எனக்குக் கிடைத்த முதல் வேலை

பாஸ்கர் சேஷாத்ரி

அது வருஷம் எண்பத்து நாலு. ஏதோ படித்துவிட்டு இலக்கியம், கூட்டம் என்று சுற்றிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் உள்ள பெரிய மனிதரிடம் என்னைக் கூட்டிச் சென்றார் அந்த அம்மையார்.

அவர் பெயர் கோபால்சுவாமி. பெரிய வரித்துறை நிபுணர். வாசலில் எப்போதும் அவரைக் காண ஒரு கூட்டம் இருக்கும். எனக்கான ஆறுதல், அவரது பக்கத்து வீட்டில் நான் குடியிருந்தது தான்.

உன் அப்ளிகேஷன் எங்கே? எனக் கேட்டார்.

இதோ

தட்டெழுத்தில் அடித்த ஒரு விண்ணப்பம் அது.

சொன்ன வேலையைச் செய்வியா?

செய்வேன் சார்.

நான் சொன்னேன் எனச் சொல்லு என ஒரு ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அவங்களைப் போய்ப் பார் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இரண்டு நாளில் பார்த்துவிட்டு, சம்பளம் பேசி (மாசம் இருநூற்று எழுபத்து ஐந்து ரூபாய்), பணியில் சேர்ந்துவிட்டேன்.

முதல் நாளில் சேர்ந்தவுடன் கணக்காளர்,  “உனக்கு இங்கே சேர் எல்லாம் கிடையாது. தோ, அங்கே போய் உக்கார் என்றார். அவர் மணி அய்யர்.

ஒரு மணி நேரத்தில் கூப்பிட்டு, கையில் பிளாஸ்க் ஒன்றைக் கொடுத்துவிட்டு, சுப்ரபாத்தில் காப்பி வாங்கிக்கொண்டு வா. இந்தா சைக்கிள் சாவி என்றார்.

அந்த வயதில் வலிக்காமல் வலித்த வலி. சந்தோஷமாக வாங்கி வந்தேன்.

டம்ப்ளரில் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு நீயும் எடுத்துக்கோ என்றார்.

அலுவலகத்தில் குடித்த முதல் காப்பி, நின்றுகொண்டுதான்.

அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன்.

பொது மேலாளர் ஒரு நாள் கூப்பிட்டு, நீ விற்பனைப் பிரிவில் சேர்ந்துகொள் எனச் சொன்னார்.

ஒரு நாளில் அதிகாரி போல ஆனேன். சுமார் ஏழு வருடங்கள் அங்கு உழைத்த உழைப்பு, இன்னொரு நிறுவனத்திற்கு இட்டுச் சென்றது.

அதற்கு அடித்தளம் அமைத்த அந்தப் பெண்மணி, என் தாயார்.  இன்று அந்த நிறுவனம், காசாளர், மேலதிகாரி யாரும் இல்லை. ஆனால், என் நினைவில் நிறைந்து நிற்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.