வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1
தி. இரா. மீனா
அறிமுகம்
மனித வாழ்க்கை அவன் வாழும் இடம், பேசும் மொழி என்று ஒவ்வொரு சூழ்நிலைக்கும், மாறுபட்டு அமைவது இயல்பே என்றாலும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களும், அதை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை குறித்து படைப்பாளிகள் காட்டும் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் எல்லாக் காலகட்டத்திலும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றன. உலகமுழுவதிலும் சமுதாய சீர்திருத்தவாதிகள் தனி மனிதர்களாக தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சக்தியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். இந்திய பக்திக் காலச் சூழல் இதற்குத் தகுந்த சான்றாகிறது. அவ்வகையில் 12 ம் நூற்றாண்டில் கன்னட இலக்கிய மற்றும் பக்தியுலகில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் ’வசனக்காரர்கள் ’என்ற அடை மொழிக்குரியவர்களாவார்கள். வீரசைவர்கள் என்ற பிரிவிலடங்கும் அவர்கள் ’வசனங்கள்’ என்ற வடிவம் மூலம் புதிய மறு மலர்ச்சிக்கு வித்திட்டனர்.
வீரசைவம் – அறிமுகமும் கொள்கைகளும்
சுத்தசைவம், பூர்வசைவம், மார்க்கசைவம், ஆதிசைவம், வீரசைவம் என்று சைவம் பலவகைப்பட்டு நின்ற காலகட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனக்காரர்களைக் கவர்ந்தன. பிற சைவர்களுக்கும், வீர சைவர்களுக்கும் உள்ள வேற்றுமையானது பிற சைவர்கள் ஆலயத்தி்லுள்ள லிங்கங்களை [ஸ்தாவர லிங்கங்கள்] வழிபட்டுவர வீர சைவர்கள் குருவிடமிருந்து பெற்றுக் கொண்ட லிங்கத்தை உடலின் மேல் கட்டிக் கொண்டு அதை வழிபட்டு வந்தனர். [இஸ்ட ஜங்கமம்] உபதேசம் தரும் குருவின் சிவ அடையாளப் பொருளே லிங்கமாகும். அதனால் தாங்கள் அணிந்திருக்கும் லிங்கங்களை மட்டுமே இவர்கள் வழிபடுவார்கள். வர்ணாசிரம முறையிலான சாதிவேறுபாடுகளை வீர சைவம் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவதீட்சை பெற்றபிறகு அனைவரும் ஒன்றாகவே கருதப்பட்டனர். இங்கு அறிவிற்கும், தொழிலுக்கும் அளிக்கப்படும் இடத்தை விட பக்திக்கே முதலிடம் தரப்பட்டது. சாதி, பொருளாதார, தொழில் முறையிலான வேறுபாடுகளின்மை, பெண்ணை மாயையாக எண்ணி விரட்டாத உயர்வு, அவர்களுக்குச் சமமதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீரசைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்.
உழைப்பே தெய்வம்:[’காயகவே கைலாசா’]
வீரசைவர்கள் மக்கள் மத்தியில் பரப்பமுயன்ற கொள்கைகளில் மிகச் சிறந்ததாக அமைவது ’காயகவே கைலாசா”. காயகம் என்பதற்கு உடல் உழைப்பு என்பது பொருளாகும். உழைப்பின்றி வாழ்க்கையில்லை. மனிதன் தன் அறநெறிச் சாதனையை சாதித்துக் கொள்ளவுதவும் ஒரு சாதனம்தான் உழைப்பு. அது இருந்தால் மட்டுமே வாழ்க்கைக்குரிய பலன் கிடைக்க முடியும். உடல் உழைப்புதான் மோட்சம் தருவது என்ற உண்மையைச் சாதாரண மனிதனும் அறியச் செய்வதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும். மனிதன் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும். எதுவும் செய்யாமல் பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு உலகில் இடமில்லை. ’குருவானாலும் தொழில் செய்தால்தான் மோட்சம்’ என்று நூலிய சந்தையன் என்னும் வசன ஆசிரியன் குறிப்பிடுகிறான். முள்மரத்தின் இலையாக இருந்தாலும் உடலுழைப்பால் கிடைத்ததை மட்டும் லிங்கத்திற்குப் படைக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. எனவே காயகத்தின்படி எந்த ஒரு தொழிலும் உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை என்ற கொள்கையை வீர சைவர்கள் தலைமையான இயல்பாகக் கொண்டதால் விறகு வியாபாரியான மாரய்யன், துணி வெளுக்கும் மடிவாளமாச்சையன், படகோட்டியான சௌடையன், கூடைமுடை பவனான மேதர கேதையன், செருப்புத் தைக்கும் ஹள்ளய்யன் என்று பலரும் வீரசைவத்தில் இணைய முடிந்தது. சாதி வேறுபாடுகளினால் தான் சமுதாயம் சீரழிகிறது என்பது வசன இலக்கியத்திற்கு முன்னோடியான பசவேசரின் உறுதியான எண்ணமாக இருந்ததால் அதை நீக்கும் வகையில் எல்லாத் தரப்பு மக்களும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேரும் அனுபவமண்டபம் [திருச்சபை] அவரால் உருவாக்கப் பட்டது ஆண், பெண் வேறுபாடின்றி, உயர்வு தாழ்வு இன்றி அனைவரும் கூடி அனைத்தையும் விவாதித்ததும் அன்றைய காலகட்டத்தில் மிகப் புரட்சியான செயலாகவேயிருந்தது. வீரசைவர்கள்தான் அதற்கு வித்திட்டனர்.
வசனம் என்பது
வசனம் என்பது ஒரு தனிப்பட்ட இலக்கிய வகையாகும். அது உரைநடை மற்றும் பாடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நடை கொண்டது. சொல்லுவதைச் சுருக்கமாகவும், எளிமையாகவும், நேரடியாகவும், எல்லோருக்கும் பொருள் புரியும்படியாகவும் விளக்குவதாகும். வசன இலக்கியத்திற்கு முன்பு படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் வடமொழிச்சொற்கள் நிறைந்ததாக பழங்கன்னடமிருந்தது. அந்த வடிவத்திலிருந்து விலகி, வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த கருத்துக்களை சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் அன்றைய பேச்சு வழக்கையே பயன்படுத்தி வசனநடையில் இலக்கியத்தைப் படைத்தது வசனக்காரர்களின் சிறப்பாகும். அறிவை வளர்க்கும் முயற்சி யைவிட மனதை, அதன் உண்மையை அறியச் செய்யும் முயற்சி வசனங்களில் வெளிப்படுதியது அவற்றின் சிறப்பாகும். வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப்படுகின்றன தேவரதாசிம்மையன், சித்தராமன், பசவேசர், அல்லமாபிரபு, அக்கமாதேவி, சென்னபசவர் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வசனகாரர்கள் இருந்தனர்.
வீரசைவம் காட்டும் பெண்ணுயர்வு
அன்று இந்தியக் கண்டம் முழுவதிலும் பெண்களை ஒதுக்கி வைக்கும் சூழ்நிலையே வழக்கிலிருந்தது. வசனக்காரர்கள் பெண்ணை ஒதுக்கி வைக்கும் நிலையை ஏற்கத் தயாராக இல்லை. ”பெண் என்பவள் மாயை இல்லை. மனதிலுள்ள ஆசையே மாயை, பார்ப்பதற்கு இருகண்கள் தேவைப்படுவதைப் போல வாழ்வு முழுமையடைய ஆண்-பெண் இருவரும் வேண்டும் என்பன போன்ற கொள்கைகளில் வீரசைவமும், வசனகாரர்களும் உறுதியாக நின்றனர்: வாழ்ந்தும் காட்டினர்.
”மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
தாடி மீசை வந்தால் ஆணென்பார்
நடுவில் சுற்றும் ஆத்மா ஆணும் அல்ல
பெண்ணும் அல்ல காண் ராமநாதா”
என்று தேவரதாசிமையன் அவர்களுக்கிடையே காணப்படுவது புறத்தோற்றப் பாகுபாடே தவிர வேறில்லை என்று ஒரு வசனத்தில் குறிப்பிடுகிறான். வீரசைவத்தின் இந்த அணுகுமுறை பெண்கள் சமுதாயத்திலும், அறநெறியிலும் சமநிலை பெற அன்று உதவியது என்பதை மறுக்கவியலாது. வசனக்காரர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் அவர்களின் காலத்திற்கு மிகவும் புதியவை; மக்களின் சிந்தனை இயக்கத்தில் புரட்சியைத் தோற்றுவிக்க வந்தவை. இந்த வழிகாட்டல் முடங்கிய நிலையிலிருந்த பெண்ணுலகம் அதிலிருந்து வெளிப்பட்டு சமுதாயச் செயல்பாடுகளில் பங்கு கொண்டு தமது அனுபவங்களை வசனமாகத் தர உதவியது. அக்கமாதேவி, லக்கம்மா, முக்தாயக்கா, காளவ்வே, துக்களே, நீலம்மா, நீலலோசனை, கங்காம்பிகை, லிங்கம்மா, சத்யக்கா என்று முப்பதுக்கும் மேற்பட்ட பெண்வசனக்காரர்களைப் பட்டியலிடலாம். இன்றும் கன்னட நாட்டில் வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் மிக இயல்பாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.