எப்போது மலரும்?

-த.ரூபன், ஈச்சிலம்பற்றைமூதூர், இலங்கை

வாழ்வில் சுமைகளைச் சுமந்தோம்
எங்கள் வாழ்க்கையே போராட்டமாக மாறியது
அவலங்களைத் தாங்கியும்
குருவிகள் போலக் கூட்டமாகக் கூடுகட்டிச்
சுகமாக வாழ்ந்து வந்தோம்
உயிர்களைக் கையில் பிடித்தவண்ணம்
ஊரூராய் ஓலமிட்டோம்!

ஒரு நாடு கூட எட்டிப்பார்க்கவில்லை
சொந்தங்களை இழந்தோம்
உறவுகளை இழந்தோம்
இன்று அனாதையாக வீதியில் நிற்கின்றோம்!

யாரும் செய்யாத துன்பத்தை
நாம் செய்தோம் இல்லை
தமிழன் என்ற அடைமொழியால்
யாவரும் வஞ்சிக்கப்பட்டோம்!
துஞ்சியவன் புதைகுழியில் படுத்துறங்க
விஞ்சியவன் எங்களை எள்ளிநகையாடினான்!

அழுதோம் புரண்டோம் மாண்டோம்
எங்கள் அவலக்குரல் யாருக்கும்
கேட்கவில்லை…என்னதான் செய்தோம்?
கோயிலுக்குப் போனால் கோபுரங்கள்
சாய்ந்து விழும் வீதிக்கு போனால்
நடந்த தடம்கூட இல்லை!

எங்கள் விதியினை யார்இடமும் சொல்லி
யாரும் கரிசனை காட்டியதில்லை
கல்லாய் இருக்கும்தெய்வம்கூடக்
கண்ணை மூடிக்கொண்டு வாழ்கிறார்
தெய்வமே இப்படி என்றால்
எங்கள் கதிதான் என்ன நிலை…?

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க