Category: தொடர்கள்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 92

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 92

    நாங்குநேரி வாசஸ்ரீ

    92. வரைவின் மகளிர்

    குறள் 911

    அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும்

    நேசமில்லாம பணத்து மேல ஆச வச்சி இனிக்க பேசுத தாசியோட பேச்சு ஒருத்தனுக்கு துன்பத்தக் கொடுக்கும்.

    குறள் 912

    பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயன்தூக்கி நள்ளா விடல்

    எம்புட்டு ஆதாயம் கெடைக்கும்னு பாத்து அதுக்கேத்தாமாரி இனிக்க இனிக்க பேசுத தாசிய நம்பி ஏமாறக் கூடாது.

    குறள் 913

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று

    பொருள் மேல மட்டுமே ஆச வச்சி அதுக்காவ பொய்யா கட்டி அணைக்குத தாசி கூட இருக்கது, இருட்டு அறையில சம்பந்தமில்லாத பொணத்த அணைச்சிக் கிட்டதுக்கு சமானமாவும்.

    குறள் 914

    பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி னவர்

    அருள மட்டுமே தேடுத அறிவுள்ளவுக பொருள விரும்புத தாசியோட சேந்து இன்பத்த அனுவிக்க விரும்ப மாட்டாக.

    குறள் 915

    பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்

    சொந்த அறிவுள்ள படிச்ச புத்திசாலிங்க எல்லாருக்கும் பொதுவா இருந்து இன்பத்த தருத தாசி பின்னால போவ மாட்டாக.

    குறள் 916

    தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
    புன்னலம் பாரிப்பார் தோள்

    தன்  அழக நெனச்சி தலக்கனம் புடிச்சுத் திரிஞ்சு அத வித்துப் பொழக்கித தாசி பொறத்தால படிச்ச பெருமக்க போவ மாட்டாக.

    குறள் 917

    நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் தோள்

    நெஞ்சுறுதி இல்லாதவுக தான் மனசார இல்லாம வெறும் பொருளுக்கு ஆசப்பட்டுக் கூடுத தாசி பின்னால போவாக.

    குறள் 918

    ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு

    .வஞ்ச மனசுள்ள தாசிகிட்ட மயங்கி கெடக்க புத்திகெட்டவன மோகினி பிடிச்சதா சொல்லுவாக.

    குறள் 919

    வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு

    ஒழுக்கங்கெட்ட தாசியோட தோள் கூறுகெட்டவன் விழுந்து கெடக்க நரகத்துக்குச் சமானம்.

    குறள் 920

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு

    மனசு ஒருத்தங்கிட்டயும் ஒடம்பு ஒருத்தங்கிட்டயுமா ரெண்டு மனசா இருக்க தாசியும், கள்ளும், சூதாட்டமும் இந்த மூணு வகையும் லச்சுமினு சொல்லுத திருமகள் வெலக்கி வச்சவுகளுக்கு ஒறவா வந்து அமையும்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள் ; சிவனோடு பேசியவர்கள்- 3

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள் ; சிவனோடு பேசியவர்கள்- 3

    தி. இரா. மீனா            

    ஆதய்யா:

    சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆதய்யா புலிகெரேவிற்கு [தற்போதைய லட்சுமேஸ்வரா] வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக வந்தவர். பிறகு அங்கேயே தங்கி பத்மாவதி என்னும் சமணப் பெண்ணை மணந்து கொண்டார்.தன் மாமனாரிடம் சிவபெருமானின் உயர்வை விளக்கிச் சொல்லி,விவாதித்து சௌராஷ்டிரத்திலிருந்து சோமேஸ்வ ரரைக் கொண்டு வந்து புலிகெரெயிலுள்ள சுராஹொன்னெ பாசடி யில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அவருடைய முத்திரை சௌ ராடிஷ்ர சோமேஸ்வரர்.வசனம்,மற்றும் ஸ்வர வசனங்களை எழுதிய வர். [ஸ்வரவசனங்களைப் பாடலாகப் பாடும் தன்மை -இன்றும் உள்ளது] அவருடைய வசனங்கள் இலக்கிய உயர்வும், தத்துவ மேன்மையும் கொண்டவை. சில வசனங்கள் :

    1.“கல்லுள் பொன் வெளிப்பட்டாலும்
         பொன் கல்லுக்கு அடிமையாகுமா?
         சிப்பியிலிருந்து முத்து பிறப்பினும்
         முத்து சிப்பிக்கு  அடிமையாகுமா?
         கற்பகமரம் பூமியில் பிறந்தால்
         அது பூமிக்கு அடிமையாகுமா?
         சரணர்கள் தாயின் கருவிலிருந்து பிறப்பதால்
         சரணர் பெற்றோர்க்கு அடிமையாக முடியுமா?
         சௌராஷ்டிர சோமேஸ்வரா
         உன் சரணர்கள் சுதந்திரமானவர்கள்”

    2.“குரவன் தான் உருவாக்கும் குடத்திலிருப்பதில்லை
        விவசாயி தான் வளர்க்கும் தானியத்திலிருப்பதில்லை.
        தேரை உருவாக்கும் தச்சன் தேரிலிருப்பதில்லை.
        சிவன் இந்த உலகைக் கட்டுப்படுத்தும்  பொறிஞனாக         
        இயந்திரத்துடன் இருக்கிறான் என்று  நீங்கள் சொன்னால்
        சௌராஷ்டிர சோமேஸ்வரன் ஒப்புக்கொள்வதில்லை.” 

    3.“நேர்மையான செயல் பயிற்சி ஸ்படிகமாய் இல்லாதவரை
         ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்றாலென்ன?
         அறுபத்தெட்டு புனித ஸ்தலங்களுக்குப் சென்றாலென்ன?
          நீ கைவிட்டாலென்ன? பற்றிக் கொண்டாலென்ன?
         சௌராஷ்டிர சோமேஸ்வரனோடு ஐக்கியமாகிற
         பேரானந்தம்   நேர்மை உடைய சரணர் மனதில் மட்டும்
         ஒளியான சிவலிங்கமாய் உள்வாங்கப்பட்டிருக்கும்”

    4. “இமைகள் மூடி வடிவமற்றதைக் காணவேண்டும்
          செவிகள் மூடி ஒலியற்றதைக் கேட்கவேண்டும்
          நாவடக்கி சுவையற்றதைச் சுவைக்கவேண்டும்
          நாசியடக்கி மணமற்றதை உணரவேண்டும்
          மெய்மறந்து இலிங்கத்தோடு இணையவேண்டும்
          சௌராஷ்டிர சோமேஸ்வரனைப் பிடித்து
          ஐம்பொறிகள் நீக்கி இலிங்கப் பொறிகளாக்க வேண்டும்”

    5. “மதமழித்தவனுக்கு மாயை என்ன செய்யும்?
         கவலையழித்தவனுக்கு காயம் என்ன செய்யும்?
         இயற்கை மீறியவனுக்கு உயிர் என்ன செய்யும்?
         பிரமையழித்தவனுக்கு உணர்வு என்ன செய்யும்?
         மறதியழித்தவனுக்கு அறிவின் கேள்வி என்ன?
         சௌராஷ்டிர சோமேஸ்வரனே
         நீ என்ன செய்வாய் தான் தானான அடியவனுக்கு?”

    6. “பின்பற்றாதீர் , வேதங்களைப் பின்பற்றாதீர்
          துன்பப்படாதீர்  ,சாத்திரங்களோடு துன்பப்படாதீர்
          பயன்படுத்தாதீர் ,புராணங்களைப் பயன்படுத்தாதீர்
          காலம் கடத்தாதீர் ,ஆகமங்களோடு  காலம் கடத்தாதீர்
          சிக்கிக் கொள்ளாதீர் ,சொல்வலைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்
          சௌராஷ்டிர சோமேஸ்வரனின்  கரம் பிடிப்பீர் ”

    7. “பிறப்பொரு தளை ,இறப்பொரு முக்தியெனச் சொல்லும்
         அறிவற்றவர்களை என்னவென்று சொல்வேன் ஐயனே?
         பிறப்பு இறப்பு என்னும் உறவில் முக்தியுண்டா?
         தேங்கிய தேக்கிய முக்கால வினைகள் நீங்கி
         எண்வகை போகங்கள் அழிந்து பிறப்பு இறப்பின்றேல்
         முக்தியாம்,சௌராஷ்டிர சோமேஸ்வரனின் கை பற்றாமல்
         அத்தகைய முக்தியில்லை.”

    அக்கவணிய ஹம்பய்யா:

    குந்தள நாட்டின் முகுந்தபுரத்தைச் சேர்ந்தவர்.பக்தர்களின் வழி பாட்டிற்காகப் புனிதநீர் கொண்டுவந்து கொடுப்பது இவர் பணி யாகும்.”ஹம்பய விருப்ப “என்பது இவர் முத்திரையாகும். சிவனின் பெருமை,பக்தனின் பண்புகள் ஆகியவற்றை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

          “பக்தன் பொய்யுரைப்பதில்லை
            அவன் ஆசைகளுக்கு ஆளாவதில்லை
            புலனாசைகள் என்பது அவனுக்குப் புல் போன்றது
            கருணை என்பது அவன் கையிலிருப்பதால்
            இரப்பது என்பது அவனறியாதது.
            நினைவென்பது அவன் அடிமை,சினம்அவனறியாதது.
            மூவகைக் கவலைகள் அவனைத் தொடுவதில்லை
            இலிங்கம் அவனிடமிருப்பதால் எல்லைகளெதுவுமில்லை
            அவன் பாதை உலகிற்குப் புதியது.
            உலகின் பாதை அவனுக்குப் புதியது.
            அவன் இலிங்கத்தை தியானிக்க
            இலிங்கம் அவனை தியானிக்கும்.
            அவன் புகழ்பாடுவதென்பது என்னால் இயலாதது.
            சென்ன ஹம்பைய விருப்பய்யா!
            உண்மைச் சரணனின் பக்தி வலுவானது.”

     அக்கவணி ஹொன்னய்யா:

    புலிகெரே [இன்றைய லட்சுமேஸ்வரா] இவரது ஊராகும். தினந்தோறும் துங்கபத்திராவிலிருந்து நீர் கொண்டுவந்து இறைவனை நீராட்டி வழிபடுவது இவர் வழக்கமாகும். சோமநாதர் இவருடைய வசனங்களின் முத்திரையாகும் ஒரே கடவுள் வழிபாடு, இலிங்கம்- அங்கம் ஆகியவற்றின் சமன்பாட்டை வலியுறுத்துவதாக இவர் வசனங்கள்  அமைகின்றன.

    “நடப்பது நடக்கட்டும் நடக்காமல் போனது
      போகட்டுமென்று ஒருவன் சொல்லிவிடமுடியாது
      சபதம் எடுத்துக்கொண்டவனுக்குத் தேவை உறுதிதான்
      நீங்கள் பிடித்ததை விட்டுவிடக்கூடாது
      புலிகரே வரத சோமநாதன் வலிமையோடு
      தன்னைச் சார்ந்தவனை விட்டுவிடுவதில்லை”.

                                                                                     – (தொடரும்)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 60 (ஞாலம்)

    சேக்கிழார் பா நயம் – 60 (ஞாலம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருவாரூரில் இறைவன் தம் முன் எழுந்தருளிய போது அவர்தம் பொற்பாதங்களைக் கண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகள் நான்கு திருப்பாடல்களைப் பாடினார். அவற்றின் பொருளை இங்கே காண்பது நமக்கு நல்வாய்ப்பாகும். முதற்பாடலின் பொருளாக வேதங்களாகிய வண்டுகள் சூழ்ந்து, நுகர்ந்து ஒலிக்கும் பரமானந்தத் தேனை, எம்போன்ற எளியோருக்கும் நுகர்வுப் பெரும்பொருளாய் அமைத்து, அவர் திருப்பாதங்கள் வாரி வழங்குகின்றன! என்பதை அறிந்து கொண்டோம், அடுத்தபாடல், அத்திருவடிகள் மூவகைத் திருவருளை வழங்கும் அழகை சுந்தரர் எடுத்துரைக்கின்றார்.

    இறைவன் திருப்பாதங்கள் ஐந்தொழில்களைத் தம் திருக்கூத்து மூலம் மகிழ்ச்சியுடன் இயற்றின. அடுத்து அவை உயிரழிக்கும் காலனின் உயிரையும் அழிக்க எண்ணிக் கோபத்துடன் உதைத்தன. அன்புடன் அப்பெருமானின் திருப்பாதத்தை உமையம்மை வருடிக் கொடுத்தலால் சிவந்து விளங்கின என்று சுந்தரர் கூறுகிறார்.

    “ஞால முய்ய நடமன்று ளாடின;
    கால னாருயிர் மாளக் கருத்தன;
    மாலை தாழ்குழன் மாமலை யாள்செங்கை
    சீல மாக வருடச் சிவந்தன,“

    (இ-ள்.) வெளிப்படை. “உலகம் உய்யும் பொருட்டு ஐந்தொழிற் பெருங்கூத்தைத் திருஅம்பலத்திலே ஆடின; இயமனது உயிர்போகும்படி கோபித்தன; மாலையணிந்த கூந்தலையுடைய உமையம்மையார் தமது செங்கையினாலே உபசரித்துத் தடவச் சிவந்து காட்டின;

    (வி-ரை.) நடம் – ஐந்தொழிற் பெருங்கூத்து. இதனையே அற்புதக் கூத்து – ஆனந்தக்கூத்து – பொற்றில்லைக்கூத்து என்று பலவாறும் வகுத்துப் புகழ்ந்து ஆணையிட்டனர் திருமூலதேவ நாயனார்.

    ஞாலம் உய்ய – உயிர்கள் கடைத்தேறி உய்யும்படியாகப்படைத்தல் – காத்தல். அழித்தல் – மறைத்தல் – அருளல் என்னும் ஐம்பெருந் தொழில்களும் இறைவன் செய்கின்றான்; ஆதலின் ஞாலம் உய்ய என்றார். இவையே தோற்றம் – நிலை – இறுதி – மறைப்பு – அருள் எனவும் கூறப்பெறும். இவற்றைப் புரிதலையே நடம் ஆடின என்பர். ஞாலம் – உயிர்களின்மேல் நின்றது.

    உய்ய நடம் ஆடின – ஞாலம் – சேதனம் – அசேதனம் என இருவகைப்படும்; அவற்றுள்ளே அசேதனம், சேதனத்தின் அநுபவத்திற்கே உரியது. சேதனமாகிய உயிர்கள் மலத்தாற் கட்டுப்பட்டன. மல மறைப்பு – இருள். இவ்விருள் மிக வலிமை வாய்ந்தது. அது தானாய் அகலாது; உயிரோ அதனை அகற்ற வலிமையற்றது; ஆதலின் இயல்பாகவே மலமற்றவனாய் எல்லாம்வல்லவனாம் ஒருவன் வேண்டும். அவன் தனக்கென்று உருவமோ செயலோ வேண்டாதவன். ஆதலின் அவன் உருவத்தையும் செயலையும் மேற்கொண்டால் அது ஞாலமுய்யவே கொள்வானாதல் வேண்டும். கட்டுண்டு கிடக்கும் உயிர்க்கு அதனைப்பற்றிய கட்டு நீங்கும்பொருட்டுக் கருவிகரணங்கள் வேண்டும்; அவற்றுக்காக உடம்பு தருதல் வேண்டும்; உடம்பு நிற்பதற்காகப் புவனங்களும், அவற்றிலே புசித்து அநுபவித்திருக்கப்போகங்களும் தருதல் வேண்டும்; இவற்றை மூலகாரணப் பொருளினின்று படைத்துத் தருதல் சிருட்டி எனப்படும். அவற்றைநிலைக்கச் செய்தல் திதி – காத்தல் எனப்பெறும். இளைப்பாற்றுதற்காக ஒடுக்குதலையே சங்காரம் என்பர்; மும்மலங்களின் வழிநின்று அவற்றின் றொழிலை நிகழ்த்துதல் மறைப்பு; மலநீங்கிய உயிரைத் தன்னடிகூட்டுதல் அருள் என்ப; இவ்வநைத்தையும் இறைவன் சங்கற்ப மாத்திரத்தாலே – நினைப்பு மாத்திரத்தாலே – செய்வன். இதனை அருட் கூத்தென்றும், அருள் விளையாட்டென்றும் உபசரித்துக் கூறுவர். இதனையே இங்கு நம்பிகள் ஞாலம் உய்ய நடம் ஆடின என்றார். சூரியனது சந்நிதி மாத்திரத்திலே வாவிகளில் உள்ள தாமரைகள் மலர்தலும், மலர்ந்தவாறே இருத்தலும், குவிதலும் நிகழ்வதுபோல இறைவனது சந்நிதி மாத்திரத்தானே இவை நிகழ்வன ஆதலின் ஆடின என்றார். ஆடுதல் இறைவன் தொழில்; ஆயினும் ஆடுதற்குரியன பாதங்கள் ஆதலின் பதம் ஆடின என்றார். பதம் – சிவசத்தி; அஃதொன்றேயாயினும் அறிதலும் செய்தலுமாகிய தொழில் வேறுபாடுபற்றி ஞானம் கிரியை என இரண்டாதலின் ஆடின எனப் பன்மையாகக் கூறினார்.

    காலன் ஆர் உயிர் மாளக் கறுத்தன – ஆருயிர் – மிகுவலிமை படைத்த உயிர். காலனாரது உயிர் என்றுரைப்பாருமுண்டு. காலனுக்கு ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பாலன்றி ஆர் விகுதி புணர்த்தற்கு இயைபின்மை ஓர்க. கறுத்தல் – கோபித்தல். “மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன“ என்பது அப்பர் பெருமான் தேவாரம்.“என்னடியா னுயிரைவவ்வே லென்றடற் கூற்றுதைத்த, பொன்னடி“ என்ற தேவாரமுங் காண்க. இறைவனது ஆணையின்வழி அவரவர் காலத்தைக் கணக்கிட்டுப் போவானாதலின் காலன் என்ப. அடியார்கள் காலனையுங் கடந்தவர்கள்.

    காலனையும் வென்றோங் கடுநரகங் கைகழன்றோம்
    மேலை யிருவினையும் வேரறுத்தோம்  – கோல
    வரணா ரவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
    சரணார விந்தங்கள் சார்ந்து
                                                 – அற்புதத் திருவாந்தாதி – 81

    என்று காரைக்காலம்மையார் திருவாக்குக் காண்க. தனது அதிகார வரம்பு கடந்தவனாய் இறைபணியின் நின்ற அடியார்களிடம், சென்றானாதலின் உதைபட்டான் என்க. பாதமிரண்டாதலின் கோபப் பிரசாதமென்ற இரண்டு அருட் குணமும் குறிக்கக் கறுத்தன – சிவந்தன எனக் கறுத்தல் சிவத்தல் இரண்டும் கூறப்பெற்றன.

    மாமலையாள் செங்கை சீலமாக வருட – வருட வேண்டிய முறையால் வருடுதல்  சீலமாக எனப் பெற்றது. வருடுதல் –  உபசரித்தல். இது ஒருவகை வழிபாட்டு முறை. உரிய மரியாதையோடு மெல்லென வருடவும் – என்க. வருட – வருடவும்; சிறப்பும்மை தொக்கது.

    “மன்னு மலைமகள் கையால் வருடின“
    “செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்க மலக்கரத்தால்
    வருடச் சிவந்தன மாற்பே றுடையான் மலரடியே“

    என்பன அப்பர் பெருமான் திருவாக்கு. சீலமாகும் பொருட்டுவருட என்றுரைத்தலுமொன்று. முன்னே கறுத்தன; பின்னே வருடச்சிவந்தன என்பது அணி. இனி முழுப்பாடலையும்  படித்தறிவோம்.

    ‘ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;
    காலன் ஆர் உயிர் மாளக் கறுத்தன;
    மாலை தாழ் குழல் மா மலையாள் செங் கை
    சீலம் ஆக வருடச் சிவந்தன’

    ஆடின, கறுத்தன, சிவந்தன என்று இறைவன் பண்பு நலன்களைத் திருவடியின் பெருமைகளாகக்  கூறியது  சிறப்பு. அவற்றையே துதிக்க வேண்டும் என்பது பொருள்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 91

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 91

    நாங்குநேரி வாசஸ்ரீ

    91. பெண் வழிச்சேறல்

    குறள் 901:

    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
    வேண்டாப் பொருளும் அது

    பொஞ்சாதி மேல ஆச வச்சி அவ பேச்சக்கேட்டு ஆடுதது நல்லதுக்கு இல்ல. கடைமையச் செய்ய விரும்புதவங்க வேண்டாம்னு நெனைக்கதும் அதுதான்.

    குறள் 902:

    பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்

    ஏத்துக்கிட்ட கடமையச் செய்யாம பொம்பள பின்னால ஆச வச்சி சுத்துதவன் கிட்ட இருக்க சொத்து வெக்கப்பட்டு கூசி தல குனியுத நெலமைக்கு கொண்டு உட்ரும்.

    குறள் 903:

    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்

    கொணங்கெட்ட பொஞ்சாதி முன்ன பணிஞ்சு போவுத புருசன் நல்லவங்க மத்தியில நிக்குதப்போ கூச்சப்படுவான்.

    குறள் 904:

    மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
    வினையாண்மை வீறெய்த லின்று

    கலியாணம் முடிச்சு புது வாழ்க்கையோட பயன அடையாம குடும்பம் நடத்த பயப்படுதவனோட காரியத்தெறம சிறப்பா அமையாது.

    குறள் 905:

    இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்

    பொஞ்சாதிக்கு பயந்து வாழுதவன் நல்லவங்களுக்கு நல்லது செய்யுதப்போவும் பயந்து நடப்பான்.

    குறள் 906:

    இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
    அமையார்தோ ளஞ்சு பவர்

    தேவர்களப்போல இந்த ஒலகத்துல ஒசத்தியா வாழ்ந்தாலும் பொஞ்சாதியோட அழகான தோளுக்கு பயந்து வாழுதவனுக்கு பெரும கெடையாது.

    குறள் 907:

    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து

    பொஞ்சாதி ஏவுத காரியத்த செய்யுதவனோட ஆண்மையவிட வெக்கப்படுத கொணத்தக் கொண்ட மானமுள்ளவளோட பெண் தன்ம ஒசந்தது.

    குறள் 908:

    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட்டாங் கொழுகு பவர்

    தம் பொஞ்சாதி ஆசப்பட்டதுமாரி வாழுதவன் சேக்காளியப் பத்தி வெசனப்படமாட்டான். அவுகளுக்கு நல்லதும் செய்யமாட்டான்.

    குறள் 909:

    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ணேவல் செய்வார்கண் இல்

    நல்லகாரியத்த செய்யுததும் அதுக்காவ பொருள் சேக்க மொனையுததும், மத்த கடமைகளும் பொஞ்சாதி பேச்சக் கேட்டு நடக்கவங்களுக்குக் கெடையாது.

    குறள் 910:

    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

    எதையும் ரோசனை பண்ணி செய்யுதவனும், நெஞ்சுறுதி இருக்கவனும் பொஞ்சாதி பேச்ச மட்டுமே கேட்டு நடக்க மாட்டாக.

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2

    நிர்மலா ராகவன்

    பாறைமேல்

    சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்று உணர்ந்த புருஷாமிருகத்தின் கதை.

    இக்கதையைப் படித்துவிட்டு, நான் என் பேரனுக்குச் சொன்னேன், வழக்கம்போல் பீமனும் அக்காட்டு மிருகமும் ஒருவரோடொருவர் சண்டை போடுவதை நடித்துக்காட்டி.

    “இதைப் பாட்டாக எழுது. மிக நன்றாக இருக்கும்,” என்று மகள் ஷீலா கூறிப்போனாள்.

    ஒவ்வொரு காட்சியையும், நாட்டிய – நாடகபாணிக்கு ஏற்ப எப்படி அமைப்பது என்று நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.

    அது மட்டுமா? நான் எடுத்துக்கொண்ட ராகம் தானாக மாறி, பிருந்தாவன சாரங்காவாக ஆகியது. கிருஷ்ணருக்கு உகந்த இடம் பிருந்தாவனம், அல்லவா? இது புரியாது, அதை மாற்றியமைக்க மூன்று நாட்கள் முட்டிக்கொண்டேன்.

    `சிவாயநம ஓம்’ என்ற வார்த்தைகள் தோடி, ஷண்முகப்ரியா, கமாஸ் ஆகிய மூன்று ராகங்களிலும் அமைந்திருப்பது தற்செயல்.

    தன் பலத்தில் கர்வம் கொண்டிருந்த பீமனை காட்டு விலங்கான புருஷாமிருகம் துரத்த, அவன் பயந்தோடுவதை மேடையில் பார்க்கும்போது சிறுவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.

    பின்குறிப்பு:18 ஆண்டுகளாக, வசதியற்ற குடும்பத்திலிருந்து வரும் பெண்களுக்கும், சில தாய்மார்களுக்கும் கோலாலம்பூர் பங்க்சார் (Bangsar) ஸ்ரீநாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இலவச பரதநாட்டிய வகுப்பு நடத்துகிறாள் என் மகள் ஷீலா. மலேசியாவுடன், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளிலும் மாணவிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் படைத்திருக்கிறாள்.

    மேல் விவரங்களை அறிய — Face book: Mahavidya Dance Theatre

    இப்பாடலைக் கேட்க: https://youtu.be/A6a2lyz6gPQ

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 90

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 90

    நாங்குநேரி வாசஸ்ரீ

    90. பெரியாரைப் பிழையாமை

    குறள் 891:

    ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
    போற்றலுள் எல்லாம் தலை

    ஏத்துக்கிட்ட காரியத்த நல்லமொறையில செஞ்சுமுடிக்குத சக்தி இருக்கவங்கள எளக்காரம் செய்யாம இருக்கதுதான் தன்னயக் காக்குத எல்லாக் காவல்களிலையும் ஒசந்ததா அமையும்.

    குறள் 892:

    பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
    பேரா இடும்பை தரும்

    பெரிய மனுசங்கள மதியாம இருந்தா விட்டுவெலகாத பெருந்துன்பம் வந்து சேந்துக்கிடும்.

    குறள் 893:

    கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு

    ஒருத்தன் தன்னயத்தானே கெடுத்துக்கிட ஆசப்பட்டாம்னா பகைய மனசுல நெனக்க நேரமே யோசிக்காம அழிச்சுப்போடுத சக்தி உள்ளவுக கிட்ட வாலாட்டணும்.

    குறள் 894:

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
    காற்றாதார் இன்னா செயல்

    பலம் உள்ளவுக கூட பலமில்லாதவுக மோதுதது எமன கைய அசைச்சு கூப்பிடுததுக்கு சமானம்.

    குறள் 895:

    யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்

    ரொம்ப பலமுள்ள ராசாவோட கோபத்துக்கு ஆளானவுக எங்க தப்பிச்சிப் போனாலும் நிம்மதியா வாழ ஏலாது.

    குறள் 896:

    எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

    நெருப்பு சுட்டா கூட உசிரு பொழச்சிக்கிடலாம். பலமுள்ள பெரியவங்க கிட்ட தப்பா நடந்துக்கிடுதவன் தப்பிப் பொழைக்க ஏலாது.

    குறள் 897:

    வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்

    கொணத்தால ஒசந்த பெரியவங்க ஒருத்தன்மேல கோவப்பட்டாகன்னா அவங்கிட்ட குவிஞ்சுகெடக்க செல்வத்தாலயும்,  சொகமான வாழ்க்கையாலயும் என்ன பிரயோசனம்?

    குறள் 898:

    குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
    நின்றன்னார் மாய்வர் நிலத்து

    மலை கணக்கா பலமிருக்க பெரியவர அழிக்க நெனயுதவன் நெலச்ச பணக்காரனா இருந்தாலும் அடியோட அழிஞ்சு போவான்.

    குறள் 899:

    ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்

    ஒசந்த கொள்கை கொண்ட பெரியவங்க ராசா மேல கோவப்பட்டாகன்னா அவன் ஆட்சி இடையிலேயே கையவிட்டுப்போயி கெட்டுஅழிவான்.

    குறள் 900:

    இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்

    அளவுக்குமிஞ்சின வசதிவாய்ப்பு பலமுள்ள பக்கத்தொணை எல்லாம் ஒருத்தர்கிட்ட இருந்தாலும் தகுதியுள்ள பெரியமனுசங்க கோவத்துக்கு எதிர தப்பிச்சுப் பொழைக்க ஏலாது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 89

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 89

    நாங்குநேரி வாசஸ்ரீ

    89. உட் பகை

    குறள் 881:

    நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்

    இன்பம் தருத நெழலும் தண்ணியும் கேடு வெளைவிக்கதா இருந்தா அத கெட்டவைகளாத் தான் நெனைக்கணும். அதுகணக்காதான் சொந்தபந்தத்தோட உட்பகையும்.

    குறள் 882:

    வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு

    வாள் கணக்கா வெளிப்படையா இருக்க பகையாளியப் பாத்து பயப்படவேண்டியதில்ல. சொந்தக்காரன்மாரி பழகிட்டு மனசுக்குள்ள பகைய வச்சிருக்கவனோட ஒறவுக்கு பயந்துக்கிடணும்.

    குறள் 883:

    உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்

    உட்பகைக்கு பயந்து ஒருத்தன் தன்னயக் காத்துக்கிடணும். இல்லன்னா சோதனையான நேரத்துல பச்சப்பாண்டத்த அறுக்குத சாதனம் கணக்கா நம்மள உறுதியா அழிச்சுப்போடும்.

    குறள் 884:

    மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்

    மனசு திருந்தாத அளவுக்கு ஒருத்தனுக்கு உட்பகை உணச்சி வந்துடுச்சின்னா அது அவனச் சேந்த எல்லாரையும் பகையாளியா ஆக்கிப்போடுத அளவுக்கு கெடுதல வெளைவிச்சிப்போடும்.

    குறள் 885:

    உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்

    சொந்தக்காரனோட உட்பகை வந்துச்சின்னா அது சாவுத அளவு பல கெடுதல உண்டாக்கிப்போடும்.

    குறள் 886:

    ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
    பொன்றாமை ஒன்றல் அரிது

    தங்கூட இருக்கவங்ககிட்ட பகை ஏற்பட்டிச்சின்னா அவன் அழிஞ்சு போவுதத தடுக்க யாராலயும் முடியாது.

    குறள் 887:

    செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி

    செப்பு மூடியோட பொருந்தி இருக்கதுமாரி வெளிய பாக்கதுக்குத்தான் தோணும். அதுகணக்கா உட்பகை உள்ளவுக மனசார பொருந்தி இருக்க மாட்டாக.

    குறள் 888:

    அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
    துட்பகை உற்ற குடி

    இரும்ப அரத்தால தேய்க்குதப்போ அதோட வலிம கொறையுதது கணக்கா உட்பகை உள்ளவுக குடும்பத்தோட வலிமயும் தேஞ்சு கோறஞ்சி போவும்.

    குறள் 889:

    எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு

    எள்ளோட பொளவு கணக்கா சித்தூண்டு இருந்தாலும் ஒரு குடிய அழிச்சுப்போடுத அளவு கேடு உட்பகையில இருக்கு.

    குறள் 890:

    உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போ டுடனுறைந் தற்று

    மனசு பொருந்தாம ஒண்ணா வாழுதது ஒரு குடிசைக்குள்ளார பாம்போட வாழுதது கணக்கா பயப்படத்தக்க விசயம்.

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 2

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 2

    தி. இரா. மீனா   

    வசன இலக்கியமென்பதை ஒர் இலக்கியவகை என்று சொல்வதை விட அதை ஒரு பரம்பரை எனக் கூறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இலக்கியவகை என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற் குட்பட்டது. ஆனால் பரம்பரை என்பது காலத்தைத் தாண்டி நிற்பதாகும். வகை என்பதற்குப் பின்னால் குறிப்பிட்டதொரு முறை இருக்கும். அது முழுமை அடையும் போது  முறை அல்லது வகை என்பது முற்றுப்பெறும். ஆனால் பரம்பரை என்பது எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவகையில் தன் பாணியை மொழியோடு இணைத்துக்  கொண்டு  தொடரும் என்பது அதற்கு அவர்கள் தரும் விளக்கமாகும். வசனங்கள் வெறும் வடிவமாக மட்டுமின்றி முன்னோக்கிச் செல்லும் தன்மையுடைய பரம்பரையாக வளர்வதற்குக் காரணம், சரணர்கள் ’இயற்கைக்கு அழிவுண்டு; ஜங்கமத்துக்கு அழிவில்லை” என்ற எண்ணமுடையவர்களாக இருந்ததேயாகும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமூகநிலையைப் பற்றி பலர்  பேசியிருந்தாலும் வெகுஜன சமூக சித்தாந்த நிலை என்பது வசனக்காரர்களால் உருவாக்கப்பட்டது. அதனால் அவர்கள் தொழில் சித்தாந்தத்தை தாம் வாழும் சமூகத்தில் நிலைநாட்டினர். அவர்கள் காட்டும் அதன் தொழில் சித்தாந்த இயல்புகளென்பது கட்டாயக் காயகம், தொழிலே தெய்வம், தொழில் வேறுபாடின்மை, விருப்பமான தொழில், அதிகபலனை விரும்பாத தன்மை, உணவோடு கூடிய காயகம் ஆகியவையாகும். உணவு தேவனாகும் போது உணவைத் தேடித்தரும் தொழில் தெய்வமாக வேண்டியுள்ளது. ”உழைப்பில்லாத சரணன் முட்டாள்” என்ற சென்ன பசவன் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. சரணர் கொள்கையானது மனிதனு்க்கு தீட்சை வழங்கும் போது லிங்கத்துக்கு ஒரு பெயரையும் [முத்திரை] பக்தனுக்கு ஒரு தொழிலையும் கட்டாயப்படுத்தித் தருவதாகும் .அவரவர்  விருப்பத்திற்கு ஏற்றபடி தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதால், தொழில் ஏற்றத்தாழ்வைப் போக்கிய காரணத்தால் தம்மைத் தொழிலின் பெயரால் அறிமுகம் செய்து கொள்வது  அவர்களுக்கு மிகப் பெருமையாக இருந்தது. சான்றாகத் துணி ‘நெய்யும் தாசிம்மையா, என்று இயற்பெயரோடு தொழில் பெயரையும் சேர்த்து அறிமுகப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவதான தொழில் தெய்வம் என்பதில் தொழில் என்பது வெறும் வேலையை மட்டும் குறிப்பதில்லை. வெளியில் வேலை, ஆத்மாவிற்குள் அறிவு என்ற பார்வையில் தொழில் செய்பவன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அந்த ஒன்றிணைப்பு வழிபாட்டை மறக்கச் செய்தாலும் அதில் தவறில்லை. அதனால் ’காயகவே கைலாசா [உழைப்பே கைலாசம்] என்பது அவர்கள் கொள்கையானது.

    தொழில் வேறுபாடில்லாத தன்மை உருவாக வேண்டுமெனில் பொருளை வைத்துச்செய்யும் தொழில் உயர்வானது; உடலுழைபபு இழிவானது என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்ற சிந்தனையில் உழைப்புச் சமன்பாட்டை சரணர் உருவாக்கினர்.” தறி போட்டு நெசவாளியானான்”, வெளுத்து சலவைத் தொழிலாளியானான்” என்று அறிவார்ந்த உழைப்பை முன்னிறுத்திச் சமன்பாட்டை ஏற்படுத்தினர்.

    பரம்பரையான தொழிலைச் செய்து வந்ததால் சமுதாயத்தில் சாதி வேறுபாடு ஆழமானதாக இருந்தது. சரணர்கள் இந்த சாதிக்கொடுமையை அழித்தனர். சரணர்கள் அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றபடி எந்தச் சாதியானாலும் எந்தத் தொழிலானாலும் தாம் விரும்பியதைச் செய்தனர். சான்றாக மோளிக மாரையா என்ற சரணர் நாட்டை ஆள்வதை விட்டுவிட்டு மரம் வெட்டுவதைத் தன் தொழிலாகக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    “சரியான கூலியைத் தரும் தின நித்தியத் தொழில் மகிழ்ச்சி வேண்டும்” என்று [நுலிய சந்தய்யா] சொல்லி வசனக்காரர்கள் புது தர்மத்தை அறிமுகம் செய்தனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வசனக்காரர்கள் கூறிய புதுதர்மம் உயர்ந்த சிந்தனையாகும்.

    உழைப்பு உணவோடு  கூடியது என்ற பார்வையை சரணர்கள் வலியுறுத்துகின்றனர். குருவிற்கு உடலாலும், லிங்கத்திற்கு மனத்தாலும், ஜங்கமனுக்குப் பொருளாலும் தானம் செய்ய வேண்டுமென்று  சரணர்கள் வழிகாட்டுகின்றனர். செல்வத்தில் சமன்பாடு வந்துவிட்டால் சமுதாயச் சமன்பாடு தானாகவே ஏற்படும் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களின் தொழில் சித்தாந்தம் மிக உயர்வானது.

    வசன இலக்கிய கர்த்தாக்களாக இருநூறுக்கும் மேற்பட்டோர் இருந்திருக்கின்றனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் கிடைத்திருக்கின்றன. வசன இலக்கிய ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த இடம், தெய்வம், ஆளுமை அடிப்படையில் தங்கள் வசனங்களுக்கான முத்திரையை [அடையாளம்] அமைத்துக் கொண்டனர், பொதுவாக நான்கு அடி தொடங்கி பதினைந்து அடி வரையில் வசனங்கள் அமையும். ஒவ்வொரு வசமும் படைப்பாளியான சரணர் வாழுமிடக் கடவுளின் முத்திரையை அடையாளமாகக் கொண்டிருக்கும்.

    ஆனந்தய்யா :

    வசனக்காரர்கள் வரிசையில் முதலாவதாக இடம் பெறும் ஆனந்தய்யா என்னும் சரணர் ஆனந்தசிந்து  ராமேஸ்வரன் என்னும் முத்திரையில் சிவனை வழிபட்டவர். இரண்டு வசனங்கள் அவருடைய பெயரில் இடம் பெற்றிருப்பினும் ஒரு வசனம் முழுமையானதாகக் கிடைத்திருக்கிறது.

    “கல்லைப் பிடித்து மாரியுடன் நட்புக் கொள்வீர்
     துன்பப்பட்டுப் பல பிறவிகள் எடுப்பீர்.
     சிவனைக் கண்டேன் என்று  சொல்வது வெற்றாசைதான்.
     அவ்வகை குற்றமுடைய மனிதர்களை வெறுப்பவன்
     ஆனந்தசிந்து ராமேஸ்வரன் “

    ஆயதக்கி மாரையா:

    ஆயதக்கி மாரையா ராய்ச்சூர் மாவட்டம் லிங்காசுரு தாலுகாவைச் சேர்ந்தவர். லக்கம்மா அவருடைய மனைவி. கல்யாண் நகர வீதிகளில் சிதறிக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்குவது அவர் தொழிலாகும். உடல் உழைப்பு மற்றும் சிவ வழிபாட்டிற்காகத் தம்மை அர்ப்பணம் செய்து கொண்டவர்களில் மிக முக்கியமானவராகப் போற்றப்பட்டவர். உழைப்பே தெய்வம் என்பது அவர் வாழ்வின் குறிக்கோள். உழைப்பின் தத்துவத்தைப் பேசுவதாக அவர் வசனங்கள் அமைகின்றன. அங்குள்ள அமரேஸ்வரர் அவருடைய வசனங்களின் முத்திரையாகும். இவருடைய வசனங்கள் காயகத்தின் தத்துவத்தை பெரிய அளவில் பேசுகின்றன. சில வசனங்கள் இங்கே;

    1. “உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவன்
         குருவைப் பார்ப்பதை மறந்து விடவேண்டும்
         லிங்கத்தை வணங்குவதைக் கூட மறந்து விடவேண்டும்
         ஜங்கமர்  காத்திருப்பினும் கவலைப்படக்கூடாது
         உடலுழைப்பே  கைலாசம் என்பதால்.
         அமரேஸ்வரலிங்கர் கூட உடலுழைப்பிற்குட்பட்டவர்.”

     2. “சந்திரகாந்தக் கற்சிலையில் நீர்த்துளிஅடங்கி்யிருப்பது போல
          பசுக்களில் கோரோசனை அடங்கி்யிருப்பது போல
          கல் விறகுகளில் நெருப்பு அடங்கியிருப்பது போல
          உண்மையுடையோரின் நெஞ்சங்களில்
          நீரின் முத்துபோல அடங்கியிருக்கின்றாயன்றோ
          அமரேஸ்வரலிங்கமே”

    3. “அழியாத செல்வத்தைத் திரட்டுவோருக்கு
          களஞ்சியத்தின் தயவேன்?
          பற்றற்றவனைப் பாதுகாப்போருண்டோ?
          தொழில் செய்பவரை அந்தணர் துன்புறுத்துவதேன்?
          அக்குணம் அமரேஸ்வரலிங்கத்துக்குத் தொலைவானதாம்”   

    4. “கனியும்வரை பழம் வேரின் விருப்பப்படியிருக்க வேண்டும்
         அதுபோல மனிதனாக இருந்து வாழ்ந்து முடிக்கும்வரை
         உண்மைச் சரணரின் நட்பும் ஜங்கமரின் சேவையும்
         தொடரும்போதுதான் அமரேஸ்வரலிங்கரை அறியமுடியும்”

    5. “சபதமேற்று காயகம் விட்டு
         பக்தரின் வீடு சென்று
         பொன்னும் பொருளும் இரப்பது
         உயர் பக்தனுக்கு நற்செயலன்று
         அக்குணம் அமரேஸ்வரலிங்கருக்குத் தொலைவானதாம்”

    6. “பிச்சை எடுத்துக் கொண்டு வந்த உணவை வைத்து
          வழிபாடு செய்வதென்பது முடவனின் பயணம் போன்றது
          பக்தன் பிச்சைக்காரனாக இருக்க முடியுமா?
          பக்தனாகப் பிறந்து வழிபாட்டிற்காகப் பிச்சையெடுப்பது
          மோட்சத்தைத் தேடும் வழியல்ல. அவ்வகை
          முயற்சிகளில் அமரேஸ்வரனை அடைய முடியாது.”

    7. “பக்தனுக்கு வறுமையுண்டோ?
         உண்மையுடையோருக்கு வினையுண்டோ?
         மனமொன்றிச் செயல்படும் தொண்டனுக்கு
         மண்ணுலகு விண்ணுலகு என்றுண்டோ?
         அவனிருக்கும் இடம் புனிதமானது
         அவனுடல் அமரேஸ்வரலிங்கத்துடன் சங்கமமாகும்.’

    8. “சிறியதொரு பணிசெய்து பெரியதொரு
         கூலி கேட்பது நேர்மையான காயகமாகுமா?
         குறைத்துக் கொடு என பக்தன் சொல்வது
         அமரேஸ்வரலிங்கத்துக்கு தூய்மையின் காயகமாம்”

                                                                                                                                         – தொடரும்       

    Share
  • சேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)

    சேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    திருவாரூரில் பரவை நாச்சியாரைச்  சந்தித்து மகிழ்ந்த  சுந்தரர், இறைச் சிந்தனையுடன் ஆரூர்ப்  பெருமானின் திருக்கோயில் நோக்கி நடந்தார். அத்திருக்கோயில் வாயிலில் அடியார்கள் விளங்கும் தேவாசிரிய மண்டபம் விளங்கியது! பெருமானாகிய தேவதேவரை அடியார்கள் ஆசிரயித்த தேவாஸ்ரய மண்டபம் அது. அங்கிருந்த அடியார்களை வணங்கி, அவர்களின் தொடர்பைப்  பெறுவது  என்றோ, என்றெண்ணி  மிகுந்த பணிவுடன் அவர்களைக் கடந்து திருக்கோயிலுள் புகுந்தார்.

    ‘நான் இந்த அடியார்களுக்கு அடியேனாவேன்’ என்னும் அன்பு தமது திருவுள்ளத்திலே மேலிட்டெழக், கொடிகள் கட்டியதாய், நெடியதாய், வெற்றியேதருவதாய் உள்ள உட்கோபுரத் திருவாயிலைப் பணிந்து, கைகளைச் சிரமேற் கூப்பிக்கொண்டு, திருக்கோயிலினுள்ளே நம்பிகள் புகுந்தார். அப்போது  அழகிய, மணமிக்க கொன்றை மாலையை அணிந்த தோற்றத்துடன் தியாகேசர், சுந்தரர் எதிர்க்காட்சி காணும் வகையில் எழுந்தருளினார். கண்ணெதிரே காட்சி யருளிய பெருமானின் திருப்பாதங்களைக் கண்கொண்டு கண்ட மகிழ்ச்சியில் திளைத்த சுந்தரர், அவற்றைச்  சிரமேற்கொண்டு நான்கு  திருப்பாடல்களால் துதித்தார். அவற்றுள்  முதல்  திருப்பாட்டு,

    மன்பெ   ருந்திரு   மாமறை   வண்டுசூழ்ந்து
    அன்பர்    சிந்தை   அலர்ந்தசெந்   தாமரை
    நன்பெ   ரும்பர   மானந்த    நன்மது,
    என்த   ரத்தும்  அளித்துஎதிர்  நின்றன.

    என்பதாகும். சிவனடியாரின்  உள்ளமாகிய தாமரையைச்  சுற்றி வண்டுகள் சூழ்ந்து வேதங்களை ஒலித்து  ரீங்காரம் செய்யும். அப்போது அவர்களின் உள்ளக் கமலத்தில்  பரமானந்தமாகிய  தேன் ஊறித் ததும்பும். அத்தகைய தகுதியைப் பெறாத எளியேனுக்கும் அதனை வழங்க என் கண்முன் இறைவனின் திருப்பாதங்கள் தாமாக எதிரே வந்து காட்சியளிக்கின்றன.

    விளக்கம் :

    உலகியற் செல்வங்கள் எல்லாம் மிகுந்த முயற்சியால் கிட்டலாம். அவை நம்மை அறவழியில் செலுத்தமாட்டா. விரைவில் அழியும். ஆனால் இறைவன் திருவருளாகிய, அளவிடற்கரிய நிலைத்த பெருஞ் செல்வத்தை தகுதியால் பெரிய வேதங்கள் எளிதாக நமக்கு அளிக்கும்! வேதம் அளிக்கும் செல்வம் செம்மைக்கு ஏதுவான செல்வமாகும். இதனை தேவாரம் ‘’சென்றடையாத திரு‘’ என்று போற்றும். விரிந்த மறை, நிலைத்த மறை, பெருந்திருவைத் தருகின்ற மறை, அளவில்லாத மறை என்ற நான்கு அடைமொழிகள் நான்கு மறைகளைக் குறித்தன. யசுர் வேதத்தின் இடையில் ‘சிவ’ என்னும் அட்சரத் துவயமாகிய தேன் விளங்குவதாகப் பெரியோர் கூறுவர். அவற்றை வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கின்றன. சூழ்ந்து என்பதற்கு ஆராய்ந்து என்றும் பொருள்.

    பாதத் தாமரையை எண்ணி மகிழும் மனத்துள் சிவத்தேன் தானாக ஊறிப் பெருக, மனம் அதனையே உண்ணும். வண்டுகளோ புறத்தில் சூழ்ந்து கிடக்கும். இதனைச் சேக்கிழார்,

     “மன்று ளாடும்மது வின்னசை யாலே
      மறைச்சு ரும்பறைபுறத்தின் மருங்கே“   

    என்று  முன்னரே  பாடினார். பட்டினத்தடிகள் ,

    “கீழ்மையில்   தொடர்ந்து கிடந்த என் சிந்தைப்
    பாழ்  அறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
    சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
    எந்தை நீயிருக்க விட்டனன்..”

    என்று பாடினார். மேலும் அப்பர் பெருமான்,

    “அன்புடைத் தொண்டர்க்கு  அமுதருத்தி, இன்னல் களைவன“
    “சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன“

    என்று பாடியுள்ளார். இவ்வலர்ந்த தாமரையிலே ஊறுவது இறைவனது திருவடியாகிய மது – தேன். அது தருவது பரமானந்த அநுபவமாம். இவ்வாறன்றிச் சிந்தையிலே அலர்ந்த செந்தாமரை எனக் கொண்டு சிந்தையை அந்தத் தாமரைபூக்கும் நீர் நிலையாகக் கூறுவாருமுளர். அவர்கள்,

    “……..அன்பர் இதய மென்னும், செழுமலரோ டையின்மலர்ந்து
    சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத், தொழுதகு சிற்றடி…..“ (விருத்தகுமார பாலரான படலம்)  என்று திருவிளையாடற் புராணமுடையார் இதற்குப் பொருள் கூறியிருத்தலைக் கூறுவர்; அன்றியும் மது தாமரையினுட்கலந்து அது அலர, அலர உள்ளே ஊறுவதுபோலச் சிந்தையுட் கலந்த திருவடியே அன்பு முதிர முதிர ஆனந்தமாய் ஊற்றெடுப்பதாம். எனவே திருவடியையே மதுவாகக் கூறினர் என்பது.

    நன் பெரும் பரமானந்த நன்மது – வேதத்திலே ஏனைத் தேவர்கள் பெயரோடு சேர்த்து விஷ்ணுவானந்தம் – அக்கினியானந்தம் – இந்திரானந்தம் முதலியன கேட்கப் பெறாமையானும், சிவானந்தம் ஒன்றே கேட்கப்பெறுதலானும், சிவானந்தமே பரமானந்தம் என்க. ஆதலின் பிரமானந்தம் என்பதிற் பிரமசத்தமானது பிரமனைக் குறிக்காது பரப்பிரமமாகிய சிவத்தையே குறிப்பதாம் என்றுங் காண்க. நல் – என்ற இரண்டில் முன்னையது ஆனந்தத்திற்கும், பின்னையது மதுவுக்கும் அடைகளாம். பரமானந்தமாவது – உயர்வு ஒப்பு இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய சிவத்துவ விளக்கமாம். அதனை அழுந்தியறிதலே அநுபவமெனப்படும். “இன்பமே எந்நாளுந் துன்பமில்லை“ என்றது திருவாக்கு. பெருமானது அருளிப்பாடுகள் தம்மிடம் வெளிப்பட நிகழக் கண்டபோது தமது சிறுமையையும், அவரது அளவிறந்த பெருமையையும் எண்ணி எண்ணி ஆராமைப்பட்டு அநுபவித்தல் பெரியோரியல்பு. ஆகவே பெறச் சிறிதும் தரம் இல்லாத என்னிடத்திலேயும், கருணையினால் கொடுத்து எனவும் குறிப்பிட்ட அழகு நினைந்து மகிழ்தற்கு உரியது

    ‘’இத்தனையும் எம்பரமோ ஐய, ஐயோ
    எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே ‘’
    என்ற அப்பர் பெருமான் தேவாரமும்,
    ‘’யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
    யாவர்க்கும் கீழாம் அடியேனை – யாவரும்
    பெற்றரியா இன்பத்துள் வைத்தாய்க்கு …..’’

    என்ற திருவாசகமும் காண்க . இனி முழுப்பாடலையும்  படித்துப் பயன் பெறுவோம்.

    மன்பெ ரும்திரு மாமறை வண்டுசூழ்ந்து
    அன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
    நன்பெ ரும்பர மானந்த நன்மது
    என்த ரத்தும் அளித்தெதிர் நின்றன!

    இத்திருவடிச் சிறப்பை  அடுத்த  வரும் பாடல்கள் கூறும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நாங்குநேரி வாசஸ்ரீ

    88. பகைத்திறம் தெரிதல்

    குறள் 871:

    பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற் றன்று

    பகைன்னு சொல்லுத தீய கொணத்த ஒருத்தன் பொழுதுபோக்கா வெளையாட்டுக்குக் கூட ஆசப்படக் கூடாது.

    குறள் 872:

    வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை

    வில்ல வச்சிருக்குத வீரர் கிட்ட கூட பகையக் காணிக்கலாம். சொல்தெறம இருக்க புத்திசாலிங்க கிட்ட காணிக்கக் கூடாது.

    குறள் 873:

    ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்

    தனிச்சு நின்னு பல பகையாளியத் தேடிக்கிடுதவன் கூறுகெட்ட பைத்தியக்காரன்.

    குறள் 874:

    பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற் றுலகு

    பகையாளியக் கூட சேக்காளியா மாத்துத பெருந்தன்மையான கொணத்த இந்த ஒலகம் போற்றிப் புகழும்.

    குறள் 875:

    தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
    இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று

    தனக்கு ஒதவி செய்ய ஆளில்லாத நெலமயில ரெண்டு பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள்ள ஒருத்தன சேக்காளியாக்கி தொணையாக்கிக்கிட வேண்டியதுதான்.

    குறள் 876:

    தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்

    இதுக்குமுன்ன ஒருத்தனப் பத்தி தெரிஞ்சிருந்தாலும் தெரியலன்னாலும் நெருக்கடி வருதப்போ அவன்கிட்ட நெருங்காம சேக்க வச்சிக்கிட்டும் அவனவிட்டுப் பிரியாம பகையக் காணிச்சிட்டும் இருக்கது நல்லது.

    குறள் 877:

    நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து

    தான் துன்பப்பட்டத தெரிஞ்சிக்கிடாத சேக்காளிக்கிட்ட அதப்பத்தி சொல்லக்கூடாது. . நம்ம பலவீனத்த பகையாளிகிட்ட காட்டிக்கிடக் கூடாது.

    குறள் 878:

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு

    வழிவகைய உணந்து தன்னயும் பலப்படுத்திக்கிட்டு தற்காப்பும் தேடிக்கிட்டா நம்மள எதித்துநிக்க நெனச்ச பகையாளியோட அகராதி தானா அழிஞ்சு போவும்.

    குறள் 879:

    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து

    முள்ளு மரம் எளசா இருக்கும்போதே வெட்டிப்போடணும். அது முத்திப்போச்சுன்னா வெட்டுதவுக கைக்கு வெனையா வந்து நிக்கும்.

    குறள் 880:

    உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்

    பகையாளியோட அகராதிய ஏளனமா நெனச்சி அழிக்காம விடுதவன் மூச்சுவிடுத காரணத்தாலேயே உசிரோட இருக்கதா சொல்ல முடியாது.

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    நிர்மலா ராகவன்

    முன்னுரை

    “நாட்டியத்திற்குப் பாட்டு எழுதிக்கொடேன்!’ மகள் ஷீலா என்னைக் கெஞ்சினாள். அதற்கு முன்பே, இரண்டு வருடங்களாகப் பலமுறை கேட்டிருந்தாள்.

    விடாமல், மறுபடியும் கேட்டபோது, “பாட்டா!’’ என்று முதலில் அயர்ந்தேன். “எனக்குப் பாட்டெல்லாம் எழுதத் தெரியாது. ஏதோ, கதை, கட்டுரை. நாடகம், நாட்டிய விமரிசனம் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரையாவது கேட்டுப்பார்!”

    “அம்மாவே மறுத்தால், நான் யாரைக் கேட்பது?” என்றாள், பரிதாபகரமாக முகத்தை வைத்துக்கொண்டு.

    அதில் பொதிந்திருந்த லாஜிக் என்னைச் சம்மதிக்கவைத்தது.

    முதல் பாடல் எழுத ஆரம்பிக்கும்போது அச்சமும் கூடவே எழுந்தது. விக்னமில்லாமல் என் முயற்சியில் வெற்றிபெற பிள்ளையாரை மனத்துள் துதித்தேன். அடுத்து, `நீயே வந்து எழுதிக்கொடு,’ என்று கலைக்கடவுளான ஸரஸ்வதியை வேண்டினேன். பின்பு, என் இசைக் குரு பத்மஸ்ரீ T.S.கல்யாணராமன். (`எப்படி எழுதறது, ஸார்?’) பின்னர், பல பாடல்களில் இவரது பரிந்துரைகள் உண்டு. (நான் பாட்டெழுத ஆரம்பிக்குமுன்னரே அவர் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

    இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பாடல்களை இயற்றி, அவற்றில் சிலவற்றை வாத்தியங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். இவை பெரும்பாலும் பரதநாட்டியத்திற்கான பாடல்களாகும்.

    ஒவ்வொரு பாடலும் இயற்கையுடன் நான் ஒன்றியிருந்த சமயம் தானாக அமைந்தவை.  ஓர் இந்துக் கடவுளின்மேல், அவரை ஒட்டிய கதை ஒன்றுடன் இருக்கும். (இப்படியாக அடிக்கடி என் “மேதாவித்தனத்தைக்” காட்டிக்கொள்வேன். எல்லாம் தலபுராணங்கள் மற்றும் ஆன்மிகப் புத்தகங்களின் உபயம் என்று யாருக்குத் தெரியப்போகிறது!).

    பாடல்கள் எங்கே, எப்படிப் பிறந்தன என்ற சிறு குறிப்பை இத்தொடரில் எழுத உத்தேசித்திருக்கிறேன். பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போமா? (நான் எழுதிய முதல் பாடல் இதுவல்ல. அந்தக் கதை பிறகு).

    விக்ன விநாயகனே

    கோலாலம்பூரின் கிழக்குப் பகுதியில், 280 கிலோமீட்டர் தூரத்தில் செராடிங் (CHERATING) என்ற இடம் இருக்கிறது, கடலோரத்தில். நீர்நிலைகளைக் காணும்போது என் மனம் உற்சாகம் அடையும். கடலைப் பார்த்தபடி, அலையோசையை ரசித்தபடி பாடிக்கொண்டிருப்பேன்.

    ஒரு முறை, செராடிங்கில் சில தினங்களைக் கழித்துவிட்டு, நானும் என் இளைய மகள் சித்ராவும் வாடகைக் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பிறந்த பாடல் இது.

    காரின் ஜன்னலை சரியாக மூட இயலாத நிலையில், போக்குவரத்து சப்தம் காதைத் துளைத்தது. நிம்மதியாக பாடலைப் புனைய ஒரு வழி கிடைத்தது: ஒரு தினசரியை என் உடல் முழுவதிலும் கூடாரம்போல் கவிழ்த்துக்கொண்டு, எழுத ஆரம்பித்தேன். அனுபல்லவியில், சிவனார் பிள்ளையாரை துதிப்பதாக வருகிறது. முப்புரங்களை எரிக்க சிவன் புறப்பட்டபோது, கணபதியை வணங்காததால் தேரின் அச்சு உடைந்ததாக அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். பிள்ளையாரை வணங்கியதும் தடை நீங்கியது.

    சரணம்: பாற்கடலைக் கடையுமுன், தேவர்களும் அசுரர்களும் விநாயகரை வணங்காததால், மத்தாக இருந்த மேருமலை சாய்ந்துவிட்டது. தம் தவற்றை உணர்ந்து, கிளிஞ்சல்களுடன் கடல் நுரையைச் சேர்த்து கணபதியாக்கி வணங்கினர். விக்னமும் விலகியது.

    (திருவலஞ்சுழியில் வெள்ளை வெளேரென்று இருக்கிறது ஸ்வேத விநாயகர் விக்கிரகம். ஸ்வேதா என்றால் வெள்ளை).

    ஒரு நிகழ்ச்சியின் முதல் அங்கமாகப் பலர் இணைந்து, நாட்டிய நாடகமாக ஆட ஏற்ற பாடல். இப்பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=bfv-BuDciVM

    Youtube: Mahavidya Dance Theatre

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நாங்குநேரி வாசஸ்ரீ

    87. பகை மாட்சி

    குறள் 861:

    வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை

    பகையாளி நம்மளவிட பலசாலியா இருந்தா எதுக்கக் கூடாது. பலமில்லாத எளச்சவன சட்டுனு எதித்து நின்னுடணும்.

    குறள் 862:

    அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு

    கூட இருக்கவங்க மேல நேசம் வைக்காம, பலமுள்ள தொணையில்லாம, தானும் பலம் இல்லாம இருக்குதப்போ பகையாளிய எங்ஙன செயிக்க ஏலும்?.

    குறள் 863:

    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு

    ஒருத்தன் தொட நடுங்கியாவும், கூறுகெட்டவனாவும், மத்தவங்களோட சேந்து பழகுத கொணம் இல்லாதவனாவும், கஞ்சாம்பட்டியாவும் இருந்தாம்னா பகையாளி அவன சுளுவா தோக்கடிச்சிடுவான்.

    குறள் 864:

    நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது

    கோவத்தையும், மனசையும் கட்டுக்குள்ள வைக்க ஏலாதவன யார் வேணும்னாலும், எப்பம்னாலும், எங்குட்டுன்னாலும் சுளுவா தோக்கடிச்சிப்போடுவாக.

    குறள் 865:

    வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க் கினிது

    நல்ல வழிய நாடாம, பொருத்தமானத செய்யாம, பொல்லாப்புக்கு அஞ்சாம, நல்ல கொணமும் இல்லாம ஒருத்தன் இருந்தாம்னா அவன் பகையாளியால சுளுவா செயிக்கப்படுவான்.

    குறள் 866:

    காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்

    யோசிக்காம கோவப்படுதவனாவும், பேராசக்காரனாவும் இருக்கவனோட பகைய ஏத்துக்கிட்டு எதித்து நிக்கலாம்.

    குறள் 867:

    கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை

    தான் கூட இருந்துக்கிட்டே தனக்கு வேண்டாத வேலயச் செய்யுதவன பொருள் கொடுத்தாது பகையாளியா ஆக்கிக்கிடணும்.

    குறள் 868:

    குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
    கினனிலனாம் ஏமாப் புடைத்து

    ஒருத்தன் கொணங்கெட்டவனாவும், தப்புதண்டா செய்யுதவனாவும் இருக்குதப்போ அவன் பக்கத்தொணை இல்லாமப் போவுத நெலம பகையாளிக்கு பலமா ஆகிப்போவும்.

    குறள் 869:

    செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்

    கூறுகெட்ட தொடநடுங்கியா பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள எதித்து நிக்கவங்கள விட்டு மகிழ்ச்சி வெலகாம இருந்துக்கிடும்.

    குறள் 870:

    கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
    ஒல்லானை ஒல்லா தொளி

    போர் செய்யுத மொறையப் படிச்சுத் தெரிஞ்சிக்கிடாம இருக்க பகையாளிய எதித்து நிக்குத சுளுவான காரியத்த செய்யத் தயங்குதவுகள புகழ் அண்டாம எட்டத்துலயே நின்னுக்கிடும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நாங்குநேரி வாசஸ்ரீ

    86. இகல்

    குறள் 851:

    இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்

    எல்லா உசிருங்களையும் மனசு பொருந்தாம இருக்கச்செய்யுத தீய கொணத்த வளக்குத நோய நாம மனவேறுபாடு ங்குதோம்.

    குறள் 852:

    பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை

    நம்ம கூட இணங்க ஏலாம ஒருத்தன் நமக்கு எடஞ்சல் செஞ்சாலும் அவன பகையாளியா நெனச்சி தீம செய்யாம இருக்கது நல்லது.

    குறள் 853:

    இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்

    ஒருத்தன் மன மாறுபாடுங்குத துன்பம் தருத நோய மனசுலேந்து நீக்கிட்டாம்னா அவனுக்கு அழியாத நெலச்ச புகழ் உண்டாவும்.

    குறள் 854:

    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    துன்பத்துல பெருந்துன்பம் மனவேறுபாடு. அது இல்லாமப் போச்சுதுன்னா சந்தோசத்துலயும் சிறந்த சந்தோசம் கெடைக்கும்.

    குறள் 855:

    இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிகலூக்கும் தன்மை யவர்

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம வெலக்குதவங்கள எதித்து நிக்குத வலிம யாருக்கு உண்டு.

    குறள் 856:

    இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து

    மனவேறுபாட்ட வளக்கது நல்லதுனு நெனைக்கவனோட வாழ்க்க வெரசலா தடம்மாறிப் போய் அழிஞ்சு போவும்.

    குறள் 857:

    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்

    பகைய மனசுல வச்சிருக்க கெட்டபுத்தி உள்ளவுக வாழ்க்கையில செயிக்க ஒதவுத உண்மப் பொருள அறியமாட்டாங்க.

    குறள் 858:

    இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிகலூக்கின் ஊக்குமாங் கேடு

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம இருக்கது ஒருத்தனுக்கு சொத்துகணக்கா. ஏத்துக்கிட்டா கெடுதல் தான் வெளையும்.

    குறள் 859:

    இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு

    ஒருத்தன் நன்ம வரும்போது மாறுபாட்டை நெனைக்க மாட்டான். தனக்குத்தானே கெடுதல தேடிக்கிடுதவன் மாறுபாட்ட பெரிசுபடுத்தி நெனைப்பான்.

    குறள் 860:

    இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு

    மனமாறுபாடு காட்டி பகையாளியா இருக்கவுகள எல்லாத் துன்பமும் அண்டும். சேக்காளியா இருக்க நெனயுதவுகளுக்கு நெறய சந்தோசம் கெடைக்கும்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1

    தி. இரா. மீனா   

                             அறிமுகம்

    மனித வாழ்க்கை அவன் வாழும் இடம், பேசும் மொழி என்று ஒவ்வொரு சூழ்நிலைக்கும், மாறுபட்டு அமைவது இயல்பே என்றாலும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களும், அதை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை குறித்து படைப்பாளிகள் காட்டும் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் எல்லாக் காலகட்டத்திலும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றன. உலகமுழுவதிலும் சமுதாய சீர்திருத்தவாதிகள் தனி மனிதர்களாக தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சக்தியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். இந்திய பக்திக் காலச் சூழல் இதற்குத் தகுந்த சான்றாகிறது. அவ்வகையில் 12 ம் நூற்றாண்டில் கன்னட இலக்கிய மற்றும் பக்தியுலகில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் ’வசனக்காரர்கள் ’என்ற அடை மொழிக்குரியவர்களாவார்கள். வீரசைவர்கள் என்ற பிரிவிலடங்கும் அவர்கள் ’வசனங்கள்’ என்ற வடிவம் மூலம் புதிய மறு மலர்ச்சிக்கு வித்திட்டனர்.

    வீரசைவம் – அறிமுகமும் கொள்கைகளும்

    சுத்தசைவம், பூர்வசைவம், மார்க்கசைவம், ஆதிசைவம், வீரசைவம் என்று  சைவம் பலவகைப்பட்டு நின்ற காலகட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனக்காரர்களைக் கவர்ந்தன. பிற சைவர்களுக்கும், வீர சைவர்களுக்கும் உள்ள வேற்றுமையானது பிற சைவர்கள் ஆலயத்தி்லுள்ள லிங்கங்களை [ஸ்தாவர லிங்கங்கள்] வழிபட்டுவர வீர சைவர்கள் குருவிடமிருந்து பெற்றுக்  கொண்ட லிங்கத்தை உடலின் மேல் கட்டிக் கொண்டு அதை வழிபட்டு வந்தனர். [இஸ்ட ஜங்கமம்] உபதேசம் தரும்  குருவின்  சிவ அடையாளப் பொருளே லிங்கமாகும். அதனால் தாங்கள் அணிந்திருக்கும் லிங்கங்களை மட்டுமே இவர்கள் வழிபடுவார்கள். வர்ணாசிரம முறையிலான சாதிவேறுபாடுகளை வீர சைவம் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவதீட்சை பெற்றபிறகு அனைவரும் ஒன்றாகவே கருதப்பட்டனர். இங்கு அறிவிற்கும், தொழிலுக்கும் அளிக்கப்படும் இடத்தை விட பக்திக்கே முதலிடம் தரப்பட்டது. சாதி, பொருளாதார, தொழில்  முறையிலான  வேறுபாடுகளின்மை, பெண்ணை மாயையாக எண்ணி விரட்டாத உயர்வு, அவர்களுக்குச் சமமதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீரசைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்.

    உழைப்பே தெய்வம்:[’காயகவே கைலாசா’]

    வீரசைவர்கள் மக்கள் மத்தியில் பரப்பமுயன்ற கொள்கைகளில் மிகச் சிறந்ததாக அமைவது ’காயகவே கைலாசா”. காயகம் என்பதற்கு உடல் உழைப்பு என்பது பொருளாகும். உழைப்பின்றி வாழ்க்கையில்லை. மனிதன் தன் அறநெறிச் சாதனையை சாதித்துக் கொள்ளவுதவும் ஒரு சாதனம்தான் உழைப்பு. அது இருந்தால் மட்டுமே வாழ்க்கைக்குரிய பலன் கிடைக்க முடியும். உடல் உழைப்புதான் மோட்சம் தருவது என்ற உண்மையைச்  சாதாரண மனிதனும் அறியச் செய்வதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும். மனிதன் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும். எதுவும் செய்யாமல் பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு உலகில் இடமில்லை. ’குருவானாலும் தொழில் செய்தால்தான் மோட்சம்’ என்று நூலிய சந்தையன் என்னும் வசன ஆசிரியன் குறிப்பிடுகிறான். முள்மரத்தின் இலையாக இருந்தாலும் உடலுழைப்பால் கிடைத்ததை மட்டும் லிங்கத்திற்குப் படைக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. எனவே காயகத்தின்படி எந்த ஒரு தொழிலும் உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை என்ற கொள்கையை வீர சைவர்கள் தலைமையான இயல்பாகக் கொண்டதால் விறகு வியாபாரியான மாரய்யன், துணி வெளுக்கும் மடிவாளமாச்சையன், படகோட்டியான சௌடையன், கூடைமுடை பவனான மேதர கேதையன், செருப்புத் தைக்கும் ஹள்ளய்யன் என்று பலரும் வீரசைவத்தில் இணைய முடிந்தது. சாதி வேறுபாடுகளினால் தான் சமுதாயம் சீரழிகிறது என்பது வசன இலக்கியத்திற்கு முன்னோடியான பசவேசரின் உறுதியான எண்ணமாக இருந்ததால் அதை நீக்கும் வகையில் எல்லாத் தரப்பு மக்களும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேரும் அனுபவமண்டபம் [திருச்சபை] அவரால் உருவாக்கப் பட்டது ஆண், பெண் வேறுபாடின்றி, உயர்வு தாழ்வு இன்றி அனைவரும் கூடி அனைத்தையும் விவாதித்ததும் அன்றைய காலகட்டத்தில் மிகப் புரட்சியான செயலாகவேயிருந்தது. வீரசைவர்கள்தான் அதற்கு வித்திட்டனர்.

    வசனம் என்பது

    வசனம் என்பது ஒரு தனிப்பட்ட இலக்கிய வகையாகும். அது உரைநடை மற்றும் பாடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நடை கொண்டது. சொல்லுவதைச் சுருக்கமாகவும், எளிமையாகவும், நேரடியாகவும், எல்லோருக்கும் பொருள் புரியும்படியாகவும்  விளக்குவதாகும். வசன இலக்கியத்திற்கு முன்பு படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் வடமொழிச்சொற்கள் நிறைந்ததாக பழங்கன்னடமிருந்தது. அந்த வடிவத்திலிருந்து விலகி, வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த கருத்துக்களை சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் அன்றைய  பேச்சு வழக்கையே பயன்படுத்தி வசனநடையில் இலக்கியத்தைப் படைத்தது வசனக்காரர்களின் சிறப்பாகும். அறிவை வளர்க்கும் முயற்சி யைவிட மனதை, அதன் உண்மையை அறியச் செய்யும் முயற்சி வசனங்களில் வெளிப்படுதியது அவற்றின் சிறப்பாகும். வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப்படுகின்றன தேவரதாசிம்மையன், சித்தராமன், பசவேசர், அல்லமாபிரபு, அக்கமாதேவி, சென்னபசவர் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வசனகாரர்கள் இருந்தனர்.

     

    வீரசைவம் காட்டும் பெண்ணுயர்வு

    அன்று இந்தியக் கண்டம் முழுவதிலும் பெண்களை ஒதுக்கி வைக்கும்  சூழ்நிலையே வழக்கிலிருந்தது. வசனக்காரர்கள் பெண்ணை ஒதுக்கி வைக்கும் நிலையை ஏற்கத் தயாராக இல்லை. ”பெண் என்பவள் மாயை இல்லை. மனதிலுள்ள ஆசையே மாயை, பார்ப்பதற்கு இருகண்கள் தேவைப்படுவதைப் போல வாழ்வு முழுமையடைய ஆண்-பெண் இருவரும் வேண்டும் என்பன போன்ற கொள்கைகளில் வீரசைவமும், வசனகாரர்களும் உறுதியாக நின்றனர்: வாழ்ந்தும் காட்டினர்.

              ”மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
               தாடி மீசை வந்தால் ஆணென்பார்
               நடுவில் சுற்றும் ஆத்மா ஆணும் அல்ல
               பெண்ணும் அல்ல காண் ராமநாதா”

    என்று தேவரதாசிமையன் அவர்களுக்கிடையே காணப்படுவது புறத்தோற்றப் பாகுபாடே தவிர வேறில்லை என்று ஒரு வசனத்தில் குறிப்பிடுகிறான். வீரசைவத்தின் இந்த அணுகுமுறை பெண்கள் சமுதாயத்திலும், அறநெறியிலும் சமநிலை பெற அன்று உதவியது என்பதை மறுக்கவியலாது. வசனக்காரர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் அவர்களின் காலத்திற்கு மிகவும் புதியவை; மக்களின் சிந்தனை இயக்கத்தில் புரட்சியைத் தோற்றுவிக்க வந்தவை. இந்த வழிகாட்டல் முடங்கிய நிலையிலிருந்த பெண்ணுலகம் அதிலிருந்து வெளிப்பட்டு சமுதாயச் செயல்பாடுகளில் பங்கு கொண்டு தமது அனுபவங்களை வசனமாகத் தர உதவியது. அக்கமாதேவி, லக்கம்மா, முக்தாயக்கா, காளவ்வே, துக்களே, நீலம்மா, நீலலோசனை, கங்காம்பிகை, லிங்கம்மா, சத்யக்கா என்று முப்பதுக்கும் மேற்பட்ட பெண்வசனக்காரர்களைப் பட்டியலிடலாம். இன்றும் கன்னட நாட்டில் வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் மிக இயல்பாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 58 (கையினிற்)

    சேக்கிழார் பா நயம் – 58 (கையினிற்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

     

    கையினிற்     புனைபொற்   கோலும்   காதினி   லிலங்கு  தோடு
    மெய்யினிற்  றுவளு    நூலு    நெற்றியின்   விளங்கு    நீறு
    மையனுக்      கழகி     தாமென்   றாயிழை   மகளிர்   போற்றச்
    சைவமெய்த்   திருவின்   கோலந்   தழைப்பவீ  தியினைச்   சார்ந்தார். (331)

    சுந்தர மூர்த்தி  நாயனார் திருவாரூரில்  மன்னவர்திருப்பொங்க, அரசர் மைந்தர் என்ற வகையில் பொலிந்து  விளங்கினார்.  பின்னர் தங்கள் வைதிகத் திருவும் பொங்கத்  திருமணக் கோலத்துடன் விளங்கினார். இந்தத் திருக்கோலத்தைப் பார்த்த பெண்கள், ‘’இவருக்கு இந்த  வைதிகக் கோலமே  பொருந்துகிறது’’ என்று மகிழ்ந்து  போற்றினர்.

    அத்திருக்கோலம், கைகளிலே  தாங்கிய பொற்கோலும், காதுகளிலே  விளங்கிய குண்டலங்களும்,  மார்பிலே  துவண்டு  அசையும் பூணூலும், நெற்றியிலே விளங்கிய திருநீறும் புனைந்து பொலிந்த கோலம்ஆகும். இக்கோலமே சுந்தரருக்கு என்றும்  உரியதாய் நித்தியமாகத்  தங்கியது. அதனால்தான் பின்னர் இந்திரர் மால் பிரமன் எழிலால் மிகு  தேவரெல்லாம்  வெள்ளை யானையுடன்  வந்து நம்பிகளை  எதிர் கொண்டு வணங்கித்   திருக்  கயிலைக்கு அழைத்துச்   சென்றனர்.

    அவர் இங்கே அவரது திரு அவதாரத்தின் பயனாகிய ’’தீதிலாத் திருத்தொண்டத் தொகை‘’ வழங்கச் சென்றார். அங்கே இறைவனை ஆசிரயித்து, வாயிலைக்  காத்துக்  கொண்டு, தேவாசிரிய மண்டபத்துள் எழுந்தருளிய அடியார்களைத்  துதித்து வணங்கவே அவர்சென்றார். இதனால் அடியார்களின் பெருமையை உணர்ந்து கொண்டார்; தம் பெருமையை அடியார்களுக்கும் உணர்த்தினார். இருவகையினர் பெருமையையும் உலகம் உணர்ந்துகொண்டு போற்றியது. ஆகவே மன்னவர் கோலத்தின் மேம்பட்டது வைதிகத் திருக்கோலம் என்பதை இப்பாடல் புலப்படுத்துகிறது.

    கையினிற்  புனை பொற்கோல், சைவ ஆட்சியின் செங்கோலாகி  ஐயனுக்கு அழகிய தாயிற்று  என்று மகளிர்  போற்றினர், காதினில் இலங்கும்  தோடு செவிக்குத்  தேனாகிய பாடல்களை  வழங்குவதால்  ஐயனுக்கு  அழகிய  தாயிற்று  என்று  மகளிர்  போற்றினர்.  மெய்யினில்  துவளும்  பூணூல் வைதிகச்  சைவத்தின்  சிறப்பை  உணர்த்தி,  ஐயனுக்கு  அழகியதாயிற்று, என்று மகளிர்  போற்றினர். நெற்றியில் விளங்கும் நீறு, சிவஞானப் பொலிவை உலகிற்கே  உணர்த்தி, ஐயனுக்கு  அழகியதாயிற்று என்று  மகளிர் போற்றினர். அங்கிருந்த பெண்டிர் அடியார்க்கு அடிமை பூண்ட  ‘’சிவவேதிய’’ மகளிர் ஆதலால் அவர்கள் மனநிலைக்கு ஏற்ப சுந்தரரின் வைதிகத் திருக்கோலத்தைத் தனித்தனியே புகழ்ந்தனர். முன்பிருந்த  இந்திரத் திருக்கோலத்தை விடவும், சைவ மெய்த்திருவின் கோலம் உயர்ந்தது என்பதை ‘’மெய்த்திரு’’ என்ற அடைமொழி உணர்த்துகிறது. இதுவே மெய், இந்திரத் திருக்கோலம் பொய் என்பதை நமக்கு உணர்த்தும்தொடர் இது.

    இதில், ‘’வைதிகத்திரு, இன், கோலம்’ ’என்ற தொடர், இக்கோலமே அழிவில்லாதது என்பதையும், சிவத்தின் சார்பு பெறுதலையும், இக்கோலம் பிராரத்தத்தின் வாசனையை  இனித் தொலைக்கும்  என்பதையும் புலப்படுத்துகிறது என்று உரையாசிரியர் விளங்குகிறார்.

    கண்டார் விரும்பும் திருவுடைய  இனிய கோலம் நெற்றியில் விளங்கும்  நீற்றினால் முழுமை  பெற்றது.

    “காண  வினியது  நீறு, கவினைத்  தருவது நீறு
    பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம்
    பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு’’

    என்பன,  சம்பந்தரின்   தேவாரத்  திருவாக்குகளின்  பொருளைக்  குறித்தன. இப்பாடலைச்  சீர் பிரித்து  மீண்டும் காண்போம்,

    கையினில்      புனைபொன்    கோலும்   காதினில்    இலங்கு  தோடும்
    மெய்யினில்   துவளும்     நூலும்     நெற்றியில்    விளங்கும்     நீறும்
    ஐயனுக்கு       அழகிதாம்      என்று    ஆயிழை   மகளிர்   போற்றச்
    சைவமெய்த்   திருவின்   கோலம்     தழைப்பவீ  தியினைச்   சார்ந்தார்.

    இப்பாடலில் ‘’சைவ  மெய்த்   திருவின்  கோலம்  தழைப்ப   வீதியினைச்  சார்ந்தார் ‘’என்ற ஈற்றடி, இனி  இச்சைவ  மெய்க்கோலம்  வீதியெங்கும்  விளங்கி, உலகெங்கும்  பரவத்    தீதிலாத்  திருத்  தொண்டத்   தொகையை  அன்றைக்கே  வழங்கினார் என்பதை   உணர்த்துகிறது.

    ‘’உயிர்க்கோலமான இம் மெய்த்திருக்கோலத்தைப் புறக்கணித்து ஏனை ஆடை ஆபரணங்களையும், வாகன முதலிய சடங்களையும் பெரிதாய் எண்ணி வீண்நாள் போக்கும் இந்நாள் மாக்கள் ‘சைவமெய்த் திருவின்கோலம்’ என்று ஆசிரியார் இடித்துக் கூறி எடுத்துக்காட்டிய இதன் உண்மையை உற்றுநோக்கி உணர்ந்து உய்வார்களாக.’’ என்று உரையாசிரியர் கூறுவதன்  உண்மையை  உற்று நோக்குக.

    ஆகவே  சுந்தரரின்  சைவ மெய்த் திருக்கோலம் என்றும் நின்று நிலவி, பிற்காலப் பொய்க் கோலங்களை வென்று நிற்கும் என்பதே  இப்பாடலின் உட்பொருளாகி சேக்கிழாரின்  நயம் மிக்க  பாடலை  உணர்த்துகிறது.

    Share