பழகத் தெரிய வேணும் – 68

நிர்மலா ராகவன்

கொடுத்தால் திரும்பக் கிடைப்பது

மனிதர்கள், `என் மதம், மொழி, இனம்! இதெல்லாம்தான் உயர்த்தி!’ என்று பலவாறாகப் பிறருடன் போட்டி போடும்போது, மனிதத்தன்மை குன்றி, சண்டை சச்சரவுகள் பெருகிவிடுகின்றன. நீடித்த மரியாதையின்மைதான் காரணம்.

`மரியாதை’ என்பது நம்மிடமிருந்து மாறுபட்டவர்களது உணர்வுகளை மதித்து, அவர்களது வித்தியாசத்தைப் பாராட்டாது, அப்படியே ஏற்பது. கொடுத்தால், தானே திரும்பக் கிடைப்பது.

ஒருவர் தன்னைத்தானே உயர்வாக நினைக்கலாம். ஆனால், சந்திப்பவர்கள் அனைவரும் தன்னை மதித்தாகவேண்டும் என்று மிரட்டலும், அதிகாரமுமாக நடத்தினால், மரியாதை நிலைக்குமா? அது உண்மையாகத்தான் இருக்குமா?

எது நற்பண்பு?

“குப்பைக்காரனோ, பல்கலைக்கழகத்தின் தலைவரோ, எவராக இருந்தாலும், நான் ஒரேமாதிரிதான் பேசுவேன்” (ஐன்ஸ்டீன்).

`எனக்கு இவனால் காரியம் ஆகவேண்டுமே!’ என்று எதிர்பார்த்து, போலி மரியாதையுடன் நடந்துகொள்கிறவர்கள் மலிந்துவிட்ட காலம் இது. காரியம் முடிந்ததும், இத்தகைய காரியவாதிகள் காணாமல் போய்விடுவார்கள்.

மரியாதை இல்லாத உறவு

பிறர் சொல்வதும் செய்வதும் நாம் செய்வதுபோலவோ, அல்லது விரும்புவதுபோலவோ, இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவரைக் கேலி செய்வது நெருக்கத்தை எப்படி உண்டாக்கும்?

தன் வீட்டுக்கு வரும் ஒருவரது உச்சரிப்பைக் கேலி செய்கிறவர் அவர்கள் வீட்டுக்குச் செல்கையில், கேலிக்கு ஆளாகிவிடுவோம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.

மாமியார் பதவி கிடைத்தவுடனேயே, புதிய மருமகள் மகனது அன்புக்குத் தனக்குப் போட்டியாக வந்துவிட்டாள் என்ற காழ்ப்புணர்ச்சியும் வந்துவிடும் சிலருக்கு.

எல்லாக் குடும்பங்களிலும் ஒரேமாதிரியான சமையல் இருக்காது. இதை ஒத்துக்கொள்ள விரும்பாது, “உனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்று சொன்னார்களே! ஒன்றுமே தெரியலியே!” என்று மட்டம் தட்டும் மாமியார்மீது எந்த மருமகளுக்குத்தான் மரியாதை எழும்?

அன்பு? கேட்கவே வேண்டாம்.

பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஆனால், அவமரியாதையை எதற்குத் தாங்கிக்கொள்வது?

“எங்கள் வீட்டில் இப்படித்தான் சமைப்போம்,” என்று மருமகள் வாதாடினால், உறவு இன்னும் விரிசலாகும்.

`வீண் சண்டை எதற்கு?’ என்று எதுவும் பேசாமலிருந்தாலும், மனம் என்னவோ கசந்துதான் போய்விடும்.

குழந்தைகளுக்கு மரியாதை

குழந்தைகளிடம், `நீங்கள், சொல்லுங்கள்’ என்று பேசுவதால் மரியாதை அளிப்பதாகிவிடாது.

கடைத்தெருவில், பார்க்கும் பொருளையெல்லாம் வாங்கிக் கொடுக்கும்படி நச்சரிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது?

`காசு இல்லே’. கடைத்தெருக்களில் பல தாய்மார்கள் சொல்லும் சாக்கு.

`உனக்குத்தான் வீட்டிலே நிறைய இருக்கே!’ என்று சுட்டிக்காட்டலாம்.

அதைவிட்டு, பலர் முன்னிலையில் அடிப்பார்களா?

அப்படிச் செய்த ஒருவர், “என் தந்தை எனக்கு பிடித்தது எதையும் செய்ய விடவில்லை. எனக்கு விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஆசை. அப்பா விடவில்லை,” என்றார், உணர்ச்சியற்ற குரலில்.

அப்போது அனுபவித்த நிராசை குழந்தையின் ஆசையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, ஆத்திரத்தில் கொண்டுவிட்டது.

கதை

அமெரிக்காவில் வாழும் ஐந்து வயதுப் பாலகன் சத்யாவிற்கு அவனுடைய தாய் மரியாதை சொல்லிக்கொடுத்தாள்: “பெரியவர்களிடம் பேசும்போது, `வா’ என்று சொல்லக்கூடாது. `வாங்கோ,’ என்று மரியாதையாக் கூப்பிடணும்”.

ஒரு நாள் காலையில் அவன் என்னுடன் தொலைப்பேசியில் வெகு நேரம் தொடர்பு கொண்டபோது, “ஏதாவது சாப்பிட்டியோப்பா?” என்று கரிசனத்துடன் விசாரித்தேன்.

அவனுடைய பதில்: இல்லேங்கோ, பாட்டிங்கோ!!

பெண்களுக்கு மரியாதை

`நீ அழகாக இருக்கிறாய்!’ என்று புகழ்ந்தால், உலகம் புரியாத சிறுமிகள் வேண்டுமானால் அகமகிழலாம்.

வளர்ந்தபின்னர், அவர்கள் எதிர்பார்ப்பது தன்னை மரியாதையுடன் நடத்தும் ஆண். முகத்துதி இல்லை.

ஆணைச் சார்ந்து நிற்பவள்தான் நல்ல பெண் என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்பட்டு வளர்கிறார்கள் பெண்கள்.

ஆனால், படித்து, சொந்தக் காலில் நிற்பவர்கள் நினைப்பது: ஒருவரிடம் அன்பு செலுத்துகிறோம். அதை நம் பலகீனம் என்றெண்ணி, அவர் எவ்வளவு மோசமாக நடத்தினாலும், பொறுத்துப் போகலாமா? சுயமரியாதையை இழந்துவிடுவோமே!

இப்படிப்பட்ட எண்ண ஓட்டத்தினால் பெண்ணியக் கருத்துகள் வலுப்பெறுகின்றன. விவாகரத்துகள் அதிகரிக்கின்றன.

ஒரு துணுக்கு: “என் கணவர் நான் சொல்வது எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கேட்பார் – பிறரிடம் பேசும்போது!”

அவள் சொல்லாமல் விட்டது – நான் சொல்வது எதையும் கணவர் காதில் வாங்கிக்கொள்வது கிடையாது.

ஒருவருக்கு நாம் தரும் மரியாதை அவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதில் இருக்கிறது.

எப்படி மரியாதை அளிப்பது?

பெண்களுக்கு நன்றாகப் பேசும் திறமையும், ஆண்களுக்கு இயந்திரத் திறன்களும் (mechanical skills) இயற்கையாகவே அமைந்திருக்கின்றன.

ஒரு பெண் காரோட்டிப் போகையில், அவளது `திறனை’க் கேலி செய்பவன் மரியாதை அளிக்கத் தவறிவிடுகிறான்.

கதை

ஒரு முறை, நான் காரை நிறுத்திய இடம் சறுக்கு மரம்போல் பயங்கர சாய்வாக இருந்தது. எப்படியோ கீழே நிறுத்திவிட்டேன்.

திரும்பப் போகும்போது, அதை எப்படி வெளியே கொண்டுவருவது என்று மலைத்து நின்றிருந்தேன்.

முன்பின் தெரியாத ஒருவர் என் குழப்பத்தைப் பார்த்து, “நான் உதவலாமா?” என்று பணிவாகக் கேட்டு, நான் சம்மதித்ததும், உதவினார்.

அவர் மரியாதைக்குரியவர். ஏனெனில், `உனக்கு இதுகூட முடியவில்லையே!’ என்று ஏளனமாக நினைக்கவில்லை.

இவரைப் போன்றவர்கள், எல்லாருக்கும் எல்லாம் செம்மையாகச் செய்ய முடியாது என்று புரிந்தவர்கள். பெண்களுக்காக காரின் கதவைத் திறந்துவிடுபவர்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் `gentlemen’ என்று சிலாகிக்கிறோம்.

இவ்வாறு, பிற பெண்களை மரியாதையாக நடத்துபவர்களின் குழந்தைகளும் தந்தையைப் பின்பற்றுவார்கள்.

மகளாக இருந்தால், மரியாதைக்குறைவாக நடத்தும் பிற ஆண்களை எதிர்ப்பாள். `பிறர் ஏன் என்னை மதிப்பதில்லை?’ என்று குழம்பமாட்டாள்.

அப்படி ஒருவர் நடந்தால், அது நம் தவறில்லை. அவருக்குத் தன்னையே மதிக்கத் தெரியவில்லை, அதனால் பிறரையும் மரியாதையின்றி நடத்துகிறார் என்று புரிந்து, அலட்சியம் செய்வாள்.

குடும்பத்தில் மரியாதை

ஒரு குடும்பத் தலைவன் சுயநலத்துடன், தான்தோன்றித்தனமாக நடந்தால் என்ன ஆகும்?

அவனுடைய தீய நடத்தையால் அவதிப்படும் மனைவிக்கு அவன்மீது அன்போ, மரியாதையோ இருக்காது.

அவன் கொதித்துப்போய், `நான் உனக்கு வாழ்வு கொடுத்தேன், பிள்ளைகள் கொடுத்தேன்!’ என்று வசனம் பேசினால் மரியாதை கிட்டுமா?

இருவரும் ஒருவர் மற்றவருக்கு அளிக்கவேண்டிய மரியாதையை மறந்து, ஓயாத வாக்குவாதத்தால் வாழ்வை நரகமாக்கிக்கொள்வார்கள்.

தான் `ஆண்’ என்ற ஒரே தகுதியால், மனைவி (மற்றும் பிற பெண்கள்) தனக்கு மரியாதை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தோல்விதான் அடைகிறார்கள்.

பிராணிகளுக்கு மரியாதையா!

“உன்னை எப்படிப் பிறர் நடத்தவேண்டும் என்று விரும்புகிறாயோ, அதேபோல் அவரையும் நடத்து”.

இந்த உண்மை மனிதருக்கு மட்டுமல்ல, வளர்ப்புப் பிராணிகளுக்கும் பொருந்தும்.

ஒரு நாயையோ, பூனையோ வளர்த்தால், `நாம்தான் அதற்கு ஆகாரமும் தங்க இடமும் கொடுத்திருக்கிறோமே!’ என்று அடித்து உதைப்பவர்களும் இருக்கிறார்கள் — எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மிஸ்டர் ஊ (WOO) மாதிரி.

அவன் வளர்த்த நாய், ராஜர், நான் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது என் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும்.

“சும்மா திட்டறாளாப்பா?” என்று, நான் தடவிக் கொடுப்பேன்.

எங்கள் நெருக்கம். மிஸ்டர் ஊவின் ஆத்திரத்தை எழுப்பியது. ஒரு சிறு கூண்டுக்குள் அதை அடைத்துவைத்தான். தலையைச் சாய்த்து, பரிதாபமாக என்னைப் பார்க்கும்.

ஒரு முறை, எப்படியோ தப்பித்து, வெகு தூரம் சென்றுவிட்டது ராஜர்.

தூரத்தில் என்னைப் பார்த்துவிட்டு, வேகமாக ஓடி வந்த அந்த அல்சேஷன் நாயைக் கண்டு, நடந்துகொண்டிருந்தவர்கள் அஞ்சி விலக, என்மேல் பாய்ந்து, முன் கால்கள் இரண்டையும் என் நெஞ்சில் பதித்துக்கொண்டது.

“உங்கள் நாயா?” கேட்டவர்கள் முகத்தில் ஆத்திரம்.

“இல்லை. என் பக்கத்து வீட்டு நாய்!” என்று கூறி, அவர்களை அதிசயத்திற்கு உள்ளாக்கினேன்.

அதை அணைத்து, “திரும்பிப் போகத் தெரியலியா? என்கூட வா,” என்று தடவிக் கொடுத்தேன்.

அதற்கு ஆகாரம் அளித்தவன் அத்துடன் நின்றுவிடாது, உலவப் போகையில் தன்னுடன் அழைத்துப் போயிருந்தால், அந்தப் பெரிய நாய் வெகுவாக அஞ்சி, பிறரையும் அச்சுறுத்தி இருக்குமா?

நாங்கள் குடியிருந்த இன்னொரு வீட்டிலும் இதே கதைதான்.

“உடனே வா. இல்லாட்டா, ஆகாரம் கிடையாது!” என்ற மிரட்டல் வரும். பக்கத்து வீட்டிலிருந்து.

“சாப்பிடு, போ, டிக்ஸி. அப்புறமா வா,” என்று நான் அனுப்பும்வரை என்னைவிட்டுப் போகாது.

கோலாலம்பூரில், தெருவுக்குத் தெரு, செல்லப் பிராணிகளுக்கு வேண்டிய ஆகாரம், விளையாட்டுச் சாமான்கள் விற்கும் கடைகள்!

அதைக் கண்டு, “இங்கே எல்லாருக்கும் பூனை, நாய்கள்மேல் அன்பு வந்துவிட்டது போலிருக்கிறதே!” என்று என் மகள் மகிழ, வறண்ட சிரிப்பைத்தான் அவளுக்குப் பதிலாக என்னால் அளிக்க முடிந்தது.

நம்மைப் போலவே, மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பது எத்தனைப் பேருக்குப் புரிகிறது?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.