அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (15.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – 236

  1. வெடிக்கும் உண்மைகள்…

    செய்யும் வேலை சிரமந்தான்
    சிரித்தே அதையும் செய்கின்றோம்,
    உய்யும் வழிதான் வேறில்லை
    உயிரைப் பணயமாய் வைக்கின்றோம்,
    தெய்வ மெல்லாம் வெடிகளிலே
    தீயில் எம்மைக் காப்பதில்லை,
    பெய்யும் மழையால் பிழைப்பில்லை
    பெரிதிலை பெற்றிடும் துன்பங்களே…!

    செண்பக ஜெகதீசன்..

  2. நலிவுற்ற பொருளாதாரம்

    அடுப்பங்கரையில்
    சமையல் பணி
    செய்யும் வேளையில்
    ஆபத்தான வெடிகள் தயாரிக்கும் வேலையில்
    வீட்டுப் பெண்கள்!
    வேலை முடிந்ததென்று வெளியே சிரித்தாலும்
    நாளைய பொழுதுகளைப் பற்றிய பயம்
    இருக்கத்தான் செய்யும் இதயத்தின்
    எங்கோ ஓர் மூலையில்!
    வீட்டின் வறுமையும்
    வாட்டும் வேதனைகளும்
    கூட்டி வந்து
    விட்டதோ வேலைக்கு
    என்றால்
    நாட்டின் பொருளாதாரம்
    நலிவுற்றிருக்கிறது
    என்று தானே பொருள்!

    கோ. சிவகுமார்
    9442784080

  3. கந்தக மலர்

    ஏன் கந்தகபூமியில் இவள் பிறந்தாள்
    எந்த வறுமையிலும் வளமாய் சிரிப்பாள்!
    வெடிகளை, மருந்து என்பதை மறந்தாள்
    மருதாணியாய் விரல் முழுக்க தரித்தாள்..

    வெடி மலர்களை கொட்டி குவித்துவிட்டதால்
    அறியாமையிலே கட்டி கட்டி கோர்த்துவிட்டால்
    சரம்சரமாய் விஷப்பூக்களை சேர்த்துவிட்டாள்
    தகதகவென எரிந்திடுமே தீக்குச்சி தலைப்பட்டால்..

    வேறு தொழில்கள் அரசு கொண்டுவந்தால்
    அல்லது பயிருக்காவது கொஞ்சம் நீர்தந்தால்
    உயிருக்கும் வயிறுக்கும் பசி தீர்ந்திடாதா
    வாழ்வை பணயமாக்கும் இத்தொழில் மாய்ந்திடாதா..?

    இந்த பூவுடன் சேர்த்தால் நாரும் எரியும்
    சில சமயத்தில் நாருடன் சேர்ந்து ஊரும் எரியும்..

    — புவிதா அய்யாதுரை
    9944641726

  4. வெடிச்சிரிப்பு

    சுற்றுப்புரத்தைப் பாழ்படுத்தும் என
    வெற்றுக் கோஷம் போட்டிடுவார்
    மாற்றுத்துணிக்கோர் வழிசெய்யார்;
    தேற்று நிலையும் தானுரையார்!
    குளிர்பதனப் பெட்டியிலும்
    குளிர்சாதனச் சூட்டினிலும்
    பாழுறும் சீதனச் சூழ்நிலையைக்
    கண்டும் காணாமல் ஒதுங்கிடுவார்!

    பணம்படைத்தோர் பாழாக்கும் நிகழ்வெல்லாம்
    தினந்தினந்தான் நடந்தாலும் சிந்தைசெய்யார்!
    வலியோர்த் தம் வாய்ச்சொல்லும் சட்டமாகும்
    எளியார் தம் வாழ்க்கையையார் எண்ணிடுவார்!

    சுற்றும் வெடிக்கட்டினிலே
    வெற்று வயிறு நிரம்பிடுமே…
    கட்டும் தீப்பெட்டியிலே
    கிட்டிய சில்லரைக் கொண்டிங்கே
    வாடிய வயிறும் குளிர்ந்திடுமே…

    திரிதனில் வைத்திட்ட தீயினாலே
    வறுமை நீங்கி வயிறு நிறைந்தால்
    இறுகிய முகத்திலும் வெடிச்சிரிப்பு
    மத்தாப்புப் பூவாய்ப் பூத்திடுமே…

    kaialavuman.blogspot.com

  5. இனி எல்லாம் சுகமே!

    கழுத்தில் பூ மாலை விழ
    காத்திருக்கும் கன்னி இவள்
    காளையர் வீட்டில்
    கட்டணம் கேட்க
    சிக்கனமாய் இவள்
    சில்லறையை சேர்த்தாள்
    கொட்டி கிடந்த வெடிகளை
    பூ மாலையாய் கட்டியே!

    பூவாய் இந்த
    பூவை சிரித்து பேச
    சோர்வின் களைப்பும்
    நெஞ்சின் கவலையும்
    களைந்து போனதே!
    கொடுத்த வேலையை
    விரைந்து முடித்திட
    புது வேகம் பிறந்ததே!

    சரம் சரமாய் வீதியில்
    வெடித்து மகிழ்ந்திடும்
    மழலைகளின் முகம் கண்டு
    மகிழ்ந்திடும் அன்னை தந்தையர்
    இவர்களின் அன்பு உள்ளம் கண்டு
    தான் தொடுத்த பூ மாலை
    இறைவனடி சேர்ந்த
    இன்பம் பொங்கும் இவர்கள் நெஞ்சில்
    அதில் பஞ்சாய் பறந்து மறந்து போகும்
    தான் பட்ட துன்பம் எல்லாமே!

  6. ஏழ்மையின் புன்னகை

    பாரடா பாரடா
    பைந்தமிழ் நாட்டை பாரடா
    பயிலும் பருவத்தில்
    சிறுமியின் சிரங்களை பாரடா
    எழுதுகோல் ஏந்தும் வயதில்
    ஏழ்மையை ஏந்தியது ஏனடா
    மலர்கள் தொடுக்கும் விரல்களில்
    பட்டாசு திரள்வது கேடடா
    புன்னகையின் பூக்களெல்லாம்
    தொழிற்சாலையில் கருகுவது கொடுமையடா
    நாளைய பாரதம் மலர்வதற்கு
    இன்றைய விதைகள் பலிகளா
    சட்டங்கள் இயற்றுவது
    வெறும் கண்துடைப்பு தானடா
    சூழ்ச்சியின் அரசியிலில்
    இளஞ்சிறகுகளை பறிப்பது பாவமடா
    பணமுதலைகளும் பதவி வெறியர்களும்
    உலவும் பூவுலகில் பிறந்தது விதியடா
    பள்ளிகளின் பட்டறையில்
    உன்னை மெருகேற்றாமல்
    ஏழ்மை இருளை அகற்றமுடியாது…..

    ராவணா சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.