நிதிநிலை அறிக்கையின் தேவையும் எதிர்பார்ப்புகளும்
பவள சங்கரி
தலையங்கம்
இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவர் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொது நிதிநிலை அறிக்கையாக இரயில்வேயின் நிதிநிலை அறிக்கையும் இணைத்து ஒரே நிதிநிலை அறிக்கையாக வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் பொது நிதித் தொகுப்பிலிருந்து அல்லது இரயிவேயின் வருவாயிலிருந்தே அதன் செலவினங்கள் எதிர்கொள்ளப்படுமா என்று தெளிவுபடுத்தப்படவில்லை. இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கதே. பல ஆயிரம் கோடி பணத்தை செலவழித்து ஒரு புல்லட் இரயில் விடுவதைவிட, பல பெரு நகரங்களை இணைக்கக்கூடிய இரயில்களின் வேகத்தை அதாவது மணிக்கு 200 கி.மீ. என அதிகரித்து அதற்குரிய கட்டுமானப் பணிகளையும் பொறியியல் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதுமே சிறப்பானதாகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடாகவும் இருக்கும். ஒரு சிலர் மட்டுமே இந்தப்பலனை அனுபவிப்பதைவிட பல இலட்சம் மக்கள் இதனால் பயனுறுவார்கள் . புல்லட் இரயில் என்ற பெருமையை மட்டுமே கணக்கில்கொள்வதை விடுத்து பல மக்களுடைய பல இலட்சம் செயல்திறன் மிக்க உழைக்கும் பொன்னான நேரம் பாதுகாக்கப்படுவதையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இதனால் விரயமாகக்கூடிய பல ஆயிரம் கோடி உரூபாய்கள் சேமிக்கப்பட்டு நாட்டினுடைய பொருளாதாரமும் உயர வழிவகுக்கும்.
தனி நபர் வருமான வரியின் விலக்கு குறைந்தபட்சம் 4 இலட்சமாகவும், அதிகபட்சமாக 5 இலட்சமாகவும் அளித்தும் 5 இலட்சத்திற்கு மேலும் 10 இலட்சம் வரையிலும் வருமானம் உள்ள பிரிவினருக்கு 10% வரியும் 10 இலட்சத்திற்கு மேல் 30 இலட்சம் உரூபாய் வரையில் உள்ள பிரிவினருக்கு 20% வரிவிதிப்பும் 30 இலட்சத்திற்கு மேல் உள்ள வருவானம் உள்ள பிரிவினருக்கு 30% வரி விதிக்கும்பொழுது வரி வருவாய் குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். நியாயமான வரிவிதிப்பை மக்கள் ஏற்கக்கூடிய மனோபாவத்தில் இருப்பதால் இது சாத்தியமே.
சேவை வரியும் அதிகரிக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்த வரி அதிகரிப்பு ஜி.எஸ்.டி யில் பாதிப்பு எவ்வாறு இருக்கும் அல்லது புதிய ஜி.எஸ்.டி யை ஒட்டியே இந்த புதிய சேவை வரியின் உயர்வு இருக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பாதுகாப்புத் துறைக்கு ஆண்டுக்கு ஆண்டு தொகை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பதைத் தவிர்த்து உள்நாட்டுக் கட்டமைப்புகளிலும், கல்வி, விவசாயம், மின்சாரம் போன்ற துறைகளில் அதிக முதலீடுகளில் செய்தால் நாட்டின் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். குறைந்தபட்சமாக அனைத்து பாடத்திட்டங்களிலும் 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக்கல்வியும், மின்சாரமே இல்லாத கிராமங்களே இல்லை என்ற வகையில் மின்சாரத் துறையும், விவசாயத்திற்கு உயிர்நாடியாக உள்ள பயனளிக்கக்கூடிய புதுத்திட்டங்களும், புது ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இவையனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் ஆவன செய்வார்களென மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.