Category: மரபுக் கவிதைகள்

  • கவியரசும்  கடவுளும்

    கவியரசும் கடவுளும்

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    கவியரசும் கடவுளையும் கண்டதெங்கே

    கண்குளிர கவிதைகளை பொழிந்ததெங்கே

    மண்மகிழ மனங்குளிர கவர்ந்தனால்

    பண்ணிசையில் கலந்தபல பாடலிங்கே

    கவியரசு இறைவனையும் பார்த்தவிதம்

    கண்மூடி கொண்டவனைக் கண்டவிதம்

    ஒவ்வொன்றாய் நானிங்கே சொல்லட்டுமா

    ஒருநாளும் போதாது யுகமும் வேண்டும்

    மதுவெனும் பேயணங்கை கொண்ட போதும்,

    மங்கையரின் மஞ்சனையில் துஞ்சும் போதும்,

    தங்கமகள் செந்தமிழாள் கொஞ்சும் போதும்,

    மெல்லிசை விஸூவோடு கெஞ்சும் போதும்,

    பக்திபட கதைகளிலே கலந்த போதும்,

    வீணையுடன் மகாதேவன் மீட்டும் போதும்,

    கண்ணனுடன் கீதையுடன் கலந்த போதும்,

    கட்டுமீசை பாரதியை படித்த போதும்,

    கழகமென கொடுத்து சொத்தை இழந்த போதும்,

    பகுத்தறிவை தேடி பக்தி சுவைத்த போதும்,

    தனக்கு என்று தன்னுள்ளே நின்ற போதும்,

    தயங்காது உண்மைசொலும் நேரம் போதும்,

    போதும் போதுமென தெய்வம் கண்டார்

    கவியரசு

    போகின்ற போக்கினிலே நமக்கும் தந்தார்

    திரைப்பாடல் என்றதனால் எளிதில் ஈர்க்கும்

    தினம்தினமும் கேட்பதனால் செவிகள் ஏற்கும்

    இசையோடு மூளையிலே பதிந்ததெலாம்

    எப்போதும் இனிக்கிறது  ஆமாம்  என்பீர்

     

    Share
  • திருசிரமலை நாயகனே

    திருசிரமலை நாயகனே

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

     

    திருசிரமலை நாயகனே
    சத்தியமணி 31 08 22

    வெற்றி தரும் வேழமுக

    மைந்து மினிதா னனடி
    பற்றி பெறும் பாக்கியஉ

    பாத்தி யமென தாளனடி
    சுற்றி வரும் போதினிலே
    மனதாள துயர் களைந்
    தேற்றி தடையோட விடும்

    பாலன் விளையாடி வரும்
    நற்றி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே….1

    தாயுமா  னான்சிவ சிவம்
    தாயுமை சேர்ந்து நலம்
    தூயுமன தாளும் குணம்
    வாயுமுட னாசியி னில்
    காயமுடன் பிறக்கும் சுழல்
    தேயவுட னாளும் நிலம்
    பாயும் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே….2

    உச்சி மலையா ளுமறை
    போற்று தயாபர எழில்
    மெச்சி சிவசைவ குழாம்
    ஏற்று பிள்ளை யாரெனவே
    கச்சி யம்பலத் தானுறையும்
    காமாட்சி பெற்ற தனால்
    பச்சை பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..3

    காப்பு அரையில் அரவுயிடை
    கழலடி தண்டை மணிகளும்சேர்
    தோப்பு கரணம் போட்டதுமே
    துள்ளி நம்மில் ஏதுகுறை
    மூப்பு பிணியா வுமதை
    தீர்க்கு படியாகும் ரசம்
    நீர்ப்புக பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…….4

    மாமன் ரங்க நாயகனும்
    மருமான் மகிழவே நிலம்
    மாமிய வளாடும் குழை
    கேட்ட ணிந்தே தினம்
    நாமமி னிதாக நெற்றி
    நடுவி னிலிட்ட படி
    தாமத தாளமு டன்சுக
    தாள் பதித்தா டசிவ
    ராகம் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…….5

    சம்பு சலமாகி லிங்கம்
    நந்தி உடனோடு தவம்
    நம்பி துதிபாடி களிறு
    காத்த ஆனைக் காவினிலே
    தும்பி க்கையில் வலம்
    தூக்கி யெம்நா விலுரை
    எம்பி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே……6

    அண்ட சராசர பெற்று
    ஆளும் அகிலா ண்டரசி
    கண்ட சினம் தானழிய
    கண்ணெ திரில் பேருருவே
    உண்ட கொழுக் கட்டையதை
    கவளமென தின்ற வனே
    வண்டல் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே……7

    உருகி மனதுதி கள்பல
    எழுதி தனக்கானத் தமிழ்
    பருகி பெரும்வள மையுடை
    புலமைத் தரும் கணபதியே
    இருகி வரும் வளர்மதியே
    ஏற்றமிகு பதவி புகழ்
    மருகி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..8

    அரச மரத் தடியிலொரு
    அருளாள நதியின் கரை
    அரச ரும்முனி அகத்திர்சேர்
    அடிபணிய வைக்கும் கரி
    முரசரியும் முகத்தவனே
    முக்காலம் அறிந்தவனே
    பரிசப் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..9

    கருக விடும் அங்குசமும்
    கனிய வரும் பூரணமே
    அருக முடன் மாலையுள
    அத்தி முகங் கணபதியே
    எருக்க மொட்ட விழ்ந்திலே
    எட்டிசெலும் தீவினைகள்
    பெருக்கவர பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..10

    சுமுகமாய் வேழாய்ப் போற்றி
    சுகமு ம்மனத் துணிவே போற்றி
    ஒற்றை கொம்பாய் போற்றி
    ஓமென ஒலிப்பாய் போற்றி
    சிராப் பிள்ளையே போற்றி
    சிவஞானக் கொழுந்தே போற்றி
    திருசிர மலையப்பா போற்றி
    திருசிற் றம்பலம் போற்றி…11

    ஒருநாளும் துவளாது

    உன்பாதற் சலங்கையென
    வருநாளும் துதிகள் பாடி
    வாயினிக்க இசைகள் கூடி
    திருநாளும் தரிசனமும்
    தின்பண்ட பிராசதமும்
    அருள்வாய் உமைபாலா
    மணிநாதன் முன்சரணம்

    …….இன்னும் வரும்

    Share
  • அரங்க கும்மி

    சத்தியமணி

    உறங்கச் சயனமோடு
    உறங்கா நயனமோடு
    முழங்கச் சங்கினோடு
    முழங்காச் சங்கமோடு
    வணங்க அடிகளோடு
    வணங்கா முடிகளோடு
    இரக்கத்தில் வந்தனனே
    அரங்கனைக்  கும்மியடி    1

    குன்றாடும் இடமாகி
    கோவிந்தன் இருந்தாலும்
    நின்றாடும் யமுனையதில்
    கோபாலன் இருந்தாலும்
    மன்றாடும் நிலைக்கெமை
    மாற்றாது இருப்பாயே
    அன்றாடம் அரியென்றே
    அரங்கத்தில் கும்மியடி 2

    அளந்தானாம் சிற்றடியில்
    உயர்ந்தானாம் பேருருவில்
    கலந்தானாம் அலைமகளைப்
    பிரிந்தானாம் மானதனால்
    சேர்ந்தானாம் தென்னிலங்கை
    சிறந்தானாம் ரகுராமன்
    அவன்தான் இவனென்றே
    அரங்கத்தில் கும்மியடி 3

    விட்டலன் பேர்சொல்லி
    வீதியில் களிப்பாட்டம்
    வித்தகன் அரியென்று
    பக்தரிசை குளிப்பாட்டும்
    பண்டரி நாமந்தனில்
    புண்டரியின் அபங்கத்தில்
    வரியாகி பண்ணாகி
    அரங்கத்தில் கும்மியடி 4

    மானால் கெட்டதும் (சீதை)
    மதியால் கெட்டதும் (வாலி)
    கூனால் கெட்டதும் (கைகேயி)
    சூதால் கெட்டதும் (தர்மர்)
    காதால் கெட்டதும் (தசமுகன்)
    கண்ணால் கெட்டதும் (கௌரவர்)
    கூறுமரி கதைக்கேட்டு
    அரங்கத்தில் கும்மியடி 5

    தீராத பிறவிச்சுழல்
    தீர்ப்பான் அடிபற்றி
    ஆறாத பழியெலாம்
    அழிப்பான் கழல்பற்றி
    கூறாத உரையெலாம்
    கீதையாய் பொருள்பற்றி
    மாறாத அருளுண்டான்
    அரங்கத்தில் கும்மியடி 6

    ஏழேழு பிறவியெலாம்
    எம்மோடு வந்தானோ
    ஏழுமலை தன்னைவிட
    எம்முளமாய் நின்றானோ
    வாழுமற வாழ்வெனவே
    வந்தினிதே வைத்தானோ
    தூயுமனத் தாயானான்
    அரங்கத்தில் கும்மியடி 7

    இருப்பதில் இருப்பதும்
    இல்லாது இருப்பதும்
    மறைப்பதும் தெரிவதும்
    தெரிந்தும் மறைப்பதும்
    கிடைப்பதும் இழப்பதும்
    கிட்டாதும் நிலைப்பதும்
    நாரணன் செயலென்றே
    அரங்கத்தில் கும்மியடி 8

    தேனாய்த் தமிழூட்டி திகட்டாப் பொருளாற்றி
    பூணாய்ப்  பூட்டியே புகட்டி அருளாற்றி
    நாணாய் நாவேற்றி நல்லிசைப் பண்ணாகி
    அரங்கன் அரங்கத்தில் அடிமனமே கும்மியடி 9

    பற்றியது செவ்வடிகள்
    எட்டியது  வைகுந்தம்
    சுற்றியது சுதர்சனம்
    சுரமுடனே சங்கநாதம்
    வெற்றியினி வெற்றியென
    வேங்கடன் மணியொலியே
    நற்றவினை யாவும்பெற
    அரங்கத்தில் கும்மியடி 10

    மேகத்தில் தேவரவர்
    நீர்வாரி தெளிக்கஅரி
    போகத்தில் ரதமேறி
    பூரியில் பவனிவரும்
    கோலத்தில் ஊர்வலமே
    அடியவர் குறையழியும்
    சோகமெலாம் மறக்கும்
    அரங்கத்தில் கும்மியடி 11

    துயிலைக் கலைத்து துயிலோனை எழுப்ப
    கயிலை மலையோடு
    கங்கை கரைதற்போல்
    மங்கையர் அலைபுவி தாயாரும் எமதென்றே
    சங்கைத் தரித்தோனாம்
    அரங்கனைக் கும்மியடி 12

    கற்றதும் உற்றதும் கழனியில் பிறந்து
    பெற்றதும் அற்றதும்
    பேருடன் பதவிகளைக்
    குற்றமற அறமுடன்
    வற்றாது வரமளித்த
    அரங்கனைச் சரணடைய
    அரங்கத்தில் கும்மியடி 13

    அளந்தானாம் சிற்றடியில்
    உயர்ந்தானாம் பேருருவில்
    கலந்தானாம் அலைமகளைப்
    பிரிந்தானாம் மானதனால்
    சேர்ந்தானாம் தென்னிலங்கை
    சிறந்தானாம் ரகுராமன்
    அவன்தான் இவனென்றே
    அரங்கத்தில் கும்மியடி 14

    விட்டலன் பேர்சொல்லி
    வீதியில் களிப்பாட்டம்
    வித்தகன் அரியென்று
    பக்தரிசை குளிப்பாட்டும்
    பண்டரி நாமந்தனில்
    புண்டரியின் அபங்கத்தில்
    வரியாகி பண்ணாகி
    அரங்கத்தில் கும்மியடி 15

    நேற்றாகி மறைந்தான் இன்றாக இருந்தான்
    கூற்றாகி நாளையெனக்
    கூப்பிடவே வருவான்
    காற்றாகி மூச்சாகி
    மாற்றவரும் வேளையிலே
    வாரணம் சூழவரான்
    அரங்கத்தில் வாசலிலே  அடிமனதே கும்மியடி 16

    கருடன் பேருருவாய்
    கொடியென மேலமர
    அனுமன் கையுயர
    வெற்றி மேலுயர
    ஆழ்வார் பாசுரமோ
    ஆனந்த சுரமுடனே
    ரங்க ரங்காவென
    அரங்கத்தில் கும்மியடி 17

    தாயார் தரிசனமும்
    தன்வந் தரிதுணையும்
    ஆயர்ப் பாற்குவளை
    அணைத்த கரங்களும்
    பாறாழி படுக்கையும்
    பாதத்தின் தரிசனமும்
    போதாதா கலியழிய
    அரங்கத்தில் கும்மியடி 18

    கவியின மென்றெனை
    நாவினில் அமுதிட்டு
    புவியர சாயிரமும்
    போற்றிட அருளிட்டு
    கவியர சாகசடாரி
    சிரசிலே வைத்தானே
    அழியா நிலைதந்த
    அரங்கத்தில் கும்மியடி 19

    சீயரும் தீர்த்தமிட
    பட்டரும் துளசிதர
    தீயரும் விலகிடவே
    துட்டரும் தூயமென்ன
    ஆயரின் நாவினிக்க
    அழைக்கும் அரியெனும்
    நாமமதைக் கூவியே
    அரங்கத்தில் கும்மியடி 20

    கரிசனம் மிகபெற்று
    கதவுகள் திறந்துவிட்டு
    துரிதமாய் அழைத்து
    துழாய்தமை அணிவிக்க
    அரிசனம் அந்தணம்
    வேதியர் கூடிபெறும்
    தரிசனம் தாவென்று
    அரங்கத்தில் கும்மியடி 21

    மலையாடும் இடம்தனில் கோவிந்தன் இருந்தானோ
    அலையாடும் யமுனையிலே கோபாலன் இருந்தானோ
    மன்றாடும் நிலைக்குஎமை வீழாதிருக்கவென
    அன்றாடம் அரியெனவே அரங்கத்தில் கும்மியடி 22

    காரணம் முன்னாகி
    காரியம் பின்னாகி
    சீரணம் ஆகுமுன்
    சிந்தையில் சிதையாகி
    பூரணம் முடிவாகி
    பொலிவினில் சமமாகி
    அரங்கத்து வாசலிலே
    ஆனந்தக் கும்மியடி 23

    உயிரெனப் பேரிட்டு
    உடலென்று உணவிட்டு
    உறவென்று உணர்வோடு
    துறவென்று வழியிட்டு
    மடிதன்னில் பாலிட்டு
    மடியென்றும் பாலிட்ட
    உறக்கத்தில் வைகுந்தன்
    அரங்கத்தில் கும்மியடி 24

    வரமென்று பெறுவதும் வாழ்வுக்கு போறாது
    தரமென்று தந்தாலும் தரணிக்குத் தேறாது
    அறமென்று அறிந்தே
    மரணத்தின் முன்னேவா
    இரங்கடா அரங்காவென
    அரங்கத்தில் கும்மியடி 25

    இரண்டிலே ஒன்றாக
    ஒன்றிலும் இரண்டாக
    சேர்ந்தும் பிரிவாக
    பிரிவிலும் சேர்வாக
    ஒலியாக ஒளியாக
    வழியாக வெளியாக
    அங்கத்தில் புலனான
    அரங்கத்தில் கும்மியடி 26

    வந்தனன் எதிரிலே
    தந்தனன் அமுதினை
    அந்தணன் வாமனன்
    முந்தினன் மாதவன்
    நந்தகோ பாலனின்
    அரங்கத்தில் கும்மியடி 27

    அங்கமெ லாநிறைந்து
    அணியாய் அணிகின்ற
    தங்கமென மிளிர்ந்து
    கவசமாய்க் காக்கின்ற
    இங்குமென எங்குமென
    எளிதாய் உடனுறைய
    மங்கையலை நாயகியின்
    அரங்கத்தில் கும்மியடி 28

    மங்களம் பெருக்கிட
    மனதெலாம் நிறைவுற
    திங்களின் முகமலர
    திக்கெலாம் வாழ்த்துரைக்க
    எங்கெலாம் எப்போதும்
    என்னுடனே இருப்பானோ
    அரங்கா இரங்காயென
    அரங்கத்தில் கும்மியடி 29

    தங்கமய விமானத்தைத்
    தேவரவர் பூசிப்பதும்
    காயத்ரி மண்டபமும்
    காரிருள் சயனமும்
    வேண்டும் நொடியினில்
    என்முன் தெரியவை
    நித்தமும் அரங்கனென
    நிறைவோடு கும்மியடி

    ………….  அரங்க கும்மி ( சத்தியமணி)

    பத்து நாளில் தில்லியிலிருந்து திருச்சிக்கு அழைத்து  திருவரங்கன் தரிசனம் கொடுத்தது அற்புதம்

    Share
  • தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ?

    சித்திரை நிலவு சிரிக்கின்றாள்
    செந்தமிழ் கேட்டு நகைக்கின்றாள்
    முத்தமிழறிஞர் சங்கத்தை
    மோகனமிட்டு அளக்கின்றாள்
    உத்தமர் யாரெவர் புரியவில்லை
    பித்தர்கள் கூட்டமாய் குறைவுஇல்லை ()

    கற்றவர் சபையிலை அங்கினுமே
    கட்சிகளாக காணுகின்றாள்
    பெற்றவரில்லா பிள்ளையைப் போல்
    பெருந்துயர் மனதுடன் வாழுகிறாள்
    உற்றவர் உறவினர் எனச்சேர்ந்த
    ஒருபிடி குழுக்களில் மேடைகளில்
    மற்றவர் யாவரும் பார்வையிலா குருடராகவே காணுகிறாள் ()

    தனைச்சுற்றி வட்டமும் போட்டதிலே
    தினமொரு பலன்தரும் சனியவராய்
    அணைகட்டி ஓடிடும் காவிரியை
    தன்பிடி தடுக்கும் மாநிலமாய்
    கடன்விட்டு போயினும் கர்மாவின்
    கடைபட துயருரும் நாடதுபோல்
    உடன்கட்டை ஏறிட விழைவதுஉம்
    உத்தமமா பழி
    மொழியினமா? மொழியிடமா ? ()

    பணத்துக்கு வள்ளுவன் எழுதவில்லை
    பதவிக்கு பாரதி பணியவில்லை
    ஆட்சிக்கு ஆழ்வார் பாசுரங்கள்
    தமிழினில் தந்தார் புகழ்ச்சியில்லை
    விருதுகள் பெற்றிட விளம்பரங்கள்
    கம்பனும் அவ்வையும் செய்யவில்லை
    திறமைகள் பளிச்சிட தெரிந்தும்பலர்
    வளர்ந்திட வளர்த்திட நினைப்பதில்லை ()

    தன்னலமோடு கங்கைநதி
    தண்ணீர் மறுத்தால் பயனுளதோ
    தன்குலம் வாரிசெனச்சொல்லி
    வானம் மாரியை மறுத்திடுமோ
    பிரிவினை ஏற்றி அதில் பிழைக்கும்
    நரிகளும் எலிகளும் அணிவகுத்தால்
    துயரினைப் போக்கி உயிர்வாழ
    தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ ()

    Share
  • அன்னையர் தினம் 2022

    அன்னையர் தினம் 2022

    எத்தனை அடைந்தாலும் நிறைக்காதம்மா

    அத்தனை உறவுகளும் உனக்காகுமா

    உனக்கே நிகராகுமா () 

     

    உனக்கென நான் கிடைத்தேன்

    எனக்கென நீ கிடைத்தாய்

    தவமெனத் தான் சுமந்தாய்

    தயவுடன் தாங்கி நின்றாய்

    என்னுடன் நிதம் அமர்ந்தாய்

    இன்முகம் தினம் கொடுத்தாய்

    கவிதைகள் எழுத வைத்தாய்

    களித்தபின் தலை முகர்ந்தாய்

    அத்தனை நினைவுகளும் மறக்காதம்மா

    எத்தனை பிறவிகளும் பிரிக்காதம்மா ()

    தூளியில் துயிலளித்தாய்

    தோளினில் இதமளித்தாய்

    பைந்தமிழ்ப் பாசுரங்கள்

    பாலினில் நீ சுரந்தாய்

    அன்பினில் வளரவைத்தாய்

    அறவழித் தெளியவைத்தாய் 

    பண்புடன் பயிலவைத்தாய்

    பாரினில் பழகவைத்தாய்

    உதவிடும் குணமளித்தாய் தொடர்வேனம்மா

    உயர்ந்திட வழிவகுத்தாய் சிறப்பேனம்மா ()

    தாயினும் உயர்வுண்டோ

    தாயகம்!! அயர்வுண்டோ

    பிறவியின் பயனுண்டோ

    பிழைப் பொறுத்தருளுண்டோ

    கயமை விலக்கச் சொன்னாய்

    மெய்மை விளக்கி சென்றாய்

    நன்நெறி புரிய வைத்தாய்

    நலங்களைக் குவியத்தந்தாய்

    நனவினில் பிரிந்தே சென்றாயம்மா

    நினைவினில் இருந்தே காப்பாயம்மா ()    

    Share
  • விழித்தெழுந்த இந்தியா

    விழித்தெழுந்த இந்தியா

    அண்ணாகண்ணன்

    தகதகக்கும் அகமுகத்து நகைநமக்குச் சித்திரம்
    சகலருக்கும் சகலமென்ற இதுநமக்குத் தத்துவம்
    நிகரிலாத நெறியறங்கள் நிதம்நமக்குச் சத்தியம்
    பகைவருக்கும் அருளுகின்ற அருள்நமக்கு நித்தியம்

    மனிதனென்ற பெருமிதத்தை வழியவிட்ட நம்முகம்
    கனிவுமிக்க மனம்பனிக்கப் பளபளக்கும் நம்விழி
    இனிமைமிக்க மதுரகாதல் இசைததும்பும் நம்குரல்
    இனிதுவக்கும் பெரிதுவக்கும் இளகிநிற்கும் நம்முயிர்

    யுகயுகத்துக் கருச்சுமந்து விழித்தெழுந்த இந்தியா
    ஜெகஜெகத்தை வழிநடத்தும் தேசம்இந்த இந்தியா
    வகுவகுத்து இடரனைத்தும் சிதறடிக்கும் இந்தியா
    பகுபகுத்து முனைகுவித்துப் பணிமுடிக்கும் இந்தியா

    செயல்சிறந்து இயல்சிறந்து பெயல்சிறந்து வாழ்கவே
    பயில்சிறந்து எயில்சிறந்து ஒயில்சிறந்து வாழ்கவே
    பயிர்சிறந்து உயிர்சிறந்து உயர்சிறந்து வாழ்கவே
    நயம்சிறந்து லயம்சிறந்து சுயம்சிறந்து வாழ்கவே

    அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    ஓவியம் – வி.கிருத்திகா

    Share
  • தீபாவளி 21

    நேர்மறை எழுக எதிர்மறை விழுக
    பார்மறை ஒதும் படி………………………………………………..1

    புகையும் பகையும் அகலும் அகலால்
    குகையும் ஒளியாகவே………………………………………….2

    ஒளியும் ஒலியும் வழியும் அறியும்
    விழியும் மனதும் களி……………………………………………..3

    சக்கரம் சுற்றிட சங்கடம் கலைய
    இக்கணம் இறையைப் பிடி……………………………..4

    புத்தாடை அணியும் இந்நாளில்
    பக்தியும் வளர்க்கப் பார்…………………………………….5

    கசப்பினை மறந்து இனிப்புச் சுவைத்தாலும்
    கசப்பிலே அகலும் பிணி……………………………………6

    நடிப்பும் நாடகம் (தீப)ஒளியில் தெரிந்தபின்
    படிப்பினை பயனாக முயல்……………………………7


    தெரியாதென நினைத்துப் பிழைகள் செய்தாரை
    சரியாகக் காட்டும் நாள்…………………………………….8


    குருவிடமே திருடும் மாணவர் பலருக்கும்
    குருடுமே அளிக்கும் விதி…………………………………..9


    தீயால் வண்ணம் தீட்டிடும் வளியதை
    தூய்மை ஆக்க முனை……………………………………….10

    இல்லோர் அகமகிழ இருப்பதைப் பகிரவே
    இருப்போர் பெற்ற பயன்…………………………………….11

    வாழ்த்தோடு மட்டும் பயனிலை வையத்தில்
    வீழ்ந்தோரை எழுப்பி விடல்……………………………….12

    முறுக்கோடு காரம் சுவைக்கும் போதிலே
    பொறுப்போடு பற்கள் துணை………………………..13

    கங்கை நீராடின் கசடுபோம் வினையகல
    அங்கை யால்தானம் செய்………………………………….14

    ஊசியின் பட்டாசு வெடிப்பது அன்றி
    ஓசியில் மனதும் கெடும்……………………………………15

    தலையாய் தீபாவளி பலருக்கு சிலருக்கு
    தலையில் தீராத வலி…………………………………………….16

    இருட்டில் ஒளியான பின்னரும் சிலருக்கு
    இருட்டில் தான்வயிர் வளர்ப்பது…………………17

    கெடுவது இனுமென்ன இருக்கிறது ஆட்சியில்
    சுடுவதே கொள்கை யானபின்……………………18

    கற்றவர்க்குச் சிறப்பிலை தேர்வில் தோற்று
    உற்றவர்க்கு ஊடகம் இனி………………………………..19

    எரிவாயு கடனேற சம்மதம் ஊடகமே
    கரிவாயு வந்தால் பிணி…………………………………….20

    வாழ்த்தினை வழங்கினால் கீர்த்தி வெறுத்து
    காழ்ப்பினை அளித்தே அழி………………………….21




    Share
  • கோட்டையினில் கவியரசு

        புது கோட்டைகளில்  உன் முடியரசு
         மது  ஊற்றுகளில்      தமிழ்  குடியரசு
         உள  மாளிகையில்    பெருமா நிலஅரசு
         நீ  மாத்திரம்  தான்  கவி புவியரசு       ()
        செட்டினில்  நுழைந்ததும் மெட்டுவரும்
        மெட்டினில்  கலந்ததும்  சந்தம் வரும்
        சட்டென  சொற்களில் ஆற்றல்வரும்
        தட்டினில்  பதிவிடும் பாட்டுவரும்
        பள்ளி களறியா பாமரர்க்கும்
        கல்வி களறியா  காதலருக்கும்
        மல்யுத்தமறியா கோழையருக்கும்
        புரிந்திடும் உரந்தரம்  பொருளிருக்கும்   ()
        கண்ணனும் பிறந்து தவழ்ந்திடுவான்
       ஆயரின்  மடியினில் உறங்கிடுவான்
       மூங்கில்  காடுகள் குழலோதும்
       தூங்கிட   மருத்துவம் இது போதும்
        ஏய்த்தவர் இன்னும்   இருந்தாலும்
       ஏமாற்றியவர்  தான்  இளித்தாலும்
       கோட்டைகள்  உன்கொடி  பறக்குதய்யா
       கோபுரங்கள் பார் வணங்குதய்யா !!   ()
    Share
  • திருமாலடி பிடிப்பாவை

    திருமாலடி பிடிப்பாவை

    சத்தியமணி
    பொடியான் தானமிட நெடியான் அடியளக்க
    அடியான் கல்லையே அகலிகை ஆக்கும்
    முடியான் மூவுலகின் இடையான் திருமலைப்
    படியான் அரங்கக் குடியானைப் பிடிமனமே…1
    ஆவினம் அழைக்க அதன்மடி பால்சுரக்க
    பூவினம் மொட்டுரிய பொன்வண் டெச்சமிட
    கூவினம் பாபயில  கோபியர் மத்தொலிக்க
    நாவினம் கோவிந்தா வெனுநாதனைப் பிடிமனமே…2
    Share
  • தமிழ் வருமோ சொல்!

    தமிழ் வருமோ சொல்!

    சத்தியமணி

    தேவாரம் படிக்காது திருவாசகம் பிடிக்காது
    பூவாரம் தொடுக்காது ஓதுவார்பண் கேட்காது
    தாவாரச் சிவன்கோயில் இடிப்போரைத் தடுக்காது
    நாவோரம் துவேசத்தால் நற்றமிழ் வருமோசொல்

    அருட்பாவைத் திவ்விய பிரபந்தங்கள் பாடாமல்
    கருப்பாவைக் கம்பன்தன் ராமகதைக் கேளாமல்
    திருப்பாவை ஆண்டாளை வேசியெனச் சொல்லிக்
    கொடும்பாவி எரித்தாலே கனித்தமிழ் வருமோசொல்

    பக்திக்கு விழையாமல் பண்பாட்டைக் குறைகூறி
    புத்திக்கு ஏற்றாமல் வழிபாட்டைக் கறையாக்கி
    சித்திக்கு மூடமெனும் பழக்கமென முடக்கித்தன்
    யுத்திக்கு வேடமிடின் பைந்தமிழே வருமோசொல்

    உருவில் சிவனாக அருவில் சிவனாக
    திருவில் சிவனாகக் குருவில் சிவனாக
    இருளில் சிவனாக எதிலும் இவனாக
    அருளில் சிவனேதான் மறையில் சிவனான்
    அவனைப் புரியாது எதுவும் தெரியாது
    தவணைத் தவறுக்கு கர்மவினை புரியாது

    தமிழ் வளர்த்த ஆன்மீகம் தர்மநெறியோடு
    தமிழ் வளர்த்த ஆண்டவர் அறம்பொருளோடு
    தமிழ் வளர்த்த இன்பவீடு பேரளித்தான்றோரின்
    தமிழ் வளர்த்த சேவையைப் பழித்தால் தமிழ்வருமோ?

    Share
  • காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    மகாகவி பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற அற்புதமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

    அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

    அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா
    நினைத்ததும் அன்பு தருவாயா .
    முறுவலில் முத்தமருள்வாயா அம்மா
    மடியினில் இடம்தருவாயா ( ….)

    சுமையென யெனை நினைத்தாயா இல்லை
    சுகமென அகமகிழ்ந்தாயா
    வலியினில் யெனை ஈன்றாயா அன்றி
    கவியினில் தமிழ் கலந்தாயா (….)

    மதியினில் ஒளி கலந்தாயா என்
    மனதினில் அறம் பதித்தாயா
    இரவிலும் கண்விழித்தாயா நான்
    வரும்வரை புண்பொறுத்தாயா (…)

    குயிலெனத் தினம் கிடைத்தாயா வேம்பு
    கிளியென மொழிபெயர்த்தாயா
    அமைதியை எனக்க ளித்தாயா தினம்
    ஆற்றலில் இசை கோத்தெடுத்தாயா (…)

    நெறிமுறை தனைச் சமைத்தாயா என்
    செறிவினில் செழிப்படைந்தாயா
    தன்னலம் தான் துறந்தாயா பிரிந்தே
    விண்ணகம் தான் விரைந்தாயா (…)

    Share
  • உய்

    உய்

    அண்ணாகண்ணன்

    எய்யப் பிறந்தாய் எழுவாய்! செயற்கரிய
    செய்யப் பிறந்தாய் செலுத்துவாய் – மெய்யமுது
    உய்யப் பிறந்தாய் உயிர்ப்பாய்! அதியுலகு
    நெய்யப் பிறந்தாய் நிகழ்த்து!

    ==============================

    Pic courtesy: https://www.maxpixel.net

    Share
  • இனச்சுடர் எழுக!

    இனச்சுடர் எழுக!

    ஏறன் சிவா

    வான்தரும் சுடர்போல் வண்டமிழ் இனத்தார்
    மனங்களில் ஒளிவிடும் சுடரே!
    தீந்தமிழ் என்னும் தென்னவள் வயிற்றில்
    திடமுள மழலையாய்ப் பிறந்தாய்!
    மீன்புலி வில்லை ஏந்திய வேந்தர்
    அரியணைக் கட்டிலில் தவழ்ந்தாய்!
    பைந்தமிழ் மக்கள் தோள்களில் ஏறிப்
    பாரெலாம் ஊர்வலம் புரிந்தாய்!

    பொன்னிறத் தட்டில் பொலிவுறு மணியாய்ப்
    புகழுடன் வளமுடன் திகழ;
    மண்பிறப் பில்..நீ மாபெரும் பிறப்பை
    அடைந்ததை வெறுக்கிற சிலரோ;
    நற்றமிழ் மொழியை நவில்வதால் தமிழ்த்தாய்ப்
    பிள்ளைமேல் இனக்கொலை தொடுத்தார்!
    எற்றைக்கும் சுடரை இருள்கரம் மறைக்காது
    என்பதை அறிகிலார் மூடர்!

    பெருகுக விரைந்து பெருவெளி முழுதும்
    பெருகுக பெருகுக சுடரே!
    உருகுக தமிழர் உளத்தினைக் குழம்பாய்
    உருக்குக உருக்குக சுடரே!
    பருகுக பகைவர்ப் படையினை முற்றாய்ப்
    பருகுக பருகுக சுடரே!
    செருகுக தமிழ் இனச்சுடர் நெருப்பு
    திசையெலாம் எழுந்தவுண் மையை!

    Share
  • மவுனத் தேன்

    மவுனத் தேன்

    அண்ணாகண்ணன்

    இந்தக் கவிதையை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்

     

    ****************

    விரைந்து செல்லும் வாக னத்தில்
    ஜன்னல் ஓரம் சாய்கிறேன்!
    விரியும் காற்று முகத்தில் மோத,
    மவுனத் தேனில் தோய்கிறேன்!

    மழையில் நனையும் போதில் கண்ணீர்
    மறைந்து வழியும் கண்ணிலே!
    பழைய பாடல் ஒலிக்கும் நேரம்
    பனிக்கும் என்றன் கண்களே!

    தூய சிரிப்பைப் பார்க்கப் பார்க்க,
    துள்ளும் என்றன் இதயமே.
    நேயம் ஓங்கும் நேரம் எல்லாம்
    நெஞ்சம் விம்மி நெகிழுமே!

    எளிய மனிதர் வெல்லும் செய்தி
    எனக்குள் சக்தி பாய்ச்சுமே!
    துளியில் வெள்ளம் விதையில் ஆலம்
    வடிவ மாயை மாயுமே!

    நீதி வெல்லும் ஜோதி வெல்லும்
    நிறையும் எங்கும் உண்மையே!
    மேதினிக்குள் நல்லவர்க்கு
    மேன்மை உண்டு மேன்மையே!

    எண்ணெய் இல்லாத் தீபத்திற்குள்
    என்னை ஊற்ற ஆவலே!
    எண்ணம் முற்றும் வற்ற வேண்டும்
    இங்கு தேவி காவலே!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share