Category: தலையங்கம்

தலையங்கம்

  • வங்கிகளின் அறிவிப்பும், மத்திய வங்கியின் அமைதியும், நிதி அமைச்சரின் மௌனமும்

    பவள சங்கரி

    சமீபத்தில் ஸ்டேட் வங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாதத்திற்கு 3 முறை மட்டும் பணம் எடுக்கலாம் அல்லது கட்டலாம் என்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாகவே ஐசிஐசிஐ வங்கியும் , ஹெடிஎஃப்சி வங்கியும் இத்திட்டத்தை அறிவித்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாதத்திற்கு 3 முறை மட்டும் பணப்பரிவர்த்தனைகள் செய்வதாக இருந்தால் வங்கியின் தேவையே இல்லாமல், அஞ்சலகத்திலேயே இந்தப் பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாமே. இதன் பயனாக தேவி வங்கி போன்ற தனியார் அமைப்புகளை ஊக்குவிக்கும் நிலையும் உருவாகலாம். இதுமட்டுமன்றி சிறு சேமிப்பு கணக்குகளுக்கு ₹5000, ₹3000 என்றும் நடப்பு கணக்குகளுக்கு, குறைந்தபட்ச வைப்புத் தொகையாக இருக்கவேண்டிய,₹10,000, ₹25,000, 1 இலட்சம் என்பதும் குறையும் பட்சத்தில் அந்தத் தொகைக்குத் தகுந்தாற்போல், அந்தந்த வங்கிகள் கட்டணங்களை நிர்ணயித்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து அந்தத் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை என்று வைத்துக்கொண்டால், இதில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 4/5 நபர்கள் என்ற கணக்கில் மொத்தமாக 26 கோடி குடும்பங்கள் உள்ளன. இந்த 26 கோடி குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கு 3 சிறு சேமிப்பு கணக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 78 கோடி சிறு சேமிப்பு வங்கிக் கணக்குகள் இருக்கும். இதில் ஒரு வங்கிக் கணக்கிற்கு நிரந்தரத் தொகையாக ₹ 3000 என்று வைத்துக்கொண்டால், அதன்படி மொத்த நிரந்தரத் தொகையாக 2,34,000 கோடி உரூபாய்கள் இருக்கும். நடப்புக் கணக்கை எடுத்துக்கொண்டால், 130 கோடி மக்கள் தொகையில் வியாபாரத்திற்காக வங்கிக் கணக்குகள் வைத்திருப்போர் சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவர் கணக்கில் சராசரியாக ₹ 20,000 உள்ளதாக வைத்துக்கொண்டால் இதன் மொத்தத் தொகை 2,00000 கோடி உரூபாய் ஆகிறது. ஆக மொத்தம் 4,34,000 கோடி உரூபாய்கள் வங்கியில் நிரந்தரமாக வைக்கப்படுகின்றன. மத்திய வங்கியால் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள மொத்தத் தொகையின் மதிப்பு 12,00000 கோடி உரூபாய். இதில் மூன்றில் ஒரு பங்கு தொகைக்குச் சற்று அதிகமானத் தொகையே நிரந்தர வைப்புத் தொகையாக வைக்க வேண்டுமென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியமாகும் என்பதே மக்களின் ஐயமாக உள்ளது. மேலும் இந்தத் தொகைக்கு எந்த வங்கிகளும் வட்டி அளிப்பதில்லை. ஆனால் அதே சமயம் இந்த வங்கிகள் ஒரு வியாபாரிக்கு ஆயிரம் உரூபாய் கடன் கொடுத்தால்கூட அதற்குரிய வட்டியை வசூலித்து விடுகின்றனர். இந்த 4,34,000 கோடி உரூபாயை தவிர்த்து வங்கிகளில் தினசரி பணப்பரிமாற்றங்கள் இல்லாமல் கணக்கில் இருக்கும் தொகைகள் 2,00000 கோடி இருக்கும். ஆக, புழக்கத்தில் விடப்பட்டதில் சரி பாதி தொகைகள் வங்கிகளிலேயே முடங்கி விடுகின்றன.

    ஆக மொத்தம் இதனால் வட்டி வருவாயாக சுமார் 4,000 கோடி உரூபாய்களும், கட்டணங்கள் மூலமாக பல ஆயிரம் கோடி உரூபாய்களும் வங்கிகளுக்கு இலாபமாக கிடைக்கின்றன என்பதைத் தவிர இதனால் பொது மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. காரணமேயில்லாமல் சிறு சேமிப்புக் கணக்கில் ₹11.50, நடப்புக்கணக்கில் ₹15.50, வங்கிகளால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது சராசரியாக சேமிப்புக் கணக்கில் ₹800 கோடியும், நடப்புக்கணக்கில் ₹ 200 கோடியும், ஆக மொத்தம் 1000 கோடி உரூபாய் வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன என்பதே நிதர்சனம்.

    பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய நிதியமைச்சகமும், மத்திய வங்கியும் இது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் அமைதி காப்பது ஏன்? இதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நிதியமைச்சகமும், மத்திய வங்கியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது. உதாரணமாக ஒரு வியாபாரி வசூலுக்காகச் செல்கிறார். பணம் கொடுப்பவர் பணமாகக் கொடுத்தால் வங்கியில் கட்ட முடியாது. காசோலை கொடுத்து விடுகிறார். அதை வாங்கி வங்கியில் நாம் டெபாசிட் செய்தால் அது நமது கணக்கில் மூன்றாவது நாள்தான் வரவு வைக்கப்படும். 3வது நாள் அந்த காசோலை திரும்பி வந்துவிட்டால் அந்தப் பணத்தை எப்படி வசூல் செய்வது. அந்த ஊரை விட்டு அடுத்த ஊருக்கு வசூலுக்குச் செல்லும் நேரத்தில் இந்த காசோலை திரும்பிவிடுகிறது என்றால் அந்த ஊரில் உள்ள வங்கி திரும்பி வந்த காசோலையை நமது வங்கிக் கணக்கு உள்ள இடத்திற்கு (ஹோம் பிராஞ்ச்) அனுப்பிவிடும். ஆக 10 நாட்களுக்குப் பிறகுதான் காசோலையின் கதி என்னவென்று நமக்குத் தெரியவரும். திரும்ப சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் தொகையைக் கேட்டால் வங்கி நடைமுறையைக் கூறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிடுவார்.

    இப்படி பிரச்சனைகளை உருவாக்கும் வங்கிகளால் நேர்மையாக வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு சிரமம் மட்டுமே மிஞ்சுகிறது.

    ** மத்திய காசோலை பரிசீலனை செய்வதற்குப் (centralised clearing system) பதிலாக அந்தந்த ஊர்களிலேயே (local clearing system) காசோலைகளைப் பரிசீலனை செய்து அன்றைய தினம் வங்கி முடியும் நேரமான 4 மணிக்குள் வரவு வைத்துவிடலாம். இதனால் வியாபாரிகளின் பலவிதமான தொல்லைகளுக்கு தீர்வு ஏற்படலாம்.

    ** வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு வைக்கலாம். ஆனால் பணத்தைச் செலுத்துவதற்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது அவசியம்.

    மக்கள் மத்திய அரசின் மீதும் பொருளாதாரக் கொள்கைகள் மீதும் அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்து உ.பியில் 3/2 பங்கு வெற்றியைத் தந்துள்ளனர். மத்திய அரசின் இந்த வெற்றி பங்குச் சந்தைகளில் பிரதிபலித்துள்ளது. என்.எஸ்.சி, பி.எஸ்.சி ஆகியவற்றில் சென்செக்ஸ், நிஃப்டி, உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளன. உரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் குறைய ஆரம்பித்துள்ளன. மக்களின் ஆதரவு கிடைத்துள்ள இந்த நேரத்தில் நல்ல திட்டங்கள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் மிகப்பெரியத் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

    Share
  • மதிப்புக்கூட்டு வரி உயர்வு..

    பவள சங்கரி

    தலையங்கம்

    நேற்று அதிரடியாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மதிப்புக் கூட்டு வரியின் மூலமாக விலையேற்றத்தை அதிகரித்துள்ளனர். அபரிமிதமான இந்த விலையேற்றத்தின் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதன் மூலமாக தமிழ்நாட்டில் எத்தனை கோடி உரூபாய் அரசு கருவூலத்திற்கு வந்துள்ளது. இது இந்தியச் சுதந்திர நாட்டின் ஒரு பகுதியா அல்லது அந்நிய ஆட்சியே மீண்டும் வந்துவிட்டதா? எல்லையில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதா அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளதா. இந்த வரி உயர்வின் மூலம் நிலைமை சீராகலாம் என்பதற்கு அந்நியர் ஆட்சி சுதந்திரப் போராட்டத்தின் போது உப்புக்கு வரி விதித்ததுபோல, அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோலுக்கும், டீசலுக்கும் வரி விதித்துள்ளனர். தேவையற்ற இலவசங்களை அறிவித்துவிட்டு அதற்குத் தேவையான பொருட்களின் மீது வரி விதிப்பது என்ன நியாயம். ஒரு சதவிகிதம் பேருக்கு அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு இலவசங்களை அளிப்பதற்காக 99% மக்களுக்கு வரி விதித்து வேதனை அளிக்கலாமா? நேற்று பெசண்ட் நகர் கடற்கரையில் பெண்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் கூடி, ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று முழங்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அனுமதியின்றி அங்கு கூடியுள்ளது சட்டப்படி தவறு என்றும், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று கோருவது அவர்களுடைய தரப்பில் அது தவறானது என்பது போல கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று முழங்கியவாறு சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடியவாறு ஊர்வலமாகச் சென்றுள்ளனர். இனி இதுபோல் தேவையற்ற வரி உயர்வுகளை அனைத்துப் பொது மக்களும் ஒன்றுகூடி ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

    இப்பொழுது தமிழகத்தை ஆளும் கட்சி சந்தேகத்திற்குரிய நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை ஆட்சேபித்து சென்னை உயர்நீதி மன்றம், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடமும் இந்தப் பிரச்சனைகளை கொண்டு சென்றுள்ள இந்த நேரத்தில் இந்த அபரிமிதமான வரிவிதிப்பில் அனைத்துத் துறையினர், மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதே உண்மை நிலை.

    சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை அதிகரித்திருப்பது சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற ஐயமும் மக்கள் மத்தியில் உள்ளது.

    Share
  • மாசுக்கட்டுப்பாடு ஊழல்

    பவள சங்கரி

    தலையங்கம்

    நிலக்கரி ஊழல், கருப்புப்பண ஊழல் என்பதுபோல மாசுக்கட்டுப்பாடு ஊழல் மிக வேகமாகப் பரவி வரக்கூடிய ஒன்றாக உள்ளது. வாட்டர் கேட் ஊழல் போல இதுவும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல். “எமிசன் தரக்கட்டுப்பாடுகள்” இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களால் காற்றில் பறக்க விடப்படுகின்றன. “வோல்ஸ்வேகன்”செருமனியின் மிக பிரசித்தி பெற்ற கார் கம்பெனி. இந்தக் கம்பெனியின் டீசல் கார்கள் தரக்கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாகவும், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தரக்கட்டுப்பாடு வல்லுநர் குழுக்களால் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டில் இதற்காக ஆய்வாளர்களை நியமித்து மாதத்திற்கு 20,000 கார்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் சரி செய்யப்படுகின்றன. இந்த தொழிலகத்தின் தலைமை நிர்வாகி இதற்கு பல நூறு கோடி டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தக் கார் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வோல்ஸ்வேகன் மட்டுமல்லாமல் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் இந்த மாசுக்கட்டுப்பாட்டு தரத்தை காற்றில் பறக்கவிட்டுத்தான் மகிழுந்துகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றனர். நமது மத்திய மாநில அரசுகள் இதற்கு எந்த விதமான தடைகளும் செய்யாமலும், தரத்தையும் ஆய்வு செய்யாமலும் இருக்கின்றனர். இந்தியாவில் தயாரிக்கக்கூடிய அசோக் லேலாண்ட், டாட்டா, மகேந்திரா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இதே நிலைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் அனைத்து வாகனங்களும் மாசு தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? இது ஒருபுறமிருக்க சில ஆண்டுகளின் ஓட்டத்திலேயே இந்த வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டிற்கு ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் ஒரு சதவிகிதம் கூட இருப்பதில்லை என்கின்றனர் வல்லுநர்கள். பெட்ரோல், இயற்கை எரிவாய்வு, திரவ எரிவாய்வு வாகனங்கள் இதற்கு விதிவிலக்கு.

    இந்த எமிசன் ஊழலால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி உரூபாய் இலாபம் என்றாலும் நமது இயற்கை சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு நுரையீரல் நோய்கள் மிகப்பெருமளவில் பரவி வருவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு தனி மனிதன் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைவிட ஒரு காரிலிருந்து வெளிவரக்கூடிய புகை என்பது 100 பேர் ஒரே சமயத்தில் சிகரெட் புகை விடுவதற்கு சமமாகும். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா அல்லது முன்பே விழித்துக்கொள்வது அவசியமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத் தருணம் இது. அரசு மற்றும் சமூக அமைப்புகள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். மேற்கத்திய நாடுகள் 2008ஆம் ஆண்டில் விழித்துக்கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். ஆனால் வேலை வாய்ப்பு என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற ஊழல்களைக் கண்டுபிடித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    பொதுவாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும்போது இந்தியாவிற்கு ஒரு தரத்தையும், அந்நிய நாடுகளுக்கு ஒரு தரத்தையும் கொண்டுள்ளதையும் காணமுடிகிறது. அவைகள் நமக்கு வழங்கக்கூடிய குளிர் பானங்களிலிருந்து உடல் நலத்திற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் வரை தரத்தில் பல வேறுபாடுகளைக் கடைபிடிப்பதையும் அறியமுடிகிறது. வெளிநாட்டுக் கார் என்று ஆசைப்பட்டு பெருங்கனவுகளுடன் பல இலட்சங்கள், கோடிகள் என்று கொடுத்து வாங்கக்கூடிய கார்களுக்கும் இதே நிலைதான். மாருதி நிறுவனம் தயாரிக்கக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற ‘டிசையர்’ என்ற கார் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு ஒரு விதமாகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் வேறு விதமாகவும், தரத்தில் வித்தியாசப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிற்கு அளிக்கும் டிசையர் கார்களைவிட ஏற்றுமதி செய்யப்படும் டிசையர் கார்கள் எடையிலேயே ஒரு டன் வித்தியாசப்படுத்தப்படுகிறது என்கிறார்கள். அனைத்துக் கார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படக்கூடிய இந்தக் கார்கள் உலகத் தரக்கட்டுப்பாட்டில் ‘crushing test’ (வாகனங்களை மோதி அதன் தரத்தை பரிசோதிக்கும் முறை) இதில் 60 கி.மீ. வேகத்தில் காரை இயக்கி கார்களை மோதவிட்டு தரத்தை பரிசோதிக்கும் முறையில், அந்நிய நாடுகளுக்காக தயாரிக்கும் கார்கள் 5/4 புள்ளிகள் தேர்வாகின்றன. ஆனால் இந்தியர்களுக்காகத் தயாரிக்கப்படும் கார்கள் ஒரு புள்ளிக்கும் மேல் தேர்வாவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தி.

    இந்தியாவில் கார்களை சந்தைப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழலை ஆய்வு செய்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். சுற்றுச்சூழல், காற்று மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் சீனாவைவிட நம் இந்தியாவில் மிக அதிகம் என்பதும் வேதனைக்குரிய செய்தி.

    Share
  • தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்?

    பவள சங்கரி

    தலையங்கம்

    மறைந்த நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் குன்றி இருந்த அந்த 75 நாட்கள் உண்மையாக என்ன நடந்தது என்பதை உடனிருந்து செவிலித் தாயாக கவனித்துக்கொண்டதாக பெருமைப்பட்டுக்கொண்டு அதற்குரிய சன்மானமாக 8 கோடி தமிழர்களைக் கட்டியாளும் தலைமைப் பதவியை குறி வைக்கும் சசிகலா இன்று வரை அந்த மக்களை நேரில் சந்தித்து அது பற்றி பேசத் தயங்குவது ஏன்? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கூடவே பல ஆண்டுகளாக இருந்தவர் அவர் உடல் நிலை பற்றியும் நன்கு அறிந்தவர் உண்மை நிலவரத்தை யதார்த்தமாக பேச முடியவில்லை எனும்போதே அதில் ஏதோ பிரச்சனை என்பதாகத்தானே அர்த்தமாகிறது. எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன? அதுவும் இந்த அச்சத்திற்குக் காரணமான கூட்டமே மீண்டும் ஆட்சிக்கு வருவதென்றால் மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே இந்த நாடு எப்படி விளங்கும்? மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே, அப்படியானால் பொது மக்களைப் பற்றி கவலைப்படுபவர் எவரும் இல்லை என்பதே இன்றைய நிலவரம். அவசர அவசரமாக சட்ட மன்ற உறுப்பினர்களை மட்டும் விலைக்கு வாங்கி தமது திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் சசிகலா தன் மீது தவறு இல்லை என்கிற பட்சத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து ஏன் பேசக்கூடாது? பதவிக்கு வந்த பின்பு மக்களுக்கு இலவசங்கள் என்ற பிச்சையைப் போட்டு சமாதானம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையா? தமிழக மக்களை இத்தனை கேவலமாக எடைபோடும் அளவிற்கு மட்டம் தட்டி விட்டார்கள் என்றுதானே இதன் அர்த்தம். 200, 500, 1000 என்று வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட மக்களே இப்போதாவது திருந்துங்கள். பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

    இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த கட்டமாக மக்களின் வாழ்வாதாரங்களே பறி போய்க்கொண்டிருப்பதுகூட எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தண்ணீர் பஞ்சம் இன்று எவ்வளவு பெரிய வாழ்வாதாரப் பிரச்சனை என்பது கூட கேட்பார் இல்லை. விவசாயம் அழிந்து கொண்டிருப்பதுபோக, மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கே தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அறிவார்களா? நிலத்தடி நீரும் சுத்தமாக வற்றிய நிலையில் காவேரி தண்ணீரும் வருவதில்லை, 3000 லிட்டர் பிடிக்கும் ஒரு லாரி தண்ணீர் விலை ரூ 800/ கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? மக்களின் குறைகள் என்ன, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாத ஒருவரை மக்கள் எப்படி முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியும்?

    தற்போதைய சூழலில் குதிரை பேரங்களை மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் ஊக்குவிக்கப் போகிறார்களா? எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவர்வசம் தமிழகத்தைக் காவு கொடுக்கப் போகிறார்களா? இந்தச் சூழ்நிலையில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் மறு தேர்தலை ஏன் அறிவிக்கக்கூடாது? எந்தவொரு பொது மக்களும் சசிகலா அவர்களை முதல்வராக ஆக்குவதற்கு வாக்களிக்கவில்லை எனும்போது சசிகலாவை முதல்வராக எப்படி அங்கீகரிக்க முடியும்? சனநாயகத்திற்கு புறம்பான இதுபோன்ற செயல்களை மக்கள் ஒரு நாளும் ஆதரிக்கமாட்டார்கள் என்று தெரிந்தே இது போன்ற செயல் திட்டங்களை முன்னெடுப்பது நாட்டிற்கு நன்மை பயப்பது அல்ல.

    Share
  • விவசாயிகளும் – விளைபொருட்களும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    விவசாய விளைபொருட்கள் விவசாயிகளுக்கும் பொது மக்களும் உரிய விலை கிடைக்கிறதா? உதாரணத்திற்கு முட்டைகோஸ் மேட்டுப்பாளையம் சந்தையில் கிலோ  ₹ 4 க்கு விற்பனை ஆகிறது. இதுவே பொது மக்களைச் சென்றடையும்போது கிலோ ஒன்றிற்கு  ₹ 20 – 25 ஆகிறது. இதுவே சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்லும்போது  ₹ 30 ஐத் தொட்டுவிடுகிறது. விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைப்பதில்லை. பொது மக்களுக்கும் நியாய விலையில் கிடைப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை. இதற்கு அரசு குளிர்ப்பதனப்படுத்தும் கிடங்குகளை விவசாயிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வசதியும், விவசாயிகள் / பொதுமக்கள் நேரடி விற்பனை சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம். தற்போதுள்ள உழவர் சந்தைகளை உயர் தொழில்நுட்ப வசதிகளோடு விரிவுபடுத்தினாலே இந்தக் குறைகள் பெருமளவில் தீர்ந்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வளமான வாழ்வு நிச்சயம்.

    Share
  • நிதிநிலை அறிக்கையின் தேவையும் எதிர்பார்ப்புகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவர் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொது நிதிநிலை அறிக்கையாக இரயில்வேயின் நிதிநிலை அறிக்கையும் இணைத்து ஒரே நிதிநிலை அறிக்கையாக வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் பொது நிதித் தொகுப்பிலிருந்து அல்லது இரயிவேயின் வருவாயிலிருந்தே அதன் செலவினங்கள் எதிர்கொள்ளப்படுமா என்று தெளிவுபடுத்தப்படவில்லை. இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கதே. பல ஆயிரம் கோடி பணத்தை செலவழித்து ஒரு புல்லட் இரயில் விடுவதைவிட, பல பெரு நகரங்களை இணைக்கக்கூடிய இரயில்களின் வேகத்தை அதாவது மணிக்கு 200 கி.மீ. என அதிகரித்து அதற்குரிய கட்டுமானப் பணிகளையும் பொறியியல் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதுமே சிறப்பானதாகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடாகவும் இருக்கும். ஒரு சிலர் மட்டுமே இந்தப்பலனை அனுபவிப்பதைவிட பல இலட்சம் மக்கள் இதனால் பயனுறுவார்கள் . புல்லட் இரயில் என்ற பெருமையை மட்டுமே கணக்கில்கொள்வதை விடுத்து பல மக்களுடைய பல இலட்சம் செயல்திறன் மிக்க உழைக்கும் பொன்னான நேரம் பாதுகாக்கப்படுவதையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இதனால் விரயமாகக்கூடிய பல ஆயிரம் கோடி உரூபாய்கள் சேமிக்கப்பட்டு நாட்டினுடைய பொருளாதாரமும் உயர வழிவகுக்கும்.

    தனி நபர் வருமான வரியின் விலக்கு குறைந்தபட்சம் 4 இலட்சமாகவும், அதிகபட்சமாக 5 இலட்சமாகவும் அளித்தும் 5 இலட்சத்திற்கு மேலும் 10 இலட்சம் வரையிலும் வருமானம் உள்ள பிரிவினருக்கு 10% வரியும் 10 இலட்சத்திற்கு மேல் 30 இலட்சம் உரூபாய் வரையில் உள்ள பிரிவினருக்கு 20% வரிவிதிப்பும் 30 இலட்சத்திற்கு மேல் உள்ள வருவானம் உள்ள பிரிவினருக்கு 30% வரி விதிக்கும்பொழுது வரி வருவாய் குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். நியாயமான வரிவிதிப்பை மக்கள் ஏற்கக்கூடிய மனோபாவத்தில் இருப்பதால் இது சாத்தியமே.
    சேவை வரியும் அதிகரிக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்த வரி அதிகரிப்பு ஜி.எஸ்.டி யில் பாதிப்பு எவ்வாறு இருக்கும் அல்லது புதிய ஜி.எஸ்.டி யை ஒட்டியே இந்த புதிய சேவை வரியின் உயர்வு இருக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    பாதுகாப்புத் துறைக்கு ஆண்டுக்கு ஆண்டு தொகை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பதைத் தவிர்த்து உள்நாட்டுக் கட்டமைப்புகளிலும், கல்வி, விவசாயம், மின்சாரம் போன்ற துறைகளில் அதிக முதலீடுகளில் செய்தால் நாட்டின் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். குறைந்தபட்சமாக அனைத்து பாடத்திட்டங்களிலும் 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக்கல்வியும், மின்சாரமே இல்லாத கிராமங்களே இல்லை என்ற வகையில் மின்சாரத் துறையும், விவசாயத்திற்கு உயிர்நாடியாக உள்ள பயனளிக்கக்கூடிய புதுத்திட்டங்களும், புது ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இவையனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் ஆவன செய்வார்களென மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

    Share
  • மக்களுக்காக முதல்வர்களா அல்லது முதல்வர்களின் நலனுக்காக மக்களா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    சல்லிக்கட்டிற்காக ஆறுநாட்கள் அறவழிப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த இளைஞர்கள்/ மாணவர்கள் மகிழ்ச்சியடையும்படி, தலைநகர் சென்று பிரதம மந்திரியைச் சந்தித்து சல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் வெளியிடுவதற்கு ஒப்புதல் பெற்று வந்ததை நேரடியாக அந்த இளைஞர்களிடம் சென்று தானும் தமிழன் தான் என்ற உணர்வோடு, இத்தகவலை வெளியிட்டு, இது நிரந்த சட்டமாகும் வகையில் சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி இதற்கு வழிவகை செய்யப்படும் என்று நம் தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பேசியிருந்தாலே போதும். மாணவர்கள் முதலமைச்சரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக கலைந்து சென்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

    சில தலைவர்கள் காலங்கள் கடந்தும் கட்சி சார்பற்றும் மக்கள் மனத்தில் நிறைந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அந்தத் தலைவர்கள் மக்கள் மீது கொண்டிருந்த உண்மையான அக்கறையும், அவர்களின் நல்வாழ்விற்காக தன்னலம் கருதா உழைப்பையும், நேரத்தையும் மனமுவந்து அளித்ததுதான்.

    1980 களில் திரு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டம். ஈரோட்டிற்கு தங்கள் கட்சிக் கூட்டத்திற்காக வந்திருந்த சமயம். பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலையில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு செய்திருந்தார்கள். 8.33% மீதூதியம் (போனஸ்) வாங்க மறுத்து 45% மீதூதியமும், சம்பள உயர்வும் வேண்டி வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள். பேச்சு வார்த்தைகள் இழுபறியாக இருந்து கொண்டிருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் வந்திருப்பதை அறிந்து தொழிற்சங்கத் தலைவர்கள் அவரைச் சந்தித்து முறையிட விரும்பி அவர் தங்கியிருந்த சேசசாயி விருந்தினர் மாளிகைக்குச் சென்று அவருடைய உதவியாளரிடம் அனுமதி கேட்கிறார்கள். அப்பொழுதுதான் வந்து சேர்ந்தவர், தேநீர் பருகிவிட்டு கூட்டத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார். உதவியாளர் வந்து சொன்னவுடன் சிறிதும் தயங்காமல் தொழிற்சங்கத் தலைவரை உள்ளே வரச்சொல்லிவிட்டார். கட்சிக்கூட்டம் சற்று தாமதம் ஆனாலும் பரவாயில்லை, தொழிலாளர் பிரச்சனையை தீர்ப்பது முக்கியம் என்றாராம். தொழிற்சங்கத் தலைவர்களிடம் பிரச்சனைகளை பொறுமையாகக் கேட்டவர், என்மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குச் செல்லுங்கள், உங்களுக்கு வேண்டியதை நான் உடனே செய்து தருகிறேன் என்றாராம். அவர் பேச்சில் இருந்த நம்பிக்கையில், தொழிற்சங்கத் தலைவர்களும், ஆங்காங்கு வெளியூரில் இருக்கும் ஊழியர்கள் திரும்பி வந்து சேரும் ஒரு நாள் அவகாசத்தில் அனைவரும் பணிக்குத் திரும்புவதாக உறுதியளித்துச் சென்றிருக்கிறார்கள். முதல்வரும் தாம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் விதமாக உடனடியாக சேசசாயி ஆலை நிர்வாக இயக்குநரை வரவழைத்து அவரிடம் பேசி, அரசின் உதவியும் பெறலாம் என்று கூறி அவரைச் சம்மதிக்க வைத்து தொழிலாளர்களின் குறையை உடனடியாகத் தீர்த்து வைத்தாராம். தொழிலாளர்கள் கேட்டபடி 45% மீதூதியமும், சம்பள உயர்வும் கிடைத்த மகிழ்ச்சியில் முதல்வரைக் கொண்டாடாமல் இருப்பார்களா என்ன?

    இதேபோன்று இன்னுமொரு சம்பவமும் நினைவு கூரலாம். ஒரு முறை விவசாயிகளின் போராட்டத்தின்போது விவசாய சங்கத் தலைவர் திரு நாராயணசாமி நாயுடு அவர்களை அவர் இல்லத்திற்கேச் சென்று அவரைச் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளைக்கேட்டு அவர்தம் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்து, பிரச்சனைகளை தீர்த்தும் வைத்துள்ளார்.

    மக்களுக்காக முதல்வரா அல்லது முதல்வரின் நலனுக்காக மக்களா என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் நடந்துகொள்ளும் தலைவர்களை மக்கள் ஏன் மறக்கப் போகிறார்கள்?

    Share
  • தற்போதைய நிலை..

    பவள சங்கரி

    நான் தற்போது, தீவிரமாகச் செயல்படும் இளைஞர்களில் ஒருவரான பார்த்திபன் அவர்களைத் தொடர்புகொண்டு இளைஞர்களின் தற்போதைய நிலைப்பாட்டைப் பற்றி கேட்டபோது அவர் அளித்த தகவல்களை வார்த்தை மாறாமல் அப்படியே வழங்கியுள்ளேன்…

    1. காட்சி விலங்குகள் பட்டியலிலிருந்து காளை மாட்டை நிரந்தரமாக நீக்கவேண்டும்.

    2. சல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய நிரந்தர சட்டம் தான் வேண்டும்.
    3. டிஜிட்டல் இந்தியா என்பதுதான் நம் பாரதப் பிரதமரின் கனவு. இதன் அடிப்படையிலேயே தொலைத் தொடர்புகளின் உதவியுடனேயே இத்தகைய மாபெரும் கூட்டத்தைக்கூட்டி எங்களால் இப்படியொரு அமைதியான போராட்டத்தை நடத்த முடிகிறது. ஆனாலும் பாரதப்பிரதமர் அவர்கள் எங்களை ஏனோ இந்தியர் என்று பாராமல் தமிழர் என்று ஒதுக்கிவைப்பது போன்று வேதனை ஏற்படுத்துகிறது. பிரதமர் அவர்களின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுபவர்கள் நம் தமிழக மக்களே என்பதில் ஐயமில்லை. ஆயினும் அதற்குரிய அங்கீகாரம் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே வேதனையான செய்தி. இதுவரை அனைத்துக் கட்சியினரும் வந்திருந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் சென்றுள்ளபோதும், பி.ஜே.பி கட்சியினர் எவரும் இதுவரை எங்களை நெருங்கவே இல்லை.

    Share
  • கண்ணியம் காத்த இளைஞர்கள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    25,00000 இளைஞர்கள் 500 இடங்களில் அமைதியாக, காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். உலகமே உற்று நோக்கி வியந்து நிற்கும் வகையில் வரலாறு படைத்திருக்கிறார்கள். இப்படியொரு தீப்பொறி அவர்களுக்குள் கனன்று கொண்டிருப்பதே வெளியில் தெரியாமல் பொத்தி வைத்திருந்தவர்கள் அதன் எல்லை மீறி இன்று பெருந்தீயாக கொதித்தெழுந்துள்ளார்கள். கங்கு கூட குளிர்த் தென்றலாய் அமைதி காக்கும் என்பதையும் உணர்த்தி, சரித்திரம் படைத்துள்ளார்கள். என் மனச்சாட்சியே எனக்குத் தலைவன், முகமூடியணிந்த எந்த தலைவனும் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒற்றுமையுடன் கூடி நின்று நினைத்ததை நடத்தி சாதனைப்படைத்து விட்டார்கள். புல்லுறுவிகளாக உள் நுழைய முற்பட்ட சாதி அரசியல்வாதிகளையும், அதனுள் விட்டிலாய் வீழ இருந்தவரையும் அடையாளம் கண்டு நாசூக்காக ஓரங்கட்டிய சடங்குகளும் அழகாக நடந்துள்ளன. வெகு இயல்பாக இளைஞரோடு இளைஞராக கலக்க இருந்த புல்லுருவிகளையும் நிதானமாக திறமையாக வெளியேற்றிய சாதனைகளையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இலக்கு நேர்மையானதாக, தன்னலமற்றதாக, நாட்டின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டதாக இருக்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். குப்பை போடாமல், தீய சொற்களையும், தீய செயல்களிலும் ஈடுபடாமல் மனமுதிர்ச்சியுடன் நடந்துகொண்ட இந்த துள்ளிவரும் காளைகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளனர். இதற்கு மேலும் திருந்தாவிட்டால் அடுத்து அவர்களின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதையும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். அண்டை மாநில இளைஞர்களும் தன்னார்வத்துடன் உதவிக்கு வரத் தயாராக இருந்ததன் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரம் என்றே பெருமை பொங்க கூறமுடிகிறது. சில புல்லுறுவிகள் நம் நாட்டுத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசியும், தேவையில்லாத செயல்பாடுகளில் இறங்கியும் உள்ளதற்கு இந்த மாணவச் செல்வங்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பதையும் உணர்த்தியுள்ளார்கள். கூட்டத்தில் குளிர் காய்ந்துகொண்டு தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்ட சுயநலவாதிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மற்றபடி பாலின பாகுபாடின்றி எல்லோரும் ஓரினம் என்ற அறைகூவலோடு, பெண்களையும் கௌரவமாக நடத்தி, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாகப் போராடி வெற்றி கண்டுள்ள இளைஞர்களை/மாணவச் செல்வங்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.

    அவசரச்சட்டம் மத்திய அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு தலைவரும் ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய பார்வைக்குச் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் ஆளுநரும் கையொப்பமிட இந்த அவசரச் சட்டமானது மாநில அமைச்சர் குழுக்களால் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. நாளை அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு வீர விளையாட்டைத் தாமே துவங்கி வைப்பதாக தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றே அதற்கான பணிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வாடிவாசல் வந்து பார்வையிட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    கண்ணியம் காத்த அனைத்து இளைஞர்களுக்கும் தமிழ் பண்பாட்டை உலகிற்கே உணர்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுதல்களும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் அதே நேரத்தில் மேலும் இதே ஒற்றுமையையும், அமைதியையும் என்றும் காத்து தமிழர் நலம் பேணுவோம் என்று உறுதியெடுப்போம்!

    Share
  • மகத்தான வெற்றி!

    பவள சங்கரி

    முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவிப்பு.. இன்னும் 2 நாட்களில் சல்லிக்கட்டு நடைபெறும். அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலோடு குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இளைஞர்கள்/மாணவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுகோள்!` மாணவர்களுக்கு மகத்தான வெற்றி!

    மாணவர் / இளைஞர் அமைதிப் போராட்டம் மகத்தான வெற்றி!! வாழ்த்துகள். வாழ்க வளமுடன் செல்வங்களே!!

    Share
  • சல்லிக்கட்டு பிரச்சனையின் உச்சநிலை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசு சல்லிக்கட்டு பிரச்சனையை மாநில அரசின் பக்கம் திருப்பிவிட்டது.

    உச்சநீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றம் பக்கம் பிரச்சனையை திருப்பிவிட்டது.

    இனி தமிழக அரசும் சல்லிக்கட்டு ஆதரவாளர்களும் என்ன செய்யப்போகிறார்கள்?

    போராடும் மாணவர்களுக்கு உணவும் குடிநீரும் மின்சாரமும் வழங்கப்படவேண்டியது மாநில அரசின் தலையாய கடமை. மின்சாரத்தை தடை செய்து சட்டப்பிரச்சனைக்கு மாநில அரசு உள்ளாகப்போகிறதா?

    பிரச்சனை மாநில அரசிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே இன்றைய நிலை.

    தமிழர் பண்பாட்டிற்கு ஆதரவாக மாநில அரசு செயல்பட்டு சட்டசபையைக்கூட்டி சட்டத் திருத்தம் அல்லது அவசரச் சட்டம் கொண்டுவருமா?

    மாநில அரசை ஆதரிப்பதாக உறுதியளிக்கும் மத்திய அரசு மாநில அரசு சட்டம் இயற்றினால் மத்திய அரசு அச்சட்டத்தை ஏற்று குடியரசுத் தலைவர் கையொப்பமிட வழிவகுக்குமா?

    சல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள்/இளைஞர்கள் போராட்டம் என்ற நிலை மாறி இன்று ஒட்டுமொத்த தமிழர் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வணிகர்கள் தொழிற்சஙகங்கள், திரையரங்குகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர் என அனைத்து பொது மக்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு, உண்ணாவிரதம் என அனைத்துத் தமிழர்களும் ஒன்றுகூடி தமிழன் ஓர் இனம் என போராட முன்வந்துள்ளனர்.

    அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது?

    Share
  • இன்றைய பொருளாதார நிலை!

    பவள சங்கரி

    உலகத்தின் மொத்த செல்வத்தின் சரி பாதி எட்டு நபர்களிடம் மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்ல இந்தியாவின் 58% செல்வம் 1% நபர்களிடம் மட்டுமே உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை அரசுகளின் செயல்பாடுகளால் உறுதிபடுத்தப்பட்டு அதிகரிக்கப்படுகிறது. இதனால் 99% மக்களின் சமுதாய நிலைப்பாடு ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் அபாயமும் உள்ளது. அதாவது சனநாயக, சமதர்ம, சோசலிச கோட்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இப்படியொரு நிலையில் per capita என்கிற தனிமனித வருமானம் எப்படி அதிகரிக்கும்? தனி மனித வருமானம் அதிகரிக்காமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு எஸ் & பி போன்ற பொருளாதார அமைப்புகளிடம் அதிகப்படியான அங்கீகாரத்தைப் பெறவும் முடியாது. ஆட்சி அமைப்புகளையே இந்த 1 சதவிகிதம் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடவும் வாய்ப்பு உள்ளது.

    உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்து இத்தனை நாட்கள் ஆன பிறகும் அதனுடைய பலன் மக்களை வந்து அடையவில்லை. இந்த அறிவிப்பால் உரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்க வேண்டும். விலை வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதற்கு மாறாக விலையேற்றங்கள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வேலை இழந்து வேலை வாய்ப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. உரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏறும் முகத்தில் உள்ளது. மிகச்சிறந்த திட்டங்கள் கூட சரியான ஆளுமை இல்லாவிட்டால் தோல்வி அடையும் என்பதற்கு இது சாட்சியாகிவிடும் போலுள்ளது. 100 கோடி மக்களும் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்றுக் கொண்டதே தங்களுக்கு நல்லதொரு விடியல் பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான். அனைத்து ஏடிஎம்களிலும் நாளொன்றிற்கு ₹ 10,000 நடப்புக்கணக்கில், ₹ 1 இலட்சமும், எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தாலும் ஏடிஎம்களே திறக்காதபோதும், வங்கியில் பணம் இல்லாத நிலையிலும் அதிக தொகை எவ்வாறு எடுக்க முடியும். இவை அனைத்தையும்விட அனைவருக்கும் சரியான வருமானம் இல்லாதபோது வங்கிக் கணக்கு மட்டும் ஏறுவதற்கு அது அட்சயப் பாத்திரம் அல்லவே. உற்பத்திக்கும் தொழில் விற்பனைகளுக்கும், ஏற்றுமதிகளுக்கும், சரியான ஊக்குவிப்பு இல்லாவிட்டால் மிகப்பெரிய பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என்றே அஞ்ச வேண்டியுள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் சீனாவைக்காட்டிலும் பின்னடைந்து விட்டது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார மையத்தின் ( IMF) கருத்தின்படி, சீனாவின் 6.7% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2016 இல் இந்தியா 6.6% வளர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிதி ஆண்டில் 1 சதவிகிதப் புள்ளி குறைவிற்கான காரணமாக இரண்டு மாதம் முன்பு உயர் மதிப்பு நோட்டு தடை செய்யப்பட்டதையேக் குறிப்பிடுகிறது.

    நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்காக அதிரடியாக அறிவித்த இத்திட்டம் பெரும்பாலானவர்களின் மனம் கவர்ந்தது என்றாலும், 86% பணம் மட்டுமே சார்ந்த பொருளாதாரம் உள்ள நம் நாட்டில் உற்பத்தியையும், பல தொழில்களையும் பாதித்துள்ளதும் நிதர்சனம்.

    அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி,செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்த காலாண்டில், உயர் மதிப்பு நோட்டு தடைக்கு முன்பாக இந்தியா 7.3% வளர்ந்திருந்தது. இப்போதைய நிதியாண்டிற்கான வளர்ச்சி குறையப்போவதாகக் கணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ஆய்வாளர்கள் இந்த மந்த நிலை அதிகமாகவும் வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். சர்வதேச நாணய நிதியமும் இதை ஒப்புக்கொள்வதாகவேத் தெரிகிறது. ஆயினும் 2017இல் 7.2% மற்றும் 2018 இல் 7.7% வளர்ச்சிப்பெறும் என்றும் கணித்துள்ளதுள்ளதும் ஆறுதலான விசயம் என்றாலும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share
  • வெந்து மடியும் விவசாயம் .. விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்போம்!

    பவள சங்கரி

     

     

    தலையங்கம்

    பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை வறட்சி பீடித்து இதுபோன்று பல்வேறு விவசாயிகள் மாண்ட நிகழ்வு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கொத்துக் கொத்தாக மக்கள் மடியும் நிலை சமீப காலங்களில் வட மாநிலங்களில் மட்டுமே நடந்த நிகழ்வாக இருந்தது. ஆனால் இன்று தமிழகத்திலும் இந்த நிலை தொடர்கிறது. அனைவருக்கும் உண்டி கொடுத்தோர் உயிர்விடும் காட்சிகள் தொடரும் நிகழ்வாக அனைவரையும் இரத்தக் கண்ணீர் சொரியச்செய்வதாக இருக்கின்றன. அமைச்சர்களின் பொறுப்பற்ற பதில்களோ வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளன. உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்தும் அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. நொடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் ஆணையிட்டும் அந்நீரைப் பெற்றுத்தர இயலாத நிலையிலேயே தமிழக அரசு உள்ளது வேதனைக்குரிய விசயம். பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கும் விளை நிலங்கள், கருகி அழியும் பயிர்கள் ஆகியவற்றைக்கண்டு வேதனையுறும் விவசாயிகள் மாளுகின்ற நிலை தொடர் நிகழ்வுகளாக உள்ளன. வரும் முன் காப்போம் என்று கோசமிடும் அரசு வந்த பிறகும் செயலிழந்து இருப்பது ஏன்? விவாசாயப் பொருட்கள், விதை, உரங்கள் வாங்குவதற்கும் தனியார்களிடம் கடன் வாங்கியவர்கள், கருகியப் பயிரைக்கண்டு தங்கள் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. தனியார் வட்டிக் கடைக்காரர்களின் கொடுஞ் சொற்களுக்கு அஞ்சியே இந்நிலை தொடர்கிறது. ஓர் உயிர் இழந்தாலே ஓலமிடுகிற நாம் பலரின் கண்ணீர் கண்டு பதைக்காமல் இருக்கமுடியுமா?

    நாம் இன்று 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் உள்ளோம். விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறியுள்ள நாம், மிகச்சிறந்த வானிலை ஆய்வு மையங்களைக் கொண்டுள்ள நாம் பருவ நிலை தவறும் என்பதை முன்கூட்டியே அறியத்தவற வாய்ப்பில்லை. உடனடியாக விவசாய செயல் அலுவலரும், மேலாண் அதிகாரிகளும், இச்செய்தியை விவசாயப் பெருங்குடி மக்களுக்குக் கொண்டுசென்று விவசாய தொடர்பான செயல்களை ஏன் நிறுத்தி வைக்கவில்லை. மழை பொய்த்துவிடும் என்று அறிந்தே அரசு மௌனம் காத்ததா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த மழைக் காலம் வரை விவசாயிகளுக்கு மீன் இனப்பெருக்கக் காலங்களில் மீன் பிடிப்பதற்கு தடை செய்து மீனவர்களுக்கு அந்த மூன்று மாதங்களுக்கும் உதவித் தொகை வழங்குவதுபோல விவசாயிகளுக்கும் வழங்கவேண்டியதும் அவசியம். மழை பொய்த்தாலும் நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதைப்போல ஆழ்துளை கிணரை அமைத்து சொட்டு நீர்ப்பாசனம் விவசாயம் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் மானியம் அளித்து உதவலாம். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஏதும் இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. விவசாயிகள் உயிர் துறந்த பிறகு வருந்துவதைவிட மேலும் இதுபோன்ற துர்பாக்கிய நிலை தொடராமல் காக்கும் வகையில் அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கையில் செயல்பட வேண்டியது அவசியம். விவசாய அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளை இந்த மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவது பயனளிக்கும்.

    ஒரே ராக்கெட்டில் இத்தனை செயற்கை கோள்களை அனுப்புகிறோம் என்று கூறும் இஸ்ரோ விவசாயத்திற்காகவும் ஒரு செயற்கைக்கோளை ஏன் அனுப்பக்கூடாது. இதில் கிடைக்கக்கூடிய தகவல்கள் மூலமாக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க உதவக்கூடுமே.இஸ்ரோ இதனை கவனம் கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    Share
  • உயர் மதிப்பு நோட்டுகளின் தடையும் அதனுடைய தாக்கமும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர் மதிப்பு நோட்டுகள் 500, 1000 தடை செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகிவிட்டன. புதிய ₹2000, 500 தாள்கள் புழக்கத்தில் வந்துவிட்ட சூழலில் சுமாராக 15,000 கோடி உரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளன. இதனுடைய தாக்கங்கள் குறித்த ஆய்வு செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். நாட்டின்மீது பற்றுகொண்டுள்ள மக்கள் இத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பல இன்னல்களுக்குப் பிறகும் வரவேற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கிகளிலிருந்து பண அட்டைகள் மூலம் பெறப்படும் பணத்தின் தொகை அதிகரிக்க வேண்டிய அவசியமோ, காசோலைகள் மூலம் பெறப்படும் தொகைகள் அதிகரிக்க வேண்டிய தேவையக்காட்டிலும் இத்திட்டம் வெற்றி பெற அனைத்து ஏடிஎம் களிலும் பணத்தாள்கள் நிரப்பப்பட வேண்டியதே உடனடித் தேவையாக உள்ளது. தங்கு தடையற்ற முறையில் தங்கள் பணத்தை எளிமையாகப் பெற முடிந்தால் மட்டுமே இத்திட்டம் மேலும் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நூற்றுக்கு தொன்னூறு சதவிகிதம் ஏடிஎம்கள் மூடப்பட்டே உள்ளன என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆரம்ப நாளிலிருந்தே அனைத்து ஏடிஎம்களும் சரி செய்யப்பட்டு பணம் நிரப்பப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு இத்தனை இன்னல்கள் வந்திருக்காது. 60 நாட்கள் ஆகியும் இப்பிரச்சனை இன்னும் சரி செய்யப்படாதது வேதனைக்குரியதுதான். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி பணம் கையிருப்பில் இருந்தும் அந்தந்த வங்கிகளின் ஏடிஎம் நிரப்பப்படாமல் இருக்கின்றன. வங்கி நிர்வாகத்தில் உள்ளவர்கள் முற்றும் துறந்தவர்களோ, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களோ அல்ல என்பதையும் இது உணர்த்துகிறது. அவர்களும் கவனிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டியது இத்திட்டத்தின் வெற்றிக்கு அவசியமானதாக உள்ளது.

    எத்தனை பெரிய சிறந்த திட்டமாக இருப்பினும் அதனுடைய வெற்றி என்பது அடித்தள மக்களைச் சென்றடைய வேண்டும். இல்லாவிட்டால் அது தோல்வி அடைந்ததாகவே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. கருப்புப் பணம் மட்டுமன்றி கள்ளப்பணமும் ஒழிக்கப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளுக்கு கிடைக்கப் பெறாமலிருந்த எல்லைப் புறங்களிலும் தீவிரவாதம் நடைபெறும் இடங்களிலும் நிகழ்வுகள் குறைந்திருக்கின்றன. ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரிந்துகொள்ளவோ அறிந்து கொள்ளவோ சாத்தியங்கள் குறைவு. அவர்தம் அன்றாட பிரச்சனைகள் குறையும் விதமாக, செலவினங்களின்போது இது தெரியவேண்டும். அப்பொழுதுமட்டுமே தாம் பட்ட இன்னல்களுக்கு பலன் கிடைத்ததாக நிறைவளிக்கக்கூடும்.

    ரியல் எஸ்டேட் துறையில் விற்பனைகள் மிகவும் குறைந்துவிட்டாலும் விற்பனைத் தொகை குறைந்தபாடில்லை. மத்திய அரசு வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ஆனால் அனைத்து வங்கிகளும் அதைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மையாகும். மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ஆணைகள் மூலமாக இதைக்கட்டாயப்படுத்தலாம் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

    நுகர் பொருட்கள் விலைகள் குறைய வேண்டும். அதாவது நம்முடைய உரூபாய் மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி, பெட்ரோல் லிட்டருக்கு ₹ 70 ஆக மாறிவிட்டது. சாதாரண காலங்களில் அதாவது பழைய ₹ 500, 1000 நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்பிருந்ததைவிட மிகவும் அதிகரித்துள்ளது. அந்நிய பணப்புழக்கத்தில் நம் உரூபாய் நோட்டுகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதையே இது காட்டுகிறது. உரூபாயின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் போல நமது உரூபாயின் மதிப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். நம் உரூபாயின் மதிப்பை மற்றவர்கள் நிர்ணயிப்பதைவிட நாம் நிர்ணயிக்க வேண்டிய காலம் இது. குறைந்தபட்சம் டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பு 50 ற்கும் குறைவாக வரவேண்டும். இதனுடைய தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சதுர அடியின் விலை ₹ 3000 லிருந்து ₹1000 ற்கு வரவேண்டும். முத்திரைத் தாள் கட்டணங்களும், அரசு நிர்ணயிக்கும் மதிப்பீடுகளும் குறைக்கப்படவேண்டும். இதுபோன்று அனைத்து மக்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உணவுப் பண்டங்களிலிருந்து காய்கறி வரை இதனுடைய பாதிப்பு இருக்க வேண்டும்.

    அரசினால் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டுமே செயல் வடிவில் இருப்பதைத் தவிர்த்து அரசின் நற்சொற்களும் செயல் வடிவில் இருக்க வேண்டும். ஆனால் அரசு அறிவித்த பணப்பரிமாற்றக் கட்டணங்கள் இன்னும் வங்கிகளில் நீக்கப்படவில்லை. (RTGS, NEFT) போன்ற கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டியில், அதாவது வரி விகிதங்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பொருளாதார நிலை சிறப்பான நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • விடைபெறும் 2016!

    பவள சங்கரி

    தலையங்கம்

    2016ஆம் ஆண்டில் விதவிதமான அனுபவங்களைச் சந்தித்தாகிவிட்டது நம் நாடு. சில  வெற்றிகளோடு சோதனைகளும், சோகங்களும் சேர்ந்து நாட்டையே உலுக்கி விட்டன. பொருளாதார சீர்திருத்தம் பொறுத்தவரை  பல்வேறு நாடுகளும் முடிவெடுக்கத் தயங்கக்கூடிய விசயங்களில் நம் நாட்டுப் பிரதமர் அதிரடியாக, துணிவுடன் எடுத்த முடிவின்படி 50 நாட்களில் நிலைமை சீர்பெறும் என்ற அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இன்னும் திறக்கப்படாத 60 சதவிகித ஏடிஎம்கள் , பல இடங்களில்  செயல்படாத வங்கிகள் என மக்கள் சிரமங்கள் இன்னும் தீராத நிலையிலேயே உள்ளது. மத்திய வங்கி போதுமான உயர் மதிப்பு நோட்டுகள் இருப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2017, அதாவது நாளை முதல் ஏடிஎம்களிலிருந்து ₹ 2500 க்கு பதிலாக ₹4000 எடுக்கலாம் என்று அறிவித்திருந்தாலும், பெரும்பாலான திறக்கப்படாத வங்கிகளிலிருந்து எப்படி பணம் பெற இயலும் என்பதே மக்களின் தீராத பிரச்சனையாக உள்ளது. பொதுவாக வங்கிகளைப் பொறுத்தவரை நிலைமை ஓரளவிற்குச் சீரடைந்துள்ளது என்றே சொல்லமுடிகிறது. அனைத்து ஏடிஎம்களும் சரியாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளதையும் மறுக்க முடியவில்லை. தொழிலாளத் தோழர்களின் வேலையின்மையும் அதிகரித்துள்ளன. வியாபாரங்களும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வகையில் 2016 ஆம் ஆண்டு சலசலப்புடனேயே நிறைவடைந்துள்ளது. 2017இல் ஜிஎஸ்டி மூலமாக வியாபாரங்கள் செழிப்படைந்தும், விவசாயப் பெருங்குடி மக்களின் வேதனைகள் தீர்ந்து, அனைத்து மக்களும் வளமான வாழ்வைப் பெறவும் வாழ்த்தி வரவேற்போம்.

    Share