Category: வண்ணப் படங்கள்

  • படக்கவிதைப் போட்டி – 202

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 201-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த வர்ணசாலம் காட்டும் இவ் எழிற்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 201க்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணர்க்கும், அதனைத் தெரிவுசெய்த நங்கைக்கும் என் நன்றி!

    வண்ணங்களின் கலவையால் உருவானதே வனப்புமிகு இயற்கை. வண்ணங்களோடு தம் எண்ணங்களையும் பொருத்திப் பார்த்திருக்கின்றது இம் மன்பதை. ஆம்! மங்கலத்தின் அடையாளம் மஞ்சள்; வளமைக்குக் குறியீடு பசுமை; அச்சத்தின் வெளிப்பாடு சிவப்பு; தூய்மைக்குத் துணைநிற்கும் வெண்மை என்று வகைபிரித்து வைத்திருக்கின்றது அது!

    வண்ணங்களுக்கு மனித உளவியலில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மையும் உண்டென்கிறது இன்றைய மருத்துவ அறிவியல்.

    இதோ…நீர்த்துளிகளுக்குள் நிழற்படங்களாய் ஒளிரும் இப்பூக்களுக்குப் பாக்கள் புனையப் புறப்பட்டுவிட்டார்கள் நம் வல்லமைக் கவிஞர்கள்! அவர்களை வரவேற்போம்!

    ***** 

    பளிங்குச் சிறைக்குள் ஒளிந்திருக்கும் பாவையோ? ஆதவ ஓவியன் ஆக்கிய அற்புதச் சித்திரமோ? அகந்தை இருளுக்குள் ஒளியாய்த் துலங்கும் மறைபொருளோ? என்று இப்புகைப்படம் குறித்த தன் ஐயங்களை வரிசையாய் வெளிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட பாவை…

    பின்புலத்தில் இருக்கின்ற மஞ்சள் வண்ணப் பூவொன்று..
    தன் நிறத்தால் அஞ்சனம் தீட்டிய அழகுப் பனித்துளிகள்..
    தேன் துளிபோல் உருமாறிக் கண்களுக்கு விருந்தான நிகழ்வு..
    வானத்து விண்மீன்கள் தரையிறங்கிப் படைத்த பொற்குமிழ்களாய்..!!

    பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட..
    பாவையாக மஞ்சள் மலர்..!!

    வெளியுலகைக் காணுதற்கு மலர்ச்சியுடன்
    வர ஆயத்தமாகும் கருக்குழந்தை..!!

    தலைகீழாய்த் தொங்கியது மலைத்தொடர்..
    தனைத்தாங்கும் இத்தரணியைக் காண..!!

    பரப்பு இழுவிசையால் கட்டுண்ட..
    பனித்துளிகளின் படை அணிவரிசை..!!

    ஆதவனெனும் ஓவியன் ஒளித்தூரிகையால்..
    ஆக்கிய அற்புத வண்ணச் சித்திரம்..!!

    அகந்தையெனும் கரிய மாயத்திரையுள்ளே..
    அறிவாய் ஒளியாய் விளங்கும் மறைபொருள்..!! 

    ***** 

    ”நீர்த்துளிகளுக்குள் அழகாய் முகங்காட்டும் மலர்களைப்போல் அயர்வின்றி முயன்றால் முன்னேற்றப் பாதையும் மனத்துக்குள் காட்சியாய் விரியும்” என்று நம்பிக்கையூட்டும் நன்மொழிகளை நவில்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    கடவுள் காட்டிய காட்சி

    சோர்ந்துவிடாதே மனிதா
    சோகப்படாதே சோம்பலில்லாமல்
    தேட விழைந்தால் காணலாம்
    தேடிய பொருளைக் கண்ணெதிரே
    உன்னால் முடியாதது என
    உலகில் எப்போதும் இல்லை ஒன்று.
    மனம் இருந்தால்
    மார்க்கம் உண்டு
    தினமும் அறிவுரை கூறி
    திருத்த முயன்ற ஞானி
    புரிந்துகொள்ளாமல் மனிதர்கள்
    புத்திகெட்டு அலைவதைக்கண்டு
    வருத்தமுற்று கடவுளிடம்
    வழிகாட்ட வேண்டியதால்
    புதுவிதமாய் மனிதனுக்கு
    புத்திபுகட்ட கடவுள்
    காட்டிய எடுத்துக்காட்டே
    காட்சியாய்க் கண்ணெதிரே
    வண்ண வண்ண மலர்கள் இங்கே
    வரிசையாய் உள்ள துளிகளுக்குள்ளே
    திரும்பிப் பார்த்தால் தெரியும் அதன்
    தெளிவான முழு உருவம் அதுபோல்
    முயற்சித்துப் பார் ஒளிந்துள்ள
    முன்னேற்றப்பாதை தெரியும்
    கடவுள் சொன்ன வார்த்தைகளைக்
    காதால் கேட்டு முயற்சித்தால்
    வாழ்க்கை வளமாகும்
    வசந்தங்கள் வாடிக்கையாகும்.

     *****

    ”திரவியம் தேடி தினம் ஓடும் மனிதா…! உதிக்கும் சூரியன்; உதிரும் இலைகள், மூக்குக் கண்ணாடியாய்ப் பனித்துளி; அதிலே முகங்காட்டும் மார்கழிப் பூ என்று தினந்தோறும் நான் நிகழ்த்தும் வர்ணசாலங்களைக் கண்டு இரசித்ததுண்டோ நீ?” என்று இயற்கையன்னையின் சார்பாய் வினாவெழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    பாடம் புகட்டிய பனித்துளிகள்

    உதிக்கும் சூரியன், உலா வரும் நிலா
    உதிரும் இலைகள், மலரும் பூக்கள்
    கூவும் குயில்கள் என
    இயற்கையின் அழகு
    அரங்கேறும் தினந்தோறும்
    திரவியம் தேடி
    தினம் ஓடும் மனிதா
    இதை என்றேனும் கண்டு ரசித்ததுண்டோ?
    தாயின் மடியில்
    உறங்கும் சுகம் தேடி
    பூமித்தாயின் மடியில் படர்ந்தாயோ?
    நடுங்கும் குளிரில் அவளைக் காத்திட
    வெண்போர்வையாய் விழுந்தாயோ?
    காலைக் கதிரவன் கைகளாய்க்
    கதிர்கள் வந்து உன்னை எழுப்பிட
    எழ மறுத்து அழுதாயோ?
    பனி உருகி நீராய்க் கரைந்தாயோ?
    நித்தம் நிகழும் நிகழ்வுகளைத்
    தெள்ளத்தெளிவாய்க் கண்டிட
    இயற்கை தந்த மூக்குக்கண்ணாடியோ
    இந்தப் பனித் துளிகள்?
    பனியில் நனைந்து
    பகலவன் கண்டு
    மலர்ந்த மார்கழிப் பூவைப்
    பனித்துளிக்குள்
    படம் பிடித்து வைத்தாயோ?
    ஓடும் மனிதா!
    ஒரு நிமிடம் நின்று இந்த
    ஒளிப்படத்தை கண்டிடு
    என்னுள் ஒளிந்திருக்கும்
    ஓராயிரம் அழகுகளைக் கண்டு ரசித்திடு!

    *****

    மென்காலைப் புலர்பொழுது பொன்மஞ்சள் மலர் கொய்து வெண்பனியாம் நூலெடுத்து நெய்த கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது? என்று இப்புகைப்படக் காட்சியை வி(ந)யக்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

    முத்து முத்துப் பனித்துளியில்
    முகம் காட்டிச் சிரிக்கும் மலர் இதழ்களை
    முத்தமிடத் துடிக்கும் வண்டினங்கள்
    நித்தம் நித்தம் தவிக்கிறது

    மென் காலைப் புலர் பொழுது
    பொன் மஞ்சள் மலர் கொய்து
    மின் வெண்பனி நூலெடுத்து நெய்த
    கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது?

    கண்கள் மயங்கும் காட்சிப்பிழைதான்
    காணக்கிடைக்காத கலை எழிலின் நிலைதான்!
    காற்று நுழைந்தால் கலைந்து விடும்
    கவனம் சிதைந்தால் கணத்தில் மறைந்துவிடும்

    சின்னச் சின்ன நீர்க்குமிழிகளுக்குள்
    சித்திரத் தூரிகைக் கொண்டு வரைந்த
    சிதைவுறா இயற்கையின் சிறந்த படைப்பு ஒளிச்
    சிதறலில் விளைந்த அழகின் சிரிப்பு

    விந்தைகள் படைக்கும் இயற்கை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை
    விரியட்டும் வியப்பின் எல்லை இந்த
    விடியலின் விடுகதை அழகை
    விழி பருகி மதி மயங்காதார் யார் ஒருவர் உண்டோ?

    *****

    வண்ண மலர்களுக்கும் அவற்றைத் தாங்கிநிற்கும் பனித்துளிகளுக்கும் தம் எண்ணத் தூரிகைகொண்டு சொல்லோவியம் தீட்டியிருக்கும் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    நிரந்தரமா…?

    தற்காலிகத் தஞ்சமாய்க்
    கிளையில் தொங்கும்
    நீர்த்துளிகள்…

    கிடைத்த தருணத்தை
    விடாத
    மஞ்சள் மலர்கள்,
    முகம் பார்க்கின்றன
    நீர்த்துளிக் கண்ணாடியில்-
    தற்காலிக இலவசங்களால்
    தடம்மாறும் மனிதன்போல்!

    சுடு கதிர்கள் காட்டிச்
    சூரியன் வருகிறான்,
    கதை முடிக்க…

    நிரந்தரத்தின் முன்
    தற்காலிகங்கள்
    நிலைகெட்டுப் போவதுதான்
    இயற்கையோ…?!

    ”தற்காலிகத் தஞ்சமாய்க் கிளையில் தொங்கும் நீர்த்துளிகளில் முகம்பார்க்கும் மலர்களைப் போல், தற்காலிக இலவசங்கள்பால் வசப்பட்டு நிலைகெட்டுப்போகும் மாந்தனே! என்றுணர்வாய் நீ நிரந்தரத்தின் மகத்துவத்தை?” என்ற தன் வருத்தத்தைப் பாவில் பதிவுசெய்திருக்கும், திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 200-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    200ஆவது வாரமாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படக்கவிதைப் போட்டிக்குத் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், போட்டிக்கு வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுத்துத் தந்துவரும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும், இப்போட்டியைத் தொடர்ந்து வல்லமை மின்னிதழில் இடம்பெறச் செய்துவரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், அனைத்திற்கும் மேலாய் இப்போட்டிக்கு வரும் கவிதைகளை வாசித்தும் நேசித்தும் தம் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்ற வல்லமை வாசகர்களுக்கும் என் நனிநன்றி!

    ஒன்றையொன்று அணைந்துகிடக்கும் அழகிய நாய்க்குட்டிகளைத் தன் புகைப்படக் கருவியில் அள்ளியெடுத்து வந்திருக்கின்றார் புகைப்படக்கலை வல்லுநர் திருமதி. சாந்தி மாரியப்பன். அவருக்கு என் நன்றி!

    நன்றி எனும் குணத்துக்குச் சொத்தாக இருப்பதனால்தான் நாய்களை வீட்டுக்கேற்ற காவலனாகவும், உற்ற தோழனாகவும் மனிதர்கள் அன்றுதொட்டு இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர்.

    “நட்புக்கு நன்றிமிகு நாயனையாரைத் தேர்; உணவளிக்கும் பாகனையே கொல்லும் யானையனையாரைத் தவிர்” என்று அறிவுறுத்துகின்றது நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி.

    யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.
    (நாலடி – 213)

    மனங்கவர் நாய்க்குட்டிகள் குறித்துக் கவிவடிக்கச் செந்நாப் புலவர்கள் சிலர் சீரிய கற்பனைகளுடன் காத்திருக்கின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

    *****

    ”உணவோடு தாய் வரும்வரை ஓய்வெடுப்போம் தரையினிலே என்று அன்னையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாய்க்குட்டிகள் இவை” என்று நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நன்றியால் நல்லுணவு…

    தயக்கம் வேண்டாம் தம்பிகளே
    தாயவள் கொணர்வாள் நமக்குணவு,
    பயமெதும் வேண்டாம் பிள்ளைகளே
    படுத்தி டுங்கள் தரையினிலே,
    வயிறு பசித்தால் மனிதர்தான்
    வழிமுறை யெல்லாம் மறந்திடுவார்,
    உயிராய் மதிக்கும் நன்றிகாட்டி
    உணவுடன் வருவாள் நம்தாயே…!

    *****

    ”தாயாரைக் காணாமல் தவித்திருக்கும் எம்மீது தறிகெட்டு ஓடித்திரியும் வண்டியின் சக்கரமோ, குறிவைத்துச் சுடுகின்ற குறவனின் துப்பாக்கி குண்டோ, பொறிவைத்துப் பிடிக்கும் ஊர்ச்சேவகனின் கயிறோ படாதிருக்கவேண்டுமே” என்று பதைபதைக்கும் நாய்க்குட்டிகளைக் காண்கிறோம் திரு. யாழ் பாஸ்கரனின் கவிதையில்.

    தாயாரைக் காணவில்லை

    தாயாரைக் காணவில்லை
    தந்தையார் யார் என்று தெரியவில்லை
    வாயாரச் சொல்லியழ வழியுமில்லை
    நாயாகப் பிறந்துவிட்டோம் நடுத்தெருவில் கிடக்கின்றோம்

    ஓயாமல் தேடி அலைந்து திரிந்து விட்டோம்
    ஒரு வழியும் பிறக்கவில்லை
    ஒருவரையும் காணத்தான் முடியவில்லை
    ஓரமாய்ப் படுத்து விட்டோம்

    பசியடங்கா எங்கள் பாழ்(ல்) வயிற்றுப்
    பசியாற்ற எங்காவது கால் வயிற்றுக் கஞ்சி தேடி
    திசை தெரியாமல் திரியும் எம் அன்னை
    திரும்பி வருவாளோ மாட்டாளோ யார் அறிவார்?

    தறிகெட்டு ஓடித்திரியும் வண்டியின் சக்கரத்திலோ
    குறிவைத்துச் சுடுகின்ற குறவன் துப்பாக்கி குண்டிலோ
    பொறிவைத்துப் பிடிக்கும் ஊர்ச்சேவகன் கயிற்றிலோ
    வெறி விலங்கு கடியிலோ சிக்காமல் சீக்கிரம் வந்திட வேணும் சாமி

    மண்ணில் மானிடராய்ப் பிறந்திருந்தால்
    மடியிலிட்டுத் தாலாட்ட உற்றார் உறவினர்கள் உண்டு
    மண்தரையில் கிடக்கின்ற எங்களை
    மனமிறங்கி மனைக்கு அழைக்க யாருண்டு

    நாயாக நாங்கள் இருந்தாலும் நட்புடனே நல்லோர் சொன்ன
    நல்வழியில் தான் சென்றிடுவோம் – நாளும் வாலாட்டி
    நன்றியுடன் தான் காலடியில் காத்துக்கிடப்போம்
    நல்லோரே நாங்களும் வாழ நல்வழிகாட்டி நலங்காப்பீர்!

    இவரே (திரு. யாழ் பாஸ்கரன்), தன்னுடைய மற்றொரு பாடலில், ”இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்; இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்; தரையில் கிடக்கின்ற எங்களுக்கும் தன்னம்பிக்கை உண்டு; தலைநிமிர்வோம் நாளை” என்று
    நாய்க்குட்டிகளை நம்பிக்கையின் நாயகர்களாக்கியிருக்கக் காண்கிறோம்.

    செம்பவளக் கண்ணுகளா! செல்லமணிக் குட்டிகளா!
    செம்மண் சாலையிலே சேர்த்தணைத்து விளையாடும் நீங்களெல்லாம்
    செம்பருதிச் சுடர்க் கதிரின் புது ஒளியோ
    செழுமை மிகு நிலமகளின் உயிர்த்துடிப்போ

    மந்தை மண்ணினிலே கிடக்கும் நமக்கு
    தந்தை தாய் அருகில் இல்லை அதனாலே
    சந்தையில் விலை கூவி விற்றிடுவார் எனச்
    சிந்தையிலே என்ன எண்ணிலாச் சிந்தனையோ

    ஒருதாய்ப்பிள்ளைகள் நாம் எல்லோரும்
    ஒற்றுமையின் பலத்தாலே கட்டுண்டோம்
    ஒரு சிறு பொழுது விலகிப் பிரிந்தாலும் அஃது
    ஒரு பெரும் துயர் அதைத் தாங்கமாட்டோம்

    எல்லோருக்கும் எங்களைப் பிடிக்கும்
    என்றாலும் சில கற்கள் எம்மை வந்து அடிக்கும்
    எங்களுக்கும் வாழ்வு உண்டு நாளை
    எல்லோருக்கும் அது ஒரு நல்வேளை

    தூக்கிப்போடு துன்பத்தைத் துள்ளி ஆடு இன்பத்தில்
    இரவும் பகலும் இணைந்தே ஒரு நாளாகும்
    இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்
    இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்

    தரையில் கிடக்கின்ற எங்களுக்கும்
    தன்னம்பிக்கை கொஞ்சம் உண்டு
    தலைநிமிர்வோம் தடை தாண்டி
    தலைமையேற்போம் தகுதிகளோடே

    *****

    ”நன்றியின் மறுபெயர் நாய் என்று பேசும் இதே மாந்தக்கூட்டம் மறுநாளே நன்றிகெட்ட நாயென நம்பேர் சொல்லி ஏசும். பசித்திருக்கப் பழகிடுவீர் பிள்ளைகளே! பிறர் துயர்கண்டு அசையாத நெஞ்சங்களுக்கு இங்கே பஞ்சமில்லை” என்று உலகறியாத் தன் குட்டிகளுக்கு வஞ்சக உலகை அடையாளம் காட்டும் தா(நா)யைப் படைத்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    நாய் தன் குட்டிகளிடம்…

    ஒருநாள் நன்றியின் மறுபெயர் நாயென்கும்.. அதுவே
    மறுநாள் நன்றி கெட்ட நாயேயென்கும்..
    சிறிதளவு உணவளித்துக் காவலுக்கு நில்லென்கும்..!!

    நாப் பிறழ்ந்து பேசும்.. இந்த
    நா அடக்கம் அற்ற
    நா உள்ள மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)

    வாலாட்டும் குணத்தாலே.. நமைத்
    தாலாட்டும் இவ்வுலகு என்
    றெல்லாம் நீவிர் எண்ணிவிடாதீர்.. (ஒருநாள்)

    பொல்லாத உலகிது.. பல கற்றும்
    கல்லாத நிலையில் உழன்று
    அல்லாதன செயும் மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)

    இறைபடைப்பின் உயிர்களெல்லாம்.. இத்
    தரையில் தனித்துவாழ நமக்குமட்டும்
    நிறைவிலா அடிமை வாழ்க்கை.. (ஒருநாள்)

    பசித்திருக்கப் பழகிடுவீர்.. உமது
    கசிந்துருகும் மொழிக்கெல்லாம்
    அசையாத இதயங்கள் இங்கு ஏராளம்.. (ஒருநாள்)

    *****

    நாய்க்குட்டிகளை வைத்தொரு வாழ்வியல் ஆய்வையே நிகழ்த்தியிருக்கின்றார்கள் நம் வித்தகக் கவிகள்! பாராட்டுவோம் அவர்களை!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    எழுதுங்கள் புதிய பாடல்

    கற்றுக்கொள்ளுங்கள் எங்களிடம்
    கட்டியணைத்து உறவாட
    அண்ணன் தம்பி ஆனாலும்
    அடித்துக் கொள்ளாமல்
    பார்த்த உணவைக் கூடிப்
    பகிர்ந்து உண்ணுவோம்
    மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
    மண் தெருவில் ஓடினாலும்
    ஏளனம் செய்யோம் ஒருபோதும்
    எதிர்ப்படும் எம் நண்பர்களை
    இருந்தால் குதியாட்டம்
    இல்லாவிட்டால் குடியாட்டம்
    வெந்ததைத் தின்று
    விதிவந்தால் மாளும் கூட்டத்தில்
    அத்தனைக்கும் ஆசை
    அளவுகடந்த பொறாமை
    அடுத்தவனை அழிக்க
    அனுதினமும் ஒருதிட்டம்
    குற்றவாளிகளின் கூட்டம்
    குறைவில்லாமல் பெருகுவதால்
    காவல் துறைக்கு எப்போதும்
    கடமை செய்ய உதவுகிறோம்
    வெடிகுண்டைத் தேட
    வேகமாய் அழைப்பார் எம்மை
    நாலடியார் காலத்தில்
    நல்ல நண்பனுக்கு உவமையாய்
    எம்மைச் சொன்ன நீர் இன்று
    எல்லாவற்றுக்கும் யாம் தான்
    என எழுதுங்கள் புதிய பாடல்
    உங்களோடு உங்களாய்
    உங்கள் வீட்டில் நாங்கள்
    சரிசமமாய்ப் பழகி
    சங்கடங்கள் தீர்க்கின்றோம்
    பிறக்காத பிள்ளையாய்…
    பேசாத தோழனாய்…
    உறவுக்காரனைப் போல்
    உரிமையாய் வாழ்கின்றோம்!

    ”வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகும் இந்த மானுடக்கூட்டம் அடுத்தவனை அழிப்பதிலேயே ஆயுளைக் கழிப்பதால் காவல்துறையின் சேவை நாட்டுக்குத் தேவையாயிருக்கின்றது. காவல்துறை தன் கடமையைச் செவ்வனே செய்ய நாங்கள் துணைநிற்கின்றோம் சேவகராய். நாட்டுக்கு மட்டுமா…? வீட்டுக்கும் காவல் நிற்கின்றோம் பிறக்காத பிள்ளைகளாய்!” என்று நாய்களின் சமூகத் தொண்டை அவற்றின் வாயாலேயே தன் பாட்டில் விண்டுரைக்க வைத்திருக்கும் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்றறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 201

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 199-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முரளிதரன் வித்யாதரன் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருக்கும் ஆரவாரிக்கும் கடலைப் படக்கவிதைப் போட்டி 199க்கு, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து, தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார்  திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

    அடடா! வெண்ணுரையாய்ப் பொங்கும் கடலலையின் அழகைக் கண்விரியக் காண்கிறோம் நாம்! இயற்கையின் பேரெழில் செயற்கையாய்ப் புனைய இயலாதது!

    இக்கவின்மிகு காட்சியைப் பார்த்தால் மட்டும் போதுமா? சொல்லோவியங்களாகத் தீட்டினால் அல்லவோ காட்சியின் மாட்சி கூடும். அப்பணியைச் செய்ய கவிஞர்கள் ஐவர் காதலுடன் காத்திருக்கின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    *****

    ”உவரிக்குக் கோபம் வந்தால் உலகையே வீழ்த்திடும்; ஆதலால் அலைகடலே! உன் எழிற்கோலத்தை மாற்றாதே! அவல அலங்கோலங்களை நிகழ்த்தாதே!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தொடரட்டும் அழகு…

    கடலில் அலைகள் ஓய்வதில்லை
    காணும் அழகும் குறைவதில்லை,
    உடையாய் உலகை மறைத்திருக்கும்
    உவரி தனக்கும் வரும்கோபம்,
    அடங்கி யிருக்கும் அலைக்கரத்தால்
    அடித்தே நொறுக்கிடும் அகிலத்தையே,
    தொடர்க கடலே உனதழகை
    தொடர வேண்டாம் அவலங்களே…!

    *****

    சமூக ஊடகங்களில் சறுக்கிவிழுகின்ற தலைமுறை, சிறுத்துப்போன உள்ளங்கள், சமுதாயத்தைச் சீரழிக்கும் சிற்றின்ப விளம்பரங்கள் இவைகண்டு சீற்றம் கொண்டு ஆர்ப்பரிப்பது மனித மனங்கள் மட்டுமல்ல; மா கடலுந்தான்!” என்பது இப்படம் குறித்த திரு. ஆ. செந்தில் குமாரின் பார்வை.

    கொந்தளிக்கும் அலைகடல்..

    பரப்புரை செயவேண்டியதைப்
    பெட்டிக்குள் அடைத்தும்..
    பெட்டிச் செய்திகளைப்
    பெரிது படுத்தியும்..
    பதிவிடும் ஊடகங்கள்..!!

    ஆயிரம் நல்லவை
    அவனியில் நிறைந்திருந்தும்..
    அந்தவொரு அவசியமற்றதைப்பற்றி
    அதிகமாய் அங்கலாய்க்கும்..
    அறிவில் குறைபாடுள்ள சமுதாயம்..!!

    சமூக ஊடகங்களில்
    சறுக்கிவிழுகின்ற தலைமுறை..
    சிறுத்துப்போன உள்ளங்கள்..
    சமுதாயத்தைச் சீரழிக்கும்
    சிற்றின்ப விளம்பரங்கள்..!!

    பொருள் தேடலில்
    பொலிவிழந்த வாழ்க்கை..
    பணத்தைக் கொண்டாடும் உலகில்
    பதவிச்சண்டைகள் பெருத்து..
    பண்பு பரிதவிக்கும் அவலம்..!!

    இவற்றையெல்லாம் நினைந்து..
    இன்னலுற்றது சிலரின்
    இதயங்கள் மட்டுமல்ல..
    சிலநேரங்களில் அலைகடலும் ஆழிப்பேரலையாய்..
    சீற்றங்கொண்டு கொந்தளிக்கிறது..!!

    *****

    வெண்ணிலவுப் பெண்ணாளைக் கண்டு காதல் கொண்ட கடலரசனின் விந்தைச் செயல்களை விளம்பியிருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    கடலுக்கு வந்த காதல்

    அமைதியாய்ப் பகலெல்லாம் ஓயாமல் அலைபாய
    அந்தி சாய்ந்ததும் நீ பொங்கி எழுந்தது ஏனோ
    அழகான வெண்ணிலா வானில் உலா வர
    ஆனந்தத்தில் பொங்கி எழுந்தாயோ?
    விண்மீன்கள் சூழ வந்த வெண்ணிலவைக் காண
    கரையில் வந்து நின்ற மானுடர்களின்
    கால்களைக் கழுவி அழைத்தாயோ?
    தொடர்ந்து வரும் அலையாய்க்
    கரையில் விழுந்து சப்தம் எழுப்பி
    கவனத்தை ஈர்க்க முயன்றாயோ?
    வந்து நின்ற வெண்ணிலவைக் கண்டு
    நிலை கொள்ள இயலாமல்
    நித்தம் அலைகளாய் இயங்கினாயோ?
    காதல் வந்து நெஞ்சுக்குள் நிலவை வைத்திட
    ஆழ்கடல் அமைதியாய் மாறியதோ?
    கலங்காது இருந்த கரையை ஓயாமல் அலையடித்து
    வன்முறை செய்வது ஏனோ?
    இரவென்று உறங்க முயன்ற கரையை அலையடித்து எழுப்பி
    உன் காதல் கதையைச் சொல்ல முயன்றாயோ?
    விடியல் வந்து இரவை விரட்டிட
    விலகிச் சென்ற வெண்ணிலவை கண்டு
    நெஞ்சில் புயல் ஒன்று உருவானதோ?
    அமைதியாய்ப் பாயும் அலையும்
    பொங்கிச் சீற்றத்துடன் பாய்ந்து
    தன் இயலாமையை வெளிப்படுத்தியதோ?
    இரவெல்லாம் உறங்காமல் வெண்ணிலவை எண்ணி ஓடிட
    உனக்கும் மன அழுத்தம் வந்ததோ
    சற்றே ஓய்வெடு அமைதியாய் அலை வீசிடு!
    சூரியன் மேற்கில் சென்று ஒளியும் வரை
    மீண்டும் உன் அருகில் வந்து உதித்திடுவாள்
    உன் ஆசை வெண்ணிலவு!

    *****

    ”இங்கே காதலில் ஈடுபட்டிருப்பது கரையும் நீரும் மட்டுமல்ல; காற்றும் கூடத்தான்” என்றொரு முக்கோணக் காதல் கதையைச் சொல்லிச் செல்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன். 

    ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பரித்தாலும்
    விடப்போவதில்லை என்று மோதினாலும்
    பார்ப்பவர்க்குத்தான் வியப்பு
    காற்றுக்கில்லை!
    காதலிப்பது கரையும் நீரூம் மட்டுமல்ல
    காற்றும்தான்!
    உண்மைபோல
    காற்றும் உறுதியானது.

    *****

    நுரைபொங்கும் கடற்காட்சியைத் தத்தம் கோணத்தில் கவனித்துக் கவி முத்துக்களை அள்ளிச் சொரிந்திருக்கும் கவிஞர்களுக்கு நம் பாராட்டுக்களைப் பகிர்வோம்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    காப்பாயே…கடல் தாயே!

    துள்ளி வரும் வெள்ளலையே தூங்காக்
    கடல்தாயின் வெண்புனல் குருதி நீதானோ?
    விடிவெள்ளிதனை விளக்காக்கி மடிவலையில்
    மீன்பிடிக்கும் மீனவர்க்குத் துணை நீயாமோ?

    திரைகடலின் உயிர்த்துடிப்பே கரை என்ற
    சிறைக்குள்ளே உன்னைக் கட்டி வைத்தது யாரோ?
    விரைந்து வரும் உன் வேகம்
    கரையவளின் கைஅணைப்பில் அடங்குவதென்ன மாயம்?

    எங்கும் திறந்தே கிடக்கும் நெடுங்கரைக்குப்
    பொங்கிவரும் வெண்ணுரையால் போர்த்த,
    புத்தம் புதுப் போர்வை நித்தமும் நெய்யும்
    ஓய்விலா இயற்கை நெசவாளன் நீ!

    உப்புக் காற்றோடு ஊடல் கொண்டால் நீ
    தப்புத் தப்பான உயரத்தில் தாவி வருகிறாய்!
    இப்புவியின் நிலப்பரப்பை இடைவிடாது தாலாட்டும் நீ
    அவ்வப்போது ஆழிப் பேரலையாகி எங்களை அழவைக்கின்றாய்!

    எம்மாந்தர் மனம்போலே ஒரு நிலை இல்லாமல்
    எழும் வீழும் உன் எழில்கண்டு களிப்புறும் வேளையிலே
    எச்சரிக்கை ஏதும் இல்லாமல் எமை அள்ளிச் செல்லும்
    எமனாகப் பொங்கிவந்து அழிப்பது ஏனோ?

    வெப்பம் தின்று குளிரூட்டும் நீ எங்கள்
    தப்புத் தவற்றை பொறுத்தருளக் கூடாதோ?
    இப்புவியின் சூழல்காக்க இன்னும் ஓர்வாய்ப்பு
    எப்படியாயினும் தந்திட வேண்டும் கடல் தாயே… காப்பாயே!

    ”துள்ளிவரும் வெள்ளலையே! நெடுங்கரைக்குப் போர்த்துதற்கு வெண்ணுரையால் போர்வை செய்யும் நீ ஒரு நெசவாளனோ? நிலையிலா மாந்தர் மனம்போல் எழும் வீழும் நீ, எங்கள் தவறுகளைப் பொறுத்தருளக் கூடாதோ?” என்று மாந்தர் தவற்றை மன்னிக்கக் கோரும் கவிதையைக்  கடலன்னைக்குக் காணிக்கையாக்கியிருக்கும் திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 200

    அன்பிற்கினிய நண்பர்களே!

    உங்கள் நல்லாதரவுடன் படக்கவிதைப் போட்டி, 200ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இதில் தொடர்ந்து பங்கேற்கும் படைப்பாளர்களுக்கும் நிழற்படக் கலைஞர்களுக்கும் படங்களைத் தேர்ந்தெடுக்கும் சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் மேகலா இராமமூர்த்தி, வெளியிட்டு வரும் ஆசிரியர் பவளசங்கரி உள்ளிட்ட அனைவருக்கும் வல்லமை சார்பில் நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்.

    இந்த வாரத்திற்கு சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்குகிறோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 199

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முரளிதரன் வித்யாதரன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 198-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குடும்பத்துக்கு உணவூட்ட கொல்லைப்புறம் அடுப்புமூட்டிச் சமையல் செய்யும் இப்பெண்மணி நாம் மறந்துபோன பழைய சமையல்முறையை நமக்கு நினைவூட்டுகின்றார்.

    எரிவாயுச் சமையல்முறை வந்தபின்னே காண்பதற்கு அரிதாகிவிட்ட இக்காட்சியைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து வந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும் அவரின் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 198க்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    சமைப்பதற்கு நேரம் பிடித்தாலும் கோட்டை அடுப்பிலும் குமுட்டி அடுப்பிலும் தயாராகும் உணவுகளின் சுவையே தனிதான்!

    ”தேர்ந்த தமிழ்ச்சொற்களால் கவி பாடுக!” என்று ஆர்வத்தோடு காத்திருக்கும் கவிஞர்களை அழைக்கிறேன் இனி!

    *****

    கோட்டையும் குடிசையும் அருகருகே இருக்கும் தெருவில் குடிசைவீட்டில் குடியிருக்கும் இப்பெண்மணி, ”குடிசையே தன் கோயில்” என்று நிறைவோடு வாழ்வதைத்  தம் கவிதைவழி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார் திரு.  சி. ஜெயபாரதன்.

    குடியிருப்பு

    செங்கல்
    கோட்டையும், கீற்றுக்
    குடிசையும்
    எங்க தெருவிலே ஒன்றாய்க்
    குடியிருப்பு!
    செங்கல் வீட்டுக்கு
    அத்திவாரம் ஆழத்தில்!
    குடிசைக்குப் புயலடித்தால்
    இறக்கை முளைத்து விடும்!
    வீட்டு
    வேலைக்காரி நான்!
    மாத வாடகை
    குடிசை இடத்துக்கு
    ஆயிரம் ரூபாய்!
    தென்னங் கீற்று
    என்னது!
    மாதச் சம்பளத்தில்
    பத்து ரூபாய் கொடுப்பேன்!
    என் வாரக் கூலியோ
    நூறு ரூபாய்!
    ஆறு வாய்களுக்கு அதிலே
    சோறு போடணும்!
    இந்தக் கூரை வீடு
    என் கோயில்!
    இது போதும் எனக்கு!

    *****

    ”நாட்டுப்புறத்து நயமிகு வாழ்க்கை ஆட்டம் காட்டிடும் நாகரிகத்தால் அசைக்க முடியாதது” என்று தெம்பாகப் பாட்டிசைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நிறைவு…

    காட்டில் பொறுக்கிய சுள்ளியுடன்
    கட்டாந் தரையில் அடுப்புவைத்த
    நாட்டுப் புறத்து சமையலிலே
    நிறைந்திடும் வயிறும் மனமும்தான்,
    வாட்டம் வாழ்வில் வந்தாலும்
    வெளியே காட்டிடா நிறைவிதுவே,
    ஆட்டம் காட்டிடும் நாகரிகம்
    அசைக்க முடியா வாழ்விதுவே…!

    *****

    ”குழந்தைப்பேறு வேண்டி வெள்ளிக்கிழமை விடிகாலையில் குலமகள் வைக்கும் பொங்கலிது” என்று இக்காட்சிக்குச் சுவையான விளக்கமளிக்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    பொங்கல்!

    குடிசைக் கோவில் கட்டி
    குழந்தை வேண்டி என் வழிபாடு
    கும்பிடுவோம் வாருங்கள்
    குலசாமி நாகத்தை – என்
    ஓட்டு வீட்டுக்கு முன்னே
    ஓரமாய் பாம்புப் புற்று
    வெள்ளிக்கிழமை தோறும்
    விடிகாலைப் பொங்கலிட்டு
    மணக்கும் பொங்கச்சோற்றை
    மண்தரையில் இட்டு உண்டால்
    மழலைச் செல்வம் வந்து
    மடியில் தவழுமென்று
    சாமியாடி சொன்ன குறியை
    சரிவர நான் செய்கின்றேன்.
    வயல்காட்டை அடுத்த
    வாய்க்கால் அருகே என் வீடு
    வந்துவிட்டுப் போங்களேன்
    வாழை இலையில் விருந்துண்ண
    வாசனைப் பொங்கலுடன்
    வடை சாம்பார் சட்டினியும்
    அவியல் பொறியலுடன்
    அவித்துவைத்த இட்லியையும்
    உண்டு மகிழ்ந்து தமிழச்சி என்னை
    உளமார வாழ்த்துங்கள்
    வெயில் ஏறுமுன்னே
    வேகமாய் வாருங்கள்!

    *****

    ”தென்னங்கீற்றை நேர்த்தியாகப் பின்னி, தானே உருவாக்கிய அருமைக் குடிசையில் வாழ்வதில் கிடைக்கும் நிறைவும் இன்பமும் மாடிவீட்டில் தேடினாலும் கிடைக்காது” என்று உளம் பூரிக்கும் பாவையைக் காண்கிறோம் திரு. ஆ. செந்தில் குமாரின் பாடலில்.  

    நிறைமனம்…

    நல்லநல்லத் தென்னங்கீத்த.. நேத்தியாக நான்பின்னி..
    சீட்டுக்கட்டு அதுமாதிரி.. சேத்துசேத்து அடுக்கிக்கட்டி..
    எனக்காக நான் கட்டுன குடிசயிது..!!

    கழனிக்கு நான்போயி.. கஷ்டப்பட்டு நாள்முழுக்க..
    களையெடுத்து நாத்துநட்டு.. களப்போட வரும்போது..
    ஓஞ்சி சித்த ஒக்கார.. ஒதவிசெய்யும் எங்குடிச..!!

    சுட்டெரிக்கும் வெயிலடிச்சா.. சடசடன்னு மழபெஞ்சா..
    எட்டநின்னு பாதுகாப்பா.. எப்பவுமே எனக்குநல்லா..
    அண்டிக்கிட வசதிதரும்.. அருமையான எங்குடிச..!!

    வசதியாஒரு வாசலுந்தான்.. கடலாட்டம் கெடக்குதுங்க..
    வேணும்போது வெறகுவச்சி.. தீமூட்டிச் சமச்சித்திங்க..
    அம்சமா ஒருஅடுப்பு.. அந்தப்பக்கம் இருக்குதுங்க..!!

    படுத்துத்தூங்க கயித்துக்கட்டில்.. இல்லாட்டி கோரப்பாயி..
    மாடிமேல மாடிகட்டி.. கட்டில்மேல மெத்தபோட்டு..
    படுத்தாகூட கெடைக்காதுங்க இந்த சுகம்..!!

    *****

    குடிசை வீடும், கோட்டை அடுப்பும் நம் கவிஞர்களின் கற்பனைக்கு நல்ல தீனி போட்டிருப்பதை இக்கவிதைகள்வழி உணர்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    பழமை மறந்த பாரதம் 

    இருக்க ஓர் இடம் வேண்டும் என்று எண்ணிக் 
    கட்டிடங்கள் கட்டி வைத்தோம் 
    பாதுகாப்பு என்று எண்ணி கதவுகளைப் பூட்டி வைத்தோம்
    அக்கம் பக்கம் எது நடந்தாலும் தட்டிக் கேட்க மறந்தோம் 
    காந்தி சொன்னதைப் போல்  அத்தனையும் மூடியே வளர்ந்தோம்!  
    உடுத்தும் உடையில் காதி மறந்தோம் 
    சமைக்க மறந்து உண்ணும் உணவில் கிடைக்கும் பலனை மறந்தோம் 
    அடுப்பில் எரிவாயு தீர்ந்து போக
    பின்னங்கதவு திறந்து பார்க்கையில்
    கடந்து வந்த பாதை கனவாய்த் தெரிந்ததே 
    மழையோ வெயிலோ ஒதுங்க ஓர் இடமாய் இருந்த குடிசை 
    கால் கடுக்கத் தண்ணீர் கொண்டுவந்த நெகிழிக் குடம்
    சமையல் செய்த மண்சட்டியும் கரண்டியும் 
    உலை கொதிக்க  உதவிய விறகுகளும் மண்அடுப்பும் 
    என் வீட்டுத் தோட்டத்தில் 
    கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்
    மாற்றம் என்ற பெயரில்…
    மறந்துதான் போனோமே! 

    கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்க் கடந்துவந்த பாதையை, அதை அலங்கரித்த இனிய எளிய விஷயங்களை அசைபோட்டுப் பார்க்கும் வகையில் நனவோடை உத்தியில் (flashback) கவிதை புனைந்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 198

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 197-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வரிசைகட்டி நிற்கும் நெகிழிப் புட்டிகளின் அருகே முறுவலோடு மலர்க்கரம் நீட்டி நமை மயக்கும் சுட்டிக் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். படக்கவிதைப் போட்டிக்கு ஏற்றது இப்படம் என்றிதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மகிழ்வோடு நாம் பயன்படுத்திய நெகிழிப் பொருள்கள் நம் மண்ணுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குபயக்கும் தன்மையன; மக்காத் தன்மை கொண்ட இவற்றை அழித்தலும் இயலாது என்றுணர்ந்த பின்னும் அவற்றைப் பயன்படுத்துதல் அறிவுடைமை ஆகாதென்னும் விழிப்புணர்வை மாந்தரிடம் ஏற்படுத்தி அவற்றுக்கு விடைகொடுத்தனுப்புவதே நம் கடமையாகும்.

    இனி, இந்நிழற்படத்துக்குப் பொருத்தமான கவிதைகள் வடிக்கக் காத்திருக்கும் கவிஞர்களை அழைப்போம்! அவர்தம் நன்மொழி கேட்போம்!

    *****

    ”மழைக்காக வானம் பார்த்து வாழும் கூட்டம் ஒருபுறம்; குடிநீருக்கு(ம்) கேடு வந்ததால் அதனைக் காசுகொடுத்து வாங்கிடும் கூட்டம் இன்னொருபுறம்; வயிறுபுடைக்க உண்டதனால் நீர் குடிக்க இடமின்றி அதனை வீணடிக்கும் கூட்டம் மறுபுறம் என்று விதவிதமான மனிதர்கள் மத்தியில் தாகம் தணித்திடும் நீர்ப்புட்டிகளை வேண்டுவோருக்கு வழங்கக் காத்திருக்கும் குழந்தைகள் இவை!” என வியக்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஈரம் கொண்ட பிஞ்சு மனம்

    மாதம் மும்மாரிப் பொழிந்த
    காலம் போய்
    வானம் பார்த்து வாழும் ஒரு கூட்டம்
    கால் கடுக்க வெகு தூரம் நடந்து சென்று
    கால்வாய்களில் கொண்டு வந்த தண்ணீர்
    கால் வயிற்றுக் கஞ்சி காய்ச்சிட
    காலியாகிப் போனதே
    நீரைத் தேடி மீண்டும் கால்கள் நடந்ததே
    மீளாத துயரம் இன்றும் தொடர்ந்ததே
    நிலத்தடி நீரை உறிஞ்சி குளித்துக்
    குடிக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்கி
    வாழும் ஒரு மக்கள் கூட்டம்
    அன்போடு தேவை அறிந்து பரிமாற நேரமின்றி
    ஆடம்பரத்திற்கு அடிமையாகி
    அடைத்து வைத்த தண்ணீரைக்
    கட்டாயமாய் வழங்கிடும் ஒரு கூட்டம்
    அதிகம் உண்டு நீர் குடிக்க இடம் இன்றி
    தாகம் தீர்க்கும் தண்ணீரை
    செய்வது அறியாது வீணாக்கிடும் ஒரு கூட்டம்
    முழுதும் முடியாத கட்டிடத்தில்
    அதிகம் வளராத பிள்ளைகள்
    வியக்க வைக்கும் சிந்தனையுடன்
    வீணாகும் நீரைச் சேமித்து
    சிலரது தீராத தாகத்தைத் தணித்திட
    புன்னகையோடு வழிகாட்டி நின்றனரே!

    *****

    ”நெகிழிக் குடுவையே போய் வா; நீர் வளம் இங்கு பெருகட்டும்” என்கிறார் திருமிகு. லட்சுமி.

    நீர் வளம் பெருகிடவே
    நிறைந்த மனதாய்
    நெகிழி குடுவையே!
    போய் வருவாயோ!

    பந்தி முடிந்தபின்பும் அகலாது குந்தியிருந்த குப்பிகளை வைத்துத் தொடர்வண்டி செய்த சிறுமியர், தாங்கிநிற்கும் மேசையையே அதற்குத் தண்டவாளம் ஆக்கிவிட்டனர் என்று கற்பனைச் சுவை மிளிரக் கவியெழுதியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    உணவுப் பந்தியில் உதித்த சிறுமியரின் தொடர்வண்டி…
    தொடர்வண்டி செய்திடுவோம்.. தோழி..
    தொடர்வண்டி செய்திடுவோம்..
    அழகழகுக் குப்பிகளை.. தோழி..
    அருகருகே நிற்கவைத்து.. (தொடர்வண்டி…)

    பந்தி முடிந்த பின்னாலே.. தோழி..
    பல குப்பிகளைச் சேகரித்து..
    பந்திமேசை அதன்மீது.. தோழி..
    பாங்குடனே அடுக்கிவைத்து.. (தொடர்வண்டி…)

    இழுவையொன்று செய்திடவே.. தோழி..
    இயன்றவழியைச் சொல்வாயா..?
    இங்கிருக்கும் பொருளொன்றை.. தோழி..
    இழுவையாக நாம்மாற்றி.. (தொடர்வண்டி…)

    தொடர்வண்டி செய்தாச்சு.. தோழி..
    தண்டவாளம் என்னாச்சு..?
    தாங்கிநிற்கும் மேசையிதையே.. தோழி..
    தண்டவாளமாய்க் கொள்வோமே.. (தொடர்வண்டி…)

    நாம் செய்த தொடர்வண்டி.. தோழி
    நீண்டதொலைவு சென்றிடுமே..
    நாமிருவரும் அதிலேறி.. தோழி
    நினைத்தபடியே செல்வோமே.. (தொடர்வண்டி…)

    *****

    ”ஆறுகளையும் குளங்களையும் மனிதன் கூறுபோட்டதனால் நீர்வளம் குன்றிப்போய் குப்பிகளில் குடியேறியது குடிநீர் ” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மாற்றம்…

    ஆறு குளமும் கேணியென
    அத்தனை வகையாய் நீர்நிலைகள்,
    ஊறும் நீரின் வளத்தாலே
    உலகம் வாழ்ந்ததே யந்நாளில்,
    கூறு போடும் மனிதராலே
    குன்றிப் போனது நீர்வளமும்,
    ஆறாய்ப் போன நீர்மறந்தே
    அடைத்ததைக் குப்பியில் காண்கிறோமே…!

    *****

    ”கெட்டவரையும் புண்படுத்தாது பண்படுத்தும் இயல்புடைய தமிழராகிய நாம், மக்காது புவிவாழ் மக்களையும் மாக்களையும் வதைக்கும் நெகிழிகளுக்கும் ஒரு நினைவுதினம் நடத்துவோம் வாரீர்!”  என்றழைக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    நினைவு தினம்!

    வாரீர் எம் தமிழர்களே
    வழியனுப்பு விழாவிற்கு!
    நெகிழிப்பை பயன்படுத்த
    நாளை முதல் தடையாம்
    பிறந்தது முதல் தொட்டிலாய்
    பாலுண்ணும் குமிழியாய்
    பகிர்ந்து உண்ணும் தட்டாய்
    பருக உதவிய குவளையாய்
    விளையாட்டுப் பொம்மையாய்
    விரும்பி ஆடும் ஊஞ்சலாய்
    குளிக்கும் வாளியாய்
    பல வருடம் வித விதமாய்
    பவனி வந்த நெகிழி பற்றி
    புரிந்து கொண்டோம்
    நாளை முதல் ஒவ்வொன்றாக
    நன்மை கருதிப் புறந்தள்ளுவோம்
    உருக்கி வடிவுமாற்றி மீண்டும்
    உபயோகிக்க முடிந்தவை தவிர
    மக்கிப் போகாது இப்புவிவாழ்
    மக்களையும் மாக்களையும்
    வாட்டி வதைக்கும் நெகிழிகளுக்கு
    வழியனுப்பு விழா இன்று!
    புவிவளம் காக்க அவைகளை
    புறம் ஒதுக்க விழைந்தாலும்
    கெட்டவரையும் புண்படுத்தாத
    குணம் கொண்ட தமிழர் யாம்
    நிறைவு பெறாக் கட்டிடத்தில்
    நிறை மனதோடு கொண்டாடுவோம்
    நெகிழிப் பைக்கொரு நினைவுதினம்!

    *****

    ”மட்பாண்டக் குவளைகள் எல்லாம் மரியாதையுடன் மனையேறட்டும்; மக்காத நெகிழி நச்சுகளெல்லாம் மலையேறி வெளியேறட்டும்” என்று மாற வேண்டியதையும் நாம் மாற்ற வேண்டியதையும்  அழகாய்த் தன் கவிதையில் பதிவுசெய்துள்ளார் திரு. யாழ் பாஸ்கரன்.

    மாறுவோமே மாற்றுவோமே!

    பச்சைத் தலைப்பாகட்டி பளபளக்க வரிசையிலே
    பச்சைத் தண்ணீர் நெகிழிப் போத்தல்கள் – நாம்
    எச்சிலாக்கி எறிந்தபின் மக்கி நெகிழாமல்
    பசுமைத் தாய்நிலத்தின் நலம் சாய்க்கும் பகைவர்கள்

    வழக்கம் மாறினால் வானமே எல்லை நெகுநெகு நெகிழிகளை
    வழியனுப்பி வைப்போம் பிள்ளைகள் நாங்கள்
    வாழும் பூமிக்கோளம் மாசின்றி மலர்ச்சியுற
    வையகம் வாழ வழிமுறை காண்போம்

    மடமடவென மண்பானைத் தண்ணீரைக் குடித்துவிட்டு
    மளமளவென மண்வெட்டியால் நிலம் கொத்திய
    முப்பாட்டன் காலத்தின் சூழல் நோக்கி முழுமனதுடன்
    முதல் அடியை எடுத்து வைப்போம்

    மண்பாண்டக் குவளைகள் எல்லாம்
    மரியாதை பெற்றே மனையேறட்டும்
    மக்காத மாசான நச்சுக் குப்பைகள் எல்லாம்
    மனம் மாறி மலையேறி வெளியேறட்டும்

    மாசில்லா உலகே மகிழ்வான சுவனம்
    மக்காத பொருளாலே நிகழுமே உயிர்களின் மரணம்
    மனம் நெகிழ்ந்தே நெகிழிகளை ஒழிப்போம்
    மண்ணுயிர்க்கு வாழ்வளித்து மகிழ்வோம்

    மனிதனின் தேவைக்குத் தாயாகும் இயற்கை
    மாறாத அவன் பேராசைக்குப் பாலியாகுது இது செயற்கை
    மாறுவோமே மாற்றுவோமே இனி மண் சிரித்துப் பொன்னாகும்
    மரம் வளர்ப்போம் உலகு அழகாகும்!

    *****

    சிந்தனைக்கு விருந்தான சீரிய கவிதைகளைப் படைத்திருக்கும் புலவர் தோழர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    நெகிழிப் பொருட்களைத் தவிர்த்திடுவோம்…மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!

    நெகிழிக் குப்பிகள் ஒவ்வொன்றாய்..நெருக்கமாய் அடுக்கி வரிசையாக்கி..
    நெஞ்சம் மகிழ விளையாடும்.. நெருங்கியத் தோழிகள் இருவருக்கும்..
    நெருக்கடிச் சூழலை உணர்த்துகிறேன்.. சிரத்தையாய் அதற்குச் செவிமடுப்பீர்..!!

    நெடுங்கழுத்து உள்ள நாரைகளும்.. நெடுந்தூரம் செல்லும் பறவைகளும்..
    நெடுங்கடல் வாழும் உயிரினமும்.. நெகிழிப் பொருட்களை விழுங்குவதால்..
    நெடுதுயில் கொள்வதை உணர்வீரா..? இவற்றின் துன்பம்போக்க முனைவீரா..?

    நெடுஞ்சாலை நீர்நிலை எங்கெங்கும்.. நெகிழிக் குப்பைகள் நிறைந்திருக்கு..
    நெடுகிலும் குவியும் குப்பைகளால்.. நெருப்பாய்த் தகிக்குது நம்பூமி..
    நெஞ்சம் பதறுது அதையெண்ணி.. உணர்வீர் செல்லக் குழந்தைகளே..!!

    நெல்லைத் தந்திடும் பூமியெங்கும்.. நெருஞ்சில் தைத்த வலியாக..
    நெகிழிக் குப்பைகள் படிவதனால்.. நெடிதுய்க்கும் மண் வளங்கள்..
    நெஞ்சம் பதறிடக் குன்றிடுதே.. நெடுங்கதையாய் இது தொடர்கிறதே..!!

    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நிலத்தடி நீரின் குறைபாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நம் சுற்றுச்சூழலின் சீர்கேடு..!!

    மனதில் இவற்றை இருத்திடுவோம்.. மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!
    மக்கா நெகிழிக் குப்பைகளை.. மண்ணில் எறிவதைத் தவிர்த்திடுவோம்..!!
    நெகிழிப் பைகளைத் தவிர்ப்போமே.. நெய்த துணிப்பைகளைக் கொள்வோமே..!!

    ”நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நிலத்தடி நீரின் குறைபாடு; நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு” என்று நெகிழிப் பொருள்களால் விளையும் தீமைகளைச் செல்லக் குழந்தைகளுக்குத் தன் பாட்டில் அழகாய்ப் பட்டியலிட்டு விளக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 197

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப்போட்டி 196-இன் முடிவுகள்

    –மேகலா இராமமூர்த்தி

    புள்ளிக்கோலம் போடும் இந்தப் பாவையைப் புகைப்படமெடுத்தோர் வரிசையில் தாமும் ஒருவராய்த் திகழ்ந்து படமெடுத்துவந்திருப்பவர் திருமிகு. ஷாமினி. இப்படத்துக்குப் படக்கவிதைப் போட்டியில் இடம்தந்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். படம்தந்தவர், போட்டியில் அதற்கு இடம்தந்தவர் இருவருக்கும் உரித்தாகின்றது என் நன்றி!

    வீட்டை மிளிரவைக்கும் அழகுக் கலைகளில் ஒன்று கோலம். கோலம் என்றாலே அழகு என்றுதானே பொருள்? கோலமிடுவது இல்லத்துக்கு அழகூட்டுவதோடு மட்டுமல்லாமல் கரங்களுக்கு நல்ல பயிற்சியாகவும், ஊற்றெடுக்கும் புதிய கற்பனைகளை வெளிப்படுத்தும் முயற்சிக்கு உற்றதோர் வாய்ப்பாகவும் அமைகின்றது. அனைத்திற்கும் மேலாய் அரிசி மாவினால் கோலமிட்டால் சிறு பூச்சிகளும் எறும்புகளும் அதனை உண்ணும். அதிகாலையிலேயே உயிர்களுக்கு உணவிட்ட மனமகிழ்வும் நமக்குக் கிட்டும்.

    இனி, இப்படம் குறித்துத் தம் கருத்துரைக்கக் காத்திருக்கும் அருமைக் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்போம்! அவர்தம் கவிமொழி கேட்போம்!

    *****

    மார்கழிப் பனியில் நனைந்தபடி இனிய கோலமிடும் நங்கையர்க்குப் போட்டி வைத்து, பரிசளிப்பதற்காகக் கோலத்தைப் படமெடுக்கும் ஆர்வலர்களை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்த்துவோம்…

    மார்கழிப் பனியில் நனைந்தேதான்
    மங்கைய ரெல்லாம் தெருவிலொன்றாய்ச்
    சேர்ந்தே காலையில் கோலமிட்ட
    சீரிய காலம் மாறிடினும்,
    தேர்வுகள் வைத்தே அவற்றிற்குத்
    திறமை சார்ந்த பரிசளித்தும்
    ஆர்வ மோடு படம்பிடிக்கும்
    ஆர்வ முள்ளோர் வாழியவே…!

    *****

    ”அழகுக்கோலமிடும் முகங்காட்டாச் சோதரியே! ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன் விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்ச்சிகள் உருவாகக்கூடும். வேலியற்ற இணையவெளியில் உலவும் காலிகளால் இலைமறை காயாய் இருந்தனவெல்லாம் இப்போது இலவசங்கள் ஆயின. ஆகவே குனிந்தது போதும்; நிமிர்தல் செய்!” என்று கோலமிடும் பெண்ணை அன்போடு எச்சரிக்கின்றார் திரு. யாழ் பாஸ்கரன்.

    நிமிர்தல் செய்

    முற்றுப்புள்ளிகளை முழுமையாக்கி அழகுக் கோலமிடும்
    முகம் காட்டா சகோதரியே முழுக்க மூழ்கியது போதும்
    முதுகுப்பக்கம் கொஞ்சம் முகம் திருப்பு- உன்னை முற்றுகையிட்டுள்ள
    மூன்றாம் கண்ணின் பார்வைகள் முற்றுப் பெறட்டும்

    மாக்கோலம் தவறானால் மலர்க்கோலம் தீட்டிடலாம்
    பூக்கோலம் சிதறிவிட்டால் புதுக்கோலம் போட்டிலாம்
    நிலக்கோலமிட்டது போதும் நிமிர்தல் செய் சற்றே இல்லையேல்
    வாழ்கைக் கோலம் அலங்கோலம் ஆகிவிட்டும்

    காட்சிப்பிழைகளையே ஆட்சியில் ஏற்றும்
    மாட்சிமை மறந்த பூகோள மானுட சமூகத்தின்
    காட்சி ஊடகக் கலிகாலம் இதில் சிறுகவனச் சிதைவும்
    சாட்சியாகிச் சங்கடங்கள் பல தந்துவிடும்

    பழுதடைந்த பார்வை விழிமூடர்களின்
    பாலின வன்முறை வெறியாட்டங்களினால்
    பலாத்காரமாய்ச் சீரழிக்கப்பட்டுப் பாவம் பெண்மையே
    பலியாடுகளாய் எப்போதும் வெட்டுப்படுகிறது

    ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன்
    விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்ச்சிகள் உருவாகலாம்
    வேலியற்ற இணைய வெளியின் வழிகளில் முட்களாய்
    போலிக் கலைக்காலிகள் பசுத்தோல் போர்த்தியபடி

    இலைமறைகாயாய் இருந்தன எல்லாம்
    இலவசமாய் இங்கு பதிவிறக்கக் கிட(டை)க்கிறது
    இளந்தாரிகளின் இலக்கற்ற விடுதலை உரிமைக்கும்
    இலக்குவன் கோடுகள் சில இங்கே தேவையாகிறது

    *****

    வெவ்வேறு கோணங்களில் இப்படத்தை அணுகிப் புதிய புதிய சிந்தனைகளை நமக்குத் தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுவோம்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் கவனத்துக்கு…

    வாழ்க்கைக் கோலம்!

    நெளிந்து கொடுக்கக் கற்றால்
    நேராகும் நம் வாழ்வு என
    வாழ்க்கைப் பாதையை
    விளக்கும் பாதைக் கோலம்
    அழகான இடைப்புள்ளி
    அன்றைய உன் துன்பங்கள்
    வரிசையாக உன் இடர்களை
    வகையான புள்ளிகளாய் இட்டு
    நெளி வலைக்குள் சிறையாக்கு
    நிஜ வாழ்வின் சோகங்களை
    கண்டவர் படமெடுக்க விழையும்
    கண்கவர் காட்சியாய்
    அழகாக மாறும் வாழ்வு
    அருமையான நெளிக்கோலமாய்
    முகம் காட்டா நங்கை சொல்லும்
    முத்தான பாடமிது
    இடர்களைச் சிறையாக்கி
    இயன்றவரை வளைந்து கொடு
    மீண்டும் அசைபோடாது
    மீளாத் துயரத்தில் வீழாது
    வெளிவந்த பின்னே வாழ்க்கை
    வெளிச்சமாகும் வசந்தமாகும்!

    ”கோலத்தின் இடைப்புள்ளிகளே உன் துன்பங்கள்; அவற்றைப் பிறரறியாது சிறைப்படுத்து! நெளிந்துசெல்லும் கோடுகளாய் இயன்றவரை வளைந்துகொடுத்து வாழ்வை முறைப்படுத்து. பளிச்சென வெளிச்சமாகும் உன் வாழ்க்கை!” எனச் சிக்குக் கோலத்தை வைத்து வாழ்வின் சிக்கலெடுக்கும் வித்தையை விளம்பியிருக்கும் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 195-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    நீரில் கால்நனைத்து நிற்கும் கருவேழத்தைத் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து இவ்வினிய படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    ”குன்றுகளுக்கு முன்னே மற்றொரு கருங்குன்றென கம்பீரமாய்க் காட்சியளிக்கும் இக்களிற்றைக் காணும்போது, காஞ்சியை ஒரு காலாலும், வடக்கேயுள்ள உச்சயினியை மற்றொரு காலாலும் மிதித்துவிட்டுத் திரும்பி தெற்கேயுள்ள ஈழத்திலும் கால்பதித்து உறையூர் மீளும் கிள்ளியின் வெற்றிக் களிறு இதுவோ?!” என்றோர் ஐயம் மெல்ல என்னுள் எட்டிப் பார்க்கின்றது.

    கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
    தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
    ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
    கோழியர்கோக் கிள்ளி களிறு
    . (முத்தொள்ளாயிரம் – 73)

    களிற்றை வைத்துக் கவின்மிகு கவிதைகள் வடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கவிஞர் குழாத்தை வரவேற்று அமைகிறேன் இப்போது!

    *****

    ”களிறு, வேழம், ஒருத்தல், தும்பி என்று எத்தனைப் பெயர்கள் அழகு ஆனையை அழைப்பதற்கு! உரறுதல், முழங்குதல், பூசல் என்று எத்தனை ஒலிகள் அதன் ஓசையைக் குறிப்பதற்கு!” என்று எண்ணி வியக்கிறார் ஆ. செந்தில் குமார்.

    அப்பப்பா… அழகு யானை…

    பிளிறல் சத்தம் செய்வதனால்.. களிறே என்றதை அழைத்தனரோ…!
    வெள்ளைத் தந்தம் உடையதனால்.. வேழம் என்றதை விளித்தனரோ…!
    பருத்த உடலாய் இருப்பதனால்.. ஒருத்தல் என்றதைப் பகன்றனரோ…!
    கருத்த நிறமாய் உள்ளதனால்.. கரியே என்றதைக் கூவினரோ…!
    மிடுக்காய் அதுவும் நடப்பதனால்.. மத்தகயமே என்றனரோ…!
    துதிக்கை ஒன்று நீண்டதனால்.. தும்பி என்றதைப் போற்றினரோ…!
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனைப் பெயர்கள் யானைக்கு…!

    துன்பத்தில் ஒலித்தல் புலம்பல்.. அச்சத்தில் ஒலித்தல் கதறல்..
    விரைந்து ஒலித்தல் கம்பலை.. பெருங்குரல் என்பது பூசல்..
    உரறுதல் இயம்புதல் முழங்குதல்.. நரலுதல் சிலைத்தல் இசைத்தல்..
    பயிர்க்குரல் உயிர்க்கும் என்ற.. எழுப்பும் ஓசைகள் பற்பல..
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனை ஓசைகள் ஆனைக்கு…!
    அப்பப்பா.. ஆனைக்கும் மனிதனுக்கும்.. ஆண்டாண்டாய் ஒரு பிணைப்பு…!
    ஆனையை வியப்பதா…? மொழியை உருசிப்பதா…? புரிந்திடவில்லை எனக்கு…!

    *****

    ”சோற்றுவளம் மிக்க சோழநாட்டில் இப்போது சோற்றுக்குப் பஞ்சம்! அதனால் கவளச் சோற்றுக்காகக் கும்பிடு போடும் அவலம் நேர்ந்தது எம் சோதரர்க்கு. மாக்களை இரக்கமின்றித் துன்புறுத்தும் மக்களே! எமக்கு உதவுங்கள்!” என்று இறைஞ்சும் யானை உருக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    சோழன் எங்கே?

    முறை தவறா சோழ நாட்டில்
    மூதாதையர் போர் அடித்தார்
    சோற்றுக்குப் பஞ்சமாமிப்போ
    சோழன் எங்கே? தேடுகிறேன்
    வளமான அந்நாட்டைக் காண
    வனம் விட்டு ஓடி வந்தோம்
    மதப்பேய் பிடித்த சிலர் எம்மை
    மதயானை எனப் பெயர் சூட்டி
    அடித்து அடக்கி அண்ணனை
    ஆலயத்தில் முடக்கி விட்டார்
    கவளச் சோற்றுக்காக அனைவருக்கும்
    கும்பிடு போடுகிறான் தினமும்
    இருகாலில் நின்று வித்தை காட்ட
    இரும்புச் சங்கிலி பிணைப்பு தம்பிக்கு
    தப்பி ஓடி வந்த நான்
    திசை தெரியாமல் நடந்த போது
    கண்டேன் சோழன் அம்பாரியை
    காட்சிப் பொருளாய் பெட்டகத்துள்
    நாட்டின் வளமென
    நான் செய்த கற்பனை
    நிஜ உலகில் இல்லாது
    நிழற்படத்தில் கண்ணுற்றேன்
    வையகம் ஆண்ட சோழன்
    வரலாற்றில் இடம் பிடித்தான்
    ஆற்று நீரைக் கொண்டு
    அருமையாய் உழவு செய்வீர்
    மாக்களைத் துன்புறுத்தம்
    மக்கள் தம்மைத் தண்டித்து
    நீதி வழங்க எம் சோழன் இல்லை
    நீங்களாவது உதவுங்கள்!

    *****

    ”வசிப்பிடங்களாகிவிட்ட எம் வாழ்விடங்கள்; கற்கட்டடங்களாக மாறிப்போன எம் வழித்தடங்கள்; பேராற்றுக்குச் சமாதி கட்டிவிட்டுப் பெருஞ் சிலைக்குத் திறப்புவிழா! பூவுலகு தமக்கே எனும் கேவல மனிதரின் பேராசைத் தாகம் என்று தணியும்? அன்றுதான் தீரும் எம் தாகமும்!” என்று வேதனையுறும் வேழத்தைக் காண்கிறோம் முனைவர். ம. தனப்பிரியாவின் கவிதையில்.

    தாகம் தீர்ந்திடுமோ….???

    எம் இனத்தின் வாழ்விடங்கள் இன்று மனிதனின் வசிப்பிடம்
    கால்சுவடு பதித்திட்ட வழித்தடங்களில்
    கற்சுவர்க் கட்டிடங்கள்..

    பேராற்றுச் சுவடு அழித்திட்டுப் பெருஞ்சிலைக்குத் திறப்புவிழா
    சூழலியலை மறுதலிப்புச் செய்திட்ட சுற்றுலாத்தல உருவாக்கம்…

    வழிதனை இழந்து, வலியுடன் வலம் வரும்
    எம் இனத்திற்கு நீர்த் தாகம் மட்டும் அல்லவே..

    பெருங்காட்டில் பிடியுடனே பிரியாமல்
    அலைந்திட்ட தருணங்கள் கனவாகப்
    பெரும் தொழிற்சாலைக்கு இடமானதென்ற
    தவிப்பின் தாகம்…

    கழைமூங்கில்தனைச் சுவைத்திட்ட தினம் இனிக்க
    வாழைதனை நட்டு வைத்தே மின்சார வேலியிட்டு
    எம் குருதி உறிஞ்சிடும் நிலை குறித்த
    தவிப்பின் தாகம்…

    நறுமலர் வாசனையோடு குளிர்காற்றை சுவாசித்த நாசியின்றோ
    புகைக்காற்றை நுகர்தல் எண்ணிய தவிப்பின் தாகம்..

    அறிவியல் கண்டுபிடிப்பு என்ற அறியாமைக்குள் வீழ்ந்திட்ட
    அறிவிலி மனித இனம்…

    தரணியில் பிற உயிர் வாழத் தடைவிதித்திடில்
    இயற்கைப் பேரிடர்முன் தன் இயலாமை உணரும்…

    பூலோக உயிர்சுழற்சி மறந்து பூவுலகம் தனக்கே என்ற
    பேரவா கொண்ட மனிதனின் தாகம் தீரும் நாள் எந்நாளோ…?
    எம் இனத்தின் தாகம் தீரும் நாளும் அந்நாளே!

    *****

    ”காட்டில் வாட்டமின்றித் திரிந்து பழகிய யானையைப் பிடித்துவந்து கோயிலில் அடைத்து இரந்துவாழப் பழக்க வேண்டாமே!” என்று கோரிக்கை விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அது வேண்டாம்…

    காட்டி லெங்கும் அலைந்தேதான்
    கண்ட யிடத்தில் நீரருந்தி,
    வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
    வனத்து யானையைப் பிடித்துவந்து,
    கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
    கோவில் தலங்களில் பழக்கியதை
    ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
    அலைந்தே இரந்திட வேண்டாமே…!

    *****

    வேழத்தை வைத்துச் சமூகத்துக்குத் தேவையான நற்சிந்தனைகளைப் பேசியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    தனியொருவன்!

    இருபெரு கரு உயர்நீல(ள) வரையின்
    இரு கரைமருங்கிடை விரிதிரை புனல் நதியில்
    கருமை இருள் கலைந்த காலை வேளையில்
    கருமை மெய் கலந்த காட்டரசனின் களிப்புறு குளியல்

    இறைவன் அளித்த இயற்கைச் சீதனங்கள்
    இருபெரும் பொன் வெள்ளித் தந்தங்கள்
    இருப்பதனால் வேழம் அவன் இருந்தாலும்
    இறந்தாலும் இருக்கிறது பொன் ஆயிரம்

    தும்பிக்கைதான் அவன் நம்பிக்கை – அதில்
    தூக்கிச் சுமந்தெறிந்த பாரச்சுமைகள் ஏராளம்
    தன்னந்தனி திரிந்தாலும் நன்னம்பிக்கை என்னும்
    தன்னம்பிக்கையால் தாக்கியழித்த தடைகள் எண்ணிலா

    நிலம் அதிரும் அவன் நடந்தால்
    நீர் சிதறும் அவன் அலைந்தால் – நிழல்வனம்
    நடுங்கும் அவன் சினந்தால் – ஆயினும் பாகனின்
    நில் என்ற சொல்லுக்குப் பணிதலில் மிளிரும் அவன் குணம்

    வம்புடை வன்முறை மானுடம் தான்வாழ யானை
    வழித்தடத்தையும் வாழ்விடத்தையும் வழிமறித்தே
    வாரிச்சுருட்டி வாயிலிட்டுவிட்டு அன்புடையவனை
    வம்பன் கொம்பன் என வசைபாடுது

    நாளைய சந்ததியின் நல்வளங்களைச் சூறையாட
    நாடெல்லாம் திரியும் மணல்கொள்ளை மனிதரால்
    நாதியற்றுப் போன நதிகளின் மரணத்திற்கு
    நீதிகேட்டு வந்த நீ தனியொருவன்!

    ”இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் மதிப்புடைய வேழத்தின் வழித்தடங்களையும் வாழ்விடங்களையும் வாரிச்சுருட்டி வாயில் போட்டுக்கொண்ட மானுடம், நாதியற்றுப்போன நதிகளின் மரணத்துக்கு நீதிகேட்டுவந்த தனியொருவனான அவனை வம்பனென்றும் கொம்பனென்றும் வசைபாடுவது முறையோ?” என்று வேழத்தின் அவலநிலையினை ஆழமாய்ப் பேசும் இக்கவிதையை யாத்த திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 196

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 194-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 194க்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

    பிஞ்சுக்குழந்தைகளின் அருகில் கயிற்றால் கட்டுண்டு நின்றிருக்கும் இந்த ஆட்டுக்குட்டி “கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்!” எனும் மாகவியின் வரிகளை மனத்தில் அசைபோட்டபடி உண்ணத் தழைதரும் சிறுவனை ஊன்றி நோக்குகின்றதோ? 

    இனி, கவிமழை பொழியக் காத்திருக்கும் கவிஞர்களை வாழ்த்தி வரவேற்போம்! 

    *****

    ஆட்டுரோமத்தின் வாசனை நாசிக்குள்ளும், இளஞ்சூட்டுப் பாலின் வரிகள் உதட்டோரத்திலுமாய் எங்கோ விட்டுவிட்ட நினைவுகளுக்குள் சொப்பன ரூபமாகிவிட்ட பால்ய காலத்தின் அந்திமப் பொழுதில் தவறவிட்ட ஒரு காட்சியாய் இப்படத்தை நினைவுகூர்கின்றார் திரு. பஃறொடையான். 

    தவறவிட்ட நினைவுகளாய்….
    அந்திமப் பொழுதின்
    பசுமையும், பால்யமும்
    விக்கித்துத் தொண்டைக் குழியை அடைக்கிறது.

    ஓட்டைச் சராய்களுக்கு
    ஊதுகுழலாய் மாறியிருந்த
    சினேகிதனுக்கு இரண்டு குழந்தைகளாம்….

    அன்றைக்குத் தெரியாது போயிருந்தது
    இனி இவை எங்களுக்கில்லை என்று…
    எங்களுக்கே இல்லை என்றபின்
    எங்கிருந்து எம் பிள்ளைகளுக்கு?

    உரித்துத் தொங்கவிடப் பட்டிருக்கும் ஞாயிறுகளில்
    எச்சில் சொட்டச் சப்புக் கொட்டும்
    நாக்குகளுக்குக்
    காட்சிப்பிழையாய் மாறிவிட்டன இவை…

    ஆட்டுரோமத்தின்
    வாசனை நாசிக்குள்ளும்
    இளஞ்சூட்டுப் பாலின் வரிகள்
    உதட்டோரத்திலும்
    பிந்தைய சாமத்தில்
    தேடியலைந்த மண்மிதிச் சுவடுகளும்
    எங்கோ விட்டுவிட்ட
    நினைவுகளுக்குள் சொப்பன ரூபமாகிவிட்டது…

    இப்படியாக இழுத்துவிடும்
    ஒரு பெருமூச்சில் தெரிந்துவிடும்
    பால்யகாலத்து அந்திமப்பொழுதின்
    தவறவிட்ட நினைவுகள்….

    *****

    சேற்று வயலாடிப் புழுதியில் புரண்டு ஆற்றினில் நீந்தி வருடிய தென்றல் காற்றின் இன்பம் பருகியொரு கவளம் சோற்றை உண்டபோது இருந்த நிறைவு எற்றைக்குக் கிட்டுமோ இக்காலக் குழந்தைகட்கு? என்று மனத்திடம் வினவுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    மனதிடம் கேட்டுப்பார்ப்போம்…!!

    ஆர்க்கும் வண்டுகள் அமர்ந்த பூந்தோட்டம்..
    பார்க்கும் இடமெலாம் பச்சை வயல்வெளி..
    ஈர்க்கும் விதமாய் அமைந்த பனைமரங்கள்..
    ஊருக்கே வழிகாட்டும் பெரியோர் சொல்வதை..
    ஏற்கும் சிறாரிவற்றையெலாம் காண்பதினி எக்காலம்..?

    சேற்று வயலாடி புழுதியில் புரண்டு..
    ஆற்றினில் நீந்தி வருடிய தென்றல்..
    காற்றின் இன்பம் பருகியொரு கவளம்..
    சோற்றை உண்டபோது இருந்த நிறைவு..
    எற்றைக்குக் கிட்டுமோ இக்கால குழந்தைகட்கு..?

    எட்டாத உயரமெலாம் தன் ஆற்றலால்..
    எட்டிவிட எண்ணித் தோற்றுப்போய் இன்று..
    கட்டளையிட்டு பெற்றோர் அனைவரும் அவர்தம்..
    பட்டுப்போன்ற பிள்ளைகளை வதைத்து அச்சிகரத்தைத்..
    தொட்டுவிடு என்றிடும் நிலைமாறுவ தெப்போதோ..?

    வயதுக்கேற்ற இயல்போ டிருக்கும் குழந்தைகள்..
    அயர்ச்சியே சற்றும் இல்லாத முகங்கள்..
    இயற்கையோடு இயைந்த ஓர் வாழ்வு..
    உயர்ச்சியென்பது சேர்க்கும் செல்வத்தில் அல்ல..
    முயன்று இவற்றையெல்லாம் உணருங்காலம் எப்போதோ..?

    *****

    அப்பா அயலூர் சென்றதால் ஆடுமேய்க்க வந்த சிறுவன், ஆட்டிடம் கூறும் சுவையான செய்திகளை திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் பாட்டில் காண்கிறோம். 

    என் ஆட்டு நண்பா…

    அப்பா உரம் வாங்க
    அடுத்த ஊருக்குப் போனதால்
    அழைத்து வந்தேன் புல்மேய
    அவரின் ஆணைப்படி
    ஆட்டு நண்பா இன்று
    அனைவருக்கும் விடுமுறை
    அடுத்த தெருவில் எம் நண்பர்
    அனைவரும் விளையாடுகிறார்
    அனுதினமும் பள்ளிக்கூடம்
    அந்திப்பொழுதில் வீட்டுப்பாடம்
    அலுக்காமல் ஓடியாட
    ஆசைதான் எங்களுக்கும்
    அம்மாவுக்குத் தெரியாமல்
    அத்தை வாங்கிக் கொடுத்த
    அண்ணாச்சிக் கடை கோலிக்காய்
    ஆசையாய் அழைக்கிறது
    அத்தான்களுடன் ஒரு
    ஆட்டம் போட்டுவிட்டு
    அழைத்துப் போகிறேன் மேய
    அதுவரை சத்தமில்லாமல்
    அமைதியாய் உண்ணு இதை
    அடங்காத உன் தம்பி கயிற்றை
    அறுத்துவிட்டு ஓடுகிறான்
    அவனையும் பிடித்து வரேன்
    அறிவுரை சொல்லி
    அருகே வைத்துப் பார்த்துக்கொள்.

    இவரே தன்னுடைய மற்றொரு கவிதையில் ”புத்திகெட்ட மாந்தர்
    புறம்வீசும் நெகிழிகளைப் புலன்களாலும் தொடாதே; புதிய மணத்துடன் பசுமைபூசிக் குளித்துள்ள புல்லையும், தழைகளையும் புசித்துவாழக் கற்றுக்கொள்!” என்று ஆட்டிடம் நல்லுரை நவிலக் காண்கின்றோம்.

    புரியாத புரிதல்

    புரியாத விடயங்களை
    புதிய முறை படம் காட்டி
    புவி வாழ் மாந்தர் இயற்கைக்கு
    புரியும் தீமை தனை
    புகலும் கதைகளை
    புத்திசாலி மாணவர் எமக்கு
    புரியச் சொன்னாள் ஆசிரியை
    புரிதல் இல்லோர்க்கு
    புரியாமை நிரந்தரமே என
    புலம்பி சோர்ந்திடாமல்
    பூ உலகந்தனில் நாம்
    புன்னகையோடு வாழ
    புத்தகப் படிப்புடன் யாம்
    புவி வளங்களையும் காப்போம்
    புரிந்து நடக்க மனமின்றி
    புத்திகெட்ட மாந்தர்
    புறம் வீசும் நெகிழிகளை
    புலன்களாலும் தொடாதே
    புதிய மணத்துடன் பசுமை
    பூசிக் குளித்துள்ள இப்
    புல்லையும், தழைகளையும்
    புசித்துவாழக் கற்றுக்கொள்
    புரிந்ததை உம் கூட்டத்திற்கு
    புரியம்படி எடுத்துச் சொல்
    புறப்படுகிறோம் இப்போ
    புரிந்தது போல் நடிக்கும்
    புரியாதவருக்கு புரியவைக்க.

    *****

    ”உண்ணத் தலைகொய்யும் உலகத்தினரிடையே ஆடு
    உண்ணத் தழைகொடுக்கும் சின்னத்தம்பி! உண்மை அன்பில் நீ ஆனாய் தங்கக்கம்பி!” என்று சிறுவனைப் பாராட்டும் திரு. யாழ். பாஸ்கரன், “வெட்டி விடுதலை கொடு! கட்டுண்டு வெட்டுப்படப் போகும் ஆடுகளின் கட்டுத்தளைகள் விடைபெறட்டும்!” என்று அருள்மொழி கூறுகின்றார் சிறுவனிடம்!

    புதிய கல்வி

    பள்ளிக்கூடப் பாட ஏட்டுப் பாரச் சுமைகளை
    தள்ளிவைத்து விட்டுத் துள்ளி விளையாட
    கள்ளிக் காட்டு கரிசல் பூமிப் பக்கம் காலாற வந்த
    பிள்ளை நிலாக்களின் பட்டறிவு உலா

    காற்று நுழையக் கூடக் கணம் தயங்கும்
    வெற்றுக் கட்டிடக் கல்விக்கூடச் சிறைகளில்
    பெற்றுக் கொண்ட பாராயாணப் படிப்புகளை விட்டு
    கற்றுக் கொள்ள களத்துமேடு வந்த பிஞ்சுகளின் திருவிழா

    வீட்டை விட்டு விடுதலையாகிச் சிட்டுக் குருவியாகச் சிறகுவிரி
    நாட்டை நாளை ஆளப்போகும் நீ பக்குவமாய்ப் படி
    காட்டை ஆளும் பாட்டாளிகளின் பாட்டை- இது
    ஏட்டைத் தாண்டிய விலையில்லா விளையாட்டுக் கல்வி

    உணர்வுகளைக் கொன்று உயிர்களை
    உண்ணத் தலைகொய்யும் உலகத்தினரிடை-ஆடு
    உண்ணத் தழை கொடுக்கும் சின்னத்தம்பி
    உண்மை அன்பில் நீ ஆனாய் தங்கக(த)ம்பி

    வெட்டி விடுதலை கொடு கட்டுண்டு
    வெட்டுப்பட போகும் அந்த ஆடுகளின்
    கட்டுத் தளைகள் விடை பெறட்டும்
    விடைகளின் (ஆடுகளின்) அடிமை வாழ்வு முறை

    மரத்துப் போன மானுட மனங்களில்
    மறவாமல் ஊன்றிடுவோம் மலர்ச்சி விதைகளை
    நட்பு மரங்களை நல்லபடி நட்டு வளர்த்திடுவோம்
    நாமும் நாளைய உலகும் நலமுடன் வாழ!

    *****
    ஆடுகட்குத் தேடித் தழைகொய்து தரும் பிள்ளை மனத்தை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிள்ளை மனது…

    ஆடும் பிள்ளைகள் விடுமுறையில்
    ஆட்டம் போடுவர் காட்டினிலே,
    ஆடுகள் வந்தால் மேய்ச்சலுக்கு
    ஆட்டம் பாதியில் நின்றுவிடும்,
    தேடும் இரைக்குத் துணையாகி
    தேடித் தழைகள் கொண்டுவந்தே
    கூடிக் கொடுப்பர் ஆடுகட்கே,
    குழந்தை உளமிது வாழியவே…!

    *****

    ”நிலவை காட்டிச் சோறு ஊட்டிய காலம்போய், கைப்பேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய்மார்கள் நிறைந்துவிட்ட இக்காலத்தில், சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் இம்மழலைகளையும், கட்டுண்ட ஆட்டுக்கு அன்பாய்த் தழை கொடுக்கும் பாசக்கார நண்பனையும் காட்டும் இப்புகைப்படம் தொலைந்துபோன ஓர் அதிசயமே!” என்று வியக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    தொலைந்து போன அதிசயம் 

    நிலவை காட்டிச் சோறு ஊட்டிய காலம்போய்
    கைப்பேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய் 
    வெட்ட வெளியில் விளையாட மறந்து
    கணினியும் கைப்பேசியுமாய் பள்ளி செல்லும் பிள்ளைகள் 
    அடம்பிடிக்கக் கூடாதெனக் குழந்தைகளைக்
    கைப்பேசிக்கும் கணனிக்கும் அடிமை ஆக்கும் அவலம் 
    அத்தனைத் தவறையும் தாம் செய்துவிட்டுப்
    பிள்ளைகளைக் கடிந்து கொள்ளும் பெற்றோர்கள்!
    புகைப்படம் என்றாலும்
    சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் மழலைகள் 
    கட்டுண்ட ஆடாய் இருந்தும்
    அன்பாய் உண்ணத் தழை கொடுக்கும் பாசக்கார நண்பன் 
    தன் பெயரைச் சொல்லி மொட்டை அடித்துக் காத்து குத்தி
    ஆடு அடித்து உற்றார் உறவினருக்கு அன்னதானம்
    என்றெண்ணிக் கலங்கும் மழலை உள்ளம் இங்கே  
    இது தொன்றுதொட்டு வரும் பழக்கம்
    கலங்காதே என்று சமாதானம் சொல்லும் நண்பர் கூட்டம் 
    கற்பனைதான் என்றாலும்
    புகைப்படத்தை கண்டு மகிழும் மனம் சொல்லும் 
    தொலைந்து போன அதிசயம் இது என்று.

    *****

    சொல்லிலும் சுவையிலும் புதுமைகூட்டிச் சோதிமிக்க நவகவிதைகளைப் படைத்தளித்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என்  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எண்ணத் தூரிகையால் தன் வாழ்வில்
    வண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின்
    கைச்சிறகாம் தோள்களில்
    புத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றி
    சுயகற்றலுக்கு விடுப்புக் கொடுத்து
    விடுப்பு நாட்களிலும் வகுப்பு நடத்தும்
    நவீன சமூகத்தின் நாகரிக அவலம்…

    கண்முன் காணும் பச்சிலையைத்
    தானே அருந்தத் தெரிந்திருந்தும்
    கயிற்றால் கட்டுண்டு
    தரும் கரம்பார்த்தே ஏங்கி நிற்கும் வெள்ளாடாக…

    தானாய் வாழப் பிறந்திருந்தும்
    தரமான கல்வி வழங்குவதாய்க்
    கட்புலனாகாச் சங்கிலியால்
    கண்டுண்டே வாழ்கின்ற மழலைகள் காண்!

    பொருள்தேடும் ஓட்டத்தில்
    பெற்றோர் கொடுத்திட்ட தனிமையில்
    “ப்ளூவேல்” விளையாட்டுடன்
    புறவுலகினை மறந்திடும் குழந்தைகளும்…

    ”தொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு…
    தொடுதிரை ஒன்றே துணையிருப்பு” என
    மனச்சிதைவுடன் வளரும் குழந்தைகளும்..

    பலி கொடுக்க வளர்க்கப்படும் வெள்ளாடுகளே….!

    ”எண்ணத் தூரிகையால் தம் வாழ்வில் வண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின் கைச்சிறகாகிய தோள்களில் புத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றும் சமூகத்தாலும், தொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு, தொடுதிரை ஒன்றே துணையிருப்பு எனும் அவலத்துக்கு ஆளாக்கும் பெற்றோராலும் பலி கொடுக்கப்படும் வெள்ளாடுகள் இன்றைய மழலைகள்!” என்று பொட்டில் அடித்ததுபோல் உண்மையைப் போட்டுடைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் முனைவர். ம. தனப்பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share