ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 7

0

மீ. விசுவநாதன்

“ஸ்ரீ மகாசன்னிதானம்,
ஸ்ரீ சன்னிதானம்”

சீடர் வந்த பின்பு
சேர்ந்தே எங்கும் செல்வர்;
“சூடன் போன்ற தன்மை
சுவாமி களென்று சொல்லி
கூடும் பக்தர் யாரும்
கொள்க அவரி டம்தான்
வீடு பேறு கொள்ளும்
வினைக்கு ஆசி” என்பார்!   (61)

புதிய புதிய செய்தி
பொதிந்தி  ருக்கும் வண்ணம்
அதிக கவன மோடு
ஆற்றும் உரைகள் கேட்டு
மதியில் குளிர்ந்து போவார்
மகாசன் னிதானம்! ஞான
பதியாம் குருவ ருள்என்
பர்ஸ்ரீ சன்னி தானம்!    (62)

“குருவின் வாக்கை மதி”  

குருவின் வார்த்தைக் கென்றும்
கொடுப்பார் மரியா தையே !
ஒருநாள் உபன்யா சத்தில்,
” சுவாமி கள்தான் இன்று
பூஜை செய்வார்” என்றார்;
புரிந்து கொண்ட சீடர்
பூஜைக் குத்தன் ஆசான்
சொன்ன நேரம் வந்தார்!    (63)

“காவி உடைக்குள் கடவுள்”

உறவை விட்டு வந்து
உள்ளத் தாலே தூய
துறவு ஏற்ற பின்பு
துவரா டையைக் கொண்டார்!
பீடா திபதிக் கான
சிறந்த சரிகைக் காவி
ஆடை யையு டுத்த
ஆசான் அவர்க்கு ரைத்தார்!   (64)

தேவி சார தாவின்
சிரித்த முகத்தின் சாயல்
காவி உடைக்குள் வந்த
கண்ணி யத்தின் பேற்றை
நாவி னாலே சொல்ல
ஞான மார்க்கம் தோன்றும்!
சேவிப் போர்க்கு வாழ்க்கைப்
பிறவி அறுந்து போகும்!      (65)

 “பணிவே விநயம் தரும்”

சின்ன வயதுப் பையன்
சிரித்த முகத்தைக் காட்டி,
“என்ன ருமைக் குருவே
எனக்கு மந்தி ரம்தான்
வேண்டும்” என்ற போது
“விநமு டனேநீ கேட்க
வேண்டும்” என்று நல்ல
விதமாய் வழியும் சொன்னார்! (66)

அதன்பின் அந்தப் பையன்
அபிந வவித்யா தீர்த்தர்
பதத்தில் வீழ்ந்து மிக்கப்
பணிவாய் வேண்டிக் கொள்ள
சிதம்ப ரேசர் நாமம்
சிந்தை செய்யச் சொன்னார்!
நிதம தையே சொன்ன
சிறுவன் உயந்தான் வாழ்வில்.  (67)

 “சபரிகிரி ஸ்ரீ ஐயப்ப தரிசனம்”

சபரி மலைக்குச் சென்று
சாஸ்தா தரிச னத்தில்
தபசி கள்தன் னுள்ளம்
கரைந்து சுதனைக் கண்டார்
உடனே சாஸ்தா பேரில்
உருக்க மாய்சு லோகம்
கடலாய்ப் பெருகி ஓட
கவிதை யாய்ச்செய் திட்டார்! (68)

அந்த ஸ்லோகம் தன்னை
அடியார் சொல்லி வந்தால்
எந்தப் பிணியும் இன்றி
இன்பம் கொள்வர் சத்யம்.
மந்த புத்தி மாறும்
மனத்தில் சக்தி கூடும்
நந்த வனத்துப் பூவாய்
ஞான வாசம் சேரும்.  (69)

 “ஒன்றிலே ஒன்றப் பழகு”

ஓசை எதுவந் தாலும்
ஒன்றில் மனத்தை வைத்து
பூசை செய்யும் வேளை
பொன்னாய் ஒளிர்வான் போலே
மீசை வைத்த ஈசன்
மெல்லத் தெரிவான் என்பார்!
பாசம் பற்றை வென்ற
பார தீதீர்த் தர்தான்.  (70)

                       (யாத்திரை தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *