திருச்சி புலவர்  இராமமூர்த்தி

வரலாறு

திருத்தொண்டர் புராணத்தின்  பதினோராம்  அடியார்  கண்ணப்ப நாயனார்  ஆவார். அவர் வாழ்ந்த நாடு கண்ணப்பர் திருநாடு எனப்போற்றப்பெறும்  பொத்தப்பி நாடாகும். அங்கே உடுப்பூர் என்ற பழமையான  ஊரில் கண்ணப்பர் பிறந்து வளர்ந்தார்.  அவ்வூரில் யானைத்தத்தங்களை ஊன்றி வேலியிட்டு அரண் அமைத்தனர். அங்கே கொன்றவர் எனப்பட்ட வேடுவர் வாழ்ந்தனர். அவ்விடத்தில் நாய் விளா மரநிழலில் உறங்கும். கொடிய விலங்குகளைக் கவரும் பார்வை விலங்குகளுடன் , ஐவன நெல் காயும்.

அங்கே புலிக்குட்டி, யானைக்கன்று இவற்றுடன் சிறுவர்   விளையாடுவர்;வந்தணையும் மான்களைத்  தழுவி வேட்டுவ மகளிர்  விளையாடுவர். அங்கே இசைக்கருவிகளின் பேரோசையும், வேடர்களின் கொல் , எறி ,  குத்து ஓசையுடன் அருவியின் ‘கல்’ என்ற ஓசையும் கேட்கும். கரிய நிறத்துடன் , அச்சமும் கருணையும் அற்றவராய், ஊன் தசை உணவும் உண்ணும் வேடர் தலைவனாக   நாகன் என்பான் இருந்தான; முன்பு தவம் செய்திருந்தாலும் இப்போது குற்றத்தையே குணமாகக் கொண்டான். அவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவன். அவன் மனைவி தத்தை.

மறவர் குலக்கொடியாகிய  தத்தை, புலிப்பல்ளுடன் சங்கினைக் கோத்து அணிந்து, பெண்சிங்கம் போல் இருந்தாள்.  அவளுக்கு குழந்தைப்பேறு இல்லை என்று பலரும் கூற, முருகப்பெருமான் திருவருள் வேண்டி வழிபாடுகள் செய்தாள். கோயிலுக்கு கோழி,மயில் ஆகியவற்றை நேர்த்திக் கடனாக விட்டு, பெரிய திருவிழா நடத்தினாள். அதனால் மலையை வேலால் பொடித்த வேலேந்திய முருகன் திருவருளால் ஆண்குழந்தை பிறந்தது. அதனைச் சேக்கிழார்,

‘’கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனம் இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும்
ஆன அத் திங்கள் செல்ல, அளவு இல் செய் தவத்தினாலே
பால் மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது’’

என்று பாடினார். இப்பாடலின் பொருள்:

வேடர்களது குலம் விளங்கும்படி தத்தையின் வயிற்றிலே கருப்பம் தரித்ததாக, ஊனமில் பலிகளைக் கொடுத்துக் கடமையாயுற்ற வெறியாட்டுடனே, ஒவ்வொன்றாய் ஆயின அந்த மாதங்கள் சென்றனவாக, முன்னே அளவில்லாது செய்த தவத்தினாலே நற்பான்மையுடைய நிறைமதியை உவர்க்கடல் பெற்றது போலத் தத்தை மகவினைப் பெற்றெடுத்தபோது, என்பதாகும். அந்தக் கண்ணப்பர் பிறந்ததால் வேடுவர் குலம், சிவபாத விருதயரால் கவுணியர் குலமும் , சேக்கிழாரால் பெற்றோர்  குலமும் விளக்கம் பெற்றது போல்  உயர்ந்தது!ஒரு பெரியார் ஒரு குலத்தில் அவதரித்தாராயின் அவரால் அக்குலமுழுவதும் விளக்கமடைந்து உய்யும் என்பது ஆன்றோர் துணிபு. திருவண்ணாமலைக் கார்த்திகைச் சோதி தரிசித்தவரின் “கோத்திரத்தி லிருபத்தோர் தலைமுறைக்கு முத்திவரங் கொடுப்போ மென்றார்” என்ற அருணாசலபுராணமுங் காண்க.

குழந்தை கருவில் வளரும்போது மாதந்தோறும் வரும் ஊனங்களை நீக்க பலிகள் இட்டனர்.  இம்மாதங்களின் வரும் ஊனங்களைத் திருவாசகத்தில் (போற்றித் திருவகவல்).

“மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத்,
தீனமில் கிருமிச்செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்தும் ,
இருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும்,
மும்மதிதன்னுளம் மதம்பிழைத்தும்,
ஈரிருதிங்களிற் பேரிருள்பிழைத்தும்,
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ,
ஆறு திங்களி னூறலர்  பிழைத்தும்,
ஏழு திங்களிற் றாழ்புவி பிழைத்தும்,
மெட்டுத்  திங்களிற் கட்டமும் பிழைத்தும் ,
ஒன்பதில் வருதரு துன்பமும்பிழைத்தும்,
தக்க தசமதி தாயொடு தான்படும்,
துக்க சாகரத் துயரிடைப்பிழைத்தும்…..”

என்று, மணிவாசகப் பெருமான் அருளியனவற்றை இங்கு நினைவு கூர்க.

ஆன அத்திங்கள் செல்ல  என்ற தொடர் ,  கருப்பம் தரித்தபின்,

“கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும்
வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி, யுருவாகிப் புறப்பட்டு”

என்றபடி வளர்ச்சி முற்றுவதான பத்துத்திங்களும் நிரம்பிச் செல்ல.

“முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்” என்பது திருமந்திரம்.

இதனை 280 நாட்களுக்குமேல் முந்நூறு நாட்களுக்குள் என்பர் நவீன சாத்திரிகள்.

செய் அளவில் தவத்தினாலே  என மாற்றுக  தத்தையும்நரகனும் செய்தவம் – கானவர்குலஞ் செய்தவம் – மாதவஞ் செய்த தென்றிசை செய்தவம் – அன்புநிலை உணராது ஆணவத்தி னழுந்தி உழலும் உயிரெல்லாஞ் செய்தவம் என்று பலவாறு கூட்டி யுரைக்க நின்ற அழகுங் காண்க.

“முந்தை யெம்பெருந் தவத்தினாலென்கோ
முனிவ ரிங்கெழுந் தருளியது” என்பதற்கேற்ப

‘’உவரிசெய் தவத்தினால் பால்மதி யீன்றாலென’’ என்று கூட்டி யுரைக்க. பாற்கடலைத் தேவர்  கடைய அதிற் பிறந்தது மதி என்பர். அதுபோலத் தானும் ஒரு மதியினையீனும் பொருட்டு உவரியாகிய கருங்கடலும் தவஞ் செய்து பெற்றதுபோல என்பதாம். கடல் தவஞ்செய்தல் எதற்காக எனின் தனது கருமை, உவர்ப்பு மண்ணீருமாகாத தன்மை, கழிநாற்றம் முதலிய இழிபுகளைப் போக்கும்படிக்கும், பாற்கடல் பெற்ற அந்த மதிக் குழவியின் மேம்பட்ட குழவிமதியாகிய  கண்ணப்பரை ஈன்றெடுக்கவும் ஆம் என்க.

அக்குழவியின் மேம்படுதலாவது அது வெண்மதியாய்க், கலைகள் வளர்வதும் தேய்வதும் உடையதாய்த், தேவரில் ஒன்றாய், இறப்பும் பிறப்பும் உடையதாய், இறைவனாற் காக்கப்பட்டுள்ளதாய் நிற்பது; தான் பெறும் இக்குழவி அவ்வாறன்றிக் கருங்கதிர் விரிக்குமேனிக் காமர் பெற்றுடையதாய், பதினாறாண்டில்  கலைவளர்வதாய்ப், பின்னர் என்றும் குறைவில்லாததாய், இறப்பும் பிறப்பு மில்லாததாய், இறைவன் பக்கத்திருந்து அகலாது அவருக்குக் காவல் புரிவதாய் உள்ளது என்பதைக்  குறித்தது.

உவரி – தத்தைக்கும், பான்மதி – நாயனாராகிய மகவுக்கும் உவமை, உருவும் தொழிலும் பற்றி வந்தது. பான்மதி – நற்பான்மையும் நிறைவும் பெற்ற மதி என்க. முழுமதி தோன்றும்போது சிவந்து காட்டும். அன்றியும் இம்மகவு பின்னர்க் “கருங்கதிர் விரிக்குமேனி” யுடையதாம். குழவிகள் பின்னர் எந்நிறமுடையனவாக ஆயினும், தாய் வயிற்றினின்றும் பிறக்கும்போது புதிய இரத்தஊற்றத்தினால் எல்லாக் குழவிகளும் செம்மை நிறமே தந்நிறத்தின் மிக்குக்காட்டும். இங்குத் தத்தையீன்றபோது உவரியின் தோன்றும் பான்மதி போன்றிருந்த  இம்மகவு, தாதை எடுக்கும்போது “காளமேகம்”  ஒப்பாயினதென் றுரைத்தலும் காண்க.

இனி, இறைவனது நெற்றிக் கண்ணாகிய கனற் கண்ணினின்றும் அவதரித்தவர் முருகப்பெருமான். அவர் “பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு” என்றபடி “வெம்புந்திய கதிரோனொளி” யென விளங்குபவர். இம்மகவு அவரது தண்ணருளாலே போந்தது ஆதலின் இது மதி போன்றது என்றார் என்றலுமாம்.

ஞாயிற்றின் ஒளி, “வெம்புஉந்திய” தாகலின் வெப்பமுடையது; அதனைப் பல உயிர்களும் தரித்தாற்றலாகாதாம்; ஆயினும் அந்த ஞாயிற்றின் ஒளிபெற்று விளங்கும் மதி அமுதமாக்குவது;

“தோற்று மன்னுயிர் கட்கெலாம்  தூய்மையே
சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்,
ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல் வெண்,
நீற்றின் பேரொளி” (308) போன்றது;

அது ஞாயிற்றின் கதிரொளியைத் தான் பெற்று அதனால் தண்ணிதாய் விளங்குவது என்பது பௌதிக சாத்திர உண்மை. அதுபோல இந்தப் பான்மதியும் முருகனாகிய ஞாயிற்றின் அருளொளியால் விளங்கி உலவி உலகுக்கு அன்பாகிய தண்ணொளி பரப்பி உய்விப்பதாயிற்று என்றதொரு குறிப்பினாற் பயனுவமையாயிற்று.

மகப் பயந்த  போது – தத்தை மகவை ஈன்றபோது. தத்தை என்பது வருவிக்க. பயந்தபோது – பொழிந்தது – ஆர்த்த என வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

இப்பாடலால்  வேட்டுவக்குடியிலும் சிறந்த சான்றோர் பிறப்பர் என்பதும், பால் மதி உப்புக்கடலில் தோன்றியது போல் கண்ணப்பர் பிறந்தார் என்பதும்,

இவற்றுக்கெல்லாம்  காரணம் முருகப்பெருமானின் திருவருளே என்பதும், புலனாகின்றது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *