சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்?
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்;
இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.
வரலாறு
போர் புரியும் இடத்தில் தமக்கு நேரே நின்ற அதிசூரனைத் தன் முன்னே தானுண்ணும் புலால் உணவைக் கண்ட சிங்கம் போல ஏனாதி நாதர் நின்றார். அவரை இப்புராணத்தில் சேக்கிழார் புலி என்று குறிப்பின் சிங்கம் என்றதன் நயம் உணரவேண்டும். அவர் முன் தன் முகத்தைக் கேடகத்தால் மறைத்துக் கொண்டு கைவாளுடன் அதிசூரன் போர்செய்ய முயன்றான். அவன் முன்னே தாள் பெயர்த்து நெருங்கினார் ஏனாதி நாதர். அப்போது அதிசூரனும் நகர்ந்தான். அப்போது அதிசூரன் நெற்றியில் வெண்மையான திருநீற்றை நாயனார் கண்டார்.உடனே அதிசூரனைச் சிவனடியார் என்றே கருதினார் ஏனாதி நாதர். ‘’இவர் கருத்தின் வண்ணமே நான் நடந்து கொள்வேன்’’ என்று அதிசூரனின் கைவாளை நீக்காமல் படையேந்தாத சிவனடியாரைக் கொல்லும் அபவாதம் ஏற்படாத படி இணங்கிநின்றார்!
பொருள்
அப்படிப் போரிடுவது போல் நின்ற ஏனாதி நாதர் திருவுள்ளத்தை இறைவனே அறிவார்; மற்றவர் அறியார். அப்போதே அதிசூரன் வஞ்சித்துக் கொல்லும் தன் கருத்தை நிறைவேற்றினான். அவர் நின்ற தன்மையை அறிந்த மின்னுகின்ற சிவந்த சடையை உடைய சிவபெருமான், அவருக்கு அருள் புரிந்து சிவபதம் வழங்க வந்தார்!
விளக்கம்
ஏனாதி நாதர் திருவுள்ளம் திருநீற்றைப் பெரிதும் போற்றியதாகும். சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது
“கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகின்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்காரமான சிவனடி சேர்வரே”
என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர்.
இத்தகைய திருநீற்றின்மேல் மிக்க பற்றுக் கொண்ட ஏனாதிநாதர் , தம் முயற்சியால் பெற்ற அனைத்தையும் நீறு பூசிய அடியாருக்கே கொடுத்தார். அவ்வகையில் அதிசூரனைக் கொல்லும் ஆற்றல் இருந்தும் திருநீறு பூசிய அவன் கரத்தால் கொல்லும்படி, பெருந்தன்மை காட்டினார்! காக்க வேண்டிய தம்முடம்பைக் காவாது நிற்றல், சிவத்தொண்டு புரிவதற்கே யாகும்!
பொய்யாகச் சிவவேடம் புனைந்த அதிசூரனை அவ்வேடமுங் காவாதது இயல்பே! இவர் காத்த உடம்பை சிவத் தொண்டுக்காகவே இழந்த செயலால் இவருயிர் இறைவனடிக் கீழ் இன்புற்றது என்பது இப்பாடலின் கருத்து என்பார் ஆறுமுகநாவலர்!
நயம்
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான் என்ற தொடரில் அங்கே நின்ற சிவாபராதியாகிய அதிசூரன், ஏனாதி நாதராகிய சிவனடியாரைக் கொன்றான் என்று கூற உள்ளம் கூசியமையால், அதனைக் கூறாமல் கருணையே உருவான சேக்கிழார் பெருந்தகை, ‘’தன் கருத்தே முற்றுவித்தான்’’ என்று கூறினார்!
இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.
என்ற பகுதி, சிவபெருமானும் அதைத் தாங்கிகொள்ளாமல் விரைந்து, உடனே ஓடோடி வந்து வெளிப்பட்டார் என்ற அவர்தம் கருணைத் திறத்தைக் காட்டுகிறது! அடியார் சொல்லக் கூசினார்; இறைவன் கூசாமல் சென்றார்! என்ற நயம் எண்ணி நெகிழத் தக்கது!