திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

போர்க்களம்  புகுந்த  அதிசூரன் ஏனாதி  நாத்தனாரின்  வாள்வீச்சின்  வலயத்தில் சிக்கினான். எவ்வாறோ  மறைந்து  வெளியேறித் தப்பித்தான். அன்று  இரவெல்லாம் சிந்தித்து ‘’நாம்  நம் நாட்டு வீரர்களைக் கொல்லும் வகையில் திரண்டு போர் புரியாமல், தனிஇடத்தில் சந்தித்து வாட்போர் புரியலாம்‘’ என்று செய்தி அனுப்பினான்.ஏனாதிநாதரும்‘’ அவ்வாறே  ஓரிடத்தில்  வாளுடன் போர் புரிவது  நல்லது‘’ என்றார்.  தம்முடன் இருந்த சுற்றத்தார்  அறியாவகையில் அந்த  இடத்தில் வாழும் கேடயமும் ஏந்தி ஏனாதி நாதர்  காத்து நின்றார்.  திருநீறு பூசிய அடியாரை, நாயனார் எவ்விடத்திலும் தீங்கு புரியார்  என்பதை  அறிந்து, என்றும் திருநீறு பூசி அறியாத  அதிசூரன்,  அன்று  திருநீறணிந்து போர்க்களத்துக்கு  வந்தான். அதனைச்  சேக்கிழார்,

‘’வெண் நீறு நெற்றி விரவப் புறம் பூசி,
உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு,
வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு,
புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்’’

என்று பாடுகிறார்  இப்பாடலின் பொருள்:

திருவெண்ணீற்றினை நெற்றி முழுதும் பொருந்தும்படி புறத்திற் பூசி, நெஞ்சினுள்ளே வஞ்சனையாகிய கறுப்பினையும் உடனே கொண்டு அழகிய

சுடருடைய வாளினையும் மணிகளிழைத்த பலகையினையும் கைகளிற் கொண்டு, புண்ணியப்போர் வீரராகிய ஏனாதிநாதருக்குத் தான் சொல்லிவிட்ட அந்த இடத்திற் புகுந்தான்.

விளக்கம்:

திருநீறு என்பது  பாவம் அறுத்து   திருவருளைத்  தரும் புண்ணியம்   மிகுந்த  வீபூதியைக்  குறிக்கும். அதற்குரிய மேன்மையைக்  குறிக்காமல் இங்கே, வெண்  நீறு என்று குறித்தது, இங்கு அது இவனுக்குத் திருநீறு பூசிய பயன் தந்து பாவமறுக்காமல் அதற்குமாறாகப் பாதகப்பயனே தந்து, வெண்ணீறு  ஆகும் அளவில் மட்டும் நீன்ற தென்பார்,  ‘திருநீறு’  என்னாது வெண்ணீறு என்றார். இங்கு இவன்பால் திருநீற்றின் நிறமாத்திரம் வெண்மையாய் நின்ற தென்பார் பின்னர், கறுப்புமுடன் கொண்டென்று உடன் சேர்த்துக் கூறியதும் காண்க.

நெற்றிவிரவப் புறம்பூசி – தாங்கிய நெற்றியினார் என  முன் பாட்டில்  கூறிய பொருள் இங்கு நினைவு கூர்க. “பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்” என்று திருக்கூட்டச்சிறப்பிற் கூறியபடிக்கில்லாமல், 1. பொய்யாக வேடமிடுதற்காக  2. நீறு புறத்தேயும், 3. அதற்கு மாறாகக் கறுப்பு உள்ளத்தேயும் இருந்தது என்று குறிக்கப் புறம் பூசி என்றும், கறுப்பு முடன் கொண்டு என்றும் கூறினார்.

இது அவனது நான்காவது வஞ்சனை. கறுப்பாகிய வஞ்சம், கோபம் முதலிய தீக்குணங்கள் தாமதகுணத்தின்பாற்பட்டவை. தாமதத்தின் நிறம் கறுப்பு என்ப. நெற்றி விரவ நீறுபூசுதல் நல்லசெயலாக விதிக்கப்பட்டது. அதனைக் குற்ற மென்று கூறலாகாது; குற்றம் வேறாக அவன் உள்ளத்தில் நின்ற தென்று எச்சரிப்பார் நெஞ்சில் கறுப்பும்  உடன் கொண்டென்று உடன் கூறினார். திருநீற்றுப் பொலிவுடன் இது சேர்த்தெண்ணத் தகாதென்பார் இழிவு சிறப்பும்மை தந்து கறுப்பும் என வோதினார்.

வண்ணச்சுடர்வாள் – மணிப்பலகை என்பன  தனிப் பொருளுடையன; நாயனார் ஏந்தியவற்றைச் சுடர்வாள் – பொற்பலகை  என்ற ஆசிரியர், இங்கு மாற்றலனாகிய பாதகனால் ஏந்தப்பட்டுப் பாதகத்துக்குத் துணையாய் நின்ற இப்படைகளை இழிவாகக்  கருதாமல் இவ்வாறு அடைமொழிகள் தந்து சிறப்பித்தது  ஏனெனில், பகைவன் ஏந்தியவை என்று காணாது,-  “அண்டர்பிரான் சீரடியா ராயினார்”  ஒருவர் ஏந்திய படைகளாக நாயனார் இவற்றை நற்பாவனையிற் காண்டலாலும்,- இவை அவர்தந் திருமேனியுந் தீண்டும் பேறு பெறுதலாலும், – “பற்றலர்தம்  கைவாளால்  பாச மறுத்தருளி”  என்றபடி இவை இறைவனது திருவருட் சொரூபமாகிப் பாசமறுக்கும் கருவிகள்  ஆயினமையாலும்,  இவ்வாறு சிறப்பித்தார் என்க. அன்றியும் அவனது தீச்செயலுக்குக் காரணமாய் நின்றது அவனது வஞ்சகக் கறுப்பேயன்றி வாளும் பலகையுமன்று என்பதும் குறிப்பு.

புண்ணியப் போர்வீரர் – என்ற தொடர்,  அதிசூரன் போல வஞ்சனை நெறியாகிய மறநெறியாற் போர் புரியாது அறநெறியாற் போர் புரிபவர் என்பார் இவ்வாறு கூறினார். புண்ணியம் என்னும் அடைமொழி பாவப்போரை நீக்குதலின் இது   பிறிதினியைபு நீக்கிய விசேடணம்.

சொன்ன இடம் – முன்னர் ‘வேறிடம்’, ‘அக்களம்’ என்றபடி பிறர்கண்ணுக்குப் புலப்படாது வஞ்சிக்க ஏற்றதாய் அவன்தானே குறித்த இடம்!  அவன்தன் வஞ்சகத்தை முற்றுவித்தற்கு இந்த மறைவிடத்தை ஒருபெருஞ் சாதனமாகக் கொண்டான் என்பது உணரத்தக்கது.

புகுந்தான் என்ற சொல்,  அவர் தனிநின்றாராக,  இவன் எண்ணியபடி வலிந்து புகுந்து மூண்டு மறம்பூண்டான் என்பதை  உணர்த்தியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.