Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • தமிழர்களின் கடல்சார் வணிகம்

    தமிழர்களின் கடல்சார் வணிகம்

    ஆய்வாளர்

    க.பாஸ்கர்
    முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,
    மொழிகள் துறை,
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சாவூர்.

    ஆய்வு நெறியாளர்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை,
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.

    முன்னுரை   

    சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். “திரைகடலோடியும் திரவியம் தேடு”  என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிகச் சமூகம் பல சமயங்களில் நியாயமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டிச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கைப் பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் “வர்க்கப் போராட்டத்தில்” ஈடுபட்டு வணிகரை எதிர்த்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக “உழவர் சமூகத்தைச் சேர்ந்த  அப்பர்  தலைமையில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குக்கெதிராகத் திரண்டெழுந்ததைக்” குறிப்பிடலாம்.

    பல்வேறு துறைமுகங்கள்

    அரபு நாட்டினர், யவனர், சாவக நாட்டினர் ஆகிய பிறநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகை புரிந்தனர். இதனால் தமிழகக் கடற்கரையில் பல்வேறு துறைமுகங்கள் உருவாகும் சூழல் உருவானது. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டினத் துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டினத் துறைமுகம், முசிறி துறைமுகம், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததை அறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், வளர்ச்சி பெற்ற நாகரிகம் மிக்க சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

    பட்டினப்பாலையில் வணிகம்

    இன்றைய தமிழகம் வணிகத் துறையில் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் எந்த மாநிலத்தைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தின் துறைமுகங்களோ உலக அளவில் மற்ற முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் விதத்தில் சிறந்து விளங்குகிறது.  இன்று மட்டுமல்ல ஏறத்தாழ சங்கக் காலம் தொட்டே தமிழகத் துறைமுகங்கள் இரவு பகல் பாராமல் இயங்கின என்று அறியமுடிகிறது. சங்கக் காலச் சோழ மாமன்னன் கரிகாற்பெருவளவனின் வணிகத் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகமும் அதைச் சார்ந்த அங்காடிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரவும் பகலும் இயங்கியுள்ளது. பகலில் இயங்கிய கடைகளுக்கு ‘நாளங்காடி’ எனவும் இரவில் இயங்கிய கடைகளுக்கு ‘அல்லங்காடி’ எனவும் பெயரிடப்பட்டது. இன்றைய சுங்க நடைமுறையும் அப்போதே தொடங்கிவிட்டது போலும்.

    “புலிபொறித்துப் புறம்போக்கி”1

    என்னும் பட்டினப்பாலை வரி மூலம் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சோழரின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்பது புலனாகிறது. மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கையாளப்பட்ட பொருட்களின் வகைகளைப் பின்வரும் செய்தியால் அறியலாம்.

    மரக்கலன்களில் கொண்டுவரப்பட்ட குதிரைகளும், மிளகு மூட்டைகளும், மேருமலையில் தோன்றிய மாணிக்கமும், பொன்னும், மேற்கு மலையில் கிடைத்த சந்தனமும், அகிலும், கொற்கை முத்துக்களும், கிழக்குக் கடற்கரையில் கொணர்ந்த பவளமும், கங்கை, காவிரியில் கிடைத்த பொருட்களும், ஈழம், காடரம் (இன்றைய மலேசியா) பொருட்களும்  இரு துறைமுகமும் எத்துணை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் இத்துணை பொருட்கள் கையாளப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்கலாம். பண்டைய தமிழகத்தின் கடல்சார் வணிகம் எத்துணை சிறப்பாக நடந்தது என்பதனைச் சங்கக் கால நூலான பட்டினப்பாலை கூறுகின்றது.

    கடல் வாணிகம்

    பழந்தமிழர் செல்வம் ஈட்டும் பொருட்டு உலகின் பலநாடுகளுக்குக் கடற்பயணம் மூலம் வாணிகம் செய்துள்ளனர். கங்கைக்கரையில் இருந்த பாடாலிபுரம், இலங்கை, பர்மா, கடாரம் (மலேசியா), சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்), அரபுநாடுகள், எகிப்து, யவனம் (ரோம், கிரேக்கம்) போன்ற பல நாடுகளுடன் வாணிகம் செய்ததுடன் பல துறைமுகங்கள் தமிழரின் கட்டுப்பாட்டிலே இருந்துள்ளன. “கலிங்க நாட்டில் பித்தும்டா வணிக நகரம் பலகாலமாகத் தமிழர் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது என்பதும், அதை மீட்ட கலிங்க மன்னர் அந்நகரத்தை உழுது அழித்தார்” என்பதும் அத்திக்கும்பா கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    யூத அரசர் சாலமன் அரண்மனையில் தமிழகத் தேக்கு மரப்பொருள்கள் இருந்த குறிப்புகள் யூதர்களின் புனிதநூலான தோராவில் உள்ளது. யவனர்களுடனான வணிகத் தொடர்பைப் “பெரிப்ளூசின் செங்கடல் செலவு” (The periplus of the Erith-rean Sea) என்னும் நூலில் அறியலாம். இந்நூல் கொற்கை நகரில் கிடைக்கும் முத்துக்கள் வேறு பொருட்களை விட மதிப்பு வாய்ந்தவை என்று குறிப்பிடுகிறது. பிளைனி, தாலமி போன்றோரின் குறிப்புக்களும் தமிழரின் பிறநாட்டு வணிகத் தொடர்பையும் பண்டைய தமிழகத் துறைமுகங்களின் பெருமையையும் குறிப்பிடுகின்றன. கீழடியில் கிடைத்த உரோமானிய நாணயங்களும், ரௌலட் அரிட்டைன் வகை மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. மண்டபம் அருகில் உள்ள அழகன்குளம், புதுச்சேரியின் அரிக்கமேடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த எகிப்து நாட்டின் பானையோடுகளும், பெண்ணின் சித்திரம் பதித்த பானையோடுகளும், மணிகளும், நந்த அரசர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.

    தமிழ்நாட்டு வணிகம்

    தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பயணம் செய்வதிலும் கடல் வாணிகம் செய்வதிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால் கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது. கடலில் நெடுந்தூரம் கப்பலில் போகவும் வரவும் பழங்காலத்திலேயே பழகினார்கள். கரிகால் சோழனுடைய முன்னோனான ஒரு சோழன் கடற்காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான்.

    “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!” 2

    என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுகிறது. பழம் காலத்துப் பாண்டியன் ஒருவன் தன் அடி, அலம்பக் கடலில் நின்றான் என்றும், கடலில் தன் வேலை எறிந்து அதை அடக்கினான் என்றும் கூறப்படுகிறான். இதன் கருத்து என்னவென்றால், அவன் கடலை அடக்கிக் கடலில் நாவாய் செலுத்திக் கடற்பயணத்தை எளிதாக்கினான் என்பது. இவற்றிலிருந்து கடலில் பயணம் செய்வதைத் தமிழர் ஆதி காலத்திலிருந்து நடத்தினார்கள் என்பது தெரிகின்றது. கடலில் கப்பலோட்டுவது அக்காலத் தமிழருக்குக் கைவந்த கலையாயிற்று. அவர்கள் கடல் கடந்து போய் வாணிகம் செய்தார்கள். கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாகவும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல் நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு ‘வணிகச்சாத்து’ என்னும் பெயர்வழக்கு நிலவியது.

    கரையோர வணிகம்

    கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் முதலான தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப் பட்டினம், தம்ரலிப்தி (வங்காள தேசத் துறைமுகப் பட்டினம்) முதலான பட்டினங்களுக்குச் சென்றனர். பிறகு கங்கையாறு கடலில் – கலக்கிற புகர் முகத்தின் ஊடே கரையில் இருந்த பாடலிபுரம், காசி (வாரணாசி) முதலான ஊர்களில் வாணிகஞ் செய்து திரும்பினார்கள். ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ, என்று நற்றினை (189:5) கூறுகிறது. கங்கைக் கரையில் பாடலிபுரத்தில் தமிழர் வாணிகஞ் செய்த போது, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகதநாட்டை அரசாண்ட நந்த அரசர், தங்களுடைய தலைநகரமான பாடலிபுரத்தில் கங்கையாற்றின் கீழே பெருஞ்செல்வத்தைப் புதைத்து வைத்திருந்ததைப் பற்றி அறிந்தனர். தமிழக வாணிகரின் மூலமாக நந்த அரசரின் செல்வப் புதையலைத் தமிழ்நாட்டவர் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள். மாமூலனார் என்னும் சங்கப் புலவர் தம்முடைய செய்யுளில் நந்தருடைய நிதியைக் கூறுகிறார்.

    “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
    சீர்மிகு பாடலிக குழீஇக் கங்கை
    நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ “   3

    நந்த அரசரின் செல்வப் புதையலைப் பற்றிய இந்தச் செய்தியை மேற்கண்ட செய்யுள் வரிகள் உறுதி செய்கின்றன. வடநாட்டுப் பழைய நூல்களில் இச்செய்தி கூறப்படவில்லை.

    தமிழ் வாணிகர் கலிங்கம் வரை சென்று வாணிகஞ் செய்தார்கள். அந்த வாணிகச் சாத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 150 வரையில் நூற்றைம்பது ஆண்டுகள் அங்குத் தங்கி வாணிகம் செய்தது. அவர்களுடைய வாணிகம் நாளுக்கு நாள் பெருகிச் செல்வாக்கும் பலமும் அடைந்தது. அக்காலத்தில் கலிங்க தேசத்தை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் தமிழக வாணிகரால் தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும் என்று அஞ்சி அந்த வாணிகச் சாத்தை அழித்து விட்டான். அந்தச் செய்தியை அவ்வரசன் எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக் கல்வெட்டெழுத்துச் சாசனத்திலிருந்து அறிகிறோம். கலிங்க தேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் பொருள்களைக் கலிங்க நாட்டுக்கும் கொண்டு போய் விற்றார்கள். கலிங்க நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருள்: பருத்தித் துணி, பெருவாரியாகக் கலிங்கத் துணி தமிழ்நாட்டில் இறக்குமதியாயிற்று. கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத்துணி என்று சிறப்பாகப் பெயர் பெற்றது. பிறகு காலப்போக்கில் கலிங்கம் என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப்பெயராக வழங்கப்பட்டது. சங்க நூல்களில் துணிக்குப் பெயராகக் கலிங்கம் என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் சந்தனக்கல், இதனை இலக்கியங்கள் ‘வடவர் தந்த வான் கேழ் வட்டம்’ என்று குறிப்பிட்டன.

    நடுக்கடல் வாணிகம்

    தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து சென்று அங்கு உண்டான வாசப் பொருள்களையும் பவளத்தையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத்துகிலையும் கொண்டு வந்து பழந்தமிழ்நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அவர்கள் சாவகத்தோடு நின்று விட்டார்கள். அவர்கள் சாவகத்துக்குக் கொண்டுவந்த பட்டுக்கள், அங்குச் சென்ற தமிழக வாணிகர் வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்றார்கள். தமிழர் பட்டுத் துணியை ‘நூலாக்கலிங்கம்’ என்று சுட்டியது சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது.

    சாவக நாட்டிலிருந்து கிடைத்த வாசனைப் பொருள்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாசனைப் பொருள்களை விற்றவர்  வாசவர் என்று பெயர் கூறப்பட்டனர். வாசனைப் பொருள்கள் ஐந்து என்றும் அவை பஞ்ச வாசம் என்றும் கூறப்பட்டன. பஞ்ச வாசம், தமிழ்நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த (இப்போதைய யாழ்ப்பாணம்) மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துக்குச் சென்று தங்கின. இது கப்பல்கள் தங்குவதற்கு நல்ல துறைமுகமாக இருந்தது. ஆனால், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறவில்லை. மணிபல்லவம் (சம்புகொல பட்டினம்) அக்காலத்தில் மனிதர் வாழாத இடமாக இருந்தது. அங்குச் சென்று தங்கின கப்பல்கள் அங்கிருந்து கடற்பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே நெடுந்தொலைவிலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளான சாவக நாட்டுக்குச் சென்றன. இடைவழியில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. நாகர்மலைத் தீவுகள் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில்) மாநக்கவரம் என்று பெயர் பெற்றிருந்தன. இக்காலத்தில் இத்தீவுகள் நக்கவாரி (நிக்கோபர்) தீவுகள் என்று கூறப்படுகின்றன. அக்காலத்தில் அத்தீவுகளில் நாகர் இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வசித்திருந்தார்கள். அவர்கள் ஆடையில்லாமல் மிருகங்களைப் போல வாழ்ந்தபடியால் ‘நக்கசாரணர்’ என்று கூறப்பட்டனர். நாகர்மலைத் தீவுகளில் கப்பற் பிரயாணிகள் சென்றால், அவர்களை நக்கசாரணர் கொன்று விடுவர். அவர்கள் மனிதரைக் கொன்று தின்றதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால் அந்தப் பக்கமாகச் செல்லுகிற கப்பல்கள் அத்தீவுக்குப் போவதில்லை.

    சாவகத் தீவு வாணிகம்

    சாதுவன் என்னும் வாணிகன் நாகர் மலைத் தீவில் சென்று உயிரிழக்காமல் திரும்பி வந்ததை மணிமேகலை காவியம் கூறுகிறது. சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சாவக நாட்டுக்குப் போய் வாணிகஞ் செய்வதற்காகக் கப்பலில் புறப்பட்டுச் சென்றான். கப்பல் நாகர் மலைத் தீவுக்கருகில் சென்றபோது புயற்காற்றடித்துக் கடலில் மூழ்கிவிட்டது. மாலுமிகள் கடலில் முழுகிப் போனார்கள், சாதுவன் மரக்கட்டையொன்றைப் பற்றிக்கொண்டு அருகிலிருந்த நாகர்மலைத் தீவுக்கு நீந்தி நல்ல காலமாகக் கரையை யடைந்தான். ஆனால், இளைப்புங் களைப்பும் அடைந்து சோர்த்திருந்த அவன் கடற்கரை மணலிலேயே உறங்கி விட்டான். அயலான் ஒருவன் உறங்குவதைக் கண்ட நக்கசாரணர் சிலர் வந்து அவனைக் கொல்லத் தொடங்கினார்கள். விழித்துக் கொண்ட சாதுவன், அவர்களுடைய மொழியை அறிந்தவனாகையால், தன்னைக் கொல்ல வேண்டாமென்றும் கப்பல் முழுகிப் போனதனால்தான் அவ்விடம் வந்ததாகவும் கூறினான். தங்களுடைய மொழியில் பேசினபடியால் அவர்கள் அவனைக் கொல்லாமல் தங்களுடைய தலைவனிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். சாதுவன் சில காலம் நக்கசாரணரோடு தங்கியிருந்தான். பிறகு சந்திரத்தன் என்னும் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகன், சாவக நாட்டுக்குப்போய் வாணிகஞ் செய்துவிட்டுத் தன்னுடைய கப்பலில் திரும்பி வருகிறவன் நாகர் மலைத் தீவின் பக்கமாக வந்தபோது, நக்கசாரணர் அவனுடைய கப்பலைத் தங்கள் தீவுக்கு அழைத்து அவனுடைய கப்பலில் சாதுவனை ஏற்றிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அனுப்பினார்கள். இந்தச் செய்தியை மணிமேகலை காவியம் (ஆதிரை பிச்சையிட்ட காதை) கூறுகிறது.

    பாண்டிய நாட்டு வாணிகரும் சாவகத் தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வாணிகஞ் செய்தனர். பாண்டி நாட்டிலிருத்த தமிழர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்து திரும்பியதையும் மணிமேகலை காவியம் கூறுகிறது.               தமிழகத்திலிருந்து சாவக நாடு நெடுந்தொலைவிலிருந்தும் தமிழக வாணிகர் அந்நாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர், காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாவக நாட்டில்தான் கிடைத்தன. கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள்.

    மதுரைக்காஞ்சி கூறும் வணிகச் செய்தி:

    கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறுகளையும் அறுத்து மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் மோதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயைப்,

    “பன்மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
    விலங்குபிணி நோன் கயிறு அறீஇதை புடையூக்
    கூம்பு முதல் முருங்க எற்றிச் சாய்ந்துடன்
    கடுங்காற்று எடுப்பக் கல் பொருது இரைஇ
    நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்” 4

    என்னும் வரிகளில் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

    முடிவுரை              

    “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்“5 பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது வணிகம். அது ஆதாய (இலாப) நோக்கு உள்ளதாகவும் இருக்கலாம்; இல்லதாகவும் இருக்கலாம். இவ்வகைப் பொருளாதார நடவடிக்கையே வணிகம் [TRADE, COMMERCE, BUSINESS]  எனப்படும்.

    சான்றெண் விளக்கம்

    1. உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை, அடிகள் 135
    2. வெண்ணிக் குயத்தியார் புறநானூறு, பாடல் எண். 66
    3. மாமூலனார் அகநானூறு, பாடல் எண்.  265
    4. மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி, அடிகள் 4-6
    5. திருவள்ளுவர், திருக்குறள்,  குறட்பா எண் – 120


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    ‘தமிழர்களின் கடல்சார் வணிகம்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

    • இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுப் பதிவுகளை வெளிக்கொணர வேண்டும் என்னும் துடிபபுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
    • பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றுப் பெருமைகளையும் நியாயமான அளவுகோலால் வெளிப்படுத்திக் காட்டும் ஆர்வம் பெரும்பாலும் அருகிப் போனதொரு காலக்கட்டத்தில் இத்தகைய கட்டுரைகள் வரவேற்புக்கும் வழிகாட்டுதலுக்கும் உரியன.
    • முதுகலை மாணவர்களுள் ஒருவராகப் பயிலும் கட்டுரையாளருக்கு இந்தப் பருவத்தில் இத்தகைய நோக்கு இருப்பது பாராட்டுக்குரியது.
    • கல்வெட்டுகள், பயணக் குறிப்புக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் முதலியவற்றைக் கூடுதல் சான்றாவணங்களாகச் சேர்த்திருக்கலாம். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.  

     

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் 7 ஏடுதந்திட்ட எங்கள் பனை

    கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் 7 ஏடுதந்திட்ட எங்கள் பனை

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
    பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும் “

    “வருடம் முழுதும் வற்றாத வளம்
    வாங்கி வந்த வரமே பனை “

    வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம்.இருந் தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடு க்கும். பனை என்பது  மரம் அல்ல . அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும்.பனையின் நிலை யினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும்.இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்ல தொரு பாடமாய் இருக்கிற தல்லவா ! மற்ற மரங்களைப் போல பனை யினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து,  தளர்வி ன்றி.   கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என் பதும் கருத்திருத்த வேண்டி யதேயாகும்.

    பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனா ல் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என் பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம்.அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

    இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது,

    எமது முன்னோர்களின் சிந்தனைச் செல் வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே ! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு  மொழியில்லை. வரலாறு இல்லை . ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க் கிறதல்லவா !  ” பயன்மரம் ” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.

    ” ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
    போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
    மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
    செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
    மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
    துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
    பற்று வரவு பதியுங் கணக்கோலை
    மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
    எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
    மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “

    என்று ” தாலவிலாசம் ” நாடகநூலும்

    “படிக்க நல்ல தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேண்
    எழுத நல்ல தம்பியர்க்கு
     எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னைமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலில் வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன் “

    என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம்.பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண் ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணு கையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.

     ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை ” பனை மர சோபனம் ” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

       ” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
        மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
        அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
        என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
        ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
        ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
        அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
        தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
        இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
        பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
        திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
        நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
        மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
        வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
        பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
        காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
        தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
        கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
        சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
        பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
        மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
        அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
        மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
        எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
        சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “

    என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா !

    பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெ ல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண் டோம். பனையின் ஒலையினால்  ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங் களையும் பார்க்கப் பாரர்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக் கும்.எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல் லில் , மரத்தில், களிமண் தகட்டில், தோலில், செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாக வும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவ ற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !

    ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண் டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து   விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும்.ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண் டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிட வும் இயலாது, சுருக்கமாய் அதே வேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திரு த்த வேண்டியதே.

    ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள்  காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.

    அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
    இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
    வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
    தோளாய் அறிந் தொகுத்து 

    என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன் படி நான்மறை யா ளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும், அரசர்கள் இருபது விரற் கடை அளவும்,  வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும், வேளார் கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண் டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.

    “ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
    நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
    பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
    வணிகர்க் கீரெண் விரலாகும்மே
    காணென மொழிய சூத்திரக் களவே “

    புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகிறது.வெற்றி லைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க ” கவளி ” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.

    பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
    வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
    மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
    மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்

    கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப் பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.

    “மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
    கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
    மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
    பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “ 

    முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் ” பொத்தகச் சுவடி ” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே ” பொத்தகச் சுவடி ” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட் டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !

     ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழை த்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குரு த்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு ” சாரோலை ” என்கி றோம்.காய்ந்த பின்னர் ” காவோலை ” என்கிறோம்.குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத் தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.

    குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு.மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும், பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்

    (வளரும்)

    Share
  • சங்கம் வைத்து நாடாண்ட மன்னவர்

    சங்கம் வைத்து நாடாண்ட மன்னவர்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு அரசன் தனது ஆட்சி தன்னை விட்டுப் போகாமல் இருக்கத் தன் சுற்றம், நட்பு ஆகியோரைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையம் / அரண்   அமைத்திருப்பான். இந்த வட்டத்துள் வருவோர் மட்டுமே படைத் தலைவர்களாக அமைச்சர்களாக தூதுவர்களாக கருவூலக் காப்பாளர்களாக இன்னும் பிற பதவிகளில் அமர்த்தப்படுவர். அப்போது தான் மன்னவனின் படையும், செல்வமும் (கூழ்), குடிகளும் (நாடும்) அவனுடையதாக இருக்கும். அல்லாவிடில் அவன் உடனே அரசாட்சியை இழந்து விடுவான்.

    படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

    உடையான் அரசருள் ஏறு  (குறள் 381; இறைமாட்சி)

    ஒரு மன்னன் ஆளும் நாட்டின் பரப்பு எத்தகு விரிந்ததாக இருந்தாலும் மன்னன் விடுக்கும் செய்தி அவனது கீழ்நிலைச் சேவகர், பணியாளருக்கு உடனடியாகச் சென்றடைய வேண்டும். அதே போல நாட்டின் மூலை முடுக்குகளில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்த செய்தி மன்னனின் காதுகளுக்கும், கவனத்திற்கும் விரைந்து எட்ட வேண்டும். இந்த பின்னல்வலை (network) சீராக நடைபெற்றால் தான் அவன் ஆட்சிக்கு கேடு ஏதும் வராது. இதில் எங்கேனும் சுணக்கம், தொய்வு ஏற்படுமானால் அது சீரற்ற ஆட்சியாகவே கருதப்படும். இப்படி மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செய்தியைப் பரிமாற நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இவர்கள் கூடிப் பேசுவதற்கு என்று இடங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கு சான்றாக சில ஊர் பெயர்கள் உள்ளன. இதற்கு “கூடல்” என்று பெயர். மதுரைக்கு கூடல் என்று ஒரு பெயர் உண்டு. கூடல் என்றால் சங்கம், சங்கமம் ஆகும். கல்வெட்டுகளில் கூடல் என்று குறிக்கப்பட்ட இவ்விடங்கள் இன்று கூடலூர் எனப்படுகின்றன. கருநாடகம் அசன் மாவட்டத்தில் காவேரி ஆற்றுக்கு வடக்கே ஆறகலகூடு 7000 என்ற ஊரை வெற்றிப் பரிசாக முதலாம்இராசராசன் பஞ்சவன் மாராயன் என்ற படைத்தலைவனுக்கு ஈந்தான். இங்கும் கூடு என்பது ஆறு அகன்ற இடத்தில் 7000 பேர் கூடுவதைக் குறிக்கிறது. தகடூர் > தகு + அடு + ஊர். தகு என்றால் பொருந்து, கூடு என்று பொருள். அடு என்றால் செய்கை. இதாவது கூடிச் செயற்படும் இடம் (assembling point). கல்வெட்டில் இடம்பெறும் மிலட்டூர், மிலட்டுநிலை, மிழலைநாடு ஆகிய பெயர்கள் சேரும் இடம், தங்கும் இடம், திரளும் நாடு எனும் பொருள் கொண்டவை.

    மில் என்றால் பொருந்துதல், சந்தித்தல், நெருங்குதல் என்ற கருத்துடையது. தமிழில் கணவனைக் குறிக்க மிணாளன் என்ற சொல்லும் மனைவியைக் குறிக்க மிணாட்டி என்ற சொல்லு கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இது மில் > மிள் > மிண் என்று சொல்லாய்வில் விரியும். இன்றும் இந்தி மொழியில் மிலானா என்ற சொல் பொருந்துதல், கூடுதல் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. இடத்தைப் போலவே மக்கள் கூடிச் செயற்படுவதற்கும் மில் என்ற வேரைக் கொண்டு மில் + ஆடு = மிலாடு என்ற சொல் மலையமான்களால் கூட்டப்படும் சங்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மில் > மல் > மண்டு என்றால் நிறைதல் ஆகும். இந்த மிலாடு > மலாடு என்றும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மலாடு என்பதும் பொருந்துதல், கூடுதல் கருத்து கொண்டதே. ஒரு அரசனின் செய்தியை கீழ்நிலைக்கு கொண்டு சேர்க்கவும் கீழ்நிலை நடப்புகளை மேலே கொண்டு சேர்க்கவும் நம்பிக்கைக்குரிய ஆள்கள் தேவை. இதற்கு ஏதோ ஒரு இன உணர்வு அடிப்படையாக அமைகிறது. இந்த மிலாடர்கள் மலையமான்களின் கோத்திரத்தவராக இருந்துள்ளனர். இந்த ஆள்கள் அவ்வப்போது கூடி ஆலோசித்து செயற்பட்ட செய்தி இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1161 இல் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீஸ்வரர் கோயிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் 79 நாட்டு மிலாடு (சங்கம்) என்று குறிப்பிடுகிறது. இந்த மிலாட்டில் தருமபுரி, வேலூர், ஈரோடு, தஞ்சை பகுதி நாட்டு மிலாடர்களும் கலந்து கொண்டுள்ளனர் (பார்க்க ஆவணம் 11, பக்.32). இந்த பகுதிகள் அனைத்துமே மலையமான் நாடு அல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பின் எப்படி மிலாடு என்பது மலைநாட்டைக் குறிக்கும்? ஆனால் மலைநாடு என்பதையே மிலாடு, மலாடு என்று திரித்து கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக Ephigraphia Indica வில் தவறாக குறித்துவிட்டனர். இதே தவறான கருத்தை அகராதிகளிலும் ஏற்றியுள்ளனர். இதனால பெரும் சர்ச்சை உண்டாகிறது. எனவே கல்வெட்டுச் சான்றுகளுடன் மிலாடு, மலாடு என்பது மலைநாடு அல்ல அது சங்கத்தை, சங்கமத்தை தான் குறிக்கிறது என்று காட்டுவதே இந்த கல்வெட்டு விளக்கத்தின் நோக்கம்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வீரணம் என்ற ஊரில் உள்ள 23 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய கம்ப போத்தரையர்க்கு யாண்டு பதினாலாவது
    2. வாண கோவரையர் வயிர மேகனார் வாண கோப்பாடி, மலா
    3. டு, மிலாடைப் பாடியுஞ் சோழ நாட்டு காவேரியின்
    4. வடகரை எல்லாமாளா நின்ற காலத்து வேணாட்டு முன்னூ
    5. று மெயின நாடை
    6. ந்நூறும் ஆண்
    7. ட நந்தி பெருமா
    8. னார் மகன் அக்கழி
    9. மல்லனார் மேற்
    10. கோவலூர் நாட்டு
    11. வென்னாமுஞ் சா
    12. த்தனூரும் ஆளா
    13. நிற்கப் பங்கள
    14. நாட்டுடைய மாதே
    15. வர் படை சாத்த
    16. னூர் எறிய வே
    17. ன்னாட்டு நி
    18. ன்று சென்று பி
    19. ன்பு சென்று
    20. பிணங்கி வே
    21. னாட்டல்லை
    22. க் காராச்சங்க
    23. ன்ப் பட்டான் கல்

     எறிய – அழிக்க; பட்டான் – வீர சாவடைந்தான்; கல் – நினைவுக் கல்

    விளக்கம்: பல்லவன் கம்ப வர்மனின் 14 ஆவது ஆட்சி ஆண்டில் 877 இல் வாணகோவரையர் வயிரமேக வாண அரசன் தென் பெண்ணையின்  வடக்கே திருமுனைப்பாடி, செங்கம் முதலான வாணகோப்பாடி நாட்டையும், திருக்கோவிலூர் – உளுந்தூர் பேட்டையை உள்ளடக்கிய மலாடு நாட்டையும், பெரம்பலூர் – சேலம் ஆத்தூர், வாழைப்பாடி ஆகியவற்றை உள்ளடக்கிய மிலாடு நாட்டுப் பாடியையும், சோழநாட்டின் காவேரி வடகரையான அரியலூரையும் ஒன்று சேர ஆண்டு வந்த காலத்தில் வேணாடு முந்நூற்றையும் (செங்கம்), எயில் நாடு ஐந்நூற்றையும் (கிருஷ்ணகிரி) ஆண்ட நந்திப் பெருமகன் போரில் இறந்துவிட அவரது ஆட்சிப் பகுதி சுருங்கி அவரது மகன் அக்கழிமல்லன் மேற்கு கோவலூர் நாட்டின் வெண்ணத்தையும் சாத்தனூரையும் ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது வேலூர் பக்கம் உள்ள பங்கள நாட்டை ஆளுகின்ற மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கி அழிக்க வெண்ணத்தையில் இருந்து சென்று பகைவரைத் துரத்தி பின்பு சென்று சண்டையிட்டு வெண்ணத்தை எல்லையில் வீரச்சாவடைந்தான் காரச் சங்கன் என்ற வீரன். அவன் நினைவில் நிறுத்திய கல் இது.

    வயிர மேக வாணரைசர் நான்கு நாட்டுப் பகுதிகளையும் ஒருங்கே ஆண்ட குறிப்பை வைத்துப் பார்க்கும் போது அவர் வேந்தர் என்று கருதப்படுவதற்கு ஈடாக ஒரு பெரு நிலப் பகுதியையே ஆண்டுள்ளார் என்று தெரிகின்றது. இந்நாடுகளை அவரது முன்னோர்கள் போரில் வென்று அந்த ஆட்சியாளர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இவரது மகள் தான் செம்பியன் மாதேவியான கண்டராதித்த சோழன் மனைவி. இக்கல்வெட்டில் மிலாடு என்று தனியாகவும் மலாடு என்று தனியாகவும் குறிக்கப்பட்டுள்ளது காண்க. அவை இருவேறு நாடுகள் என்று தெளிவாகிறது. எனவே வடக்கே இருந்த கன்னட வாணர் மலையமான்களை வென்று தம் நாட்டின் ஆட்சிப் பரப்பை தெற்கே விரித்துள்ளனர் என்று ஊகிக்க முடிகிறது. இந்த இரண்டு சொல்லாட்சியால் மிலாடு > மலாடு என்பன மலைநாடு என்பதன் திரிப்படைந்த சொல்  என்ற வாதம் தகர்ந்து போகின்றது. மல் > மண்டுதல் என்றால் திரளுதல், நெருக்குதல், நிரம்புதல் என்ற சேர்க்கைக் கருத்து கொண்டது. மில் > மிணாளன், மிணாட்டி என்பவை கூடுகைக் கருத்தில் கணவன் மனைவியை குறிப்பவை என்பதை நோக்கினால் மிலாடு என்ற சொல்லும் சங்கம், கூடிச் செயற்படுவது ஆகிய பொருள்களை உடையது என்று விளங்கும்.

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், ச. கிருஷ்ணமூர்த்தி, பக். 212; செங்கம் நடுகற்கள் 46 -1971

    சேலம் வாழப்பாடி வட்டம் பேளூர் கிராமம் தான்தோன்றீஸ்வரர் வெளிப்புற கல்லில் வெட்டிய 21 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ
    2. வீரபாண்டிய
    3. ன் றலை கொண்
    4. ட கோப் பரகேசரி
    5. பன்மற்கு யாண்டு 3
    6. ஆவது பார்க்கவ கோ
    7. த்ரத்து மிலாடுடையா
    8. ன் அகலங்கன் ம
    9. லையராதித்தனான செ
    10. ம்பியன் மிலாடுடை
    11. யானேன் துறிவி நா
    12. ட்டுராளிகளை ஊராளித்திறை
    13. நாற்கழஞ்சே காலே கொ
    14. ள்வதாக பூவிலை செய்
    15. து குடுத்தேன் செம்பி
    16. யன் மிலாடுடையா
    17. னேன்.
    18. இது மா
    19. ற்றுவான்
    20. ஏழா நரக
    21. ம் புகுவான்.

    கோத்திரத்து – கோத்திரத்தாரின்; மிலாடு – சங்கம், சங்கமம், assembly, association, federation; மலையர் ஆதித்தன்– மலையர்குலத் தலைவன்; ஊராளிகள் – ஊர், கிராம  நாட்டாமை செய்வோர்; பூ விலை – நில வரி; திறை – கப்பம், tribute

    விளக்கம்: ஆதித்த கரிகாலனின் மூன்றாம் ஆட்சி ஆண்டு 969 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. பார்க்கவ கோத்திரத்தாரது சங்கத்தின் தலைமை உடையவனான அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையன் சொல்வது யாதெனில் “துறவி நாட்டின் கிராம  ஊராட்சி செய்வோர் ஊராளிகள் செலுத்த வேண்டிய வரியாக நான்கு கழஞ்சே கால் கொடுத்தல் போதும் என்று நில வரி நிர்ணயம் செய்தேன் செம்பியன் மிலாடுடையானேன்” என்று ஆணையிடுகிறான். இதை மாற்றிக் கெடுப்பவன் ஏழாம் நரகத்திற்கு போவான். ஒரு நாட்டுப் பிரிவில் 10 – 15 கிராமங்கள் மேல் இருக்கும். அங்குள்ள வரித் திரட்டுவோரைத்தான் இவன் ஊராளிகள் என்கிறான்.

    ஆதித்த கரிகாலனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் 968 இல் இந்த செம்பியன் மிலாடுடையான் திருக்கோவலூர் கீழுர் வீரட்டானமுடைய ஈசன் கோவிலுக்கு இரண்டு நொந்தா விளக்கு எரிக்க 192 ஆடுகள் கொடுத்த செய்தி தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்: 900 இல் இடம் பெற்றுள்ளது. அதிலும் மிலாடுடையார் அகளங்கன் மலையராதித்தனாகிய செம்பியன் மிலாடுடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் மிலாடுடையார் என்பது சங்கத் தலைவன் என்பதையும் பெயருக்கு பின்னுள்ள மிலாடுடையார் சோழன், சேரன், பாண்டியன் போல பட்டப் பெயராகவும் ஆளப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் “மிலாடு” என்பது மலைநாடு அல்ல அது சாதி சங்கம் தான் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளன. இல்லாவிடில் பார்க்கவ கோத்திரத்தை மிலாடிற்கு முன் ஏன் குறிப்பிட வேண்டும்? பார்க்கவ கோத்திரத்தில் உட்பட்ட மலையமான்கள் மிலாட குலத்தவர் எனப்பட்டனர்.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், எண்: 289, பக். 228, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

    திருக்கோவிலூர் திரிவிக்கிரம பெருமாள் கோவில் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ நரஸிம்ஹ வன்ம நிர்பதி ஸ்ரீ கோவலூரே பஜன் வாஸம் விஸ்வ ஜகன்நிவாஸ வபுஷ ஸ்ரீ வாமனஸ்ய கரோத் ஸைலம் ஸும்பித ஸாதகும்ப விலஸத் கும்பம் ம
    2. ஹா மண்டபம் பிரகாரம் பரமாலிகா விலஸிதம் முக்தாமயீஞ் ச ப்ரபாம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர் ரக்ஷை. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வளரத் தன் திருத்தமையனொடும் போ
    3. ய் இரட்டப்பாடி ஏழரையிலக்கமுங் கொண்டு கொல்லாபுரத்து ஜயஸ்தம்ப நாட்டி மீண்டு போந்து பேராற்றங்கரைக் கொப்பத்து ஆஹவமல்லனை யஞ்சுவித்து ஆங்கவன் ஆனையும் குதிரையும் பெ
    4. ண்டிர் பண்டாரமுங் கைக்கொண்டு விஜயாபிஷேகஞ்  செய்து வீரசிம்ஹாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர  தேவர்க்கு யாண்டு ஆறாவது மிலாடான ஜனநாத வளநாட்டுக் குறு
    5. க்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருவிடைக்கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகைப் படையாய்ப் பலகைப் பிளந்தமை கண்டு பார்க்கவ வம்ஸத்து மிலாடு உடை
    6. யார் இரணகேசரி இராமரான நரசிங்கவன்மர் கோயிலை இழிச்சிக் கருங்கல்லை கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்துப் பூரண பொற்குடம் அஞ்சு வைப்பித்துத் திருச்சுற்று மாளிகையும் முன்பில் மண்டப
    7. மும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப்படியுள்ள நிமந்தங்கள் எல்லாம் இந்த ஸ்ரீ விமானத்தே கல்லும் வெட்டுவித்தார் நரசிங்க வன்மர் என்று அபிஷேகம் பண்
    8. ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வன்மர். நரசிங்கவன்மர் சந்திராதித்தவல் எரிக்க வைத்த திருநுந்தா விளக்கு இரண்டு. இவ
    9. ற்றுக்கு விளக்கு எரிக்க குடுத்த சாவாமூவாப் பெரும் பசு அறுபத்து நாலு. இவற்றால் நிசதம் விளக்கு இரண்டினிற்கு நெய் உறி. இப்பரிசுக் கைக்கொண்டு _ _

    நிர்பதி > நரபதி – மக்கள் தலைவன்; பஜன் – வணங்கத்தக்க; படை – கல் அடுக்கு; இரணகேசரி – போர்க்களச் சிங்கம்; இழிச்சி – இடித்து வீழ்த்தி; நிவந்தம் – பூசைத் திட்டம்; அபிஷேகம் – மஞ்ச நீராட்டு; நிசதம் – ஏற்பாட்டு அளவு;

    விளக்கம்: தொடக்க வரி சமசுகிருத சுலோகத்தில் உள்ளது. மனிதர் தலைவன் நரசிம்ம வர்மரான மன்னவர்க்கு நன்மங்கலம் சிறக்கட்டும். திருக்கோவலூரில் வணங்கத்தக்க வீடு இது. பேராளாவிய அண்டத்தோன் வாழும் அழகுடையது. வாமனரால் உருவாக்கம உடையது. விரும்பி செய்த கலசம் ஒளிரும் கலசம் மகா மண்டபம் திருச்சுற்று பிரமிப்பான அற்புதமான முத்தால் ஆன ஒளிரும் கோயில். இதை வைணவர் பாதுகாக்க வேண்டும்.

    இரண்டாம் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியை குறிப்பிட்டு அவனது 6 ஆம் ஆட்சி ஆண்டில் 1056 இல் குறுக்கைக் கூற்றத்து பிரம்மதேயம் திருக்கோவலூர் என்னும் மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து உலகளந்த பெருமாளின் கோவில் விமானம் முன்பு செங்கல் அடுக்கிய கட்டடமாக இருந்தது. அதன் மேல்தட்டு பிளந்து இருந்ததைப் பார்த்த பார்க்கவ வமிசத்தாரின் சங்கத்தை (மிலாடு) உடைய, இதாவது தன் தலைமையில் கட்டுப்படுத்துகின்ற இரணகேசரி இராமன் என்னும் நரசிங்க வர்மன் அந்த செங்கல் கோவிலை இடித்து வீழ்த்தி கருங்கல்லைக் கொண்டு திருவிமானமும் மண்டபமும் எழுப்பி பூரண பொற்குடம் ஐந்தும் வைத்து திருச்சுற்றுப் பிரகாரமும் முன்னே மண்டபமும் கட்டி அதற்கு முத்துப் பந்தலும் செய்து கொடுத்து கோவில் இடிப்பிற்கு முன் இருந்த கல்வெட்டுகளின்படி பூசைத் திட்டம் அத்தனையும் செய்வித்து. இந்த விமானத்தின் கீழ் கல்வெட்டுவித்தார் நரசிங்க வர்மர். அங்கே அவருக்கு மஞ்ச நீராட்டி மணிமுடி கவித்து மிலாடு என்னும் சங்க உறுப்பினர் 2,000 பேருடைய கவனிப்பில் உள்ள நிலத்தை ஆண்டவர் மிலாடுடையார் நரசிங்க வர்மர். இதோடு நரசிங்க வர்மர் சந்திர சூரியர் உள்ள கால அளவும் எரிப்பதற்காக இரண்டு நுந்தா விளக்குகளை கொடுத்தார். இவற்றை எரிக்க அவர் கொடுத்த சாவாமூவாப் பெரும் பசுக்கள் 64 ஆகும். இதற்கு ஏற்படுத்திய இரண்டு விளக்குகளின் நெய்க்கு அளவு உறி அளவு ஆகும். இந்த திட்டத்தை கையில் ஏற்று என்பதோடு கல்வெட்டு செய்தி நின்றுவிட்டது. 2000 பூமியும் ஆண்ட என்ற சொற்றொடர் நரசிம்ம வர்மன் இறந்த பின் அவன் வெட்டிய முதற் கல்வெட்டை அகற்றி இரண்டாம் முறையாக விரிவாக இக்கல்வெட்டை கோபுரத்தின் கீழ் வெட்டி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    சி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறுவது போல இங்கு மிலாடு 2,000 என்பதை நிலத்தின் அளவாகக் கொள்வது தவறு. ஏனெனில் மிலாடு என்னும் சங்கத்தில் வேலூர் வரையான 79 நாடுகளைச் சேர்ந்தவர் அடங்குவர். 79 நாடு என்பது தொண்டை மண்டலத்தின் 79 நாடுகளை குறிப்பதாக அவரே கூறுகிறார். தொண்டைநாடு முழுவதும் மலைநாடு அல்ல அதன் மேற்கில் தான் கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன கிழக்கில் அல்ல என்பதை ஈண்டு கவனத்தில் கொள்க. எனவே மிலாடுடையான் என்பது மலைநாடுடையான் என்று பொருள்படாது மாறாக சங்கத் தலைவன் என்றே பொருள்படும் என்று உணர்க. இதனால் பல்லவர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின் தொண்டை மண்டல ஆட்சிப் பொறுப்பை சோழர் மலையமான்களிடம் வழங்கி இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.

    பார்வை நூல்: கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், பக். 12, தி. வை. சதாசிவம் பண்டாரத்தார் & Epigraphia Indica Vol 7, pg 145, K; Areip 123 of 1900

    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நசலூர் கிராமம் மங்கைமுத்தாயி அம்மன் கோயில் கொற்றவை சிலையின் எருமைத்தலையின் வலப்புறம் உள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ மு
    2. க்கு
    3. ல மல
    4. யமான்
    5. சாதன் ஸ்ரீ
    6.  _ _

    முக்குலம் – மூன்று பட்டமுடைய சாதி

    விளக்கம்:  இக்கல்வெட்டு பல்லவர் ஆட்சி குலைந்த 9 ஆம் நூற்றாண்டு காலத்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. “முக்குல மலயமான்” என்பது பார்க்கவ கோத்திரத்தாரான மலையர் என்னும் நயினார், சுருதிமான் என்னும் மூப்பனார், நந்தமர் என்னும் உடையார் ஆகிய 3 சாதிமாருக்கு தலைவனான சா(த்)தன் என்று பொருள்படும். இவன் இந்த கொற்றவையை வணங்கியுள்ளான் அல்லது சிலையை நிறுவினான் என்று கொள்ளலாம். பெரிய நசலூரில் கிடைத்த 3 கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று என்று நாளேட்டு செய்தி கூறினாலும் மற்ற இரண்டு கல்வெட்டுகளை அச்சேற்றிய ஆவணம் இதழ் வெளியீட்டார் இதை அச்சிடாமல் விட்டுவிட்டனர். மிலாடு என்ற மேட்டுக்குடி பார்க்கவ சாதி சங்கமத்திற்கு இது ஒரு அருமையான சான்றாகும்.

    பார்வை நூல்: 12 ஏப்ரல் 2019 நாளேடுகளில் வெளியான செய்தி

    தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் புற ஊரான கீழுர் வீரட்டானேஸ்வரர் கோவில் தென் சுவரில் உள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ காந்தளூர்சாலை கலமறுத்த கோவிராஜராஜகேசரி(ய்) பந்மக்கி யாண்டு 11 ஆவது மலா
    2. ட்டு குறுக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் திருவீரட்டான(ம்)முடையாற்கு மிலாடு உடையான் இராமன் நாட்டடிகள் வைத்த நொந்தா வி
    3. ளக்கு ஒன்றுக்கும் திருவுண்ணாழிகை ஸபையார் வஸம் சந்த்ராதித்தவல் விளக்கெரிப்பதற்க்கு குடு
    4. த்த பொன் பன்னிரு கழஞ்சு. பன்மாஹேஸ்வர ரக்ஷை. இறைவ நரும்பாக்கமெல்லைக் கற்குட்டம்
    5. முறைசேர் கோவல் முழைசுனை பிறைநுதலாய் வெண்மாறங்கெல்லை மேல்பால் கறடி வடா
    6. வாறு கீழ்பால் கண்ணத்தம்பாடியாங் காண்.

    நாட்டடிகள் – நாட்டரசன்; திருவுண்ணாழிகை சபையோர் – கருவறை பிராமணர்; கற்குட்டம் – கருங்கல் குளம்; முறைசேர் – வகையாய் அமைந்த,

    விளக்கம்: இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 996 இல் மலாட்டில் அடங்கிய குறிக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் வீரட்டானமுடைய ஈஸ்வரருக்கு மிலாடு என்னும் சங்கம் உடையான் இராமன் என்னும் நாட்டரசன் வைத்த ஒரு நுந்தா விளக்கிற்கு கருவறை பணி செய்யும் பிராமணரிடம் சந்திர சூரியர் நிலைக்கும் காலத்தளவும் விளக்கு எரிப்பதற்காக கொடுத்த பொன்னின் அளவு 12 கழஞ்சு. இதற்கு  சிவனடியார் கூட்டத்தினர் பாதுகாப்பு தரவேண்டும். அடுத்து பாடல் வரியில் இறைவனுக்கு அரும்பாக்கம் எல்லையில் கருங்கல் குளமும் வகையாய் அமைந்த கோவலூரில் குகை நீரூற்றும் பிறை நெற்றிபோல ஓடும் வெள்ளை நீரை எல்லையாகவும் மேற்கே கரடி வட ஆறும்  கிழக்கே கண்ணத்தம்பாடி இருப்பதையும் காண்க என்று கோவிலின் எல்லை கூறுகிறது. கல்வெட்டு செய்திக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. திருக்கோவலூர் பகுதியை மிலாடு என்று குறிக்காமல் மலாடு என்று குறிப்பதை நோக்குக. ஆனால் சங்கம் என்று வரும்போது மிலாடு என்று குறிப்பதை நோக்குக.

    கல்வெட்டு எழுதறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி கல்வெட்டு எழுதும் சிற்பிகள் மிலாடு என்பதை மலாடு என்று தவறாக கொட்டி இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஏதோ ஒரு கல்வெட்டில் அத்தகு பிழை நேரலாம் பல கல்வெட்டுகளில் சில நூற்றாண்டுகளாக மலாடு என்று குறிக்கப்படுவதை பிழை என்று கொள்ள முடியாது. மிலாடு என்னும் சங்க உறுப்பினர் கண்காணித்து வாழும் நாடு என்ற அடிப்படையில் நாட்டிற்கும் மிலாடு என்றே குறித்துள்ளனர். ஏதோ வேறுபாடு காட்ட வேண்டும் என்று கருதியே மலாடு என்று குறிக்கத் தலைப்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. மலையமான் நாடு என்பதே மலாடு என்று சிதைத்து குறிக்கப்படுவதாக கூறுவதை சொல்லாய்வின்படி ஏற்பதற்கு இல்லை. கம்ப வர்மன் காலத்திற்கும் முந்தையதாக நடுகற்களில் இனிமேல் மிலாடு, மலாடு குறிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டால் இதில் புதிய திசை கிட்டும்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்:  857 (AR N0  230 – 1902) பக். 431

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரி ப
    2. ந்மற்க்கு யாண்டு மூன்றாவது திருப்புலிப் பகவர்க்கு மிலாடுடையார் நாட்டா
    3. ன் சித்தவடவநேன் ஆட்டால் வைத்த திரு நந்தாவிளக்கு ஒன்று. ஒன்றும்
    4. பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    நாட்டான் – அரசன்;

    விளக்கம்: இது 10 நூற்றாண்டுக் கல்வெட்டு. கோவிராஜகேசரி பன்மரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் சித்தலிங்க மடத்தில் வீற்றிருக்கும் வியாக்கிரபாதர் என்னும் திருப்புலிப் பகவர்க்கு மிலாடு என்னும் சங்க முடையாரின் நாட்டரசன் சித்தவடவன் ஆடு கொடுத்து வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. அந்த ஒரு விளக்கும் சிவனடியார் கூட்டத்தினர் காக்க வேண்டும். எத்தனை ஆடு கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இல்லை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 109, த நா தொ து வெளியீடு

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவர் 1 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மர்க்கு திரு நந்தா விளக்கு இரண்டுக்கு இவ்வூர் சிவ ப்ராஹ்மணர் பக்கல் குடுத்த பொன் பதிந்_ _ க்கு சந்திவிளக்கு இரண்டிநால் நிறை நூற்றுப்பலம். நூற்றுப்பலமும் இவை மலாடுடையான் நாட்டான் சித்த வடவநேன். இரண்டும் ஊனமுந் தேய்வும் நீக்க குடுத்த பொன் கழஞ்சுங் குடுத்தேன். இது பந்மாகேஸ்வர ரக்ஷை.

    ஊனமும் தேய்வும் – வளைவு ஓட்டை ஆகிய குறையும் தேய்வும்

    விளக்கம்: முதற் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 913-14 கல்வெட்டு என்று குறிக்கிறது இந்நூல். ஏதோ தட்டச்சு பிழையால் கல்வெட்டு பாடத்தில் ஆண்டு விடுபட்டு போய் உள்ளது. திருநுந்தா விளக்கு இரண்டு எரிக்க இந்த கோவில் சிவபிராமணரிடம் கொடுத்த பொன் பதின் _ _ . சந்திவிளக்கு இரண்டிற்கு நிறை நூறு பலம் கொடுத்தார் மலாடுடையான் நாட்டரசன் சித்த வடவன். இந்த நுந்தா விளக்கு, சந்தி விளக்கு ஆகியவற்றில் எதிர்காலத்தில் ஏற்படும் குறையும் தேய்வும் நீக்க கழஞ்சு பொன் கொடுத்தேன் என்கிறான் இந்த மலையமான். இதை சிவனடியார் திருக்கூட்டம் காக்க வேண்டும் என்கிறான்.

    மேலுள்ள கல்வெட்டுகளில் நாட்டான், நாட்டடிகள் ஆகிய சொல்லாட்சிகள் ஆய்விற்கு உரியன. இவற்றின் பொருள் நாடு ஆள்பவன் என்பதே. மிலாடுடையான் / மலாடுடையான்  என்பதற்கு மலைநாடுடையான் என்பதே பொருள் என்றால் பின்பு  நாட்டான் என்று தனியாகக் குறிப்பது எதைக் குறிக்கிறது? நாட்டான் என்பதும் நாட்டரசன் என்பதைத் தானே குறிக்கிறது? இலக்கணப் பொருட்பாட்டின்படி மிலாடு, நாடு இரண்டும் அடுத்தடுத்து வந்தால் ஒரே பொருள் தர முடியாது. அப்படி தருவது பிழை ஆகும். ஆதலால் இங்கு தெள்ளத் தெளிவாக மிலாடு / மலாடு என்பதற்கு சாதிச் சங்கம் என்று பொருள் கொண்டால் தான் நாட்டான் என்பதன் பொருள் இந்த சாதி சங்கத்தவர் வாழும் நாட்டிற்கு அரசன் என்று தெளிவாகப் பொருள் கொள்ள முடியும் அன்றோ?

    ஆக கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தலித்தியம், திராவிடவியம், கம்யூனிசம் என்ற பெயரால் அரசியல் மேடையிலும் எழுத்திலும் புராண இந்து மதம் தான் சாதியை உருவாக்கியது. மத சுயநலவாதிகள், பிராமணர்கள் தான் சாதியை உருவாக்கி சமூகத்தை பலவாகக் கூறுபோட்டு ஆட்சி செய்து சுரண்டிக் கொழுத்தனர் என்ற பொய்யுரை இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது அன்றோ? உண்மையில் தம் அரசாட்சி நலன் கருதி சாதி சங்கத்தை உருவாக்கி நாடாண்டவர் மன்னர்களே, மலையமான்களே என்று இக்கல்வெட்டுகளால் புரிகின்றது அன்றோ?  தட்டிக்கேட்பார் இல்லாவிடின் யாரும் எதையும் உரைக்கலாம் மக்கள் முட்டாள்கள் என்பது தானே இவர்கள் மனநிலை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 160, த நா தொ து வெளியீடு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாமநல்லூர் பக்தஜனேஸ்வர சிவன் கோவில் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீ கன்னரதேவற்க்கு யாண்டு பதினேழாவது முனைப்பாடித் திருநாவலூர்த் திருதொண்டீஸ்வரத்து மஹாதேவர்க்கு ஸ்வஸ்தி சுக்ரான்வய உதயாசல ஆதித்ய சக்திநாத சிம்ஹத்வஜ சிகி மகரலாஞ்சன மலையகுலோ
    2. த்பவ மலையகுல சூளாமணி ஸ்ரீமத் நரசிம்ஹ வர்ம; மிலாடுடைய நாட்டான் சித்தவடவனாகிய நரசிம்ம வன்மன் வைத்த நொந்தா விளக்கொன்றினுக்கு வைத்த பொன் பதின் கழஞ்சு. இப்பொன் பதின் பழஞ்சுங் கொண்டு வெண்
    3. ணைநல்லூர் நாட்டுச் செவலை சபையோமும் ஊரோமும் ஆட்டு நூற்று நாழி நெய் கொண்டு வந்து மாதேவியாலை சந்த்ராதித்யவல் அட்டுவோம் ஆனோம் செவலை சபை ஊரோம். ஈழ விளக்கு ஒன்று. இது பன்மாகேஸ்வர
    4. ரக்ஷை

    சபை – கோவில் அலுவலர்

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 956 இல் திருமுனைப்பாடித் திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோவில் ஈசுவரனுக்கு. நன்மங்கலம் உண்டாகுக! பிருகுவின் மகனான சுக்கிராச்சாரியாரின் வழிவந்தவனும் கிழக்குமலைச் சூரியனும் ஆற்றலுடைய சிவனும் சிங்கக் கொடியோனும் முடியில் மயிலும் மகரமும் குறியீடாகக் கொண்டவனும் மலையர்குலத்தில் தோன்றிய மலையர்குல முடிமணியானவனும் புகழ்மிக்கவனுமான நரசிம்ம வர்மன் என்று சமசுகிருதத்தில் கீர்த்தி பாடுகிறது.

    சங்கமுடைய (மிலாடு) நாட்டரசன் சித்தவடவனாகிய நரசிம்ம வர்மன் வைத்த நுந்தா விளக்கு ஒன்றுக்கு கொடுத்த பொன் 10 கழஞ்சை வெண்ணைநல்லூர் நாட்டின் செவலை ஊரவர் வாங்கிக் கொண்டனர். ஆண்டுக்கு ஆட்டின் நெய் நூறு நாழி அளவு கொண்டு வந்து மாதேவி ஆலயத்தில் கொடுப்போம் செவலை ஊரவரோம் என்று உறுதி கூறினர். இவர்கள் இடையர் என்று தெரிகிறது. மன்னன் ஈழ விளக்கு ஒன்றும் கொடுத்தான். இந்த இரு விளக்கு எரிப்பும் சிவனடியார் கூட்டத்தாரின் பாதுகாப்பு என்று முடிகிறது. இங்கு மிலாடுடைய நாட்டான் என்று பிரித்து காட்டி இருப்பது மிலாட்டை மலைநாட்டான் என்ற பொருளில் குறிப்பதல்ல அல்ல என்பது தெளிவு. அது சங்கமுடைய நாட்டரசன் என்று பொருள்படும்.

    முதற் பராந்தகன் காலத்து சித்தவடவனும் இந்த நரசிம்ம வர்ம சித்தவடவனும் ஒரே ஆள் அல்ல. பிருகு ரிஷி என்ற பார்கவருடைய மகன் சுக்கிராச்சாரி தான் அசுரர்களின் ஆசான் (குரு) ஆவான். அசுரர்கள் என்போர் ஈரானின் அசீரிய நாட்டு மக்கள் ஆவர். எனவே அசுரர் இருந்த நாட்டில் சுக்கிரன் இருந்து வழிகாட்டியதால் அவன் ஈரான் நாட்டினன் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படியானால் மலையமான்கள் ஈரானில் இருந்து வந்தோர் என்று கொள்ளலாமா? இதற்கு விடை கூற கைபர், போலன் இந்தியாவிற்கு திறந்த வாசல் என்பவரைத் தான் கூப்பிட வேண்டும்.

    பார்வை நூல்: Epigraphia Indica Vol 7, pg 135, C; Areip 362 of 1902

    கள்ளக்குறிச்சி வட்டம் சித்தலூர் மணிமுத்தாற்றில் உள்ள சிறிய பாறையில் பொறிக்கப்பட்டுள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. (கோ)விராசகேசரி பன்மற்கு யாண்டு 3 ஆவது மிலாடு
    2. _ _ வேடபுரத்து பொன்னாலமந்தாளுக்கு உத்தம சோழ மிலாடுடையார்
    3. க்கு கலனை செய்கின்ற கலனை யேர் பொன்னாலமந்தாளுக்கு நொந்தா
    4. விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறாடும் சாவாமூவாப் பேராடு
    5. ம் நிசதி உழக்கு நெய்யால் நிசதி ஒரு நொந்தா விளக்கு எரிக்கக் கடவேன் இ
    6. ப்பிடாரி கோயிலுடை கால்வனெழுவானாகிய _ _ _ ச கான
    7. _ _ _ பேருவச்சனேன். இது பன்மாஹேஸ்வர ரக்ஷை

    கலனை – சேணம், saddle; நிசதி – ஏற்பாட்டின்படி; பிடாரி – துர்க்கை; உவச்சன் – பூசகன்; பொன்னால – மேனியை சுற்றிலும் மஞ்சள் பூசிய; மந்தாள் – கருத்தவள்; மிலாடுடையர் – சங்கத் தலைவர்;

    விளக்கம்: முதலாம் இராசராச சோழனுக்கு 3 ஆம் ஆட்சி ஆண்டில் 988 இல் மிலாடில் அடங்கிய வேடபுரத்து மஞ்சள் பூசிய கருத்த அம்மனுக்கு உத்தம சோழ மிலாடுடையாருக்கு குதிரைச் சேணம் செய்கின்றவன் குதிரைச் சேணத்தில் ஏற்றுகின்றவன் (பெயர் குறிப்பு இல்லை) மஞ்சள் பூசிய இந்த கருத்த அம்மனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க கொடுத்த ஆடு 96 ஆடும் சாவாத முதியாத இளம் ஆடுகளாகும். இதற்கு ஏற்பாட்டின்படி உழக்கு நெய் கொண்டு ஏற்பாட்டின்படி நுந்தாவிளக்கு எரிப்பேன் இந்த பிடாரி கோவிலின் கால்வனெழுவானாகிய  _ _  கான _ _ _ பேர் உவச்சன் என்று உறுதி கூறுகிறான் பூசகன். இதை சிவனடியார் கூட்டத்தவர் பாதுகாக்க வேண்டும் என்று முடிகிறது.

    உத்தம சோழ மிலாடன் தன் குதிரைச் சேவகனை அனுப்பி இந்த நுந்தா விளக்கு தந்துள்ளான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே கல்வெட்டில் மிலாடு என்பது வேடபுரத்தின் முன் வருவதால் இங்கு மிலாடு என்பது நாட்டின் பெயராகவும் குறிக்கப்படுகிறது. இப்படி சில கல்வெட்டுகளில் இச்சொல் ஆளப்படுகிறது. இது 79 நாட்டு மிலாடு இதாவது, சங்கத்தின் உறுப்பு நாடு என்று கொள்ளலாம்.

    இந்த உத்தம சோழன் பற்றிய கல்வெட்டு குறிப்பு எலவானாசூர் சிவன் கோவில் பற்றிய “வரலாற்று வடிவங்கள்” என்ற தமது நூலில் புலவர் சு. குப்புசாமி கொடுத்துள்ள 80 கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டாக கோபுர வாயிலில் உள்ள கற்பலகையில் வெட்டப்பட்டுள்ளது, பக்கம் 85 இல் இடம்பெறுகிறது. இது இராசராச சோழனுக்கு 7 ஆம் ஆட்சி ஆண்டில் 992 இல் உத்தம சோழனுடைய 15 ஆம் ஆட்சி ஆண்டில் 977இல் இறையானூர் கோவில் அலுவலருக்கு இராம தேவன் சித்தவடவன் என்னும் விக்கிரம சோழ மிலாடுடையார் செம்பியன் மாதேவி சதுப்பேதி மங்கலத்தை உருவாக்கினான் என்கிறது. அதே நேரம் சித்தவடவன் அகம்படனான உத்தம சோழ மிலாடுடையான் உருவாக்கிய அரண் கலக்கி சதுர்வேதி மங்கலம் என்ற இரண்டு சதுர்வேதி மங்கலமும் உடையார் செம்பியன் மாதேவியார்க்கும் அவள் மகன் வேந்தன் உத்தம சோழ தேவனுக்கும் என்பதோடு கல்வெட்டு உடைந்து  விட்டது. மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த இரு சித்தவடவனும் மன்னன் உத்தம சோழனுடைய பிள்ளைகளாக இருத்தல் வேண்டும். இதே நூலில் 3 ஆம் கல்வெட்டாக பக். 88-90 இல் இடம்பெறும் 24 வரிக் கல்வெட்டு இதே கோவிலின் முதல் பிரகாரத்தின் வடக்கு சுவரில் வெட்டப்பட்டுள்ளது. அது சோழ கேரளன் என்று குறிப்பிட்டு முதல்  இராசேந்திரனின் 3 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.1015 இல் இக்கல்வெட்டில் மலாடுடையார் பார்க்கவ கோத்திரத்து பராந்தகந் இயாதவ வீமநாந உத்தம சோழ மலாடுடையார் என்ற பெயரில் நிவந்தம் செய்த செய்தி உள்ளது. இங்கே மலாடுடையார் என்று முதலில் குறிப்பிட்டுவிட்டு மீண்டும் உத்தம சோழ மிலாடுடையார் என்று ஏன் வரவேண்டும்? இரண்டு இடத்திலும் இதன் மாறுபட்ட பொருள் என்ன? இந்த யாதவ வீமன் பிடாரிக்கு விளக்கு எரித்த கல்வெட்டில் வரும் உத்தம சோழ மிலாடுடையானாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் பெயரில் கண்டராதித்தன், உத்தமன் ஆகிய சமகால சோழ வேந்தர் பெயர்கள் இடம் பெறுகின்றன. அப்படியாகின் இவன் 977 – 1015 வரை 38 ஆண்டுகள் ஆண்டுகள் ஆட்சி புரிந்து உள்ளான் எனத் தெரிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 2, 1992 பக். 19

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமம் வெள்ளாற்றங்கரை ஓரம் உள்ள முனியப்ப கோயில் அருகே உள்ள கொல்லையில் உள்ள கற்பலகையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீமத் பூமி தேவி புத்தி(ர) சித்
    2. திர மேழி சாசனம்ப
    3. டிக்கு வச்ச நியாய பரிபா(லன)
    4. ப் பிள்ளையார்க்கு நியாய(த்)
    5. தோம் நாம் வைச்சுக் குடுத்த
    6. தன்மத்துக்கு அழிவு செய்
    7. தாருண்டாகில் எழுபத்தொ
    8. ன்பது நாட்டுக்கும் பதிநெட்
    9. டிராச்சியத்தில் வளைஞய(ரோ)
    10. மும் குதிரை னாயக குத்
    11. துல் ஆளை வெட்டுதல்
    12. தானா நில

    நியாயத்தோம் – தீர்ப்பு கூறுவோர்;

    விளக்கம்: 12-13 நூற்றாண்டினதாக இக்கல்வெட்டு இருக்கலாம். வேந்தன் பெயர், ஆட்சி ஆண்டுக் குறிப்பு ஏதும்  இல்லை. இதில் சித்திரமேழி, பெரிய நாட்டார், 18 விஷய வணிகக் குழுவினரின் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆதலின் இது அவர்கள் தொடர்பானது.

    பூதேவி மக்களான சித்திரமேழி சாதியர் சாசனத்தின்படி நியாயம் வழங்கும் பிள்ளையாருக்கு தீர்ப்பு கூறும் நியாயதோர் வைத்து கொடுத்த நில தான அறத்திற்கு எவரேனும் அழிவு செய்ய முற்பட்டால் 79 நாட்டுக்கு சாதி சங்கத்தாருக்கும் 18 இராச்சியத்தை சேர்ந்த வளைஞர் என்னும் ஆயிரத்து ஐந்நூற்றுவ வணிகருக்கும் செய்த கேடாகக் கருதி அத்தகையோரை குதிரைப்படைத் தளபதி குத்தியும் வாளால் வெட்டியும் பிள்ளையாருக்கு கொடுத்த இந்த தான நிலத்தை நிலைநிறுத்த வேண்டும் என்கிறது கல்வெட்டு. சித்திரமேழியாரும் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் ஒரே இன மக்கள் என்பதற்கு இது சான்று.

    வாலிகண்டபுரம் இரண்டாம் இராசராசன் 11 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு 1161 இல் இன்றைய உடையார்களான நந்தமர்களை சித்திரமேழிப் பெரிய நாடான யாதவர் குலத் தலைவரான நத்தமக்கள் என்கிறது. எனவே 79 நாட்டார், சித்திரமேழி பெரியார் நாட்டார் ஆகியோர் ஒரே மக்களே ஆவர். இந்த சித்திரமேழியர் பற்றிய கல்வெட்டுகள் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் அதிகமாக கிடைக்கின்றன. இவை மலையமான்களின் மிலாட்டுப் பகுதி என்பதை நினைவில்  கொள்ள வேண்டும். உலகின் எந்த நாடானாலும் நியாயம், நியதி (rule), ஏற்பாடு, அறம் எதுவாயினும் ஆயுத வலுவால் தான் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநிறுத்தப் படுகின்றன. இன்று வரை இதுவே பொது நடைமுறையாக உள்ளது. அதை தான் மேலுள்ள கல்வெட்டும் வெளிப்படுத்துகிறது. அதில் தவறு ஏதும் இல்லை. தவறு எது என்றால் பழைய நூல்கள் சமசுகிருதத்தில் தான் உள்ளன அந்த சமசுகிருதத்தை பிராமணர் அறிந்தவர் என்ற ஒரே காரணத்தை முன் வைத்து சாதியும், வர்ணாசிரமும் பிராமணரால் தான் உருவாக்கி நடைமுறைப் படுத்தப்பட்டன என்ற கருத்து சிந்திக்கக் கூடிய மக்களை முட்டாள் ஆக்கும் பொய்யே ஆகும். ஆயுதம் ஏந்தாத பிராமணர் தம் பாதுகாப்பிற்கே அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் அரசர்தம் ஆயுதத்தால் நிலைநிறுத்தப்பட்ட சாதி, வருணாசிரம நியதியை அவர்கள் தான் செய்தனர்; சாதிக்கு ஒரு நீதி வருணத்திற்கு ஒரு நீதி என்று ஏற்படுத்தினர் என்பது அறிவிற்கு ஏற்புடையதன்று. தமிழனின் 150 ஆண்டு கால முட்டாள் தனத்தை நீக்கி அறிவொளி ஊட்டுவது இது போன்ற கல்வெட்டுகளே.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 263 – 265

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோவில் மகாமண்டப கிழக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்  சக்கரவத்திகள் இராசராச தேவற்கு
    2. யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு
    3. வாலீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெ
    4. ட்டுக் கலனையும் நிறைவற நிறைந்து குறைவறக் கூடிக் கல்வெட்டினபடி
    5. யாவது பல மண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திரமேழிப் பெரிய
    6. னாடான யாதவகுலத் தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான மலை
    7. யமான்களும் காயாங்குடிக் கண்ணுடை அந்தணரும் சம்புவர் குலபதிப் பன்னா
    8. ட்டாரும் பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும் பொற் கோயிற் கைக்கோ
    9. ளரும் யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வந்த நன்மைத் தீமை
    10. அனைவற்கும் ஆவதாகவும். யிப்படி விலங்கினோமாகில் மாறு சாதிக்குங் கீழ் சாதிக்
    11. கும் தாழ்வு செய்தோ மிதனை யிப்படி ஒரு காலாவதும் யிருகாலாவதும் முக்காலாவதும் (முற்றுப் பெறவில்லை)

    கலனை – கூட்டு உறுப்பு சாதி; கண் – பாதுகாவலர், caretaker

    விளக்கம்: இரண்டாம் இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் வெட்டிய கல்வெட்டு இது. வடகரை வன்நாட்டின் வாலீஸ்வரமுடைய இறைவன் திருக்கோவிலில் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த 98 கூட்டு உறுப்பு சாதியாரும் நிறைந்து கூடி கல்வெட்டிய காரணமாவது பல மண்டலங்களில் வாழும் பிராமணரும், ஆரியர் என்னும் வெள்ளாளரும், சித்திரமேழிப் பெரிய நாடான இயாதவக் குலத் தலைவரான நந்தமர்களும், சதிரமுடித் தலைவரான மலையமான்களும், காசாங்குடியினர் குடும்பத்தை பாதுகாக்கிற அந்தணரும் (துறவி),  சம்புவர் குலபதியான பன்னாட்டார் என்னும் வன்னியரும், பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும், பொற்கோயிற் கூரையை காக்கும் கைக்கோளரும் உள்ளிட்ட இடங்கை 98 கூட்டு உறுப்பு சாதிகளும் மேற்கொண்ட உறுதிமொழியாவது யாதெனில் இதன் எந்த ஒரு சாதிக்கும் வரும் நன்மை தீமை அனைத்து சாதிகளுக்கும் பொதுவாக வந்ததாகக்  கொள்வோம். இந்த ஒற்றுமை உணர்வில் இருந்து விலகினோமாயின் வேற்று சாதிக்கும் கீழ் சாதிக்கும் தாழ்வு செய்தோம் என்று ஆகும். இதை இப்படியாக ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ (முற்றுப்பெறவில்லை)

    இதில் இடம்பெறும் யாதவ குல நந்த மக்கள் என்னும் உடையார், மலையமான்கள் (நயினார்) மிலாட்டை விட மிகப் பெரிய ஒரு சாதி சங்க வட்டத்தை உருவாக்குகின்றனர் என்று தெரிகின்றது. இதே போல இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் 79 நாட்டு பார்க்கவ கோத்திரத்து மலையமான்களும், நந்தமர்களும் இடங்கைப் பிரிவில் சேர்ந்த இன்னொரு கல்வெட்டு கள்ளக்குறிச்சி வட்டம் திருவலஞ்சுரம் பசுபதீஸ்வர் கோவிலில் உள்ளது. (பார்க்க ஆவணம் 11, பக். 32)

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 231- 232

    தென்னார்க்காடு மாவட்டம், திட்டைக்குடி வட்டம் சுகாசின பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு

    1.  ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ ராஜாதிராஜ தேவற்கு யாண்டு 4 வது ஸிம்ஹ நாயற்று பூர்வ்வ பக்ஷத்து த்ரயோதஸியும் திங்கள் கிழமையும் பெற்ற சதயத்து நாள் ஸ்ரீமற் பூமிபுத்ரஸ்ய சதுர்வ்வண்ணஸ்ய
    2. குலோற்பவம் ஸர்வ்வ லோகஹிதார்த்தாய சித்ர மேளஸ்ய ஸாஸனம். எழுபத்தொன்பது நாட்டு உத்தமநீதி உயர்பெரும்கீத்தி முத்தமிழ்மாலை மும்மையும் நிறைந்த சித்திரமேழிப் பெரிய நாட்டோமும் நான்கு தி
    3. சை பதினெண்பூமி தேசி திசை விளங்கு திசை ஆயிரத்தை ஞூற்றுவரோமும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு ப்ரஹ்மதேயம் திட்டை குடியான திருச்சிற்றம்பல சதுரவ்வேதி மங்கலத்து
    4. திருமேலைக் கோயிலான எழுபத்தொன்பது நாட்டு விண்ணகர் எம்பெருமான் திருமுற்றத்து நாநூற்றுவன் திருமண்டபத்திலே நிறைவற நிறைன்து குறைவறக் கூடி இருன்து இத்திருமுற்றத்திலே ஸ்ரீ பூமிப் பிராட்டியை
    5. எழுன்தருளிவித்து மேழித் தோரணமும் சாத்தி நாட்டுக்கும் நகரத்துக்கும் தர்ம்மமான இவ் வெம்பெருமாநுக்கு அமுதுபடி சாத்துப்படிகளுக்கும் திருப்பணிகளுக்கும் திருநாள்
    6. தேவைகளுக்கும் உடலாக வைத்துக் குடுத்தபடி ஆட்டைக்கு ஏரால் பதக்கு நெல்லும் ஆளால் குறுணி நெல்லும் மாலை கட்டி பரிமாறுவார் ஆளுக்கு ஐஞ்சு காசும் இடக் கடவர்களாகவும்
    7. நங்கீழ் பணிமக்கள் ஆட்டைக்கு இரண்டு காசு இடக் கடவர்களாகவும் நம் ஊர் கோபாலர் குடியால் ஆட்டைக்கு நாநாழி நெய்யளக்கக் கடவர்களாகவும் இப்படி வைத்துக் குடுத்தமையி
    8. ல் இது தண்டுவாருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கும் பூரிஅரிசி கலமும் ஐம்பது பாக்கும் வெற்றிலைபற்று இரண்டும் உப்பு நாநாழியும் மிளகு உரியும் எள்ளெண்ணெய் நாழியும் குடு
    9. க்கவும். இப்படி இவை தண்டுமிடத்து வெண்கலம் பறித்தும் மட்கலம் தகத்தும் கொள்ளக் கடவர்களாகவும். இத்திருமுற்றத்து திருவிடையாட்டங்கள் அழி பிழை அந்நியாயம் செய்தார் நாட் (எஞ்சியவை  சுவற்றில்  மறைந்துள்ளன)

    சிம்ம நாயற்று – ஆவணி மாதம்; ஸ்ரீமத் – புகழ்மிக்க; சாத்துபடி – பூ, மாலை முதலிய சாற்றுவது; உடலாக – மூலதனமாக; தண்டு – வாங்கு, collect; திருமுற்றம் – கோவில் வளாகம்;

    விளக்கம்: இரண்டாம் இராதிராஜனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170 இல் ஆவணி மாதம் முதல் பாதி வளர்பிறை 13 ஆம் நாளில் திங்கட் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நன்நாளில் “புகழ்மிக்க பூமி மக்களின் நால்வருணத்து குலத்தில் பிறந்து உலக நன்மைக்கும் பொருட் தேவைக்கும் இயங்குகின்ற சித்திரமேழியர் கல்வெட்டு ஆவணம் இது” என்று மெய்கீர்த்தி பாடுகிறது. பார்க்கவ கோத்திரத்து 79 நாட்டவரின் உயர்ந்த நீதியும், உயர் பெருங் கீர்த்தியும், முத்தமிழ் மாலை என்ற மூன்று சிறப்பும் நிறைந்த சித்திர மேழிப் பெரிய நாட்டவரும் நான்கு திசைகளிலும் பயணித்து 18 பூமி தேசி திசை அறிந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினரும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டின் பிரம்மதேயமான திட்டைகுடி திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலத்தின் திருமேலைக் கோயிலான 79 நாட்டவரின் திருமால் கோவிலில் எம்பெருமான் திருமுற்றத்தில் நாநூற்றுவன் திருமண்டபத்தில் நிறைந்து கூடி இந்த திருமுற்றத்தில் பூமா தேவியின் சிலையை எழுந்தருளிவித்து அங்கே கலப்பைத் தோரணமும் கட்டி நாட்டிற்கும் நகரத்திற்கும் அறமான இந்த எம்பெருமானுக்கு அன்றாட அமுதுபடிக்கும் பூ, மாலை அலங்காரத்திற்கும் தெய்வத் திருப்பணிகளுக்கும் உற்சவ தேவைகளுக்கும் மூலதனமாக இருப்பதற்கு என்று செய்து கொடுத்த ஏற்பாட்டின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏருக்கு பதக்கு நெல், ஆளுக்கு குறுணி நெல் என்ற மேனியில் கொடுப்போம். மாலை கட்டித் தருபவர் ஆள் ஒருவருக்கு 5 காசும் கொடுக்க வேண்டும். நம் கீழே பணி மக்களாக வேலை செய்பவரும் ஆண்டு ஒன்றுக்கு 2 காசும் கொடுக்க வேண்டும். நமது ஊர் இடையர் குடும்பம் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு நான்கு நாழி அளவு நெய் கொடுக்க வேண்டும். இப்படி ஏற்பாடு செய்து கொடுத்தமையில் இதை வசூலிப்பவருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கு அளவும், பூரி அரிசி கலம் அளவும், 50 பாக்கும், வெற்றிலைப் பற்று இரண்டும், உப்பு 4 நாழி அளவும், மிளகு உரி அளவும், எண்ணெய் நாழி அளவும் கொடுக்க வேண்டும். இவ்வாறு வசூலிக்கின்ற போது வெண்கலத்தைப் பிடித்தும் பானையை தகர்த்தும் வாங்கிட வேண்டும். இது என்ன மூட நம்பிக்கையோ தெரியவில்லை!! வெண்கலம் செல்வத்தின் குறியீடு மட்கலம் ஏழ்மையின் குறியீடு. இந்த திருமுற்றத்தில் அழிபிழைகள் அநியாயங்கள் செய்தவர் நாட்டில் என்ற அளவில் கல்வெட்டு சுவற்றில் மறைந்த உள்ளதால் மேலும் ஏதும் அறிந்து கொள்ள முடியவில்லை.

    சித்திர மேழியர், வணிகர் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், இடையர் ஆகியோர் உபயமாகப் பொருள் கொடுக்க வேண்டும் என்ற இந்த உடன்பாட்டை கூர்ந்து கவனித்தால் இம்மூவரும் பார்க்கவ கோத்திரத்தார் என்று புரிகிறது. இதை 79 நாட்டவர் விண்ணகர் என்னும் சொல்லாட்சி உறுதிப்படுத்துகிறது. தொடக்கத்தில் ஆடு, மாடு மேய்த்தும் பின்பு நாகரீக வளர்ச்சியில் உழவுத் தொழிலை மேற்கொண்டும் அதன்பின்பு தம் விளைபொருளை விற்க வணிகத் தொழிலையும் ஏற்றுள்ளனர். இன உணர்வு இல்லாவிடில் யாரும் இவ்வாறான உடன்படிக்கைக்கு உடன்படமாட்டார் என்பது தெளிவு. இன உணர்வால் அன்றி மதத்தால், பிராமணரால் சாதியை உருவாக்க முடியாது என்பதை திராவிட அரசியல் மறைக்கின்றது. உண்மையை விடுத்து பொய் உரைக்கின்றது. மதத்தை, பிராமணரை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று வெறுப்பை பரப்புகின்றது. அறிவு மயக்கமுற்ற தமிழர் தான் இதில் தெளிவடைய வேண்டும். மதமோ பிராமணரோ கால்நடை மேய்த்த நத்தமக்களை உழவில் ஈடுபடச் சொல்லவில்லை. அப்படி உழவிற்கு மாறியவரை மதமோ பிராமணரோ வணிகத்தில் ஈடுபட அறிவுறுத்தவில்லை. இந்த தொழில் மாற்றம் நாகரிக வளர்ச்சியால் உண்டானது. அற்றை நாளில் சாதியே உந்து விசையாக (driving force) இருந்தது என்பதை இக் கல்வெட்டு தெளிவாக்குகிறது. மேலும் இது ஒரு சாதி ஆணைக் கல்வெட்டு. ஊர்ச் சாதிமார் அத்தனை பேரும் இதற்கு கட்டுப்பட்டவர்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 291 (A.R. No 21 of 1903)

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் ஏரி பழைய மதகின் தூண் ஒன்றில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ இ
    2. த் தூம்பு திட்
    3. டிட்டு வெ
    4. ன்றான். இது
    5. இடுவித்தா
    6. ன் மலையந்
    7. மலையநாந
    8. குலோத்து
    9. ங்க சோழக்
    10. கோவலராஜ
    11. ன்

    தூம்பு – மதகு; திட்டு – மேடு; வெல் – மேம்படுத்து, இடுவி  – செய்வி, கோவலராஜன் – திருக்கோவிலூர் அரசன்.

    விளக்கம்: இது 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. இங்கு மலையமான் குலோத்துங்க சோழன் என்று பெயர் கொண்டுள்ளான். முதல், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர் மூவரும் 12 ஆம் நூற்றாண்டினர் எனவே இவன் 12 ஆம் நூற்றாண்டினன் என்று கொள்ளலாம். இந்த மதகும் கரைமேடும் மேம்பட செய்வித்தான் மலையர்குடி மலையமானான குலோத்துங்க சோழ திருக்கோவிலூர் அரசன். இங்கு மிலாடு – மலாடு ஆகிய சொற்கள் தவிர்க்கப்பட்டு மலையன் என்று குறித்திருப்பது இவருக்கு மிலாடு என்னும் சங்கத்தை கூட்டும் பொறுப்பு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மலையமான்கள் வெவ்வேறு பிரிவாக ஆண்டதும் இதற்கு காரணம் ஆகலாம். கோவல என்றால் இடையன் என்று பொருள். கோவலூர் பின்னீடு கோவிலூர் என்று தவறாக வழங்குகிறது. எனவே கோவலராசன் என்றால் இடையர்க்கு அரசன் என்பதே நேர் பொருள். இயாதவ வீமன் உத்தம சோழன் என்ற பெயரில் இருந்து இது தெளிவாகிறது. தொடக்கத்தில் மலையமான்கள் இடையராக இருந்து பின்பு மருத நில மக்களாகி அதன் பின் அந்த மருதநில மக்களே சித்திரமேழிப் பெருநாட்டு வணிகராகவும் உருவெடுத்துள்ளனர் என்று தெரிகின்றது. மேலும் கிளியூர் மலையமான்கள் காலம் முதல் மிலாடுடையான் என்ற சொல் கல்வெட்டில் அவர் பெயருடன் இடம்பெறுவதில்லை என்பதை நோக்க மிலாடு கூட்டும் உரிமையை சோழ வேந்தனால் மலையமான்கள் இழந்திருப்பரோ என்று எண்ணம் எழுகிறது. எனவே இந்த கல்வெட்டும் மிலாடு > மலாடு என்பது மலைநாடு என்பதன் திரிபு என்பதை நொறுக்குகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 1, பக். 26,

    தென்னார்க்காடு மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள ம. புடவூர் திருவனந்தீசுவரர் கோயில் மகாமண்டப வடசுவர் மேற்குப் பக்க முப்பட்டைக் குமுதப் பகுதியில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்க்கு யாண்டு 8 ஆவது இருங்கோளப்பாடி நாட்டு வேட்ப்பூருடையான் பெரியான் திருவனான இராசராச  மிலாட
    2. குலராயனேன் மிலாடாகிய செனனாத வளநாட்டுக் கீழ்நரையூர் கூற்றத்துப் புடவூரில் நான் எழுந்தருளிவித்த உடையார் திருவனந்தீச்வரமுடைய நாயநார் திருநாமத்துக்
    3. காணி ஆக நான் காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் வேட்ப்பூருடையான் பெரியாந் திருவனான இராசராச மிலாடகுலராயனேன்

    திருநாமத்துக் காணி – கடவுள் பெயரில் நில உரிமை

    விளக்கம்: இரண்டாம் இராசாதிராச சோழனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் 1174 இல் இருங்கோளப்பாடி நாட்டின் வேட்ப்பூரில் வாழும் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் மலையமான்களின் ஆட்சிப்பகுதி மிலாடாகிய செனனாத வளநாட்டின் கீழ்நரையூர் கூற்றத்தில் அடங்கிய புடவூரில் நான் எழுந்தருளுவித்த இறைவன் திருவநந்தீஸ்வர நாயனாருக்கு அவர் பெயரில் நீர்வார்த்து காணி கொடை கொடுத்தேன் வேட்பூர் வாழ் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் என்கிறான். இங்கு மிலாடகுலம் என்பது பார்க்கவகுலம், மலையர்குலம் என்று பொருள்படும். இவன் மலையர் நாட்டில் வாழாதவன் ஆயினும் மலையர்நாட்டில் ஒரு கோவில் கட்டுவித்து அதில் லிங்கத்தை நிறுத்து உள்ளான். இவன் அரசன் அல்லன் ஆயினும் மலையர் குடியில் பிறந்தவன் என்று தெரிகின்றது. இப்படி மிலாடு என்ற சொல் பலவாறாக பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் மலையமான்கள் மன்னர் என்ற நிலைக்கும் கீழே அரையர், கிழார் நிலையிலும் ஆண்டுள்ளனர். காட்டாக,  வாலிகண்டபுரம் வன்நாடு என்னும் சிறு நாட்டுப் பகுதியில் அடங்கியது. முதற் பராந்தகன் காலத்தில் அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் 911 இல் வீரசோழ மிலாடுடையான் என்று ஒருவன் ஆண்டுள்ளான். இவன் மனைவியானவள் வன்னாடுடையார் அக்கோப்புகழறையார் மகளார் நாட்டடிகளார் வைத்த விளக்கிற்கு பொன் 7 கழஞ்சு கொடுத்துள்ளாள் என்கிறது வாலிகண்டபுரம் கல்வெட்டு. இவள் தந்தை அக்கோப்புகழறையார் ஒரு கிழார் நிலை ஆட்சியாளர். எனில் வீரசோழ மிலாடுடையான் கிழான் அல்லது அரையன் என்று புரியும். இதே காலகட்டத்தில் மன்னனாக சித்தவடவன் என்பவன் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் 914 இல் ஆண்டுள்ளான்.

    பார்வை நூல்: ஆவணம் 3, 1993, பக். 2

    Share
  • தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு

    தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு

    நேற்று நானும் என் அம்மா செளந்திரவல்லியும் சென்னை, அம்பத்தூர், வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் எங்கள் வாக்குகளைச் செலுத்தினோம்.

    எங்களுக்கு முன்னால் வாக்குச் செலுத்திய பெண் (வயது 60 இருக்கலாம்), எப்படி வாக்குச் செலுத்துவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். வாக்குச் சாவடியில் இருந்தவர்கள், நீங்கள் அவருக்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நான் அந்தப் பெண்ணிடம், யாருக்கு வாக்களிக்க எண்ணியிருக்கிறீர்களோ, அவர் பெயருக்கு எதிரில் இருக்கும் பொத்தானைச் சற்று நீண்ட நேரம் அழுத்துங்கள் என்றேன். அவர் ஒரு சின்னத்தைத் தேடினார். அது எங்கே இருக்கிறது என்று காட்டிவிட்டு வெளியே வந்தேன். அவர் அழுத்தினார். சத்தம் வந்ததும் வெளியே வந்தார்.

    மின்னணு வாக்கு எந்திரங்கள் அறிமுகமாகி, இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் வாக்களியுங்கள் என்று தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு ஊட்டி வருகிறது. கூடவே, எப்படி வாக்களிக்க வேண்டும் என டம்மி பெயர்கள் / சின்னங்கள் ஆகியவற்றை வைத்து, கற்றுக் கொடுக்க வேண்டும். டம்மி எந்திரங்களை எல்லா ஊர்களிலும் வைத்து, சரியாக வாக்களிப்பவர்களுக்குப் பரிசும் வழங்கலாம்.

    மேலும் சுயேச்சை என்ற சொல்லை எல்லா இடங்களிலும் சுயேட்சை என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். மேலும் பல பெயர்கள், பதவிகள் ஆகியவை, ஆங்கிலத்திலேயே இருந்தன. மொழியிலும் தரத்தைப் பேண வேண்டும்.

    வாக்காளர் அட்டையில் என் பெயரின் தமிழ் எழுத்துக்கூட்டலில் பிழைகள் உள்ளன. இதைத் திருத்துவதற்கு வேறு ஒரு நாளில், குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்றார்கள். எல்லா வாக்குச் சாவடியிலும் இதற்கென ஒருவரை அமர்த்தி, கையோடு படிவத்தையும் சான்றுகளையும் பெற்றுத் திருத்தினால், இரு தரப்பிலும் நேரம் மிச்சமாகும்.

    Share
  • பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை

    பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    கைபேசி: 6381629365
    மின்னஞ்சல் : kumaritathithan@gmail.com

    ஆவணங்கள் கடந்தகால வரலாறுகளை எடுத்தியம்புவன. அவ்வாவணம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதன்மையான பதிவுகள் தொடங்கி சிறு நிகழ்வுகள் வரை ஆதாரத்தோடு பதிவு செய்யப்படுமானால் அவை ஆவணம் எனப்படும். அவை படிவம், பத்திரம், இலக்கியம் என எந்த வடிவத்திலும் அமைந்திருக்கலாம். அதேபோல அவை செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களிலோ ஓலைகள், திரைச் சீலைகள், காகிதங்கள், கற்கள், போன்றவற்றிலோ, வரி வடிவமாகவோ, ஓவியங்களாகவோ, குறியீடுகளாகவோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம். இந்த ஆவணங்களைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் இடமே ஆவணக் காப்பகம் எனப்படும்.

    நமது நாட்டில் தொன்மையான காலம் தொட்டு இவ்வகை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சோழர்கால கல்வெட்டுகள் மூலம் ஆவணங்களைப் பாதுகாக்கும் இடங்கள் ஆவணக்களரி என அழைக்கப்பட்டதனை அறியமுடிகிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணத்திலும் ஆவணம் குறித்தும், ஆவண மேலாண்மை குறித்தும் தரவுகள் இடம்பெற்றுள்ளன.

    பெரியபுராணத்தில் நம்பியாரூராருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றபோது அங்கு அந்தணர் உருவில் சிவபெருமான் வந்தார். அவர் நம்பியாரூராரிடம், “எனக்கும் உனக்கும் முன்பே ஓர் ஒப்பந்தம் இருக்கிறது. அதனை மீறி திருமணம் செய்கிறாய். அவ்வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்” என்கிறார். நம்பியாரூராரும் வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அந்தணர் அவரிடம் அந்தக் காலத்தில் உன் தந்தையயின் தந்தை எனக்கு எழுதித்தந்துள்ள ஆவணம் – அடிமை ஓலை என்னிடம் உள்ளது என்கிறார். அந்தணரிடம் இருக்கின்ற அடிமை ஓலையைக் காட்ட சொல்கிறார் நம்பியாரூரார். அதைக் கேட்ட அந்தணர், “நீ ஓலையைப் பார்த்துப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள தக்கவனாக இல்லை. அவையில் உள்ளவர்களிடம் காட்டினால் அவர்கள் நீ எனது அடிமை என்று சொல்வார்கள்” என்கிறார்.

    ஓலையைக் காட்ட மறுத்ததும் அதனைப் பறித்திட நம்பியாரூரார் செல்ல, அந்தணர் ஓட இறுதியாக அந்தணரை எட்டிப் பிடித்து அவரிடம் இருந்த ஓலையைப் பெற்று படித்தார். அதில் அடிமை என்று அவரது முன்னோர் எழுதி வழங்கியிருப்பதைக் கண்டார். உடனே அவ்வோலையைக் கிழித்து எறிந்துவிட்டார். அந்தணர் அங்கிருந்த அவையோர்களிடம் முறையிடலானார். அந்தணரிடம் அங்கிருந்த மக்கள் உலக நடைமுறையில்லாத ஒன்றை நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க, அருகில் உள்ள திருவெண்ணெய் நல்லூர்தான் எமது ஊர் என்கிறார். அதோடு அறநிலை உணராமல் கையிலிருந்த ஓலையைப் பறித்து கிழித்ததன் மூலம் நம்பியாரூரார் எனது அடிமை என்பது உறுதியாகிவிட்டது என்றார்.

    வாதிடுவதில் வல்லவராக இவ்வந்தணர் இருக்கிறார். ஓர் ஆவணத்தைக் காட்டி இங்கே வழக்காட வந்திருக்கும் இவரை வெற்றிகொள்ள திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்திற்குச் செல்வதே உகந்ததாக இருக்கும் என்றெண்ணி  அந்தணரை அங்கு அழைக்கிறார் நம்பியாரூரார்.

    திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்தை அனைவரும் அடைந்தனர். அந்தணர் தனிநபராக நின்று நம்பியாரூரார் தமது அடிமை என வாதிட்டார். வாதத்தின் போது நம்பியாரூராரின் தந்தையின் தந்தை எழுதிக்கொடுத்த ஓலை ஆவணத்தைச் சாட்சியாக வைத்தே தாம் முறையீடு செய்ய வந்ததாகவும் அந்தணர் கூறுகிறார். அதனைக் கேட்ட அம்மன்றத்தார் அவரின் ஓலையை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டால் வெற்றியாகிவிடுமா? என்ன சொல்கிறீர் என நம்பியாரூராரைக் கேட்டனர். அதற்கு உலகியலுக்கு மாறாக இந்த  அந்தணர் பேசுகிறார். இது எனக்கு தெளிவளிக்காத ஒன்றாக உள்ளது என்றார்.

    அறமன்றத்தார் அந்தணரிடம் அனைவர் முன்னிலையில் நம்பியாரூராரை உங்கள் அடிமை என்று உரைத்ததனை மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு மூன்று வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

    “ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற் றயலார் தங்கள்
    சாட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
    மூட்சியிற் கிழித்த ஓலை படியோலை மூல ஓலை
    மாட்சியிற் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்”

    (பெரியபுராணம்-202)

    இவ்வாறு நம்பியாரூரார் அடிமை என்பதற்கான நிகழ் சான்றான ஆட்சி, அடிமை என்பதற்கான ஆவணச் சான்று, அயலவர் சாட்சி என்ற மூன்றில் ஒன்றை காட்ட முடியுமா? என அற மன்றத்தார் கேட்க ஆவணச் சான்றை முன்வைக்கிறார். முன்னர் நம்பியாரூரான் கிழித்தது படிஓலை. மூல ஓலையை அறமன்றத்தில் காட்டுவதற்காக வைத்துள்ளேன் என்கிறார் அந்தணர்.

    அறமன்றத்தார் மூல ஓலையைக் காட்டச் சொன்னதும் நம்பியாரூரான் இந்த மூல ஓலையையும் பறித்துக் கிழிக்காமல் பார்த்துக்கொள்வதானால் மூல ஓலையைக் காட்டுகிறேன் என்கிறார். அவையோர் ஒத்துக்கொள்ள எடுத்துக் கொடுக்கிறார். அங்கிருந்த கரணத்தான் என்னும் எழுத்தர் அவ்வோலையைப் பெற்று சோதிக்கிறார். ஓலையின் பழைமையைச் சோதித்த பின்பு ஓலையில் இருந்த செய்தியினைப் படித்தார். அதில் ஆதிசைவ மரபிலே ஆரூரன் என்ற நான் இதன் மூலம் எல்லாரும் அறிய எழுதிவைக்கும் செய்தியானது, பெருமுனிவரான வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு நானும் என் வழியில் வருபவரும் வழிவழியாய்த் தொண்டு செய்து வருவோம் என்பதற்காக உடன்பட்டு இந்த ஓலையை மனமும் செயலும் சம்மதித்து, எழுதித்தந்தேன். இதற்கு என் கையெழுத்து என்று இருந்தது.

    ஓலையில் உள்ள செய்தியை அறிந்ததும் அதில் உள்ள ஒப்பம் நம்பியாரூராரின் பாட்டனாரின் ஒப்பம்  என்கிற உண்மையை ஆராய்கின்றனர்.

    “அந்தணர் கூற இன்னும் ஆள்ஓலை இவனே காண்பான்
    தந்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண் டாகில்
    இந்த ஆவணத்தி னோடும் எழுத்துநீர் ஒப்பு நோக்கி
    வந்தது மொழியின் என்றான் வலியஆட் கொள்ளும் வள்ளல்”

    (பெரியபுராணம் – 207)

    இவ்வாறு அந்தணர் கூறியதால் அங்குள்ள பழைய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஓலைகளில் காணப்படும் நம்பியாரூராரின் தந்தையின் ஒப்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அவை ஒன்றுபோல் அமைகின்றன. எனவே அந்தணருக்கு நம்பியாரூரார் அடிமை என்பதாகத் தீர்ப்பளிக்கப்படுகிறது. அந்நிலையில் நம்பியாரூரார் அந்தணரிடம் இங்கே நீங்கள் வழிவழியாக வாழ்ந்து வரும் வீட்டைக் காட்டுங்கள் என வினவுகிறார். அவர் காட்டுவதற்காக அழைத்துச் செல்கிறார். திருவருள் துறைக் கோயிலினுள் சென்றதும் அந்தணர் மறைந்துவிடுகிறார். இவ்வாறு நம்பியாரூராரைத் தடுத்து ஆட்கொண்ட கதை நமக்குத் தெரியும்.

    இக்கதையினை நுணுகி பார்க்கும் இடத்து நமது நாட்டில் தொன்மையான காலத்திலேயே ஆவண மேலாண்மையில் கொண்டிருந்த அறிவு வெளிப்படும். அக்காலத்திலேயே அறமன்றம் என்கிற நீதி வழங்கும் அவை இருந்ததையும் அறியமுடிகிறது.

    அதேபோன்று ஓலை ஆவணங்கள் படி எடுக்கப்படுவது, அவற்றின் நகல் ஆவணங்களின் பயன்பாடு ஆகியவை குறித்த பதிவுகளும் இக்கதையில் இடம் பெறுகின்றன. மேலும் ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பும் அக்காலகட்டத்தில் அமைந்திருந்ததையும் அங்கு ஓலை ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப் பட்டுருப்பதனையும் அறியமுடிகிறது. இவ்விலக்கிய ஆதாரம் ஆவண மேலாண்மையில் நமது முன்னோர்கள் சிறந்திருந்ததனை எடுத்துரைக்கிறது எனலாம்.

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9]

    கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    காகிதங்கள் பயன்பாட்டுக்கு வராது இருந்த காலத்திலும் – பலவகையில் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா! ஆச்சரியப்படவே தேவை இல்லை! வெளிவந்த பல்துறை சார்ந்த நூல்களுமே கற்பகதருவாம் பனையின் ஓலையில் எழுதப்பட்டே  வந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமாகும். எங்களின் எழுத்தறிவினைச் சுமந்த பனை ஓலைச் சுவடிகள் அறிவின் சின்னம் என்பதில் பெருமை அல்லவா! ஏடு என்றாலே பனைதான்  எல்லோர் கண்முன்னே வந்து நிற்கும். ஏடு என்ற சொல்லின் வேரே பனை ஓலை அல்லவா !

    பனை ஓலை அரசாங்கத்தின் எழுதுகின்ற பொருளாகப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. காகிதம் பயன்பாட்டுக்கு வரமுன்னர் எழுதுவதற்கு எங்களுக்குக் கைகொடுத்த தெய்வமாய் பனையும் அதன் கொடையான ஓலைகளுமே விளங்கின என்பதை கருத்திருத்தல் மிகவும் அவசியமாகும்,

    பனை ஓலைச் சுவடிகள் பலவற்றை எங்களின் முன்னோர்கள் பலர் தேடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்றும் ஓலைச் சுவடிகளைத் தேடும் பணியில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டும் வருகிறார்கள். பனை ஓலைச் சுவடிகளைத் தேடி உ.வே.சா என்னும் எங்கள் தமிழ்த் தாத்தா நெடும்பயணம் மேற் கொண்டார் என்பதை யாவரும் அறிவோம். அவரின் வழியில் இன்று பலரும் பயணப்பட்டு பல பனை ஓலை ஏட்டுச் சுவடிகளைப் பல இடங்களிலும் கண்டு தேடிப் பெற்றிருக்கிறார்கள் . ஓலைச் சுவடிகளை வீட்டின் கூரையில் வைத்திருந்திருந்திருக்கிறார்கள். ஓலைச் சுவடிகளைத் தேடிப் போனவர்கள் – வீட்டுக்குரியவர் கூரையில் சொருகி வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை – அவர்களிடமிருந்து பெற்ற வரலாறுகளையும் அறிந்திடக் கூடியதாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டு வரையிலும் பத்திரப்பதிவு என்பது ஓலையி ல்த்தான் அமைந்திருந்தது. “தீட்டு” என்னும் பெயரால் இந்த எழுதப்பட்ட ஆவணங்கள் அழைக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளைத் தொகுத்து வைத்த தொகுப்பினை “கருணை” என்று பெயரிட்டு அழைத்தனர். ஓலைகளில் எழுதும் எழுத்துக்களை கேரளத்தில் – கோலெழுத்து, கண்ணெழுத்து என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள்.

    செட்டி நாட்டு வணிகர்கள் தங்களின் கணக்குகளை எழுதுவதற்கு ஓலைச் சுவடிகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள். தம்மபதம் என்னும் பெளத்த நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஓலைச் சுவடியிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

    திபெத்து நாட்டில் தமிழ் நாட்டின் ஓலைச்சுவடிகள் பல கிடைத்திருக்கின்றன என்று அறிய முடிகிறது, திருவாங்கூர் பகுதியில் பழைய ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. “அழகிய பாண்டிபுரம் பெரிய வீட்டுச் செட்டியார் ஓலைகள்” என்று இந்தப் பழைய ஓலைச்சுவடிகள் அழைக்கப்படுகின்றன.

    ஓலைச் சுவடிகள் எங்களின் மிகப்பெரிய பொக்கிஷமாகும். அந்த ஓலைச் சுவடிகளை அளித்த கற்பக தருவான பனையினை நாங்கள் எக்காலத்தும் மறந்துவிடுதல் கூடாது. அப்படி நாங்கள் மறந்து விடுவோ மேயானால் நன்றி என்னும் சொல்லையும் மறந்து விட்டவர்களாகி விடுவோம். மருத்துவம், சோதிடம் சிற்பம், ஓவியம், இலக்கியம், இலக்கணம், கணிதம், நிகண்டு, நாட்டர் வழக்காறுகள்,  வரலாறு,  சமயம், தத்துவம், என்று பல்கிப் பெருகி நிற்கும் அறிவுக் கருவூலங்கள் அனைத்தையும் பனை ஓலை தன்னகத்தில் நிறைத்துக் கொண்டது. பனையின் ஓலைகள் எழுதுவதற்கு ஏற்றனவாய் அமைந்ததுவே பெரும் வரப்பிரசாதம் என்றுதான் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    ஓலைச் சுவடிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களால் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பல கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் திருநெல்வேலிப் பகுதியில் பல ஓலைச்சுவடிகளை அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். அண்ணாவிமார் வீடுகளில் நாடகச் சுவடிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள் மருத்துவம் சம்பந்தமான ஒலைச்சுவடிகளை வைத்து அதன்படி மருத்துவம் செய்வதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.  சோதிடர்கள், குறிசொல்லும் குறவர்கள், வில்லிசைக் கலைஞர்கள், ஓலைச் சுவடிகளைத் தம்வசம் வைத்திருந்து பாதுகாத்து வருகிறார்கள் என்பதையும் ஓலைச்சுவடி தேடிச் சென்ற வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல ஜமீந்தார்கள், பண்ணையார்கள், வீடுகளிலும் பழைய ஓலைச் சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். கோவில்கள், பலரின் வீடுகளில் உள்ள பூஜை அறைகள், இங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் இருப்பதையும் கண்டிருக்கிறார்கள். கேரளப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் கன்யாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இச்சுவடிகளில் பெரும்பாலான சுவடிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்களில்தான் மிகுதியாக  இருப்பதாக அறிய முடிகிறது. கிராமியத் தெய்வங்கள் பற்றியகதைப்பாடல்கள், வில்லுப்பாட்டுக் கதைகள், கட்ட பொம்மன் கதைகள் அடங்கிய ஓலைச் சுவடுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்,

    இலங்கையிலும் பல ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன. அனுராதபுரத்தில் 1110 வருட பழமைவாய்ந்த ஓலைச்சுவ டிகளை கண்டறிந்திருக்கிறார்கள், கேரள மணிகண்டம் என்னும் சோதிடம் பற்றிய ஓலைச் சுவடிகள், அதைவிட – குருநாடி சாத்திரம், அகத்தியர் நாடி சாத்திரம், கிரகச் சக்கர ஞான ஏடு, சித்தாரூடம், ஆதித்தன் பலன் என்று சோதிடம் சம்பந்த மான சுவடிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அகத்தியர் நூறு, அகத்தியர் வாகடம், அகத்தியர் கற்பம், அகத்தியர் உட்கரு சாத்திரம், அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் என்னும் பெயரில் அமைந்த மருத்துவ ஏடுகளும் கண்டறியப்பட்டிருக்கி ன்றன.

    தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பழைய நூலகத்தில் ஏறக்குறைய தொண்ணூற்று ஐயாயிரம் ஓலைச்சுவடிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது கவனத்துக்குரியதாகும், அத்தனை ஓலைச்சுவடிப் பொக்கிஷங்களும் அறிவற்றவர்களின் அசுரத்தனத்தால் அக்கினிக்கு இரையாகிவிட்டன என்பதையும் கவலையுடன்தான் மனமிருத்த வேண்டி இருக்கிறது.

    கற்றறிந்த பெரியோர்களின் வழி காட்டலில் இளையவர்கள் பலர் கை கோர்த்து “நூலக நிறுவனம்” என்னும் அமைப்பினூடாக  பழைய ஓலைச் சுவடிகளைத் தேடி – அவற்றைச் சேகரிப்பதோடு; தக்க முறை யில் சுத்தப்படுத்திப் பத்திரப்படுத்தி யாவரும் அறியும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஆடிய பாதம் வீதியில் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற பாங்கினை யாவரும் மனமெண்ணி பெருமைப்படுவது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இவர்களின் தேடல்கள் வழியில் பல ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஓலைச்சுவடிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட வேளை கந்தபுராண ஓலைச்சுவடிகளை தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் கண்டதாகவும் அங்கிருந்து அந்த ஓலைச் சுவடி களைப் பெற்றுக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.

    இலங்கையில் சுவடிகளுக்கென்று கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே நூலகம் இருந்ததை அறிய முடிகிறது. பெளத்த விகாரைகள் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் இடங்களாக இருந்திருக்கின்றன. ஆரம்பகால நூலகங்கள் இன்று பல்கலைக்கழகங்களில் இருப்பதுபோல சிறப்பாக இருந்திருக்கின்றன என்றும் அறிய முடிகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில்  “சரஸ்வதி மகாலயம்” என்னும் பெயரில் ஒரு நூலகம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இயங்கி இருக்கிறது  என்பதையும் வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.  இங்கு பல ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலகம் அமைந்த இடம் எது என்று அறிய ஆவலாய் இருக்கிறதல்லவா ? அந்த இடம் தான் நாயன்மார்க்கட்டாகும்.

    இன்னுமொரு சிறந்த சுவடிகள் நூலகமும் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறது. எங்கு தெரியுமா? மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆதீனத்தில்த்தான். பல துறைகள் சார்ந்த ஓலைச் சுவடிகள் இங்கு இருந்தன என்றும் அறிகின்றோம். பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் புகழ்பூத்த பல்கலைக் கழகமாகும். சுவாமி விபுலானந்த அடிகளாரை தமிழ்த்துறைத் தலைவராய், பேராசிரியராய், அமர்த்திப் பெருமை கொள்ளவைத்த பல்கலைக்கழகமாகும். இங்கு மிகவும் சிறந்த நூல்நிலையம் அமையப் பெற்றிருக்கிறது. அந்த நூல்நிலையத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு தனி அறையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பல அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது கருத்திருத்த வேண்டிய செய்தி எனலாம்.

    மட்டக்களப்பு மான்மியம் என்னும் சிறந்த ஒரு நூலை ஆக்கியவர் வித்துவான் எவ்.எக்ஸ்.சி . நடராசன் அவர்கள். அந்த நூலினை ஆக்குவதற்கு அருந்துணையாக அமைந்தன பழைய ஓலைச் சுவடிகளே என்று அவர் தனது நூலின் முன்னுரையில் காட்டுவதும் நோக்கத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு மிகவும் பக்திபூர்வமாக இன்றும் மக்களால்  பேணப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண மாவட்ட த்தைவிட – கிழக்கு இலங்கையில் கண்ணகி வழிபாடு சிறப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடப் பட வேண்டிய முக்கிய செய்தி எனலாம். வைகாசி மாதத்தில் அம்மனுக்கு பல விசேடங்கள் நடைபெறும். அதில் ஒன்று “கொம்பு முறித்தல்” என்பதாகும். குளித்திப் பாடல்களும் பக்தியுடன் பாடப்படும். கண்ணகை அம்மன் கோவில்களில் பெரிய பெட்டகம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்தப் பெட்டகத்துள் பழைய ஓலைச்சுவடிகள் நிறையவே இருந்ததையும் நான் கண்டிருக்கிறேன். சித்திர புத்திரன் கதையினை ஏடுகளில் வைத்து அந்த ஏடுகள் வைப்பதற்கான பிணைச்சல் வடிவில் அமைந்த பலகையில் வைத்து கோவில்களில் பாடுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கதைகளையும் அதற்கான விளக்கங் களையும் என்னுடைய இளமைக் காலத்தில் கேட்டும் இருக்கிறேன். மாந்திரீக ஏடுகள், பில்லி சூனிய ஏடுகள், மருத்துவ ஏடுகள், சாதகம் எழுதப்பட்ட ஏடுகள், என்று பலவகைப்பட்ட ஓலைச் சுவடிகளை பலரின் வீடுகளில் நான் கண்டிருக்கிறேன். பனங்காடு என்னும் பெயருடைய கிராமத்துக்கு அயல் கிராமத்தில் வாழ்ந்தும் இருக்கிறேன். பனம்பழத்தை  சுவைத்த நினைவுகள் இன்றும் என்மனத்தில் பசுமையாய் இருக்கிறது. பனம்பழம் பற்றிய பகுதி வரும்வேளை அதனைப்பற்றி விவரமாய் பார்ப்போம்.

    ஓலைச்சுவடிகள் பல இன்னும் பலரிடம் முடங்கிப் போய் இருக்கின்றன என்று ஆராய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றையெல்லாம் சேகரித்தால் இன்னும் பல அரிய தகவல்களை எல்லாம் அறிந்திடவும் பயன்பெறவும் இயலும் அல்லவா  ! ஹாரிங்டன் என்னும் வெள்ளைக்காரர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடமையாற்றி இருக்கிறார். அவருக்குச் சமையல் செய்தவர் பெயர் கந்தப்பன். அவர் – தான் வேலைபார்த்த அந்த துரையிடம் ஓலைச்சுவடிகள் பற்றி கூறியிருக்கிறார். கிராமங்களில் உள்ள வீடுகளில் ஓலைச்சுவடிகள் பல இருப்பது வழக்கம். ஆனால் அவர்கள் அதனை வருட த்துக்கு ஒருமுறை தீயில் இட்டு விடுவார்கள். கறையான் அரித்தால் அப்படிச் செய்வார்கள். சில வேளை பயன் அறியாமலும் தீயில் போடுவதும் உண்டு. “தீயில் இட்டு எரித்துவிடு” என்று என்னிடம் ஒப்படைக் கப்பட்ட பல ஓலைச் சுவடிகள் இருக்கின்றன என்று கந்தப்பன் சொன்னதும் – துரை அவற்றைப் பெற்று சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறைக்கு பொறுப்பாய் இருந்த எல்லீஸர் என்பவரிடம் ஒப்படைத்தார். எல்லீஸரிடம் ஒப்படைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் திருக்குறள் ஓலைச்சுவடியும் இருந்திருக்கிறது என்பதுதான். முக்கியமாகும். எல்லீஸ் என்பவர் தமிழின் மீது கொண்ட காதலால் தமிழைக் கற்று கவிதை எழுதும் அளவுக்கு ஆளுமை உடையவராக விளங்கினார். திருக்குறளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிறார். தமது காலத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளை அச்சு வாகனம் ஏற்றினார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.    

    ஓலைச்சுவடிகள் பல பல இடங்களில் இன்னுமே இருந்தாலும் அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் இப்பொழுது  மேலோங்கி வருவது நல்லதொரு நிலை என்றுதான் கருதல் வேண்டும். ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் பாங்கில் நூலகங்கள் பல இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் – சென்னைப்பல்கலைக்கழக கீழ்த்திசைச் சுவடி நூலகம், உ.வே.சா. நூல் நிலையம், பிரமஞான சபை நூலகம், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, உலகத் தமிழாராய்சி நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம், காஞ்சி புரத்தில் காமகோடி பீடம் ஶ்ரீ சங்கராசாரியார் மடம், பாண்டிச்சேரியில் பிரஞ்சு இந்திய கலைக்கழகம், விருத்தா சலத்தில் குமாரதேவ மடாலயம்,  தஞ்சையில் – சரஸ்வதி மகால் நூலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தருமபுர ஆதீன மடாலயம் மயிலாடுதுறை, ஶ்ரீ காசி மடம் திருப்பனந்தாள் , திருவாவடுதுறை ஆதீனம், மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மடம் பேரூர், கலைமகள் கல்வி நிலையம் ஈரோடு, கேரளப் பல்கலைக்கழகம் கீழ்த்திசை சுவடி நிலையம் திருவனந்தபுரம்.  கள்ளிக் கோட்டை சர்வகலாசாலை. திருச்சூர் சாகித்திய அகாதமி, திருவேங்கடவன் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், உஸ்மானியாப் பல்கலை க்கழகம், தேசிய நூலகம் கல்கத்தா.

    அரசினரின் கீழ் இயங்கும் சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் தான் உலகிலே அதிகமான  ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இங்கு இருபத்து ஆறு  இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கொண்ட எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து எட்டு ஓலைச்சுவடிக் கட்டுகள் இருக்கின்றன என்பது முக்கிய மாகும்.

    ஓலைச் சுவடிகள் எங்களின் முதுசொம்மாகும். அதனை நாங்கள் அனைவருமே பாதுகாப்பதற்கும், உரியமுறையில் பேணுவதற்கு இயன்றவரை உதவிடுதல் என்பது மிகமிக அவசியமாகும். கற்பகதருவாம் பனை பற்றி சொல்ல வந்துவிட்டு – ஏடுகளைப் பற்றிய புராணம் பாடுவதாய் எண்ணி விடாதீர்கள். பனையின் ஓலை இல்லை என்றால் ஏடுகள் என்பதே வந்திருக்கவே முடியாது அல்லவா? ஓலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அல்லவா எங்கள் முன்னோரின் சிந்தனைகளை எம்மிடம் சேர்த்து நிற்க அருந்துணையாய் அமைந்தது அல்லவா? அப்படி அருந்துணையாய் அமைந்தனவே ஓலைச் சுவடிகள். எல்லா வற்றும் பனைதானே காரணம். பனை இல்லையேல் ஓலை வந்திருக்குமா ! ஓலை இல்லையே ஏட்டுச் சுவடிகள்தான் வந்திருக்குமா ! எனவேதான் பனையின் வரலாற்றில் ஓலைச் சுவடிகள் தொடர்பான வரலா றும் கட்டாயம் இணைக்கபடுதல் இன்றியமையாதது அல்லவா !

    விருதுநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான எஸ்.யோசப் என்பவர் மிகவும் சிறப்பான ஒரு செயலினைச் செய்திருக்கிறார். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களையும் பனை ஓலையில் எழுதிச் சாதனை படைத்திருக்கிறார். ஓலையிலும் எழுதலாமா? ஓலை எழுதுவதற்கு உகந்ததா என்று எண்ணுகின்ற இக்காலத்தவர்களுக்கு இந்த ஆசிரியரின் சாதனையானது எங்கள் கற்பகதருவாம் பனையின் மகத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காகிதம் பயன்பாட்டில் இருக்கும் வேளையிலும்; பனை ஓலை எழுதுவதற்கு உகந்ததாய் இருக்கிறது என்பதை இவரின் சாதனை காட்டி நிற்கிறது.

    “வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை
    கண்பார்க்கக் கையால் எழுதானை – பெண்பாவி
    பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாள்
    எற்றோமற் றெற்றோமற் றெற்று”

    Share
  • இரண்டறி கள்வி!

    -மேகலா இராமமூர்த்தி

    பிறரின் உடைமைகளைக் களவுசெய்பவனைத் திருடன், கள்வன், கள்ளன் என்ற சொற்களால் நாம் குறிப்பிடுவது வழக்கம். மனித வாழ்வுக்குப் பயன்படும் வெளிப்புற உடைமைகளை மட்டுமல்லாது மனிதரின் அகத்துடைமையான உள்ளத்தைத் திருடிச் செல்பவனைக் குறிக்கவும் நம் புலவர்கள் ’கள்வன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன.

    ”பல பொய்களைப் பேசவல்ல இந்தக் கள்வனின் பணிவான மொழிகள் அல்லவா என் பெண்மையை உடைக்கும் படையாக இருக்கின்றன!” என்று தலைவனின் பண்பு குறித்து எண்ணிப் பார்க்கும் தலைவி அவனைக் ‘கள்வன்’ என்று தனக்குள் செல்லமாய் அழைப்பதைத் திருக்குறளில் காண்கின்றோம்.

    பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை.
    (குறள்: 1258)

    வள்ளுவத் தலைவி தலைவனைப் ’பன்மாய கள்வன்’ என்றழைத்ததுபோல், தேவாரத்தில் திருஞானசம்பந்தர், தோடுடைய செவியனாய் வெண்ணிற மதிசூடி, சுடலைப் பொடிபூசிக் காளை வாகனத்தில் கம்பீரமாய்க் காட்சிநல்கும் சிவபெருமானைத் தம் ’உள்ளங்கவர் கள்வன்’ என்றழைக்கின்றார்.

    ”தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
     காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்” (சம்பந்தர் தேவாரம்)

    ஆண்பாற்சொல்லான திருடனுக்குத் ’திருடி’ என்பதனையும், கள்வன்/கள்ளன் ஆகிய சொற்களுக்குக் ’கள்ளி’ என்பதனையும் நாம் பெண்பாற் சொற்களாய்ப் பயன்படுத்தி வருகின்றோம்.

    ”அடிபோடிக் கள்ளி…சப்பாத்திக் கள்ளி” என்று தன் காதலியைப் பார்த்துப் பாடுகின்றான் இருபதாம் நூற்றாண்டுத் திரைக்காதலன் ஒருவன்.

    ஆனால், பண்டைத் தமிழிலக்கிய நூல்களில் ’கள்வி’ என்பதே கள்வனுக்கான பெண்பாற் சொல்லாகக் கையாளப்பட்டிருக்கின்றது. ’கள்ளி’ என்பது வறண்ட பாலைநிலத்துச் செடியைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சான்றுகள்:

    கள்ளி போகிய களரியம் பறந்தலை (புறம்: 225, 237, 245)
    கள்ளியம் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அகம் – 97)

    இனி, கள்வி எனும் சொல்லாடல் தமிழிலக்கிய நூல்களில் பயின்றுவந்துள்ள பான்மையைக் காண்போம்.

    ”கள்வி” என்ற சொல்லைத் தம்முடைய குறுந்தொகைப் பாடலில் பயன்படுத்திச் சுவையான காதல் நிகழ்வொன்றைக் காட்சிப்படுத்துகின்றார் பெரும்புலவர் கபிலர்.

    குறிஞ்சிநிலத் தலைவன் அவன்; இரவுநேரத்தில் யாருக்கும் தெரியாமல் தலைவியைச் சந்தித்துச் செல்பவன். தலைவியின் சாமர்த்தியத்தை வியந்து அவன் தனக்குள் எண்ணிப்பார்ப்பதாய் அமைந்த பாடலிது.

    இரண்டறி கள்விநம் காத லோளே
    முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
    முள்ளூர்க் கான நாற வந்து
    நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
    கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
    சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
    அமரா முகத்த ளாகித்
    தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந்: 312 – கபிலர்)

    ”நம் காதலி, இருவேறு விதமான நடத்தையை அறிந்த கள்வி. இருள்செறிந்த  இரவில், எப்பகையையும் எதிர்க்கும் வலிமையும் செவ்வேலையுமுடைய மலையமான் திருமுடிக்காரியின் முள்ளூர் மலைக்காட்டின் நறுமணத்தைப்போல் மணம்வீசும்படி வந்து, நம்மோடு மனம் ஒன்றினாள்; விடியற்காலத்திலோ, அவள் கூந்தலில் இரவு நான் சூட்டியிருந்த  பலவகையான மலர்களையும் உதிர்த்துவிட்டு மயிர்ச்சாந்து பூசிக் கோதிய மணமுள்ள கூந்தலில் எண்ணெய் தடவி, என்னை அறியாதவள் போன்ற மாறுபட்ட முகத்துடன், தன் உறவினர்களோடு ஒன்றியிருக்கின்றாள்.”

    அதுசரி…விடியற்காலையில் தலைவி அவள் வீட்டில் வேறுவிதமான ஒப்பனையோடு இருப்பது தலைவனுக்கு எப்படித் தெரியும்?

    இரவில் வருவது போதாதென்று ஒருநாள் விடியற்காலையிலும் விருந்தினன்போல் தலைவி வீட்டுக்குச் சென்றிருக்கின்றான் தலைவன். அப்போது அவள் கூந்தலில் முதல்நாள் இரவு அவன் சூட்டிய மலர்கள் இல்லை; வீட்டிலுள்ளோர்க்குத் தெரியாமல் அவற்றை உதிர்த்துவிட்டு, வாசனைத்தைலம் பூசிக் கூந்தலை வாரிக்கொண்டிருந்த அவள், இவனை யார் என்றே தெரியாதவள்போல் நடந்துகொண்டிருக்கின்றாள். அவள் சாமர்த்தியத்தைக் கண்டு அதிசயித்த தலைவன், ”அடேயப்பா! இவள் எனக்கும் தன் வீட்டார்க்கும் ஏற்றவகையில் நடந்துகொள்ளும் இரண்டறி கள்விதான்!” என்று தனக்குள் எண்ணிக்கொண்டான்.

    தலைவி இருவேறு விதமாக – இடத்துக்குத் தக்கபடி நடந்துகொள்ளும் சாமர்த்தியம் உடையவளாக இருந்தாலும், அவளால் நெடுங்காலம் களவொழுக்கத்தை மறைக்கமுடியாது. எனவே, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதுதான் சிறந்தது என்ற எண்ணமும் தலைவனுக்குள் எழுந்தது. 

    குறுந்தொகையைப் போலவே, நல்லந்துவனார் இயற்றிய பரிபாடலின் 20ஆம் பாடலிலும் ’கள்வி’ என்ற சொல்லைக் காணமுடிகின்றது. இங்கும் இச்சொல் இடம்பெற்றிருக்கும் பின்னணி சுவையானது.

    கார்காலம் தொடங்கிற்று. வையையில் புதுப்புனல் பாய்ந்து வந்துகொண்டிருந்தது; பல்வேறு மணமலர்களையும் அள்ளிக்கொண்டுவந்த அந்தப் புதுவெள்ளத்தில் ஆடுவதற்கு மதுரையின் மக்கள்வெள்ளம் ஆர்வத்தோடு புறப்பட்டது. அதிகாலையிலேயே எழுந்து வையைத்துறைக்கு வந்தவர்கள் நீராடி மகிழ்ந்தனர். வையையில் நீராட இடமில்லாதோர் கரையில் நின்றிருந்தனர். அவர்களுள் தலைவன், தலைவி, அவளின் தோழியரும் அடக்கம். கரையில் நின்றிருந்த அத்தோழியர் அங்கே நின்றிருந்த பிற பெண்களின் அணிமணிகளை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர். பெண்களுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அணிகலன்களை நோட்டம் விடுவதில் அலாதி நாட்டந்தானே?

    அங்கே நின்றிருந்த பரத்தையொருத்தி தலைவியின் ஆரத்தையும் வளையையும் அணிந்திருந்ததைக் கண்ட தலைவியின் தோழியர் திடுக்கிட்டனர்; அவள் நம் தலைவனோடு தொடர்புடைய பரத்தையோ எனும் எண்ணத்தோடு அவளைக் கூர்ந்துநோக்கினர். 

    தலைவி அருகில் ’நல்ல பிள்ளை’போல் நின்றிருந்த தலைவன், தான் தலைவியின் நகைகளை அவளுக்குத் தெரியாமல் எடுத்துப் பரத்தைக்குத் தந்த விசயம் இப்போது தலைவியின் தோழியருக்குத் தெரிந்துவிட்டதை அறிந்து நாணினான். தலைவியின் தோழியர் தன்னை உற்றுநோக்குவதைக் கண்ட பரத்தை அவ்விடத்தைவிட்டு வேகமாக நகரத் தொடங்கினாள்.

    தோழியர் விடுவரா? அவர்களும் பரத்தையைப் பின்தொடர்ந்து போனார்கள்; நடந்து களைத்த அவள் ஒருகட்டத்தில் நடப்பதை நிறுத்திவிட்டு, ”ஏன் என்னைப் பின்தொடர்கிறீர்கள்?” என்று தோழியரைப் பார்த்துச் சினத்தோடு கேட்டாள். தோழியர் பின்னே வந்துகொண்டிருந்த தலைவி, பரத்தையின் வினாவைக் கேட்டுத் திகைத்து நின்றாள். அப்போது தோழியருள் ஒருத்தி, ”விரும்புதற்குரிய காம இன்பத்தை மாயப் பொய்மொழிகளோடு சொல்லி ஆடவரை மயக்கும் விலைமகளே! பெண்மையை அனைவர்க்கும் உரித்தாக்கும் துணைவனற்ற பொதுமகளே! ஐம்புல உணர்ச்சியைப் பெறும் காமுகராகிய பன்றிகள் நுகர்கின்ற தொட்டியே” என்று பரத்தையைப் பலவாறு திட்டினாள்.

    …அமர்காமம்
    மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
    பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
    துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி!

    தோழி தன்னை ஏசுவதைக் கண்ட பரத்தை, தானும் தலைவியைத் தூற்றத் தொடங்கவே, அங்கிருந்த முதுபெண்டிர் தலைவியது கற்பின் சிறப்பைப் பரத்தைக்கு எடுத்துரைத்து அவளை வணங்குவாயாக என்று கூறினர்; அதுகேட்ட பரத்தை, தலைவனின் காதலியருள் ஒருத்தியை இன்னொருத்தி வணங்குவது (தலைவியையும் தன்னையும் ஒத்த தன்மையராகக் கருதிச் சொல்கிறாள்) பெருமை தராது என்று மறுத்துவிட்டாள்.

    அப்போது தலைவி பரத்தையைப் பார்த்து, “உன் பெருமையை இங்கே பேசுவதற்குமுன் என் தந்தை எனக்குச் செய்து இட்ட வளையும் ஆரமும் உன்னிடத்துக் களவினால் வரவில்லையென்றால் அவற்றை உனக்குத் தந்தவனைக் காட்டிவிட்டு உன் பெருமையைப் பேசிக்கொள்!” என்றாள்.

    எந்தை எனக்கீத்த இடுவளை ஆரப்பூண்
    வந்தவழி நின்பால் மாயக் களவன்றேல்
    தந்தானைத் தந்தே தருக்கு

    உடனே பரத்தை, “மோசிமல்லிகை மாலையணிந்தவளே! உனக்கு அன்பனாகிய தலைவன் என் அன்புக்கும் உரியவன்; என்னிடத்தில் இன்பம் பெறுவதற்கு விலையாக இவ்வளையையும் ஆரத்தையும் அவன் தந்தான்; இவையல்லாமல் உன் காலிலுள்ள சிலம்புகளையும்கூட நாளை கழற்றித் தருவான்; அதனால் அவன்தான் கள்வன்; நான் கள்வியல்லேன்; அவனைத் தொடர்வாயாக!” என்றாள் செருக்கோடு.

    மாலை அணிய விலைதந்தான் மாதர்நின்
    கால சிலம்பு கழற்றுவான் சால
    அதிரலங் கண்ணிநீ அன்பனெற்கு அன்பன்
    கதுவாய் அவன்கள்வன் கள்விநா னல்லேன்

    பொதுமகளிரிடம் இன்பம் துய்ப்பதற்கு விலையாகக் கட்டிய மனைவியின் நகைகளையே அவளுக்குத் தெரியாமல் களவாடிச் செல்லும் கணவனின் செயலையும், தன் பரத்தமைக்கு நாணாது செருக்கோடு எதிர்வாதம் செய்யும் பெண்ணையும் காட்சிப்படுத்துவதோடல்லாமல் கணவன் எப்படியிருந்தாலும் அவனை ஏற்றுக்கொண்டு வாழ்வதே கற்புடைய பெண்ணுக்கு அழகு என்று முதுமகளிர் தலைவிக்கு அறிவுரை கூறுகின்ற பகுதியும் இப்பாடலில் உண்டு. ஆடவரின் ஒழுக்கக்கேட்டைப் பெரிய குறைபாடாக எண்ணாத அன்றைய சமூகத்தின் உளப்பாங்கு இக்காலப் பெண்டிர்க்கு அதிர்ச்சி தருகின்ற ஒன்றே!

    அடுத்து, கலித்தொகையின் முல்லைக்கலிப் பாடலொன்றில் (கலி.108) தலைவன் தன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட தலைவியைப் பார்த்து, ”இள மாங்காயை வகிர்ந்ததுபோன்ற கண்ணினால் என் நெஞ்சத்தைக் களமாகக்கொண்டு ஆளும் கள்வியல்லவா நீ?” என்று கேட்கின்றான்.

    ”இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம்
    களமாக்கொண்டு ஆண்டாயோர் கள்வியை அல்லையோ?”
    (கலி: 108 – நல்லுருத்திரனார்)

    இவையல்லாமல்,

    நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி (மணிமேகலை – 18/21)
    நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி (சீவக சிந்தாமணி – 4/1024)
    நன்பொறை நெஞ்சில் இல்லாக் கள்வியை நச்சி…(கம்பராமாயணம்: ஆரண்ய:6/61)
    கள்வியோ கைவளை கொள்வது தக்கதே (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: 1658)

    எனப் பிற இலக்கிய நூல்களிலும் ’கள்வி’ எனும் சொல்லைக் காணமுடிகின்றது.

    இவற்றின் வாயிலாக, கள்வனுக்குப் பெண்பாலாய் இலக்கியங்கள் நீண்டகாலம் பயன்படுத்தியது கள்வி எனும் சொல்லே என்பதும், காலப்போக்கில் ’கள்வி’ பெற்றிருந்த இடத்தைக் ’கள்ளி’ கவர்ந்துகொண்டு கள்வியைக் காணாமற்போன சொற்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது என்பதும் தெளிவாய்ப் புலனாகின்றது. கள்ளிக்கு இணையாக மீண்டும் நாம் கள்வியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதன் வாயிலாக அச்சொல்லுக்கு மறுவாழ்வு கொடுக்கலாம்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:
    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்.
    2. தேவாரம் முதல் திருமுறை – முனைவர் தண்டபாணி தேசிகர் எழுதிய விசேடவுரையும், வித்துவான் திரு. வி.சா. குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய பொழிப்புரையும்.  
    3. குறுந்தொகை மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.
    4. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும்.
    5. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.
    6. சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.
    7. மணிமேகலை மூலமும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும்.
    8. https://www.dravidaveda.org/?cat=697
    9. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

     

    Share
  • சமணர் கல்வெட்டுகள்

    சமணர் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இந்திய மதங்கள் யாவும் தந்திர யோகத்தை அடிப்டையாகக் கொண்டவையே. ஆசீவகம், புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் தந்திர யோகிகளால் தோற்றுவிக்கப் பட்டவையே. தந்திர யோகத்தை மேற்கொண்ட வேத வேள்வியரே பின்னாளில் பிராமணர் எனப்பட்டனர். பிராமணர் தோற்றுவித்தது தான் இந்த பிச்சை எடுத்து வாழும் துறவு வாழ்க்கை முறை. பிராமணரிடம் இருந்து தான் இந்த பிச்சைத் துறவு நெறியை ஆசீவக, சமண, புத்த நெறிகள் ஏற்றுக்கொண்டன. தந்திர யோகம் தனிமனித ஒழுக்கத்தை பெரிதும்  வற்புறுத்துகிறது. பிரம்மச்சரியம், கள் உண்ணாமை, புலால் மறுப்பு ஆகியன தந்திர யோகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். 2,600 ஆண்டுகள் முன்பு சமணம் வட இந்தியாவில் தோன்றியது என்ற போதும் இம்மதம் வணிகரிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றதால் தென்னகத்தில் மௌரியர் ஆட்சிக்கு முன்பேயே பரவியிருந்தது என்பதற்கு “யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூர் பின்அன் கூற்றன் அறுத்த அதிட்டானம் ” என்ற புகளூர் தமிழி கல்வெட்டே சான்றாகின்றது. வணிகப் படைகளின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழ் வேந்தர் ஆட்சி வீழ்ந்த பின் தமிழகத்தில் சமணம் சரிந்து மறைவுற்று இன்று சிறு வடிவாக மட்டுமே காணப்படுகிறது. கல்விப் புலத்திலும் இலக்கியப் புலத்திலும் சமணம் தமிழகத்தில் பெருந் தொண்டாற்றியதற்கு கல்வெட்டுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் புத்த மதத்திற்கு அரச ஆதரவோ வணிகர் ஆதரவோ பெரிதாகக் கிட்டாததால் தமிழகத்தில் அதன் பரவல் மிக குறைவாகவே இருந்தது. எனவே சமணம் போல் அல்லாமல் அரிதாகவே புத்த மதக் கல்வெட்டுகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. எனினும் வரலாற்றைத் தவறான போக்கில் நடத்தும் வகையில் இலக்கியம் குறிப்பிடும் “முக்கோல் பகவர்” என்பது புத்த மதத் துறவிகளைத் தான் குறிப்பதாக தமிழில் குறு நூலே வெளியிட்டுள்ளனர். ஏதோ புத்தம் தமிழகத்தில் எல்லா இடத்திலும் பரவலாகப் பரவி இருந்தது போலவும் பின்னர் புத்த மக்களை ஊருக்கு வெளியே துரத்தி ஒதுக்கியது போலவும் காட்ட முயல்கின்றனர். மதமே இல்லாத போது எப்படி ஊருக்கு வெளியே துரத்தி இருக்க முடியும்? புத்தத் துறவு நெறிப்படி ஒருவர் தாமே சமைத்த உணவை உட்கொள்ளக் கூடாது பிறர் சமைத்த உணவைத் தான் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பதே. பின் எப்படி “முக்கோல் பகவர்” என்பதை புத்த துறவி என்று கொள்ள முடியும். இதற்கு முரணாக முதுமையில் யோக தந்திரத்தைப் பின்பற்றி வாழ்ந்த அந்தணர் / பிராமணர் அரிசி, பருப்பு, காய் போன்றவற்றைப் பிச்சையாகப் பெற்று தாமே சமைத்து உண்டனர். இதனால் வெங்காயம், பூண்டு போன்ற துறவுக்கு ஒவ்வாத பொருளை தவிர்க்க இயலும். புத்த துறவிகள் பிறர் சமையலில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்க முடியாது. எனவே முக்கோல் பகவர் என்பது பிராமணரைக் குறிப்பதே. இங்கு கீழே சில சமணக் கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ள்ளன. ஈற்றாக ஒரு புத்தக் கல்வெட்டும்  விளக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டம் ஆலந்தூரில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் உள்ள 3 வரி கற்பலகைக் கல்வெட்டு

    1. ஸ்ரீ கோவிசைய கம்ப விக்கிரம வர்மற்கு யாண்டைந்தாவதின் சித்திரை முதலாகப் புலியூர்க் கோட்டத்து மாங்காடு நாட்டு மாங்காட்டு திருவராந்தானத்துக்கு [ஆர்க்]  
    2. காட்டுக் கூற்றத்து பரிபண்டத்துறை பரிசை கிழார் அமர்நிலையார் மகளார் இப்பள்ளி உடைய அநந்தவீரக் குரவர் மாணாக்கியார் கு _ _ _ அடிகள் திருவமுதுக்கு வைத்த நெல்லறுபதின் 
    3. [குறுணி] முந்நாழி நெல்லால் விக்கட்டுவோமானோம். அவிச்சொரியுந்தால் முப்பதின் பலத்தாவிட்டார். இதுக்கு முட்டாமைச் _ _ _ _  

    அராந்தானம் – சமண பள்ளி, அருகன் (ஸ்)தானம்; பரிபண்டத்துறை – வரிக் கருவூலம்; பரிசை – காவல்; திருவமுது – படையல், நைவேத்தியம்; விக்கட்டு – பகுத்து; நாழி – காற்படி; அவிச்சொரி – சோறு வைத்தல்; பலம் – 35 கிராம் நிறை; முட்டாமை – நில்லாமை

    விளக்கம் : இக்கல்வெட்டு கம்ப விக்கிரம பல்லவனுக்கு 5 ஆம் ஆட்சி ஆண்டு 874 இல் வெட்டப்பட்டது. சித்திரை மாத தொடக்கம் முதலே புலியூர் கோட்டத்தில் அடங்கிய மாங்காடு நாட்டின் மாங்காட்டு ஊரில் அமைந்த அருகன் கோவிலுக்கு  தஞ்சையின் கண்டியூருக்கு அருகே அமைந்த ஆர்க்காட்டு கூற்றத்தின் வரிக் கருவூலக் காவல் தலைவர் அமர்நிலையாரின் மகளும் இந்த சமண கோவிலின் அனந்தவீரக் குரவரின் மாணவியுமான கு_ _ _ அடிகள் கோவில் திருவமுத்துக்கு கொடுத்த நெல் அறுபது குறுணியை மூன்று காற்படியாகப் பிரித்து சோறு வடிக்கையில் முப்பது பலமாக அளவிட்டு வடிக்கச் சொன்னார். இது இடைநில்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி கூறினர் கோவிலார்.

    புலியூர் என்பது இன்று சென்னைக் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இன்றைய மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகில் இந்த சமண பள்ளி இருந்திருக்கலாம். தஞ்சை ஆர்க்காட்டை சேர்ந்த கருவூலக் காவல்தலைவர் மகள் பெயர் சிதைந்துள்ளது. அடிகள் என்பது துறவாட்டி என்று பொருள்படுகிறது. இவள் தஞ்சை சோழ நாட்டில் இருந்து பல்லவரின் தொண்டை நாட்டில் அமைந்த மாங்காட்டிற்கு வந்து அனந்தவீரரிடம் சமண சித்தாந்தத்தை கற்றுள்ளாள். பின் அங்கேயே துறவாட்டியாகி கோவிலின் அன்றாட படையலுக்கு 60 குறுணி நெல் வழங்கியுள்ளாள் என்பதும் அதன் அன்றாட படையல் அளவு 30 பலம் என்பதும் வட்டியாக கணக்கிடப்பட்டதாகத் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிடில் இடைநில்லாமல் என்ற சொற் பயன்பாடு இங்கு பொருள் தராது. இந்த மாங்காட்டுக் கல்வெட்டு சமண கோவில் சிதிலமடைந்த பின் பிற்காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு ஆலந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடிக் கல்லாக இடப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 63, சூலை 2004, பக். 7

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பந்தல்குடி கிராமத்தில் திர்த்தங்கரர் சிற்ப பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது வெண்பு னாட்டு நா
    2. லூ ரவிசேரி பள்ளிக்கு இவ்வூர் மாறஞ்சடையன் மகன் சங்கையன் ம
    3. கன் சங்கையஞ் சடையன் மகள் சடைய நற்சக்கி(யை) இந்நாட்டு “வெண்புரை திணை
    4.  வழுவிலி மகன் வழுவிலி சாத்தன்” பெற்ற சடைய நற்சக்கி மகன் சாத்
    5. தம் புகழ் மகன் புகழ் சடையேன் எம் மூத்தப்பன் வழுவிலி சாத்த
    6. னையும் எம் மூத்தம்மை சடையன் நற் சக்கியையுஞ் சாத்தி இட்ட கற்திருமேனி  

    திணை – ஒழுக்கம், நெறி, நோன்பு, விரதம்; வழுவிலி – பிழறாத; வெண்புரை – வெள்ளைப்பிறை, மூத்தப்பன் – கொள்ளுப் பாட்டன்

    விளக்கம் : முதலாம் இராசராசனின் 22 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1007 இல் வெண்பு நாட்டில் அடங்கிய நாலூ ரவிசேரியில் உள்ள சமண பள்ளிக்கு இந்த ஊரில் வாழும் மாறஞ்சடையன் மகன் சடைய சங்கனுடைய மகன் சங்கை சடையனான பேரனின் மகள் சடைய நற்சக்கியை மணந்த இந்த நாட்டின் வெள்ளைப்பிறை நோன்பு பிறழாதவன் என்பதைக் குறிக்க “வெண்புரை திணை வழுவிலி எனப்படுவானின் மகன் வழுவிலி சாத்தன் பெற்றெடுத்த சடைய நற்சக்கியின் மகன் சாத்தன்புகழ் என்பானின் மகன் புகழ்சடையன்  எனும் நான் எமது கொள்ளுத் தாத்தா வழுவிலி சாத்தனையும் அவர் மனைவியான எமது கொள்ளுப் பாட்டி  நற்சக்கியையும் நினைவில் இருத்தி இந்த தீர்த்தங்கரர் சிலையை வடிப்பித்து நிறுத்தினேன் என்கிறான்.

    இதில் கொள்ளுப்பேரன் புகழ் சடையன் தனக்கு முன்பு வாழ்ந்த மூன்று தலைமுறையை குறிப்பிடும் முன் தன் கொள்ளுப் பாட்டிக்கு முற்பட்ட புகழ்மிக்க மூன்று தலைமுறையை குறிப்பிடுகிறான். கொள்ளுப் பாட்டியின் வம்சம் பாண்டியர் வழிவந்தாற்  போலத் தெரிகிறது. ஆக இக்கல்வெட்டில் ஏழு தலைமுறைப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. Chaumasi chaudas – ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படும் நான்கு மாத விரத காலம் (சாதுர்மாஸ்ய விரதம்) சமணரும் சிறப்பானது. இதைத்தான் இக்கல்வெட்டு “வெண்புரை விரதம் பிறழாத” என்று குறிக்கிறதோ? தெரியவில்லை.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 96, 2015, பக். 3

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் வேடல் ஆண்டார்மடம் 21 வரிக்கல்வெட்டு

    1.   ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரி பர்ம[ர்]க்கு யாண்டு பதிநாலாவது சி 
    2.  ங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்தி மங்கல 
    3.    முடைய குணகீர்த்தி படாரார்வழி  மாணாக்கியார் கனகவீர[க்  கு]ரத்தி 
    4.   யாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபிஸி[க]ள் நாநூற்றுவர்க்கும் 
    5. கொள்ளாதமையில் இக்[கோயி]ற் பிள்ளைகளைந் நூற்றுவர்க்கும் வழி இலாருங் 
    6.   காத்தூட்டுவோமானோம். எங்களு[டை]ய ஸ்வரக்ஷை. இது இரஷிப்பாரடி நி[லை எ]ங்கள் 
    7. [த]லைமேலன மாதேவி அராந்[தி] மங்கலமுடைய  [கன]கவீரக் குரத்தியார்  
    8. த் தங்க _ _ ர் மகளாதனமையில் _ _  _ 
    9.  முக்கியருமிது [கா]ப்பர் அவர்கள் ஸ்வரக்ஷை. இதனை இரக்ஷிப்பார 
    10.  டிநி[லை] என் தலைமேலன  
    11.   _ _ _ டறுங்  காழாறு[ம்] மு  
    12. தலாகிய மாதேவி ஆ 
    13.  ராந்தி மங்கலமுடைய 
    14.  கநக வீரக் குரத்தியார் தங் 
    15. கள் மகளாராதிநமையில்  
    16.  இதுவெல்லாந் தங்  
    17. கள் காவல். இதனை தீங்  
    18. கு நினைத்தாந் கங்கை இடைக் குமரி இடை
    19.  எழு நூற்று காதமுஞ்ச செய்த பாவ  
    20. ங் கொள்வார். காவலனுக்கு [பிழை]த்தா 
    21. ராவார்  

    கொள்ளா – ஏற்காதமை, ஒவ்வாமை; படாரர் – துறவி, கோயில் அதிகாரி;-   குரத்தி – ஆசிரியை ; தாபிசி – தவசிகள்; ஊட்டு – சோறளி; காழார் – யானைப்படை வீரர்; பிழைத்தார் – குற்றம் செய்தவர்.

    விளக்கம் : முதலாம் ஆதித்த சோழனின் 14 ஆம் ஆட்சி ஆண்டு 885 இல் விடால் எனப்பட்ட இன்றைய வேடலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. சிங்கபுரநாட்டின் கிழக்கு வழியில் அமைந்த விடால் ஊரான ஆராந்த மங்கலமுடைய சமண பள்ளித் துறவி குணகீர்த்தியிடம் பாடம் பயின்ற மாணாக்கியான கனகவீர குரத்தி என்ற ஆசிரியையும் அவரிடம் பாடம் பயிலும் மாணவிகளையும் தவமியற்றும் துறவியர் 400 பேருக்கும் ஒவ்வாமையால் இந்த சமண பள்ளியில் பயிலும் அந்த பெண் பிள்ளைகள் ஐநூற்றுவரையும் அங்கிருந்து வெளியேற்றி விடுகின்றனர். அதனால் போக்கிடம் இன்றி தவித்த இவர்களுக்கு இடமளித்து சோறு கொடுத்தோம் என்கின்றனர் இந்த ஊரார். இது நாங்கள் தரும் பாதுகாப்பு என்கின்றனர். இதை காப்பவர் பாதம் எமது தலைமேல் ஏற்போம் என்றும் மாதேவி ஆராந்தி மங்கலமுடைய சமண பள்ளியின் கனகவீரக் குரத்தியார் தமது மகளானபடியால் _ _ _ ஊர் முக்கியரும் இதை காக்க வேண்டும் என்கின்றனர். இது அவர்களின் நற்காப்பு ஆகும் என்கின்றனர். இதனைக் காப்பவரின் அடிப்பாதம் எனது தலைமேல் இடக் கடவது _ _ _ , யானைப்படை வீரர் முதலாகிய ஆராந்த மங்கலம் வாழ்வோர்க்கு சொல்வது யாதெனில் கனகவீரக் குரத்தியார் உமக்கு மகளென ஆவதால் இது உமது காவலாகும். இதற்கு கேடு நினைப்பார் கங்கைக்கும் குமரிக்கும் இடையே 700 காத நிலப்பரப்பில் வாழ்வார் செய்யும் பாவங்களை அடைவர். அரசனுக்கு குற்றம் இழைத்தவராவார்.

    இதில் 500 மாணாக்கியர் என்பது துறவிகள் அல்லாத வெவ்வேறு சமூக பிரிவில் அடங்கிய மாணவியர் என்று கொள்ளலாம். குரத்தியரில் மணவாழ்வு கொண்டோரும் துறவாட்டியாக இருப்பாரும் உண்டு என்பதற்கு கழுமலைக் கல்வெட்டு எண்: 336 “இவன் மணவாட்டி சேந்தன் குரத்தி (ஏற்படுத்திய) திருமேனி”  என்பது ஓர் அரிய சான்று ஆகும். இந்த மாணவிகளின் வாழ்க்கை நெறி தம் துறவு நெறிக்கு ஏற்புடையதல்ல என்பதால் 400 துறவிகள் இவர்களைச் சமணப் பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டனர் போலும். ஊராரிடம் தஞ்சம் புகுந்த இவர்களுக்கு ஊரார் அடைக்கலம் அளித்தனர் என்றே கொள்ளலாம். மேலும் இந்த மாணவிகள் அண்டை அயல் கிராமங்களில் வாழ்பவராக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இத்தனை பேருக்கும் கிராமத்தாரால் அன்றாடம் சோறிட முடியாது. இது பெண் கல்வி அந்நாளில் மக்களால் ஊக்குவிக்கப்பட்டதற்கு அடையாளம். பெண்கள் வேதம் கற்கலாகாது என்று தான் சொல்லப்பட்டதே ஒழிய உலகியல் கல்வி கற்க தடை ஏதும் இருந்தது இல்லை என்பதால் மத வேற்றுமை பாராமல் பெண்கள் சமண பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றுள்ளனர். எனவே பண்டு சமூகத்தில் பெண் கல்வி சமணத்தால் ஓரளவு ஊக்குவிக்கப்பட்டு பரவியிருந்தது என்பது தெரிகிறது. ஆனால் தென்னிந்திய சமூக நிலையை தமது நாட் குறிப்பில் எழுதிய ஆங்கிலேயர் நடன மகளிரான தேவரடியாரைத் தவிர்த்து பிற பெண்கள் எவரும் கல்வி கற்கவில்லை என்ற குறிப்பு இசுலாமிய படையெடுப்பிற்கு பின் வந்த ஆட்சியாளரின் தவறான முடிவினால் பெண் கல்வி தடைபட்டிருக்க வேண்டும் என்றே எண்ண முடிகிறது. அரசியல் மேடையிலும் எழுதிலும் சொல்வது போல பெண் கல்வித் தடைக்கு இந்து மதமோ பிராமணரோ காரணம் அல்ல என்பதற்கு இக்கல்வெட்டு முகாமையான சான்றாகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 3 ல் பகுதி 3 & 4 பக். 224 – 225

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டம் மதுரை – திண்டுக்கல் சாலையில் அமைந்த ஊர் வடுக்கப்பட்டி 17 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்வஸ்திஸ்ரீ பாகனூர்க் கூற்ற 
    2. த்து மானசித்தநல்லூராயின மா  
    3. லைக் குளத்து தான சாலையும் குளமும் அத்தா 
    4. ணிகள் பேராயி(ன)மை(யி)லி வ்வூர்க்கு மி 
    5. வ்வறத்துக்கு தீயார் நமக்குப் பகைவ்வரா(ய்) 
    6. யுங் கூலிச் சேவகரொருவர் நிற்கிலு மிவ் 
    7. வறத்துக்கு வருங் குற்றங் காப்பதாகவும் 
    8. பெருநிரவி யிரு நங்கைய் வாசனை கொள்ள 
    9. எல்க்கை வாசனை கொண்டு கல்லு நாட்டி 
    10. நப் பெருவாரியன் வேம்பன் வயிரி 
    11. (யும் தி)கையாயிரத்து அறுகை வாணிகன் 
    12. (மாணிக்) கூ(த்தனுமெ) திகைவாரியன் யிர 
    13. சாழனும் திகை வாரியன் கட்டாணை ராமனும் 
    14. ஆச்சவீர அத்தாணிகள் முனிவர் சி 
    15.  ம்புளு கலிக்கோட்டை விடங்கனும் 
    16.  அவர்கள் இது காளிப் 
    17. பேடு 

    வாசனை – நல்ஆதரவு, அருள்; அத்தாணி – அரச ஆதரவு பெற்ற வணிகர் குழு; அறுகை – அறுந்த கை; வாரியன் – மேற்பார்வையாளன்; பேடு – அச்சம்

    விளக்கம் : இது 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு. பாகனூர் கூற்றத்தில் அடங்கிய மானசித்த நல்லூர் என்னும் மாலைக்குளத்தின் தானசாலையையும் அதன் நீர் வழங்கும் குளத்தையும் அத்தாணிகள் என்ற வணிகக் குழுவினரின் தம் பெயரை வைத்து, இந்த ஊருக்கும் இந்த அறத்திற்கும் கேடு செய்பவர் நமக்கும் பகைவராக கருதப்படுவார் என்று அறிவிக்கின்றனர். கூலிச் சேவகர் ஒருவர் நிலையாக நின்று இந்த அறச்சாலையில் ஏற்படும் குற்றத்தை தடுத்துக் காக்க ஏற்படுத்தப்பட்டார். பெருநிரவி எனும் வணிகர் கூட்டத்தின் இரண்டு பெண் தெய்வங்கள் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லை தெய்வத்தின் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லைக் கல் நாட்டியோர் பெரிய மேற்பார்வையாளன் வேம்பன் வயிரியும், திசைஆயிரத்து அறுபட்ட கை உடைய வாணியன் மாணிக்க கூத்தனும், திசைஆயிரத்து மேற்பார்வையாளன் வீர சோழனும், திசை ஆயிரத்து மேற் பார்வையாளன் கட்டாணை இராமனும், திசை ஆயிரத்து வீரர்கள் அரச ஆதரவு வணிகரான அத்தாணிகள், சமண முனிவர் சிம்புளுவின் ஆதரவு பெற்ற கலிக்கோட்டை விடங்கனும் ஆவர் என்று ஆறு வணிகரின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. அவர்களுடைய அச்சம் தரும் காளியும் காவலுக்கு நிறுத்தப்பட்டது.

    சமணரில் பெரும்பாலார் வணிகர் என்பதற்கு வணிகரின் இந்த சமணக் கொடையே சான்று. தமிழ் வேந்தராட்சி நீங்கி அயலவர் ஆட்சியில் தமிழ் வணிகர் கீழ்நிலை எய்தியதால் வணிகர் ஆதரவு குன்றி சமண சமயம் தமிழகத்தில் ஒழிந்தது.

    பார்வை நூல்: பாண்டிய நாட்டில் சமணம் பக். 446

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் யாளிக் கல் 8 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சிந்தரையன் மகளார் நம்
    2. பிராட்டியார் வானவன் மாதே
    3. வியார் சிற்றாச்சர் வடிக்க மணவா
    4. ட்டி _ _ _ ந்து தவப்பட்டு ஆலந்தூர
    5. டிகள் பள்ளி ஆளாநின்ற காலத்து வீர சங்
    6. காதப் பெரும்பள்ளி என்று பெருமாநடிக
    7. ள் நாமத்திலே உள்ளோசஞ்யுஞ் செயிவித்து பு
    8. துக்குவித்தார்   

    சிற்றாச்சர் – சின்னம்மை, சித்தி; தவப்பட்டு – தவமியற்றி; பெருமானடிகள் – வேந்தன்; சஞ்யு –  ஒலிக்கும் மணி

    விளக்கம் : இக்கல்வெட்டு கொடும்பாளூர் இளவரசியும் முதலாம் இராசராசனின் பட்டத்து அரசியுமான வானவன் மாதேவியை குறிப்பதால் இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனத் தெரிகிறது. சிந்தரையன் மகளும் இளவரசியும் ஆன, வேந்தன் இராசராச சோழனின் பட்டத்து அரசி வானவன் மாதேவிக்கு சித்தியுமான வடிக்க மணவாட்டி இங்கு வந்து தவம் செய்த சமண பள்ளியை, ஆலந்தூர் அடிகள் இந்த சமண பள்ளியின் அதிகாரியாக இருக்கின்ற போது இச் சமண பள்ளியைப் புதுப்பித்து மனவெழுச்சி தரும் ஒரு மணியும் செய்வித்து அதற்கு வீர சங்காதப் பெரும் பள்ளி என்று தன் கணவனான வேந்தனின் (கொங்கு சோழன் வீரசோழ பராந்தகன்) பெயரை சூட்டுவித்தாள். இதன் மூலம் கொங்கு சோழருக்கும் தஞ்சை சோழருக்கும் உள்ள உறவு வெளிப்படுகிறது.

    சிந்து தேச அரசன் தெற்கே யாத்திரை வந்த போதோ அல்லது வடிக்க மணவாட்டியின் பாட்டன் வீட்டார் வடக்கே யாத்திரை சென்ற போதோ வானவன் மாதேவியின் பாட்டியை மணந்துள்ளான் என்று கொள்ளலாம். இதன் மூலம் வானவன் மாதேவியின் பாட்டன் சிந்து தேச அரசன் என்று தெரிகிறது. அரச குடும்பத்தவர் இப்படி இனம், மொழி, பண்பாடு கடந்து இன்னொரு அரச குடும்பத்துடன் உறவு கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த தமிழக அரச குடும்பத்தவர் ஆரிய வெண் தோலும் குருதியும் உள்ளவர் என்ற போதும் இந்த நிலவுடைமை ஆண்ட பரம்பரை மார்தட்டிகளை மட்டும் ஏனோ ஆரியர் என்று அடையாளப் படுத்தாமல் ஏமாளியான கருத்த பார்ப்பானை மட்டும் ஆரியனாக அடையாளப்படுத்துவதானது தமிழரை முட்டாள் ஆக்கும் உத்தி ஆகும். தமிழர் தான் இந்த முட்டாள் தனத்தை உதறித் தள்ள வேண்டும். இக்கல்வெட்டால் இராசராசன் வேந்தனாக பட்டம் சூட்டப்படும் முன்பே அவன் பட்டத்து அரசி வானவன் மாதேவி இங்கு சிறப்பு அடையாளமாக குறிக்கப்படுகிறாள் என்றால் இராசராசன் புகழ் வேந்தனாகும் முன்பே தென்னகத்தில் விரிந்து பரவி இருந்தது என்று தானே பொருள்?

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமண பள்ளி முன் மண்டப நிலையில் உள்ள 9 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி  ஸ்ரீ கோநாட்டானேன் வீ
    2. ரசோழப் பெருமானடிகளுக்குத் திரு
    3. வெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு முப்
    4. பத்தேழாவது ஆனித் திங்கள் முதல் _ _ 
    5. ஆலந்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளியில் 
    6. இவ்வருக தேவர் _ _ _ வயிற்று 
    7. நிலன் _ _ நாலெல்லை ஆக 
    8.  _ _ _ _ _ 
    9. வழி ஏழச்சம் ஒழியாமல் அறுவான்.

    செல்லாநின்ற – நடப்பாண்டு, current year; பெருமானடிகள் – வேந்தர்; திருவெழுத்திட்டு – முடிசூடி; வயிற்று – உணவு; ஏழு அச்சம் – ஏழு தலைமுறை; ஒழியாமல் – தங்காமல்

    விளக்கம் : கொங்கு சோழன் வீரசோழ பராந்தகனுக்கு  முடிசூட்டி 37 ஆம் ஆண்டு (கிபி 979) ஆகையால் ஆனி  மாதம் முதலாக ஆலந்தூரில் உள்ள வீரசங்காதப்  பெரும்பள்ளியாம் இந்த சமண கோவில் அருகருக்கு அன்றாடம் அமுதூட்ட  கோநாட்டவனால் நிலக்கொடை வழங்கப்பட்டு அதன் நான்கு எல்லையாக கை _ _ _ _ _ _ என்று எல்லை குறிப்பிட்ட இடம் சிதைந்து விட்டது. இந்த ஏற்பாட்டை அழிப்பவன் வழியினர் ஏழு தலைமுறைக்கு தங்காமல் அழிந்து போவான். ஒரு தலைமுறை அழிந்தாலே அடுத்த தலைமுறை தொடராது பின் எப்படி ஏழு தலைமுறை செல்லுமோ? புரியவில்லை.

    இதற்கு மேலுள்ள வடிக்க மணவாட்டி கல்வெட்டின் காலத்தை கணிக்க இக்கல்வெட்டு பெரிதும் உதவுகிறது. இக்கல்வெட்டில் அவள் குறிப்பிடும் வீரசங்காதப் பெரும்புள்ளி என்ற பெயர் இடம் பெறுவதால் 979 க்கு முன் அக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 980 தோடு வீரசோழன் பராந்தகன் ஆட்சி முடிந்து விடுவதால் இவனது உடல்நலம் தேற வேண்டி நோன்பு இருந்து இக்கோவிலை புதுப்பித்துள்ளாள் வடிக்க மணவாட்டி என்று கொள்ள முடிகிறது.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஐவர்மலை (ஐயம் பாளையம்) குகைத்தளத்தின் மேல் உள்ள 7 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. சகரையாண்டு எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு
    2. போந்தன. வரகுணற்கு யாண்டு எட்டு. குணவீரக் கு
    3. ரவடிகள் மாணாக்கர் காழத்து சாந்திவீரக் 
    4. குரவர், திருவயிரை பாரீஸ்வ படாரரையு மியக்
    5. கி அவ்வைகளையும் புதுக்கி இரண்டுக்கு முட்
    6. டாவவியு மோரடிகளுக்கு சோறாக அமைந்தன 
    7. பொன் ஐந்நூற்றைந்து காணம் 

    அவ்வு – கூடும் இடம், assembly hall; போந்தன – போயின; காழத்து – மியான்மர் நாட்டு; முட்டாவ – முடிதல்; அவி – அவை, மாண்டபம்; ஓராடி – சேர்ந்து உழைப்பவர், உழைப்பாளர்.

    விளக்கம் : சக ஆண்டு 870 கழிய இரண்டாம் வரகுணவர்மப் பாண்டியனுக்கு 8 ஆம் ஆட்சி ஆண்டில் 870 இல் குணவீரக் குவரடிகளின் மாணவரான மியான்மர் நாட்டைச் சேர்ந்த சாந்திவீரக் குரவரையும் திருவயிரையின் பாரீஸ்வ கோயில் அதிகாரியையும் இணைத்து இயக்கி இங்கத்து பழுதுபட்ட கூடங்களை புதுப்பித்து அவை இரண்டையும் கட்டி முடிக்கவும் கூடம் கட்டும் உழைப்பாளிகளுக்கு சோறிடவும் மொத்தம்  505 காணம் பொன் முதலிடப்பட்டது என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    சமண அற நூல்களைக் கற்க பர்மாவில் இருந்தும் மாணவர் தமிழகம் வந்தது இதன் மூலம் தெரிகின்றது. கல்வெட்டில் வரகுண பாண்டியன் ஆட்சி ஆண்டும் சக ஆண்டும் ஒருங்கே குறிக்கப்பட்டது காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றது. பாண்டியர் ஆட்சி கொங்கில் சில காலம் இருந்துள்ளதால் கொங்கில் அது சமண பரவலுக்கு [பெரிதும் ஆதரவாயிற்று என்று கொள்ளலாம்.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சாத்தமங்கலம் ஊரில் சந்திரசுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள் பாறை என்னும் இடத்தில் உள்ள 8 வரிக்  கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கம்ப பன்மற்கு யாண்
    2. டாறாவது காடகதிரையர் ம
    3. ணவாட்டி மாதவி யித்திருக்கோ
    4. யில் புதுக்கி முகமண்டக மெ
    5. டுப்பித்து பாழி புதுக்கி யக்
    6. கா படாரி திருக்கோயில் லெடு
    7. ப்பித்து இப்பள்ளிக்கு கிட்ட 
    8. பெரு மணி ஒன்று ஊட்டு(வி)த்தாள் 

    பாழி – சமண முனிவர் தங்கும் இடம்; படாரி – அம்மன்; கிட்ட – செம்பு; ஊட்டு – விருந்து

    விளக்கம் : பல்லவன் கம்ப வர்மனின் 6 ஆவது ஆட்சி ஆண்டு 875 இல் காடகதிரையர் என்ற வணிகருக்கு மனைவியான மாதவி என்பவள் இந்த சமணத் திருக்கோவிலை புதுப்பித்து அதில் முக மண்டபம் கட்டியும், சமண முனிவர் தங்கும் இடத்தைப்  புதுப்பித்தும், யக்ஷிக்கு புதிதாக ஒரு கோயில் கட்டியும், இந்த சமண கோவிலுக்கு செம்பினால் ஆன பெரிய மணி ஒன்றைக் கட்டியும் மக்களுக்கு விருந்து கொடுத்தாள்.

    காடகதிரையர் என்ற சொல் இவர் காட்டுவழியில் வரித் தண்டல் உரிமை பெற்ற வணிகப் படைத்தலைவர் என்று விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சிறந்த சமணர் ஊர்களை கொண்ட மாவட்டம் என்பதற்கு இங்கு அமைந்த சமண தளங்களே சான்று. இதற்கு இந்த மாவட்டம் அதிகமாக சமணத்தை பின்பற்றிய கங்கர், நுளம்பர், வாணர் படையெடுப்பிற்கு ஆட்பட்டதே காரணம் எனலாம்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 13, அதில் திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2, பக். 104 த நா தொ து வெளியீடு.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்ரீ திரும[லை]க்  
    2. குறத்திகள் 
    3. மாணாக்கன் ஏ
    4. னாதி குத்த
    5. னஞ் சாத்திச்  
    6. செய்வித்த ப
    7. டிமம் 

    ஏனாதி – வில்வீரர் படைத்தலைவன்; படிமம் – கற்சிலை; குரத்தி – ஆசிரியை

    விளக்கம் : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள திருமலையின் சமண பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகளிடம் பாடம் பயின்ற மாணாக்கன் ஏனாதி குப்தன் என்பவன் தன் முன்னோரை நினைந்து செய்வித்த தீர்த்தங்கரர் சிற்பம் இது.

    இவனது ஊர் திருமலை என்று கொள்ளும்படியாக இவன் இளவயதில் இங்கத்து ஆசிரியைகளிடம் பாடம் பெற்றுள்ளான். ஆசிரியைகள் ஆண் மாணவருக்கும் பாடம் புகட்டியுள்ளனர் என்பது இதனால் தெரிகிறது. இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. குப்தன் என்பது வணிகருக்குள்ள வர்ணப் பட்டம் ஆகும். அதன் தமிழ் வடிவம் தான் குத்தன். அதே நேரம் இவன் விற்படைத் தலைவனாகவும் இருந்துள்ளான் என்பது ஏனாதி பட்டத்தால் விளங்குகிறது. இக்கல்வெட்டு சமணத்திற்கு வணிகரே ஆதரவளித்தனர் என்பதற்கு பெருஞ் சான்றாகிறது. ஏனெனில் மகாவீரரும் இதே வணிகர் குலத்தில் பிறந்த படைக் குடும்பத்தவர் என்பதே ஆகும். சமணத்தின் விரிந்த பரவல் சாதி உணர்வாலேயே ஏற்பட்டது. வணிகர் பலர் சமணத்தைக்  கைவிட்டதால் பிற்காலத்தில் சமணம் தமிழகத்தில் வீழ்ந்தது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 129 எண்:370

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்ரீ திருநேற்சுறத்து அரைம
    2. லை ஆழ்வாற்குத் திருப்ப
    3. ணி செய்கிற பட்டன் சுந்தர
    4. னான நேற்சுறநாட்டுப் பெ
    5. ருங் கொல்லனுக்கு கரு
    6. ஞ்செய் கால் சந்த்ராதித்த[வல்]
    7. நிற்கச் சேத்து      

    அரை – நடு; ஆழ்வார் – தீர்த்தங்கரர்; கருஞ்செய் – குடைந்து செய்த; கால் – அடிப்பாகம், basement; சேத்து – செய்தான்

    விளக்கம் : திருநேர்சுரம் என்ற கழுகுமலையின் நடுமலையில் தீர்த்தங்கரருக்கு பூசை செய்யும் சமண பிராமணன் சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரையில் நிலைக்கும்படியாக சுந்தரன் என்ற பெயருடைய நேற்சுரநாட்டின் பெருங் கொல்லனிடம் (சிற்பி) கருங்கல்லைக் குடைந்து அடித்தளம் செதுக்கச் செய்தான்.

    காலம் குறிப்பிடாத கழுமலைச் சமணக் குடைவறைக் கோவில் கல்வெட்டுகளிலேயே இது பழமையானதாக இருக்கலாம். ஏனெனில் இது அடித்தளம் அமைத்ததை பற்றிக் குறிக்கிறது. ஒரு கோவிலுக்கு அடித்தளமே முதலாகும். பிற பின்னர் தான் ஏற்படும்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 127 எண்: 357

    வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் சின்னபாலம் பாக்கம் சரக்குமலை உச்சியின் குகை மேற்கூரையில் செவ்வகக் கட்டத்தில் வெட்டியுள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு 
    2. ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெ
    3. ரிய பெண்ணாகடத்து ஸிம்ஹ நந்தி படாரர்
    4. க்கு பங்கள நாடுடையார் கொடுக்கர் வீரத்
    5. தொழிலர் பேராற் பங்கள நாடுடையார்த் த
    6. (ள)கள் சிறிய நங்கையார் செய்வித்த ஸ்ரீ கோயில்  

    கொடுக்கன் – மகன்; வீரத்தொழிலர் – சத்திரியர்; நங்கை – அம்மையார்; தளகள் – தளவாட வீரர்கள்

    விளக்கம் : பல்லவன் நிருபதுங்க வர்மனின் 19 ஆம்  ஆட்சி ஆண்டு 888 இல் பெரிய பெண்ணாகடத்தின் சமண கோயில் அதிகாரி சிம்மநந்திக்கு பங்காளநாடு ஆளும் அரையன் மகனும் சத்திரியரும் ஆனவர் பெயரால் பங்கள நாட்டின் படை தளத் தலைவர் நினைவில் சிறிய அன்னை கட்டுவித்த திருக்கோவில் இது. இந்த பெண்ணாகடம் சித்தூர் அருகில் இருந்திருக்கலாம்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 7, 1996, பக். 17-18

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் திருமலையில் சுவரோவியம் தீட்டிய குகைக்கு இடப்புற முல்லா பாறையில் வெட்டி உள்ள 8 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கச்சியும் தஞ்சையங்கொண்ட ஸ்ரீ கன்
    2. னர தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது 
    3. கன்னரதேவ ப்ரித்வி கங்கரயர் தேவியார் கங்க மாதேவி 
    4. யார் கன்மி பொக்கிலிரு பிரிதியங்கரையர் மண
    5. வாட்டியார் பெற்றாள் நங்கையார் வை
    6. காவூர்த் திருமலை யக்ஷ படாரர்க்
    7. குத் துஞ்சா விளக்கொன்று சந்தி
    8. ராதித்தருள்ளவளவும் வைத்தார். 

    பொக்கு – கருவூலம்; கன்மி – அனுக்கர், attendar;

    விளக்கம் : காஞ்சியையும் தஞ்சையையும் கைப்பற்றிய இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 19 ஆம் ஆட்சி ஆண்டு 953 இல் திருவண்ணாமலையை ஆண்டு கொண்டிருந்த மன்னர் கன்னரதேவ (கிருஷ்ணதேவ) பிரிதிவி கங்கரையரின் பட்டத்து அரசியான கங்க மாதேவியாரின் சார்பாக அவளது அனுக்கியான கருவூலக் காப்பாளராக இருக்கும் பிரிதியங்கரையருடைய மனைவியான பெற்றாள் நங்கை என்பவள் இந்த வைகாவூரில் உள்ள திருமலை யக்ஷ படாரர் சிலை முன்பாக அணையா விளக்கு ஒன்றை சந்திர சூரியர் உள்ள காலத்தளவும் எரியும்படி வைத்தாள்.

    இராட்டிரகூடன் கன்னரதேவனின் மேலாண்மையை ஏற்றதால் திருவண்ணாமலை மன்னன் பிரிதிவி கங்கரையன் தன் பெயர் முன்பாக கிருஷ்ணன் என்ற வேந்தன் பெயரை இணைத்துக் கொண்டான் என்று தெரிகிறது. அரசியின் அனுக்கி பிரிதியங்கரையன் மனைவி என்பதில் இருந்து இருவரும் ஏதோ வகையில் உறவினர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் பிரிதியங்கரயன் கருவூலக் காப்பாளனாக இருக்க முடிந்தது. முக்கிய பதவிகளில் அரச குடும்பத்தவரே அந்நாளில் அமர்த்தப்பட்டனர் என்பதற்கு இது சான்றாகிறது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 23, எண் 65, பக். 41

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்திமலை பாறையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

    1.  பரிதாபி வருடம் கார்த்திகை மாதம் 1 தி இம்முப்பட்டத்துக் கணக்காண்ட
    2. எத்துலப்ப னாயக்கரவர்கள் நாளையில் போட்ட கல்வெட்டு. அமணே சுர சுவாமியுட 
    3. பூமி அமண சமுத்திரஞ் சீர்மையில் யாதாமொருத்தன் துரைத்தனத்துக்கு வந்தா 
    4.  லும் அவருட பெண்பிள்ளை கலியாணஞ் செய்தால் அந்தப் பிள்ளைக்கு 
    5.  நால் பொன்னுக்குள்ளாக கடமை போதவும் மாடுகள் சீதனங்குடுக்கவும் யிந்த தலத்துக் 
    6. கு முறையாருக்குப் பிள்ளை குடுத்துத் தலத்திலேயும் யிருந்தால் நாலுபேர் துரைமக்கள் வைத் 
    7.  த மானியம் விட்டு நடப்பிக்கவும், இதுக்கு மிகை யாதாமொருவன் பிள்ளைப் பிரியத்துக்கு எத்தா 
    8. யுடமை போட்டாலுங் கோபாதமத்தனை பூமி சீதனங் குடுத்தாலுமவன் கங்கைக் கரையிலே 
    9. காராம் பசுவை கொண்ண தோஷத்திலே போவான். அதிகாரத்தில் சிறிது திரவியமெச்சாக
    10.  ச் சம்பாதிச்ச பாகத்திலேயுங் கூட அ_ _ செய்து தானதர்மஞ் செய்து தீர்க்கமா 
    11. ய் நடந்துகொண்டவனுக்குக் காசியில் தீர்த்தமாடின பலன் உண்டு. யி_ _  ப்படி மே 
    12. னி கண்டிருந்து மீதி நடப்பிக்க இராமே _ _ த்தமனுக்கு 

    பட்டம் – நாற்றங்கால் பகுதி, ஆட்சி; கணக்கு – ஒழுங்கு சீல ஏற்பாடு, system; கடமை – மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண் வீட்டாருக்கு கொடுக்கும் வரதட்சணை; நாளை – வரும் காலம்; சீர்மை – நாட்டுப்பகுதி; துரை – வரி அதிகாரி; முறையார் – உறவினர், சொந்தம்

    விளக்கம் : இது பரிதாபி ஆண்டு கார்த்திகை மாதம் 1 நாள் 1792 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. எத்துலப்ப நாயக்கர் என்ற பெயர் இவரை தெலுங்கர் என்று சுட்டுகிறது. இவர் தளி பாளையக்காரர் குடும்பத்தவர் ஆவார். இந்த மூன்று பாசன நிலப்பகுதியின் ஒழுக்க சீலத்தை ஆள்கின்ற எத்துலப்ப நாயக்கர் எதிர்காலத்தில் நடந்துகொள்ள வேண்டி நிறுத்திய ஒழுக்கக் கல்வெட்டு. இது அமணேசுவர சுவாமியின் (அருகன்) நிலப்பகுதி எனவே இங்கு அநியாயம் நடக்கக் கூடாது. இந்த அமணசமுத்திர நாட்டுப் பகுதியில் எவரேனும் ஒருவன் வரி அதிகாரி பதவிக்கு வந்தால் அவருடைய பெண் பிள்ளைக்குக் கலியாணம் செய்யும் போது மாப்பிளை வீட்டாரிடம் அந்த பெண்ணுக்கு நான்கு பொன்னுக்கும் குறைவாகத் தான் வரசட்சணை வாங்க வேண்டும். பெண் வீட்டாருக்கு மாடுகளையும் சீதனமாகக் கொடுக்கலாம். இந்த தலத்திலேயே வாழும் உறவினருக்குப் வரி அதிகாரி பெண் கொடுத்து அவர்கள் இந்த தலத்திலேயே வாழ்ந்தால் நான்கு பேருக்கு வரி அதிகாரியின் ஆள்கள் மானியம் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலாக எவரேனும் ஒருவன் பெண் பிள்ளையை மணம் செய்து கொடுத்துப் பிரிவதற்கு எவ்வளவு வரதட்சணை போட்டாலும் இதாவது, பசுவின் குளம்படி அளவு நிலத்தைக் கூட வரதட்சணையாக பெற்றாலும் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை கொள்வான். அதிகாரத்தில் சற்றே கூடுதலாக பொருள் அதிகமாக சம்பாதித்தாலும் அந்த அதிக உபரி பணத்தை தான தர்மம் செய்து நேரிய வழியில் நடந்து கொண்டவனுக்கு காசியில் குளித்த பயன் உண்டாகும். இப்படியாக மேற்படி உள்ளபடி நடக்கச் செய்வது இராமே _ _ த்தமனுக்கு கடமை ஆகிறது.

    வேலூர் விரிஞ்சிபுரத்து படைவீட்டு பிராமணர்கள் பெண் வீட்டாருக்கு கன்யாசுல்கம் என்ற வரதட்சணை கொடுக்க முடியாமல் தம் மகனுக்கு திருமணம் நடத்த முடியாமல் துன்புற்ற போது அதற்கு எதிராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே போன்றே இந்த அமணசமுத்திரத்தில் வரி அதிகாரிகள் வீட்டில் பெண் எடுத்தவர்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி எத்துலப்ப நாயக்கரிடம் முறையிட அந்த வரதட்சணைக் கொடுமைக்கு அவர் வரம்பிட்டுப் பிறப்பித்த ஆணைக் கல்வெட்டே இது. எத்துலப்பர் ஒரு உண்மையான ஆட்சியாளராக தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். உள்நாட்டு ஆட்சி நீங்குவதற்கு முன் உள்நாட்டு ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு என்ற வகையில் இது சிறப்பானது. 1801 க்கு பின் ஆங்கிலேயர் இவருள்ளிட்ட சில பாளையக்காரர் பாளையங்களை ஒழித்து தமது பிரிட்டிசு ஆட்சியை முழுமையாகத் தமிழகத்தில் நிறுவினர் என்று ஆவணச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 260

    கோயம்பத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமணப் பள்ளி கருவறை நிலைக்காலில் உள்ள 12 வரி தமிழ் எழுத்துக் கல்வெட்டு

    1. பொங்கல் 
    2. லூர் வண்ணா 
    3. ன் நீலஞ் 
    4. செல்லன் 
    5. மணவாட்டி 
    6. காவஞ் சாத்தி 
    7. யையும் ம
    8. கள் செல்ல ப 
    9. ணத்தியை 
    10. யும் சாத்தி 
    11. நாட்டுவித்த 
    12. கல் நிலை  

    சாத்தி – நினைவில் கொண்டு பெயரிட்டு

    விளக்கம் : இதன் காலம் குறிக்கப்படவில்லை எனினும் தமிழ் எழுத்தில் உள்ளதால் சோழர் ஆட்சி ஏற்பட்ட காலத்தது என்று கொள்ளலாம். இது வணிகர் அல்லதா எளியோர் சமணத்தை பின்பற்றியதற்கு அடையாளமாக உள்ள கல்வெட்டு. பொங்கலூரில் வாழும் வண்ணான் நீலன் செல்லன் என்பவன் இறந்த தன் மனைவி காவன் சாத்தியையும் மகள் செல்லப் பணத்தியையும் நினைவில் வைத்து நிறுத்திய கல் வாயில் நிலை என்று உள்ளது.

    வணிகரின் வீரதாவளத்தில் துணி துவைத்திருந்தால் அந்த சமண வணிகரின் தொடர்பால் வண்ணார் சமண சமயத்தை தழுவி இருக்கலாம் என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 256

    திருச்சி மாவட்டம் பொன்மலை கீழ்க்குறிச்சி பௌத்தப்பள்ளி கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரத்தாவளத்தில் பௌத்தப் பள்ளிக்கு இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் முதலடங்க இறையிலியான பள்ளிச் சந்தம். 

    வீரதாவளம் – வணிகப்படை வீரர் ஓய்வாக தங்கும் ஊர்; பள்ளிச் சந்தம் – பௌத்தப் பள்ளிக்கு வழங்கும் கொடை

    விளக்கம் : இந்த கல்வெட்டு அருகே 11 ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் ஒன்று பத்மாசனத்தில் அமர்ந்து தியான நிலையில் தலை இழந்து காணப்படுகிறது. வணிகரின் படை ஆள்கள் ஓய்விற்கு தங்கும் இடமான இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் என்னும் கீழ்க்குறிச்சியில் அமைந்த பௌத்த பள்ளிக்கு இவ்வூரின் பொருள் வரியையும் சேர்த்து இறையிலியாக பள்ளிக்கொடை வழங்கினர் வணிகர் என்கிறது இக் கல்வெட்டு.

    இக்கல்வெட்டின் மூலம் தென்னகத்தில் காலூன்றாத புத்த மதம் வணிகரின் ஆதரவால் சில இடங்களில் தலை தூக்கி நின்றது என்பது விளங்குகிறது. இது ஒரு அரிதான புத்த மதக் கல்வெட்டு. சில வட நாட்டு வணிகரோ அல்லது ஈழ வணிகரோ இங்கு வந்து தங்குவதால் அவரோடு நல்லுறவு பேணும் எண்ணத்தில் இங்கு புத்தர் கோவிலை வணிகர் கட்டி இருக்கலாம்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 57, 2002, பக். 15

    Share
  • (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    டாக்டர். வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் – 641014.
    vignesh@psgcas.ac.in

    தோற்றுவாய்:

    தமிழ்த்திருநாட்டிற்கு வற்றாத வளனாய்க் குன்றாத மணி விளக்காய் வாய்ந்தொளிர்வது தொல்காப்பியம் என்னும் முழுமுதல் இலக்கணப் பெருநூலாம். இந்நூல்  பல்லாயிரம் யாண்டுகட்கு முன்னர் தமிழகத்தில் தோன்றி, யாண்டு பலகடந்தும் வேரூன்றி நிற்பதற்குக் காரணம் உரையாசிரியப்பெருமக்களின் உரைகள் என்னும் கவசத்தால் வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கபட்டமையேயாம். இங்ஙனம் அமைந்த தொல்காப்பிய உரைகளுள் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரின்  உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

    தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

    ”இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது” (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

    இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

    நச்சினார்க்கினியர்:

    தமிழிலக்கிய, இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களுள் மேலோங்கி நிற்பவர் நச்சினார்க்கினியராவர்.

    பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
    ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் – சாரத்
    திருத்தகு மாமுனிசெய் சீந்தா மணியும்
    விருத்திநச்சி னார்க்கினிய மே.

    எனவரும் பழம்பாடலானது இவர் உரைகண்ட நூல்களைக் குறிப்பிடுகின்றது. இவற்றுள், குறுந்தொகையுரை கிடைத்திலது.

    தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்ற இயல்களுக்கு இவர் வரைந்த உரை கிடைத்திலது. தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என்பவற்றிற்கு இவர் வரைந்த உரைகள் சிறப்பிற்குரியன.

    இவரின் புலமையை வியந்து “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று இலக்கணக்கொத்து ஆசிரியரும், “அமிழ்தினும் இனிய தமிழ்மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்து அருளியவர்” என்று உ.வே. சாமிநாதையரும், “பன்னூலறிந்த செந்நெறிப்புலவர்” என்று அரசஞ்சண்முகனாரும் “செந்தமிழ் மாமுகில் வள்ளல்” என்று மறைமலையடிகளாரும் புகழ்ந்துரைக்கின்றனர். அன்றியும், “தமிழில் நல்ல புலமை அடைய விரும்புவர்கள் நச்சினார்க்கினியருடைய உரைகளில் தோய்ந்தாலன்றிப் புலமை நிரம்பாது என்று கூறுகின்ற அளவிற்கு உரையாசிரியர்களுள் தலைநின்ற சிறப்புக்குரியவர் நச்சினார்க்கினியர்” (தொல். சொல். உரைக்கொத்து- ப.109) என்று பண்டித வித்துவான். தி.வே.கோபாலையரவர்கள் உவந்து போற்றுதலும் ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    “பாற்கடற் போல பரந்த நன்னெறி…” எனத்தொடங்கும் உரைச் சிறப்புப்பாயிர அகவற்பா, நச்சினார்க்கினியரின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இப்பாயிரத்தால் இவர்தம் வரலாற்றையும் ஒருவாற்றான் அறியவியலுகிறது.

    காலமும் சமயமும் :

    பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர், மதுரையில் அந்தணர் குலத்தில் பாரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவர் என்றும், போதகாசிரியராக வாழ்ந்தவர் என்றும், தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் என்றும் பாயிரம் இவரைப் போற்றுகிறது.

    இவரின் பெயர் சிவபெருமானின் திருப்பெயர்களுள் ஒன்றாம். இவர் சிவபெருமானையே பரம்பொருளாக வழிபட்ட சைவசமயத்தினரென்பது இவரின் பெயராலும் இவர் தம் உரையில் திருவாசகம், திருக்கோவையார் இன்னோரன்ன நூல்களிலிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி இருத்தலானும் அறியவியலுகின்றது. அங்ஙனமே, திருமுருகாற்றுப்படையின் அடிகளைப் பலவிடங்களில் இவர் எடுத்துக்காட்டுவதிலிருந்து அந்நூலில் இவர்க்குள்ள ஈடுபாடு பெரிதெனத் தெரிகிறது.

    இவர் சிவநேயச் செல்வராயினும் பிற சமயங்களையும் போற்றும் சமயப்பொறை யுடையராகவே இவர் விளங்கியமை தொல். சிறப்புப்பாயிரவுரை, மொழிமரபு – 13, அகத்திணையியல்- 32, புறத்திணையியல் – 21 என்றின்னவற்றிற்குரிய இவருரையான் புலனாகின்றது.

    பல்துறைப் புலமை :

    தமிழ் மொழியில் உள்ள பல்வகை நூல்களிலும் மிகுந்த பாண்டித்தியம் உடையவர் இவர். வடமொழியில் காவிய நாடக அலங்காரங்களுக்கு உரைகண்ட திரு. மல்லிநாதசூரி என்னும் புலவரைப் போல் தமிழ்மொழிக்கு வாய்த்தவர் இவர் என்று ஆன்றோர்கள் போற்றுவர்.

    “தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும் அவற்றின் உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்கு விளக்கிப் போகின்றமையாலும் பிறவாற்றாலும் இவரை வடமொழியிற் பலவகையான கலைகளிலும் மிக்க பயிற்சியுள்ளவரென்று சொல்லுதற்கிடமுண்டு” (சீவகசிந்தாமணி- ப. 33) என்று புகழ்வர் உ.வே. சாமிநாதையரவர்கள்.

    பன்னூற் பயிற்சியோடு பல்வேறு கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர் இவர். இசை, நாடகம், தத்துவம், வானியல், சோதிடம், மருத்துவம், கட்டடக்கலை முதலான கலைகளில் மிகுதிறம் கொண்டவர் என்பதை இவரின் உரைக் குறிப்புக்களிலிருந்து அறியவியலுகிறது.

    தமிழ்மொழிப் பற்று :

    இவரின் தமிழ்மொழிப் பற்றினை வெளிப்படுத்தும் இடங்களாக,

    “அகரம் முதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார்” “இவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார்” (நூ.1)

    “தமிழ்ச் சொல்லெல்லாம் ஒருதலையாகப் பொருளுணர்த்தும்” (பெய.1)

    “காலம் உலகம் என்பன வடசொல் அன்று” (கிளவி. 58)

    என்றின்னவற்றைக் காட்டலாம்.

    உரைப்போக்கு :

    நச்சினார்க்கினியருரை தெளிவும், விளக்கமும், புலமைநலனும் உடையதாம். சொற்செறிவும் பொருட்செறிவும் மிக்கதும், இலக்கிய இலக்கணத் தோய்வுடையதுமாம்.

    இவர்தம் தொல்காப்பிய உரையைப் பொதுவகையில் நோக்குழி, இவருரையமைப்பு, பாயிரவுரை, அதிகாரவுரை, இயல் உரை, நூற்பா உரை என்னும் நான்கு பகுதிகளை உடையதாக அமைந்துள்ளது.

    மேற்கோளாக எடுத்துக்காட்டும் நூலின் பெயரையும், நூலாசிரியர் பெயரையும் இவர் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

    இவர் சிலவிடங்களில் செய்யுட்களை உரைநடையாக எழுதிச்செல்வதுண்டு. உரை வகுக்குங்கால், இவர் முன்னோர்தம் உரைநெறிகளைப் பின்பற்றிடினும்,   நூற்பா கிடந்தாங்கே ஆற்றொழுக்காகப் பொருள் விரித்தலின்றிக் கொண்டுகூட்டிப் பல்வேறிடங்களில் பொருள் கூறியுள்ளார். இதுபற்றி, மறைமலையடிகளார், வ.சுப. மாணிக்கனார், க. வெள்ளைவாரணனார் போன்ற பேராசிரியர்கள் தம் நூல்களில் இவரைக் கடிந்துரைத்துள்ளனர்.

    எழுத்ததிகார உரையமைப்பு :

    நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரவுரை பாயிர உரை, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என நான்கு பகுதிகளை உடையது.

    பாயிர உரையைப் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இரு வகையாகப் பிரித்துக்கொண்டு உரை செய்திருக்கின்றார் நச்சினார்க்கினியர். பாயிர உரை இளம்பூரணருரையை ஏற்றதாகும். அதில் இளம்பூரணரின் பெயரை மனமுவந்து குறிப்பிடுகின்றார். பொதுவகையில் இப்பாயிர உரை இவரின் உவமை நலத்தைச் சாற்றுவதாக அமைகின்றது.

    பாயிர உரையினையடுத்து அதிகார உரை அமைகிறது. அதிகார உரையும் தனித்துக் கூறப்படவில்லை. முதல் நூற்பாவினை யடுத்தே கூறப்பட்டுள்ளது. “இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின்” என வினாவெழுப்பி அதிகாரத்தில் கூறப்படும் கருத்துக்களைத் தொகுத்து முன்னுரையாகக் கூறுகின்றார்.

    எழுத்ததிகார  நூற்பாவுரை கருத்து, பொருள், காட்டு, விளக்கம் என அமைகின்றது, ஆயின், இந்த அமைப்பும் அனைத்து நூற்பாக்களிலும் பின்பற்றப்படவில்லை.

    சில நூற்பாக்களில் கருத்துரையையடுத்து, விளக்கவுரையும் அதனையடுத்து எடுத்துக்காட்டும் என முன்னும் பின்னுமாக மாறி அமைந்திருக்கின்றன.

    மொழிமரபு 31-ஆம் நூற்பாவுரையில் பொருளுரை முதலிலும், அடுத்துக் கருத்துரையும், அதனையடுத்து எடுத்துக்காட்டும், இறுதியாக விளக்கவுரையும் என்ற  நிலையில் உரையமைப்பு உள்ளது. பொதுவாகக் கருத்துரை தொடக்கமாக அமைவதுண்டு. ஆயின், இந்நூற்பாவில் அம்முறை மாறியுள்ளது.

    பெரும்பான்மையாக “இது” அல்லது “இஃது” எனத் தொடங்கி உணர்த்துதல் “நுதலிற்று”  என ஈற்றில் முடித்துக் கருத்துரை கூறுவார். ஆயினும் சில இடங்களில், ‘உணர்த்துகின்றது’, ‘கூறுகின்றது’. ‘கொள்கின்றது’, ‘என்கின்றது’, ‘விளக்குகின்றது’, ‘அகற்றியது’ என்றும் ஈற்றில் முடித்தலும் உண்டு. நூற்பாவில் “இதன் பொருள்” எனக் குறியிட்டுப் பதவுரையாக எழுதுகின்றார்.

    பொதுவகையில் நோக்கின். இவரின் எழுத்ததிகார உரையமைப்பானது இளம்பூரணரின் எழுத்ததிகார வுரையமைப்பினை ஒட்டியே செல்கின்றது என்ற அளவில் நிறுத்தி, இனி இவரின் சொல்லதிகார உரையமைப்பினை ஆய்வோம்.

    சொல்லதிகார உரையமைப்பு :

    சொல்லதிகார நச்சினார்க்கினியருரை அதிகாரவிளக்கம், இயல்விளக்கம், கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினைக் கொண்டது.

    இளம்பூரணர், சேனாவரையர் இவ்விருவரும் சொல்லதிகார உரையில் அதிகார விளக்கத்தைக் கிளவியாக்கத்தின் முதல் நூற்பாவினை அடுத்துக்கூறியதனைப் போன்றே இவரும் கூறியுள்ளார். “இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என வினவி அதிகார விளக்கம் தருகின்றார். அதிகார விளக்கத்தில் ஒன்பது இயல்களின் கருத்துக்களையும் தொகுப்புரையாகத் தந்துள்ளார். இயல் பற்றிய விளக்கத்தினை இயலின் முதல் நூற்பாவினை அடுத்து வழங்கியுள்ளார். முதல் இயலுக்குரிய இயல் விளக்கத்தினை மட்டும் அதிகார உரையுனை அடுத்து அமைத்துள்ளார்.

    கருத்துரை வழங்குங்கால், எழுத்ததிகாரத்தில் கூறியாங்கே, ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கிக் கருத்துரை கூறுகின்றார். ஆயினும், “நுதலிற்று”  என ஈற்றில் எங்கும் முடித்தாரில்லை. ‘பகுக்கின்றது’, ‘அமைக்கின்றது’, ‘ஆராய்கின்றது’, ‘கூறுகின்றது’, ‘முடிக்கின்றது’ முதலிய சொற்களைக் கொண்டே முடிக்கின்றார்.

    சில இடங்களில் தொடர்புடைய நூற்பாவாக இருப்பின்,  ‘இதுவும் அது’ என்று மட்டுமே குறியிட்டு, அந்நூற்பாவிற்குக் கருத்துரை வழங்காது விடுதலுமுண்டு.

    நூற்பா உரையினையடுத்து எடுத்துக்காட்டும் அதனையடுத்து மேற்கோள் விளக்கமும் காணப்படுகின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே சொல்லதிகார அனைத்து இயல்களிலும் உள்ளதா எனில், ஒரோவிடங்களில் இவ்வமைப்பு முறை முறையாகப் பின்பற்றப்படவில்லை.

    இனி, பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையமைப்பு பற்றிய ஆய்வினைத் தொடர்வாம்.

    பொருளதிகார உரையமைப்பு :

    பொருளதிகார நச்சினார்க்கினியருரை அதிகார முன்னுரை, இயல் விளக்கம்,  நூற்பா உரை என்ற மூன்று பகுதிகளை உடையதாக அமைகின்றது.

    எழுத்து, சொல் அதிகாரங்களைப் போன்றே பொருளதிகாரத்திற்கும் அதிகார முன்னுரையினைத் தனித்துக் கூறவில்லை. முதல் நூற்பாவினை அடுத்துக் கூறுகின்றார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்கு அதிகார முன்னுரை கூறுங்கால், “இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என்று வினா எழுப்பிக் கூறிய இவர், இவ்வதிகாரத்தில் அங்ஙனம் கூறவில்லை.

    நூற்பாவிற்குரிய உரையானது கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை, மேற்கோள்களைப் பொருத்திக் காட்டுதல் என்னும் முறையில் அமைந்து செல்கின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே அதிகாரம் முழுவதும் பின்பற்றப்படவில்லை சில இடங்களில் மாறுவதுமுண்டு. களவியலுக்கு இவர் வரைந்துள்ள இயல் விளக்கம் குறிப்பிடத்தக்கது.

    கருத்துரையானது ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கி ‘உணர்த்துதல் நுதலிற்று’ என ஈற்றில் முடித்து அமைகிறது.

    இவ்வகையில் பொருளதிகார உரையமைப்பானது ஏனைய உரையமைப்பினின்றும் வேறுபட்டு நிற்கிறது.

    சிறப்பு உரைநெறி :

    அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு ஆகியன கூறல். வினாவிடை நெறி,  நூற்பாவை நிலைப்படுத்தல், மிகையினாலும் இலேசினாலும் சொல், சொற்றொடர்களை நிலைப்படுத்தல், நூற்பாவின் இன்றியமையாமையை உறுதிப்படுத்தல், இலக்கணக்குறிப்பு, இலக்கணமுடிபு கூறுதல் இன்னோரன்னவை இவரின் சிறப்பான உரை நெறிகளாகச் சுட்டத்தக்கனவாம்.

    மாணாக்கருக்கு உய்த்துணர வைத்தல் :

    மாணாக்கருக்கு ஆராய்ச்சியறிவு மிகுதலுக்காக அவர்கள் தம் அறிவைச் செலுத்த வாய்ப்பளித்தல் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் இயல்பாம். இதனை, “மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பு” (சொல்.சேனா.நூ.1) எனச் சேனாவரையர் கூறுமாற்றானும், அவ்விருவர் உரைகளானும் அறியவியலுகிறது. ஆயின், நச்சினார்க்கினியரோ, ‘மாணாக்கருக்கு உய்த்துணர்வு இன்று’ என்னும் கருத்தினர். இதனை, “மாணாக்கர்க்கு உய்த்துணரும் உணர்வு இன்று” (சொல்.நச்சி.நூ.203) என இவர் கூறியவதனால் அறியவியலும். இதுபற்றியே இவர் எதனையும் விளக்கியே கூறுவார் என்பது ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    சிறப்பாக உரை வரையும் நூற்பாக்கள் :

    பல்லாற்றானும் சிறப்புடையது இவருரை என்பதை எடுத்துக்காட்டுதற்குப் பல இடங்களைச் சான்றாகக் கூற இயலும். ஆயினும், சுருக்கங்கருதி இவர் சிறப்பாக உரை வரையும் நூற்பா எண்களை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுவாம்.

    அவை : எழுத்ததிகாரம் – மொழி.13, 18, புணர்.38,17 சொல்லதிகாரம் – நூ. 37, 50, 51, 71, 83, 95, 113, 171, 222, 360, 399, 400, 410, 441 பொருளதிகாரம் – அகத்.5,6,8 புறத்.17, களவு.1 முதலியனவாம்.

    சொற்பொருள் விளக்கம் :

    இவர் நல்கும் சொற்பொருள் விளக்கங்கள் பன்முறையும் படித்தின்புறத்தக்கன. சான்றுக்காகச் சிலவற்றை எடுத்துக்காட்டுதும்.

    “குடிமை ஆண்மை இளமை…” எனவரும் சொல்லதிகார நூற்பாவிற்கு உரைகூறும் இவர் “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்”, “ஆண்மையாவது ஆளுந்தன்மை”, “இளமையாவது காமச் செவ்வி நிகழ்வதோர் காலம்”, “வன்மையாவது ஒரு தொழிலை வல்லுதல்”, “பெண்ணையாவது கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை” என்றெல்லாம் வனப்புற விளக்குகின்றார்.

    ‘அகம்’ என்பதற்கு இவர் கூறும் விளக்கம் அறிந்து போற்றத்தக்கது. அவ்விளக்கம் வருமாறு:

    “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது எனக் கூறப்பட முடியாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”

    என்பது இவரின் நயமான விளக்கம்.

    மறுப்பு நலன் :

    தமக்கு முன்னுள்ள உரையாசிரியர்களின் கருத்துக்கள் ஏற்புடையதாயின், மனமுவந்து குறிப்பிடும் நச்சினார்க்கினியர், தன் கருத்துக்கு ஒவ்வாத கருத்துக்களாயின் மறுத்துச் செல்கின்றார்.

    அவ்வாறு மறுக்கின்ற பொழுது “பொருள் கூறினாரால் உரையாசிரியர் எனின் கூறியது கூறல் ஆம். ஆகலின் அது பொருந்தாது”, “என்றாரால் உரையாசிரியர் எனின் பொருந்தாமை யுணர்க”, “ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்கு விடையின்மை உணர்க” என்பது போன்று இளம்பூரணர், சேனாவரையர் இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு மறுத்தலும், “மாறுகொளக் கூறல் என்னும் குற்றம் தங்கும்”, “வடசொல்லென மறுக்க”, “ஆசிரியர்க்குக் கருத்தன்மை உணர்க”, “ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் கருத்தன்மை அறிக”, “அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க” என்றெல்லாம் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமலேயே மறுத்தலும் உண்டு.

    இன்னும் சிலவிடங்களில் இளம்பூரணருரையைச் சேனாவரையர் மறுக்கினும், இவர் இளம்பூரணருரையையே தழுவி, சேனாவரையரின்  மறுப்பிற்கு மறுப்பு வழங்காமலும், தாம் ஏற்றுக்கொண்ட இளம்பூரணர் கருத்துக்கள் ஏற்புடையன என்பதற்குக் காரணம் காட்டாமல் போதலும் உண்டு. இன்னும் பல இடங்களில் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் கூறாத உரைகளை வகுத்தலும் உண்டு.

    பேராசிரியர் உரையைப் பெரும்பாலும் ஏற்று உரையெழுதும் இவர், செய்யுளியலில் சில இடங்களில் அவருரையை மறுத்துச் செல்கின்றார்.

    இவ்வகையில், நன்மை கண்டவிடத்து ஏற்றுப் போற்றலும், பிழை கண்டவிடத்துக் கடிந்து ஒதுக்கலும் இவரின் மறுப்புநலனாம்.

    முடிபுகள் :

    இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.
    • அவ்வுரையாசிரியப் பெருமக்களுள் நச்சினார்க்கினியரின் உரைப்போக்கும் அவர் கொண்ட உரைமரபுகளும் தனிச்சிறப்புடையனவாய் இலங்குகின்றன.
    • ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கைப் பலவிடங்களில் இவருரைப்பகுதிகளான் இனிது விளங்குகின்றமையே இவருரைத் திறனின் சால்பினைக் காட்டவல்லதாம்
    • அன்றியும், தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்னும் இயல்களுக்கு இவருரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

    என்பன இக்கட்டுரையின் முடிபுகளாம்.

    துணை நின்ற நூல்கள் :

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (ஞா. தேவநேயப்பாவாணர்  விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1955.

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (அடிகளாசிரியர் பதிப்பு)      காவேரி கலர் அச்சகம், கும்பகோணம், 1969

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1973.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1970.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம  – 1981.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, 1978.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,(கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை, இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு,  சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1997.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையாருரை,  கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  தெய்வச்சிலையாருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1963.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும் பழையவுரையும், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1964.

    தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார்,                                  38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி.  முதற்பதிப்பு – 1930

    தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1969.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை,                   (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – 1985.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  முன்னைந்தியல்கள் – நச்சினார்க்கினியருரை,சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை, சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம்- உரைவளம், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

    தொல்காப்பியம் – கிளவியாக்கம் – உரைக்கொத்து, தி.வே.கோபாலையர், சரசுவதிமகால் நூலகம் (2007) தொல்காப்பியம் – எழுத்து, சொல், பொருள்

    தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, பாவலரேறு. ச. பாலசுந்தரனார்- தாமரை வெளியீட்டகம், தஞ்சை,

    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நுன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, வ.சுப. மாணிக்கனார்,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (1989).

    மாணிக்கனார், வ,சுப. – தொல்காப்பியக்கடல், தொல்காப்பியத்திறன் மணிவாசகர் பதிப்பகம், சென்னை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்” என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

    v தமிழ்த்துறையினராலும் தமிழ் அறிஞர்களாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அல்லது காண மறுக்குந்துறை உரையாசிரியர் கண்ட ‘உரைத்துறை’யாகும். அவ்வுலகத்தின் முடிசூடா மன்னராகிய நச்சினார்க்கினியரைத் தற்கால பேராசிரிய இளைஞர் ஒருவர் அறிமுகம் செய்திருப்பதே பெரிதும் போற்றுதற்கு உரியதாகும்.

    v  நச்சினார்க்கினியரின் உரைப்போக்குகள் பற்றிய சில எடுத்துக்காட்டுகளைக் கட்டுரையாசிரியர் தந்திருக்கிறார். அவை நச்சினார்க்கினியரின் உரைப் பேருருவைக் காட்டப் போதுமானதாக அமைந்திருக்கின்றனவா என்பது சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

    v “சேனாவரையரோடு மாறுபட்டு இளம்பூரணரை வழிமொழியும் நச்சர், அதற்கான காரணத்தைச் சொல்லாமல் போய்விடுகிறார்” என்பது கட்டுரையில் ஒரு நுண்ணியம்.

    v நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் எனப் பொதுவான தலைப்பிட்டுத் தொல்காப்பிய உரைகளை மட்டும் கட்டுரைப் பொருளாகக் கொண்டிருப்பது கட்டுரையின் அளவு கருதித் தவிர்க்க இயலாது எனினும் “நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் (தொல்காப்பியம்)” எனத் தலைப்பிட்டிருக்கலாம்.

    v  கட்டுரையின் முதல் நான்கு துணைத்தலைப்புக்கள் நச்சினார்ககினியரை அறிமுகம் செய்திருக்கின்றன. இதனைத் தவிர்த்து அவருடைய உரையாழத்துக்கான சான்றுகளைக் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்.

    v  கட்டுரைகளில் காட்டப்படுபவை நச்சினார்க்கினியத்தில் கண்ட முத்துகள் எனச் சொலல முடியாவிட்டாலும் அவை சிப்பிகள் அல்ல என்று துணிந்து கூறலாம்.

    “‘உரையாசிரியர் காலம்’ என்னும் தமிழின் வல்லாண்மைப் பகுதியின்  தனிப்பெரும் தலைவனாக வலம் வந்த மாபெரும் புலமைத் தேக்கம் நச்சினார்க்கினியரை அறிமுகம் செய்துள்ள வகையில் இந்தக் கட்டுரை ஆய்வுக் கூறுகளைக் கொண்டிலது எனினும் ஒரு பொதுக் கட்டுரையாகக் கருதி, வல்லமையில் வெளியிடுகிறோம்”

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் – 8

    கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் – 8

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அசல்பிரதி, அச்சடியோலை, இசையோலை, இணக்கோலை, ஏடகம், ஏட்டுப்பொறி, ஒற்றுதல், ஓலைத்தூக்கு, ஓலைநாயகம், ஓலைபோக்குதல், ஓலைப் பாசுரம், ஓலை வாரி, கணக்கோலை, கம்பை, கம்பை கட்டுதல், காணாட்டு,   குறிப்போலை, சட்டோலை,  சந்திரகம்,  சரவை,  சரசுவதி  பண்டாரம்,  சிக்குப்பலகை, நீட்டு, நெட்டோலை, பையோலை, பொறியொற்றோலை, முறிப்பத்திரம், வெள்ளேடு, வெள்ளோலை, என்று – இங்கே சொல்லப்பட்ட அத்தனையும் கற்பகதருவாம் பனையுடன் இணைந்தே இருக்கின்றன என்பது கருத்திருத்த வேண்டியதே. பனைக்கும் இங்கே காட்டப்பட்ட சொற்களுக்கும் என்ன தொடர்பு என்று எண் ணத் தோன்றுகிறதல்லவா! அத்தனையும் பனையின் ஓலையால் வந்த சொற்களேயாகும்.

    ஓலையினால் உருவான ஏடு பற்றிப் பார்த்தோம். அந்த ஏட்டுக்கும் இந்தச் சொற்களுக்கும் மிகவும் நெருக்கம் என்றுதான் சொல்லுதல் வேண்டும். அசல், பிரதி, என்றால் ஓலையில் எழுதப்பட்ட முதற் பிரதியாகிறது. அச்சடி ஓலை என்பது முத்திரை இடப்பட்ட ஓலையினைக் குறிப்பதாகும். இசையோலை எனும் பொழுது ஒப்பந்த ஓலையும், இணக்கோலை எனும் பொழுது உடன் படிக்கை ஓலையும் என்னும் கருத்தும் வந்து நிற்கிறது. ஏடகம் என்றால் பனை என்றும், பலகை என்றும் கருத்தாய் அமைகிறது. ஏட்டுப் பொறி என்றால் ஓலையில் பதிக்கும் முத்திரைக்குப் பெயராகும். ஒற்றுதல் என்பதற்கும் ஓலையில் முத்திரை இடல் என்பதும் கருத்தாய் அமைகிறது.

    சீட்டுக் கவி எழுதிக் கொடுப்பதை  ஓலைத் தூக்கு என்று அழைத்தனர். தலைமை அமைச்சராக இருப்பவரை ஓலை நாயகம் என்றும்,  ஓலையில் செய்தி அனுப்புதலை ஓலை போக்குதல் என்றும் சொன்னதாக அறிய முடிகிறது. கடிதச் செய்திகளை அனுப்பியதை ஓலைப்பாசுரம் என்று கூறினார்கள். பொருத்தமாய் ஓலைகளைத் தேர்ந்தெடுத்து அதனை வாருவதற்கு பயன்படுத்தும் கருவியான கத்திக்கு ஓலை வாரி என்று பெயரிட்டழைத்தார்கள்.

    கணக்குகளை எழுதி வைத்த ஏடுகளை கணக்கோலை என்றார்கள். ஒலையினால் ஆகிய ஏட்டுச் சுவடிகளின் சட்டங்களுக்கு கம்பை என்றும், சுவடிகளைக் கட்டுவதை கம்பை கட்டுதல் என்றும் அழைத்திருக்கிறார்கள். ஏட்டுக்கு ஏற்ப ஓலைகளை நறுக்கி எடுப்பதை காணாட்டு என்றும்,  கணக்குகள் எழுதப்பட்ட ஓலையினை குறிப்போலை என்றும் அழைத்திருக்கிறார்கள்.

    சட்டோலை என்றால் சட்டம் எழுதுவதற்கு பயன்பட்ட ஓலையாகும். எழுதிய ஓலையினை வைப்பதற்கு பயன்படுத்திய ஓலையின் உறை ச்சுருளை சந்திரகம் என்னும் பெயரால் அழைத்திருக்கிறார்கள். எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடத்துக்கு சரசுவதி பண்டாரம் என்று பெயரிட்டமை சிறப்பாய் இருக்கிறதல்லவா! எழுதிய ஓலைச் சுவடிகளைப் படிப்பது தானே முக்கியம். படிப்பதற்கு ஏடுகளை வைக்க ஒரு பலகையினைப் பயன்படுத்தியதை அறிய முடிகிறது. அப்படி அமைந்த அந்தப் பல கையைத்தான்  சிக்குப்பலகை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

    திருமுக ஓலையினை நீட்டு என்று அழைத்தார்கள். நெட்டோலை என்றும் திருமுகத்துக்கு இன்னுமொரு பெயரினையும் கொடுத்திருக்கிறார்கள். பச்சை ஓலையினை பையோலை என்றும், முத்திரை ஓலையினை பொறி யொற்றோலை என்றும் அழைத்திருக்கிறார்கள். ஒலையில் எழுதப்பட்ட பத்திரத்தை முறிப்பத்திரம் என்றார்கள். எழுதாமல் இருக்கும் ஓலையினாலான ஏடுகளை  வெள்ளேடு என்றும் வெள்ளோலை என்றும் பெயரிட்டு அழைத்தார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கிறது.

    பனை ஓலையினால் ஆகிய ஏடுகளைக் குறிக்க இன்னும் பல சொற்களை எங்கள் முன்னோர்கள் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அவை பற்றி தனி நூலே எழுதிவிடலாம். அசை, இணாட்டு,  இருவிள,  ஊக ஆதாரப்படி, ஊகமூலப்படி, ஏடுதிருப்புதல், ஓலைதீட்டுதல், ஓலையாள், கணக்காயர், கதம்பை, கரம், கை முறி, கோணோலை, சுகஸ்தலிகிதம், திருக்கைக் கோட்டி, இப்படி எண்ணில்லாச் சொற்களைப் பெயராக்கி கற்பகதருவாம் பனையின் ஓலையினை அதனால் ஆகிய ஏட்டினை கண்டு மகிழ்ந்து பயனடைந்தி ருக்கிறார்கள் எங்களின் முன்னோர்கள். அதுமட்டுமல்ல இப்படியும் பனை ஓலையினால் ஆகிய ஏட்டினை அழைத்து மகிழலாம் என்பதற்கும் பல அருஞ் சொற்களை ஆக்கி அளித்திருக்கிறார்கள் என்னும் பொழுது எங்கள் முன்னோர்களின் ஆற்ற லை ஆளுமையை வியக்காமல் இருந்திட முடியுமா!

    எண்ணக் கருத்துகளைச் சுமந்து எங்களுக்கு அளித்த பெருமை ஏட் டுச் சுவடிகளுக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். இன்று நாங்கள் நூல்களாய் கைகளில் வைத்து பயன் அடை யும் மூலத்தை அளித்தன ஏடுகள் அல்லவா! அரிய பெரிய பொக்கிஷங்களை யெல்லாம் அழியாமல் காத்த எங்கள் முன்னோரின் தொழில் நுட்ப ஆற்றலையும் வியக்காமல் இருக்கவே முடியாதும் இருக்கிறது அல்லவா! அத்தனை கருவூலங்களையும் அடக்குவதற்கு கைகொடுத்தது கற்பகதருவாம் பனையின் ஓலைகள் என்னும் பொழுது  – பனை எங்களின் உறவாகி எங்களுடன் இரண்டற இணைந்து விடுகிறது அல்லவா!

    பனையின் ஓலையினாலான ஏடுகள் என்றவுடன் எங்களுக்கு முன்னால் வந்து நிற்பவை சாதாரண ஏடுகளே. அதாவது நீளமாக ஒரு குறி ப்பிட்ட அளவில் வெட்டப்பட்ட நறுக்குகளாகவே அவைகள் இருக்கும். அவற்றையே நாம் கண்டிருப்போம். ஆனால் ஏட்டுச் சுவடிகள் பல வடிவங்களில் இருப்பதை நம்மில் எத்தனைபேர் அறிவோம். சிறிய, பெரியசுவடிகள், பம்பரச்சுவடிகள். அது மாத்திரமல்ல சிவலிங் கத்தின் வடிவத்திலும் ஏட்டுச் சுவடிகள் அமைந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை என்பது முருகப் பெருமான் பெருமை கூறும் நூலாகும்.. முருகனை அடை  வதற்கு வழிகாட்டும் அதாவது ஆற்றுப்படுத்தும் நூல் என்பது அதன் அர்த்தமாகும். இந்த நூல் வட்டவடிவான மிகச்சிறிய ஓலையில் எழுதப்பட்டிருக்கிறது. இதனை பம்பரச் சுவடி என்றார்கள். எட்டு சென்டி மீற்றர் நீளமும், முக்கால் சென்டி மீற்றர் அகலமும் கொண்ட சுவடிகள் சிறிய சுவடிகள் என்று அழைக்கப்பட்டன.  ஐம்பது சென்டி மீற்றர் நீளமும்,  நான்கு சென்டி மீற்றர் அகலமும் உடைய சுவடிகளை பெரிய சுவடிகள் என்று அழைத்தார்கள்   அச்சடித்த நூல்களுக்கு அப்பாவும், அம்மாவுமே எங்களின் பனை ஓலை தந்த ஏடுகளேயாகும். அச்சடித்த நூல்களை வரி சையாய் அடுக்கி வைத்து அனைவருமே பயன் அடையும் வண்ணம் செய்வதற்கு பெரிய அளவில் நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் நூலகத்தில் பாதுகாத்து பயனடையச் செய்திருப்பதையும் அறிந்திருப்பது அவசியம் அல்லவா! சுவடிகளைத் தேடி எடுத்து ஏறக் குறைய எழுபது ஆயிரம் சுவடிகளை – அச்சடித்த நூல்களை அலுமாரிகளில் அடுக்கி வைத்திருப்பது போல இந்த நூலகத்தில் அடுக்கிப் பாதுகாப்புடன் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கிறார்கள். சென்னையில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்திருக்கும் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்தான் இந்த அரிய பணியினைச் செய்திருக்கிறது. ஓலைச் சுவடிகளை ஆராய்கின்ற ஆய்வறிஞர்களுக்கு அந்த நூலகம் பெருங் கொடையாய், வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது எனலாம். நூலகம் என்னும் நிறுவனம் பதினாறாயிரத்து ஐஞ்ஞூறு ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பாதுகாத்து வைத்துப் பேணி வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    ஓலைச் சுவடிகளின் அருமை தெரியாதவர்கள் அவற்றை அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலர் ஓலைச் சுவடிகளை ஓடுகின்ற நீர் நிலைகளிலும் விட்டிருக்கிறார்கள். சிலர் தம்வசம் இருந்த ஏட்டுச்சுவடிகளைப் பிரித்துப் பார்க்காமலுங்கூட இருந்திருக்கிறார்கள். சம்பந்தப் பெருமான் காலத்தில் அனல் வாதம், புனல் வாதம் என்னும் போட்டியில் முக்கியம் பெற்றது ஓலைச்சுவடிகளே. மணிவாசகர் திரு வாசகத்தை ஓலையில் எழுதி இறைவன் சன்னிதியில் வைக்க அடுத்த நாள் அந்த ஓலை திருத்த மாய் வந்ததாயும் புராணம் செப்புகிறது. “பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக” என்று இறைவன் பணித்ததாயும் அதற்கு ஒப்ப மணிவாசகரும் திருக்கோவையாரைப் பாடினார் என்றும் அறிகின்றோம். பாவையும் கோவையும் ஓலையில்த்தான் எழுதப்பட்டன என்பதும் மனமிருத்த வேண்டியதே.

    ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து திரிந்தவர்தான் எங்கள் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள். அவர் பசியும் பாராது, உடற் களைப்பும் பாராது பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடுவதையே குறிக் கோளாய்க் கொண்டு வாழ்ந்தார் என்பதை யாவரும் அறிவார்கள். அவர் ஓலைச் சுவடிகளைத் தேடிப் போகும் வேளை தாம் கண்டு அனுபவித்த விஷயங்களை மனம் நொந்து எழுதியதையும் நாம் பார்க்கின்றோம்,   வீட்டில் பழைய ஓலைச் சுவடிகள் இருந்தால் பெருந்தோஷம் என்று எண்ணி அவற்றை நெருப்பில் இட்டும்  நீரில் இட்டும் பலர் செய்ததைக் கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு வேதனை அடைந்ததாகவும் தமிழ்த் தாத்தாவின் சரித்திரம் எங்களுக்கு சொல்லுகிறது. என்றாலும் அவர்களிடம் கெஞ்சி மன்றாடி பல ஓலைச் சுவடிகளை எடுத்துவந்தார் என்பதையும் அறியமுடிகிறது. சரயான முறையில் பேணிப் பாதுகாக்கப்படாத படியால் எங்களின் பக்திப் பனுவல்களான திருமுறைகள் பல – பூட்டிய அறைக்குள் கறையான்களுக்கு உணவாகிப் போனதையும் மனத்திருத்தல் வேண்டும், சரியான.  முறையில் அந்த ஓலைச் சுவடிகள் காக்கப்பட்டிருந்தால் இன்னும் எத்தனையே அரிய திருமுறைப் பாடல்களை நாம் கண்டு பயன் பெற்றிருந்திருப்போம். ஓலை தந்து அதனை ஏடாக்கி எழுதிட வைத்திட்ட பனைகூட இப்படியான செயல்களைக் கண்டு கண்ணீர் வடித்திருக்கும் என்றுதான் எண்ண வேண்டும் அல்லவா! தானமாய் தன்னுடைய ஓலைகளைக் கொடுத்து – உங்கள் சிந்தனைகளை மனத்திலே வைக்காமல் வருங்கால சந்ததியினருக்கும் வழங்குங்கள். அப்படி வழங்குவதற்கு நான் என்றும் துணையாக இருப்பேன் என்று கை கொடுத்தது பனை அல்லவா! அந்தப் பனை – பொறுப்பில்லா மனி தர்களின் செயலினைப் பார்த்து எப்படி யெல்லாம் கலங்கி இருக்கும் ! கலங்கினாலும் , கவலைப் பட்டாலும் தன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ, எவ்வளவு உதவிட முடியுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாங்களோ மரம் என்று பனையினைப் பார்த்து சொல்லி விட்டு “உணர்வில்லா” மனிதர்களாகவே உலவுகிறோம்.

    எழுத்தோலைச் சுவடிசெய்யக்
    குருத்தோலை தந்திடுவேன்
    ஏடாக நானெழுந்து
    எல்லோர்க்கும் உதவிடுவேன்
    மனமிருக்கும் கருத்துக்கள்
    மற்றவர்க்குக் கொடுப்பதற்கு
    பக்குவமாய் ஓலைதந்து
    பாரெல்லாம் வளர்ந்திடுவேன்
    எத்திசையில் இருப்பார்க்கும்             
    இயன்றவரை உதவிடுவேன்              
    எனைப்பார்த்து நீங்களுமே            
    இயன்றவரை உதவிட்டால்           
    நலமுடனே எல்லாரும்             
    நன்றாக வாழ்ந்திடலாம்

    Share
  • வாயல் முறுவல்!

    வாயல் முறுவல்!

    -மேகலா இராமமூர்த்தி

    நமக்குச் சிரிப்பே வரவில்லையென்றாலும்கூடச் சிரித்தாக வேண்டிய சூழல் சில நேரங்களில் ஏற்பட்டுவிடும். நமக்குப் பிடிக்காதவர்களைக் காணும்போது, நம் துன்பத்தைப் பிறரறியாமல் மறைத்துக்கொள்ள முற்படும்போது, நமக்கு வேண்டியவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துசெல்ல விழையும்போது என இந்தப் பொய்ச்சிரிப்பை உதிர்க்கவேண்டிய சூழல்களுக்கு நம் வாழ்வில் பஞ்சமில்லை. இந்தப் பொய்ச்சிரிப்புக்கு – போலிப்புன்னகைக்குத் தமிழிலக்கியம் அழகானதொரு பெயரைச் சூட்டியிருக்கின்றது; அதுதான் ’வாயல் முறுவல்.’

    இங்கே ’வாய்’ என்பது நாம் சாப்பிடப் பயன்படுத்தும் உறுப்பை (mouth) குறிக்கவில்லை. ’வாய்’ என்ற சொல்லுக்கு ’உறுப்பு’ என்பதல்லாமல், ’உண்மை’ (truth) என்ற பொருளும் உண்டு. வாய்மை என்ற பெயர்ச்சொல்லே ’வாய்’ என்ற வேர்ச்சொல்லிருந்து தோன்றியதுதான். அதனால்தான் வாயல் (வாய் + அல்) முறுவல் என்பது உண்மையற்ற போலிப்புன்னகை எனும் பொருளைக் குறித்தது.

    இனி, வாயல் முறுவல் எனும் சொல் நம் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள இரண்டு சூழல்களைக் காண்போம்.

    முதலாவதாக நாம் காணவிருப்பது வாயல் முறுவல் சிந்திய அகநானூற்றுப் பெண்ணொருத்தியை. அவள் ஏன் வாயல் முறுவல் சிந்தினாள்? பிறகு என்ன நடந்தது? என்பவற்றை அறிந்துகொள்வோம், வாருங்கள்!

    தலைவன், தலைவி, மழலை மிழற்றும் இளம்புதல்வன் என மூவர் கொண்ட அன்பான குடும்பமது. விருந்தினரைப் பேணுவது, சுற்றத்தினரைப் போற்றுவது, வறியவர்க்கு உதவுவது என்று பயனுள்ள வகையில் தமது பொருள்களைப் செலவழித்துவந்தனர் தலைவனும் தலைவியும். ஒருகட்டத்தில் இனி மீண்டும் பொருள்தேடி வந்தால்தான் மற்றவரைப் பேணமுடியும் என்ற நிலை ஏற்படவே பொருள்தேட வெளியூர்க்குச் செல்ல விழைந்தான் தலைவன். ஆனால், தன்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்ட தலைவியிடம் அதனைச் சொல்வதற்குத் தயங்கினான். காரணம், அவன் பொருள் தேடுவதற்காக நெடும்பயணம் மேற்கொள்ளவிருந்த வழி, கொடிய பாலைவழி; அவ்வழியில் பதுங்கியிருக்கும் ஆறலை கள்வர், அவ்வழி வருவோர் போவோரையெல்லாம் கொன்று அவர்தம் உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் இயல்புடையோர்; இதனைத் தலைவி அறிந்திருந்தாள்; அதனால் அந்த ஆபத்தான வழியில் தான் பயணம் மேற்கொள்ள அவள் உடன்படமாட்டாள் என்ற எண்ணந்தான் தலைவனைத் தயங்கவைத்தது.

    சில நாட்களாகத் தலைவனின் முகத்தில் கலக்கமும் குழப்பமும் தெரிவதைத் தலைவி கவனித்தாள்; அதுபற்றி அறிய, ”ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? என்னிடம் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறதே? என்று தலைவனைக் கேட்டாள்; இனியும் தன் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் மறைப்பது முறையில்லை என்று கருதிய தலைவன், ”கண்ணே! நம் சுற்றத்தையும் நம்மை நாடிவரும் விருந்தையும் நன்முறையில் புரப்பது நம் கடனல்லவா? அதற்குத் தேவையான பொருளைத் தேடச்செல்வது குறித்துச் சிந்திக்கின்றேன்” என்றான்.

    அதைக்கேட்ட தலைவி வருத்தமுற்றாள். ”அன்பரே! சுற்றமும் விருந்தும் புரக்கப்பட வேண்டியவையே; அதற்காக என்னைப் பிரிந்து, காய்ந்த ஓமை மரங்களையுடையதும், நெல்லியினது பளிங்குபோன்ற காய்கள், உயர்ந்த பெரிய பாறைகளில் சிறுவர்கள் விளையாடுவதற்குச் சேர்த்து வைத்திருக்கும் வட்டுக்களைப்போல உதிர்ந்து கிடப்பதும், ஞாயிற்றின் கதிர்கள் காயும் பக்க மலைகளில், பகுத்துவைத்தது போலிருக்கும் கூரிய கற்கள் வழிச்செல்வாரின் விரல்நுனியைச் சிதைப்பதுமான காட்டுவழியைக் கடந்துசெல்ல எண்ணுவீராயின் அஃது அறமன்று! நாம் எளிய வாழ்க்கை வாழ்வோம்; நம்மால் இயன்ற அளவிற்குப் பிறர்க்கு உதவுவோம்” என்றாள் அவனிடம்.

    ”சரி”யென்றான் தலைவன். ஆனால், தன் சுற்றத்தார் வறுமையில் வாடுவதைக் கண்ட அவன் மனம் மீண்டும் நெகிழத்தொடங்கியது. ”மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் பிறர் துன்பத்தைக் களையமுடியாது; அவ்வாறிருப்பது என் ஆண்மைக்கு அழகா? வினைதானே ஆடவர்க்கு உயிர்?” என்று சிந்திக்கலானான்.

    ”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை; உதவி வேண்டிவந்தோர்க்கு உதவும் வாய்ப்பும் இல்லை” என்பதை உணர்ந்த தலைவன் தலைவியிடம், “கண்மணி கலங்காதே! நான் தேவையான பொருளைத் தேடிக்கொண்டு விரைந்து மீண்டுவிடுவேன்; நீ நம் புதல்வனோடு சிறிதுகாலம் பொறுத்திரு!” என்றான். அவன் மனவுறுதி அறிந்த தலைவியும் அதற்குச் ”சரி”யென்று சம்மதித்தாள்.

    பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான் தலைவன். புறப்படும் நாளும் வந்தது. புறப்படுவதற்குமுன் தலைவியிடம் விடைபெறுவதற்காக அவளை அன்போடு அழைத்தான்; அவளோ அவன் அன்பை ஏற்றுக்கொள்ளாதவள்போல் மாறுபட்ட முகத்தோடு, தயங்கித் தயங்கி நிலத்தில் அழுந்த அடிவைத்து மெல்ல நடந்து அவனருகே வந்தாள்; அவன் அழைப்புக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. ”சில நாட்களுக்கு முன்பே நான் பயணப்படப்போவதை இவளிடம் தெரிவித்து அதற்குச் சம்மதமும் பெற்றபின்பு, இன்று ஏன் இவள் இவ்வாறு நடந்துகொள்கின்றாள்?” என்று திகைத்தபடி தலைவன் அவளைப் பார்த்தபோது, தன்னுடைய கூரிய பற்கள் வெளிப்படுமாறு உண்மையில்லாப் புன்னகை (வாயல் முறுவல்) ஒன்றை உதிர்த்தாள் தலைவி. அவள் தன் மனத்தில் கருதியதைத் தலைவன் உணருவதற்கு முன்பே சித்திரப்பாவைபோல் நின்று, முகத்தால் ஒரு குறிப்புக் காட்டினாள். ”என்னைப் பிரிந்து செல்லாதீர்கள்; அஃது அறமன்று” என்று தன்னிடம் அவள் முன்பு சொன்னதையே அவளுடைய முகக்குறிப்பு மீண்டும் உணர்த்துவதாகத் தலைவனுக்குத் தோன்றியது.

    (தலைவனருகே நின்றிருந்த) தலைவியின் கண்களில் அப்போது நீர் துளிர்க்கவே, அதனை மறைக்கும் வகையில் சிறிதே தலைகவிழ்ந்தாள்; தன் மார்பில் ஒடுங்கியிருந்த புதல்வனைக் கொஞ்சுவதுபோல் அவன் தலையிலிருந்த செங்கழுநீர் மாலையை மோந்தாள்; மோந்த அளவில் அவள் மூச்சின் வெப்பத்தால் செந்நிறமான அம்மலர் தன்னிறமிழந்தது; அதனைக் கண்டான் தலைவன். ”அடடா! நான் அருகிலிருக்கும்போதே இத்தனை மனத்துயர் அடைந்து அதை மறைக்க முற்படுகின்றாளே, நான் பிரிந்துசென்றால் இவள் என்ன ஆவாள்? பிழைத்திருக்க மாட்டாளே!” என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். அதுதான் தன் பயணத்தை நிறுத்துவது எனும் முடிவு.

    தலைவியின் கோணத்திலிருந்து இதனைப் பார்க்கும்போது, அவள் ஏற்கனவே தலைவனின் பயணத்திற்கு இசைவு தெரிவித்துவிட்டபடியால் அதனைத் தடுத்து நிறுத்துவது அவள் நோக்கமன்று; எனினும், அவனைப் பிரிந்துவாழும் துயர வாழ்க்கை; அவன் பயணப்படப்போகும் ஆபத்தான பாலைவழி; இப்போது செல்பவன் எப்போது திரும்புவானோ எனும் ஐயம்… இவ்வாறு ஆயிரம் எண்ணங்களும் கவலைகளும் அவள் மனத்தில் சூறாவளியெனச் சுழன்றடித்ததால் தன் உணர்ச்சிகளை மறைக்க அவள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் அது கண்ணீராகவும் வெப்பப் பெருமூச்சாகவும் வெளிப்பட்டுப் புதல்வனின் தலையிலிருந்த பூவை வாடச்செய்து, அவள் மனநிலையைத் தலைவனுக்குணர்த்தி அவனது பயணத்தையும் தடைப்படுத்திவிட்டது.

    தலைவன் தலைவி இல்லத்தில் நடந்த இந்நிகழ்வை, அவர்களின் உளநிலைகள் துல்லியமாய் வெளிப்படும் வகையில் காட்சிப்படுத்தி, தலைவனின் பெருந்தன்மையை எண்ணி நாம் உருகவும், தலைவியின் அவலநிலையை நினைத்து நாம் மறுகவும் வைத்துவிடுகின்றார் அரச புலவரும், பாலைத்திணை பாடுவதில் வல்லவருமான பாலை பாடிய பெருங்கடுங்கோ. அவரின் எழுத்தாணி தீட்டிய இனிய அப்பாடலை இனிக் காண்போம்.

    அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்
    விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல
    நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
    குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
    வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
    கண்ணியது உணரா அளவை ஒண்ணுதல்
    வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
    முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
    பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி

    மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
    உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
    மாய்த்தபோல மழுகுநுனை தோற்றிப்
    பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
    விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர
    பரல்முரம் பாகிய பயமில் கானம்
    இறப்ப எண்ணுதி ராயின் அறத்தாறு
    அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
    அன்ன வாக என்னுநள் போல
    முன்னம் காட்டி முகத்தின் உரையா
    ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தொற்றி
    பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
    ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத்
    தூநீர் பயந்த துணையமை பிணையல்
    மோயினள் உயிர்த்த காலை மாமலர்
    மணியுரு இழந்த அணியழி தோற்றம்
    கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி
    உழையம் ஆகவும் இனைவோள்
    பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே.
    (அகம்: 5 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)


    வாயல் முறுவல் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு சூழலை அடுத்துக் காண்போம்.

    இங்கேயும் பெண்ணொருத்தி வாயல் முறுவல் சிந்துகின்றாள். எப்போது? தன்னைப் பிரிந்துசென்ற கணவனை எண்ணிக் கலங்கியிருந்த வேளையில் தன்னைக் காணவந்த மாமன் மாமியிடத்து. பின்னர்க் கணவனோடு மீண்டும் இணைந்த சூழலில் அந்நிகழ்வு குறித்து அவளே அவனிடம் விளக்கவும் செய்கின்றாள். அவள் வாய்மொழியை நாமும் அருகிருந்து கேட்போம். அதற்கு முன்பாக அப்பெண் யாரென்பதை நாம் அறியவேண்டாமா? அவள் வேறு யாருமல்லள்! ”கற்புக் கடம்பூண்ட தெய்வம்” என்று கவுந்தியடிகள் எனும் சமணப் பெண்துறவியால் பாராட்டப்பெற்ற கண்ணகியே அப்பெண். 

    பொருள்தேடும் பொருட்டுப் புகாரைவிட்டு மதுரைக்குச் சென்றான் கோவலன் கண்ணகியையும் உடனழைத்துக்கொண்டு. அங்கே அவர்கள் மாதரி எனும் இடைக்குல முதுமகள் தந்த மனையில் தங்கினர். நீண்ட காலத்திற்குப் பிறகு தன் கையால் சமைத்து அருமைக் கணவனுக்கு அமுதுபடைத்தாள் பாவை கண்ணகி. அவளின் அடக்கத்தையும் பண்பையும் கண்டு உள்ளம் உருகிய கோவலன், அவளை அருகழைத்துத் தான்செய்த தவறுகளுக்காக அவளிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டான். அதுவரை அவனைக் கண்டித்து ஏதும் பேசாத கண்ணகி அப்போது முதன்முறையாக அவனுடைய பிழைகளைச் சுட்டிக்காட்டும் வகையில்,

    ”ஐய! நீர் சான்றோர் போற்றாத ஒழுக்கத்தைப் புரிந்ததனால் அறவோர்க்கு உணவளித்தல், செந்தண்மை பூண்ட அந்தணரை ஓம்புதல், துறவிகளை எதிர்கொண்டழைத்துப் போற்றுதல், பண்டைக் காலந்தொட்டு இல்லறத்தார்க்குரிய கடமையாகச் சொல்லப்பட்ட விருந்தினரைப் பேணுதல் முதலிய செயல்களையெல்லாம் யான் செய்ய இயலாமல் போய்விட்டது. அப்போது, என்னைக் காணத் தங்களுடைய பெருமைக்குரிய அன்னையும், பெரும் புகழுக்குரிய தந்தையும் வந்தனர்; என்னோடு நீங்களில்லாததால் ஏற்பட்ட வெறுப்பு நீங்கியவளாக இருந்த என்னை அன்புமொழிகளால் அவர்கள் பாராட்ட, என் மனத்துன்பமும் மெய்வருத்தமும் புலப்படும் வகையில் நான் செய்த பொய்ந்நகைக்கு (வாயல் முறுவல்) அவர்கள் வருந்தினர்” என்றாள்.

    ”அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
    பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
    மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
    முந்தை நில்லா முனிவிகந் தனனா
    அற்புளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ
    எற்பா ராட்ட யானகத்து ஒளித்த
    நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
    வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்
    போற்றா ஒழுக்கம் புரிந்தீர்…”
    (சிலப்: கொலைக்களக் காதை – 71-81)

    ஈண்டு, அகநானூற்றுத் தலைவி, தலைவனுக்குப் பயணவழியில் நேரிடக்கூடிய துன்பங்களுக்காக முன்கூட்டியே அஞ்சி, அவன் பயணத்தைத் தொடங்க நினைத்து அவளிடம் விடை வேண்டியபோது வாயல் முறுவல் புரிந்தாள்; சிலப்பதிகாரத் தலைவியான கண்ணகியோ, தலைவன் (கோவலன்) தன்னைப் பிரிந்ததால் ஏற்பட்ட மனவருத்தத்தை மாமன் மாமியிடம் மறைத்திடும் பொருட்டு வாயல் முறுவல் புரிந்தாள் என்று அறிகின்றோம்.

    பொய்ச்சிரிப்பு, போலிப்புன்னகை எனும் சொற்களைக் காட்டிலும், அதனை எதிர்மறை வாய்பாட்டில் உணர்த்தும், ’வாயல் முறுவல்’ எனும் சொல் நம் தமிழரின் நனிநாகரிகத்தை – நயத்தகு பண்பாட்டைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இச்சொல்லின் பயன்பாட்டினை நாம் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் தம் பாட்டில் கையாண்டிருக்கும் பெரும்புலமையோர்க்கு நம் பாராட்டு உரித்தாகட்டும்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1.அகநானூறு – நாவலர் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பட்ட பதவுரை விளக்கவுரையுடன் பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது.

    2.சிலப்பதிகார மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.

    Share
  • தூங்குதலை கல்வெட்டு

    தூங்குதலை கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    உடலில் உயிர் என்னும் இயக்கம் இருந்தால் தான் இந்த உலகில் ஒருவருடைய பெயர், அறிவு, சொத்து, சொந்தம், அதிகாரம் எல்லாம் அவருக்கு உரியதாக இருக்கும். அந்த விலை மதிக்க முடியாத உயிர் ஒட்டியிருந்த கூட்டை விட்டுப் போனால் உடலோடு எல்லாம் போய்விடும். உலகுடனான அவரது உடம்பியல் தொடர்பு (physical relationship) முற்றாக அற்றுப் போகும். அத்தகு உயிரை சிலர் தாமே தம் விருப்பில் தமது தலைவன் உடல்நலம் தேற வேண்டியும், தலைவனுக்கு போரில் வெற்றி கிட்ட வேண்டியும், மேற்கொள்ளப்பட்ட  ஒரு செயலில் தடை நீங்கி அச்செயல் நல்லமுறையில் நடந்தேறவும் தெய்வத்திடம் நோந்து வேண்டிக் கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேறுகையில் தம் தலையை வெட்டி தம் நோற்றலை நிறைவேற்றினர். இதற்கு தூங்கு தலை, நவகண்டம் என்று பெயர். தலையை வெட்டும் போது சிலருக்கு உடனே உயிர் போகும் அப்போது தலை உடலோடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை வைத்து இப்படி அழைத்திருக்கலாம். இத்தகு தலை அறுப்பு காளி, துர்க்கை கோவில் முன்பாகவே பெரும்பாலும் நடந்தன. இப்படி தலையை அறுத்துக் கொண்டு உயிர் துறப்பவர் செயலை மெச்சி அவரது குடும்பத்திற்கு போரில் இறக்கும் வீரருக்கு ஒப்பாகக் கருதி நெய்த்தோர்பட்டி நிலம் தானமாக வழங்கப்பட்டது. போரில் இறப்பதும் தலைவன் நலம், வெற்றி வேண்டி உயிர் பலி கொடுப்பதும் ஒன்று தான் என்ற கருத்து நிலவியதால் இந்த உயிர் பலி மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம். இப்படி இறந்தோர் பெரும்பாலும் கீழ்நிலைப் படைவீரர் அல்லது எளியோர் என்பதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் கிராமத்தில் கம்ப வர்மனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் 883 இல் ஒக்கொண்ட நாகன் ஒக்க திந்தன் என்ற பறை அடிப்பவன் நவகண்டமாக தன் தலையை அறுத்து துர்க்கைக்கு படையலிட்டான். அவன் குடும்பத்தவருக்கு ஊரார் தொறுப்பட்டி கொடுத்தார்கள். 10 ஆம் நூற்றாண்டில் விருதுநகர் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார்கோட்டை சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டு தன் தலைவன் தன்மசெட்டி நலம் பெற வேண்டி கோன் என்பவன் நோன்பு நோற்று தன் தலையை அரிந்து கொண்டு உயிர் பலி கொடுத்தான் என்கிறது.

    யோக சித்தர்கள் தமது யோக வலிமையால் உடலை ஒன்பது கூராகப் பிய்த்து மரத்தில் தொங்கவிடுவது, அங்கும் இங்கும் சிதற விட்டிருப்பது போன்ற யோகப் பயிற்சியில் ஈடுபட்டு பின் பிய்த்த உடலை தம் யோக வலிமையால் ஒன்று சேர்ப்பர். இது தான் உண்மையான நவ கண்டம். ஆனால் வீரர் நோன்பிருந்து தலை அரிந்து பலியிடல் அதனினும் மாறுபட்டது. ஆயினும் பொருத்தமின்றி அதையும் நவகண்டம் என்றே குறிப்பிட்டனர். பெண்கள் இவ்வாறு தலை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றியதாக சிற்பமோ அல்லது கல்வெட்டோ இல்லை. இது ஆடவர் மட்டுமே மேற்கொண்ட சடங்காகத் தெரிகிறது. தமிழகத்தில் பல தலைவெட்டுச் சிற்பங்கள் கல்வெட்டு ஏதும் இன்றி சிற்பமாக மட்டுமே உள்ளன. மிகச் சில சிற்பங்களில் மட்டுமே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கீழே அந்த கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் பெண்ணையாற்றின் வடபுறம் அரக்கண்ட நல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் நாட்டிய மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள 12 வரிக் கல்வெட்டு
    1. கோமாற பன்மர் திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர 
    2. பாண்டிய தேவர்க்கு யாண்டு பத்தாவது இந்தத் திருமண்டப
    3. ம் தட்டோடு இட்ட இதுக்கு இவ்வாண்டை திருவைகாசித் திருநாளில் 
    4. இவூர் தேவரடியாரில் பொந்நாண்டை மகன் இளவெண் 
    5. மதிசூடினான் தலைஅரிந்து கொள்ளுகெயில் இவனுக்கு உதிரப்பட்
    6. டியாக எல்லைக் காலில் தென்னகோன் தரங்குழி குரம்பில் 
    7. சண்டேசுர நாயனார்கு கொடுத்தருளின குழி ஐநூறும், இப்பற்றில்
    8.  நாட்டவர் இவூரில் குடிப்பற்றில் குடுத்த குழி ஐநூறும் ஆககுழி ஆயிர
    9. மும் சந்திராதித்தவரை இவன் வழி உள்ளவர் அனுபவித்துக்  
    10. கொள்ளக் கடவார்கள். பன்மாகேசுரலக்சை. 
    11. இதுக்கு இலங்கணம் சொன்னவன்
    12.  தாய்க்குத் தானே மணவாளன். 

    தட்டோடு – இடிந்ததால், அழிந்து சேதமாதல்; குரம்பு – வரப்பு, எல்லை, அணை; காலில் – காட்டில், வயலில்; உத்திரப்பட்டி – உயிர் பலிக்கு ஈடாக கொடுக்கும் நிலம்; பன் மாகேசுவரர் – சிவனடியார் கூட்டம்; இலங்கனம் – இடர் 

    விளக்கம் : சட வர்ம சுந்தர பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் 1260 இல் இந்த ஆடல் திருமண்டபம் கட்டுகையில் ஒரு பகுதி இடிந்து சேதமானது. அதை மீண்டும் உண்டாக்க இந்த ஆண்டு வைகாசி நன்னாளில் இந்த ஊர் தேவரடியாள் பொந்நாண்டையின் மகன் இள வெண்மதிசூடி என்பவன் தடையேதும் இன்றி மண்டபப் பணி முடிவடைய வேண்டிக் கொண்டு தன் தலையை அறுத்து உயிர் பாலி கொடுத்தான். இதற்கு உதிரப்பட்டியாக எல்லைக் காட்டில் தென்னகோன் பண்பட்ட விளைநில வரப்பில் சண்டேசுவர நாயனாருக்கு நன்கொடையாக வந்த ஐநூறு குழி நிலமும் இந்த பற்றில் வாழும் சித்திரமேழி நாட்டவர் இவ்வூரில் குடியிருப்பு நிலத்தில் கொடுத்த ஐநூறு குழி நிலமும் ஆக மொத்தம் ஆயிரம் குழி நிலம் சந்திர சூரியன் நிலைக்கின்ற காலம் வரை இவன் வழிவந்தோர் அனுபவித்துக் கொள்ளட்டும் என்று நிலதானம் வழங்கினர். இதை சிவனடியார்க் கூட்டம் காப்பதாக. இதை இடராக்கி குறை கூறுபவன் தன் தாய்க்கு தானே கணவன் ஆனவன்.

    கோவில் தேரடியார்கள் மற்றவர் போலவே மணந்து பிள்ளை பெற்று குடும்பம் கொண்டிருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. 12 ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டின் இறுதியில் இவ்வாறு கொச்சையாகத்  திட்டும் வழக்கம் பதிவேறியது.    

    பார்வை நூல்: கல்வெட்டுக் கலை, பக் 139, பொ இராசேந்திரன் & சொ சாந்தலிங்கம்

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் திருமலைச்சேரி பொன்னியம்மன் கோயில் எதிரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

    1. தூங்குதலை குடு
    2. த்தாந் வீரசோழ
    3. னை கல் செய்வி
    4. த்தார் நல்லூர் நம்
    5. பி 

    தூங்குதலை – தொங்குகின்ற தலை என்ற தலைவெட்டு நேர்த்திக் கடன் 

    விளக்கம் : வேந்தன் பெயரோ காலக் குறிப்போ இல்லாத கல்வெட்டு. வீரசோழன் என்ற வீரன் தன் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தன் தலையை வெட்டி வைத்தான். அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இக்கல் நட்டுவித்தன் நல்லூர் நம்பி என்ற தலைவன்.

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 53

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு இரயில் நிலையம் அருகில் உள்ள பாகசாலை மூலஸ்தான ஈசுவரர் கோயில் கற்பலகையில் உள்ள 13 வரிக் கல்வெட்டு

    1.  யாண்டு இருபத்தேழாவது க
    2. ந்நர தேவற்கு பாசாலி கிழவ[ந்)
    3. நாகன் சேந்தமானுக் கு
    4. ன்றில்
    5.  _ _ _ வென்று பிடாரிக்கு இவர் பி[ள்]
    6. ளை கையிலாந் மகந் சரதேவன் தலை 
    7. த[ந்]தான். இவனுக்கு அர்ச்சனா போக
    8. மாக மு
    9. ற்குண்டில் ஆட்புளிக் கழுவலின் கீழை குண்
    10. டில் நிலம் அரைக்கால் இவ்வரைக்
    11. கால்
    12.  நிலம்
    13.  இதுவே.    

    கிழவன் – ஊர்த்தலைவன்; மகன் – கீழ் நிலைப்  போர் வீரன், soldier; அர்ச்சனா போகம் – கோயில் பூசை செலவிற்கு விடும் நிலம்; கழுவில் – மழைநீர் வடிந்தோடும் நிலம்; குண்டில் – சிறு வயல் 

    விளக்கம் : இராட்டிரகூடன் மூன்றாம் கிருஷ்ணனின் 27 ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 966 இல் இன்றைய பாகசாலையான அன்றைய பாசாலியின் ஊர்க் கிழவன் நாகன் சேந்தமான் குன்றில் நடந்த போரில் வென்றதால் தன் வேண்டுதலை நிறைவேற்ற இவரது பிள்ளை கயிலானின் படைஆள் சரதேவன் என்பவன் துர்க்கைக்கு தன் தலையை வெட்டி பலி கொடுத்தான். இவன் சார்பாக அம்மனுக்கு பூசை நடத்தும் செலவிற்கு முற்குண்டில் ஆட்புளி மழைநீர் வடிநிலத்தின் கிழக்கு சிறு வயலில் உள்ள நிலத்தில் அரைக்கால் அளவு ஒதுக்கப்பட்டது. இந்த அரைக்கால் நிலம் இதுவென்று கல்வெட்டு உள்ள நிலத்தை குறிக்கிறது.  

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக். 14

    அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் மகாமண்டப வடக்குச்சுவர் படிக்கையில் உள்ள 4 வரிக்  கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 18 வது மேஷ நாயற்று அபரபக்ஷத்து துவாதஸியும் புதன் கிழமையும் பெற்ற சதையத்து நாள் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணை கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தோம். எம்மூர் உடையார் ஸ்ரீ 
    2. மதுராந்தக ஈஸ்வரமுடையார்க்கு இறையிலி செய்து குடுத்த பரிசாவது இந்நாயனார் சித்திரைத் திருநாள் திருவெழுச்சியும் உய்யவாடுவர் எழுந்தளிப் புறப்பட்டருளினவாறே இக்கோயிற் தேவரடியாரில் ஆவுடை நாச்சி மகன் பஞ்சணேசுவரன் தலை அரிந்து கொள்கையில் இவனும் இக்கோயில் தானத்தாரும் இ _ _ _ யக் கூனை 
    3. திரு _ _ _ நாயனார் ஸந்தி அமுது செய்தருளவும் என்று இவர்கள் கையில் கொள்கையில் நாம் இசைந்து நம்மூர் மூன்றாங் கட்டளை இராஜராஜ வதிக்கு கிழக்கு சோழகேரளன் வாய்காலுக்கு வடக்கு மூன்றாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்து தெற்கடைய நிலம் 5 வில் கிழக்கடையவும் 15 மை 
    4. _ _  _ _ _ இந்நாயனார்க்கு முன்னாள் திருநாமத்து இறுப்புக் காணியாக குடுத்த நிலம் வ ப மி இந்நிலம் ஆறுமாக்காணியும் (பஞ்சோபாதியும்) _ _ _ _ த்துக்கு இந்நாள் முதல் ஸந்த்ராதித்தவற் இறையிலி செய்து குடுத்தோம் மதுராந்தகபுரத்து நகரத்தோம். 

    பரிசு – ஏற்பாடு; திருவெழுச்சி – திருவிழா; உய்யவாடுவார் ( உய்ய + ஆடுவார்) – காலைத்தூக்கி ஆடும் இறைவன்; வதி – வடிகால்; கண்ணாறு – பாசன வாய்க்கால்; சதிரம் – நான்கு சமபக்கம் கொண்ட நிலம்; இறுப்பு – செலுத்துகை, ஆவண ஓலை;

    விளக்கம் : மூன்றாம் இராசேந்திரச் சோழனின் 18 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி. 1264 இல் மேழ ராசியான தேய்பிறை 12 ஆம் நாள் புதன் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நாளில் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணைக் கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தவர் சொல்வது. “எமது ஊர் ஈசர் மதுராந்தக ஈசுவரருக்கு இறையிலி நன்கொடை ஏற்பாடு செய்து கொடுத்தது யாதெனில் இந்த இறைவர் சித்திரைத் திருநாள் திருவிழாவில் உய்ய ஆடுவார் எழுந்தருளி உலா புறப்பட்டபடி இருக்கையில் இக்கோவிலின் தேவரடியார் ஆவுடை நாச்சியின் மகன் பஞ்சணேசுவரன்தன் தலை வெட்டி பலி கொடுத்ததனால் இவனும்  இக்கோவில் பொறுப்பாளரும் இறையிலியாகத் திருமதுராந்தக ஈசுவரர் சந்தி அமுது செய்தருள்வதற்காக இவர்கள் கையில் வாங்கிக்கொள்ளும் போது நகரத்தவர் நாம் விரும்பி நம்மூரில் மூன்றாம் கட்டளையில் அமைந்த இராஜராஜ வடிகாலுக்கு கிழக்கே சோழகேரளன் வாய்க்காலுக்கு வடக்கில் மூன்றாம் பாசன வாய்க்காலுக்கு மூன்றாம் சதிரத்தில் இருந்து தெற்கே செல்ல நிலம் 5க்கு கிழக்கை அடைந்ததும் 15 _ _ _  இந்த இறைவற்கு முன்னாளிலே ஆவண ஓலைக் காணியாக கொடுத்த நிலம் _ _ இந்த நிலம் ஆறு மாக்காணியும் _ _ _ இந்நாள் முதலாக சந்திராதித்த காலம் வரை இறையிலியாக செய்து கொடுத்தோம் இந்த மதுராந்தகபுரத்து நகரத்தார். கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் நிலம் குறித்து தெளிவாகச் செய்தியை அறிய முடியவில்லை.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், தொகுதி I, பக் 242 ஆசிரியர்: இல. தியாகராஜன்
    சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் வட்டம்  மல்லல் சிதைந்த நவகண்ட கல்வெட்டு

    1.  ஸ்வஸ்தி ஸ்ரீ கொலோத்து 
    2. ங்க சோழ தேவர்க்கு யா 
    3. ண்டு 11 ஆவது வடிந் 
    4. _ உதாரனான கொலோத் 
    5. துங்க சோழ மூவரைய 
    6. னுக்கு வியாதி தொற்ற 
    7. _ தூங்குதலை நோத்த  
    8. _ தூங்குதலை குடுத் _ 
    9. _ அம்பலக் கூத்த _ 
    10. _ சாத்தி குடுத்த ந
    11. _ _ _ து குழிச் செய்ய _ _ _     

    சாத்தி – நினைந்து; நோத்த – நோன்பு மேற்கொண்ட

    விளக்கம் : முதல் குலோத்துங்க சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1081 இல் தரும சிந்தனை உள்ள குலோத்துங்க சோழ மூவரையன் என்ற தலைவன் நோயில் வீழ்ந்தான். அவன் குணமானால் தன் தலையை வெட்டி உயிர் பலி தருவதாக வேண்டிக் கொண்டான் அவனது ஏவலன் அம்பலக் கூத்தன். அவ்வண்ணமே நோய் தீர்ந்ததால் தன் தலையை வெட்டிக் கொடுத்த அவனது நினைவைப் போற்றி அவன் குடும்பத்தவருக்கு நத்தப்பட்டி நிலம் தரப்பட்டது. எவ்வளவு குழி என்று அறிய முடியாத படி கல்வெட்டு சிதைத்து விட்டது.

    பார்வை நூல்: திரு சரவண மணியன் வலைப் பதிவு

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

    1. தொண்டைமான் 
    2. மகன் கங்கவிக்
    3. கரன் _ _ _  க்காவளோ
    4. ன் தலை யரிந்தா
    5. ன் 

    மகன் – கீழ்நிலைப் படை வீரன் 

    விளக்கம் : 12-13 நூற்றாண்டு கல்வெட்டு. ஆசனமிட்டு அமர்ந்து தலையில் கொண்டையுடன் உள்ள வீரன் தன் கழுத்திற்கு நேரே இரு கைகளால் கத்தியை பிடித்து கத்தியால் கழுத்தை அழுத்துவது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தொண்டைமானிடம் கீழ்நிலைப் போர் வீரனாக இருந்த கங்கவிக்கரன்  என்னும் காவலோன் தலையை அறுத்துக் கொண்டான் என்று உள்ளது. இவன் தொண்டைமானுக்காக உயிர் பலி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 57

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

    1. பரி விருதுக்காற 
    2. ன் கணவதி 

    பரி – குதிரை, பற்று; விருது – நோன்பு, வீரன்; 

    விளக்கம் : மேலுள்ள சிற்பத்திற்கு அருகே உள்ள இன்னொரு தலைவெட்டு கல்வெட்டுச் சிற்பம். பற்றினால் நோன்பு நோற்றவன் அல்லது குதிரை வீரன் கணபதி என்பவன் இரு கைகளால் கத்தியை பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து தலையை அறுத்துக் கொள்வது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வீரன் விரும்பி நோன்பு நோற்று தலை அரிந்து கொண்டுள்ளான். யார் பொருட்டு என்ற குறிப்பு இல்லை.  

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 58

    சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் மடப்புரம் கிராமம் அடைக்கலம் காத்த ஐயனார் கோவில் காளியம்மன் கோவில். இதில் ஐயனார் கோவில் வாயில் இருபுறமும் கல்வெட்டு காணப்படுகின்றன.

    வலப்புறம் இரண்டு வரிக் கல்வெட்டு

    1. தூங்குதலை  குடுத்தான் 
    2. சித்திர சரிதன் 

    விளக்கம் : 10 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்து கல்வெட்டு. வீரன் ஒருவன் இடது காலை மண்டியிட்டு வலது முழங் காலைத் தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் உள்ளது. இதில் சித்திர சரிதன் தன் தலையை அரிந்து தன்னை பலி கொடுத்தான். காரணம் எதற்கு என்ற குறிப்பு இல்லை.

    இடப்புறம் இரு வரிக் கல்வெட்டு
    1. தூங்கு தலை குடுத்தான் _ _ _ 
    2. வல்லபன் 
    விளக்கம் : 8 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு. வீரன் ஒருவன் வலது காலை மண்டியிட்டு இடது முழங் காலை தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் வடிக்கப் பட்டுள்ளது. வல்லபன் என்பவன் தன் தலையை தானே கொய்து தன்னை பலி கொடுத்துள்ளான். எதற்காக தலை அரிந்தான் என்று குறிப்பிடவில்லை.
    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 21, 1984, பக். 1 – 3, த நா தொ து வெளியீடு

     

    Share
  • தீர்ப்பு, ஆணைக் கல்வெட்டுகள்

    தீர்ப்பு, ஆணைக் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    சட்டம் இன்று போல அன்றும் வலியோர் பக்கமே சாய்வதாக இருந்துள்ளது. வேந்தர், மன்னர் நேரடியாக தலையிட்டால் மட்டுமே தீர்ப்பு நேரியதாக இருந்தது. அக்காலத்தே நாடு முழுமைக்கும் ஒரே சட்டம் (codified) என்று எங்குமே இருந்ததில்லை. மேல் சாதி, படைச் சாதி என்றால் தண்டனையில் விலக்குகள் இருந்தன. ஆட் கொலைக்கு ஏதேனும் ஒரு கோவிலில் சந்தி விளக்கு அல்லது நந்தா விளக்கு ஏற்றினால் போதும் என்பதே தண்டனையாக இருந்தது. ஆண் கொல்லப்பட்டால் செல்வர் ஏற்றும் நுந்தா விளக்கு அதுவே பெண் கொல்லப்பட்டால் எளியோர் ஏற்றும் சந்தி விளக்கு என்று ஆண் கொலையை விட பெண் கொலைக்கு குறைந்த தண்டனையாக இருந்தது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வாணகோப்பாடி நாட்டில் கீழ்க் கொன்றை நாட்டு பள்ளிச்சேரி முடியனூரில் வாழும் அடியநம்பி கோவலராயன் என்ற படைத் தலைவன் (பேரையன்) எய்த அம்பு குறி தவறி தன்னோடு உடன் வந்த வெள்ளாளன் குன்றன் சீருடையானைத் தைத்துக் கொல்ல அதற்கு நீதி வேண்டி பார்க்கவ கோத்திர மலையமார் போலவே தாமும் தமிழகத்தின் 79 நாட்டினரைச் சங்கமாகக் கொண்ட சித்திரமேழி பெரியநாடு என்ற சாதி அமைப்பு கோவலராயனைப் பழி சுமத்தி வற்புறுத்தியதன் காரணமாக கொலைக்குத்  தண்டனையாக இரண்டு நுந்தா விளக்கு எரிக்க 64 பசுக்களை கோவிலுக்கு விட்டான் கோவலராயன்.

    ஒரு ஊரில் உள்ளோர் தமக்கு இவ்வாறான சட்டம் வேண்டும் என்று கோரி அதை அணையாக கிழாரிடம்  இருந்தோ அல்லது  அரையரிடம் இருந்தோ ஒப்புதல் பெற்று வந்தனர். அந்த சட்டம் அந்த ஊர் அளவே செல்லுபடியாக இருந்தது. அது பிற இடங்களுக்கு பொருந்தாது. அக்காலத்தே தலை கொய்யும் தண்டனை, கசையடி தண்டனை, தண்டத் தொகை கட்டும் தண்டனை பற்றிய பதிவுகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பிராமண ஊர்ச் சபைகள் ஆணை பிறப்பிக்கும் அளவிற்கு தனி அதிகாரம் பெற்றிருந்தன என்பதற்கு குடவோலைக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. அவற்றுள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பெண்ணேஸ்வரம் மடம் ஈசுவரன் கோவில் தெற்கு திருச்சுற்று பீடத்தில் உள்ள 8 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ மத் _ _ ஸ்வக்ர  _ _ த்தி போ[சள] ஸ்ரீ  வீரராமநாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார்  பெண்ணையாண்டார் மட
    2. த்திலும் பெண்ணை நாயனார் தேவதானமான [ஊ]ர்களிலும் ஒரு அதிகாரியாதல், கணக்கர் காரியஞ் செய்வார்களாதல், கூசராதல் ஆரேனு
    3. மொருவர் வந்துவிட்டது விடாம[ல்] சோறு வேண்டுதல் மற்றேதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்யாதாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலை
    4. யை அறுத்துவிடவும். அப்படி செய்திலர்களாதல் தங்கள் தலைகளோடே போகுமென்னும்படி றேயப்புத்த பண்ணி, இதுவே சாதன
    5. மாகக் [கொ]ண்டு ஆங்கு வந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆஞை பண்ணிக்கொள்ளவும். சீ காரியமாகத் 
    6. தாங்க _ _ த _ _ போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மாணியமாகக் குடுத்தோம் அனைத்தாயமும் வி 
    7. ட்டுக் கு _ _. கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படி_ _ தே இதுக்கு வில
    8. ங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்     

    கூசர் – இராக் காவல் கூக்குரல் இடுவோர்; நலிவு – குற்றம், தீமை, இழிவு; றேயப் புத்தம் – கடும் எச்சரிக்கை; விலங்கனம் – சிக்கல், இடக்கு; ஆஞை – ஆணை

    விளக்கம் : போசள வீரராமனாதனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1295 ஆம் ஆண்டு கல்வெட்டு. பெண்ணேசுவரம் மடம் ஈசுவரன் கோவிலிலும் அதன் தேவதான ஊர்களிலும் அதிகாரியாகவோ கணக்கராகவோ இராக்காவல் கூவுநராகவோ இருப்பவர் யாரகிலும் சரி ஊரில் எவரேனும் ஒருவர் வந்து தொடர்ந்து விடாமல் சோறு போடக் கேட்டாலோ அல்லது ஏதேனும் கேடு செய்தாலோ அப்படி கேடு செய்தவரை நீங்களே தலையை அறுத்துக் கொன்று விடுங்கள். அப்படி நீங்கள் செய்யாதவராய் இருந்தால் உமது தலையும் சேர்த்தே கொய்யப்படும் என்று கடுமையாக எச்சரிதோம். இந்த சட்ட ஆவணத்தையே கையேடாகக் கொண்டு அங்கு வந்த கேடர்களை ஆணையிட்டு கொல்க. கோவில் செயற்பாட்டிற்காக போனக அமுதுபடிக்கு மூலமாக இருக்க முழு மானியமாக எல்லா வரிகளையும் விட்டுக் கொடுத்தோம். இராக்காவல் கூச்சலிடுவோர் உட்பட அரச பணியாளர்கள் யாவரும் பையூரிலேயே இருக்க வேண்டும். அதன் எல்லை தாண்டி உள்ளே வர வேண்டாம். இப்படி செய்யாமல் இதற்கு இழிவு உண்டாக்குபவர் கங்கைக் கரையில் குறால் பசுவை கொன்றவன் அடையும் பாவத்தை அடைவார்.

    இது வீர இராமநாதன் அரச பணியாளருக்கு நேரடியாக வழங்கிய ஆணையாகத் தெரிகிறது. பையூரிலேயே தங்க வேண்டும் என்றால் ஊரில் தல யாத்திரை வருவோரை எப்படிக் கண்காணிக்க முடியும்? இவருள் எவரேனும் சோறு வேண்டினாலோ, திருடு, கொலை, கற்பழிப்பு செயலில் ஈடுபட்டாலோ எப்படிப் பிடிக்க முடியும்? இதனால் வேந்தன் இராமநாதனுக்கு அரச பணியாளர் நடத்தையில் ஐயம் இருப்பது போலல்லவா இந்த ஆணை உள்ளது. எனினும் இது ஊரார் வேண்டுதலால் இப்படி ஒரு ஆணை வெளியிடப்பட்டிருக்கலாம்.

    பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள்  பக். 101 & 102 ஆசிரியர்: தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு

    ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் சாத்தம்பூர் வல்லாள ஈசுவரன் கோயில் அம்மன் சன்னதி நிலைக் கல்லில் பொறிக்கப்பட்ட 13 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ 
    2. குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 
    3. 9 வது பூந்துறை நாட்டோம். சாத்தனூர்க் 
    4. கெங்களில் அமைவு குடுத்த பரிசாவது 
    5. “எங்களஞ் சாத்தனூரோ டொத்த வூராவ
    6. தாகவும் எங்களொ பாதி சாரிகையும் 
    7. மற்றும் பெறுநவ பெறுவராகவும் 
    8. இவர்களை அழிபிழை அநியாயஞ் செய்தாரை 
    9. வெட்டுதல் குத்துதல் செய்தால் அவனுக்குத் 
    10. தண்டந் தலைவிலை யில்லையாக”. இப்படிக் கமைந் 
    11. திக் கல் வெட்டிக் கொடுத்தோம் நாட்டோஞ்.
    12. சாத்தனூர்க்குளே யழிவு செய்தவன் தன் 
    13. வழியே ழெச்சம்  அறுவான்.        

    அமைவு – இருப்பிடம்; பரிசாவது – சலுகை, உரிமை; பாதிசாரிகை – பாதி வரிசை; அழிபிழை – குலைத்து கேடு செய்தல்; எச்சம் – தலைமுறை, பிள்ளை.

    விளக்கம் : ஸ்வஸ்த்தி ஸ்ரீ என்பதன் தமிழ் இணையான நன்மங்கலம் சிறக்க என்பதையும் இங்கே குறித்து கல்வெட்டு தொடங்குகிறது. ஏன் இப்படி இரட்டை குறிப்பு தமிழருக்கு? இது அன்று தொட்டு இன்று வரை தொடரும் பிழையாக தமிழரிடம் உள்ளது. முதற் குலோத்துங்க சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1079) பூந்துறை நாட்டவரான எங்களுக்கு சாத்தனூரில் இருக்க அனுமதி கொடுத்ததால் அதற்கு பகரமாக நாங்கள் கொடுத்த சலுகை, உரிமை யாதெனில், எங்களுக்கு சாத்தனூர் எமது ஊரோடு ஒத்த ஊர் போல  ஆவதால் எங்களோடு பாதிவரிசையும் அதோடு வேறு என்ன நாங்கள் பெற்றாலும் அதை சாத்தனூராரும்  பெறுவதாகவும், இவருக்குள்ளேயே இவர்களுக்கு குலைவு கேடு, அநியாயம் செய்தாரை வெட்டியும் குத்தியும் கொன்றால் அவருக்கு தலை கொய்யும் தண்டனையை நாம் தரமாட்டோம். இப்படியாக அமைதி உடன்பாட்டுக் கல் வெட்டுவித்தோம் பூந்துறை நாட்டோம். சாத்தனூருள் அழிவை ஏற்படுத்தியவன் தனக்கு பின் ஏழு தலைமுறை இல்லாது ஒழிவானாக.

    பூந்துறை நாட்டவர் சாத்தனூராரிடம் புகலிடம் கேட்ட போது தம் ஊர் மக்கள் யாரையும் பூந்துறையார் கொல்லக் கூடாது என்று முன் நிபந்தனை வைத்திருக்கலாம் அதனால் இந்த அமைதி உடன்பாட்டை சாத்தனூராருக்கு பூந்துறைக் குடியேறிகள் தந்துள்ளனர் எனத் தெரிகிறது.

    பார்வை நூல்: தேனோலை 1976 பக். 15 ஆசிரியர்: கொடுமுடி சண்முகம்

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத்து வட்டம் தென்னேரி சிவன்கோயில் கருவறை தென் சுவர் 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலைகலமறுத்த கோவிராஜராஜ கேஸரி பந்மற்க்கி  யாண்டு 11 ஆவது நாள் 220
    2. ஊற்றுக் காட்டுக் கோட்டத்து ஸ்ரீ உத்தம சோழ சதுர் வேதி மங்கலத்து பெருங்குறி ஸபையோம் 
    3. செய்த விவஸ்தையாவது நம்மூரில் ப்ரமஸ்வங் கொண்டாரும் மேல்படு 
    4. குற்றமுடையாரும் நம்மூர் வாரியஞ் செய்யவும் ஸபா மாற்றஞ் சொல்லவும் 
    5. பெறாதாராகவும் இக்குற்றங்களுடையார் வாரியஞ் செய்தாரும் ஸபா மாற்றஞ் சொன்னாரும் 
    6. கணக்கர் இருபாடு காட்டினாரும் திருவாணை மறுத்தார்படும் தண்டப்படுவாராக இப்பரிசு வ்யவஸ்தை 
    7. செய்தோம் பெருங்குறி ஸபையோம். பணியால் திருவிதண்ணகர் ஆசாரியன் என் எழுத்து.       

    பெருங்குறி – பிராமண ஊர் சபை கூட்ட உறுபினர்கள்; விவஸ்தை – ஏற்பாடு; ஸ்வங் – கேலி, ஏளனம், போலி; இருபாடு – இருவேறு வகை; பரிசு – வகை, விவரம் திருவாணை – அரசாணை

    விளக்கம் : இராசராசனின் 11 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 996, 220 ஆம் நாளில் ஊற்றுக்காட்டின் உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்தின் பிராமண ஊர் சபைக் கூட்ட உறுப்பினர் செய்த ஏற்பாடு என்னவெனில் “நம்மூரில் பிராமண கேலி புரிவாரும் அதிகுற்றம் புரிந்தவரும் இனி நம்மூர் வாரிய உறுப்பினராக இருந்து செயல் மேற்கொள்ள முடியாது, சபைக்கு மாற்று கருத்து (ஆலோசனை) சொல்லவும் முடியாது. இக் குற்றங்களுடன் வாரியப் பணி செய்தவரும் சபைக்கு மாற்று கருத்து சொன்னவரும் கணக்கு புத்தகத்தில் இருவேறாக பொய்க் கணக்கு எழுதியவர்களும் இனி அரசாணையை மீறியவர் படும் தண்டனையை அனுபவிக்க நேரிடும் வகையில் ஏற்பாடு செய்தோம் பிராமண ஊர் சபை உறுப்பினர்களோம். பணிக் கடமையால் இதை கல்லில் எழுதினேன் திருவிதண்  நகர் ஆசாரி.

    இதன் மூலம் பிராமணருள் குற்றம் புரிவோர் உண்டு என்று தெரிகிறது. அதை தக்க முறையில் தடுக்க ஊர் சபையோர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது. குற்றவாளி பிராமணரே ஆனாலும் பிராமணரே அந்த குற்றத்தை தட்டிக் கேட்டு கல்வெட்டி தடை  செய்துள்ளனர்.

    பார்வை நூல்: ஆவணம் 25, 2014 பக். 31

    தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் வட்டம் கீழையூர் வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை தெற்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் யீழமும் பாண்டியனை முடித்தலையும் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 20 தாவது வரை திருநாமத்துக் காணியாகக் கொண்ட கொல்லை நிலங்களுக்கும் விளை நிலங்களுக்கும்  தானம் பெற்ற நிலங்களுக்கும்  ப்ரமாணப்படிக்கு கல்வெட்டு [1] இத்தேவற்கு ஏழாவது இஷப நாயற்று  பூர்வபக்ஷத்து சப்த திதியும் செவ்வாய்க் கிழமையும் பெற்ற ஆயில்லிய நாள் வீர ராஜேசந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டு ப்ரஹ்ம தேசம் திருவழந்தூர் சபைக்கு சமைஞ்ச ஊர் வாரியம் மண்டையந் பொந்மலை ஆயனும் யவறுன் சற்வதேவன் திருவரங்கமுடையானும் இவ்விருவோம் சபை விலைப் பிரமாணம் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி இவ்வூர் ஏழாவது தரமிடுகிற இடத்து, இவ்வூரில் திம்பாக இருப்பன திரண்டு எற்றச் சுருக்கம் பண்ணி கடமையும் இறாதே இராக் களவிலே வீடுகள் சுட்டும் மஹாயேச்வர வதிஷ்ணமாகச் சில வார்த்தைகளும் சொல்லி இவூர்த் திருக்கதவுடை ஆழ்வார் திருநாள் எழுந்தருளுகிற இடத்து முன்பிலாண்டுகள் செய்து வாராதிருக்கச்சிலே பச்சைக் குருதையாகச்  செய்து திருமங்கை ஆழ்வாரை ஏற்றியும் திருவாய்மொழி  பாடுவாரிலே ஒருவன் மேழியாகச் செய்து கழுத்திலே இட்டு வொள்ளானரைத் திரட்டி மணக்கேடுகளாய் யிருப்பன செய்தார்கள்ளென்றும் மாணக்கயன் நமக்குச் சொன்னவாறே இவ்வூர் கோயில் னுதாரங்களிலும் இப்படி செய்தாரை இருபதிநாயிரம் காசு தென்டமாகக் கொள்ளவும்.  இக்காசு ஒடுக்காதார் ருண்டாகில் இவர்கள் காணியை அசல்பிளந்து சபை விலையாக விற்றுக் காசு ஒடுக்கவும் இப்படி செய்யுமிடத்து நம் செய்தார் உண்டாகில் ப்ராஹ்மணரைச் சுடும்படி _ _ 
    2. கடவதாகவும் இது  சுட்டித் தண்டாளருக்கு பிழையாக கடவுதல்லாதுதாகவும் சொன்னோ. மிவ்வூர்ப் ப்ராஹ்மணரிலும் வெள்ளாளரிலும் கோயில் அனுதாரங்களிலும் மனைக் கேடுகளாகச் செய்தாரைத் தெண்டமாகக் கொள்ளச் சொன்னாக் காசு இருபதினாயிரம் விசையபாலன் நிச்சயித்தபடியே தண்டிவரக் காட்டி வாணாதராயன் அடைப்பான் தண்டலிலே ஒடுக்கப் பண்ணுவதென்று ப்ரஸாதம் செய்தருளின திருமுகம் வந்தமையில் இவ்வூர் கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் பெரியாண்டானும் கலக்கம் பண்ணியும் இராக் களவில் ப்ராஹ்மணந் அரிநாராயணன் அகம் வெந்த யிதுக்குப் பாடிகாப்பரும் சபையாரும் அகத்த பேரில் உள்ளூர் பட்ட பேராகையாலும் இவர்களை உடையார்  விசையபாலரும் சபையாரும் தெண்டமாகக் கொள்ள நிச்சையித்த கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனைக் கொள்ள நிச்சையித்த காசு அறுநூறும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானைக்  கொள்ள நிச்சையித்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்துக்கு வாரம் பின்வாசி, தரவு கூலி, திருமுகச் சம்படம், சிதார்ப்படி, எற்றிக்காசு ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்நிந்று  ஒடுக்காமையாலும் இன் நிலத்துக்கு அசலானவர்களை தாங்களும் குறைவராயிருக்கையாலும் மாற்றுக் கொள்வாரிலாமையில் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி காசு ஒடுக்க வேண்டுவதாய் உடையார் திருமடமுடையார் கோயில் ஆதி சண்டேசுரப் பொருளாக இக்கோயில் மாயேசுரக் கண்காணி செய்வார்களுக்கும் சிரிகாரியம் செய்வார்களுக்கும் தேவகன்மி கோயிற் கணக்கனுக்கும் தேவர் குடிமை நாமத்தால் _ _ _ யால் வந்த கடமையும் இறுத்து குடிமையுஞ் செய்யக் கடவதாக விற்று திரிபுவன தேவிவதிக்கு மேற்கு இராஜேந்திர சோழ வாக்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணுற்று மூன்றாஞ் சதிரத்தும் நாலாஞ் சதிரத்தும் ஸபை விலையாக விற்கிற புந்சைத் தோட்டத்துக்கு கீழ்ப்பாற்கெல்லை யழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கும் இவ்வாற் _ _ _ க் கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ 
    3. னும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்துக்கு தெற்குமாக இசைந்த பெருநான்கெல்லை உள்நடுவுபட்ட புன்செய்குழி  950 த்துச் சின்நம் இக்குழி தொளாயிரத்து ஐய்ம்பத்துச் சின்னமும் ஸபை விலையாக விலை மதித்த காசு 1060 இக்காசு ஆயிரத்து அறுபது ஆவணக்களிலேயே காட்டெற்றிக் கைச்செலவறக் கொண்டு விற்று ஸபை விலை ப்ரமாணம் பண்ணிக் குடுத்தோம்             

    திருநாமத்துக்காணி – இறைவன் பெயரில் கொடையாக தந்த நிலம்;  ப்ரமாணப்படி – ஆவணப்படி; பிரசாதம் –  அரசன் அறிவுறுத்தல்; திருமுகப்படி – அரசானை ஓலைப்படி; திம்பாக – திமிராக; எற்ற சுருக்கம் – உதைத்து சிறுமைப்படுத்தி; களவு – கலகம், புறம்பான செயல், unlawful act; ஒள்ளான் – மறைந்து இருப்பவன்; மாணக்கயன் – மாணவர் தலைவன்; நுதாரம் – நீராடும் துறை; அசல்பிளந்து – விற்றுமாற்றி, transfer; நம் செய் – பூசை செய்; சுடு – துன்புறுத்து, அழி; தண்டாளர் – தண்டிப்போர்; அனுதாரம் – பொறுப்பு; அடைப்பான் தண்டல் – கட்டணச் சாவடி, கருவூலம், pay counter; தரம் – மேல்மதிப்பு; சிதார்படி – சீலைக்காசு; தரவு கூலி – அளப்போன் கூலி; ஏற்றிக்காசு – அடித்தல் காசு; குடிமை – உழுகுடி வரி; வதி – வடிகால்; சின்னம் – துண்டு நிலம், piece of land;

    விளக்கம் : மூன்றாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் 1198 இல் 20 ஆம் ஆண்டு வரை இறைவன் பெயரில் இருந்த கொல்லை நிலங்கள், விளை நிலங்கள், தான நிலங்கள் ஆவணப்படி இருந்த நிலங்கள் குலோத்துங்கனுக்கு 20 ஆம் ஆண்டு ஏழாம் நாள் இடப ராசி பூர்வ பட்சத்து 7 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் வீர ராசேந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டின் பிரம்மதேசமான திருவழந்தூர் சபைக்கு அமைந்த ஊர் வாரியத்தார் மண்டையன் பொன்மலை ஆயன், யவறுன் சர்வதேவன் திருவரங்கமுடையான் ஆகிய நாம் இருவரும் ஊர் சபை விலை ஆவணமாக அறிவுறுத்திய ஆணைப்படி இவ்வூரில் ஏழாவது தரத்தில் (நிலப் பிரிவில்) இருக்கின்ற இடத்தில் இவ்வூரில் திமிராக இருக்கின்ற அணி சேர்ந்து கொண்டு உதைத்து சிறுமைப்படுத்தி வரியும் செலுத்தாமல், இரவுக் கலவரத்தில் வீடுகளை எரித்து, மகேஸ்வரரை நிந்திக்கும் வகையில் சில சொற்களை பேசி, இவ்வூரின் திருக்கதவுடை ஆழ்வார் எழுத்தருளுகிற இடத்தில் முன்னை ஆண்டுகள் செய்து வாராதிருக்கையில் இப்போது பச்சைக் குதிரையாக செய்து திருமங்கை ஆழ்வாரை அதில் ஏற்றியும்; திருவாய்மொழி பாடுவோரில் ஒருவன் கலப்பை செய்து தோளில் வைத்து வரும் வேளையில் மறைந்து இருப்பவரை ஒன்று திரட்டி மனக்கேடுகள் செய்தனர் என்று மாணக்கர் தலைவன் நம்மிடம் சொன்னபடியே இவ்வூரின் கோயில் நீராடு துறைகளிலும் இவ்வாறே செய்தவரிடம் இருபதினாயிரம் காசு தண்டத் தொகையாகக் கொள்க. இந்த தண்டத்  தொகையை கட்டாதவர் இருப்பின் இவர்களது விளை நிலத்தை அண்டையாரிடம் விற்று சபை தீர்மானித்த விலையை கட்டுக. இவ்வாறு செய்கின்ற போது அவருள் பூசை செய்யும் பிராமணர் இருந்தால் அந்த பிராமணரை துன்புறுத்தம் மட்டும் செய்யட்டும் அவர் நிலத்தை விற்க வேண்டாம். இதை கருத்தாக குறிப்பிட்டு தண்டாளர் (punisher) இதில் பிழை ஏதும் செய்யாதிருக்க சொன்னோம். இவ்வூர் பிராமணரில் வெள்ளாளரில் கோயில் பொறுப்புள்ளோரின் வீடுகளுக்கு தீ வைத்து கேடு உண்டாக்கினவரையும் தண்டம் கட்டக் சொன்ன காசு இருபதினாயிரத்தை அரசர் விசைய பாலன் தீர்மானித்தபடியே தண்டத் தொகையை திரட்டி வாணாதராயனின் கட்டணக் கருவூலத்தில் கட்டிவிடுவதென்று ஊர்சபை அறிவுறுத்திய ஆணை வந்தபோது இவ்வூர் கவுண்டின்ய கோத்திரத்தான்  ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் வெள்ளாளன் பெரியாண்டானும் சேர்ந்து கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு இரவுக் கலவரத்தில் பிராமணர் அரிநாராயணனின் வீட்டை  தீயில் கொளுத்திய வினைக்கு பாடிகாப்பாளரும் சபையோரும் பொறுப்பு கூற வேண்டிய நிலையில் உள்ளூர் தொடர்பானது என்பதாலும் இவர்களிடம் அரசர் விசையபாலரும் சபையோரும் தண்டத் தொகையாக பெறத் தீர்மானித்த  காசு கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் பெறத் தீர்மானித்த காசு அறுநூறும், ஸ்ரீ கபாடன் பெரியாண்டானிடம் பெற நினைத்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்தையும் வாரம் பின்வாசி, அளப்போன் கூலி, திருமுகச் சம்படம் (ஆணை ஓலைக் கட்டணம்), சீலைக் காசு, அடித்தல் காசு என சேர்த்து ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்வந்து செலுத்தாமையால் இவர் நிலங்களுக்கு பக்கத்தில் இருப்போர் குறைவாய் இருப்பதாலும் இந்நிலங்களை தம் பெயருக்கு மாற்று கொள்ளவர் இல்லாததாலும் அரசர் அறிவுறுத்திய ஆணையின்படி 20,000 காசு கட்ட வேண்டியுள்ளதால் இறைவன் திருமடமுடையர் கோவில் ஆதிசண்டேசுவரர்க்கு பொருளாக வரும் வரி, இக்கோயில் மாயேசுவர கண்காணி செய்பவர்களுக்கும், கோயில் பணி செய்பவர்களுக்கும், தெய்வப்பணி செய்பவர்களுக்கும், கோயில் கணக்கனுக்கும் கொடுக்கின்ற இறைவனுக்கு உழுகுடி வரிப் பெயரால் வரும் காசு, _ _ _  வந்த  கடமை வரியையும் எடுத்துக் கருவூலத்தில் செலுத்தினோம். குடிகள் மீது வரி திரட்டிக் கொள்ளலாம் என்று விற்ற நிலம் திரிபுவன தேவி வடிகாலுக்கு மேற்கிலும் இராசேந்திர சோழ வாய்க்காலுக்கு தெற்கிலும் மூன்றாங்கண் ஊற்று மூன்றாம் சதிரத்தும் நாலாம் சதிரத்தும் ஊர் சபை விலையாக புஞ்சை தோட்டத்திற்கு கீழ்ப்பகுதி எல்லை அழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கிலும் தென் பக்க எல்லை இப்படியாக _ _ _ க்கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ னும் ஸ்ரீ கபாடன், பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்திற்கு தெற்கில் அமைந்த பெரிய நான்கு எல்லைகுள் நடுவுபட்ட புஞ்செய் குழி 950 த்துச் சின்னம் (குழி தொள்ளாயிரத்து ஐம்பத்து சின்னத்தையும்) ஊர் சபை விலையாக விலை நிர்ணயித்த 1060 காசை அடைக்க ஆவணங்களில் காட்டி எற்றி, எங்களுக்கு கைச் செலவு ஏதும் ஏற்படாமல் விற்று சபையின் தண்ட விலைக்கு ஆவணம் செய்தளித்தோம் என்கின்றனர் ஊர் வாரியத்தார் இருவரும்.

    இக்கல்வெட்டு மூலம் குற்றவாளிகள் தண்டம் கட்டாவிடில் அவரது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தெரிகிறது. நிலம் ஏலம் போகவில்லை என்றாலும் தண்டத் தொகையை கட்டியாக வேண்டிய பொறுப்பால் வருங்காலத்தில் குடிகள் மீது வரியை திரட்டிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து தற்காலிகமாக கோவிலுக்கு வந்த வருவாயை கொண்டு தண்டத் தொகையை கட்டியுள்ளனர். இது ஏற்புடையது அல்ல. நிலத்தை விற்க முடியாத தமது இயலாமையை அரசருக்கு தெரிவித்து அங்கிருந்து வரும் அறிவுரைப்படி நடந்திருக்க வேண்டும். வீணே ஊழியர் சம்பளத்தை எடுத்துக் கட்டி மக்கள் மேல் இன்னும் வரி விதிப்பது மக்களுக்குத் தான் வரிச் சுமையை அதிகரிக்கும். இப்படி ஊர் சபை நடந்தால் விரைந்து திவாலாகிவிடும். எனினும் கல்வெட்டில் சில இடங்களில் சிதைந்து உள்ளதால் உறுதியான கருத்தை கூற முடியவில்லை.

    பார்வை நூல்: ஆவணம் 21, 2010 பக். 35

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் காண்டராதித்தத்தில் உள்ள சொக்கநாதர் கோயில் கருவறை தென் சுவரில் உள்ள 23 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ பூமேவுவளர் திருப்பொன் மாது புணர நாமேவு கலைமகள் பெரிதும் சிறப்ப விசைய மாமகள் வெல்புயத் திருப்ப இசையுஞ் செ
    2. ல்வி எண்டிசை வளர நிருபர் வந்திறைஞ்ச நீணில மடந்தையைத் திருமணம் புணர்ந்து திருவளர் திருமாமணி முடி கவித்தென மணிமுடிசூடி மல்லை ஞாலத்துப் பல்லுயிர்க் கெல்லாம் எல்லையில் இன்பம் இயல்பினில் எய்த வெண்குடை நிழற்ற செங்கோ
    3. லோச்சி  வாழி பல்லூழி வாழி நடப்பச் செம்பொன் வீர ஸிங்ஹாதனத்துப் புவந முழுதுடையாளொ
    4. டும் வீற்றிருந்தருளிய  கோவி ராஜகேசரிப் பந்மராந திரிபுவந சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு  யாண்
    5. டு 11 ஆவது வடகரைப் புவநமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ கண்டராதித்தச் சது
    6. வேதி மங்கலத்து உடையார்  சிவலோகமுடையார் இந்நாடு மணற்குடி நாட்டு கிரந்தங்குடி இருக்கும் வெள்
    7. ளாளந் மாங்குடையாந் நெய்யாடியேந் தியாகஸமித்ரத் தெரிந்த வில்லி(களில்) சொற் மணவாளந் மணவாட்டியைச் சில எற்றாந் சூழ்ச்சிப் புகுந்த
    8.  இடத்து இவள் மேல் லேவ எந் கைப்பட்டு இவளுக்கு மரணம் உண்டாச்சு. உண்டானயிடத்து 
    9. உடையார் காங்கையராயர் பட்டகளை வைச்சுக் கொடி (கூடி) இருந்து வினவி இவன் வெள்ளாளந் ஆதலா(ல்) இவந்னுக்கு வதை இல்லை என்
    10. று பட்டன் விதிக்கவும் இந்நியாயத்தில் உள்ளாக ஸமாதாநத்தால்லு
    11. ம் இத்தேவர் கோயிலில் வைக்க கடவதாந சந்தி விளக்கு 1. இ வி
    12. ளக்கு ஒந்றுக்கும் விட்ட பசு நாலும் இக்கோயிலில் காணி உடை
    13. ய சிவபிராமணந் காச்சபந் திருச்சிற்றம்பல உடையாந் பசி தா
    14. ங்கி கைக்கொண்ட பசு இரண்டும் இக்குடி தழுவக் குழைந்தாந் திருச்சிற்ற
    15. ம்பலம் உடையான் கைக்கொண்ட பசு விரண்டும் ஆக பசு நாலும் கை 
    16. கொண்டு இச்சந்தி விளக்கு னாலுமாக. இவ்வூர் ஸ்ரீ  இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயந்
    17. ஆளவந்தாந் _ _ _ கண்டாந் ப்ராஹ்மணி இச்சேரி புள்ளமங்கலத்து சாவாந்தி 
    18. வெண்காடு தேவந் சிவலோகத்து நாயக நம்பி மகள் அருந்தவஞ் செய்தாள் பக்கலும் இக்
    19. காசு கொண்டு உப(ய)மாக சம்மதித்து எரிக்க கடவோமாக ஸந்தி விளக்கு ஒந்றும் இத்
    20. திருவிளக்கு இரண்டும் யாவர் ஜீவம் சந்திராதித்தவர் எரிக்க கடவோமாக சம்மதித்து இக்கல்லி
    21.  ல் இத்தேவர் கோயிலில் வெட்டி கல்வெட்டிவித்து கொண்டோம் இ(கோயில்க் குச்சியும் அலகும்) கொண்டு படி கட
    22. புக்காக எரிக்க கடவாராக இ வுபயம் கொண்டோம். இக்காசவந் திருச்சிற்றம்பல முடையாந் பசிதாங்கியேந். இவை எழுதிய
    23. படி இவை தழுவக் குழைந்த இசாந திருச்சிற்றம்பல முடையாநேந் இது எந் எழுத்து. இப்படிக்கு இவை பந்மாகேஸ்வர ரக்ஷை. 

    எற்றாந் சூழ்ச்சி – அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடம்; ஏவ – மறைந்து பாய; உடையார் – சிற்றரசர்; பட்டர்கள் – சாஸ்திர பண்டிதர்; வதை – கசையடி; சமாதானம் – அமைதி, சாந்தி    

    விளக்கம் : இரண்டாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது. இதில் 3 மூவர் ஏற்றிய 3 சந்தி விளக்கு பற்றிய செய்தி உள்ளது. முதல் சந்தி விளக்கு “குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 1144 இல் வடகரைப் புவனமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு பிரம்மதேசம் ஸ்ரீ  கண்டராதித்த சதுர்வேதி மங்கல இறைவன் சிவலோகமுடையார் கோயில் கொண்ட இந்நாட்டு மணற்குடி நாட்டு கிரந்தங்குடியில் வாழும் வெள்ளாளன் மாங்குடையான் நெய்யாடியான நான் தியாகசமுத்திரத்து வாழும் தெரிந்தெடுத்த வில்லாளியான சொல் மணவாளன் மனைவியை சில அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடத்திற்கு போன போது கொடிகளில் உலர்த்திய துணிகளின்  மறைவில் இருந்து கொண்டு இவளைக் கட்டி அணைக்க  இவள் மேல் பாயும் போது என் கை பட்டு இவள் அந்த இடத்திலேயே இறந்து போனாள். இறப்பு உண்டான இடத்தின் ஆட்சியாளர் காங்கையராயர் சாஸ்திர பண்டிதர்களை கலந்து பேசி என்ன தண்டனை தரலாம் என்று வினாவிய போது இவன் வெள்ளாளன் (பிள்ளைமார்) என்பதால் இவனுக்கு கசையடி தண்டனை ஏதும் இல்லை என்று சாஸ்திர பண்டிதன் கூற இந்த வழக்கின் தீர்ப்பாக அமைதி ஏற்படுத்தும் வண்ணம் இந்த இறைவன் கோயிலில் ஒரு சந்தி விளக்கு ஏற்றினால் போதும் இந்த விளக்கு அன்றாடம் எரிவதற்குத் தேவையான நெய்க்கு நாலு பசுவை தானம் அளிக்க வேண்டும் என்றனர். அதில் இரண்டு பசுவை இந்த கோவிலில் பணிபுரியும் காணி உரிமை உள்ள சிவபிராமணன் காசியபன் திருச்சிற்றம்பல உடையான் பசிதாங்கியிடமும் இன்னொரு சிவபிராமணன் தழுவக் குழைந்தான் திருச்சிற்றம்பலம் உடையானிடம் மற்ற இரண்டு பசுவும் தரப்பட்டன”. மேலும், இந்த ஊர் இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயன் (பாரத்துவாஜ கோத்திரத்தான்) ஆளவந்தான் _ _  கண்டான் மனைவியிடமும் இந்த சேரியின் புள்ளமங்கலத்து சாவாந்தி (சாவு + அந்தி = சாவந்தி > சவுண்டி) வெண்காடு தேவன் சிவலோகத்து நாயக நம்பியின் மகள் அருந்தவஞ் செய்தாள் சார்பாகவும் காசு பெற்று அதற்கு உபயமாக விளக்கு ஏற்றக் கடவோம் என்று ஒரு சந்தி விளக்கும் ஆக இத் திருவிளக்கு இரண்டும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக ஒப்புக் கொண்டு இந்த கல்லில் இந்த இறைவர் கோயிலில் எழுதி கல்வெட்டினோம் இக்கோயிலில் குச்சிச்சியும் அலகும் கொண்டு கருவறை புகும் வண்ணம் படிக் கடப்பில் எரிப்போம் என்று இந்த உபயம் பெற்றுக் கொண்டோம் என்று காசபன் திருச்சிற்றம்பல முடையான் பசிதங்கி சொல்கிறான். இவற்றில் எழுதிய படியே தழுவக் குழைந்தான் ஈசான திருச்சிற்றம்பல முடையான் நடப்பதாக உறுதி கூறுகிறான். இது என் எழுத்து. இப்படிக்கு இவை பன்மாகேசுவரர் பாதுகாப்பதாக.

    பண்டு தனியே செல்லும் பெண்களுக்கு பொது வெளியில் பாதுகாப்பு குறைவு என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. தண்டனை என்று வந்தால் சாதிக்கு ஒரு நீதி என்ற முறையே பண்டு நிலவியது என்று தெரிகிறது. கோவிலில் விளக்கு ஏற்றுவதால் குற்றவாளி திருந்தப் போவதில்லை. அதற்கு மாறாக நான்கு அறநூல்களைப் படித்து பாட்டாக ஒப்பிக்க வேண்டும், அதை விளக்க வேண்டும் என்ற தண்டனை குற்றவாளியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சிந்தனை அந்நாளில் யாருக்கும் தோன்றவில்லை போலும்.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I,பக். 114-115 இல. தியாகராஜன்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் திருவாலீசுவரர் கோயில் 4 வரிக் கல்வெட்டு

    1. கோவி ராசகேசரி பன்மற்கி யாண்டு 8 வது வன்னாட்டு வாலிகண்டபுரத்து திருவாலீஸ்வரத்து மாதேவற்க்கு வன்னாட்டுத் திசையாயிரத்தைஞ்ஞூ ற்றுவரோம் கற்கார்டூ
    2. ர் இருக்கும் வளஞ்சியன் ஐயாற்றிகளைக் கிலாச்ச வனமாம்பாடியுடைய வடுகன் சடையனைப் படக் குத்தி பட்ட பலமண்டல வீர வளஞ்சியரைக் சாத்
    3. திய் வைத்த நொந்தா விளக்கு இரண்டு. இவ்விளக்கு இரண்டினால் _ _ _ இப்பொன் பதின்ஐங் கழஞ்சினால் பலிசை நிசதம் நெயெண்ணை  அட்டக் கடவது உரி நாராயத்தா
    4. ல். இவ்விளக்கிரண்டினால் பொன்  மணிக்கிராமத்தார் வசமும் சேனையார் வசமும் சந்திராதித்தவல். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை. 

    கிலாச்ச – கலவரம், மோதல், clash என்ற ஆங்கில சொல்லுக்கு ஊற்று இச்சொல்; பட – விழ, சாக; பட்ட – வீரச்சாவடைந்த; பலிசை – வட்டி; நிசதம் – ஏற்பாடு; அட்டு – ஊற்று; நாராயம் – அளவுப் படி,     

    விளக்கம் : இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. வேந்தன் யார் என்று தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் அவனது 8 ஆவது ஆட்சி ஆண்டில் வன்னாட்டு வாலிகண்டபுரத்து வாலீசுவரர் கோயில் இறைவருக்கு வன்னாட்டின் திசையாயிரத்து ஐந்நூற்றுவ வணிகக் குழுவினர் கற்காட்டூரில் வாழும் வளஞ்சியன் ஐயாற்றிகள் தன்னை வலுச் சண்டைக்கு இழுத்த வனமாம்பாடியைச் சேர்ந்த வடுகன் சடையனை செத்து விழுமாறு குத்தினான். அதன் பொருட்டும் இன்னும் பல மண்டலங்களில் வீரசாவடைந்த வளைஞ்சியரை நினைவில் நினைந்தும் இரண்டு நுந்தா விளக்கு வைக்க முடிவு செய்தனர். இந்த இரண்டு விளக்கிற்கு தேவைப்படும் நெய்க்கு உரி அளவுப்படியால் நெய் ஊற்ற பதினைங்கழஞ்சு பொன் கொடுத்து அதை வட்டிக்கு விட்டு அதில் வரும் வருவாயில் இருந்து நெய் ஊற்றம் ஏற்பாட்டை செய்தனர். இதற்கு பொன் மணிக்கிராம வணிகரும் சேனை வணிகரும் பொறுப்பாக இருந்து சந்திர சூரியர் உள்ள காலம் வரை தடையின்றி இது செல்வதைக் கவனிக்க வேண்டும். இதை கோயில் பன்மாகேசுவரர் காக்க வேண்டும் என்று கல்வெட்டியுள்ளனர்.

    வணிகர் குழு இங்கு தன் செல்வாக்கை செலுத்தி ஐயாற்றிகள் தண்டனை ஏதும் பெறாமல் நுந்தா விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஐயாற்றி என்பது இயற்பெயர் அல்ல. அது தலைமை ஏற்று வழி நடத்துவோனைக் குறிக்கிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பக். 213 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் கோயில் முதல் திருச்சுற்றில் உள்ள முற்றத்தின் அடித் தளத்தில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. உடையார் திருபாதிரிப்புலியூருடைய நாயனார் கோயில் தேவகன்மி, கோயில் கணக்கர்க்கு சிறுமுறி திருப்பாதிரிப் புலியூர் நத்தமும் விளை நிலமும் புன்செய் நிலமும் இவ்வூர் பிடாகைகளில் திருநாமத்துக் காணியாக அனுபவித்துப் போதுகையில் பெருமாள் விக்கிரம பாண்டிய தேவற்கு மூன்றாவது நாளில் விக்கிரம பாண்டியக் காலிங்கராயர் இக்கோயிலிலே சுப்பிரம(ண்)ணியப் பிள்ளையாரை ஏறியருளப் பண்ணி  இப்பிள்ளையார்க்கு இரண்டு மா நிலம் சண்டேசுரப் பெருவிலை கொண்டு கல்லும் வெட்டின அளவிலே இவ்வூரிலே இருக்கும் பிராமணர் இவ்வூர் எங்கள் ப்ரம்மக்ஷேத்ரம் என்றும் சண்டேசுரப் பெருவிலை  கொள்ளக் கடவதல்ல என்றும், எங்கள் காணி என்று அனுசயம் பண்ணினபடியாலே மாஹேஸ்வரர் திருக்கூட்டமாக இருந்து ஒரு திருமேனி  தீயிலும் விழுந்தபடியாலே பெருமாள் திருமுன்பே 
    2. கேழ்வியாய் [பி]ள்ளை பல்லவராயரையும் பிள்ளை அழகிய மணவாளப் பெருமாளையும் நீங்கள் நாட்டிலே போன அளவிலே இவ்வூர் மருங்கு சூழ்ந்த இடத்து நாட்டாரை அழைத்துக் கேட்டுக் காணி உடைய இவர்களுக்கு விடுவித்துக் குடுப்பதென்று திருவாய்மொழிந் தருளினபடியாலே நாலாவது ஐப்பசி மாதம் ஐஞ்சாந் தியதி சோழகுல வல்லிநல்லூர் அம்பலத்திலே எங்களையும் கூடக் கொண்டு கேட்ட இடத்துப் பிராமணரை உங்கள் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோ ளென்று சொன்ன இடத்து இந்தப் பிராமணர்  ப்ரம்ம க்ஷேத்ரம் என்று சொல்லுகையாலே உங்கள் ப்ரம்ம க்ஷேத்ரமாகில்  நீங்கள் உழுது இறுக்கை இன்றியே வெள்ளாழர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட உழுது இறுத்து ஆண்டு மாறி இவர்கள் உடனுங்கூடக் கரைஇட்டு உழுது போந்தபடியாலே காணி ஆ
    3. ட்சி அல்ல என்றும் அனுபோகத்தால் சொல்ல ஒண்ணா தென்றும் நீங்கள் இன்னாள் வரையாக இத்திருக் கோயிலிலே காணிநில முதலாகத் திருநாமத்துக்காணியாக நீங்கள் குடுத்துக் கல்வெட்டிக் கிடப்பதுண்டோ என்று கேட்ட இடத்து இப்படிக்கு ஒரு மூலம் எங்களால் காட்ட ஒண்ணா தென்றும் தன்னில்தான் விற்றும் ஒற்றி வைய்த்தும் போதுவோ மென்றும் இவர்கள் சில சாதனங் காட்டின இடத்து உங்களில் நீங்கள் ஒற்றி வைய்த்தும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களைக் கேட்(ட்)டு விட்டுக் கோயில் தானத்தாரை அழைத்து  திருநாமத்துக் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோள் என்று கேட்ட இடத்து இக்காணி என்று சொல்லுகிற பிராமணர் ஆண்டுதோறும் திருநாமத்துக் காணி பேசி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை ஓலை காட்டினபடியாலும் கோப்பெருஞ்சிங்கர் நாளிலும் 
    4. நிலக்கூலி தண்டிப் போந்த படிக்குக் கோயில் பரிமாற்றங் காட்டின படியாலும் பெருமாள் விக்கிர ம பாண்டிய தேவர் இத்திருப்பாதிரிப் புலியூர்  உடலடங்க இறையிலியாக ஐஞ்சாவது நாளில் எழுதின திருமுகத்திலே திருநாமத்துக் காணி படத் திருமுகம் எழுதித் திருவெழுத்துச் சாத்தின இத்திருமுகங் கொண்டு திருவீதி வலமாக இப்பிராமணர் உடனுங்கூட அலங்கரித்துக் கல்லும் வெட்டி இன்னாள் வரையும் அனுபவித்துப் போந்து இருக்க இப்பொழுது சொல்லக் கடவதல்ல  என்று முத[லி]களு[ம்] அருளச்செய்து நாங்களும் சொல்லிவிட்டது “இது திருநாமத்துக் காணி என்னும்படி கேட்டு அற்றுவிட்டபடிக்கு இத்திருக்கோயிலிலே கல்லுவெட்டிக் கொள்வது. இப்படிக்கு இவை திருபுவன மாதேவிச் சறுப்பேதி மங்கலத்துச் சாத்த மங்கலத்துக் குலசேகரப் ப்ரம்ம ராயன் எழுத்து. இப்படிக்கு இவை திட்டைச்சேரி சுந்தரபாண்டியப் ப்ரம்ம 
    5. ராயன் எழுத்து. இப்படி _ _ _     
    6. இப்படிக்கு இவை னந்தி  _ _ _ 
    7. இப்படிக்கு இவை பல்ல_ _ _ _          

    பெருமாள் – வேந்தர்; பிடாகை – உட்கிடையூர், backyard hamlet; உடையார் – சிற்றரசர்; மாகேசுவரர் – திருமேனி – தெய்வச்சிலை; திருவாய்மொழி – ஆணை இசைவு; சாதனம் (சாசனம்) – ஆவணம்; இறுக்கை – செல்லுதல், நடத்தல்; கரை – வரப்பு  

    விளக்கம் : 13 ஆம் நூற்றாண்டு இறுதியில் அல்லது 14 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வீர பாண்டியனுக்கு முன் வட தமிழகத்தை ஆண்ட பராக்கிரம பாண்டியன் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வு. திருப்பாதிரிப்  புலியூர் இறைவன் கோவியில் இறை பணியாளர்களுக்கும் கோவில் கணக்கருக்கும் வந்த சிறு முறி (ஓலை). திருப்பாதிரி புலியூர் விளையா நத்த நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் அதே போல் உட்கிடை ஊர்களில் (பிடாகை)  விளையா  நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் இறைவன் பெயரில் உரிமையாக (திருநாமத்து காணி) வந்து அனுபவித்து கொண்டிருக்கும் வேளையில் வேந்தர்  விக்கிரமபாண்டிய தேவர்க்கு பட்டம் ஏற்ற மூன்றாவது நாளில் சிற்றரசர் விக்கிரமபாண்டிய காளிங்கராயர் இக்கோவிலில் சுப்பிரமணிய பிள்ளையாரை எழுந்தருளச் செய்து இந்த பிள்ளைக்கு இரண்டு மா அளவு நிலத்தை சண்டேசுவரப் பெரு விலையாக வாங்கி கல்வெட்டு பொறித்த போது இவ்வூரில் வாழும் பிராமணர் இவ்வூர் எமது பிரம்ம சேத்திரம் (பிராமணர் ஊர்) எனவே சண்டேசுவர பெருவிலை வாங்கக் கூடாது இது எமக்கான உரிமை நிலம் என்று தொல்லை செய்த  வேளையில்; அப்போது மாகேசுவரர் (சிவனடியார்கள்) திருக்கூட்டமாக இருந்த நேரத்தில்  ஒரு சாமி சிலை தீயில் விழுந்ததால் அதை அரசர் காலிங்கராயர் திருமுன்பாகச் சொல்ல அவர் பிள்ளை பல்லவராயரையும், பிள்ளை அழகிய மணவாள பெருமாளையும் நீங்கள் நாட்டிலே , ஊரிலே சென்று இந்த ஊரை சூழ்ந்த ஊராரை விசாரித்து காணியுடைய பிராமணர்களுக்கு நிலத்தை விடுவித்து கொடுக்க ஆணைக்கு இசைந்ததால் முடிசூட்டிய  நாலாம் நாளில் ஐப்பசி மாதம் ஐந்தாம் தேதி அன்று சோழகுலவல்லி நல்லூர் நீதிமன்றம் அல்லது கோவிலில் எங்களையும் (பிராமணரையும்) கூட அழைத்து சென்று கேட்ட நேரத்தில் பிராமணர்களே  உங்கள் காணி என்பதற்கு ஆவணங்களை காட்டுங்கள் என்று சொன்ன போது இந்த பிராமணர் இது பிரம்ம சேத்திரம் என்று சொல்லும் போதும் இது உங்கள் பிரம்ம சேத்திரம் என்றால் இதில் நீங்கள் உழாமல் வெள்ளாளர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட்டோர் உழுது ஆண்டுகள் பல கடந்து இவர்கள் அந் நிலத்திற்கு வரப்பும் அமைத்து உழுது காலம் போனதால் இது உமது நில உரிமை அல்ல, எனவே  அனுபோகத்தால் (by possession) உமது நிலம் என  சொல்ல முடியாது என்று சொல்லி  நீங்கள் இதுநாள்வரை இக்கோவிலில் காணி நிலமாக பெற்ற  இறைவன் பெயரில் நிலங்களாக கொடுத்த கல்வெட்டி ஏதேனும் இருக்கிறதா என்று கேட்ட போது இப்படி ஒரு மூல ஆவணம் எம்மால் காட்ட இயலாது அவரவர் விருப்பப்படி விற்றும் ஒத்தி (அடமானம்) வைத்தும்  போவோமென்று இவர்கள் சில ஆவணம் காட்டிய போது நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒத்தியும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களிடம் சொல்லிய  போது கோவில் நிருவாகிகளை அழைத்து இது  திருநாமத்து காணி என்பதற்கு ஆவணம் காட்டுங்கள் என்று கேட்டபோது இக்காணி எமது என்று சொல்லுகிற இப்பிராமணர்  ஆண்டுதோறும் திருநாமத்து காணி  என்று சொல்லி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை (சான்றாக) ஓலை காட்டியதால் காடவப் பல்லவ வேந்தன் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே நிலக்கூலி வாங்கியதற்கு கோவில் பரிமாற்றங்களைக்  (transaction) காட்டியதால் வேந்தர் விக்கிரம பாண்டியத்  தேவர் திருப்பாதிரிப்புலியூர் மூல நிலமும் அடங்க இறையிலியாக தான் முடிசூடிய ஐந்தாவது நாளில் எழுதிய திருமுகத்தில் (அரசாணையில்) இது இறைவன் நிலம் என்று தெளிவாக ஆணையிட்டு கையெழுத்து இட்ட படியால் இத்திருவெழுத்தை இப்பிராமணர் வீதிவலமாக எடுத்துச்சென்று கல்லு வெட்டிக் கொண்டனர். இதை இதுநாள் வரை நீங்கள் அனுபவித்து கொண்டு இருக்க அதை இனி மீண்டும் சொல்லத் தேவை இல்லை என்று முதலிகளும் ஒப்புதல் அளித்து நாங்களும் சொன்னது என்ன என்றால் “இது திருநாமத்துக்காணி  எனும்படி சொல்லக் கேட்டு எமக்கு முழுவதும் கைவந்தபடியாலே ( அற்றுவிட்டபடியாலே > அத்துபடி)  இத்திருக்கோவிலில் அதை கல்வெட்டிக் கொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்தோம். இப்படிக்கு திருபுவன மாதேவி சருப்பேதி மங்கலத்துச்   சாத்த மங்கலத்துக்  குலசேகர பிரம்மராயன் எழுத்து. இவை திட்டைச்சேரி சுந்தர பாண்டிய பிரம்மராயன் எழுத்து. இப்படிக்கு இவை நந்தி (வர்மன் எழுத்து). இப்படிக்கு இவை பல்ல(வராயன் எழுத்து)

    வேந்தர் வெள்ளாளர், பரம்பர், பள்ளி ஆகியோரை tenants under tenants/ sub tenants என்று கருதியதால் பிராமணரே உண்மையான வாடகையாளர் என்று கூறிவிடுகிறார். அதற்கு பிராமணர் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே கட்டிய நில வாடகை விதை முதல் ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறார்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண்: 759 பக். 385

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் கல்வெட்டு

    சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹா மண்டலேஸ்வர சதுசமுத்திராதிபதி  ஸ்ரீமந் சதாசிவ தேவ மஹாராயர் பிருதுவிராச்சியம் பண்ணியருளா நின்ற சகாத்தம் 1466 ன் மேற்செல்லா நின்ற குரோதி சம்வத்ஸரத்து மீன ஞாயற்றுப் பூருவ பட்சத்து உத்துவாநத் துவாதசியும் சோமவாரமும் பெட்ரா உத்திரட்டாதி நட்சத்திரத்து நாள் வீரப் பிரதாப ஸ்ரீமது மஹா மண்டலேஸ்வர இராமராஜ விட்டல தேவ மகா இராஜர். சோழ மண்டலத்து காவேரி தீரத்து தென்கால் உய்யக்கொண்டசோழ வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். திருவிடை மருதூருடைய தம்பிரானாற்க்கு தற்மசிலா சாஸனம் பண்ணிக் குடித்தபடி மருதப்பர் திருநாமத்துக் காணியாய் பூறுவம் நடந்த புத்துஆற்றுக்கு வடக்கு ஆவணமும், சிற்றாடியும் இந்த இரண்டு கிறாமமும் பூறுவம்  கோயிற்பற்றாக  நடக்கயிலே அன்னாளிலே பண்டாரா வாடைக்காரர் கட்டிக் கொண்டு பண்டாரவாடை ஆகப் போகையில் இப்பொழுது இது காரியமாக திருவிடை மருதூருடைய தம்பிரானார் திருக்கோயில் தேவகன்மிகளில் திருச்சிற்றம்பல பட்டர் மங்காமந் காத்தார் இன்னயினார் கோயிற் பற்று என்று நமக்கு விண்ணப்பம் செய்து நாம் திருவடி பேரிலே தண்டு வந்த பொழுது  நம்முடனே கூட தெற்கு அனந்தசயனம் வடக்கு முதுகல்லு ஸஹிதமாகத் தண்டுப் பண்ணி பூறுவம் கோயிற்பற்று என்று பலகாலும் நமக்கு விண்ணப்பம் செய்து நாமும் அந்தக் கிறாமங்களிலே மருதப்பர் முத்திரை எல்லைக் கல்லு நிற்கிறது உண்டோ என்று நம்முடைய முத்திரை வாங்கி, இலிங்கயர் மனுஷரையும் தூளி நயினாரையும் நாம் முதுகல்லிலே இருந்து திருச்சிற்றம்பல பட்டர் சொன்னாப் போல எல்லைக் கல்லு நிற்கிறதோ என்று பார்க அனுப்பி வரக்காட்டி விசாரித்து பூருவம் கோயிற்பற்று என்கிறதுக்கு இரண்டு ஊரிலும் கல்லு நிற்குது என்று பார்த்து வந்து நமக்கு விண்ணப்பம் செய்கையில் நாமும் அந்தப் படிக்கு இராயஸமும் வாங்கிக் குடுத்து சங்கிரம புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கையிலே உதகம் பணிக்கு குடுத்து  நம்முட இராயஸமும் _ _ __.  

    தர்ம சிலா சாசனம் – நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு; பண்டாரவாடைக்காரர் – வரி தண்டும் கருவூல அதிகாரி; தண்டு – படை,  வருத்தம்; இலிங்கயர் – குறி செதுக்குவோர்; தூளி – குதிரை; இராயசம் – அரசாணை;

    விளக்கம்: இக்கல்வெட்டில் இடம்பெறும் இராமராச விட்டல தேவ மகாராயர் கிருஷ்ணதேவராயரின் மருமகனாவார். இவர் சதாசிவராயர் இளமையிலேயே வேந்தராக முடிசூட்டிக் கொண்ட காரணத்தால் அவரது மேற்பார்வையாளராக இருந்து பின்புலத்தில் இருந்தபடி உண்மையாகவே இவரே ஆட்சி செலுத்தியவர் என்பதால் மகாமண்டலேசுவர தேவ மகாராயர் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். கி.பி. 1565 இல் தக்காண சுல்தான்களோடு நடந்த தலைக்கோட்டைப் போரில் இவரது தலை கொய்யப்பட்டு வைக்கோல் அடைத்துக் காட்சிப்படுத்தப்பட்டது.

    மலபார், கொங்கணம், சோழமண்டலம், உத்கலம் என்ற நான்கு கடற்கரைக்கும் அதிபதியாக சதாசிவ தேவராயர் மண்ணுலகு ஆண்டு அருளுகின்ற சக ஆண்டு 1466 (கி.பி.1544) குரோதி ஆண்டில் மீன ராசி முற்பகுதியில் கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியான   (உத்துவான துவாதசி) திங்கட்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் கூட நாளில் வீரபிராதப மகா மண்டலேசுவரர் இராமராச வித்தல தேவ பேரரசர் சோழமண்டலத்த்தில் அடங்கிய காவேரிக்கரை தென்கரையில் அமைந்த உய்யக்கொண்ட சோழ வளநாட்டு திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். இந்த திருவிடைமருதூருடைய இறைவர்க்கு நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு செய்து கொடுத்தது யாதெனில், இறைவன் மருதப்பர் பெயர்க் காணியாக முன்னொரு காலம் புத்து ஆற்றுக்கு வடக்கில் ஆவணம், சிற்றாடி ஆகிய இரு கிராமமும் கோயில் உரிமை நிலமாக இருந்த நிலையில் அக்காலத்தே கருவூல அதிகாரி அவற்றில் இடம் கட்டிக்கொண்டு அவருக்குரியதாக ஆக்கிக் கொண்டார். இப்பொழுது இதன் தொடர்பில் திருவிடைமருதூருடைய இறைவன் கோயில் இறைப்  பணியாளர்களில் ஒருவரான திருச்சிற்றம்பல பட்டர் மங்காமன் காத்தார் இவை இக்கோயில் இறைவன் உரிமை நிலம் என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். நான் திருவடிகள் நாடான திருவனந்தபுரம் மேல் படைநடத்தி வந்த போது என்னுடனே கூட தெற்கில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் அனந்தபுரத்தில் இருந்து வடக்கே முதுகல் (குல்பர்கா) வரை தம்மை வருத்திக் கொண்டு  கூடவே வந்து முன்னொரு போது இவை கோயில் உரிமை நிலம் என்று என்னிடம் பலமுறை வேண்டீடு செய்தார். நானும் அந்த கிராமங்களில் மருதீசர் முத்திரை பொறித்த எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளனவா என்று என்னுடைய முத்திரை பெறும் அதிகாரி, குறி செதுக்குவோர் ஆகியோரையும் குதிரைப்படை தலைவனையும் நான் முதுகல்லில் இருந்தபோது சிற்றம்பல பட்டர் சொன்ன ஊர்களில் எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்து வரச்சொல்லி அனுப்பி விசாரித்ததில் முன்னம் அவை கோயில் நிலம் என்பதற்கு சான்றாக இரு ஊர்களிலும் கல் நிறுத்தப்பட்டுள்ளது என்று பார்த்து வந்து எனக்கு வேண்டுகோள் வைத்தமையில் நானும் அதன்படி அரசாணையும் வாங்கிக் கொடுத்தேன். போர் நடக்கும் புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கைகளில் நீரட்டி என்னுடைய ஆணையையும் கொடுத்தேன் என்ற மட்டில் கல்வெட்டு சிதைந்துள்ளது.

    பண்டாரவாடைக்காரர் யார் என்ற பெயர்க் குறிப்பு கல்வெட்டில் இல்லை. இது போல அரசு அதிகாரிகள் பல ஊர்களில் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஏதோ சிற்றம்பல பட்டரின் விடாமுயற்சி கோயில் நிலம் மீண்டும் கோவிலுக்கே மீண்டது.

    பார்வை நூல்: தொல்லியல் புதையல், பக். 54 – 55 ஆசிரியர்: நடன. காசிநாதன் & திருவிடைமருதூர் கல்வெட்டுகள், 1960 பக். 25 – 29, வெளியீடு:ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவஸ்தானம்.

    Share
  • நல்லையல்லை!

    -மேகலா இராமமூர்த்தி

    நிலவைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. இன்பம் தருகின்ற அதன் தண்மையும், உடலை வருத்தாத நல்லொளியும் மக்கள் அனைவரும் விரும்பக்கூடியவை; அதனால் அல்லவோ ”நிலா நிலா ஓடி வா; நில்லாமல் ஓடி வா!” என்றும், ”அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?” என்றும் அந்த அம்புலியை ஆசையோடு அழைத்தனர் மக்கள்.

    அதுமட்டுமா? நிலவுதரும் இன்பத்தை, பயனைத் துய்ப்பதற்கென்றே அந்நாளில் நிலாமுற்றங்களை அமைத்தனர். 

    ”நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து” – (நெடுநல்வாடை – 95)

    ”நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து” – (சிலப் – அந்திமாலைச் சிறப்புச்செய் காதை – 31) என நிலாமுற்றம் குறித்துப் பேசுகின்றன பண்டைத் தமிழிலக்கிய நூல்கள். நிலாமுற்றத்துக்கு ’வேயாமாடம்’ என்ற பெயருமுண்டு.

    இன்பம் தருகின்ற ஒருபொருளே சில நேரங்களில் துன்பம் தருகின்ற ஒன்றாகவும் அமைந்துவிடுவது உண்டு. நிலவு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அவ்வகையில் நிலா தொல்லையாக உலாவிய சூழலை விவரித்து அதனைச் சாடுகின்றது இந்தக் குறுந்தொகைப் பாடல்.

    இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்கும் ஆவலில், கல்லும் முள்ளும் காடும் மேடும் தாண்டித் தலைவியின் வீடுநோக்கி வந்துகொண்டிருந்தான் தலைவன் ஒருவன். இவ்வாறு இரவுநேரத்தில் நிகழும் தலைவன் தலைவி சந்திப்புக்கு ’இரவுக்குறி’ என்று பெயர்சூட்டியது சங்க இலக்கியம்.

    அவ்வேளையில் வானில் காட்சியளித்த முழுமதி, சூரியனைத் தோற்கடிக்கும் வகையில் தன் ஒளிக்கதிர்களை வாரியிறைத்து வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. அதனைத் தலைவியின் வீட்டுவாயிலில் நின்றவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தாள் தலைவன் தலைவியின் காதலுக்கு உற்றதுணையாகத் திகழ்ந்த தலைவியின் தோழி. 

    காதலர் சந்திப்பைப் பிறருக்குக் காட்டிக்கொடுத்து அவர்களுக்கு ஏதம் விளைவிக்கும் வகையில் பளீரென்று வானில் ஒளிவிட்ட நிலாவின்மீது சுளீரென்று கோபம் வந்தது அவளுக்கு. எனவே, நிலவை எரித்துவிடுபவள்போல் சினத்தோடு நோக்கியவள்,

    ”நெடுநேரம் எறிக்கும் வெண்ணிலவே! கரிய அடிப்பகுதியினையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்துகிடக்கும் பெரிய பாறையானது, வேங்கைப் புலியின் குருளையைப்போல் (குட்டி) தோன்றும் காட்டுவழியில் தலைவியோடு களவுக்காதல் வளர்க்க வரும் தலைவனுக்கு நீ நன்மை தருவாய் அல்லை!” என்றாள் கடுமையாக.

    ”கருங்கால் வேங்கை  வீயுகு  துறுகல்
    இரும்புலிக்
     குருளையின்  தோன்றுங்  காட்டிடை
    எல்லி
     வருநர்  களவிற்கு
    நல்லை
     யல்லை  நெடுவெண்  ணிலவே.”  (குறுந்: 47 – நெடுவெண்ணிலவினார்)

     

    அப்போது தலைவியின் வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்த தலைவனின் காதுகளில் தோழி நிலவோடு நடத்திய சூடான உரையாடல் விழவே செய்தது. அவன் காதுகளில் விழவேண்டும் என்பதுதானே அவள் நோக்கமும்!

    நிலவு தனக்குரிய இரவுநேரத்தில் மட்டுமே எறிக்கும் இயல்புடையதாயினும், அது விரைவில் மறையவேண்டும் எனும் தோழியின் எண்ணமே அது நெடுநேரம் எறிப்பதாய் ஒரு மாயத்தோற்றத்தை அவளுள் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால்தான், ’நெடுவெண்ணிலவே’ என்று அதனை விளித்தாள். 

    இரவுநேரத்தில் வானில் தோன்றும் முழுநிலா பகல்போல் ஒளியை விரித்துக் காதலர்க்கு இகலாகும் (பகை) எனும் செய்தியை,

    ”பகல்உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
    அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே” 
    (அகம்: 122 – பரணர்) எனும் அகநானூற்றுப் பாடலும் பேசுகின்றது.

    பொன்போலும் நிறங்கொண்ட வேங்கை மலர்கள் பாறைகளில் குவிந்துகிடப்பது அப்பாறையை வேங்கைப்புலியின் குருளையைப்போல் உருமாற்றி, அவ்வழி வருவோரை ஆங்கே ஒரு புலி படுத்துக்கிடக்கின்றதோ என்று கிலிகொள்ள வைக்கும் தன்மையுடையது.

    ஆதலால், தலைவன் இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வருதலும் ஆபத்தானதே; தவிர்த்தலுக்குரியதே; எனவே, இவ்வாறு உடலுக்கும் உயிருக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களை விடுத்துத் தலைவியை விரைவில் மணந்துகொண்டு நிலாவின் இன்பத்தைத் தலைவன் நிம்மதியாய்த் துய்க்கலாமே என்பதை அவனுக்குணர்த்தும் உள்ளுறை குறிப்பு தோழியின் கூற்றில் ஒளிந்துகிடக்கின்றது.

    இப்பாடலைப் பாடிய புலவர்பெருந்தகையின் பெயர் இன்னதென்று தெரியாத காரணத்தால் பாடலில் பயின்றுவரும் சிறந்த தொடரான ’நெடுவெண்ணிலவு’ என்பதை வைத்துப் புலவருக்கு ‘நெடுவெண்ணிலவினார்’ என்று பெயர் சூட்டிவிட்டனர் தமிழ்ச்சான்றோர்!

    இதில் இடம்பெற்றிருக்கும் ’நல்லையல்லை’ எனும் சொல்லானது பிற்காலக் கவிஞர்களையும் பெரிதும் ஈர்த்திருக்கின்றது; அதற்கான சான்று, கம்பராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.

    இராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் எனும் செய்தியை அறிந்த கைகேயியின் பணிப்பெண்ணும் தந்திரத்தில் வல்லவளுமான மந்தரை (கூனி) கடுஞ்சினம் கொள்கின்றாள். எப்படியாவது கைகேயியின் மனத்தை மாற்றி அவள் மகன் பரதனை நாடாளச்செய்யவேண்டும்; இராமனைக் காடேகச் செய்யவேண்டும் எனும் கொடுமனத்தோடு கைகேயியின் அரண்மனைக்குள் விரைவாக நுழைகின்றாள்.

    பால்போல் தெளிந்த மனமும், மைந்தன் இராமனிடம் அளவற்ற தாயன்பும் கொண்ட கைகேயியிடம் இந்தச் செய்தியைச் சொல்கிறாள். அதைக் கேட்டதுதான் தாமதம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கேகயன் குலக்கொடி, சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இரத்தினமாலை ஒன்றை மந்தரைக்குப் பரிசாய்த் தருகின்றாள். சீற்றத்தோடு அம்மாலையை வாங்கிய மந்தரை, தரை குழிவிழும் அளவுக்கு அதனை விட்டெறிந்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்திவிட்டுக் கைகேயியிடம் இராமனுக்கு எதிராகத் தன் துர்ப்போதனையைத் தொடங்குகின்றாள்.

    ஆரம்பத்தில் அதற்குச் சற்றும் செவிசாய்க்காத கைகேயி கூனியைப் பார்த்து, ”நீ எனக்கு நல்லவளுமில்லை; என் மகன் பரதனுக்கு நல்லவளுமில்லை; அவ்வளவு ஏன்… தருமத்தோடு சிந்தித்துப்பார்த்தால் நீ உனக்கே நல்லவளில்லை; விதியின் வேலையிது! அதனால்தான் உன் மனத்துக்கு இதமென்று படுவதைச் சொல்கிறாய் அறிவற்றவளே!” என்று வெகுள்கிறாள்.

    ”எனக்கு நல்லையும் அல்லை நீ
         என் மகன் பரதன்
    தனக்கு நல்லையும் அல்லை அத்
         தருமமே நோக்கின்
    உனக்கு நல்லையும் அல்லை
         வந்து ஊழ்வினை தூண்ட
    மனக்கு நல்லன சொல்லினை
         மதி இலா மனத்தோய்.” (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1470)

    இப்பாடலில் ”நல்லையும் அல்லை” என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதைக் காண்கின்றோம். சங்கப் புலவரான நெடுவெண்ணிலவினாரின் ’நல்லயல்லை’ எனும் சொல்லாட்சியையே கம்பர் இங்கே பயன்படுத்தியிருக்கின்றார் என்பது கண்கூடு.

    ”நல்லையல்லை” என்ற மந்திரச்சொல் கம்பரோடு நின்றதா எனில் இல்லை; 2017ஆம் ஆண்டு வெளியான “காற்று வெளியிடை” எனும் தமிழ்த் திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்தின் வரிகளில் உருவான ”நல்லை யல்லை நன்னிலவே நீ நல்லை யல்லை” என்ற பாடலிலும் இடம்பிடித்துக் ”காலத்தை வென்றவன் நான்” என்று மார்தட்டி நிற்கின்றது.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. குறுந்தொகை மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.
    2. அகநானூறு – நாவலர் திரு ந.மு வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பட்ட பதவுரை விளக்கவுரையுடன் பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது.
    3. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

     

    Share
  • கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தனி மனிதர்கள் பலர், ஒன்றுபடச் சேர்ந்ததே சமூகம் எனச் சமூகத்திற்குத் தவறான விளக்கம் தரப்படுகிறது. 1,000 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடினாலும், அவ்வாறே 1,000 துறவிகள் ஒன்று கூடினாலும் அது சமூகம் ஆகாது. ஏனெனில் இந்த ஆயிரம் பேருக்கும் குடும்பப் பொறுப்பு என ஏதும் கிடையாது. என்றால் கூட்டமாகச் சேர்ந்திருப்பது சமூகம் ஆகாது. ஒரு இரயில் நின்றதும் 1,000 பேர் அதில் இருந்து இறங்கி தம் வழியே செல்கின்றனர் இது சமூகம் ஆகாது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பில் தான் குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்தம் குடும்பப் பொறுப்பானது இறக்கும் காலம் வரை 3-4 தலைமுறைக்கு நீள்கிறது. குடும்பத்தவர் தாம் உலகில் நிலைக்கப் பொருளைக் கொடுத்தும் கொண்டும் வாழப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் வெவ்வேறு மாற்றுத் தொழில் செய்வோரிடம் கூட்டுச் சமூகப் பொறுப்பு கட்டமைக்கப்பட்டு சமூகம் என்பது நாம் கண்கூடாகக் காணும் பொருள் போல உண்டாகிறது. தனிமனிதர்களான துறவிகள், பிச்சைக்காரர்கள் கூட்டமாக கூடினாலும் இப்படியான பொறுப்பை கொண்டிராததால் அவர்களை சமூகம் என்று அழைக்க முடியாது. ஆனால் இவர்கள்  சமூகத்தைச் சார்ந்து வாழ்பவர்கள். இந்த வெவ்வேறு மாற்று தொழில் செய்யும் குடும்பங்களால் தான் ஊர் என்பதே உண்டாகிறது. ஒரு குடும்பத்திற்கு அடுத்ததாக ஊர் என்பதே பெரிய சமூகம் ஆகும். அதுவே பல ஊர்களை உள்ளடக்கி நாடு என்று விரிகிறது. பல நாடுகள் இணைந்ததே தேசமென்ற பெரும் சமூகக் கட்டமைப்பு ஆகும். குடும்பம் சிதைந்து தனிமனித நலன் மேலோங்கினால் (ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும், திருமணமில்லா இருபாலார் கூட்டு வாழ்க்கை ஆகியவற்றால்) சமூக அமைப்பு, ஊரமைப்பு, நாட்டமைப்பு ஆகியன சிதைந்து விடும். ஊர்ச் சமூகம் நாடாக விரியும் போது நிர்வாகம், பாதுகாப்பு, பணம் போன்ற சமூக முறைமைகள் தேவைப்படுகின்றன. இந்த முறைமை வந்த பின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் தமக்கென தனியே படையைப் பேணி மண உறவால், படை சூழ்ந்த உறவுகளால் படைச்சாதி என்ற படைச் சமூகத்தை உண்டாக்கி இந்த சமூக இயங்கியலை கட்டுப்படுத்தினர். இந்த கட்டுப்பாட்டால் சில சமூகத்தவர் ஏற்றம் பெற்று எல்லா வசதிகளையும் உரிமைகளையும் அனுபவித்தனர். பலர் அதற்கு வெளியே வைக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டதால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு உண்டானது. அது எவ்வாறு கல்வெட்டில் வெளிப்படுகிறது என்று பார்ப்பதே இந்தப் பார்வை.

    சேலம் மாவட்டம் சேலம் வட்டம் பேளூருக்குத் தென்கிழக்கில் சின்ன ஏரிக்கரையில் உள்ள இரு கல்வெட்டுகள்

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. மிலாடாந
    3. ஜனனாத வள
    4. நாட்டுத் துரவி நா
    5. ட்டு வெளியூர் வண்
    6. ணாத்தி தாழி வடுகி 
    7. இட்ட தூம்பு   

    வெளியூர் – இன்றைய பேளூர்; தூம்பு – மதகு; மிலாடு – ஒன்றுகூடும் இடம்; தாழி – பருத்த, குண்டான

    விளக்கம் : முதலாம் இராசராசன் சிறப்புப் பெயரான சனநாதன் பெயரில் அமைந்த நாடு என்பதை கொண்டு இதன் காலம் முதற் குலோத்துங்கன் காலம் என்று தீர்மானிக்கப்பட்டது. இராசராசன் வெற்றிக்கு பின் ஒன்றுகூடும் இடம் சனநாதன் வளநாடு என்று பெயரிடப்பட்ட நாட்டில் அமைந்த துரவி நாட்டின் திறந்த வெளியூரில் (பேளுர்) வாழும் வண்ணாத்தி குண்டு வடுகி என்பவள் இந்த ஏரிக்கு மதகு ஒன்று அமைத்துக் கொடுத்தாள். இந்த ஏரியின் நீரில் தான் அவள் நாள்தோறும் ஊரார் துணிகளைத் துவைத்துக் காயவைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தாள். இந்த மதகால் ஏரி நீர் பாசனத்திற்கு அளவோடு வெளியேறும் அல்லாவிடில் முன்பு போல கால்வாய் மூலம் அதிக நீர் வெளியேறி ஏரி நீர் விரைந்து வற்றும் என்பதே காரணம்.

    பார்வை நூல்: கொங்கு இதழ் பிப்ரவரி 1974 பக். 39

    1. ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோ
    2. ழ தேவற்கு யாண்டு 41 வது 
    3. மிலாடாகிய ஜநநாத வளநாட்டு 
    4. த் துறவிநாட்டு வெளியூரா
    5. ன ஏரியில் ஏறி
    6. வீரபட்டணத்து வண்ணான் பி
    7. ச்சன் சொக்கன்
    8.  இடுவுத்த தூம்பு.

    எறிவீரபட்டணம் – வணிகர் படை ஊர்; இடுவித்த – கட்டி நிறுத்திய

    விளக்கம் : முதலாம் குலோத்துங்க சோழனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கிபி.1111 இல் சனநாத வளநாட்டில் அடங்கிய துறவிநாட்டில் உள்ள திறந்த வெளியூரில் (பேளூர்), வணிகர் தம் எறிவீரபட்டணத்தில் வாழும் வண்ணான் பிச்சன் சொக்கன் என்பவன் ஏரிக்கு மதகு கட்டினான்.

    மேல் உள்ள முதல் கல்வெட்டு போல் அல்லாமல் இதில் வேந்தனின் ஆண்டுக் குறிப்பும் பெயரும் உள்ளது. இதைக்  கொண்டு அந்த மதகும் கல்வெட்டும் இதே ஆண்டினது எனக் கொள்ளலாம். வண்ணாத்தி தாழி வடுகியும் வண்ணான் பிச்சன் சொக்கணும் உறவினர் ஆதல் வேண்டும். மிக அரிதாக வண்ணார் செய்த சமூகப் பங்களிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: கொங்கு இதழ் மார்ச்சு 1974 பக். 68

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மர் திருபுவனச் சக்கர 
    2. வத்திகள் ஸ்ரீ பராக்கிரம பாண்டி
    3. ய தேவர்க்கு யாண்டு 9 ஆவது ஆனி மாதம் 10 தில் 
    4. நாலாயிர நாடாழ்வானேன் என் 
    5. மனையான அஞ்சாந் தெருவில் 
    6. மேற் சிறகில் தெற்
    7. கொரு மனை விட்டு உ 
    8. ள்ளில் மனை ஒன்று 
    9. காரிமகன் சிவநாய
    10. னுக்கு விற்றேன். 
    11. இப்படிக்கு ஊரக 
    12. ம் கற்பகத்து அறிவேந்     

    சிறகில் – குறுக்கு தெரு, cross street; உள்ளில் – உள் வீடு; ஊரகம் – ஊர் அதிகாரி; கல் பகத்து – பகுத்து விலை கூறல், கல்பெயர்த்து வை

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 9 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1324 ஆனி மாதம் 10 ஆம் நாளில் நாலாயிர நாடாழ்வானான நான் இவ்வூரில் ஐந்தாம் தெருவில் மேற்கே உள்ள குறுக்கு தெருவின் தெற்கே ஒரு வீடு தள்ளி உள் இருந்த மனை ஒன்றை காரியின் மகன் சிவனாயனுக்கு விற்றுவிட்டேன்”. இப்படி விற்ற வீட்டை கல் பெயர்த்து நாட்டியதை அறிவேன் என்று ஊர் அதிகாரி கையொப்பம் இட்டார்.

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் நாலாயிர நாடாழ்வான், காரி மகன் சிவனாயன் ஆகிய பெயர்களை உற்று நோக்குங்கள் இவர் இருவரும் அரச குடும்ப வழி மணம் புரிந்த படைத்தளபதி சாதியர் என்று தெளிவாகிறது. ஐந்தாம் தெரு வடக்கு தெற்காக நீண்டிருந்தால் தான் அதன் மேற்கில் குறுக்கு தெரு அமைய முடியும். அதில் இரண்டாம் வீடு நீண்டு தென்புற புழைக்கடையில் இன்னொரு வீட்டை கொண்டு இருந்துள்ளது. கோவிலுக்கு சற்றும் தொடர்பில்லாத இரண்டு தனி ஆள்களின் கொடுக்கல் வாங்கல் செய்தி ஏன்? எப்படி? இந்த கோவிலில் பதியப்பட்டு ஆவணமானது என்பது ஒரு கேள்வி.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 122 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மரான திருபுவன
    2. ச் சக்கரவத்திகள் ஸ்ரீ பராக்கிறம பாண்
    3. டிய தேவற்கு யாண்டு 10 ஆவது ஆனி
    4. மாதம் 22ந் தியதி நான்று தென் பத்தரா
    5. யனேன் யென் மனையான இரண்டான் தெரு
    6. வின் மேல் சிறகில் தலைமனையில் மனை
    7. ச பணியிருக்கும் அண்ணாமலைய் மகன் நாழி
    8. ப் பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இவை 
    9. அறிவோ
    10. ம் 

    ஞான்று – போது; தியதி – நாள்; மனை எச்ச – வீட்டு வேலை; தலைமனை – வளமனை, bungalow

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1325 ஆனி மாதம் 22 ஆம் நாளின் போது தென் பத்தராயனான நான் என்னுடைய வீடான இரண்டாம் தெருவிற்கு மேற்கு வரிசையில் உள்ள பெரிய வீட்டில் வேலை செய்யும் அண்ணாமலை என்பவர் மகன் நாழிப்பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இந்த விவரத்தை அறிவோம் என்று கையெழுத்து இட்டுள்ளனர். இதில் எதை, எந்த வீட்டை விற்றார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை. பத்தராயன் தன் இன்னொரு வீட்டை விற்றார் என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏனெனில் பெரிய வீட்டை வாங்கும் அளவிற்கு பணியாளுக்கு பணம் இருந்திருக்குமா? பத்தராயன் பெயர் அவரை அரச குடும்பத்தவர் என்று காட்டுகிறது. எனவே தான் அவருக்கு வளமனை இருந்துள்ளது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 123 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    தென் ஆர்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீசுவரர் கோயில் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவற்திகள் ஸ்ரீ இராச தேவற்கு யாண்டு 11 வது உத்தம (நீ)திய்யா
    2. பெருங் கீத்தி முத்தமிழாலையாமும் மையு நிறைந்தோர் எழுபத்தொன்பது நாட்டு மில
    3. டாகிய ஜனநாதவள நாட்டு மேலாராற்றூர் கூற்றத்து திருவலஞ்சுரத்தில் இருங்கோ
    4. ளப்பாடி நாட்டோமுங் குந்றக் கூற்ற நாட்டோமும் துண்ட நட்டோமுந் திருமுனைப்பாடி
    5. நாட்டோமுஞ் செங்குந்ற நாட்டோமும் வாணகப்பாடி நாட்டோமும் ஆண்டய் நாட்டோ
    6. மும் பங்கள நாட்டோமும் மேல்கரை நட்டோமும் கங்கப்பாடி நட்டோமும் பரணூற்(று) நா
    7. ட்டோமும் எம்மிலிசைந்து உடையார் திருவலஞ்சர உடையநார் கோயில் கல்வெட்டியதாவது இந்
    8. நாட்டு மலையமார்களும் நத்த மக்களும் இடங்கைத்திலே பாவாடை ஏறினோம். இடங்கைக்கு 
    9. கண்ணுங் கையுமாய் புல்லும் பூமியுள்ளவு நிற்க கடவோம். இதில் பிழங்கில் மாறுசாதிக்கு தாழ்வு 
    10. செய்தோமானோம்.

    இசைந்து – விரும்பி; மலையமார் நத்த மக்கள் – பார்க்கவ குல சாதியில் நயினார், உடையார் பட்டம் உள்ளவர்; பாவாடை – இறைவன் திருமேனி முன் உறுதி கொள்; பிழங்கில் – தவறினால்; மிலாடாகிய – ஒன்று கூடும் இடம், assembling point; மில் – சேர்க்கை, நெருங்குதற் கருத்து. இந்தியில் இன்றும் சந்திப்பு என்பது மிலா எனப்படுகிறது

    விளக்கம் : இரண்டாம் இராசராசன் 11 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1161இல் உடையார்களின் மெய்கீர்த்தியை கூறித் தொடங்கும் இக்கல்வெட்டு ” 79 நாட்டவர் ஒன்றுகூடும் ஜனநாத வளநாட்டின் மேலாராற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சுரத்தில் இருங்கோளப்பாடி நாட்டு (விருத்தாச்சலம் பெண்ணாடம்), குன்றக் கூற்ற நாட்டு (பெரும்பழுவூர்), துண்ட நாட்டு (பெரம்பலூர்), திருமுனைப்பாடி நாட்டு (சேந்தமங்கலம்), செங்குன்ற நாட்டு , வாணகப்பாடி நாட்டு (விழுப்புரம் சங்கராபுரம்), ஆண்டை நாட்டு, பங்களநாட்டு (வேலூர் – திருப்பத்தூர்), மேல்கரைநாட்டு (ஈரோடு), கங்கப்பாடி நாட்டு (தருமபுரி), பரணூற்று நாட்டு என 11 நாட்டின் பார்கவ குலத்தவர் நாமே விரும்பி திருவலஞ்சுர ஈசன் கோவிலில் கல்வெட்டுவித்தது யாதெனில், இந்த நாடுகள் அனைத்தின் மலையமார், நத்த மக்கள் ஆகியோர் இடங்கைப் பிரிவிலே சேர்ந்தோம். இனி இடங்கைப் பிரிவிற்கு கண்ணும் கையுமாய் புல்லும் பூமியும் உள்ளளவும் இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். இதில் தவறினால் வேற்று சாதியை தாழ்வாக நடத்திவிட்டோம் என்றாகும்”.

    இக்கல்வெட்டு மூலம் பண்டு தமிழகத்தில் 79 நாடுகளுக்கு மேல் இருந்துள்ளன என்று அறிந்து கொள்ளலாம். காலம் எப்போதும் போல மாறாமல் இருந்தால் இந்த உறுதிமொழியை அப்படியே காப்பாற்ற முடியும். ஆனால் 50 ஆண்டுகள் கழித்து காலம் மாறியது பிற சாதிகளுக்கு காணி விற்க கூடாது என்று முடிவுகொண்டு இவர்களே இந்த உறுதிமொழியை தகர்ப்பதை கீழ் உள்ள கல்வெட்டுகளை படித்து விளங்கிக் கொண்டால் புரியும்.

    பார்வை நூல்: ஆவணம் 11, 2000 பக். 32

    திருச்சி மாவட்டம் முசிறி  வட்டம் கரட்டாம்பட்டி நடுகல்

    ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப் பரகேசரி பர்மருக்கி யாண்டு 35 ஆவது. இவ்வாண்டு மியமானாட்டு வள்ளுவப்பாடி, விரியூர் ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ் சுருனிமான்கள்  நிரை கொண்டு போக நிரைப் பின்பு சென்று ஆடு ஈடு கொண்டு பட்ட நாகன் வீரன் மகளுக்கு ஓர் (ரோ)ரால்  இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்   

    சுருனி > சுருதி – கேட்டல்; நிரை – மந்தை; ஈடு – இழந்தவற்றுக்கு மாற்றாக; ஓர் ஓர் – ஒரே நினைப்பாக, இரண்டாம் கருத்து இல்லாமல், no second thought; இறையிலி – அரசனுக்கு வரி செலுத்த வேண்டாத நிலம்

    விளக்கம் : மதுரையை கைப்பற்றி ஆண்ட முதற் பராந்தகனின் 35 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி 942 நிகழ்ச்சி. இந்த ஆண்டில் மியமாநாட்டில் அடங்கிய வள்ளுவப்பாடி, விரியூர் ஆகிய ஊர்களின் ஆடுகளை ஊற்றத்தூர் நாட்டின் பாடாவூ(லூ)ரைச் சேர்ந்த மூப்பனார் மறவர்களான ஐந்து நாட்டு சுருதிமான்கள் மந்தையாக கொள்ளை கொண்டு போயினர். கொள்ளை கொண்ட ஆட்டு மந்தையின் பின்னே தொடர்ந்து சென்று இழந்த ஆடுகளுக்கு மாற்று ஆடுடன் மீண்டு திரும்பிய பின் வீரசாவடைந்தான் நாகன் என்பவன். அந்த வீரன் மகளுக்கு இரண்டாவது மாற்று கருத்து ஏதும் இல்லாமல் அனைவரும் ஒரே சிந்தனையுடன் முடிவெடுத்து இறையிலி நிலக்கொடை கொடுத்தோம் விரியூர் ஊராரோம் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    ஐந்து நாடு என்பது ஊட்டத்தூர், திருப்பிடவூர், பாச்சில், திருவெள்ளறை, சென்னிவலக் கூற்றம் என்னும் ஐந்து நாடுகள் கொடுக்கப்பட்டு குடியேறியதால் ஐந்து நாட்டு சுருதிமான்கள், அஞ்சுநாட்டார் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய பார்கவ குல சுருதிமான் அல்லது மூப்பனார் குல மக்கள் ஆவர்.

    பார்வை நூல்: வரலாற்று குழு வலைத்தளப் பக்கம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் பெரிய குறுக்கை அகரம் இலட்சுமி நாராயண பெருமாள் சிதிலமடைந்த கோவிலில் கண்டெடுத்த 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ 
    2. குறுக்கைத் 
    3. திருச்சிற்றம்ப
    4. லச் சதுர்வே
    5. தி மங்கலத்
    6. துத் திருமுற்ற
    7. ங்களும் இந்
    8. த அகரமும் ஐ
    9. ஞ்சு நாட்டு
    10. ச் சுருதிமா
    11. ந்கள் கா
    12. வல்   

    முற்றம் – ஊரின் வெளியிடம், அகரம் – பிராமணர் குடியிருப்பு; சுருதிமான் – மூப்பனார் சாதி படை மறவர்.

    விளக்கம் : இவ்வூரின் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் மூன்றாம் இராசராசனின் 24 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி. 1240) கல்வெட்டு இவ்வூரை “குறுக்கை திருச்சிற்றம்பலத்து சதுர்வேதி மங்கலம்” என்கிறது. சுருதிமான்கள் இடங்கைப்பிரிவினர். உழு தொழில் செய்பவர் என்கிறது ஊற்றத்தூர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. இந்த ஊரின் கோவில்களைச் சுற்றியுள்ள வெளியிடங்களும் பிராமணர் அக்கிரகாரமும் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களின் காவலுக்கு உட்பட்டவை என்கிறது இக்கல்வெட்டு. இதில் இருந்து மூப்பனார் போர் புரிபவர் குடியினர் என்று உணர முடிகிறது. போர்க்குடி என்றால் அரச குடியுடன் மணஉறவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த வகையில்  சுருதி மான்கள் படைத் தலைவர்களாக அரையர்களாக கிழார்களாக இருந்துள்ளனர்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 17, பக். 8-9, த நா தொ து வெளியீடு

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் ஊர்த்தெருவில் நடப்பட்ட கற்பலகையில் பொறித்த 67 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்தி ஸ்ரீ / கொலோத்துங்க சோழ / தேவற்கு யாண்டு 10  ஆவது / வடகரை கரிகாலகந்ந வள / (நா)ட்டு வந்நாட்டு பிரிதிசூர சது / (ப்)பேதி மங்கலமாந பிரம / தேசத்தை எங்களய்யந் ராஜரா / ஜ  வந்நாடுடையார் இவூரை / வல்லுவந் புலியநாந  இருப / த்து நால்ப்   பேரரையந் உ / ள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி / செய்து குடுத்தார். ஸ்ரீ ரா / ஜராஜ தேவற்கு யாண்டு 6  / ஆவது திருவையாறுடையா / ந் கரிகால சோழநான  சனநாத / வந்நாடுடையாநும் நந்தம / ரில்  நாந _ _ _ வந்நாடுடை / யாநும் இவ்வனைவோமும்  பி / ரமதேசமுடைய பள்ளிகள் / நாட்டரையநுக்கும் புலியந் / மாதநாந மகதை நாட்டு / பேரையநுக்கும் புலியந் / பெரியாநாந வந்நாட்டு நா / டாழ்வாநுக் / கும் புலியந் / நாந திக்கும் சா / த்தந் பெரியா / நுக்கும் சோ / மந் புலிய நு / க்கும் இவர்கள் / வங்குசத்துக் / கல்லது மற் / று பிராமண / ர் வெள்ளாளருள் /ளிட்டாருக்கும் / பள்ளிக்கும் வி / ற்க கடவதல் / லவாகவும் / சந்திராத்த / வல்  முள்ளத / னையும்  எங்க / ள் வங்குசம் / __ _ / _ _ _ / _ _ _ / _ _ _ / _ _ வாலிகண்டபுரத்து _ டின் முக்கூட்டு மொக்க எழு / கும் தென்பாற்கெல்லை / க்கு வடக்கும் மேற்பாற் கெல் / லை அனுக்கூர் எல்லைக்கு கிழக் / கும் வடபாற்கெல்லை சிறுவி / சலூர் எல்லைக்கு தெற்கும் இந்த நாலெல்லைக்குப் / பட்ட நிலம் இவர்கள் இ _ _ _ / க்கு வேண்டுவநவு / ஞ் செய்து சோப்பை _ – / த்து கொடு இருந்தமை _ _ _ ம / கதை நாட்டு பேரையந்  / புலியந் பெரியாநாந வந்நாட்டு  நாடாழ்வாநும் / _ _ _ _ / ணநாத வந்நாடுடையாநும் / இராசராச வந் நாடுடையா  / னும் விருபேரமுப் / _ _ _ _ / ன் வல்லவரையன் சத்தி / யம்                

    ஐயன் – தந்தை; பேரையன் – படைத்தலைவன்; நந்தமர்  – உடையார் சாதி; வங்குசம் – வம்சம்; பள்ளிகள் – வன்னியரில் ஒரு பிரிவினர், மொக்க – முழுவதுமாக; எழுகும் – பரவும், தோன்றும்; சொப்ப – செப்பமாக, neatly; கொடு – தீங்கு

    விளக்கம் : சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1188), வடகரை கரிகாலக்கன்ன வளநாட்டு வந்நாட்டின் ஊரான பிரிதிசூர சதுர்வேதி மங்கலமான பிரம்மதேசத்தை எங்கள் தந்தை ராஜராஜ வந்நாடு உடையார் என்னும் அரசர் அல்லது கிழார் வள்ளுவன் புலியனான இருபத்தினால் பேரரையன் உள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி (உரிமை நிலம்) செய்து கொடுத்தார் என்று வல்லவரையன் கூறுகிறான். இந்த வல்லவரையன் தூண்டுதலில் 34ஆண்டுகள் கழித்து இப்போது சோழ வேந்தன் மூன்றாம் இராசராசனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1222) திருவையாறுடையான், கரிகாலச் சோழனான ஜனநாத வந்நாடுடையான், உடையார் சாதி நந்தமரில் நாந_ _ _ வந்நாடுடையான் ஆகியோர் வல்லவரையனுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவு யாதெனில், “பிரம்மதேசத்தினுடைய பள்ளிகளான நாட்டரையனுக்கும், புலியன் மாதனான மகதை நாட்டு படைத் தலைவனுக்கும், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வானுக்கும், புலியானான திக்கும் சாத்தன் பெரியானுக்கும், சோமன் புலியனுக்கும் ஆகிய  இவர்கள் ஐந்து வம்சத்தை சேர்ந்த பள்ளிகள் தவிர்த்து வேறு எந்த பிராமணருக்கோ, வெள்ளாளருக்கோ அல்லது பள்ளிகளுக்கோ விளை நிலத்தை விற்ககூடாது. இதை  சந்திரனும் ஞாயிறும் உள்ள வரை எங்கள் வம்சத்தார் கடைபிடிக்க வேண்டும். இந்நிலம் வாலிகண்டபுரத்தின் _ _ _ டின் முக்கூட்டு இருந்து முழுவதும் பரவியுள்ள தென்பகுதி எல்லைக்கு வடக்கிலும் மேற்குப்பகுதி எல்லை அனுக்கூர் எல்லைக்கு கிழக்கும் வடபகுதி எல்லையில் சிறுவிசலூர் எல்லைக்கு தெற்கும் ஆக இந்த நான்கு எல்லைக்கும் உட்பட்ட நிலம் ஆகும்” என்று எல்லை சுட்டப்பட்டுள்ளது. இது நிறைவேற இவர்கள் வேண்டிய நடவடிக்கை எடுத்து செப்பமாக (fully, neatly) அதில் தீங்கில்லாமல் இருக்க வேண்டும். மகதை நாட்டு பேரையன், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வான், _ _ ஜனநாத வந்நாட்டுடையான், இராசராச வந்நாடுடையான், விருபேரமுப்_ _ _ ஆகியோர் ஐவரும் இவ்வாறு நடப்பதாக வல்லவரையனுக்கு சத்தியம் செய்து கொடுத்தனர்.

    வல்லவரையன் ஒரு குறுநில அரசன் அல்லது கிழான் என்று தெரிகிறது. இவன் தூண்டுதலால் 1222 இல் இந்த காணி விற்பனைத் தடை நடவடிக்கையை நந்தமரோடு (உடையார் சாதி) சேர்ந்து கொண்டு மேற்கொள்ளக் காரணம் எதுவாக இருக்கும் என்று எண்ணுங்கால் இது சமூக பாதுகாப்பு நடவடிக்கை அல்ல என்று மட்டும் புரிகிறது. ஏனெனில் பிராமணரோ பிள்ளைமாரோ பள்ளிகளோ இவர்களுக்கு அச்சமூட்டுபவர் அல்லர். எனவே இதை ஒரு ஒடுக்குமுறையின், அடக்குமுறையின் முதல்படியாக கொள்ள வேண்டி உள்ளது. இவர்களுக்கு தமது உழு நிலத்தை விற்றால் இவர்கள் அந்த ஊரில் வந்து குடியேறுவர். அத்தோடு நில்லாமல் இந்த அரசகுடி மண உறவுடைய படைச் சாதியார் போலவே தாமும் எல்லா உரிமைகளையும் பெற உரிமை கோருவர். அப்படி உரிமை கொடுத்தால் இந்த படைச் சாதிக்கும் புதிதாக உரிமை பெற்ற சாதியாருக்கும் வேறுபாடு இல்லாமல் போகும். முன்பு இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு தம் முன் குனிந்து கைகட்டி நின்றவர் இனி அச்சமின்றி நிமிர்ந்து செல்வர். தமக்கு எந்த மதிப்பும் இனி இருக்காது  என்ற அச்ச எண்ணமே இதற்கு காரணமாக எனலாம். இதே காலகட்டத்தில் தான் கொங்கு நாட்டில் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் ஆட்சியில் அதற்கு முன் இல்லாத சில உரிமைகள் கோவில் பணி மக்களான கம்மாளர், சிவப்பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோர் தம் வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டலாம், வீட்டுச்  சுவருக்கு சுண்ணாம்புப் பூசலாம், வாயிலுக்கு இரட்டை கதவு வைக்கலாம், காலுக்கு செருப்பு அணியலாம், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் உரிமைகள் தரப்பட்டன என்பதை அங்கத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே இந்த வல்லவரையனின் கல்வெட்டின் மூலம் உண்மையாகவே இந்த சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை இந்த படைச் சாதியார் தான் அதிகாரத்தில் இருந்து கொண்டு நடப்பித்தனர் என்று உறுதியாகிறது. இந்த படைச் சாதியர் தான் இன்று தமிழகம் முழுவதும் நிலவுடைமை சாதிகளாக உள்ளனர். இவர்களில் வெள்ளைத் தோல் ஆரியர் அதிகம் உண்டு என்பது அரசகுடிக் கலப்பால் அது ஏற்பட்டது என்பதை உணர்க. இதாவது, அரசகுடிக்கு பெண் கொடுத்து அரசகுடிப் பெண்ணைக் கொண்டதால் இப்படி நேர்ந்தது எனலாம். அதனால் தான் பார் ஆண்டவர், மண் ஆண்டவர், அடக்கி ஆண்டவர், ஆண்ட பரம்பரை என்று இவர்கள் மார்த் தட்டுகின்றனர்.  இந்த கல்வெட்டின் மூலம் இக்கல்வெட்டு கூறும் உண்மைக்கு எதிர்மாறாக தான் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளையர் முதற்கொண்டு தலித்தியர், திராவிடவியலர், கம்யூனித்துகள் போன்றோர் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத் தாழ்வையும் இந்து மதம் தான், சனாதன தர்மம் தான், பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்ற பேச்செல்லாம் பொய்ப் புனைவுகள் என்றாகிவிட்டன அன்றோ !! தமிழ்நாட்டின் 60,000 தமிழ்க் கல்வெட்டுகளும் முழுவதுமாக படிக்கப்பட்டு அச்சேறினால் வரலாற்றில் நடந்த உண்மைகள் அத்தனையும் ஆய்வின் வெளிச்சத்திற்கு வரும். பொய்கள் தகரும்.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டுக்கள் செப்பேடுகள் பக். 154-156 ஆசிரியர்: இல. தியாகராஜன் & ஆவணம் 23, பக்.58 – 59

    அரியலூர் மாவட்டம் வாரணவாசி மருதமுத்துக் கவுண்டர் கொல்லையில் நடப்பட்டுள்ள 44 வரிக்  கற்பலகைக் கல்வெட்டு

    திருபுவனச் சக்க / ரவத்திகள் இராச / ராச தேவற்க்கு / யாண்டு 21 வதின் எதிராமா / ண்டு உடையார் திருவாலந்து / றை நாயனார் / தேவதாந / ங் கீழ்ச் சார் / ஆந வாரணவாசி / யில் காணி இ / வாரணவாசி / உடையாந் / வந்தவர் வி / ற்றல்  ஒற்றி வை / க்குதல் / செய்வார் தந் சா / தியாற்கு / விற்பது த / ன் சாதி த / விர விற்றார் / உண்டாகி / ல் நாயிலு(ம்) / பந்றியிலு(ம்) / கடையா / க குத்தி நூ / ர கடவதாக / வும் கீழ்ச்சா / ர் ஆந ஐஞ் / சு நாட்டுக லூற்கு / விலங் / கல் உண்டாகில் நா /ங்கள் / ளே ஏறட்டு / கொண்டு தீ / த்துக் குடுப் / போம் ஆக க / ல் வெட்டி நா / ட்டி குடுத்தோ / ம் அஞ்சு / நாட்டோம்.     

    எதிர் – அடுத்த , successive; காணி – விளை நிலம்; வந்தவர் – புதிதாக குடியேறியவர்; ஒற்றி – அடமானம்; கடையாக – கீழாக; நூர – அழிய; விலங்கல் – குறுக்காக, இடைஞ்சலாக; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; தீத்து – கழித்து, இல்லாதாதல், விலக்கு, முடித்தல்; அஞ்சு நாட்டோம் – சுருதிமான்கள் என்னும் மூப்பனார்கள்

    விளக்கம் : மூன்றாம் இராசராச சோழனின் 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1238) திருவாலந்துறை இறைவனுக்கு தேவதானமாக கொடுக்கப்பட்ட கீழ்சாரான வாரணவாசியில் உள்ள விளை நிலத்தை இந்த வாரணவாசியில் வாழ்பவர் புதிதாக வருபவருக்கு விற்றாலோ அடமானம் வைத்தாலோ அது தன் சாதியாருக்கு மட்டுமே விற்பதாகவே இருக்க வேண்டும். தன் சாதியார் தவிர மாற்று சாதியாருக்கு விற்பாரானால் அவரை நாயை விட, பன்றியை விட கேவலமாகக் கருதி குத்திக் கொல்லுக.  கீழ்ச்சாரான ஐந்து நாட்டு ஊர்களுக்கு இடைஞ்சலாக ஏதேனும் நடக்குமானால் நாங்களே முன்வந்து அச்சிக்கலை முடித்து வைப்போம் என்று கல்வெட்டி புதைத்து நிறுத்தினோம் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களோம் என்று மூப்பனார்கள் ஆணை வெளியிட்டுள்ளனர்.

    இந்த கல்வெட்டு மூலம் பிற சாதியார் தம் ஊர்களில் குடியேறுவதை தடுக்கும் ஒரு உத்தியாகவே இந்த நடவடிக்கையை படைச் சாதியாரான மூப்பனார்கள் மேற்கொள்கின்றனர் என்பது தெளிவு. இது ஏனெனில் உழு நிலம் வாங்குபவர் இந்த ஊரில் வந்து நிரந்தரமாக குடியேறுவார். பின் இந்த படைச்சாதி மூப்பனார்களைப் போல தாமும் எல்லா உரிமைகளையும் பெற கோரிக்கை வைப்பர். அதனால் அரசகுலத்துடன் மணவுறவு உள்ள படைச் சாதியாரான தமது கௌரவம் கெடும் என்ற அச்சம் தான் காரணம். இதே காலகட்டத்தில் கொங்கு  நாட்டில் வீரராசேந்திரனின் ஆட்சியில் கம்மாளர், சிவ பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோருக்கு முன்பு இல்லாத உரிமைகளான வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டல், வீட்டிற்கு சுண்ணாம்பு பூசல், இரட்டைக் கதவு வைத்தல், காலுக்கு செருப்பு அணிதல், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் தரப்பட்டன. அப்படி ஒரு உரிமைக் கொடுப்பு ஏதும் இவர்களது ஊரில் நிகழக் கூடாது என்ற கருத்தே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்பது மேலுள்ள சில கல்வெட்டுகளால் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 267 – 269 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டம் ஏறகுடி 20 வரிக் கல்வெட்டு

    1.  ஸ்வஸ்தி ஸ்ரீ  கொர்சடைய பன்மர் திருபுவனச் ச
    2. க்ரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டி தேவ 
    3. ற்க்கு யாண்டு 25 வது ஆவணி மாதம் 5 தி 
    4. நாள்  பழுவூர்பற்று திரணி நாட்டவரும் கண்
    5. டராதித்தன்  பிடாகைத் திரணி நாட்டவரும் இ
    6. றைக் குடியில் பெரியநாடான ஆலடியில் 
    7. (டியில்) நிறைவற நிறைந்து குறைவறக் கூ
    8. டி எங்களில் இசைந்து ஒருமைப் பிடிபா
    9. டு பண்ணின பரிசாவது பழுவூர் பற்றினா
    10. லும்  கண்டராதித்தன் பிடாகையிலும் பல பற்றி
    11.  லும் நாங்கள் கொண்டுடை வோமாய் நா 
    12. ங்கள் ஆண்டு போதுகிற நிலக் காணிகளும் 
    13. நத்தக் காவல் காணிகளும் காப்புக் காணி 
    14. களும் மற்றும் எப்பேற்பட்ட உரிமைகளும் 
    15. எங்கள் ஆண் மக்களே இந்தக் காணி ஆள
    16.  _ _ வும். இப்படி இசைந்து ஒரு
    17.  மைப் பிடிபாடு பண்ணினோம் பழுவூர்ப்பற்று ஐ
    18. ஞ்சு நாட்டவரும் கண்டராதித்தன்  பிடாகை ஐ
    19. ஞ்சு நாட்டவரும் இவ்வானைவரோம்.
    20.  இப்படிக்கு இவை சொக்கனார் எழுத்து.

    பிடாகை – உட்கிடையூர்; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; பரிசாவது – ஏற்பாடாவது; பற்று – ஒதுக்கிய நிலம்; ஆண்டு – கட்டுப்பாட்டில் அனுபவி; நத்தக் காவல் – வீட்டு மனைப் பிரிவு காவலர்; காப்புக் காணி – காவலுக்கு உட்பட விளை நிலம்

    விளக்கம் : ஜடாவர்ம வீரபாண்டியனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி.1278) ஆவணி மாதம் 5 ஆம் நாள் பழுவூர் பற்று திரணி நாட்டாரும் கண்டராதித்தன் உட்கிடையூர் திரணி நாட்டாரும் இறைக் குடியில் பெரிய நாடான ஆலடியில் பெருங் கூட்டமாகக் கூடி எங்களுக்கு நாங்களாகவே விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்து மேற்கொண்ட ஏற்பாடு யாதெனில், பழுவூர் பற்றிலும் கண்டராதித்தன் உட்கிடையூரிலும் இன்னும் பல பற்றிலும் நாங்கள் உரிமை கொண்டுள்ள நாங்கள் கட்டுப்படுத்தி அனுபவிக்கின்ற  உரிமை நிலங்களும், வீட்டுமனைக் காவலர் நிலங்களும் காவலுக்கு உட்பட்ட நிலங்களும் வேறு எந்த வகைத் தான உரிமைகளும் எமது ஆண் பிள்ளைகளே, அவர் வழியினரே இந்த உரிமை நிலங்களை ஆண்டு அனுபவிக்க வேண்டும். இப்படியாக விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்தோம் பழுவூர் பற்றில் வாழும் மூப்பனார் சாதி ஐந்து நாட்டவரும் கண்டராதித்தன் பிடாகை மூப்பனார் சாதி ஐந்து நாட்டவருமான இந்த அனைவரும். இப்படியாக இவை எல்லாம் சொக்கனார் எழுத்து.

    மேல் கல்வெட்டில் சொன்னபடியே என்ன தான் கடுமையாகப் பிற சாதிமாருக்கு நிலங்களை விற்க கூடாது என்று முடிவெடுத்து நடைமுறைப் படுத்தினாலும் பெண் வழியாகப் பிரித்துக் கொடுத்த நிலங்களை மாப்பிள்ளைகளும் பெண் வழிப் பேரர்களும் பிற சாதிமாருக்கு விற்பதால் தமது சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் மாப்பிள்ளை, பேரர்களுக்கு  அவரது ஊர்களிலேயே தந்தை வழி நிலம் உள்ளதால் பெண் வீட்டார் நிலம் தேவைப்படாது. இந்த அனுபவத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்ற முறையே சரியானது அப்போது தான் மாப்பிள்ளைகள் சொத்தை பிராமணருக்கோ பிள்ளைமாருக்கோ பள்ளிகளுக்கோ விற்கமுடியாது என்று கருதி பெண்ணுக்கு சொத்துரிமை ஏதும் இல்லை என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினர். இக்கல்வெட்டு மூலம் பெண்ணுக்கு சொத்துரிமை இந்துமதத்தால், மனுநெரியால், பிராமணர்களால் தடை செய்யப்படவில்லை அதை படைச் சாதியினர் தான் தடை செய்தனர் என்று தெளிவாகிறது அன்றோ!!

    பார்வை நூல்: ஆவணம் 6, 1995, பக். 33

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் சமணர் கோயில் கற்பலகை 13 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. சகலலோகச் 
    3. சக்கரவத்தி 
    4. இராசநாராயணன்
    5. மனுநெறி தப்பாத
    6. மல்லிநாதன். பெருந்தேவ
    7. ந் செட்டித் தெருவில் 
    8. வேற்று மனிதர் இருக்க
    9. கடவதல்ல வென்றும்,
    10. பரிசாம் விடுவரல்ல 
    11. வென்றும் சொ
    12. ன்னோம். இப்ப
    13. டி செய்க.     

    பரிசாம் – காசு, வாடகை

    விளக்கம் : இரண்டாம் இராசநாராயண சம்புவராயனான மல்லிநாதன் ஆட்சியில் வெட்டப்பட்ட ஆண்டுக்குறிப்பு ஏதும் இல்லாத கல்வெட்டு இது. இவனை மனுநெறி தப்பாதவன் என்று கூறி,” இவ்வூர் பெருந்தேவன் செட்டித் தெருவில் சமணர் அல்லாத வேற்று சாதியார், மதத்தார் எவரும் குடியிருக்கக் கூடாது என்றும், சமணர் எவரும் வேற்றாருக்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்றும் ஆணையிட்டான். அவ்வாறே நடந்து கொள்க”  என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    கல்வெட்டில் குறிக்கப்படும் செட்டித் தெருவில் வாழும் சமணர் தொழிலால் வணிகர், உணவால் சைவர் என்பதால் அவர்களாகவே வேந்தனிடம் கோரிக்கை வைத்து இந்த ஆணையை பெற்று வந்துள்ளனர். மேலும் வர்ண கோட்பாடு என்பது சிவ, விண்ணவ மதத்திற்கு மட்டும் என்று இல்லாமல் சமண, புத்த மதத்தவரையும் சேர்த்து சமூக முறைமையாகவே கட்டுப்படுத்தியுள்ளது அல்லது மதம் கடந்து அனைவரையும் உள்ளடக்கியது என்று தெரிகின்றது. வாடகை என்ற சொல் அப்போது இல்லை என்பதால் பரிசாம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. வேந்தனும், சமணரும் கூட சாதி ஆதரவாளராகவே இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு பெரும் சான்று ஆகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 17, பக். 132 ஆண்டு: 2006

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவில் தென் சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீமத் பூமிதேவி புத்ரஸ்ய சாதுர்வண்ண குலோத்பவம் சர்வலோகஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய 
    2. சாஸனம். திரிபுவனச் சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது நாடும் நகரமும் கூடி
    3. இருந்து காஞ்சிமாநகரில் செப்பேட்டுப்படி செக்கார் செய்யக் கடவ முறைமை எண்ணையு _ _ _
    4. வையிலே கூறி விற்க கடவந். இவனுக்கு உகச்சும் பறையும் கொட்டக் கடவதல்லன். ஒரு துறையில் நீருண்ணக் கடவனல்லன். தந்  மனையில் சேந்த வடக்கு திருவாசலுக்குப் புறம்பே _ _ _ துக்கு குடுக்ககடவ _ _ _ தல்லந். _ _ _ ல்லா தெற்றஞ் செய்யக் கடவதல்லந். வாஸ்துவுக்கும் _ _ _ ம்பி _ _ _  ம வெற்றிலையும் _ _ _  ந்து விற்கக்  கடவன். எண்ணை, விறகு மல்லாதும் _ _ _  கடவந்.     

    சித்ரமேள – சித்திரமேழி நாட்டார் வணிகக் குழு சபை; சாசனம் – சட்ட ஆவணம்; செக்கார் – எண்ணை வணிகர்; உ(வ)கச்சு – மத்தளம், தவில்; தெற்றம் – தவறு, பிழை; ஸ்ரீமத் – எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்

    விளக்கம் : எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால் பூமியின் மைந்தர்களின், நால்வர்ணக் குலத்தில் பிறந்த, உலகமனைத்தின் நன்மைக்கும் பொருட் தேவைக்கும் வாழும் சித்திரமேழிநாட்டு வணிகக் குழுவின் சட்ட வரைவு என்று கல்வெட்டு சித்திரமேழியாரின்  மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. மூன்றாம் இராசராசனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு 1219 இல் நாட்டுச் செட்டிகளும் நகரத்துச்  செட்டிகளும் ஒன்று கூடி இருந்து காஞ்சிமாநகரில் உள்ள செப்பேட்டின்படி செக்கில் எண்ணை பிழிவோர் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை என்று அறிவித்தது யாதெனில், “எண்ணையை _ _ விலை கூறி விற்க வேண்டும். (எப்படி விலை கூற வேண்டும் என்ற வரி சிதைந்து விட்டது). செக்கருக்கு வீட்டு நன்மை தீமைகளில் மத்தளமும் பறையும் கொட்ட உரிமை இல்லை. ஒரே நீர்த்துறையில் மேல் சாதியாரோடு நீர் மொண்டு, பருகக் கூடாது. தன் வீட்டு வடக்கு திருவாயிலுக்கு வெளியே _ _ _ கொடுக்கக் கூடாது. (எதை கொடுக்க என்ற வரி சிதைந்து விட்டது). _ _ பிழையாக செய்யக்கூடாது. (எதை என்பது சிதைந்து விட்டது). வாஸ்துவுக்கும் _ _ _ வெற்றிலை _ _ _ விற்கலாம். (இன்னொரு பொருள் எது என்பது சிதைந்து விட்டது. எண்ணை, விறகு அல்லாதது தவிர்த்து இவற்றை மட்டும் விற்கலாம் என்று வரையறை சொல்கிறது.

    படைப்பற்றுப் பள்ளருக்கும் பறையருக்கும் தமது உரிமை குறித்து பிணக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டை பார்த்து வந்ததில் ‘பள்ளருக்கு தவிலும் சேமக்கலமும் முழங்கலாம், ஐந்து பந்தர்கால் நடலாம்’ என்றும் பறையருக்கு ‘கொட்டு மேளதாளம்,12 பந்தர் கால் உரிமை உள்ளதையும்’ உறுதி செய்தனர் என்பதை புதுக்கோட்டை ஆலங்குடி கல்வெட்டு (ஆவணம் இதழ் 15, பக். 32) தெரிவிக்கிறது. இவர்களுக்கு கொடுத்த உரிமை கூட எண்ணை வணிகருக்கு, செக்கருக்குக்  கொடுக்கவில்லை என்பது கேள்விக்கு உரியதாக உள்ளது. இந்த வணிக சபையோர் தான் இதை அறிவிப்பதால் அவர்களையே இதற்கு முழு பொறுப்பு ஆக்குவதா அல்லது பின்னிருந்து இயக்கிய ஆட்சியாளர்களை காரணகர் ஆக்குவதா என்று தெரியவில்லை. ஆனால் இதே கால கட்டத்தில் தான் கோவில் பணி மக்களுக்கும் படைப்பற்று சாதிமாருக்கு சில உரிமைகள் கூடுதலாக தரப்பட்டதை வைத்து பார்க்கும் போது இந்த செக்கர்களும் தமக்கும் அது போல உரிமையை எதிர்பார்த்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அந்த கோரிக்கையில் எண்ணை மட்டும் இன்றி சில கூடுதல் பொருள்களை காட்டாக வெற்றிலை, விறகு விற்பது ஆகிய உரிமைகள் தரப்பட்டு பழைய அதே சமூகக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. கல்வெட்டில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் செப்பேடு கிடைத்தால் அது யார் ஆட்சியில் எழுதப்பட்டது, நால் வர்ணத்தை எப்படி சாதியாகப் பிரித்தார்கள். இதனால் படைச் சாதி அடைந்த பயன் என்ன? அத்தனையும் தெரிந்து விடும். ஆனால் திரு. நாகசாமி இது இந்த கோவிலுக்கு அமர்த்தப்பட்ட செக்கருக்கு மட்டுமான விதி என்கிறார். பின் ஏன் சித்திரமேழி சபை இதை அறிவிக்க வேண்டும்? கோவில் நிர்வாகத்தர் அல்லவா அறிவிக்க வேண்டும்?

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் மடல் 7 எண்: 865 & கல்வெட்டு காலாண்டு இதழ் 8 பக். 23 த நா தொ து வெளியீடு. 

    Share