Category: தொடர்கள்

  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-23

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-23

    தி. இரா. மீனா

    பசவேசர் தொடர்ச்சி

    35. “பாம்பு கடித்தவரைப் பேசவைக்கலாம்
    பேய் பிடித்தவரைப் பேசவைக்கலாம்
    செல்வமெனும் பூதம் பிடித்தவரைப்
    பேசவைக்க முடியாது காணீர்
    வறுமை என்னும் மந்திரவாதி வந்தால்
    உடனே கூறுவார்கள், கூடலசங்கமதேவா என்றே“

    36. “நீர் தப்பிய மீன் வாழ்வதில்லை
    சிவகணங்களுடன் என்னைச் சேர், இலிங்கமே
    சிவசிவா கூடலசங்கமதேவா
    முந்தானை நீட்டிக் கெஞ்சுகிறேன்”

    37. “பானை செய்ய மண்ணே அடிப்படையாம்
    தோடு செய்யப் பொன்னே அடிப்படையாம்
    சிவநெறியறிய குருநெறியே அடிப்படையாம்
    நமது கூடலசங்மதேவனை அறிய
    அடியவர் கூட்டமே அடிப்படையாம்“

    38. “விழாவிற்கென வந்த பலியாட்டுக்குட்டி
    தோரணத் தளிர்களைத் தின்றது
    கொல்லப் போகிறார்கள் என்பதறியாமல்
    வேகப் போகும் உடலை வளர்க்க முயன்றது.
    மக்கள் பிறந்ததும் அவ்வாறே பெற்றதும் அவ்வாறே
    கொன்றவர் மிஞ்சினார்களோ, கூடலசங்கமதேவா?”

    39. “எலே எலே மனிதா பேராசை வேண்டாமடா!
    வளர்பிறை தேய்பிறையாம் செல்வம் நிலையல்ல
    அழியா அரசு பெறவே கூடலசங்கம தேவனே
    மறவாமல் பூசை செய்வாய்“

    40. “சாணத்தில் பிடித்த விநாயகனைச்
    சம்பங்கி மலர் கொண்டு பூசித்தால்
    அலங்காரம் ஆகுமன்றி நாற்றம் விடுவதில்லை.
    மண் பொம்மையை விடாது நீரில் கழுவினால்
    அடுத்தடுத்துச் சேறாவதல்லாது அதனியல்பு மாறாது.
    உலகில் ஊறிய மனிதனுக்குச் சிவதீட்சை தந்தால்
    கெட்டவன் ஏன் சிவபக்தன் ஆகான் கூடலசங்கமதேவா?”

     41.“தீட்டுண்டோ இலிங்கமிருக்கமிடத்திலே?
    குலமுண்டோ ஜங்மனிருப்பிடத்தில்?
    எச்சிலுண்டோ பிரசாதமிருக்குமிடத்தில்?
    தூய்மையின்றிப் பேசுபவன் சூதகன் பாதகன்
    களங்கமின்மை ,உண்மை ,ஐக்கியம் என்னும் மூவகை
    மனவுறுதியால் கூடலசங்கமதேவனே
    உனது சரணருக்கு இல்லாதது வேறு எதுவுமில்லை“

    எளிமை, தியாகம், நல்லெண்ணம், மிருதுவான இயல்பு மற்றும் கடினத் தன்மை, கவித்திறன், அச்சமின்மை தூயமனம் என்று அனைதியல்பு களையும் பெற்ற ஒரு சிறந்த நாயகனாகவே பசவேசர் தன் காலத்து மனிதர்களால் போற்றப்பட்டவர். ”பசவண்ணர்  நடந்ததே வழி, எல்லா உயிர்களுக்கும் அவன் சொன்னதே வேதம்“ என்று மருளசங்கரன் என்னும் வசனக்காரரும்

    “எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு பசவன் என்னும் கோடி
    எட்டிப் பார்த்தால் இலிங்கத்தின் கூட்டம்
    நெருங்கிப் பார்த்தால் பக்தியென்ய்ம் ரசமையா“

    என்று மடிவாளமாச்சையன் என்னும் வசனக்காரரும்  கூறுகின்றனர். ”பசவண்ணரின் எண்ணம் இன்பப் பெருங்கடலையா“என்று சித்த ராமன் போற்றுகிறார். ”பசவனின் பெயர் சிவனின் முக்கிய கணங்கள் எல்லாவற்றின் பெயரிலும் தலையாயது“என்று பீமகவி போற்றுகிறார்.

    தாசோஹத சங்கண்ணா

    சரணர்களுக்கு அன்னம் படைப்பதே இவர் காயகம்.அதனாலேயே இவருக்கு “தாசோஹத சங்கண்ணா“என்பது பெயராகிவிட்டது. “மாதுளங்க மதுகேஸ்வரன்“ இவரது முத்திரையாகும்.

    1.“காண்பவர் அனைவரும் ஆடமுடியுமா?
    பேசுபவர் அனைவருமங்கலிங்கத்தின் யோகமறிவார்களா?
    சாதனை செய்கின்றவர் அனைவரும் போர் புரிவார்களா?
    போலியான யோகியர் அங்கலிங்கம் யோகமறிவாரோ?
    சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
    பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

    2. “ பூனையை விழுங்கிய சேவல்
    காலமறிந்து தன் குரலால் கூவமுடியுமா?
    இலிங்கமறிந்த மனம் சம்சாரக் கூட்டத்தில் மூழ்குமோ?
    இவ்வேற்றுமையறிந்து யோக உறவிலிருக்க வேண்டும்
    சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
    பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

    3. “ கருவிக்குக் கட்டுப்பாடேயன்றி  நாதத்திற்குண்டோ?
    அறிவிற்குக் கட்டுப்பாடேயன்றி அறிவாளிக்குண்டோ?
    அறிந்தேனெனும் பிரமை அறிந்துகொண்டேன் என்ற
    அடையாளம் இரண்டும் இருக்கும்போது
    எண்ணம் தூய்மையன்று.
    சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
    பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

    4. “கல்லுள் நெருப்பின் நிலைபோல
    ஆதியந்தம் இடையென நினைக்காமல்
    எங்கு தொட்டாலும் பொறி எழுவது போல
    அங்கம் முழுவதும் இலிங்கமான சரணனுக்கு
    எந்நிலையில் பார்த்தாலும் இலிங்கமிருக்கும்
    எதிரில் தான் மற்றவரெனும் தீட்டு அவனுக்கில்லை
    பழத்துள் விடம் கலந்தால்
    தின்றவனுக்கன்றி பழத்திற்குக் கேடோ?
    இக்குணம் உடல் முழுவதும் இலிங்கமானவனுக்குரித்து.
    சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
    பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

    5. “புற்றுக்குப் பாம்பாகி நீருக்கு நீர்ப்பாம்பாகி
    கிளைக்குக் குரங்காகி அவரவர் போக்கில்
    இறைச்சிக்குக் காத்திருக்கும் நரிபோலத் திரிவதேன்?
    ஆயுள் முடிந்தபின்னர் மரணம்
    செல்வம் போனபின் தரித்திரம் தப்பாது என்றறிந்த பின்
    இறந்தது போல அமைதியாயிருக்க வேண்டும்
    பக்தியின் வழியிது
    சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
    பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 80 (இன்று நீர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 80 (இன்று நீர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இன்று   நீர்எனக்  கருள்செய்த  திதுவேல்
        என்னு   யிர்க்கொரு   நாதநீர்   உரைத்தது
    ஒன்றைநான்   செய்யும்  அத்தனை  யல்லால்
         உரிமை  வேறுள்ள   தோஎனக்  கென்று
    தன்த   னிப்பெருங்   கணவரை   வணங்கத்
          தாழ்ந்து   தொண்டனார்  தாமெதிர்  வணங்க 
    சென்று  மாதவன்  சேவடிபணிந்து
           திகைத்து நின்றனள்  திருவினும்  பெரியாள்   

    நீங்கள் விரும்பிய பொருள் முன்பே என்னிடம் உள்ளபொருள்தானே, அதனை விரும்பியது எம்பிரான் எனக்குச் செய்த பெரும்பாக்கியம் ஆகும்! என்று கூறிய இயற்பகையார், மிகவும் விரைவாகத் தம்இல்லத்தில் புகுந்தார். அங்கே   மனை வாழ்க்கை  வாழ்கின்ற கற்பில் மேம்பட்ட தம் காதலுக்கு உரியவரைநோக்கினார். ‘’இதுவரை திருமண விதிப்படி என்னைத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் மடந்தையே, இன்று உன்னை இங்கே வந்துள்ள உண்மையான தவமுனிவருக்கு உரிமையாக்கி  நான் கொடுத்து  விட்டேன்!’’ என்றார்.

    அதனைக்கேட்ட அவ்வம்மையார், ‘’இன்று எனக்குக் கட்டளையிட்டுச் செய்யுமாறு அருளியது இதுதான்  என்றால், என் உயிருக்கும்  உரிய நாதராகிய  நீங்கள் கூறிய  இவ்வொப்பற்ற செயலை உடனே ஏற்றுச் செய்யும் அளவன்றி, எனக்கு வேறு வகையான உரிமை உண்டோ?’’ என்று கூறினாள். உடனே அவர் தம் தனிச் சிறப்புடைய கணவரை வணங்கினார்; தொண்டராகிய இயற்பகையார், அவரைமிகுந்த பணிவுடன் வணங்கினார். திருமகளைவிடவும் பெரியவளாகிய அந்த அம்மையார் உடனே விலகிச் சென்று, அங்கு வந்திருந்த அந்தணரின் திருவடி பணிந்து வணங்கியபின்  திகைப்படைந்து  நின்றார்.

    இந்தவிடத்தில் நமக்கு இயல்பாக எழும் சிந்தனைக்கும், வினாக்களுக்கும் உரிய விடைகள் இப்பாடலிலேயே நுட்பமாக அமைந்துள்ள  சிறப்பை என்னவென்று சொல்ல! இதன்  முதற் பாடலில் ‘’விதிமணக்குல மடந்தை’’ என்று அழைக்கிறார், கணவனின் சொல்லை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும்  என்பது திருமணத்தின்  விதி. சைவநாயன்மார்கள் தம்மிடம் உள்ளவை யாவும் சிவன்சொத்தே என்று கருதுவர். இறைவனிடத்து அடியார்கள் செலுத்தும் பக்தி  ‘’அடிமைத்திறம்’’ என்று போற்றப் பெறும்.

    ‘’எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே!’’

    என்பது சம்பந்தர் வாக்கு. அப்பரடிகள்,

    சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
    எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே

    என்று பாடுகையில் அடிமைத்திறத்தில் சிந்தனைக்கும் திகைப்புக்கும் இடமில்லை என்கிறார். மேலும்,

    எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னைக்
    கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே!

    என்றும்,

    அல்லல் என் செயும் அருவினை என் செயும்
    தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்
    தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு
    எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே என்றும் பாடுகிறார்.

    யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்

    என்றும்,

    ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்

    என்றும் பாடி அடிமைத் திறத்தின் பெருமையைக்  கூறுகிறார். திருமூலர்,

    அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
    அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
    அடியார் அருளால் அவன் அடி கூட
    அடியான் இவன் என்று அடிமை கொண்டானே

    என்ற பாடலில்  சிவனடிரின் மிகமிகத் தாழ்ந்த  அடிமை நிலையை வரையறுக்கிறார். அதனால் தான் தம் மகனைஅறுத்து அடியாருண்ணக்  கறியமுதாக்கியும், தம்மகளின் கூந்தலை அடியாரின் பஞ்சவடிக்கு ஆக்கியும் அடியார் பிறர், எந்தத் தயக்கமும் இல்லாது இறைவனுக்கு எல்லாம் நல்கினர்.  இதனையே,

    ‘’என்னு யிர்க்கொரு நாதநீர் உரைத்தது
    ஒன்றைநான் செய்யும் அத்தனை யல்லால்
     உரிமை வேறுள்ள தோஎனக்கு? ‘’

    என்கிறார் இயற்பகையார் மனைவியார். மேலும் இவ்வாறு கூறி வணங்கிய மனைவியாரைக் கணவனாரே வணங்கினார். இதனால்  கடவுளுக்கு அளிக்கப் பெறும் பொருளையும் கடவுளாகவே வணங்கி அதனுடன் தனக்குள்ள தொடர்பையும் விலக்கத் துணிந்தமை புலனாகும். அவ்வாறே மனைவியாரும் கணவன் விருப்பப்படி வந்த அடியவர் பால் சென்று பின் திகைத்து நின்றார் என்கிறார் சேக்கிழார்! அம்மையார் திகைத்து நின்றமைக்கு நுட்பமான காரணம் உண்டு! இயற்பகையார் மனைவியார் ‘’கற்பின் மேம்பட்ட காதலுக்கு உரியவர்’’ என்று முன் பாடலில் குறிப்பிட்டார். அம்மாதரசியின் குடும்பக் கடமை என்ற தவத்தினைச் செய்தமையால் அவர் பெற்ற ஞானம், வந்த அந்தணரை இறைவனாகவே காணச்  செய்தது. அதனால் அவருக்கு  உண்டான அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அவரைத் திகைக்க வைத்தது,  என்பதை நாம்  உய்த்துணர்கிறோம்! திருமகள் கணவனின் சங்கற்பத்தால், சீதையாகி அவனுக்காகத் தாமே சிறையில் இருந்தமை,  அசுரன் வீழ்த்தக் கடலில் கடலில் மூழ்கியமை போன்றவை திருமால் அவதரித்தபோது அவருக்காகத்  தாமும் அவதரித்துத்  தாழ்ந்து  வாழ்ந்த தேவர்குலத்  திருமகளின்  பெருமையாகும். ஆனால் எளிய மானிடப் பெண்ணாகிய இயற்பகையார் மனைவியார், கணவனின் கொள்கைக்குத் துணைபுரிந்த செயலால் திருமகளை விடப் பெரியவள் ஆனாள் என்பதை உணர்த்தவே, இப்பாடலின் இறுதியில் ‘’ திருவினும் பெரியாள் ‘’ என்ற தொடர் அமைந்தது!  மீண்டும் பொருளுணர்ந்து இப்பாடலைப் பயில்வோம்

    இன்று   நீர்எனக்  கருள்செய்த  திதுவேல்
        என்னு   யிர்க்கொரு   நாதநீர்   உரைத்தது
    ஒன்றைநான்   செய்யும்  அத்தனை  யல்லால்
         உரிமை  வேறுள்ள   தோஎனக்  கென்று
    தன்த   னிப்பெருங்   கணவரை   வணங்கத்
          தாழ்ந்து   தொண்டனார்  தாமெதிர்  வணங்க 
    சென்று  மாதவன்  சேவடிபணிந்து
           திகைத்து நின்றனள்  திருவினும்  பெரியாள்   

    Share
  • நாலடியார் நயம் – 16

    நாலடியார் நயம் – 16

    நாங்குநேரி வாசஸ்ரீ

    16. மேன் மக்கள்

    பாடல் 151

    அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
    திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
    மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
    தேய்வர் ஒருமாசு உறின்.

    அழகிய இடத்தினை உடைய
    ஆகாயத்தில் விரிந்த நிலவினைப்
    பரப்பும் சந்திரனும் பெரியோரும்
    தம்முள் பெரும்பாலும் ஒப்பாவர்
    திங்கள் தம் களங்கத்தைப்
    பொறுப்பதுபோல் பெரியோர்
    பொறுக்காது தவறு நேருங்கால்
    தம்முள் வருந்தி மெலிவர்.

    பாடல்152

    இசையும் எனினும் இசையா தெனினும்
    வசைதீர எண்ணுவர் சான்றோர் – விசையின்
    நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
    அரிமாப் பிழைபெய்த கோல்?

    கடும்வேகத்துடன் நரியின் மார்பைக்
    கிழித்த அம்பை விட சிங்கத்தை
    அழிக்க விடப்பட்ட குறிதவறிய
    அம்பு உயர்ந்ததாம் அதுபோல்
    முடிந்தாலும் முடியாவிட்டாலும்
    மேலோர் பழியற்ற செயலையே
    மனதிற்கொண்டு செய்வர்.

    பாடல் 153

    நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
    குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் – உரங்கவறா
    உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
    செய்வர் செயற்பா லவை.

    நரம்புகள் வெளித்தோன்றுமாறு
    நலிந்து வறுமையுற்றாலும்
    நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து
    நாவால் இரத்தலெனும் குற்றம்செய்ய
    நடந்து பிறரிடம் செல்லார்
    நல்லறிவைக் கவறாகக் கொண்டு
    நன்முயற்சியெனும் நாரினால்
    நெஞ்சத்தைக் அடக்கிக் கட்டி
    நற்செயலை உள்ள பொருள்கொண்டு
    நன்கு ஆற்றுவர் மேலோர்.

    பாடல் 154

    செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
    தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
    நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
    கல்வரையும் உண்டாம் நெறி.

    நல்ல மலைகள் உள்ள
    நாட்டுடை மன்னனே!
    போகும் வழியில் ஒருநாள்
    பார்த்தாலும் அவருடன்
    பலநாள் பழகியதுபோல்
    நட்புகொள்வர் மேன்மக்கள்
    தொடர்ந்து சிலநாள் நடந்தால்
    கல்மிகுந்த மலையும் தேய்ந்து
    காலடிபட்டு வழி உண்டாக்கும்
    பலநாள் பழகிப் பின் வரும் நட்பில்
    பெருமையில்லை மேன்மக்கள் நட்பே
    பெருமை வாய்ந்தது.

    பாடல் 155

    புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
    கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
    நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
    பல்லாருள் நாணல் பரிந்து.

    அரும் நூற்பொருளறியாப் பயனற்றவரின்
    அவையைச் சார்ந்த கல்லா ஒருவன்
    பொருத்தமற்று உரைப்பனவற்றை
    பலர்முன் சுட்டிக் காண்பித்தால்
    பல்லோரிடை அவனுக்கு அவமானம்
    விளையும் என எண்ணி மனம்
    வருந்தினாலும் அமைதியாய்க்
    கேட்டிருப்பர் அறிவுடையோர்.

    பாடல் 156

    கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
    இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
    வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
    கூறார்தம் வாயிற் சிதைந்து.

    கரும்பைப் பல்லால் கடித்தாலும்
    கணுக்கள் உடையுமாறு நெரித்து
    ஆலையில் சாறுபிழிந்து
    அருந்தினாலும் இன்சுவை உள்ளதே
    அத்தகு மேன்மக்களோ
    மனம் புண்படும்படி
    மற்றோர் இகழ்ந்துரைத்தாலும்
    தம் வாயால் வசை கூறார்.

    பாடல் 157

    கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
    எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் – தள்ளியும்
    வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
    சாயின் பரிவ திலர்.

    குற்றமற்ற அறிவுடையோர்
    களவு செய்யார் கள் அருந்தார்
    தள்ளத்தக்கவைகளைத் தள்ளி
    தூயவராய் மற்றோரை அவமதியார்
    தவறியும் தம் வாயால் பொய்யுரையார்
    தம் நிலைகெட்டுத் தளர்ந்தாலும் வறுந்தார்.

    பாடல் 158

    பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
    ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
    புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
    அறங்கூற வேண்டா அவற்கு.

    அன்னியரின் இரகசியம் கேட்பதில் செவிடனாவும்
    அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாவும்
    அடுத்தவரில்லா நேரம் பழி பேசுவதில் ஊமையாகவும்
    அமைந்தவனுக்கு எவ்வித அறமும் கூறவேண்டா.

    பாடல் 159

    பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
    என்னானும் வேண்டுப என்றிகழ்ப – என்னானும்
    வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
    காண்தொறும் செய்வர் சிறப்பு.

    நற்பண்பில்லாக் கீழோர் பல
    நாட்கள் வந்து கொண்டிருப்பவரையும்
    நம்மிடம் பலன் எதிர்பார்ப்பவர் என
    நம்பி அவமதித்து ஒதுக்குவர்
    நற்குணம்நிறை மேலோர்
    நாடி வருபவர் எதைக் கேட்டாலும்
    நல்லது என்று கூறி மகிழ்ந்து
    நாளும் நன்மையே செய்வர்.

    பாடல் 160

    உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
    கடையாயார் பின்சென்று வாழ்வர்; – உடைய
    பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
    குலந்தலைப் பட்ட இடத்து.

    செல்வம் உடையவர் இவர் எனச்
    சிந்தித்து உறுதியாய்ப் பற்றிக்கொண்டு
    அற்ப மனிதர் பின்சென்று பிழைப்பர் சிலர்
    அவர் மேன்மக்களுடன் சேர்ந்தவிடத்து
    அளவில்லாப் பொருள்நிறை சுரங்கம்
    அகப்பட்டதுபோல் இன்பம் கிட்டாதோ?

    Share
  • நாலடியார் நயம் – 15

    நாலடியார் நயம் – 15

    நாங்குநேரி வாசஸ்ரீ

     15. குடிப்பிறப்பு

    பாடல் 141

    உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
    குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
    இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
    கொடிப்புல் கறிக்குமோ மற்று.

    ஆறாப் பசித்துயரிலும் சிங்கம்
    அருகம்புல்லைத் தின்னாது
    உடுக்கும்உடை கிழிந்து
    உடல் மெலிந்த வறுமையிலும்
    உயர்குடியில் பிறந்தோர் தம்
    உயர் ஒழுக்கத்தில் சிறிதும் குறையார்.

    பாடல் 142

    சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
    வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது – வான்தோயும்
    மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
    எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

    மேகங்கள் தவழும்
    மலைகளுடை அரசனே!
    மேன்மை பெருந்தன்மை ஒழுக்கம்
    மூன்றும் உயர்குடியில் பிறந்தோரிடம்
    அல்லாது பெருஞ்செல்வம் சேர்ந்த
    அளவிலும் பிறரிடம் உண்டாகா.

    பாடல் 143

    இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
    விடுப்ப ஒழிதலோடு இன்ன – குடிப்பிறந்தார்
    குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
    ஒன்றா உணரற்பாற் றன்று.

    பெரியோர் வரக் கண்டால்
    பணிவாய் எழுதலும்
    எதிர்சென்று வரவேற்றலும்
    ஏனைய உபசாரங்களும்
    விடைபெரும் நேரம்
    பின்சென்று திரும்புதலுமெனும்
    நல்லொழுக்கங்களைக் கொண்ட
    நற்குடியில் பிறந்தோரை
    நற்பண்பில்லா மூடருடன்
    ஒப்பிடுதல் ஏற்புடையதன்று.

    பாடல் 144

    நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
    பல்லவர் தூற்றும் பழியாகும் – எல்லாம்
    உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
    புணரும் ஒருவர்க் கெனின்?

    அவர் நல்லவை செய்யின்
    அது செய்யத்தகுந்த முறைமையாம்
    கெடுதல் செய்யின் பலரால்
    கெட்டவரெனப் பழிக்கப்படுவாராமெனின்
    அனைத்தும் உணர்ந்த அக்குடிப்பிறப்பால்
    உயர்குடிப்பிறப்பு அமைந்த ஒருவர்க்கு
    உண்டாகும் பயன்தான் என்ன?

    பாடல் 145

    கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
    சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; – எல்லாம்
    இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
    மாணாக் குடிப்பிறந்தார்.

    கல்லாமைக்கு அஞ்சுவதும்
    கீழோரின் இழிதொழிலுக்கு அஞ்சுவதும்
    தகாத சொல் சொல்ல அஞ்சுவதும்
    தம்மிடம் கேட்பவர்க்குக் கொடுக்க
    இயலாமைக்கு அஞ்சுவதும் எனும்
    அச்சங்கள் உயர்குடிப்பிறந்தோரிடம்
    அமைந்துள்ளதால் மாண்புகளற்ற
    அச்சமில்லாத மற்றவர்
    மரத்தன்மையுடையோராம்.

    பாடல் 146

    இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
    மனநன்மை என்றிவை யெல்லாம் – கனமணி
    முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
    இற்பிறந்தார் கண்ணே யுள.

    மாணிக்க மணிகள் முத்துக்களுடன்
    மயங்கி ஒளிவீசும் ஒலிக்கும் கடலின்
    குளிர்மிகு கரையுடை வேந்தனே!
    சேருபவர்களின் நன்மை அவர்
    சொல்லும் இன்சொல்
    வறியவர்க்குக் கொடுத்தல்
    மனத்தூய்மை எனும்
    நற்குணங்கள் எல்லாம்
    நற்குடிப்பிறந்தவர்களிடத்தே உண்டு.

    பாடல் 147

    செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
    பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
    எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
    செய்வர் செயற்பா லவை.

    வேலைப்பாடுகள் குலைந்து
    வீடுமுழுதும் கரையான் பிடித்தாலும்
    பெரிய வீடானது மழை
    பெய்யா ஒருபக்கத்தைப் பெற்றதுபோல்
    எத்தகு வறுமைத் துன்பம் வரினும்
    நற்குடிப்பிறந்தோர் செய்யத்தக்க
    நற்செயல்களையே செய்வர்.

    பாடல் 148

    ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
    அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் – திங்கள்போல்
    செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
    ஒல்கார் குடிப்பிறந் தார்.

    இராகு எனும் பாம்பு ஒருபக்கத்தை
    இறுகப் பிடித்தாலும் தம் மறுபக்கத்தால்
    அழகிய பெரும் உலகிற்கு ஒளிகொடுக்கும்
    நிலவுபோல் வறுமைத் துன்பம் முன்னே
    நிற்பினும் தளராது உதவுவர் உயர்குடிப்பிறந்தோர்.

    பாடல் 149

    செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
    செல்லிடத்தும் செய்யார் சிறியவர் – புல்வாய்
    பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
    பொருமுரண் ஆற்றுதல் இன்று.

    பருத்திருக்கும்போதும் மானினால்
    பாயும் குதிரைபோல்
    போரிட இயலாததுபோல
    வறுமை வாட்டும்நிலையிலும்
    உயர்குடிப்பிறந்தார் ஆற்றும்
    நற்செயலைச் செல்வம் மிக்குள்ள
    நேரத்திலும் செய்யார் கீழோர்.

    பாடல் 150

    எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
    அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
    அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
    தெற்றெனத் தெண்ணீர் படும்.

    தண்ணீரற்ற காலத்தும் அகன்ற ஆறு
    தோண்டியவுடன் நீர்கொடுப்பதுபோல்
    பொருளற்ற காலத்தும் உயர்ந்தோர்
    தம்மை அண்டிவந்தவரின்
    துன்பம் போக்கி ஊன்றுகோலாய்த்
    தளர்ச்சி நீங்க உதவுவர்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 15

    பழகத் தெரிய வேணும் – 15

    நிர்மலா ராகவன்

    (சுயமரியாதையுடைய பெண்கள்)

    கணவனாலோ, பிறராலோ சிறுமைப்படுத்தப்பட்டால், ‘மரியாதை’ என்று அடங்கிப்போய், அதை ஏற்கமாட்டார்கள் சில பெண்கள். இவர்களுக்கு சுயமரியாதை முக்கியம்.

    இவர்களுக்கு புத்திசாலித்தனத்துடன் துணிச்சலும் உண்டு.

    கதை

    ‘பெண்களை அதிகம் படிக்க வைத்துவிட்டால், ஆண்களை மதிக்கமாட்டாள். அடங்கவேமாட்டாள்!’ என்று அச்சுறுத்தியவர்களை அலட்சியம் செய்யும் விவேகம் காயத்ரியின் பெற்றோருக்கு இருந்தது.

    சிறுவயதிலிருந்தே, ‘நீ தைரியசாலி. புத்திசாலி!’ என்று ஊக்கமளித்து அவளை வளர்த்தார்கள்.

    ‘எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் முழுக்கவனத்தையும் செலுத்து. அப்போதுதான் சிறப்பாகச் செய்து வெற்றி பெறமுடியும்,’ என்று தினமும் போதித்தார் தந்தை.

    பெற்றோர் தனக்கு நல்லதுதான் சொல்வார்கள் என்று நம்பி, அவர்கள் சொற்படி நடந்தாள். சிறு வெற்றிகள் கிடைக்க, தன்னம்பிக்கை வளர்ந்தது.

    வாழ்க்கையில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்தபோதும், யாருக்காகவும் காயத்ரி தன் ஆற்றலை விட்டுக்கொடுக்கவில்லை.

    அவளைப் பார்த்துப் பயந்த ஆண்கள் புகழ்ச்சியால் அவளைக் கவர முயற்சித்தார்கள் — அப்படியாவது அவளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற எண்ணத்துடன்.

    இப்படி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை எந்த ஆணும் வசப்படுத்தவோ, பலகீனப்படுத்தவோ முடியாது என்று அவர்களுக்குப் புரியாது நடந்ததால் அவமானத்திற்கு ஆளானார்கள்.

    பல ஆண்களுக்கு இன்றும் இது புரியாததால்தான் விவாகரத்து அதிகரிக்கிறது.

    அழகும் மகிழ்ச்சியும்

    ஒருசில பெண்கள் கவனமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். ‘மூக்கும் முழியுமாக இருக்கிறாள்!’ என்று பெண்களே பாராட்டும்வகையில் இருப்பார்கள். ஆனால், ‘அழகு’ என்று பிரமிக்கவைக்கும்படி இருக்கமாட்டார்கள்.

    இன்னொரு வகையினர் எளிமையான தோற்றத்துடன் இருந்தாலும், அவர்களை நாடத் தோன்றும். ஏனெனில், பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று புரிந்து, தம் மகிழ்ச்சியை அறவே இழக்காமல் இருப்பவர்கள் அவர்கள்.

    இந்த உண்மையை உறுதி செய்கிறார் நடிகை AUDREY HEPBURN: “மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள்தாம் அழகானவர்கள்”.

    பெற்றோரும், ஆசிரியரும், ‘இதுதான் நீ போகவேண்டிய பாதை’ என்று வற்புறுத்தினால், அதில் ஆர்வமே இல்லாதபோது எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?

    ‘காதல் திருமணம்கூட இரு வருடங்களுக்குப்பின் அலுப்பைத்தான் தருகிறது,’ என்று சலிப்புடன் ஒத்துக்கொண்டாள் ஆங்கிலேயப்பெண்ணான அலெக்ஸாண்டரா.

    கதை

    நன்கு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்த ஜெயமலரை மணக்க அவள் அலுவலகத்திலிருந்த பலர் போட்டியிட்டனர்.

    அவள் தேர்ந்தெடுத்தது வேணுவை. ஏனெனில், அவன்தானே அவளை நிறையப் புகழ்ந்து, பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவளைத்தவிர தனக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டான்!

    அவள் கிடைத்ததும், ‘இனியும் அவளை மயக்க முயற்சிகள் செய்வானேன்!’ என்று எண்ணியதுபோல், நண்பர்களுடனேயே காலத்தைக் கழிக்க ஆரம்பித்தான் வேணு.

    புதிதாகக் கல்யாணமான பெண் கணவன் தன்னை தினந்தோறும் வெளியில் எங்காவது அழைத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். காதலித்தபோது அப்படித்தானே நடந்துகொண்டான்?

    ஆணுடைய எண்ணப்போக்கே வேறு. காதலியுடன் கொண்ட நெருக்கம் முன்பு அவனுக்குக் கிளர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். சற்று பழகியபின், அதிலுள்ள கவர்ச்சி, எதிர்பார்ப்பு, அலுத்துவிடுகிறது.

    இந்தக் குணம் பெண்களுக்குப் புரிவதில்லை.

    மனைவியின் ‘தொணதொணப்பு’ தாங்காது, முன்போல் நண்பர்களை நாடுகிறான். அவர்கள்தாம் தன்னைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

    பொதுவாக, வீட்டு வேலை, குழந்தைகள் இதெல்லாம் பெண்கள் வேலை என்று ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். மாற்றமில்லாமல் காலம் கழிக்க நேரிட்டால் எவருக்கும் அலுப்பு ஏற்பட, ஆத்திரம் எழாமல் என்ன செய்யும்!

    ‘எதற்கு வீண் சண்டை!’ என்று யோசித்து, வேறு உபாயங்களைக் கடைப்பிடிக்கலாமே!

    கதை

    ஒரு பெண் வேறொரு உபாயத்தைக் கைப்பிடித்தாள்.

    “இரண்டு நாட்கள் நான் செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் செய்யுங்கள். என் நிலை புரியும்,” என கணவரும் ஒப்புக்கொண்டார்.

    அந்த காலக்கெடு முடிந்ததும், “ஓயாத வீட்டு வேலை இவ்வளவு சலிப்பானதா! எனக்குத் தெரியாமல் போயிற்று!” என்று அயர்ந்தார்.

    அதன்பின், அவளுடைய வேலைகளில் பங்குகொண்டார். நிறையப் பேசும் தருணங்கள் வாய்த்தன.

    ஓயாத சண்டையா?

    “நான் அடிக்கடி எங்க வீட்டுத் தோட்டத்திலே புதிய பூஞ்செடிகள் வாங்கிவைப்பேன். எங்கம்மா, ‘தண்ணீர் விடாம எல்லாத்தையும் வாடவெச்சு, திரும்பவும் வேற வாங்குவே!’ன்னு கேலி செய்வாங்க,” என்று சிரித்தபடி ஒத்துக்கொண்டாள் என் தோழி ஒருத்தி.

    தகுந்த பராமரிப்பு இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கையும் இப்படித்தான் துவண்டுபோகிறது.

    தொற்றுநோய் பரவாதிருக்க வீட்டுக்குள்ளேயேதான் ‘அடைந்து கிடக்க’வேண்டும் என்ற தற்கால நிலையில், குடும்பச் சண்டைகள் அதிகரித்துவிட்டனவாம்.

    அதையொட்டி ஒரு துணுக்கு: எப்படி ஒரே வீட்டில் பேசாமல் இருப்பது என்று கற்றுக்கொடுக்க பதினேழு ஆண்டுகளுக்குமேல் ஒன்றாக இருக்கும் தம்பதிகள் தேவை!

    திருமணம் செய்துகொண்ட பின்னர் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒரு செடிக்குத் தினமும் நீர் பாய்ச்சி கவனித்துக்கொள்வதுபோல், ஒவ்வொரு நாளும் இல்லற வாழ்க்கை தழைக்க ஏதாவது செய்யவேண்டும்.

    ஏன் கோபம் எப்போதும்?

    ‘எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்பாள் ஒரு தாய், தான் பெற்ற குழந்தைகளை திட்டுவதையும் அடிப்பதையும் நியாயப்படுத்துவதுபோல்.

    அவளுக்கு என்னென்னமோ ஆசைகள். ஆனால், அவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பொய்த்துப்போன கனவுகள் எரிச்சலில் கொண்டுவிட்டன.

    ஒன்றை இழந்தால் வேறொன்று கிடைக்கலாம். கடந்ததையே எண்ணி வருந்தி, அந்த வருத்தத்தை ஆத்திரமாக மாற்றிக்கொள்வதால் யாருக்கு நிம்மதி?

    திருமணத்திற்குப்பின்

    பல பெண்கள் தாம் ரசித்து ஈடுபட்ட பொழுதுபோக்குகளை விட்டுவிடுகிறார்கள். ஆர்வக்குறைவால் அல்ல.

    ‘பாடுவதாக இருந்தால் தினமும் சாதகம் செய்ய வேண்டுமே!’

    ‘குழந்தைகள், வீட்டுவேலை! மற்றதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கிறது!’

    ‘முன்பெல்லாம் நிறைய எழுதினேன். இப்போது கற்பனையே வரண்டுவிட்டது!’

    இப்படி ஏதேதோ காரணங்களைக் காட்டி சமாளித்தாலும், கணவரைவிட கூடுதலான வெற்றி பெற்றால் குடும்ப ஒற்றுமை குலைந்துவிடுமோ என்ற பயம் ஒரு முக்கிய காரணம்.

    ‘எடுத்த காரியத்தை எப்படி நல்லபடியாக செய்து முடிப்பது?’ என்ற தயக்கமும் எழக்கூடும்.

    தன் தவறு எங்கே என்று புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் துணிவு அவசியம். பயத்தையும், தயக்கத்தையும் மீறிச் செய்தால் வெற்றி கிடைக்கும்.

    பெரிதாக எதையும் சாதிக்க வேண்டும் என்பதில்லை. செய்வதைக் கருத்துடன் செய்தாலே மகிழ்ச்சி கிடைக்குமே!

    ஏதோ கொஞ்சம் சாதித்துவிட்டு, அதையே எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தருமா?

    துணிவிற்கும் தசைநார்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்கிறார்கள்.

    நம்பிக்கையை இழக்காது, துணிச்சலைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் அது விருத்தியடையும்.

    அலட்சியமாக விட்டுவிட்டால், தசைநார்கள்போல் துணிச்சலும் வலுவிழந்துவிடும்.

    Share
  • நாலடியார் நயம் – 14

    நாலடியார் நயம் – 14

    நாங்குநேரி வாசஸ்ரீ

    14. கல்வி

    பாடல் 131

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி அழகே அழகு.

    சீர்படித்தி முடித்த தலைமுடியினழகும்
    சிறப்பாகக் கரையிட்ட ஆடையினழகும்
    பூசிய மஞ்சளின் அழகும்
    பூவுலகில் உண்மை அழகல்ல
    உண்மையாய் நடக்கும் நடுவுநிலைமை
    உணர்வைத் தருவதால் கல்வியால்
    உண்டாகின்ற அழகே உயர்ந்த அழகு.

    பாடல் 132

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
    எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
    மம்மர் அறுக்கும் மருந்து.

    இவ்வுலக இன்பத்தைத்தரும்
    ஈவதனால் குறையாது
    தம் புகழை எங்கும் பரப்பும்
    தம் உயிருள்ளவரை அழியாது
    ஆதலில் கல்விபோல் எவ்வுலகிலும்
    அறியாமை போக்கும் மருந்தை
    யாம் கண்டதில்லை.

    பாடல் 133

    களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
    விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
    கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
    தலைநிலத்து வைக்கப்படும்.

    உவர்நிலத்தில் உண்டான உப்பை
    உயர்ந்தோர் நன்செய் விளைநெல்லினும்
    உயர்வாய்க் கருதுவர் கீழ்க்குடியில்
    உதித்தவராயினும் கற்றறிந்தவராயின்
    உயர்குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து
    உயர்வாய்ப் போற்றி மதித்தல் வேண்டும்.

    பாடல்134

    வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
    மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
    எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
    விச்சைமற் றல்ல பிற.

    வைத்த இடமான மனதிலிருந்து
    வேறொருவரால் கவரஇயலாது
    தமக்குக் கிடைத்ததைப் பிறருக்குத்
    தருவதால் அழிவதில்லை
    படை வலிமைமிக்க மன்னர் சினந்தாலும்
    பிடுங்கிக்கொள்ளல் அரிது ஆதலில்
    தம் மக்கட்குச் சேர்த்துவைக்கத்
    தக்கது கல்வியேயன்றி வேறல்ல.

    பாடல் 135

    கல்வி கரையில கற்பவர் நாள்சில;
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து.

    கல்வி முடிவில்லாதது
    கற்பவரின் வாழ்நாட்களும்
    குறைவே மெல்ல யோசித்தால்
    அண்டும் நோய்களும் பல
    ஆதலில் நீரை நீக்கி
    பாலைப் பருகும் அன்னம்
    போல் அறிவுடையார் ஆராய்ந்து
    பொருத்தமானவற்றையே கற்பர்.

    பாடல் 136

    தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
    காணிற் கடைப்பட்டான் என்றிகழார் – காணாய்
    அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
    மகன்துணையா நல்ல கொளல்.

    படகு செலுத்துபவனைப்
    பண்டைய சாதிகளில்
    கீழோன் என இகழார் மேலோர்
    அப்படகு ஓட்டுபவனின்
    துணையால் ஆற்றைக் கடப்பது போலாம்
    தக்க நூல்களைப் படித்தவனைத்
    தேடி நன்நூற்பொருளைக் கற்றல்.

    பாடல் 137

    தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
    இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
    நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
    உம்பர் உறைவார் பதி.

    குற்றமற்ற பழமையான நூற்கேள்வி
    கேட்குந்தன்மை உடையவராய்
    கூர்அறிவுடை கற்றோர்களுடன்
    கூடி மாறுபாடற்று அளவளாவி
    மகிழ்தலைவிட  இன்பம் உண்டெனில்
    மேலுலகமெனும் தேவர்கள் உலகத்தைக்
    காண முயலுவோம்.

    பாடல் 138

    கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
    நுனியின் கரும்புதின் றற்றே – நுனிநீக்கித்
    தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
    ஈரமி லாளர் தொடர்பு.

    ஒலிக்கும் கடலின் குளிர் துறை
    உடையோனே! நுனியிலிருந்து கரும்பைத்
    தின்பது போலாம் கற்றறிந்தான் நட்பு
    தீய அன்பில்லாக் குணமற்றவரின் நட்போ
    அடியிலிருந்து கரும்பைத் தின்பதுபோலாம்.

    பாடல் 139

    கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
    நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
    ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
    தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

    பழஞ்சிறப்புடை அழகுமிகு
    பாதிரிப்பூவைச் சார்ந்ததால்
    மண்பானை தண்ணீரை
    மணமுள்ளதாக்குதல் போல்
    கல்லாரே ஆயினும்
    கற்றாரைச் சார்ந்து
    நடப்பின் அவர்போல்
    நல்லறிவு நாளும் உண்டாகும்.

    பாடல் 140

    அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
    உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல
    கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
    போஒம் துணையறிவார் இல்.

    பலநூல்களுக்குள்ளே ஞானம்
    போதிக்கும் நூல்களைக் கல்லாது
    விடுத்து இவ்வுலக அறிவை மட்டுமே
    வழங்கும் நூல்களைக் கற்பதெல்லாம்
    கலகல என்று வீணாகக்
    கூவுவதைப் போலல்லாமல்
    பிறவியாகிய தடுமாற்றத்தைப்
    போக்கும் வழி அறியப்படுவது இல்லை.

    Share
  • நாலடியார் நயம் – 13

    நாலடியார் நயம் – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    13 .தீவினை அச்சம்

    பாடல் 121

    துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
    மக்கள் பிணத்த சுடுகாடு – தொக்க
    விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
    புல்லறி வாளர் வயிறு.

    சுடுகாடுகள் துயரத்தைக்
    கொடுக்கும் இல்வாழ்க்கையில்
    கிடந்துழன்று அவற்றினின்று
    பற்றுவிடும் வழிஅறியாதாரின்
    பிணத்தை உடையன
    அற்பரின் வயிறுகளோ
    அதிகளவு பறவைகளுக்கும்
    விலங்குகளுக்கும் சுடுகாடுகளாம்.

    பாடல்122

    இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
    கரும்பார் கழனியுள் சேர்வர் – சுரும்பார்க்கும்
    காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
    கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

    வண்டுகள் ஒலிக்கும் காட்டில்
    வாழும் கவுதாரியையும் காடையையும்
    பிடித்துக் கூட்டில் அடைப்பவர்
    பகைவர்களுக்கு அடிமையாய்
    காலில் விலங்கு பூட்டப்பட்டு
    வலிய பயனில்லா
    வட்டை நிலத்திலோ
    கழனிகளிலோ அடிமையாய்
    வேலை வாங்கப்படுவர்.

    பாடல் 123

    அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
    துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
    அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
    பழவினை வந்தடைந்தக் கால்.

    அக்காலத்தில் (முற்பிறப்பில்) நண்டைப் பிடித்து
    அதன் காலை ஒடித்து
    விரும்பித்தின்ற தீவினை
    வந்தடைந்த போது
    உள்ளங்கை சங்குமணிபோல்
    உருத்தோன்ற விரலெல்லாம்
    குறைந்தழுகித் துயரம் தரும்
    குட்ட நோய் உண்டாகப் பெறுவர்.

    பாடல் 124

    நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
    எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்
    கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
    கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

    நெய்யைப்போல் நன்மை செய்வனவும்
    நெருப்பிலிட்டுக் காய்ச்சும்நேரம்
    உடலில் பட்டால் எரிக்கும்படி
    காய்ந்து துன்பநோய் தருவதுபோல்
    நல்லொழுக்கம் தவறா நல்லோரும்
    கடும் தீயவரைச் சார்ந்தால்
    கொடும் தீமையே புரிவர்.

    பாடல் 125

    பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
    வரிசை வரிசையா நத்தும் – வரிசையால்
    வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
    தானே சிறியார் தொடர்பு.

    பெரியோர் நட்பு பிறைச்சந்திரன்
    போல் படிப்படியாய் நாளும் வளரும்
    சிற்றறிவுடையோர் நட்பு வானத்தே
    தோன்றும் முழு வட்ட நிலா போல்
    தினந்தோறும் சிறுத்துத் தானே
    தேய்ந்து குறைந்துவிடும்.

    பாடல் 126

    சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
    சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
    சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
    பாம்பகத்துக் கண்ட துடைத்து.

    நற்குணமுள்ளவர் என மதித்து
    நட்பு கொள்கிறாய்!
    நட்புகொண்டவரிடம் நற்குணம்
    இல்லையெனில் சார்ந்தவனே கேள்!
    அது வாசனை மிகு சந்தனம்
    அங்குள்ளது என நினைத்து
    செப்பைத் திறந்தவன் உள்ளே
    சர்ப்பத்தைக் கண்டது போலாம்.

    பாடல் 127

    யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
    தேருந் துணைமை யுடையவர் – சாரல்
    கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
    மனம்வேறு செய்கையும் வேறு.

    மலைச் சாரல்களில் ஒளிவிடும்
    மணிகள் மிகு நாட்டின் வேந்தனே!
    கேள்! மனதை ஆராய்ந்தறியும்
    வல்லமையுடையோர் எவருளர்?
    மக்களின் மனம் வேறு
    மனிதன் நினைத்தபடி செய்யாது
    மேலுக்கு வஞ்சனையாய் ஆற்றும்
    செயல்கள் வேறு.

    பாடல் 128

    உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
    கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை – தெள்ளிப்
    புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
    மனத்துக்கண் மாசாய் விடும்.

    தெளிந்த அருவிநீர் சேற்றைத்
    தள்ளி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே!
    மனதால் விரும்பாது வஞ்சகமாக
    மயக்கும் உறுதியான செயல்செய்பவரின்
    மிகுநட்பு மனதில் குற்றமுள்ளதாய் நிற்கும்.

    பாடல் 129

    ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
    ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் – ஆக்கம்
    இருமையும் சென்று சுடுதலால் நல்ல
    கருமமே கல்லார்கண் தீர்வு.

    பகைகொண்டு வீசிய ஒளிமிகும் வாள்
    பகைவர் கையில் அகப்பட்டால்
    தைரியத்தைக் கெடுப்பது உறுதி
    தீயோர்க்குச் செய்த உதவி
    இம்மை மறுமையிலும் தொடர்ந்து
    வருத்தலால் அத் தீயொரிடமிருந்து
    விலகி இருத்தல் நல்லது.

    பாடல் 130

    மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
    எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! – எனைத்தும்
    சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
    உறுபயனோ இல்லை உயிர்க்கு.

    மனமே! மனையாளிடத்து ஆசை விடமாட்டாய்
    மக்கட்செல்வத்துக்கு பொருள் சேர்க்க ஏங்கி
    எவ்வளவு காலம் வாழப்போகிறாய்?
    அற்பகாலமாயினும் செய்யும்
    அறச்செயலாலன்றி உயிருக்கு
    அடையும்படியான நற்பயன் வேறுஇல்லை.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 22

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 22

    தி. இரா. மீனா

    பசவேசர் தொடர்ச்சி

    16. “பனைமரத்தடியில் பால்குடமிருந்தால்
    பால்குடமென்று சொல்லமாட்டார்கள் குடமென்பார்
    இந்த நிந்தனையின் சிந்தனையைப் பொறுக்க மாட்டான்
    கூடலசங்கமதேவன்“

    17. “இசையின் நுணுக்கம் தெரியாது
    இசைவரிகளின் அளவு தெரியாது
    தாளகதி தெரியாது
    இசைக்கருவியை மீட்டிடத் தெரியாது
    அமுதகணம் தேவகணமறியேன்
    கூடலசங்கதேவனே ,உனக்குக் கேடு ஏற்படாமல்
    நான் விரும்பியபடி பாடுவேன்“

    18. “நெய்யின் சுவைக்கு ஈட்டியை நக்கும்
    நாய் போன்றது என்வாழ்வு
    உலகப்பற்று என் மனதை விடவில்லை
    இதைப் பொறுப்பது உனது தர்மம் கூடலசங்கமதேவனே“

    19. “உலகில் பெரியதொரு கடைவைத்து
    நம்மகாதேவ வணிகசெட்டி உட்கார்ந்திருந்தார்
    ஒன்றான மனமெனில் ’சட்’ டெனப் பேசுவார்;
    இருமனமென்றால் பேசமாட்டார்
    தம்படி இழக்கமாட்டார், அரைத் தம்படி பயனடையார்
    நம்கூடலசங்கமதேவன் புத்திசாலி“

    20. “இசைப்பிரியன் சிவனென்பார் அவன் இசைப்பிரியனல்லன்!
    வேதப்பிரியன் சிவனென்பார் அவன் வேதப்பிரியனல்லன்!
    நாதமிசைத்த இராவணனுக்கு ஆயுள் பாதி ஆனதே !
    வேதமோதிய பிரம்மன் தலையறுந்து போனதே!
    நாதப்பிரியனுமில்லை, வேதப்பிரியனுமில்லை
    பக்திப்பிரியன் நம்கூடலசங்கமதேவன்“

    21. “நாளை வருவது இன்றே நமக்கு வரட்டும்
    இன்று வருவது இப்போதே வரட்டும்
    இதற்கு அஞ்சுவது யார்?
    “ஜாதய்ய மரணம் துருவம்“ – என
    கூடலசங்கதேவன் எழுதியதைத் திருத்த
    ஹரிபிரம்மானாலும் இயலாது“

    22. “ஆயுள் முடிந்தாலன்றி மரணமில்லை
    சொன்ன சொல் தவறினாலன்றி வறுமையில்லை
    உலகத்தவர் பழிச்சொல்லுக்கு அஞ்சுவதேனோ?
    கூடலசங்கமதேவரின் துணைகிடைத்த பின்னும்?

    23. “நீரைக் கண்டால் மூழ்குவார்
    மரத்தைக் கண்டால் சுற்றுவார்
    வற்றிப் போகும் தண்ணீரையும் காயும் மரத்தையும்
    நம்புபவர்கள் உன்னை எப்படியறிவார்கள்
    கூடலசங்கமதேவனே?”

    24. “நீருக்கு ஆம்பல் அழகு, கடலுக்குத் திரையழகு
    பெண்ணுக்கு குணமழகு, வானிற்குப் பிறையழகு
    கூடலசங்கமனின் அடியாருக்கு
    நெற்றியின் நீரழகாம்“

    25. “பாவம் புண்ணியம் அவரவர் விருப்பம்
    ’ஐயா’ என்றால் மோட்சம் ’அடே’ என்றால் நரகம்
    இறைவனே! சரணனே வெற்றி உண்டாகட்டும் உனக்கு.
    “வாழ்க நீ” எனச் சொல்வதிலேயே
    கைலாசமுள்ளது கூடலசங்கமதேவனே“

    26. “மாரியும் மாகாளியும் வேறில்லை
    மாரியென்றாலென்ன?
    கண்கள் தவறாகப் பார்த்தால் மாரி
    நாக்கு தவறாகப் பேசினால் மாகாளி
    கூடலசங்கமதேவனின் நினைவை மறந்தால் அது மாரி.”

    27. “சமத்துவ அன்பு, சமத்துவ இன்பம்
    சமத்துவ சுகம் அறியவில்லையெனில்
    இலிங்கம் வணங்கி என்ன பயன்?
    கூடலசங்கமதேவனை வழிபட்டு
    நதியுள்  நதி இணைந்தது போல இல்லையெனில்
    இலிங்கம் வணங்கிப் பயனென்ன?”

    28. “உலகின் குறையத் திருத்த நீங்கள் ஏன் முயல்கிறீர்கள்
    உங்கள் உடல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
    உங்கள் மனங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
    அடுத்த வீட்டுத் துன்பத்திற்காக அழுபவர்களை
    கூடலசங்கமதேவன் நம்புவதில்லை”

    29. “வேடன் பிடித்துவரும் முயலுக்கு விலைகொடுப்பார்
    அரசன் பிணமெனில் பொடிக்காசும் தரமாட்டார்
    முயலினும் கீழானது மனித வாழ்க்கை
    கூடலசங்கம சரணரை நிறைமனதுடன் நம்புவாய்“

    30. “மனதிற்குப் பிடிக்காத கணவன்
    மனதில் நிலைப்பதில்லை தோழி
    சிவனல்லாது வேறு புருஷர்கள்
    எனக்குப் பிடிக்காது தோழி
    கன்னியாயிருக்கும் போது கூடினேன்
    சிறுவயதில் உன்னுடன் வாழ்ந்தேன்
    உன் ஆணை ஐயனே கூடலசங்கமதேவனே”

    31. “என்னென்பேன் என்னென்பேன் ஒன்றிரண்டானதை?
    என்னென்பேன் என்னென்பேன் இரண்டொன்றானதை?
    என்னென்பேன் என்னென்பேன் அழியாப் பெருமையை?
    வள்ளல் கூடலசங்கமதேவன் தானேயறிவான்“

    32. “வழிபாடுள்ளவரை இலிங்கத்தைப் பாடினேன்
    பேச்சுள்ளவரை ஜங்கமரைப் பாடினேன்
    நாவுள்ளவரை பிரசாதத்தைப் பாடினேன்
    இம்மூன்றும் அழிந்தபிறகு என்னையே பாடினேன்
    கூடலசங்கமதேவனே!”

    33. “சம்சாரமென்பது காற்றில் உள்ள விளக்கு
    செல்வமென்பது சந்தைக்கூட்டம்
    இதை நம்பிக் கெடவேண்டாம் – செல்வமென்பது
    மறக்காமல் கூடலசங்கமதேவனுக்குச் செய்யும் பூஜை”

    34. “பூலோகமென்பது இறைவனின் நாணயச்சாலை
    இங்கு செல்லுபடியெனில் அங்கும் செல்லுபடியாவார்
    இங்கு செல்லுபடியில்லையெனில் அங்கும் இல்லை
    கூடலசங்கமதேவனே.”

                                              [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 79 (என்ன)

    சேக்கிழார் பாடல் நயம் – 79 (என்ன)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    என்ன   அவ்வுரை   கேட்டுஇயற்   பகையார்
            ‘’யாதும்  ஒன்றும்என்   பக்கல்   உண்டாகில்
    அன்ன   தெம்பிரான்   அடியவர்   உடைமை;
            ஐயம்   இல்லைநீர்  அருள்செயும்’’   என்ன
    ‘’மன்னு    காதலுன்   மனைவியை   வேண்டி
              வந்தது    இங்கு”என   அங்கணர்    எதிரே
    சொன்ன   போதிலும்    முன்னையின்   மகிழ்ந்து
              தூய   தொண்டனார்   தொழுதுரை   செய்வார்!  

    இயற்பகை நாயனாரை நோக்கி நீறு பூசிய அந்தணராயும், தூர்த்த வேடம் உடையவராயும் ஊரார்முன் ஒரு சிவனடியாராகச் சிவபெருமானே இயற்பகையார் வாழும் தெருவில் நடந்து வந்தார். அவருடைய  திருமேனியில் இருவகை வேடமும் பொலிந்தது! அவ்வாறு  வந்த சிவனடியார் இயற்பகையார்  வாழும்  இல்லத்து  வாயிலில்  புகுந்து நின்றார். இயற்பகையாரோ, ‘’எந்தையாகிய  சிவபிரான் அடியார் எழுந்தருளினார்!‘’ என்றெண்ணி எப்போதும் நின்ற இன்பம் மிக்க ஆதரவுடைய உள்ளத்தில்  பேரன்பு  ததும்ப  அவர்முன் சென்று வணங்கினார்;  சிறப்பு மிக்க பாத பூசைகள் செய்து, ‘’எம் முன்னோர்கள் செய்த பெருந்தவத்தின் விளைவாகவோ, என் முன் எழுந்தருளினீர்?’’ என்று போற்றினார்.

    அங்கே வஞ்சனையுடன் வந்த மறையவர் ‘’கொன்றைமலர் அணிந்த சடையை யுடைய சிவபிரானடியார்கள் தம் விருப்பத்தைக் கூறி வேண்டினால், குற்றமாயினும் அதனை   மிகச்சிறந்த குணமே என்றெண்ணி அதனைச் சிறிதும் மறுக்காமல் வழங்குவீர் என்று ஊரார் கூறிய உண்மையைக்  கேள்வியுற்றேன்! இன்று, இங்கு  உங்களிடம் ஒரு பொருளை வேண்டி வந்துள்ளேன்! அதற்க்கு நீர் இசைந்தால் நான் என் கருத்தைக் கூறுவேன்!’’ என்றார்.

    அதனைக் கேட்ட இயற்பகையார் ‘’நீங்கள் விரும்பிய பொருள் யாதாயினும், அப்பொருள் என்னிடம் இருக்குமாயின், அப்பொருள் எம்பிரான் அடியவர்க்கே  உரியதாகும்;  இதில் சிறிதும் ஐயமில்லை; நீங்கள் விரும்பும் பொருள் இன்னது என்று தெளிவாகக் கேட்டருள்க‘’ என்று பணிவுடன் கூறினார். அடியாராகிய  அந்தணர், ‘’மிகுந்த காதலுடன் இருக்கும் உன் மனைவியையே வேண்டிப் பெற்றுக்  கொள்ள இங்கே வந்தேன்’’ என்றார். அவர்தம் இவ்வேண்டுகோளை தம் எதிரே அஞ்சாது நின்று கேட்டபோதிலும், அதற்காக  உள்ளம் கலங்காமல், முன்பு இருந்த மகிழ்ச்சியைவிட மிக்க மகிழ்ச்சி  கொண்டு, தூய்மைமிக்க தொண்டராகிய இயற்பகை நாயனார், மீண்டும் அந்த அந்தணரைப் பணிவுடன் வணங்கினார்.

    இப்பாடலில் ‘’யாதும்’’ என்ற சொல் எப்பொருளாக இருந்தாலும் என்ற பொருளை உடையது. மேலும் ‘’ஒன்றும்‘’ என்ற சொல்லுக்கு, ஒப்பற்றது, உயர்ந்தது, என்றும் நான் பிரியக்கூடாத என் தனித்த உடமை என்றெல்லாம் கருதத்  தக்கது  என்பது பொருள். ‘’எம்பிரான் அடியவர் உடைமை’’ என்ற தொடருக்கு, ‘’எளியேன் முன் வந்து நின்ற  தேவரீராகிய எம் தலைவரின் உடைமையே!‘’ என்பது கருத்து.

    இறைவன் அடியார்களை இறைவனாகவே கருதி வணங்குவதும், அவர்கள் எழுந்தருளும் இல்லங்களைக் கோயிலாகவே கருதி வழிபடுதலும் அடியார் செயல் என்பதைச் சிவஞான போதம்,

    ‘’மாலற  நேயம்  மலிந்தவர்  வேடமும்,
     ஆலயம் தானும்  அரண் எனது தொழுமே!’’

    என்று கூறுகிறது. மாணிக்க வாசகர் இறைவனை ‘’ உடையாய் ‘’ என்று கூறியதும் இதைக் கருதியே! மேலும்,

    ‘’உற்றாரை  யான் வேண்டேன்  ஊர்வேண்டேன்  பேர்வேண்டேன் ..
     குற்றாலத்     தினிதுறையும்    கூத்தாஉன்  குரைகழற்கே
     கற்றாவின்   மனம்போலக்  கசிந்துருகி  வேண்டுவனே‘’

    என்று பாடுகிறார், அப்பரடிகளோ

    ‘’கனியினும் கட்டி    பட்ட  கரும்பினும்
     பனிம   லர்க்குழல்   பாவைநல்   லாரினும்
    தனிமு   டிக்கவித்   தாளும்   அரசினும்
    இனியன் தன்னடைந்   தார்க்குஇடை  மருதனே ‘’  

    என்ற  பாட்டில் ‘பாவை நல்லாரினும் இனியன்’ என்கிறார்; சுந்தரர்,

    ‘’மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்!’’ என்று தம் உறவுகளின் மேலுள்ள புற்றுக்களை நீக்கி,  இறைவன் திருவடியையே பற்றினார். திருவாதவூரடிகள் புராணம்,

    “உருப்பொ லாதவர்  இழிகுலத்  தவர்நல்
         லொழுக்க மில்லவர்  என்று நம்மளவில் 
    விருப்பி லாதவர்  எனினும்  மெய்ந்நீறும்  
         மிக்க  சாதன வேடமும் கண்டால்  
    தரிப்பி லாதுசென்று எதிருற வணங்கித்  
        தக்க போனகம்  அளித்தவர்க்கு எளிதா   
    விருப்பர் தாமவ ரடியவர்க் கடியார் 
           என்பர் யான்எனது எனும்செருக் கறுப்பார்.”

    என்று பாடுகிறது. ஆகவே இயற்பகை நாயனாரின் மனம் இறைவனையும் சிவனடியாரையுமே  எல்லாவற்றிலும் மேலாகக்  கருதியது. மேலும் இப்பாடலில்,

    ‘’அங்கணர் எதிரே சொன்ன போதிலும்’’ என்ற தொடரால், அவர் மனைவியின் மேல் எனக்கு ஆசை, என்று புறத்தே போய்ச் சொன்னாலும் உடனே அது கேட்டுமிகவும் வெகுள்வார் உள்ள உலகில்,’’ தமக்கு எதிரே நின்று அந்தணர் சொன்ன போதிலும்’’ என்ற பொருள் புரிகிறது. அதன் பின் ‘’முன்னையின் மகிழ்ந்து, தொழுதுரை   செய்வார்! ‘’ என்ற தொடரால்  கேட்பதற்கு முன் இருந்ததை விட அதிகமாக உள்ளத்தில் மகிழ்ந்தார் இயற்பகையார் என்பதும், மீண்டும் அந்த அந்தணரை முன்பைவிட அதிகமாகத் தொழுதார் என்பதும்   புலனாகின்றது.

    கம்பராமாயணத்தில் வசிட்டர் கூறியதைக் கேட்ட  தசரதன்,

    ‘’மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை
     பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அப்பெருவில்
     இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம்
     உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்’’

    என்ற பாடலை நினைவூட்டுகிறது. இயற்பகையாரின் உண்மையான உளப்பாங்கினை  உரியவாறு எடுத்துக்  காட்டும் சேக்கிழாரின் திறம் போற்றுதற்கு உரியது.

    Share
  • நாலடியார் நயம் – 12

    நாலடியார் நயம் – 12

    நாங்குநேரி வாசஸ்ரீ

     12. மெய்ம்மை

    பாடல் 111

    இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
    வசையன்று வையத் தியற்கை – நசையழுங்க
    நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
    கொன்றாரின் குற்றம் உடைத்து.

    வரிசையாய் வளையல்கள் அணிந்தவளே!
    வேண்டி இரப்போர்க்குத் தர இயலாப்
    பொருளை இல்லை எனச் சொல்லுதல்
    பழியன்று  உலகியற்கையே
    கொடுப்பதாய் ஆசைகாட்டிப் பலநாள்
    கழிந்தபின் இல்லையென்றல்
    செய்நன்றி மறப்பதினும் சீரிய குற்றமாம்.

    பாடல் 112

    தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
    எக்காலுங் குன்றல் இலராவர்! – அக்காரம்
    யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
    தேவரே தின்னினும் வேம்பு.

    தக்கசான்றோரும் அல்லாதாரும்
    தத்தம் குணங்களில் எப்போதும்
    குறைதல் இல்லாதிருப்பர்
    கசக்காது வெல்லம் எவர் தின்றாலும்
    கசக்கும் வேப்பங்காய் தேவரே தின்றாலும்.

    பாடல் 113

    காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
    மேலாடு மீனின் பலராவர் – ஏலா
    இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
    தொடர்புடையேம் என்பார் சிலர்.

    குளிர்ந்த மலைகளுடை நாட்டின்
    வேந்தனே! செல்வம் உள்ள காலத்தே
    நெருங்கிய உறவினர் பலர் இருப்பர்
    நட்சத்திரங்களை விட அதிகமாய்
    நலிந்து வறுமையுறும் காலம்
    உறவினராய்த் தொடர்பவர்
    உரிமையுடன் ஒருசிலரே.

    பாடல் 114

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவணது எய்த இருதலையும் எய்தும்
    நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
    அடுவது போலும் துயர்.

    குற்றமற்ற இவ்வுலகில் நிலைத்துக்
    காணப்படுவதாய்த் தோன்றும்
    அறம் பொருள் இன்பம் எனும்
    அம் மூன்றனுள் நடுவிலுள்ள
    பொருளை அடைந்தோன் அதன்
    பொருட்டு முதலிலுள்ள அறத்தையும்
    இறுதியிலுள்ள இன்பத்தையும் அடைவான்
    இதனைப் பெறாதவன் கொல்லன்
    இரும்பை உலையிலிட்டு காய்ச்சுவது
    போலும் வறுமையுற்று வருந்துவான்.

    பாடல் 115

    நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
    கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
    புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
    செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

    நல்ல பசுவின் கன்றானால்
    நல்விலைபோகுமதன் இளங்கன்றும்
    படிக்காதவராய் இருப்பினும்
    பணக்காரரின் வாய்ச்சொற்கள்
    பயன்கருதி ஏற்றுக்கொள்ளப்படும்
    சிறிதே ஈரமுள்ள காலத்தே உழும்
    சமயம் கொழு உட்செல்லாது
    மேலே நிற்பதுபோல்
    மேலுக்குத் தலையசைத்து
    கேட்பதுபோல் தோன்றினாலும்
    வறியவனின் வாய்ச்சொற்கள் ஒரு
    வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

    பாடல் 116

    இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
    அடங்காதார் என்றும் அடங்கார் – தடங்கண்ணாய்
    உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
    கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

    அகன்ற கண்களையுடையவளே!
    பேய்ச்சுரைக்காயை உப்புடன்நெய்
    பால் தயிர் பெருங்காயம் சேர்த்துச்
    சமைத்தாலும் கசப்பு அடங்காததுபோல்
    விரிவாக மெய்யறிவு நூல்களை
    வாசித்துணர்ந்தாலும் எப்பொழுதும்
    அடக்கமில்லாமல் இருப்பவர்
    அடங்காமலே இருப்பர்.

    பாடல் 117

    தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
    என்னை அவரோடு பட்டது – புன்னை
    விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
    உறற்பால யார்க்கும் உறும்.

    புன்னையின் அழகிய
    பூமணம் வீசும் சோலைகள்சூழ்
    கடற்கரையுடை வேந்தனே!
    தம்மை நிந்திப்பவரை அவர்
    தொடங்குமுன் தயைபாராமல்
    தாம் நிந்திக்கக்கடவர்
    அவரோடு தமக்குண்டாகிய
    தொடர்பால் வருவதுதான் என்ன?
    வரவேண்டிய நன்மைதீமை எவர்க்கும்
    வினைப்பயனால் வந்தே தீரும்.

    பாடல் 118

    ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
    பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்
    ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
    உருவு பலகொளல் ஈங்கு.

    பசுக்கள் உருவத்தால் வேறுபடினும்
    பாலின் நிறத்தில் வேறுபாடில்லை
    தருமமும் பால்போல் ஒரு
    தன்மையுடைத்தே எனினும்
    ஆற்றும் வழிமுறைகள்
    அப்பசுக்களின் உருவங்கள்
    போல் பலவாம்.

    பாடல் 119

    யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
    யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
    இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
    கடைபோக செல்வம்உய்த்தார்.

    ஆராய்ந்து நோக்கின் ஒரு பழிச்சொல்
    அற்று வாழ்ந்தவர் யார்?
    ஒரு தொழிலின்றிவாழ்ந்தவர் யார்?
    எவர் வாழ்வின் இடையே துன்பம்
    எய்தாதவர்? வாழ்நாள் முழுவதும்
    செல்வத்தை அனுபவித்தோர் யார்?

    பாடல் 120

    தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
    யாங்கணும் தேரின் பிறிதில்லை; – ஆங்குத்தாம்
    போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
    கூற்றம் கொண்டுஓடும் பொழுது..

    தம்மோடு உயிருக்குத் துணையாய் வருவது
    தாம் செய்த நல்வினையன்றி வேறில்லை
    அதுவரை ஆடை அணிகளால் பாதுகாத்த
    அழகுடம்பும் உயிருக்குத் துணையாய் வராது
    எமன் உயிரைப் பறித்துக்கொண்டு ஓடும்காலம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    இத்தொடரில் பெண்பால் சிற்றில் பருவத்தில் அடுத்து நாம் காணப்போகும் நூல் தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஆகும். இதில் இப்பருவம் மிகவும் சிறப்பாக, அழகிய நயங்களுடன் பத்துப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது.

    உலகுக்கே அன்னையான சிவகாமி எனும் உமையவள் அண்டகோடிகளை, பிரம்மாண்டங்களைத் தோற்றுவிப்பதனை, சிறுவீடுகட்டி அவள் விளையாடுவதாக நயம்பட உரைக்கிறார். காஞ்சிப்பதியில் சிவபிரான் அம்மைக்கு இருநாழி நெல் அளித்ததனையும் அம்மை அதனைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி உலகங்களைப் புரந்ததாகவும் காஞ்சிப்புராணத்தில் காண்பதற்கியைய, இங்கும் அக்கருத்தை எடுத்தோம்புகிறார்.

                ‘…………………………………………..
             அட்டதிக்கும் கால்கள்நட்டு நெடுமேரு
                       நடுவு அசையாததூண் நிறுத்தி
             …………………………………………….
                       விளை பச்சைநெல் இருநாழியில்
             பல்லுயிரும் உண்டு தேக்கிட்டிடும்
                       ……………………………………..
             திடமருவு பெருவீடு கட்டி விளையாடும்
                       உமை சிறுவீடு கட்டியருளே!’1

    ‘ஆ ப்ரஹ்ம கீட ஜனனீ’ என லலிதா சகஸ்ரநாமம் அன்னையை ஏத்துகின்றது. பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம். படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.

    பின்னொரு பாடலில் அன்னை கட்டிடும் சிறுவீட்டின் அமைப்பினை விளக்கியுள்ளமை, உடற்கூற்றியலில் விளக்கப்பட்டுள்ள மனித உடலின் அமைப்பை ஒத்துள்ளது வியக்கத்தக்கதாகும். தசை எனப்படும் மண்ணினை வைத்தும் தூண்களாகிய கால்களை வைத்தும், உடல் எனப்படும் சுவரை அமைத்தும், வீட்டினைத் தாங்கக் கைம்மரங்கள் என்னும் இரு கரங்களை வைத்தும் அமைக்கிறாள்; உடலில் உள்ள ஒன்பது துளைகளை ஒன்பது வாயில்களாக அமைக்கிறாள்; கூரை மரங்களை நரம்புகளால் முறையாகக் கட்டுகிறாள்; அதன்மீது மண்பூசுவது போன்று தோலைப் போர்த்து, மயிர்க்கற்றைகளால் கூரையையும் வைக்கிறாள். வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகுத்து அனுபவிக்க கண்களை விளக்குகளாக ஏற்றுகிறாள். இவ்வாறு அனைத்துயிர்களும் வாழும்பொருட்டு எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட வலிமைமிக்க பலவீடுகளை, அதாவது பற்பல உயிர்களுக்காக அவை வாழும் உடலெனும் வீடுகளைத் தோற்றுவித்தும், அழித்தும், பின்னும் தோற்றுவித்தும் இடையறாது அருள்விளையாட்டுப் புரிகிறாள். உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு இலட்சம் எனப் புராணங்கள் விளக்குகின்றன. அனைத்தையும் அவற்றிற்குரிய வீடுகளாகிய உயிர்க்கூடுகளில் வகைவகையாகப் படைக்கிறாள் என அதியற்புதமாக இப்பாடல் விளக்குகின்றது.

                ‘மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
                       சுவர்வைத்து வலியகைம் மரமும்வைத்து
             வாசல் ஒன்பதுவிட்டு மோட்டுவளை
                       பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
             பண்புற்றிடக் கட்டிமேலே லாம்தோலுடன்
                       பலமயிர்க் கற்றை இட்டு
             …………………………………………….
             எண்பத்து நான்குநூறா யிரம்பேதமாய்
                       இனிய சிறுவீடு தோறும்
             ………………………………………….
    திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
             உமை சிறுவீடு கட்டியருளே2!’

    இழைக்கப்படும் சிறுவீடானது, மனித உடலின் கைகள், கால், தோல், மயிர் போன்ற பல பாகங்களுக்கும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டிருப்பது மிக்க அருமை. உடற்கூற்றியல் எனும் அறிவியல் பகுப்பு இதில் முழுமையாக ஒரேபாடலில் அருமையாக விளக்கப் பெற்றுள்ளது தமிழுக்குப் பெருமை!

    சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:

    ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.

    எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.

                வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
             ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
                       பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
             எல்லவே சாக்கிரம் கனவொடு
                       சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
             …………………………………………………….
             பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
                       பொற்பாவை விளையாடி அருளே3!

    (பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)

    சிவகாமி அன்னையைச் சிறுவீடு கட்டியருள வேண்டிடும் புலவர் பெருமகனார், தில்லையில் உள்ள பொன்மன்றின் அமைப்பினை விளக்கி அவ்வண்ணமே ஒரு சிறுவீட்டினைக் கட்டியருள சிவகாமியம்மையை வேண்டுகிறார்.

    சிதம்பரம் கோயிலின் அமைப்பு, மனித உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்4‘ என்பது திருமூலர் வாக்கு. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசங்களைக் (Layers) கொண்டமைந்துள்ளது. அதே போன்று சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்  உள்ளன. மனித இதயம் இடப்புறம் அமைந்திருப்பதுபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாது இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை  மூச்சுவிடுகிறான். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் உள்ள ஓடுகளை 72,000 ஆணிகள் இணைக்கின்றன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்படுகிறது.

    இப்பிள்ளைத்தமிழினை இயற்றிய நல்லதுக்குடி கிருட்டிணையர் பொன்மன்றின் அமைப்பினை இன்னுமே விரிவாக விளக்கி அதனைச் சிவகாமியம்மை எவ்வாறு கட்டுகிறாள் என விளக்குகிறார். இது அன்னை மனித உயிர்களைப் படைக்கும் பாங்கினை அழகுற விளக்குகிறது.

    பொன்மன்றில் விளங்கும் பிரமபீடத்திற்கு ஆறு சாத்திரங்களையும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைப் பெரிய தூண்களாகவும் அமைக்கிறாள். இருபத்தெட்டு சிவாகமங்கள், ஐம்பெரும் பூதங்கள், பதினெண் புராணங்கள் ஆகியவை சிறிய தூண்களாகவும் உத்திரங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்துநான்கும் அழகிய வரிச்சல்களுடன் பொருந்திய கைம்மரங்களாக பொருத்தப்பட்டு, அவைமீது ஒளிவீசும் தங்க ஓடுகள் 21,600 வைத்து அவற்றை 72,000 ஆணிகளால் பொருத்தி இணைத்து, மேலும் இருநூற்றுஇருபத்துநான்கு புவனங்களையும் தாமரைமலரின் வடிவில் ஆக்கிய தட்டுக்களாகவும் சைவசித்தாந்தத் தத்துவங்களான தொண்ணூற்றாறு தத்துவங்களையும் பலகணிகளாக ஆக்கி, ஒன்பது கலசங்களை மனித உடலின் ஒன்பது வாயில்களாக அமைத்து சிற்றம்பலம் எனும் உறுதியான வீட்டினைக் கட்டுகிறாள் அன்னை. பின்னர் அங்கு தானே இறைவனுடன் குடிகொள்கிறாள்.

    இவ்வாறு அரியதான எம்மை, எமது மனித உடலைப் படைத்தருளுமுகமாக சிறுவீடு கட்டியருளுக என வேண்டுவதாக அமைந்த பாடலிது.

                ஆறு சாத்திரம் நாலுவேதம் அதிதூண்
                       ஆகமங்கள்………………….
             ……………………………………………………
                       மரம்நாட்டி எழுபத்து இரண்டாயிரம்
             ………………………………………
             கூறு தொண்ணூற்றாறு தத்துவம் பலகணிகள்
                       கும்பம் ஒன்பது வாசலும்
             …………………………………………………..
                       விமலையே! சிறுவீடு கட்டியருளே5!

    பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார். இன்னும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் பல பாடல்களும் பல சமயக் கருத்துக்களையும் விளக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    மற்றும் ஒரு பெண்பால் பிள்ளைத்தமிழான ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ், சிறுமியரின் சிற்றில் பருவத்தை அழகுறப் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளது. இதன் ஆசிரியர் (பெயர் தெரியக் கிடைக்கவில்லை) ஆண்டாளைத் திருமகளாகவே கொண்டு அக்கருத்துக்களிலேயே பாடல்களைப் பாடியுள்ளார்.

    சிற்றில் பருவத்துப் பத்துப்பாடல்களில் ஆறு மட்டுமே கிடைத்துள்ளன. ஆயினும் கருத்து நயமும் உவமை உருவகங்களும் வைணவத்தின் பொருண்மைகளும் செறிந்த பாடல்கள் இவை. சமயத் தத்துவங்களை அழகுறப் பொதிந்துகொண்டு விளங்குகின்றன.

    மேருமலையை ஆதாரமாகக் கொண்டும், மற்ற மலைகளை இடைத்தூண்களாக வைத்தும் செய்விக்கப்பட்ட மணிமண்டபம் உனது கொலுமண்டபம். மேலும், காவல் நிறைந்த  புறமனைகள் ஏழும் கடலால் சூழப்பட்ட ஏழுதீவுகள் ஆகியனவும் பள்ளியறை முதலான அமைப்புகளாவன. இவை பூமியாகிய நிலாமுற்றத்திற்கு அரணாகின்றன. சுடரும் கதிரவன் விளக்காகிறான். அண்டச்சுவரும், கடலையே அகழியாகவும் கொண்டு, பொன்னுலகம் ஐந்தினையும் உப்பரிகைகளாகக் கொண்டு விளங்கும் அருமையான வீட்டைக் காக்கும் பெண்ணரசியே! உலகிற்கு அன்னையான புதுவை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) வாழ் திருமகளே! தென்னரங்கேசன் முதலான ஐந்து பேரும் குடிபுகுவதற்காக நினது சிற்றிலை இழைப்பாயாக! என வேண்டும் பாடல்.

    இவ்வைந்து பேரும் திருமாலின் ஐந்து வடிவங்களே! தென்னரங்கேசன்- ஸ்ரீரங்கத்து அரங்கன், திருமலையில் குடிகொண்ட திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையில் அமர்ந்த பிரான், திருத்தண்கா அப்பன், வடபத்ரசாயி எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பெருமாள் ஆகியோராவர்.

                ஆதார மேருபூ தரநள் ளிடைத்தூண
                       மருவரைக ளெண்டிசைக்கா
             …………………………………………..
             பூதாதி வழிவந்த வண்டபித் தியுமாப்
                      பொரும்புறக் கடலகழியாப்
             பொன்னுலக முதலைந்தும் உப்பரிக் கையதாப்
                       …………………………………….
             சீதார விந்தமலர் வளவயற் புதுவையுட்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே
             தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே6

    இப்பருவத்துப் பாடல்கள் அனைத்தும் பெண்மகவு இழைக்கும் சிறுவீடானது எவ்வாறு மனித உடலை ஒத்துள்ளது எனவும், பராசக்தி எனும் அன்னை எங்ஙனம் நம்மைப் படைத்துப் புரந்தளிக்கிறாள் என்றும் பலவித நயங்களில் கூறியுள்ளமை மிக உயர்வாக உள்ளன.

                                                                                                                          (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2, 3, 5. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    4. திருமந்திரம்- திருமூலர்
    6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பத்துப்பருவங்களுக்கும் மிகுதியான விளையாட்டுப் பருவங்களும் நிகழ்வுகளும்தான் பிள்ளைப்பருவத்தை இனிமையுடையதாகச் செய்கின்றன. பிள்ளைத்தமிழுக்கென இலக்கணம் வகுத்த நூல்களும் அதிகப்படியான பருவங்களைப் பாட வாய்ப்புள்ளதனை நன்கு விளக்குகின்றன. இனி இத்தொடரில் அவையனைத்தையும், அவை அமைந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்து ஒவ்வொன்றாகக் கண்டு இன்புறலாம்.

    பிங்கல நிகண்டு பெண்பால் பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களை விவரிக்கின்றது. இப்பருவங்கள் காப்பு, செங்கீரை, சொல்வதைக்கற்றல், அமுதூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய இருபாலருக்கும் பொதுவான பருவங்களுடன், மூன்றாம் ஆண்டில் தான்விளையாடும் பாவைக்கு ‘மணம் பேசுதல்’ (குழமணம் மொழிதல்), ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை மன்மதனையொத்த கணவனைப்பெறக் ‘காமநோன்பு நோற்றல்’, குளிர்ந்த நீராடல், பதுமைகளை (பாவைகளை) வைத்து ‘பாவைவிளையாடல்’, அம்மானையாடல், கழங்காடல், பந்தடித்தல், சிறுசோறு அடுதல், சிற்றில் இழைத்தல், ஊசலாடல் எனும் பருவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ கொண்டு அமையும். இவையே பத்தொன்பது பருவங்களாகும்.

    ‘பேணும் சிறப்பிற் பெண்மக வாயின்
    மூன்றா மாண்டிற் குழமண மொழிதலு
    ஐந்தின் முதலா யொன்பதின் காறு
    மைங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
    பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்
    அம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ்
    சிறுசோ றடுதலுஞ் சிற்றி லிழைத்தலும்
    ஊச லாடலும் மென்றிவை யுள்ளிட்டுப்
    பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே,’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது.

    திவாகர நிகண்டு இதிலிருந்து சிறிது வேறுபட்டு இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான காப்பு, செங்கீரை, தால், அமுதூட்டல், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களையும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கான குழமணம் மொழிதல், ஐங்கணைக்கிழவனை ஆர்வமொடு நோற்றல், பனிநீர் தோய்தல், பாவையாடல், சிறுசோறடுதல், சிற்றிலிழைத்தல், ஊசலாடல் ஆகிய பதினான்கு பருவங்களைக் கூறுகிறது.

    உலகவழக்கில் பெண்குழந்தைகளான சிறுமியருக்கென்று சில இனிய விளையாடல்கள் அமைந்துள்ளன. அவை தமது தாய்மார், வயதில் பெரிய பெண்களான அக்காள்மார் மற்றும் உறவினப்பெண்டிர் இவர்கள்  மனையில் குழந்தை வளர்த்தல், சமையல் செய்தல், குடும்பநலன் பேணுதல், தம் மக்களுக்கு மணம்பேசி முடித்தல் ஆகிய வாழ்வியல் தொடர்பான செயல்களைக் கண்டு, தாமும் அவ்வாறு செய்ய ஆசைகொண்டு, சிறு பெண்குழந்தைகளால் பாவனையாக, பொய்யாக விளையாடப்படும். இதுவே ‘பொய்தல் விளையாட்டு’ என வழங்கப்பட்டது. தமக்கென மணலாலும் தழைகளாலும் ஒரு சிறுவீட்டினைக் கட்டிக்கொண்டும், பாவைகளைக் குழந்தைகளாகக் கருதிக்கொண்டு கருத்தோடு பேணியும், சமையல் முதலானவற்றைச் செய்வதுபோல பாவனை செய்து கணவன் முதலானோருக்கு உணவளித்தும், தம் மக்களுக்குத் திருமணம் செய்வது போலப் பாவைகளுக்கு மணம்பேசி முடித்தும் சிறுமிகள் விளையாடுவர். இந்தப் ‘பொய்தல் விளையாட்டி’னுள் பாவை விளையாடல், குழமணம் மொழிதல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் ஆகிய நான்குமே அழகுறக் கலந்து விரவி அமைந்துள்ளதனைக் காணலாம்.

    இவற்றுள் குழமணம் மொழிதல் எனும் பருவம் மட்டுமே எந்தப் பிள்ளைத்தமிழிலும் தனிப்பட எடுத்துப் பாடப்படவில்லை.

    சிற்றில் இழைத்தல் பருவம், சிறுமியர் வண்டல் மணலினால் ஆற்றங்கரையில் சிறிய வீடுகளைக் கட்டி விளையாடுவதனை விளக்கும். இதே பெயர்கொண்ட சிற்றிற்பருவம் ஆண்பாற் பிள்ளைத்தமிழில், சிறுமியர் இழைத்த சிற்றிலை சிறுவர்கள் அழிப்பதாகவும், சிறுமியர் அவ்வாறு செய்யவேண்டா என அவர்களை வேண்டுவதாகவும் அமையும். இதனைப் பெண்பால் பிள்ளைத்தமிழில் ‘சிற்றில் பருவம்’ அல்லது ‘சிறுவீட்டுப் பருவம்’ எனவும் கூறுவர். இதுவன்றி, ‘சிறுசோற்றுப் பருவம்’ எனும் ஒரு பருவமும் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் காணப்படுகின்றது. இவை அனைத்தையுமே சிறுமியர் விளையாடும் பாவனை விளையாட்டான ‘பொய்தல் விளையாட்டி’ன்  அங்கங்கள் என சங்க இலக்கியங்கள் கூறும்.

    ‘மணம்கமழ் மனைதொறும் பொய்தல் அயர2,’ என மதுரைக்காஞ்சியும்

    ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர் மணல்3,’ எனப் பரிபாடலும் கூறுகின்றன.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடும் விளையாட்டினை நயமுற விளக்குகிறது.

    தாம் பாடுபட்டு இழைத்த சிற்றிலை உதைத்து அழிக்க ஓடோடிவரும் சிறுவன் முருகனிடம் சிறுமியர், நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும், ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமான நந்தின் கடமான சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்) திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே
                னுளையுங் கவிழாதோ
    நந்தின் கடமு முடையாதோ நளிமா
                 துளைத்தீ யவியாதோ..
     ………………………………………
                அடியேம் வதுவையெனச்
    சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா
                விருந்தும்4………………………..,‘ என்பன பாடல் வரிகள்.

    தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தையை நீராட்டி, அதற்குப் பால்கொடுத்து, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே! இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் அதனுள் ஒரு அங்கமாகக் குழமணம் மொழிதலும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. பொய்தல் விளையாட்டின் ஒரு  அங்கமான ‘குழமணம் பேசுதல்’ இப்பாடல் ஒன்றில் மட்டுமே சுட்டப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் “மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே5,” எனும் பாடல், “ஆற்றோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடுகட்டி6,” எனும் பாடல் ஆகியன இக்கருத்தின் அடிப்படையிலேயே எழுந்ததெனலாம். இன்றளவும் சின்னஞ்சிறுமியர் பொம்மைகளைக்கொண்டு பலவிதமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வதனையும் காணலாம்.

    இவை தொடர்பான நிகழ்வுகளே பெண்பால் பிள்ளைத்தமிழில் பாவை விளையாடல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் என்ற மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் புலவர்களின் கற்பனைக்கேற்பப் பாடப்பட்டுள்ளன. குழமணம் மொழிதலின் விரிவான விளக்கங்களை எப்பிள்ளைத்தமிழிலும் காணக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே!

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் மட்டுமே காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி ஆகிய முதல் ஏழு பருவங்களுடன், சிற்றில் பருவம், சிறுசோற்றுப் பருவம், காமநோன்புப் பருவம் என சில புதுமையான பருவங்களுடன் மொத்தம் பதினோரு பருவங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

    சிற்றில் பருவமானது பெண்பால் பிள்ளைத்தமிழில் வழக்கமாகப் பாடப்பெறாது இருப்பினும், அது சிறுவீடு கட்டுதல், சிறுசோறு சமைத்தல் எனும் இரு செயல்களைக் கொண்டமைந்துள்ளமையால் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் இதனை இரு பருவங்களாக்கியுள்ளார் எனக் கருதலாம். சிறுமியர் விளையாட்டும் இத்தகைமைத்தே என்பதனைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவத்துப் பாடலொன்றின் கருத்திலிருந்து காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ண சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருப்பதனைக் காணலாம். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் அரிசி எனக்கூறிப் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என அறியலாம்.

    ‘பெருத்தவயிறு தயங்க மெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும் பண்ணியமுமேந்தியேம்பாற் பேணிவருநின் கரவினைக்கண்டு
    அருத்தியொடு……,’7

    என்பன பாடல் வரிகள். இப்பாடலின் விரிவான விளக்கத்தை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்தில் காணலாம். இனி, பெண்பால் பிள்ளைத்தமிழின் நயங்களைக் காணலாமா?
    சிற்றில் பருவம் (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில்பருவம் எனத் தனியாக ஒரு பருவத்தில், இறைவி சிறுமியாக சிற்றிலிழைக்கும் மேன்மையைப் போற்றி மிகவும் இரசித்தும், பக்தியிலாழ்ந்தும், பலநயங்களைப் புகுத்தியும் பாடியுள்ளதனைக் காணலாம்.

    வயிரவன்கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் நூலில் ஒன்பதாம் பருவமாக, நீராடலுக்கு மாறாக சிற்றிலிழைத்தல் (சிற்றில் பருவம்) பத்துப்பாடல்களில் பாடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு உயிரும் இருந்து வாழும்படி அவையவற்றிற்கு உரிய வகையில் வடிவுடையம்மையாகிய பராசக்தி வீடுகளை அமைக்கும் சிறப்பை விளக்கும் பாடலொன்றைக் காணலாம். பாடலே இனிய எளிய நடையிலமைந்துள்ளமையால் விளக்கம் தேவையில்லை!

    மூவருறை யுயர்வீடு முத்தியின் பென்றோது
                  முழுநிதியம் வைக்கும் வீடு
     மோனஞா னானந்த சிவயோக நிலைகண்ட
                  முனிவர்கள் வசிக்கும் வீடும்
    …………………………………………………….

    பாவிய சிறப்புமலி வீடுமாழ் பாதலம்
                  பற்றிவாழ் நாகர் வீடும்
    பகுத்துத் தனித்தனி யியற்றிவிளை யாடுநீ
                       ………………………………………..
    தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                 யள் சிறுவீடுகட்டி யருளே8 என்பது பாடல்.

    மேலும் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காண்பதுபோல் இதுவும் அம்மை சிறுவீடமைப்பதனை உருவகமாக சிறுவர்களின் விளையாட்டான ‘பொய்தலாட்டயர்வ’தாகக் குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டாக ஒருபாடல் அவள் ஈரேழு உலகைப் படைத்தும் அதற்கு முத்தொழில் புரியும் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை நியமித்தும், சன்மார்க்க துன்மார்க்கங்களில் உயிர்களைச் செலுத்தியும், அதனைக் கண்காணித்தும் ஆகியன செய்வதனைப் பொய்தல் விளையாட்டு எனக் கூறுவதில் உள்ள கருத்தொற்றுமை வியக்கத் தக்கதாம்.

    ‘அண்டமென் றோதுபெரு வெளியிலீ ரேழுநகர்
                       ………………………………….
     பிண்டத் தினுந்தந்து பொய்தலாட் டயரும்
                     பெருந்தகைச் சிறிய விடையாய்
             ………………………………
    திண்டடஞ் சோவடுக நாதபுர மேவுபரை
                    சிறுவீடு கட்டி யருளே9,’ என்பன பாடல் வரிகள்.

    பின்னும் இதில் அன்னை உயிர்களுக்குத் தகுதியான உடல்களை எழுவகைத்தாதுக்கள் எனப்படும் இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்பு, நரம்பு, தோல் இவற்றோடு ஐந்துவகை பௌதிகப் பொருட்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியனவற்றைப் பொருத்தி இணைத்து எழுபத்திரண்டாயிரம் எண்ணிக்கையிலான நரம்புகளையும் அதனூடே இழைத்தும், மூன்றரைக்கோடி மயிர்களை வேய்ந்தும், ஒன்பது வாயில்களை அமைத்தும், இன்னபிற செய்வித்தும் பலவிதமான வீடுகளை உயிரினங்களுக்குச் சிற்றில் அமைப்பதுபோன்று படைக்கிறாள். அவை பழுதுபடின் வேறு வீடுகளை அமைத்துக் கொடுக்கிறாள். இவ்வாறு பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஆகியனவற்றை அருமையாக எடுத்தியம்பும் பாடலிது.

     ‘எழுவகைத் தாதுவினோ டைவகைப் பௌதிகமு
                  மேய்வித்து நீடி மல்கு
     மெழுபத் திரண்டா யிரத்தொகை நரம்பினையு
                       ………………………
     பழகுற வமைத்துமன் பதைகட்கு வாழ்வீடு
                  பற்பல விழைத்திட் டவை
     பழுதுபடின் வேறுமவ் வாறுபுரி யம்மையே
                       …………………………..
     தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                  யள்சிறுவீடு கட்டி யருளே10,’ என்பது பாடல்.

    நுட்பமான கருத்துக்களாக உடலின் அமைப்பை விளக்கி அவற்றைச் சிறுமிகள் இழைக்கும் சிறுவீட்டின் அமைப்போடு ஒப்புநோக்குதல் வியக்கத்தக்கதாம். இதுபோலும் பொருளும் நயமும் மிக்க பத்துப்பாடல்கள் உள்ளன.

                                                              ****

    புதுவை திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தைத் தவிர்த்து சிற்றிலிழைத்தல் பருவம்  எட்டாம் பருவமாக வைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் சிறப்புற பாடப்பெற்றுள்ளது. இவற்றுள் முதலைந்து பாடல்கள் அன்னை எவ்வெவற்றைக்கொண்டு சிறுவீடு கட்டுவது போன்று ஈரேழு உலகங்களையும் படைத்தருளுகிறாள் என விளக்குகிறது.

    ‘பொன்புற மிலங்குநெ டுவட்டவா ளக்குன்று
                   புரிசையா கத்திகாந்துப்
    புறக்கடற் கோட்டை சூழகழி யாத்திசைகள்11
                       ……………………………..’

    எனச் சிறுவீட்டின் அமைப்பையும், அதில் வாழும் உயிர்களைக் காக்க அவள் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்குப் பதவியளித்ததனையும் கூறுகிறது.

    ‘முத்தலைச் சூலமேந் திப்பொடி யணிந்தோங்கு
    மூரிவெள் விடையவர்க்கு
    முந்நீர் நிறங்கொண் டுமண்ணுண் டுவிண்ணீண்ட
    முண்டகக் கண்ணருக்கும்12‘…. என்பன பாடல் வரிகள்.

    இத்தகைய அருமையான கருத்துக்களைக் கொண்டமைந்ததால் இப்பருவத்தின் பாடல்கள் பெண்பால் பிள்ளைத்தமிழில்  சிறப்பாக விளங்குகின்றன.

                                                                                      (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. பிங்கல முனிவர்- பிங்கல நிகண்டு
    2. மதுரைக்காஞ்சி, வரி 589.
    3. பரிபாடல், 20, வரி 23.
    4. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    5. தஞ்சை ராமையா தாஸ்- ‘காவேரியின் கணவன்’ திரைப்படப் பாடல், 1959
    6. கண்ணதாசன்- ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ திரைப்படப்பாடல், 1964
    7. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
    8, 9, 10. சேந்தன்குடி வி. நடராசக்கவிராயர்- வயிரவன் கோயில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    11, 12. புதுவை முத்துக்குமாரன்-  திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 14

    பழகத் தெரிய வேணும் – 14

    நிர்மலா ராகவன்

     (பெண்ணுக்கு மரியாதை) 

    “பல ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்துகிறார்கள் என்று நீங்கள் எழுதுவதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக இருக்கும். நீங்க எழுதறது உண்மைதான்னு இப்போ புரியுது. என் மகளை அவளுடைய கணவர் அப்படித்தான் நடத்துகிறார். வருத்தமா இருக்கு!” என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    ‘ஆண்தான் மேலானவன்’ என்பதுபோல், அவரே தன் மனைவியை அப்படி நடத்தியிருக்கக்கூடும். ஆனால், ‘மகள்’ என்று வரும்போது, ஆண்களின் பக்கம் சாயத் தோன்றவில்லை. மருமகன் மீதுதான் கோபம் எழுந்தது.

    தன்னை அவமரியாதையாக நடத்தும் கணவனை மகள் ஏன் எதிர்ப்பதில்லை என்ற குழப்பம் அவருக்கு. தாயைப் பார்த்தே வளர்ந்திருந்தால் மகள் வேறு எப்படி இருப்பாள்?

    மகனும் தந்தையைப்போலவே தன் மனைவியிடம் அலட்சியம் காட்டுவான். அந்த நடத்தை அவருக்குத் தப்பாகத் தோன்றாது.

    ஒரு முதியவர் கடிதம்வழி, மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தார், ‘என் மனைவி என் மனம் கோணாது நடப்பவள். மிகவும் பொறுமைசாலி,’ என்று.

    பதிலுக்கு, ‘உங்கள் மனைவியின் மனதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தேன்.

    கணவனின் மகிழ்ச்சிக்காக பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பழமையிலேயே ஊறிப்போன பெண்கள் எண்ணுகிறார்கள்.

    கதை

    அடிக்கடி, ‘நான் அம்மன் பக்தன்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார் சீலன். எல்லா பக்திப்பாடல்களும் அவருக்கு மனப்பாடம்.

    ஆனால், அவர் மனைவி விமலாவை நடத்துவதைப் பார்த்தால், அவளுக்கு எதுவுமே தெரியாது, அடிமுட்டாள் என்பதுபோல் இருக்கும்.

    சீலனுடைய மனதில் ஒரு வக்கிரம். மனைவியைப்போல் இல்லாத பெண்களைக் கண்டால் அலாதி மோகம். அவர்கள் நட்பைப் பெற பல முயற்சிகள் எடுப்பார்.

    “அறிவாளிகளான பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள எனக்குப் பிடிக்கிறது. சும்மா பேச மட்டும்தான்னு சொல்வார்,” என்று அப்பாவித்தனமாக விமலா கூறும்போது, கேட்பவர்களுக்கு அவள்மேல் பரிதாபம்தான் எழும்.

    சீலனுக்குப் புரியாதது: அவர் எதிர்பார்த்தபடி, நடத்தியபடிதான் மனைவி ஆகியிருக்கிறாள். அவளை அவர் தோழமையுடன் நடத்தி, அவளுக்குத் தெரியாததைப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்திருந்தால் அவளுக்கு அவர்மேல் அன்பு ஏற்பட்டிருக்கும். அவர் எப்படி நடத்தினாலும், ‘தலைவிதி’ என்று விரக்தியுடன் அதைப் பொறுத்துப் போயிருக்கமாட்டாள்.

    புதிய விஷயங்களைக் கற்பதில் அவள் ஆர்வம் காட்டாவிட்டாலும், வேறு எதிலாவது சிறந்திருக்கமாட்டாளா! அதைப் பாராட்டியிருக்கலாமே!

    ஏன் இந்த அதிகாரம்?

    மனைவி ஒரு போகப்பொருள் மட்டும்தான் என்று நம்புகிறவன் அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். அதனாலேயே அவளுடைய நட்பை இழக்கிறான். அதை வெளியே, நண்பர்களிடமோ, பிற பெண்களிடமோ தேடுகிறான்.

    பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்

    அவள் உணர்ச்சிப்பெருக்கில்லாது, ஆணைப்போல் யோசிக்கவேண்டும்.

    ஓயாது உழைக்கவேண்டும். ஆனால், இளமையும் மாறாது இருக்கவேண்டும்.

    மொத்தத்தில், கணவன் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்ள ஏற்ற வகையில் இருக்கவேண்டும்.

    நடக்கிற காரியமா?

    ஒரு பெண்ணை அவளது கணவன் ஏதோ செல்லப்பிராணி என்பதுபோல் நடத்தி, அதற்கு அவள் பணிந்தும் போனால், அது அவனுக்குக் காட்டும் மரியாதையாலோ, அன்பினாலோ இல்லை. அவள் வளர்க்கப்பட்ட விதத்தில் எங்கோ கோளாறு நேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

    கதை

    சீதாபதி மெத்தப் படித்தவன். பத்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தை. பெண்பித்தன்.

    திருமணமாகாத இளம்பெண்களைப் பார்த்தால், உரிமையுடன் அவர்கள் தோளில் கைபோட்டு, “என் மனைவி இங்கிதம் தெரிந்தவள்,” என்று ஆரம்பிப்பான்.

    அவனில்லாதபோது, அவளும், ‘ஆம்படையானுடைய சந்தோஷத்தைவிட நமக்கு வேற என்னடி வேணும்?” என்பாள்.

    ‘எனக்கு நிறையப் பெண்கள் கிடைப்பார்கள்!’ என்று பெருமை பேசுகிறவன் தனக்கு ஆண்மை அதிகம் என்று எண்ணுகிறான். உண்மையில், அவனிடம் ஏதோ குறை இருப்பதால்தான் பெண்களை மயக்க முயற்சிக்கிறான். கலாசாரமும் துணை புரிகிறது.

    அண்மையில் படித்தது

    மெடகாஸ்கர் (MADAGASCAR) ஆப்பிரிகாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு. மிக ஏழ்மையான நாடு.

    ஆண்கள் பெண்களை வதை செய்வது சர்வசாதாரணம். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றே பழக்கப்பட்டதால், கணவன் அடித்து, உதைக்காவிட்டால் அவனுக்குத் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிட்டது என்று அத்தீவிலுள்ள பெண்கள் நினைக்கிறார்கள்!

    பெண்களை எவ்விதமாவது வதை செய்வது சட்ட விரோதம் என்று இப்போது விதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் எந்தப் பெண்ணும் வலிய வந்து புகார் கொடுப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் அவளைப் புகார் அளிக்கச் செய்ய முடியுமாம்!

    ஏழ்மை, அதனால் எழும் வருத்தம் அல்லது அசௌகரியம், கலாசாரம் எல்லாம் ஆண்கள் தான்தோன்றித்தனமாக நடக்க வைக்கிறது. பெண்களையும் இவ்வாறு அடிமை வாழ்க்கையை ஏற்கச் செய்திருக்கிறது.

    கதை

    நாற்பது வயதுவரை, ‘எனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆகுமா!’ என்று ஏங்கிய மலேசியப் பெண் கலாவதி.

    ஒருவழியாக, திருமணம் ஆனதும், ஒவ்வொரு இரவிலும் கணவன் தன்னை நாடுவது அவளுக்குப் பெருமையைக் கொடுத்தது. அதற்குப்பின், அவளைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளி, அடித்து உதைப்பான். அதனால் என்ன மோசம்!

    வதை அதிகரித்து, சமூகநல அதிகாரிகளின் கவனத்திற்கு கலாவதி கொண்டுவரப்பட்டாள்.

    பரிதாபத்துக்குரிய இப்பெண்ணுக்குப் புத்தி சொல்வதாக எண்ணி, “ஐயோ! இந்தமாதிரி மனிதனுடன் ஏன் சேர்ந்து இருக்கிறாய்?” என்று நான் அலறினேன்.

    “அவருக்கு இல்லாத உரிமையா!”என்று கேட்டவளின் குரலில் கோபம்.

    ஏன் இந்த அவல நிலை?

    பல இந்தியக் குடும்பங்களில், ‘என்ன இருந்தாலும், நீ ஒரு பெண்!’ என்று சொல்லியே பெண்குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஏமாற்றம், வெறுமை. அந்தக் குழப்பம் எதனால் என்று புரிவதுமில்லை.

    ‘ஆண்’ என்றால் உயர்ந்த மனிதன் என்ற எண்ணம் பதிந்துவிடுவதால் அவனை அண்டி வாழ்ந்தால்தான் தனக்கு மதிப்பு என்று தோன்றிவிடுகிறது.

    தம்மைப்போல் இல்லாத பிற பெண்களைக் கண்டால் அவர்களுக்கு கோபம். பொறாமையும் எழலாம். ஆனால் மாறவும் பயம். அப்போது யார் பக்கபலமாக இருப்பார்கள்?

    (தொடரும்)

    Share
  • நாலடியார் நயம் – 11

    நாலடியார் நயம் – 11

    நாங்குநேரி வாசஸ்ரீ

    11. பழவினை

    பாடல் 101

    பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
    வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
    பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
    கிழவனை நாடிக் கொளற்கு.

    கூட்டமான பசுக்கள் நடுவே விட்டினும்
    கன்று தன் தாய்ப் பசுவைத் தேடி
    அடைதல் போல் முற்பிறப்பில்
    ஆற்றிய பழவினையும் செய்தவனைத்
    தேடிஅடைதலில் வல்லமையுடைத்தே. .

    பாடல் 102

    உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
    ஒருவழி நில்லாமை கண்டும் – ஒருவழி
    ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
    நின்றுவீழ்ந் தக்க துடைத்து.

    அழகும் இளமையும் மேன்மையான
    அருஞ்செல்வமும் பலர் அஞ்சத்தக்க
    பெருமதிப்பும் ஓரிடத்தில் நிலையற்று
    இருப்பதைக் கண்டபின்னும்
    இனியும் யாதொரு நற்செயலும்
    செய்யாதவன் வாழ்க்கை, உடலெடுத்து
    சில காலம் வாழ்ந்து பயனில்லாது பின்
    அழிந்துபோகும் தன்மைத்தாம்.

    பாடல் 103

    வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
    அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
    விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
    காரெனச் செய்தாரும் இல்.

    வளமுடன் சிறந்து வாழ்தலை
    விரும்பாதார் எவருமில்லை இவ்வுலகில்
    அளக்கப்பட்டுள்ளன அனுபவிக்கும் சுகங்கள்
    ஆற்றிய நற்செயல்களுக்கேற்ப
    விளாங்காயை உருண்டையாக
    வார்த்தவரில்லை களாம்பழத்தைக்
    கருமையுடையதாய் ஆக்கியவருமில்லை.

    பாடல் 104

    உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
    பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
    வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
    சிறப்பின் தணிப்பாரும் இல்.

    வந்தடையும் தீவினையைத் தடுக்கும்
    வல்லமை துறவிகளிடத்தும் இல்லை
    அவ்வாறே பெறத்தக்க நன்மைகளை
    அடையாது தடுப்பதும் எவராலுமாகா
    மழை பொழியாது வறண்டால்
    மீட்டுக் கொடுப்பாருமில்லை
    அதிகமாய்ப் பெய்தால்
    அடக்குவாரும் இல்லைபோல.

    பாடல் 105

    தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
    பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
    நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
    வினைப்பயன் அல்லால் பிற.

    பனையளவு உயர்ந்த
    பெருமை மிக்கவரும்
    தினையளவாகச் சிறுத்து
    தம் கூர்மதியை உள் அடக்கி
    தினந்தோறும் பெருமைகெட்டு
    வாழ்வதன் காரணம் யாதெனின்
    முற்பிறப்பில் செய்த தீவினைப்
    பயனேயன்றி வேறெதுவுமில்லை.

    பாடல் 106

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று.

    உயர்ந்த நூல்களின் கேள்வியறிவால்
    உற்ற பயன்பெற்றோர் இறப்பதையும்
    கல்வியறிவற்றோர் நீடு வாழ்வதையும்
    அறிந்துள்ளீர்கள்! காரணம்
    அறிவு எனும் சாறு கல்லாதார்
    அகத்தே இல்லாமையால்
    அவர்களைச் சக்கை என நினைத்து
    எடுத்துச் செல்வதில்லை எமன்.

    பாடல் 107

    இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
    நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் – அடம்பப்பூ
    அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
    முன்னை வினையாய் விடும்.

    அடம்பக்கொடியின் மலர்களை
    அன்னங்கள் கோதிக் கிழிக்கும்
    அலைகடலின் குளிர் கரையையுடை
    அரசனே! சிலர் துன்பமிகு மனத்துடன்
    அனைவரும் காணும்படி பல தலைவாயில்களை
    அடைந்து பிச்சைகேட்டு வருந்தும் செயல்
    அனைத்தும் முற்பிறப்பில் செய்தீவினைப் பயனே.

    பாடல் 108

    அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
    பழியோடும் பட்டவை செய்தல் – வளியோடி
    நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
    செய்த வினையான் வரும்.

    நெய்தல்நிலத்தில் காற்று வீசுதலால்
    நீண்ட கடலில் தேன் சிந்தும்
    குளிர் கரையையுடை வேந்தனே!
    அறிவற்றவராய் இல்லாது
    அறிவுடையவராய்த் திகழ்ந்தாலும்
    பழிதரும் செயல்களைச் செய்தல்
    பழம்பிறப்பில் செய்தீவினையின் விளைவே.

    பாடல் 109

    ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
    வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
    வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
    தீண்டா விடுதல் அரிது.

    எல்லையில்லாக் கடல்சூழ் உலகில்
    எல்லாரும் எவ்வளவாயினும்
    தீயவைகளை விரும்பார் நலம்
    தரும் நன்மையையே விரும்புவர்
    விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
    வரத்தக்கவை முன்வினைப்பயனால்
    வராமற் போவதில்லை.

    பாடல் 110

    சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
    உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
    சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
    இறுகாலத் தென்னை பரிவு.

    கரு அமைந்த காலத்தில்
    கடவுளால் எழுதப்பட்ட விதிகள்
    வளராது குறையாது
    வரிசைமாறி வராது
    துன்ப காலத்தில் ஊன்றுகோலாகி
    துயர்துடைக்கவும் மாட்டா
    வரவேண்டிய காலத்தே தப்பாது
    வந்துசேருமெனவே மரணகாலத்தில்
    மனம் வருந்துவது ஏன்?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 78 (ஆயும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 78 (ஆயும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆயும்   நுண்பொருள்  ஆகியும்   வெளியே
    அம்பலத்   துள்நின்று  ஆடுவார்   வெளியே
    நாய   கிக்கும..  தறியவோ  பிரியா
    நங்கை   தானறி  யாமையோ  அறியோம்
    தூய   நீறுபொன்   மேனியில்   விளங்கத்
    தூர்த்த    வேடமும்  தோன்றவே   தியராய்
    மாய    வேடமே   கொண்டுதம்     தொண்டர்
    மறாத  வேடமும்   காட்டுவான்  வந்தார்!

    பூம்புகார்  நகரில்  வாழ்ந்த  சிவனடியாராகிய இயற்பகையாரை நோக்கி  இறைவன்  ஒருநாள் வந்தார். உலகில் உள்ளவர் சிவஞானத்தால் ஆராய்வதற்கு உரிய மிகுந்த நுண்பொருளாய் இருப்பவரும், தில்லை யம்பலத்திலே வெளிப்படையாய் நின்று ஆடுகின்றவரும் ஆகிய சிவபெருமான், கைலாயத்திலுள்ள  உமையம்மையார்  அறியாத வண்ணமோ, என்றும் பிரியாது இடப்பாகத்தில் இருக்கும் நங்கை  தானே அறிந்து கொள்ளாத  நிலையிலோ,  நம் அறிவுக்கெட்டாத வகையில் வந்தார். அவ்வாறு வரும் அவர் திருமேனியில் தூய்மையான திருநீறு தம் பொன்போன்ற  மேனியில்  ஒளிவீசி விளங்க  வேதியராகவும்,  காமவயப்பட்ட ஒரு   தூர்த்தனாகத்  தோன்றியும் வந்தார். அவர்தோற்றம் பிறருக்குப் புலப்படாத மாயவேடமாக   விளங்கிய போதும், சிவனைடியார் மறுத்து  விலக்காத  உயர் தோற்றம்  உடையவராக  வந்தார்.

    இப்பாடலில் ‘ஆயும்’ என்ற சொல், நாம் நம் ஆணவத்தால் ஆராய்வோம் என்ற நிலையில் இல்லாமல் ஆணவத்தை முற்றிலும் அடிப்படுத்தி அவன் அறிவிக்க அறிகின்றேன் – என்னும் பரஞான சிற்சத்தி ஒளியின் உதவியால் அறிகின்ற ஆராய்ச்சியை இங்கே காட்டுகிறது. இது பாசஞானத்தால் பெறாத ஆய்வைப் பசுஞானத்தால் பெறலாம் என்பதைக் குறித்தது! அவர் பிரபஞ்சப் பெருவெளியில் எங்கும் உறைந்து ஆனந்த நடனம் ஆடுகிறார்; அவரே பூம்புகார் நகரினுள்   எளிய மனிதராகி, அந்தணராய்த் தூர்த்த வேடத்தில்  வருகிறார். இதனை,

    ‘’ஆயும்  நுண்பொருள் ஆகியும்  வெளியே
    அம்பலத்து  நின்று ஆடுவார்…..
    மாய வண்ணமும்  கொண்டு தொண்டர்
    மறாத  வண்ணமும் காட்டுவான் வந்தார்’’

    என்று சேக்கிழார் பாடுகிறார். தூயதாகிய திருநீறு தமது  பொன்மேனியிலே விளக்கம் பெறவும், (அதற்கு மாறாகத்) தூர்த்த வேடமும் அத்திருமேனியிலே வெளிப்படையாய்த் தோன்றவும், ஒரு வேதியராக உருவங் கொண்டு, தமது மறைப்பினிற் போந்த உருவத்தினையே மேற்கொண்டு (உலகத்தார் காண அதனைக் காட்டுதலே யன்றித்) தமது தொண்டராகிய இயற்பகையார் அடியவர் வேண்டியவை எவையேயாயினும் இல்லை யென்னாது கொடுக்கும் இயல்பினையும் காட்டும் பொருட்டு வந்தார். இதனையே  திருவாசகம்,

    ‘’வேதங்கள் ஐயா  எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!’’

    என்று பாடும்! சொரூப  நிலையிலிருந்து தடத்த நிலைக்கு மாறும் தோற்றச்  சிறப்பு  இது! ஆழ்ந்து என்பது நெடுந்தோற்றம்; அகன்று என்பது பக்கத் தோற்றத்தின் விரிவு; இது சொரூபம்;  நுண்மை என்பது நுட்பத்தோற்றம் இது தடத்தம்;   இதனைப்

    ‘’பாதாளம்  ஏழினும் கீழ்  சொற்கழிவு பாத மலர்!
    போதார் புனை முடியும் எல்லாப்  பொருள் முடிவே ‘’

    என்ற திருவாசகத்தால் அறியலாம்! நுட்பத்தை,

    ‘’அணுவோர்  அண்டமாம் சிறுமை கொண்டு ‘’

    என்ற திருவிசைப்பா காட்டும். மேலும், ’’உள்ளதன்  நுணுக்கம்’’ என்ற தொல்காப்பியச் சூத்திரம்  விளக்கம்  பெறும்.  அடுத்து,

    ‘’அருளும்  வண்ணமும்   ஆதி மாண்பும்  கேட்பான்  புகின்,  அளவில்லை‘’ என்றும்,

    ‘’எதுக்களாலும்  எடுத்த மொழியாலும்  மிக்குச்
    சோதிக்க வேண்டா சுடர் விட்டுள்ளன்  எங்கள் சோதி!’’

    என்றும் கூறப்பெறும் தேவாரத்தின்  விளக்கமாகச் சேக்கிழாரே,

    ‘’ஓதும் எல்லை உளப்பில வாதலின்  யாதும்  ஆராய்ச்சி இல்லை!’’

    என்று பாடுகிறார். ‘’மனம் வாக்குக்களுக்கு எட்டாததாயும் சிவஞானத்தால் அறியப்பெறுவதாயும் உள்ள நுண் பொருளேயாயினும், திருவம்பலத்தினிடத்தே தாமாக வெளிப்பட்டு எல்லா உயிர்களும் உய்யுமாறு அருட் கூத்தாடுவார்’’ என்பதை முன்னரே  ‘’உலகெலாம்‘’ என்ற பாட்டில் கூறினார்.

    மேலும் இப்பாட்டில் ‘’அறியோம்’’ என்ற சொல்லிற்கு, ‘இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் இயல்பினைப்பற்றி முன் ஆயுநுண்  பொருளாகியும் என்றதற்கேற்ப ஒர் ஆராய்ச்சி செய்கின்றார். இவர்  திருமேனி தாங்கி வருவதில் ஒன்றற்கொன்று மாறுபட்ட இவ்விரண்டியல்புகள் காணப் பெறுகின்றன; ஆயுநுண் பொருளாவார வெளியே யாடுவாருமாயினர்; ஓருருவு மில்லார் ஒரு வேடங்  கொண்டார். தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறும் விளங்கிற்று; இவர்தாம் இவ்வாறு வருங்கால் தமது பங்குடைய உமையம்மையார் அறிய வந்தனரோ? அன்றி அறியாமை வந்தனரோ? எனின் அறிய வருவாராயின், இவர் இங்குப் பிறர்  மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிரார் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அஃதுமியலாது; ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்று பொருள் காணலாம்.

    வெளிப்படையாக அருளும் சத்தியும், மறைப்பாகிய திரோதான சத்தியும் ஒருங்கே தொழிற்பட்டன என்ற கருத்தால் இவ்வாறு கூறப்பெற்றது போலும்! நாயனார் இயற்பகையாராயினமையால் தாமும் தமது இயலுக்கு  மாறாக இத்தன்மையில் வெளிப்பட்டு அருளினர் என இங்கு நினைவு கூர்ந்தவாறாம்.

    மேலும் திருநீறணிந்த தோற்றமும் தூர்த்த வேடமும் வெவ்வேறாய் இருப்பதன் நுட்பம் ஆராய்வதற்கு உரியது!  தூய நீறு “சுத்தம தாவது நீறு“ என்றவாறு தான்  தூய்மையுடையதாகும். அதனோடு யாவற்றையும் தூய்மை  செய்வதுமாம். திருநீறு தம் சார்ந்த  மேனியைத் தூய்மை செய்வது. ஆதலால் அடியவரின் தூய மனம் அவர் வடிவத்தையு மறுக்காமல்  ஏற்றுக் கொண்டது.

    அதனோடு அதற்கு மாறாகத்  தூயதல்லாத தூர்த்த வேடமும் ஒருங்கே காணஅதாவது, பிறனில் விழைவோன் செய்யும் காமந்தோன்றும் அடையாளங்கள் விளங்கும் கோலத்துடன் அதாவது நகக்குறி, பற்குறி, மஞ்சட்பூச்சுக்குறி ஆகியவற்றுடன் வந்தார். காமவசப்பட்ட இயல்புடன் இழிந்த செயல் செய்பவனாய்த்  தூர்த்த வேடத்தில் இருக்கும்  இழிபினைப் போக்க அதற்குப் பரிகாரமாக அந்த மேனியிலே நீறு அணிந்ததுபோல என்ற குறிப்புமாம். மேலும் வேதியராய்  விளங்கியதையும் குறிப்பிடும் திறம் உணர்ந்து கொள்ளுதற்குரியது.

    அடுத்து இப்பாடலில் ‘’மாய வண்ணமும், மறாத வண்ணமும்‘’ என்ற தொடர்கள், பிறர் அறிய இயலாதபடித் தம்மை மறைத்துக் கொண்ட இவ்வுருவந் தாங்கிக்கொண்டு அதனைக் காட்டுதலேயன்றி,  வேண்டும் யாவையும்  இல்லை யென்னாதே முன் கொடுக்கும் இயல்பினையும். தமது மாயை வண்ணத்தைக் காட்டுதலேயன்றி, அடியார் மறாத வண்ணத்தையும் கொண்டு வந்தார்.

    இறைவன் தம் அருள் விளையாட்டில் காட்டும் தோற்ற மாற்றங்களை மிகவும் நுட்ப்பமாகப் புலப்படுத்தும்  இப்பாடல்,  சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகிறது.

    Share