Category: இசைக்கவியின் இதயம்

இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்

  • வள்ளுவருக்கு வணக்கம்

    இசைக்கவி ரமணன் thiruvalluvar

    கவலைக் கடலைக் கடியும் கனலாய்க்
    கவிதை சொன்னவன் பாரதி
    காதும் காதும் வைத்தாற் போலக்
    காவியம் செய்தவன் கம்பன்
    திவலைக் குள்ளே கடலைக் காட்டிய
    தெய்வப் புலவர் வள்ளுவர்
    திரிகோணத்தின் நடுமுற்றத்தே
    தேனகலாய்த் தமிழ் வளரும்!

    ஒருவா னத்திற் கொருகதிர் போதும்Kanyakumari
    உலகில் உயிர்கள் வாழும்
    ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்
    உயிரே ஒளிமய மாகும்
    திருவள்ளுவர் எனும் தீப மிலாமல்
    திசையை விழியறியாது
    வருவதை சென்றதை வந்ததை அவர்போல்
    வகுத்தவரே கிடையாது!

    அறமெனும் ஒருவழிப் பாதையில் நித்தம்
    அவர்கரம் பற்றி நடப்போம்
    அதன்முடி வில்நமை அழைக்கும் சத்திய
    ஒளியில் அனைத்தும் கடப்போம்
    இறப்பும் பிறப்பும் கவரிகள் வீச
    இங்கொரு முடிவைப் படைப்போம்
    இன்பம் துன்பம் என்று மயக்கும்
    இடர்களைத் தெருவில் உடைப்போம்!

     

     

     

    Share
  • உனக்கே உனக்காக – 2

    இசைக்கவி ரமணன்

    04_air

    எப்படி?

    எப்படி வந்தாய் உள்ளே?
    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க
    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க
    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி
    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

    எப்படி வந்தாய் உள்ளே?
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே
    போதுமென்று புன்னகைக்கிறாயா?
    கன்னம் மேவும் மின்னலினாலே
    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

    எப்படி? ம்…எப்படி?
    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்
    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு
    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க
    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

    எப்படி? வேறெப்படி? ம்..?
    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்
    காலைப் பிடித்து சாதித்தாயா?
    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?
    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?
    ஊஹூம்…
    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?
    சாவகாசமாக அமர்ந்து
    சாகடித்த கதைகளை வரிவரியாய்
    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?
    ஓ!
    முற்றும் என்னை முடித்துவிட்டு
    முகத்தில் அதென்ன கோணல்?
    ஆ!
    வந்திருக்கிறார்களாம்!
    வரவேற்கவில்லையாமாம்!!

    அழைத்தோ அழைக்காமலோ
    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்
    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்
    அத்துமீறி வந்தவர்களுக்கு
    ஆரத்தி கேட்கிறதா?
    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு
    திவ்யப் பிரபந்தமா?!

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்
    நெஞ்சைப் பிசைகிறது…

    சரி சரி
    அந்த அறையில்
    மேசையில் இருக்கும் என்
    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

    Share
  • வாழ்வாங்கு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    images (3)

    அன்புக் குழந்தைகளே!

    வணக்கம்!

    நன்றியுள்ள தந்தை வணங்குவதும் நன்றுதான்! ram1
    நல்லன்பில் வாழ்த்துவதும் வணங்குவதும் ஒன்றுதான்!
    என்வாழ்வில் பூரணத்தை எய்தியநாள் இன்றுதான்!
    எல்லோர்க்கும் என்போலே பிள்ளைவாய்த்தால் நன்றுதான்!

    ஏழைவீட்டுக் கூரையிலே சுரைக்கொடிதான் அலங்காரம்
    என்றிருந்த நாட்களிலே வந்து பிறந்தீர்! என்னை
    வாழவைக்கும் வளமாக வாசலிலே வரமாக
    வகைவகையாய்க் கண்முன்னே வளர்ந்து சிறந்தீர்!
    மோழையிலே மெளனத்தே மூச்சடக்கும் யோகியினை
    மூட்டைகொஞ்சம் தூக்கவைத்து முன்பு நடந்தீர்! உங்கள்
    வாழ்வையுங்கள் வழியில்சென்று வாழ்ந்துகாட்டுகின்ற போது
    வலியெல்லாம் சர்க்கரையாய் இனிக்க வைக்கிறீர்!

    நமதுகுணம் பிள்ளைகளின் சுமையாகும் என்னும்வார்த்தை
    நல்லவேளை பொய்க்கவைத்தீர் நன்றி நன்றி!!
    உமதுகுணம் மலரின்மணம் ஊறிவரும் நிலவின்நிறம்
    உம்மைப்பார்த்து வியக்கின்றேன் இன்றும் இன்றும்!!

    என்மகவாய் எப்படித்தான் வந்து பிறந்தீர்!ram2
    எந்தக்கடன் தீர்ப்பதற்காய் என்னை அடைந்தீர்!
    பொன்னிலவு பழங்குடிசை விரிசலின் வழியே
    புன்னகைத்தல் போலாநீர் என்னிடம் வந்தீர்?

    உம்மைவாழ்த்தும் முன்பு இந்த உலகை வாழ்த்துவேன்
    உள்ளத்தின் அடியிலிருந் தொன்று சொல்லுவேன்
    எம்மைப்போலப் பிள்ளைச்செல்வம் எவர்க்கும் வாய்க்கவே!
    எங்களைப்போல் எல்லோரும் இனிது வாழ்கவே!

    கண்முன்னே கதிரவனாய் நீங்கள் விரிக
    கமலம்போல் கண்டுகண்டு நாங்கள் மலர்க
    பண்ணிசைந்த கவிதைபோல் மனைவி மக்களும்
    பக்கத்தே அன்புசெய்யப் பரந்து வாழுக!

    ஆயிரமாய்ப் பிறைகளுடன் நூறு வசந்தம்
    ஆரோக்யம் ஆன்மபலம் ஆன்ற சாதனை
    தாயினும்சி றந்ததேசம் வாழ உழைத்து
    தந்தையோரம் கண்பனிக்கத் தழைத்து வாழ்கவே!

    ரமணன்

     

    Share
  • இங்கே எப்படி நீ?

     

    உனக்கே உனக்காக – 1

    tumblr_static_catch-a-dream-spirit-alchemy

    இடிந்து கிடக்கிறது கோயில்
    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே
    காரை பெயர்ந்து, ஒரு
    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்
    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து
    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி
    பொருத்தமற்ற இடத்தில்
    பூவும் அருவருப்பு

    இது மெளனமல்ல
    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்
    வாழ்வில்லாத நிசப்தம்

    அது சந்நிதியல்ல
    அது கடவுள் காலி செய்துவிட்ட,
    ஒரு
    மாறுதலையாவது தரும்
    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்
    ஆம்
    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்
    சித்திரிக்கப்படுகின்றன..

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்
    வெளவால்களின்
    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன
    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.
    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்
    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

    இங்கே..இங்கே!!
    எப்படி நீ? எதற்கு?
    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்
    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்
    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்
    எழுந்தருளியிருக்கிறாய்?.

    சொச்சமாய் இன்னும்
    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்
    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்
    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்
    ஒற்றைத் துளியின் உணர்வு
    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்
    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக
    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!
    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

    இல்லை, ஒருவேளை
    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்
    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்
    காதல் என்னும் பேதைமையைப்
    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?
    யாருக்கு?!

    முடிவில்லாத ஒரு முறிவு
    முயற்சியின்றிக் கிடக்கிறது
    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது
    எதையோ தூண்டுவதற்கு
    முதலொன்று வந்து
    முன்னே நிற்கிறது

    வெற்றிகாண முடியாத வெறுமையும்
    தோல்வியறியாத முழுமையும்
    எதிரெதிரே நிற்கின்றன
    என்ன நடக்கும் என்பது
    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்
    ஏறிவந்தாலாவது தெரியுமா?

     

    Share
  • நானும் நீயும்

    இசைக்கவி ரமணன்

    1303925-bigthumbnail
    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

     

    Share
  • நட்பு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    friendship_poster_by_dineshgreddy-d46z73p

    வாழ்க்கை என்பது உறவுகளின் கூடாரம். பெரும்பாலும் உறவுகளை நாம் அமைப்பதில்லை. உதாரணமாக,

    நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை,
    என் பிள்ளை எனைக்கேட்டுப் பிறந்தானா?

    என்று கண்ணதாசன் பாடுவதுபோல், பெற்றோர்களை நாம் நிச்சயிக்கிறோமா? பிள்ளைகள் என்னும் உறவை நாம் ஏற்பாடு செய்கிறோமா? நாம் பிறக்கும்போதே ஒரு பெரிய குடும்பத்தின் பலவிதமான உறவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன.

    சரி, திருமணம்? காதல் திருமணம் என்றாலும், பெற்றோர்கள் நிச்சயித்தாலும் கணவன் அல்லது மனைவி என்னும் உறவு ஓர் ஏற்பாடு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால், பெற்றோர்களோ, பிள்ளைகளோ, கணவனோ, மனைவியோ அமையவேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். ஏனென்றால், பெரும்பாலும் அந்த உறவுகள் நம் கையில் இல்லை. அவை நம்முடைய சாய்ஸ் இல்லை. எனவே, அவற்றை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது.

    ஆனால், நண்பர்கள் என்னும் உறவு அப்படிப்பட்டதல்ல. அது நாம், கவனமாக இருந்து அமைத்துக்கொள்ள வேண்டிய உறவாகும். எனவேதான், திருவள்ளுவர்,

    நாடாது நட்டலிற் கேடில்லை, நட்டபின்
    வீடில்லை நட்பாள்பவர்க்கு

    என்றார். ஆராயாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் தீங்கானது ஒன்றுமில்லை. ஏனென்றால், நட்பு என்பது ஏற்பட்டபின், அதிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார்.

    மற்ற உறவுகளுக்கும் நட்பு என்னும் உறவுக்கும் உள்ள வேறுபாடு, அதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்பதே.

    ஒற்றுமை என்ன? மற்ற உறவுகளைப் போலவே — அதாவது, பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி – போலவே, நட்பு என்னும் உறவிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார் வள்ளுவர். உறவுக்கு அவர் வழங்கும் மதிப்பு இதிலிருந்து புரிகிறது.

    திருமணம் என்னும் நிகழ்வு அந்நாளில் கைத்தலம் பற்றி அக்கினியை வலம்வருவதோடு முடிந்தது. அந்தக் கணத்திலிருந்து வாழ்க்கை தொடங்குகின்றது.

    நட்பும் அப்படித்தான். ராமனும், சுக்ரீவனும் நண்பர்களாகும்போது, அக்கினியை வலம் வந்தார்களாம்! இனி, நமது இன்பதுன்பங்கள் சமமானவை, நாம் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்னும் உறுதியை இருவரும் ஒருமித்து எடுத்துக்கொள்வது, திருமணத்திலும், நட்பிலும் அன்று இருந்தது என்ற சேதி நமக்கு முக்கியமானது.

    சரி, ஒரு நண்பன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதையும், எப்படிப்படவனாகத் தன் நண்பன் இருக்கிறான் என்பதையும் “கண்ணன் என் தோழன்” என்னும் பாட்டில் பாரதியார் நமக்கு நயம்பட விளக்குகிறார். நட்பு என்றால் என்னவென்பதைத் திருவள்ளுவரை விடவும் யாரும் திறம்படச் சொன்னதில்லை. இரண்டையும் சேர்த்துப் பார்ப்போம்:

    உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்tr3045_hand_of_friendship_poster
    ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்
    கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு
    காறி யுமிழ்ந்திடு வான்;

    நண்பன் என்பவன் நாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவன் அல்ல. நமக்கு எப்போதும் இதமான வார்த்தைகளையே சொல்லி நம்மை ஆதரிப்பவன் அல்ல. நாம் நம்முடைய மனிதனென்னும் நிலையிலிருந்து தவறிவிடாமலும், நாம் நம் மனித நிலையை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவுபவனே நண்பன்.

    நம்மில் பொய்யை அனுமதிக்காதவன்தான் நம் நண்பன். ஒரு பணக்கார வீட்டு இளைஞனைச் சுற்றி நின்று ஜால்ரா அடிப்பவர்கள் நண்பர்களே அல்ல. இதைத்தான் திருவள்ளுவர்,

    நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தற் பொருட்டு

    என்றார். சும்மா சிரித்துவிட்டுப் போவதல்ல நட்பு. இதை வள்ளுவரும் பாரதியும் எவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள்!

    விசாரணையின்றியே உடனே உதவ வருபவன் நண்பன். ஒரு துன்பம், ஆபத்து என்றால் அடுத்த கணமே ஓடிவந்து அங்கு நிற்பான் நண்பன்.

    ramஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.

    இதைவிடச் சிறந்த உவமையைச் சொல்ல முடியுமா? கட்டிய துணி அவிழ்ந்தால், அடுத்த கணமே நமது கை அதைச் சரிசெய்வது போல, நம்முடைய துன்பங்களை நீக்குபவன் நண்பன். அதற்குப் பெயர்தான் நட்பு.

    இதையே பாரதியார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்:

    கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
    கேலி பொறுத்திடுவான்; – எனை
    ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
    ஆறுதல் செய்திடு வான்; – என்றன்
    நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
    நான்சொல்லும் முன்னுணர் வான்;

    ”நான் சொல்லும் முன்னுணர்வான்” என்னும் வரியில் அடங்கியுள்ள ஆழத்தைக் கவனியுங்கள். ஒரு நல்ல நண்பனுக்கு விளக்கங்கள் தேவைப்படுவதில்லை. ஒருவன் நல்ல நண்பனாக இல்லாதபோது, எந்த விளக்கத்தாலும் பயனில்லை. இதுதான் நட்பின் அடையாளம். இதுதான் உறவின் நாகரிகம்.

    அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
    அரைநொடிக் குள்வரு வான்;
    மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
    வாழ்வினுக் கெங்கள்கண்ணன்

    A friend is one who is available for you the moment you need him! எவ்வளவு அழகு! நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்திற்கோ, திருமணத்திற்கோ, அல்லது வேலைக்குச் சேர்வதற்கோ சிறப்பான உடையணிந்து செல்கிறீர்கள். அப்போது, தெருவில் நடந்து செல்லும்போது மழை பொழிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கணத்தில், உங்கள் வாழ்க்கையிலேயே உங்களுக்கு மிகமிகத் தேவையானதாக நீங்கள் கருதக் கூடிய ஒரே பொருள் குடைதான் அல்லவா!! அது போலத்தான் பசி நேரத்து உணவு. அதுதான் நட்பு. அதைத் தருபவனே நண்பன்.

    சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இரண்டே கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.
    ஒன்று, நண்பர்களாவதற்கு ஒரே மாதிரியான ரசனைகள் தேவையில்லை; ஒரேவிதமான உணர்ச்சிகளே நல்ல நட்புக்கான வாய்ப்பை அமைக்கும் என்கிறார் திருவள்ளுவர்:

    புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்
    நட்பாம் கிழமை தரும்.

    இது மிகவும் ஆழமானதும் நுட்பமானதும் கூட. எனக்கும் உங்களுக்கும் இந்த உணவு பிடிக்கும், அந்த நடிகரைப் பிடிக்கும் என்பது நம்மிடையே நட்பு வளர்வதற்குக் காரணமாகாது. ஆனால், எனக்கும் உங்களுக்கும் இந்த தேசம் பிடிக்கும், மனிதர்களைப் பிடிக்கும், அவர்கள் நல்வாழ்வு பெறுவது பிடிக்கும் என்பன போன்ற உணர்ச்சிகள் நம்மிடையே நல்ல நட்பு அமைவதற்குக் காரணங்களாக அமையும்.

    ஆழமான நட்புக்கு ஆழமான உணர்ச்சிகளே காரணங்களாகின்றன.

    இரண்டாவது. கடவுளை வழிபட ஒன்பது விதமான பக்தியைக் குறிப்பிடுகிறார்கள். அதில் நட்பு மூலம் இறைவனை அடைவதை ஒரு பாதையாகவே வகுத்திருக்கிறார்கள். இந்த நட்புதான் இறைக்காதல், அதாவது, Divine Love, என்னும் தளத்திற்கு உயர்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த நிலையை எய்தியவர்களே. அவர்களுள்ளும் சுந்தரரும், திருமங்கையாழ்வாரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆண்டாளும் மீராவும், இறைவன் மீது கொண்ட நட்பைக் காதலாக்கி, ஒரு புதிய வழியையே படைத்தார்கள்.

    ஏன், இறைவனை நண்பனாகக் கருதுகிறோம் தெரியுமா? நண்பன் என்பவன் நமது மனசாட்சியின் வடிவம்! ஆம், நம்முடைய மனசாட்சிதான் வேட்டியோ, புடவையோ, ஜீன்சோ, லுங்கியோ அணிந்துகொண்டு நம் நண்பனாக எதிரே நிற்கிறது!

    யார், இறைவனுக்குத் தனது மனசாட்சியை ஆசனமாக அமைக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றவர்கள். அவர்களே அவனை அடைகிறார்கள்.

    எனவேதான், இறைவனிடம் நட்புக்கொள்வது என்னும் ஏற்பாடு அமைந்தது.

    நண்பர்களே! நட்பு என்பது வானம் போல. அது வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை. நட்பு வாழ்க!

    நலமே விளைக நமக்கு!

    Share
  • மறக்க முடியாத மதுரை – 5

    இசைக்கவி ரமணன்

    rama
    மதுரை டவுன் ஹால் ரோட்டைப் பார்க்காதவர்களுக்கு மனித வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ரயில்வே நிலையம் இருக்கும் சாலையில் உள்ள டவுன்ஹால் என்ற அரங்கில் துவங்கி, மீனாட்சி கோவிலின் மேலக்கோபுர வாசல் வரை செல்லும் இந்தச் சந்தை, சாலை என்பது ஆனாலும் ரொம்பத்தான் மிகை என்கிறவர்களுக்குச் சொல்லுவேன். சென்னையில் ‘பிராட்வே’ பார்த்திருக்கிறீர்களா? அறவே குறுகலான சந்துக்கு ஆங்கிலேயன் பெயர் வைத்தான் என்பதால் சரியாகி விடுமா?

    ra

    நான்மாடக் கூடலான மதுரையை மேலிருந்து பார்த்தால் அழகான சதுரம் புலப்படும். மீனாட்சி திருக்கோவில் மையம். உள்ளேயே ஆடிவீதி; பிறகு சித்திரை, மாசி, ஆவணி வீதிகள்; முடிவாய் வெளி வீதி. இவ்வளவுதான் அன்றைய மதுரை. அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்பக் கச்சிதமாக அமைக்கப்பட்ட அழகிய, சிறிய நகரம் மதுரை. ஆடி வீதியிலிருந்து வெளி வீதி வரை உள்ள அமைப்பில், பலப்பல சிறு வீதிகள் சிற்றோடைகளாய் நெளிந்து, திருக்கோவிலையே வந்தடையும். அமைக்கப்பட்ட இந்தப் பகுதியை விரிவுபடுத்த முடியாது. மேலும் நெருக்கலாம். இந்த நெருக்கலின் நிதர்சனமே டவுன் ஹால் ரோடு!

    ra1

    இரண்டு எட்டு எடுத்துவைத்தால் எதிர்ப்புறம் சென்று விடலாம். வைத்துத்தான் பாருங்களேன்! ஓரெட்டு வைக்கும் முன்னேயே, ஓரெட்டுப் பின்னுக்குத் தள்ளும் முரட்டுப் போக்குவரத்து! டவுன் ஹாலிலிருந்து மேலக்கோபுர வாசலை வந்தடையச் சில நிமிடங்களே போதும்! நடந்து பாருங்களேன்! அங்கங்கே அசைய முடியாதபடி நிற்கவைத்துவிடும் கூட்டம். அடிக்கடி, பச்சைக்குதிரை தாண்டுவோமா என்று தோன்றும் நெருக்கடி. அல்வாக் கடை, நேர்த்திக்கடன் ஊர்வலம், ‘வக்கப் பிரி’ சூதாட்டம், திரு சொக்கலிங்கத்தின் ‘விஜயா பதிப்பகம்’, ‘இஞ்சி’ என்ற சரக்கைச் சரளமாக விற்கும் வெற்றிலை பாக்குக் கடைகள், இந்து பத்திரிகையின் ஏஜெண்டான திரு ஜகன்னாதன் அவர்களின் அலுவலகம், அங்கே பலவிதமான சரித்திரத் தகவல்களைத் தேதிவாரியாகச் சொல்லும் சுந்தரராஜன், பழங்களைத் துவம்சம் செய்து கண்ணாடி டம்ளரில் வண்ணமயமாக விற்கப்படும் ‘மிக்சர்,’ விரட்டிக் கொண்டே இருக்கும் போக்குவரத்துக் காவல்துறை, அதற்கு மிரளாமல் விடாப்பிடியாய்க் குறுக்கே வண்டிகளை நிறுத்தும் முரட்டுக் குணம், ஊர்மீது கவிழ்ந்துகொண்டு உறுத்தித் துரத்தும் மதுரையின் பிரத்யேகமான வெய்யில், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் புதுச்சேலை, பட்டுவேட்டிச் சட்டை, கனத்த பாவாடை என்று நந்தவனத்து நிலவொளியில் பவனி வருவதுபோல வளைய வரும் மருதைக்காரர்கள், வண்டிவண்டியாய் வந்திறங்கும் வெளியூர்ப் பயணிகள், அவர்களை வாரி விழுங்கக் காத்திருக்கும் ‘கயிடு’கள், அவர்கள் பேசும் மதுரை இந்தி, மதுரை பெங்காலி, மதுரைத் தெலுங்கு, எல்லாவற்றையும் அசையாமல் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் காலத்தின் கோலமான மேலைக் கோபுரம், இதுதான் டவுன்ஹால் ரோடின் சுருக்கம்.

    சொட்டுத் தண்ணீர்கூடக் கலக்காமல், ஆரஞ்சுகளை அப்படியே ‘மிஷினி’ல் பிழிந்து கொடுப்பார் மாணிக்கம். சாட்டையின் கடைசித் துண்டை மீசையாக்கி வைத்திருப்பார்! அந்த மீசையின் துல்லியமான முனைகளுக்குப் பூர்த்தி தரும்படிக் குங்குமப் பொட்டு. அரைக்கைச் சட்டைதான். பாட்டுப் பாடுவதில் உற்சாகம். அவரது பாட்டும், பிழிதலும் பொருத்தமாகவே இருக்கும். எனக்குக் காமாலை கண்டபோது ஒவ்வொரு நாளும் அவரது கடையில்தான் ஆரஞ்சு ரசம் அருந்துவேன். ‘ச்சீனி வேண்டாம், குளுகோசு ச்சேத்துக்குவோம்,’ என்று எனக்காகப் பிறையில் தனியே வைத்திருப்பார். இயல்பாகவே இனிக்கும் பழரசத்தில், க்ளுகோஸ் சேர்த்தே கொடுப்பார். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. காமாலையை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மாணிக்கம்தான் எனக்குக் கனிவாகவும், கண்டிப்பாகவும் சொன்னார்: ‘தம்பி! கண்ணுல மஞ்சக் கட்டிருச்சி; வியாதியோடு வீம்பு பிடிக்கிறது வீரமாயிறாது; நமக்கு ஒண்ணுன்னா அது நமக்கு மட்டும் இல்ல தம்பி. நம்மச் சாந்தவங்களுக்குந்தேன்; நீங்க வயித்தியரப் பாக்காம சூஸைக் குடிச்சிட்டுத் திரியறதப் பாத்தாய்ங்கன்னா என்னபாடு படுவாய்ங்களோ! செவத்த வச்சித்தேன் சித்திரம்பாய்ங்க பெரியவய்ங்க. நீங்க மொத ஊரப்பாத்துப் போய்ச்சேருங்க. இனிமே சூஸு கொடுக்கமாட்டேன்; சொல்லிபுட்டேன்,” என்று க்ளுகோஸ் பாக்கெட்டைத் திருப்பித் தந்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

    உடனே புறப்பட்டு ஊருக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டேன். உடம்பு சரியாக ஒன்றரை மாதங்கள் பிடித்தன. இன்று நான் உயிரோடு இருப்பதற்கு, எந்த விதமான உறவுமில்லாமல், மாணிக்கம் சொன்ன அறிவுரையும் ஒரு காரணம் என்பதை, இந்த முறையும் நான் டவுன் ஹால் ரோட்டில் திரியும்போதும் நன்றியோடு நினைத்தேன்.

    மாணிக்கத்தைக் காணவில்லை. அவர், எங்கிருந்தாலும், யாருக்காவது, வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாய் ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டுதான் இருப்பார், பாடிக் கொண்டே, மீசையைப் பெருமையுடன், தடவாமல் பார்த்துக்கொண்டே!

    புகைப்படங்கள் : ரமணன்

    Share
  • மன்னி வீடுபோய்ச் சேர்ந்தாள்….

    இசைக்கவி ரமணன்

    அது அதிகாலை நேரம். ஒரு மூன்றரை மணி இருக்கும். நான் வாசல் அறையில், ஒரு சோபாவில் படுத்திருக்கிறேன். இயற்கை உபாதை. எழுந்து, பின்கட்டுக்குச் செல்லவேண்டும். செல்லும்போது, ஏதோ என்னை ஈர்த்ததாக உணர்ந்தேன். வலதுபக்கம் திரும்பினால், மீனாட்சி அம்மன் படம். ஒற்றைச் சுடர் குத்துவிளக்கு. அதன் எதிரே, ஒரு மனையில், ஊசிபோல், நேர்மையாளனின் நெஞ்சுபோல், சற்றும் வளையாமல் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கிறது. மூடிய விழிகள். இடதுபுறத் தோளில் புரளத் துடிக்கும் ஈரக் கூந்தல். பொடிசாய் ஒரு மூக்குத்தி, சுடர்போல் அல்லாமல் அடக்கமாக மின்னுகிறது. பண்டைக் காலத்துத் தவமுனியின் மனைவிபோல், தவம் செய்வோர்க்கு வரம் அருளும் அம்பிகை போல், உடலைச் சுற்றி ஒரு மென்மையான ரோஜா நிறம் கலந்த வெண்மை ஒளியோடு உட்கார்ந்திருக்கிறாள் மன்னி.

    மதுரையில் நான் தனியே இருந்தபோதும், எனக்குத் திருமணம் ஆன பிறகும், மன்னியின் தல்லா குள வீட்டிலும், பிறகு “க்ருபா சித்தம்” என்னும் விஸ்வனாதபுரத்துச் சொந்த வீட்டிலும் நான் கழித்த பொழுதுகள் பொன்னானவை.

    aசுப்புலஷ்மி என்ற பெயர் எனக்குப் பிடிபடவே இல்லை. அவள், மன்னி. அப்படி அவளை அழைப்பதுதான் அழகு, முறை. கொடுமைக்கார சாவித்ரி அத்தையின் மூத்த மருமகள். கணவர் திரு. கிருஷ்ணமூர்த்தி. அவரை ஜகல் அத்தான் என்றால்தான் எங்களுக்குப் புரியும். அவரும் என் அப்பாவும் அந்தரங்க சிநேகிதர்கள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். சாந்தி, லலிதா, சுந்தர்.

    மன்னிக்கு, எவர் மூலமாகவும், எதன் மூலமாகவும் இறைவனைப் பற்றிச் சிந்திப்பதிலும், பேசுவதிலும், கேட்பதிலும்தான் வாழ்க்கையின் தலையாய ருசியாக இருந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான ரசனைகள் உண்டு. மன்னிக்கு ஒரேயொரு ரசனைதான். இறைவன்! இந்த தெய்வ ரஸம் அவளுடைய ஊனினை உருக்கி உள்ளொளியைப் பெருக்கி இருந்தது. அவளைப் பார்த்தால், இவள் சாப்பிடுவாளா என்பதே சந்தேகமாக இருந்தது. சுவாசத்தைத் தவிர அந்த தெய்வக் கூட்டில் வேறெதும் இல்லை என்றே தோன்றியது. கொஞ்சூண்டு சாப்பிடுவாள்; ஆனால், அதை ரசித்து ரசித்து, அதை வழங்கிய கடவுளை நன்றியோடு நினைந்து நெகிழ்ந்து, போதுமென்று நிறுத்தித் தண்ணீர் குடித்துவிடுவாள்.

    அவள் என்ன செய்தாலும், அது தெய்வமே செய்தது போல அவ்வளவு நேர்த்தியாகவும், தூய்மையாகவும், உயர்ந்த ரசனை மிக்கதாகவும் இருக்கும். மாவடு போடுவாள். ரெண்டு வருஷத்துப் பழைய வடுவும் கடுக்கென்று இருக்கும். அல்வா கிண்டுவாள். அமிழ்தக் கோப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அமரர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வருவார்கள். இதைவிட இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னும்படிச் செய்வதுதான் அவள் இயல்பு. ‘செய்கையில் நேர்த்தியே யோகம்.’ ‘செய்வன திருந்தச் செய்.’ இந்த வாக்கியங்களுக்கு முழு உதாரணம் மன்னி.

    இந்த ரசனையின் சாரம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும் இயல்பாக இறங்கி இருந்ததை நான் அனுபவித்திருக்கிறேன். சாந்தியின் நாட்டியம். ஆட மாட்டாள், அபிநயிப்பாள். மிதப்பாள். நகர்வாள். ஒரு மாலை நேரத்து மரத்தடியில், அவள் “கிருஷ்ணா நீ பேகனே பாரோ!” என்னும் பாடலுக்கு அபிநயம் செய்ததை என் அக்காக்களோடு சேர்ந்து நான் வியந்து பார்த்தேன். கோலக் குழலுடன் நீல நிறத்துக் கண்ணன் அவளை அன்புடன், கொஞ்சம் பனித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை, அப்போது நான் குழந்தையாகவே இருந்ததால் என்னால் உணர முடிந்தது. ஒரு பிறந்த நாள் வாழ்த்தென்றால், பட்டுத் துணியில், அழகான கையெழுத்தில், ஆத்மார்த்தமான கவிதை வரிகளை எழுதி, அதைச் சன்னமான குரலில் வாசித்து, மகிழ்ந்து பரிசளிப்பாள்.

    அவளுடைய தங்கை துர்கா என்னும் லலிதாவின் படிப்புக்கு அளவே கிடையாது. மதுரை டாக்டர் எஸ். ராமகிருஷ்ணனின் செல்ல மாணவி.

    சுந்தர் பெருங்குரலோன். கடும் உழைப்பாளி. தேசியம், மார்க்சியம், பெளதிகம் எல்லாம் அத்துப்படி. மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவன். பெங்களூர் டாடா இன்ஸ்டிட்யூடில் சூப்பர் கண்டக்டிவிடிக்காக பி.ஹெச்.டி. எடுக்க முயன்று, பிறகு அதைக் கைவிட்டு, அமெரிக்காவில் குழந்தைகள் கொண்டாடும் ஆசிரியனாக விளங்குகிறான். அவன், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்துக்கொண்டிருந்தபோது, வெள்ளம் வந்தது. படகில் போய்ப் பலரையும் மீட்டிருக்கிறான். அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது என்று, பெங்களூரிலிருந்து சைக்கிளில் மதுரைக்கு வந்தவன் அவன்!

    மன்னிக்கு எல்லாவற்றுக்கும் எப்போதும் நேரம் இருந்தது. தண்ணீர் பிடிப்பது, சமையல் செய்வது, ஊறுகாய் போடுவது, தியானம் செய்வது, படிப்பது, கேட்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, கோயிலுக்குத் தவறாமல் செல்வது, விரும்பி விரும்பி விருந்தினர்களை உபசரிப்பது, இன்னும் எத்தனை எத்தனையோ பணிகள். அவற்றைச் சுமையாகக் கருதாமல், சுவைத்துச் சுவைத்தே செய்தாள்.

    இவள், துன்பத்தை எப்படி எதிர்கொள்கிறாள் என்று சோதித்துப் பார்க்கத்தானோ என்னவோ, ஆண்டவன் அவளைப் பலவித சோதனைகளால் தாக்கினான். வங்கியில் நல்ல பதவியில் இருந்த கணவர், ஒரு வழக்கில் சிக்கி நிலையை இழந்தார்; அது பரவாயில்லை; கண் பார்வையை இழந்தார். சாந்தி, இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, கணவனால் கைவிடப்பட்டாள்; அவளும் கண்பார்வையை மெல்ல மெல்ல இழந்தாள்; இறுதியில் புற்று நோய்க்கு சமீபத்தில்தான் பலியானாள்; லலிதாவின் படிப்புக்கும் அழகுக்கும் வேலையும் கிடைக்காமல் விவாகமும் நடக்காமல் ஆண்டுகள் சென்றன. இவை போதாதென்று, மாமியாரான சாவித்ரி அத்தையின் கடும் வசவுகள்.

    ”மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி” என்று பாரதி சொன்னது போல, அத்தனை துன்பங்களுக்கும் மத்தியில், இனிமை குன்றாமல் இருந்தாள்; இறைவனை நாடிக்கொண்டே இருந்தாள்; இன்முகத்துடன், வருவோர்க்கெல்லாம் அமுதனைய உணவிட்டு மகிழ்ந்தாள். சுந்தரத்தின் மிருதங்க வாத்தியார், வகுப்பு முடிந்தவுடனேயே, “இன்னிக்குப் பக்க வாத்தியம் என்ன?” என்று விசாரிப்பார். சாதாரண இட்டிலியை, ஒரு மகாராணியாக உயர்த்திவிடும் மன்னியின் வியஞ்சனத் தோழிக் கூட்டம்! இன்று புகழ்பெற்று விளங்கும் திரு பிரணதார்த்திஹரன், மன்னி வீட்டில் அடிக்கடி ஆஜர்! எல்லாம் மன்னியின் கைவண்ணம்தான்!

    வெளியூரில் இருக்கும் சுந்தரத்திற்காக, மாதாமாதம் அவனுடைய நட்சத்திர நாளன்று, மீனாட்சி கோயிலுக்கு நடந்தே போய் அர்ச்சனை செய்வாள். அவன் நினைப்பு மேலிடும்போது, அவனுக்குப் பிடித்த இனிப்பு வகையைச் செய்வாள், நான் அன்றைக்கென்று பார்த்து அவள் வீட்டுக்குச் சென்று நிற்பேன். “எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?” என்று கிண்டல் செய்தபடி, நம்மைக் குளிப்பாட்டித் தூய்மை செய்யும் அன்புடன் அதை அள்ளி இடுவாள்.

    சுந்தரம் தோசை தின்ன உட்கார்ந்தால், ரெண்டடுப்பு; ரெட்டைக் கல். சத்தமே இல்லாத ஒரு பரபரப்பு அந்தச் சமையலறையில் நிலவும். ஒரு கட்டத்தில், மன்னி, “சுந்தரா! பாதி மாவு ஆயிடுத்துடா…” என்பாள் மெதுவாக. சுந்தரம் மிகவும் ஒத்தாசையாக, “கடைசி ஏழும்மா” என்பான். அப்படி ஒரு பதிலை நான் எங்கும் கேட்டதில்லை. அவன் சொன்னது சரிதான் என்று மகிழ்ந்த அப்படி ஒரு தாயையும் நான் எங்கும் கண்டதில்லை!

    என் மனைவியின் சீமந்த வளைகாப்பை அவள்தான் தன் வீட்டில் நடத்தினாள்.

    அவள் குறைப்பட்டுக்கொள்ள ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால், துன்பங்களைப் பரிசாகப் பணிவோடு ஏற்றுக்கொண்டு, ஆண்டவனை வெட்கப்படச் செய்தாள். என்னை ஒரு சகாவாகவே நடத்தி வளர்த்தாள். ஆம், நான் அவளால் வளர்க்கப்பட்டேன் என்பது மிகையல்ல. நான் அவளோடு கழித்த நேரம் கொஞ்சமாக இருந்திருக்கலாம். ஆனால் அதன் தரம், அதனால் என் மீது படிந்த தெய்வீகம் இதை நான் எப்போழுதும் நன்றியுடன் நினைப்பேன் மன்னி! இறுதிவரை, அவள் இறையனுபவத்தையே நாடி வாழ்ந்தாள்.

    என்னிடம் கடைசியாகப் பேசும்போதும், அவள் இதைத்தான் தெரிவித்தாள். “மன்னி! நீ பழுத்த பழம். அது உனக்குத் தெரியவில்லை. நீ சாகமாட்டாய் மன்னி! இறைவன் உன்னை மரியாதையோடு உனக்கு நோகாமல் இந்த உடம்பிலிருந்து உன்னை அழைத்துச் செல்வான். அதை நீ உணர்வாய்,” என்று நெஞ்சாரச் சொன்னேன். அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டு, கண்மல்க, “ரமணா!” என்று தொண்டை அடைக்க, என் கைகளில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். என்னால் தாங்க முடியவில்லை…

    துன்பத்தை ஒரு குறையாகக் கருதாத, சோதனைகளை ஒரு பொருட்டாக மதிக்காத, எத்தனை இடர்கள் வந்தாலும் இறைவனை இடைவிடாமல் நன்றியோடு நினைத்துக்கொண்டே இருந்த, உடல், உயிர். மனம் ஒருசேரக் கலந்து தினந்தினம் விருந்தினரை உபசரித்த, அதிர்ந்து ஒருவார்த்தை பேசாத, காதே கேளாத போதும், இலக்கியம், இறைவன் என்று நல்ல வார்த்தைகளைக் கேட்பதிலேயே ஆர்வம் கொண்ட, அன்பன்றி வேறேதும் அறியாத, உத்தமிகள் எத்தனை பேரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

    அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒருத்தியின் முழு அன்புக்குப் பாத்திரமானவன் நான்! மன்னியை யாரோடும் ஒப்பிட முடியாது. தன்னுடைய அறிவை அப்படியே புறந்தள்ளி முந்திவந்த அவளுடைய பணிவு, கடவுளைப் பதற வைத்திருக்கும்.

    அவள் விரும்பியபடியேதான் அவள் விடைபெற்றுச் சென்றுவிட்டாள். பீஷ்மரைப் போல, ரதசப்தமி நாளுக்காகக் காத்திருந்து, அன்பான மகனின் அருகாமையில், வலியின்றி வான்கலந்தாள். தேவர்கள் கண்ணீர் சிந்தினர். தெய்வம் சற்றே குற்ற உணர்வில் குமைந்தது. குடும்பத்திலிருந்து, கண்ணியத்தின் உருவாரமொன்று நீங்கிவிட்டது.

    வையம் ஒரு வரத்தை இழந்தது.

    சுந்தரா! அம்மா போய்ட்டாடா…

    நன்றி : அமுத சுரபி

    Share
  • நிற்கிறேனா? நடக்கிறேனா?

    இசைக்கவி ரமணன்

    Man-treadmill_cmyk_flat2-1024x682

     

    நின்ற இடத்தில்தான் நிற்கின்றேன்
    நில்லா தெங்கோ நடக்கின்றேன்
    என்றிக் கூத்து முடிந்திடுமோ?
    எப்படித் தானிது விடிந்திடுமோ?

    நெற்றியில் வியர்வை உயிர்க்கிறது
    நிலத்தை நனைக்கத் துடிக்கிறது
    வற்றிக் கிடந்த நெஞ்சத்தில்
    வயிரக் கனலொன் றெழுகிறது

    ஒரே இடத்தில் நின்றபடி
    ஓயா தெப்படி நடக்கின்றேன்?
    ஒரே இடத்தில் நடந்தபடி
    தொலைவை எவ்விதம் கடக்கின்றேன்?

    பாதம் விரைந்த காரணத்தால்
    பாதை விளைந்த நாள்போக
    பாதை கீழே விரைகிறது
    பாதம் அதனால் அசைகிறது

    பாதை நிற்கப் போகிறதா?
    பாதம் நிற்கப் போகிறதா?
    ஏதும் முடிவொன் றிதற்குண்டா?
    இதனைத் தான் தவம் என்கிறதா??!!

    31.05.2014 / சனிக்கிழமை / 09.55

    Share
  • மந்த்ராலயம்

    கே.ரவி

    1980-களில் இசைக்கவி ரமணன் எழுதிப் பாடி எங்கள் குழுவில் மிகப் பிரபலமான பாடல். பல்லவியில் ஹூங்காரமாக ஒரு ஹம்மிங்! அதற்கே வசப்பட்டு ஒரு போதையில் நாங்கள் எல்லாரும் அதையே ஹம் செய்து கொண்டிருப்போம். இந்தப் பாட்டும் என் இசையமைப்பில் (மெட்டு அப்படியே ரமணன் போட்டது. பின்னணி இசை மட்டும் எனது) அமரத்வனி இசைப்பேழையில் ராஜுவின் குரலில் பதிவானது. (அமரத்வனி பேழை 1987 ஆகஸ்ட் மாதம் ம்யூஸிக் அகடமியில் திருமதி ஹேமமாலினி முன்னிலையில் திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.)

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய பாடலை, கே.ரவியின் பின்னணி இசையில், ராஜகோபால் குரலில் இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam_new3.mp3

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய இதே பாடலை அவர் மகன் ஆனந்த் பாடுகிறார். அதனை இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam-Ananda.mp3

    ======================================

    என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம் – ம்ம்ம்ம்
    என்நேரமும் உன்நாமமே சங்கீர்த்தனம்images
    அந்தநாள் பாலைவனம் – உன்
    அன்பிலே ப்ருந்தாவனம் – என்
    அன்னை உன்னில் கனவும் நினைவும் துயிலும்
    (என்மனம்)
    பனித்த கண்கள் குவிந்த கைகள்
    பாதிக் கண்கள் திறந்த பண்கள்
    தனித்த வனத்தில் தாயைத் தேடும்
    மானைப் போல மருளும் நெஞ்சம்
    இனியும் பாதை தேடுவேனோ
    இமையை மறந்தும் மூடுவேனோ
    மலரைத் தேடிப் புலர்ந்த வானம்
    சரணம் சரணம் ராகவேந்த்ரம்

    நினைத்ததில்லை நெகிழ்ந்ததில்லை
    நீண்ட பாதை நடந்ததில்லை
    கனத்த நெஞ்சம் உனது பாதம்
    கனவில் கூடத் தொழுததில்லை
    கங்கையோடு பொங்கும் போது
    கண்கள் அழுத சுவடும் ஏது
    நான்விழுந்த கரையின் ஓரம்
    நாணலாகும் ராகவேந்த்ரம்
    (என்மனம்)

    (ரமணன்)

     

    கே.ரவி

    Share
  • மறக்க முடியாத மதுரை – 4

    இசைக்கவி ரமணன்

    புகைப்படம் : ரமணன்
    புகைப்படம் : ரமணன்

    isai2

    அந்த மூதாட்டியின் பெயர் எனக்குத் தெரியாது. அது யாருக்கும் அவசியம் இல்லை, அவள் உட்பட! எல்லோருக்கும் இட்டிலிக் கிழவி என்றல் தெரியும். ஒவ்வொர் இரவும் 10.30 மணிக்கு மேல், அழகர் கோவிலை நோக்கிச் செல்லும் அந்தச் சாலையில் சந்தடி அடங்கிய பிறகு, சந்தடியே இல்லாமல் தனது கடையை விரிப்பாள் பாட்டி. கடை என்றால் என்ன? அடுப்பு, இட்டிலிக் கொப்பரை, சட்டினிப் பாத்திரங்கள், ஒரு பெஞ்சு, உட்கார ஒரு ஸ்டூல். காசுபோட ஒரு மிட்டாய் டப்பா. முதலிலிருந்தே உடைந்தே இருக்கும் வாளியில் தண்ணீர். அவ்வளவுதான். ஒரு 11.30 மணிக்கு மேல்தான் களைகட்டும்.

    நான்தான் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் குடியிருந்தேனா? பத்திரிகையைக் கட்டிப் போடும் பயல்கள் சொல்லாமல் லீவு போட்டுவிட்டால், என்னை உரிமையோடு வந்து கூப்பிடுவார்கள். ‘இன்னக்கி ஆள்செட்டுக் கொஞ்சம் கொறவா இருக்கு; ஒருக்கா வந்தீகன்னா…’ என்று இழுப்பார் கோமதி நாயகம். உடனே, பேண்டை மாட்டிக் கொண்டு உற்சாகமாகப் போய்விடுவேன். எந்தக் கூட்டத்திலும் எளிதாய்க் கலந்துவிடுவது என்க்கு இயல்புதான் என்றாலும், கட்டைச் சம்பளத்திற்கு இரவும் பகலும் போராடும் இந்த உழைப்பாளிகள் கூட்டத்தில் எப்போதும் ஒருவனாகவே இருந்தேன் நான். பார்சல் கட்டுவது, பெரும்பாலோர் நினைக்கிற மாதிரிச் சுலபமான வேலை இல்லை. அதற்குப் படிப்பு வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு அறிவும், திறமையும் வேண்டும், அதைப் படிப்பு கொடுக்காது என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்! அதேபோல் வெவ்வேறு திசையில் புறப்படத் தயாராயிருக்கும் மூன்று வண்டிகளுக்கு உரிய கட்டுக்களைத் தயார் செய்ய, கடிகாரத்தில் கண்வைத்த படியே, உள் பார்சல், கடிதங்கள், உதிரி இணைப்புகள் இவை தவறாமல், ‘லேபிள்’ விடும் திறமை எந்த முதுகலைப் பட்டதாரியாலும் செய்யவே முடியாத ஒரு வேலை. அதற்கு அபூர்வத் திறமை வேண்டும். இதை, அந்தக் கல்லூரிக்குப் போகாத, பள்ளிப் படிப்பை முடிக்காத, தன்மானம் மிக்க, எப்போதும் சிரிக்கத் தெரிந்த உழைப்பாளிகளிடம்தான் கற்றுக் கொண்டேன். என் வியர்வைப் பெருக்கைப் பார்த்துவிட்டு, ‘ஒண்ணும் பதறாதீங்க’ என்று சிரித்தபடி உற்சாகம் ஊட்டுவார்கள். கன்வேயரில் இருந்து ‘அருப்பு’ எடுக்கும் பையனும், விறுவிறுவென்று வெற்றிலைக் கவுளி மாதிரி அதை எண்ணியெண்ணிப் போடும் பயல்களும், என் மீது கண்வைத்தபடியே தங்கள் காரியத்தைச் செய்வார்கள், புன்னகை மாறாமல். கற்றுக் குட்டிக்கு டால்ஃபின்கள் நீச்சல் கற்றுத் தருவதைப் போலிருக்கும். இந்த வேலையை நாம் செய்தால் தாமதமும், குழப்பமும்தான் மிஞ்சும் என்று சீக்கிரமே தெரிந்து கொண்டேன். ‘வாங்க, கட்டுவோம்,’ என்று கிண்டலில்லாமல் அழைப்பார்கள். கிழியாமல் ‘க்ராஃப்ட்’ பேப்பரை ஓங்கி அறையும் வித்தையையும், பிளேடு இல்லாமலேயே சணலை அறுக்கும் உத்தியையும் அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். ஆனால், பரபரவென்று பார்சலைக் கட்டுவதில் காலும், முதுகும் சோர்ந்து விடும். எனவே, நான் ‘லோடரா’னேன். எனக்கு எந்த ஊருக்கு, எந்த வண்டியில், என்னென்ன பார்சல்கள் போகின்றன என்பது அத்துப்படி. எனவே, இரண்டு கைகளிலும், இரண்டிரண்டு கட்டுக்களைத் தூக்கிச் சரியான வண்டியில் ஏற்றுவது எனக்குப் பிடித்திருந்தது. பயல்களுக்கும், எனக்கும் இதில் சுவாரசியமான போட்டி உண்டு! அவர்களிடத்தில் கட்டு மிஞ்சினால் நான் தோற்றேன். கட்டுக்காக நான் காத்திருந்தால் அவர்கள் தோற்றார்கள்! ஜெயிப்பது கணக்கில்லை, தோல்விதான் கணக்கு! அவர்களோடு சேர்ந்து உழைத்த ஒரே காரணத்தால் என் மீது அவர்களுக்கு அன்பு உண்டு. அன்பையும், மதிப்பையும் அவர்களால் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அதைத் தடாலடியாக வெளிப்படுத்தவும் தெரியாது. எல்லாம் புன்னகையும், ஒன்றிரண்டு வார்த்தைகளும்தான்! எனவே, எப்போதும் நாங்கள் இருவருமே வென்றோம்!

    நள்ளிரவு தாண்டி வெளியூர் பதிப்பு முடிந்து, மதுரைப் பதிப்பை அடிப்பதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் கிடைக்கும். பயல்கள் அப்போது ஓய்வெடுத்துக் கொள்வார்கள். பகலிலும் ஏதாவது வேலை செய்து வயிற்றைக் கழுவ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. இதில், சிலர் கல்வி கற்பார்கள்; தங்கைக்குத் திருமணத்திற்காகக் குருவி போலச் சேகரிப்பார்கள். மிகவும் சிரமமான வாழ்க்கை. ஆனால், மான உணர்ச்சி மிக்கவர்கள். அவர்களது கண்ணியம் இன்றும் என்னைச் சுடும்.

    ஏதோ யோசனையாக நின்றவனை, ‘வாய்யா போலாம்,’ என்று அழைப்பார் நந்தகுமார். அவர்தான் அச்சகத்தின் தலைவர். அவரது அம்பாசிடர் வண்டியில் ஒரு லாரியளவு ஆட்களை ஏற்றிக் கொண்டு நேரே கோரிப்பாளையம் இட்டிலிக் கிழவியிடம் விரைவார். பாட்டி, பதறாமல், அலுமினியத் தட்டில் இலைத் துண்டைப் பரப்பி ஒரு காரச் சட்டினி, ஒரு தேங்காய்ச் சட்டினியை ஊற்றுவாள். பிறகு, இட்டிலிக் கொப்பரையைத் திறப்பாள். ஆஹா! மோட்ச சாம்ராஜ்ஜியத்தின் மூடி திறந்தது போல், ஆவி, பலவித நளின உருவங்களாக வந்து நம்மை நெருடும்! கொப்பரையின் உள்ளே இட்டிலித் தட்டில், துணி மீது உருவாகி வெளிவரும் அந்த வெள்ளைத் தேவதைக்கு, என் போன்ற ஊர் சுற்றிகளின் ஒரே நம்பகமான துணைக்கு இணையாக ஒன்று இந்திர லோகத்திலும் கிடையாது!

    ‘பாட்டி! மிளகாய்ப் பொடி எங்க?’paniyaram-1

    “வக்கிறோமில்ல.” என்று சற்றே சினத்துடன் சொல்லித் திரும்பி, அப்போதுதான் என்னைப் பார்த்து, சற்றே சிரித்து, ‘வாங்கப்பு!’ என்பாள். கூடவே, பழைய ‘இஞ்செக்ஷன்’ பாட்டிலில் நல்லெண்ணெய்.

    ‘நல்ல எண்ணதானா பாட்டி?’

    “இந்தா! செக்கில ஆட்டுனதத்தேன் எடுத்துட்டு வர்றோமின்னு தெரியுமில்ல?”

    ‘சரி, இன்னும் கொஞ்சம் எடுத்துக்கவா?’ என்றபடியே இன்னொரு இஞ்செக்ஷன் பாட்டிலை எடுக்கப் போனால், ‘அடி ஆத்தி! இது என்ன?’ என்று இழுத்தாள் பாட்டி. ‘அட எக்ஸ்ட்ராவா காசு கொடுத்துர்றேன் பாட்டி!’ என்றேன். அதற்குப் பாட்டி,

    “ஒன் துட்டக் கொண்டுபோயி கம்மாயில போடு! ஆரு கேட்டா? மொறையில்லாம எண்ணயக் கவுத்துகிட்டா அப்புறம் சீக்குத்தான். எதிலியும் ஒரு அளவு இருக்கணும். அதுக்குச் சொன்னேன்.”

    என்ன அக்கறை? இங்கே, பண்பாட்டுக்கு, வியாபாரம் நிமித்தம்! தலையைச் சாய்த்துப் பாட்டியைப் பார்த்தேன். அவள் என் பார்வையைத் தவிர்த்தபடி, இன்னும் இரண்டு இட்டிலியைத் தட்டில் வைத்துவிட்டுத் தலைப்பால் வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். நந்தகுமார் சாப்பிடும் ஒன்றரை இட்டிலிக்கு அவருக்குச் சுற்றிலும் பத்துப்பேராவது இருக்க வேண்டும்! ஓரிருவர், பிளாட்பாரத்தில் சாப்பிடுவதாவது என்று சங்கடமாக ஒதுங்கி நிற்பார்கள். நாங்கள் கேலி பேசிக்கொண்டே வெளுத்துக் கட்டுவோம்! கச்சேரி, நல்ல பக்க வாத்தியத்தால்தான் களைகட்டும். அதுபோலத்தான் இந்த மல்லிகைப்பூ இட்டிலியும், சட்டினிகளும், பொடியும், எண்ணெய்யும். அகாலத்தில் கடுமையாக உழைத்த பிறகு வரும் பசிக்கும், இந்தப் பாட்டிக்கடை இட்டிலியின் ருசிக்கும் நிகரே கிடையாது.

    கச்சேரிக்கு முத்தாய்ப்பாய்ப் பக்கத்துக் கடை ‘விசாலம் காப்பி.’ மதுரையில், மீனாட்சிக்கு அடுத்தபடி அதுதான் எனக்குத் திருத்தலம்! மிகப் பெரிதாய்ப் பளபளவென்று தேய்த்து வைத்திருக்கும் ஃபில்டருக்கு, விபூதி, குங்குமம் வைத்திருப்பார்கள். நான் முதலில் சிவலிங்கம்தானோ என்று எண்ணிக் கன்னத்தில் போட்டுக்கொண்டதுண்டு!

    அற்புதமான காப்பி! வெளிநாடுகளில் ஊர் சுற்றும்போதெல்லாம் நான் மதுரையைக் கோபமாகத்தான் நினைவுகூர்வேன். அங்கெல்லாம் காப்பி, வாயில் வைக்க வழங்காது. ஏகப்பட்ட காப்பியை, வாயகன்ற காகிதக்குடுவையில் பற்றிக்கொண்டு, மணிக்கணக்காய்க் குடிப்பார்கள். அட, நம்மூரிலேயே ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சென்று காப்பி குடியுங்கள். கழுநீரே தேவலாம் என்றிருக்கும்! விசாலம் காப்பி, நாள்முழுதும் ஒரே ருசியாகவே இருக்கும். விளிம்பில் நுரைக்குமிழ்கள் கண்சிமிட்ட, ஆவி நாசியில் நுழைந்து மனதை மயக்க, சற்றே ஓசையுடன் உறிஞ்சினால் நெஞ்செல்லாம் இளஞ்சூடு பரவி, ருசியும், இதமும் சேர்ந்து நம்மை அப்படியே நிற்கவைத்து வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்ல, கடைசி வாயை அருந்தும்போது கொஞ்சம் துக்கமாகத்தான் இருக்கும்.

    ‘என்ன? சரியா சாப்டீரா? இல்ல வழக்கம் போல கத பண்ணீரா?’ என்பார் நந்து. ‘சார்! நல்லா வயிறுமுட்டத் தின்னேன் சார்,’ என்றால், ‘கிழிச்சீர்,’ என்றபடிக் காருக்குப் போவார். நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர் திருப்தி அடைவதில்லை!

    வரும்போது வந்து அதே ஆட்கள்தான், இப்போது காருக்குள் ஏறும்போது திணறுகிறது. எல்லாம், பாட்டியின் இட்டிலி மகிமை!

    Share
  • மறக்க முடியாத மதுரை – 3

    இசைக்கவி ரமணன்

    மதுரையில் கோரிபாளையம் மிகவும் சுவாரசியமான இடம். கே.கே. நகரிலிருந்து சைக்கிளில், சினிப்ரியா தியேட்டரைத் தாண்டி, வலதுபுறம் திரும்பி, வாய்க்கால் வழியாக அமைதியும், மரங்களும் கப்பிக் கிடக்கும் காந்தி நினைவாலயத்தைத் தாண்டி, வலது பக்கம், சந்தடியும், புழுதியும் மிகுந்த தமுக்கம் மைதானம் பக்கம் செல்லாமல், இடதுபுறம் திரும்பினால் கோரிபாளையம்தான். வைகை ஆற்றுக்கு அந்தப் புறம் இருப்பதால், இதை வடகரை என்றும் சொல்வார்கள்.

    நாம் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் செல்கிறோம். இரவு 12 மணிக்குமேல் இருக்கும். மதுரையில் நள்ளிரவு, நடுப்பகல் இவற்றுக்கு அதிகம் வேறுபாடு கிடையாது! பகலில் கொளுத்தும்; இரவில் பிழியப் பிழியப் புழுங்கும், அவ்வளவுதான்! ராஜ மாதங்கி அரசோச்சும் மதுரை ஒருபோதும் தூங்காது. ராத்திரியின் வசியப் போர்வையில் கட்டிடங்களும் களைத்திருக்கும் காட்சியை நான் உலகெங்கும் கண்டிருக்கிறேன், மதுரையைத் தவிர! மாடுகள் வாலசைத்தபடி, அசைபோட்டபடிப் படுத்திருக்கும். கண்கள், சாலை மற்றும் வாகன விளக்கொளியில், நெருப்புக் கங்குகள் போல் ஜொலிக்கும். கட்டை வண்டியில், ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அசந்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அசதியிலும் ஒரு கூச்சம் இழையோடுகிறது! மதுரை, மறவரின் வீரமண். இன்றைக்கும், கால்வைத்தாலே ஜிவ்வென்று ஏறுகிறது எனக்கு.

    நடு ராத்திரியில், கோரிப்பாளையத்தில் எனக்கென்ன வேலை? வேலைக்கு நடுவே ஓர் இடைவேளை! ஆம், அப்போது இந்து பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு மிகவருகே வீடு. வெற்றிலை துப்ப (புகையிலை என்று படிக்கவும்!) வெளியே வந்தால் வீட்டுக்காரி பார்த்து விடுவாள்! இன்றும் உற்ற நண்பர்களாகத் தொடரும் சக ஊழியர்கள், ஜன்னல் வழியே சைகையிலேயே சமையல் என்ன என்பதைக் கேட்டுக்கொண்டு விடுவார்கள். அலுவலகத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை அள்ளிக் கொண்டு வந்து விடுவார்கள்! அருகாமை, அணுக்கம் இரண்டும் சேர்ந்தே இருந்தன எங்கள் மதுரை வாழ்க்கையில்.

    எல்லோரும் தூங்கிவிட்ட பிறகு, படு சுறுசுறுப்பாய் இயங்குவதே பத்திரிகை அலுவலகம். இரவில்தான் அச்சுவேலை. இயந்திரம், மளமளவென்று அச்சிட, அந்தக் காதுபிளக்கும் ஓசைக்கு நடுவே ஊழியர்கள், பரபரப்பாகவும், உற்சாகமாகவும் வேலை செய்வதைப் பார்க்கும்போதே நமக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். ஆறு பிரிவுகளாக இருக்கும் இயந்திரம்; அடிக்கடி மாநில சுயாட்சி கேட்டு முரண்டு பிடிக்கும்; அதைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் உடனே சரிசெய்ய வேண்டும். பேச முடியாது. சீழ்க்கைதான் அச்சாலய மொழி. மைதோய்ந்த விரலை வாயில் வைத்துச் சீட்டியடித்தால் மறுநாள் தர்மாஸ்பத்திரிதான்! நாலு பேர் அடிக்கக் கூடிய சீழ்க்கையை ஒருவரே விரல்போடாமல் அடிப்பதைப் பத்திரிகை அச்சிடும் இடத்தில்தான் பார்க்கலாம். இந்தச் சைகைகளால்தான் தவறுகளை உடனே சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், பல நூறு பிரதிகள் வீணாகிவிடும். மறுநாள் தலைமை அலுவலகத்து சோடாபுட்டிக் கண்ணாடிக் கணக்கர்களுக்குப் பதில் சொல்வதற்குள் உயிரே போய்விடும். பழுதுபட்ட பிரதி ஏதேனும் வெளியே போய்விட்டால் இன்னோர் ஆபத்து; எங்கோ சத்திரப்பட்டி கிராமத்திலிருந்து எப்போதோ ஓய்வுபெற்ற ஒருவர் ஒரு தபால் கார்டில், ‘இதுதானா இந்து?’ என்ற தலைப்பில் சிற்றெறும்புக் கையெழுத்தில் கம்பராமாயணத்தை எழுதி அனுப்பிவிடுவார். பலமைல் தூரம் சைக்கிள் மிதித்து, வயக்காட்டில் அதைத்தள்ளிக் கொண்டுபோய் அவரது என்றைக்கும் கட்டி முடியாத வீட்டுக்குச் சென்று அவர் காலில் விழவேண்டும். இந்த மரியாதையை மிகவும் ரசித்த பிறகே அவர், ‘அடடா! நான் ஒண்ணுமே பெரிசா எழுதலீங்களே! இதுக்குப் போயா இத்தன தொலவு வருவீங்க?’ என்பார் அப்பாவிபோல! ‘இது எங்க கடமை’ என்று நாங்களும் சிவாஜி மாதிரிக் கனிவாகச் சொல்வோம். கூடவந்த ஏஜெண்டோ எரிச்சலோடு, ‘சார், இவுரு மூணு மாசமா சந்தாவே கொடுக்காம..பேச்சப் பாரு..’ என்று சில ‘பிரத்யேக’ அடைமொழிகளை முணுமுணுத்துவிட்டு நான் பக்கத்தில் இருப்பதைத் திடீரென்று உணர்ந்து வெட்கப்பட்டுத் தலையைச் சொறிந்து கொள்வார்! உள்ளே எங்களுக்குக் காப்பி கொடுக்க முடியுமா என்று பார்க்கப் போன வாசகர், தன் முயற்சியில் (நல்ல காலமாய்த்) தோற்றுத் திரும்புவார். அதை மறைத்துக் கொள்ள ஓர் ஏவு கணையை நம் மீது வீசுவார். ‘இன்டுல வரவர நீசஸ் (நியூஸ் என்பதற்கு இவரே பன்மை பாவித்து அதை நியூஸஸ் ஆக்கி அதை வக்கணையாக நீசஸ் என்கிறார்!) எல்லாம் ஒண்ணும் சரியா இல்ல. கொஞ்சம் பாத்துக்கிடணும்.’ அவர் எழுதிய அந்தக் கார்டோடு அவரையும் அப்படியே கிழித்துப் போடலாம் போலத் தோன்றும். ‘ஆகட்டுங்க, அவசியம்,’ என்று சொல்லி விட்டு வருவோம். ‘ஒங்களுக்கும் வேல இல்ல ஒங்க ஆபீசுக்கும் வேற வேல இல்ல,’ என்று சலித்துக் கொண்டே வருவார் சத்திரப்பட்டி சண்முகவேல்.

     ram1

    குடிசைகளால் நெருக்கப்பட்ட ஒரு சந்தில் சைக்கிளை ஒருமாதிரியாகத் தள்ளிக் கொண்டு வரும்போது, எதிரே கருப்பு மின்னலாய், அப்போதுதான் பிறந்திருந்த பன்றிக் குட்டி ஒன்றை நெஞ்சோடு அணைத்துக் கொஞ்சிக் கொண்டு துள்ளி வந்தாள் ஒருத்தி! அதுபோல் அழகான இளம்பெண்ணை இதுவரை நான் காணவில்லை! எனக்கென்னமோ பராசக்திதான் அந்தச் சேரிப்பெண்ணாக வந்து என் சித்தத்தை நிரந்தரமாகச் சீண்டிவிட்டுப் போனதாகவே தோன்றுகிறது. நிக்கல் போன்ற ஓர் உலோகத்தில் அவள் மூக்குப்பொட்டு அணிந்திருந்தாள். அது, மொத்தக் கருப்பையும் தூக்கலாய்க் காட்டியது. அந்தக் கருமையின் பளபளப்பும், மின்னற் பற்களும், சோழி குலுங்கும் சிரிப்பும், பேரழகின் ராஜாங்கத்திலிருந்து நான் பேதைபோல் அவளுக்குத் தென்பட்டதும் என்னால் என்றும் மறக்க முடியாது. தரிசனம் என்பது எங்கோ தியானத்திலோ, மலையுச்சிக் கோவிலிலோதான் நேரவேண்டியது என்பதில்லை. நெருக்கடியான சந்தில், நேருக்கு நேர் நேர்வதே தரிசனம்! நமது நிலையை மாற்றுவதில்லை தரிசனத்தின் நோக்கம். என்றும் மறக்க முடியாதபடி, நம் நிலையை நமக்குச் சொல்லிவிடுவதுதான் தரிசனத்தின் குசும்பு!

     unnamed

    அவள் கையில்பட்டு நெஞ்சில் குலவியதாலோ என்னமோ, பன்றிக் குட்டியைப் போல் அழகான ஜீவன் வேறெதுவுமே இருக்க முடியாது என்று தோன்றியது எனக்கு. இதை என்னோடு வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். கனமுடையாய் என் தந்தையாரிடம் இதைப்போய்ச் சொன்னேன். அவர், ‘ஆமாண்டா, குட்டியில எல்லாம் அழகாத்தான் இருக்கும். அட நீ கூடத்தான் கொழந்தயா இருக்கும்போது கொஞ்சம் பாக்கும்படியா இருந்தே!’ என்றாரே பார்க்கலாம்!

    அட, உங்களைக் கோரிப்பாளையத்தில் நிற்கவைத்துவிட்டு நான் பாட்டுக்குச் சத்திரப்பட்டிக்குப் போய்விட்டேனா? இதோ, ஒரே நிமிடம், வந்து விட்டேன்!

    புகைப்படங்கள் : ரமணன்

    Share
  • நிறைவே சாதனை

    இசைக்கவி ரமணன்

    டிசம்பர் 31. பொதுவாகவே குளுகுளுவென்றிருக்கும் கோவை, மார்கழி நள்ளிரவென்றால் எப்படி இருக்கும்? நடைபாதையில், தாயின் கர்ப்பத்தில் இருந்ததுபோல் உடம்பு ஒடுங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பிச்சைக்காரர். திடீரென்று ஒரு கதகதப்பை உணருகின்றார். குளிரில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால், யாரோ அவர்மீது கம்பளியைப் போர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்! முகம் தெரியாத அன்பு மனத்திற்குத் தன் தளர்ந்த கரங்களைக் கூப்பியபடி நன்றிசொல்லி நெகிழ்கிறார் நடைபாதைவாசி.

    அமாவாசை. அந்தப் பெரிய வீட்டின் பரந்த வாசற்பகுதி முழுவதும் ஏறாத்தாழ நூறு அந்தணர்கள், பெரும்பாலும் ஏழைகள், கூடியிருக்கிறார்கள். எங்கும், ஒரு தர்ப்பணம் செய்வதற்கு நூறுபேர் வருவதில்லை. பின்பு எதற்கு இத்தனை கூட்டம்? ஒரு கணவனும் மனைவியும் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வாரிவாரி அரிசி, வாழைக்காய், பணம் எல்லாம் அன்போடு வழங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பாலூற்றிய கஞ்சி, புழுக்கிய நேந்திரம்பழம் கொடுக்கிறார்கள். வயிறும் மனதும் நிறைந்து வீடு திரும்புகிறார்கள் அந்த ஏழைகள்.

    எல்லோரும் தாய்தந்தையர்க்குத்தான் பிறக்கிறோம். சிலர், இருப்பது தெரியாமல் இருந்து இறந்து சுமையாகிவிடுகிறார்கள். எங்கே எரிப்பது? எப்படிச் சடங்குகள் செய்வது? பணத்துக்கு எங்கே போவது? யாரோ ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுக்கிறார்கள். மணி அடிக்கிறது. முக்கியமான அலுவலில் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கிறார் அழைக்கப்பட்டவர். மிகவும் சுகாதாரமான முறையில் தகனம் நடக்கிறது. முதல்நாள் சடங்குகள் வசதியாகச் செய்யப்படுகின்றன. ஒரு காசும் செலவில்லாமல்!

    krishnaநாம் இதுவரை பார்த்தது கங்கையிலிருந்து ஒரு கையளவுதான். இதுபோன்ற பற்பல புண்ணிய நிகழ்வுகளின் நாயகன்தான் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபரான டாக்டர் திரு. எம். கிருஷ்ணன் அவர்கள். நினைத்தாலே நாவூறி நெஞ்சினிக்கும் ‘மைசூர்பா’ என்னும் மோகினியை உருவாக்கியவர்! ஊரெங்கும் கிளைகள். ஒவ்வொன்றிலும் கணக்கிலடங்காக் கூட்டம். அதுவும் அவரது தந்தையாரின் நினைவுநாளான நிறுவனர் தினத்தன்று, எந்தவிதமான அறிவிப்புமின்றிக் கடைகளின் வாசலில் நூற்றுக் கணக்கில் மக்கள் காத்திருப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்பது, ஓர் இனிப்புக்கடை என்பதைத் தாண்டி, பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் இன்றியமையாத உறுப்பினர் என்றால் அது மிகையில்லை.

    ஒரு நண்பர் கேட்டார். ‘இவர்கள் எப்படி வியாபாரம் நடத்துகிறார்கள்?’ என்று. ஏனென்றால், இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஏறத்தாழ ஒவ்வொரு நாளுமே ஏதாவதொரு நல்ல நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது. கலை, இலக்கியம், சமயம், ஆன்மிகம், பயிலரங்கம், நூல் வெளியீடு என்று வகைவகையான நிகழ்ச்சிகள். ’ஞாயிறு தோறும் சந்திப்போம், நல்லதையே சிந்திப்போம்,’ ‘குறையொன்றுமில்லை’ ‘எப்போ வருவாரோ?’ ‘வண்ணத்தமிழ்’ போன்று பலப்பல நிகழ்வுகள். பெரும்பெரும் பேச்சாளர்கள், கவிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், விஞ்ஞானிகள், இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பெரிய அரங்கம். அரங்கம் நிறையக் கூட்டம். கீழே, படிக்கட்டில், ஏன், மேடைவரை கூட மக்கள் உட்கார்ந்து ரசிக்கிறார்கள்! பல நேரங்களில், அரங்கைத் தாண்டி அருகிருக்கும் பகுதிகளிலும் நாற்காலிகள் போடப்பட்டு, பெரிய திரையும் வைக்கப்படுகிறது.

    இதே கலைஞர்கள், பேச்சாளர்களுக்கு வேறு இடங்களில் இத்தனை கூட்டம் வருவதில்லை என்று அவர்களே சொல்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சி என்றால் என்ன தனித்துவம்? இதெல்லாம் எப்படித் துவங்கியது? எதற்கு? கிருஷ்ணனிடமே கேட்போமே!

    ”நாம் எல்லோரும் குடும்பத்தில்தான் பிறக்கிறோம், வளர்கிறோம். விவரம் தெரிந்து வளரும்போது, அந்தக் குடும்பத்தில் நிலவுகின்ற சூழ்நிலைகள்தான் நம்மை வளர்க்கின்றன. அவற்றின் பாதிப்புதான் நாம்! அவற்றின் தாக்கம்தான் நமது குணசித்திரத்தை நிர்ணயிக்கிறது.”

    அப்படி உங்களை பாதித்தது எது? உருவாக்கியது எது?

    ”ஒருபக்கம் அப்பாவின் நேர்மை, கட்டுப்பாடு. இன்னொரு பக்க, கூட இருந்தவர்களின் தீய எண்ணங்கள். ஆம், நெருங்கியிருந்த சிலரின் தீய எண்ணங்கள் அந்த இளம்வயதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அப்பாவின் உறுதி, நான் நிலைகுலையாமல் இருக்க உதவியது. அப்பாவின் ஓய்வுக்குப் பிறகு, இந்தச் சூழ்நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதே சவாலாக இருந்தது.”

    என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

    ”நடவடிக்கையா? நடத்தைதான் நடவடிக்கை! நான் சிந்தித்தேன்; மனிதர்களில் சிலர் நல்ல எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். சிலர் தீய எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; அவர்கள், அதை வளர்க்கிறார்கள்; மற்றவர்களிடமும் பரப்புகிறார்கள். இடையில் இன்னும் சிலர், நல்ல எண்ணங்களைப் பேணவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வலுவில்லாமல் குழம்புகிறார்கள்.”

    “தீய எண்ணங்கள் உடையவர்களை எதிர்ப்பதால் பயனில்லை, அது சரியான உத்தியுமில்லை. நல்ல எண்ணங்களை நாமும் வளர்த்துக்கொண்டு, மற்றவர்களும் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும் விதமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”

    ஆனால், இன்றைய உலகில், தீய எண்ணங்கள் உடைவர்களின் கைதான் ஓங்கியிருப்பதுபோல் தோன்றுகிறதல்லவா?
    ”இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல் தீய எண்ணங்களுக்கும் ஒரு வலிமை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். நான் கேட்கிறேன், தீய எண்ணங்களுக்கே வலிமை இருக்கிறதென்றால், நல்ல எண்ணங்களுக்கு? அவை இன்னும் வலிமையானதல்லவா? சத்தியமே வெல்லும், அறம்தான் வாழவைக்கும் என்பது நம் சான்றோர்களின் சாசனமல்லவா? எந்த நல்ல உத்தேசத்திற்கும் ஒரு பிரத்யேகமான சக்தி உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் அனுபவத்திலும் கண்டு வருகிறேன். எனவே, தர்ம சிந்தனையை மக்கள் மத்தியில் வளர்க்கும்படியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானித்தேன்.”

    இருந்தாலும், இந்த முயற்சிகள், இரைச்சல் நடுவே சங்கீதம்போல், விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடக்கூடுமல்லவா? அது உங்களைச் சோர்வடைய வைக்காதா?

    ”என்னுடைய நோக்கமே உடன்பாட்டுச் சிந்தனையை (Positive Attitude) வளர்க்கவேண்டும் என்பதே! அப்புறம் நான் எப்படிச் சோர்வடைவேன்?! ஏதோ நாம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியினால் மக்கள் மனத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனில்லை நான். வாழ்க்கைச் சூழல்களால் அலைக்கழிக்கப்பட்டு, பலவித மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ள நம் மக்களுக்கு ஓர் உபசாந்தி, ஒரு சிறிய நிவாரணம் ஏற்படுத்த முயற்சிப்போமே, அவர்கள் சிந்திக்கும் போக்கில் கொஞ்சம் தெளிவு ஏற்படுவதற்கு உதவுவோமே, என்றுதான் நினைத்தேன், நினைக்கிறேன். நம் பணி என்பது, ஒரு விதையை ஒழுங்காய் நடுவதோடு ஆரம்பித்து, அத்தோடே முடிந்தும் விடுகிறது! விளைவுகளை நிர்ணயிப்பது இறைவன்தான். இதில் நான் உறுதியாய் இருப்பதால் எனக்கு எந்தவிதமான மனச்சோர்வும் இல்லை.”

    இதை உங்கள் சமூகக் கடமையாகக் கருதுகிறீர்களா?

    ”அப்படியெல்லாம் இல்லை. இயல்பாகவே எனக்கு இதில் ருசி இருக்கிறது. இந்தப் பணிகளைச் செய்வதில் எனக்கு ஆனந்தம் இருக்கிறது. சமூகப் பொறுப்பும் உண்டு என்று சொல்லலாம். பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமி அவர்கள் சொல்வார்கள், ‘இந்த வாழ்க்கையில் நாம் கொடுப்பதைக் காட்டிலும் எடுப்பதே அதிகம்,’ என்று. (We consume much more than we contribute) அவருடைய இந்த வாசகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. நாம் எல்லோருமே இந்த சமுதாயத்திற்குக் கடன்பட்டிருக்கிறோம். ஸ்வாமிஜியின் வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்தால், இந்தக் கடனை அடைப்பது சாத்தியமே இல்லை என்றே தோன்றும். ஏனெனில், நாம் எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், நாம் கடன்பட்டிருக்கிறோம் என்ற நினைப்பு நமக்குப் பணிவைத்தரும். நல்ல பார்வையைத் தரும். நம்மால் இயன்ற எல்லா வழிகளிலும், சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட வைக்கும்.”

    ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய வழி இதுதான். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால், இதில் சமூகப் பொறுப்புக்கும் மேலே ஏதோ ஒன்று தொனிக்கிறதே!

    ”அது சரிதான். எடுத்துக்கொண்டே இருப்பதால் கடன்பட்டுள்ளோம். இயன்ற விதங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கப் பழகவேண்டும். நம்முடைய ஆன்மிக விடுதலைக்கான சாவியும் இதுதான். கடனை அடைக்காமல் கடவுளைக் காண முடியாது!”

    சரியாகச் சொன்னீர்கள்! ’ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்,’ என்கிறார் வள்ளுவர்….
    ”எனக்கு அதெல்லாம் தெரியாது. யாராயிருந்தாலும் நல்லதைச் சிந்திக்கலாமே! அதற்குப் பணம் வேண்டாமே! எவராயிருந்தாலும், இயன்ற அளவு உடம்பால் உழைக்கலாமே! சாப்பிடுகிற வரை உழைக்கத்தானே வேண்டும்? கொடுக்காமல் விடுதலை இல்லை. இது இறைவனின் நீதி. இயற்கையின் நியதி. யோகிகள் கூட இதை உணர்ந்து இதற்கேற்பத்தான் வாழ்ந்தார்கள். ஊரில் வாழ்ந்தால் உழைத்தே ஆகவேண்டும்! ஊர் நன்மைக்காகக் கொடுத்தே ஆகவேண்டும்!”

    அது சரி, இது வியாபார உலகம். நீங்களும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறீர்கள். தர்மம் – வியாபாரம், இவற்றை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

    ”இதோ பாருங்கள், கொடுப்பதில் கொடுப்பவனும் பயனடைகிறான். புண்ணியம், நல்வாழ்த்துக்கள் என்று. ஏன், விரும்பாவிட்டாலும், நம்முடைய எண்ணம் அதுவல்ல என்றாலும், இது தொழிலுக்கும் விளம்பரமாகி விடுகிறது. கொடுக்கக் கொடுக்கப் பிரகாசிக்கிறார்கள்!”

    “இன்னொன்று. நான் கொடுப்பதாக நினைக்கவில்லை. பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவுதான். என்னுள் ஒரு நன்மை நுழையுமானால், அது என் மூலம் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதை புத்தியைச் சரியான விதத்தில் உபயோகித்து முடிவு செய்கிறேன். மக்களுடைய நல்லாசிகளைப் பெறுகிறேன். நீரிலிருக்கும் மீன் அழுக்கைத் தின்கிறது. மீனுக்கும் வாழ்வு; தண்ணீருக்கும் நன்மை. சரிதானே?”

    இது ஒரு வியாபாரியின் பேச்சாகத் தெரியவில்லை. வள்ளுவரின் பேரறிவாளன் பேசுவதுபோல்தான் இருக்கிறது. கற்பகம் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதும், மலேசியாவில் இவருக்கு ‘சடையப்ப வள்ளல்’ விருது வழங்கப்பட்டதும் ஆச்சரியமாகவே இல்லை. தரமுள்ளவனே தரத்தை மதிக்கிறான். தர்மசிந்தனை உள்ளவனையே தாரணி கொண்டாடுகிறது.

    ஒரு மனிதன், நேர்மையாக இருந்து, தொழிலிலும் வெற்றி பெறமுடியும் என்பதை, கொடுப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை, கொடுப்பதன் மூலமே நாம் பொருளையும், புகழையும், அருளையும் பெறமுடியும் என்பதை, அறம் செய்வதே ஆன்மிக விடுதலைக்கு வழிகோலும் என்பதை இந்த அவசர உலகத்தின் இன்றைய தலைமுறையினர் எளிதில் நம்புவதில்லை. ஆனால், கிருஷ்ணனைப் போன்றவர்களின் வாழ்க்கை, இந்தப் பாரம்பரியமான பண்பாட்டு வாழ்க்கை நெறிக்கு நிமிர்ந்த சான்றாக விளங்குகின்றது.

    ஆளை விழுங்கும் அதிரடி நகைச்சுவைக்குப் பெயர்போனவர், சிவனைப் போன்ற சீற்றமும் கொள்ளக்கூடிய கிருஷ்ணன், மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர் என்றால் நம்ப முடிகிறதா? எத்தனையோ பேருக்கு நாள்தோறும் மேடை அமைத்துக் கொடுக்கும் இவருக்கு மேடை என்றாலே அலர்ஜி. டிது மேடைக்கூச்சம் அல்ல! அடையாளம் காணப்படாமல் அறம்செய்யவேண்டும் என்பதே இவர் அவா. இது எல்லோராலும் இயலும் என்று அடித்துச் சொல்கிறார்:

    ”நாம் ஒவ்வொருவரும் புறக்கணிக்கக் கூடாத, முக்கியமான விஷயங்கள் மூன்று: காலம், சக்தி, காசு! ஒன்றிருந்து ஒன்றில்லை என்றாலும், ஒன்றைக் கவனித்து இன்னொன்றை நிர்வகிக்கவில்லை என்றாலும் பயனில்லை. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப் புரிந்துகொண்டால் நாம் முழுநிறைவை அடையலாம். வாழ்வில், நிறைவைவிடப் பெரிய சாதனை ஏதுமில்லை.”

    நிறைவான மனிதரின் நிறைவான வாக்கியம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் மக்கள் இனிப்பு வாங்குவதற்காக நிற்கவில்லை, தரத்தைப் பெற்றுக்கொண்டு செல்லவே காத்திருக்கிறார்கள். கிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு, பொழுதுபோக்குவதற்காக மக்கள் வரவில்லை; தங்கள் சிந்தனையை மெருகேற்றிக்கொள்ளவே வருகிறார்கள்.
    ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவோடு திரும்புகிறோம்!

    நன்றி : அமுத சுரபி

    Share
  • அவன்தான் பாபு

    இசைக்கவி ரமணன்

    அன்புடைய நண்பர்களே!

    எனது இனிய நண்பன் ஒருவனைப் பற்றி உங்களுடன் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். யாருக்குத்தான் நண்பர்களில்லை? நண்பர்களில்லாத வாழ்வும் ஒருவாழ்வா? எனவே, நான் என் நண்பனைப் பற்றி எழுதுவது உங்கள் அனைவருக்கும் பிடித்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஓர் அந்தரங்கச் சித்திரத்தை அம்பலமாக்குகிறேன்.

    அன்புடன்,

    ரமணன்

    Rama1968 ஆம் வருடம். நாங்கள் பாண்டிபஜார் பகுதியிலிருந்து வீடுமாறி நங்கைநல்லூர் வந்துசேர்ந்தோம். அப்பா மட்டுமே பார்த்து வைத்திருந்த அந்த வீட்டை, நாங்கள் குடிபுகுந்த அன்றுதான் கண்டோம். அப்போது எனக்கு வயது 14. அருமையான என் கிரிக்கெட் நண்பர்களை விட்டுவிட்டு, ஏதோ ஒரு பெயர் தெரியாத தொலைதூர கிராமத்திற்கு ஏன் செல்கிறோம் என்று என் மனது நொந்து கொண்டிருந்தது. வந்த சிலநாட்களிலேயே எல்லாம் மாறிவிட்டது. சீக்கிரமே வீட்டின் பின்புறமே கிரிக்கெட் நண்பர்கள் கிடைத்தனர். கிணற்றில் நீரிறைத்துக் குளிக்கும் சுகம், நாமே போட்ட தோட்டம் என்று நங்கைநல்லூர் வாழ்க்கை படிப்படியாக வளர்ந்தது.

    அங்கு வந்த வெகுவிரைவிலேயே ஒரு கலை நிகழ்ச்சியைக் காணவருமாறு புதிய நண்பர்கள் அழைத்தனர். இப்போது குருவாயூரப்பன் குடிகொண்டுள்ள நிலத்தில் அந்த நாளில் ஒரு சிமெண்டு மேடை இருந்தது. அங்கேதான் அந்த ‘நல்லூர் என்டர்டெய்னர்ஸ்’ குழுவின் நிகழ்ச்சி. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த மூன்று பேர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.

    ஒருவர், வடக்கத்திக்காரர்போல் இருந்தார். அலைபுரளும் தலைமுடியைத் தள்ளிவிட்டுக் கொண்டு, ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு, ‘வரப்போகும் திரைப்படத்திலிருந்து ஒருபாடல்’ என்று அறிவிப்புச் செய்து, ‘உன்னோடு வந்தாலோ உறவாடச் சொல்லும்,’ என்று இனிமையாகப் பாடினார். ஒரு கோமாளியாக வேடமிட்டு பிரமிக்க வைத்தார். தொடர்ந்த நாடகத்தில் பட்டாணிக்காரன் போலத் தமிழ்பேசி நடித்தார். இன்றும் எனக்கு நண்பராக, மூத்த சகோதரராக விளங்கும் அவர்தான் மணிசார்..

    இன்னொருவர், நங்கைநல்லூர் ‘சோ’ என்றழைக்கப்பட்ட வீரராகவன். குரலும், முழியும், மூக்குக் கண்ணாடியும் அப்படிச் சொல்லவைத்தன போலும். அத்தோடு முடிந்தன ஒற்றுமைகள். வீரராகவன், தனது வாழ்க்கையின் அல்லல்களை அடுத்தவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் கவிதைகளாய்ப் பாடும் கவிஞன். நேர்மையாளன். நேசமே நெஞ்சாகக் கிடப்பவன். இதோ இன்றுகூட அவனிடம் நான் பேசினேன்.

    மணிசார் மேடையில் நிற்கிறார். அவர்தான் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியாம். இரண்டு கைகளையும் போரில் இழந்துவிட்டாராம். ஒப்பனை தத்ரூபமாகவே இருந்தது. ‘அதனாலென்ன? அதோ நிற்கிறாரே என் செகரட்ரி! அவர்தான் எனக்குக் கைகள்,’ என்றார். அருகே, அவரைவிடக் குள்ளமாக ஒரு பையன், கண்கள் பளபளக்க நின்றுகொண்டிருந்தான். அவர் அழைத்ததும், மணிசாரின் பின்னால் வந்து நின்று, தனது கரங்களை அவரது கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டுவந்து, அவர் பேசப் பேசக் கைகளாலேயே அற்புத பாவனைகள் காட்டினான். ஒரு கட்டத்தில் மணிசார் சிகரெட் பிடிக்கவேண்டும். இந்தப் பையன் சாரின் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்தாயிற்று. ஆனால் தீப்பெட்டியை எடுக்கும்போது அது விழுந்து விட்டது! இருவரும் அனாயசமாகக் குனிய, அந்தப் பையன் தீப்பெட்டியை எடுத்து, சிகரெட்டைப் பற்றவைத்து, மணிசாரின் முகவாயைச் சொறிந்தபோது, இதெல்லாம் ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தார்கள் என்றெண்ணிய அரங்கத்தார் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று.

    அதே பையன் மீண்டும் மேடைக்கு வந்து பாலையா, அசோகன் (“எனக்குத் தொப்பை இல்லெ, இருக்கறதா நெனச்சுக்குங்க”) மற்றும் சிவாஜியைப் போலும் பேசி எல்லோரையும் அசரவைத்தான்.

    இத்துடன் நிற்காமல் நாடகத்தில் டாக்சி டிரைவராக வந்து, சென்னைத் தமிழில் வெளுத்துக்கட்டி, உள்ள வசனத்தை மறந்து, அப்போது மனதில் தோன்றியதைப் பேசிக் கலக்கிவிட்டான்.

    அவனைச் சந்திக்க ஆவல் கொண்டேன். அவன் மூலம்தான் மணிசாரையும், வீரராகவனையும்
    சந்தித்தேன்.

    இவன் முதலில் நம்மோடு பழகிவிட்டு அப்புறம் நம்மைச் சந்திக்கிறானோ என்று வியக்கவைக்கும்படி ஒரு நேசம். எல்லோரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்வான். அவர்களுக்குத் தெரிந்தவற்றில் ஏதேனும் தனக்குத் தெரிந்தவொன்றைப் பேசத் தலைப்படுவான்.

    அவனுக்குத் தொடர்புகள் பிடிக்கும். வரம்புகள் தெரியாது! அதனால்தானோ என்னமோ பலரை ஒரே சமயத்தில் காதலிப்பது அவனுக்கு சாத்தியமாகவே இருந்தது. ஒரே நேரத்தில் ஒரு பெண்மணியும், அவள் மகளும் கூட அவனிடம் மயங்கிக் கிடந்தார்கள்! அதில் ஏதும் தவறிருப்பதாக அவன் நினைத்ததே இல்லை! அதேபோல், காதல் வேறு கல்யாணம் வேறு என்பதுபோல் ஒரு மனோபாவம் அவனுக்கிருந்தது. அவனுக்குக் கொள்கைகள் கிடையாது. பாவனைகள் மட்டுமே உண்டு. காதலியிடம் உண்மையிலேயே குழைவான்; மனைவியிடம் மிகுந்த பிரேமையுடனும், மரியாதையுடனும் இருப்பான்! தாய்மீது மட்டற்ற பாசம். அவள் மிகவும் வெகுளி. தந்தையோ அதற்கும் மேல். அவர் புகையிலையைத் துப்பிவிட்டுப் பேச ஆரம்பித்தால்தான் அவரும் எவ்வளவு வெகுளி என்பது புரியும். பாபுவின் பாச வெள்ளமே அவர்களை அப்படி ஆக்கிவிட்டதோ என்றுகூடத் தோன்றியது. அவனுக்கு அத்தை ஒருத்தி இருந்தாள். அவள்தான் அவனது ‘வெளி’ நடவடிக்கைகளை சதா சாடிக்கொண்டே இருப்பாள்.

    ஒருமுறை, அவனை நான் ‘உரிய இடத்தில்’ கண்டுபிடித்து அவனோடு அவன் வீட்டுக்குச் சென்றேன். உடனே அவன் அம்மா அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அத்தையோ அவனை விடாமல் சாடி “நீ எங்கேர்ந்து வரேன்னு தெரியும். டே ரமணா நீ சொல்லுடா, அங்கேர்ந்துதானே வரான் அவன்?” என்று கேட்டவுடனேயே பாபு கையிலெடுத்த சோற்றுருண்டையை (மிகப் பெரிதாய்த்தானிருந்தது!) விசிறியடிக்க, பருக்கைகள் தரையெங்கும் சிதற, அவன் ருத்திர தாண்டவமாட, அத்தை விடாமல் கத்த, வைணவத் தமிழில் நமக்குத் தெரியாத கெட்ட வார்த்தைகள் இத்தனை இருக்குமோ என்று நான் வியக்க, அவன் என்னை இழுத்துக்கொண்டே வெளியே வர, ‘ஐயோ! சாப்பிடாம போறியேடா!’ என்று அவன் அம்மா அழுது அரற்றியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

    பாபுவின் குணசித்திரத்தில் மூன்று அம்சங்கள் பிரதானமாக இருந்தன. ஒன்று காதல், இன்னொன்று கோபம். மூன்றாவது கோமாளித்தனம். ஏதோவொரு விசித்திரமான தைரியம்தான் அவனை நிர்வகித்தது. காரணமில்லாமலேயே பொத்துக்கொண்டுவரும் கோபமும், எடைதூக்கி
    உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பின் மதர்ப்பும் அவனுக்கு அடிதடியில் ஒரு ருசியை ஏற்படுத்தியிருந்தன. தேவையின்றிப் பலவிதமான சண்டைகளில் ஈடுபடுவான். அடித்திருக்கிறான்; அடிவாங்கியுமிருக்கிறான். இந்த விவகாரத்தில்தான் அவனுக்குப் பிச்சை எனப்படும் கிருஷ்ணன் நண்பனானான். பாபு-பிச்சை என்று இவர்கள் இரட்டையர்களாகவே தென்பட்டார்கள். ஏதாவது ஒரு தகராறுக்கு எப்போதும் தயாராகவே இருந்தார்கள். பிச்சைக்கு நவரசமும் சினத்தின் வெளிப்பாடுதான்! பாபுவோ உணர்ச்சிகளின் கிலுகிலுப்பை. இவர்களிருவரும் பிராமணர்கள் என்பது உள்ளூர் ரவுடிகளுக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது. ஒரு முறை, நான் அவன் வீட்டுக்குச் சென்றபோது, பாபுவை அடித்துப்போட ஏழெட்டு பேர் சைக்கிள் செயின் போன்ற போர்க்கருவிகளோடு வந்திருந்தார்கள். அவனை வெளியே கூப்பிட்டார்கள். உள்ளிருந்து அவனது அம்மாவும், அப்பாவும் ஓவென்று புலம்பத் துவங்கினார்கள். பாபு அடிவாங்கவே இல்லை! ஏன் தெரியுமா? ஒரு நீண்டவுரையாற்றினான் பாருங்கள்! “என்ன அடிச்சுப்போட ஒங்களுக்கு ரெண்டு நிமிஷம் போதும்! எங்க அப்பா அம்மா காலடியிலெ ரத்த வெள்ளத்திலெ என்னெ நீங்க தூக்கிப்போடலாம். ஆனா..” என்று ஆரம்பித்து சிவாஜி கணேசனும், சைகாலஜிஸ்டும் சேர்ந்து கும்மியடித்தான். அம்மாடி! அடிக்க வந்தவர்கள் அழாத குறையாகத் திரும்பிப் போனார்கள்!

    அவனுக்கு ‘தாடி’ பாபு என்று பெயர். எப்போதோ ஒருநாள் முழுச்சவரம் பண்ணிக்கொண்டு வந்து, கொஞ்சம் வெட்கமுடன் நிற்பான். மற்றபடி, தாடி வளர்த்து அதைப் படாதபாடு படுத்திக்கொண்டிருப்பான். தாடியும், லுங்கியுமாய் சைக்கிளில் திரிந்ததாலேயே அவனுக்கு ஒரு ரெளடித் தோற்றம் வந்துவிட்டது.

    ஒருமுறை ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமதி மணி கிருஷ்ணசாமியின் கச்சேரி நடக்கிறது. அம்மையார் அருமையாகப் பாடினார்கள். அது தோடிராகம் என்று சொன்னவுடன் பாபுவுக்கும், பிச்சைக்கும் உற்சாகம் ஏறிவிட்டது. நாங்கள் ஒரு பத்து பேர் ஏரியிலிருந்த குருவாயூரப்பன் மேட்டில் அமர்ந்து கொண்டு உச்ச ஸ்தாயியில் ‘ஜகதோ தாரணா’ பாடுவோம், அல்லது கூப்பாடு போடுவோம். ஆளரவம் இல்லாத இடமாதலால் பிழைத்தோம். இல்லையென்றால் ஏதோ கொலை நடக்கிறது என்று போலீஸ் பிடித்துக் கொண்டு போயிருப்பார்கள். அந்த ஞாபகம் வந்துவிடவே, பாபு (பிச்சை சகிதம்) மேடைக்குச் சென்று அம்மையாரை ‘ஜகதோத்தாரண’ பாடும்படிக் கேட்டுக்கொண்டான். அதை அங்கிருந்த பிரமுகர்கள் ரசிக்கவில்லை. மேலும், விசிலடிக்காமல் எதையும் ரசிக்கத் தெரியாது அவனுக்கு! அப்படியொரு பாராட்டை மணிகிருஷ்ணசாமி அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கவே மாட்டார்கள்!! அன்று, கச்சேரியில் மிருதங்கமும் களை கட்டி விட்டது. அல்லது அப்படித் தோன்றியது எங்களுக்கு. பாபுவால் தாங்க முடியவில்லை. உடனே ஒரு மாலையை வாங்கிக்கொண்டு மேடைக்கு (ஆமாமாம், பிச்சையோடுதான்!) விரைந்து, படபடக்க மைக்கைப் பிடித்து நாலுவார்த்தை சொல்லிக் கண்ணீர் மல்கி, மாலையையும் மிருதங்கக்காரர் கழுத்தில் போட்டுவிட்டான்! அவர், இப்படி, தாடி, லுங்கி சகிதம் கோவில் கச்சேரியில் இதுவரை யாரும் பாராட்டியிராததால், இந்தவூரில் ‘இவர்களுக்’கெல்லாம் கூடப் பாட்டு ரசிக்கத்தெரிகிறதே என்ற வியப்போடும், மாலையைப் போட்டுக்கொள்ளவில்லையென்றால் இவன் நம்மை ஒருபோடு போட்டுவிடுவானோ என்று சற்றே அச்சத்தோடும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் முழித்தார். பிரமுகர்களின் முகச்சுளிப்பைச் சட்டை செய்யாமல், பாபுவும், பிச்சையும் ரொம்பப் பரவசமாகி நாங்கள் அமர்ந்திருந்த மணற்பரப்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது.

    “டேய் நில்லு!” என்றது ஒரு குரல்.

    குரலுக்கு சொந்தக்காரர் அந்த ஊரில் சித்தராக வலுக்கட்டாயமாக மதிக்கப் பட்ட ராஜகோபாலன் என்பவர்.

    இங்கே சிவாஜியைப்போல் புருவம் உயர்ந்து திரும்பினான் பாபு.

    “என்னடா, கச்சேரி நடுவிலெ கலாட்டா பண்றீங்களா?”

    ‘கலாட்டாவா? நாங்க ரசிச்சோம்; பாராட்டினோம் அவ்வளவுதான்,’ என்றான். பிச்சை, எதுவாயிருந்தாலும் நாலு தட்டு தட்டிவிட்டு அப்புறமாய்ப் பேசிக்கொள்ளலாமே என்று பரபரத்தான்.

    “எதுக்கு மாலயப் போட்டீங்க?”

    ‘ரசிச்சோம் போட்டோம். ஏற்கனவே சொல்லிட்டேனில்லே?’

    “நீங்க எப்டீடா மாலயப் போட்லாம் நாங்க இருக்கும்போது?”

    ‘யோவ்! கச்சேரி ஜனங்களுக்குத்தானேயா? நீங்க போடற மாலெ வெறும் சம்பிரதாயம். நாங்க போடறதுதான் உண்மையான ரசனை’ என்றானே பார்க்கலாம்!

    ராஜகோபாலன் விடுவதாயில்லை. ஒருபடி மேலேபோய், “நான் யார் தெரியுமா? உங்களெ அப்படியே நிக்கவச்சுடுவேன்!” என்று மிரட்டினார். உடனே பிச்சை லுங்கியை மடித்துக் கட்டினான்; பாபுவுக்குக் கோபம் வந்ததில் வார்த்தைகள் வரவில்லை. இருவரும், ‘யோவ்! எங்கெ, நிக்கவை பாக்கலாம்! யாரெ மெரட்றே?’ என்க, அப்புறம் தொடர்ந்த சம்பாஷணையை இங்கே பிரசுரிப்பதற்கில்லை!

    ஒருவழியாக நாங்கள் இருவரையும் மீட்டுக்கொண்டு வந்தோம். துடிப்பான, நல்ல மனம் கொண்ட இளைஞர்களை ரவுடிகளாக மாற்றுவது இதுபோன்ற பிரமுகர்களின் அறியாமையும், அட்டகாசமும்தான். தோற்றம் என்பது எந்த அளவுக்கு மாயையைத் தோற்றுவிக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அற்புதமான உடையில்தான் எத்தனைக் களவாணிகளை நாம் சந்திக்கிறோம்! எத்தனை நல்லவர்கள் ஏனோ தாடியிலும் லுங்கியிலும் தொலைந்து போகிறார்கள்!

    என்னிடம் ஒருமுறை கூட அவன் கோபப்பட்டதே இல்லை.. நான் அவனைப் பலமுறை கடிந்துகொண்டதுண்டு. ஒருமுறை — இதுவும் கச்சேரியில்தான்! வீணை காயத்ரி — சந்தானம் என்ற ஒரு எளிய மனிதரிடம் தேவையில்லாமல் கோபப்பட்டுக் கண்ணெல்லாம் சிவந்து அடிக்கத் தயாராகிவிட்டான். நான் அவனை அங்கேயே கடுமையாகச் சாடி அவரிடம் மன்னிப்புக்கேள் என்றேன். கேட்டானே!! அவரும் உடனே அவன் கோபத்தை மறந்து கைகுலுக்கினாரே! அதுதான் பாபு!

    அவன் பழகாத ஆளே ஊரில் கிடையாது. அவனும், பிச்சையும் கோவிலில் சாமி தூக்கச் செல்வார்கள். விநாயகர் கோவிலில் சதுர்த்தியன்று இரவு முழுக்க ஊர்வலம். இருவரும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தோள்கொடுப்பார்கள். மறுநாள் யாரையோ காதலித்துக் கொண்டிருப்பான். அதற்குப் பிறகு, ஏதாவது அடிதடியில் காயப்பட்டுக்கொண்டு வருவான். அடுத்தநாள் காலையில் நான் வெளியே வந்தால், இவன் ஈரத் துண்டைக் கட்டிக்கொண்டு ஒரு மணிப்பிரம்பைக் கையிலேந்திக் கொண்டு, என்னமோ மந்திரம் ஜபித்துக் கொண்டு ஒரு பாழடைந்த சிவன் கோவிலுக்கு வெறுங்காலோடு சென்றுகொண்டிருந்தான்! அவனும், பிச்சையுமாய்ப் புதைந்து கிடந்த பழங்காலத் தூணை வெகுபிரயாசையுடன் வெளியே கொணர்ந்து நிறுத்தினார்கள். பாம்பு மண்டிய புதர்களைக் களைந்தார்கள். இன்று அந்தக் கோவில் நங்கைநல்லூரை அடுத்த எம்.எம்.டி.சி. காலனியில் பெரிய சிவன்கோவிலாய்ப் புகழுடன் விளங்குகிறது.

    நங்கைநல்லூர் குளத்தங்கரை சிவன் கோவிலுக்கும் இவர்களிருவரும் நிறையவே உழைத்தார்கள். இவர்கள் உழைத்த இடம் புகழ்பெறும்போது, இருவரும் அங்கிருக்க மாட்டார்கள். அது அவர்கள் ராசியோ, குணமோ, இரண்டுமோ?

    குருவாயூரப்பன் கோவில் கட்டப்படுவதற்கு முன்னால், தொடர்ந்து பலநாட்கள் பஜனைகள் நடைபெற்றன. நான் தினமும் அங்கு சென்று தபலா வாசிப்பேன். (அடிப்பான் என்பார் அப்பா) எனக்குத் தபலா கற்றுக் கொடுத்த — கொடுத்த என்றால் தபலாவும் கொடுத்த ! — மணிசார் மெட்டுப்போட, நான் பாடல்களெழுத, முறையான சம்பிரதாயத்தில் நாங்களே எங்கள் நிகழ்ச்சியை வழங்குவதாக ஏற்பாடாயிற்று. ‘கந்தப்பா .. கந்தப்பா..கந்தப்பா..’ என்ற பாட்டை நான் இயற்ற, சார் மெட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார். பாபு வந்து சேர்ந்துகொண்டான். சாரிடம் ரொம்ப மரியாதையாக இருப்பான். நான் ஒருவரி பாடினால் அடுத்தவரியை அவன் அனாயசமாக இட்டுக்கட்டிவிட்டான்! அது ஐயப்பன் மேலே அமைந்தது. இப்படி நானும் அவனும் கந்தப்பா ஐயப்பா என்று மாறிமாறி இயற்றிய பாட்டை மணிசார் அந்தக் கூரைக்கொட்டகையில் பாடும்போது குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது! கூட இருந்து கண்பனித்தவன், அதற்குப் பிறகு பஜனைக்கு வரவே இல்லை! அதுதான் பாபு!

    ஐயப்பன் மலைக்குப் போக ஆரம்பித்தான். கடுமையாக விரதமும் இருப்பான். அப்படி இருக்க வேண்டியதில்லை என்று பேசத்துவங்கி வாங்கிக் கட்டிக் கொள்வான். ஐயப்ப பஜனைக்கு என்னை அழைப்பான். நானும் அவனுக்காகப் பலவிடங்களுக்குச் சென்று தபலா தட்டுவேன்; பாடுவேன்; பிரசாதம் உண்டு திரும்புவேன்.

    ஒருமுறை ஒரு பெரிய ஐயப்பன் ஊர்வலம் ஏற்பாடானது. யானையின்மீது ஐயப்பன் படத்தை வைத்து அர்ச்சகரை அமர்த்தி, ஒருவர் பெருங்குடை பிடிக்கவேண்டும் என்று தீர்மானமாயிற்று. நான்தான் குடைபிடிப்பேன் என்று பாபு சொன்னபிறகு அதற்குமேல் யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை! சைதாப்பேட்டையில் ஊர்வலம். மிருகக்காட்சி சாலையிலிருந்து யானையைக் கொண்டுவந்திருந்தார்கள். அதற்கு என்ன நோயோ, வாயில் நுரைதள்ளிக் கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்ச நேரந்தானே என்று சமாதானப் படுத்திக்கொண்டு ஐயப்பனும், அர்ச்சகரும் யானை மீது அமர்ந்தாயிற்று. பாபு யானைமீது நின்றுகொண்டு குடையைத் தூக்கினான். அவனுக்குத் தானே அரசனானதுபோல் பெருமை! ஒரு சிவாஜி கம்பீரம்! நுரையானை கொஞ்ச தூரம்தான் போயிருக்கும். இவன் தூக்கிவந்த குடை மேலே இருந்த மின்சாரக் கம்பியைத் தொட, அர்ச்சகர் “ஐயப்பா!” என்று படத்தோடு குதிக்க, குடை கீழே விழுந்துவிட, பார்த்தால் மறைமலை அடிகள் பாலத்தில் யானை பந்தயக் குதிரையாய்ப் பறக்க, அதன்மேல் நம் பாபு யானையின் கழுத்தை இறுகத் தழுவிக்கொண்டு கிடக்கிறான்!

    அவனுக்குப் பரபரப்பு பிடிக்கும்; பயம் கிடையாது. அதே ஊர்வலம் நங்கைநல்லூரில் நடந்தது. இந்தமுறை கோவில் யானை வந்தது. குடைக்குப் பதில், பாபு கவரி வீசினான். மேலே திறந்த உடம்போடு அவன் ஐயப்பன்மேல் பக்தியோடும், சாலையின் இருமருங்கிலும் இருந்த பெண்கள்மேல் காதலோடும், தனது புயங்களில் தானே மயங்கியபடி, நிதானமாய்த் தாளம் பிசகாமல் கவரி வீசிய காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது.

    அவனுக்கு எல்லாம் சுலபமாகவே வந்தது, படிப்பைத்தவிர. முறையான கல்விக்கும் அவனது மனப்போக்குக்கும் சமாதானம் காணமுடியாத முரண்பாடுகள் இருந்தன. அவன் பச்சையப்பன் கல்லூரியில் படித்தான். சென்று வந்தான் என்பதே பொருத்தம். படிப்பு அவனுக்குப் பிடிக்கவே இல்லை. யாருக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்? ஹரிகிருஷ்ணன், வீரராகவன், வர்த்தமானன், சுகுமார் என்று நாங்களெல்லாம் நல்லூர் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நிறுவினோம். மாதாமாதம் கவியரங்கம் நடத்துவோம். நான்தான் தலைப்புக் கொடுப்பேன். ‘நானும் எழுதறேண்டா’ என்றான். “காவிரியில் நான்” என்றேன். அழகான கவிதை எழுதிக்கொண்டு வந்து அதை உணர்ச்சியோடு படித்துக் கைதட்டலும், கொஞ்சம் காதலும் வாங்கிக் கொண்டானே! நான் கொடுத்த உற்சாகத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் நிறையக் கவிதைகள் எழுதிக் காண்பித்தான். அப்புறம் நிறுத்திவிட்டான். அதுதானே பாபு!

    பாபுவுக்குக் கனவுகள் அதிகம். அதிகமென்ன, அவன் கனவுகளில்தான் வாழ்வான். கனவுகள் அவசியம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? நேற்றுவரை நேசமுடன் பாதுகாக்கப்பட்ட கனவைத்தானே இன்று நினைவென்று கொண்டாடுகிறோம்? கனவுகள், அடிக்கடி உதிர்ந்துபோகும் நம்மை மறுபடி மறுபடி நிறுவிக்கொள்ளத் துணைபுரிகின்றன. நாம் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கவேண்டும், இவையிரண்டுக்கும் இடைவெளி இருப்பின் அதைச் சரிப்படுத்த என்னசெய்வது? இந்த எல்லாத் தளங்களும், நமது கனவுகளால் ஊடுருவப்பட்டுத்தான் இருக்கின்றன. கனவின் ஸ்பரிசம் இல்லாத இதயமே இல்லை. மனித மனத்தில் மனிதத்தன்மை இன்னும் இருப்பதற்குக் கனவுகளே காரணம்.

    ஆனால், பாபுவின் கனவுகள், அவனது கண்களுக்கு வெளியே இருந்தன. அதனால்தான் அவனுக்கு நினவு என்கிற நிதர்சனம் கண்ணில் தட்டுப்பட்டதே இல்லை. சந்தித்த எல்லோரையும் ஏதொவொரு விதத்தில் தொடக்கூடிய அவன் வாழ்க்கை சோபிக்காமல் போனதன் காரணம் இதுதான். அவனது கவிதைக் கனவு, ஒரு நோட்டுப் புத்தகத்தோடு முடிந்துவிட்டது. சினிமாக்கனவு, ஒரு ஷூட்டிங்கைப் பார்த்ததோடு நின்றுவிட்டது. காதற்கனவு, கடைசிவரை அவன் மனத்தையும், உடலையும் அரித்தது.

    ஆயினும், அவனது கனவுகளுக்குச் சிறப்பான அந்தஸ்து உண்டு. அதற்குக் காரணம், அவனுக்கு மற்றவர்களைப் பற்றிய கனவுகள் நிறையவே இருந்தன. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்கிறேன். பூஞ்சையான நான் வலுமுறுக்கேறிய உடலோடு திகழவேண்டும் என்பது அவன் கனவு. அதற்காகக் காலை 4.30 மணிக்கு என் வீட்டுக் கதவைத்தட்டி, வா, ஓடலாம் என்பான்! நான் தூக்கம் கலைந்து வருவதற்குள், திண்ணையில் சற்றே கிறங்கியிருப்பான். காலில் கட்டாயம் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ளவேண்டும்! ஏனென்றெல்லாம் கேட்கக் கூடாது! முக்கால்வாசி நேரம், முக்கால்வாசி இடம் உலர்ந்திருந்த அந்த ஏரியில், நாங்கள் ஓடுவோம்! நின்றால், ஆயிரம் ஈக்கள் காலைப் பிடுங்கும். தேங்காய் எண்ணெய்! ஊஹும்! ஒத்துக்கொள்ள மாட்டான். பிறகு அவன் மிகவும் ரசித்த என் அம்மாவின் காப்பியை அருந்திவிட்டுச் செல்வான்.

    என் கவிதைகளும், பாடல்களும் பிரபலமடைய வேண்டும் என்று ரொம்பக் கனவு காணுவான்.

    ‘டேய்! நீ ஃபேமஸ் ஆகும்போது நான்தாண்டா ஒன் செக்ரட்டரி,’ என்பான். நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழா சிறப்பாக நடந்தது. முத்துமுத்தான கையெழுத்தில் அவன் பரிசுப் புத்தகங்களில், என் கவிதைகளை எழுதிக்கொடுத்தான். விழா முடிந்து எல்லோருக்கும் எங்கள் வீட்டில் சாப்பாடு. கிட்டத்தட்ட 75 பேருக்கு அம்மாவும், என் அக்கா மாலாவும் அற்புதமான விருந்தைச் சமைத்துப்போட்டார்கள். அது பரவாயில்லை. ஏரிக்குள்ளிருந்த எங்கள் வீட்டைச் சுற்றியும் மழையால் தண்ணீர் சூழ்ந்திருந்தது. நாங்கள் பின்வீட்டுச் சுவரை ஒரு ஸ்டூல் உதவியால் தாவி அப்புறம் செல்வோம். விருந்தினர்களை எப்படிக் கொண்டுவருவது? பாபுவின் தலைமையில் பாறாங்கற்களைக் கீழே போட்டு அதன்மேல் சாரப்பலகைகள் வைத்து ஒரு பாலமே கட்டினோம்! இருபுறமும் நண்பர்கள் தோள்கொடுக்க, அந்தப் பாலத்தில் கவிஞர் சுரதா உயிரைக் கையில் பிடித்தபடி நடந்து வந்தார்.

    ஏரித்தண்ணீர் காம்பவுண்டு சுவர், பெரிய இரும்பு கேட் எல்லாவற்றையும் தாண்டி, வாசற்படியைக் கடந்து எப்படி வசதி என்று ததும்பிக் கொண்டிருந்தது. விதம்விதமான வண்ணங்களில் பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்தன. சில, கேட்டில் பின்னிக் கிடக்கும். சில நமக்கு மிக அருகே, தண்ணீரிலிருந்து திடீரென்று தலையைத் தூக்கிக் கொட்டாவி விடும். ஆனால் உள்ளே வரா. சடைப்பூரான்கள் அப்படியில்லை. அவை கரையைத் தேடின. எங்கள் வீடுதான் ஒரே கரை! பார்க்கப் பயங்கரமாக இருக்கும் அவை வீட்டு வராண்டாவில் நுழையும்போது, அவற்றைப் பார்த்துப் பேசிக்கொண்டே அவற்றை அடித்துத் தண்ணீரில் எறிவான் பாபு. என் தங்கை புவனா சின்னக் குழந்தை. அப்போது அவளுக்கு ஆறுவயது. அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, கோமாளித்தனம் செய்து அவளைச் சிரிக்க வைத்துப் பயத்தைப் போக்கி அந்தப் பாம்பு, பூரான், அட்டைக் கூட்டத்தை மெல்லக் கடப்பான்.

    ஒவ்வொரு நாளும் இந்தக் காரியத்தைச் செய்வதற்கென்றே வருவான். தண்ணீர் வடிந்த பிறகு, அவன் தென்பட மாட்டான்.

    அதுதான் பாபு!

    பாபுவுக்குக் கோபம் எப்படிப் பொத்துக் கொண்டு வந்துவிடுமோ, கண்ணீரும் அப்படியேதான்! தன்னை நண்பர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாத போது, அல்லது அப்படி அவன் நினைக்கும்போது அவன் கண்கள் கண்ணீர் பூத்துப் பளபளக்கும். அதேபோல், யாரோ ஒருவரது துயரம் பற்றி நான் விவரிக்கும்போதும், அவனுக்குக் கண்ணீர் வந்துவிடும்.

    “புதிய பறவை” திரைப்படத்துக்கு என்னைக் அழைத்துக்கொண்டு சென்றான். ‘எங்கே நிம்மதி?’ என்று சிவாஜி, பெருந்திரையில் பிரும்மாண்டமாக எழுந்து நிற்கும்போது, பாபு சில்லரையை வாரியிறைத்து, விசிலடித்துக் கண்ணீர் விட்டான். இந்தக் கூத்தைப் பார்க்கும்போது எனக்குத் தமாஷாக இருந்தது. ஆனால், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவனது இயல்பில், சோகம் கிடையாது! பிச்சையோடு சேர்ந்து ‘கடாமார்க்’ சாராயம் அடித்திருக்கிறான். ஆனால் உண்மையில் அதில் அவனுக்கு ருசியில்லை. அவனுக்கு எதிலாவது உண்மையிலேயே ருசியிருந்ததாவென்பதில் எனக்குச் சந்தேகம்தான். எதிலும், யோசிக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் விசித்திர மனப்பாங்கு அவனுக்கிருந்தது.

    கவிதை எழுதினானா? பாலங்கட்டினானா? காதல் செய்தானா? ‘கடாமார்க்’ அடித்தானா? சாமி தூக்கினானா? சைக்கிள்செயின் சுற்றினானா? கச்சேரி கேட்டானா? அதேபோல் ஒருநாள் எங்கள் வீட்டெதிரே பெரிய இடத்துப் பிள்ளைகள் முறையாகக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடிருந்தேன். இவன் வந்து நின்றான் குள்ளமாக, தாடி லுங்கி சகிதம்!

    “டேய்! நானும் ஆடறேன்”, என்றான். அவர்கள் அவனைப் பொறுக்கியாகவே பார்த்தார்கள். அதை அவன் ரசித்தபடியே, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மட்டையைப் பிடித்தான். அவனை மட்டந்தட்டச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று அவர்களில் மிக வேகமாகப் பந்துவீசக் கூடியவனிடம் பந்தைக் கொடுத்தார்கள். இவனா, விடாமல் கோமாளி சேஷ்டைகள் செய்தபடி, என்னிடம் பேசிக்கொண்டே, ஒவ்வொரு பந்துக்கும் அவனது சென்னைத் தமிழில் காமென்டரி கொடுத்தபடி, ஆறும் நாலுமாக விளாசித் தள்ளினான். ஸ்பின்னரைக் கூப்பிட்டு எல்லா ஃபீல்டர்களையும் எல்லைக் காவல் மாதிரி நிற்கவைத்தார்கள். “…த்தோடா!” என்று இன்னும் சில பொன்மொழிகளைச் சொல்லிப் பந்தை வயற்காட்டை நோக்கியடித்து, “டேய்! போய் சைக்கிள்ள எடுத்துட்டு வாங்கடா!” என்று அவர்களைச் சீண்டினான்.

    “ஒங்களுக்கு இது போதும்னு நெனக்கறேன்”, என்றபடி மட்டையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டான். அவனவன் அங்கே காலுக்கும், கைக்கும் கவசம் அணிந்து புத்தம்புதிய ஷூவோடு இருந்தபோது, இவன் லுங்கியை அனாயசமாக முக்கால் மடிப்பு மடித்து, வெறுங்காலுடன் நாலெட்டு அடிகள் எடுத்துவைத்துப் பந்துவீசி, விடாமல் பேசி, நான்கைந்து பேரை அவுட்டாக்கி, சிலருக்குப் பலான இடத்தில் முத்திரை போட்டுப் பந்தைத் திருப்பிக் கொடுத்தான். வெலவெலத்துப் போன அந்தக் கேப்டனிடம், “தாங்க்ஸ்ப்பா! என் தம்பிய அனுப்பறேன், அவன் வந்து ஃபீல்டிங் பண்ணுவான், ” என்று நக்கல் பண்ணிவிட்டு, என்னைப் பார்த்து, “வாடா ரமணா! என்னாடா இந்தக் கத்துக்குட்டிங்க கூட ஆடிக்கிட்டு,” என்று ஞாபகமாய் அவர்கள் காதில் விழும்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் ஏறினான்!

    மறுநாள் வந்தானோ? அல்லது மறுவாரம்? ஊஹும்! அவன்தான் பாபுவாயிற்றே!

    பாபு-பிச்சை இரட்டையர்கள் போதாதென்று சேகர் வந்துசேர்ந்தான். சேகர், குடிசையிலிருந்து வந்தவன். எம்.ஜி.ஆர். ரசிகனாகத் துவங்கி, வறுமையில் அல்லலுற்று, தற்போது முக்கியமான கம்யூனிஸ்டாக ஆகிவிட்டான். பளுதூக்கி உடற்பயிற்சி செய்வான். மேலுடம்பு அற்புதமாக இருக்கும். கால்மட்டும் சூம்பியிருக்கும். ஒருநிமிடம் கூட இடைவெளி விடாமல் தமாஷ் பண்ணி விலா நொறுங்கச் சிரிக்கவைப்பான். இவன்வந்து சேர்ந்துகொண்டான் பாபுவோடு! என்வீட்டில் ஒரே கும்மாளம், கொண்டாட்டம். மொட்டை மாடியில் வெயிட் லிஃப்டிங்! கூட்டம் பெருகியது. அப்பா இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. அம்மா எல்லோருக்கும் விதவிதமாகச் சமைத்துப்போடுவாள். அதனால், அவளது பல அம்சங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மொட்டை மாடியில் நாங்கள் குளிப்போம், ‘டேங்க்’ குழாயைத் திருப்பிவிட்டு! அப்பா கீழே விசனமாக இருப்பார்.

    நாலணா பந்தயத்திற்காக பாபு மொட்டை மாடியிலிருந்து குதித்தான். சிராய்ப்போடு தப்பினான். என்னை அப்படியும் வீரனாக்கி விடுவதென்று ‘போர்டிகோ’ மேலிருந்து என்னைக் குதிக்கச் சொன்னான். சுகுமாரும் அவனோடு சேர்ந்துகொண்டான். அவர்கள் பிடிவாதம் பிடித்து, மாடிக்கதவையும் சாத்தி……. எனக்கு வேறு வழியில்லை. குதித்து, இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்!

    பெருமழை பெய்து ஏரி நிரம்பிவிட்டது. ‘சைக்கிள்கடை தாஸ்’ குடிசையைப் பெயர்த்துக் கொண்டு வந்த தண்ணீர், பழைய கண்மாய் வழியே பாயத் துவங்கியது. நாவிதரும், உள்ளூர் மேளக்காரரும், அனைவருக்கும் நண்பரான நடராஜன், அந்தக் கதையை அங்கு வந்த பாபுவிடம் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார். அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிச் சொல்ல, பாபு தயாராயிருந்ததை நான் கவனித்துக் கொண்டேன்! அவனும், சேகரும் ஒரு டயரை எடுத்துக்கொண்டு, அந்த ஏரி வெள்ளத்தில் “முல்லை மலர்மேலே” என்றுபாடிக்கொண்டு படகு விட்டார்கள்! ஏறக்குறைய, வெள்ளத்தில் மூழ்கவிருந்த ஒரு கிணற்றின் சுவற்றில் இளைப்பாறி, அதில் இறங்கி ஆழம் பார்த்தார்கள். சேகரும் கிளம்பிவிட்டான். பாபு, என் அம்மா கூப்பாடு போட்டதில் வீட்டுக்கு வந்து கையில் ஒரு காப்பி டம்ளருடன் மாடிக்குத்தாவி, அங்கிருந்து ‘ஆஸ்பெஸ்டாஸ்’ கூரைச் சரிவில் பாடிக்கொண்டு ஓடிவந்து, எங்கள் வீட்டுக் கிணற்றின் மேல் தாவி, ராட்டினம் தொங்குமே அந்த இரும்புக் கழியின்மீது — சலங்கையொலி கமலஹாசனெல்லாம் பிச்சைவாங்கும்படி, தகிடதகதிமி தந்தானா செய்து, இரண்டு மூன்றுமுறை நாங்கள் அலற அலற ஓடி……. எல்லாம் மழையில்! பிறகு பூப்போல இறங்கிவந்து, சாதுவாகக் காப்பி குடித்தான்!

    அவனை விட்டுவிட்டு நான் எதுவும் சாப்பிடவோ, அருந்தவோ கூடாது! ஒருமுறை ‘போர்ன்வீட்டா’ குடித்துக் கொண்டிருந்தேன், வந்துவிட்டான்! அவன் அடித்த லூட்டியில், நான் குளியலறைக்குள்ளே சென்று அங்கு குடிக்க முயன்று, அவன் கதவுக்கு அந்தப் புறத்திலிருந்து செய்த கோமாளித்தனத்தில் துப்பிவிட்டேன்!

    அவன் சந்தோஷப்பட்டான்!

    எங்கள் வீட்டில் கிணறு வற்றிவிட்டது. ஆழமாய்த் தோண்டினால்தான் நீர் சுரக்கக்கூடும் என்றார்கள். பாபு, பிச்சை, சேகர் மூவரும் வந்துவிட்டார்கள்! நானும் கிணற்றுக்குள் இறங்கினேன், அல்லது இரக்கமின்றி இறக்கப்பட்டேன்! மிகக் கடுமையான பணியைத் தனது நகைச்சுவையால் ஒரு விளையாட்டு மாதிரி செய்துவிட்டான் பாபு. ஆங்கிலம் பேசியே தீருவது, அதுவும் என் அப்பாவிடம் என்று ஒரு முடிவுக்கு வந்து, கிணற்றுக்குள்ளிருந்து அவன் படுத்திய பாட்டில், அப்பா கிணற்றுக்குள் குதிக்கத் தயாராய் விட்டார்! தண்ணீர்தான் இல்லை! ராட்டினத்தை மெல்ல அசைத்து வாளியில் டீ வரும்! கிணற்றுக்குள்ளேயே குடித்துவிட்டு பீடி பிடிக்கவேண்டும் என்பான். அது நல்லது என்று ஆயுர்வேதத்தில் சொல்லியிருப்பதாகக் கதை விடுவான். அன்று மாலைப் பொழுதில் பாபுவின் முயற்சியால் புதிய ஊற்றுக்கள் திறந்தன. நாங்கள் அந்த வீட்டில் இருந்தவரை எங்களுக்குப் பஞ்சமின்றித் தண்ணீர் கிடைத்தது. ஆனால் நான் சம்மட்டி அடிக்கும்போது பிசகி அவன் நெற்றியை உராய்ந்து ரத்தம் கொட்டியது. எல்லோரும் துடித்துப் போனோம். அவன் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு சிவாஜி பார்வை பார்த்தான்! இந்தப் பணியில் அவன் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. என் வீட்டார் கவனித்து மருத்துவ சிகிச்சை அளித்திருக்க வேண்டும்..

    பாபுவின் வீட்டார் அனைவரையும் எனக்குத் தெரியும். அண்ணன் வெங்கடேஷ் அற்புதமான கிரிக்கெட் வீரன். பந்து இரண்டு பக்கமும் நாகம்போல் சீறும்படிப் போடுவான். தம்பிகள் வாசு, ராஜன், தங்கைகள் ஹேமா, ஜெயந்தி எல்லோரும் என்னிடம் மிகவும் அன்புடனிருப்பார்கள். அவனும் அனைவரிடமும் மிகுந்த பாசத்துடனிருப்பான். பாபுவும், வாசுவும் திருமணத்திற்குப் பிறகும் சேர்ந்தே இருந்தார்கள். பாபு, தன் மனைவி உமாவைப் பலர் முன்னிலையில் கொஞ்சித் தமாஷ் பண்ணிப் பாடாய்ப் படுத்துவான். அவளுக்கோ ஒருபுறம் வெட்கம் பிடுங்கித் தின்னும், மறுபுறம் பெருமை தாளாது. நவீனும், வினோத்தும் சுட்டிப் பயல்கள். வாசுவின் மனைவி உஷா. மகள் ஸ்வப்னா. மகன்பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இவர்கள் எல்லோரும் மைசூரிலிருந்தார்கள்.

    நான் 1983 லிருந்து 1986 வரை பெங்களூரில் இருந்தேன். அப்போது அலுவல் நிமித்தம் அடிக்கடி மைசூர் செல்வேன். இந்தச் சகோதரர்களோடுதான் தங்குவேன். வேறிடத்தில் தங்க நினைக்கவும் முடியாது. பாபு தலைமையில், அவர்கள் ஒவ்வொருவரும் என்மீது காட்டிவரும் அன்பு விலைமதிக்கவொண்ணாதது. தன் சக்திக்கு மீறிக் கடன்வாங்கி விருந்தினர்களை உபசரிக்கத் துடிப்பான் பாபு. கெளரவத்திற்காக இல்லை. கொள்ளை அன்பு அவனுக்கு.

    மைசூரில் அவன்வீட்டில், எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். என் பாடல்களையும், கவிதைகளையும் விரும்பிக் கேட்பார்கள். எப்போதும் விருந்துதான். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள். ஒருநாள் பெஞ்சில் பாபு படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் தலைக்குமேலே ராமர் படமிருந்தது. மத்தியான நேரம். நான் தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தேன். அவனுக்கு அசதி. பலமாகக் குறட்டை விட்டான். அடுத்தடுத்து ‘இந்த பாலன் உள்ளே வரலாமா?’, ‘என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம்’ என்ற இரண்டு பாடல்களைப் புனைந்தேன். இந்த பாடல்கள் எப்போது பாடினாலும் ரசிக்கப் படுவன.

    பாபு எழுந்த பிறகு எல்லோரையும் அழைத்துப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். ‘ஐயோ! பாவிடா நான்! நீ பாட்டுப்போடும்போது மடையனாட்டம் கொறட்டை விட்டுத் தூங்கிண்டிருந்தேனே.’ என்று அனாவசியமாக ரொம்ப வருத்தப்பட்டான். நான் மேஜையில் தாளம்போட அவன் தலையில் ரவுடிக்கட்டுக் கட்டிக்கொண்டு கூத்தடிப்பான்!

    நல்லூர் இலக்கிய வட்ட ஆண்டு விழாவுக்கு நன்கொடை வாங்க வீடுவீடாகப் போனோம். அதிகம் பிராமணர்களிருந்த இடமது. பாபு, அவர்களிடம் பிராமண பாஷையிலேயே பேசச் சித்தமானான். நான் எவ்வளவோ தடுத்தும் ‘நீ சும்மா இருடா’ என்று என்னைத் தள்ளிவிட்டு, ஒரு பெரியவரிடம் ரொம்ப பவ்யமாகச் சென்று, ‘எங்களுக்கு வருஷாப்தீகம், நீங்க ஒத்தாசை பண்ணணும்,’ என்க, அவர் முழிபிதுங்க, அவனைப்
    பரபரவென்று தள்ளிக்கொண்டு வந்து, ‘அடேய்! அதற்கு அர்த்தம் திவசம்டா,’ என்று சொல்ல அவன் பலமாக ரசித்தான்!

    பாபுவும், வாசுவும், “அப்படி நீ என்னதாண்டா வேலை செய்கிறாய்?” என்று கேட்டார்கள். ஒரே நாள் என்னோடு அதிகாலையில் சைக்கிளில் வந்து நான் செய்யும் வேலையை அல்லது படும்பாட்டைப் பார்த்து மிகவும் வருந்தினார்கள். ‘மவனே, என்கிட்ட மட்டும் காசிருந்தா ஒன்னெ இப்படிக் கஷ்டப்பட விடுவேனா?’ என்பான் பாபு. எனக்கு பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகிவிட்டது. கடைசியாக ஒருமுறை அனுவோடு மைசூருக்குச் சென்றேன். அவன் சின்னக் குழந்தையைப்போல் அழுதான். ‘இதுக்குத்தாண்டா யார்கிட்டயும் பாசம்வக்கக் கூடாதுன்றது,’ என்று பொருமினான்.

    பாசத்தைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது. எல்லாரிடமும் அப்படியேதானிருந்தான்!

    நானும் பாபுவும் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறோம். அதில் அவனுக்குப் பிரத்யேகப் பெருமை உண்டு. அப்புறம் நான் விட்டுவிட்டேன். அவன் தொடாததில்லை! தொட்ட எதையும் விட்டதுமில்லை! நான் மதுரையில் இருந்தபோது கூட, என்னை வந்து பார்த்திருக்கிறான். அது மட்டுமல்ல, என்னுடனிருந்த நண்பர்களைக் கவர்ந்துமிருக்கிறான். என் நண்பர்களெல்லாம் அவனுக்கும் நண்பர்களானார்கள். அதில் சுப்புவும் உண்டு. ஒருவழியாய் சுப்புவுக்குக் கல்யாணம் ஆனதும் தேனிலவுக்கு அவன் மைசூர்தான் வரவேண்டும் என்று பாபு ஆணையிட்டான். நாங்கள் ஒரு
    படையோடு போனோம்! பாபு என்ன செய்தான் தெரியுமா? தன் வீட்டைக் காலிசெய்துவிட்டு, அதைப் புதுமணத் தம்பதிக்கு விட்டுவிட்டு, வாசு வீட்டுக்குத் தன் குடும்பத்தோடு சென்றுவிட்டான்!

    அதுதான் பாபு என்று நீங்களே சொல்லத் துவங்கி விட்டீர்களல்லவா? அதுதான் பாபு!

    ஒத்தாசை செய்வது அவனுக்கு இயல்பு. மணிசார் 1973 -ல் நங்கைநல்லூரிலிருந்து மாம்பலத்துக்கு வீடு மாறினார். அப்போதும் அவன் அங்கிருந்தான்! முன்பு, கோவையில் என் மாமியார் மாமனார் வீடு மாறும்போது அவன்தான் வந்து ஒத்தாசை செய்தான். என் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவனிருப்பான் துணையாக. யார்யாரோ உறவினர்களின் கல்யாணத்துக்கெல்லாம் வந்து கடுமையாக உழைத்துவிட்டுக் காணாமல் போய்விடுவான் பாபு. என் வாழ்க்கையின் பல முக்கியமான கட்டங்களிலும் அவன் உடனிருப்பான். நடுவிலே கொஞ்சநாள் ஏதோ அரபுநாட்டுக்குச் சென்றிருந்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான். அவனால் தனியாக இருக்க முடியாது. எவ்வளவு கூத்தடித்தாலும், அவன் இயல்பில் குடும்பஸ்தன். அவனுக்கு மனைவி, மக்கள், வாசு, உஷா, அவர்களது குழந்தைகள் எல்லோரும் வேண்டும். மறைமலை நகரில் டி.வி.எஸ். கம்பெனியில் வேலையாக இருக்கிறேன் என்று தொலைபேசியில்
    சொன்னான். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் கனடாவுக்குப் பயணம் செய்தபோது, அவன், தன்
    மகனுடன் விமான நிலையத்திற்கு ஓடிவந்துவிட்டானே! அவன்தான் டிராலியைத் தள்ளினான்! அப்போதும் ஏதோ தமாஷ்தான். 2006 ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி, என் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவுக்கு டாக்சி வைத்துக்கொண்டு குடும்பத்தோடு வந்து கடைசிவரை இருந்து, ரகளை பண்ணி, விசிலடித்து, எல்லோரும் சென்றபிறகு என்னோடு தோசை தின்று, என் மனைவி அனுவுடன் என்னைப் பற்றி உருகிக்கொண்டிருந்தான். ‘அனேகமாக மஸ்கட் போய்டுவேண்டா, விழாவுக்கு வரமுடியும்னு தோணலெ,’ என்றவன் அனைவரோடும் வந்திருந்து நங்கைநல்லூர் நண்பர்களோடு போட்டோ எடுத்துக்கொள்ளத் தோதாயிருந்தது. மணிசார்தான் அப்போது இல்லை என்று நாங்கள் நினைவுகூர்ந்தோம்.

    எனக்காக, நானும் என் பாடல்களும் பிரபலமாக வேண்டும் என்று கனவு காணும் நண்பர்களில் பாபு முக்கியமானவன். என் வாழ்வில் 1968 முக்கியமான வருடம். அதற்குச் சற்று முன்பு ஹரிகிருஷ்ணன் பரிச்சயமானான், பள்ளித்தோழனாக. பிறகு, பாபு, அவன் மூலம் வீரராகவன், மற்றும் மணிசார்.

    சரி, பாபுவைப் பற்றிச் சொல்ல இப்போது என்ன அவசியம்?

    நாளை அவன் பிறந்த நாளல்லவா?

    இன்றிரவுக்கும், நாளைக் காலைக்கும் ஒரு சுமையான இடைவெளி இருக்கிறது. இதற்கிடையே, பாபுவைப் பற்றிய இன்னொரு சுவையான தகவல் நினைவுக்கு வருகிறது.

    என் உறவினர் ஒருவர் சுந்தரம் ஃபேசனர்ஸ் கம்பெனியில் உயர்பதவி வகித்தார். (சமீபத்தில் புற்றுநோயால் இறந்துபோனார் அந்த மிக நல்ல மனிதர்) அவர்களது தொழிற்சாலையில் ஆயுத பூஜை விழாவுக்காக எங்களை ஒரு நிகழ்ச்சி நடத்தித்தரச் சொன்னார். நான் வழக்கம்போல், மணிசார் வீட்டுக்கு ஓடினேன். படபடப்பாய் நான் பேசியதை, வழக்கம்போல் நிதானமாகக் கேட்டுக்கொண்டார் அவர். பிறகு, அவர், நான், வீரரகவன், பாபு, வெங்கடேஷ் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியைச் செய்வோம் என்று முடிவானது.

    வசனமில்லாமல் ஒரு குட்டி நகைச்சுவை நாடகம் தயாரித்தார் மணிசார். எனக்கு நகைச்சுவை வரும் என்று கண்டுபிடித்தவர் அவர்தான்! அதில், பாபு ஒரு பெண்ணாக வருவான். ஒப்பனை எதுவும் கிடையாது! மீசை, தாடியோடு! ஆனால், அவன் காட்டிய பாவனை, செய்த சேட்டை எல்லோரையும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்தது. அவன் தேங்காய் சீனிவாசனாக, நான் சுருளி ராஜனாக ஒரு துணுக்குப் போட்டோம். மணிசாரின் மருந்து வியாபாரித் துணுக்கு எல்லோரையும் கவர்ந்தது.. ஆயிரம் பேர் நிரம்பிய அந்த அரங்கில் எங்கள் நிகழ்ச்சிதான் முதன்மையாய் விளங்கியது என்று அனைவரும் பாராட்டினார்களாம். நாங்கள் மணிசாரின் பின்னால் சின்னக் குழ்ந்தைகள்போல் குதூகலமாய் வந்தோம். எழும்பூர் இம்பாலா ஓட்டலில் மசாலாபால் அருந்திவிட்டு பான்பீடா போட்டுக்கொண்டு, அவரைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டு,
    நங்கைநல்லூருக்கு ரயிலில் ரொம்பச் சந்தோஷமாக வந்துசேர்ந்தோம்.

    அவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்!

    இன்று பாபுவின் பிறந்தநாள்! இதோ, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ‘மஸ்கட்’ டிலிருந்து கிளம்பிய விமானம் வந்திறங்கிவிட்டது. என்ன வயதிருக்கும்? என்னைவிட ஓரிரண்டு வயதுகள் பெரியவன். பயணிகளெல்லாம் ஒவ்வொருவராய் இறங்குகிறார்கள். பணம் சம்பாதிக்க வெளிநாட்டுக்குப்போய், அங்கே படாதபாடுபட்டு, விடுமுறையிலோ, அல்லது ஒரேயடியாகவோ சொந்தவூர் திரும்பும் பயணிகளின் முகமெல்லாம் நிம்மதியின் ஆயாசம்! தாய்நாட்டை விடவும் சிறந்தவூர் இருக்க முடியாது. என்ன ஏழ்மையோ, ஒண்டுக் குடித்தனமோ, நம்வீட்டில் நம் குடும்பத்தோடு கூடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது, லுங்கி, கிழிந்த பனியன், கழுத்தில் ஒரு துண்டு என்று டி.வி.யில் இந்தியா, கிரிக்கெட் மாட்ச்சில் வெற்றி பெறுவதைப் பார்த்துக் குழந்தைகளோடு கும்மாளம் போடுவது, அவர்கள் அறியாதபோது மனைவியைக் கொஞ்சுவது என்று எத்தனை எத்தனையோ சின்னச் சின்ன சந்தோஷங்கள் நமது தரித்திர வாயிலில் தங்கத் தோரணம் கட்டுகின்றன!

    என்ன இன்னும் இவன் இறங்கவில்லை? நங்கைநல்லூரில் சொந்த வீடு வாங்கியாயிற்று. அதற்கு கிருஹப் பிரவேசம் செய்யவேண்டும் என்பதற்குத்தானே வருவதாகச் சொன்னான்?
    கண்பொங்கக் கட்டிக் கொள்ளத் துடிப்பவன் என்ன தூங்கிவிட்டானா?

    அந்தோ!

    பாபு, இறங்கி வரவில்லை. இறந்து வருகிறான். பெட்டி பெட்டியாய்ப் பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்து மகிழ்ந்தவன், பெட்டிக்குள் பரிசுப்பொருளாக வருகிறான். விதியின் சதிக்கு அக்கினிக்குப் பரிசாக வருகிறான். இரக்கமே இயல்பான என் நண்பனின் உடலைச் சுமந்த பெட்டி, இறக்கப் படுகிறது…செத்த பிணமும் துள்ளும்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசியவன், இனி பேசுவதில்லை என்று முடிவெடுத்து விட்டான். நாலு காசு சேர்த்துப் பெட்டியில் பத்திரமாக வைக்கத் தெரியாதவன், இதோ பெட்டியில் பத்திரமாக வருகிறான்.

    சென்னைக்குக் கிளம்ப நாள் பார்த்துக் கொண்டிருந்த பாபுவுக்கு மார்வலி வந்துவிட்டது. மருத்துவரிடம் சென்றிருக்கிறான். ஈ.சி.ஜி. எடுத்து அதில் ஒன்றுமில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். மாரடைப்பு நடக்கும் போதல்லவா அந்த வரைபடம் எதையாவது காட்டும்? அதிகம் பயனற்ற அந்தப் பரிசோதனையின் தரத்தை மருத்துவம், ஏனோ இன்னும் உயர்த்தவில்லை. அறைக்கு வந்து சேர்ந்தவுடன், நெஞ்சுவலி அதிகமாகி இறந்துவிட்டான் பாபு. மருத்துவ மனையில் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறான். தனிமையே விரும்பாதவன், இப்படித் தனியாய் விடப்பட்டு என்னபாடு பட்டானோ!

    வாசுவுக்கு இனிமேல் வயது கிடுகிடுவென்று கூடிவிடும். பாபுவின்றி வாசுவைக் கற்பனை செய்யக்கூட முடிவதில்லை. பிச்சை, தன் ஒரே தோழனை இழந்துவிட்டான். தனது அத்தனை கோபதாபங்களையும் தாங்கி அவனைப் பிரியாமல் நேசித்த நண்பன் போய்விட்டான் என்பதைப் புரிந்துகொள்ள பிச்சைக்கு நேரமாகாது; தாங்கிக் கொள்ள வலுபோதாது. உமா, இனி எப்படி வாழ்வைக் கழிப்பாளோ? இதுவரை நடந்த வாழ்க்கையை இனிமேல் கழிக்க வேண்டும் என்பதுதான் கொடுமையானது. குழந்தைகள்தான் அவளைத் தேற்றவேண்டும்..

    வீரராகவன் நெஞ்சம் சூடுபட்டாற்போலத் துடிக்கும். அது சீக்கிரமே கவிதையாக வெடிக்கும்.

    என் வாழ்க்கையின், என் வீட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவன்கலந்து கொண்டு உழைப்பாலும், அன்பாலும் மனதிற்கு எவ்வளவோ மகிழ்ச்சி கொடுத்திருக்கிறான். நானோ, அவன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்கூடக் கலந்துகொண்டதில்லை. அதற்காக அவன் வருத்தப்படவில்லை. ‘வர முடிஞ்சா வந்திருக்க மாட்டானா?’ என்று அவனே சமாதானம் சொல்லிவிடுவான்.

    ஆம், அவனது கல்யாணத்திற்கும் நான் செல்லவில்லை. இன்று அவன் கருமாதிக்கும் நான் செல்லவில்லை. சில சாதாரணக் கடமைகள், சில முக்கியமான கடமைகளைச் செய்யவிடாத துயரம், என்வாழ்வில் இயல்பாகிவிட்டது.

    ஒவ்வொரு மனிதனும் தன்னை மேம்படுத்திக்கொள்ள சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட விஷயங்களைச் சாத்திரங்களோ, பேராசிரியர்களோ, அறிஞர்களோ கற்றுத் தரவில்லை. தாடியும், லுங்கியுமாயத் திரிந்த என் நண்பன் பாபுவைப் போன்றோரிடமிருந்தே நான் மிக மேன்மையானவற்றைத் தெரிந்துகொண்டேன். மேன்மை, பட்டுத்துணி அணிந்து மினுக்குவதில்லை. தன்னிடமிருக்கும் நேயத்தைப் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இயல்பில், அடுத்தவர் நெஞ்சைச் சுலபமாகத் தொட்டுவிடுவதே மேன்மை.

    யோகீச்வரர் மாவுமில் என்று ஒன்றிருந்தது நங்கைநல்லூரில். அதன் வாசலில் அவ்வப்போது வந்தமரும் ஓர் அரவாணிப் பிறவியிடம் பாபுவுக்குப் பழக்கமுண்டு. சைக்கிளை நிறுத்தி அந்தத் திருநங்கையோடு அவன் பேசுவது எனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. ‘இன்னா ஒம்பேர என்னாண்டையே சொல்லமாட்டியா?’ என்று வாஞ்சையோடு கேட்கும்போது, அது தனது காவிப்பல் தெரிய வெட்கமுடன் சிரித்து, ‘என்னெ ரோசான்னு கூப்டுவாங்க. சரோசான்னும் கூப்டுவாங்க,’ என்று பதில்சொல்லும். பாபு, அதை அப்படியே சொல்லிக் காண்பித்து அசத்துவான்.

    எனக்கு நாயென்றால் குலைநடுக்கம். அவனுக்குத் தெருநாயெல்லாம் பழக்கம்! ஒருநாள் நான் பார்த்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. மணல்மேட்டை நோக்கி அவன் நடக்கிறான். அங்குமிங்கும் நின்றுகொண்டிருந்த தெருநாய்கள் அவனை ஆர்வத்தோடு பார்த்தன. பொதுவாக, தாடி, லுங்கி இப்படிப் பார்த்தால் நாய்கள் குரைக்கும். இங்கே அப்படியில்லை. ‘எல்லாம் வாங்கடியம்மா,’ என்றான். உடனே ஒரு நான்கைந்து நாய்கள் அவனிடம் ஓடிவந்து வாலை ஆட்டுவதும், கொஞ்சித் தீர்ப்பதுமாய்…என்னால் நம்பவே முடியவில்லை. அதிலும் ஒரு பெண் நாயிடம் அவன் நடத்திய உரையாடல்! ‘இன்னா, எங்கெ ஊர் மேஞ்சிட்டு வர்றே? எத்தினி லெட்டர் போட்டாலும் ஒருதபா கூட பதிலே போடறதில்ல, ஓடுகாலி,’ என்று அதன் மோவாயை இடித்தான். அது முக்கிய முனகலும், சிணுங்கிய சிணுங்கலும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது!

    ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மோட்டுவளையைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனையோ காட்சிகள் சித்திரங்களாக விரிகின்றன. மனத்திரையில் ஊர்வலமாக வருகின்றன. பாபு, என் வாழ்க்கையின் ஒரு சுவாரசியமான அங்கம். அதை முழுவதுமாய் வார்த்தையில் வடித்துவிட முடியாது. சரி, எதைத்தான் வார்த்தை சரியாகச் சொல்லியது? நான் அவனருகே இல்லாத ஆதங்கத்தில், துயரத்தின் ஆற்றாமையைத் தாங்கமுடியாமல், நான் நினைவுகூர்ந்தபடி நிறுத்தாமல் எழுதிவைத்தேன். இதுதான் சரி. ஏனென்றால் அவன் அப்படித்தான் வாழ்ந்தான். நிதானித்து எழுத இது இலக்கியக் கட்டுரை அல்லவே! என்னிதய அஞ்சலி இது! அது, மலர்வளையச் சம்பிரதாயம். இது மொத்தத் துக்கத்தையும் கீழே பொத்திவைத்திருக்கும் மெளன விம்மல்….

    இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சவமாய்ப் பிறந்த நாளன்று வந்துசேர்ந்து அதோ சிதையில் தகனமாகின்றான். அதோ! பாம்புகள்போல் நடனமிடும் அந்த ஒளிக்கொழுந்துகளுக்குப் பின்னே, அவனது நிழலையே காண்கின்றேன். அந்த நிழலுருவத்திலும், அவன் விழிகள் பனித்திருந்து ஜ்வாலையில் மின்னுகின்றன.. வருந்தாதே பாபு! வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக நினைக்காதே! உன் நேசத்தால் பயன்பெற்ற என்னைப் போன்றோர் எத்தனைபேர் தெரியுமா? ஒரு கவிதையைக் கவிஞன் நிச்சயிக்க முடியுமா? கோடுபோட்டு வெள்ளத்தைப் போகச் சொல்ல முடியுமா? கவிதை என்னும் அதிசயமும், வெள்ளம் என்னும் விபத்தும், இயற்கையின் இயல்புதானே!

    நீயும் அப்படித்தான்.

    நேற்றிரவும் நீ வந்து நின்றாய். “நீ இன்னும் உணர்ச்சிவசப்படுவது வேண்டாம்” என்று என் குருவின் உபதேசத்தை உனக்குத் தந்தேன். நீ அதைப்பற்றிக்கொண்டாய். உன்குரலில் அதைக்கேட்டபோது எனக்கு நிறைவாயிருந்தது. நீ எதையும் எளிதாகப் பற்றிக்கொண்டு அதைவிட எளிதாக விட்டுவிடுவாய். ஆனால் அதுபற்றி இன்றெனக்குக் கவலையில்லை. ஏனென்றால், என்மூலம் வந்தவொன்று உன் அந்தராத்மாவைப் பற்றிக்கொண்டுவிட்டது. இதை நீ விடமுடியாது!

    உன் பயணம் தொடரும் பாபு! உன்னுயிர் ஒழுங்குபெறும். உன்னால் நன்மைகள் விளையும்.

    பாபு மறைந்துவிட்டான். அதோ, என் முடிவுக்கு, முதல்மணி கேட்கிறது…..

    Share
  • மறக்க முடியாத மதுரை – 2

    இசைக்கவி ரமணன்

    மதுரையில், ராஜா முத்தையா மன்றத்திற்கு அருகே கற்பகம் உணவு விடுதி ஒன்றிருந்தது. அதுதான் எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரே ஓட்டல் என்பதால் நாங்கள் கற்பகமே கதியாகக் கிடந்தோம். சாப்பாடு நன்றாகத்தானிருந்தது; சிற்றுண்டி இன்னும் நன்றாக இருந்தது. இருந்தாலும், தினமும் ஓட்டலில் தின்னுவது சரிப்படவில்லை. எங்களுக்கோ வேறு வழியும் இல்லை. அங்கிருந்த அத்தனைச் சிப்பந்திகளும் நண்பர்களாகி விட்டார்கள். வெளிச்சாப்பாடு, மாதாமாதம் அலுவற் பயணங்கள் இவற்றால், எப்போதும் கெட்டே இருந்த வயிறு இன்னும் கெட்டுப் போனது. வீட்டில் வளரும்போது, இட்டிலியை இளக்காரமாகப் பார்த்த நான் இப்போது ஏறக்குறைய இட்டிலிக்குத் தாலியே கட்டிவிட்டேன்! இட்டிலியைத் தின்றபிறகு வேறெதைத் தின்றாலும் ஒன்றும் செய்யாது என்பதாக ஒரு சித்தாந்தம் எங்களிடையே இருந்தது!

     raman

    ஒருநாள், வழக்கம்போல் காலைச் சிற்றுண்டிக்காகச் சென்று, ‘என்ன இருக்குண்ணே?’ என்று கேட்டேன். சர்வர் பட்டியல் பலகையில் இருந்ததை — நான் நடுவில் தடுத்தபோதும் — ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார். ‘போதுங்க! போட்டுக் கொழப்பாதீங்க!’ என்றேன் நான். அவரோ, ‘எது? நானா கொழப்பறேன்?! நீங்க திங்கப் போறது ரெண்டு இட்லி, ஒரு வடை, அதிகம் போனா ஒரு பொங்க. நானும் பாத்துக்கிட்டுத்தானே இருக்கேன்! இதுக்கு நெதமும் ‘என்ன இருக்கு’ன்னு ஒரு கேள்வியை எதுக்குத்தான் கேக்குறீய்ங்களோ?!’ என்று ஒரே போடாய்ப் போட்டார்! பக்கத்தில், டபரா, டம்ளர் தட்டுக்களை எடுத்து வாளியில் போட்டுக் கொண்டிருந்த சிறுவன் கரணமலை, ரசித்துச் சிரித்தான். நான் பார்த்ததும், ‘ஒண்ணும் தப்பா எடுத்துக்கிட வேணாம்,’ என்றான். ‘இதுல தப்பா நெனக்கிறதுக்கு என்ன இருக்கு? நல்லா இருக்கியா?’ என்றேன். பதில்பேசத் தயங்காத மதுரையில்தான் எனக்கு எத்தனை விதமான நண்பர்கள்! சின்ன வாழை மட்டையால் டேபிளை நேர்த்தியாகச் சுத்தம் செய்தான் கரணமலை. இவர்களுக்குத்தான் சிரிப்பு எத்தனை இயல்பாகவும், முழுமையாகவும் இருக்கிறது!

    ramana

    ram

    காப்பி முடிந்து வெளியே வந்தால், பெட்டிக் கடையில் பாலகிருஷ்ணன் தயாராக வெற்றிலை, பாக்குப் புகையிலையை நீட்டினார். பளிச்சென்று இருக்கும் அந்தக் கடைக்காரரோடு பேச்சுக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. சிரிப்பும், வம்புமாக இருக்கும் அவர் பேச்சு. அப்போது நடந்த ஓர் உரையாடலை என்னால் இன்றைக்கும் மறக்க முடியாது. வெற்றிலை வாங்கிக் கொண்டார் ஒருவர். பார்க்க மிகவும் சாதாரணமாக இருந்தார்.

    ‘சுண்ணாம்பு எங்க?’

    – அந்தாத் தூணுலெ கட்டித் தொங்க விட்டிருக்கு, பாக்க மாட்டியளோ? புதுசாக் கேக்கீக?’

    ‘சரித்தான்; வெத்தலைய மருதயில வாங்க்கிக்கிட்டுச் சுண்ணாம்புக்குத் திண்டுக்க போக வேண்டி இருக்கு!’

    நான் ரசித்துச் சிரித்தேன், பாலகிருஷ்ணனுக்கு முகம் தொங்கிவிட்டது. சுண்ணாம்பை எடுத்துக் கொண்டவர் அப்படியே போகாமல், கடையருகே வந்து நின்று வெற்றிலையில் பரபரப்பாகத் தடவிக்கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் கடகடவென்று சிரித்தார்.

    ‘எதுக்கு இப்பம் சிரிக்கிறீய?’

    – இல்ல, வெத்தலக்குத்தான் சுண்ணாம்பு தடவறீயளா, வீட்டுக்குத்தான் வெள்ளையடிக்கீகளான்னு பாக்கேன்

    இவர் முகம் இறுகிப்போய்விட்டது. ஒன்றும் பதிலே சொல்லவில்லை. வெற்றிலையைச் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டு, மிஞ்சிய சுண்ணாம்பை, கடைப்பலகை அடியில் நாசூக்காகத் தேய்த்தபடிக் கேட்டார்:

    ‘பளம் எம்புட்டு?’

    கழுத்தை வலதுபுறமாகச் சாய்த்தபடிப் பாலகிருஷ்ணன் சொன்னார்,

    – எப்பமும் போல அம்பது காசுதான்

    ‘பளுத்திருக்கோ?’

    குலையில் கைவைத்திருந்த பாலுவுக்குக் கொலைவெறி வந்துவிட்டது. தன்கடைப் பழத்தை யாரும் சந்தேகிப்பதைச் சகிக்கமாட்டார் அவர்!

    – எல்லாம் வெளஞ்ச பழம்தான் நாங்க வியாவாரம் பண்ணுவம் பாத்துகிடுங்க!

    ‘அது பளம்கிறீய்ங்க; கையி பிடிச்சபடி இருக்கு; காலுரெண்டும் ஆகாசத்துல தொங்கிக்கிட்டிருக்கே அதான் கேட்டேன்!’ என்று ஓசைப்படாமல் இரண்டு பழங்களுக்கான காசை மிட்டாய் டப்பா மேல் வைத்துவிட்டு அப்பாவியாக நின்றார்!

    பாலகிருஷ்ணனின் பரிதாபம், நான் பார்த்தால் அதிகமாகும் என்று நாலெட்டு வைத்தேன். அருகே, என் தோழியான இளநீர்ப்பாட்டி, கடை பரப்பியிருந்தாள். சின்னக் கோணிச்சாக்குப் படுதாவின் கீழ்தான் அவள் இந்தக் கடுமையான வெயில் மாதங்களைக் கழிக்க வேண்டும்.

    கடந்த காலக் கதைகளை முகத்தின் ரேகைகளே

    படம்போட்டுக் காட்டுகின்ற பாட்டி

    படுதாவே கூரையாக, பாயுமாக, பரப்பிவைத்த கடையுமாக…

     

    இவள் விதவையாகி எத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களால் விளைந்த அசதி அவளைக் கப்பிக் கிடந்தது. ஆனால், எதற்கும் யாரையும் குறைகூறாத ஒரு மனோபாவம் அவள் மனதில் அமைதியாய் நிறைந்திருந்தது. அவள் முகத்தின் விரிவற்ற இனிமைக்கு அதுதான் காரணம்.

    ‘என்ன பாட்டி செளரியந்தானே?’

    – வாப்பு! வந்துக்க

    என்று கழுத்திலிருந்து கையிடுக்கில் வழிந்தோடும் வியர்வையை, எத்தனை லாகவமாய்த் துடைத்துக் கொண்டாள்! ரவிக்கை போடாத அந்தப் பெண்மணியின் சேலை ஒருபோதும் விலகியதில்லை! அவள் துடைத்துக்கொண்ட பாங்கில், எனக்கும் களைப்பு நீங்கியது.

    ‘எளநி குடிப்பமா?’

    – நான் எம்புட்டுத்தரம்தான் சொல்லுறதோ! அங்ஙன ஓட்டல் உள்ளறபோயிக் காப்பியக் குடிச்சிட்டு வந்து ஒடனே இங்க எளநி குடிக்க வேணாம்னு!

    ‘ஐயோ! மறந்துபோச்சு ஆத்தா!’

    -எப்படித்தா மறப்பீயளோ? என்ன எளவட்டோ?

    அந்த அக்கறை மிகுந்த கோபத்தால் குளிர்ந்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ, காய்களைச் சுற்றுமுற்றும் பார்த்துக் கண்ணால் ஊடுருவி, ஒன்றை எடுத்துச் சீவித்தந்தாள். எனக்கு ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது பிடிக்காது. வாயை வாயில் பதித்து, சொட்டு கீழே விழாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டே தொண்டையில் கவிழ்க்க வேண்டும். அந்தக் குளுமை, இனிமை இவை கலந்த சுகம் நெஞ்சில் இறங்க, கண், அதுபாட்டுக்கு மூடிக்கொள்ளும்! கடைசியில் கொஞ்சம் கவனம் பிசகி, நீர் சட்டையை நனைக்கும்! அப்படிக் குடித்தால்தான் இளநீர் குடித்தது போலிருக்கும். பாட்டி, அதற்கேற்ப, வாயை நறுவிசாக அகலப்படுத்தித் தருவாள்.

    – அங்கிட்டு ஒக்காரு

    இன்னும் கோபம் குறையவில்லை! அவள் சொன்ன பெட்டி மீது உட்கார்ந்து கொண்டு, இளநீரைக் கையில் வாங்கிக் கொண்டு (இல்லையென்றால் தரமாட்டாள்!) பேச்சைத் திருப்புவோமென்று கேட்டேன்:

    ‘சரி, வியாவாரமெல்லாம் எப்படி இருக்கு?’

    அவளா? சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் விடுவாளா?

    – இந்தா! இன்னும் ஒருக்கா இப்படிக் கண்ட மேனிக்கு எளநி கேட்டாத் தரமாட்டேன், சொல்லிப்புட்டேன் ஆமா!

    ‘சரி தாயி! அதான் சொல்லிட்டிங்கள்ளே! இனிமே கவனமா இருந்துக்குவேன்’

    – அதுக்குத்தாஞ் சொல்லுறது; காப்பியக் குடிச்சுப்போட்டு எளநியையுங் குடிச்சென்னு வய்யி; அப்பொறம் கல்லுக்கொடலாயிப் பீச்சும். எல்லாம் நல்லதுக்குத்தாஞ் சொல்லுறது

    என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள். நான் அவள் தந்த இளநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு க்ளாசில் டீயுடன் உட்கார்ந்து கொண்டு மெல்ல உறிஞ்சத் துவங்கினாள்.

    ‘ஏம் பாட்டி! இந்த வெய்யில்ல எதுக்கு டீயைப் போயி குடிக்கறீங்க? ஒரு எளநியைக் குடிக்க வேண்டியதுதானே?’

    – தே! பேச்சப் பாரு! நான் வாழற பவுசுக்கு எளநி கட்டுப் படியாவுமோ? டீ தான் தேறும்

    என்று, இன்னொரு மடக்கு விழுங்கினாள். தாழ்ந்திருந்த அவள் பார்வையில், நினைவுகளின் ஆரவாரம் தெரிந்தது. டீயிலிருந்து எழுந்த ஆவி, அதற்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை அல்லல்களோ! என்னென்ன பின்னல்களோ! இத்தனைக்ககும் மத்தியில், வியாபாரம் செய்து வயிறு கழுவ வேண்டிய கட்டாயம். அதிலும், எந்த உறவுமில்லாத என்மீது வாஞ்சை. தாய்மனம், ஆள்பார்க்குமா அன்பு காட்ட? மனது பாரமாகி, பாதி இளநீரை நான் கீழே வைத்துவிட்டுக் கிளம்பியதைக் கவனிக்காமல் சிலையாக அமர்ந்திருந்தாள் பாட்டி.

    பாட்டியும் டீயும்

     

    கிழிந்த கோணிக் கூரையின்

    ஓவியம் : ஜெயராஜ்
    ஓவியம் : ஜெயராஜ்

    கீழே இளநீர்ப் பாட்டி

    தாகத்திற்கு டீ தான்

    தருவித்து உறிஞ்சுகிறாள்

     

    விறகு சுமந்து

    வீதியில் கூவுகிறோம்

    விற்கவந்த விறகே

    விசித்திர ஆடையாகி

    வீதி வளைவில்

    வெந்து போகிறோம்

     

    விற்க வந்தது

    விற்று முடியாது

    வாங்கவும் முடியாது

     

    வேளாண்மை பொய்த்தாலும்

    விதைநெல் மிஞ்சும்

    மாளவிடாமல் வாழ்வை இழுக்கும்

    மர்ம வினைபோல

     

    மிஞ்சிய டீயிலும்

    மினுக்கு கொஞ்சம் மிச்சம்

    எடுத்துச் செல்லும் பையன்

    எச்சிலைப் பார்ப்பதில்லை

    களையான கருப்பு முகத்தில்

    கசப்பின் குரூரம்

     

     புகைப்படங்களுக்கு நன்றி: இசைக்கவி ரமணன்

    Share