இசைக்கவி ரமணன்

அன்புடைய நண்பர்களே!

எனது இனிய நண்பன் ஒருவனைப் பற்றி உங்களுடன் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். யாருக்குத்தான் நண்பர்களில்லை? நண்பர்களில்லாத வாழ்வும் ஒருவாழ்வா? எனவே, நான் என் நண்பனைப் பற்றி எழுதுவது உங்கள் அனைவருக்கும் பிடித்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஓர் அந்தரங்கச் சித்திரத்தை அம்பலமாக்குகிறேன்.

அன்புடன்,

ரமணன்

Rama1968 ஆம் வருடம். நாங்கள் பாண்டிபஜார் பகுதியிலிருந்து வீடுமாறி நங்கைநல்லூர் வந்துசேர்ந்தோம். அப்பா மட்டுமே பார்த்து வைத்திருந்த அந்த வீட்டை, நாங்கள் குடிபுகுந்த அன்றுதான் கண்டோம். அப்போது எனக்கு வயது 14. அருமையான என் கிரிக்கெட் நண்பர்களை விட்டுவிட்டு, ஏதோ ஒரு பெயர் தெரியாத தொலைதூர கிராமத்திற்கு ஏன் செல்கிறோம் என்று என் மனது நொந்து கொண்டிருந்தது. வந்த சிலநாட்களிலேயே எல்லாம் மாறிவிட்டது. சீக்கிரமே வீட்டின் பின்புறமே கிரிக்கெட் நண்பர்கள் கிடைத்தனர். கிணற்றில் நீரிறைத்துக் குளிக்கும் சுகம், நாமே போட்ட தோட்டம் என்று நங்கைநல்லூர் வாழ்க்கை படிப்படியாக வளர்ந்தது.

அங்கு வந்த வெகுவிரைவிலேயே ஒரு கலை நிகழ்ச்சியைக் காணவருமாறு புதிய நண்பர்கள் அழைத்தனர். இப்போது குருவாயூரப்பன் குடிகொண்டுள்ள நிலத்தில் அந்த நாளில் ஒரு சிமெண்டு மேடை இருந்தது. அங்கேதான் அந்த ‘நல்லூர் என்டர்டெய்னர்ஸ்’ குழுவின் நிகழ்ச்சி. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த மூன்று பேர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.

ஒருவர், வடக்கத்திக்காரர்போல் இருந்தார். அலைபுரளும் தலைமுடியைத் தள்ளிவிட்டுக் கொண்டு, ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு, ‘வரப்போகும் திரைப்படத்திலிருந்து ஒருபாடல்’ என்று அறிவிப்புச் செய்து, ‘உன்னோடு வந்தாலோ உறவாடச் சொல்லும்,’ என்று இனிமையாகப் பாடினார். ஒரு கோமாளியாக வேடமிட்டு பிரமிக்க வைத்தார். தொடர்ந்த நாடகத்தில் பட்டாணிக்காரன் போலத் தமிழ்பேசி நடித்தார். இன்றும் எனக்கு நண்பராக, மூத்த சகோதரராக விளங்கும் அவர்தான் மணிசார்..

இன்னொருவர், நங்கைநல்லூர் ‘சோ’ என்றழைக்கப்பட்ட வீரராகவன். குரலும், முழியும், மூக்குக் கண்ணாடியும் அப்படிச் சொல்லவைத்தன போலும். அத்தோடு முடிந்தன ஒற்றுமைகள். வீரராகவன், தனது வாழ்க்கையின் அல்லல்களை அடுத்தவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் கவிதைகளாய்ப் பாடும் கவிஞன். நேர்மையாளன். நேசமே நெஞ்சாகக் கிடப்பவன். இதோ இன்றுகூட அவனிடம் நான் பேசினேன்.

மணிசார் மேடையில் நிற்கிறார். அவர்தான் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியாம். இரண்டு கைகளையும் போரில் இழந்துவிட்டாராம். ஒப்பனை தத்ரூபமாகவே இருந்தது. ‘அதனாலென்ன? அதோ நிற்கிறாரே என் செகரட்ரி! அவர்தான் எனக்குக் கைகள்,’ என்றார். அருகே, அவரைவிடக் குள்ளமாக ஒரு பையன், கண்கள் பளபளக்க நின்றுகொண்டிருந்தான். அவர் அழைத்ததும், மணிசாரின் பின்னால் வந்து நின்று, தனது கரங்களை அவரது கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டுவந்து, அவர் பேசப் பேசக் கைகளாலேயே அற்புத பாவனைகள் காட்டினான். ஒரு கட்டத்தில் மணிசார் சிகரெட் பிடிக்கவேண்டும். இந்தப் பையன் சாரின் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்தாயிற்று. ஆனால் தீப்பெட்டியை எடுக்கும்போது அது விழுந்து விட்டது! இருவரும் அனாயசமாகக் குனிய, அந்தப் பையன் தீப்பெட்டியை எடுத்து, சிகரெட்டைப் பற்றவைத்து, மணிசாரின் முகவாயைச் சொறிந்தபோது, இதெல்லாம் ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தார்கள் என்றெண்ணிய அரங்கத்தார் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று.

அதே பையன் மீண்டும் மேடைக்கு வந்து பாலையா, அசோகன் (“எனக்குத் தொப்பை இல்லெ, இருக்கறதா நெனச்சுக்குங்க”) மற்றும் சிவாஜியைப் போலும் பேசி எல்லோரையும் அசரவைத்தான்.

இத்துடன் நிற்காமல் நாடகத்தில் டாக்சி டிரைவராக வந்து, சென்னைத் தமிழில் வெளுத்துக்கட்டி, உள்ள வசனத்தை மறந்து, அப்போது மனதில் தோன்றியதைப் பேசிக் கலக்கிவிட்டான்.

அவனைச் சந்திக்க ஆவல் கொண்டேன். அவன் மூலம்தான் மணிசாரையும், வீரராகவனையும்
சந்தித்தேன்.

இவன் முதலில் நம்மோடு பழகிவிட்டு அப்புறம் நம்மைச் சந்திக்கிறானோ என்று வியக்கவைக்கும்படி ஒரு நேசம். எல்லோரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்வான். அவர்களுக்குத் தெரிந்தவற்றில் ஏதேனும் தனக்குத் தெரிந்தவொன்றைப் பேசத் தலைப்படுவான்.

அவனுக்குத் தொடர்புகள் பிடிக்கும். வரம்புகள் தெரியாது! அதனால்தானோ என்னமோ பலரை ஒரே சமயத்தில் காதலிப்பது அவனுக்கு சாத்தியமாகவே இருந்தது. ஒரே நேரத்தில் ஒரு பெண்மணியும், அவள் மகளும் கூட அவனிடம் மயங்கிக் கிடந்தார்கள்! அதில் ஏதும் தவறிருப்பதாக அவன் நினைத்ததே இல்லை! அதேபோல், காதல் வேறு கல்யாணம் வேறு என்பதுபோல் ஒரு மனோபாவம் அவனுக்கிருந்தது. அவனுக்குக் கொள்கைகள் கிடையாது. பாவனைகள் மட்டுமே உண்டு. காதலியிடம் உண்மையிலேயே குழைவான்; மனைவியிடம் மிகுந்த பிரேமையுடனும், மரியாதையுடனும் இருப்பான்! தாய்மீது மட்டற்ற பாசம். அவள் மிகவும் வெகுளி. தந்தையோ அதற்கும் மேல். அவர் புகையிலையைத் துப்பிவிட்டுப் பேச ஆரம்பித்தால்தான் அவரும் எவ்வளவு வெகுளி என்பது புரியும். பாபுவின் பாச வெள்ளமே அவர்களை அப்படி ஆக்கிவிட்டதோ என்றுகூடத் தோன்றியது. அவனுக்கு அத்தை ஒருத்தி இருந்தாள். அவள்தான் அவனது ‘வெளி’ நடவடிக்கைகளை சதா சாடிக்கொண்டே இருப்பாள்.

ஒருமுறை, அவனை நான் ‘உரிய இடத்தில்’ கண்டுபிடித்து அவனோடு அவன் வீட்டுக்குச் சென்றேன். உடனே அவன் அம்மா அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அத்தையோ அவனை விடாமல் சாடி “நீ எங்கேர்ந்து வரேன்னு தெரியும். டே ரமணா நீ சொல்லுடா, அங்கேர்ந்துதானே வரான் அவன்?” என்று கேட்டவுடனேயே பாபு கையிலெடுத்த சோற்றுருண்டையை (மிகப் பெரிதாய்த்தானிருந்தது!) விசிறியடிக்க, பருக்கைகள் தரையெங்கும் சிதற, அவன் ருத்திர தாண்டவமாட, அத்தை விடாமல் கத்த, வைணவத் தமிழில் நமக்குத் தெரியாத கெட்ட வார்த்தைகள் இத்தனை இருக்குமோ என்று நான் வியக்க, அவன் என்னை இழுத்துக்கொண்டே வெளியே வர, ‘ஐயோ! சாப்பிடாம போறியேடா!’ என்று அவன் அம்மா அழுது அரற்றியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

பாபுவின் குணசித்திரத்தில் மூன்று அம்சங்கள் பிரதானமாக இருந்தன. ஒன்று காதல், இன்னொன்று கோபம். மூன்றாவது கோமாளித்தனம். ஏதோவொரு விசித்திரமான தைரியம்தான் அவனை நிர்வகித்தது. காரணமில்லாமலேயே பொத்துக்கொண்டுவரும் கோபமும், எடைதூக்கி
உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பின் மதர்ப்பும் அவனுக்கு அடிதடியில் ஒரு ருசியை ஏற்படுத்தியிருந்தன. தேவையின்றிப் பலவிதமான சண்டைகளில் ஈடுபடுவான். அடித்திருக்கிறான்; அடிவாங்கியுமிருக்கிறான். இந்த விவகாரத்தில்தான் அவனுக்குப் பிச்சை எனப்படும் கிருஷ்ணன் நண்பனானான். பாபு-பிச்சை என்று இவர்கள் இரட்டையர்களாகவே தென்பட்டார்கள். ஏதாவது ஒரு தகராறுக்கு எப்போதும் தயாராகவே இருந்தார்கள். பிச்சைக்கு நவரசமும் சினத்தின் வெளிப்பாடுதான்! பாபுவோ உணர்ச்சிகளின் கிலுகிலுப்பை. இவர்களிருவரும் பிராமணர்கள் என்பது உள்ளூர் ரவுடிகளுக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது. ஒரு முறை, நான் அவன் வீட்டுக்குச் சென்றபோது, பாபுவை அடித்துப்போட ஏழெட்டு பேர் சைக்கிள் செயின் போன்ற போர்க்கருவிகளோடு வந்திருந்தார்கள். அவனை வெளியே கூப்பிட்டார்கள். உள்ளிருந்து அவனது அம்மாவும், அப்பாவும் ஓவென்று புலம்பத் துவங்கினார்கள். பாபு அடிவாங்கவே இல்லை! ஏன் தெரியுமா? ஒரு நீண்டவுரையாற்றினான் பாருங்கள்! “என்ன அடிச்சுப்போட ஒங்களுக்கு ரெண்டு நிமிஷம் போதும்! எங்க அப்பா அம்மா காலடியிலெ ரத்த வெள்ளத்திலெ என்னெ நீங்க தூக்கிப்போடலாம். ஆனா..” என்று ஆரம்பித்து சிவாஜி கணேசனும், சைகாலஜிஸ்டும் சேர்ந்து கும்மியடித்தான். அம்மாடி! அடிக்க வந்தவர்கள் அழாத குறையாகத் திரும்பிப் போனார்கள்!

அவனுக்கு ‘தாடி’ பாபு என்று பெயர். எப்போதோ ஒருநாள் முழுச்சவரம் பண்ணிக்கொண்டு வந்து, கொஞ்சம் வெட்கமுடன் நிற்பான். மற்றபடி, தாடி வளர்த்து அதைப் படாதபாடு படுத்திக்கொண்டிருப்பான். தாடியும், லுங்கியுமாய் சைக்கிளில் திரிந்ததாலேயே அவனுக்கு ஒரு ரெளடித் தோற்றம் வந்துவிட்டது.

ஒருமுறை ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமதி மணி கிருஷ்ணசாமியின் கச்சேரி நடக்கிறது. அம்மையார் அருமையாகப் பாடினார்கள். அது தோடிராகம் என்று சொன்னவுடன் பாபுவுக்கும், பிச்சைக்கும் உற்சாகம் ஏறிவிட்டது. நாங்கள் ஒரு பத்து பேர் ஏரியிலிருந்த குருவாயூரப்பன் மேட்டில் அமர்ந்து கொண்டு உச்ச ஸ்தாயியில் ‘ஜகதோ தாரணா’ பாடுவோம், அல்லது கூப்பாடு போடுவோம். ஆளரவம் இல்லாத இடமாதலால் பிழைத்தோம். இல்லையென்றால் ஏதோ கொலை நடக்கிறது என்று போலீஸ் பிடித்துக் கொண்டு போயிருப்பார்கள். அந்த ஞாபகம் வந்துவிடவே, பாபு (பிச்சை சகிதம்) மேடைக்குச் சென்று அம்மையாரை ‘ஜகதோத்தாரண’ பாடும்படிக் கேட்டுக்கொண்டான். அதை அங்கிருந்த பிரமுகர்கள் ரசிக்கவில்லை. மேலும், விசிலடிக்காமல் எதையும் ரசிக்கத் தெரியாது அவனுக்கு! அப்படியொரு பாராட்டை மணிகிருஷ்ணசாமி அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கவே மாட்டார்கள்!! அன்று, கச்சேரியில் மிருதங்கமும் களை கட்டி விட்டது. அல்லது அப்படித் தோன்றியது எங்களுக்கு. பாபுவால் தாங்க முடியவில்லை. உடனே ஒரு மாலையை வாங்கிக்கொண்டு மேடைக்கு (ஆமாமாம், பிச்சையோடுதான்!) விரைந்து, படபடக்க மைக்கைப் பிடித்து நாலுவார்த்தை சொல்லிக் கண்ணீர் மல்கி, மாலையையும் மிருதங்கக்காரர் கழுத்தில் போட்டுவிட்டான்! அவர், இப்படி, தாடி, லுங்கி சகிதம் கோவில் கச்சேரியில் இதுவரை யாரும் பாராட்டியிராததால், இந்தவூரில் ‘இவர்களுக்’கெல்லாம் கூடப் பாட்டு ரசிக்கத்தெரிகிறதே என்ற வியப்போடும், மாலையைப் போட்டுக்கொள்ளவில்லையென்றால் இவன் நம்மை ஒருபோடு போட்டுவிடுவானோ என்று சற்றே அச்சத்தோடும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் முழித்தார். பிரமுகர்களின் முகச்சுளிப்பைச் சட்டை செய்யாமல், பாபுவும், பிச்சையும் ரொம்பப் பரவசமாகி நாங்கள் அமர்ந்திருந்த மணற்பரப்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது.

“டேய் நில்லு!” என்றது ஒரு குரல்.

குரலுக்கு சொந்தக்காரர் அந்த ஊரில் சித்தராக வலுக்கட்டாயமாக மதிக்கப் பட்ட ராஜகோபாலன் என்பவர்.

இங்கே சிவாஜியைப்போல் புருவம் உயர்ந்து திரும்பினான் பாபு.

“என்னடா, கச்சேரி நடுவிலெ கலாட்டா பண்றீங்களா?”

‘கலாட்டாவா? நாங்க ரசிச்சோம்; பாராட்டினோம் அவ்வளவுதான்,’ என்றான். பிச்சை, எதுவாயிருந்தாலும் நாலு தட்டு தட்டிவிட்டு அப்புறமாய்ப் பேசிக்கொள்ளலாமே என்று பரபரத்தான்.

“எதுக்கு மாலயப் போட்டீங்க?”

‘ரசிச்சோம் போட்டோம். ஏற்கனவே சொல்லிட்டேனில்லே?’

“நீங்க எப்டீடா மாலயப் போட்லாம் நாங்க இருக்கும்போது?”

‘யோவ்! கச்சேரி ஜனங்களுக்குத்தானேயா? நீங்க போடற மாலெ வெறும் சம்பிரதாயம். நாங்க போடறதுதான் உண்மையான ரசனை’ என்றானே பார்க்கலாம்!

ராஜகோபாலன் விடுவதாயில்லை. ஒருபடி மேலேபோய், “நான் யார் தெரியுமா? உங்களெ அப்படியே நிக்கவச்சுடுவேன்!” என்று மிரட்டினார். உடனே பிச்சை லுங்கியை மடித்துக் கட்டினான்; பாபுவுக்குக் கோபம் வந்ததில் வார்த்தைகள் வரவில்லை. இருவரும், ‘யோவ்! எங்கெ, நிக்கவை பாக்கலாம்! யாரெ மெரட்றே?’ என்க, அப்புறம் தொடர்ந்த சம்பாஷணையை இங்கே பிரசுரிப்பதற்கில்லை!

ஒருவழியாக நாங்கள் இருவரையும் மீட்டுக்கொண்டு வந்தோம். துடிப்பான, நல்ல மனம் கொண்ட இளைஞர்களை ரவுடிகளாக மாற்றுவது இதுபோன்ற பிரமுகர்களின் அறியாமையும், அட்டகாசமும்தான். தோற்றம் என்பது எந்த அளவுக்கு மாயையைத் தோற்றுவிக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அற்புதமான உடையில்தான் எத்தனைக் களவாணிகளை நாம் சந்திக்கிறோம்! எத்தனை நல்லவர்கள் ஏனோ தாடியிலும் லுங்கியிலும் தொலைந்து போகிறார்கள்!

என்னிடம் ஒருமுறை கூட அவன் கோபப்பட்டதே இல்லை.. நான் அவனைப் பலமுறை கடிந்துகொண்டதுண்டு. ஒருமுறை — இதுவும் கச்சேரியில்தான்! வீணை காயத்ரி — சந்தானம் என்ற ஒரு எளிய மனிதரிடம் தேவையில்லாமல் கோபப்பட்டுக் கண்ணெல்லாம் சிவந்து அடிக்கத் தயாராகிவிட்டான். நான் அவனை அங்கேயே கடுமையாகச் சாடி அவரிடம் மன்னிப்புக்கேள் என்றேன். கேட்டானே!! அவரும் உடனே அவன் கோபத்தை மறந்து கைகுலுக்கினாரே! அதுதான் பாபு!

அவன் பழகாத ஆளே ஊரில் கிடையாது. அவனும், பிச்சையும் கோவிலில் சாமி தூக்கச் செல்வார்கள். விநாயகர் கோவிலில் சதுர்த்தியன்று இரவு முழுக்க ஊர்வலம். இருவரும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தோள்கொடுப்பார்கள். மறுநாள் யாரையோ காதலித்துக் கொண்டிருப்பான். அதற்குப் பிறகு, ஏதாவது அடிதடியில் காயப்பட்டுக்கொண்டு வருவான். அடுத்தநாள் காலையில் நான் வெளியே வந்தால், இவன் ஈரத் துண்டைக் கட்டிக்கொண்டு ஒரு மணிப்பிரம்பைக் கையிலேந்திக் கொண்டு, என்னமோ மந்திரம் ஜபித்துக் கொண்டு ஒரு பாழடைந்த சிவன் கோவிலுக்கு வெறுங்காலோடு சென்றுகொண்டிருந்தான்! அவனும், பிச்சையுமாய்ப் புதைந்து கிடந்த பழங்காலத் தூணை வெகுபிரயாசையுடன் வெளியே கொணர்ந்து நிறுத்தினார்கள். பாம்பு மண்டிய புதர்களைக் களைந்தார்கள். இன்று அந்தக் கோவில் நங்கைநல்லூரை அடுத்த எம்.எம்.டி.சி. காலனியில் பெரிய சிவன்கோவிலாய்ப் புகழுடன் விளங்குகிறது.

நங்கைநல்லூர் குளத்தங்கரை சிவன் கோவிலுக்கும் இவர்களிருவரும் நிறையவே உழைத்தார்கள். இவர்கள் உழைத்த இடம் புகழ்பெறும்போது, இருவரும் அங்கிருக்க மாட்டார்கள். அது அவர்கள் ராசியோ, குணமோ, இரண்டுமோ?

குருவாயூரப்பன் கோவில் கட்டப்படுவதற்கு முன்னால், தொடர்ந்து பலநாட்கள் பஜனைகள் நடைபெற்றன. நான் தினமும் அங்கு சென்று தபலா வாசிப்பேன். (அடிப்பான் என்பார் அப்பா) எனக்குத் தபலா கற்றுக் கொடுத்த — கொடுத்த என்றால் தபலாவும் கொடுத்த ! — மணிசார் மெட்டுப்போட, நான் பாடல்களெழுத, முறையான சம்பிரதாயத்தில் நாங்களே எங்கள் நிகழ்ச்சியை வழங்குவதாக ஏற்பாடாயிற்று. ‘கந்தப்பா .. கந்தப்பா..கந்தப்பா..’ என்ற பாட்டை நான் இயற்ற, சார் மெட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார். பாபு வந்து சேர்ந்துகொண்டான். சாரிடம் ரொம்ப மரியாதையாக இருப்பான். நான் ஒருவரி பாடினால் அடுத்தவரியை அவன் அனாயசமாக இட்டுக்கட்டிவிட்டான்! அது ஐயப்பன் மேலே அமைந்தது. இப்படி நானும் அவனும் கந்தப்பா ஐயப்பா என்று மாறிமாறி இயற்றிய பாட்டை மணிசார் அந்தக் கூரைக்கொட்டகையில் பாடும்போது குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது! கூட இருந்து கண்பனித்தவன், அதற்குப் பிறகு பஜனைக்கு வரவே இல்லை! அதுதான் பாபு!

ஐயப்பன் மலைக்குப் போக ஆரம்பித்தான். கடுமையாக விரதமும் இருப்பான். அப்படி இருக்க வேண்டியதில்லை என்று பேசத்துவங்கி வாங்கிக் கட்டிக் கொள்வான். ஐயப்ப பஜனைக்கு என்னை அழைப்பான். நானும் அவனுக்காகப் பலவிடங்களுக்குச் சென்று தபலா தட்டுவேன்; பாடுவேன்; பிரசாதம் உண்டு திரும்புவேன்.

ஒருமுறை ஒரு பெரிய ஐயப்பன் ஊர்வலம் ஏற்பாடானது. யானையின்மீது ஐயப்பன் படத்தை வைத்து அர்ச்சகரை அமர்த்தி, ஒருவர் பெருங்குடை பிடிக்கவேண்டும் என்று தீர்மானமாயிற்று. நான்தான் குடைபிடிப்பேன் என்று பாபு சொன்னபிறகு அதற்குமேல் யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை! சைதாப்பேட்டையில் ஊர்வலம். மிருகக்காட்சி சாலையிலிருந்து யானையைக் கொண்டுவந்திருந்தார்கள். அதற்கு என்ன நோயோ, வாயில் நுரைதள்ளிக் கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்ச நேரந்தானே என்று சமாதானப் படுத்திக்கொண்டு ஐயப்பனும், அர்ச்சகரும் யானை மீது அமர்ந்தாயிற்று. பாபு யானைமீது நின்றுகொண்டு குடையைத் தூக்கினான். அவனுக்குத் தானே அரசனானதுபோல் பெருமை! ஒரு சிவாஜி கம்பீரம்! நுரையானை கொஞ்ச தூரம்தான் போயிருக்கும். இவன் தூக்கிவந்த குடை மேலே இருந்த மின்சாரக் கம்பியைத் தொட, அர்ச்சகர் “ஐயப்பா!” என்று படத்தோடு குதிக்க, குடை கீழே விழுந்துவிட, பார்த்தால் மறைமலை அடிகள் பாலத்தில் யானை பந்தயக் குதிரையாய்ப் பறக்க, அதன்மேல் நம் பாபு யானையின் கழுத்தை இறுகத் தழுவிக்கொண்டு கிடக்கிறான்!

அவனுக்குப் பரபரப்பு பிடிக்கும்; பயம் கிடையாது. அதே ஊர்வலம் நங்கைநல்லூரில் நடந்தது. இந்தமுறை கோவில் யானை வந்தது. குடைக்குப் பதில், பாபு கவரி வீசினான். மேலே திறந்த உடம்போடு அவன் ஐயப்பன்மேல் பக்தியோடும், சாலையின் இருமருங்கிலும் இருந்த பெண்கள்மேல் காதலோடும், தனது புயங்களில் தானே மயங்கியபடி, நிதானமாய்த் தாளம் பிசகாமல் கவரி வீசிய காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது.

அவனுக்கு எல்லாம் சுலபமாகவே வந்தது, படிப்பைத்தவிர. முறையான கல்விக்கும் அவனது மனப்போக்குக்கும் சமாதானம் காணமுடியாத முரண்பாடுகள் இருந்தன. அவன் பச்சையப்பன் கல்லூரியில் படித்தான். சென்று வந்தான் என்பதே பொருத்தம். படிப்பு அவனுக்குப் பிடிக்கவே இல்லை. யாருக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்? ஹரிகிருஷ்ணன், வீரராகவன், வர்த்தமானன், சுகுமார் என்று நாங்களெல்லாம் நல்லூர் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நிறுவினோம். மாதாமாதம் கவியரங்கம் நடத்துவோம். நான்தான் தலைப்புக் கொடுப்பேன். ‘நானும் எழுதறேண்டா’ என்றான். “காவிரியில் நான்” என்றேன். அழகான கவிதை எழுதிக்கொண்டு வந்து அதை உணர்ச்சியோடு படித்துக் கைதட்டலும், கொஞ்சம் காதலும் வாங்கிக் கொண்டானே! நான் கொடுத்த உற்சாகத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் நிறையக் கவிதைகள் எழுதிக் காண்பித்தான். அப்புறம் நிறுத்திவிட்டான். அதுதானே பாபு!

பாபுவுக்குக் கனவுகள் அதிகம். அதிகமென்ன, அவன் கனவுகளில்தான் வாழ்வான். கனவுகள் அவசியம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? நேற்றுவரை நேசமுடன் பாதுகாக்கப்பட்ட கனவைத்தானே இன்று நினைவென்று கொண்டாடுகிறோம்? கனவுகள், அடிக்கடி உதிர்ந்துபோகும் நம்மை மறுபடி மறுபடி நிறுவிக்கொள்ளத் துணைபுரிகின்றன. நாம் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கவேண்டும், இவையிரண்டுக்கும் இடைவெளி இருப்பின் அதைச் சரிப்படுத்த என்னசெய்வது? இந்த எல்லாத் தளங்களும், நமது கனவுகளால் ஊடுருவப்பட்டுத்தான் இருக்கின்றன. கனவின் ஸ்பரிசம் இல்லாத இதயமே இல்லை. மனித மனத்தில் மனிதத்தன்மை இன்னும் இருப்பதற்குக் கனவுகளே காரணம்.

ஆனால், பாபுவின் கனவுகள், அவனது கண்களுக்கு வெளியே இருந்தன. அதனால்தான் அவனுக்கு நினவு என்கிற நிதர்சனம் கண்ணில் தட்டுப்பட்டதே இல்லை. சந்தித்த எல்லோரையும் ஏதொவொரு விதத்தில் தொடக்கூடிய அவன் வாழ்க்கை சோபிக்காமல் போனதன் காரணம் இதுதான். அவனது கவிதைக் கனவு, ஒரு நோட்டுப் புத்தகத்தோடு முடிந்துவிட்டது. சினிமாக்கனவு, ஒரு ஷூட்டிங்கைப் பார்த்ததோடு நின்றுவிட்டது. காதற்கனவு, கடைசிவரை அவன் மனத்தையும், உடலையும் அரித்தது.

ஆயினும், அவனது கனவுகளுக்குச் சிறப்பான அந்தஸ்து உண்டு. அதற்குக் காரணம், அவனுக்கு மற்றவர்களைப் பற்றிய கனவுகள் நிறையவே இருந்தன. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்கிறேன். பூஞ்சையான நான் வலுமுறுக்கேறிய உடலோடு திகழவேண்டும் என்பது அவன் கனவு. அதற்காகக் காலை 4.30 மணிக்கு என் வீட்டுக் கதவைத்தட்டி, வா, ஓடலாம் என்பான்! நான் தூக்கம் கலைந்து வருவதற்குள், திண்ணையில் சற்றே கிறங்கியிருப்பான். காலில் கட்டாயம் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ளவேண்டும்! ஏனென்றெல்லாம் கேட்கக் கூடாது! முக்கால்வாசி நேரம், முக்கால்வாசி இடம் உலர்ந்திருந்த அந்த ஏரியில், நாங்கள் ஓடுவோம்! நின்றால், ஆயிரம் ஈக்கள் காலைப் பிடுங்கும். தேங்காய் எண்ணெய்! ஊஹும்! ஒத்துக்கொள்ள மாட்டான். பிறகு அவன் மிகவும் ரசித்த என் அம்மாவின் காப்பியை அருந்திவிட்டுச் செல்வான்.

என் கவிதைகளும், பாடல்களும் பிரபலமடைய வேண்டும் என்று ரொம்பக் கனவு காணுவான்.

‘டேய்! நீ ஃபேமஸ் ஆகும்போது நான்தாண்டா ஒன் செக்ரட்டரி,’ என்பான். நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழா சிறப்பாக நடந்தது. முத்துமுத்தான கையெழுத்தில் அவன் பரிசுப் புத்தகங்களில், என் கவிதைகளை எழுதிக்கொடுத்தான். விழா முடிந்து எல்லோருக்கும் எங்கள் வீட்டில் சாப்பாடு. கிட்டத்தட்ட 75 பேருக்கு அம்மாவும், என் அக்கா மாலாவும் அற்புதமான விருந்தைச் சமைத்துப்போட்டார்கள். அது பரவாயில்லை. ஏரிக்குள்ளிருந்த எங்கள் வீட்டைச் சுற்றியும் மழையால் தண்ணீர் சூழ்ந்திருந்தது. நாங்கள் பின்வீட்டுச் சுவரை ஒரு ஸ்டூல் உதவியால் தாவி அப்புறம் செல்வோம். விருந்தினர்களை எப்படிக் கொண்டுவருவது? பாபுவின் தலைமையில் பாறாங்கற்களைக் கீழே போட்டு அதன்மேல் சாரப்பலகைகள் வைத்து ஒரு பாலமே கட்டினோம்! இருபுறமும் நண்பர்கள் தோள்கொடுக்க, அந்தப் பாலத்தில் கவிஞர் சுரதா உயிரைக் கையில் பிடித்தபடி நடந்து வந்தார்.

ஏரித்தண்ணீர் காம்பவுண்டு சுவர், பெரிய இரும்பு கேட் எல்லாவற்றையும் தாண்டி, வாசற்படியைக் கடந்து எப்படி வசதி என்று ததும்பிக் கொண்டிருந்தது. விதம்விதமான வண்ணங்களில் பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்தன. சில, கேட்டில் பின்னிக் கிடக்கும். சில நமக்கு மிக அருகே, தண்ணீரிலிருந்து திடீரென்று தலையைத் தூக்கிக் கொட்டாவி விடும். ஆனால் உள்ளே வரா. சடைப்பூரான்கள் அப்படியில்லை. அவை கரையைத் தேடின. எங்கள் வீடுதான் ஒரே கரை! பார்க்கப் பயங்கரமாக இருக்கும் அவை வீட்டு வராண்டாவில் நுழையும்போது, அவற்றைப் பார்த்துப் பேசிக்கொண்டே அவற்றை அடித்துத் தண்ணீரில் எறிவான் பாபு. என் தங்கை புவனா சின்னக் குழந்தை. அப்போது அவளுக்கு ஆறுவயது. அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, கோமாளித்தனம் செய்து அவளைச் சிரிக்க வைத்துப் பயத்தைப் போக்கி அந்தப் பாம்பு, பூரான், அட்டைக் கூட்டத்தை மெல்லக் கடப்பான்.

ஒவ்வொரு நாளும் இந்தக் காரியத்தைச் செய்வதற்கென்றே வருவான். தண்ணீர் வடிந்த பிறகு, அவன் தென்பட மாட்டான்.

அதுதான் பாபு!

பாபுவுக்குக் கோபம் எப்படிப் பொத்துக் கொண்டு வந்துவிடுமோ, கண்ணீரும் அப்படியேதான்! தன்னை நண்பர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாத போது, அல்லது அப்படி அவன் நினைக்கும்போது அவன் கண்கள் கண்ணீர் பூத்துப் பளபளக்கும். அதேபோல், யாரோ ஒருவரது துயரம் பற்றி நான் விவரிக்கும்போதும், அவனுக்குக் கண்ணீர் வந்துவிடும்.

“புதிய பறவை” திரைப்படத்துக்கு என்னைக் அழைத்துக்கொண்டு சென்றான். ‘எங்கே நிம்மதி?’ என்று சிவாஜி, பெருந்திரையில் பிரும்மாண்டமாக எழுந்து நிற்கும்போது, பாபு சில்லரையை வாரியிறைத்து, விசிலடித்துக் கண்ணீர் விட்டான். இந்தக் கூத்தைப் பார்க்கும்போது எனக்குத் தமாஷாக இருந்தது. ஆனால், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவனது இயல்பில், சோகம் கிடையாது! பிச்சையோடு சேர்ந்து ‘கடாமார்க்’ சாராயம் அடித்திருக்கிறான். ஆனால் உண்மையில் அதில் அவனுக்கு ருசியில்லை. அவனுக்கு எதிலாவது உண்மையிலேயே ருசியிருந்ததாவென்பதில் எனக்குச் சந்தேகம்தான். எதிலும், யோசிக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் விசித்திர மனப்பாங்கு அவனுக்கிருந்தது.

கவிதை எழுதினானா? பாலங்கட்டினானா? காதல் செய்தானா? ‘கடாமார்க்’ அடித்தானா? சாமி தூக்கினானா? சைக்கிள்செயின் சுற்றினானா? கச்சேரி கேட்டானா? அதேபோல் ஒருநாள் எங்கள் வீட்டெதிரே பெரிய இடத்துப் பிள்ளைகள் முறையாகக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடிருந்தேன். இவன் வந்து நின்றான் குள்ளமாக, தாடி லுங்கி சகிதம்!

“டேய்! நானும் ஆடறேன்”, என்றான். அவர்கள் அவனைப் பொறுக்கியாகவே பார்த்தார்கள். அதை அவன் ரசித்தபடியே, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மட்டையைப் பிடித்தான். அவனை மட்டந்தட்டச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று அவர்களில் மிக வேகமாகப் பந்துவீசக் கூடியவனிடம் பந்தைக் கொடுத்தார்கள். இவனா, விடாமல் கோமாளி சேஷ்டைகள் செய்தபடி, என்னிடம் பேசிக்கொண்டே, ஒவ்வொரு பந்துக்கும் அவனது சென்னைத் தமிழில் காமென்டரி கொடுத்தபடி, ஆறும் நாலுமாக விளாசித் தள்ளினான். ஸ்பின்னரைக் கூப்பிட்டு எல்லா ஃபீல்டர்களையும் எல்லைக் காவல் மாதிரி நிற்கவைத்தார்கள். “…த்தோடா!” என்று இன்னும் சில பொன்மொழிகளைச் சொல்லிப் பந்தை வயற்காட்டை நோக்கியடித்து, “டேய்! போய் சைக்கிள்ள எடுத்துட்டு வாங்கடா!” என்று அவர்களைச் சீண்டினான்.

“ஒங்களுக்கு இது போதும்னு நெனக்கறேன்”, என்றபடி மட்டையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டான். அவனவன் அங்கே காலுக்கும், கைக்கும் கவசம் அணிந்து புத்தம்புதிய ஷூவோடு இருந்தபோது, இவன் லுங்கியை அனாயசமாக முக்கால் மடிப்பு மடித்து, வெறுங்காலுடன் நாலெட்டு அடிகள் எடுத்துவைத்துப் பந்துவீசி, விடாமல் பேசி, நான்கைந்து பேரை அவுட்டாக்கி, சிலருக்குப் பலான இடத்தில் முத்திரை போட்டுப் பந்தைத் திருப்பிக் கொடுத்தான். வெலவெலத்துப் போன அந்தக் கேப்டனிடம், “தாங்க்ஸ்ப்பா! என் தம்பிய அனுப்பறேன், அவன் வந்து ஃபீல்டிங் பண்ணுவான், ” என்று நக்கல் பண்ணிவிட்டு, என்னைப் பார்த்து, “வாடா ரமணா! என்னாடா இந்தக் கத்துக்குட்டிங்க கூட ஆடிக்கிட்டு,” என்று ஞாபகமாய் அவர்கள் காதில் விழும்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் ஏறினான்!

மறுநாள் வந்தானோ? அல்லது மறுவாரம்? ஊஹும்! அவன்தான் பாபுவாயிற்றே!

பாபு-பிச்சை இரட்டையர்கள் போதாதென்று சேகர் வந்துசேர்ந்தான். சேகர், குடிசையிலிருந்து வந்தவன். எம்.ஜி.ஆர். ரசிகனாகத் துவங்கி, வறுமையில் அல்லலுற்று, தற்போது முக்கியமான கம்யூனிஸ்டாக ஆகிவிட்டான். பளுதூக்கி உடற்பயிற்சி செய்வான். மேலுடம்பு அற்புதமாக இருக்கும். கால்மட்டும் சூம்பியிருக்கும். ஒருநிமிடம் கூட இடைவெளி விடாமல் தமாஷ் பண்ணி விலா நொறுங்கச் சிரிக்கவைப்பான். இவன்வந்து சேர்ந்துகொண்டான் பாபுவோடு! என்வீட்டில் ஒரே கும்மாளம், கொண்டாட்டம். மொட்டை மாடியில் வெயிட் லிஃப்டிங்! கூட்டம் பெருகியது. அப்பா இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. அம்மா எல்லோருக்கும் விதவிதமாகச் சமைத்துப்போடுவாள். அதனால், அவளது பல அம்சங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மொட்டை மாடியில் நாங்கள் குளிப்போம், ‘டேங்க்’ குழாயைத் திருப்பிவிட்டு! அப்பா கீழே விசனமாக இருப்பார்.

நாலணா பந்தயத்திற்காக பாபு மொட்டை மாடியிலிருந்து குதித்தான். சிராய்ப்போடு தப்பினான். என்னை அப்படியும் வீரனாக்கி விடுவதென்று ‘போர்டிகோ’ மேலிருந்து என்னைக் குதிக்கச் சொன்னான். சுகுமாரும் அவனோடு சேர்ந்துகொண்டான். அவர்கள் பிடிவாதம் பிடித்து, மாடிக்கதவையும் சாத்தி……. எனக்கு வேறு வழியில்லை. குதித்து, இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்!

பெருமழை பெய்து ஏரி நிரம்பிவிட்டது. ‘சைக்கிள்கடை தாஸ்’ குடிசையைப் பெயர்த்துக் கொண்டு வந்த தண்ணீர், பழைய கண்மாய் வழியே பாயத் துவங்கியது. நாவிதரும், உள்ளூர் மேளக்காரரும், அனைவருக்கும் நண்பரான நடராஜன், அந்தக் கதையை அங்கு வந்த பாபுவிடம் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார். அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிச் சொல்ல, பாபு தயாராயிருந்ததை நான் கவனித்துக் கொண்டேன்! அவனும், சேகரும் ஒரு டயரை எடுத்துக்கொண்டு, அந்த ஏரி வெள்ளத்தில் “முல்லை மலர்மேலே” என்றுபாடிக்கொண்டு படகு விட்டார்கள்! ஏறக்குறைய, வெள்ளத்தில் மூழ்கவிருந்த ஒரு கிணற்றின் சுவற்றில் இளைப்பாறி, அதில் இறங்கி ஆழம் பார்த்தார்கள். சேகரும் கிளம்பிவிட்டான். பாபு, என் அம்மா கூப்பாடு போட்டதில் வீட்டுக்கு வந்து கையில் ஒரு காப்பி டம்ளருடன் மாடிக்குத்தாவி, அங்கிருந்து ‘ஆஸ்பெஸ்டாஸ்’ கூரைச் சரிவில் பாடிக்கொண்டு ஓடிவந்து, எங்கள் வீட்டுக் கிணற்றின் மேல் தாவி, ராட்டினம் தொங்குமே அந்த இரும்புக் கழியின்மீது — சலங்கையொலி கமலஹாசனெல்லாம் பிச்சைவாங்கும்படி, தகிடதகதிமி தந்தானா செய்து, இரண்டு மூன்றுமுறை நாங்கள் அலற அலற ஓடி……. எல்லாம் மழையில்! பிறகு பூப்போல இறங்கிவந்து, சாதுவாகக் காப்பி குடித்தான்!

அவனை விட்டுவிட்டு நான் எதுவும் சாப்பிடவோ, அருந்தவோ கூடாது! ஒருமுறை ‘போர்ன்வீட்டா’ குடித்துக் கொண்டிருந்தேன், வந்துவிட்டான்! அவன் அடித்த லூட்டியில், நான் குளியலறைக்குள்ளே சென்று அங்கு குடிக்க முயன்று, அவன் கதவுக்கு அந்தப் புறத்திலிருந்து செய்த கோமாளித்தனத்தில் துப்பிவிட்டேன்!

அவன் சந்தோஷப்பட்டான்!

எங்கள் வீட்டில் கிணறு வற்றிவிட்டது. ஆழமாய்த் தோண்டினால்தான் நீர் சுரக்கக்கூடும் என்றார்கள். பாபு, பிச்சை, சேகர் மூவரும் வந்துவிட்டார்கள்! நானும் கிணற்றுக்குள் இறங்கினேன், அல்லது இரக்கமின்றி இறக்கப்பட்டேன்! மிகக் கடுமையான பணியைத் தனது நகைச்சுவையால் ஒரு விளையாட்டு மாதிரி செய்துவிட்டான் பாபு. ஆங்கிலம் பேசியே தீருவது, அதுவும் என் அப்பாவிடம் என்று ஒரு முடிவுக்கு வந்து, கிணற்றுக்குள்ளிருந்து அவன் படுத்திய பாட்டில், அப்பா கிணற்றுக்குள் குதிக்கத் தயாராய் விட்டார்! தண்ணீர்தான் இல்லை! ராட்டினத்தை மெல்ல அசைத்து வாளியில் டீ வரும்! கிணற்றுக்குள்ளேயே குடித்துவிட்டு பீடி பிடிக்கவேண்டும் என்பான். அது நல்லது என்று ஆயுர்வேதத்தில் சொல்லியிருப்பதாகக் கதை விடுவான். அன்று மாலைப் பொழுதில் பாபுவின் முயற்சியால் புதிய ஊற்றுக்கள் திறந்தன. நாங்கள் அந்த வீட்டில் இருந்தவரை எங்களுக்குப் பஞ்சமின்றித் தண்ணீர் கிடைத்தது. ஆனால் நான் சம்மட்டி அடிக்கும்போது பிசகி அவன் நெற்றியை உராய்ந்து ரத்தம் கொட்டியது. எல்லோரும் துடித்துப் போனோம். அவன் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு சிவாஜி பார்வை பார்த்தான்! இந்தப் பணியில் அவன் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. என் வீட்டார் கவனித்து மருத்துவ சிகிச்சை அளித்திருக்க வேண்டும்..

பாபுவின் வீட்டார் அனைவரையும் எனக்குத் தெரியும். அண்ணன் வெங்கடேஷ் அற்புதமான கிரிக்கெட் வீரன். பந்து இரண்டு பக்கமும் நாகம்போல் சீறும்படிப் போடுவான். தம்பிகள் வாசு, ராஜன், தங்கைகள் ஹேமா, ஜெயந்தி எல்லோரும் என்னிடம் மிகவும் அன்புடனிருப்பார்கள். அவனும் அனைவரிடமும் மிகுந்த பாசத்துடனிருப்பான். பாபுவும், வாசுவும் திருமணத்திற்குப் பிறகும் சேர்ந்தே இருந்தார்கள். பாபு, தன் மனைவி உமாவைப் பலர் முன்னிலையில் கொஞ்சித் தமாஷ் பண்ணிப் பாடாய்ப் படுத்துவான். அவளுக்கோ ஒருபுறம் வெட்கம் பிடுங்கித் தின்னும், மறுபுறம் பெருமை தாளாது. நவீனும், வினோத்தும் சுட்டிப் பயல்கள். வாசுவின் மனைவி உஷா. மகள் ஸ்வப்னா. மகன்பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இவர்கள் எல்லோரும் மைசூரிலிருந்தார்கள்.

நான் 1983 லிருந்து 1986 வரை பெங்களூரில் இருந்தேன். அப்போது அலுவல் நிமித்தம் அடிக்கடி மைசூர் செல்வேன். இந்தச் சகோதரர்களோடுதான் தங்குவேன். வேறிடத்தில் தங்க நினைக்கவும் முடியாது. பாபு தலைமையில், அவர்கள் ஒவ்வொருவரும் என்மீது காட்டிவரும் அன்பு விலைமதிக்கவொண்ணாதது. தன் சக்திக்கு மீறிக் கடன்வாங்கி விருந்தினர்களை உபசரிக்கத் துடிப்பான் பாபு. கெளரவத்திற்காக இல்லை. கொள்ளை அன்பு அவனுக்கு.

மைசூரில் அவன்வீட்டில், எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். என் பாடல்களையும், கவிதைகளையும் விரும்பிக் கேட்பார்கள். எப்போதும் விருந்துதான். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள். ஒருநாள் பெஞ்சில் பாபு படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் தலைக்குமேலே ராமர் படமிருந்தது. மத்தியான நேரம். நான் தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தேன். அவனுக்கு அசதி. பலமாகக் குறட்டை விட்டான். அடுத்தடுத்து ‘இந்த பாலன் உள்ளே வரலாமா?’, ‘என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம்’ என்ற இரண்டு பாடல்களைப் புனைந்தேன். இந்த பாடல்கள் எப்போது பாடினாலும் ரசிக்கப் படுவன.

பாபு எழுந்த பிறகு எல்லோரையும் அழைத்துப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். ‘ஐயோ! பாவிடா நான்! நீ பாட்டுப்போடும்போது மடையனாட்டம் கொறட்டை விட்டுத் தூங்கிண்டிருந்தேனே.’ என்று அனாவசியமாக ரொம்ப வருத்தப்பட்டான். நான் மேஜையில் தாளம்போட அவன் தலையில் ரவுடிக்கட்டுக் கட்டிக்கொண்டு கூத்தடிப்பான்!

நல்லூர் இலக்கிய வட்ட ஆண்டு விழாவுக்கு நன்கொடை வாங்க வீடுவீடாகப் போனோம். அதிகம் பிராமணர்களிருந்த இடமது. பாபு, அவர்களிடம் பிராமண பாஷையிலேயே பேசச் சித்தமானான். நான் எவ்வளவோ தடுத்தும் ‘நீ சும்மா இருடா’ என்று என்னைத் தள்ளிவிட்டு, ஒரு பெரியவரிடம் ரொம்ப பவ்யமாகச் சென்று, ‘எங்களுக்கு வருஷாப்தீகம், நீங்க ஒத்தாசை பண்ணணும்,’ என்க, அவர் முழிபிதுங்க, அவனைப்
பரபரவென்று தள்ளிக்கொண்டு வந்து, ‘அடேய்! அதற்கு அர்த்தம் திவசம்டா,’ என்று சொல்ல அவன் பலமாக ரசித்தான்!

பாபுவும், வாசுவும், “அப்படி நீ என்னதாண்டா வேலை செய்கிறாய்?” என்று கேட்டார்கள். ஒரே நாள் என்னோடு அதிகாலையில் சைக்கிளில் வந்து நான் செய்யும் வேலையை அல்லது படும்பாட்டைப் பார்த்து மிகவும் வருந்தினார்கள். ‘மவனே, என்கிட்ட மட்டும் காசிருந்தா ஒன்னெ இப்படிக் கஷ்டப்பட விடுவேனா?’ என்பான் பாபு. எனக்கு பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகிவிட்டது. கடைசியாக ஒருமுறை அனுவோடு மைசூருக்குச் சென்றேன். அவன் சின்னக் குழந்தையைப்போல் அழுதான். ‘இதுக்குத்தாண்டா யார்கிட்டயும் பாசம்வக்கக் கூடாதுன்றது,’ என்று பொருமினான்.

பாசத்தைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது. எல்லாரிடமும் அப்படியேதானிருந்தான்!

நானும் பாபுவும் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறோம். அதில் அவனுக்குப் பிரத்யேகப் பெருமை உண்டு. அப்புறம் நான் விட்டுவிட்டேன். அவன் தொடாததில்லை! தொட்ட எதையும் விட்டதுமில்லை! நான் மதுரையில் இருந்தபோது கூட, என்னை வந்து பார்த்திருக்கிறான். அது மட்டுமல்ல, என்னுடனிருந்த நண்பர்களைக் கவர்ந்துமிருக்கிறான். என் நண்பர்களெல்லாம் அவனுக்கும் நண்பர்களானார்கள். அதில் சுப்புவும் உண்டு. ஒருவழியாய் சுப்புவுக்குக் கல்யாணம் ஆனதும் தேனிலவுக்கு அவன் மைசூர்தான் வரவேண்டும் என்று பாபு ஆணையிட்டான். நாங்கள் ஒரு
படையோடு போனோம்! பாபு என்ன செய்தான் தெரியுமா? தன் வீட்டைக் காலிசெய்துவிட்டு, அதைப் புதுமணத் தம்பதிக்கு விட்டுவிட்டு, வாசு வீட்டுக்குத் தன் குடும்பத்தோடு சென்றுவிட்டான்!

அதுதான் பாபு என்று நீங்களே சொல்லத் துவங்கி விட்டீர்களல்லவா? அதுதான் பாபு!

ஒத்தாசை செய்வது அவனுக்கு இயல்பு. மணிசார் 1973 -ல் நங்கைநல்லூரிலிருந்து மாம்பலத்துக்கு வீடு மாறினார். அப்போதும் அவன் அங்கிருந்தான்! முன்பு, கோவையில் என் மாமியார் மாமனார் வீடு மாறும்போது அவன்தான் வந்து ஒத்தாசை செய்தான். என் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவனிருப்பான் துணையாக. யார்யாரோ உறவினர்களின் கல்யாணத்துக்கெல்லாம் வந்து கடுமையாக உழைத்துவிட்டுக் காணாமல் போய்விடுவான் பாபு. என் வாழ்க்கையின் பல முக்கியமான கட்டங்களிலும் அவன் உடனிருப்பான். நடுவிலே கொஞ்சநாள் ஏதோ அரபுநாட்டுக்குச் சென்றிருந்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான். அவனால் தனியாக இருக்க முடியாது. எவ்வளவு கூத்தடித்தாலும், அவன் இயல்பில் குடும்பஸ்தன். அவனுக்கு மனைவி, மக்கள், வாசு, உஷா, அவர்களது குழந்தைகள் எல்லோரும் வேண்டும். மறைமலை நகரில் டி.வி.எஸ். கம்பெனியில் வேலையாக இருக்கிறேன் என்று தொலைபேசியில்
சொன்னான். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் கனடாவுக்குப் பயணம் செய்தபோது, அவன், தன்
மகனுடன் விமான நிலையத்திற்கு ஓடிவந்துவிட்டானே! அவன்தான் டிராலியைத் தள்ளினான்! அப்போதும் ஏதோ தமாஷ்தான். 2006 ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி, என் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவுக்கு டாக்சி வைத்துக்கொண்டு குடும்பத்தோடு வந்து கடைசிவரை இருந்து, ரகளை பண்ணி, விசிலடித்து, எல்லோரும் சென்றபிறகு என்னோடு தோசை தின்று, என் மனைவி அனுவுடன் என்னைப் பற்றி உருகிக்கொண்டிருந்தான். ‘அனேகமாக மஸ்கட் போய்டுவேண்டா, விழாவுக்கு வரமுடியும்னு தோணலெ,’ என்றவன் அனைவரோடும் வந்திருந்து நங்கைநல்லூர் நண்பர்களோடு போட்டோ எடுத்துக்கொள்ளத் தோதாயிருந்தது. மணிசார்தான் அப்போது இல்லை என்று நாங்கள் நினைவுகூர்ந்தோம்.

எனக்காக, நானும் என் பாடல்களும் பிரபலமாக வேண்டும் என்று கனவு காணும் நண்பர்களில் பாபு முக்கியமானவன். என் வாழ்வில் 1968 முக்கியமான வருடம். அதற்குச் சற்று முன்பு ஹரிகிருஷ்ணன் பரிச்சயமானான், பள்ளித்தோழனாக. பிறகு, பாபு, அவன் மூலம் வீரராகவன், மற்றும் மணிசார்.

சரி, பாபுவைப் பற்றிச் சொல்ல இப்போது என்ன அவசியம்?

நாளை அவன் பிறந்த நாளல்லவா?

இன்றிரவுக்கும், நாளைக் காலைக்கும் ஒரு சுமையான இடைவெளி இருக்கிறது. இதற்கிடையே, பாபுவைப் பற்றிய இன்னொரு சுவையான தகவல் நினைவுக்கு வருகிறது.

என் உறவினர் ஒருவர் சுந்தரம் ஃபேசனர்ஸ் கம்பெனியில் உயர்பதவி வகித்தார். (சமீபத்தில் புற்றுநோயால் இறந்துபோனார் அந்த மிக நல்ல மனிதர்) அவர்களது தொழிற்சாலையில் ஆயுத பூஜை விழாவுக்காக எங்களை ஒரு நிகழ்ச்சி நடத்தித்தரச் சொன்னார். நான் வழக்கம்போல், மணிசார் வீட்டுக்கு ஓடினேன். படபடப்பாய் நான் பேசியதை, வழக்கம்போல் நிதானமாகக் கேட்டுக்கொண்டார் அவர். பிறகு, அவர், நான், வீரரகவன், பாபு, வெங்கடேஷ் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியைச் செய்வோம் என்று முடிவானது.

வசனமில்லாமல் ஒரு குட்டி நகைச்சுவை நாடகம் தயாரித்தார் மணிசார். எனக்கு நகைச்சுவை வரும் என்று கண்டுபிடித்தவர் அவர்தான்! அதில், பாபு ஒரு பெண்ணாக வருவான். ஒப்பனை எதுவும் கிடையாது! மீசை, தாடியோடு! ஆனால், அவன் காட்டிய பாவனை, செய்த சேட்டை எல்லோரையும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்தது. அவன் தேங்காய் சீனிவாசனாக, நான் சுருளி ராஜனாக ஒரு துணுக்குப் போட்டோம். மணிசாரின் மருந்து வியாபாரித் துணுக்கு எல்லோரையும் கவர்ந்தது.. ஆயிரம் பேர் நிரம்பிய அந்த அரங்கில் எங்கள் நிகழ்ச்சிதான் முதன்மையாய் விளங்கியது என்று அனைவரும் பாராட்டினார்களாம். நாங்கள் மணிசாரின் பின்னால் சின்னக் குழ்ந்தைகள்போல் குதூகலமாய் வந்தோம். எழும்பூர் இம்பாலா ஓட்டலில் மசாலாபால் அருந்திவிட்டு பான்பீடா போட்டுக்கொண்டு, அவரைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டு,
நங்கைநல்லூருக்கு ரயிலில் ரொம்பச் சந்தோஷமாக வந்துசேர்ந்தோம்.

அவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்!

இன்று பாபுவின் பிறந்தநாள்! இதோ, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ‘மஸ்கட்’ டிலிருந்து கிளம்பிய விமானம் வந்திறங்கிவிட்டது. என்ன வயதிருக்கும்? என்னைவிட ஓரிரண்டு வயதுகள் பெரியவன். பயணிகளெல்லாம் ஒவ்வொருவராய் இறங்குகிறார்கள். பணம் சம்பாதிக்க வெளிநாட்டுக்குப்போய், அங்கே படாதபாடுபட்டு, விடுமுறையிலோ, அல்லது ஒரேயடியாகவோ சொந்தவூர் திரும்பும் பயணிகளின் முகமெல்லாம் நிம்மதியின் ஆயாசம்! தாய்நாட்டை விடவும் சிறந்தவூர் இருக்க முடியாது. என்ன ஏழ்மையோ, ஒண்டுக் குடித்தனமோ, நம்வீட்டில் நம் குடும்பத்தோடு கூடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது, லுங்கி, கிழிந்த பனியன், கழுத்தில் ஒரு துண்டு என்று டி.வி.யில் இந்தியா, கிரிக்கெட் மாட்ச்சில் வெற்றி பெறுவதைப் பார்த்துக் குழந்தைகளோடு கும்மாளம் போடுவது, அவர்கள் அறியாதபோது மனைவியைக் கொஞ்சுவது என்று எத்தனை எத்தனையோ சின்னச் சின்ன சந்தோஷங்கள் நமது தரித்திர வாயிலில் தங்கத் தோரணம் கட்டுகின்றன!

என்ன இன்னும் இவன் இறங்கவில்லை? நங்கைநல்லூரில் சொந்த வீடு வாங்கியாயிற்று. அதற்கு கிருஹப் பிரவேசம் செய்யவேண்டும் என்பதற்குத்தானே வருவதாகச் சொன்னான்?
கண்பொங்கக் கட்டிக் கொள்ளத் துடிப்பவன் என்ன தூங்கிவிட்டானா?

அந்தோ!

பாபு, இறங்கி வரவில்லை. இறந்து வருகிறான். பெட்டி பெட்டியாய்ப் பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்து மகிழ்ந்தவன், பெட்டிக்குள் பரிசுப்பொருளாக வருகிறான். விதியின் சதிக்கு அக்கினிக்குப் பரிசாக வருகிறான். இரக்கமே இயல்பான என் நண்பனின் உடலைச் சுமந்த பெட்டி, இறக்கப் படுகிறது…செத்த பிணமும் துள்ளும்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசியவன், இனி பேசுவதில்லை என்று முடிவெடுத்து விட்டான். நாலு காசு சேர்த்துப் பெட்டியில் பத்திரமாக வைக்கத் தெரியாதவன், இதோ பெட்டியில் பத்திரமாக வருகிறான்.

சென்னைக்குக் கிளம்ப நாள் பார்த்துக் கொண்டிருந்த பாபுவுக்கு மார்வலி வந்துவிட்டது. மருத்துவரிடம் சென்றிருக்கிறான். ஈ.சி.ஜி. எடுத்து அதில் ஒன்றுமில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். மாரடைப்பு நடக்கும் போதல்லவா அந்த வரைபடம் எதையாவது காட்டும்? அதிகம் பயனற்ற அந்தப் பரிசோதனையின் தரத்தை மருத்துவம், ஏனோ இன்னும் உயர்த்தவில்லை. அறைக்கு வந்து சேர்ந்தவுடன், நெஞ்சுவலி அதிகமாகி இறந்துவிட்டான் பாபு. மருத்துவ மனையில் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறான். தனிமையே விரும்பாதவன், இப்படித் தனியாய் விடப்பட்டு என்னபாடு பட்டானோ!

வாசுவுக்கு இனிமேல் வயது கிடுகிடுவென்று கூடிவிடும். பாபுவின்றி வாசுவைக் கற்பனை செய்யக்கூட முடிவதில்லை. பிச்சை, தன் ஒரே தோழனை இழந்துவிட்டான். தனது அத்தனை கோபதாபங்களையும் தாங்கி அவனைப் பிரியாமல் நேசித்த நண்பன் போய்விட்டான் என்பதைப் புரிந்துகொள்ள பிச்சைக்கு நேரமாகாது; தாங்கிக் கொள்ள வலுபோதாது. உமா, இனி எப்படி வாழ்வைக் கழிப்பாளோ? இதுவரை நடந்த வாழ்க்கையை இனிமேல் கழிக்க வேண்டும் என்பதுதான் கொடுமையானது. குழந்தைகள்தான் அவளைத் தேற்றவேண்டும்..

வீரராகவன் நெஞ்சம் சூடுபட்டாற்போலத் துடிக்கும். அது சீக்கிரமே கவிதையாக வெடிக்கும்.

என் வாழ்க்கையின், என் வீட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவன்கலந்து கொண்டு உழைப்பாலும், அன்பாலும் மனதிற்கு எவ்வளவோ மகிழ்ச்சி கொடுத்திருக்கிறான். நானோ, அவன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்கூடக் கலந்துகொண்டதில்லை. அதற்காக அவன் வருத்தப்படவில்லை. ‘வர முடிஞ்சா வந்திருக்க மாட்டானா?’ என்று அவனே சமாதானம் சொல்லிவிடுவான்.

ஆம், அவனது கல்யாணத்திற்கும் நான் செல்லவில்லை. இன்று அவன் கருமாதிக்கும் நான் செல்லவில்லை. சில சாதாரணக் கடமைகள், சில முக்கியமான கடமைகளைச் செய்யவிடாத துயரம், என்வாழ்வில் இயல்பாகிவிட்டது.

ஒவ்வொரு மனிதனும் தன்னை மேம்படுத்திக்கொள்ள சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட விஷயங்களைச் சாத்திரங்களோ, பேராசிரியர்களோ, அறிஞர்களோ கற்றுத் தரவில்லை. தாடியும், லுங்கியுமாயத் திரிந்த என் நண்பன் பாபுவைப் போன்றோரிடமிருந்தே நான் மிக மேன்மையானவற்றைத் தெரிந்துகொண்டேன். மேன்மை, பட்டுத்துணி அணிந்து மினுக்குவதில்லை. தன்னிடமிருக்கும் நேயத்தைப் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இயல்பில், அடுத்தவர் நெஞ்சைச் சுலபமாகத் தொட்டுவிடுவதே மேன்மை.

யோகீச்வரர் மாவுமில் என்று ஒன்றிருந்தது நங்கைநல்லூரில். அதன் வாசலில் அவ்வப்போது வந்தமரும் ஓர் அரவாணிப் பிறவியிடம் பாபுவுக்குப் பழக்கமுண்டு. சைக்கிளை நிறுத்தி அந்தத் திருநங்கையோடு அவன் பேசுவது எனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. ‘இன்னா ஒம்பேர என்னாண்டையே சொல்லமாட்டியா?’ என்று வாஞ்சையோடு கேட்கும்போது, அது தனது காவிப்பல் தெரிய வெட்கமுடன் சிரித்து, ‘என்னெ ரோசான்னு கூப்டுவாங்க. சரோசான்னும் கூப்டுவாங்க,’ என்று பதில்சொல்லும். பாபு, அதை அப்படியே சொல்லிக் காண்பித்து அசத்துவான்.

எனக்கு நாயென்றால் குலைநடுக்கம். அவனுக்குத் தெருநாயெல்லாம் பழக்கம்! ஒருநாள் நான் பார்த்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. மணல்மேட்டை நோக்கி அவன் நடக்கிறான். அங்குமிங்கும் நின்றுகொண்டிருந்த தெருநாய்கள் அவனை ஆர்வத்தோடு பார்த்தன. பொதுவாக, தாடி, லுங்கி இப்படிப் பார்த்தால் நாய்கள் குரைக்கும். இங்கே அப்படியில்லை. ‘எல்லாம் வாங்கடியம்மா,’ என்றான். உடனே ஒரு நான்கைந்து நாய்கள் அவனிடம் ஓடிவந்து வாலை ஆட்டுவதும், கொஞ்சித் தீர்ப்பதுமாய்…என்னால் நம்பவே முடியவில்லை. அதிலும் ஒரு பெண் நாயிடம் அவன் நடத்திய உரையாடல்! ‘இன்னா, எங்கெ ஊர் மேஞ்சிட்டு வர்றே? எத்தினி லெட்டர் போட்டாலும் ஒருதபா கூட பதிலே போடறதில்ல, ஓடுகாலி,’ என்று அதன் மோவாயை இடித்தான். அது முக்கிய முனகலும், சிணுங்கிய சிணுங்கலும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது!

ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மோட்டுவளையைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனையோ காட்சிகள் சித்திரங்களாக விரிகின்றன. மனத்திரையில் ஊர்வலமாக வருகின்றன. பாபு, என் வாழ்க்கையின் ஒரு சுவாரசியமான அங்கம். அதை முழுவதுமாய் வார்த்தையில் வடித்துவிட முடியாது. சரி, எதைத்தான் வார்த்தை சரியாகச் சொல்லியது? நான் அவனருகே இல்லாத ஆதங்கத்தில், துயரத்தின் ஆற்றாமையைத் தாங்கமுடியாமல், நான் நினைவுகூர்ந்தபடி நிறுத்தாமல் எழுதிவைத்தேன். இதுதான் சரி. ஏனென்றால் அவன் அப்படித்தான் வாழ்ந்தான். நிதானித்து எழுத இது இலக்கியக் கட்டுரை அல்லவே! என்னிதய அஞ்சலி இது! அது, மலர்வளையச் சம்பிரதாயம். இது மொத்தத் துக்கத்தையும் கீழே பொத்திவைத்திருக்கும் மெளன விம்மல்….

இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சவமாய்ப் பிறந்த நாளன்று வந்துசேர்ந்து அதோ சிதையில் தகனமாகின்றான். அதோ! பாம்புகள்போல் நடனமிடும் அந்த ஒளிக்கொழுந்துகளுக்குப் பின்னே, அவனது நிழலையே காண்கின்றேன். அந்த நிழலுருவத்திலும், அவன் விழிகள் பனித்திருந்து ஜ்வாலையில் மின்னுகின்றன.. வருந்தாதே பாபு! வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக நினைக்காதே! உன் நேசத்தால் பயன்பெற்ற என்னைப் போன்றோர் எத்தனைபேர் தெரியுமா? ஒரு கவிதையைக் கவிஞன் நிச்சயிக்க முடியுமா? கோடுபோட்டு வெள்ளத்தைப் போகச் சொல்ல முடியுமா? கவிதை என்னும் அதிசயமும், வெள்ளம் என்னும் விபத்தும், இயற்கையின் இயல்புதானே!

நீயும் அப்படித்தான்.

நேற்றிரவும் நீ வந்து நின்றாய். “நீ இன்னும் உணர்ச்சிவசப்படுவது வேண்டாம்” என்று என் குருவின் உபதேசத்தை உனக்குத் தந்தேன். நீ அதைப்பற்றிக்கொண்டாய். உன்குரலில் அதைக்கேட்டபோது எனக்கு நிறைவாயிருந்தது. நீ எதையும் எளிதாகப் பற்றிக்கொண்டு அதைவிட எளிதாக விட்டுவிடுவாய். ஆனால் அதுபற்றி இன்றெனக்குக் கவலையில்லை. ஏனென்றால், என்மூலம் வந்தவொன்று உன் அந்தராத்மாவைப் பற்றிக்கொண்டுவிட்டது. இதை நீ விடமுடியாது!

உன் பயணம் தொடரும் பாபு! உன்னுயிர் ஒழுங்குபெறும். உன்னால் நன்மைகள் விளையும்.

பாபு மறைந்துவிட்டான். அதோ, என் முடிவுக்கு, முதல்மணி கேட்கிறது…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *