12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

அண்ணாகண்ணன்
2021 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதினோர் ஆண்டுகளில் வல்லமை, 17,574 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,788 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.
முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். வாரந்தோறும் வெளியான படக்கவிதைப் போட்டியை 300ஆவது வாரத்துடன் நிறைவுசெய்துள்ளோம்.
2021 ஜனவரியில் DDoS தாக்குதலால் வல்லமை, சில நாள்கள் முடங்கியது. முன்னர் நடந்தது போல், இது நச்சுநிரல் தாக்குதல் இல்லை. நமது தளத்திற்கு மிக மிக அதிகப்படியான வருகைகளைச் செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் சர்வரை வேலை செய்யவிடாமல் செய்வதே DDoS தாக்குதல் எனப்படுகிறது. சில நாள்கள், மிக மிக அதிக வருகைகள் இருந்ததால், நமக்கு சர்வர் சேவையை வழங்கும் நிறுவனமே வல்லமைத் தளத்தை முடக்கியது. அவர்களுடன் கலந்தாலோசித்து, இதைச் சரி செய்துள்ளோம். நம் தள மேலாளர் எல்.கார்த்திக், இதைக் கவனித்து வருகிறார்.
கடந்த ஆண்டு வல்லமையின் தள மேலாளர் கட்டணம், தளப்பெயர்ப் புதுப்பிப்புக் கட்டணங்களுக்காக, கவிஞர் வித்யாசாகர் (குவைத்) அவர்களிடம் ரூ.13,000 (பதின்மூன்றாயிரம்) நன்கொடை கோரினோம். அவரும் கனிவுடன் வழங்கி உதவினார். வழங்கிக் கட்டணத்தை முதலிலேயே மூன்றாண்டுகளுக்கு (2019-22 ஆகஸ்டு வரை) கட்டியுள்ளதால், அதுவரை சிக்கல் இல்லை.
அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஆண்டுக்கான தள மேலாளர் கட்டணம், தளப்பெயர்ப் புதுப்பிப்புக் கட்டணங்களுக்கு மீண்டும் ரூ.13,000 (பதின்மூன்றாயிரம்) தேவைப்படும். அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.
வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். அவருக்கு நனி நன்றி.
வல்லமையின் ஆசிரியர் குழுவைப் புதுப்பிக்கவும் விரிவுபடுத்தவும் விரும்புகிறோம். பிழை திருத்துவோர், துணை ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர் ஆகிய பொறுப்புகளுக்குத் தன்னார்வலர்கள் தேவை. இதற்கு ஊதியம் வழங்க இயலாது. சேவையாகக் கருதிச் செய்ய முன்வருவோரை வரவேற்கிறோம். ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் சுயவிவரக் குறிப்பையும் விண்ணப்பத்தையும் vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
வல்லமை மின்னிதழை மேம்படுத்த, முயன்று வருகிறோம். உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.
12 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் 16.05.2021வல்லமை மின்னிதழக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்