செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(300)

செய்யாமற் செய்த யுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.

       – திருக்குறள் -101 (செய்ந்நன்றி அறிதல்)

புதுக் கவிதையில்…

மற்றவர்க்குத் தான்
உதவியேதும் செய்யாதபோதும்,
பிறர் தனக்குச் செய்த
பேருதவிக்கு,
இம் மண்ணுலகு விண்ணுலகு
இரண்டையும்
கைம்மாறாய்க் கொடுத்தாலும்
ஈடாகாது அவையே…!

குறும்பாவில்…

தானுதவியேதும் செய்யாதபோதும்
தனக்குப் பிறர்செய்யும் உதவிக்குக் கைமாறாய்
விண்ணும் மண்ணுமே ஈடாகா…!

மரபுக் கவிதையில்…

மற்றவர் தமக்குத் தானுதவி
     மதித்துச் செய்யாப் போதினிலும்,
உற்றவர் போலப் பிறர்தனக்கே
     உதவிடும் போதி லவ்வுதவி
பெற்றிடு முலகில் பெருமதிப்பு,
     பெருமை யதற்குக் கைமாறாய்ச்
சுற்றிடும் பூமியும் விண்ணதுவும்
     சேர்த்துக் கொடுப்பினும் ஈடிலையே…!

லிமரைக்கூ..

பிறர்க்குத் தானுதவாத போது
தனக்குப் பிறருதவிடின் கைமாறாய் விண்மண்
எதுகொடுத்தாலும் ஈடென்பது ஏது…!

கிராமிய பாணியில்…

மறக்காத மறக்காத
செய்நன்றி மறக்காத,
ஒதவி ஒனக்கொருத்தன் செஞ்சத
ஒருநாளும் மறக்காத..

ஒருத்தருக்கும் தான்
ஒதவாத போதும்,
தனக்கொருத்தன்
ஒதவி செஞ்சாண்ணா,
அந்த ஒதவிக்குக் கைமாறா
இந்த ஒலகத்தயும் வானத்தயும்
குடுத்தாலும்
அதுக்கு ஈடாவாதே..

அதுனால
மறக்காத மறக்காத
செய்நன்றி மறக்காத,
ஒதவி ஒனக்கொருத்தன் செஞ்சத
ஒருநாளும் மறக்காத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *