தொகை இலக்கியங்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம்

ச. கண்மணி கணேசன் (ஓய்வு),
முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

0.0   முன்னுரை

0.1   செவ்விலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டனவாகிய தொகை நூல்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம் பற்றிக் காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

0.2   வானியல் குறிப்புகளைப் பாடும் சூழல், கையாளும் முறை; அவற்றால் பெறும் பயன் ஆகியவற்றைத் தொகுத்து வகுத்து விளக்கும் போக்கில் இக்கட்டுரை அமைகிறது.

1.0   இடம்பெறும்  சூழல்

1.1   மழை பொழிவதற்கு வெள்ளிக்கோளின் நிலைமை காரணம் என்று பண்டைத் தமிழர் எண்ணினர் ஆதலால்; மழை பற்றிப் பேசத் தொடங்கும் போதே வானியல் குறிப்புகளைச் சேர்த்துப் பேசும் போக்கு காணப்படுகிறது.

“வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப” (பதி.24)

எனும் பாடலடிகள் வெள்ளிக்கோள் வடதிசையில் சிறிதே சாய்ந்து; பயன் பொருந்திய ஏனை மீன்களுடன் தனக்குரிய நாளிலே நின்றதால் மழை பொழிந்தது என்கிறது. பிற பல பாடல்களிலும் இதே கருத்து இடம் பெற்றுள்ளது (பதி.13, 69).

வெள்ளிக்கோள் வடதிசையில் சாய்ந்து இராமல் தெற்கே சாய்ந்து காணப்பட்டால் மழை பொய்க்கும் என்ற கொள்கை நிலவியது (புறம்.35, 384, 385; மதுரைக்காஞ்சி- 108; பட்டி.1- 6). சனிக்கோள் சிம்மராசியிலிருந்து புகையினும்; தூமம் என்ற வால்நட்சத்திரம் தோன்றினும் மழை பொழியாது (புறம்.117).

1.2   கற்பொழுக்கம் பற்றிப் பேசத் தொடங்கினால் வடமீன் என்னும் சாலியைக் குறிப்பிடுகின்றனர். பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது கற்பு என்றும்; அருந்ததி கற்பிற் சிறந்தவள் என்றும் அழுத்தமான கொள்கை நிலவியமை;

“வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினள்”

(கலி.2) என்ற மேற்கோளால் புலனாகிறது. பெண்ணோடு அருந்ததியின் அம்சமாகிய விண்மீனைத் தொடர்புபடுத்திப் பேசும் போக்கு பல பாடல்களில் உள்ளது (புறம்.122; பரி.5; பெரும்பாணாற்றுப்படை-302; ஐங்குறுநூறு 442).

1.3   கார்த்திகைப் பெண்கள் முருகனைப் பெற்றவர் என்ற கொள்கை காரணமாக முருகனையும் அவனுக்குரிய விழாவையும்  பற்றிப் பேசும்  போதெல்லாம்;

“குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்” (அகம்.141)

என கார்த்திகை குறித்துப்பேசும் போக்குளது (நற்.202; பரி.9).

1.4   வானியல் நிகழ்வுகளும் நடப்பு அரசியலும் தொடர்பு

உடையவை என்ற கொள்கை  நிலவியது. இதனால் அரசியல் நிகழ்வு பற்றிப் பேசும் போது வானியல் செய்தி இடம் பெறுகிறது. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்  இரும்பொறை இறந்தபோது; கூடலூர் கிழார் பாடிய பாடல் அரசுக்கு ஆபத்து நேரப்போகிறது எனத் தான் முன்னரே ஐயுற்று இருந்தமையைக் கூறுகிறது. ஐயத்தின் காரணம்;

“ஆடியல் அழற்குட்டத்து
ஆரிருள் அரையிரவில்
முடப்பனையத்து வேர் முதலாக
கடைக்குளத்துக் கயம் காயப்
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாள்மீன் நிலை திரிய
நிலை நாள்மீன் அதனெதிர் ஏர்தரத்
தொன் நாள்மீன் துறை படியப்
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்
கனையெரி பரப்பிக் காலெதிர்பு பொங்கி”

(புறம்.229). என விரித்துப் பேசப்படுகிறது. ‘பங்குனி மாதத்து முதல் பாதியுள்; மேஷராசியிலிருந்த கார்த்திகையின் முதல் பாதத்தில் நள்ளிரவில் திருவாதிரை முதல் கேட்டை வரை பதின்மூன்று நாள்மீன்கள் வானில் தெரிந்தன. உச்சத்தில்  இருந்த தலைநாள்மீனாகிய உத்தரம் சாய்ந்தது. அதற்குப்பின் எட்டாவதாக இருந்த மிருகசீரிடம் மேற்கே அஸ்தமித்த போது வடகிழக்கில் ஒரு கொள்ளி வீழ்ந்தது. ஏழாம்  நாள் சேரன் இயற்கை எய்தினான்’ என்பதால் மன்னன் மறைவு வானியலோடு தொடர்புறுவது வெளிப்படை (பெனிட்டா- வானியல் குறித்த தெளிவான பார்வை- ப.42-43 a reservoir of Indian theses @ INFLIBNET).

1.5   திருமண நிகழ்ச்சிக்குரிய நல்லநேரம் பற்றிய கொள்கை ஈராயிரம் ஆண்டுப்பழமை வாய்ந்தது.

“அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுள் பேணி” (அகம்.- 136)

முழவு முழங்க; முரசு ஒலிக்க ஏற்பாடு செய்தனர். திங்கள் ரோகிணியுடன் கூடிய நாள் திருமணத்திற்கு உகந்ததென்ற கொள்கை நிலவியது. கணவன் மனைவி கூடி நடத்தும் இன்பவாழ்விற்கு உரிய வானியல் நிலவரமாக அது கருதப்பட்டதால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது (நெடு.- அடி.- 161- 163& பட்டி.- அடி- 35)

2.0   எடுத்தாளும் முறை

2.1 “வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப” (புறம்.- 385) என்பது போல் விண்மீனின் பெயர்க் குறிப்பு மட்டும் இடம்பெறுவது உண்டு.

2.2   முழுமையான ராசிச் சக்கரத்தை விளக்குவதும் உண்டு. சைய மலையில் மழை பொழிந்த கோள்நிலை பற்றிய விளக்கத்தைக் கூறுகிறது பரி.11. அதற்கேற்ற வானியல் நிலை என்ன என்று விவரிக்கும் போது முழு ராசிச்சக்கரம் விளக்கமுறுகிறது. அத்தோடு வானியலின் அடிப்படைக் கொள்கைகளும் இடம்பெறுகின்றன.

ராசிமண்டிலத்தில் மூன்று வீதிகள்; அவற்றுள் பன்னிரண்டு வீடுகள்; அவை நான்கு நான்காகப் பிரிந்து ஒன்பதொன்பது நாள்மீன்களைத் தம்முள் கொண்டவை; ஆக மொத்தம் இருபத்தேழு நாள்மீன்கள் என்ற விளக்கம்;

“…கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று
இருக்கையுள்” (மேற்.)

என்ற அடியில் ரத்தினச் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பாடலில் இடம்பெறும் ராசிகளைச் சேர்ந்த கோள்கள் பற்றிய விபரம்:

வெள்ளி                     இடபத்தில்
செவ்வாய்                மேஷத்தில்
புதன்                          மிதுனத்தில்
சூரியன்                     சிம்மத்தில்
குரு                              மீனத்தில்

திங்களும், சனியும், ராகுவும்    மகரத்தில்

கேது                          கடகத்தில்

சூரியன் சிம்மத்தில் செல்வதை நேரடியாகக் கூறவில்லை. விடியலில் கார்த்திகை உச்சம் பெற்று இருந்தது என்பதால் அக்கருத்தைப் பெற்றோம். அதுபோல் ஆவணி மாதத்து மதி நிறைநாள் என்றதால் அவிட்டம் என்பது பெற்றோம். திங்கள் ராகுவுடன் மகத்தில் செல்வதால் அதற்கு ஏழாம்  இடமான கடகத்தில் கேது செல்கிறதென்பதும் கூறாமலே தெரிகிறது. ஆக ஆவணிமாதத்து அவிட்டநாளில் திங்களை ராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம்; பெருமழை பொழிந்து வையை வெள்ளம் பெருக்கெடுத்தது (பெனிட்டா- மேற்.ப.26).        .

3.0   பெறும் பயன்

     வானியல் உவமைகள் கவிச்சுவை கூட்டுகின்றன.

3.1 பெரும்பாணாற்றுப்படை சித்தரிக்கும் ஊரெல்லையில் ஒரு காட்சி; மகளிர் நீர்த்துறையில் விட்டுப்போன பொலங்  குழையைச் சிச்சிலிப் பறவை இரை என்று எடுத்து வேள்வித்  தூணில் தங்கியது. அக்குழை  வானத்தில் வைகறையில் தோன்றும் வெள்ளிமீன் போல ஒளி வீசியது.

“புனலாடு மகளிர் இட்ட பொலங்குழை…
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்” (அ.312-318)
வைகுறு மீன் என்பது வெள்ளியைக் குறிக்கும். இதே போல்
தோற்ற அடிப்படையிலமைந்த பல உள (நற். 128, கலி.15, 104)

3.2 வையை ஆறு வற்றினாலும் எட்டாம் நாள் நிலவின் அளவு சுருங்குமே அன்றி; அமாவாசை நிலவு முற்றிலும் தோன்றாதது போல முழுதும் வற்றுவது இல்லை.

“எண்மதி நிறை உவா இருண்மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே” (பரி.11 அ.37-38)

என்பது வினை அடிப்படையில் தோன்றிய உவமை ஆகும்.

3.3 வானத்தில் கார்த்திகை மீன் தோன்றுவது போல வெண்மையாக மலர்ந்த முசுட்டை பற்றி அமையும் வண்ணப்புல உருக்காட்சியை;

“அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” (மலை. அ.100-101) என்ற பாடலடிகளில் காண்க.

3.4 தலைவி ஒருத்தி தன் பின்னலில் ஈரிதழ் கொண்ட அரளிப்பூவைச் சூடியிருக்கிறாள்; கரும்பாம்போடு முரண்பட்டுத் தோன்றும் மணியை ஒத்த அப்பூக்கள் கார்த்திகை மீனின் அழகை ஒத்துக் காணப்பட்டன.

“அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகைப்ப” (கலி.64)

என்னும் உவமையில் இடம்பெறுவது வண்ண முரணழகு. இதுபோல் உருஅடிப்படையில்  அமைந்த உவமைகள் இன்னும் உள (நற்.231).

3.5 “நாள்மீன் வாய்சூழ்ந்த மதிபோல்” (கலி.104)

ஆயம் தலைவியைச் சூழ்ந்து இருந்தது என்பது பயன் அடிப்படையாக அமையும் உவமையாகும்.

3.6 மன்னனின் அரண்மனையில் புதுமையாகச் செய்த  நிலையும் கைப்பிடியுடன் கூடிய கதவும் ‘உத்தரக் கற்கவி’ என்றழைக்கப்பட்டது. அதைப் புனைந்துரைக்கும் நக்கீரர்;

“நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து”

(நெடு.82) என்கிறார். உத்தரம் எனும் நாள்மீனின் பெயரைச் சொல்லாமல் சொல்லும் திறன் கவிதைக்கு அழகூட்டுகிறது.

முடிவுரை

வானியல் பற்றிய புனைந்துரைகளும் உவமைகளும் தொகைநூற் பாடல்களின் இனிமையைக்  கூட்டுகின்றன. பாடல்களில் விண்மீனின் பெயர்க்குறிப்பு மட்டும் இடம்பெறுவதும் உண்டு; முழுமையான ராசிச்சக்கரத்தை  விளக்குவதும் உண்டு. மழை பொழிய வெள்ளிக்கோளின் நிலைமை காரணம் என்று பண்டைத் தமிழர் எண்ணினர் ஆதலால்; மழை பற்றிப் பேசும் போதெல்லாம் வானியல் குறிப்புகளைச் சேர்த்துப் பேசியுள்ளனர். பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது கற்பு என்றும்; அருந்ததி கற்பிற் சிறந்தவள் என்றும் அழுத்தமான கொள்கை நிலவியதால் பெண்ணைப் பற்றிப் பேசத் தொடங்கும் போதெல்லாம்; அருந்ததியின் அம்சமாகிய வடமீனைத் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். முருகனையும் அவனுக்குரிய விழாவையும் பேசும்போதெல்லாம்; கார்த்திகை மீனைக் குறித்துப்பேசும் போக்குளது. வானியலும் அரசியலும் தொடர்புடையவை என்ற கொள்கை நிலவியதால்; அரசியல் நிகழ்வு பற்றிப் பேசும்போதும் வானியல்செய்தி இடம்பெறுகிறது. மண வினைக்குரிய நல்லநேரம் பற்றிய கொள்கை ஈராயிரம் ஆண்டுப் பழமையானது. திங்கள் ரோகிணியுடன் கூடிய நாள் திருமணத்திற்கு உகந்ததென்ற கொள்கை நிலவியது.

துணைநூற்பட்டியல்

  1. சங்க இலக்கியம்- 1&2ம் பகுதி- S.வையாபுரிப் பிள்ளை(ப.ஆ.)- 2ம் பதிப்பு- 1974
  2. பெனிட்டா- Ph.D.- Final.pdf a reservoir of Indian theses @ INFLIBNET

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

அகம். – அகநானூறு;            கலி. – கலித்தொகை
நற். – நற்றிணை;                   நெடு. – நெடுநல்வாடை
பட்டி.- பட்டினப்பாலை;     பதி. – பதிற்றுப்பத்து
பரி. – பரிபாடல்;                     மலை. – மலைபடுகடாம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *