-செண்பக ஜெகதீசன்

சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. (திருக்குறள் – 821: கூடா நட்பு)

புதுக் கவிதையில்…

நட்பு என்பது
நல்லிதயங்களால் வருவது…
உள்ளத்தால் அன்றிக்
கள்ளத்தால் புறத்தே
கொள்ளும் நட்பு,
அழிக்க உதவும்
ஆயுதங்களை
அடித்து உருவாக்கிடும்
பட்டடை போன்றதே…!

குறும்பாவில்…

உள்ளத்தாலன்றிப்
புறத்தே உருவாகும் நட்பும்,
ஆயுதங்களை அடித்தெடுக்கும்
பட்டடையும் ஒன்றே…!

மரபுக் கவிதையில்…

ஆக்கம் எதுவும் செய்யாமல்
அழிவைத் தந்திடும் ஆயுதத்தைத்
தாக்கி அடித்தே உருவாக்கத்
தரையில் கிடக்கும் பட்டடைதான்,
நோக்கம் நல்லதாய் இல்லாமல்
நெஞ்சில் நஞ்சை வைத்தேதான்
தாக்கம் உளத்தே தோன்றாத
தீய வெளிப்புற நட்பதுவே…!

லிமரைக்கூ...

பட்டடையது ஆயுதங்களைப் போட்டு அடிக்க,
அதுபோன்றாகும், இதயம் சேராமல்
நட்பில் புறத்தேமட்டும் மெய்போல் நடிக்க…!

கிராமிய பாணியில்…

நடிக்காத நடிக்காத
நட்புபோல நடிக்காத,
மனசுக்குள்ள கள்ளம்வச்சி
மனம்போல நடிக்காத…

மனசுமனசு ஒட்டாத
வெளிப்பொறத்து நட்பெல்லாம்,
அடிச்சித் தொவச்சி
ஆயுதஞ்செய்யும் பட்டடதான்
இரும்புப் பட்டடதான்..

அதால,
நடிக்காத நடிக்காத
நட்புபோல நடிக்காத…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.