தா. அவ ஒரே முடிவா சொல்லிப்புட்டா.  ஒங்கூத்துப்பொழப்ப உட்டுட்டு வந்தா வா இல்லாட்டி ஒஞ்சோலியப்பாருன்னு. பச்ச ஒடம்புன்னு பாக்காம உட்டம்பாரு கட்டுலோட ஒரு ஒத. அவ அப்பங்காரன் வந்து என்னிய சட்டயக்கோர்த்து வெளிய தள்ளலைன்னா அன்னிக்கே ஒங்கம்மா செத்துருப்பா.

    கொஞ்சநாள் பொறவு ஒருநாள் அவ அப்பனாத்தாளும் கொஞ்சம் ஒறவுக்காரங்களும் வந்து பஞ்சாயத்து பேசுனாங்க. நான் உறுதியா சொல்லிப்புட்டேன். இது எங்கொலத்தொழிலு. இத்தோட இருக்குறதுன்னா வந்து இருக்கட்டும்னு. அவளும் வந்து கொஞ்சநாள் நல்லாத்தான் இருந்தா. அப்பறம் பழயபடிக்கு ஆரம்பிச்சா.

    அப்டித்தான் ஒருநாளு கூத்து முடிஞ்சு ஊட்டுக்கு வரேன் ஆளக்காணோம். பக்கத்தூட்ல இருந்து ஒன்னிய தூக்கிக்கிட்டு ஊரெல்லாம் தேடுறேன் இல்ல. அவ ஊருக்குபோயி பார்த்தா அங்கயும் தாக்கலில்ல. அப்டியே ஒரு மாசம்போச்சு. நம்மூரு மணியக்காரருதான் ஒருநா வந்து சொன்னாரு. பக்கத்தூரு மைனரு வூட்ல வெப்பாட்டியா கெடந்தாளாம் ஒங்கம்மா.

    மணியக்காரரும் என்னென்னவோ எடுத்துச் சொல்லிருக்காப்ள. அவ அசரவே இல்லியாம். வரவே மாட்டமின்னு சொல்லிட்டாளாம். நானும் போவல”

    சண்முகத்திற்கு படிப்பு நன்றாக வந்தது. முடித்தபிறகு அப்பாதான் எங்கெங்கோ அலைந்து சிபாரிசு பிடித்து சர்க்கார் வேலைவாங்கிக்கொடுத்தார். உடல்நிலை நன்றாக இருந்தவரை கூத்துக்குச் சென்றார்.

    “ஒனக்கு எம்மேல எதுவும் கோவமிருக்கா சம்முவம்”?

    “எதுக்குங்கப்பா”?

    “ஒன் கண்ணுலியே வேசங்கட்ற ஆசையப்பார்க்கமுடியுது தம்பு. ஆனா இது ஒரு சாபப்பொழப்புய்யா. ஒருத்தன் சும்மாவாச்சும் இதய செஞ்சிரமுடியாது. உசுரா நெனச்சு எறங்கினாத்தான் இதுல சரிப்படும். என்னமோ ஒனக்கு இது வேனாமுன்னு எம்மனசுல விளுந்துருச்சி. அதான் ஒன்னிய கடசிவரை உள்ள இழுக்கல்லே”

    “இல்லங்கப்பா. எனக்கும் ஆசயிருந்துச்சி. ஆனா ஒம்பவிசு எனக்கு வராதுன்னு தெரிஞ்சபொறவுதான் தெளிஞ்சிகிட்டேன். எங்கப்பாரு எனக்கு நல்லதுதாம் செய்துருக்கீங்க”

    “இல்ல சம்முவம். நா செஞ்சதுலாம் தப்புத்தான். நாலுபேரு பாராட்டுற கெறக்கம் இருக்குபாரு. அது என்னவேனா செய்யும் நம்மள. என்னிய அப்புடித்தான் கவுத்துவிட்டுருச்சி. நாலு பாட்டிலு குடிச்சமாதிரி ஒரு மெதப்பு. ‘ஸ்தீரிபார்ட் சின்னையனா பிரமாதமான கூத்தாடியாச்சே’ அப்டீன்னு நாலுபேரு சொல்லுறப்ப வர வெறி இருக்குபாரு. அது பொம்பள சொகத்தவிட பெருசா இருக்கும்”

    “நா ஒங்கள ஒன்னு கேக்கவாப்பா”?

    “கேளுய்யா”…

    “அம்மாமேல ஒங்களுக்கு கோவமே வர்லியா”?

    அருகிலிருந்த புல்லைப் பிடுங்கி கொஞ்சநேரம் கடித்துக்கொண்டு யோசித்தார்.

    “அவ செஞ்சதுல தப்பு எதுவுமில்ல தம்பு. ஒரு புருசனா எங்கிட்டதாம் தப்பு. அவள சந்தோசமா வச்சுக்கல. எப்பமும் கூத்து வேசமுன்னே சுத்திக்கிட்டிருந்தேன். சோறு செய்யாதப்போதான் அவ நெனப்பும் அவமேல கோவமும் வரும். ஒன்னக்கூட வுட்டுட்டுபோவும்படி அவள வாட்டிருக்குறேன் பாரு. எந்தப்புதான் எல்லாம்”

    “இல்லங்கப்பா. நீங்க என்ன சொன்னாலும் அம்மா செஞ்சது ஏத்துக்க முடியாது. நா அவள என்ன செஞ்சேன்”?

    அப்பா சிரித்தார். கண்னில் நீர்வரச்சிரித்தார்.

    “நீ எங்கூடவே நெழலு மாதிரி இருந்துட்ட சம்முவம். அதுங்கூட நாஞ்செஞ்ச தப்புத்தான்”

    ஒருநாள் அளவிற்கதிகமாக குடித்துவிட்டு வந்தார். சண்முகம் அவர் குடிப்பதைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. ஆனால அன்று மிதமிஞ்சிய போதை. இடுப்புத்துணிகூட நிற்காதபடி. என்னென்னவோ புலம்பினார். சிரித்தார். அழுதார். சுவற்றில் தலையை முட்டிக்கொண்டார்.

    மறுநாள் காலை சாதாரணமாக சங்கதி சொன்னார். அம்மா இறந்துபோய்விட்டாளாம். எத்தனை மோசமான உயிரென்றாலும் இறந்தபிறகு வெறுக்கமுடியாதுபோல. சண்முகம் மறுத்துவிட அவர்மட்டும் சென்று காடுவரை வழியனுப்பிவிட்டு வந்தார். அன்றுதாம் அரவான் கூத்தாடி பக்கவாதத்தில் விழுந்தது. அம்மா இறந்தது அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்துவிட்டது.

    வாழ்வின் போக்குகளைபற்றி எத்தனை யோசித்தும் குழப்பம்தான் மிஞ்சியது சண்முகத்திற்கு. அப்பா கூத்துக்கட்டுவதை விட்டிருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். அம்மாவிற்கும் கூத்திலோ அப்பாமேலோ விருப்பமிருந்திருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். கடைசிகாலத்தில் அப்பா குழறலாக சொன்னதெல்லாம் ஒன்றுதான்.

    ஒலகத்துல எல்லாத்தையும்விட மனுஷங்கதான் முக்கியம் சம்முவம். அதுங்களை கூட வச்சுக்கத்தான் வாழ்க்கை. அதுங்களுக்கு புடிசமாதிரி இருந்து சந்தோசமா வச்சுக்கத்தான் போராட்டம். கூட இருக்குறவன் அழுதா என்ன செத்தா என்னன்னு இருக்குறதுல மனுசனாப்பொறந்து பலனில்ல.

    வீட்டிற்குள் நுழைந்தபோது பிள்ளை தூங்கிக்கொண்டிருந்தான். நைட்டியில் சோம்பல் முறித்த மனைவியிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். காலை எழுந்ததுமே மகன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆட்டம்போட்டான். அவன் ஸ்கூலுக்குச்சென்றபின்பு மனைவி அந்த போட்டோவைக் கொண்டுவந்து காட்டினாள்.

    மகனின் ஸ்கூல் மாறுவேடப்போட்டியில் எடுக்கப்பட்ட போட்டோ. தெர்மாக்கோல் கதாயுதத்துடன் கர்ணன் வேஷத்தில் மகன் சிரித்தபடி நின்றிருந்தான்.

    Share
  • பரிசம் போட வாரேன்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    ஒத்தக்கடைக்குப்போற
    நேர்மண்ணுபாதப் போல – ஏ(என்)
    அத்தமக மேல என்னோட
    கண்ணு பார்வ தானே

    கோயிலுக்கு நேந்துகிட்டு
    கட்டிவச்சக் காசபோல
    அவ நெனப்பத்தானே
    நெஞ்சுக்குள்ளக்
    கட்டிவச்சேன் பாசத்தால

    வெறும் ஆசையெல்லாம்
    அவமேல இல்ல
    உயிர் நேசமெல்லாம் அவமேல
    நான் என்னத்தச் சொல்ல

    வேசமெல்லாம் போட்டதில்ல
    பாசாங்கும் செஞ்சதில்ல
    நெசமெல்லாம் பேசுறேனே
    பாசமாகப் பாக்குறேனே
    நேசமுள்ள அவகிட்டதானே

    ஆத்தங்கர மேட்டுலையும்
    மஞ்சக்கிழங்கு காட்டுலயும்
    ஒதுங்கி நாம பேசவேணாம்
    உரிமையுள்ள மச்சாங்கிட்ட
    வீட்டிலேயே பேசிடலாம் பசுங்கிளியே

    வருசம் கொஞ்சம் ஓடியாச்சு
    பரிசம் போடும் நாளுமாச்சு
    கரிசக்காட்டுக் குயிலுங்கூடப்
    பரிகாசம் காட்டிக் கூவியாச்சு
    மாரிமாசம் கழிஞ்சபின்னே
    மணமுடிக்க போறேன் உன்ன!

     

    Share
  • தமிழை வளர்த்திடுவோம்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    தமிழகத்தில் தமிழில் பேசத் தயக்கம் ஏனடா?
    தாய்மொழி உனக்குத் தமிழே தானடா
    தமிழில் உனக்கு இல்லாத அர்த்தங்கள் ஏதடா?
    தமிழைத் தவிர்த்து அன்னியமொழியின் ஆதிக்கம் அதிகம் ஏனடா?
    தமிழகத்திலேயே தமிழில்லையென்றால்
    தமிழ் வளர்வது ஏதடா?
    தமிழ்ச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த ஊரடா
    தமிழறிஞர் பலர் புகழ் வளர்த்த நாடடா
    தமிழகப் பள்ளிகளில் தமிழின் பாடது பெரும்பாடடா
    தமிழ்ப்பெயரெதுவும் பிள்ளைகளுக்கு இல்லையே அது ஏனடா?
    தமிழைப்படி என்றநிலை போனதடா
    தமிழையும்படி என்றே நிலையும் ஆனதடா
    தற்கால நிலையது மாறவேண்டுமடா
    தன்னிகரில்லாத் தமிழதை ஏற்றம்பெற வைப்போமடா!

     

    Share
  • மீள்

    ஹரீஷ் கண்பத்

    வண்டி சிக்னலில் நிற்கும் போது தான் யதேச்சையாக அந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன்.சிக்னல் தாண்டியதும் இரண்டாவது பில்டிங்காக வலப்புறம் இருந்தது. ஓரிரு முறைகள் நண்பனுடன் சென்றதுண்டு. தனியாகவெல்லாம் ஒரு நாளும் சென்றதில்லை.

    இன்றைக்கு ஏன் போகக் கூடாது? சட்டென்று தோன்றியது. சிக்னல் பச்சைக்கு மாற இன்னும் பல நொடிகள் இருந்தன.எதற்குப் போக வேண்டும்? இன்னொரு பக்கம் யோசனை. அங்கு போனாலாவது இரவில் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து தூங்க முடிந்தால்? சிக்னல் விழுந்து விட்டது. யோசனைகள் எல்லாவற்றையும் துடைத்துத் தள்ளியபடி ஒரு அட்ரினலின் அவசரம் எங்கிருந்தோ குதிக்க, நொடிப் பொழுதின் உந்துதலில் சட்டென்று வலப்புறம் இண்டிகேட்டரைப் போட்டு திருப்பினேன். வண்டி அந்த வளாகத்துக்குள் என்னை இழுத்துக் கொண்டு போனது.

    —————

    காபியை வாயில் வைத்ததும் தான் தெரிந்தது. சர்க்கரை போட மறந்து விட்டிருக்கிறாள்.இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. நானும் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை.. இப்போதைய சூழ்நிலையில் காபியில் போடும் சர்க்கரையைப் பற்றியெல்லாம் என்னால் யோசிக்க முடிகிறது என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சொல்லப் போனால் அசூயையாக இருந்தது.

    இருந்துமென்ன? மனதில் சிரமங்கள் நாவுக்குத் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? நாக்கு அது பாட்டுக்குத் தன் வேலையைச் செய்கிறது. எழுந்து சென்று சர்க்கரையைப் போட்டு கலக்கிக் கொண்டு வந்தேன்.

    ஆபீஸ் போக இன்னும் நேரமிருந்தது. தூக்கம் பிடிப்பதில்லை இப்போதெல்லாம். காலையிலேயே ஏதோ ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் என் தூக்கம் கலைந்து விடக் கூடாதென்று அப்பா அதை அவசரமாக எடுத்ததும் தெரிந்தே இருந்தது.இப்போதும் தொலைபேசி அழைப்பு. அப்பாவுடையது தான்.

    சட்டென்று ஓடி வந்து தொலைபேசியை எடுத்தவர் என்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அறைக்குள் ஒதுங்கினார். அடுத்த சில நிமிடங்களுக்கு ஒற்றைச் சொற்களில் அவர் பதிலிறுப்பது கேட்டது. “ம்… ஆமா.. என்ன பண்றது? விதி” போன்ற வார்த்தைகள். இந்த வயசில் இதையெல்லாம் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது  அவருக்கு.

    எனக்குத் தெரியக் கூடாது என் காதில் விழக் கூடாதென்று எவ்வளவு முன்னெச்சரிக்கைகள். ஆனால் எனக்குத் தெரிந்தே இருக்கிறதென்பது அவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தும் அந்தப் பாசாங்கு. பாவம் அவர்.

    உள்ளே நுழைந்ததும் ஏ சி சில்லிட்டது. வெளியே இருந்த கசகசப்புக்கு இதமாக இருந்தது. அமர்ந்தால் அமிழும் சோபாக்களை தவிர்த்து நடந்தேன். உயரமாய் இருக்கும் கூம்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்த மேடையின் அருகே சென்றேன். காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் ஏறி அமர்ந்தேன்.

    இசை அதிர்ந்தபடி இருந்தது. இடப் பக்கம் பார்த்தேன். டி வியில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டி சத்தம் மழிக்கப்பட்டு சைலண்ட் மோடில் ஓடிக் கொண்டிருந்தது.அந்தப் பையன் வந்து “ என்ன” என்பது போல் பார்த்தான். அப்படியென்றால் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

    “வோட்கா ஒரு லார்ஜ்”.

    “மிக்ஸிங்கு சார்?”

    “ ஸ்பிரைட்டோ செவன் அப்போ “

    “ஓகே சார்”

    “தம்பி….”

    “சார்?”

    “லெமன் கார்டியலும் கொண்டு வா”

    “சரிங்க சார். சைடிஷ் எதுனா ஆர்டர் பண்றீங்கனா இப்பவே சொல்லிடுங்க சார்”

    “எதுவும் வேணா. இதை மட்டும் கொண்டு வா போதும்.”

    அவன் அகன்றதும் டி வியைப் பார்த்தேன். எவனோ ஒருவன் க்ளீன் போல்டாகிக் கொண்டிருந்தான்.

    ————

    அம்மாவின் கஷ்டம் வேறு மாதிரி. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பவள் அப்படியே எதிர்மறையாய் மாறி விட்டாள்.

    அன்று நான் கண்கள் கலங்க “ இது பத்தி இனிமே பேச வேண்டாமேம்மா ப்ளீஸ்” என்று சொன்னது காரணமாக இருக்கக் கூடும். அதில் தெரிந்த கெஞ்சல் காரணமாக இருக்கக் கூடும். உள்ளுக்குள் வைத்துப் புழுங்குகிறாள்.

    மழை வரும் போலிருந்தால் வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு மாடித் துணிகளை நனையுமுன் எடுப்பது தான் சமயோசித இயல்பு. மழைக் கோப்பு கூட்டிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. கடைசி வரை மேலே நிமிர்ந்து பார்க்காமல் விட்டது முழுக்க முழுக்க என் தவறு தான்.

    இன்னமும் கூட எனக்கு சவிதாவின் மேல் கோபம் வர மறுக்கிறது. என் குணம் அப்படி. சவிதா சவிதா என்று நான் பிதற்றிக் கொண்டிருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் என்ன ஆவார்கள்? அதற்காக இதை யோசி இதை யோசிக்காதே என்று மனசுக்குக் கட்டளை போட நாம் என்ன மகாஞானியா?

    ——–

    பொதுவாக அவ்வளவாய்க் குடிப்பதில்லை. எப்போதாவது நண்பர்களுடன் சேரும் போது மட்டுமே.அதுவும் நண்பன் வீட்டில் நடக்கும் அல்லது இது மாதிரியான ஓரளவு நாகரிகமான பார்களில் நடக்கும். டாஸ்மாக் வாடை எனக்குப் பிடிக்காது. அதனால் குடிப்பது என்று ஆனால் இது மாதிரி ஏதாவது இடங்களில் தான்.

    அதற்கும் கூடத் தனியாய் வந்து ரசித்துக் குடிக்கும் அளவுக்கான அவசியமோ மனநிலையோ ஒரு போதும் இருந்ததில்லை. இன்றென்னவோ சட்டென்று ஒரு உந்துதல்.அந்த சம்பவம் நடந்ததிலிருந்து பெரும்பான்மை இரவுகள் எதற்கோவாய்த் தூக்கம் கெடுவதும் ஒரு காரணம். இதைக் குடித்தாலாவது தூக்கம் கிடைக்காதா என்ற நப்பாசை.

    இப்படியெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும், தனியே சென்று ஒரு நாளாவது குடிக்க வேண்டும் என்று ஆழ் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் போட்டு வைத்திருந்த ஆசை தான் இன்று என்னை உந்தியிருக்கிறதோ என்கிற யோசனையும் ஓடியது, அதற்கு என் இப்போதைய மன நிலையும் உறுதுணையாக இருந்து தொலைத்திருக்கிறது போல.

    யோசனைகளின் ஊடே ஒவ்வொரு கோப்பையாக மிக்சரும் சுண்டலுமாக என் முன் நிறைந்தது. கடைசியாக வோட்காவைக் கொண்டு வந்து வைத்தான்.மிக்ஸிங்குக்காக வைத்த குளிர்பான பாட்டிலைத் தொட்டேன். அதன் சில்லிப்பு சுரீர் என உறைத்தது.

    —–

    அன்றைக்கு நடந்ததை நினைக்கக் கூடாது என்று சொல்வது கூட அபத்தம் தான்.அவ்வளவு அமளியிலும் ஏன் ஏன் ஏன் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தது மனசு. எங்கேயாவது கண்களில் தட்டுப்பட்டு விட மாட்டாளா என்று அபத்தமாய்த் தேடித் திரிந்தது. தெளிவாய் எழுதி வைத்து விட்டுப் போனவளை எதிர்பார்த்தது மடத்தனம் என்று இப்போது உரைப்பது அப்போது உரைக்கவில்லை.

    கேள்விகள் கேட்பது எத்தனை சுலபமாய் இருக்கிறது மனிதர்களுக்கு? எத்தனையெத்தனை கேள்விகள்? புரட்டி எடுத்து வேரோடு பிடுங்கி வீசியெறிந்து மேலும் துவைத்துப் புண்ணாக்கும் கேள்விகள். அடர் வனத்தில் நுழைய நுழைய சூரிய வெளிச்சத்தைக் கொஞ்சங்கொஞ்சமாய்க் கிழித்து நம் மேல் படரும் பகலிருளின் கருமை போல் கொஞ்ச நஞ்சம் மனதில் இருக்கும் பிடிப்பையும் அசைத்துப் பார்க்கும் கேள்விகளின் இருள்,

    அதை விட அன்று மனதை அறுத்த விஷயம் அவ்வளவு சாப்பாடு வீண். யாரிடமாவது சொல்லி அதை ஏதேனும் சொல்லி அதை ஏதாவது செய்யச் சொல்ல்லாம் என்று துடித்தாலும் அன்றைய நிலையில் அதை விடப் பெரிய பிரச்னைகளைத் தான் நீ பார்க்க வேண்டும் என்று எல்லாரும் சொல்லாமல் சொல்லி விட்டார்கள். போனவள் போய் விட்டாள். அதற்கென்று சாப்பாட்டை வீணாக்குவானேன். எத்தனை லட்சங்கள். யாருடையதாய் இருந்தால் என்ன? ஆனால் இதை நான் அன்று சொல்லியிருந்தால் மூளை குழம்பி விட்டதென்றோ அல்பம் என்றோ சொல்லி இருப்பார்கள். அத்தனை உணவும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இன்று வரை மனம் ஆறவில்லை.

    ——–

    மெல்லக் குளிர்பான பாட்டிலைத் திறந்து வோட்காவில் அளவாக ஊற்றினேன். வோட்காவினுள் சிறிது சிறிதாகக் கலந்த குளிர்பானம் சிறு நுரையை உண்டு பண்ணியது. குமிழ்ந்து மேலே வந்தபடி இருந்தது அந்த அழுத்தமில்லாத வெண்ணிற நுரை.அது அடங்கும் வரை ஓரொரு வினாடிகள் ஊற்றுவதை நிறுத்தினேன்.

    “நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா?”

    “சேச்சே.. இல்லம்மா”

    “தேங்க் காட். எனக்கு அந்த ஸ்மெல்லே பிடிக்காது”

    “எனக்கும் தான்”

    “அதுசரி.. நீங்க ட்ரிங்க் பண்ணுவீங்களா. பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு சொன்னதெல்லாம் நான் அழிச்சிடறேன். இன்னிக்கு கரெக்டா சொல்லுங்க பாப்போம்”

    “அது….”

    “ம்ம்… சொல்லுங்க. பூனைக்குட்டி வெளிய வரட்டும்”

    “எப்பயாவதுமா. பிரண்ட்ஸோட சேர்ந்தா மட்டும்”

    “அதானே பார்த்தேன். இருக்கட்டும். உங்கள கல்யாணத்துக்கப்புறம் கவனிச்சுக்கறேன்”

    மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன். இதைச் சொன்னவள் தான் அந்த லெட்டரை எழுதினாளா? எப்படி? மீண்டும் ஊற்றி கிளாஸை நிறைத்தேன்.

    ——–

    அலுவலகம் கிளம்ப நேரமாகி விட்டது.  அலுவலகத்தில் எல்லாரிடமும் ஒரு செயற்கைத் தன்மை வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது என்னைப் பார்த்தாலே. நன்றாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று நாடகத் தனமாகப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் என் தலை கண்டாலே. எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாதென்று அளந்து அளந்து பேசுகிறார்கள். செய்யாத தப்புக்குத் தண்டனை.

    ஆனாலும் அந்த அலுவலகத்தில் தான் இரவு வரை சமாளிக்க வேண்டியிருக்கிறது. வேலை என்று பெரிதாக இல்லாத பொழுதுகளிலும் வீட்டிலிருக்கும் வெறுமையிலிருந்து ஓடி ஒளிய அலுவலகம் ஒரு கேடயம். ஏ சி ஓடிக் கொண்டிருக்கும் நாற்காலியும் கணினியும் தந்திருக்கும், வெளியே போ என்று சொல்லாத கேடயம்.

    ——

    சம்பந்தமே இல்லாமல், சம்பந்தமில்லாத இடத்தில் சவிதாவின் நினைவுகள். நினைவுகள் என்றால் அவள் கடிதமெழுதி வைத்து விட்டுப் போனது பற்றீயல்ல. அது தான் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறதே. இப்போதைய நினைவுகள் அவளுடனான இனிமையான தருணங்கள் பற்றி. கால நேரம் அறியாமல் மொபைலில் பேசிக் களித்துக் கிடந்தது பற்றி. அப்போதெல்லாம் அவள் மனதில் அவனைப் பற்றி ஓடிக் கொண்டிருந்திருக்குமா என்ற மனசின் கேள்வியை அவசரமாக ஒரு பக்கம் ஒதுக்கி திமிறத் திமிற மூடி வைத்தேன்.

    வோட்காவை இன்னும் குடிக்கவே இல்லை. அதற்கு முன்பே இப்படி. நான் லேசாகச் சிரித்ததை அந்த பையன் பார்த்து விட்டிருக்க வேண்டும். தானாகத் தனியாகச் சிரித்தால் எப்படிப் பார்ப்பார்களோ அப்படிப் பார்த்தான். சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.மீண்டும் சவிதா வந்து அமர்ந்து கொண்டாள்,

    ——

    அம்மாவும் அப்பாவும் நான் கிளம்பிய பிறகு இன்னும் எத்தனை பேர் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ? இது மாதிரி சமயங்களில் அடுத்தவர் மீது வாரி இறைப்பதற்கு மட்டும் எல்லாருக்கும் எங்கிருந்து சுரக்கின்றனவோ டன் டன்னாய் ஆறுதல் வார்த்தைகள். குப்பையைப் போல் எந்தத் தரம்பிரிப்பும் இல்லாமல் கேட்கிறவர்கள் மனநிலை என்ன என்று உணராமல் சொத சொதவென்று கொட்டப்படும் வெற்று வார்த்தைகள்.

    அவற்றையெல்லாம் சமாளிக்க தெரிந்தும் அம்மா அப்பாவை முன்னிறுத்திப் பின் மறைந்து கொண்டிருக்கிறேன். பரிதாபத்துக்குரிய மனிதன் அல்லது பொருள் அல்லது வஸ்து நான் தானென்பது எனக்கு மேலும் வசதியாகிப் போயி விட்டது. வெற்றுப் பேச்சு பேசுபவர்களை அடக்காமல் அம்மாவின் பின் ஒளிந்து கொண்டிருப்பதை நினைத்து என் மேல் எனக்கே அவமானம்.

    அக்கம் பக்கத்திலும் விசாரிக்கிறார்கள் என்று தெரியும். எத்தனை நாட்களுக்கு சலிக்காமல் ஒரே விஷயம் பற்றி விசாரித்தபடியே இருப்பார்கள் என்பது புரியவே இல்லை. இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. ஓயாமல் இப்படி விசாரிப்பதன் மூலம் இவர்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? என்ன மாதிரியான பதிலை எதிர்பார்க்கிறார்கள்? நினைக்க நினைக்க பெருமூச்சு தான் மிச்சம்.

    ஆண்கள் அழக் கூடாது என்னும் கிறுக்குத் தனமான பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கும் ஊரில் பிறந்து தொலைத்ததால் அழுவதைக் கூட இரவின் பிடியில் பெட்ஷீட்டின் அடியில் சப்தங்களைய்க் குறைத்துக் கொண்டு செய்ய வேண்டியிருந்தது.

    ———–

    வைப்ரேஷனில் வைத்திருந்த மொபைல் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். அம்மா. இந்த சப்தத்தில் பேச முடியாது. மெல்ல எழுந்து வெளியே வந்தேன்.”எங்கப்பா இருக்க?” குரலில் லேசான நடுக்கம்.இப்போதெல்லாம் வழக்கத்தை விடக் கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் பயப்படுகிறாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. நான் நடந்து கொள்வதும் அப்படித் தானே இருக்கிறது.

    “சொல்லும்மா. ஆபீஸ்ல இருந்து கிளம்பப் போறேன்.”

    “உனக்கு பிடிக்குமேன்னு சப்பாத்தியும் தால் ப்ரையும் பண்ணி வெச்சிருக்கேன். வீட்டுக்கு சாப்பிட வந்துடுவல்ல?” என்று கேட்டதில் லேசான தவிப்பு தெரிந்தது.

    சில நொடிகள் மௌனமாயிருந்தேன். இந்த சில நொடி மௌனம் நிச்சயம் அவள் துடிப்பை எகிறச் செய்திருக்கும் என்று தெரிந்தே மௌனமாயிருந்தேன்.

    பின் பெருமூச்சுடன் சொன்னேன். “ வந்துடறேன்மா. “

    “சரிப்பா வச்சிடறேன்” என்றவள் வைக்கவில்லை. சில நொடி கடந்ததும் “ சீக்கிரம் வந்துடுப்பா” என்றாள் தீனமான குரலில்.

    அதைக் கேட்காதது போல் இணைப்பைத் துண்டித்தேன்.

    ———-

    உள்ளே நுழைந்து மீண்டும் இருக்கையை அடைந்து அமர்ந்தேன். வோட்கா கிளாஸை உற்றுப் பார்த்தேன்.சலனமற்று அடியாழக் கடல் போல் அமைதியாயிருந்தது. சப்பாத்தியும் டால் ப்ரையும். மீண்டும் புன்னகைத்துக் கொண்டேன்.

    நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து அந்தப் பையனை அழைத்தேன். பில் கொண்டு வா” என்றேன்.

    “சுவைக்கப்படாத வோட்காவையும் என் முகத்தையும் சில நொடிகள் மாறி மாறிப் பார்த்தவன் சட்டென்று நகர்ந்தான்.சில நிமிஷங்கள் கழித்து பில்லை எடுத்து வந்து தந்தான். பில் தொகையுடன் கணிசமாய் ஒரு டிப்ஸ் தொகையும் வைத்தவனை அந்தப் பையன் மீண்டும் புதிராகப் பார்த்தான். உயர நாற்காலியில் இருந்து இறங்கி அவனை நோக்கிப் புன்னகைத்தேன். அவன் தோளைத் தட்டி விட்டு நகர்ந்தேன்.

    வெளியில் வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். சாலை அடைந்து வண்டி வேகம் எடுத்ததும் காற்றில் குளிர் கலந்திருப்பது தெரிந்தது. மழைக்கு முன்னான மண் வாசனை விரவியிருந்தது. வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு ஹெல்மெட் கண்ணாடியை விலக்கி விட்டு மேலே நிமிர்ந்து பார்த்தேன்.

    எனக்காக காத்திருந்த மழைத் துளியொன்று எங்கிருந்தோ வந்து பொட்டென்று என் நெற்றிப் பொட்டில் விழுந்தது. சிலிர்த்தது. மீண்டும் புன்னகைத்தபடி பைக்கை நகர்த்தத் துவங்கினேன்.

    Share
  • உழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்!

    விஜய குமார் விஜய்

    images

    உழைத்து உழைத்தே ஓடாய்போன
    காலம் கப்பலேறிப் போச்சே
    உழைப்புக்கேத்த கூலி எனும்
    நிலைமை மாறியாச்சே
    உழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்
    பிழைக்கும் வர்க்கமாச்சே
    உழைப்பை நம்பி தாழ்ந்த கூட்டம்
    ஏதும் இல்லாமல் போச்சே
    உழைப்பின் அருமை உணர்ந்தவர்
    வாழ்வில் வருமை ஓடிப்போச்சே
    உழைப்பவர் வாழ்வில் என்றும்
    சளைத்தவர் இல்லை என்பதாச்சே

    Share
  • காற்றில் மிதக்கும் சிறகு!

    -புலமி

    பூவிற்குள் மொட்டாய்ப்
    பூக்கும் வரமாய்
    உனக்குள்ளே காதலாய்க்                     siragu
    காத்திருக்கின்றேன்

    மேகத்துள் மழையாய்
    உருகும் நினைவாய்
    அருகாமையற்ற உறவாய்
    தேடித் தீர்கின்றேன்

    தென்றலுக்குள் இதமாய்
    உள்ளத்தில் கனவாய்
    உரிமையற்ற உணர்வாய்
    விழிகளில் துளிகளானாய்

    இரவிற்குப் பகலாய்
    நாளுக்கொரு நகர்தலாய்த்
    திசைகளாய்ப்  பிரிந்திருக்கும்
    வாழ்வின்
    ஒற்றைப் பயணம்
    எப்போதோ ?

     

    Share
  • ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து…

    -ரோஷான் .ஜிப்ரி, இலங்கை

    நெஞ்சுரங் கொண்டு நிலம் பற்றி
    நிமிர்ந்து நடந்தவன் நீள் துயிலில்
    அவனின் பிறப்பிலிருந்து மொழிபிரித்த
    வாழ்வின் கடைசிப் பக்கத்தை இன்று
    வாசித்து முடித்திருந்தது காலம்

    பரிச்சயங்களை மீறிய பரபரப்பாய்ப்
    பெரும் பரப்பைத் தன் பிடிக்குள் வைத்து
    கோலோச்சியவனால்
    மரணத்தை எதிர்கொள்ள முடியவில்லை
    அது வென்றுபோனது அவனை வீழ்த்தி
    இடுவம்புகளால் வளர்ந்த நெடு வாழை
    கொழுகொம்பு இன்றி குலை முறிந்து
    ஆறடிக்குள் அடங்கும் கூடாய் இந்நொடி

    ஒரு காலத்தில் குகைகள் ஏகி
    சிங்கத்தைக் கர்ஜித்து சீண்டிப் பார்த்தவன்
    இன்று ஈயை விரட்ட இயலா ஜடம்
    உருகி உருகிக் கரைந்தன அவனை சுற்றியிருந்த
    மலைகளும்,கூழாங்கற்களும்

    ஊர்க் குருவிகள் அவனால் நேர்ந்த கதிகளின்
    இலாப நஷ்டங்கள் பற்றிச் சிலாகித்தன
    பேசாதிருந்தவனும் தன்பங்குக்கு
    உடைந்து போய் நிற்கிறான் கால்மாட்டில்

    அவனின் கடைசிப் பக்கத்திலிருந்து
    முதலாவது, இரண்டாவது எனப்
    பின் குறிப்புகள் தலை நீட்ட
    நிசப்தம் கலைய வேண்டும் என்றே
    பிரளயம் முடுக்கி விடப் படுகின்றது

    அவன் உள்ளவரை
    தேவதூதர்களைப் போலும்,
    தாசில்தார்கள் போலும் இருந்தவர்கள்
    ஆனால்; இப்போது
    மேல் சொன்ன எதிலும் இல்லாத
    “கழிசடைகளாய்” வசைகளால் வாழ்த்த
    அவர்களின் முழுப் பக்கங்களும் விரிகின்றன
    சொத்தைப் பங்கிடும் பச்சா தாபங்களில்!

    ஏலவே தெரிந்திருப்பின்
    எப்போதோ அவன்
    இவர்களை விட்டும்
    இறந்திருக்கலாம்!!

     

    Share
  • ஆயிரம் முகங்கள் எனக்கு!

    -கவிஜி

    உயிர் சுமந்து
    திரியும்
    இடைவெளியற்ற
    மாற்றுச் சிந்தையில்
    மற்றுமோர்
    தீவுக்குள் தொலைவதைத் தவிர
    வழியில்லை…

    உடல் கொண்ட
    பலம் முழுக்க
    முதிர்ந்துபட்ட
    கல்லடிகள்தான்…

    உடைத்த கல்
    உன் விழிக்குள் தூசியாகும்
    உடைந்த கண்ணாடி
    ஆனாலும் ஆயிரம்
    முகங்கள் எனக்கு!

    அத்துமீறி நுழையும்
    காட்டுயானையைக் கேட்டு பார்…!
    அத்திசை சொல்லும்
    தாகம் – சுரண்டுபவள்
    நீ என்கும்…!

    பூக்கள் வியக்கும்
    பிணமாகி, கிடப்பதில்தான்
    பூர்த்தியாகிறது பயணம்
    பாதம் நக்கும்
    நாய் போல…!

    நீ இல்லாத தேசத்திலும்
    இனி நான் இருப்பேன்
    இருத்தல் உனைக் கடந்த
    என் சவத்தோடு!

     

    Share
  • வண்ணங்கள் தாண்டிய என் மொழியில்…!

    -கவிஜி

    உதிர்தலில்
    இளவேனில் முன்பனி…
    பகர்தலில்
    முதுவேனில் பின்பனி…
    காலம் சருகுகள்
    மிதிக்கிறது
    படாமல் படும்
    பாதங்களில்
    நான் மட்டும் கேட்கும்
    மெட்டிச் சத்தம்…

    துளியாய்த் தொலைந்த
    காட்டுக்குள்
    மரமாகி நிற்கிறது
    நினைவுகள்…!
    நிழல் மறையும்
    நேரங்களில்
    மீண்டும் மீண்டும்
    உயிர்த்தலே
    பெரும் சுவாசம்…!

    மூடு மந்திரக்
    கோட்பாட்டில்
    சித்திரமாகி நிறைகிறது
    உதிர்தலின் ஓர் இலை…!
    அது நானாகி
    யோசிக்கும் பிழையில்
    என் காட்சி
    வண்ணங்கள் தாண்டிய
    என் மொழியில்…!

     

    Share