அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா
நினைத்ததும் அன்பு தருவாயா .
முறுவலில் முத்தமருள்வாயா அம்மா
மடியினில் இடம்தருவாயா ( ….)

சுமையென யெனை நினைத்தாயா இல்லை
சுகமென அகமகிழ்ந்தாயா
வலியினில் யெனை ஈன்றாயா அன்றி
கவியினில் தமிழ் கலந்தாயா (….)

மதியினில் ஒளி கலந்தாயா என்
மனதினில் அறம் பதித்தாயா
இரவிலும் கண்விழித்தாயா நான்
வரும்வரை புண்பொறுத்தாயா (…)

குயிலெனத் தினம் கிடைத்தாயா வேம்பு
கிளியென மொழிபெயர்த்தாயா
அமைதியை எனக்க ளித்தாயா தினம்
ஆற்றலில் இசை கோத்தெடுத்தாயா (…)

நெறிமுறை தனைச் சமைத்தாயா என்
செறிவினில் செழிப்படைந்தாயா
தன்னலம் தான் துறந்தாயா பிரிந்தே
விண்ணகம் தான் விரைந்தாயா (…)

About சத்திய மணி

சத்தியமணி - பிறப்பு - திருமயம், தமிழ் நாடு படிப்பு - கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை உழைப்பு - விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்) இருப்பு - தில்லி தலைநகரம் துடிப்பு - தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம், சிறப்பு - அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு பங்களிப்பு - கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி களிப்பு - இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க