நாங்குநேரி வாசஸ்ரீ

14. கல்வி

பாடல் 131

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

சீர்படித்தி முடித்த தலைமுடியினழகும்
சிறப்பாகக் கரையிட்ட ஆடையினழகும்
பூசிய மஞ்சளின் அழகும்
பூவுலகில் உண்மை அழகல்ல
உண்மையாய் நடக்கும் நடுவுநிலைமை
உணர்வைத் தருவதால் கல்வியால்
உண்டாகின்ற அழகே உயர்ந்த அழகு.

பாடல் 132

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

இவ்வுலக இன்பத்தைத்தரும்
ஈவதனால் குறையாது
தம் புகழை எங்கும் பரப்பும்
தம் உயிருள்ளவரை அழியாது
ஆதலில் கல்விபோல் எவ்வுலகிலும்
அறியாமை போக்கும் மருந்தை
யாம் கண்டதில்லை.

பாடல் 133

களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.

உவர்நிலத்தில் உண்டான உப்பை
உயர்ந்தோர் நன்செய் விளைநெல்லினும்
உயர்வாய்க் கருதுவர் கீழ்க்குடியில்
உதித்தவராயினும் கற்றறிந்தவராயின்
உயர்குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து
உயர்வாய்ப் போற்றி மதித்தல் வேண்டும்.

பாடல்134

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.

வைத்த இடமான மனதிலிருந்து
வேறொருவரால் கவரஇயலாது
தமக்குக் கிடைத்ததைப் பிறருக்குத்
தருவதால் அழிவதில்லை
படை வலிமைமிக்க மன்னர் சினந்தாலும்
பிடுங்கிக்கொள்ளல் அரிது ஆதலில்
தம் மக்கட்குச் சேர்த்துவைக்கத்
தக்கது கல்வியேயன்றி வேறல்ல.

பாடல் 135

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

கல்வி முடிவில்லாதது
கற்பவரின் வாழ்நாட்களும்
குறைவே மெல்ல யோசித்தால்
அண்டும் நோய்களும் பல
ஆதலில் நீரை நீக்கி
பாலைப் பருகும் அன்னம்
போல் அறிவுடையார் ஆராய்ந்து
பொருத்தமானவற்றையே கற்பர்.

பாடல் 136

தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் – காணாய்
அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.

படகு செலுத்துபவனைப்
பண்டைய சாதிகளில்
கீழோன் என இகழார் மேலோர்
அப்படகு ஓட்டுபவனின்
துணையால் ஆற்றைக் கடப்பது போலாம்
தக்க நூல்களைப் படித்தவனைத்
தேடி நன்நூற்பொருளைக் கற்றல்.

பாடல் 137

தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.

குற்றமற்ற பழமையான நூற்கேள்வி
கேட்குந்தன்மை உடையவராய்
கூர்அறிவுடை கற்றோர்களுடன்
கூடி மாறுபாடற்று அளவளாவி
மகிழ்தலைவிட  இன்பம் உண்டெனில்
மேலுலகமெனும் தேவர்கள் உலகத்தைக்
காண முயலுவோம்.

பாடல் 138

கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே – நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.

ஒலிக்கும் கடலின் குளிர் துறை
உடையோனே! நுனியிலிருந்து கரும்பைத்
தின்பது போலாம் கற்றறிந்தான் நட்பு
தீய அன்பில்லாக் குணமற்றவரின் நட்போ
அடியிலிருந்து கரும்பைத் தின்பதுபோலாம்.

பாடல் 139

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

பழஞ்சிறப்புடை அழகுமிகு
பாதிரிப்பூவைச் சார்ந்ததால்
மண்பானை தண்ணீரை
மணமுள்ளதாக்குதல் போல்
கல்லாரே ஆயினும்
கற்றாரைச் சார்ந்து
நடப்பின் அவர்போல்
நல்லறிவு நாளும் உண்டாகும்.

பாடல் 140

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.

பலநூல்களுக்குள்ளே ஞானம்
போதிக்கும் நூல்களைக் கல்லாது
விடுத்து இவ்வுலக அறிவை மட்டுமே
வழங்கும் நூல்களைக் கற்பதெல்லாம்
கலகல என்று வீணாகக்
கூவுவதைப் போலல்லாமல்
பிறவியாகிய தடுமாற்றத்தைப்
போக்கும் வழி அறியப்படுவது இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *