Category: தொடர்கள்

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 3

    முன்னுரை

    கவிச்சக்கரவர்த்திகள் என்னும் பெருமைக்குரியவர் மூவராயினும் கம்பனைத் தனித்துச் சுட்டுவது போலப், ‘பாரதி’ என்பார் பலராயினும் சுப்பிரமணியபாரதியையே சுட்டுமாறு போல இலக்கண இலக்கிய உரையாசிரியர் பலராயினும் அச்சொல் ஒருவரையே சுட்டுமாறு அமைந்திருக்கிறது. அந்தச் சிறப்பினைப் பெற்றவர் ஆசிரியர் இளம்பூரணர். தொல்காப்பிய அடவிக்குள் செல்லத் தடம் காட்டிய தண்டமிழ்ச் சான்றோர். கரையில்லாத் தமது தமிழ்ப்புலமையைக் கறையில்லா உரைசெய்து காலத்தால் அழிக்க முடியாத பெரும்புகழ் கொண்டவர். சேனாவரையம், நச்சினார்க்கினியம் மற்றும் பேராசிரியம் ஆகியவை தனித்தன்மை மிக்க உரைகளாகக் கருதப்படினும் அவற்றின் தனித்தன்மைக்கு மூலமாக இருந்தது இளம்பூரணரின் உரையே என்பதைக் கற்றார் அறிவர். ‘இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லாரால் போற்றப்படும் அன்னார் எழுதிய தொல்காப்பியம் முழுமைக்குமான உரையில் ஆங்காங்கே இலக்கண விளக்கத்திற்காக அவர் பயன்படுத்தியிருக்கும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    குலமகளும் கோபுரமும்

    அனைத்துவகைச் சிறப்புக்களை உடையதாயிருப்பினும் ஒரு நூலுக்குப் பாயிரம் என்பது இன்றியமையா ஒன்று. அது அறிமுகம். தோரணவாயில். முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்றெல்லாம் ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு அது அமையும். பொதுப்பாயிரம் எனவும் சிறப்புப் பாயிரம் எனவும் அது பகுக்கப்படுவதும் உண்டு. தொல்காப்பியத்திற்கும் அந்தப் பாயிரம் உண்டு. அதனை எழுதியவர் பனம்பாரனார் என்னும் சான்றோர். அந்தப் பாயிரம் தொல்காப்பியத்திற்கு அமைந்துள்ள பாங்கினை இளம்பூரணர் உவமம் கூறி விளக்குகிறார். ‘புகழ் புரிந்த இல் இல்லோரக்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை’ என்னும் குறட்பாவால் ‘கணவனுக்கு மனைவியே அணிந்துரை’ என்பதைக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். சிலப்பதிகாரக் காப்பியத்தில் தலைமகள் கண்ணகியைக் கோவலனினும் முற்படுத்தி அறிமுகம் செய்ததும் இது பற்றி என்க. இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது மனத்தில் எண்ணிய இளம்பூரணர்,

    “பாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல  இன்றியமையாச் சிறப்பிற்று”

    என்று எழுதுகிறார். எண்ணிப்பார்க்க இயலாத உவமங்களைக் கவிதைகளில் பிணைத்துக் காட்டியவர் சுரதா. அவருக்கு இளம்பூரணர் வழிகாட்டியாக இருக்கலாம். பாயிரத்தை நோக்கினால் நூலின் தகுதி தெரிந்துவிடும். மனைவியின் பெருமை நோக்கினால் கணவனின் பெருமை புலப்பட்டுவிடும் என்பது கருத்து. இங்கே ஒரு நுட்பத்தை இளம்பூரணர் பதிவு செய்கிறார்.  மனைவியில்லையேல் கணவன் இல்லையென்பதை ‘இன்றியமையாச் சிறப்பிற்று’ என்னும் தொடரால் புலப்படுத்துகிறார்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

    அக்காலத்தில் நகரங்கள் ஆலயங்களுக்குள் வடிவமைக்கப்பட்டன. மதுரை, திருவானைக்காவல், திருவரங்கம் முதலிய நகரங்கள் ஆலயத்திற்குள் அடக்கம். விமானம் என்பது கருவறைக்கு மேல் நிற்பது. கோபுரம் என்பது கோயிலுக்கு நுழைவாயிலாக அமைவது. நகரம் கோயிலுக்குள் அமைந்ததால் கோயிலுக்குக் கோபுரம் என்பதும் நகரத்திற்கு நுழைவாயிலாக அமைந்தது. இதனைச் சிந்திக்கும் இளம்பூரணர், ஒரு நூலுக்கும் அதன் பாயிரத்திற்குமான தொடர்பைத்,

    “திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயில் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலான்”

    என்று எழுதுகிறார். மனைவி இன்றிக் கணவன் அமையமாட்டான் என்பதை முன்னுவமத்தால் பெறவைத்த இளம்பூரணர், இந்த உவமத்தால் அத்தகைய அறிவுடைய மனைவி அழகுபொலி நங்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை ‘அலங்காரமாதற் சிறப்பு’ என்னும் தொடரால் பெறவைக்கிறார்.

    இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன்

    ‘பார்த்து நடந்தால் பாதை தெரியும்’ என்பார் கண்ணதாசன். பார்த்து நடப்பதற்குக் கைகாட்டி இன்றியமையாதது. அந்த கைகாட்டித்தான் பாயிரம். இப்பாயிரம் அமையாத அல்லது படிக்காத நிலையில் நேரடியாக நூலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? என்பது பற்றி அடிகள் சிந்திக்கிறார். அதற்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    “பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனின் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும்”

    என்று எழுதுகிறார். உள்ளடக்கத்தின் அறிமுகம் பாயிரம். தடங்காட்டி  வழிநடத்தும் பொறுப்பு அதற்குண்டு. அப்பாயிரம் இன்றேல் உள்ளடக்கத்தை அறியா மாணவன் தடமறியாக் காட்டுக்குள் சென்ற மானாக இடர்ப்படுவான் என்னும் உவமத்தை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார்.

    நாலுழக்கு கொண்டதே நாழி

    ‘நாழி’ என்றால் ‘படி’ என்பது பலருக்கும் தெரியும். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது சங்க இலக்கியம். ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி’ என்பது மூதுரை. ஆனால் ‘நாழி’ என்னும் அளவு எப்படி வந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. நுட்பமான இந்த அளவைக்கு மூலம் கிடையாது என்பதுதான் கருத்து. இதனை இளம்பூரணர் தக்க இடத்தில் உவமமாக்குகிறார். எழுத்துக்களை உச்சரிப்பதற்குரிய கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். அம்மாத்திரை அளவை எப்படி நிர்ணயிப்பது என்று,

    “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”

    என்ற நூற்பாவில் தொல்காப்பியம் சிந்தித்திருக்கிறது. இந்த நூற்பாவில் கண்ணிமையின் அசைவும், கைந்நொடியின் ஒலியளவும் ஒரு மாத்திரைக்கான கால அளவு என்பதை உணர்த்தியிருக்கிறார். இளம்பூரணருக்கு என்ன ஐயம் வந்தது? இதனை ஒரு மாத்திரை என்று கொள்வது எப்படி? என்பதுதான். அதற்கு அவர் எழுதுகிறார்,

    “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு என்றதனான், நாலுழக்கு கொண்டது நாழி என்றாற்போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக”

    அடிகள் உவமத்தால், நாழி என்பது எல்லாருக்கும் தெரியும். அது நாலுழக்கு கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. நுண்ணறிவு கொண்டார்க்கே அது புலனாம். அதுபோலக் கண்ணிமையும் நொடியும் மாத்திரை என்பது நுண்ணுணர்வுடையோர்க்கே புலனாம் என்று உவமம் கொண்டு விளக்குகிறார்.

    சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது

    முதலெழுத்து, சார்பெழுத்து என்னும் பகுப்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் இடம்பெறுவது தொல்காப்பிய வழக்கு.

    “குற்றியலிகரம் குற்றியலுகரம்
    ஆய்தம் என்ற
    முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன”

    என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களை முன்னர்ச் சுட்டி சார்பெழுத்துக்களை இந்த நூற்பாவில் சுட்டுகிறார் தொல்காப்பியர். முதலெழுத்தும் சார்பெழுத்தும் தனித்தனியாக விதந்தோதப்படுதலின் பின்னவை எழுத்தாகுமோ என்னும் ஐயத்தைக் களைய வேண்டிய கடப்பாடு உரையாசிரியருக்கு வருகிறது. இளம்பூரணர் இந்த ஐயத்தை ஓர் உவமத்தால் களைகிறார்.

    “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

    என்று எழுதிக் காட்டுகிறார். காட்டி, சார்ந்துவரல் மரபின் மூன்றெழுத்துக்களைத் தனியாக ஓதியது என்னையோவெனின் அவை பொருள் வேற்றுமையும் புணர்ச்சி வேற்றுமையும் கருதி வேறொரு தனியெழுத்தாகக் கூறினார் என்றும் காரணம் கூறுகிறார்.

    உயிர்மெய்யில் முன்னிற்பது எது? உயிரா? மெய்யா?

    அங்காந்த வாயினின்றும் வரும் ஆதியொலி அகரமெனின், உயிர்மெய்யை உச்சரிப்பது எவ்வாறு? அவ்வாறு உச்சரிக்குங்கால் முதலில் வருவது உயிரா மெய்யா? என்னும் அறிவுப்பூர்வமான ஐயம் வருவது இயல்பே. எழுத்துக்களின் தோற்றங்களை நிரலாகக் கூறிவரும் தொல்காப்பியம்,

    “மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”

    என்னும் நூற்பாவில் உயிர்மெய்யின் தோற்றத்தைப் பற்றி ஆராய்கிறது. முன்னர்க் கூறியவண்ணம் உயிர்மெய்யில் முதலில் தோன்றும் ஒலி உயிரா மெய்யா என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் இந்த நூற்பாவால் களைகிறது. ‘உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று எனப் பதசாரம் எழுதிய இளம்பூரணர்,

    “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையான் அக்கூட்டம் பாலும் நீரும் போல  உடன்கலந்ததன்றி விரல் நுனிகள்  தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்”

    என்னும் இரண்டு உவமங்களால் விளக்குகிறார். இப்படி இருக்கிறது என்பதற்கோர் உவமமும் இவ்வாறு நிற்பதாகக் கருதிவிடக்கூடாது என்பதற்கு மற்றொரு உவமத்தையும் பதிவு செய்து உயிர்மெய்யுள் எது முன்னது என்று தெரியாத வண்ணம் ஒலி வெளிப்படும் என்னும் நுட்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    கலத்தலும் மயங்குதலும்

    ‘மயக்கமா? கலக்கமா?’ எனத் தொடங்கும் கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல் பெருவழக்கு. ‘கலங்கி நிற்றல்’ என்பது வேறு. ‘கலந்து நிற்றல்’ என்பது வேறு. கண்ணதாசன் இப்படி எழுதுவதற்கு முன்னால் தொல்காப்பியர் கலத்தலா? மயங்குதலா? என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். தமிழில் சில சொற்கள் ஒரே பொருளைத் தருவதாகத் தோன்றினாலும் அவற்றிடையே நுட்பமான வேற்றுமை நிலவுவதை உரையாசியர்களின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாகக் கலத்தல், மயங்குதல் என்பன ஒரே பொருள்  தருவது போலத் தோன்றும் இரு சொற்கள். இவ்விரண்டு சொற்களையும் பிணைத்து,

    “நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”

    என்பது தொல்காப்பிய மரபியலில் காணப்படும் நூற்பா பகுதியாகும். ‘கலந்த மயக்கம்’ என்னும் தொடரில் ஒரே பொருளைத் தரும் இரண்டு சொற்களை  நோக்கிய இளம்பூரணர் அவற்றுக்கிடையே நிலவும் பொருள் வேறுபாட்டை நேரடியாக விளக்குவதைவிட உவமையால் விளக்குவதே ஏற்றது எனக் கருதியவராய்க்,

    “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செப்பும் உருக்கி ஒன்றாதல் போறல். ‘உலகம்’ என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். ‘உலகம்’ என்றது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். ‘உலகினுட் பொருள்’ பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டையும் உலகம் உடைத்தாதலின் ‘கலந்த மயக்கம்’ என்றார்”

    என விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வுவமைகளால் தன்னிலை மாறாமல் இணைவது ‘கலத்தல்’ எனவும், தன்னிலை இழந்து இணைவது ‘மயங்குதல்’ எனவும் அவற்றின் பொருள் விளக்கமாவதைத் தெளியலாம்.

    நிறைவுரை

    ‘இலக்கண விளக்கத்திற்கும் உவமப்பயன்பாடு ஏற்றதே’ என்னும் கொள்கையில் உறுதியாயிருக்கும் இளம்பூரணர் உரையில், பாலும் நீரும் என்னும் உலகியல், ‘எல்லா விரலும் ஒன்றல்ல’ என்னும் வழக்கியல், தோற்றம் இயல்பைக் குறைக்காது என்பது பட நின்ற ‘சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது’ என்னும் தத்துவம் முதலியன உவமங்களாக வந்துள்ளன. கோபுரமும் குறிச்சியும் உவமமாக வந்துள்ளன. ‘கலத்தல், மயங்குதல்’ என்னும் சொற்பொருள் விளக்கத்திற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டப்படும் இவை மட்டுமே இளம்பூரணரின் உவமங்கள் அல்ல இன்னும் இருக்கின்றன என ஆற்றுப்படுத்துகிறது இக்கட்டுரை.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 68

    பழகத் தெரிய வேணும் – 68

    நிர்மலா ராகவன்

    கொடுத்தால் திரும்பக் கிடைப்பது

    மனிதர்கள், `என் மதம், மொழி, இனம்! இதெல்லாம்தான் உயர்த்தி!’ என்று பலவாறாகப் பிறருடன் போட்டி போடும்போது, மனிதத்தன்மை குன்றி, சண்டை சச்சரவுகள் பெருகிவிடுகின்றன. நீடித்த மரியாதையின்மைதான் காரணம்.

    `மரியாதை’ என்பது நம்மிடமிருந்து மாறுபட்டவர்களது உணர்வுகளை மதித்து, அவர்களது வித்தியாசத்தைப் பாராட்டாது, அப்படியே ஏற்பது. கொடுத்தால், தானே திரும்பக் கிடைப்பது.

    ஒருவர் தன்னைத்தானே உயர்வாக நினைக்கலாம். ஆனால், சந்திப்பவர்கள் அனைவரும் தன்னை மதித்தாகவேண்டும் என்று மிரட்டலும், அதிகாரமுமாக நடத்தினால், மரியாதை நிலைக்குமா? அது உண்மையாகத்தான் இருக்குமா?

    எது நற்பண்பு?

    “குப்பைக்காரனோ, பல்கலைக்கழகத்தின் தலைவரோ, எவராக இருந்தாலும், நான் ஒரேமாதிரிதான் பேசுவேன்” (ஐன்ஸ்டீன்).

    `எனக்கு இவனால் காரியம் ஆகவேண்டுமே!’ என்று எதிர்பார்த்து, போலி மரியாதையுடன் நடந்துகொள்கிறவர்கள் மலிந்துவிட்ட காலம் இது. காரியம் முடிந்ததும், இத்தகைய காரியவாதிகள் காணாமல் போய்விடுவார்கள்.

    மரியாதை இல்லாத உறவு

    பிறர் சொல்வதும் செய்வதும் நாம் செய்வதுபோலவோ, அல்லது விரும்புவதுபோலவோ, இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவரைக் கேலி செய்வது நெருக்கத்தை எப்படி உண்டாக்கும்?

    தன் வீட்டுக்கு வரும் ஒருவரது உச்சரிப்பைக் கேலி செய்கிறவர் அவர்கள் வீட்டுக்குச் செல்கையில், கேலிக்கு ஆளாகிவிடுவோம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.

    மாமியார் பதவி கிடைத்தவுடனேயே, புதிய மருமகள் மகனது அன்புக்குத் தனக்குப் போட்டியாக வந்துவிட்டாள் என்ற காழ்ப்புணர்ச்சியும் வந்துவிடும் சிலருக்கு.

    எல்லாக் குடும்பங்களிலும் ஒரேமாதிரியான சமையல் இருக்காது. இதை ஒத்துக்கொள்ள விரும்பாது, “உனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்று சொன்னார்களே! ஒன்றுமே தெரியலியே!” என்று மட்டம் தட்டும் மாமியார்மீது எந்த மருமகளுக்குத்தான் மரியாதை எழும்?

    அன்பு? கேட்கவே வேண்டாம்.

    பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஆனால், அவமரியாதையை எதற்குத் தாங்கிக்கொள்வது?

    “எங்கள் வீட்டில் இப்படித்தான் சமைப்போம்,” என்று மருமகள் வாதாடினால், உறவு இன்னும் விரிசலாகும்.

    `வீண் சண்டை எதற்கு?’ என்று எதுவும் பேசாமலிருந்தாலும், மனம் என்னவோ கசந்துதான் போய்விடும்.

    குழந்தைகளுக்கு மரியாதை

    குழந்தைகளிடம், `நீங்கள், சொல்லுங்கள்’ என்று பேசுவதால் மரியாதை அளிப்பதாகிவிடாது.

    கடைத்தெருவில், பார்க்கும் பொருளையெல்லாம் வாங்கிக் கொடுக்கும்படி நச்சரிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது?

    `காசு இல்லே’. கடைத்தெருக்களில் பல தாய்மார்கள் சொல்லும் சாக்கு.

    `உனக்குத்தான் வீட்டிலே நிறைய இருக்கே!’ என்று சுட்டிக்காட்டலாம்.

    அதைவிட்டு, பலர் முன்னிலையில் அடிப்பார்களா?

    அப்படிச் செய்த ஒருவர், “என் தந்தை எனக்கு பிடித்தது எதையும் செய்ய விடவில்லை. எனக்கு விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஆசை. அப்பா விடவில்லை,” என்றார், உணர்ச்சியற்ற குரலில்.

    அப்போது அனுபவித்த நிராசை குழந்தையின் ஆசையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, ஆத்திரத்தில் கொண்டுவிட்டது.

    கதை

    அமெரிக்காவில் வாழும் ஐந்து வயதுப் பாலகன் சத்யாவிற்கு அவனுடைய தாய் மரியாதை சொல்லிக்கொடுத்தாள்: “பெரியவர்களிடம் பேசும்போது, `வா’ என்று சொல்லக்கூடாது. `வாங்கோ,’ என்று மரியாதையாக் கூப்பிடணும்”.

    ஒரு நாள் காலையில் அவன் என்னுடன் தொலைப்பேசியில் வெகு நேரம் தொடர்பு கொண்டபோது, “ஏதாவது சாப்பிட்டியோப்பா?” என்று கரிசனத்துடன் விசாரித்தேன்.

    அவனுடைய பதில்: இல்லேங்கோ, பாட்டிங்கோ!!

    பெண்களுக்கு மரியாதை

    `நீ அழகாக இருக்கிறாய்!’ என்று புகழ்ந்தால், உலகம் புரியாத சிறுமிகள் வேண்டுமானால் அகமகிழலாம்.

    வளர்ந்தபின்னர், அவர்கள் எதிர்பார்ப்பது தன்னை மரியாதையுடன் நடத்தும் ஆண். முகத்துதி இல்லை.

    ஆணைச் சார்ந்து நிற்பவள்தான் நல்ல பெண் என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்பட்டு வளர்கிறார்கள் பெண்கள்.

    ஆனால், படித்து, சொந்தக் காலில் நிற்பவர்கள் நினைப்பது: ஒருவரிடம் அன்பு செலுத்துகிறோம். அதை நம் பலகீனம் என்றெண்ணி, அவர் எவ்வளவு மோசமாக நடத்தினாலும், பொறுத்துப் போகலாமா? சுயமரியாதையை இழந்துவிடுவோமே!

    இப்படிப்பட்ட எண்ண ஓட்டத்தினால் பெண்ணியக் கருத்துகள் வலுப்பெறுகின்றன. விவாகரத்துகள் அதிகரிக்கின்றன.

    ஒரு துணுக்கு: “என் கணவர் நான் சொல்வது எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கேட்பார் – பிறரிடம் பேசும்போது!”

    அவள் சொல்லாமல் விட்டது – நான் சொல்வது எதையும் கணவர் காதில் வாங்கிக்கொள்வது கிடையாது.

    ஒருவருக்கு நாம் தரும் மரியாதை அவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதில் இருக்கிறது.

    எப்படி மரியாதை அளிப்பது?

    பெண்களுக்கு நன்றாகப் பேசும் திறமையும், ஆண்களுக்கு இயந்திரத் திறன்களும் (mechanical skills) இயற்கையாகவே அமைந்திருக்கின்றன.

    ஒரு பெண் காரோட்டிப் போகையில், அவளது `திறனை’க் கேலி செய்பவன் மரியாதை அளிக்கத் தவறிவிடுகிறான்.

    கதை

    ஒரு முறை, நான் காரை நிறுத்திய இடம் சறுக்கு மரம்போல் பயங்கர சாய்வாக இருந்தது. எப்படியோ கீழே நிறுத்திவிட்டேன்.

    திரும்பப் போகும்போது, அதை எப்படி வெளியே கொண்டுவருவது என்று மலைத்து நின்றிருந்தேன்.

    முன்பின் தெரியாத ஒருவர் என் குழப்பத்தைப் பார்த்து, “நான் உதவலாமா?” என்று பணிவாகக் கேட்டு, நான் சம்மதித்ததும், உதவினார்.

    அவர் மரியாதைக்குரியவர். ஏனெனில், `உனக்கு இதுகூட முடியவில்லையே!’ என்று ஏளனமாக நினைக்கவில்லை.

    இவரைப் போன்றவர்கள், எல்லாருக்கும் எல்லாம் செம்மையாகச் செய்ய முடியாது என்று புரிந்தவர்கள். பெண்களுக்காக காரின் கதவைத் திறந்துவிடுபவர்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் `gentlemen’ என்று சிலாகிக்கிறோம்.

    இவ்வாறு, பிற பெண்களை மரியாதையாக நடத்துபவர்களின் குழந்தைகளும் தந்தையைப் பின்பற்றுவார்கள்.

    மகளாக இருந்தால், மரியாதைக்குறைவாக நடத்தும் பிற ஆண்களை எதிர்ப்பாள். `பிறர் ஏன் என்னை மதிப்பதில்லை?’ என்று குழம்பமாட்டாள்.

    அப்படி ஒருவர் நடந்தால், அது நம் தவறில்லை. அவருக்குத் தன்னையே மதிக்கத் தெரியவில்லை, அதனால் பிறரையும் மரியாதையின்றி நடத்துகிறார் என்று புரிந்து, அலட்சியம் செய்வாள்.

    குடும்பத்தில் மரியாதை

    ஒரு குடும்பத் தலைவன் சுயநலத்துடன், தான்தோன்றித்தனமாக நடந்தால் என்ன ஆகும்?

    அவனுடைய தீய நடத்தையால் அவதிப்படும் மனைவிக்கு அவன்மீது அன்போ, மரியாதையோ இருக்காது.

    அவன் கொதித்துப்போய், `நான் உனக்கு வாழ்வு கொடுத்தேன், பிள்ளைகள் கொடுத்தேன்!’ என்று வசனம் பேசினால் மரியாதை கிட்டுமா?

    இருவரும் ஒருவர் மற்றவருக்கு அளிக்கவேண்டிய மரியாதையை மறந்து, ஓயாத வாக்குவாதத்தால் வாழ்வை நரகமாக்கிக்கொள்வார்கள்.

    தான் `ஆண்’ என்ற ஒரே தகுதியால், மனைவி (மற்றும் பிற பெண்கள்) தனக்கு மரியாதை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தோல்விதான் அடைகிறார்கள்.

    பிராணிகளுக்கு மரியாதையா!

    “உன்னை எப்படிப் பிறர் நடத்தவேண்டும் என்று விரும்புகிறாயோ, அதேபோல் அவரையும் நடத்து”.

    இந்த உண்மை மனிதருக்கு மட்டுமல்ல, வளர்ப்புப் பிராணிகளுக்கும் பொருந்தும்.

    ஒரு நாயையோ, பூனையோ வளர்த்தால், `நாம்தான் அதற்கு ஆகாரமும் தங்க இடமும் கொடுத்திருக்கிறோமே!’ என்று அடித்து உதைப்பவர்களும் இருக்கிறார்கள் — எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மிஸ்டர் ஊ (WOO) மாதிரி.

    அவன் வளர்த்த நாய், ராஜர், நான் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது என் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும்.

    “சும்மா திட்டறாளாப்பா?” என்று, நான் தடவிக் கொடுப்பேன்.

    எங்கள் நெருக்கம். மிஸ்டர் ஊவின் ஆத்திரத்தை எழுப்பியது. ஒரு சிறு கூண்டுக்குள் அதை அடைத்துவைத்தான். தலையைச் சாய்த்து, பரிதாபமாக என்னைப் பார்க்கும்.

    ஒரு முறை, எப்படியோ தப்பித்து, வெகு தூரம் சென்றுவிட்டது ராஜர்.

    தூரத்தில் என்னைப் பார்த்துவிட்டு, வேகமாக ஓடி வந்த அந்த அல்சேஷன் நாயைக் கண்டு, நடந்துகொண்டிருந்தவர்கள் அஞ்சி விலக, என்மேல் பாய்ந்து, முன் கால்கள் இரண்டையும் என் நெஞ்சில் பதித்துக்கொண்டது.

    “உங்கள் நாயா?” கேட்டவர்கள் முகத்தில் ஆத்திரம்.

    “இல்லை. என் பக்கத்து வீட்டு நாய்!” என்று கூறி, அவர்களை அதிசயத்திற்கு உள்ளாக்கினேன்.

    அதை அணைத்து, “திரும்பிப் போகத் தெரியலியா? என்கூட வா,” என்று தடவிக் கொடுத்தேன்.

    அதற்கு ஆகாரம் அளித்தவன் அத்துடன் நின்றுவிடாது, உலவப் போகையில் தன்னுடன் அழைத்துப் போயிருந்தால், அந்தப் பெரிய நாய் வெகுவாக அஞ்சி, பிறரையும் அச்சுறுத்தி இருக்குமா?

    நாங்கள் குடியிருந்த இன்னொரு வீட்டிலும் இதே கதைதான்.

    “உடனே வா. இல்லாட்டா, ஆகாரம் கிடையாது!” என்ற மிரட்டல் வரும். பக்கத்து வீட்டிலிருந்து.

    “சாப்பிடு, போ, டிக்ஸி. அப்புறமா வா,” என்று நான் அனுப்பும்வரை என்னைவிட்டுப் போகாது.

    கோலாலம்பூரில், தெருவுக்குத் தெரு, செல்லப் பிராணிகளுக்கு வேண்டிய ஆகாரம், விளையாட்டுச் சாமான்கள் விற்கும் கடைகள்!

    அதைக் கண்டு, “இங்கே எல்லாருக்கும் பூனை, நாய்கள்மேல் அன்பு வந்துவிட்டது போலிருக்கிறதே!” என்று என் மகள் மகிழ, வறண்ட சிரிப்பைத்தான் அவளுக்குப் பதிலாக என்னால் அளிக்க முடிந்தது.

    நம்மைப் போலவே, மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பது எத்தனைப் பேருக்குப் புரிகிறது?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)

    சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொன் கை நீட்டப்
    பரிஉடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக் கொண்டு ஓச்ச,
    இரு சுடர்க்கு உறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி,
    வருதுளி முத்தம், அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி்.

    வரலாறு

    பிறந்த குழந்தையைத்  தந்தை எடுத்தணைத்தான்; சிறுகுடி மக்கள் கொண்டாடி விழா எடுத்தனர்; புலிக்குட்டி போன்ற குழந்தை உலகமே போற்ற விளங்கியது; அக்குழந்தையின் திண் என்றிருக்கும் உடலைக் கருதித் ‘’திண்ணன்’’ என்றே பெயரிட்டு  அழைத்தனர்;அக்குழந்தைக்கு மரபுப்படி காப்பாக,  வேப்பங்கொட்டை கோத்த அணியை அணிவித்து வளர்த்தனர்; தெய்வத்துக்குப் பான்மடை கொடுத்தனர்; குழந்தை  தலையில் புலிநகச்  சுட்டியையும்,  மார்பில்  வெண்பல் தாலியையும்  அணிவித்தனர்;  மணிகள் பூட்டிய சதங்கையுடன்  நாய்க்காசு, தாயத்துடன் கூடிய அரைஞாணையும்  அணிவித்தனர்; அந்நாளில் குழந்தை,  பெற்றோர் மார்பில் சளுவாய் ஒழுக,  மழலைச் சொல் பயின்றது. அப்போது நடந்த நிகழ்ச்சியைச்  சேக்கிழார் பாடுகிறார்; அப்பாடல்

    பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கைநீட்டப்
    பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண் டோச்ச
    விருசுடர்க் குறுகண் டீர்க்கு மெழில்வளர் கண்ணீர் மல்கி
    வருதுளி முத்த மத்தாய் வாய்முத்தங் கொள்ள மாற்றி,

    பொருள்

    குழந்தை பொருகின்ற புலியாகிய பார்வைமிருகத்தின் திறந்த அகன்ற வாயினைச் சிறு குகையென்று கருதித் தமது அழகிய கையை அதனுள் நீட்ட;  அன்பு மிக்க தந்தை அதனைக் கண்டு பரிந்து பசுந்தழை யொன்றைக் கையிற் கொண்டு ஒச்சவே; சூரிய சந்திரர்கள் என்னு மிரண்டு சுடர்களுக்கு உளதாம் துன்பத்தைத் தீர்க்கும் அழகு வளரும் கண்களின் நீர் நிரம்பி வருகின்ற துளியாகிய முத்தத்தை அந்தத் தாயாகிய தத்தை வாய்முத்தங்த்தால்  மாற்றினாள்;

    விளக்கம் :-  பார்வை விலங்காகிய  புலிக்குட்டியின் திறந்த வாயை ஏதோ ஒரு பேழை எனக்கருதியது.

    சிங்கம், புலி முதலிய விலங்கினங்களின் மேல்வாய் கீழ்வாய்ப் பற்கள் வளைந்து குறடுபோலப் பொருந்தி மாட்டிக் கொள்ளுந் தன்மையுடையன; ஆதலின் இரைகண்ட போது எளிதின் வாய்திறந்து பற்ற இயலாதன; இதுபற்றி அவை பெரும்பாலும் வாயை அகலத்திறந்து வைத்திருக்கும்  இயல்புடையன என்பர்.

    இவ்வாறு திறந்துள்ள அகன்ற வாய் சுருங்கி நீண்டு உள்ளே செல்லுதலால் குகை எனக்கருதி, குகையினுள்ளே உள்ளது எது அதனைப் பற்றுவோம் என்று

    உள்ளே கை நீட்டுதல் சிறுவரியல்புகளில் ஒன்றாம்.

    பின்னர் இக்குழந்தை,   வேட்டையாடி வந்து, சிவபிரானுக்கு அமுதூட்டிக் காவல் புரிந்தும், “இருசுடர்க்கு  உறுகண்   தீர்க்க”  அம்பினால்  தமது கண்ணைப் பேழ்ந்து அப்பிக் கண்ணப்பராகியதும் கையாதலின் அதனை முற்கூறி அழகு படுத்தினார். இவ்வாறு இளம்பிராயத்தும் பின்னர்க் காளைப்பருவத்தும் கொடிய விலங்குகளுடன் பழகியதனாலும் போர் செய்து வென்றதனாலும் இவரது திருமேனியில் அவற்றால் புண்செய்யப்பட்ட வடுக்கள் விளங்கின என்று,

    “வடிவே,
    மறப்புலி கடித்த வன்றிரண் முன்கை,
    திறற்படை கிழித்த திண்வரை யகலம்,
    எயிற்றெண்கு கவர்ந்த விருந்தணெற்றி”

    என நக்கீரதேவர் திருமறத்தில் திருக்கண்ணப்ப தேவர் அருளினார். ஆயின் அவ்வாறு நாயனாரது திருமேனியில் ஊறுபட்ட தெனக் கூறவும் மனமொருப்படாத ஆசிரியர்,  அதன் அறிகுறியாக இங்குச் சிறு வயதிற் புலியின் வாயில் இவர்கை நீட்டினார் என்ற ஒருசெய்திமட்டுங் கூறி ஏனைய வெல்லாம் அநுமானத்தா லுணர்ந்து கொள்ளவைத்தாரென்க.

    நீண்டகாலம் கழித்துத் தவங்கிடந்து அரிதிற் பெற்ற பட்டத்திற்கு உரிய மகனாதலிற் பரிவுடை என்றார். புலிவாயிற் கைநீட்டுவதாகிய பெருங்கேடு தரத்தக்க பெருஞ் செயலைத் தடுக்க முயல்பவன் அதற்குரியபடி பெருந் தண்டஞ் செய்து ஒறுக்காது பசுந்தழை கொண்டு, அதனைக் கொண்டாகிலும் அடித்து ஒறுக்காது ஓச்சுவதும் இவனது பரிவு காட்டும். ஓச்சுதல் – ஓங்குதல். அடித்துத் தண்டிப்பான் போன்ற பாவனை காட்டுதல்.

    அம்மையார் ஊட்டிய திருமுலைப்பால் உண்டுபால்வடிந்த வாயுடன் நின்ற ஆளுடைய பிள்ளையாரை,

    “எச்சின்மயங் கிடவுனக்கு  ஈது  இட்டாரைக் காட்டென்று,  கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சி” னார் அவரது தந்தையார் சிவபாதவிருதயர். இங்கு நாகன் புலிவாயிற் கைநீட்டிய தன் மகனாரை மாறுதானும் கொண்டோச்சச் சகியாது பைந்தழை கொண்டு  ஓச்சினான் என்றதும் அவனது பரிவு காட்டுவதாம்.

    இருசுடர்க்கு  உறுகண் என்ற தொடரால்  நாயனாரது சரிதக் குறிப்பும் கண்ணப்பர் என்ற பெயருக்குக் காரணக் குறிப்பும் பெற இதனைமுன்னபே கூறினார்.  இருசுடர்கள் சூரியசந்திரர்கள். இவர்கள் முறையே சிவபெரு மானது வலது கண்ணும் இடதுகண்ணுமாவார்.

    உறுகண் ஆவது உதிரம் பாய்ந்தது. தீர்க்கும் – உதிரம் வாராது தடுத்து  நின்ற. இவை பின்னர் இவர் சரித நிகழ்ச்சிகளின் முற்குறிப்பாக இங்குக் கூறினார்.

    எழில்வளர்கண் என்ற தொடர்,  இவரது கண்கள் அழகால் வளர்ந்தே நின்றன. அவை

    “கொன்றைதங்கு வேணி யார்தமைக், கண்ணினீடு
    பார்வையொன்று கொண்டு”

    “காணுதற்கரியார் தம்மை, ஆர்வமுன் பெருக ஆரா
    அன்பினிற் கண்டு கொண்டே”  எஞ்ஞான்றும் நிற்பன என்பதைக்குறித்தது. இவற்றில் ஒன்று இறைவனது கண்ணில் அப்பப்பட்டு அவரது கண்ணே யாயிற்று. ஆதலால் எழில்வளர்கண் என்றார்.

    நீர் கண் மல்கி வரும் துளி முத்தம் – நீர், பெருகும்போது முதலிற் கண்களில் நிறைவதும். பின்னரே துளிகளாக வீழ்வதும் இயல்பாம்.

    அத்தாய் என்றசொல்  தந்தையினும் மிக்க பரிவுடைய அந்தத் தாயைக்குறித்தது.

    துளிமுத்தம் – வாய்முத்தம் – சொற்பின்வருநிலை. ‘ஊனுக்கூன்’ எனுமுரை என்று நினைவுற்று இறைவன் கண்ணோய்க்குக் கண் மாற்றுக ஒப்பு முறை (Homeopathic) மருந்தாய் உதவும் மருந்துப் பண்டமாகிய இக்கண்கள் அந்தம் ஒப்புமுறை மருந்தினிலையில் நோய்க்கு மாற்றாகப் பழகித் தேர்ந்தன என்ற குறிப்புப் பெறத்  துளிமுத்தம் பெற வாய்முத்தம் மாற்றி எனக் கூறிய நயமும் காண்க. வாய் முத்தம் கொள்வதற்குத் துளிமுத்தம் மாற்றி எனப் பண்டமாற்றுக் குறிப்புப் பெறக் கூறிய சுவையை இங்கேகாணலாம்.

    வாய்முத்தங் கொள்ளுதல்  என்பது,  பிள்ளைப்பருவங்கள் பத்தினுள் முத்தப்பருவம் என்பது குறித்தது. இவ்வாறே முன்னர்

    “மழலைத் தீஞ்சொல்  வண்ணமென் குதலைச் செவ்வாய்
    குதட்டியேவளராநின்றார்”

    என்றது செங்கீரைப்பருவங் குறித்ததென்பர்.

    இப்பாடல் கண்ணப்பரின் குழந்தைப்பருவச்செயல் பிற்காலத்தில், அவர் செய்த செயற்கரிய செயலை, முன்னதாகக் கூறும் நயத்துடன் விளங்குகிறது. சிவபிரான்  வலக்கண்ணில் உதிரம் பாய நின்றது; பின்னர் இடக்கண்ணில் உதிரம் பாய நின்றது; இரண்டும் சூரிய சந்திரராகிய இருசுடருக்கு நேர்ந்த துன்பம்! அதை நீக்கத் தம் கண்களையே எடுத்து அப்ப முயன்ற  அரிய செயல் இங்கே  முன்னதாகப்   போற்றப் பெறுகிறது!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 2

    முன்னுரை

    இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் பொருள் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் உவமம், பல நேர்வுகளில் இலக்கண விளக்கத்திற்கும் பயன்பட்டுள்ளது. இலக்கியத்தின் அழகியல் கூறாக விளங்கும் உவமம், இலக்கணத்துள்ளும் இலக்கண உரைகளுக்குள்ளும் இலக்கணத் தெளிவுக்கான கருவியாக அமைந்திருக்கிறது. உவமத்தின் தலையாய பணி, பொருள் புலப்பாடே. அப்புலப்பாட்டுப்பணி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முறையே அழகியல் உணர்வு, அறிவுத் தெளிவு என்னும் இருவேறு நோக்கங்களை நிறைவு செய்வதாக அமைந்திருக்கிறது. படைப்பின் பெருமையை அளந்துப் புலப்படுத்தும் கருவி உவமமே. இத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமம் மேற்கூறிய வண்ணம் இலக்கியத்தின் அழகியல் பகுதியை நிறைவு செய்வதோடு அதன் நிலைப்பேற்றுக்கும் பெருங்காரணமாக அமைகிறது. ஆனால் இலக்கணத்துள் அதன் பணி வேறாக அமைகிறது. இலக்கண நுட்பங்களை விளக்கிக் காட்டுவதற்கும் அளவையியல் அடிப்படையில் இலக்கண உரை அமைவதற்கும் பெருந்துணையாக அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயரின் உவமங்கள் இலக்கண விளக்கத்தின் மேல் செலுத்தும் ஆளுமையை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    உறவுகளும் உவமமாகலாம்.

    நூலின் வகைகளைக் கூறவந்த பவணந்தியார் ‘மும்மையின் ஒன்றாய்’ என அடையாளப்படுத்துகிறார். முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என்பன நூலின் மூன்று வகையாகும். அவற்றுள் ஒன்றின் திறன் மற்றொன்றில் காண்பது அரிது. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கி முதனூலாகவும் முதனூலை நோக்க வழி நூலாகவும் அயல்நூலை நோக்க சார்பு நூலாகவும் அமையும். தொல்காப்பியத்திற்கு நன்னூல் வழிநூல். தொல்காப்பியத்திற்கு வழிநூலான நன்னூல் அகத்தியத்தை நோக்கச் சார்புநூலாம் என்க. எனவே இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை என்பது பெறப்படும். “முதல் நூல் வழிநூல் என்னும் இருதிறத்து நூல்களுக்கும் பொருள்முடிபு ஒருபுடைத்து ஒத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாகும்” என்னும் சங்கர நமச்சிவாயரின் விளக்கம் இதனை உறுதி செய்யும். சார்பு நூல் என்பது தொல்காப்பியக் கொள்கைக்கு மாறுபட்டதாயினும் நன்னூலார் காட்டும் உவமத்திற்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    “முதல்நூற்கு, வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க.”

    என்று எழுதுகிறார். தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் தந்தைக்கும் மருமகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. இருப்பினும் அவனும் ஓர் உறவே. இலக்கண நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது உவமத்தைக் கையாண்டு விளக்கம் கூறுவதும் அவ்வுவமங்களும் மானுட உறவுகளைப் பெருமைப்படுத்துவதுபோல் அமைந்திருப்பதும் தமிழியலின் உவமக்கோட்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம். ‘தந்தையை நோக்க மகன்’ என்னும் உவமத்தால் முதுனூலின் சாரம் வழிநூலில் அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது என்பது பெறப்படும்.

    சிந்தை கவரும் ‘சினை உவமங்கள்’

    வழிநூலின் வகைகளைக் கூறும் நன்னூலார் ‘தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு எனத்தகு நூல்யாப்பு ஈரிரண்டென்ப” (51) என்னும் நு{ற்பாவில் நான்காகப் பகுத்துரைக்கின்றார். ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழியெர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமரபினவே’ என்று தொல்காப்பியம் கூறும். நன்னூல் சிறப்புப்பாயிரத்துள் இது பற்றி ஆராயும் சங்கர நமச்சிவாயர், ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்றிருக்க, தொகை, வகை, விரி எனப் பிரித்தோதுவது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காண்கிறார்.

    “வழியின் வகையாகிய யாப்பினுள் ‘தொகைவிரி’ என ஒன்று போந்ததன்றித் தொகை, வகை, விரி எனப் போந்தது இல்லையாலோ எனின் நடுநின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும் முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின் இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற்படும் என்க. எனவே தொகை, விரி என இரண்டாய் வரினும் மரத்தினது பராரையினின்றும் கவடு, கோடு, கொம்பு, வளார் பலவாய ஒன்றோடொன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடு ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பேயாம் என்க” (சிறப்புப்பாயிரம்)

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு மரத்தின் பராரை முதலிய பகுதிகள் உவமமாக்கப்பட்டுப் பொருள் புலப்பாட்டுக்கு உதவுவதைக் காணலாம்.

    வினைச்சொல்லில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களும் அடங்கும். எனினும் பகுதி, விகுதி என்பவையே கண்ணுக்குப் புலப்படுமாறு அமையும். ஏனைய நுண்ணிய பார்வைக்கும் புலமைக்கும் உரியவை.  பவணந்தியார் இந்தப் பார்வையை,

    “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
    பகுதி விகுதி பகுத்திடை நின்றதை”

    எனக் கூறுவதன் மூலம் அவ்விரண்டையுமே விதந்தோதுகிறார். தொடர்ந்து இடைநிலையைக் கூறும் அவர் ஏனைய உறுப்புக்களைக் கூறாது விடுகிறார். இதற்கான காரணத்தை ஆராய்ந்த சங்கர நமச்சிவாயர், இன்றியமையாதவற்றை முதலில் கூறி மற்றவற்றைப் பின்னர் கூறுவதாகத் தாம் எண்ணியதை ஓர் உவமத்தின் வழி விளக்குகிறார்.

    “மா பலா முதலியன பராரை முதலிய சினையோடு நின்றன எனக் கண்டது கூறுவார் போல”ப்  (146)  பகுபதம் பகுதி முதலிய உறுப்போடு நின்றது எனக் கண்டது கூறி, அப்பதம் தந்த தோலா நாவின் மேலோர் ஆணையின் நிற்றலின் ‘கண்டதற்கு’ என்றும் கூறினார்”

    என உவம விளக்கம் தருவதைக் காண முடிகிறது. கண்ணில் படுவதை முன்னர்க்கூறிப் பிறவற்றைப் பின்னர்க் கூறுவதற்கு உரையாசிரியர் மரங்களையும் அவற்றின் சினைப்பகுதியையும் உவமமாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

    கமுகந்தோட்டம் என்றாற்போல

    நன்னூலில் மூன்றாவது இயலாக அமைந்திருப்பது உயிரீற்றுப் புணரியல். பல்வகைப் புணர்ச்சிகளும் இவ்வியலுள் ஆராயப்பட்டுள்ளன. பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்பட்டிருக்கும் ஓர் இயலுக்குக் குறிப்பிட்டதோர் புணர்ச்சியை மட்டும் பெயராக்கியதற்கு ஓர் உவமம் கூறி விளக்குகிறார் சங்கர நமச்சிவாயர். கமுகு என்றால் பாக்கு. கமுகந்தோட்டம் என்றால் பாக்குத் தோப்பு என்பதாகும். அதனுள் தென்னை, பலா, தேக்கு, மா எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து நிற்கும். எனினும் பெரும்பான்மை பற்றி அதற்குக் ‘கமுகந்தோட்டம்’ என்பது வழக்கு. அதுபோலப் பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்படினும் பெரும்பான்மை உயிரீறு பற்றிய புணர்ச்சியே ஆதலின் இவ்வியலுக்கு இப்பெயர் அமைந்ததாக உவம விளக்கம் செய்கிறார் உரையாசிரியர்.

    முடவன் கோலூன்றி வந்தாற்போல

    ஙகர மெய் (ங்) அகர உயிர் ஒன்றுடன் கூடியே சொல்லுக்கு முதலில் வரும் அவ்வாறு சொல்லுக்கு முதலாகும் போதும், அ, இ, உ என்னும் சுட்டுக்களையும், எ, யா என்னும் வினாக்களையும் முதலாகக் கொண்டு வரும். தனித்து வராது. இதனைச்,

    “சுட்டு யா எகர வினாவழி அவ்வை
    ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே” (106)

    என்னும் நூற்பாவில் இலக்கணம் கூறுகிறார். இதற்கு உரைவிளக்கம் கண்ட சங்கர நமச்சிவாயர்,

    “ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு, வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான்”

    என்றெழுதுகிறார். இலக்கணத்திற்கு உரையெழுதும் உரையாசிரியர் பார்வையில் சுட்டும் வினாவும் முடவனாகிய ஙகரத்திற்கு உதவும் கோலாகத் தோன்றியிருக்கின்றன என்பதே இவ்வுவமப்பார்வையின் சிறப்பாகலாம்.

    நச்சினார்க்கினியரை வழிமொழியும் நமச்சிவாயர்

    உயிரும் மெய்யும் கலந்து வரும் எழுத்து உயிர்மெய் எழுத்து. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பதால் மெய்க்கும் மூலம் அகரம் என்பது பெறப்படும். அதாவது மெய்களின் இயக்கமும் அகரமின்றி அமையாது. இறைவன் எல்லா உயிர்களோடும் கலந்து நிற்பதை உவமமாக்கி நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் (தொல். மொழிமரபு. 46) உரைவிளக்க உச்சம். எனினும் ‘உயிர்மெய்’ என்றவிடத்து முதலில் பிறக்கும் ஒலி மெய்யா உயிரா என்பது பற்றி ஆழமான சிந்தனை உரையாசியர்களிடம் இருந்து வந்திருக்கிறது. ‘நெடுநல்வாடை’ இலக்கியத் தலைப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய பேரார்வம் ‘உயிர்மெய்’ என்னும் சொல்லாட்சி பற்றிய ஆய்விலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை,

    “மெய் முன்னர் நிற்ப உயிர் பின்வந்து ஏறுமென்றார். அம்முறையே  ஓசையும் பிறக்கும் என்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் ‘உப்பும் நீரும் போல்’ ஒன்றேயாய் நிற்றலும், வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல’ வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமே ஆயவாறுபோல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க” (தொல். நூ.ம.18 உரை)

    என்னும் அவருடைய விளக்கத்தால் அறிய முடியும். இந்தக் கருத்தினை உள்வாங்கிய நமச்சிவாயர் ‘நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே’ (நன்.109) என்னும் நூற்பாவின் விளக்கத்தில்,

    “எண்ணதிகாரத்துள் உயிர்மெய்யை ஓர் எழுத்தாக (நன்.60)  எண்ணினார் ஈண்டு இரண்டாக வைத்து இலக்கணம் கூறுவது என்னை எனின் “அப்பொடு பெய்த உப்பே போல’ உயிரொடு புணர்த்திய மெய் தன் அளவு தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின் என்று உணர்க’

    என்று எழுதுகிறார். இதனால் இலக்கணக் கருத்துக்களை வழிமொழியும் வழி நூலில் அந்நூலின் உரையாசிரியர் முதனூலின் உரைப்பகுதியையும் வழிமொழிவதை அறிய முடிகிறது.

    நிறைவுரை

    ஒரு நூலுக்குப் பலர் உரைகாணும் உரை மரபு தமிழுக்குப் புதியதன்று, முதனூல் நூற்பாக்களை ஆசிரிய வசனங்களாக வழிநூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது போலவே முதனூல் உரையாசிரியர்களின் உவமங்களையும் வழிநூல் உரையாசிரியர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள் அல்லது மறுத்திருக்கிறார்கள். மானுட உறவுகளும், மாற்றுத் திறனாளிகளும் இடம்பெறும் இந்த உரைகளில் இயற்கையைப் பற்றிய விரிந்த பார்வையும் அறிவும் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன. சமுதாய விஞ்ஞானிகளாகவும் இயற்கையின் ரசிகர்களாகவும் அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 67

    பழகத் தெரிய வேணும் – 67

    நிர்மலா ராகவன்

    சொல்லும் செயலும்

    நாம் சொல்வதை ஒருவர் ஏற்க வேண்டுமென்றால், அவருக்கு நம்மேல் நம்பிக்கை எழுவது முக்கியம். ஏதாவது ஒற்றுமை இருந்தால்தான் இது சாத்தியம். அது வயதாக இருக்கலாம். அல்லது உத்தியோக நிலையிலோ அல்லது பொருளாதாரத்திலோ இருக்கலாம்.

    சொல்லும் விதம்

    நாம் சொல்லும் பாணி கேட்பவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதத்தில் அமைய வேண்டும்.

    `ஏதோ, எனக்குத் தெரிந்ததை, என்னால் முடிந்த முறையில் சொல்லிவிட்டுப் போகிறேன்!’ என்ற அலட்சியத்துடன் ஒருவர் தன் கடமையை ஆற்றினால், யார் அவர் சொல்வதைப் பின்பற்றுவார்கள்?

    சிலருக்குப் பிறருடன் எப்படிப் பேசினால் பலன் கிடைக்கும் என்று இயல்பாகவே தெரியும். அப்படி அமையாவிட்டால், இதைக் கற்கவும் முடியும்.

    தூண்டுதல்

    நாம் பிறருடன் பேசும்போது, நம்மையுமறியாது, அவரை நம் வழியைப் பின்பற்றச் சொல்லிவிடுகிறோம்.

    `நீ என்னுடன் வா!’ என்பதற்கும், `நீயும் வருவாயா?’ என்று எதிர்பார்ப்புடன் கேட்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்!

    முதலாவதில், அதிகாரம்.

    `வருவாயா?’ என்று கேட்கும்போது, முடிவை மற்றவருக்கு விட்டுவிடுகிறோம். அவருக்கு மரியாதை கொடுப்பதுபோலவும் ஆயிற்று.

    இன்னொரு உதாரணம்: `இன்று என்ன சமைக்கப்போகிறாய்?’ என்று கேட்டுவிட்டு, `முருங்கைக்காயை சாம்பாரில் போட்டால்தான் ருசி!’ என்று மெல்லக் கூறுவோம்.

    `சாம்பாரில் போடேன்!’ என்பது சமைப்பவருக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது.

    `ருசி அதிகமாகும்,’ என்றால், நம் விருப்பத்திற்கு அவரை இணங்கச் செய்வது.

    தொனி

    பேசுகிறவர்களின் தொனி முக்கியம்.

    இயந்திரத்தைப்போல் உணர்ச்சியற்ற குரலில் பேசாது, தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் பேசினால் பலன் கிடைக்கும். அதற்கேற்ற உடல் மொழியையும் சேர்த்து மேற்கோள் காட்டுவதுடன், நடு நடுவே கதை சொன்னால், கேட்பவர்களின் உற்சாகம் குன்றாது இருக்கும்.

    தற்போது, கூந்தலை நீளமாக எப்படி வளர்ப்பது என்று பல வழிகளைப் பெண்கள் காட்டுகிறார்கள், இணையத்தில்.

    எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை – முழங்காலுக்குக்கீழ் தொங்குகிறது அவர்கள் தலைமயிர். நம்பத்தான் தோன்றுகிறது. ஆனால், ஒரே வாரத்தில் இப்படி வளரும் என்றும் சிலர் அளக்கிறார்கள்.

    இதனால்தான், சொல்கிறவருக்கு என்ன தகுதி, அவர் கூறுவதில் எத்தனை உண்மை என்று ஆரம்பத்திலேயே யோசிக்க வேண்டுவது அவசியம்.

    குழந்தையே பெறாதவர் குழந்தை வளர்ப்பைப் பற்றிப் பேசினால், அது அனுபவத்தால் இருக்காது. படித்ததை வைத்துக்கொண்டு அவர் ஏதாவது கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், நடைமுறைக்கு அது ஒத்துவராது.

    கதை

    ஏதோ ஒரு துறையில் பெரிய, பெரிய பட்டங்கள் பெற்றவள் சியாமளா. அதற்கேற்ற உத்தியோகத்திலும் இருந்தாள்.

    அதனாலேயே, தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல், பிறர் வீட்டுக்குப் போனால், அந்த வீட்டுக்கார அம்மாளிடம், `நீ சமைப்பது சரியாக இல்லை. இப்படிச் செய்திருக்க வேண்டும்,’ என்று குற்றம் கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

    எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க முடியாது என்பது அவளுக்குப் புரியவில்லை.

    ஒருவரது வீட்டுக்கு விருந்தினராகப் போகும்போது, அவர்கள் மனதை நோகடிக்கலாமா என்று அவள் யோசிக்கவில்லை. புத்தகப் படிப்பு குணத்தை வளர்க்கவில்லை.

    புத்திசாலித்தனம் இருந்தும் வெற்றி பெறாதவர்

    சிறு பிராயத்தில் புத்திசாலிகளாகத் திகழ்ந்த சிலர், `பெரிதாக எதுவும் சாதிக்காமல் போய்விட்டோமே!’ என்று வருந்துவது உண்டு.

    கதை

    காந்தனின் புத்திகூர்மையைப் பற்றி அவனுடைய பெற்றோருக்கு அளவுகடந்த பெருமை.

    `எத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறான்!’ என்று பிறர் பாராட்ட, அவன் தவறே செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் பிறர் மதிக்க மாட்டார்கள் என்று எண்ணத் தலைப்பட்டார்கள்.

    சிறுவனாக இருந்தபோது, பிறர் ஏற்கமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தோன்றிய எதையாவது அவன் செய்தால், பல பேர் முன்னிலையில் திட்டு விழும்.

    “அது என்ன, மூக்கிற்குள் விரலை விடுவது? அசிங்கம்! குளிக்கும்போது இதையெல்லாம் செய்யவேண்டும்,” என்று அவன் தாய் கத்தியபோது, அந்த பத்துவயதுப் பையனைக் கவனிக்காதவர்கள்கூட இப்போது ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

    அவனைத் திருத்துவதாக எண்ணி அவள் செய்த காரியத்தால் பையனின் முகம் அவமானத்தால் சுண்டிப்போயிற்று.

    அவளைப்போன்ற பெற்றோர் அறியவேண்டிய ஒன்று: பாராட்டும்போது பிறர் முன்னிலையில் செய்யலாம். அதுவும் அளவோடுதான். குறை கூறுவதோ, தனிமையில்தான் இருக்கவேண்டும். சிறு குறையைப் பெரிதுபடுத்தினால், குழந்தைகளுக்கு ஆத்திரம் வரும். ஆனால், திருந்தமாட்டார்கள். வேண்டுமென்றே அதிகமாகச் செய்வார்கள்.

    புதிதாகக் கல்யாணமான டெய்ஸி அலுத்தபடி கூறினாள், “என் கணவர் சாப்பிடும்போது எல்லா விரல்களையும் வாய்க்குள் போட்டுக்கொள்வார். `என்னது இது!’ என்று நான் கண்டித்தபோது, நிலைமை இன்னும் மோசமாகிற்று. ஒரேயடியாக உறிஞ்சுவார். அதனால், நான் இப்போது எதுவும் சொல்வதில்லை!”

    அவளுடைய கணவனைச் சிறுவயதில் ஓயாது கண்டித்திருப்பார்கள். மனைவியும் தாயைப்போல நடக்க முற்பட்டபோது, அவனால் பொறுக்க முடியவில்லை.

    எட்டு வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் தவறு செய்யும்போது ஓயாது கண்டிப்பது பெரியவர்களின் நிம்மதியைத்தான் கெடுக்கும். மாறாக, நகைச்சுவையாக ஏதாவது கூறினாலோ, அல்லது அவன் செய்வதுபோல் செய்து காட்டினாலோ, சிரித்துவிடுவான்.

    பதின்ம வயதுச் சிறுவர்களிடம் மிரட்டலாகச் சொன்னால் மேலும் முரண்டு பண்ணுவார்கள். அவர்களுடைய செய்கைகளின் விளைவுகளை, அவற்றால் ஆபத்து இருந்தால், தகுந்த உதாரணங்களோடு விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். கெஞ்சலாகச் சொன்னால் இன்னும் பலனளிக்கும்.

    கதை

    அவளுடைய சீனத்தோழிகள் அணிந்ததைப் பார்த்து, மேகலாவுக்கும் ஷார்ட்ஸ் அணியவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது.

    அவளுடைய தாய், “அவர்களுடைய கால்கள் தந்தம் மாதிரி இருக்கின்றன. நாமோ, கறுப்பு. நன்றாகவா இருக்கும்?” என்றாள் நைச்சியமாக. இருந்தாலும், வாங்கிக் கொடுத்தாள்.

    ஒரு சிறிய ஆசையைத் தீர்த்துவிட்டால், அது ஓயாது நம்மை அலைக்கழைக்காது என்று புரிந்திருந்தாள் அந்த தாய்.

    அந்த ஒரே ஆடையில் மேகலாவின் ஆசை தணிந்துபோயிற்று. `கால்களை இறுக்க, எப்படித்தான் போட்டுக்கொள்கிறார்களோ!’ என்று தோன்றிப்போயிற்று.

    என் தோழிகள் கூறுவார்கள், “வேலை முடிந்து வீட்டுப் போனதும், நான் செய்யும் முதல் காரியம் ஷார்ட்ஸூக்கு மாறுவதுதான்!”

    (சில தலைமுறைகளுக்குமுன் மலேசியா வந்திருந்தாலும், சீனர்களுக்கு வெயில் தாங்காது. எந்த வயதுப் பெண்டிராக இருந்தாலும், வீட்டுக்கு அந்த ஆடைதான். அவர்கள் வெளியில் அப்படி வந்தாலும், யாரும் உற்றுப் பார்ப்பது கிடையாது).

    பள்ளியில் பண்பு

    மாணவர்களுக்கு ஒரு பாடம் பிடிக்க வேண்டுமென்றால், முதலில் அதைப் போதிக்கும் ஆசிரியரைப் பிடிக்கவேண்டும்.

    தனது அதிகாரத்தைத் தவறான வகையில் பயன்படுத்தி, மட்டம் தட்டிப்பேசினால், யார்தான் அவரை மதிப்பார்கள்?

    கதை

    `முட்டாள்’ என்று அவர் கருதிய ஒரு மாணவியிடம் தன் முதல் கேள்வியைத் தொடுப்பார் எங்கள் பள்ளி விஞ்ஞான ஆசிரியை, மிஸஸ் ஜெயலட்சுமி.

    கேள்வி முடிவதற்குள், `ரமாமணி!’ என்று அதிகாரமாக அவளுடைய பெயர் ஒலிக்கும்.

    அந்தப் பெண்ணோ, பதில் சொல்லத் தெரியாமல், ஆசிரியை வகுப்பைவிட்டு வெளியேறும்வரை, தண்டனையாக, கால்கடுக்க நின்றுகொண்டிருப்பாள். வருடம் முழுவதும் இதே கதைதான்.

    மற்ற மாணவிகளுக்கு ஆசிரியையின் போக்கு வேடிக்கையாகப் போயிற்று. அந்த ஆசிரியைப்போலவே அவளை அழைத்துக் கேலி செய்தனர்.

    ஒவ்வொரு முறையும், அவர்களைப்போன்ற ஒரு மாணவியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று புரியவில்லை.

    கதை

    பல வருடங்களுக்குப்பின் நானே ஆசிரியையாக ஆனபோது, மாணவ மாணவிகள் ஒருவரையொருவர் இப்படி நடத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

    ஒரு வகுப்பில், மலாய் மற்றும் சீன மாணவிகள் மட்டும் இருந்தார்கள். ஆரம்பப்பள்ளியில் சீனமொழி கற்றிருந்த சீனர்களுக்குக் கோபம், ஏன் இடைநிலைப்பள்ளியில் மலாய் மொழியில் விஞ்ஞானம் கற்க வேண்டும் என்று.

    அந்தக் கோபம், இயலாமை, தம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்த அப்பாவி மாணவிகள்மேல் திரும்பியது. அவர்களில் ஒருத்தி தவறான விடை அளித்தால், இளக்காரமாகச் சிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    `உங்களில் ஒருவர் தவறாக விடையளித்தால், அதைக் கேலி செய்யக்கூடாது!’ என்று உத்தரவு பிறப்பித்தால் எந்தப் பலனும் இருக்காது என்று புரிந்தது.

    நான் கடினமான கேள்வி கேட்டால்தானே ஏளனச் சிரிப்பு?

    அதைத் தவிர்க்க எண்ணி, மலாய் மாணவிகளைக் கேள்வியே கேட்கமாட்டேன்.

    அவர்களுக்கு என் திட்டம் புரிந்ததோ, என்னவோ, அவர்களுடைய நன்றியையும், மதிப்பையும் பெற்றேன்.

    Share
  • சேக்கிழார் பாடல்  நயம் – 129

    சேக்கிழார் பாடல் நயம் – 129

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

    வரலாறு

    திருத்தொண்டர் புராணத்தின்  பதினோராம்  அடியார்  கண்ணப்ப நாயனார்  ஆவார். அவர் வாழ்ந்த நாடு கண்ணப்பர் திருநாடு எனப்போற்றப்பெறும்  பொத்தப்பி நாடாகும். அங்கே உடுப்பூர் என்ற பழமையான  ஊரில் கண்ணப்பர் பிறந்து வளர்ந்தார்.  அவ்வூரில் யானைத்தத்தங்களை ஊன்றி வேலியிட்டு அரண் அமைத்தனர். அங்கே கொன்றவர் எனப்பட்ட வேடுவர் வாழ்ந்தனர். அவ்விடத்தில் நாய் விளா மரநிழலில் உறங்கும். கொடிய விலங்குகளைக் கவரும் பார்வை விலங்குகளுடன் , ஐவன நெல் காயும்.

    அங்கே புலிக்குட்டி, யானைக்கன்று இவற்றுடன் சிறுவர்   விளையாடுவர்;வந்தணையும் மான்களைத்  தழுவி வேட்டுவ மகளிர்  விளையாடுவர். அங்கே இசைக்கருவிகளின் பேரோசையும், வேடர்களின் கொல் , எறி ,  குத்து ஓசையுடன் அருவியின் ‘கல்’ என்ற ஓசையும் கேட்கும். கரிய நிறத்துடன் , அச்சமும் கருணையும் அற்றவராய், ஊன் தசை உணவும் உண்ணும் வேடர் தலைவனாக   நாகன் என்பான் இருந்தான; முன்பு தவம் செய்திருந்தாலும் இப்போது குற்றத்தையே குணமாகக் கொண்டான். அவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவன். அவன் மனைவி தத்தை.

    மறவர் குலக்கொடியாகிய  தத்தை, புலிப்பல்ளுடன் சங்கினைக் கோத்து அணிந்து, பெண்சிங்கம் போல் இருந்தாள்.  அவளுக்கு குழந்தைப்பேறு இல்லை என்று பலரும் கூற, முருகப்பெருமான் திருவருள் வேண்டி வழிபாடுகள் செய்தாள். கோயிலுக்கு கோழி,மயில் ஆகியவற்றை நேர்த்திக் கடனாக விட்டு, பெரிய திருவிழா நடத்தினாள். அதனால் மலையை வேலால் பொடித்த வேலேந்திய முருகன் திருவருளால் ஆண்குழந்தை பிறந்தது. அதனைச் சேக்கிழார்,

    ‘’கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
    ஊனம் இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும்
    ஆன அத் திங்கள் செல்ல, அளவு இல் செய் தவத்தினாலே
    பால் மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது’’

    என்று பாடினார். இப்பாடலின் பொருள்:

    வேடர்களது குலம் விளங்கும்படி தத்தையின் வயிற்றிலே கருப்பம் தரித்ததாக, ஊனமில் பலிகளைக் கொடுத்துக் கடமையாயுற்ற வெறியாட்டுடனே, ஒவ்வொன்றாய் ஆயின அந்த மாதங்கள் சென்றனவாக, முன்னே அளவில்லாது செய்த தவத்தினாலே நற்பான்மையுடைய நிறைமதியை உவர்க்கடல் பெற்றது போலத் தத்தை மகவினைப் பெற்றெடுத்தபோது, என்பதாகும். அந்தக் கண்ணப்பர் பிறந்ததால் வேடுவர் குலம், சிவபாத விருதயரால் கவுணியர் குலமும் , சேக்கிழாரால் பெற்றோர்  குலமும் விளக்கம் பெற்றது போல்  உயர்ந்தது!ஒரு பெரியார் ஒரு குலத்தில் அவதரித்தாராயின் அவரால் அக்குலமுழுவதும் விளக்கமடைந்து உய்யும் என்பது ஆன்றோர் துணிபு. திருவண்ணாமலைக் கார்த்திகைச் சோதி தரிசித்தவரின் “கோத்திரத்தி லிருபத்தோர் தலைமுறைக்கு முத்திவரங் கொடுப்போ மென்றார்” என்ற அருணாசலபுராணமுங் காண்க.

    குழந்தை கருவில் வளரும்போது மாதந்தோறும் வரும் ஊனங்களை நீக்க பலிகள் இட்டனர்.  இம்மாதங்களின் வரும் ஊனங்களைத் திருவாசகத்தில் (போற்றித் திருவகவல்).

    “மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத்,
    தீனமில் கிருமிச்செருவினிற் பிழைத்தும்
    ஒருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்தும் ,
    இருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும்,
    மும்மதிதன்னுளம் மதம்பிழைத்தும்,
    ஈரிருதிங்களிற் பேரிருள்பிழைத்தும்,
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ,
    ஆறு திங்களி னூறலர்  பிழைத்தும்,
    ஏழு திங்களிற் றாழ்புவி பிழைத்தும்,
    மெட்டுத்  திங்களிற் கட்டமும் பிழைத்தும் ,
    ஒன்பதில் வருதரு துன்பமும்பிழைத்தும்,
    தக்க தசமதி தாயொடு தான்படும்,
    துக்க சாகரத் துயரிடைப்பிழைத்தும்…..”

    என்று, மணிவாசகப் பெருமான் அருளியனவற்றை இங்கு நினைவு கூர்க.

    ஆன அத்திங்கள் செல்ல  என்ற தொடர் ,  கருப்பம் தரித்தபின்,

    “கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும்
    வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி, யுருவாகிப் புறப்பட்டு”

    என்றபடி வளர்ச்சி முற்றுவதான பத்துத்திங்களும் நிரம்பிச் செல்ல.

    “முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்” என்பது திருமந்திரம்.

    இதனை 280 நாட்களுக்குமேல் முந்நூறு நாட்களுக்குள் என்பர் நவீன சாத்திரிகள்.

    செய் அளவில் தவத்தினாலே  என மாற்றுக  தத்தையும்நரகனும் செய்தவம் – கானவர்குலஞ் செய்தவம் – மாதவஞ் செய்த தென்றிசை செய்தவம் – அன்புநிலை உணராது ஆணவத்தி னழுந்தி உழலும் உயிரெல்லாஞ் செய்தவம் என்று பலவாறு கூட்டி யுரைக்க நின்ற அழகுங் காண்க.

    “முந்தை யெம்பெருந் தவத்தினாலென்கோ
    முனிவ ரிங்கெழுந் தருளியது” என்பதற்கேற்ப

    ‘’உவரிசெய் தவத்தினால் பால்மதி யீன்றாலென’’ என்று கூட்டி யுரைக்க. பாற்கடலைத் தேவர்  கடைய அதிற் பிறந்தது மதி என்பர். அதுபோலத் தானும் ஒரு மதியினையீனும் பொருட்டு உவரியாகிய கருங்கடலும் தவஞ் செய்து பெற்றதுபோல என்பதாம். கடல் தவஞ்செய்தல் எதற்காக எனின் தனது கருமை, உவர்ப்பு மண்ணீருமாகாத தன்மை, கழிநாற்றம் முதலிய இழிபுகளைப் போக்கும்படிக்கும், பாற்கடல் பெற்ற அந்த மதிக் குழவியின் மேம்பட்ட குழவிமதியாகிய  கண்ணப்பரை ஈன்றெடுக்கவும் ஆம் என்க.

    அக்குழவியின் மேம்படுதலாவது அது வெண்மதியாய்க், கலைகள் வளர்வதும் தேய்வதும் உடையதாய்த், தேவரில் ஒன்றாய், இறப்பும் பிறப்பும் உடையதாய், இறைவனாற் காக்கப்பட்டுள்ளதாய் நிற்பது; தான் பெறும் இக்குழவி அவ்வாறன்றிக் கருங்கதிர் விரிக்குமேனிக் காமர் பெற்றுடையதாய், பதினாறாண்டில்  கலைவளர்வதாய்ப், பின்னர் என்றும் குறைவில்லாததாய், இறப்பும் பிறப்பு மில்லாததாய், இறைவன் பக்கத்திருந்து அகலாது அவருக்குக் காவல் புரிவதாய் உள்ளது என்பதைக்  குறித்தது.

    உவரி – தத்தைக்கும், பான்மதி – நாயனாராகிய மகவுக்கும் உவமை, உருவும் தொழிலும் பற்றி வந்தது. பான்மதி – நற்பான்மையும் நிறைவும் பெற்ற மதி என்க. முழுமதி தோன்றும்போது சிவந்து காட்டும். அன்றியும் இம்மகவு பின்னர்க் “கருங்கதிர் விரிக்குமேனி” யுடையதாம். குழவிகள் பின்னர் எந்நிறமுடையனவாக ஆயினும், தாய் வயிற்றினின்றும் பிறக்கும்போது புதிய இரத்தஊற்றத்தினால் எல்லாக் குழவிகளும் செம்மை நிறமே தந்நிறத்தின் மிக்குக்காட்டும். இங்குத் தத்தையீன்றபோது உவரியின் தோன்றும் பான்மதி போன்றிருந்த  இம்மகவு, தாதை எடுக்கும்போது “காளமேகம்”  ஒப்பாயினதென் றுரைத்தலும் காண்க.

    இனி, இறைவனது நெற்றிக் கண்ணாகிய கனற் கண்ணினின்றும் அவதரித்தவர் முருகப்பெருமான். அவர் “பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு” என்றபடி “வெம்புந்திய கதிரோனொளி” யென விளங்குபவர். இம்மகவு அவரது தண்ணருளாலே போந்தது ஆதலின் இது மதி போன்றது என்றார் என்றலுமாம்.

    ஞாயிற்றின் ஒளி, “வெம்புஉந்திய” தாகலின் வெப்பமுடையது; அதனைப் பல உயிர்களும் தரித்தாற்றலாகாதாம்; ஆயினும் அந்த ஞாயிற்றின் ஒளிபெற்று விளங்கும் மதி அமுதமாக்குவது;

    “தோற்று மன்னுயிர் கட்கெலாம்  தூய்மையே
    சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்,
    ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல் வெண்,
    நீற்றின் பேரொளி” (308) போன்றது;

    அது ஞாயிற்றின் கதிரொளியைத் தான் பெற்று அதனால் தண்ணிதாய் விளங்குவது என்பது பௌதிக சாத்திர உண்மை. அதுபோல இந்தப் பான்மதியும் முருகனாகிய ஞாயிற்றின் அருளொளியால் விளங்கி உலவி உலகுக்கு அன்பாகிய தண்ணொளி பரப்பி உய்விப்பதாயிற்று என்றதொரு குறிப்பினாற் பயனுவமையாயிற்று.

    மகப் பயந்த  போது – தத்தை மகவை ஈன்றபோது. தத்தை என்பது வருவிக்க. பயந்தபோது – பொழிந்தது – ஆர்த்த என வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

    இப்பாடலால்  வேட்டுவக்குடியிலும் சிறந்த சான்றோர் பிறப்பர் என்பதும், பால் மதி உப்புக்கடலில் தோன்றியது போல் கண்ணப்பர் பிறந்தார் என்பதும்,

    இவற்றுக்கெல்லாம்  காரணம் முருகப்பெருமானின் திருவருளே என்பதும், புலனாகின்றது!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 1

    முன்னுரை

    ‘இலக்கியத்தில் உவமம்’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கிய உரைகளில் உவமம் என்பதும் அத்தகையதே. இலக்கண விளக்கத்தில் உவமம் என்பது சிலரால் அறியப்பட்ட உண்மை. இலக்கண உரைகளில் உவமம் என்பது அச்சிலருள்ளும் சிலரால் அறியப்பட்ட உண்மையாகும். கணிதத்தையொத்த இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பற்றிய சிந்தனையோ எதிர்பார்ப்போ அவ்வளவாக எழாது. அதற்கான சூழல் அங்கே இல்லை. ஆனால் தமிழிலக்கண உரைகள் இந்தக் கருத்தியலைப் புறந்தள்ளியிருக்கிறது. கல்வி அறிவு நோக்கியது. அதனால் அறிவு தெளிவு நோக்கியது என்பது பெறப்படும். ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது பாரதி கருத்து. இந்த அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலுக்குக் குணசாகரர் எழுதிய உரையில் வரும் ஓர் உவமம் பற்றிய ஆய்வாய் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    வெண்பாக்களுள் நேரிசை வெண்பா

    பாக்கள் தனி. அவற்றின் கிளைகளான வகைகள் தனி. ஒவ்வொரு பாவாற்றுக்கான கால்வாய்கள் தனி. அவை இனம் என அழைக்கப்படும். சான்றாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது நால்வகைப் பாக்களாகும். மருட்பா பொருட்பற்றிய பிரிவாதலின் யாப்புப் பற்றிய பாகுபாடுடைய முன்னவற்றோடு இயையாது. இணையாது. நான்கென்றலே மரபு. வெண்பாவில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என ஆறு வகைகள் உண்டு. ஆனால் இந்த ஆறுவகைகளும் புறக்கட்டுமானத்தில் கவிஞர் ஏற்படுத்திக் கொள்ளும் சில மாற்றங்களால் உண்டாகும் பெயர் மாற்றங்களே தவிர குறள் வெண்பாவைப்போலத் தனித்தன்மை உடையன அல்ல. அதாவது வெண்பாவின் வகைகள் ஆறாகக் கருதப்படினும் அவ்வளவும் குறள் வெண்பாவின் நீட்டியாகவே கருதப்படும் அளவிற்கே அமைந்துள்ளது. குறள் வெண்பாவின் அடுத்த நிலை நேரிசை வெண்பா. அது பற்றிய விளக்கத்தை அடுத்த பத்தி ஆராய்கிறது.

    இரு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா

    ‘ஈரடி வெண்பா குறள்’ என்பதற்குக் குறள் வெண்பா ஈரடியால் அமையும் என்பது பொருள். அத்தகைய குறள் வெண்பாக்கள் சில மாற்றங்களைப் பெற்று இணைய நான்கடியாய் உருமாற்றம் அடைந்தால் அது நேரிசை வெண்பா எனப்படும். தனித்தன்மையுடைய இரண்டு குறள்வெண்பாக்களே செயற்கையான நேரிசை வெண்பாவை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன. காரிகை இலக்கணம் அப்படித்தான் சொல்கிறது. அது மட்டுமன்று வெண்பாக்களை அது அடிகளால்தான் அடையாளப்படுத்துகிறது. வெண்பாக்களினிடையில் படைப்பாளரால் கொண்டுவரப்படும் புறமாற்றங்களும் பெயர் வேற்றுமைக்குக் காரணமாகின்றன. இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. நான்கடியால் அமைவது நேரிசை வெண்பா. மூன்றடியால் அமைவது சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமைவது பஃறொடை வெண்பா. மூன்றடியால் அமைகிற சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெற்றுவந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல்லின்றி மூன்றடியால் வந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.  எனவே வெண்பாவின வகைகள் என்பன பொருட்பாகுபாட்டைச் சுட்டுவதன்று. வடிவ மாற்றத்தை மட்டுமே அதுவும் பெரும்பாலும் அடிகளால் உண்டாகும் மாற்றத்தையே சுட்டும் என்பது பெறப்படும்.

    பொற்கொல்லரும் பொடியும்

    ‘பொற்றுகள், மண்துகள், பற்பொடி, மிளகாய்த்தூள் என்னும் வழக்குகளைக் கேட்டிருக்கலாம். இவற்றுள் ‘பொற்றுகள்’ என்பது பொன்னின் தூளைப் பொதுவாகக் குறித்தாலும் அணிசெய்யும் பொற்கொல்லரின் இணைப்புத் தொழிலுக்குப் பயன்படும் ஓர் கருவிப் பொருளாகும். ஒரே தரமுடைய இரண்டு பொற்கம்பிகளை இணைக்க வேண்டுமாயின் அதே தரமுடைய கம்பியைக் கொண்டு இணைக்க இயலாது. பொற்கொல்லரின் ஆற்றலுக்குத் தங்கம் உருகாது. அதனால் சற்றுத் தரம் குறைந்த பொன்னைத் தூளாக்கி அதனை அவற்றிடை வைத்து ஊதினால் அது உருகித் தரமுடைய இரண்டு கம்பிகளையும் இணைக்கும். இவ்வாறு ஊதுவதற்குப் ‘பொடிவைத்து ஊதுதல்’ என்று பெயர். ஒரு நகையின் தரம் இத்தகைய பொடியின் அளவுக்குக் கூடவோ குறையவோ செய்யும்.  நுட்பமான வேலைப்பாடுடைய நகைகளைப் பொடிவைத்த நகைகள் என்று அழைக்கிற வழக்கும் உண்டு. இங்கு இது பற்றிய ஆய்வைவிட ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான பொற்கொல்லரின் செயலும் அதற்கு அவருக்குப் பயன்படும் பொடியுமே கருத்திருத்த வேண்டியது ஆகும்.

    நேரிசை வெண்பா உருவான கதை 

    யாப்பருங்கலக்காரிகைக்கு முன்னும் பின்னும் நேரிசை வெண்பா ஓரலகாகப் படைக்கப்பட்ட வரலாறு உண்மை என்பதைப் பல்வேறு நேரிசை வெண்பாக்களால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் காரிகைக் காலத்தில் இரண்டு குறள்வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பாவாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்”

    என்பது ஒரு குறள் வெண்பா.

    “தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    என்பது மற்றொரு குறள் வெண்பா. இந்தத் தனித்தனிக் குறள் வெண்பாக்களைக் கவிஞர் சில மாற்றங்களால் ஒரு நேரிசை வெண்பாவாக மாற்றிவிடுகிறார்.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்போற்றும் – இன்றுள்ள
    தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    செய்திருக்கும் மாற்றங்கள்:

    1. முதல் குறட்பாவில் நேரசையில் முடிந்திருக்கும் ஈற்றுச்சீரைத் தளைதட்டாது மூவசைச் சீராக்கியிருக்கிறார்.
    2. முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் அதாவது நான்காவது சீரை ஏழாவது சீருக்கும் எட்டாவது தனிச்சீருக்கும் தளைதட்டாத வகையில் தனிச்சொல்லை அமைத்திருக்கிறார்.

    இந்த மாற்றங்களைத்தான் ‘பாட்டில் ஒட்டுவேலை’ என்கிறோம் நாம். இந்த ஒட்டுவேலையைப் பொற்கொல்லரின் பொடிவைத்து ஊதும் வேலைக்கு ஒப்பிட்டு காரிகைக்கு உரையெழுதுகிறார் குணசாகரர். எப்படி? இப்படி,

    “‘சீரியவான் தனிச் சொல் அடி மூய்’ என்று சிறப்பித்த அதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை, ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும், இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள. அவை ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.”

    குணசாகரரின் இந்த உரையால் நேரிசை வெண்பாவைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுகின்றன. காரிகையில் பயின்றுவரும் அடைச்சொற்களைக் கொண்டு இவற்றை அவர் தருகிறார்.

    1. நேரிசை வெண்பா என்பது தனியான ஓர் அலகன்று.
    2. இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா ஆகும்.
    3. முதல் குறள் வெண்பாவில் ஈற்றுப் பகுதியில் செய்யப்படும் மாற்றங்களே நேரிசை வெண்பாவிற்கான வடிவமாற்றமாகக் கருதப்படுகிறது.
    4. இந்த மாற்றத்தினை இரண்டு உலோகங்களை இணைப்பதற்குப் பொடி வைத்து ஊதும் பொற்கொல்லரின் செயலை உவமமாக்கிப் ‘பற்றாசிட்டு விளக்கினாற்போல’’ என விளக்கியிருக்கிறார்.

    நேரிசை வெண்பா –  வடிவப் பயன்பாடு

    ஆராய்ந்து நோக்கினால் இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா என்பது நடப்பியலுக்கு முரணாகவும் படைப்பாளர்தம் சிந்தனை வெளிப்பாட்டுக்குப் பொருந்தாத எதிராகவுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதை என்பது கருத்தியலின் உணர்ச்சி வெளிப்பாடாதலின் அங்கே வடிவக்கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு நேரமிருக்காது. இருந்தால் அது கவிதையாக பரிணமிக்காது. யாப்பென்னும் கலத்துள் கவிதை நிரம்ப வேண்டும் என்பதுதான் தமிழ் மரபுக் கவிதைகளின் வடிவக் கோட்பாடு. காரிகைக்கு முன்னவையான சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் உள்ள நேரிசை வெண்பாக்கள் தனித்தன்மையான ஒரே அலகுகளாகவே அமைந்துள்ளன. காரிகைக்குப்பின் வந்த சோமேசர் முதுமொழி வெண்பா, மணிமேகலை வேண்பா, பாரத வெண்பா, பாரதியின் பல வெண்பாக்கள், வைரமுத்து, கடவூர் மணிமாறன், கரூவூர் கவிஞர் குழந்தை முதலியோர்தம் வெண்பாக்கள் எல்லாம் தனித்தனி அலகுகளாகவே அமைந்திருக்கின்றன. இரண்டு குறள் வெண்பாக்களின் கூட்டணியாக அவை இல்லை. இது வளர்சிந்தனைக்குரிய யாப்பியல் கருத்தாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    எதனையும் உவமம் காட்டி விளக்குவதும் உரைநெறியே என்பதைக் குணசாகரர் உணர்ந்து உரையெழுதியிருக்கிறார். இலக்கண விளக்கங்களுக்காக உவமங்கள் பயன்படுத்தப்படுவது கோட்பாடு எனின், உலகியல் சார்ந்த ஒரு தொழில் நிகழ்வை உவமமாக்குவதைப் பயன்பாடு என்று கருதலாம். ‘பொன்னார் மேனியனே’ என்பது தேவாரம். ‘பொன்மேனி’ என்று உவமம் கண்ட தமிழ்க்கவிதை உலகில், ‘பொற்பொடி’ பற்றிய இந்த உவமம் உவமப்பயன்பாட்டில் தனியிடம் பெறுகிறது.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 67

    பழகத் தெரிய வேணும் – 67

    நிர்மலா ராகவன்

    சிறுபிள்ளைத்தனம் எதுவரை?

    சிறு குழந்தைகளின் கண்களைப் பாருங்கள்.  கள்ளம் கபடமே காணப்படாது.

    கதை

    என் சக ஆசிரியை மேரி, “நேற்று என் மகள் தன் விளையாட்டுக் காரை என் தலையில் எறிந்துவிட்டாள். தலைவலி பிளக்கிறது!” என்று முனகினாள்.

    உடனே, “அவளை அடித்தாயா?” என்றொரு கண்டிப்பான குரல் ஒலித்தது.

    “அவளுக்கு ஒரு வயதுதான்!” என்றாள் மேரி. `இந்த வயதில் அடித்துத் திருத்துவதா!’ என்பதுபோல் ஆயாசத்துடன் ஒலித்தது அவள் குரல்.

    “அதனால் என்ன!” என்றாள் மிஸஸ் லோ (Loh), பிடிவாதமாக. தவறு செய்தது எந்த வயதினராக இருந்தாலும், உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அவள் போன்றவர்களுடைய நம்பிக்கை.

    ஒருவருக்குத் தான் செய்யும் காரியத்தின் விளைவு நன்மையா, தீமையா என்று புரியாத நிலையை அப்பாவித்தனம் (innocence) என்கிறோம். இது குழந்தைகளின் இயற்கையான தன்மை.

    இரண்டு வயதான குழந்தை கைதவறி தான் குடிக்க வைத்திருந்த பாலைக் கொட்டிவிட்டு அழும்.

    `போனால் போகட்டும்,’ என்று சமாதானப்படுத்தினால், அடுத்த முறை வேண்டுமென்றே தம்ளரைக் கவிழ்த்துவிட்டு, `போனால் போகட்டும்,’ என்று நமக்கே புத்தி சொல்லும்!

    “இன்னொரு தடவை இப்படிச் செய்தால் அடி!’ என்று மிரட்டுவோம்.

    தாய் சொல்வதை உடனே கேட்டுவிட்டால், எப்படி!

    செய்த தவற்றையே மீண்டும் செய்யும்.

    அப்போது தண்டிக்க வேண்டியதுதான். முதுகில் ஒரு தட்டு.

    இன்னொரு முறை அதே தவறு நிகழாது.

    இவ்வாறு, `கூடாது’ என்று தாய் கூறும் ஒவ்வொன்றையும் செய்துபார்த்துத்தான் தன் எல்லை எதுவரை என்று புரிந்துகொள்கிறார்கள் குழந்தைகள்.

    அனுபவமின்மை

    வளர்ந்தபின்னரும் சிலர் குழந்தைத்தனமாக இருப்பார்கள். யார் எது சொன்னாலும் நம்பி, ஏமாந்துவிடுவார்கள். போதிய அனுபவம் இல்லாததால் வரும் விளைவு இது. சிலவற்றைப் பற்றி படித்திருந்தாலும், நடைமுறைக்கு உதவாது.

    கதை

    எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, என்னைவிட சற்றே மூத்தவளான ஒன்றுவிட்ட அக்காள் வேற்றூரிலிருந்து வந்திருந்தாள். அவள் இருந்த இடத்தில் கடல் கிடையாது.

    மெரீனா கடற்கரைப் பார்த்து, “எவ்வளவு தண்ணீர்!” என்று அவள் பிரமிக்க, “தித்திப்பா, ஜோரா இருக்கும். குடிச்சுப் பாரேன்!” என்று ஊக்கினேன்.

    உடன் இருந்தவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள்.

    அவள் நம்புவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    தன் இரண்டு கைகளாலும் அள்ளிக் குடித்தவள், `தூ, தூ!’ என்று துப்பியது எங்கள் இருவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி.

    என்றென்றும் அப்பாவித்தனமா?

    குழந்தைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்காது. கடந்த காலத்தை அவர்கள் அதிகம் நினைத்துப் பார்ப்பதும் கிடையாது.

    `எதிர்காலத்தில் என்ன நடக்குமோ!’ என்ற கவலைக்குள்ளாகும்போதுதான் ஒருவர் தன் அப்பாவித்தனத்தை இழந்துவிடுகிறார்.

    குழந்தைகளை அந்தந்த வயதுக்கேற்ப நடத்தாமல், `இன்னும் குழந்தையாவே இருக்கா!’ என்று பருவ வயதிலும் ஒரு பெண்ணைக் கொஞ்சி வளர்ப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.

    ஆனால், வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சியோ, அனுபவமோ அவர்களிடம் இருக்காது. பிறருக்கு இது சாதகமாக முடிந்துவிடும்.

    கதை

    பத்து குழந்தைகளில் கடைசியான மாலதி, குடும்பத்தில் அனைவருக்கும் செல்லமாக வளர்ந்தாள்.

    `நான் எப்பவுமே குழந்தைதான்!’ என்று மகிழ்ச்சியும் பெருமையும் பொங்க கூறிக்கொள்வாள். அளவுக்கு அதிகமான அன்பைக் குடும்பத்தினர் பொழிந்ததால், உலகில் எல்லாருமே அப்படித்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வளர்ந்தாள்.

    தாய்மாமன், `குழந்தை!’ என்று அருமையாக அவளைக் குறிப்பிட்டு, முறை தவறி நடத்தியபோது, அதையும் `கொஞ்சல்’ என்றே எடுத்துக்கொண்டாள்.

    சற்று பெரியவளானதும், தான் இழந்தது என்னவென்று புரிய, மாலதிக்குத் தன்மேலேயே ஆத்திரம் ஏற்பட்டது. ஒரே இடத்தில் படுத்து, சுவற்றையே வெறிச்சிடுவாள். பிறகு, தன் மன நிலையை மாற்றிக்கொள்ள முயற்சிப்பவளாக, நிறைய வீட்டுவேலை செய்வாள்.

    `பைத்தியம்’ என்று முடிவுகட்டினார்கள். எங்கே தவறு நிகழ்ந்தது என்று யாருக்கும் புரியவில்லை.

    வாழ்வில் தீயவை, துன்பம் ஆகியவற்றைச் சந்திக்கும்போது, அப்பாவித்தனம் பறிபோய்விடும். அது சிலருக்கு மன அழுத்தத்தில் கொண்டுவிடும்.

    `பைத்தியம் தெளிய ஒரே வழி கல்யாணம்தான்!’ என்று யாரோ சொல்ல, கல்யாணம் செய்துவைத்தார்கள்.

    சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தவளிடம் அவ்வப்போது. குற்ற உணர்ச்சி தலைதூக்கும். கலக்கத்தை அடியோடு ஒழிக்க முடியாவிட்டாலும், சிறு விஷயங்களுக்காகக் குழம்பாது, மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால், ஓரளவு நிம்மதி கிடைக்கிறது என்று புரிந்துகொண்டாள்.

    தான் பெற்ற குழந்தைகளாலும் சற்றுத் தெளிவு ஏற்பட்டது.

    `தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலும், தன்னை அப்படி வளர்த்துவிட்ட குடும்பத்தினர்மீதும் கொண்ட ஆத்திரம் சிறிது சிறிதாகக் குறைந்தது.

    அருமை மகள் என்றும் சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குழந்தையாகவே அவளை நடத்தியது வினையாக முடிந்தது என்று புரிந்துகொண்டாள்.

    “பெரியவர்கள் கதை. நீ இதையெல்லாம் படிக்கக்கூடாது,” என்று தாய் தடுத்திருந்தது ஏனென்று மாலதிக்குச் சிறுவயதில் புரியவில்லை.

    சிறுவர்களுக்கான கதைகளில் அவர்களை மிரளவைக்கும்படியான, அல்லது வயதுக்கு மீறிய காட்சிகள் இருக்காது. அப்படி இருந்தால், காரணமில்லாமல் மகிழ்ந்து சிரிக்கும் அப்பாவித்தனமான குணத்தை இழந்துவிடுவார்கள்.

    (தற்காலத்தில், தொலைகாட்சி, இணையம் இரண்டுமே குழந்தைகள் குழந்தைகளாகவே வளர முடியாது செய்கின்றன).

    பிறர் வீட்டிலோ, தொழிற்சாலைகளிலோ வேலைபார்க்க நேரிடும் சிறுவர்கள் இளம் வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். பலருடன் பழக வேண்டிய நிலை.

    `யாரையும் நம்ப முடியாது. எல்லாருமே சுயநலவாதிகள்தாம்!’ என்று தோன்றிப்போகிறது அவர்களுக்கு. அதனால் மகிழ்ச்சி குன்றிவிடும். கற்பனைத்திறனோ – கேட்கவே வேண்டாம்!

    பள்ளிக்கூடத்திலும் சிலருக்கு இந்த நிலைதான். குடும்பத்தினர் ஆதரவாக இருந்தால், நொந்துபோய்விட மாட்டார்கள்.

    அப்பாவித்தனத்தைப் பறிகொடுத்தவரின் கதை

    திருமணமானதும், தன்னைவிட அழகில் சிறந்தவளான மனைவியைப் பெற்றுவிட்டோமே என்று அகமகிழ்ந்தான் அப்பாவியான வேலப்பன்.

    மனைவி ஒரு முறை அவனுக்குத் துரோகம் இழைத்தபோது உண்டான அதிர்ச்சியில், அவளை எப்படிப் பழி வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான். (விவாகரத்து அவமானகரமானது என்று எண்ணிய காலம் அது. அத்துடன், தன்னிடம் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே!).

    மனைவியைப்போல் இல்லாது, ஆண்-பெண் உறவைப் பற்றி அறிந்திராத பதின்ம வயதுப் பெண்களின் சகவாசத்தை நாடினான்.

    `எப்படி, குழந்தையாகவே இருக்கிறாய்!’ என்று அவன் அடிக்கடி பாராட்டியது அவர்களுக்குப் புரியவில்லை. பெருமைதான் ஏற்பட்டது.

    அவனுடைய சாகசப் பேச்சில் மயங்கி, அப்பாவிப் பெண்கள் பலர் அவன் விரித்த வலையில் வீழ்ந்தார்கள்.

    இழந்த பலத்தைப் பெற்றுவிட்டதுபோல் பெருமிதம் உண்டாக, வேலப்பனுடைய காம லீலை வியாதியாகவே தொடர்ந்தது.

    வயது முதிர்ந்த காலத்தில், யாருமே அவனைச் சந்திக்க விரும்பவில்லை. உறவினர் வீட்டுக்குப் போனாலும், எவரும் முகம்கொடுத்துப் பேசவில்லை.

    வருத்தம் ஏற்பட்டாலும், அவனுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை.

    குற்ற உணர்ச்சி

    யோசியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி குற்ற உணர்ச்சியோடு போராடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

    கதை

    எனக்குத் தெரிந்த ஒருவர், “என்னை வைத்து ஒரு கதை எழுதுங்களேன்!” என்று கேட்க, “சரி. உங்கள் மனைவியிடம் நீங்கள் சொல்ல முடியாத ஒன்றைப் பற்றிக் கூறுங்கள்,” என்றேன்.

    கோபத்துடன், “அதையெல்லாம் உங்களிடம் சொல்வேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று இரைந்தார்.

    “உங்களைப் பற்றி எழுதச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு அதிகம் தெரியாதே! அதுதான்,” என்றேன், சமாதானமாக.

    மிகவும் தயங்கியபடி, தான் மனைவிக்குச் துரோகம் செய்துவிட்டதாகக் கூறினார் – ஒரே வரியில்.

    நான் முகம் மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

    தவறிழைத்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் தன்னையே வருத்திக்கொள்கிறவர்கள் நம்பகமான ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொண்டால் அப்போது கிடைக்கும் புரிந்துணர்வு இழந்த நிம்மதியை மீட்டுக் கொடுக்கும்.

    உலகில் எல்லாருமே தீயவர்கள் இல்லை, சிலரை நம்பலாம் என்ற உண்மை புரியும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

    சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்?
    முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்;
    இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
    மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.

    வரலாறு

    போர் புரியும் இடத்தில்  தமக்கு நேரே நின்ற அதிசூரனைத்   தன்  முன்னே தானுண்ணும்  புலால் உணவைக்  கண்ட  சிங்கம் போல ஏனாதி நாதர் நின்றார். அவரை இப்புராணத்தில்  சேக்கிழார் புலி என்று குறிப்பின் சிங்கம் என்றதன்  நயம் உணரவேண்டும்.  அவர் முன் தன்  முகத்தைக்  கேடகத்தால் மறைத்துக்   கொண்டு கைவாளுடன்  அதிசூரன் போர்செய்ய முயன்றான். அவன் முன்னே தாள்  பெயர்த்து  நெருங்கினார் ஏனாதி நாதர். அப்போது அதிசூரனும் நகர்ந்தான். அப்போது அதிசூரன் நெற்றியில் வெண்மையான திருநீற்றை நாயனார் கண்டார்.உடனே  அதிசூரனைச் சிவனடியார் என்றே கருதினார் ஏனாதி நாதர். ‘’இவர் கருத்தின் வண்ணமே நான் நடந்து கொள்வேன்’’ என்று அதிசூரனின் கைவாளை  நீக்காமல் படையேந்தாத சிவனடியாரைக் கொல்லும் அபவாதம் ஏற்படாத படி இணங்கிநின்றார்!

    பொருள்

    அப்படிப்  போரிடுவது போல் நின்ற ஏனாதி நாதர்  திருவுள்ளத்தை இறைவனே அறிவார்; மற்றவர்  அறியார். அப்போதே  அதிசூரன் வஞ்சித்துக் கொல்லும்  தன்  கருத்தை நிறைவேற்றினான். அவர் நின்ற தன்மையை அறிந்த மின்னுகின்ற  சிவந்த சடையை உடைய சிவபெருமான், அவருக்கு அருள் புரிந்து சிவபதம் வழங்க  வந்தார்!

    விளக்கம்

    ஏனாதி நாதர்  திருவுள்ளம் திருநீற்றைப்  பெரிதும் போற்றியதாகும். சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது

    “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகின்
    தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
    சிங்காரமான சிவனடி சேர்வரே”

    என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர்.

    இத்தகைய  திருநீற்றின்மேல் மிக்க பற்றுக் கொண்ட ஏனாதிநாதர் , தம் முயற்சியால் பெற்ற  அனைத்தையும்  நீறு பூசிய அடியாருக்கே கொடுத்தார். அவ்வகையில்  அதிசூரனைக்  கொல்லும்  ஆற்றல்  இருந்தும்  திருநீறு பூசிய அவன் கரத்தால் கொல்லும்படி, பெருந்தன்மை  காட்டினார்!  காக்க  வேண்டிய  தம்முடம்பைக்   காவாது  நிற்றல்,  சிவத்தொண்டு புரிவதற்கே  யாகும்!

    பொய்யாகச் சிவவேடம்  புனைந்த  அதிசூரனை அவ்வேடமுங்  காவாதது இயல்பே!   இவர் காத்த  உடம்பை   சிவத் தொண்டுக்காகவே   இழந்த  செயலால்  இவருயிர்    இறைவனடிக்  கீழ் இன்புற்றது என்பது  இப்பாடலின் கருத்து என்பார்  ஆறுமுகநாவலர்!

    நயம்

    முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்  என்ற  தொடரில் அங்கே   நின்ற  சிவாபராதியாகிய அதிசூரன்,  ஏனாதி நாதராகிய சிவனடியாரைக்  கொன்றான் என்று கூற உள்ளம் கூசியமையால்,  அதனைக் கூறாமல்   கருணையே உருவான சேக்கிழார் பெருந்தகை, ‘’தன்  கருத்தே  முற்றுவித்தான்’’  என்று கூறினார்!

    இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
    மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.

    என்ற  பகுதி,   சிவபெருமானும் அதைத் தாங்கிகொள்ளாமல் விரைந்து, உடனே ஓடோடி வந்து வெளிப்பட்டார்  என்ற அவர்தம்  கருணைத்  திறத்தைக் காட்டுகிறது! அடியார் சொல்லக்   கூசினார்; இறைவன் கூசாமல்  சென்றார்! என்ற நயம்  எண்ணி  நெகிழத்  தக்கது!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 3

    முன்னுரை

    நல்லாசிரியர, அல்லாசிரியர் முதலியோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை நேரடியாகக் கூறிக் கூடுதல் சிறப்பியல்புகளை உவம அளவையால் எடுத்துரைத்த பவணந்தியார் மாணாக்கரை அவ்வாறு தகுதி நோக்கிப் பிரித்தாரல்லர். காரணம் கற்பித்தலுக்குத் தகுதி தேவை. கேட்பதற்கு அது தேவையில்லை. எல்லாரும் ஆசிரியர் ஆகிவிட இயலாது. ஆயின் அனைவரும் மாணவர் ஆகலாம். கற்பித்தல் பணியின் அருமையை உணர்ந்து கல்வியை உள்வாங்கிச் செரிக்கும் அளவில் மாணவர்களின் இயல்பு நிலை வரையறுக்கப்படுகிறது. இயல்பால் மாணாக்கர் முதல், இடை, கடை என மூவகைப்படுவர். பொதுவாக மாணவர்தம் சிறப்பியல்புகளைத் தொகுத்துக் கூறி முதல், இடை, கடை மாணாக்கார்தம் இயல்புகளை உவம அளவையால் எடுத்துரைக்கிறார்.

    கற்பித்தலும் கற்றலும்

    ‘கற்பித்தல்’ ஈதல் என்றால் ‘கற்றல்’ ‘கொள்வது’ அல்லவா? எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதனை,

    “ஈதல் இயல்பே இயம்பும் காலை
    காலமும் இடனும் வாலிதின் நோக்கி
    சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
    உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
    வரையான், வெகுளான், விரும்பி, முகமலர்ந்து
    கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
    கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப”

    என்னும் நூற்பாவில் நிரல்படுத்தியிருக்கிறார். இந்த நிரலில் ‘நோக்கி, வாழ்த்தி, அமைத்து, மலர்ந்து, அறிந்து’ என்னும் வினையெச்சங்கள் எச்சங்களாக நில்லாமல் ஆசிரியரின் பண்புகளாக விளங்குகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இனி, எப்படிக் கொள்ளுதல் வேண்டும் என்பதையும் நன்னூல் தெளிவாக கூறுகிறது. ஆசிரியன் இருப்பிடம் தேடிக் காலத்தோடு செல்லவேண்டும். அவரை வழிபடலில் தயக்கம் கூடாது. (‘பிற்றைநிலை முனியாது’ என்றதும் அது.) சினங்கொள்ளுதல் கூடாது. ஆசிரியரது பண்போடு உறவாடுதல் வேண்டும். அன்னாருடைய குறிப்பறிதல் வேண்டும். ‘இரு’ என்றால் இருக்கவும் ‘சொல்’ என்றால் சொல்லவுமான ஆணைக்குக் கட்டுப்படும் அடக்கம் இருத்தல் வேண்டும். ‘கோடையில் நீர் தேடும் தாகமுற்றவனின் மனநிலையைப் பெறுதல் வேண்டும். செவி வாயாக வேண்டும். அக்கேள்விச் செல்வத்தைக் கொள்ளும் இடமாக மனமும் இருத்தல் வேண்டும்.  ‘மனநிறைவாகக் கொடுத்திருக்கிறோம்’ என நிறைவடைந்த ஆசிரியன் அனுமதித்த பிறகே இல்லம் திரும்புதல் வேண்டும். இந்தக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் பவணந்தியார் பாடம் கேட்கும் புறச்சூழலில் மாணவனின் நிலையைச்,

    “சித்திரப்பாவையின் அத்தகவு அடங்கி”

    என்னும் உவமத்தால் விளக்குகிறார் பவணந்தியார். சித்திரம் போல் இருத்தல் வேண்டும் என்னும் சிந்தனை அகநானூற்றில் வரும் சித்திரத்தலைவியை நினைவுபடுத்துவதாக அமைகிறது. தலைவன் பிரிவால் தான் பட இருக்கும் துன்பத்தைக் கருதாது, தலைவன் செல்லும் வழியருமை எண்ணி மருகும் தலைவி சித்திரம் போல் நின்றாள் என்பதை,

    “முன்னம் காட்டி, முகத்தில் உரையா
    ஓவச்செய்தியின் ஒன்று நினைத்து ஒற்றி”

    என்னும் வரிகள் உணர்த்தும். பாடம் கேட்கும் மாணவர்கள் சித்திரத்தைப் போல அமைதிகாக்க வேண்டும் என்பது கருத்து. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத் தன்மைக்குச் சித்திரநிலை உவமமாவது தமிழ் மரபு. ‘மெய்திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திரு துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் வண்ணனை செய்வார். இந்த உவமத்திலிருந்து பாடம் கேட்கும் நிலையில் மாணவனுக்கு இருக்க வேண்டிய ஒரே பண்பு அமைதி என்பது பெறப்படும்.

    அன்னப் பறவையும் அசைபோடும் பசுவும்

    தலை, இடை, கடை என மாணாக்கர்களைப் பிரித்த பவணந்தியார் தலை மாணாக்கருக்கு அன்னப்பறவையையும் பசுவையும் உவமமாக்கியிருக்கிறார். மானுடத்தின் வாழ்நாள் மிகக்குறைவானதாகையால் அக்குறிப்பிட்ட காலத்திற்குள் கற்க வேண்டியனவற்றையே கற்றல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாலடியார்,

    “கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து”

    என உவமத்தால் விளக்கும். கருத்தளவிலும் மாணவர் இயல்பாகவும் பவணந்தியார் இதனை வலியுறுத்துகிறார். அடுத்து சூழ்நிலைக்கேற்ப இரையெடுக்கும் பசு, பிறகு அமைதியாகப் படுத்து உண்டவற்றை மீண்டும் வாய்க்குக் கொணர்ந்து அசைபோடும். பயனுள்ளவற்றைப் பிரித்துக் கற்கும்  மாணவன் அவற்றின் முழுப்பயன் அடைய மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து சிந்திக்க வேண்டும். தற்காலத்திலும் பயனுள்ளவற்றைக் கற்கவேண்டும் என்பதும் கற்றவற்றைப் பற்றிய சிந்தனை தொடர வேண்டும் என்பதும் ஒரு கல்விக் கொள்கையாக இருந்துவருகிறது என்பதை அறிதல் வேண்டும். பயனுள்ளவற்றைப் பகுத்தறியும் அன்னத்தையும் உண்ட இரையை நன்கு செரித்துக் கொள்வதற்காக அசைபோடும் ஆவையும் தலைமாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    நிலமும் கிளியும்

    ‘நிலத்திற்குரிமையாளன் நாளும் தன்னுடைய நிலத்திற்குச் சென்று அதனை நலம் விசாரிக்காவிடின், அந்நிலம் இல்லாளைப்போல ஊடிவிடும்” என்பது திருக்குறள் கருத்து. ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திச் சோம்பலில்லாம ஏர்நடத்தி, கம்மா கரைய ஒசத்திக்கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி, சம்பாப் பயிரைப் பறிச்சி நட்டு, தகுந்த முறையில் தண்ணீர் விட்டு”  வளர்த்தால்தான் நிலம் பயன் தரும் என்பதை விளக்கிக் காட்டுவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவ்விரு கருத்துக்களால் நிலத்தைப் பாதுகாத்து முறைப்படிப் பயிர் செய்துவரும் உழவனுக்கே அதன் பலன் கிட்டும் என்பது பெறப்படும். ஆசிரியனையும் அவனுடைய காரியமாகிய நூலையும் நாளும் ஓதி ஓதி சிந்தித்து உழைத்து மெய்ப்பொருள் காணும் இயல்புடைய மாணவனுக்கே கற்றலின் பயன் முழுமையாகக் கிட்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பர். கிளிக்குத் தானாகப் பேச வராது. ஆசிரியன் செய்கின்ற முயற்சியின் அடிப்படையில் தன்னறிவைப் பெருக்காது அவர் சொல்வதை மட்டுமே உள்வாங்கிக் கொள்பவன் கிளியையொப்பான். இவ்வாறு உழைத்தாலன்றிப் பயன்பெற இயலாத நிலத்தையும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையையும்  இடை மாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    கடைமாணாக்கரும் நான்கு உவமங்களும்

    தலைமாணாக்கர்க்கும் இடைமாணாக்கர்க்கும் இரண்டிரண்டு உவமங்களைக் காட்டிய பவணந்தியார் கடை மாணாக்கார்க்கு நான்கு உவமப்பண்புகளை ஏற்றியுரைக்கிறார். ‘இல்லிக்குடம்’ என்பதற்குப் பலரும் ‘ஓட்டைக்குடம்’ என்று பொருள் சொல்வர். ‘ஒழுகும் விரைவு’ கருத்தானால் அவ்வுரை நேரியதே. ‘பசுமட்கலம்’ என்றும் கருதமுடியும். அது தன்னுள் வாங்குகிற நீரை வைத்துக் கொள்ள இயலாது புறத்தே கசியவிடும்.  மாணாக்கருள் சிலர் ஆசிரியர் கூறும் கருத்துக்களை உள்வாங்கிப் பொதிந்து வைக்க இயலாமல் புறத்தே விட்டுவிடுவர். தொடர்ந்து, மேய்கின்ற ஆட்டினை உவமமாக்குகிறார். ஆடு தன் வயிறு நிரம்பும் அளவிற்கு மேயாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயுமேயன்றி எதனையும் உருப்படியாக மேய்ந்து பசியாற்றிக் கொள்ளத் தெரியாது. மேலெழுந்தவாரியாகக் சிலவற்றைக் கற்கும் இடை மாணாக்கர் இத்தகையவர். கல்வி குழப்பத்திலிருந்து தெளிவு நோக்கியது. தெளிவிலிருந்து குழப்பத்தை நோக்கியது அன்று, எருமை தெளிவான நீரைக் கலங்கலாக்கும். மாணவர்களிலும் சிலர் அவ்வாறு இருப்பர். இறுதியாக மெய்ப்பொருள் கொண்டு பொய்ப்பொருள் தள்ளிவிடுவதே அறிவின் நோக்கம். மாறாக அல்லனவற்றைக் கொண்டு நல்லனவற்றைத் தள்ளிவிடும் மாணாக்கரும் உளர். அவர்க்கு உவமமாகச் சொல்லப்பட்டதுதான் நெய்யரி (பன்னாடை போன்றது).

    “அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
    இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
    அன்னர் தலையிடைகடை மாணாக்கர்”

    என்னும் நூற்பாவில் தலை, இடை, கடை மாணாக்கர்க்கான பண்புகளை உவமங்கள் வாயிலாகவும் விளக்கிக் காட்டியிருக்கிறார் பவணந்தியடிகள்.

    நிறைவுரை

    நல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதல் பண்புகள் உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. அல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதலாக உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அவ்வாறு பாகுபடுத்தாத பவணந்தியார் அவர்களின் தரத்தை மட்டுமே வேறுபடுத்திக் காட்டுகிறார். தற்காலத்தில் மதிப்பெண்களால் அல்லது குறியீடுகளால் வரையறுக்கப்படும் நிலைக்கு இது ஒப்பாகலாம். சுருக்கமாகச்  சொன்னால் கற்பிக்கின்றவருக்குத் தகுதி நிர்ணயம் செய்வதற்கும் கற்பாருக்குத் தர நிர்ணயம் செய்வதற்கும் பவணந்தியாருக்கு உவமங்கள் கைகொடுத்திருக்கின்றன எனலாம்.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 65

    பழகத் தெரிய வேணும் – 65

    நிர்மலா ராகவன்

    ஓயாமல் யோசிப்பவர்கள்

    சிலர் எதுவும் செய்யாது, ஒரே இடத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள்.

    `என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், `யோசித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்ற பதில் வரும்.

    எத்தனை நேரம்தான் யோசிப்பார்கள்?

    இப்படிச் செய்தால், இல்லாத பிரச்னைகளும் இருப்பதுபோல் தோன்றும். அதனால், கனவிலும், எதிர்காலத்திலும் சிந்தனையைச் செலவிடுகிறவர்கள் எப்போதும் குழப்பத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள்.

    கதை

    திருமணமான தன் மகளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாள் கோமதி.

    திரும்பும்போது, மிகுந்த கவலையோடு காணப்பட்டாள்.

    `இனி தன்னை எப்போது பார்ப்பேனோ!’ என்ற கவலை அம்மாவுக்கு என்று மகள் நினைத்தாள். தாயைச் சமாதானப்படுத்த, “நான் மகிழ்ச்சியாகத்தானேம்மா இருக்கேன்,” என்றாள்.

    “நீ ரெண்டு சின்னக் குழந்தைகளையும் வெச்சுண்டு, தனியா எப்படி கஷ்டப்படப்போறியோன்னு கவலையா இருக்கு”.

    கோமதி தன் குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படவில்லை. பல உறவினர்கள் உதவியாக இருந்தார்கள். அவளால், காலத்திற்கேற்ப மாற முடியவில்லை. மகள் தனியாக இருக்கிறாளே, தன்னால் அடிக்கடி வந்து உதவி செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்பட்டிருந்தது.

    நிகழ்காலத்தில் இருப்பவர்கள் இவ்வாறு வேண்டாத யோசனையில் ஆழ்ந்துவிடுவதில்லை.

    கவலைப்படுவதால், பிரச்னை தீர்ந்துவிடுமா?

    அப்படியே பிரச்னைகள் வந்தால்தான் என்ன? சமாளிக்கத் துணிச்சல் வேண்டாமா?

    கதை

    விமான ஓட்டியான விக்ரம் தன்னுடன் வேலைபார்த்த ரஞ்சிதாவைக் காதலித்து மணந்தார்.

    திருமணத்திற்குப்பின் அவள் உத்தியோகம் பார்க்காது, தன் சிறு குழந்தைகள் இருவருடன் வீட்டிலேயே இருந்தாள்.

    கணவரோ, இரவு பகல் பாராது உலகெங்கும் சுற்ற வேண்டிய நிலையில், ரஞ்சிதா பெரும்பொழுது தனியாகவே இருக்க நேரிட்டது.

    குருட்டு யோசனை கிளர்ந்தது: விமானத்தில் தன் கணவருடன் சேர்ந்து, இளம்பெண்களும் நாடு விட்டு நாடு பயணித்துக் கொண்டிருப்பார்களே! தன்னிடம் செய்ததுபோலவே, அவர் அவர்களிடமும் தன் காதல் லீலையைத் தொடர்வாரோ?

    எப்போதாவது வீடு திரும்பும் கணவரிடம் இதைப் பற்றிப் பேச அஞ்சினாள் ரஞ்சிதா. மாறாக, தன் ஆண்குழந்தைகளை அளவுக்கு மீறி அடக்க ஆரம்பித்தாள்.

    தப்பித் தவறி, அக்கம்பக்கத்தில் இருக்கும் எந்தப் பெண்ணுடனாவது கணவர் பேசுவதைப் பார்த்துவிட்டால், அந்தப் பெண்ணை இவளுக்குப் பிடிக்காது போய்விட்டது. அவள் பேச முயன்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போவாள்.

    ஏன் அப்படி?

    ரஞ்சிதா கடந்த காலத்திலும், எதிர்காலத்திலுமே வாழ்ந்துகொண்டு இருந்தாள். கடந்த காலத்தின் அனுபவமும், எதிர்காலமும் அப்படி அமைந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளை ஓயாது அலைக்கழைத்தன.

    நிகழ்காலத்தில் செல்வச்செழிப்புடன் இருந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.

    தான் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது என்று புரியாது, தன்னையும் வருத்திக்கொண்டு, குழந்தைகளிடமும் அளவுக்குமீறிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாள்.

    கணவருக்கு அவள் போக்கிற்கான காரணம் புரியவில்லை. ஆயாசத்துடன், பிறரிடம் கூறி, ஆறுதல் தேடினார்.

    ஒருவர் தன்னைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், `வாழ்க்கை ஏன் இவ்வளவு கரடு முரடாக இருக்கிறது!’ என்றுதான் தோன்றிவிடுகிறது.

    கதை

    விமலாவின் கணவர் உத்தியோகம் எதுவும் பார்க்கவில்லை.

    பொழுது போக ஏதாவது வழி வேண்டாமா?

    பிறர் பேச்சைக் கேட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு, சொத்தை அழிக்க ஆரம்பித்தார்.

    `இப்படியே போய்க்கொண்டிருந்தால், என்ன மிஞ்சும்?’ என்ற விமலாவின் கவலை நியாயம்தான். ஆனால், அது ஒன்றையே தன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவுக்கு யோசித்தது மனச்சோர்வில் (depression) கொண்டுவிட்டது. தலைவலி, உடல் வலி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் என்று அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். கணவரைப் பார்த்தாலே பிடிக்காமல் போயிற்று. கத்தலே அவள் அவருடன் தொடர்புகொண்ட மொழியாகியது.

    பிரச்னை என்று வந்துவிட்டால், அதைப் பற்றி ஓயாமல் யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண முடியாது. அது மறைந்தும் விடாது.

    பின் எப்படி விடுபடுவது?

    ஓயாத சிந்தனை வேண்டாமே!

    உடற்பயிற்சி, தியானம் இரண்டும் மனத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவரும் வல்லமை கொண்டவை.

    ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடலாம்.

    கதைப்புத்தகம் படிப்பதும் நல்ல வழக்கம்தான். பிறருடைய வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களில் ஆழ்ந்து போகையில், நம்மையே மறந்துவிடுவோம்.

    நம்மை வாட்டுவதைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால், சற்று நிம்மதி கிடைக்கும். ஆனால், ஓயாமல் தன் சோகக் கதையையே சொல்லிக்கொண்டிருப்போரைக் கண்டால் பிறர் அஞ்சி விலகும் அபாயம் உண்டு.

    `நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்!’ என்று சற்றே யோசித்தால், எதையும் ஏற்கும் நெஞ்சுரம் வரும்.

    நானாக இருந்தால்!

    ஒரு காரியத்தை எவ்வாறு செம்மையாகச் செய்யலாம் என்று, ஆரம்பத்திலேயே சிந்திக்க வேண்டுவது அவசியம்.

    நாம் ஒரு காரியத்தைச் செய்து முடித்தபின், அதைக் கேட்டு மற்றொருவர், `நானாக இருந்தால், இப்படிச் செய்திருப்பேன்,’ என்பார். அவர் உருப்படியாக எதையும் செய்திருக்க மாட்டார். ஆனால், முனைந்து செய்பவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பார்.

    அத்தகையவரை அலட்சியம் செய்ய வேண்டியதுதான். நாம் எப்படி யோசிக்கவேண்டும், அல்லது நடக்கவேண்டும் என்று பிறர் தீர்மானிப்பதை இம்மிபிசகாது ஏற்பது தோல்வியில்தான் முடியும்.

    கனவில் சுகம் காண்கிறவர்கள்

    கதை

    பாலன் ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்பியிருந்தான்.

    கண்டிப்பாக, முதல் பரிசு தனக்குத்தான் என்ற நம்பிக்கை ஏற்பட, பரிசுத்தொகையில் என்னென்ன வாங்கவேண்டும் என்று பட்டியல் தயாரித்தான். அந்த இன்பக் கனவிலேயே ஓரிரு மாதங்கள் கழிந்தன.

    போட்டி முடிவு வந்தது — எதிர்பார்த்த பரிசுதான் வரவில்லை. முடிவு அவன் கையில் இல்லை என்று உணராததால் வந்த வினை!

    ஏமாற்றம் குடும்பத்தில் உள்ளவர்கள்மேல் ஆத்திரமாக மாறியது.

    நடப்பதற்குமுன் திட்டமிடுவானேன், ஏமாற்றத்தால் நொறுங்கிப்போவானேன்!

    ஓயாமல் சிந்திப்பவர்கள்:

    `இப்படி நடந்துவிட்டால்,’ என்ற அச்சம் கொண்டவர்கள்.

    `பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ!’ என்று குழம்புகிறவர்கள்.

    அவமானகரமாக, அல்லது மரியாதைக்குறைவாக, எப்போதோ நடந்த ஒன்றைப்பற்றியே எண்ணி எண்ணி ஆத்திரப்படுகிறவர்கள்.

    தான் செய்த தவற்றையே யோசித்து, `இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று நடந்து முடிந்ததை மாற்ற எண்ணுகிறவர்கள்.

    எங்கே ஆரம்பிப்பது?

    ஒரு காரியத்தைப் பற்றி அதிகமாக யோசித்து, `முடியாது. எதற்கு வீண் வம்பு!’ என்று கைவிடுவதற்குள், அதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

    ஒரு காரியத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வெளிவந்து பயமுறுத்தும்.

    ஒரு பெண் என்னிடம் கூறினாள், “ஆண்களும் தப்பு செய்வாங்கன்னு எழுதலாமான்னு தோணும். ஆனா, இதையெல்லாம் எழுதலாமா, கூடாதான்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்!” என்று.

    நல்லவேளை, நான் அப்படி எழுத ஆரம்பிக்கும்போது எந்தவிதமான யோசனையும் எழவில்லை. யோசித்துக் குழம்பியிருந்தால், நிம்மதியும் பறிபோயிருக்கும்.

    எழுதியபின், பெண்களின் பாராட்டு கிடைத்தது. ஆண்கள்தான் சிறிது கோபப்பட்டார்கள். ஆனால், தங்களுக்குள், `அவள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது,’ என்று அரைமனதாக ஒத்துக்கொண்டதாகக் கேள்வி!

    ஒரு மூத்த பத்திரிகையாளர், “நீங்க எழுதும்போதெல்லாம், `என்ன, இப்படி எழுதறாங்களே!’ன்னு இருக்கும். இப்போ, என் மகளுக்குக் கல்யாணமாகி, அவ புருஷன் அவளை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்தறதைப் பாக்கறப்போதான் உண்மை புரியுது,” என்று என்னிடம் தெரிவித்தார், வருத்தத்துடன்.

    தன்னுடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளாது, பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம், அல்லது இருக்கவே கூடாது என்று எண்ணமிடும் ரகத்தைச் சேர்ந்தவர் அவர்.

    ஆக்ககரமாக ஏதாவது செய்பவர்கள் சிந்தனையிலேயே ஆழ்ந்துவிடுவதில்லை. யோசிப்பார்கள், ஆனால், ஓர் அளவோடு.

    என்னைப் பார்த்துச் சிலர் அதிசயப்பட்டுக் கேட்டு இருக்கிறார்கள், “நீ சிரித்துக்கொண்டே இருக்கிறாயே! உன் வாழ்வில் எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்து இருக்கமாட்டாய். இல்லையா?” என்று.

    எனக்கு லேசான சிரிப்புதான் வரும்.

    மனிதனாக அவதரிக்கும் கடவுளுக்குக்கூட கஷ்டம் உண்டே! நான் மட்டும் என்ன, விதிவிலக்கா?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

    சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    போர்க்களம்  புகுந்த  அதிசூரன் ஏனாதி  நாத்தனாரின்  வாள்வீச்சின்  வலயத்தில் சிக்கினான். எவ்வாறோ  மறைந்து  வெளியேறித் தப்பித்தான். அன்று  இரவெல்லாம் சிந்தித்து ‘’நாம்  நம் நாட்டு வீரர்களைக் கொல்லும் வகையில் திரண்டு போர் புரியாமல், தனிஇடத்தில் சந்தித்து வாட்போர் புரியலாம்‘’ என்று செய்தி அனுப்பினான்.ஏனாதிநாதரும்‘’ அவ்வாறே  ஓரிடத்தில்  வாளுடன் போர் புரிவது  நல்லது‘’ என்றார்.  தம்முடன் இருந்த சுற்றத்தார்  அறியாவகையில் அந்த  இடத்தில் வாழும் கேடயமும் ஏந்தி ஏனாதி நாதர்  காத்து நின்றார்.  திருநீறு பூசிய அடியாரை, நாயனார் எவ்விடத்திலும் தீங்கு புரியார்  என்பதை  அறிந்து, என்றும் திருநீறு பூசி அறியாத  அதிசூரன்,  அன்று  திருநீறணிந்து போர்க்களத்துக்கு  வந்தான். அதனைச்  சேக்கிழார்,

    ‘’வெண் நீறு நெற்றி விரவப் புறம் பூசி,
    உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு,
    வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு,
    புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்’’

    என்று பாடுகிறார்  இப்பாடலின் பொருள்:

    திருவெண்ணீற்றினை நெற்றி முழுதும் பொருந்தும்படி புறத்திற் பூசி, நெஞ்சினுள்ளே வஞ்சனையாகிய கறுப்பினையும் உடனே கொண்டு அழகிய

    சுடருடைய வாளினையும் மணிகளிழைத்த பலகையினையும் கைகளிற் கொண்டு, புண்ணியப்போர் வீரராகிய ஏனாதிநாதருக்குத் தான் சொல்லிவிட்ட அந்த இடத்திற் புகுந்தான்.

    விளக்கம்:

    திருநீறு என்பது  பாவம் அறுத்து   திருவருளைத்  தரும் புண்ணியம்   மிகுந்த  வீபூதியைக்  குறிக்கும். அதற்குரிய மேன்மையைக்  குறிக்காமல் இங்கே, வெண்  நீறு என்று குறித்தது, இங்கு அது இவனுக்குத் திருநீறு பூசிய பயன் தந்து பாவமறுக்காமல் அதற்குமாறாகப் பாதகப்பயனே தந்து, வெண்ணீறு  ஆகும் அளவில் மட்டும் நீன்ற தென்பார்,  ‘திருநீறு’  என்னாது வெண்ணீறு என்றார். இங்கு இவன்பால் திருநீற்றின் நிறமாத்திரம் வெண்மையாய் நின்ற தென்பார் பின்னர், கறுப்புமுடன் கொண்டென்று உடன் சேர்த்துக் கூறியதும் காண்க.

    நெற்றிவிரவப் புறம்பூசி – தாங்கிய நெற்றியினார் என  முன் பாட்டில்  கூறிய பொருள் இங்கு நினைவு கூர்க. “பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்” என்று திருக்கூட்டச்சிறப்பிற் கூறியபடிக்கில்லாமல், 1. பொய்யாக வேடமிடுதற்காக  2. நீறு புறத்தேயும், 3. அதற்கு மாறாகக் கறுப்பு உள்ளத்தேயும் இருந்தது என்று குறிக்கப் புறம் பூசி என்றும், கறுப்பு முடன் கொண்டு என்றும் கூறினார்.

    இது அவனது நான்காவது வஞ்சனை. கறுப்பாகிய வஞ்சம், கோபம் முதலிய தீக்குணங்கள் தாமதகுணத்தின்பாற்பட்டவை. தாமதத்தின் நிறம் கறுப்பு என்ப. நெற்றி விரவ நீறுபூசுதல் நல்லசெயலாக விதிக்கப்பட்டது. அதனைக் குற்ற மென்று கூறலாகாது; குற்றம் வேறாக அவன் உள்ளத்தில் நின்ற தென்று எச்சரிப்பார் நெஞ்சில் கறுப்பும்  உடன் கொண்டென்று உடன் கூறினார். திருநீற்றுப் பொலிவுடன் இது சேர்த்தெண்ணத் தகாதென்பார் இழிவு சிறப்பும்மை தந்து கறுப்பும் என வோதினார்.

    வண்ணச்சுடர்வாள் – மணிப்பலகை என்பன  தனிப் பொருளுடையன; நாயனார் ஏந்தியவற்றைச் சுடர்வாள் – பொற்பலகை  என்ற ஆசிரியர், இங்கு மாற்றலனாகிய பாதகனால் ஏந்தப்பட்டுப் பாதகத்துக்குத் துணையாய் நின்ற இப்படைகளை இழிவாகக்  கருதாமல் இவ்வாறு அடைமொழிகள் தந்து சிறப்பித்தது  ஏனெனில், பகைவன் ஏந்தியவை என்று காணாது,-  “அண்டர்பிரான் சீரடியா ராயினார்”  ஒருவர் ஏந்திய படைகளாக நாயனார் இவற்றை நற்பாவனையிற் காண்டலாலும்,- இவை அவர்தந் திருமேனியுந் தீண்டும் பேறு பெறுதலாலும், – “பற்றலர்தம்  கைவாளால்  பாச மறுத்தருளி”  என்றபடி இவை இறைவனது திருவருட் சொரூபமாகிப் பாசமறுக்கும் கருவிகள்  ஆயினமையாலும்,  இவ்வாறு சிறப்பித்தார் என்க. அன்றியும் அவனது தீச்செயலுக்குக் காரணமாய் நின்றது அவனது வஞ்சகக் கறுப்பேயன்றி வாளும் பலகையுமன்று என்பதும் குறிப்பு.

    புண்ணியப் போர்வீரர் – என்ற தொடர்,  அதிசூரன் போல வஞ்சனை நெறியாகிய மறநெறியாற் போர் புரியாது அறநெறியாற் போர் புரிபவர் என்பார் இவ்வாறு கூறினார். புண்ணியம் என்னும் அடைமொழி பாவப்போரை நீக்குதலின் இது   பிறிதினியைபு நீக்கிய விசேடணம்.

    சொன்ன இடம் – முன்னர் ‘வேறிடம்’, ‘அக்களம்’ என்றபடி பிறர்கண்ணுக்குப் புலப்படாது வஞ்சிக்க ஏற்றதாய் அவன்தானே குறித்த இடம்!  அவன்தன் வஞ்சகத்தை முற்றுவித்தற்கு இந்த மறைவிடத்தை ஒருபெருஞ் சாதனமாகக் கொண்டான் என்பது உணரத்தக்கது.

    புகுந்தான் என்ற சொல்,  அவர் தனிநின்றாராக,  இவன் எண்ணியபடி வலிந்து புகுந்து மூண்டு மறம்பூண்டான் என்பதை  உணர்த்தியது.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 2

    முன்னுரை

    உள்ளத்தில் மென்மையும் முகத்தில் மலர்ச்சியும் அறிவில் அடர்த்தியும் பண்பில் நடுவுநிலையும் கொண்டிருப்பதே நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்பதற்கு மலர், மலை, துலாக்கோல் முதலியவற்றை உவமமாகச் சொல்லிக் காட்டிய பவணந்தியார், அல்லாசிரியருக்கு அவற்றினும் முரண்பட்ட பொருட்களை உவமமாக்கியிருக்கிறார். ‘இனிய கனி’ என்பதற்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்பதற்குக் ‘காஞ்சிரங்காய் எட்டிக்காய்’ என்றும் பரிமேலழகர் எழுதிய முரணுரையைப் போன்றது இது. கற்பித்தல் பணி என்பது கருத்துக்களின் நிரலான வெளிப்பாடு. குழப்பத்தினின்றும் நீங்கித் தெளிவை நோக்கி நகர்வது. கற்றல் என்பது எளிதில் பெறக்கூடியது. ஏக்கத்துடன் கூடிய முயற்சியின் பயன். இந்தப் பண்புகள் இல்லாதவர்களையே பவணந்தியார் ஆசிரியர் அல்லாதவர் என்கிறார். அத்தகையோரை அடையாளப்படுத்தும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    கருத்துக்களின் வெளிப்பாடும் கழற்சிக்காய் குடமும்

    கழற்சிக்காய் என்பது ‘கழிச்சிக்கொட்டை’ என்றும் ‘கழிச்சிக்காய்’ என்றும்  பொதுவாக வழங்கப்படுவது. அது அக்காலப் பெண்களின் விளையாட்டுக் கருவி. பல்லாங்குழியில் புளியங்கொட்டை, சோழியைப் போல.

    “கைபுனை குறுந்தொடி தந்தப் பைப்பய
    முத்த வார்மணல் கொற்கழங்கு ஆடும்”

    என்பது பெரும்பாணாற்றுப்படை. விளையாட்டுக் காய்களை விளையாட்டு முடிந்ததும் ஒரு சிறிய கூடை அல்லது குடத்தில் இட்டு நிரப்பி வைத்துப், பிறகு தேவைப்படுகிறபோது கொட்டிப் பயன்படுத்திக் கொள்வது நடப்பியல். இந்த நிகழ்ச்சியைப் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார்.

    “பெய்த முறை அன்றிப் பிறழ்வுடன்தரும்
    செய்தி, கழற்பெய் குடத்தின் சீரே!”

    இந்த நூற்பாவில் கழற்பெய் குடம் என்பது பற்றி மேலே கண்டோம். ‘செய்தி’ என்றால் செயல். ‘ஒருவன் செய்தி கொன்றோர்க்கு’ என்றவிடத்துச் செய்தி என்பது ‘செயல்’ என்னும் பொருள்படுவது காண்க. விளையாட்டு முடிந்து குடத்துக்குள் நிரைக்கும்முறை வேறு அதனை அடுத்த விளையாட்டிற்காகக் கொட்டும்போது நிகழும் முறை வேறு. நிரப்புகிற நிரலில் கொட்டுகிற நிரல் அமையாது. முரணாகும். குழப்பமாகும். எது முன்பின் என்பது தெரியாது. இந்தக் குழப்பநிலையைத்தான் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார். கழல் என்பது அக்காலத்தில் பெரும்புழக்கத்திற்கு ஆளாகியிருந்ததால் அது நிறைந்த குடத்தை உவமமாக்கியிருக்கிறார். கழல் உவமமாகாது. கழலால் நிரப்பப்பட்ட ஆசிரியரே உவமமாவார். கற்பிக்கப்படும் பாடங்கள் பல்வகையாக உள்ளத்துக்குள் இருந்தாலும் அவற்றை நிரலாக ஒவ்வொன்றாக விளங்கும்படிச் சொல்லுவதே கற்பித்தல் பணி. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாகப், பின்னும் முன்னுமாகக் கற்பிப்பது மாணவனுக்குப் பயன் தராது. அத்தகைய கற்பித்தல் முறையைக் கொண்டவன் எந்நாளும் ஆசிரியர் என்னும் தகுதிக்கு உரியவன் ஆகமாட்டான் என்பது கருத்து. இங்கே கழற்சிக்காய் உவமமன்று. அது பெய்யப்பட்டிருந்த குடமும் அதன் தலைகீழ்வினையுமே உவமம் என்பது அறிக.

    மடற்பனையும் ஆசிரியரும்

    ‘தாழையெல்லாம் மடற்கத்திச் சுழற்றவைத்து’ என்பார் பாவேந்தர். மடலை உடைய இரண்டு தாவரங்களுள் ஒன்று பனை. மற்றொன்று நெய்தல்நிலத் தாவரமான தாழம்பூ. தாழம்பூ மடலின் இருபுறமும் கூரான முட்கள் கத்திபோலக் காணப்படும். மடற்பனையின் புறத்தில் அதன் மட்டையெல்லாம் கத்திபோலக் காணப்படும். அவற்றை ஒதுக்கி மேலே ஏறிப் பழத்தைப் பறிக்க இயலாது. கடினம். பனம்பழம் சுவையானது ஆயினும் பெறவியலாத நிலையில் அது எப்போது விழுகிறதோ அப்போது காத்திருந்து பெற்றுச் சுவைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    “தானே தரக்கொளின் அல்லது தன்பால்
    மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பனை”

    என்னும் நூற்பாவில் மடற்பனையின் இயல்பை விளக்கிக் காட்டுகிறார் பவணந்தியார். ‘எளிவந்த பிரான்’ என்பது இறைவனுக்கான புகழ்நாமங்களில் ஒன்று. ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பது திருவாசகம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதால் அடியவனைத் தேடி இறைவன் அருள்பாலிப்பதைப் போல் மாணவனுக்கு ஓடிவந்து அருள் பாலிப்பதே நல்லறம். மாறாக தன்னை அண்ட முடியாத இடத்தில் வைத்துக் கொண்டு தான் எப்போது கொடுக்க இயலுமோ அப்போதுதான் மாணவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் மனநிலை ஆசிரியன் தகுதிக்கு முரணானது.

    பருத்திக் குடுக்கையும் ஆசிரியரும்

    கல்வி கரையில என்றதால் அது கடல் என்பது பெறப்படும். யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைப்பதுபோல அளவற்ற கல்விச் செல்வத்தை ஆசிரியர் ஒருவர் தன்னுள் பொதிந்து வைக்கிறார். பொதிந்து வைக்கப்பட்ட அச்செல்வம் அவருக்கானது அன்று. பிறருக்கானது. அதனால்தான் கற்பித்தலை ‘ஈதல்’ என்றார் பவணந்தியார். அவரிடம் கற்பதை ‘உடையார் முன் இல்லார் இரப்பதுபோல் கற்க வேண்டும்’ என்றார் திருவள்ளுவர். இருப்பதைக் கொடுக்கின்ற இந்த நிகழ்வு தடையின்றி நிகழவேண்டுமாயின் உள்ளேயிருப்பதும் ஊறுவதும் தடையின்றி வெளிவரவேண்டும். ‘குடுக்கை’ என்றாலும் ‘குண்டிகை’ என்றாலும் ஒன்று. பருத்தியைக் குடுக்கையுள் வைத்துத் திணிப்பது ஒரு செயல். திணித்ததை வெளியில் எடுத்துத் தர எண்ணுகிறபோது ஒட்டுமொத்தமாகவோ சரளமாகவோ வெளியே வராது. கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துத்தான் தரவேண்டி வரும்.

    “அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு
    எளிது ஈவில்லது பருத்திக் குண்டிகை”

    என்னும் நூற்பாவில் உள்ளே அரிதாகப் பெய்யப்படுகிறபொருளை எளிதாகத் தர இயலாத குண்டிகை விளக்கப்படுகிறது. இந்தக் குண்டிகையன்ன ஆசிரியர் தான் கற்ற பொருளைத் தன்னிடம் இரந்த மாணவனுக்கு எளிதில் தர இயலாதாம்.  கொடுப்பதற்கென்றே சேர்த்த கல்வியை வைத்துப் பூட்டிக் கொள்கிற அல்லாசிரியர் இயல்புக்குப் பருத்திக் குணடிகையை உவமமாகச் சொன்னது பொருத்தமானதுதானே!

    தென்னையுள்ளமும் ஆசிரியரும்

    ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்பது தமிழகத்துப் பழமொழி. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்க வேண்டும்’ என்னும் முரணும் தமிழ் நெறியே. ‘உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்பது மற்றொரு வரைவிலக்கணம். இவற்றையெல்லாம் தொகுத்துச் சிந்தித்தால் ‘கற்றல்’ என்பது பணிவின் வெளிப்பாடு என்பதும் இரத்தலுக்கு இணையானது என்பதும் ‘கற்பித்தல்’ ‘அறச்செயல்’ என்பதும் கல்வி ஒரு செல்வம் என்பதும்  பெறப்படும். ஆசிரியர் இருக்கும் இடந்தேடி மாணவர் சென்று கற்ற காலம் ஒன்று. மாணவர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு ஆசிரியர் வந்திருந்து கற்பித்துவிட்டுச் செல்லும் காலம் ஒன்று. எந்தக் காலமாயினும் கற்றல் என்பது  தொழுது பெறுவதே. ‘தொழுபவர்க்கே கல்வி’ என்றும் கருதமுடியும். ஆனால் தொழுபவனை விட்டுத் தொழாதவனுக்குக் கல்வி கொடுப்பதும் நிகழ்கிறது. இத்தகைய இயல்புடைய ஆசிரியருக்குச் சொல்லப்பட்டிருக்கும் உவமமே ‘முடத்தெங்கு’ என்பதாகும். பெரும்பாலும் தென்னைக்கும் பனைக்கும் உள்ள அடிப்படை நிற்கின்ற பாகையில்தான அமையும். பனை நேராக நிற்கும். தென்னை நேராக நிற்காது. இந்த வளைவு தான் வேர்பிடித்திருக்கும் இடத்தை மறந்து அடுத்தவர் இடத்தில் தேங்காய்களைப் போடும் அளவிற்கு இருக்கும். வளைந்த இந்தத் தென்னைக்குத்தான் முடத்தெங்கு என்று பெயர்.

    “பல்வகை உதவி வழிபடு பண்பின்
    அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே”

    பாவேந்தர் பாரதிதாசன் ‘தென்னையுள்ளம்’ என்று இதனை அழைப்பார். அவர் வேறொரு சிந்தனைக்கு அதனை உவமமாக்குவார். தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தும் ஆட்சியாளர்களுக்கு அந்த உவமத்தை அவர் சொல்வார். எனவே முடத்தெங்கினைப் போலப் பணிந்து, உதவியவனுக்குப் பலனளிக்காது,  அப்பண்புகள் அறவே அற்ற சற்றும் தொடர்பற்ற ஒருவனுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியன் ‘முடத்தெங்கு’க்கு ஒப்பாவான் என்பது கருத்து.

    நிறைவுரை

    நல்லாசிரியருடைய பண்புகளைப் பற்றிக் கூறும்போது பண்புகளை முதலில் கூறி, உவமங்களைப் பின்னர் தொகுத்துக் கூறியது போலவே,

    “மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
    அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
    கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை
    முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
    உடையோர் இலர் ஆசிரியரா குதலே!”

    என்ற நூற்பாவிலும் அல்லாசிரியர் பண்புகளை முன்னர்க்கூறி, உவமங்களால் ஏனைய பண்புகளையும் உடன் கூறியிருக்கிறார். உவமங்கள் நான்கும் இயல்பாக அமையக் கூடாதவை என்பதை உணரமுடியும். “மொழிகுணம் இன்மையும்  இழிகுண இயல்பும் “அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்” என்னும் இயல்புகள் ஆசிரியர் பணிக்கு நுழைவுத் தேர்வு எழுதவே தகுதியற்றவை. நான்கு உவமங்களையும் கற்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு இருக்கக் கூடாத முரண்களுக்காக்கியிருக்கிறார் பவணந்தியார். இதனை ‘முரண் கொள் சிந்தை’ என்னும் தொடர் உணர்த்தக் கூடும். நல்லாசிரியர், அல்லாசிரியர் போலவே நன்மாணாக்கர், அல்மாணாக்கர் பற்றிய உவமங்கள் தொடர்ந்து ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 64

    பழகத் தெரிய வேணும் – 64

    நிர்மலா ராகவன்

    துணிச்சலுடன் முயற்சி செய்

    அது எப்படி, சில பேரால் மட்டும் வாழ்க்கையில் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க முடிகிறது?

    ஊக்கம் அவர்களுக்கு உள்ளிருந்தே எழுகிறது.

    ஒரு காரியமானது செய்கிறவருக்குப் பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்கு முக்கியமில்லை.

    அந்தக் காரியத்தால் பணம் கிடைக்காது போகலாம். அதனால் பாதிப்பு அடையாது, புதினங்கள் படிப்பது, பொழுதுபோக்கிற்காகத் தையல் வேலையில் ஈடுபடுவது, சித்திரம் வரைவது, எழுத்துத் துறை, சமைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களுக்கு அவை பிடித்த காரியமாக இருக்கும். அதனால், பிறரது உதவியை எதிர்பார்க்காது, தாமே செய்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    வேறு சிலர் விளையாட்டுகளில் நேரத்தைச் செலவழிப்பார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது. சவாலாக அமைவது.

    குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடும்போது, மகிழ்ச்சி ஒன்றுதான் அவர்களுக்குக் குறி. பெரும்பாலான பெரியவர்களைப்போல், `இவனுடன் தொடர்பு கொண்டால் என்ன லாபம்?’ என்று கணக்குப் பார்க்கமாட்டார்கள்.

    ஒரு காரியத்தை ஏன் செய்கிறோம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கான திறமை தனக்கு இருக்கிறதா என்று ஆராய்ந்துவிட்டு, முழுமனத்துடன் ஈடுபடுகிறவர்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி.

    திறமை ஒருபுறமிருக்க, அவர்கள் துணிச்சல் மிக்கவர்கள்.

    துணிச்சல் எதற்கு?

    சட்டத்திற்குப் புறம்பாகவா நடக்கப் போகிறார்கள்?

    நாம் ஒரு காரியத்தில் இறங்கப் போகிறோம் என்று தெரிந்தால், அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பும்.

    பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் ஒருவரை மூதாட்டி ஒருத்தி கேட்டாளாம், “உருப்படியான வேலையை நீ என்று தேடிக்கொள்ளப் போகிறாய்?”

    தன் எழுத்தால் கோடி கோடியாகச் சம்பாதித்தவரைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி!

    அவருக்கு ஆர்வம் இருந்தது. தன் திறமையில் நம்பிக்கை இருந்தது. வெற்றிக்கொடி நாட்டிய பின்னரும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால், ஆரம்ப காலத்தில் இன்னும் எவ்வளவு கேலியை, எதிர்ப்பைக் கண்டிருப்பார்!

    ஒருவருக்கு ஊக்கம் தனக்குள்ளிருந்து வந்தால், யார் என்ன சொன்னாலும் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டார்.

    எதிர்ப்போ, தோல்வியோ, தனது பலத்தைப் பரீட்சை செய்யத்தான் ஏற்படுகிறது என்று புரியும்போது, தன் பலம் என்னவென்று புரிந்துவிடும். அச்சம் விலகிவிடும்.

    ஆனால், பலரும், தம் விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பிறரது பாராட்டுக்காக, அல்லது ஆமோதிப்புக்காகவே எதையும் செய்கிறார்கள். எதிர்ப்புகள் வந்தால், பயந்து பின்வாங்குகிறார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்குப் பெரும் வெற்றி கிடைப்பதில்லை.

    முயற்சியில் வெற்றி

    கனவிலேயே நிலைத்துவிடாது, அக்கனவை நனவாக்குவது எப்படி என்று ஆராய்வது முதல் படி.

    “நான் எல்லாப் பாடங்களிலும் முதல் மாணவனாக இருக்கப் போகிறேன்!” என்று விரும்பினால் மட்டும் போதுமா?

    “புத்தகங்களைத் தொடவே பிடிக்காது. என் வீட்டில், `படி, படி’ என்று உயிரை வாங்குகிறார்கள்!” என்பவர்களுக்குப் படிப்பது கசப்பான வேலை. அதனாலேயே, அது கடினமானதாகத் தோன்றும்.

    மாறாக, காலையில் எழுந்து படிக்க வேண்டும், தெரியாதவற்றைப் புரிந்துகொள்வதற்குத் தகுந்தவர்களை நாடவேண்டும், பொழுதுபோக்குகளிலும் நண்பர்களுடனும் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    `இவ்வளவு கடினமாக இருக்கிறதே! எப்படித்தான் செய்யப் போகிறேனோ!’ என்ற மலைப்பு எழும்போது அதை ஒதுக்கிவிட்டுச் செய்தால், நாமே பிரமிக்கும் அளவுக்குப் பலன் கிடைக்கும்.

    உரிய காலத்தில் நாமே நம்மை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாவிட்டால், `அப்படிச் செய்திருக்கலாமே!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும்.

    கண்ட கனவு மெய்யாகாதபோது, `நேரம் கிடைக்கவில்லை. யாருமே ஊக்குவிக்கவில்லை,’ என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு.

    “ஒரு மரத்தை நடுவதற்குச் சிறந்த வேளை, இருபது வருடங்களுக்கு முன்னால். அடுத்தது, இப்போது!” (சீனப் பழமொழி)

    எப்போதோ செய்யாமல் விட்டதைப் பற்றியே நினைத்துக் குமுறிக்கொண்டிராது, இப்போது செய்யலாமே!

    வெற்றி-தோல்வி

    தோல்வி என்பது வெற்றியின் எதிர்ப்பதமில்லை. இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை.

    எந்த வெற்றி அடைவதற்கு முன்பும் தோல்வி தவிர்க்க முடியாதது. (ஆரம்பத்திலேயே வெற்றி கிடைத்துவிட்டால், கர்வம் தலைக்கேறி, மேலும் பல வெற்றிகளை அடைவது கடினம்).

    எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை. விடாமுயற்சி உள்ளவர்களை வீழ்த்துவது கடினம்.

    `நீ செய்து கிழித்தாய்!’

    `நினைத்ததை உடனே செய்து முடிக்கவேண்டும் உனக்கு!’

    `ஆசைக்கும் எல்லை இருக்கவேண்டும்!’

    `சரியான போர்! எப்போதும் என்ன செய்யப்போகிறேன் என்றே பேசிக்கொண்டிருப்பாய்!’

    இப்படியெல்லாம் நாம் எடுத்த திசையை மறித்துப் பேசுகிறவர்களிடமிருந்து விலகுவதுதான் புத்திசாலித்தனம்.

    நெருங்கிய உறவினர்களே அப்படி இருந்தால், அவர்களது கூற்றை அலட்சியம் செய்தால் பிழைத்தோம்.

    வளர்ப்புமுறை

    “கொதிக்கும் நீரில் உருளைக்கிழங்கு வெந்து, மென்மையாகிவிடுகிறது. ஆனால், முட்டை கெட்டியாகிவிடுகிறது”. (யாரோ)

    ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் வெற்றியாளர்களாகத் திகழ்வதில்லை.

    “எல்லாரையும் ஒரே மாதிரிதான் வளர்த்தோம்!” என்று புலம்பும் பெற்றோர் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை.

    ஒரே விதமான வளர்ப்புமுறை, வெவ்வேறு மாறுதல்களை ஏற்படுத்தக்கூடியது.

    இயற்கையில், முதல் குழந்தை நுண்ணிய உணர்வுகளைக் கொண்டிருக்கும். பொறுப்பும் பொறுமையும் அதிகமாக இருக்கும்.

    அத்தன்மை புரிந்து, பெற்றோர் ஓயாது விரட்டாமல் இருந்தால் அவன் சிறந்த தலைவனாகும் வாய்ப்பு உண்டு.

    மூத்தவனோ, காலத்துக்கு ஒவ்வாத விதமாக நடக்கச் சொன்னாலும், பெற்றோருக்குப் பணிந்து நடப்பான்.

    அவனுக்குப் பிடிக்காத துறையில் படிக்கச் சொன்னால், அப்படியே நடந்து, உற்சாகமின்றி காலம் தள்ளுவான். அதனாலேயே வெற்றி பெற முடியாது போய்விடும்.

    இரண்டாவது குழந்தையோ நேர் எதிர். அவ்வளவாகப் பொறுமை இராது. `ஏன் இப்படி?’ என்று எதிர்த்துக் கேட்கும் குணம் இருக்கும்.

    ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்தாலும், அதிலிருந்து விலகி, தனக்குப் பிடித்த, சம்பந்தமே இல்லாத வேறொரு துறையில் நுழையும் துணிச்சல் உண்டு. அதில் தோல்வி ஏற்பட்டாலும் சமாளித்துக்கொண்டு, மீண்டும் முயல்வான். அவனுக்கு வயது ஒரு தடையே இல்லை.

    சவால்கள் நிறைந்த முயற்சியில் ஈடுபடுவான்.

    இளையவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, மனமுடைந்து, புதிதாக எதையும் செய்யும் துணிவை இழந்துவிடுவான் மூத்தவன். எல்லாக் காரியமும் தன்னைச் சோதிப்பதுபோல் உணர்வான்.

    தன்னைத்தானே நம்பாதவன்மேல் பிறருக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?

    `இதைச் செய்யமுடியுமா!’ என்ற மலைப்பு ஏற்படுவது நல்லது. இல்லாவிட்டால், எடுத்த காரியம் மிக எளிதானது என்று அர்த்தம். அதை முடித்தபின், பெருமகிழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை.

    விதை நட்டவுடனேயே மரமாகிவிடுகிறதா?  அதைப்போல்தான், எந்தத் துறையிலும் குறுகிய நேரத்தில் பலன் கிடைக்காது. சிறு, சிறு வெற்றிகள் கிடைக்க, மகிழ்ச்சி பெருகும். ஊக்கம் வரும். அதன்பின்தான் பெரும் வெற்றி கிடைக்கும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

    சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    படைப்  பயிற்சியில்  சிறந்தவன்  அதிசூரன். அவன் ஏனாதி நாதரின்  தாயத்து உறவினன். தம் படைக்கலத்  திறத்தை  மற்றவர்க்கும்பயிற்றினான். அதனால் அவனுக்குத்  தற்பெருமை அதிகரித்தது. தம்மை வியந்து கொண்ட அதிசூரன் அரசர்  ஏனாதி நாதர் மேல் பகைமை கொண்டான். அதனால் அரசனை எதிர்த்துப்  போர் புரிய நினைத்தான். தாயத்து  உரிமையை வலியவரே  பெறவேண்டும் என்று சிலருடன் கூடி ஆலோசித்தான். ஆகவே சிறுநரி  சிங்கத்தை எதிர்ப்பது போல், ஏனாதி நாதர் மேல் போர் தொடுக்க எண்ணிப் போருக்கு அழைத்தான்.

    ஏனாதி நாதரும் போராட ஆயத்தமானார். இருவர் பக்கமும் படை திரண்டது. ஊருக்கு வெளியே பொதுவான இடத்தில் எதிர்த்துப் போர் புரிந்து வென்றோர் அரசுரிமை கொள்ளலாம்  என முடிவுசெய்து, போர்க்களத்தில் திரண்டனர்.

    இருவகைப் படையினரும் கடுமையாக மோதிப் போர் புரிந்தனர். ஈசன் அருளாலும், தம் வலிமையாலும் அதிசூரன் படைகளை  ஏனாதி நாதர் அழித்தார். அப்போது அதிசூரன் படையின் நிலையைச்  சேக்கிழார் கூறுகிறார்.

    பாடல்:

    தலைப்பட்டார்  எல்லாரும்  தனிவீரர் வாளிற்
    கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டு,
    நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்
    அலைப்பட்ட ஆர்வம் முதல்  குற்றம்போல்  ஆயினார்.

    பொருள்

    கூடி எதிர்ந்தவர்கள் எல்லாரும், ஒப்பற்ற வீரராகிய ஏனாதிநாதருடைய வாளினாற் கொல்லப்பட்டொழிந்தனர். இது கண்டு, வந்தெதிர்க்காத படைஞர் படுகளத்தை விட்டு, நிலைத்த மெய்யுணர்வின் முன் அலைந்து ஒழிகின்ற ஆர்வ முதலிய குற்றங்கள் போல ஆயினார்கள்.

    விளக்கம்

    தலைப்படுதல் – கூடுதல் – ஒன்றுதல். இங்குப் போரில் முனைந்து ஒருவரோ டொருவர் பொருந்தக் கிட்டுதல் குறித்தது. அவர்களுள்  அதிசூரன் பக்கத்தார் அரசன் வாளால்  கொல்லப்பட்டார்.

    போர்க்களம்  பலவகைப்படும்;   ஓர் இடத்திற்குப் பெயர் அவ்வப்போது அங்கு நிகழும் நிகழ்ச்சியாற் கூடுவதியல்பு. இங்கு இந்த இடம், முதலில் இந்தவெளி, போர் குறித்து இருபடையும் சேர்ந்தபோது “செருக்களம்”ஆயிற்று. அதன்பின் போர் மூண்டு நிகழும்போது போர்செய்களம் என்றாயிற்று. பின் படைஞரது போர் ஓய்ந்தபின் மேலும் போர் நிகழ நிற்றலின் பறந்தலை  எனப்பட்டது. இங்குத் தனிவீரர் வாளிமுன் எதிர்ந்தார் தம் படைஒன்றும் பயன்படாது கொல்லப்பட்டாராதலின் கொல்களம் எனப்பட்டது காண்க. பின்னர் இவ்வகையிலும் நிகழ்ச்சி உளதாகாமையின் வேறிடம்  அக்களம்,  இடம்  எனப்பட்டது. இவ்வாறு  காலம் மாறிய வகையைச்  சேக்கிழார் பாடுகிறார்.

    முட்டாதார் என்ற சொல்,  மாற்றானது படைவீரர்களுள், அவ்வாறு எதிர் வந்து போரில் முனையாதவர்களைக்  குறித்தது. போர்க்களத்தில் கொல்லப் படாதவர்கள் வேறிடத்திற்குச் சென்று மறைந்தனர். பொதுவாக நமக்கு மெய்யுணர்வு  வெளிப்படும்போது, முன்னிருந்த ஆர்வம் முதலான மறைந்தது போல் ஒளிந்தனர். . செயலற்றுப் போய் அங்கு எதிர் நிற்கலாற்றாது மறைந்து போயினர் என்பது. ஒளிந்து மறைந்தனர் என்னாது “குற்றம்போல் ஆயினார்” என்றிவ்வாறு கூறியது அவர்கள் யாதாயினர் என்றே தெரியா வகை மறைந்தனர் என, வீரச்சுவை நீங்க நகைச் சுவைபடக் கூறியவாறு.

    நிலைப்பட்ட மெய்யுணர்வு – மெய்யுணர்வு – உண்மைப் பொருள் உணரும் உணர்வு. ஞானமென்ப. வீட்டிற்கு நிமித்தமாகிய செம்பொருளைக் காண்பதுவே மெய்யுணர்வாம். அஃதாவது அருட்கண்ணாகிய சிவஞானத்தால் விளங்கிச் சிவம் – உயிர் – பாசம் என்ற பொருளைக் காணும் மெய்யுணர்வாம். அவ்வகை உணர்வின் முன்னர் ஆர்வம் முதலிய குற்றங்கள் முனைந்து நிற்கலாற்றாது காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலவும், ஒளியின்முன் இருள் போலவும் ஒழிந்துபோம், இவைகளைச் “சார்புணர்ந்து சார்புகெட”, “மூன்றன் நாமம்கெட” என்ற திருக்குறட் பாக்களின் கீழ்க் கண்டு கொள்க.

    மெய்யுணர்வின் இயல்பும், ஆர்வம் முதற்குற்றங்களி னியல்பும், மெய்யுணர்வின் முன் குற்றம் நில்லாத இல்பும் ஞான சாத்திரங்களுள்  காண்க.

    நிலைப்பட்ட – “கல் லெறியப் பாசி கலைந்து நன்னீர் காணுதல்போல” அப்போதைக்குக் காணப்பட்டு மறையும் உணர்வாயின், அது பின்னர் அப்பாகத்தால் மறைக்கப்படுமாதலின், அவ்வாறல்லாது குற்றங்கள் அறவே ஒழியுமாறு நிலை நின்ற மெய்யுணர் வென்பாார் நிலைப்பட்ட என்று சிறப்பித்தார்.

    “இடையறாத ஞான யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர் பஞ்சுத்துய் போலுமாதலின்” என்றார் பரிமேலழகர். நிலைப்பட்ட மெய்யுணர்வாவது திருவடி மறவாதிருத்தல். “மறக்குமா றிலாத வென்னை”  என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்”  என்ற புராணமும் முதலிய திருவாக்குக்களிற் குறித்த நிலை இது. ஆர்வம் முதல் குற்றம் – இவை காமம் – வெகுளி – மயக்கம் என்ற மூன்றென்பர்.

    “காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
    நாமங் கெடக்கெடும்  நோய்”

    என்ற குறளின் கீழ் “அநாதியாய அவிச்சையும், அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும்; அது பற்றி எனக்கிது வேண்டுமென்னும்  அவாவும், அதுபற்றி அப்பொருட்கண்   செல்லும் ஆசையும், அது பற்றி அதன் மறுதலைக்கண்  செல்லுங் கோபமும் என வடநூலார் குற்றம் ஐந்தென்பர். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சையின் கண்ணும், அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலால் மூன்றென்றார்” என்றெல்லாம்   பரிமேலழகர்  உரைத்தவை காண்க. இவற்றைக் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என ஆறாகவும் வகுப்பர்.

    “கலையமைத்த காமச்செற்றக் குரோத லோப மதவருடை,
    உலையமைத்திங்கு  ஒன்றமாட்டேன்  ஓணகாந்தன் தளியுளீரே”

    என்ற ஆளுடைய நம்பிகள் தேவாரம்  காண்க. இவையெல்லாம்  அடங்க “ஆர்வமுதற் குற்ற” மென்றார். இவை மூலமலத்தின் காரியம். நெல்லிற்கு உமி தவிடும் நீள்செம்பினில்  களிம்பும்போல.

    அலைப்பட்ட என்ற தொடர் ,  இக்குற்றம் உயிரைப்பற்றி நின்ற முன்னை நிலையினின்றும் மெய்யுணர்வு இவற்றை அலைக்க, அதிலேபட்டுப் பெயர்ந்த என்க. மெய்யுணர் வொன்றே நிலைப்படுவதென்றும்,ஏனைய குற்றங்கள் ஒரு காலத்து அலைப்பட்டொழிவன என்றும் குறித்ததும் காண்க.

    இங்கு உவமான உவமேயங்களில் நிலைப்பட்ட மெய்யுணர்வுடையார் ஏனாதி நாதரும், ஆர்வமுதற் குற்றமுடையார் அதிசூரனும் அவன் படை வீரருமாயின பொருத்தமும் அழகும் கண்டு களிக்க.

    கொல்களத்தினும் நிலைப்பட்ட மெய்யுணர்வு மயமாக விளங்கினார் நாயனார் என்பது, பின்னர்த் திருநீற்றின் பொலிவினை மாற்றான் நெற்றியிற் கண்டபோதே அவனது கொள்கைக்கு குறிவழிநின்ற நேர்மையாலும், அதன்மேலும் நிராயுதரைக் கொன்றானெனும் தீமை அவனுக்கு எய்தாமைப் பொருட்டே மலைவார்போற் காட்டி அவன் கருத்து முற்றுமளவும் வாளா படைதாங்கி நின்ற நேர்மையாலும் துணியப்படும்.

    இவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்; உண்மையுணர்ந்த ஞான தேசிகர்பால்  அறியத்தக்கன.

    வெம்போரில் தமது உயிர் கொடுத்தும் மெய்யுணர்வின்கண் நின்ற நாயனார் திறத்தின் முன் மாற்றார் படை ஒழிந்த திறத்திற்கு உரியவாறு கொலைக்களத்திலும் நிலைப்பட்ட மெய்யுணர்வும் அலைப்பட்ட குற்றமும் உவமித்த ஆசிரியரது நிலைப்பட்ட மெய்யுணர்வு கண்டு வியக்கற்பாலதாம். இங்குப் போரில்  படை மக்கள் சிகரமுந் தோளும் தாளும் துணிக்கப்பட்டுக் கிடக்கும் கொல்களத்தின் இடையிற் பிறழாது மெய்யுணர்வின் நின்றதுபோலவே கண்ணப்ப  நாயனார்  புராணத்தில், திண்ணனார் வேட்டையில் மாக்கள் படும் கொல்களத் தினிடையும்,

    “பலதுறைகளின்   வெருவரலொடு    பயில்வளையற    நுழைமா
    வுலமொடுபடர்    வனதகையுற    வுறுசினமொடு    கவர்நாய்
    நிலவியவிரு   வினைவலையிடை   நிலைசுழல்பவர்   நெறிசேர்
    புலனுறுமன   னிடைதடைசெய்த    பொறிகளினள   வுளவே”

    என்று மெய்யுணர்விற் பிறழா நேர்மையின் உவமித்ததும், இவ்வாறுள்ளன பிறவுங் கண்டுய்வோமாக.

    ஆகவே  இப்பாடலின்மூலம், சித்தாந்தக் கருத்தின் வழியே, வெகுளி  மயக்கம் முதலான  குற்றங்கள்   காமத்தின் வழியே உருவாதலைச் சேக்கிழார்  மிகவும் நுட்பமாக  விளக்குவதை  அறிந்து மகிழ்கிறோம்; உணர்ந்து நெகிழ்கிறோம்! இப்பாடலில் ஏனாதி நாத நா யனார் அருள்  வரலாற்றையும் முற்படக்  கிளந்த  நுணுக்கத்தை உரையாசிரியர் திறம் போற்றுதற்குரியது.

    Share