தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
நன்னூலில் உவமங்கள் – 2
முன்னுரை
உள்ளத்தில் மென்மையும் முகத்தில் மலர்ச்சியும் அறிவில் அடர்த்தியும் பண்பில் நடுவுநிலையும் கொண்டிருப்பதே நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்பதற்கு மலர், மலை, துலாக்கோல் முதலியவற்றை உவமமாகச் சொல்லிக் காட்டிய பவணந்தியார், அல்லாசிரியருக்கு அவற்றினும் முரண்பட்ட பொருட்களை உவமமாக்கியிருக்கிறார். ‘இனிய கனி’ என்பதற்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்பதற்குக் ‘காஞ்சிரங்காய் எட்டிக்காய்’ என்றும் பரிமேலழகர் எழுதிய முரணுரையைப் போன்றது இது. கற்பித்தல் பணி என்பது கருத்துக்களின் நிரலான வெளிப்பாடு. குழப்பத்தினின்றும் நீங்கித் தெளிவை நோக்கி நகர்வது. கற்றல் என்பது எளிதில் பெறக்கூடியது. ஏக்கத்துடன் கூடிய முயற்சியின் பயன். இந்தப் பண்புகள் இல்லாதவர்களையே பவணந்தியார் ஆசிரியர் அல்லாதவர் என்கிறார். அத்தகையோரை அடையாளப்படுத்தும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.
கருத்துக்களின் வெளிப்பாடும் கழற்சிக்காய் குடமும்
கழற்சிக்காய் என்பது ‘கழிச்சிக்கொட்டை’ என்றும் ‘கழிச்சிக்காய்’ என்றும் பொதுவாக வழங்கப்படுவது. அது அக்காலப் பெண்களின் விளையாட்டுக் கருவி. பல்லாங்குழியில் புளியங்கொட்டை, சோழியைப் போல.
“கைபுனை குறுந்தொடி தந்தப் பைப்பய
முத்த வார்மணல் கொற்கழங்கு ஆடும்”
என்பது பெரும்பாணாற்றுப்படை. விளையாட்டுக் காய்களை விளையாட்டு முடிந்ததும் ஒரு சிறிய கூடை அல்லது குடத்தில் இட்டு நிரப்பி வைத்துப், பிறகு தேவைப்படுகிறபோது கொட்டிப் பயன்படுத்திக் கொள்வது நடப்பியல். இந்த நிகழ்ச்சியைப் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார்.
“பெய்த முறை அன்றிப் பிறழ்வுடன்தரும்
செய்தி, கழற்பெய் குடத்தின் சீரே!”
இந்த நூற்பாவில் கழற்பெய் குடம் என்பது பற்றி மேலே கண்டோம். ‘செய்தி’ என்றால் செயல். ‘ஒருவன் செய்தி கொன்றோர்க்கு’ என்றவிடத்துச் செய்தி என்பது ‘செயல்’ என்னும் பொருள்படுவது காண்க. விளையாட்டு முடிந்து குடத்துக்குள் நிரைக்கும்முறை வேறு அதனை அடுத்த விளையாட்டிற்காகக் கொட்டும்போது நிகழும் முறை வேறு. நிரப்புகிற நிரலில் கொட்டுகிற நிரல் அமையாது. முரணாகும். குழப்பமாகும். எது முன்பின் என்பது தெரியாது. இந்தக் குழப்பநிலையைத்தான் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார். கழல் என்பது அக்காலத்தில் பெரும்புழக்கத்திற்கு ஆளாகியிருந்ததால் அது நிறைந்த குடத்தை உவமமாக்கியிருக்கிறார். கழல் உவமமாகாது. கழலால் நிரப்பப்பட்ட ஆசிரியரே உவமமாவார். கற்பிக்கப்படும் பாடங்கள் பல்வகையாக உள்ளத்துக்குள் இருந்தாலும் அவற்றை நிரலாக ஒவ்வொன்றாக விளங்கும்படிச் சொல்லுவதே கற்பித்தல் பணி. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாகப், பின்னும் முன்னுமாகக் கற்பிப்பது மாணவனுக்குப் பயன் தராது. அத்தகைய கற்பித்தல் முறையைக் கொண்டவன் எந்நாளும் ஆசிரியர் என்னும் தகுதிக்கு உரியவன் ஆகமாட்டான் என்பது கருத்து. இங்கே கழற்சிக்காய் உவமமன்று. அது பெய்யப்பட்டிருந்த குடமும் அதன் தலைகீழ்வினையுமே உவமம் என்பது அறிக.
மடற்பனையும் ஆசிரியரும்
‘தாழையெல்லாம் மடற்கத்திச் சுழற்றவைத்து’ என்பார் பாவேந்தர். மடலை உடைய இரண்டு தாவரங்களுள் ஒன்று பனை. மற்றொன்று நெய்தல்நிலத் தாவரமான தாழம்பூ. தாழம்பூ மடலின் இருபுறமும் கூரான முட்கள் கத்திபோலக் காணப்படும். மடற்பனையின் புறத்தில் அதன் மட்டையெல்லாம் கத்திபோலக் காணப்படும். அவற்றை ஒதுக்கி மேலே ஏறிப் பழத்தைப் பறிக்க இயலாது. கடினம். பனம்பழம் சுவையானது ஆயினும் பெறவியலாத நிலையில் அது எப்போது விழுகிறதோ அப்போது காத்திருந்து பெற்றுச் சுவைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
“தானே தரக்கொளின் அல்லது தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பனை”
என்னும் நூற்பாவில் மடற்பனையின் இயல்பை விளக்கிக் காட்டுகிறார் பவணந்தியார். ‘எளிவந்த பிரான்’ என்பது இறைவனுக்கான புகழ்நாமங்களில் ஒன்று. ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பது திருவாசகம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதால் அடியவனைத் தேடி இறைவன் அருள்பாலிப்பதைப் போல் மாணவனுக்கு ஓடிவந்து அருள் பாலிப்பதே நல்லறம். மாறாக தன்னை அண்ட முடியாத இடத்தில் வைத்துக் கொண்டு தான் எப்போது கொடுக்க இயலுமோ அப்போதுதான் மாணவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் மனநிலை ஆசிரியன் தகுதிக்கு முரணானது.
பருத்திக் குடுக்கையும் ஆசிரியரும்
கல்வி கரையில என்றதால் அது கடல் என்பது பெறப்படும். யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைப்பதுபோல அளவற்ற கல்விச் செல்வத்தை ஆசிரியர் ஒருவர் தன்னுள் பொதிந்து வைக்கிறார். பொதிந்து வைக்கப்பட்ட அச்செல்வம் அவருக்கானது அன்று. பிறருக்கானது. அதனால்தான் கற்பித்தலை ‘ஈதல்’ என்றார் பவணந்தியார். அவரிடம் கற்பதை ‘உடையார் முன் இல்லார் இரப்பதுபோல் கற்க வேண்டும்’ என்றார் திருவள்ளுவர். இருப்பதைக் கொடுக்கின்ற இந்த நிகழ்வு தடையின்றி நிகழவேண்டுமாயின் உள்ளேயிருப்பதும் ஊறுவதும் தடையின்றி வெளிவரவேண்டும். ‘குடுக்கை’ என்றாலும் ‘குண்டிகை’ என்றாலும் ஒன்று. பருத்தியைக் குடுக்கையுள் வைத்துத் திணிப்பது ஒரு செயல். திணித்ததை வெளியில் எடுத்துத் தர எண்ணுகிறபோது ஒட்டுமொத்தமாகவோ சரளமாகவோ வெளியே வராது. கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துத்தான் தரவேண்டி வரும்.
“அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு
எளிது ஈவில்லது பருத்திக் குண்டிகை”
என்னும் நூற்பாவில் உள்ளே அரிதாகப் பெய்யப்படுகிறபொருளை எளிதாகத் தர இயலாத குண்டிகை விளக்கப்படுகிறது. இந்தக் குண்டிகையன்ன ஆசிரியர் தான் கற்ற பொருளைத் தன்னிடம் இரந்த மாணவனுக்கு எளிதில் தர இயலாதாம். கொடுப்பதற்கென்றே சேர்த்த கல்வியை வைத்துப் பூட்டிக் கொள்கிற அல்லாசிரியர் இயல்புக்குப் பருத்திக் குணடிகையை உவமமாகச் சொன்னது பொருத்தமானதுதானே!
தென்னையுள்ளமும் ஆசிரியரும்
‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்பது தமிழகத்துப் பழமொழி. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்க வேண்டும்’ என்னும் முரணும் தமிழ் நெறியே. ‘உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்பது மற்றொரு வரைவிலக்கணம். இவற்றையெல்லாம் தொகுத்துச் சிந்தித்தால் ‘கற்றல்’ என்பது பணிவின் வெளிப்பாடு என்பதும் இரத்தலுக்கு இணையானது என்பதும் ‘கற்பித்தல்’ ‘அறச்செயல்’ என்பதும் கல்வி ஒரு செல்வம் என்பதும் பெறப்படும். ஆசிரியர் இருக்கும் இடந்தேடி மாணவர் சென்று கற்ற காலம் ஒன்று. மாணவர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு ஆசிரியர் வந்திருந்து கற்பித்துவிட்டுச் செல்லும் காலம் ஒன்று. எந்தக் காலமாயினும் கற்றல் என்பது தொழுது பெறுவதே. ‘தொழுபவர்க்கே கல்வி’ என்றும் கருதமுடியும். ஆனால் தொழுபவனை விட்டுத் தொழாதவனுக்குக் கல்வி கொடுப்பதும் நிகழ்கிறது. இத்தகைய இயல்புடைய ஆசிரியருக்குச் சொல்லப்பட்டிருக்கும் உவமமே ‘முடத்தெங்கு’ என்பதாகும். பெரும்பாலும் தென்னைக்கும் பனைக்கும் உள்ள அடிப்படை நிற்கின்ற பாகையில்தான அமையும். பனை நேராக நிற்கும். தென்னை நேராக நிற்காது. இந்த வளைவு தான் வேர்பிடித்திருக்கும் இடத்தை மறந்து அடுத்தவர் இடத்தில் தேங்காய்களைப் போடும் அளவிற்கு இருக்கும். வளைந்த இந்தத் தென்னைக்குத்தான் முடத்தெங்கு என்று பெயர்.
“பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே”
பாவேந்தர் பாரதிதாசன் ‘தென்னையுள்ளம்’ என்று இதனை அழைப்பார். அவர் வேறொரு சிந்தனைக்கு அதனை உவமமாக்குவார். தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தும் ஆட்சியாளர்களுக்கு அந்த உவமத்தை அவர் சொல்வார். எனவே முடத்தெங்கினைப் போலப் பணிந்து, உதவியவனுக்குப் பலனளிக்காது, அப்பண்புகள் அறவே அற்ற சற்றும் தொடர்பற்ற ஒருவனுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியன் ‘முடத்தெங்கு’க்கு ஒப்பாவான் என்பது கருத்து.
நிறைவுரை
நல்லாசிரியருடைய பண்புகளைப் பற்றிக் கூறும்போது பண்புகளை முதலில் கூறி, உவமங்களைப் பின்னர் தொகுத்துக் கூறியது போலவே,
“மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியரா குதலே!”
என்ற நூற்பாவிலும் அல்லாசிரியர் பண்புகளை முன்னர்க்கூறி, உவமங்களால் ஏனைய பண்புகளையும் உடன் கூறியிருக்கிறார். உவமங்கள் நான்கும் இயல்பாக அமையக் கூடாதவை என்பதை உணரமுடியும். “மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும் “அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்” என்னும் இயல்புகள் ஆசிரியர் பணிக்கு நுழைவுத் தேர்வு எழுதவே தகுதியற்றவை. நான்கு உவமங்களையும் கற்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு இருக்கக் கூடாத முரண்களுக்காக்கியிருக்கிறார் பவணந்தியார். இதனை ‘முரண் கொள் சிந்தை’ என்னும் தொடர் உணர்த்தக் கூடும். நல்லாசிரியர், அல்லாசிரியர் போலவே நன்மாணாக்கர், அல்மாணாக்கர் பற்றிய உவமங்கள் தொடர்ந்து ஆராயப்படும்.
(தொடரும்…)