தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ?
சித்திரை நிலவு சிரிக்கின்றாள்
செந்தமிழ் கேட்டு நகைக்கின்றாள்
முத்தமிழறிஞர் சங்கத்தை
மோகனமிட்டு அளக்கின்றாள்
உத்தமர் யாரெவர் புரியவில்லை
பித்தர்கள் கூட்டமாய் குறைவுஇல்லை ()
கற்றவர் சபையிலை அங்கினுமே
கட்சிகளாக காணுகின்றாள்
பெற்றவரில்லா பிள்ளையைப் போல்
பெருந்துயர் மனதுடன் வாழுகிறாள்
உற்றவர் உறவினர் எனச்சேர்ந்த
ஒருபிடி குழுக்களில் மேடைகளில்
மற்றவர் யாவரும் பார்வையிலா குருடராகவே காணுகிறாள் ()
தனைச்சுற்றி வட்டமும் போட்டதிலே
தினமொரு பலன்தரும் சனியவராய்
அணைகட்டி ஓடிடும் காவிரியை
தன்பிடி தடுக்கும் மாநிலமாய்
கடன்விட்டு போயினும் கர்மாவின்
கடைபட துயருரும் நாடதுபோல்
உடன்கட்டை ஏறிட விழைவதுஉம்
உத்தமமா பழி
மொழியினமா? மொழியிடமா ? ()
பணத்துக்கு வள்ளுவன் எழுதவில்லை
பதவிக்கு பாரதி பணியவில்லை
ஆட்சிக்கு ஆழ்வார் பாசுரங்கள்
தமிழினில் தந்தார் புகழ்ச்சியில்லை
விருதுகள் பெற்றிட விளம்பரங்கள்
கம்பனும் அவ்வையும் செய்யவில்லை
திறமைகள் பளிச்சிட தெரிந்தும்பலர்
வளர்ந்திட வளர்த்திட நினைப்பதில்லை ()
தன்னலமோடு கங்கைநதி
தண்ணீர் மறுத்தால் பயனுளதோ
தன்குலம் வாரிசெனச்சொல்லி
வானம் மாரியை மறுத்திடுமோ
பிரிவினை ஏற்றி அதில் பிழைக்கும்
நரிகளும் எலிகளும் அணிவகுத்தால்
துயரினைப் போக்கி உயிர்வாழ
தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ ()