தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
நன்னூலில் உவமங்கள் – 3
முன்னுரை
நல்லாசிரியர, அல்லாசிரியர் முதலியோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை நேரடியாகக் கூறிக் கூடுதல் சிறப்பியல்புகளை உவம அளவையால் எடுத்துரைத்த பவணந்தியார் மாணாக்கரை அவ்வாறு தகுதி நோக்கிப் பிரித்தாரல்லர். காரணம் கற்பித்தலுக்குத் தகுதி தேவை. கேட்பதற்கு அது தேவையில்லை. எல்லாரும் ஆசிரியர் ஆகிவிட இயலாது. ஆயின் அனைவரும் மாணவர் ஆகலாம். கற்பித்தல் பணியின் அருமையை உணர்ந்து கல்வியை உள்வாங்கிச் செரிக்கும் அளவில் மாணவர்களின் இயல்பு நிலை வரையறுக்கப்படுகிறது. இயல்பால் மாணாக்கர் முதல், இடை, கடை என மூவகைப்படுவர். பொதுவாக மாணவர்தம் சிறப்பியல்புகளைத் தொகுத்துக் கூறி முதல், இடை, கடை மாணாக்கார்தம் இயல்புகளை உவம அளவையால் எடுத்துரைக்கிறார்.
கற்பித்தலும் கற்றலும்
‘கற்பித்தல்’ ஈதல் என்றால் ‘கற்றல்’ ‘கொள்வது’ அல்லவா? எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதனை,
“ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடனும் வாலிதின் நோக்கி
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
வரையான், வெகுளான், விரும்பி, முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப”
என்னும் நூற்பாவில் நிரல்படுத்தியிருக்கிறார். இந்த நிரலில் ‘நோக்கி, வாழ்த்தி, அமைத்து, மலர்ந்து, அறிந்து’ என்னும் வினையெச்சங்கள் எச்சங்களாக நில்லாமல் ஆசிரியரின் பண்புகளாக விளங்குகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இனி, எப்படிக் கொள்ளுதல் வேண்டும் என்பதையும் நன்னூல் தெளிவாக கூறுகிறது. ஆசிரியன் இருப்பிடம் தேடிக் காலத்தோடு செல்லவேண்டும். அவரை வழிபடலில் தயக்கம் கூடாது. (‘பிற்றைநிலை முனியாது’ என்றதும் அது.) சினங்கொள்ளுதல் கூடாது. ஆசிரியரது பண்போடு உறவாடுதல் வேண்டும். அன்னாருடைய குறிப்பறிதல் வேண்டும். ‘இரு’ என்றால் இருக்கவும் ‘சொல்’ என்றால் சொல்லவுமான ஆணைக்குக் கட்டுப்படும் அடக்கம் இருத்தல் வேண்டும். ‘கோடையில் நீர் தேடும் தாகமுற்றவனின் மனநிலையைப் பெறுதல் வேண்டும். செவி வாயாக வேண்டும். அக்கேள்விச் செல்வத்தைக் கொள்ளும் இடமாக மனமும் இருத்தல் வேண்டும். ‘மனநிறைவாகக் கொடுத்திருக்கிறோம்’ என நிறைவடைந்த ஆசிரியன் அனுமதித்த பிறகே இல்லம் திரும்புதல் வேண்டும். இந்தக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் பவணந்தியார் பாடம் கேட்கும் புறச்சூழலில் மாணவனின் நிலையைச்,
“சித்திரப்பாவையின் அத்தகவு அடங்கி”
என்னும் உவமத்தால் விளக்குகிறார் பவணந்தியார். சித்திரம் போல் இருத்தல் வேண்டும் என்னும் சிந்தனை அகநானூற்றில் வரும் சித்திரத்தலைவியை நினைவுபடுத்துவதாக அமைகிறது. தலைவன் பிரிவால் தான் பட இருக்கும் துன்பத்தைக் கருதாது, தலைவன் செல்லும் வழியருமை எண்ணி மருகும் தலைவி சித்திரம் போல் நின்றாள் என்பதை,
“முன்னம் காட்டி, முகத்தில் உரையா
ஓவச்செய்தியின் ஒன்று நினைத்து ஒற்றி”
என்னும் வரிகள் உணர்த்தும். பாடம் கேட்கும் மாணவர்கள் சித்திரத்தைப் போல அமைதிகாக்க வேண்டும் என்பது கருத்து. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத் தன்மைக்குச் சித்திரநிலை உவமமாவது தமிழ் மரபு. ‘மெய்திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திரு துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் வண்ணனை செய்வார். இந்த உவமத்திலிருந்து பாடம் கேட்கும் நிலையில் மாணவனுக்கு இருக்க வேண்டிய ஒரே பண்பு அமைதி என்பது பெறப்படும்.
அன்னப் பறவையும் அசைபோடும் பசுவும்
தலை, இடை, கடை என மாணாக்கர்களைப் பிரித்த பவணந்தியார் தலை மாணாக்கருக்கு அன்னப்பறவையையும் பசுவையும் உவமமாக்கியிருக்கிறார். மானுடத்தின் வாழ்நாள் மிகக்குறைவானதாகையால் அக்குறிப்பிட்ட காலத்திற்குள் கற்க வேண்டியனவற்றையே கற்றல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாலடியார்,
“கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து”
என உவமத்தால் விளக்கும். கருத்தளவிலும் மாணவர் இயல்பாகவும் பவணந்தியார் இதனை வலியுறுத்துகிறார். அடுத்து சூழ்நிலைக்கேற்ப இரையெடுக்கும் பசு, பிறகு அமைதியாகப் படுத்து உண்டவற்றை மீண்டும் வாய்க்குக் கொணர்ந்து அசைபோடும். பயனுள்ளவற்றைப் பிரித்துக் கற்கும் மாணவன் அவற்றின் முழுப்பயன் அடைய மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து சிந்திக்க வேண்டும். தற்காலத்திலும் பயனுள்ளவற்றைக் கற்கவேண்டும் என்பதும் கற்றவற்றைப் பற்றிய சிந்தனை தொடர வேண்டும் என்பதும் ஒரு கல்விக் கொள்கையாக இருந்துவருகிறது என்பதை அறிதல் வேண்டும். பயனுள்ளவற்றைப் பகுத்தறியும் அன்னத்தையும் உண்ட இரையை நன்கு செரித்துக் கொள்வதற்காக அசைபோடும் ஆவையும் தலைமாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.
நிலமும் கிளியும்
‘நிலத்திற்குரிமையாளன் நாளும் தன்னுடைய நிலத்திற்குச் சென்று அதனை நலம் விசாரிக்காவிடின், அந்நிலம் இல்லாளைப்போல ஊடிவிடும்” என்பது திருக்குறள் கருத்து. ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திச் சோம்பலில்லாம ஏர்நடத்தி, கம்மா கரைய ஒசத்திக்கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி, சம்பாப் பயிரைப் பறிச்சி நட்டு, தகுந்த முறையில் தண்ணீர் விட்டு” வளர்த்தால்தான் நிலம் பயன் தரும் என்பதை விளக்கிக் காட்டுவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவ்விரு கருத்துக்களால் நிலத்தைப் பாதுகாத்து முறைப்படிப் பயிர் செய்துவரும் உழவனுக்கே அதன் பலன் கிட்டும் என்பது பெறப்படும். ஆசிரியனையும் அவனுடைய காரியமாகிய நூலையும் நாளும் ஓதி ஓதி சிந்தித்து உழைத்து மெய்ப்பொருள் காணும் இயல்புடைய மாணவனுக்கே கற்றலின் பயன் முழுமையாகக் கிட்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பர். கிளிக்குத் தானாகப் பேச வராது. ஆசிரியன் செய்கின்ற முயற்சியின் அடிப்படையில் தன்னறிவைப் பெருக்காது அவர் சொல்வதை மட்டுமே உள்வாங்கிக் கொள்பவன் கிளியையொப்பான். இவ்வாறு உழைத்தாலன்றிப் பயன்பெற இயலாத நிலத்தையும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையையும் இடை மாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.
கடைமாணாக்கரும் நான்கு உவமங்களும்
தலைமாணாக்கர்க்கும் இடைமாணாக்கர்க்கும் இரண்டிரண்டு உவமங்களைக் காட்டிய பவணந்தியார் கடை மாணாக்கார்க்கு நான்கு உவமப்பண்புகளை ஏற்றியுரைக்கிறார். ‘இல்லிக்குடம்’ என்பதற்குப் பலரும் ‘ஓட்டைக்குடம்’ என்று பொருள் சொல்வர். ‘ஒழுகும் விரைவு’ கருத்தானால் அவ்வுரை நேரியதே. ‘பசுமட்கலம்’ என்றும் கருதமுடியும். அது தன்னுள் வாங்குகிற நீரை வைத்துக் கொள்ள இயலாது புறத்தே கசியவிடும். மாணாக்கருள் சிலர் ஆசிரியர் கூறும் கருத்துக்களை உள்வாங்கிப் பொதிந்து வைக்க இயலாமல் புறத்தே விட்டுவிடுவர். தொடர்ந்து, மேய்கின்ற ஆட்டினை உவமமாக்குகிறார். ஆடு தன் வயிறு நிரம்பும் அளவிற்கு மேயாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயுமேயன்றி எதனையும் உருப்படியாக மேய்ந்து பசியாற்றிக் கொள்ளத் தெரியாது. மேலெழுந்தவாரியாகக் சிலவற்றைக் கற்கும் இடை மாணாக்கர் இத்தகையவர். கல்வி குழப்பத்திலிருந்து தெளிவு நோக்கியது. தெளிவிலிருந்து குழப்பத்தை நோக்கியது அன்று, எருமை தெளிவான நீரைக் கலங்கலாக்கும். மாணவர்களிலும் சிலர் அவ்வாறு இருப்பர். இறுதியாக மெய்ப்பொருள் கொண்டு பொய்ப்பொருள் தள்ளிவிடுவதே அறிவின் நோக்கம். மாறாக அல்லனவற்றைக் கொண்டு நல்லனவற்றைத் தள்ளிவிடும் மாணாக்கரும் உளர். அவர்க்கு உவமமாகச் சொல்லப்பட்டதுதான் நெய்யரி (பன்னாடை போன்றது).
“அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடைகடை மாணாக்கர்”
என்னும் நூற்பாவில் தலை, இடை, கடை மாணாக்கர்க்கான பண்புகளை உவமங்கள் வாயிலாகவும் விளக்கிக் காட்டியிருக்கிறார் பவணந்தியடிகள்.
நிறைவுரை
நல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதல் பண்புகள் உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. அல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதலாக உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அவ்வாறு பாகுபடுத்தாத பவணந்தியார் அவர்களின் தரத்தை மட்டுமே வேறுபடுத்திக் காட்டுகிறார். தற்காலத்தில் மதிப்பெண்களால் அல்லது குறியீடுகளால் வரையறுக்கப்படும் நிலைக்கு இது ஒப்பாகலாம். சுருக்கமாகச் சொன்னால் கற்பிக்கின்றவருக்குத் தகுதி நிர்ணயம் செய்வதற்கும் கற்பாருக்குத் தர நிர்ணயம் செய்வதற்கும் பவணந்தியாருக்கு உவமங்கள் கைகொடுத்திருக்கின்றன எனலாம்.
(தொடரும்…)