இனிய பாலா

பாஸ்கர்
இப்போது தான் பாலாவைப் பார்த்துவிட்டு வந்தது போல இருக்கிறது. அன்பால் அவர் நட்பின் கைகளைப் பற்றும் விதம் தனி வகை. இணைப்புப் பாலம் போல விரல்கள் ரீதியாக அவர் கைகளைப் பற்றுவார். அது நெகிழ்ச்சியின் உச்சம். பற்றும் கைகளுக்குத் தான் தெரியும்.
காவேரி மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது மெலிதான குரலில் பாஸ்கரா என்றார். ஆமாம் சார் எனச் சொல்லி அவர் கைகளைப் பிடித்து கொண்டேன். நிறைய எழுதியாச்சு. ஆனாலும் இன்னும் பாக்கி உண்டு என்றார். போதுமே என்றேன். அவர் கேட்கவில்லை. எழுதாமல் இருப்பதும் ஒரு கட்டத்தில் சந்தோஷம் தானே எனச் சொல்ல நினைத்தேன். அதற்குள் மருந்து கொடுக்கச் சிப்பந்தி வர, பேச்சு தடைப்பட்டது. அவரைப் போல யாரும் ஆழ்ந்து பார்க்க முடியாது. நின்றபடி வணங்கினேன், கிட்டத்தட்ட அவரை என் கண்ணுக்குள் போட்டபடி.
இதோ இன்றோடு அவர் அமரராகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? அவர் குரல், அந்த தீர்க்கமான கண்கள் எங்கே? நிலையாமை ஓர் ஆனந்த வலி. அதை விடவும் முடியாது. பிடிக்கவும் முடியாது. உண்டு, கண்டு, பிணைந்து, புனைந்து எல்லாக் குரூரமும் தாண்டி ஒட்டிக்கொண்டுள்ள மிச்ச அன்பை இப்படிக் கொட்டும்போதே வாழ்வின் பிரமிப்பு தட்டுகிறதே, பொய்மையைத் தொலைத்து உள்மன நிஜ தரிசனம் செய்தால் எவ்வளவு பெரிய பேரின்பம்? அந்த இன்பத்தைத் தான் பாலா தொடச் சொன்னார் .
திடீர் எனக் கைபேசி அழைப்பு வரும் போது அவர் கேட்கும் முதல் கேள்வி, என்ன ஒய் தூங்குறீரா? என்பது தான் இல்லை எனச் சொன்னாலும் உண்மையில் நான் விழித்துகொள்ளவில்லை என்றுதான் பொருள். உம்மை மறக்க முடியுமா ஸ்வாமி?
ஏதோ பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் கேட்டார். ஒய், எத்தனை வருஷமாய் என்னைத் தெரியும்? – கிட்டத்தட்ட எனக்கு உங்களுடன் சுமார் முப்பத்து அஞ்சு வருடத் தொடர்பு என்றேன். அப்போது கௌரிக்கு சுமார் மூன்று வயது இருக்கும். கெளரியிடம் திரும்பி உங்கள் பழைய வீட்டு போன் நம்பர் தெரியுமா எனக் கேட்டேன். பட்டெனச் சொன்னாள்.
அடேங்கப்பா என்றார் அவர் பாணியில். அவர் நினைவு வரும்போதெல்லாம் அந்த வார்த்தையைத் தான் நான் மனத்துக்குள் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் .