நாலடியார் நயம் – 15
நாங்குநேரி வாசஸ்ரீ
15. குடிப்பிறப்பு
பாடல் 141
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.
ஆறாப் பசித்துயரிலும் சிங்கம்
அருகம்புல்லைத் தின்னாது
உடுக்கும்உடை கிழிந்து
உடல் மெலிந்த வறுமையிலும்
உயர்குடியில் பிறந்தோர் தம்
உயர் ஒழுக்கத்தில் சிறிதும் குறையார்.
பாடல் 142
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது – வான்தோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
மேகங்கள் தவழும்
மலைகளுடை அரசனே!
மேன்மை பெருந்தன்மை ஒழுக்கம்
மூன்றும் உயர்குடியில் பிறந்தோரிடம்
அல்லாது பெருஞ்செல்வம் சேர்ந்த
அளவிலும் பிறரிடம் உண்டாகா.
பாடல் 143
இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன – குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று.
பெரியோர் வரக் கண்டால்
பணிவாய் எழுதலும்
எதிர்சென்று வரவேற்றலும்
ஏனைய உபசாரங்களும்
விடைபெரும் நேரம்
பின்சென்று திரும்புதலுமெனும்
நல்லொழுக்கங்களைக் கொண்ட
நற்குடியில் பிறந்தோரை
நற்பண்பில்லா மூடருடன்
ஒப்பிடுதல் ஏற்புடையதன்று.
பாடல் 144
நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும் – எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்?
அவர் நல்லவை செய்யின்
அது செய்யத்தகுந்த முறைமையாம்
கெடுதல் செய்யின் பலரால்
கெட்டவரெனப் பழிக்கப்படுவாராமெனின்
அனைத்தும் உணர்ந்த அக்குடிப்பிறப்பால்
உயர்குடிப்பிறப்பு அமைந்த ஒருவர்க்கு
உண்டாகும் பயன்தான் என்ன?
பாடல் 145
கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; – எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந்தார்.
கல்லாமைக்கு அஞ்சுவதும்
கீழோரின் இழிதொழிலுக்கு அஞ்சுவதும்
தகாத சொல் சொல்ல அஞ்சுவதும்
தம்மிடம் கேட்பவர்க்குக் கொடுக்க
இயலாமைக்கு அஞ்சுவதும் எனும்
அச்சங்கள் உயர்குடிப்பிறந்தோரிடம்
அமைந்துள்ளதால் மாண்புகளற்ற
அச்சமில்லாத மற்றவர்
மரத்தன்மையுடையோராம்.
பாடல் 146
இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் – கனமணி
முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.
மாணிக்க மணிகள் முத்துக்களுடன்
மயங்கி ஒளிவீசும் ஒலிக்கும் கடலின்
குளிர்மிகு கரையுடை வேந்தனே!
சேருபவர்களின் நன்மை அவர்
சொல்லும் இன்சொல்
வறியவர்க்குக் கொடுத்தல்
மனத்தூய்மை எனும்
நற்குணங்கள் எல்லாம்
நற்குடிப்பிறந்தவர்களிடத்தே உண்டு.
பாடல் 147
செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.
வேலைப்பாடுகள் குலைந்து
வீடுமுழுதும் கரையான் பிடித்தாலும்
பெரிய வீடானது மழை
பெய்யா ஒருபக்கத்தைப் பெற்றதுபோல்
எத்தகு வறுமைத் துன்பம் வரினும்
நற்குடிப்பிறந்தோர் செய்யத்தக்க
நற்செயல்களையே செய்வர்.
பாடல் 148
ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் – திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.
இராகு எனும் பாம்பு ஒருபக்கத்தை
இறுகப் பிடித்தாலும் தம் மறுபக்கத்தால்
அழகிய பெரும் உலகிற்கு ஒளிகொடுக்கும்
நிலவுபோல் வறுமைத் துன்பம் முன்னே
நிற்பினும் தளராது உதவுவர் உயர்குடிப்பிறந்தோர்.
பாடல் 149
செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் – புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.
பருத்திருக்கும்போதும் மானினால்
பாயும் குதிரைபோல்
போரிட இயலாததுபோல
வறுமை வாட்டும்நிலையிலும்
உயர்குடிப்பிறந்தார் ஆற்றும்
நற்செயலைச் செல்வம் மிக்குள்ள
நேரத்திலும் செய்யார் கீழோர்.
பாடல் 150
எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.
தண்ணீரற்ற காலத்தும் அகன்ற ஆறு
தோண்டியவுடன் நீர்கொடுப்பதுபோல்
பொருளற்ற காலத்தும் உயர்ந்தோர்
தம்மை அண்டிவந்தவரின்
துன்பம் போக்கி ஊன்றுகோலாய்த்
தளர்ச்சி நீங்க உதவுவர்.