வெந்து மடியும் விவசாயம் .. விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்போம்!
பவள சங்கரி
தலையங்கம்
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை வறட்சி பீடித்து இதுபோன்று பல்வேறு விவசாயிகள் மாண்ட நிகழ்வு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கொத்துக் கொத்தாக மக்கள் மடியும் நிலை சமீப காலங்களில் வட மாநிலங்களில் மட்டுமே நடந்த நிகழ்வாக இருந்தது. ஆனால் இன்று தமிழகத்திலும் இந்த நிலை தொடர்கிறது. அனைவருக்கும் உண்டி கொடுத்தோர் உயிர்விடும் காட்சிகள் தொடரும் நிகழ்வாக அனைவரையும் இரத்தக் கண்ணீர் சொரியச்செய்வதாக இருக்கின்றன. அமைச்சர்களின் பொறுப்பற்ற பதில்களோ வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளன. உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்தும் அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. நொடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் ஆணையிட்டும் அந்நீரைப் பெற்றுத்தர இயலாத நிலையிலேயே தமிழக அரசு உள்ளது வேதனைக்குரிய விசயம். பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கும் விளை நிலங்கள், கருகி அழியும் பயிர்கள் ஆகியவற்றைக்கண்டு வேதனையுறும் விவசாயிகள் மாளுகின்ற நிலை தொடர் நிகழ்வுகளாக உள்ளன. வரும் முன் காப்போம் என்று கோசமிடும் அரசு வந்த பிறகும் செயலிழந்து இருப்பது ஏன்? விவாசாயப் பொருட்கள், விதை, உரங்கள் வாங்குவதற்கும் தனியார்களிடம் கடன் வாங்கியவர்கள், கருகியப் பயிரைக்கண்டு தங்கள் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. தனியார் வட்டிக் கடைக்காரர்களின் கொடுஞ் சொற்களுக்கு அஞ்சியே இந்நிலை தொடர்கிறது. ஓர் உயிர் இழந்தாலே ஓலமிடுகிற நாம் பலரின் கண்ணீர் கண்டு பதைக்காமல் இருக்கமுடியுமா?
நாம் இன்று 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் உள்ளோம். விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறியுள்ள நாம், மிகச்சிறந்த வானிலை ஆய்வு மையங்களைக் கொண்டுள்ள நாம் பருவ நிலை தவறும் என்பதை முன்கூட்டியே அறியத்தவற வாய்ப்பில்லை. உடனடியாக விவசாய செயல் அலுவலரும், மேலாண் அதிகாரிகளும், இச்செய்தியை விவசாயப் பெருங்குடி மக்களுக்குக் கொண்டுசென்று விவசாய தொடர்பான செயல்களை ஏன் நிறுத்தி வைக்கவில்லை. மழை பொய்த்துவிடும் என்று அறிந்தே அரசு மௌனம் காத்ததா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த மழைக் காலம் வரை விவசாயிகளுக்கு மீன் இனப்பெருக்கக் காலங்களில் மீன் பிடிப்பதற்கு தடை செய்து மீனவர்களுக்கு அந்த மூன்று மாதங்களுக்கும் உதவித் தொகை வழங்குவதுபோல விவசாயிகளுக்கும் வழங்கவேண்டியதும் அவசியம். மழை பொய்த்தாலும் நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதைப்போல ஆழ்துளை கிணரை அமைத்து சொட்டு நீர்ப்பாசனம் விவசாயம் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் மானியம் அளித்து உதவலாம். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஏதும் இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. விவசாயிகள் உயிர் துறந்த பிறகு வருந்துவதைவிட மேலும் இதுபோன்ற துர்பாக்கிய நிலை தொடராமல் காக்கும் வகையில் அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கையில் செயல்பட வேண்டியது அவசியம். விவசாய அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளை இந்த மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவது பயனளிக்கும்.
ஒரே ராக்கெட்டில் இத்தனை செயற்கை கோள்களை அனுப்புகிறோம் என்று கூறும் இஸ்ரோ விவசாயத்திற்காகவும் ஒரு செயற்கைக்கோளை ஏன் அனுப்பக்கூடாது. இதில் கிடைக்கக்கூடிய தகவல்கள் மூலமாக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க உதவக்கூடுமே.இஸ்ரோ இதனை கவனம் கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.