படக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
அனுபாலா எடுத்துத் தந்திருக்கும் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 235க்கு வழங்கியவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் என் நன்றிக்குரியவர்கள்!
நீலவண்ண உடையணிந்து கோலமுகம் சிறிது காட்டி, உச்சிமலை மீதமர்ந்து இச்சையொடு உலகுநோக்கிப் பார்வை வீசும் பாவையையும், அவரைச் சுற்றி கைபுனைந்தியற்றா கவின்பெரு வனப்பொடு காட்சிதரும் வனமும் நம் மனம் கவர்கின்றது.
இவ்வினிய காட்சிக்கு ஏற்றதொரு கருத்தைப் பாவாகப் புனைந்து தாருங்கள் என்று கவிவலவர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!
*****
”பூமரக் காட்டின் நடுவே மலையுச்சியில் அமர்ந்து தலைவன் வரவு பார்த்திருக்கும் தையலிவள்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
உதவிக்கு…
பூமரக் காட்டில் மலைமீது
பாவை யவளும் காத்திருக்கிறாள்,
தாமத மானது வரவில்லை
தலைவன் வரவைப் பார்த்திருக்கிறாள்,
சாமரம் வீசிடும் மரக்கிளையும்
சற்றும் அவளைத் தேற்றவில்லை,
நாமும் தேடி உதவுவோமெனும்
நீல வான மேகங்களே…!
*****
”இயற்கையோடு நம் வாழ்வினை இணைத்து, நற்சிந்தனை வளர்த்து, எட்டா உயரங்களை எட்டிப்பிடிப்போம்” என்று பாட்டுப் படிக்கின்றார் திரு. ராவணா சுந்தர்.
பார்வையை விசாலமாக்கு!
பதுமையின் பார்வையில்
பரணியும் பளிங்கு குண்டுதான்,
உயர்ந்த எண்ணங்கள்
உலவும் உள்ளத்தில்,
குழப்பங்கள் என்றும்
தெளிந்த நீரோடைதான்!
தொலைநோக்கா பார்வையை
அணியாத மேவியும், (?)
குட்டைக்குள் குடிகொண்ட
சிறுமீன்கள் தானோ..?
இயற்கையின் எழிலோடு
நம் வாழ்வியலை இணைத்துத்
தரணி போற்றிடும்
தார்மீகச் சிந்தனைகளை
மனதில் விதைத்து,
எட்டா உயரங்களையும்
எட்டிடுவோம்..!
சுமந்த பல கனவுகளுடன்….
*****
”உச்சிதனை நீ தொட்டபோதும் சிறகை விரித்துப் பறந்திடு; அடுத்த கட்டம் நோக்கி உனது பயணத்தைத் தொடர்ந்திடு!” என்று நங்கைக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.
வானமே எல்லை!
சேரும் இடம் அறிந்திருந்தும்
பாதை மாறிப் போனாலே
ஊரும் வந்து சேராதே!
அடிமேலே அடியெடுத்து
முன்னே நடக்கையில்
மெல்ல விரிந்திடும் பாதை
உன் கண் முன்னே!
போட்டு வைத்த பாதையில்
செய்யும் பயணமதில்
சுவாரசியம் ஏதும் இல்லை
புதிய பாதை அமைத்து முன்னேறு
சரித்திரம் படைத்திடுவாய்
தடை ஏதும் இன்றியே!
அச்சமின்றி நீ எடுத்து வைத்த
முதல் அடி உச்சி வரை
உனை அழைத்துவந்திட
தயங்கி ஏன் திரும்பிப் பார்க்கிறாய்?
கடந்து வந்த பாதையில்
முளைத்த முட்கள்
நீ மிதிக்க மடிந்து போனதே!
களிப்பு மட்டும்
உற்சாகமாய் நின்றது நின்றதே!
உச்சிதனை நீ தொட்ட போதும்
சிறகை விரித்துப் பறந்திடு
அடுத்த கட்டம் நோக்கி
உனது பயணத்தை
நம்பிக்கையோடு தொடர்ந்திடு!
அந்த நிலவும்
நீ தொடும் தூரத்தில்
வந்து சேர்ந்திடும்!
பறந்து விரிந்து கிடக்கும்
அந்த வானும் உனக்கு வசப்படும்
முயற்சிக்கு என்றும்
இல்லையே எல்லையே!
*****
மலைமீது அமர்ந்திருக்கும் மங்கைக்கு அழகான பாமாலைகளைத் தொடுத்துத் தந்திருக்கும் திறன்மிகு கவிஞர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
நல்வழி!
கள்ளிப்பால் கடந்து
கல்வியறிவுதான் வென்று
எட்டா அறிவுதனை
எட்டிப் பிடித்துவிட்டுப்
பட்டங்கள் பலபெற்றுச்
சட்டங்கள் தானறிந்து
திட்டமிட்டுத் தான் வாழும்
திறமனைத்தும் பெற்றிருந்தும்
பெட்டைப் பிள்ளை என்று
புறம்பேசித் திரிகின்றார்!
பட்டாம்பூச்சிபோலச்
சிட்டாகப் பறந்திடும் கனவைக்
கிட்டாமல் செய்கின்றார்…
வீட்டு முற்றத்தில் நிறுத்துகின்றார்!
காரியங்கள் பல செய்யக்
காத்திருக்கும் காலத்திலும்
காமமொன்றே காரணமாய்க்
காரிகையை ஆக்குகின்றார் – நெஞ்சைக்
காயம்தினம் செய்கின்றார்!
உயிருள்ள பொம்மையாக
உருவத்தைப் புணர்கின்றார்!
உணர்ச்சிகளை மிதிக்கின்றார்
உள்ளத்தைக் காண்பதில்லை!
விட்டுவிடுதலையாகி நின்று
எட்டும் எல்லை தானடைந்து – வான்
முட்டும் மலைச் சிகரம்
தொட்டுவிடச் செய்யுமொரு
வழிதேடி இருக்கின்றேன் – நல்
வழிபார்த்துக் காத்திருப்பேன்…!
”காரியங்கள் பல ஆற்றும் திறன்வாய்ந்த காரிகையரை வெறும் காமப்பொருளாய் நோக்கும் ஆடவரின் பார்வைக் கூட்டிலிருந்து விட்டுவிடுதலையாகிச் சிகரம் தொட்டுவிடத் துடிக்கும் பாவையிவள்” என்று பெண்விடுதலைக்குப் பரணி பாடியிருக்கும் திரு. வெங்கட் ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.