சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொன் கை நீட்டப்
பரிஉடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக் கொண்டு ஓச்ச,
இரு சுடர்க்கு உறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி,
வருதுளி முத்தம், அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி்.
வரலாறு
பிறந்த குழந்தையைத் தந்தை எடுத்தணைத்தான்; சிறுகுடி மக்கள் கொண்டாடி விழா எடுத்தனர்; புலிக்குட்டி போன்ற குழந்தை உலகமே போற்ற விளங்கியது; அக்குழந்தையின் திண் என்றிருக்கும் உடலைக் கருதித் ‘’திண்ணன்’’ என்றே பெயரிட்டு அழைத்தனர்;அக்குழந்தைக்கு மரபுப்படி காப்பாக, வேப்பங்கொட்டை கோத்த அணியை அணிவித்து வளர்த்தனர்; தெய்வத்துக்குப் பான்மடை கொடுத்தனர்; குழந்தை தலையில் புலிநகச் சுட்டியையும், மார்பில் வெண்பல் தாலியையும் அணிவித்தனர்; மணிகள் பூட்டிய சதங்கையுடன் நாய்க்காசு, தாயத்துடன் கூடிய அரைஞாணையும் அணிவித்தனர்; அந்நாளில் குழந்தை, பெற்றோர் மார்பில் சளுவாய் ஒழுக, மழலைச் சொல் பயின்றது. அப்போது நடந்த நிகழ்ச்சியைச் சேக்கிழார் பாடுகிறார்; அப்பாடல்
பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கைநீட்டப்
பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண் டோச்ச
விருசுடர்க் குறுகண் டீர்க்கு மெழில்வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்த மத்தாய் வாய்முத்தங் கொள்ள மாற்றி,
பொருள்
குழந்தை பொருகின்ற புலியாகிய பார்வைமிருகத்தின் திறந்த அகன்ற வாயினைச் சிறு குகையென்று கருதித் தமது அழகிய கையை அதனுள் நீட்ட; அன்பு மிக்க தந்தை அதனைக் கண்டு பரிந்து பசுந்தழை யொன்றைக் கையிற் கொண்டு ஒச்சவே; சூரிய சந்திரர்கள் என்னு மிரண்டு சுடர்களுக்கு உளதாம் துன்பத்தைத் தீர்க்கும் அழகு வளரும் கண்களின் நீர் நிரம்பி வருகின்ற துளியாகிய முத்தத்தை அந்தத் தாயாகிய தத்தை வாய்முத்தங்த்தால் மாற்றினாள்;
விளக்கம் :- பார்வை விலங்காகிய புலிக்குட்டியின் திறந்த வாயை ஏதோ ஒரு பேழை எனக்கருதியது.
சிங்கம், புலி முதலிய விலங்கினங்களின் மேல்வாய் கீழ்வாய்ப் பற்கள் வளைந்து குறடுபோலப் பொருந்தி மாட்டிக் கொள்ளுந் தன்மையுடையன; ஆதலின் இரைகண்ட போது எளிதின் வாய்திறந்து பற்ற இயலாதன; இதுபற்றி அவை பெரும்பாலும் வாயை அகலத்திறந்து வைத்திருக்கும் இயல்புடையன என்பர்.
இவ்வாறு திறந்துள்ள அகன்ற வாய் சுருங்கி நீண்டு உள்ளே செல்லுதலால் குகை எனக்கருதி, குகையினுள்ளே உள்ளது எது அதனைப் பற்றுவோம் என்று
உள்ளே கை நீட்டுதல் சிறுவரியல்புகளில் ஒன்றாம்.
பின்னர் இக்குழந்தை, வேட்டையாடி வந்து, சிவபிரானுக்கு அமுதூட்டிக் காவல் புரிந்தும், “இருசுடர்க்கு உறுகண் தீர்க்க” அம்பினால் தமது கண்ணைப் பேழ்ந்து அப்பிக் கண்ணப்பராகியதும் கையாதலின் அதனை முற்கூறி அழகு படுத்தினார். இவ்வாறு இளம்பிராயத்தும் பின்னர்க் காளைப்பருவத்தும் கொடிய விலங்குகளுடன் பழகியதனாலும் போர் செய்து வென்றதனாலும் இவரது திருமேனியில் அவற்றால் புண்செய்யப்பட்ட வடுக்கள் விளங்கின என்று,
“வடிவே,
மறப்புலி கடித்த வன்றிரண் முன்கை,
திறற்படை கிழித்த திண்வரை யகலம்,
எயிற்றெண்கு கவர்ந்த விருந்தணெற்றி”
என நக்கீரதேவர் திருமறத்தில் திருக்கண்ணப்ப தேவர் அருளினார். ஆயின் அவ்வாறு நாயனாரது திருமேனியில் ஊறுபட்ட தெனக் கூறவும் மனமொருப்படாத ஆசிரியர், அதன் அறிகுறியாக இங்குச் சிறு வயதிற் புலியின் வாயில் இவர்கை நீட்டினார் என்ற ஒருசெய்திமட்டுங் கூறி ஏனைய வெல்லாம் அநுமானத்தா லுணர்ந்து கொள்ளவைத்தாரென்க.
நீண்டகாலம் கழித்துத் தவங்கிடந்து அரிதிற் பெற்ற பட்டத்திற்கு உரிய மகனாதலிற் பரிவுடை என்றார். புலிவாயிற் கைநீட்டுவதாகிய பெருங்கேடு தரத்தக்க பெருஞ் செயலைத் தடுக்க முயல்பவன் அதற்குரியபடி பெருந் தண்டஞ் செய்து ஒறுக்காது பசுந்தழை கொண்டு, அதனைக் கொண்டாகிலும் அடித்து ஒறுக்காது ஓச்சுவதும் இவனது பரிவு காட்டும். ஓச்சுதல் – ஓங்குதல். அடித்துத் தண்டிப்பான் போன்ற பாவனை காட்டுதல்.
அம்மையார் ஊட்டிய திருமுலைப்பால் உண்டுபால்வடிந்த வாயுடன் நின்ற ஆளுடைய பிள்ளையாரை,
“எச்சின்மயங் கிடவுனக்கு ஈது இட்டாரைக் காட்டென்று, கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சி” னார் அவரது தந்தையார் சிவபாதவிருதயர். இங்கு நாகன் புலிவாயிற் கைநீட்டிய தன் மகனாரை மாறுதானும் கொண்டோச்சச் சகியாது பைந்தழை கொண்டு ஓச்சினான் என்றதும் அவனது பரிவு காட்டுவதாம்.
இருசுடர்க்கு உறுகண் என்ற தொடரால் நாயனாரது சரிதக் குறிப்பும் கண்ணப்பர் என்ற பெயருக்குக் காரணக் குறிப்பும் பெற இதனைமுன்னபே கூறினார். இருசுடர்கள் சூரியசந்திரர்கள். இவர்கள் முறையே சிவபெரு மானது வலது கண்ணும் இடதுகண்ணுமாவார்.
உறுகண் ஆவது உதிரம் பாய்ந்தது. தீர்க்கும் – உதிரம் வாராது தடுத்து நின்ற. இவை பின்னர் இவர் சரித நிகழ்ச்சிகளின் முற்குறிப்பாக இங்குக் கூறினார்.
எழில்வளர்கண் என்ற தொடர், இவரது கண்கள் அழகால் வளர்ந்தே நின்றன. அவை
“கொன்றைதங்கு வேணி யார்தமைக், கண்ணினீடு
பார்வையொன்று கொண்டு”
“காணுதற்கரியார் தம்மை, ஆர்வமுன் பெருக ஆரா
அன்பினிற் கண்டு கொண்டே” எஞ்ஞான்றும் நிற்பன என்பதைக்குறித்தது. இவற்றில் ஒன்று இறைவனது கண்ணில் அப்பப்பட்டு அவரது கண்ணே யாயிற்று. ஆதலால் எழில்வளர்கண் என்றார்.
நீர் கண் மல்கி வரும் துளி முத்தம் – நீர், பெருகும்போது முதலிற் கண்களில் நிறைவதும். பின்னரே துளிகளாக வீழ்வதும் இயல்பாம்.
அத்தாய் என்றசொல் தந்தையினும் மிக்க பரிவுடைய அந்தத் தாயைக்குறித்தது.
துளிமுத்தம் – வாய்முத்தம் – சொற்பின்வருநிலை. ‘ஊனுக்கூன்’ எனுமுரை என்று நினைவுற்று இறைவன் கண்ணோய்க்குக் கண் மாற்றுக ஒப்பு முறை (Homeopathic) மருந்தாய் உதவும் மருந்துப் பண்டமாகிய இக்கண்கள் அந்தம் ஒப்புமுறை மருந்தினிலையில் நோய்க்கு மாற்றாகப் பழகித் தேர்ந்தன என்ற குறிப்புப் பெறத் துளிமுத்தம் பெற வாய்முத்தம் மாற்றி எனக் கூறிய நயமும் காண்க. வாய் முத்தம் கொள்வதற்குத் துளிமுத்தம் மாற்றி எனப் பண்டமாற்றுக் குறிப்புப் பெறக் கூறிய சுவையை இங்கேகாணலாம்.
வாய்முத்தங் கொள்ளுதல் என்பது, பிள்ளைப்பருவங்கள் பத்தினுள் முத்தப்பருவம் என்பது குறித்தது. இவ்வாறே முன்னர்
“மழலைத் தீஞ்சொல் வண்ணமென் குதலைச் செவ்வாய்
குதட்டியேவளராநின்றார்”
என்றது செங்கீரைப்பருவங் குறித்ததென்பர்.
இப்பாடல் கண்ணப்பரின் குழந்தைப்பருவச்செயல் பிற்காலத்தில், அவர் செய்த செயற்கரிய செயலை, முன்னதாகக் கூறும் நயத்துடன் விளங்குகிறது. சிவபிரான் வலக்கண்ணில் உதிரம் பாய நின்றது; பின்னர் இடக்கண்ணில் உதிரம் பாய நின்றது; இரண்டும் சூரிய சந்திரராகிய இருசுடருக்கு நேர்ந்த துன்பம்! அதை நீக்கத் தம் கண்களையே எடுத்து அப்ப முயன்ற அரிய செயல் இங்கே முன்னதாகப் போற்றப் பெறுகிறது!