தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்?
பவள சங்கரி
தலையங்கம்
மறைந்த நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் குன்றி இருந்த அந்த 75 நாட்கள் உண்மையாக என்ன நடந்தது என்பதை உடனிருந்து செவிலித் தாயாக கவனித்துக்கொண்டதாக பெருமைப்பட்டுக்கொண்டு அதற்குரிய சன்மானமாக 8 கோடி தமிழர்களைக் கட்டியாளும் தலைமைப் பதவியை குறி வைக்கும் சசிகலா இன்று வரை அந்த மக்களை நேரில் சந்தித்து அது பற்றி பேசத் தயங்குவது ஏன்? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கூடவே பல ஆண்டுகளாக இருந்தவர் அவர் உடல் நிலை பற்றியும் நன்கு அறிந்தவர் உண்மை நிலவரத்தை யதார்த்தமாக பேச முடியவில்லை எனும்போதே அதில் ஏதோ பிரச்சனை என்பதாகத்தானே அர்த்தமாகிறது. எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன? அதுவும் இந்த அச்சத்திற்குக் காரணமான கூட்டமே மீண்டும் ஆட்சிக்கு வருவதென்றால் மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே இந்த நாடு எப்படி விளங்கும்? மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே, அப்படியானால் பொது மக்களைப் பற்றி கவலைப்படுபவர் எவரும் இல்லை என்பதே இன்றைய நிலவரம். அவசர அவசரமாக சட்ட மன்ற உறுப்பினர்களை மட்டும் விலைக்கு வாங்கி தமது திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் சசிகலா தன் மீது தவறு இல்லை என்கிற பட்சத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து ஏன் பேசக்கூடாது? பதவிக்கு வந்த பின்பு மக்களுக்கு இலவசங்கள் என்ற பிச்சையைப் போட்டு சமாதானம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையா? தமிழக மக்களை இத்தனை கேவலமாக எடைபோடும் அளவிற்கு மட்டம் தட்டி விட்டார்கள் என்றுதானே இதன் அர்த்தம். 200, 500, 1000 என்று வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட மக்களே இப்போதாவது திருந்துங்கள். பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.
இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த கட்டமாக மக்களின் வாழ்வாதாரங்களே பறி போய்க்கொண்டிருப்பதுகூட எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தண்ணீர் பஞ்சம் இன்று எவ்வளவு பெரிய வாழ்வாதாரப் பிரச்சனை என்பது கூட கேட்பார் இல்லை. விவசாயம் அழிந்து கொண்டிருப்பதுபோக, மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கே தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அறிவார்களா? நிலத்தடி நீரும் சுத்தமாக வற்றிய நிலையில் காவேரி தண்ணீரும் வருவதில்லை, 3000 லிட்டர் பிடிக்கும் ஒரு லாரி தண்ணீர் விலை ரூ 800/ கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? மக்களின் குறைகள் என்ன, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாத ஒருவரை மக்கள் எப்படி முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியும்?
தற்போதைய சூழலில் குதிரை பேரங்களை மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் ஊக்குவிக்கப் போகிறார்களா? எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவர்வசம் தமிழகத்தைக் காவு கொடுக்கப் போகிறார்களா? இந்தச் சூழ்நிலையில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் மறு தேர்தலை ஏன் அறிவிக்கக்கூடாது? எந்தவொரு பொது மக்களும் சசிகலா அவர்களை முதல்வராக ஆக்குவதற்கு வாக்களிக்கவில்லை எனும்போது சசிகலாவை முதல்வராக எப்படி அங்கீகரிக்க முடியும்? சனநாயகத்திற்கு புறம்பான இதுபோன்ற செயல்களை மக்கள் ஒரு நாளும் ஆதரிக்கமாட்டார்கள் என்று தெரிந்தே இது போன்ற செயல் திட்டங்களை முன்னெடுப்பது நாட்டிற்கு நன்மை பயப்பது அல்ல.
நன்றாகப் பொட்டில் அறைந்ததுபோல் சொன்னீர்கள் சஹோதரி.
இனி மக்களை யார் உசுப்பிவிடுவார்கள் தமிழகத்தில் சரியான நேர்மையான நல்லாட்சி வர… என்றே தெரியவில்லை.
ராஜாஜி சொன்னமாதிரி இனி மக்களை யார்காப்பாற்றுவார்?
கவியோகி..
மிகவும் சிந்தனையை தூண்டும் கருத்துக்கள் இதழாசிரியரின் கட்டுரையில் இடம் பெறுகின்றன. சில வரிகளில் விடை காண இயலாது. மறுமொழி கட்டுரை அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்
இன்னம்பூரான்