-மேகலா இராமமூர்த்தி

திரு. வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 194க்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

பிஞ்சுக்குழந்தைகளின் அருகில் கயிற்றால் கட்டுண்டு நின்றிருக்கும் இந்த ஆட்டுக்குட்டி “கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்!” எனும் மாகவியின் வரிகளை மனத்தில் அசைபோட்டபடி உண்ணத் தழைதரும் சிறுவனை ஊன்றி நோக்குகின்றதோ? 

இனி, கவிமழை பொழியக் காத்திருக்கும் கவிஞர்களை வாழ்த்தி வரவேற்போம்! 

*****

ஆட்டுரோமத்தின் வாசனை நாசிக்குள்ளும், இளஞ்சூட்டுப் பாலின் வரிகள் உதட்டோரத்திலுமாய் எங்கோ விட்டுவிட்ட நினைவுகளுக்குள் சொப்பன ரூபமாகிவிட்ட பால்ய காலத்தின் அந்திமப் பொழுதில் தவறவிட்ட ஒரு காட்சியாய் இப்படத்தை நினைவுகூர்கின்றார் திரு. பஃறொடையான். 

தவறவிட்ட நினைவுகளாய்….
அந்திமப் பொழுதின்
பசுமையும், பால்யமும்
விக்கித்துத் தொண்டைக் குழியை அடைக்கிறது.

ஓட்டைச் சராய்களுக்கு
ஊதுகுழலாய் மாறியிருந்த
சினேகிதனுக்கு இரண்டு குழந்தைகளாம்….

அன்றைக்குத் தெரியாது போயிருந்தது
இனி இவை எங்களுக்கில்லை என்று…
எங்களுக்கே இல்லை என்றபின்
எங்கிருந்து எம் பிள்ளைகளுக்கு?

உரித்துத் தொங்கவிடப் பட்டிருக்கும் ஞாயிறுகளில்
எச்சில் சொட்டச் சப்புக் கொட்டும்
நாக்குகளுக்குக்
காட்சிப்பிழையாய் மாறிவிட்டன இவை…

ஆட்டுரோமத்தின்
வாசனை நாசிக்குள்ளும்
இளஞ்சூட்டுப் பாலின் வரிகள்
உதட்டோரத்திலும்
பிந்தைய சாமத்தில்
தேடியலைந்த மண்மிதிச் சுவடுகளும்
எங்கோ விட்டுவிட்ட
நினைவுகளுக்குள் சொப்பன ரூபமாகிவிட்டது…

இப்படியாக இழுத்துவிடும்
ஒரு பெருமூச்சில் தெரிந்துவிடும்
பால்யகாலத்து அந்திமப்பொழுதின்
தவறவிட்ட நினைவுகள்….

*****

சேற்று வயலாடிப் புழுதியில் புரண்டு ஆற்றினில் நீந்தி வருடிய தென்றல் காற்றின் இன்பம் பருகியொரு கவளம் சோற்றை உண்டபோது இருந்த நிறைவு எற்றைக்குக் கிட்டுமோ இக்காலக் குழந்தைகட்கு? என்று மனத்திடம் வினவுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

மனதிடம் கேட்டுப்பார்ப்போம்…!!

ஆர்க்கும் வண்டுகள் அமர்ந்த பூந்தோட்டம்..
பார்க்கும் இடமெலாம் பச்சை வயல்வெளி..
ஈர்க்கும் விதமாய் அமைந்த பனைமரங்கள்..
ஊருக்கே வழிகாட்டும் பெரியோர் சொல்வதை..
ஏற்கும் சிறாரிவற்றையெலாம் காண்பதினி எக்காலம்..?

சேற்று வயலாடி புழுதியில் புரண்டு..
ஆற்றினில் நீந்தி வருடிய தென்றல்..
காற்றின் இன்பம் பருகியொரு கவளம்..
சோற்றை உண்டபோது இருந்த நிறைவு..
எற்றைக்குக் கிட்டுமோ இக்கால குழந்தைகட்கு..?

எட்டாத உயரமெலாம் தன் ஆற்றலால்..
எட்டிவிட எண்ணித் தோற்றுப்போய் இன்று..
கட்டளையிட்டு பெற்றோர் அனைவரும் அவர்தம்..
பட்டுப்போன்ற பிள்ளைகளை வதைத்து அச்சிகரத்தைத்..
தொட்டுவிடு என்றிடும் நிலைமாறுவ தெப்போதோ..?

வயதுக்கேற்ற இயல்போ டிருக்கும் குழந்தைகள்..
அயர்ச்சியே சற்றும் இல்லாத முகங்கள்..
இயற்கையோடு இயைந்த ஓர் வாழ்வு..
உயர்ச்சியென்பது சேர்க்கும் செல்வத்தில் அல்ல..
முயன்று இவற்றையெல்லாம் உணருங்காலம் எப்போதோ..?

*****

அப்பா அயலூர் சென்றதால் ஆடுமேய்க்க வந்த சிறுவன், ஆட்டிடம் கூறும் சுவையான செய்திகளை திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் பாட்டில் காண்கிறோம். 

என் ஆட்டு நண்பா…

அப்பா உரம் வாங்க
அடுத்த ஊருக்குப் போனதால்
அழைத்து வந்தேன் புல்மேய
அவரின் ஆணைப்படி
ஆட்டு நண்பா இன்று
அனைவருக்கும் விடுமுறை
அடுத்த தெருவில் எம் நண்பர்
அனைவரும் விளையாடுகிறார்
அனுதினமும் பள்ளிக்கூடம்
அந்திப்பொழுதில் வீட்டுப்பாடம்
அலுக்காமல் ஓடியாட
ஆசைதான் எங்களுக்கும்
அம்மாவுக்குத் தெரியாமல்
அத்தை வாங்கிக் கொடுத்த
அண்ணாச்சிக் கடை கோலிக்காய்
ஆசையாய் அழைக்கிறது
அத்தான்களுடன் ஒரு
ஆட்டம் போட்டுவிட்டு
அழைத்துப் போகிறேன் மேய
அதுவரை சத்தமில்லாமல்
அமைதியாய் உண்ணு இதை
அடங்காத உன் தம்பி கயிற்றை
அறுத்துவிட்டு ஓடுகிறான்
அவனையும் பிடித்து வரேன்
அறிவுரை சொல்லி
அருகே வைத்துப் பார்த்துக்கொள்.

இவரே தன்னுடைய மற்றொரு கவிதையில் ”புத்திகெட்ட மாந்தர்
புறம்வீசும் நெகிழிகளைப் புலன்களாலும் தொடாதே; புதிய மணத்துடன் பசுமைபூசிக் குளித்துள்ள புல்லையும், தழைகளையும் புசித்துவாழக் கற்றுக்கொள்!” என்று ஆட்டிடம் நல்லுரை நவிலக் காண்கின்றோம்.

புரியாத புரிதல்

புரியாத விடயங்களை
புதிய முறை படம் காட்டி
புவி வாழ் மாந்தர் இயற்கைக்கு
புரியும் தீமை தனை
புகலும் கதைகளை
புத்திசாலி மாணவர் எமக்கு
புரியச் சொன்னாள் ஆசிரியை
புரிதல் இல்லோர்க்கு
புரியாமை நிரந்தரமே என
புலம்பி சோர்ந்திடாமல்
பூ உலகந்தனில் நாம்
புன்னகையோடு வாழ
புத்தகப் படிப்புடன் யாம்
புவி வளங்களையும் காப்போம்
புரிந்து நடக்க மனமின்றி
புத்திகெட்ட மாந்தர்
புறம் வீசும் நெகிழிகளை
புலன்களாலும் தொடாதே
புதிய மணத்துடன் பசுமை
பூசிக் குளித்துள்ள இப்
புல்லையும், தழைகளையும்
புசித்துவாழக் கற்றுக்கொள்
புரிந்ததை உம் கூட்டத்திற்கு
புரியம்படி எடுத்துச் சொல்
புறப்படுகிறோம் இப்போ
புரிந்தது போல் நடிக்கும்
புரியாதவருக்கு புரியவைக்க.

*****

”உண்ணத் தலைகொய்யும் உலகத்தினரிடையே ஆடு
உண்ணத் தழைகொடுக்கும் சின்னத்தம்பி! உண்மை அன்பில் நீ ஆனாய் தங்கக்கம்பி!” என்று சிறுவனைப் பாராட்டும் திரு. யாழ். பாஸ்கரன், “வெட்டி விடுதலை கொடு! கட்டுண்டு வெட்டுப்படப் போகும் ஆடுகளின் கட்டுத்தளைகள் விடைபெறட்டும்!” என்று அருள்மொழி கூறுகின்றார் சிறுவனிடம்!

புதிய கல்வி

பள்ளிக்கூடப் பாட ஏட்டுப் பாரச் சுமைகளை
தள்ளிவைத்து விட்டுத் துள்ளி விளையாட
கள்ளிக் காட்டு கரிசல் பூமிப் பக்கம் காலாற வந்த
பிள்ளை நிலாக்களின் பட்டறிவு உலா

காற்று நுழையக் கூடக் கணம் தயங்கும்
வெற்றுக் கட்டிடக் கல்விக்கூடச் சிறைகளில்
பெற்றுக் கொண்ட பாராயாணப் படிப்புகளை விட்டு
கற்றுக் கொள்ள களத்துமேடு வந்த பிஞ்சுகளின் திருவிழா

வீட்டை விட்டு விடுதலையாகிச் சிட்டுக் குருவியாகச் சிறகுவிரி
நாட்டை நாளை ஆளப்போகும் நீ பக்குவமாய்ப் படி
காட்டை ஆளும் பாட்டாளிகளின் பாட்டை- இது
ஏட்டைத் தாண்டிய விலையில்லா விளையாட்டுக் கல்வி

உணர்வுகளைக் கொன்று உயிர்களை
உண்ணத் தலைகொய்யும் உலகத்தினரிடை-ஆடு
உண்ணத் தழை கொடுக்கும் சின்னத்தம்பி
உண்மை அன்பில் நீ ஆனாய் தங்கக(த)ம்பி

வெட்டி விடுதலை கொடு கட்டுண்டு
வெட்டுப்பட போகும் அந்த ஆடுகளின்
கட்டுத் தளைகள் விடை பெறட்டும்
விடைகளின் (ஆடுகளின்) அடிமை வாழ்வு முறை

மரத்துப் போன மானுட மனங்களில்
மறவாமல் ஊன்றிடுவோம் மலர்ச்சி விதைகளை
நட்பு மரங்களை நல்லபடி நட்டு வளர்த்திடுவோம்
நாமும் நாளைய உலகும் நலமுடன் வாழ!

*****
ஆடுகட்குத் தேடித் தழைகொய்து தரும் பிள்ளை மனத்தை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பிள்ளை மனது…

ஆடும் பிள்ளைகள் விடுமுறையில்
ஆட்டம் போடுவர் காட்டினிலே,
ஆடுகள் வந்தால் மேய்ச்சலுக்கு
ஆட்டம் பாதியில் நின்றுவிடும்,
தேடும் இரைக்குத் துணையாகி
தேடித் தழைகள் கொண்டுவந்தே
கூடிக் கொடுப்பர் ஆடுகட்கே,
குழந்தை உளமிது வாழியவே…!

*****

”நிலவை காட்டிச் சோறு ஊட்டிய காலம்போய், கைப்பேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய்மார்கள் நிறைந்துவிட்ட இக்காலத்தில், சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் இம்மழலைகளையும், கட்டுண்ட ஆட்டுக்கு அன்பாய்த் தழை கொடுக்கும் பாசக்கார நண்பனையும் காட்டும் இப்புகைப்படம் தொலைந்துபோன ஓர் அதிசயமே!” என்று வியக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

தொலைந்து போன அதிசயம் 

நிலவை காட்டிச் சோறு ஊட்டிய காலம்போய்
கைப்பேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய் 
வெட்ட வெளியில் விளையாட மறந்து
கணினியும் கைப்பேசியுமாய் பள்ளி செல்லும் பிள்ளைகள் 
அடம்பிடிக்கக் கூடாதெனக் குழந்தைகளைக்
கைப்பேசிக்கும் கணனிக்கும் அடிமை ஆக்கும் அவலம் 
அத்தனைத் தவறையும் தாம் செய்துவிட்டுப்
பிள்ளைகளைக் கடிந்து கொள்ளும் பெற்றோர்கள்!
புகைப்படம் என்றாலும்
சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் மழலைகள் 
கட்டுண்ட ஆடாய் இருந்தும்
அன்பாய் உண்ணத் தழை கொடுக்கும் பாசக்கார நண்பன் 
தன் பெயரைச் சொல்லி மொட்டை அடித்துக் காத்து குத்தி
ஆடு அடித்து உற்றார் உறவினருக்கு அன்னதானம்
என்றெண்ணிக் கலங்கும் மழலை உள்ளம் இங்கே  
இது தொன்றுதொட்டு வரும் பழக்கம்
கலங்காதே என்று சமாதானம் சொல்லும் நண்பர் கூட்டம் 
கற்பனைதான் என்றாலும்
புகைப்படத்தை கண்டு மகிழும் மனம் சொல்லும் 
தொலைந்து போன அதிசயம் இது என்று.

*****

சொல்லிலும் சுவையிலும் புதுமைகூட்டிச் சோதிமிக்க நவகவிதைகளைப் படைத்தளித்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என்  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

எண்ணத் தூரிகையால் தன் வாழ்வில்
வண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின்
கைச்சிறகாம் தோள்களில்
புத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றி
சுயகற்றலுக்கு விடுப்புக் கொடுத்து
விடுப்பு நாட்களிலும் வகுப்பு நடத்தும்
நவீன சமூகத்தின் நாகரிக அவலம்…

கண்முன் காணும் பச்சிலையைத்
தானே அருந்தத் தெரிந்திருந்தும்
கயிற்றால் கட்டுண்டு
தரும் கரம்பார்த்தே ஏங்கி நிற்கும் வெள்ளாடாக…

தானாய் வாழப் பிறந்திருந்தும்
தரமான கல்வி வழங்குவதாய்க்
கட்புலனாகாச் சங்கிலியால்
கண்டுண்டே வாழ்கின்ற மழலைகள் காண்!

பொருள்தேடும் ஓட்டத்தில்
பெற்றோர் கொடுத்திட்ட தனிமையில்
“ப்ளூவேல்” விளையாட்டுடன்
புறவுலகினை மறந்திடும் குழந்தைகளும்…

”தொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு…
தொடுதிரை ஒன்றே துணையிருப்பு” என
மனச்சிதைவுடன் வளரும் குழந்தைகளும்..

பலி கொடுக்க வளர்க்கப்படும் வெள்ளாடுகளே….!

”எண்ணத் தூரிகையால் தம் வாழ்வில் வண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின் கைச்சிறகாகிய தோள்களில் புத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றும் சமூகத்தாலும், தொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு, தொடுதிரை ஒன்றே துணையிருப்பு எனும் அவலத்துக்கு ஆளாக்கும் பெற்றோராலும் பலி கொடுக்கப்படும் வெள்ளாடுகள் இன்றைய மழலைகள்!” என்று பொட்டில் அடித்ததுபோல் உண்மையைப் போட்டுடைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் முனைவர். ம. தனப்பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 194-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *