பழகத் தெரிய வேணும் – 67

நிர்மலா ராகவன்

சிறுபிள்ளைத்தனம் எதுவரை?

சிறு குழந்தைகளின் கண்களைப் பாருங்கள்.  கள்ளம் கபடமே காணப்படாது.

கதை

என் சக ஆசிரியை மேரி, “நேற்று என் மகள் தன் விளையாட்டுக் காரை என் தலையில் எறிந்துவிட்டாள். தலைவலி பிளக்கிறது!” என்று முனகினாள்.

உடனே, “அவளை அடித்தாயா?” என்றொரு கண்டிப்பான குரல் ஒலித்தது.

“அவளுக்கு ஒரு வயதுதான்!” என்றாள் மேரி. `இந்த வயதில் அடித்துத் திருத்துவதா!’ என்பதுபோல் ஆயாசத்துடன் ஒலித்தது அவள் குரல்.

“அதனால் என்ன!” என்றாள் மிஸஸ் லோ (Loh), பிடிவாதமாக. தவறு செய்தது எந்த வயதினராக இருந்தாலும், உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அவள் போன்றவர்களுடைய நம்பிக்கை.

ஒருவருக்குத் தான் செய்யும் காரியத்தின் விளைவு நன்மையா, தீமையா என்று புரியாத நிலையை அப்பாவித்தனம் (innocence) என்கிறோம். இது குழந்தைகளின் இயற்கையான தன்மை.

இரண்டு வயதான குழந்தை கைதவறி தான் குடிக்க வைத்திருந்த பாலைக் கொட்டிவிட்டு அழும்.

`போனால் போகட்டும்,’ என்று சமாதானப்படுத்தினால், அடுத்த முறை வேண்டுமென்றே தம்ளரைக் கவிழ்த்துவிட்டு, `போனால் போகட்டும்,’ என்று நமக்கே புத்தி சொல்லும்!

“இன்னொரு தடவை இப்படிச் செய்தால் அடி!’ என்று மிரட்டுவோம்.

தாய் சொல்வதை உடனே கேட்டுவிட்டால், எப்படி!

செய்த தவற்றையே மீண்டும் செய்யும்.

அப்போது தண்டிக்க வேண்டியதுதான். முதுகில் ஒரு தட்டு.

இன்னொரு முறை அதே தவறு நிகழாது.

இவ்வாறு, `கூடாது’ என்று தாய் கூறும் ஒவ்வொன்றையும் செய்துபார்த்துத்தான் தன் எல்லை எதுவரை என்று புரிந்துகொள்கிறார்கள் குழந்தைகள்.

அனுபவமின்மை

வளர்ந்தபின்னரும் சிலர் குழந்தைத்தனமாக இருப்பார்கள். யார் எது சொன்னாலும் நம்பி, ஏமாந்துவிடுவார்கள். போதிய அனுபவம் இல்லாததால் வரும் விளைவு இது. சிலவற்றைப் பற்றி படித்திருந்தாலும், நடைமுறைக்கு உதவாது.

கதை

எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, என்னைவிட சற்றே மூத்தவளான ஒன்றுவிட்ட அக்காள் வேற்றூரிலிருந்து வந்திருந்தாள். அவள் இருந்த இடத்தில் கடல் கிடையாது.

மெரீனா கடற்கரைப் பார்த்து, “எவ்வளவு தண்ணீர்!” என்று அவள் பிரமிக்க, “தித்திப்பா, ஜோரா இருக்கும். குடிச்சுப் பாரேன்!” என்று ஊக்கினேன்.

உடன் இருந்தவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள்.

அவள் நம்புவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தன் இரண்டு கைகளாலும் அள்ளிக் குடித்தவள், `தூ, தூ!’ என்று துப்பியது எங்கள் இருவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி.

என்றென்றும் அப்பாவித்தனமா?

குழந்தைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்காது. கடந்த காலத்தை அவர்கள் அதிகம் நினைத்துப் பார்ப்பதும் கிடையாது.

`எதிர்காலத்தில் என்ன நடக்குமோ!’ என்ற கவலைக்குள்ளாகும்போதுதான் ஒருவர் தன் அப்பாவித்தனத்தை இழந்துவிடுகிறார்.

குழந்தைகளை அந்தந்த வயதுக்கேற்ப நடத்தாமல், `இன்னும் குழந்தையாவே இருக்கா!’ என்று பருவ வயதிலும் ஒரு பெண்ணைக் கொஞ்சி வளர்ப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.

ஆனால், வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சியோ, அனுபவமோ அவர்களிடம் இருக்காது. பிறருக்கு இது சாதகமாக முடிந்துவிடும்.

கதை

பத்து குழந்தைகளில் கடைசியான மாலதி, குடும்பத்தில் அனைவருக்கும் செல்லமாக வளர்ந்தாள்.

`நான் எப்பவுமே குழந்தைதான்!’ என்று மகிழ்ச்சியும் பெருமையும் பொங்க கூறிக்கொள்வாள். அளவுக்கு அதிகமான அன்பைக் குடும்பத்தினர் பொழிந்ததால், உலகில் எல்லாருமே அப்படித்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வளர்ந்தாள்.

தாய்மாமன், `குழந்தை!’ என்று அருமையாக அவளைக் குறிப்பிட்டு, முறை தவறி நடத்தியபோது, அதையும் `கொஞ்சல்’ என்றே எடுத்துக்கொண்டாள்.

சற்று பெரியவளானதும், தான் இழந்தது என்னவென்று புரிய, மாலதிக்குத் தன்மேலேயே ஆத்திரம் ஏற்பட்டது. ஒரே இடத்தில் படுத்து, சுவற்றையே வெறிச்சிடுவாள். பிறகு, தன் மன நிலையை மாற்றிக்கொள்ள முயற்சிப்பவளாக, நிறைய வீட்டுவேலை செய்வாள்.

`பைத்தியம்’ என்று முடிவுகட்டினார்கள். எங்கே தவறு நிகழ்ந்தது என்று யாருக்கும் புரியவில்லை.

வாழ்வில் தீயவை, துன்பம் ஆகியவற்றைச் சந்திக்கும்போது, அப்பாவித்தனம் பறிபோய்விடும். அது சிலருக்கு மன அழுத்தத்தில் கொண்டுவிடும்.

`பைத்தியம் தெளிய ஒரே வழி கல்யாணம்தான்!’ என்று யாரோ சொல்ல, கல்யாணம் செய்துவைத்தார்கள்.

சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தவளிடம் அவ்வப்போது. குற்ற உணர்ச்சி தலைதூக்கும். கலக்கத்தை அடியோடு ஒழிக்க முடியாவிட்டாலும், சிறு விஷயங்களுக்காகக் குழம்பாது, மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால், ஓரளவு நிம்மதி கிடைக்கிறது என்று புரிந்துகொண்டாள்.

தான் பெற்ற குழந்தைகளாலும் சற்றுத் தெளிவு ஏற்பட்டது.

`தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலும், தன்னை அப்படி வளர்த்துவிட்ட குடும்பத்தினர்மீதும் கொண்ட ஆத்திரம் சிறிது சிறிதாகக் குறைந்தது.

அருமை மகள் என்றும் சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குழந்தையாகவே அவளை நடத்தியது வினையாக முடிந்தது என்று புரிந்துகொண்டாள்.

“பெரியவர்கள் கதை. நீ இதையெல்லாம் படிக்கக்கூடாது,” என்று தாய் தடுத்திருந்தது ஏனென்று மாலதிக்குச் சிறுவயதில் புரியவில்லை.

சிறுவர்களுக்கான கதைகளில் அவர்களை மிரளவைக்கும்படியான, அல்லது வயதுக்கு மீறிய காட்சிகள் இருக்காது. அப்படி இருந்தால், காரணமில்லாமல் மகிழ்ந்து சிரிக்கும் அப்பாவித்தனமான குணத்தை இழந்துவிடுவார்கள்.

(தற்காலத்தில், தொலைகாட்சி, இணையம் இரண்டுமே குழந்தைகள் குழந்தைகளாகவே வளர முடியாது செய்கின்றன).

பிறர் வீட்டிலோ, தொழிற்சாலைகளிலோ வேலைபார்க்க நேரிடும் சிறுவர்கள் இளம் வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். பலருடன் பழக வேண்டிய நிலை.

`யாரையும் நம்ப முடியாது. எல்லாருமே சுயநலவாதிகள்தாம்!’ என்று தோன்றிப்போகிறது அவர்களுக்கு. அதனால் மகிழ்ச்சி குன்றிவிடும். கற்பனைத்திறனோ – கேட்கவே வேண்டாம்!

பள்ளிக்கூடத்திலும் சிலருக்கு இந்த நிலைதான். குடும்பத்தினர் ஆதரவாக இருந்தால், நொந்துபோய்விட மாட்டார்கள்.

அப்பாவித்தனத்தைப் பறிகொடுத்தவரின் கதை

திருமணமானதும், தன்னைவிட அழகில் சிறந்தவளான மனைவியைப் பெற்றுவிட்டோமே என்று அகமகிழ்ந்தான் அப்பாவியான வேலப்பன்.

மனைவி ஒரு முறை அவனுக்குத் துரோகம் இழைத்தபோது உண்டான அதிர்ச்சியில், அவளை எப்படிப் பழி வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான். (விவாகரத்து அவமானகரமானது என்று எண்ணிய காலம் அது. அத்துடன், தன்னிடம் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே!).

மனைவியைப்போல் இல்லாது, ஆண்-பெண் உறவைப் பற்றி அறிந்திராத பதின்ம வயதுப் பெண்களின் சகவாசத்தை நாடினான்.

`எப்படி, குழந்தையாகவே இருக்கிறாய்!’ என்று அவன் அடிக்கடி பாராட்டியது அவர்களுக்குப் புரியவில்லை. பெருமைதான் ஏற்பட்டது.

அவனுடைய சாகசப் பேச்சில் மயங்கி, அப்பாவிப் பெண்கள் பலர் அவன் விரித்த வலையில் வீழ்ந்தார்கள்.

இழந்த பலத்தைப் பெற்றுவிட்டதுபோல் பெருமிதம் உண்டாக, வேலப்பனுடைய காம லீலை வியாதியாகவே தொடர்ந்தது.

வயது முதிர்ந்த காலத்தில், யாருமே அவனைச் சந்திக்க விரும்பவில்லை. உறவினர் வீட்டுக்குப் போனாலும், எவரும் முகம்கொடுத்துப் பேசவில்லை.

வருத்தம் ஏற்பட்டாலும், அவனுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை.

குற்ற உணர்ச்சி

யோசியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி குற்ற உணர்ச்சியோடு போராடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

கதை

எனக்குத் தெரிந்த ஒருவர், “என்னை வைத்து ஒரு கதை எழுதுங்களேன்!” என்று கேட்க, “சரி. உங்கள் மனைவியிடம் நீங்கள் சொல்ல முடியாத ஒன்றைப் பற்றிக் கூறுங்கள்,” என்றேன்.

கோபத்துடன், “அதையெல்லாம் உங்களிடம் சொல்வேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று இரைந்தார்.

“உங்களைப் பற்றி எழுதச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு அதிகம் தெரியாதே! அதுதான்,” என்றேன், சமாதானமாக.

மிகவும் தயங்கியபடி, தான் மனைவிக்குச் துரோகம் செய்துவிட்டதாகக் கூறினார் – ஒரே வரியில்.

நான் முகம் மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

தவறிழைத்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் தன்னையே வருத்திக்கொள்கிறவர்கள் நம்பகமான ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொண்டால் அப்போது கிடைக்கும் புரிந்துணர்வு இழந்த நிம்மதியை மீட்டுக் கொடுக்கும்.

உலகில் எல்லாருமே தீயவர்கள் இல்லை, சிலரை நம்பலாம் என்ற உண்மை புரியும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.