குறளின் கதிர்களாய்…(350)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(350)
கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.
– திருக்குறள் – 585 (ஒற்றாடல்)
புதுக் கவிதையில்...
பிறருக்கு ஐயம்வரா
வேடத்தில் சென்று,
ஐயுற்று யாரேனும்
சினந்து நோக்கையில்
அதற்கு அஞ்சாமல் நின்று,
எது செய்து
எவ்விதம் கேட்டாலும்
மனதிலுள்ள செய்தியை
வெளிப்படுத்தாமல் இருக்க
வல்லவனே
நல்ல ஒற்றனாவான்…!
குறும்பாவில்...
ஐயுறா வேடத்தில் சென்று,
ஐயுற்று நோக்கில் அஞ்சாமல், அறிந்ததை
வெளியிடாத வல்லவனே ஒற்றன்…!
மரபுக் கவிதையில்...
மற்றவர் யாரும் அறிந்திடாதே
மாறு வேடம் புனைந்துகொண்டு,
சற்றும் எவரும் சந்தேகத்தில்
சண்டை பிடிக்க வருதல்போல்
உற்று நோக்கினும் எதிர்நோக்கி,
உண்மையில் கண்டே அறிந்தவற்றைப்
பற்றிப் பலவிதம் கேட்டாலும்
பயந்து சொலான்நல் ஒற்றாமே…!
லிமரைக்கூ..
மாறு வேடத்தில் மறைந்து,
ஐயுறுவோர்க் கஞ்சாதே, உண்மையை வெளியிடாதவனே
உயர்வான் ஒற்றிலே சிறந்து…!
கிராமிய பாணியில்...
மத்தவங்களுக்குச்
சந்தேகம் வராம
மாறுவேசத்தில போயி,
யாரும் சந்தேகப்பட்டுப்
பாத்தாலும்
பயமில்லாமப் பாத்து,
எப்புடிப் புடிச்சிக் கேட்டாலும்
அறிஞ்சத வெளியசொல்லாத
தெறமசாலியே
ஒத்து வேலக்கிச்
சரியான ஆளு..
அப்புடிப்பட்டவந்தான்
ராசாவுக்கு ஏத்த ஆளு…!